Jeyamohan's Blog, page 2242
April 5, 2012
குவைத் நிகழ்ச்சி நிரல்
முத்தமிழ் கலைமன்றம் குவைத்
சித்திரை விழா
நாள் ; 14-3-2012
இடம் ; இந்தியன் செண்டிரல் ஸ்கூல், அப்பாசியா, குவைத்
நேரம் மாலை 5 30
நாஞ்சில்நாடன்
ஜெயமோகன்
பழமலை கிருஷ்ணமூர்த்தி
தேஜஸ்ரீ ஜெயகாந்த்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
April 4, 2012
பாண்டிச்சேரியில் காந்தி உரை – ஏப்ரல் 9
மின்னியல் மற்றும் தொடர்பியலுக்கான பொறியியல் துறை
புதுச்சேரி பொறியியல் கல்லூரி, புதுச்சேரி – 605 014
நிகழும் கல்வியாண்டில் பொறியியல் இறுதியாண்டுப் படிப்பை முடித்துக்கொண்டு விடைபெறும் மாணவ, மாணவிகளிடம் மேன்மையான சமூகத்துக்கான விழைவையும் அவற்றைச் சாத்தியப்படுத்தத் தூண்டும் கனவுகளையும் உத்வேகத்தையும் ஊட்டத்தக்க அளவில் மன எழுச்சியையும் நல்லுணர்வையும் வழங்கக்கூடிய ஒரு பேருரைக்கான ஏற்பாட்டை நமது மின்னியல் மற்றும் தொடர்பியலுக்கான பொறியியல் துறை செய்துள்ளது.
தமிழ் எழுத்துலகில் தனித்துவத்துடன் தொடர்ந்து எழுதிவரும் மிகமுக்கியமான படைப்பாளியான திரு.ஜெயமோகன் "காந்தியின் மகத்துவம் மிகுந்த வாழ்வும் நிகழ்கால இளந்தலைமுறையினருக்கான அவருடைய செய்தியும்" என்கிற தலைப்பில் வரும் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் நாள் பகல் 2.30 மணியளவில் நமது துறையின் கருத்தரங்கக் கூடத்தில் உரை நிகழ்த்த உள்ளார் என்பதை எல்லா மாணவ மாணவிகளுக்கும் பேராசிரியர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்திக்கொள்கிறோம். நிகழ்ச்சியில் பங்கேற்க அனைவரையும் வருக வருக என உளமார அழைக்கிறோம்
அன்புடன்
துறைத்தலைவர்
இது அனைவரும் கலந்துகொள்வதற்கான பொது நிகழ்வு , அனைவரையும் வரவேற்கிறோம் .
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
வயதடைதல்
சிலசமயம் நாட்டுப்புறப்பாடல்களில் சில அற்புதங்கள் கண்ணுக்குப்படும். எப்படி என்றால் மற்ற எல்லாக் கலைகளும் மாறிக்கொண்டே இருக்கும். நாட்டுப்புறப்பாடல்களை மாற்றமாட்டார்கள். அவை காட்டுக்குள் ஆலமரத்தின் அடியில் இருக்கும் புராதன தெய்வங்கள் போல அப்படியே யாரும் கவனிக்காமல் அமர்ந்திருக்கும். திடீரென நாம் கவனிக்கும்போது நமக்கு இது என்ன என்ற அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்படும்.
இந்தப் பாடல் வரி அப்படி என்னை கவர்ந்தது. நான் சாதாரணமாக அந்த வழியாகப் பேருந்திலே சென்றுகொண்டிருந்தேன். ஒலிபெருக்கிவழியாக ஏதோ பெரியவர் பாடிக்கொண்டிருந்தார். நல்ல கனமான காட்டான்குரல். ஒரு வரி காதில் விழுந்தது -
ரெண்டு துறவறமும் லெச்சணமாய் இல்லறமும்
பண்டு சொன்னவிதம் பாங்காக முடிச்சானே
தெக்கன்பாடல்கள் என்று சொல்லப்படும் நாட்டார்பாடல்களில் ஒன்றான புலைமாடசாமி பாடல் எனப் பிறகு தெரிந்துகொண்டேன். புலைமாடசாமியின் அப்பா முத்துப்பட்டனின் வாழ்க்கைக்கதை. அந்த வரியின் அர்த்தம் என்ன? ஒரு வாழ்க்கையில் இரண்டு துறவும் இல்லறமும் இருக்கவேண்டும் என்று பழங்காலத்தில் இருந்தே சொல்லப்பட்டமுறையின்படி வாழ்ந்து தன்னுடைய பிறவியை நிறைவடையச் செய்தார் என்கிறது பாடல்.
என்னபொருள் அதற்கு? ஒரு வாழ்க்கையிலே எது இரண்டு துறவு? நான் அதைப் புராணமும் சாஸ்திரமும் படித்த சிலரிடம் கேட்டுப்பார்த்தேன். யாருக்கும் சொல்லத்தெரியவில்லை. நாலைந்துவருடம் கழித்து அதேபோல நாட்டுப்புறக் கதைப்பாடல் பாடும் பெரியவர் எனக்கு விளக்கம் அளித்தார்.
பண்டைய இந்திய மரபில் உலகியலில் ஈடுபடும் ஒரு மனிதனின் வாழ்க்கையை பிரம்மசரியம், கிரஹஸ்தம், வானப்பிரஸ்தம் என மூன்று கட்டங்களாகப் பிரித்திருந்தார்கள். அதாவது கல்விப்பருவம், இல்லறப்பருவம், துறவுப்பருவம். இதைத்தவிர சன்னியாசம் என்று ஒரு பருவம் உண்டு. அது உலகியலைத் துறந்து செல்பவர்களுக்கு உரியது. இவை நான்கு ஆசிரமங்கள் என்று சொல்லப்பட்டன.
எந்த ஒரு மனிதனும் இந்த மூன்று கட்டங்கள் வழியாகக் கடந்து சென்றால்தான் அவன் வாழ்க்கை முழுமை அடையும் என்று விஷ்ணுபுராணம் மூன்றாம் பருவம் ஒன்பதாம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பழைய ஆசாரங்கள் என்று தள்ளிவிடாமல் இன்றைய நவீன சிந்தனையைக் கொண்டு இந்தக் கட்டங்களை நாம் அறிவுபூர்வமாக ஆராய்ந்து பார்த்தால் வாழ்க்கையைப்பற்றிய ஆச்சரியமான ஒரு தெளிவு இதில் இருப்பதைக் காணமுடியும்.
முக்கியமான விஷயம் குழந்தைப்பருவத்தை வாழ்க்கையின் ஒரு காலகட்டமாக இந்துமரபு நினைக்கவில்லை என்பதுதான். ஏனென்றால் எல்லாக் குழந்தைப்பருவமும் ஒன்றுதான். மகிழ்ச்சியாக விளையாடி வாழவேண்டிய பருவம் அது. சொந்தமாக எந்த முடிவும் எடுக்கவேண்டியதில்லை. குழந்தை செய்யும் எந்த விஷயத்துக்கும் அது பொறுப்பல்ல. ஆகவே அதை நம் வாழ்க்கையின் தொடக்கமாகக் கொள்ளவேண்டியதில்லை.
இன்றைய நிலையை வைத்து யோசித்துப்பார்த்தால் இதிலுள்ள நுட்பமான அனுபவ உண்மை நமக்குப் புரியவரும். ஒரு குழந்தைக்கு எந்தவகையான வாழ்க்கைச் சுமையையும் ஏற்றக்கூடாது. அதாவது ஒரு புரோகிதன் தன் குழந்தையை எதிர்காலப் புரோகிதனாக நினைத்துப் புரோகித வாழ்க்கைக்குள் கொண்டு வரக்கூடாது. ஒரு சிற்பி தன் குழந்தையை சிற்பவேலைக்குள் கொண்டுவரக்கூடாது. குழந்தைக்கு உலகவாழ்க்கையில் உள்ள எந்தப் பொறுப்பும் தெரியக்கூடாது. அப்போதுதான் உண்மையான குழந்தைப்பருவம் அதற்கு இருக்கும்.
