Jeyamohan's Blog, page 2241
April 22, 2012
எழுத்தாளர்களை எதுவரை ஆதரிப்பது?
அன்புள்ள ஜெயமோகனுக்கு,
உங்கள் கருத்துகளைத் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு நீண்ட நாள் வாசகன். விஷ்ணுபுரம் வெளியிட்டு, அது ஒரு இந்துத்துவ கொள்கைகளைத் தூக்கி நிறுத்தும் படைப்பு என்று 1999 வாக்கில் வந்த விமர்சனமே நான் உங்களை முதலில் அறியவைத்தது.(“விஷ்ணுபுரம்” என்ற பேரைக் கேட்டு அது ஏதோ “தலபுராணம்” வகையைச் சார்ந்ததாகவே இருக்கும் என்றே நினைத்திருந்தேன்.) ஒரு நீண்ட நாள் வாசகனாக இவ்வளவு காலமும் உங்கள் கருத்துகள் எங்கள் சிந்தனைப் பரப்பை மேலும் மேலும் விரிவடையச் செய்துகொண்டே இருக்கிறது..
எந்த ஒரு விஷயத்திலும் உங்களுடைய வாதம், விவாதம் எப்பொழுதும் அசரவைக்கக் கூடியது…. செய்திகள், அவற்றின் புறக் காரணிகள் எங்களை ஒருபக்கம் சேர்த்தால், நீங்கள் அவற்றை உங்களது பன்முக வாதத்தால் கொண்டு சேர்க்கும் இடம், மலைக்கக் கூடியது. நாங்கள் “இருந்த இடத்தில்” இருந்து மனம் கொஞ்சம் கொஞ்சமாக எதிர்ப்புறம் நோக்கி நகர்ந்து செல்வதை உணர்ந்துகொண்டே நகரும் தருணங்கள் அவை.
உங்கள் கருத்துக்கள் தடம் பற்றியே எங்கள் சிந்தனைத் தளம் விரிவடைகிறது,” பாம்பு தீண்டிய பாம்பாய்” ஆகிவிடக்கூடாது என்ற எண்ணம் அடிநீரோட்டமாய் ஓடிக்கொண்டே இருந்தாலும். சில காலமாக இந்தக் கேள்விகள் என்னுள் தொக்கி நின்று கொண்டே இருக்கின்றன.என்மன அமைப்புப்படி எனக்கான பதில்கள் எனக்குக் கிடைத்தாலும், இது உங்களையும் சார்ந்தது என்று நினைப்பதால் உங்களிடமும் கேட்டுவிடலாம் என்று நினைக்கிறேன்.
என்னுடைய கேள்வி இதுதான். உங்களைப் பற்றியோ உங்கள் கருத்துகளைப் பற்றியோ தமிழகத்தின் பல்வேறு சிந்தனைவாதிகளோ, களப்பணியாளர்களோ பொதுவில் வைக்கும் விவாதங்களை உங்கள் வாசகர்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?
அவதூறுகளை எளிதாக இனம் கண்டு புறக்கணித்து செல்ல முடியும். அவற்றுக்கு யாரையும் தீண்டும் எந்த வலிமையும் இல்லை என்பதே அதன் பலம். தன்னுடைய முதிர்ச்சி இன்மையையும் பரந்த வாசிப்பற்ற தன்மையையும், கருப்பு அல்லது வெள்ளை என்ற இரு வண்ணங்களே உலகில் உண்டென நம்பும் எளிமையையும் ஒருவர் பொதுவெளியில் வைப்பதைப் பற்றி சொல்லுவதற்கு எதுவும் இல்லை. அவர்களுடைய வார்த்தைகளே அவற்றைப் பற்றிப் பேசும்போது அங்கு வேறு ஒன்றும் சொல்லுவதற்கு இல்லை.
ஆனால் சிந்தனைப் பரப்பை விரிவுகொள்ளச் செய்யும் ஒருவர் உங்களைப் பற்றியோ உங்கள் கருத்துகளைப் பற்றியோ ஒரு விவாதத்தை ஆரம்பிக்கும் போது, அதில் நாங்கள் சொல்லுவதற்கு ஏதாவது உண்டா? அப்படி சொல்ல தொடங்கினால் உங்களுடைய வாசகர்களாக அந்த விவாதத்தை எவ்வளவு தூரம் எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும்? இல்லை இவை அனைத்திற்கும் நீங்கள் மட்டுமே பதில் சொல்லத் தகுதியானவர் என கொண்டு பார்வையாளனாகவே இருந்துவிட வேண்டுமா? ஆனால் இது எதுவுமே பிரச்சினை இல்லை. உண்மையான பிரச்சினை, வாசகர்களாக ஒத்தகருத்துடையவர்கள் உங்களைத் தற்காத்துப் பேசுவது ஒரு குழுமனப்பான்மையாக முன்னிறுத்தபடுமே?
சில சமகால எழுத்தாளர்கள் இந்தக் குழு மனப்பான்மையைத் தங்களுடைய எழுத்தின் பலவீனங்களுக்கு எதிராகக் கேடயமாக பயன்படுத்துவதைப் பார்த்துப் பார்த்து இந்தக் குழு மனப்பான்மை மேல் மனதிற்கு ஒவ்வா நிலை ஏற்பட்டுவிட்டது. அவ்வாறு உங்களைத்தற்காத்துப் பேசுபவர்கள் சிறப்பாகத் தன் வாதத்தை எடுத்து செல்ல இயலாதபோது அது உங்கள் கருத்துக்களின் பலவீனமாக கொள்ளப்படுமே? சிலவாசகர்கள் உங்கள் மேல் கொண்ட அன்பினால் உங்களை அதீதமாகத் தற்காத்துப் பேசுவது விவாதகள நெறிகளுக்கு ஏற்புடையதாக இல்லையே. அவ்வாறு தற்காத்துப் பேசுபவர்களின் விவாதத் திறமைக் குறைவு, முடிவில் உங்கள் கருத்துகளின் பலவீனமாகக் கருதப்படுமே.
ஒரு வாசகன் எவ்வாறு எதிர்வினையாற்ற வேண்டும் என்பதை அந்த எழுத்தாளனிடமே கேட்பது மிகவும் தவறான செயல் என்றே கருதுகின்றேன். சிந்தனை மரபுக்கே எதிரான செயல். எழுத்தாளனை நிறுவனமயமாக்கும் குறுகிய எண்ணம்தான். ஆனால் எனது கேள்வி, பொதுவாக இந்த வாசக மனநிலையை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள். இவர்களுக்கென்று சொல்ல உங்களிடம் உள்ள வார்த்தைகள் என்ன?
என்மன அமைப்புபடி, எந்த ஒரு வாசகனும் அவன் ஆதர்ச எழுத்தாளனை “காப்பாற்ற” எல்லாம் நினைக்க கூடாது. நீங்கள் காந்தியை சொன்னது போல் “அவருடைய சித்தாந்தங்களுக்கு அந்த பலம் இருந்தால் அது தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும்”. ஒரு விவாதம் முரண்பட்ட புரிதல்களோடு இருந்தால், நாம் எவ்வாறு அதைப் புரிந்துகொண்டோம் என்று விளக்கி அந்தக் கோணத்தில் அந்த எழுத்தாளனின் கருத்தைப் புரிய வைக்க முயலலாம். அந்த முரணியக்கமே எந்தவிவாதத்தையும் முன்கொண்டு செல்லும். அந்த எழுத்தாளனின் எழுத்தில் ஏதேனும் குறைகள் உண்டென நாம் கருதினால், நாம் குறைகளாக உணர்வதை சொல்லி/சுட்டிக்காட்டிப் பின் விவாதத்தைத் தொடர வேண்டும்.
உண்மையில் எந்த ஒரு படைப்பிலும், படைத்து முடித்தவுடனே அந்தப் படைப்பாளியின் பங்கு முடிவுற்றுவிடுகிறது. அந்தப் படைப்பும் அது சார்ந்த கருத்துக்களுமே அங்கு நிலை பெறுகிறது, இல்லையா?. எனவே எந்த ஒரு கருத்தியல் விவாதத்திலும் படைப்பாளியைப் பற்றிப் பேச ஒன்றுமே இல்லாமல் இருக்கலாம். கருத்துகளும் அது சார்ந்த எதிர் கருத்துக்களுமே அங்கு பேசப்பட வேண்டும் என்றே நினைக்கிறேன்.போர்க் களத்தில் இரு தேர்ந்த வீரர்களின் வாள்வீச்சு நடக்கும்போது, ஒருகணத்தில் அந்தக் களம் மறைந்து போகும், பின் இரு வீரர்களும் கண் விட்டு மறைந்து போவார்கள்.எஞ்சி இருப்பது வாளின் கூர்மையும் அதை சுழற்றும் லாவகமுமேதான். பின்வருபவர்களுக்கு அவர்கள் கற்றுக் கொடுப்பது அந்தக் கூர்மையும், அந்த வாளின் லாவகமும் அதை பயபடுத்துவதற்கான உச்சபட்ச சாத்தியங்களையும்தானே…
எந்த ஒரு எழுத்தாளனின் கருத்துக்களும் ஒரு விந்தணு போன்றது என்றே கொள்கிறேன். அதைத் தாங்க எனக்கு வலிமை இருந்தால், அது என்னுள் தங்கி, அது வளர்வதற்கான இடமும், சூழ்நிலையும் வாய்த்தால், என் சிந்தனா சக்தி கொண்டு, தன்னை வளர்த்து, ஒரு முழுமையான கருத்தாக உருகொண்டுயரும். அது அந்த எழுத்தாளனின் சாயல் கொண்டிருக்க எல்லா சாத்தியங்களும் உண்டு என்றாலும், அது என்கருத்தாகவுமே இருப்பதால், அதை எங்கும் என்னால் தற்காத்துப் பேச முடியும். அப்படி இல்லாமல் ஒரு எழுத்தாளன் சொன்னான் என்பதற்காகவே எல்லாக் கருத்துகளையும் நான் தற்காக்க முயன்றால், நான் அங்கு அந்த எழுத்தாளனைப் பிரதி செய்யவே முயல்கிறேன். அது இயலாதது, “என்னுள் ஒன்றாய்” ஆகாத ஒன்றை என்னால் தற்காக்க நீண்ட நேரம் முடியாது. ஒரு கட்டத்தில் நான் தோல்வியையே சந்திக்க இயலும்.
நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு கருத்தையும் நம்முள் ஒன்றாய் ஆக்கி புதிய உயிர் / உரு செய்யும் முயற்சியே இந்தப் படிப்புலக வாழ்க்கையாக இருக்கிறது, இல்லையா?. சில “கரு” தங்க அதன் பலமோ அல்லது என்பலமோ இடம்கொடாது. சிலது தங்கி வளர இயலாமல் அப்படியே இருக்கும், குறைப் பிரசவங்களும் ஏராளம். நன்றி ஜெமோ.
அன்புடன்
சரவணன் விவேகாநந்தன்
சிங்கப்பூர்.
அன்புள்ள சரவணன்,
கிட்டத்தட்ட நான் நினைப்பதை நீங்களே சொல்லிவிட்டீர்கள்.
நான் இன்னும் கொஞ்சம் விரிவாகவே இதைச் சொல்வேன். எழுத்தாளர்களுக்கு, அல்லது சிந்தனையாளர்களுக்கு விசுவாசமாக இருப்பது மட்டும் தவறு அல்ல. எந்தக் கருத்துநிலைக்கும், எந்த அமைப்புக்கும், எந்தக் கொள்கைக்கும், விசுவாசமாக இருப்பதும் தவறுதான். அதற்காக தற்காப்பு நிலைப்பாடு எடுப்பதும் சிந்தனைத் தேக்கத்துக்கே வழிவகுக்கும்.
என் இரு பெருநாவல்களிலும் இந்தக் கோணத்தையே விரிவாக விவாதித்திருக்கிறேன். விஷ்ணுபுரம் அதன் ஆன்மீக தளத்தைப் பேசுகிறதென்றால் பின் தொடரும் நிழலின் குரல் அதன் அறத் தளத்தைப் பேசுகிறது
பிரபஞ்சமும் இயற்கையும் மனமும் முடிவிலிகள். முடிவிலிகளின் முயக்கமான இந்த மாபெரும் இயக்கம் அறிவுக்கு அப்பாற்பட்டது. அதை அறிய ஒருமனிதனுக்கு உதவக்கூடிய ஒன்றே ஒன்றுதான் உள்ளது- அவனுக்கு நிகழும் வாழ்க்கை.
’எந்த மெய்ஞானத்தையும் சொந்த அனுபவத்திலிருந்தே ஆரம்பி’ என்று விஷ்ணுபுரத்தின் ஒரு கதாபாத்திரம் சொல்லும். அதுவே திட்டவட்டமானது, நமக்கானது. நம் வாசிப்பும், சிந்தனையும் எல்லாம் அந்த அனுபவத்துளிகளை இணைத்துக்கொள்ளவும் விளக்கிக்கொள்ளவும்தான்.
அந்த விளக்கத்தை முன்வைத்தே ஒருவர் இன்னொருவரிடம் விவாதிக்கவேண்டும். அந்த விவாதம் மட்டுமே பயனுள்ளது. மற்றவை வெறும் சொற்கள்.
சுய அனுபவங்களை நிராகரித்துக்கொண்டுதான் ஒருவர் ஒரு கொள்கைக்கு, ஓர் அமைப்புக்கு, ஒரு தரப்புக்கு முழு விசுவாசமாக இருக்க முடியும். அது கருத்துலகத் தற்கொலை.
நான் என் அனுபவத்தையே என் வாசிப்பின் மூலம் விளக்கிக்கொண்டு முன்வைக்கிறேன். எனக்கு தல்ஸ்தோயோ, காந்தியோ,சுந்தர ராமசாமியோ, நித்யசைதன்ய யதியோ ஆதாரம் அல்ல. என் அனுபவங்களே என் அடிப்படை. என் அனுபவங்களை விளக்காதபோது இவர்களை நிராகரிக்க எந்த தயக்கமும் இல்லை.