நண்பர்களே, இன்றைய வாழ்க்கையை கவனித்துப்பாருங்கள். இரண்டு வயதில் பிரிகேஜி வகுப்பில் சேரப்போகும் குழந்தைக்குப் போட்டித்தேர்வு வைக்கிறார்கள். அதற்கு அந்தக் குழந்தையை ஒருவயதில் இருந்தே பழக்குகிறார்கள். குழந்தைப்பருவமே அதற்குக் கிடையாது. பிறந்து வெளியே வந்து மருத்துவச்சி குழந்தையைத் தன் கையில் எடுத்து அம்மாவுக்குக் காட்டியதுமே அம்மா முடிவுசெய்துவிடுகிறாள் – இந்தக்குழந்தை ஐஐடியில் படிக்கவேண்டும் என்று. தட்டாரப்பூச்சியின் வாலில் கல்லைக்கட்டி விடுவதுபோலக் குழந்தைகளிடம் வாழ்க்கையை சுமத்தி விடுகிறார்கள்.
நிகழ்காலமே ஆரம்பிக்காத குழந்தைகளுக்கு எதிர்கால பயத்தை ஊட்டிவிடுகிறார்கள். ஒரு அம்மா பையனிடம் சொல்வதைப் பார்த்தேன். 'இப்டியே வெளையாட்டுத்தனமா இரு… குட்டிச்சுவராப்போயி ஓட்டலிலே தட்டுதான் எடுப்பே' குழந்தைக்கு வயது இரண்டு. அது மகிழ்ச்சியுடன் 'எவ்ளோ பெரிய தட்டு?' என்று கேட்டது. 'போ சனியனே' என்று ஓர் அறை வைத்தாள் அம்மா. இதை ரயிலிலே பார்த்தேன். ரயில்பயணத்தில்கூட குழந்தையை அந்த ரயில்பயணத்தைப் பார்க்கவிடாமல் வீட்டுக்கணக்கு செய்யவைத்துக்கொண்டிருந்தாள்.
புராணமரபைப் பொறுத்தவரை ஒருவன் வாழ்க்கையை ஆரம்பிப்பதே அவனுடைய உபநயனம் நடந்த நாள்முதல்தான். அதற்குப்பின்னர்தான் அவன் தனிமனிதன். அதற்குப்பின்னர்தான் அவனுக்கு வாழ்க்கையில் பொறுப்பும் கடமைகளும் வருகின்றன. அதற்குப்பிறகுதான் அவன் தன் வாழ்க்கையில் என்ன செய்யவேண்டும், எதுவாக ஆகவேண்டும் என்பது தீர்மானமாகிறது.
உபநயனம் என்றதும் நாம் பிராமணர்கள் பூணூல் போடுவதை எண்ணிக்கொள்கிறோம். பழங்காலத்தில் ஏதாவது ஒன்றை முறைப்படி கற்றுக்கொள்ளும் எல்லாருமே பூணூல் போட்டார்கள். நான் சின்னப்பையனாக இருக்கும்போது பொற்கொல்லர்களும் தச்சர்களும் சிற்பிகளும் பூணூல் போட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். உபநயனம் என்றால் 'இதோ ஒரு கல்வியைக் கற்றுக்கொள்ளப்போகிறேன்' என்று ஒரு உறுதிமொழியை எடுத்துக்கொள்ளும் அடையாளம்தான். இன்றைக்கு பிராமணர்கள் மட்டும் பூணூல் போடுகிறார்கள். அதுவும் வெறும் சடங்காகப் போடுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் திருமணம் நடப்பதற்கு முந்தையநாள் உபநயனம் செய்து பூணூல் போட்டுக்கொள்கிறார்கள்.
உபநயனம் எல்லாக் கல்விக்கும் உண்டு. கல்வி பல வகையாக இருந்தது. வேதம் கற்பது ஒரு கல்வி என்றால் மருத்துவம் கற்பது இன்னொரு கல்வி. சிற்பம் கற்பது இன்னொரு கல்வி. ஒரு குழந்தையை அது எந்தத் துறையில் கல்வி கற்கவேண்டுமோ அந்தத் துறையில் சேர்த்து விடுவது உபநயனம் மூலம்தான். இது எட்டு முதல் பன்னிரண்டு வயதுக்கு மேல்தான் செய்யவேண்டும். அதுவரை பிள்ளைகளை சும்மா அப்படியே விளையாட விட்டுவிடவேண்டும். இதுதான் சாஸ்திரம்.
வேடிக்கையாக இருக்கிறது இல்லையா? ஆனால் உலகம் முழுக்க இந்த வழக்கம் இருந்தது. ஆப்ரிக்காவில் உள்ள மாஸாய் [Maasai] பழங்குடிகளைப்பற்றி வாசித்துக் கொண்டிருந்தேன். உலகத்திலேயே மாஸாய் பழங்குடிகளைப் போல அந்த அளவுக்கு சந்தோஷமான குழந்தைகள் வேறு எங்குமே கிடையாது. பன்னிரண்டு வயது வரை மாஸாய் ஆண்குழந்தைகள் எந்த வேலையும் செய்யவேண்டியதில்லை. எந்தக் கல்வியும் கற்கவேண்டியதில்லை. எந்தப் பொறுப்பும் சுமக்கவேண்டியதில்லை. பெண்கள் ஒன்பது வயதுவரை அப்படி இருக்கலாம்.
ஆமாம், தூங்கி விழித்ததுமுதல் இரவுவரை பிடித்ததுபோல விளையாடிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். மாஸாய் குழந்தைக்கு சொந்த வீடு என்ற பொறுப்பு கூட இல்லை. அந்த மாஸாய் சாதியின் எந்த வீட்டிலும் அது சாப்பிடலாம். குழந்தைகள் அந்த கிராமத்துக்கே பொதுவானவை. அவற்றை எவரும் கண்டிப்பதுகூட இல்லை.
[image error]
மாசாய் பழங்குடிகளின் 'பட்டம்' அளிப்பு சடங்கு
பதினைந்து வயதில் மாஸாய் பழங்குடிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு சடங்குகளை வைத்திருக்கிறார்கள். அந்தச்சடங்குகள் மிக விரிவானவை. அதைச்செய்ததும் ஆண்குழந்தைகளை வேட்டைக்குக் கூட்டிச்செல்கிறார்கள். வேட்டையைக் கற்றுக்கொடுக்கிறார்கள். பெண்களுக்கு பெண்களுக்குரிய தொழில்கள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. வாழ்க்கை ஆரம்பிக்கிறது. உபநயனம் என்பது அதுவேதான்.
உபநயனம் முடிந்த இளைஞனை பிரம்மசாரி என்று சொன்னார்கள். பிரம்மசாரி என்றால் இன்று திருமணமாகாதவன் என்ற அர்த்தம் உள்ளது. ஆனால் பழங்காலத்தில் மாணவன் என்றுதான் பொருள். பழங்காலத்தில் உபநயனம் முடிந்ததும் பிள்ளைகள் வீட்டில் இருப்பதில்லை. அவர்கள் குருகுலத்தில் சேர்ந்துவிடுகிறார்கள். குருவுடன் கூடவே தங்கிக் கல்வி கற்கிறார்கள்.
படிப்பு முடிந்ததும் குருநாதரிடம் விடை பெற்றுத் திரும்பத் தன்னுடைய குடும்பத்துக்கு வருகிறான் மாணவன். கிருஹஸ்தாசிரமம் ஆரம்பிக்கிறது. அவனுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். அவன் தன் தொழிலை செய்ய ஆரம்பிக்கிறான். பிள்ளைகள் பிறக்கின்றன. அவற்றுக்குத் தேவையான எல்லாவற்றையும் அவன் செய்கிறான். அதாவது குடும்பவாழ்க்கை வாழ்கிறான்.