என் வாசகர்களிடமும் இதையே சொல்வேன். என் கருத்துக்களை அவர்கள் நம்ப வேண்டியதில்லை. ஏற்று ஒழுகவேண்டியதில்லை. அவர்களின் அனுபவங்களை விளக்கிக்கொள்ள இவை உதவுகின்றனவா என்று மட்டும் பார்த்தால்போதும். அவ்விளக்கத்தைத் தங்கள் தரப்பாக முன்வைத்தால் போதும்.
எந்த சபையிலும் ஒருவர் தன் அனுபவங்களை நேர்மையாக முன்வைக்கலாம். அவை ஒருபோதும் அர்த்தமற்றவையாகாது, ஏனென்றால் அவை போல பிறிதொன்றிருக்காது. அவை ஒருபோதும் காலாவதியாகாது, ஏனென்றால் வாழ்க்கை திரும்ப நிகழ்வதில்லை
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
குவைத்-கடிதங்கள்
அன்புள்ள ஜெ.
வளைகுடாப்பயணம் படித்து மகிழ்கின்றேன்.
திரு.சித்தநாதபூபதி பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள்.
அவர் வெண்பாவுக்கு ஒரு நிரல் எழுதிய பெருமைக்குரியவர்.
அமெரிக்காவில் கண்டு உரையாடினேன். அவர் ஒரு பொறியாளர்.
தமிழ் வெண்பா இலக்கணத்தை உள்வாங்கிக்கொண்டு சிறப்பாக நிரல் உருவாக்கியிருந்தார்.
அப்பொழுதே நான் பாராட்டி என் பக்கத்தில் எழுதினேன். அவர் அங்குதான் இருக்கின்றார் என்பது அறிந்து மகிழ்ச்சி.
அவர் இல்லத்தில் விருந்துண்டமை சிறப்பு.
அனைவருக்கும் என் அன்பு.
பயணம் சிறக்கட்டும்.
மு. இளங்கோவன்
*
வணக்கம் ஜெமோ
நலமா? எப்படி இருக்கீங்க? வீட்டில் அனைவரும் நலமா? ப்ரார்த்தனைகள்.
நல்லபடியாக ஊர் போய் சேர்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன். கடைசி நாளன்று வழியனுப்ப வர இயலவில்லை. திரு.நாஞ்சில் நாடன் அவர்களும் நலமாக ஊர் சேர்ந்திருப்பார்கள் என நம்புகிறேன். குவைத் பயணம் உங்களுக்கு புது அனுபவமாக இருந்திருக்கும். உங்களை சந்தித்தது எனக்கும் ஒரு நல்அனுபவம்.
நன்றி
செளரிராஜப்பெருமாள் எனும் பாம்பாட்டிச்சித்தன்
அன்புள்ள பாம்பாட்டிச்சித்தன்
நலம்தானே?
நானும் நலம். உங்களை அங்கே சந்தித்ததில் மகிழ்ச்சி. இங்கே வரும்போது பார்ப்போம். நீங்கள் நவீனக்கவிதை எழுதுபவர் என்று தெரியும். ஆனால் மரபுக்கவிதையை- கம்பராமாயணத்தை- அன்று நீங்கள் கூறியது ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அளித்தது
பார்ப்போம்
ஜெ
அன்புள்ள ஜெயமோகன் சார்,
வணக்கம். பெட்டிகள் சேதாரமும், பெரிய செலவும் இன்றி வந்தடைந்ததில் ஒரு ஆசுவாசம். அதுவரை சங்கடமாகத்தான் இருந்தது. வீண் அலைச்சல்தான். வருத்தம். பேசிப் புலம்பிக்கொண்டோம். ( நினைவுப் பரிசு மாத்திரம் உங்கள் கையோடு வந்ததில் ஏதோ irony இருப்பதாகப் படுகிறது).
ஒரு ஆயுசுக்குப் பேசித்தீராத விஷயங்களை 2, 3 நாட்களில் தீர்த்து விடமுடியுமா என்ன.
நீங்கள் புறப்பட்டுப் போனபின்னரும் மனது உங்களுடன் ஏதோ உரையாடலிலும், பொங்கும் சம்பாஷணைகளிலும். எனக்கு மட்டுமல்ல, ஏறத்தாழ அனைவருக்கும் இதே நிலைதான். சரயுவின் இக்கரையிலேயே விடப்பட்ட ஜனங்கள்.
குடும்பத்தாருக்கு எங்கள் அன்பு.
பிரியங்களுடன்,
ஜெயகாந்த்.
அன்புள்ள ஜெயகாந்தன்
நலம்தானே? நானும் நலம். ‘ஒழிமுறி’ படப்பிடிப்பில் பரபரப்பாக இருக்கிறேன். குவைத் நிகழ்ச்சிகளிலேயே முக்கியமானது உங்களைச் சந்தித்ததுதான். மிகுந்த மனநிறைவை அளித்த சந்திப்பு. நம்மிடையே நிறைய ஒத்துப்போகுமென நினைக்கிறேன்
ஆம், பேசிமுடியவில்லைதான். இங்கேவரும்போது மீண்டும் சந்திப்போம்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
அறமெனப்படுவது-கடிதங்கள்
அறமெனப்படுவது யாதெனின்…
வளைகுடாவில்… 4
வளைகுடாவில்… 3
துபாயில்-கடிதம்
வளைகுடாவில்… 2
வளைகுடாவில்… 1
வளைகுடா பயணம்
April 21, 2012
அறமெனப்படுவது யாதெனின்…
அன்புள்ள நண்பர்களே,
இன்று ‘அறமெனப்படுவது’ என்னும் தலைப்பில் பேச என்னை அழைத்திருக்கிறார்கள். அடிப்படையான வினா இது. எவை வாழ்க்கையின் ஆதாரமான தத்துவநிலைப்பாடுகளை விளக்க முயல்கின்றனவோ அவையே அடிப்படைக் கேள்விகள். இதைப்போன்ற அடிப்படை வினாக்கள் எழும்போதெல்லாம் நாம் நம் ஆசிரியர்களை இயல்பாக நினைவுகூர்கிறோம். நான் நித்ய சைதன்ய யதியை நினைத்துக்கொள்கிறேன். ஏனென்றால் நம் ஆசிரியர்கள் நம்மிடம் அடிப்படை விஷயங்களைப் பற்றியே உரையாடுகிறார்கள். இல்லை, அவர்கள் எதைப்பற்றி உரையாடினாலும் அதெல்லாம் அடிப்படை விஷயங்களாக இருக்கின்றன.
நித்யா ஒருமுறை குருகுலம் வழியாக நடந்துகொண்டிருந்தார், கீழே சமையலறையில் யாரோ டீ போடும் வாசனை. ‘அங்கே டீ போடுகிறவன் முன்னரே தண்ணீரில் சீனியைப் போட்டுவிட்டான். டீ சுவை கெட்டுவிட்டது’ என்றார் நித்யா. சுவையறியும் மூக்கு. அவரது எல்லாப் புலன்களும் உலகச்சுவைக்காகத் திறந்திருந்தன. ஒரு நல்ல அவியல் வைக்கத்தெரியாதவனால் எப்படி அத்வைதத்தைப் புரிந்துகொள்ள முடியும் என்று கேட்டவர் அவரது குரு.
இது ஓர் அன்றாட விஷயமாக இருக்கலாம். ஆனால் நித்யா தொடர்ந்துசென்றார். ’அப்பா தன் பிள்ளைக்கு பொம்மையைக் கொடுத்து பத்திரமாக விளையாடு என்று சொல்வது போல இந்த உலகம் நமக்களிக்கப்பட்டிருக்கிறது. இதை நம் உச்சம் வரை சென்று அறிவதும் அடைவதும் நம் கடமை. இந்த உலகில் இருந்து மிகச்சிறந்த அனைத்தையும் மிகச்சிறந்த முறையில் அடைவதென்பது மனிதனின் சலுகை அல்ல. மனிதனின் உரிமைகூட அல்ல. அது அவன் கடமை, பொறுப்பு.’
அடிப்படை விஷயங்களை அன்றாடவாழ்க்கையின் எந்தப்புள்ளியில் இருந்தும் தொடங்கலாம் என்று நித்யா சொல்வதுண்டு. எதை நாம் ஆழமாக வினவிக்கொண்டாலும் அது அடிப்படை வினாவாக ஆகும். ஓர் அடிப்படை வினாவை எழுப்பிக்கொள்வது எப்படி? நித்யா அதை எப்படிச்செய்வார்? அவரது அருகிருந்து அதை நான் கவனித்திருக்கிறேன். அதுவே நான் அவரிடம் பெற்ற கல்வி.
நித்யா அந்தச் சொல்லையே முதலில் கவனிப்பார். அதுதான் ஆணிவேர். நாம் சாதாரணமாக ஒன்றைச் சிந்திக்கும்போது அதன் சமகால, அன்றாடப் புழக்கத்தைக்கொண்டே புரிந்துகொள்ள முயல்வோம். அறம் என்ற சொல்லுக்கு இன்று இங்கே என்ன அர்த்தம் என்பதே நம் கேள்வியாக இருக்கும். இன்னும் கொஞ்சம் விரிவாகப்போனால் அதன் வரலாற்றுப்புலம் சார்ந்து யோசிப்போம். வரலாறென்பது நம் கண்ணுக்கெட்டியதூரம் வரைதான். மொழி அதற்கும் அப்பால் செல்கிறது. அடிவேர் வரை செல்கிறது. ஆகவேதான் தத்துவத்தில் மொழியை எப்போதும் சிந்தனையின் அடிப்படை அலகாகக் கொள்கிறார்கள்.
அது ரஸ்ஸலின் வழி. இந்திய ஞானமரபில் நெடுங்காலமாக மீமாம்சகர்கள் அதையே கடைப்பிடித்தனர். அதற்கு வியாகரணம், சந்தஸ் என்னும் இரு முறைகளை வைத்திருந்தனர். இலக்கணம், ஒலியமைதி. ஒரு அறம் என்ற உருவகம் ஒரு ‘பேக்கேஜ்’. அதில் அறம் என்னும் சமூக அமைப்பு, சமூக ஆசாரம், சமூக நம்பிக்கை ஆகியவை உள்ளன. அவை எல்லாம் அச்சொல்லில் அடங்கியிருக்கின்றன. அச்சொல் அவற்றைக் கட்டும் பொட்டலமல்ல. அந்தக் கருதுகோள் ஒரு மரம் என்றால் அதன் விதை அது.
‘இவ்ளோ பெரிய விமானத்துக்கு எப்டிடா பெயிண்டடிப்பாங்க?’ என்று ஒரு பைத்தியம் கேட்டபோது ‘மேலே போறப்ப சின்னதாயிடும்ல. அப்ப அடிச்சிருவாங்க ‘ என இன்னொரு பைத்தியம் பதில் சொன்னதாகச் சொல்வார்கள். எதுவும் கொஞ்சம் மேலே, கொஞ்சம் தூரத்தில் சென்றால் சிறிதாகிவிடுகிறது. எளிமையாகக் கையாளக்கூடியதாக ஆகிவிடுகிறது. காலத்தில் பின்னகரும்போது விடைகள் கைக்கடக்கமாக ஆகிவிடுகின்றன. காலத்தில் பின்னகர சொல் ஒன்றே சுட்டுவழி.
சொல் என்பது சிலை, பொருள் என்பது தெய்வம். அளவிடமுடியாத ஒன்று அளவிடக்கூடியதாக நம்முன் அமர்ந்திருக்கிறது. காளிதாசன் சொன்னார் ‘சொல்லும்பொருளும் போல அமைந்தவர்கள் பார்வதிபரமேஸ்வரர்’ என. பிரிக்கமுடியாதவர்கள். ஒருவருக்கொருவர் ஊக்கவிசையானவர்கள்.
நித்யாவின் வழிமுறைப்படி நானும் அறம் என்ற சொல்லையே எடுத்துக்கொள்கிறேன். எந்தக் காலத்தில் இச்சொல் தமிழில் புழக்கத்தில் வந்தது? மொழியாராய்ச்சியில் அச்சொல்லை நோக்கிக் கேட்கவேண்டிய முதல்வினா அது காரணப்பெயரா இடுகுறிப்பெயரா என்பதே. காரணப்பெயர் என்றால் அது பின்னாளில் இங்கே வந்தது.
உதாரணமாக, புரட்சி. பாரதி உருவாக்கிய சொல்லாட்சி. பதினெட்டாம் நூற்றாண்டு ஐரோப்பிய அரசியல் கிளர்ச்சிகளில் இருந்து பிறந்தது. முழுமையான மாற்றம், ஒட்டுமொத்தமான மாற்றம், தலைகீழான மாற்றம் என்பதைச் சுட்டுகிறது. புரள்வது என்ற சொல்லின் நீட்சியாக வந்தது. நாம் படிப்படியான மாற்றத்தையே அறிந்திருக்கிறோம். புரட்சி நமக்கு ஒரு புதிய செய்தியே.
இடுகுறிச்சொற்கள் அக்கருத்துக்கு இடப்பட்ட ஒலிக்குறிப்புகள் மட்டுமே. ஒரு குழந்தை உடலும் உயிருமாகப் பிறப்பதுபோலக் கருத்து சொல்லும் பொருளுமாகவே மானுட மனதில் உருவாகிறது. அதற்கு சொல்லால் பெயரிடப்படுவதில்லை. அந்தச் சொல்லே அதைக் கொண்டு செல்கிறது, விரியச்செய்கிறது.
இடுகுறிச்சொற்களை ஆராயும்போது சிறந்த வழி என்பது அச்சொல்லின் அருகே உள்ள சொற்களை கவனிப்பது. எஸ்.வையாபுரிப்பிள்ளையின் தமிழ்ப்பேரகராதி அதற்கு மிகச்சிறந்த சாதனம். அதன் அகரவரிசை நமக்கு ஒரு சொல் கூடவே கொண்டுவரும் பிற சொற்களை சுட்டிக்காட்டி அபாரமான மனவெளிச்சங்களை அளிக்கிறது.
அறம் என்ற சொல்லின் அருகே அமர்ந்த சொல் அறுதல். அதுவே அதன் மொழிமூலமாக இருக்கலாம். அற்றம் என்றால் இறுதி. அற்றுபடி என்றால் திட்டவட்டம். அதாவது அறுத்துச் சொல்லுதல், வரையறைசெய்து சொல்லுதல், கடைசியாகச் சொல்லுதல் என்ற தொனியில் இச்சொல் பிறந்திருக்கலாம்.
அறம்பாடுதல் என்கிறோம். பெரும் துன்பப்பட்ட கவிஞன் அதற்குக் காரணமானவர் அழியும்படியாகப் பாடும் பாடல். நந்திவர்ம பல்லவனை அவன் சகோதரன் அறம்பாடிக் கொன்றான் என்று நம் தொன்ம மரபு சொல்கிறது. அங்கே வரும் அறம் என்பது தர்மம் அல்ல. எதிக்ஸ் அல்ல. அது இறுதிதான். அறப்பாடுதல், அறும்படி பாடுதல். அற்றம் வரும்படி பாடுதலே அங்கே அறமாக சொல்லப்படுகிறது.
அறம் என்பது இதுதான். ஒரு மனிதக்குழு தனக்குள் உருவாக்கிக்கொள்ளும் நெறிகள். இறுதியாக வகுத்துக்கொண்ட நடத்தைகள். செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை, செய்தே ஆகவேண்டியவை அடங்கிய ஒரு வழிகாட்டித்தொகை. அதுவே அறம்.
நாம் நம் மொழிமரபில் அறம் என்ற சொல்லின் பிறப்புச்சூழலைப் பார்க்கையில் சங்க காலம் கண்ணுக்கு முன்விரிகிறது. புறநானூற்றுக்காலம் என்பது பெருங்குடி மன்னர்களான மூவேந்தர் சிறுகுடிமன்னர்களான வேளிர்களை, கடல்சேர்ப்பர்களை, குறவமன்னர்களை அழித்தொழித்துப் பேரரசுகளை உருவாக்கும் போர்ச்சூழல் என்பதுதான் வரலாறு. சங்கம் மருவியகாலத்தில் முடியுடை மூவேந்தர் மட்டுமே எஞ்சுகிறார்கள். அந்தப்போர்ச்சூழல் எல்லாவகை வன்முறையையும் அனுமதிக்கிறது.
எரிபரந்தெடுத்தல் என்று சங்க இலக்கியம் பேசும் போரழிவுகள் கொடூரமானவை. எதிரிநாட்டுப்பெண்கள் அறுத்தெறிந்த தாலிகள் சாலைகளில் மலையாகக் குவிகின்றன. புகை நகரை மூட பெண்களின் கண்ணீரில் யானைக்கால் வழுக்குகிறது. எதிரிநாட்டு ஊருணிகளை யானை வைத்து அழிக்கிறார்கள். வீடுகளை எரிக்கிறார்கள். எதிரி மன்னனின் பல்லைக்கொண்டுவந்து சுவரில் பதிக்கிறார்கள்.எல்லாமே அறம்தான்.
இன்றைய நம் அறவுணர்ச்சி கூசுகிறது. ஆனால் அறம் என்பது மெல்லமெல்ல சமூகத்தால் விரிவாக்கம் செய்யப்பட்ட ஒரு கருத்து என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அறம் என்ற கருத்து ஒரு சிறு மக்கள் குழுவில் உருவாகிறது. அது அவர்களை மட்டுமே கட்டுப்படுத்துகிறது. ஒரு குடும்பத்துக்குள் உருவாகும்போது அது குடும்ப அறம். குடும்பம் குலமாக ஆகும்போது அது குல அறம். குலம் நாடாக ஆகும்போது அது அரசியல் அறம். நாடுகள் மானுடமாகும்போது மானுட அறம்.
சங்ககாலத்தில் நாம் காண்பது குல அறங்கள் அரசியலறங்களாகத் திரளும் ஒரு பெருநிகழ்வை. போர்வெறியைக் கொண்டாடக்கூடிய, கொலையை கொள்ளையை அனுமதிக்கக் கூடிய, சங்ககாலத் தமிழ்ச்சமூகம் கொஞ்சம்கூட அனுமதிக்காத ஒன்றுண்டு. நன்னன் என்பவன் செய்த பெண்கொலை. ஒரே ஒரு பெண்ணைக் கொன்ற நன்னன் என்ற குறுநில மன்னனைப் புலவர்கள் மீண்டும் மீண்டும் சாபமிட்டுப் பாடியிருப்பதைக் காணலாம். தன் மக்களாலேயே நன்னன் ஒதுக்கப்பட்டான். ‘பெண்கொலை புரிந்த நன்னன்’ என்றே வரலாற்றில் அறியப்பட்டான்.
அது மானுட அறம். என்னதான் இருந்தாலும் ஒருபோதும் செய்யக்கூடாத விஷயம் அது என தமிழ்ச்சமூகம் நினைத்தது. அவ்வாறு ஒரு சமூகம் நினைப்பவற்றின் அளவு பெருகப்பெருக அச்சமூகம் மானுட அறம்நோக்கி நகர்கிறது. கால-இட-சூழலை மீறிய அறத்தையே நாம் ‘அறம்’ என்கிறோம்.சங்கப்பாடல்களில் பொருண்மொழிக்காஞ்சியில் மானுட அறம் நோக்கிய தேடலை, விவாதத்தைக் காண்கிறோம். ஆனால் சங்கம் மருவிய காலகட்டத்தில் தமிழ்ச்சமூகம் அந்த அறத்தை வந்தடைந்திருப்பதைக் காணலாம் . அரைசியல் பிழைத்தோர்க்குக் கூற்றாக வரும் அறம் என்பது அதுவே.
அந்த அறம் ஒரு பலிவாங்கும் போர்க்கடவுளாக உருவாகி வந்திருப்பதைக் காணலாம். சிலப்பதிகாரக் காலகட்டத்தில் பெருமன்னர்கள் உருவாகிவிட்டிருந்தனர். அவர்கள் கட்டற்ற அதிகாரமுள்ளவர்கள். குறுங்குடிமன்னர்கள் குல அறத்தால், ஆசாரமரியாதைகளால் கட்டுப்படுத்தப்பட்டவர்கள். ஆனால் பெருங்குடிமன்னனுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அவன் தவறுசெய்தால் தட்டிக்கேட்பது எது? அதுவே அறம். மானுட அறம். கூற்றாக அது வந்து வாசலில் நிற்கும் என்கிறார் இளங்கோ.
அதையே வள்ளுவர் ‘அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை’ என்றார். அந்த அறம் நோக்கி நம் சமூகம் நகர்ந்ததை நாம் வள்ளுவர் வழியாகப் பார்க்கிறோம். அறன் வலியுறுத்தல் என்று வள்ளுவர் சொல்வது மானுட அறத்தையே. இல்லறம் துறவறம் என்னும் சிறிய அறங்களுக்கு அப்பால் கோபுர உச்சிபோல மானுட அறம் எழுகிறது.
அறத்துக்கு மாற்றாக மறத்தைக் கூறும் ஒரு வழக்கம் நம்மிடம் உள்ளது. ஆனால் சங்ககாலத்தில் மறம் உயர்ந்த விழுமியமாகவே இருந்தது. அது அறத்தின் எதிர்மறைச்சொல் அல்ல. மறுத்தல், மறுத்து நிற்றல் என்பதே மறம். அது வன்முறை என்றும் ஆகவே அறத்துக்கு எதிரானது என்றும் கண்டவர் வள்ளுவர். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார் மறத்துக்கும் அஃதே துணை என அந்த எதிரீட்டை அவர்தான் உருவாக்கினார். அது அவரது சமண அறம்.
அந்தத் தேடலின் உச்சியில் கம்பராமாயணம் நிகழ்ந்தது. அறத்தின் மூர்த்தியான் என கம்பன் ராமனைச் சொல்கிறான். ராமனின் குணம் அல்ல அறம். ராமன் அறத்தின் உடல்வடிவம். அறம் ராமனைவிட மேலானது. தருமம் பின் இரங்கி ஏக என்று சொல்லும்போது கம்பன் அதை ஒரு தனி இருப்பாக, தனி ஆளுமையாக உருவகிக்கிறான். அதுவே நம் மரபின் உச்சகட்ட அறத்தரிசனம்.
நாம் நினைப்பதுபோல நம் மன்னர்கள் முற்றதிகாரம் கொண்டவர்கள் அல்ல. அவர்களைக் கட்டுப்படுத்தவும் வழிநடத்தவும் சான்றோர் அவைகள் இருந்தன. சிற்றரசர்சபைகள் இருந்தன. தமிழகத்தின் மாபெரும் முடிமன்னனாகிய ராஜராஜனே சிற்றரசர் சபைக்குக் கட்டுப்பட்டு இருப்பதை நீங்கள் பொன்னியின் செல்வனிலேயே வாசிக்கலாம். கொடும்பாளூர் வேளார்கள், பழுவேட்டரையர்கள் என அந்த சபையில் பல சிற்றரசர்கள் இருந்தார்கள்.
அவர்கள் அனைவரும் சேர்ந்து மன்னனைத் தலைவனாக அங்கீகரிக்கவேண்டும்.அவ்வாறு அங்கீகாரம் பெற்றவனே மன்னன்.ஆகவேதான் அவனுக்குக் குலசேகரன் — குலங்களைத் தொகுத்தவன்– என்ற அடைமொழி உள்ளது. குல அறத்தால் கட்டுப்படுத்தப்பட்ட பழைய மன்னன் மானுட அறத்தால் ஆளப்படுபவனாக ஆவதையே நாம் இலக்கியங்களில் காண்கிறோம்.
என் அண்ணா பொதுவாகக் குடும்பத்திற்குள் உதவிகள் செய்யக்கூடியவனாக இருந்தார். என் அம்மாவுக்குத் தோழியாக இருந்த ஒரு பெண்மணிக்கு அவர் உதவிகள் செய்வதுண்டு. படுகிழவி. ஒருமுறை அண்ணா சென்றபோது அவள் பழைய சாக்கைப் போர்த்திக்கொண்டு இருப்பதைக் கண்டார். உடனே ஒரு கம்பிளியை வாங்கிக்கொடுத்தார். அடுத்தமுறை போனபோது கிழவி அதே சாக்கைப் போர்த்திக்கொண்டிருந்தாள். ‘என் மூத்தமகனின் பிள்ளை தரையிலே கிடக்கிறது. அதற்குக் கொடுத்துவிட்டேன்’ என்றாளாம்.
அண்ணா இன்னொரு கம்பிளி வாங்கிக்கொடுத்தார். ஆனால் மறுமுறை செல்லும்போது அதுவும் இல்லை. ‘மகளுக்குக் கம்பிளி இல்லை. அவளுக்குக் கொடுத்தேன்’ மூன்றாம் முறையும் கம்பிளி வாங்கிக்கொடுத்தார். அதுவும் ஒரே வாரத்தில் ஒரு பேரனுக்குக் கொடுக்கப்பட்டது. அண்ணா சொன்னார் ‘ஆயிரம் முறை வாங்கிக்கொடுத்தாலும் இப்படித்தான் நடக்கும்…பிறந்தநாள் முதல் தனக்கென எதையும் தேடாத வாழ்க்கை…குழந்தையாக இருக்கும்போதே குழந்தை வளர்க்க ஆரம்பித்திருப்பாள்…அந்த நாள் முதல் அன்னைதான். கொடுத்துத்தான் பழக்கம்.’
அது குல அறம். தன் குலத்துக்காகத் தன்னை அர்ப்பணித்த வாழ்க்கை. அதற்குமேல் ஓர் அறம் உண்டு. அதுவே மானுட அறம். என் அலுவலகத்துக்கு முன்னால் உள்ள டீக்கடையில் அய்யப்பண்ணன் என்பவர் டீ குடிக்க வருவார். நூறுவயது தாண்டியவர். விவசாயி. அய்யப்பண்ணனுக்கு பொய்கையாறு அணை இன்று இருக்கும் இடத்தில் வயல் இருந்தது. அங்கே செல்ல புலியூர்க்குறிச்சியில் பஸ் இறங்கி எட்டுமைல் நடக்கவேண்டும்.
அய்யப்பண்ணன் ஓட்டலில் நுழைந்து காலையுணவு சாப்பிடப்போகும்போது பஸ் வந்துவிட்டது. அடுத்த பஸ் மதியம்தான். ஆகவே பாய்ந்து ஏறிவிட்டார். கையில் தூக்குப்போணியில் பழையது இருக்கும் தைரியம். மதியம் வரை வெயிலில் வேலைசெய்துவிட்டு பசிவெறியுடன் சாப்பிட வரும்போது பார்த்தால் ஒரு நாடோடி அவரது போணிச்சோற்றை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான். அருகே நின்ற கம்பைப் பிடுங்கிக்கொண்டு அய்யப்பண்ணன் ஓடி வந்தார்.
நாடோடிக்கும் பயங்கரமான பசி போல. அவன் போணியை வழித்து நக்கிக்கொண்டிருந்தான். பசியாறிய முகத்துடன் ஏறிட்டுப்பார்த்தான். ‘எப்டி நான் அவன அடிப்பேன்…பசியாறின மொகத்தில உள்ளது மகாலச்சுமியில்லா?’ என்றார் அய்யப்பண்ணன் என்னிடம். அய்யப்பண்ணனின் அந்த மனவிரிவே மானுட அறம்.
நண்பர்களே, மானுட வரலாறென்பது அறத்தின் பரிணாம வளர்ச்சிதான்.