பிள்ளைகள் வளர்ந்து அவர்களும் குடும்பவாழ்க்கைக்கு வந்ததும் ஒருவன் அதற்கு மேலும் வாழ்க்கையில் ஒட்டிக்கொண்டிருக்கக் கூடாது. அது அவனுக்கும் கஷ்டம் பிள்ளைகளுக்கு அதைவிடக் கஷ்டம். அவன் தன் மனைவியை பிள்ளைகளிடம் ஒப்படைத்துவிட்டு குடும்பவாழ்க்கையை விட்டு முழுமையாக விலகிவிடவேண்டும். அதற்குப்பெயர்தான் வானப்பிரஸ்தம். வனம்புகுதல் என்று பொருள். மனைவியும் வானப்பிரஸ்தம் வர விரும்பினால் அவளையும் கூட்டிக்கொண்டு செல்லலாம்.
வானப்பிரஸ்தம் என்பது ஒருவகைத் துறவு. அதுவரை செய்துவந்த உலகியல் சார்ந்த விஷயங்கள் எல்லாவற்றில் இருந்தும் முழுமையாக விடுபட்டு, தன்னுடைய மனநிறைவுக்குரிய செயல்களை மட்டுமே செய்தபடி வாழ்வதுதான் அது.
பழங்காலத்தில் காட்டுக்குச் சென்றுவிடுவார்கள். இன்றைக்கு காட்டுக்குச் செல்லமுடியாது. ஆனால் இந்த விஷயத்துக்குப் பழங்காலத்தை விட இன்றுதான் அதிகமான முக்கியத்துவம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். கொஞ்சம் இதைப்பற்றி யோசித்துப்பாருங்கள்.
இன்றைக்கு நவீன மருத்துவம் வளர்ந்துவிட்டது. ஆகவே மக்களின் ஆயுள் நீள்கிறது. சாதாரணமாக எண்பது தொண்ணூறு வயது வரை வாழ்கிறார்கள். ஆனால் அறுபது வயதில் தொழிலில் இருந்து ஓய்வுபெற வேண்டியிருக்கிறது. அதன்பிறகும் முப்பது வருட வாழ்க்கை மிச்சமிருக்கிறது. அதை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்றே தெரிவதில்லை. நகரங்களில் உள்ள அடுக்குமாடி வீடுகளில் முதியவர்கள் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் இல்லாமல் சும்மா இருக்கிறார்கள்.
[image error]
சும்மா இருக்க முடியுமா? அதுவும் முடியாது. வாழ்க்கையில் இருந்து விலகவில்லையே. பிள்ளைகளின் வாழ்க்கையில் தலையிடுகிறார்கள்.பேரப்பிள்ளைகளின் வாழ்க்கையில் தலையிடுகிறார்கள். பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் வாழும் உலகம் என்ன என்றே அவர்களுக்குப் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஆகவே ஆயிரம் பிரச்சினைகள். 'யாருமே நான் சொல்றதைக் கேக்கறதில்லை' 'யாருமே என்னை வந்து பாக்கறதில்லை' என்று புலம்பிக்கொண்டே அமர்ந்திருக்கிறார்கள். எவ்வளவு பெரிய நரகம்.
நீங்கள் இன்று இளைஞர்கள். நீங்கள் உங்களைப்பற்றி யோசியுங்கள். இன்றைக்கு ஒரு தொழில்நுட்பத்தை நீங்கள் கற்றுக்கொண்டிருக்கிறீர்கள். இனிமேல் வேலைக்குப் போவீர்கள். ஒரு நாற்பது வருடம் அந்த வேலையைச் செய்வீர்கள். உங்களுக்கு அறுபது வயது ஆகும்போது அன்றைக்கு வரக்கூடிய தொழில்நுட்பம் உங்களுக்கு என்ன என்றே தெரியாததாக இருக்கும். அன்றைக்கு உள்ள பையன்கள் அதை சும்மா போட்டு விளையாடுவார்கள். நீங்கள் கற்றுக்கொண்டதெல்லாம் நாற்பது வருடம் பழைய விஷயமாக இருக்கும்.
அன்றைக்கு நீங்கள் யோக்கியமாக ஒதுங்கிக்கொண்டால் நல்லது. ஒதுங்காமல் அந்த இளைஞர்கள் வாழ்க்கையில் தலையிட்டுக்கொண்டிருந்தால் என்ன ஆகும்? காலம் என்பது கண்ணில்லாத மிருகம். அதற்குக் குறுக்கே சென்றால் உங்களை முட்டித் தூக்கி வீசிவிட்டுச் செல்லும். அடிபட்டுக் கிடந்து புலம்பவேண்டியதுதான்.
ஆகவே ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் துறவு தேவை. அதைத்தான் வானப்பிரஸ்தம் என்கிறார்கள். நீங்கள் இன்றைக்குப் படிப்பது எதற்காக? உங்களுக்கு எது உள்ளூர ஆசையோ அதற்காக இல்லை. உங்கள் குடும்பத்துக்காக. சமூகத்துக்காக. நாளைக்கு நீங்கள் வேலை செய்வதும் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும்தான். பல கட்டாயங்கள் இருக்கும் இல்லையா? அந்தக் கட்டாயங்களால் சில முக்கியமான விஷயங்களை நீங்கள் ஒத்திப்போடுவீர்கள். நாளைக்கு நாளைக்கு என்று தள்ளி வைப்பீர்கள். அந்த விஷயங்களை நீங்கள் செய்யவேண்டாமா? வாழ்க்கை திரும்ப வராது அல்லவா?
சுந்தர ராமசாமியின் நண்பர் ஒருவர் அமெரிக்காவில் அறிவியல்துறையில் பெரிய ஆய்வாளராக இருந்தார். கடுமையாக உழைத்துப் பல சாதனைகள் செய்தார். சட்டென்று ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு தன்னுடைய சொந்த ஊருக்கே வந்து ஒரு பள்ளிக்கூடம் நடத்த ஆரம்பித்தார். நான் அவரிடம் கேட்டேன் ஏன் இதைச் செய்கிறீர்கள் என்று. 'இது என் ஆத்ம திருப்திக்கான வேலை. சயண்டிஸ்டாக நான் செய்யவேண்டியதை செய்துவிட்டேன். பிள்ளைகளுக்கு செய்யவேண்டியதை செய்து விட்டேன். இனி எனக்கு செய்யவேண்டியதை நான் செய்யவேண்டும்' என்றார். அதுதான் வானப்பிரஸ்தம்.
ஆம், ஒரு வாழ்க்கை துறவிலேதான் முழுமை அடையும். இருபது வயதிலே நீங்கள் கைகளை நீட்டி எல்லாவற்றையும் அள்ளி அள்ளி எடுக்கிறீர்கள். கல்வியை அள்ளுகிறீர்கள். வேலையை அள்ளுகிறீர்கள். அதிகாரத்தை அள்ளுகிறீர்கள். செல்வத்தை அள்ளுகிறீர்கள். புகழை அள்ளுகிறீர்கள். அதன் பின் ஒரு வயதில் அந்தக் கல்வி வேலை அதிகாரம் செல்வம் புகழ் எல்லாமே கனமாக ஆகும். நம் உடம்பு அந்த கனத்தைத் தாங்காது. அதற்குமேல் அவற்றை சுமந்துகொண்டிருந்தால் நரகம்தான். ஆகவே ஒவ்வொன்றாகத் துறக்கவேண்டும். அதுதான் வானப்பிரஸ்தம்.
காளிதாசனின் ரகுவம்சம் காவியத்தில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய திலீபன் தன்னுடைய மகன் வயது வந்ததும் நாட்டையும் பொறுப்புகளையும் மகனிடம் கொடுத்துவிட்டு வசிஷ்டரின் ஆசிரமத்துக்கு வந்து மாடுகளை மேய்த்துக்கொண்டு வாழ்கிறான் என்ற வருணனை வருகிறது. அப்படி ஒதுங்க முடிவது பெரிய மனபலம். அவனுக்கு நிம்மதி உண்டு.