நன்றி
[14-4-2012 அன்று குவைத் முத்தமிழ்மன்றத்தில் ஆற்றிய உரை]
தொடர்புடைய பதிவுகள்
அறமெனப்படுவது-கடிதங்கள்
குவைத்-கடிதங்கள்
வளைகுடாவில்… 4
வளைகுடாவில்… 3
துபாயில்-கடிதம்
வளைகுடாவில்… 2
வளைகுடாவில்… 1
வளைகுடா பயணம்
April 20, 2012
வளைகுடாவில்… 4
குவைத்தில் நாங்கள் திட்டமிடாது கலந்துகொண்ட நிகழ்ச்சி நாஞ்சில்நாடனின் கம்பராமாயண விளக்க உரை. காலை பத்துமணிக்கு ஜெயகாந்தனின் வீட்டில் ஏற்பாடுசெய்திருந்த நிகழ்ச்சியில் முப்பதுபேர் கலந்துகொண்டார்கள். குவைத்தின் முக்கியமான இலக்கிய வாசகர்கள் அனைவருமே வந்திருந்ததாகச் சொன்னார்கள். நாஞ்சில்நாடன் கம்பராமாயணத்தை அவர் பாடம்கேட்டது முதல் ஆரம்பித்து ஒவ்வொரு காண்டத்திலும் சில உதாரணப்பாடல்களை சுட்டிக்காட்டிப் பேசினார். நாஞ்சிலுக்கே உரிய உணர்ச்சிகரமான பேச்சு.
வந்திருந்தவர்களில் பலருக்கு கம்பராமாயண அறிமுகம் இருந்தது ஆச்சரியமளித்தது. புதுக்கவிதை எழுதுபவரான பாம்பாட்டிச்சித்தன் சரசரவென சில கம்பராமாயணப்பாடல்களைச் சொன்னார். அவரது ஊரில் இருந்து கற்றுக்கொண்டாராம். தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். குவைத்தில் தமிழ் வகுப்பு நடத்தும் ஆசிரியை ஒருவரும் கம்பராமாயணப்பாடல்களை நினைவுகூர்ந்ததைக் கண்டேன்.
அதன்பின் பொதுவாக இலக்கியம் வரலாறு பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அந்த நாள்முழுக்க நண்பர்களைச் சந்திப்பதிலேயே செலவாகியது. நாஞ்சில்நாடனின் நண்பரான இசக்கி வந்திருந்தார். ஜெயகாந்தன் வீட்டிலேயே மதிய உணவு. நாஞ்சில் மீதுள்ள பீதியால் வெஜிடபிள் பிரியாணி கவனமாகத் தவிர்க்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்தது.
மதியம் சாப்பிட்டுவிட்டு அறைக்கு வந்து குளித்து உடைமாற்றி அரங்குக்குச் சென்றோம். குவைத்த்தில் பல தமிழ்ச்சங்கங்கள் இருந்தாலும் சமீபகாலமாக ஆரம்பிக்கப்பட்ட முத்தமிழ்மன்றம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. அதன் தீவிரச்செயல்பாட்டாளரான ஜெயபாலன் காஞ்சீபுரத்துக்காரர். அங்கே முப்பத்தொன்று வருடங்களாக இருக்கிறார். நான் சமீபகாலத்தில் அவரைப்போல உற்சாகமே உருவான ஒருவரைப் பார்த்ததில்லை. பரபரப்பாகப் புகைப்படங்கள் எடுத்துத் தள்ளினார். அவற்றைக் கிளம்பும்போது அச்சுப்போட்டுக் கையிலும் கொடுத்தார். மென்பிரதி கையில் இல்லாததனால் இணையத்தில் ஏற்றமுடியவில்லை.
முத்தமிழ்மன்றத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான பழமலை கிருஷ்ணமூர்த்தி பழந்தமிழ் இலக்கியங்களில் தீவிரமான வாசிப்பு கொண்டவர். எங்கள் பேச்சுகளில் கூடவே இருந்தார். பழந்தமிழிலக்கியம் பற்றிய பேச்சுகளில் மட்டும் உற்சாகமாகக் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சிக்கு முன்னால் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள். அன்னிய மண்ணில் தமிழ்க்குழந்தைகள், அதிலும் பள்ளியில் தமிழே பயிலாத குழந்தைகள், தமிழில் பேசிப் பாடுவது ஒரு மனநிறைவை அளித்தது. ஜெயகாந்தனின் மகள் தேஜஸ்ரீ பரதநாட்டியம் ஆடினார். வழக்கமாக இத்தகைய தமிழ்மன்ற நடனங்கள் போலப் பயில்முறை நடனம் அல்ல. மிகத்தேர்ந்த நடனம். துல்லியமான அசைவுகள் . அதைவிடப் பாடலின் பொருள்புரிந்த பாவங்கள், இன்று சிறு பெண்களின் நடனங்களில் அதை அனேகமாக பார்க்கவே முடியாது.
கடைசியாக ஆடப்பட்ட ஸ்வாதித்திருநாள் தில்லானா என்னை மிகுந்த மனக்கொந்தளிப்புக்கு உள்ளாக்கியது. சுவாதித்திருநாள் என்னை என்றுமே கவர்ந்த கலைஞர். அவருடையது வெறும் பாடல் அல்ல. எல்லாவற்றிலும் தாபமும் தனிமையும் இருக்கும். அவரது சோகம் மிக்க வாழ்க்கையும் அத்தகையது. ஒரு கலைஞன் எப்படிப்பட்ட வாழ்க்கையில் இருக்கக்கூடாதோ அப்படிப்பட்ட வாழ்க்கையில் அவர் மாட்டிக்கொண்டார். மன்னனாக. அவமதிப்புகள், தோல்விகள், தனிமை. ஆனால் எதுவும் கலைஞனுக்கு ஊக்கமருந்துதான் போலும்.
பழமலை கிருஷ்ணமூர்த்தி முதலில் பழந்தமிழ் இலக்கியங்களைப்பற்றி, குறள்பற்றி குறிப்பாக, விரிவாகப்பேசினார். அதன்பின் நான் ‘அறன் எனப்படுவது யாதெனின்’ என்ற தலைப்பில் பேசினேன். கடைசியாக நாஞ்சில்நாடன் ‘இலக்கியம் அன்றும் இன்றும்’ என்ற தலைப்பில் தமிழிலக்கியத்தின் நீண்ட மரபைப்பற்றிப் பேசினார்.
விழாமுடிந்தபின் அறைக்கு சித்தார்த், ஜெயகாந்தன் எல்லாரும் வந்திருந்தார்கள். இரவு ஒரு மணிவரைக்கும் பேசிக்கொண்டிருந்தோம். பெரும்பாலும் உற்சாகமான வேடிக்கையான விஷயங்கள். கொஞ்சம் இலக்கியம் கொஞ்சம் வரலாறு கொஞ்சம் அரசியல்.
மறுநாள் காலையில் மாதவன்பிள்ளையும் சித்தார்த்தும் வந்திருந்தார்கள். அவர்களுடன் குவைத்தின் அருங்காட்சியகம் சென்றோம். படூயின்பழங்குடிகள் அக்காலத்தில் கையாலேயே செய்துவந்த கூடாரத்துணி நெசவு மற்றும் ஆடைநெசவுக்கலையைப்பற்றிய விளக்கங்களுடன் மாதிரிகளையும் வைத்திருந்தனர். பொதுவாகப் பாலைவனமக்கள் பளீரிடும் நிறங்களையே விரும்புகிறார்கள். கடல்மக்களும் அப்படியே. பாலையிலும் கடலிலும் உள்ள வெறிச்சிட்ட ஒரே நிறத்துக்கு மாற்றாக அவர்களுக்கு நிறங்கள் தேவைப்படுகின்றன போலும்.
குவைத்தை சுற்றிப்பார்த்தோம். துபாய்போல ஒரு அதிநவீன நகரமல்ல. ‘இது புராணத்தில் வரும் வைஜயந்தம். பிரம்மாண்டமான, ஆன்மா இல்லாத நகரம்’ என்றார் ஜெயகாந்தன். ராவணனைத் தேடி இலங்கைசெல்லும் அனுமன் அங்குள்ள செய்குன்றுகளை ‘பாவப்பண்டாரங்கள்’ [பாவக்களஞ்சியங்கள்] என்று சொல்வதை நாஞ்சில் நினைவுகூர்ந்தார்.
குவைத்திலும் துபாயிலும் உள்ள மெல்லிய சங்கடம் அராபியக் காவலர்களும் ஊழியர்களும் நம்மை நடத்தும் விதம். கண்களில் வெறுப்பு பொங்க அலட்சியமாக அவர்கள் சொல்லும் வார்த்தைகள். அனேகமாக உலகில் எங்கும் நாம் இப்படி நேரடியாக அவமதிப்பைச் சந்திக்க நேராது. நான் ஒரு காவல் பெண்ணிடம் என் பாஸ்போர்ட்டை நீட்டினேன். அவள் ஏதோ கைகாட்டினாள். நான் டிக்கெட்டைக் கேட்கிறாள் என நினைத்து அதை நீட்ட மிக அலட்சியமாக ஏதோ சொல்லி மெலிதாகத் துப்பினாள்.
குவைத்தில் நாஞ்சில் கொஞ்சம் பரிசுப்பொருட்கள் வாங்கிக்கொண்டார். நான் எதுவும் வாங்க விரும்பவில்லை. எங்கு போனாலும் எதுவும் வாங்குவது என் வழக்கம் இல்லை. குழந்தைகளுக்கும் அந்த எதிர்பார்ப்பில்லாமல் ஆக்கியிருக்கிறேன். நண்பர்கள் வற்புறுத்தி டீத்தூள், பேரீச்சை போன்று சிலவற்றை வாங்கித்தந்தனர். ஜெயபாலனும் சித்தார்த்தின் அப்பாவும் சில பரிசுப்பொருட்களை அளித்தனர். அவர்கள் தந்த பணத்தை விஷ்ணுபுரம் அமைப்புக்கான நன்கொடையாகக் கணக்கில் வைத்துக்கொண்டு அரங்கசாமிக்கு அறிவித்தேன்.
மாலையில் விமானநிலையத்துக்கு நண்பர்கள் அனைவரும் வந்திருந்தனர். உணர்ச்சிகரமாக விடை கொடுத்தனர். ஒவ்வொருமுறை வெளிநாட்டுக்குச் சென்று நண்பர்களைப் பிரிந்து தமிழ்நாட்டுக்கு வரும்போது தமிழ்மண்ணைப் பிரிந்து வேறெங்கோ செல்வதுபோன்ற அதே மனநெகிழ்வு ஏற்படுகிறது.
விமானம் வானில் எழுந்தபோது நினைத்துக்கொண்டேன். எப்போதும் நினைப்பதுதான். உலகம் முழுக்கத் தமிழினம் பரவிக்கொண்டே இருக்கிறது. நிற, மத அடையாளத்துக்கு அப்பால். அதில் எந்த அளவுக்குத் தமிழ் நீடிக்கும்?
[முற்றும்]
தொடர்புடைய பதிவுகள்
அறமெனப்படுவது-கடிதங்கள்
குவைத்-கடிதங்கள்
அறமெனப்படுவது யாதெனின்…
வளைகுடாவில்… 3
துபாயில்-கடிதம்
வளைகுடாவில்… 2
வளைகுடாவில்… 1
வளைகுடா பயணம்
April 11, 2012
புயலிலே ஒரு தோணி – நவீன் விமர்சனம்
ஜெ,
வணக்கம் நலம்தானே? புயலிலே ஒரு தோணி குறித்து ஒரு கட்டுரை எழுதினேன். உங்கள் பார்வைக்கு:
அன்புடன்,
நவீன்
அன்புள்ள நவீன்,
அழகான கட்டுரை. நுட்பமாக வாசித்திருக்கிறீர்கள். நீங்கள் இதுவரை எழுதிய இலக்கியக்கட்டுரைகளில் இதுவே சிறந்தது. குறிப்பாக முடிவு வரி. உண்மையில் ஒட்டுமொத்த வாழ்க்கைத்தரிசனம் உடைய எவர் வரலாற்றை முன்வைத்து எழுதினாலும் இந்த மனநிலையே எஞ்சுகிறது.
சோர்வூட்டுவதாக இளமையில் தோன்றும் இந்தத் தரிசனம் வாழ்க்கை முதிரும்தோறும், பாதி தாண்டும்போது குறிப்பாக, பிரகாசமானதாகவும் ஒளியூட்டுவதாகவும் ஆகிறது. குச்சி ஐஸ்கிரீமை சுவைக்கும் குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக 'இம்புட்டுத்தானா?' என அடையும் ஏமாற்றம் வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத ஒன்று. 'இல்லமக்கா சாமிக்கே கூட அம்புட்டேதான்' என்று அம்மா சொல்லும்போது குழந்தைக்கு ஒரு மனநிறைவு வருகிறதே, அதுதான் இது.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
பாரதி உரிமை
நகுலனும் சில்லறைப்பூசல்களும்
ப.சிங்காரம்,ஒருகடிதம்
April 10, 2012
கம்பராமாயணம்-விஷ்ணுபுரம் அரங்கம் – ஊட்டி – மே 25,26,27-2012
நாஞ்சிலின் கம்பராமாயண அரங்கம் மற்றும் விஷ்ணுபுரம் வாசிப்பரங்கம் உதகை நாராயண குருகுலத்தில் மே 25, 26, 27 (வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. கலந்துகொள்ள விரும்புபவர்கள் இங்கே பதியவும்.
சென்ற முறை நிகழ்ச்சிகளுக்குப் பதிவு செய்துவிட்டு தகவல் அளிக்காமல் வராதவர்களுக்கு அனுமதியில்லை. இதில் பதிபவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
சென்ற முறைகளில் பின்பற்றப்பட்ட அதே வழிமுறைகள், கூட்ட விதிகள் இம்முறையும் பின்பற்றப்படும். விதிமுறைகள் இங்கே உள்ளன, அவசியம் படிக்கவும் http://www.jeyamohan.in/?p=7620
தொடர்புகொள்ள – விஜயராகவன், ஈரோடு – 98430 32131 சீனிவாசன், சென்னை – 98843 77787
பதிவு செய்துகொள்ள இங்கே சொடுக்கவும்
தொடர்புடைய பதிவுகள்
ஊட்டி முகாம்,சுனில் கிருஷ்ணன் 2
ஊட்டி முகாம்-சுனில் கிருஷ்ணன் பதிவு
ஊட்டி காவிய முகாம் (2011) — 1
காந்தியின் திமிர்
நண்பர்களே,
என்னுடைய நண்பர் வெங்கடரமணன் கனடாவில் ஒரு லேஸர் விஞ்ஞானியாக இருக்கிறார். தமிழில் சில அற்புதமான அறிவியல் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். பதினைந்தாண்டுகளுக்கு முன்பு அவர் கணிப்பொறிசார்ந்த ஒரு சொல்லாட்சியை உருவாக்கினார் – கொந்தர். 'Hacker' என்ற சொல்லின் தமிழாக்கம் அது. கணிப்பொறி நிரல்களை கள்ளத்தனமாக ஊடுருவி உடைப்பவர்கள் இவர்கள். நிரல்களை அழிக்கும் நச்சுநிரலிகளை [வைரஸ்] உருவாக்கி பரப்புபவர்கள். உலகம் முழுக்க ஒவ்வொரு வருடமும் இவர்கள் பலலட்சம்கோடி ரூபாய் மதிப்புள்ள கணிப்பொறி நிரல்களை பயனற்றுப் போகச்செய்கிறார்கள்.