நான் முதலிலே சொன்ன அந்தப் பாட்டுக்கு வருகிறேன். மனித வாழ்க்கையில் இரண்டு துறவு கண்டிப்பாகத் தேவை என்கிறது அந்தப்பாட்டு. அதில் ஒரு துறவு இதுதான். வானப்பிரஸ்தம் என்னும் துறவு. சரி, இன்னொரு துறவு என்ன?
நண்பர்களே, பிரம்மசாரி என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்? பிரம்மசரிய விரதம் கொண்டவன் என்று அர்த்தம். பிரம்மத்தை உபாசிப்பது தவிர வேறேதும் செய்யாதவன் என்று சொல்லலாம். பிரம்மம் என்றால் கடவுள். இங்கே கல்விதான் கடவுள். ஆம், பிரம்மசாரி என்றால் கல்வியை மட்டுமே கடைப்பிடிப்பவன். அதுவும் ஒரு துறவுதான். என்னிடம் அந்த நாட்டுப்புறப் புலவர் சொன்னார். 'ரெண்டு துறவறம் இருக்கு தம்பி…ஒண்ணு படிக்கிற காலத்திலே. ரெண்டு படிச்சதை எல்லாம் மறந்து கடைசிக்காலத்துக்கு வேண்டியத மட்டும் செய்ற காலத்திலே'
உபநயனம் வரை பிள்ளைகளைக் கட்டுப்பாடில்லாமல் ஏன் வளர்த்தார்கள் தெரியுமா? அதன்பின் கல்வியைத்தவிர வேறு எதைப்பற்றியுமே நினைக்கக்கூடாது என்பதற்காகத்தான். பழையகாலகட்டத்தில் பிரம்மசாரிகள் சுவையான உணவை உண்ணக்கூடாது. உயர்தரமான உடைகளை அணியக்கூடாது. வசதியான படுக்கைகளில் படுக்கக்கூடாது. ஒரு பற்றற்ற துறவி போலவே வாழ வேண்டும்.
விஷ்ணுபுராணத்தின்படி மூன்று விஷயங்களை பிரம்மசாரிகள் பேணவேண்டும். சௌசம், ஆசாரம், விரதம். உடலையும் மனதையும் சுத்தமாக வைத்துக்கொள்வது சௌசம். கட்டுப்பாடான வாழ்க்கை நெறிகளை ஆசாரம் என்றார்கள். புலன் இன்பங்களுக்கான நாட்டங்களை ஒடுக்கிக் கல்வியை மட்டுமே கவனிப்பதை விரதம் என்றார்கள்.
இதையெல்லாம் இப்போது சொன்னால் உங்களுக்கு வேடிக்கையாகத்தான் இருக்கும். பழைய சரக்கு என்பீர்கள். நானும் இதெல்லாம் இப்போது தேவை என்று சொல்ல வரவில்லை. பழையகாலம் பழையகாலம்தான். அது திரும்பி வராது.
ஆனால் நாம் படித்தவர்கள், சிந்திப்பவர்கள். அகழ்வாய்விலே ஒரு பழைய சிலை கிடைத்தால் அதற்கு என்ன அர்த்தம் என்று பார்ப்போம் இல்லையா? அதைப்போல இதையும் நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
கல்விக்கு ஒரு தியாகம் தேவைப்படுகிறது. அந்தத் தியாகத்தைச் செய்யாமல் உண்மையில் எதையும் நாம் கற்றுக்கொள்ளமுடியாது. இதுதான் கல்விப்பருவத்தை ஒரு துறவுப்பருவமாக நம் முன்னோர் உருவாக்கியிருப்பதற்கான காரணம்.
நீங்கள் கற்கும் முறையான தொழிற்கல்வியை விட்டுவிட்டு வேறு வகையான கல்வியைப்பற்றி யோசியுங்கள். உதாரணமாக உங்களிலே ஒருவர் ஒரு சினிமா இயக்குநர் ஆகவேண்டும் என விரும்புகிறார் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் என்ன செய்யவேண்டும்?
முதல் விஷயம் துறவுதான் நண்பர்களே. உங்கள் சுகபோகங்களைத் துறந்தே ஆகவேண்டும். அப்படித் துறவியாக ஆனபின்னர் அடுத்து ஒரு இயக்குநரின் கீழே சென்று சேரவேண்டும். ஆயிரம் வருடம் முன்னால் ஒரு குருகுலத்திற்கு எப்படி மாணவன் சென்றானோ அதேபோலத்தான் இங்கேயும் குருவுடன் சென்று சேரவேண்டும். பழைய குருகுல அமைப்பில் குருவின் கூடவே இருக்கவேண்டும். குருவுக்கு சேவைசெய்யவேண்டும். குரு திட்டினாலும் அடித்தாலும் விட்டுவிடக்கூடாது. குரு செய்வதை நீங்களும் செய்யவேண்டும். அப்படித்தான் கற்றுக்கொள்ள முடியும். இன்றும் சினிமாவிலே அப்படித்தான்.
என்னுடைய இளம்நண்பர் ஒருவர் பொறியியல் படித்துவிட்டுக் கணிப்பொறித்துறையிலே வேலைபார்த்தார். அவருக்குத் திரைப்படத்துறை மேல் பெரும் மோகம். அவரை இன்றைய முக்கியமான இயக்குநர் ஒருவரிடம் உதவி இயக்குநராக சேர்த்துவிட்டேன். பொறியியலாளராக இருந்தபோது சொகுசாக வாழ்ந்தவர் அவர். சோம்பேறியும்கூட. எப்படி வேலைசெய்யப்போகிறாரோ என்று நினைத்திருந்தேன்.
ஆனால் அவர் வேலைசெய்வதைப்பார்த்து எனக்கே பிரமிப்பாக இருந்தது. ஒருநாள் அவர் சொன்னார். 'சார் நான் நேற்று ராத்திரி முழுக்க இசையமைப்பாளருடன் இருந்தேன். அதிகாலை நான்குமணிக்கு வீட்டுக்குச் சென்றேன். இரண்டுமணிநேரம் தூங்கிவிட்டு நேராக அலுவலகம் வந்தேன். இரவு வரை இங்கே வேலை. இரவில் மீண்டும் ஒலிப்பதிவுக்குச் செல்வேன். இப்படித்தான் ஒருமாதமாக வேலை செய்கிறேன். என்ன சாப்பிட்டேன் என்றே தெரியவில்லை. என்ன உடை அணிகிறேன் என்ற ஞாபகமே இல்லை. சார் கண்ணாடியில் முகம்பார்த்தே இரண்டுவாரமாகிறது…'
'கஷ்டமாக இருக்கிறதா?' என்றேன் 'சார், இப்போதுதான் வாழ்க்கையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த ஒரு மாசத்திலே நான் கற்றுக்கொண்டது மொத்த வாழ்க்கையிலும் கற்றுக்கொண்டதை விட அதிகம். கற்றுக்கொள்வதை விட சந்தோஷமானது உலகத்தில் வேறு எதுவுமே இல்லை சார்…' சட்டென்று சோர்ந்து '…ஆனா கிட்டத்தட்ட இருபத்திரண்டு வருசம் பள்ளிக்கூடத்திலும் கல்லூரியிலும் படித்தபோது கற்றுக்கொள்வதன் சந்தோஷத்தை அனுபவிக்கவே இல்லை சார்'.
'அந்த சந்தோஷத்தை அனுபவிக்கவில்லை என்றால் நீங்கள் கற்றுக்கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்' என்றேன். 'ஆமா சார்…வாழ்க்கையிலே பெரும்பகுதி வீணாப்போச்சு' என்றார். 'நல்லவேளை மிகவும் பிந்திவிடவில்லை' என்றேன்.
கிட்டத்தட்ட இதே விஷயத்தைக் கொஞ்சநாள்முன் அமெரிக்கா சென்றிருந்தபோது என் வாசகி ஒருவர் சொன்னார். கணக்கியல்துறையில் உயர்கல்வி கற்றவர் அவர். ஆனால் ஒரு நிறுவனத்தில் சேர்ந்து முன்னோடியான ஒரு கணக்கியலாளரிடம் பணியாற்றியபோதுதான் கற்றுக்கொள்ளவே ஆரம்பித்தேன். அப்போதுதான் நான் நானாக உருவானேன்' என்றார்.
வாழ்க்கையில் எதையாவது சாதித்த ஒவ்வொருவருக்கும் இதேபோல ஒரு குருகுலப்பருவம் இருக்கும். அது ஒரு துறவு வாழ்க்கையாக இருக்கும். கல்வியை மட்டுமே உபாசனை செய்யும் பிரம்மசரிய வாழ்க்கையாக இருக்கும் அது.
ஆனால் நம்முடைய சமூகம் இன்று எப்படி குழந்தைப்பருவத்தை அழித்திருக்கிறதோ அதைப்போலக் கல்விப்பருவத்தையும் அழித்துவிட்டிருக்கிறது. இன்று நாம் கல்வியை ஒரு தவமாகக் கற்கிறோமா? அதற்காக எதையாவது துறக்கிறோமா?
நம்முடைய கல்வி நிறுவனங்களில் 'பயிற்சி' [training ]யைத்தான் அளிக்கிறார்கள். 'கல்வியை' [education] அல்ல. கல்வியை ஒரு துறவாக ஒரு தவமாக மட்டுமே அடைய முடியும். சிலசமயம் நீங்கள் இருபது வருடம் கல்விநிறுவனங்களில் படிப்பீர்கள். நீங்கள் கல்வி பெறுவது ஆறுமாதகாலம்கூட இருக்காது. அந்த ஆறுமாதக் கல்வியை வைத்துக்கொண்டுதான் மிஞ்சிய வாழ்க்கையை முழுக்க நீங்கள் சந்திக்கிறீர்கள். இதுதான் உண்மை.
நமக்கு இன்று தேவையாக இருப்பது முதலில் நம் பிள்ளைகளுக்கு உண்மையான குழந்தைப்பருவம். அந்தக்குழந்தைப்பருவம் முடிந்ததும் அதற்குத் தேவை உண்மையான கல்விப்பருவம். அக்குழந்தையின் இயல்புக்கு ஏற்ற கல்வி. முழு ஈடுபாட்டுடன் பிற அனைத்தையும் துறந்து அது கற்கும் கல்வி. அதாவது பிரம்மசரியம்.
இன்று நமக்கு நம்முடைய அமைப்பு இவற்றை அளிப்பதில்லை. ஆகவே நாம்தான் இதை தேடிக்கொள்ளவேண்டும். இந்தக் கல்வியைக் கல்வி என நினைக்காதீர்கள். இது ஒரு சான்றிதழ் மட்டுமே. இதைவைத்துக்கொண்டு நீங்கள் ஒன்றும் செய்யமுடியாது. இது ஒரு தொடக்கத்தை மட்டுமே அளிக்கும்.
இன்னும் சொல்லப்போனால் இந்த சான்றிதழ் என்பது ஒரு பூணூல். இந்த சான்றிதழ் கையில் கிடைப்பதுதான் உபநயனம். இனிமேல்தான் கல்விப்பருவம் ஆரம்பம். இனிமேல்தான் நீங்கள் பிரம்மசாரிகள். முன்பெல்லாம் உபநயனம் ஒருவாரம் நடக்கும். இப்போது இருபது வருடம் நீளமாக நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.
இனிமேல் ஒரு பிரம்மசரியத்தை நீங்கள் கடைப்பிடித்தாகவேண்டும். உங்கள் துறையைத் தேர்ந்தெடுக்கவேண்டும். உங்கள் குருகுலத்தைக் கண்டுபிடிக்கவேண்டும். அந்த குருகுலத்தில் உங்களை முழுமையாக அர்ப்பணிக்கவேண்டும். அதற்காகப் பிற அனைத்தையும் துறந்து ஒரு துறவுவாழ்க்கையை வாழவேண்டும். அங்கே கற்றதுதான் உங்களுடைய கல்வி. அங்கேதான் நீங்கள் நீங்களாக ஆவீர்கள்.
அதுதான் நாம் நம்முடைய பாலியத்தில் இருந்து கரையேறும் இடம். அதுதான் நம்முடைய சுய அடையாளத்தின் தொடக்கம். அப்படி ஒன்றுக்காகத் தேடுங்கள்.
நன்றி
[சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலையில் ஆற்றிய உரை]
தொடர்புடைய பதிவுகள்
கல்வி கடைசியாக…
கல்வி- கடிதம்
கல்வி -இன்னொருகடிதம்
ஓர் ஆசிரியரின் கடிதம்
ஒரு தற்கொலை
ஆசிரியர்கள்
வாசலில்…
நீங்கள் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்… எனக்கு இலக்கிய அறிவு என்பது முற்றிலும் கிடையாது, எந்த இலக்கியங்களையும் நான் முழுமையாகப் படித்த்து இல்லை. எனக்கு சில மாதங்களுக்கு முன்பு வரை நீங்கள் யார் என்று கூடத் தெரியாது. ஆனால் வரலாற்று சம்பவங்கள், நிகழ்வுகள் மீது எனக்கு எப்போதும் ஆர்வம் அதிகம். சிறு வயதில் சமூக அறிவியல் பாடத்தைப் பின்னாலிருந்து முன் பக்கம் வரை படிப்பேன்.
இணைய தேடுதலில் கிடைத்த, தங்களின் இந்தியப் பயணம் முழு கட்டுரை என்னை வெகுவாக பாதித்தது… உங்கள் விளக்கமும், அதை சார்ந்த குறிப்புகளும், உரைநடையும் என்னைக் கவர்ந்தது. வெவ்வேறு மனிதர்கள், வேறுபட்ட கலாச்சாரங்கள்… இது என் தேசம், என் மூதாதையர் பிறந்த மண் என கூறும் போது உடல் சிலிர்க்கிறது. எனக்குள் அது ஒரு மன மாற்றத்தையும் கொண்டு வந்து உள்ளது…
உங்களின் பயண அனுபவம் நிச்சயம் ஒரு வரப்பிரசாதம் என் போன்ற கத்துக்குட்டிகளுக்கு… மனதுக்குள் நிறைய கேள்விகள், நிறைய குழப்பங்கள்… ஏதோ மாற்றம் எனக்குள்… (நிச்சயம் காதலினால் அல்ல!!! உங்கள் எழுத்தினால்) ஆனால் இந்த மாற்றம் பிடித்துள்ளது… நான் எதை வாசிக்க வேண்டும் எதை விட வேண்டும் என்று தெரியவில்லை… சிறு குழந்தை கையில் கிடைக்கும் எல்லா மிட்டாய்களையும் ஒன்றாக,ஒரே நேரத்தில் சுவைப்பது போல் அனைத்தையும் சுவைக்க ஆசையாக உள்ளது… இது சரியா???? நேரம் இருப்பின் பதில் அளிக்கவும்…
அன்புடன்
முகமது யாசின்
அன்புள்ள யாசீன்,
எந்தத் துறையாக இருந்தாலும் கற்றுக்கொள்வதுதான் மனிதனின் பேரின்பம். அது சாக்ரடீஸ் சொன்ன ஒரு பதில். அதிலும் ஒரு புதிய துறையைக் கண்டடைவதென்பது மிகப்பெரிய அனுபவம். என் அனுபவத்தில் இலக்கியமோ கலையோ அந்த முதல் திறப்பு நிகழும்போது உள்ள பெரும் பரவசம் பிறகு வருவதே இல்லை. வாழ்த்துக்கள்
உங்கள் வாசிப்புலகைக் 'கன்னாபின்னாவென்று' வைத்துக்கொள்வதே நல்லது. மாடுமேய்க்கும் பையனாக வாழ்ந்த இளம்பருவத்தில் நானெல்லாம் என்னென்னவோ சாப்பிடுவேன். அன்னாசிச்செடியின் குருத்து, புறாமுட்டை… அதுதான் இளமைப்பருவப் பசியும் ருசியும். அந்த வேகம் நாக்கிலும் வயிற்றிலும் மனதிலும் இருக்கவேண்டும்
அதேபோல வாசியுங்கள்.எல்லாவற்றையும் வாசியுங்கள். ஆனால் ஒரு விதி, உங்களுக்கு வாசிப்பில் ஒரு சவாலை அளிக்காத நூலை வாசிக்காதீர்கள். அடுத்த முறை அதேமாதிரி நூலைத் தேடிச்செல்லாதீர்கள்.