சாதாரணமாக இவர்களை நாம் ஓர் அழிவுச்சக்தியாகத்தான் பார்ப்போம். கணிப்பொறி நிரல் எழுதுவதை ஒரு தொழிலாகக் கண்டால் இவர்கள் அழிவுச்சக்திகள்தான், சந்தேகமே இல்லை. ஆனால், அதை ஓர் அறிவுச்செயல்பாடாகக் கண்டால் கொந்தர்கள் மிகமிக ஆக்கபூர்வமான பங்களிப்பாளர்கள் என்றார் வெங்கடரமணன்.
ஏனென்றால் அறிவுச்செயல்பாடென்பது ஒரு முரணியக்கம் மூலமே முன்னகர முடியும். ஒரு நேர்நிலை இயக்கத்துக்கு அதேயளவு வீச்சுள்ள எதிர்நிலை இயக்கம் தேவை. அந்த எதிர்ச்சக்திதான் இதை செயலூக்கம் கொண்டதாக ஆக்குகிறது. இது தன் குறைகளைக் களைந்து தன்னை முன்னகர்த்திக்கொள்ளச் செய்கிறது. தன்னைத் தானே தாண்டி அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்கான சவால்களை உருவாக்குகிறது.
உங்கள் வகுப்பில் உங்களுக்கு சரியான போட்டியாளர் என ஒருவர் இருந்தால் உங்கள் திறமை எத்தனைமடங்கு தீவிரமடைகிறது! மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் போட்டியே இல்லை என்ற அளவுக்கு வளர்ந்து முதலிடத்துக்கு வந்தபிறகு, தாங்களே பணம் செலவிட்டு ஒரு போட்டியாளரை உருவாக்கிக் கொண்டு, அந்தப் போட்டியாளரை எதிர்த்துச் செயல்படுவது ஒரு நிர்வாகவியல் தந்திரம். 1992-இல் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ரோஸ் பெரட் [Ross Perot] என்பவரைப்பற்றி வாசித்தபோதுதான் இந்த விஷயத்தை நான் கேள்விப்பட்டேன். அன்று எனக்கு பலதளங்களில் ஒரு பெரிய திறப்பாக இருந்தது அந்தச்சேதி.
கொந்தர்கள் என்றால் கொத்திவிடுபவர்கள். பெரிய அணை ஒன்றில் உடைப்பை உருவாக்குபவர்கள். பெரிய சாலை ஒன்றில் பள்ளத்தைத் தோண்டி வைப்பவர்கள். அவர்கள் இதன்மூலம் ஒரு பெரிய அமைப்பை நிலைகுலையச் செய்கிறார்கள். அந்த அமைப்பின் குறைகளை அவர்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் உள்ள ஓட்டைகளையும் விரிசல்களையும் கண்டுபிடித்து உள்ளே சென்று கொத்திவிடுகிறார்கள்.
விளைவாக அந்த அமைப்பு தன்னைத் திருத்திக் கொள்ளவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறது. தன் ஒட்டுமொத்த அமைப்பையே அது மறுபரிசீலனை செய்கிறது. தன் வழிமுறைகளை ஆராய்கிறது. தன்னுடைய சிந்தனைப்போக்கை வேறு பல தடங்களில் செலுத்தி புதியபுதிய விஷயங்களை கண்டுபிடிக்கிறது. தன்னை புத்தம் புதியதாக மீட்டு எடுத்துக்கொண்டே இருக்கிறது.
கொந்தர்கள் இல்லாவிட்டால் இன்று நாம் வங்கித்தொழிலுக்கு இணையத்தைப் பயன்படுத்தியிருக்க முடியாது. இருபதாண்டுகளாக கொந்தர்கள் இணையத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை உடைத்து உடைத்து சவாலை விட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதற்கு எதிரான செயலாகவே இணையத்தின் எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் உருவாகி வந்தன. இப்போதும் கொந்தர்கள் அவ்வப்போது கைவைக்கிறார்கள். உடனே பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்னும் மேம்படுகின்றன.
இன்றுள்ள எல்லா நிரலித்தொழில் வளர்ச்சியிலும் கொந்தர்களின் பங்களிப்புண்டு என்கிறார் வெங்கடரமணன். இன்று பெரிய நிறுவனங்கள் கொந்தர்களை அவர்களே சம்பளம்கொடுத்து உருவாக்குகிறார்கள். தங்களைத் தாங்களே புதுப்பித்துக்கொள்ள, வளர்ந்து முன்செல்ல.
அசல்சிந்தனையாளர்கள் எல்லாருமே ஒருவகை கொந்தர்கள் என்பதை சுட்டிக்காட்டத்தான் இதைச் சொல்லவந்தேன். மானுடசிந்தனை என்ற மிகப்பெரிய அமைப்பு பல்லாயிரம் வருடங்களாக இருந்துகொண்டிருக்கிறது. அது ஒரு பெரிய நதி போல தன் பாதையை உருவாக்கிக்கொண்டு சுழித்துப்பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. அசல்சிந்தனையாளர்கள் என்னும் கொந்தர்கள் அந்த மானுடசிந்தனை என்ற நதியின் கரையை அவ்வப்போது கொந்தி விடுகிறார்கள். விளைவாக நதி நிலைகுலைகிறது. அந்த உடைப்புவழியாகப் பீறிட்டு புதிய திசையில் ஓட ஆரம்பிக்கிறது.
அசல்சிந்தனையாளர்கள் நம்மை எப்போதுமே உடைத்துக் கலைக்கிறார்கள். நம்மை குழப்பமும் கலக்கமும் அடையச்செய்கிறார்கள். பெரும்பாலான நேரங்களில் எரிச்சலடையச் செய்கிறார்கள். நாம் நம்பி இருப்பவற்றை அவர்கள் உலுக்குவதனால் உருவாகும் மனக்குலைவு அது.
இங்கே ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். நம் இளமைப்பருவத்தில் அதிரடியான கருத்துக்கள் மூலம் நம்மைக் கலங்கடிக்கும் பேச்சாளர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் பலர் உண்டு. அவர்கள் அசல்சிந்தனையாளர்கள் அல்ல. காரணம் அவர்கள் அதுவரையிலான மானுட சிந்தனையை எதிர்கொள்ளவில்லை. நமக்கு மானுடசிந்தனையுடன் பெரிய அறிமுகம் இல்லாத காரணத்தால் சில கருத்துக்கள் மூலம் நம்மை அவர்கள் பாதிக்கிறார்கள், அவ்வளவுதான்.
அந்தக்கருத்துக்களை அவர்கள் ஏற்கனவே இருந்த மானுட சிந்தனையின் பெருக்கில் இருந்து எடுத்துக்கொண்டிருப்பார்கள். நமக்கு அது தெரிந்திருக்காது, அவ்வளவுதான். அது மனித சிந்தனையின் ஒரு துளி, விவாதத்தில் ஒருபக்கம். அதை மிகைப்படுத்தி ஆணியறைந்து சொன்னால் இளமையில் நாம் நிலைகுலைவோம். நான் சொல்வது அதை அல்ல.
உதாரணமாக, நமக்குச் சின்ன வயதில் கடவுள் பக்தி இருக்கும்போது ஒரு நாத்திகர் கடவுள் மறுப்பு பேசி நம்மைக் குலைக்கலாம். அது ஒருவேளை நமக்கு முக்கியமானதாகவும் இருக்கலாம். ஆனால் அது அசல்சிந்தனையே அல்ல. ஏனென்றால் நாத்திகம் என்றும் இருந்துகொண்டிருக்கும் சிந்தனை. புதியதல்ல.
ஆனால் அசல்சிந்தனையாளன் புத்தம்புதியதாக ஒன்றைச் சொல்கிறான். அதுவரை மனிதசிந்தனையில் இல்லாத ஒன்றாக அது இருக்கலாம். அல்லது அதுவரை இருந்த ஒரு விதை முளைத்து வந்ததாக இருக்கலாம். அல்லது இருந்த ஒன்றின் புத்தம்புதிய வடிவமாக இருக்கலாம். ஆனால் அவன் ஒரு புதிய கொந்தலைச் செய்கிறான். நம் சிந்தனையில் அல்ல, மனித சிந்தனையில்.
அப்படிப்பட்ட அசல் சிந்தனையாளர்களில் ஒருவர் காந்தி. இருபதாம் நூற்றாண்டின் மகத்தான முதற்சிந்தனையாளராகவே எப்போதும் அவர் கருதப்படுகிறார். உலகம் முழுக்க. அவர் வாழ்ந்த போதும் சரி, மறைந்தபின் இந்த முக்கால் நூற்றாண்டுக்காலத்திலும் சரி, ஒவ்வொருநாளும் பல கோணங்களில் விவாதிக்கப்படும் மாபெரும் முதற்சிந்தனையாளர் காந்தி. காந்தியின் சிந்தனைகளின் ஒவ்வொரு துளியும் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த உலக சிந்தனையாளர்களால் மிகத்தீவிரமாக முன்னெடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.
காந்தியைப்பற்றி எவ்வளவோ வாசித்து, பேசியிருக்கிறேன். இன்றைய காந்தி என்றபேரில் ஒரு நூல் வெளிவந்திருக்கிறது. இன்னும் ஒரு நூல் அளவுக்கு தொகுக்கப்படாத கட்டுரைகள் இருக்கின்றன. ஆனாலும் அனேகமாக தினமும் காந்தியை எங்கோ ஒரு இடத்தில் புத்தம்புதிதாக கண்டுகொண்டிருக்கிறேன். சில சமயம் விசித்திரமாக, சிலசமயம் விபரீதமான கோணத்தில் எல்லாம் காந்தி நம் சிந்தனைக்குத் தோற்றமளிப்பார்.
இது அசல் சிந்தனையின் ஒரு இயல்பு. அது நம்முடைய மூளை என்னும் வைக்கோல்போருக்குள் ஒரு சிறு தீப்பொறியை போட்டுவிடுகிறது. நம் மூளை என்னும் பாலையில் விதைகளை வீசி விடுகிறது. எங்கோ எப்போதோ சிறு காற்று கிடைத்தால் கொஞ்சம் நீர் கிடைத்தால் அது முளைக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் அசல்சிந்தனையாளர்கள் என நான் நினைக்கும் பலர் எனக்கு இப்படித்தான் அனுபவமாகிறார்கள். அவர்களிடமிருந்து தப்பவே முடிவதில்லை.
எனக்கு தல்ஸ்தோய் அப்படிப்பட்டவர். நான் இருபதாண்டுகளாக அவரிடமிருந்து தப்ப முயன்றுகொண்டிருப்பவன். ஹென்றி தோரோ அப்படிப்பட்டவர். அதற்கு முன் நீட்சேயும் ஹெகலும் அப்படிப்பட்டவர்களாக இருந்தார்கள். அவர்கள் எனக்கு தங்கள் சிந்தனைகளைத் தரவில்லை. நானே சிந்திப்பதற்கான கட்டாயங்களைத் தந்தார்கள். சிந்திக்காமல், என்னை நானே மீட்டு கட்டிக்கொள்ளாமல், முன்னகர முடியாது என்ற நிலையை உருவாக்கினார்கள். அந்தக் கட்டாயம் பலசமயம் எரிச்சலூட்டுவது. பலசமயம் பொறுமை இழக்கச்செய்வது.
அசல்சிந்தனையாளர்களின் இயல்பை நான் இப்படிச்சொல்கிறேன். அவர்களின் சிந்தனையில் ஒருபகுதி நம்மை மனக்கிளர்ச்சி அடையச்செய்யும். பெரும் கனவுகளையும் இலட்சியங்களையும் நம்முள் நிறைக்கும். இன்னொருபகுதி நம்முள் இருக்கும் சிந்தனைகளை உடைத்துச் சிதறடித்து நம்மை வெறுமையில் கொண்டு சென்று விடும். அந்தத் துண்டுகளைப் பொறுக்கி நாமே நம் அகத்தை திரும்பக் கட்டி எழுப்பவேண்டும்.
அசல்சிந்தனையாளர்களின் சிந்தனைகளில் ஒரு பகுதி நமக்கு கேனத்தனமாகத் தோன்றும். பொருத்தமற்றதாகவும் முட்டாள்தனமாகவும் வெற்றுப்பிடிவாதமாகவும் தோன்றும். இன்னொரு பகுதி நமக்குக் கொஞ்சம் கூட புரியாததாக இருக்கும். வெறும் உளறலா என்றுகூடத் தோன்றும். இதற்கு விதிவிலக்கான அசல்சிந்தனையாளர்களே இல்லை.
இந்த அம்சம்தான் அந்தச் சிந்தனையாளரை நாம் எளிதில் தாண்டிவிட முடியாதபடிச் செய்கிறது. 'இதென்னடா இது' என்று நாமே அதைப்பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறோம். பல கோணங்களில் அதை பரிசீலிக்கிறோம். அதாவது நமக்குள் அவர்களின் சிந்தனைகளில் ஒருபகுதி செரிக்காமல் இருந்துகொண்டே இருக்கிறது. நம் மனம் அந்தச் சிந்தனைகளை செரிக்க போராடிக்கொண்டே இருக்கிறது.
காந்தியிடம் இந்த இயல்பு உண்டு. காந்தியைப்பற்றிப் பேசும்போது என்னிடம் காந்தியவாதியும் மாபெரும் கட்டிடக்கலைஞருமான லாரி பேகர் சொன்னார் 'அவருக்கு எரிச்சலூட்டுவதில் பெரிய ஆனந்தம் உண்டு. நாம் எரிச்சல் கொண்டால் அவர் முகத்தில் ஒரு புன்னகை வரும்.'