உங்கள் ரசனைக்கேற்ற பயணநூல்கள் பல உள்ளன. உதாரணமாக காகா காலேல்கர் எழுதிய ஜீவன்தாரா. இந்தியாவின் எல்லா நதிகளிலும் நீராடுவதற்காகச் சென்ற அனுபவங்களின் பதிவு. ராகுல சாங்கிருத்தியாயனின் ஊர்சுற்றி புராணம் அதேவகையான இன்னொரு நூல்
இலக்கியமா வரலாறா எது உங்களை அதிகம் கவர்ந்து உள்ளே கொண்டுபோகிறது என்று நீங்களே கவனியுங்கள். ஒரு கட்டத்தில் அங்கே உங்களை திசைதிருப்பிக்கொள்ளுங்கள். அது உங்கள் பாதை
வாழ்த்துக்கள்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
அடுத்தகட்ட வாசிப்பு
பயணம் — கடிதங்கள்
வாசிப்பும் சமநிலையும்
பயணம் — கடிதங்கள்
காந்தி-வாசிப்பு-சுயம்:ஒரு கடிதம்
விவாதத்தின் நெறிமுறைகள்
எப்படி வாசிப்பது?
உங்கள் கதைகள்-கடிதம்
ஒரு கவிதைச்சாதனை
புனைவு வாசிப்பு குறைந்துள்ளதா?
பின் தொடரும் நிழலின் குரல்-கடிதம்
சுஜாதா
இரு கடிதங்கள்
காடு, களம்-கடிதங்கள்
டியூலிப் மலர்கள்
கதைகள், கடிதங்கள்
வாசிப்பு — கடிதங்கள்
கடிதங்கள்
நவீனத்தமிழிலக்கிய அறிமுகம்:கடிதம்
கோலத்தில் பாய்வது…
April 3, 2012
இலக்கியவட்டம் நாராயணன்
மதிப்பிற்குரிய ஜெ.மோ. அவர்களுக்கு, வணக்கம்.
எனது வலைப்பூவில் அமரர். வெ.நாராயணன் அவர்களைப் பற்றிய ஒரு நினைவேந்தல் கட்டுரையை எழுதியுள்ளேன். அவருடன் பணியாற்றியவன், இலக்கிய வட்ட கூட்டங்களில் பங்கேற்றவன் என்ற முறையில் எனது அவதானிப்பைப் பதிவு செய்துள்ளேன். அதைத் தங்களது பார்வைக்கு கொண்டு வரவேண்டும் என்பது எனது தனிப்பட்ட அவா. நன்றி.
இப்படிக்கு,
தங்களது வாசகன், தி.ஸ்ரீ.
நாராயணன்- கடிதம்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
சந்திரசேகரர்- கடிதங்கள்
அன்பின் ஜெ..
அப்பாடி.. ஒரு வழியா ஒரு வட்டம் முடிவுக்கு வந்து விட்டது.
ஒபிலிக்ஸின் (obelix) பாஷையில் சொல்வதென்றால் – zigzagly..
இருவரின் குறைகளும் நிறைகளும் ஒரே contextல் பார்த்துப் பேசும் போது முழுமையடைகிறது.
ஒரு முழுமையான குருவைக் காண்பிக்க வேண்டி நின்ற பால் பிரண்டனுக்கு, ரமணரைக் காட்டிய அதே சந்திரசேகரர்தான், ரமணர் தன் தாய்க்குக் கோவில் கட்டக் கூடாது என்று சொன்னவர்.
தலையார்க் கான் என்னும் பார்ஸி பக்தை, ரமணர் முதலில் தங்கியிருந்த ஆயிரங்கால் மண்டபத்தைப் புனருத்தாரணம் செய்த விழாவுக்கு வந்த ராஜாஜிக்குக் கறுப்புக் கொடி காட்டி வீணாக்கிய நேரத்தில், பெரியார் ரமணரைச் சந்தித்திருக்கலாமேன்னு தோணும்..
இருபது வயதில் வெறுப்பு விருப்புகள் அதிகம்.
நாற்பத்தைந்தில் ஒரு மிதமான பார்வை வந்திருக்கிறது..
நீங்கள் நின்று கொண்டிருக்கும் அதே நிலையில் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருக்கிறேன். சந்தோஷம்!
அன்புடன்
பாலா
சந்திரசேகரேந்திர சரஸ்வதியைப் பற்றிய உங்கள் பதிவு நடுநிலையாய் இருந்தது. கல்கியில் அரைப்பக்கம் தேர்ந்தெடுத்துப் பிரசுரித்ததை ஒரு காலத்தில் விடாமல் படிப்பதுண்டு. நீங்கள் சொன்னமாதிரி தீண்டாமையைப் பற்றிக் கொஞ்சம்கூடத் தன் வைதீக வட்டத்தை விட்டு யோசிக்காதவர் அவர். பிராமணன் இப்போதெல்லாம் தன் ஆச்சாரங்களை பின்பற்றவில்லை என்று புலம்பிவிட்டு, ஆனாலும் அவன் பிராமணன்தான் மற்றவர்கள் தொடக்கூடாது என்றே விரும்பினார். என்றாவது எல்லா பிராமணரும் மறுபடியும் சடங்கு சம்பிரதாயங்களை ஒழுங்காகக் கடைப்பிடிப்பார்கள் என்ற நப்பாசையே அவரது பேச்சில் தெரிந்தது. வரதட்சணை வாங்கினால் அந்தக் குடும்பத்தினர் சங்கர மடத்தில் பத்திரிக்கை வைத்து ஆசீர்வாதம் வாங்கவரக்கூடாது என்றவுடன் எல்லாரும் வரதட்சணை வாங்குவதை நிறுத்தவில்லை. மடத்தில் பத்திரிக்கை வைப்பதை நிறுத்திவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.
பிராமணர்கள் எப்படி என்று இது ஒரு உதாரணம். எனக்கு இந்த மாதிரி so called பிராமண நண்பர்கள் அதிகம்.
அவர்கள் யாருமே எதையுமே சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. பிறகு எதற்கு பிராமணன் உசந்தவன் என்று அலட்டிக் கொள்கிறீர்கள் என்று அடிக்கடி தோன்றும்.
என்னைப் பொறுத்தவரை லௌகீக வாழ்க்கையில் தன் 'கவனம்' இல்லாமல் உள்முகப் பயணத்தில் கவனம் வைப்பவனே, பிராமணன். அவர்கள் எல்லா ஜாதியிலும் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் வைதீகம் mainstream ல் இருந்தது. அது சமூக,அரசியல் காரணங்களால் கூட இருக்கலாம் அதை வைத்து இன்று குதிப்பவர்கள் கணிசமாகவே இருக்கிறார்கள்.. அப்படிப் பார்த்தால் புத்தமதம், சமணம் கூட mainstream ல் இருந்து பின்னர் விலகியிருக்கிறது.