பின்பொருமுறை காந்திகிராம நிறுவனரான ராமச்சந்திரன் சொன்னார் 'அனேகமாக காந்தியின் எல்லா சீடர்களும் காந்திமீது ஒருபோதாவது கடும் கோபம் அடைந்திருப்பார்கள். அவர் முன் கணக்குகளை வீசி எறிந்துவிட்டு இனிமேல் உங்கள் முகத்தில் விழிக்க மாட்டேன் என்று சொல்லி கிளம்பிச்சென்றவரகள் பலரை எனக்குத் தெரியும். அவர்களெல்லாம் திரும்பியும் வந்திருக்கிறார்கள். நானும் ஒருமுறை அவரை நிராகரித்துவிட்டு சபர்மதியில் இருந்து கிளம்பி வந்தேன்.'
காந்தியிடம் இருந்த அந்த அம்சம் என்ன? அவரை அணுகிய எவருமே நிம்மதியாக இருந்ததில்லை. அவர்களை காந்தி கலைத்துக்கொண்டே இருந்தார். அவர் வாழ்ந்தபோது அவரது சமூகத்துக்கும் அவரது சூழலுக்கும் மிகப்பெரிய தொந்தரவாக இருந்தார். ஒருகட்டத்தில் அடிப்படைவாதிகள் அவரைக் கொல்வதற்கும் அவர் அளித்த எரிச்சல்தான் காரணம்.
அகமதாபாத் அருகே சபர்மதி ஆசிரமத்தை காந்தி அமைத்தார். அன்றைய குஜராத் சாதிவெறியில் ஊறிய பழைமைவாத நகரம். அங்கே தன் ஆசிரமத்தில் தாழ்த்தப்பட்டவர்களை சேர்த்துக்கொண்டார், அவர்கள் உள்ளிட்ட அனைவரும் அனைவர் உணவையும் சமைக்கவும் அனைத்து கழிப்பறைகளையும் சுத்தம்செய்யவும் சொன்னார். சரி, அது அவரது கொள்கை. ஆனால் ஆசார இந்துக்கள் ஆசிரமத்துக்கு நன்கொடை தரவேண்டும் என்றும் அவர் எதிர்பார்த்தார்.
காந்தி எழுதுகிறார், இந்த ஆசிரமம் இந்துக்களை சீர்திருத்தும் நோக்கம் கொண்டது. ஆகவே இந்துக்கள்தான் இதற்குப் பணம்தரவேண்டும். அது அவர்களின் கடமை. அவர்கள் தராவிட்டால்? பட்டினிகிடந்து சாகவேண்டும், அவ்வளவுதான். என்னதான் எரிச்சலூட்டினாலும் கண்ணெதிரே ஒரு சாத்வீக கும்பல் பட்டினி கிடப்பதை சகிக்க முடியாமல் வேறுவழியில்லாமல் அதே குஜராத் ஆசாரவாத இந்து சமூகம் அவருக்கு நிதி கொடுத்தது. அதை மகிழ்ச்சியுடன் தன் சுயசரிதையில் காந்தி பதிவுசெய்கிறார்.
இதுதான் திமிர்! நான் இதை அறத்திமிர் என்பேன். ஞானத்திமிர் என்பேன். இந்தத் திமிர்தான் அவரது உயிரைப் பறித்தது. நண்பர்களே, புனிதமான திமிர் இது. சிந்தனையாளன் ஒருவன் தன் ஆன்மாவை நெருப்பாக எரித்து பேணிக்கொள்ளவேண்டிய திமிர் இது. இன்று காந்தியிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது இதுதான்.
நீங்கள் பெரும்பாலும் காந்தியை ஒரு சிந்தனையாளராக அறிந்திருக்க மாட்டீர்கள். அவரது அரசியல் போராட்டம் பற்றிய ஒரு பள்ளிக்கூட பாடப்புத்தகம் சார்ந்த அறிமுகம் மட்டும்தான் உங்களிடம் இருக்கும். அதை வைத்தே அவர்மீதான எல்லா விமர்சனங்களையும் உருவாக்கியிருப்பீர்கள். காந்தி கிட்டத்தட்ட எழுபதாயிரம் பக்கங்கள் எழுதியவர். உலக சிந்தனையாளர்களில் மிக அதிகமாக எழுதியவர்களில் ஒருவர்.
காந்தியின் சிந்தனைகள் அரசியல் மதம் சமூகம் போன்ற தளங்களில் மட்டுமல்லாமல் இலக்கியம், கட்டிடக்கலை, மருத்துவம் என பலதளங்களில் பரவிக்கிடக்கின்றன. இன்றைய நூற்றாண்டின் மையச்சிந்தனையோட்டமாக உள்ள சூழியல், தாக்குப்பிடிக்கும் பொருளியல், இயற்கைவேளாண்மை ஆகியவற்றுக்கான அடிப்படைகளை அமைத்த முன்னோடி அவர். இத்தனைக்கும் அப்பால் அவரை நாம் மீண்டும் மீண்டும் புதிய தளங்களில் கண்டுபிடித்தபடியே இருக்கலாம்.
காந்தியின் சிந்தனைகளை சுருக்கமாக உங்களுக்குச் சொல்வது என்னுடைய நோக்கம் அல்ல. ஏனென்றால் அது எப்போதுமே அவரை தவறாகப் புரிந்துகொள்ளவே வழிவகுக்கும். எந்தச் சிந்தனையாளரையும் அவரது சிந்தனைகளை நேரடியாக வாசித்துப் பொருள்கொள்வதே சரியானதாகும்.
நான் சொல்ல வருவது, காந்தி நம்முடைய காலகட்டத்தின் சிந்தனையின் ஒட்டுமொத்த அமைப்பில் உருவாக்கும் 'கொந்தல்'களைப்பற்றி. அந்தக்கொந்தல்களை அவர் செய்யக் காரணமானது என்ன? நான் சிந்திக்கிறேன், என்னுடைய சிந்தனையில் இதுவே சரி என்ற ஆன்மீகமான திமிர்தான் இல்லையா?
ஒட்டுமொத்த மானுடச்சிந்தனைக்கும் மறுபக்கமாக, ஒட்டுமொத்த சமகாலச் சிந்தனைக்கும் எதிர்விசையாக தன்னை நிறுத்திக்கொள்ளத் தூண்டுவது இந்தத் திமிர்தான். இந்தத் திமிர் இருந்தமையால்தான் காந்தி அடக்கத்தின் உருவாக இருந்தார். நாம் எதில் எல்லாம் அகங்காரம் கொள்கிறோமோ அனைத்தையும் அவர் துறந்தார். எங்கும் எவர் முன்னும் தணியவும் பணியவும் தயாராக இருந்தார். ஆனால் மானுட வரலாற்றின் முன்னால் மட்டும் நிமிர்ந்து நின்றார்.
காந்தியின் அந்தப் புனிதமான திமிரை அவரது ஒவ்வொரு செயலிலும் நாம் காணலாம். ஒருமுறை வைஸ்ராயுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்லும் நேரத்தில் காந்தி தலைக்குக் களிமண் பத்து போட்டிருந்தார். அவரே அவருக்குச் செய்துகொண்ட சிகிழ்ச்சைமுறைகள் அவை. அந்தக் களிமண் பத்துடன் கிளம்பி வைஸ்ராய் மாளிகைக்குச் சென்று பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டார்.
விசித்திரமாகத் தோன்றலாம். அதிலும் ஒரு சரியான டை கட்டாவிட்டால் வெள்ளைக்காரன் நம்மைப்பற்றி என்ன நினைப்பான் என்றே எண்ணிக்கொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கையில் இது கிறுக்குத்தனமாகவே தோன்றலாம். ஆனால் நாம் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். வேறு எந்த இந்தியத்தலைவரை விடவும் வெள்ளையர்களின் சம்பிரதாயங்களை அறிந்தவர் காந்தி. அவரது அந்தச்செய்கைக்குப்பின்னால் உள்ளது அபாரமான ஒரு சுய உணர்வு.
'நான் காந்தி. இந்த நாட்டின் கோடானுகோடி மக்களின் பிரதிநிதி. நான் நீ நினைக்கும்படி வரமுடியாது. நான் நினைக்கும்படித்தான் இருப்பேன்' என்ற பிரக்ஞை அளித்த தன்னம்பிக்கை அது. 'என்னுடைய சிந்தனைகளும் என் வழிமுறைகளும் உன்னுடைய அங்கீகாரத்தால் நிலை நிற்பவை அல்ல. அவற்றுக்குச் சொந்தமாக வரலாறுண்டு' என்னும் சவால் அது.
ஆச்சரியம் என்னவென்றால் பிரிட்டிஷ்காரர்களின் எல்லா ஆசாரமரியாதைகளையும் பயபக்தியுடன் கடைப்பிடித்த இந்தியத்தலைவர்களை பிரிட்டிஷார் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. அவர்கள் காந்தியை மட்டுமே மதித்தார்கள். இன்று அன்றைய பிரிட்டிஷ் வைஸ்ராய்கள் மற்றும் ராஜதந்திரிகளின் அந்தரங்கக் குறிப்புகள் பிரசுரமாகின்றன. அவையெல்லாம் அவர்கள் காந்தி மீது கொண்டிருந்த மதிப்பையே காட்டுகின்றன.
அந்தத் திமிரை சிந்தனையின் தற்சார்பு என்று நான் வரையறை செய்வேன். காந்தியை காந்தியாக்கியது அதுவே. காந்தியின் எல்லா சிந்தனைகளையும் புரிந்துகொள்வதற்கான முதல் தொடக்கமாக இருக்கவேண்டியது அவரது இந்தத் தற்சார்பைப்பற்றிய நம் புரிதலே.
இன்றைய உலகச்சூழலில் நீங்கள் உங்களுக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டுமென்றால் கற்றுக்கொள்ளவேண்டிய முதல் பாடமே இதுதான். நீங்கள் வழிநடத்துபவரா பின்பற்றுபவரா என்ற கேள்விதான் முதன்மையானது. பின்பற்றுபவர் என்றால் விட்டுவிடுங்கள். உங்களை நோக்கி நான் பேசவில்லை. வழிநடத்துபவர் என்றால் முதன்மையாக உங்களுக்கு வேண்டிய தகுதியே இதுதான்.
இன்று உலகிலுள்ள கோடானு கோடிபேர், இந்தியாவிலும் சீனாவிலும், அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பலகோடி இளைஞர்கள் கிட்டத்தட்ட ஒரே கல்வியை கற்கிறார்கள். ஒரேவகையான உலகப்புரிதலை அந்தக் கல்வி அவர்களுக்கு அளிக்கிறது. அந்தப் பிரம்மாண்டமான தொழிற்சாலையில் இருந்து ஒரே வகையான உற்பத்திப் பொருட்களாக வெளியே வருகின்றனர். நீங்களும் அதில் ஒருவர். உங்களுக்கென எந்த சுயசிந்தனையும் இருப்பதில்லை. சுய அடையாளமும் இருப்பதில்லை.
உண்மையில் நீங்கள் சுயமாகச் சிந்திப்பதாக நினைப்பதெல்லாம் அதேபோல கிட்டத்தட்ட அதே சொற்களில் உலகம் முழுக்க மற்ற அத்தனை பேரும் நினைப்பதுதான். நேரமிருந்தால் இணையத்தில் தேடிப்பாருங்கள்: நீங்கள் நினைப்பதை எல்லாம் எல்லாருமே சொல்லிக்கொண்டிருப்பார்கள். கருத்துக்கள் மட்டும் அல்ல. உணர்ச்சிகள் கலாய்ப்புகள், நக்கல்கள் கூட உலகம் முழுக்க ஒரேமாதிரி இருக்கின்றன.
ஆனால் நீங்கள் அந்தப் பொதுமையை மீறி உங்களுக்கென எதையாவது உருவாக்கிக் கொண்டால் அதுதான் உங்கள் சுயம். அப்படி உருவாக்கிக்கொண்ட சுய அடையாளம் மூலமே நீங்கள் உங்களால் மட்டுமே இந்த சமூகத்துக்குக் கொடுக்கவேண்டிய பங்களிப்பைக் கொடுக்கமுடியும். அப்படிக் கொடுத்தால் மட்டுமே சமூகத்தில் உங்களுக்கான இடம் உருவாகும். நீங்கள் கணிப்பொறி நிபுணராக இருக்கலாம். தொழில்முனைவோராக இருக்கலாம். எழுத்தாளராக இருக்கலாம். யாராக இருந்தாலும் இதுதான் விதி.
காந்தி முறையான உயர்தரக் கல்வியைப் பெற்றவர். அவரது காலகட்டத்தில் கிடைக்கும் மிக உச்சகட்டக் கல்வி அது. அந்தக்கல்வியைக் கற்ற அனைவருமே செல்லக்கூடிய ஒரு பொதுவழி உண்டு. ஐரோப்பியச் சிந்தனை, ஐரோப்பிய நாகரீகம் ஆகியவற்றை மானுடத்தின் உச்சகட்ட சாதனையாக நினைப்பது. உலகமே பின்பற்றியாகவேண்டிய முன்னுதாரணமாக நினைப்பது. உலகத்தை முழுக்க அதனடிப்படையில் மாற்றியமைக்க முயல்வது.
அந்தப் பொதுப்போக்கில் காந்தி இணையவே இல்லை. காந்தியை காந்தியாக ஆக்கியது அந்தப் பிடிவாதமான தற்சார்புதான். அவரைப்போல ஐரோப்பியக் கல்வி கற்ற அத்தனைபேரும் நவீன ஐரோப்பியப் பண்பாட்டை அறிமுகம் செய்துகொண்டதுமே அவர்களின் அதுவரையிலான வளர்ப்பில் இருந்து பெற்றுக்கொண்ட எல்லாவற்றையும் தூக்கி வீசினார்கள். புதியதாக கல்லூரிக்கு வேட்டியுடன் படிக்க வரும் கிராமத்து மாணவன் அடுத்த வாரமே கிழிந்த ஜீன்ஸ் போட்டு ஒற்றைக்கம்மல் அணிந்துகொண்டு வருகிறானே அதைப்போல.