ஒரு நாள் இணையத்தில் 'தெய்வத்தின் குரல்' முழுப் புத்தகமும் (மின்னூல்) கிடைத்தது. 4700 பக்கமும் ஒரே மூச்சில் படித்தேன். (இப்போதும் அடிக்கடி ஏதாவது பக்கத்தைத் தேர்ந்தெடுத்துப் படிப்பதுண்டு) சத்தியமாகச் சொல்லவேண்டும் என்றால் அவர் படித்த நூல்களுக்கு அளவே இருந்திருக்காது என்றே தோன்றுகிறது. இந்த மண்ணின் கலைகள் பற்றிய ஒரு சிறு அறிமுகம் (அறிமுகம்தான்) இந்த புத்தகத்தில் நிறையவே கிடைக்கிறது. ஒத்துப்போகவே முடியாதவைகளும் படிக்கப் படிக்க வந்துகொண்டே இருக்கும். நிராகரித்தபடியே போகவேண்டியதுதான். பக்திதான் பிரதானம். வைதீகம் பற்றிய பெருமைகள் நிறையவே உண்டு. ஆனால் நீங்கள் சொன்ன மாதிரி ignore பண்ணவேமுடியாத நூல்.
தமிழ்ச் சொற்களின் வேர்ச்சொற்கள் பற்றிய நிறைய நிறைய குறிப்புகள் என்னை அதிகம் கவர்ந்தன. அதே போல யோகம் பற்றியதும்.
ஞானமடைந்தவர்கள் கூட அவர்கள் அதற்கு முன்பு சொன்னவை அபத்தங்களாகவே இருக்கலாம். இவரைப் பற்றித் தெரியாது. ஒரு பாரம்பரிய மடத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். அதில் கண்டிப்பாக அபத்தங்கள் இருக்கும். அது இல்லாதவர் என்றெல்லாம் கூறவேமுடியாது. அதிலும் மாறிக்கொண்டே வரும் சமூகம் பற்றிய கருத்துகள் செல்லாத நோட்டுக்களாகவே இருந்தன. அது mainstream லிருந்து வைதீகம் போகிறதே என்று வந்த புலம்பலாகவே எனக்குப் படுகிறது.
இப்போது மடம் இருக்கும் நிலமை ஹா…ஹா….ஹா….தான். எப்படி சிரிப்பது என்று தெரியவில்லை. ஆனாலும் நீங்கள் சொல்கிற இந்த முரணியக்கம் எல்லாத் துறைகளிலும் தேவையாய்த்தான் இருக்கிறது. இல்லையெனில் ஒருசார்பு அராஜகம் பண்ண ஆரம்பித்துவிடுகிறது. அது எந்த பக்கமாகவும் இருக்கலாம்.
-மாயன் (அகமும் புறமும்)
http://ahamumpuramum.blogspot.com/
அன்புள்ள ஜெ,
இந்தக் கட்டுரைக்கு மிக்க நன்றி. இந்து வேத மரபு, கலைகள், சமயம், காவியம் ஆகியவற்றின் மீதும், நவீனக் கல்வி, சாதிய மறுப்பு, சமுதாய சமத்துவம் ஆகியவற்றின் மீதும் இணையான பற்றும் மதிப்பும் கொண்டிருப்பவன் நான். என்னைப் போன்ற ஒருவனுக்கு, இதில் விளையும் குழப்பங்களையும் தடுமாற்றங்களையும் சமநிலையில் நோக்க வேண்டியதன் அவசியத்தை அருமையாக உணர்த்தியது இந்தக் கட்டுரை.
// ஆனால் சந்திரசேகர சரஸ்வதி அவர்களை நான் வெறுக்கமுடியாது. ஏனென்றால் நியாயஉணர்ச்சியும், மகத்தான நட்புணர்ச்சியும், அப்பழுக்கற்ற நேர்மையும் கொண்டவரான ; அதேசமயம் சாதிவெறியரும், ஆணாதிக்கவாதியுமான என் அப்பா வயக்கவீட்டில் பாகுலேயன் பிள்ளையை நான் இன்னும் வெறுக்கவில்லை. //
இந்த வரிகள் நெகிழ்ச்சியூட்டி விட்டன. என் நினைவில் இவை என்றும் நீங்காமல் இருக்கும்.
அன்புடன்,
ஜடாயு
அன்பின் ஜெ.
சந்திரசேகர சரஸ்வதி – அருமை. சோற்று கணக்கு படித்த அனுபவத்தைக் கொடுத்தது.
சந்திரசேகரை மேலோட்டமாகப் பிடிக்காது. இருந்தாலும் ஆழ் மனத்தில் ஒரு நல்லெண்ணம் இருந்தது. அதைத் தர்க்க பூர்வமாக அப்பட்டமாகப் பேசி நீங்க நடுநிலைக்கு கொண்டு வந்திட்டீங்க. இனிமேல் நாமளும் பப்ளிக்கா சொல்லிக்கலாம்லே. அவர் எங்காளு தான்னு. ( தமிழ். இந்தியன்)
எப்படி இப்படி எல்லாம் எழுத முடிகிறது உங்களால். சான்சே இல்லை. கொன்னுட்டீங்க. எல்லா விசயங்களையும் அறுத்து எங்களுக்கு சிகிச்சை கொடுத்திட்டீங்க.
ஏதும் மடம் ஆரம்பிக்கிற ஐடியா இருந்தா சொல்லவும்.
வாழ்க
முத்துகுமார்
திரு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்
தங்களின் மகாத்மா பற்றிய கட்டுரைகள் எல்லாம் மிக அற்புதமான விஷயங்களைச் சொல்லி வருகிறது, நான் காந்தியின் மீது மிகுந்த மரியாதை கொண்டவன், பலர் அவரைப்பற்றி அவதூறு பேசும்போது, அவரைப்போல ஒருநாள் கூட வாழமுடியாதவர்கள்தான் அப்படி பேசுவார்கள் என்று தோன்றும். உங்கள் கட்டுரைகள் எனக்கு அவர்களோடு வாதிக்க மிகவும் உதவி இருக்கின்றன.
இந்த சந்திரசேகர சங்கராச்சாரியார் மீது மிகுந்த மரியாதை இருந்தாலும், அவரின் பிராமண எண்ணங்கள் எனக்கு உடன்பாடில்லைதான் ஆனால் காந்தியோடு அவர் கொண்ட இந்த கருத்துவேறுபாடும் அந்த சந்திப்பு பற்றிய நுணுக்கமான உங்கள் விவரிப்பு என்னை மிகவும் பிரமிக்க வைத்தது. சந்திரசேகரின் வாதம் பற்றி எனக்கு பெரிய பிரமிப்பு இல்லை, அவரின் எண்ணங்கள் அப்படித்தான் இருக்கக் கூடும்
என்பது அவரின் சில புத்தகங்கள் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது.ஆனால் அவர் காந்தியை சூத்திரர் என்பதால் மாட்டுத் தொழுவத்தில் சந்திக்க நினைத்ததும் எனக்கு அவர் மீது இருந்த மதிப்பை குறைத்துவிட்டது.
ஒரு சூத்திரனிடம் தான் சார்ந்த மதம் அழியக்கூடாதென்று கண்ணீர்விட்டுப் பிச்சை எடுப்பதில் குற்றமில்லை, அந்த சூத்திரனை சந்திக்க தமிழகத்தில் இருந்து கேரளாவரை நடந்து போனதில் குற்றமில்லை ஆனால் அந்த சூத்திரனை சந்திக்க ஒரு தொழுவத்தைத் தேர்ந்தெடுக்க மட்டும் தெரிந்திருக்கிறது. என்ன கொடுமை.
நிறையத் தகவல்கள் நிறைந்த கட்டுரை. மிகவும் நிறைவாக உணர்கிறேன். கூடவே நாராயணகுரு அவர்கள் தான் காந்திக்கு தீண்டாமைப்பற்றிய தெளிவைக்கொடுத்தவர் என்றும் படித்திருக்கிறேன், அது உங்கள் கட்டுரை மூலம் மேலும் அறிந்ததில் மிகவும் மகிழ்ச்சி.