காந்தி அதைச் செய்யவில்லை. அவர் அவருக்கு அவருடைய இளமைப்பருவத்தில் இருந்தும் அவர் வாழ்ந்த சூழலில் இருந்தும் கிடைத்த பண்பாட்டையும் சிந்தனைகளையும் கைவிட மறுத்தார். கைவிடவேண்டும் என்றால் உரிய முறையில் என்னை நீங்கள் அவை பிழை என்று ஏற்கச்செய்யவேண்டும் என்றார். 'நான் ஒரு கீழைநாட்டவன், ஓர் இந்தியன், ஓர் இந்து. எனக்கென்று பல்லாயிரம் வருடப் பழைமைகொண்ட ஒரு பண்பாட்டுமரபு இருக்கிறது. அதில் பிறந்து வளர்ந்த நான் இதுவரையிலான என் சொந்தவாழ்க்கையில் இருந்து கற்றுக்கொண்ட பல விஷயங்கள் உள்ளன. நான் அவற்றைக் கைவிடவேண்டுமென்றால் எனக்கு அவற்றின் குறைபாடுகளை நீங்கள் ஐயம்திரிபற விளக்கவேண்டும். அவற்றைவிட மேலான ஒன்றை அளிக்கவேண்டும்' என்று அவர் அடம்பிடித்தார்.
காந்தியின் சுயசரிதை முழுக்க அவரிடம் இந்தப் பிடிவாதம் இருப்பதைக் காணலாம். சைவ உணவுப்பழக்கம், சாதிமுறை எல்லாவற்றைப்பற்றியும் அவர் இதேபோன்ற உறுதியான முடிவுடன் இருக்கிறார். அன்று லண்டனுக்கு வரும் ஒரு இந்தியர் பத்தே நாளில் சைவ உணவைக் கைவிடுவார். இந்தியச்சாதிமுறை, மதநம்பிக்கைகள் ஆகியவற்றை நிராகரித்துப் பேச ஆரம்பிப்பார். ஊர்திரும்பினாலும் அவர் லண்டன்வாசியாகவே பேசிக்கொண்டிருப்பார். ஆனால் சொந்தவாழ்க்கையில் அந்தப் பேச்சின் எந்தச் சாயலும் இருக்காது.
ஆனால் காந்தி அசைவ உணவு உண்டால்தான் நன்றாக வாழமுடியும் என்பதை என்னால் ஏற்க முடியவில்லை என்று அனைவரிடமும் வாதிட்டார். கிட்டத்தட்ட உயிரைப்பணயம் வைத்து சைவ உணவை உண்டார். அதேபோல இந்தியச் சாதியமைப்பு முழுக்க முழுக்க அநீதியின்மீது கட்டப்பட்டதாக இருக்க நியாயமில்லை, அப்படியென்றால் அது இத்தனைநாள் நீடித்திருக்காது, அதற்கு ஒரு பொருளாதாரப் பங்களிப்பு இருக்கும் என்று சொன்னார்.
தன்னுடைய சொந்த அனுபவத்துக்குள், தன்னுடைய மரபுக்குள் செல்லுபடியாகக்கூடிய சிந்தனைகள் மட்டுமே தனக்குத்தேவை என கறாராக இருந்தார் காந்தி. ஆனால் மூர்க்கமான பழைமைவாதியாக இருக்கவும் இல்லை. தன்னை ஒரு சிந்தனை ஏற்றுக்கொள்ளச் செய்தால் அதை முழுமூச்சுடன் ஏற்றுக்கொள்ளவும் அதை கடைசிவரை தீர்க்கமாக பின்பற்றவும் அவர் தயங்கவில்லை. உதாரணமாக, அவரால் கடைசிவரை அசைவ உணவுப்பழக்கத்தை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஆனால் இந்தியச் சாதியமைப்பு முழுக்கமுழுக்க தீங்கானது, தேவையற்றது, ஒழிக்கப்படவேண்டியது என்ற முடிவுக்கு வந்தார். அதை சொந்தவாழ்க்கையில் ஒவ்வொரு தருணத்திலும் பின்பற்றினார்.
இதுதான் தற்சார்பு. காந்தியின் எல்லா சிந்தனைகளையும் இந்த அம்சம் தீர்மானிக்கிறது. உலகமே ஒன்றைச் சிந்தித்தாலும் காந்தி அதை ஏற்றுக்கொண்டாகவேண்டும் என்பதில்லை. 'அனைவருமே இதைத்தான் சொல்கிறார்கள். என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. உலகம் என்ன சொன்னாலும் நான் என் அந்தராத்மா சொன்னபடித்தான் நடப்பேன்' என்ற வரியை காந்தியின் எழுத்துக்களில் மீண்டும் மீண்டும் காணலாம்.
காந்தியின் காலகட்டத்தில் உலகம் முழுக்க ஓங்கியிருந்த இரண்டு நம்பிக்கைகள் என்றால் ஒன்று தொழில்நுட்பம் உலகத்தைக் காப்பாற்றும் என்ற எண்ணம் . இரண்டு, சமூக மாற்றத்துக்கு வன்முறை இன்றியமையாதது என்ற எண்ணம். இன்றும்கூட நம்மில் மேலோட்டமாக சிந்திப்பவர்களிடமிருப்பது இந்த நம்பிக்கைகள்தான்.
காந்தி இருபதாம் நூற்றாண்டின் தொழில்நுட்பம் அதன் அதிதீவிர வளர்ச்சியை கண்டுகொண்டிருந்த லண்டனில் வாழ்ந்தவர். அன்று லண்டனுக்குச் செல்பவர்கள் எல்லாருமே அந்தத் தொழில்நுட்பத்தைக் கண்டு பிரமித்து அது இன்னும் சில வருடங்களில் உலகுக்கே சோறும் சமாதானமும் கொண்டுவரும் என்று நம்பினார்கள். காந்தியின் முதல்சீடரான நேருவே அந்த நம்பிக்கைதான் கொண்டிருந்தார், கடைசிவரை.
ஆனால் காந்தி தொழில்நுட்பம் வெறும் கருவிதான் என்று நினைத்தார். அந்தக்கருவி யாரால் எதற்குப் பயன்படுத்தப்படுகிறதென்பதே முக்கியமானது. அந்த உயர்தொழில்நுட்பம் தொழிலாளர்களை மிருகங்களிலும் கீழான அடிமைவாழ்க்கை வாழ்வதற்கே கொண்டு செல்கிறது என்பதை அவர் கவனித்தார். நவீனத்தொழில்நுட்பம் உலகிலுள்ள ஆதிக்கசக்திகளுக்கு இன்னும் அதிகமான ஆயுதவலிமையை அளிக்கும் என்றும் உலகளாவிய சுரண்டலை இன்னும் அதிகரிக்கும் என்றும் அவர் கணித்தார்.
தொழில்நுட்பம் பெருந்தொழில்களை உருவாக்குகிறது. பெருந்தொழில் பெரும் லாபவெறியை உருவாக்குகிறது. லாபவெறி மிதமிஞ்சிய நுகர்வை கட்டி எழுப்புகிறது. மிதமிஞ்சிய நுகர்வு இயற்கையை அழித்து மனிதனை அழிவுக்குக் கொண்டு செல்கிறது என்று காந்தி வாதாடினார்.
1909-லேயே காந்தி தன்னுடைய ஹிந்து சுயராஜ்யம் என்ற நூலில் இந்தச் சிந்தனைகளை முன்வைத்திருந்தார். அன்று உலகில் எங்கும் சூழியல் என்ற சிந்தனை வரவில்லை. தாக்குப்பிடிக்கும் பொருளியலை எவரும் அறிந்திருக்கவில்லை. இயற்கைச்சமநிலை பற்றிய எண்ணமே இருக்கவில்லை.
மாறாக இயற்கையை ஒரு அடிமையாகவே அன்றைய சிந்தனையாளர்கள் நினைத்தார்கள். இயற்கையை ஒட்டச்சுரண்டி மனிதன் தன் வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ளலாம் என்று சொன்னார்கள். இயற்கை மனிதனுக்காகவே என்று வாதிட்டார்கள். நுகர்வே மனிதனின் இன்பம் என்றார்கள். அதிக நுகர்வே வளர்ச்சி என்று வகுத்தார்கள். மார்க்ஸிய சிந்தனையின் சாராம்சமே இந்த மனிதமைய வாதம்தான். உலகின் பெரும்பாலான இயற்கை வளத்தை அழித்தவை, அழித்துக்கொண்டிருப்பவை மார்க்ஸிய சிந்தனையின் அடிப்படையில் அமைந்த அரசுகளே.
நூறாண்டுகளுக்கு முன் 'வளர்ச்சி' என்றாலே தொழில்நுட்ப வளர்ச்சி என்றுதான் உலகமெங்கும் நம்பப்பட்டது. அதாவது இயற்கை என்ற சக்தியை மனிதன் வெல்வதே வளர்ச்சி. இயற்கைச்சக்திகளுடன் மனிதன் போர் செய்வதை அன்றைய இலக்கியமும் தத்துவமும் கொண்டாடின.
அச்சூழலில் காந்தி எப்படி அணுகப்பட்டிருப்பார். யோசித்துப்பாருங்கள். அவர் ஒரு பழைமைவாதியாக, நவீன உலகத்தைப் புரிந்துகொள்ளாத கிறுக்கராக எண்ணப்பட்டார். காந்தியைச் சுற்றி இருந்த ஐரோப்பியக்கல்வி பெற்ற அரசியலாளர்கள் காந்தியின் அபாரமான மக்கள்செல்வாக்கைக் கண்டுதான் அவருடன் இருந்தார்கள். உள்ளூர அவர்கள் அந்த அரைநிர்வாணக் கிழவருக்கு நவீன சிந்தனைகள் புரியவில்லை என்ற எண்ணம் கொண்டிருந்தார்கள்.
இரண்டாம் உலகப்போருக்குப்பின் உலகின் கண்கள் திறந்தன. நவீனத்தொழில்நுட்பத்தின் அழிவுத்தன்மையைப்பற்றிய எண்ணம் உலகமெங்கும் உருவாயிற்று. அது ஒரு ஆக்கசக்தி என்ற எண்ணம் மறைந்தது. அதன்பிறகுதான் உலகம் மெல்ல மெல்ல காந்தியை நோக்கி வர ஆரம்பித்தது. அப்போது காந்தி இல்லை, அவரது சிந்தனைகள் மட்டும்தான் இருந்தன.
காந்தி தொழில்நுட்பம் பற்றியும், இயற்கையின் சமநிலை பற்றியும், தாக்குப்பிடிக்கும் உற்பத்திமுறை பற்றியும் பேசிய விஷயங்களை நவீன ஐரோப்பியச் சிந்தனையின் மொழியைப் பயன்படுத்தி விரிவாக விளக்கியவர் என்று பிரிட்டிஷ் பொருளியலாளரான இ.எஃப்.ஷுமாக்கர் [E.F.Schumacher]-ஐச் சொல்லலாம். அவரது சிந்தனைகள் வழியாக ஐரோப்பா முழுக்க நவீனத் தொழில்நுட்பமும் லாபவெறியும் உலகை அழிவுக்குக் கொண்டுசெல்லும் என்ற விழிப்புணர்வு உருவாக ஆரம்பித்தது.
அதன்பின் பல சிந்தனையாளர்களைச் சொல்லமுடியும். நான் முக்கியமாக அமெரிக்கச் சிந்தனையாளரான இவான் இலியிச்சைச் சுட்டிக்காட்டுவேன். ஷுமாக்கரும் இவான் இலியிச்சும் இந்தியாவுக்கு வந்து, ஏன் தமிழ்நாட்டுக்கு வந்து, மதுரையில் காந்திகிராமத்திலும் டி.கல்லுப்பட்டியில் ஜெ.சி.குமரப்பாவுடனும் தங்கி காந்தியைப்பற்றி ஆராய்ந்தவர்கள். இங்கிருந்து சென்று உலகை நோக்கிப் பேசியவர்கள். நாம் அப்போது காந்தியை பழைய கிழவர் என்று ஒதுக்கிவிட்டு ஐரோப்பிய நவீனத் தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்வதில் தீவிரமாக இருந்தோம்.
இன்று உலகம் முழுக்க உள்ள பசுமை இயக்கங்களின் பிதா காந்திதான். அவரே விதை. இன்றைய உலகின் சிந்தனை என்று எதையாவது சொல்லமுடிந்தால் அது சூழியல்தான். டேவிட் அட்டன்பரோவின் இயற்கைபற்றிய ஆவணப்படங்களை பார்க்காதவர்கள் உங்களில் சிலரே. அவர் தன் ஆவணப்படங்கள் வழியாக முன்வைப்பவை ஐரோப்பிய பசுமைச்சிந்தனைகளைத்தான். அவை நம்மிடமிருந்து, காந்தியிடமிருந்து சென்றவை.
காந்தியின் சிந்தனைகள் 1972-இல் ஸ்டாக்ஹோம் சூழியல் மாநாட்டுக்குப் பின்னர்தான் உலகமெங்கும் சூழியலாளர்களால் இன்னும் தீவிரமாக விவாதிக்கப்பட்டு புரிந்துகொள்ளப்பட்டன. ஆம், காந்தி 1909-இல் சொன்னவை அரைநூற்றாண்டுக்குப் பின்னரே உலகத்தால் உணரப்பட்டன.
காந்தி நவீன காலகட்டத்தில் வன்முறைமூலம் சமூகமாற்றமோ ஆட்சிமாற்றமோ வரமுடியாதென்று நினைத்தார். வன்முறை அதற்குச் சமானமான எதிர்வன்முறையைத்தான் உருவாக்கும் என்று சொன்னார். வன்முறை எதற்காக யாரால் ஆரம்பிக்கப்பட்டாலும் ஒட்டுமொத்தமாக அழிவுதான் மிஞ்சும், அதுவும் எளிய மக்களுக்கு அழிவுதான் கிடைக்கும் என்பதே காந்திய தரிசனம்.
ஆகவேதான் காந்தி முன்வைத்த மக்கள்போராட்டம் என்பது அகிம்சை வழியிலானதாக இருந்தது. அகிம்சை [வன்முறையின்மை] என்பது காந்திய சிந்தனைகளின் அடிப்படை. காந்தியின் காலகட்டத்தில் உலகமே ஆயுதப்புரட்சியைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தது. ஐரோப்பாவின் பல நாடுகளில் புரட்சிகள் வெடித்தன. உலகின் மிகப்பெரும்பாலான நாடுகளில் ஆட்சிமாற்றத்துக்கான வன்முறைக் கிளர்ச்சிகள் நிகழ்ந்துகொண்டிருந்தன.
ஆனால் காந்தி பிடிவாதமாக சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு சமூகத்தில் உள்ள அதிகாரம் அதன் அரசாங்கத்திடம் இல்லை. அரசாங்கத்தை மாற்றினால் ஒன்றும் ஆகப்போவதில்லை. மாற்றவேண்டியது மக்களை. மக்கள் கருத்து மாறினால் இயல்பாகவே ஆட்சியும் அதிகாரமும் மாறும். அதுவே உண்மையான மாற்றம். அந்த மாற்றமே நீடிக்கும். பிற மாற்றங்கள் எல்லாமே அழிவைத்தான் உருவாக்கும்.
காரணம் அந்தமாற்றம் மக்களில் ஒரு சிறுபான்மையினர் அரசாங்கத்தை எதிர்த்துச் செய்யும் போராகவே இருக்கும். அவர்கள் வென்றால் அவர்கள் இன்னொரு அரசாங்கமாக ஆவார்கள். மக்கள் அப்போதும் அடிமைகளாகவே இருப்பார்கள்.
ஜனநாயக யுகத்தில் வன்முறைக்கு இடமில்லை என்றார் காந்தி. மக்கள் போராட்டம் என்பது மக்களின் கருத்தைத் திரட்டி அதை ஒருமுகப்படுத்துவதற்கான செயல்பாடு மட்டும்தான். ஒருகுறிப்பிட்ட கருத்தை ஒரு சமூகத்தின் பெரும்பான்மை மக்கள் ஏற்றுக்கொண்டால் அதன்பின்னர் அந்தச் சமூகம் மாறியே ஆகவேண்டும்.
காந்தி பிரிட்டிஷாருக்கு எதிராக நடத்திய போராட்டங்கள் எல்லாமே இந்திய மக்களை பிரிட்டிஷாருக்கு எதிராக ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகள்தான். இந்திய மக்கள் பிரிட்டிஷாரை நம்பி ஆட்சியாளர்களாக ஏற்றிருந்தார்கள். ஆகவேதான் சிறுபான்மையினரான பிரிட்டிஷார் இந்தியாவை ஆளமுடிந்தது. மக்களுக்கு பிரிட்டிஷார் இந்தியாவில் செய்த பெ
April 9, 2012
தெய்வத்தின் முகங்கள்
அன்புள்ள ஜெ,
நலமா ?
உங்கள் 'திருமுகப்பில்' கதையை ஒருமுறை படித்திருக்கிறேன். அப்போது, எனக்கு அது சரியாகப் புரியவில்லை.
என் நண்பன் ஜோசப், பல சமயங்களில் தன்னை, 'மூன்றாம் உலக கிறித்தவன்' என்று சொல்லிக்கொள்வான். அவனுடன், எட்டு வருடங்களுக்குமுன், தலைக்காவேரி அருகே உள்ள பைலாகூப்பேவிலுள்ள திபேத்திய மடாலயத்திற்கு சென்றிருந்தேன்.
சீன முகமுடைய புத்தரைப்பற்றி அவன் பேசியபோது, "புத்தருக்கு எப்படி சீன முகம் இருக்கலாம்? இந்திய முகந்தான் இருக்கணும்" என்று நான் சொல்ல, அவன் சிறிது நேரம் பார்த்துவிட்டு, ஒன்றும் சொல்லவில்லை.
சில மாதங்களுக்குமுன் ஜோசப்புடன் அங்கோர்வாட் சென்றிருந்தேன். கடைசிநாள், அங்குள்ள அருங்காட்சியகத்திற்கு சென்றபோது, ஒரு கூடத்தில், கட்டைவிரலளவு முதல் ஆளுயர புத்தர்கள் என ஆயிரம் புத்தர் சிலைகள் இருந்தன.
கிரேக்கச் சாயல் கொண்ட காந்தார புத்தர், இடுங்கிய கண்களுடைய சீன புத்தர், தடித்த உதடுகளுடைய கம்போடிய புத்தர், பெரிய கண்களுடைய இந்திய புத்தர் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொருவகை.
அந்தச் சிலைகளை பார்த்துக்கொண்டிருந்த போது, ஏதோ ஒரு கணத்தில், சட்டென்று, உங்கள் 'திருமுகப்பில்' புரிந்தது. உங்கள் கதையையும், பைலாகூப்பேவையும் அவனுக்கு நினைவூட்டியபோது, ஆயிரம் புத்தர்களுடன் சேர்ந்து அவனும் புன்னகைத்தான்.
ஏசுபிரான் சிலைகளில் ஏன் மங்கோலிய ஏசுவோ, காப்பிரி ஏசுவோ இல்லை என்று நீண்டநேரம் பேசிக் கொண்டே வந்தோம்.
நீங்கள் கண்டிப்பாக கம்போடியா செல்லவேண்டும் சார். நிச்சயம் ரசிப்பீர்கள்.
நன்றி,
விசு.
அன்புள்ள விசு,
ஒரு தெய்வம் எப்படி முகம் மாறும் என்பதற்கு புத்தர்தான் உதாரணம். காந்தார புத்தர் கிரேக்க சாயல் கொண்டவர். தென்னக புத்தர் தெற்கத்திய முகம் கொண்டவர். திபெத்திய புத்தரின் கண் இடுங்கலானது. ஆனால் பர்மியபுத்தரின் கண் அப்படி இல்லை.
என் மகனின் கல்லூரி நண்பர்கள் பலர் வடகிழக்கைச் சேர்ந்தவர்கள். தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது விரல்களால் கண்களை விரித்து கொட்டைவிழி போல ஆக்கிக் காட்டி நம்மை கிண்டலடிப்பார்களாம். அவர்களுக்கு பெரிய கண் என்பது ராட்சதத்தன்மை கொண்டது. சிறிய இடுங்கிய கண் அழகானது, தெய்வீகமானது.
கடவுளை பெருமாள் என்பதுண்டு. விஷ்ணு, முருகன் எல்லாமே பெருமாள்கள். பெரும் ஆள். நாம் சிறிய ஆட்கள். குறையானவர்கள். நம்மைப்போன்ற, ஆனால் முழுமையான, வடிவம் கொண்டவரே நம் தெய்வம். நாம் தேடும் முழுமையின் சின்னம்.
இன்று நாம் காணும் ஏசு இத்தாலிய ஏசு. அவரது யூத முகம் வேறாக இருந்திருக்கலாம். அதுவும் அன்று அபிசீனியாவுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த ஜுடாயாவின் யூதர்கள் இந்தியர்களைப்போல மாநிறமாக, பெரிய கண்களுடன் இருந்திருக்கவே வாய்ப்பு அதிகம்,
இந்தியாவிலேயே வட இந்தியர்களுக்கு கன்னங்கருமையாக இருக்கும் நம்முடைய தெய்வங்கள் பீதியைத்தான் கிளப்புகின்றன. வெண்சலவைக்கல் சிலைகளே அவர்களுக்கு தெய்வ உருவமாக படுகின்றன. நமக்கு வெண்சிலைகள் ஏதோ பொம்மைகளாகத் தோன்றுகின்றன.
சமணப்பயணத்தில் ஒரு விஷயத்தை கவனித்தேன். பல ஊர்களில் புராதனமான சமண தீர்த்தங்கரர் சிலைகள் கரியவை. அவை ஓரமாக சிறு அறைகளுக்கு கொண்டுசெல்லப்பட்டபின் கடந்த முந்நூறாண்டுகளில் வெண்சலவைக்கல் சிலைகள் கருவறையில் அமர்த்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, ராஜஸ்தானின் தில்வாராவில் சலவைக்கல் சிற்பங்கள் மண்டிய கோயிலில் பூட்டப்பட்ட பழைய கருவறை ஒன்றின் இருளுக்குள் இருந்த ஆறடி உயரமான கன்னங்கரிய தீர்த்தங்கரர் சிலை நம் ஆழ்மனத்தில் அமர்ந்திருப்பதாகவே தோன்றியது.
புத்தரின் உடம்பு தர்மகாயம் என்று சொல்லப்படுகிறது. பிரபஞ்சத்தை இயக்கும் மகாதர்மத்தை ஓர் உடம்பாகக் காண்பதே அது. ஏனென்றால் இப்பிரபஞ்சத்தின் ஒரு சரியான துளி நம் உடல். பிரபஞ்ச விசையே இதையும் இயக்குகிறது. ஆகவே இதுவும் தர்மத்தின் தோற்றமே.
அதையே விசுவரூபம் என்கிறோம். விசுவம் என்றால் பிரபஞ்சம். உடலின் பிரபஞ்சத்தோற்றம் மட்டுமல்ல பிரபஞ்சத்தின் உடல்தோற்றமும் முடிவற்றதே.
எல்லா இறையுருவங்களும் நம் உடம்பை நாமே காண்பதுதான்.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
கடவுளை நேரில் காணுதல்
புத்தரின் வரலாற்றில் சில கேள்விகள்
April 8, 2012
மேலெழும் விசை
அன்புள்ள ஜெயமோகன்,
உங்களின் வருகைக்காக மிக ஆவலாகக் காத்துக்கொண்டிருக்கிறோம். :)
குறுந்தொகை குறித்து நீங்கள் ஆற்றிய உரையின் காணொளி ஒரு பெரிய திறப்பு எனக்கு. பழந்தமிழ்ப் பாடல்களின் வாசிப்பு குறித்து நீங்கள் எனக்குச் செய்யும் இரண்டாவது பேருதவி இது. சங்கச்சித்திரங்கள் தான் என்னை பழந்தமிழ் வாசிப்பிற்குள் இழுத்து வந்தது. (அதன் மூலமாக என் வாழ்க்கைத்துணையையும்).இந்த உரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது. நன்றி.
நானும் காயத்ரியும் "அணிலாடு முன்றில்" என்றொரு வலைப்பதிவை நடத்தி வருகிறோம். பழந்தமிழ்ப் பாடல்கள் குறித்த எங்களின் கட்டுரைகள் இடம்பெறும் தளம். உங்கள் குறுந்தொகை உரை தந்த பாதிப்பில் ஒரு கட்டுரையை அத்தளத்தில் நேற்று எழுதினேன், நீண்ட நாட்களுக்குப் பிறகு. நேரமிருக்கும் பொழுது படிக்கவும்.
சித்தார்த்.

கூதளம்
அன்புள்ள சித்தார்த்,
கூதளம் என்று குமரிமாவட்டத்தில் சொல்லப்படும் செடி இது. இங்குள்ள மழைக் காட்டில் பெருமளவு பூத்துக் கொட்டிக்கிடந்தது. பின்னர் கம்யூனிஸ்டுபச்சை என்று சொல்லப்படும் இன்னும் ஆவேசமாக வளரும் செடி – ஆப்ரிக்காவில் இருந்து வந்த களைச்செடி என்று சொல்கிறார்கள் – எழுபதுகளில் பரவி இதைக் குறைத்தது. கம்யூனிஸ்டுபச்சையைப் பார்த்தீனியம் குறிக்கிறது.
கூதளம் ஒரு கொடி. எங்கே எந்தக் கொம்பு நடப்பட்டாலும் அங்கே பற்றிக்கொண்டு மேலே ஏறும். ஏறுமாடங்கள் குடில்கள் கட்டுவதில் பெரிய சவாலே கூதளம் ஏறிப்படர்வதுதான். ஆனால் அதிக உயரம் ஏறாது. அதிகபட்சம் ஆள் அளவுக்கு. ஆனால் இலை தழைத்து மூடும்.
இந்த இயல்பில் இருந்தே குமரிமாவட்டத்தில் 'கூதறப்பய' என்ற வசை உள்ளது. ஒட்டிக்கொண்டு மேலேறி, நச்சி வாழ்பவன் என்று பொருள்.
இந்த இயல்புடன் கூதளம் ஆடிய மலை என்ற சொல்லாட்சியை இணைத்தால் வருவது அந்த முடவனின் மன நிலையின் பிரம்மாண்டமான சித்திரம். மலையுச்சித் தேனை நோக்கி அவன் மனம் மலைக்காடெங்கும் கூதளம் மேலெழத் தவிப்பதுபோலத் தவிக்கிறது போலும்.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
மலர்கள்
மலர்களின் கவிதைகள்
சங்க இலக்கிய மலர்கள்
பூவிடைப்படுதல் 5
குறுந்தொகை-கடிதம்
பூவிடைப்படுதல் 4
பூவிடைப்படுதல் 3
பூவிடைப்படுதல் 2
பூவிடைப்படுதல்-1
உரை; கடிதங்கள்
குறுந்தொகை உரை
இசையுடன் மரபைக் கொண்டாடுவோம்…
April 7, 2012
சங்கச்சித்திரங்கள் – விமர்சனம்
மாத்யமம் மலையாள இதழில் நான் தொடராக எழுதிய கட்டுரைகள் சங்கச்சித்திரங்கள். பின்பு அவை ஆனந்தவிகடனில் தொடராக வெளிவந்தன. கவிதா பதிப்பகமும் தமிழினி பதிப்பகமும் அவற்றை நூலாக வெளியிட்டுள்ளன.
அக்கட்டுரைகளைப்பற்றி நட்பாஸ் எழுதும் தொடர்கட்டுரை.
ஜெ
முந்தைய கட்டுரைகள்
சங்க சித்திரங்கள்- மாயன் எழுதிய விமர்சனம்
பூவிடைப்படுதல்
சங்க காலமும் இந்திய சிந்தனை மரபும்
தொடர்புடைய பதிவுகள்
கடிதங்கள்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