மகாத்மா பற்றிய உங்கள் கட்டுரைகள் என்றும் நிலைத்திருக்கும்
அன்புடன்
தவநெறிச்செல்வன்
தொடர்புடைய பதிவுகள்
பெரியார்- அறிவழகனின் கடிதம்
காந்தியும் சந்திரசேகர சரஸ்வதியும்
துபாய் நிகழ்ச்சி நிரல்
அமீரகத் தமிழ் மன்றம் இலக்கியக் கூடல்
எழுத்தாளர் நாஞ்சில்நாடன்
எழுத்தாளர் ஜெயமோகன்
இடம் ஷிவ் ஸ்டார் பவன் உணவகம் , கராமா, துபாய்
நாள் 12- 04-2012 வியாழக்கிழமை
நேரம் மாலை 730 மணி
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
April 2, 2012
கூடங்குளம்- இன்னொரு கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்,
எள்ளி நகையாடும் ஆன்மாவற்ற கும்பலுக்கு முன்னால் அவர் கிடக்கும் அந்தக்கோலம் நெஞ்சைக் கனக்கச்செய்கிறது.
கையை பிசைந்துக் கொண்டு நிற்கும் இயலாமையுடன் என்னால் இதை எழுத மட்டுமே முடிகிறது.
மகாத்மா காந்தியின் உண்ணாவிரத போராட்டங்கள் (http://www.gandhi-manibhavan.org/aboutgandhi/chrono_fastsgandhi.htm) அசுரத்தனமான நுகர்வு கலாச்சாரமற்ற எளிமையான இந்தியாவில் நடந்தது. அவர் சமூக மற்றும் அரசியல் இலக்கை முன்வைத்துதான் போராட்டங்களை நடத்தினாரே தவிர நுகர்வை எதிர்த்து (அந்நிய துணி பகிஷ்கரிப்பு போன்றவை இந்த வகையல்ல) தனிப் போராட்டம் நடத்தவில்லை (பிரச்சாரம் பண்ணியிருக்கலாம்) என்று நினைக்கிறேன். காந்தியின் மகத்தான செல்வாக்கும் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் மக்களின் பிரச்சாரமும் உடனுதவ, நேர்மை நியாயம் போன்ற உணர்ச்சிகள் தங்களிடத்தில் வளர்ச்சியும் மதிப்பும் பெற்ற வந்த சிறிதாவது செவிசாய்க்கும் வெள்ளையர்களை நோக்கி அவருடைய புனிதப் அரசியல் உண்ணாவிரத போரட்டங்கள் செலுத்தப்பட்டன. அதனால் ஓரளவு வெற்றியும் பெற்றார். அவருடைய சமூக உண்ணாவிரத போராட்டங்கள் இந்தியர்கள் பிளவுபட்டிருந்த பொழுதுகூட ஓரளவு வேலை செய்தது.
ஆனால் சுப. உதயகுமார், மக்கள் ஆதரவு பெற்றிருந்த அன்னா ஹசாரேக்கே செவி சாய்க்காத அதே அரசு இயந்திரத்தை எதிர்த்து போராடுகிறார். மேலும் அவர் எடுத்திருக்கும் இந்தக் காந்திய கருவி நுகர்வை எதிர்ப்பதாகும். காந்தி செய்து பார்க்காத பரிசோதனை இது. அன்னா ஹசாரேயும் பரவலான இலக்கை நோக்கியே போராடினார். அன்னாஹசாரேயின் போராட்டத்திற்கு பெரிய பிரச்சாரமிருந்த்ததால் அது ஓரளவு உதவி செய்தது. உதயகுமார் காந்தி அளவோ ஹசாரே அளவோ பெரிதாக தெரியப்பட்டவரில்லை. சிறுபான்மையான மக்களே உதயகுமார் பக்கமிருக்கிறார்கள். ஆதரிக்கிறார்கள். எல்லோருடைய நலன் கருதி தான் அவர் இந்தப் போராட்டத்தை முன் வைக்கிறார் என்றாலும் அந்த "எல்லோரும்" இவர் பக்கமில்லை. "நமக்காக அல்லவா இவர் போராடுகிறார், நம் எதிர்காலத்தையும், நம் குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதிக்ககூடிய ஒரு விஷயத்தை அல்லவா எதிர்க்கிறார்" என்ற பிரக்ஞையே இல்லாத மக்களுக்காக இவர் போராடுகிறார். இதில் வெற்றி பெற்றுவிட முடியுமா? இந்த மக்களுக்காக இவர் இப்படி கஷ்டப்படத்தான் வேண்டுமா?
இந்தியாவிலேயே இரண்டு இடத்தில் அணு உலைகளை (http://www.npcil.nic.in/main/AllProjectOperationDisplay.aspx) நிறுவப்பட்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு. ஒரு தொழிற்சாலை வைப்பது என்றால் நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு முன் வரும் மாநிலங்கள் இதில் சத்தம் போடாமல் விலகி இருப்பது கூடவா நம்மக்களிடம் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவில்லை?. கேரளா போன்ற மாநிலங்கள் தொழிற்சாலைக்கூட வைக்க விட மாட்டர்கள். அவர்கள் அவ்வளவு சூழல் விழிப்புணர்வு கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்ததே. விவரமாக முல்லைப் பெரியார் போன்ற கேரளத்திற்கு பயன் தரும் விஷயத்திற்கு நியாமிருக்கிறதோ இல்லையோ ஒருமித்து போராடுகிறார்கள். தமிழர்கள் ஏன் சிந்திக்க மறுக்கிறார்கள்?
மானுடத்திற்கும், இயற்கைக்கும் சிறிதேனும் ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கும் தொழில் நுட்பம் ஏற்புடையதல்ல. அது முதிரா தொழில்நுட்பம். அதை பலவந்தமாக அரசும் திணிக்கிறது. மக்களும் ஆதரிக்கின்றனர். நாகரீகம் என்ற மாயையில் இயற்க்கையை விட்டு விலகி விலகிச் செல்லும் மனிதன் நாகரீகம் என்று நினைத்துக் கொண்டு பூமியை நேசிக்கத்தெரியாமல் மனதளவில் "காட்டுமிராண்டியாகவே" ஆகிக் கொண்டிருக்கிறான்.
உதயகுமாருக்கு மானசீகமான முறையில் என் ஆதரவு உண்டு. போராட்டத்திற்கு எதேனும் நிதி உதவி வேண்டுமென்றால் நாங்களும் பங்களிக்கிறோம்.
அவர் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தாலும், அவர் உடல்நலத்தை புரிந்துக்கொள்ளாத மக்களுக்காக விரயம் செய்வதை நான் அன்புடன் எதிர்க்கிறேன். அவருக்கு இருக்கும் அர்ப்பணம் இந்தப் போராட்டத்தில் வேறு எவருக்கும் இல்லை. அவர் ஆரோக்கியமாக இருந்தால் தான் போரடிக்கொண்டிருக்கலாம். அதற்கு அவர் வேறு வகை போராட்டக் கருவிகளை ஆராயந்து கையில் எடுக்கவேண்டும்.
பக்ஸ்
பி.கு. கூடங்குளத்திலிருந்து பத்து பதினைந்து மைல் தொலைவிலிருக்கும் பழவூர் என் தந்தை, தாத்தா பாட்டி வாழ்ந்த விவசாய கிராமம். இன்றும் எங்கள் உறவினர்கள் பலர் இருக்கின்றனர். இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் விடுமுறைக்கு சென்றிருந்த பொழுது ஒரே பேச்சாக இருந்தது. நனறாக நினைவிருக்கிறது. எதோ "ஹேப்பி நியு இயர்" சொல்வது போல் கிராமத்திலிருந்த பெரியவர்களெல்லோரும் "கூடங்குளம் பிராஜெக்ட் வரப்போகுதுடே! எல்லா பயலுக்கும் வேலை கெடச்சுரும்" என்று ஆபத்தை அறியாமல் அப்பாவித்தனத்துடனும் முட்டாள்தனத்துடனும் சந்தோஷப்பட்டார்கள்.
தொடர்புடைய பதிவுகள்
கூடங்குளம் — சில கடிதங்கள்
கூடங்குளம் — கடிதங்கள்
கூடங்குளம் உண்ணாவிரதம்
கூடங்குளம் — இரு கடிதங்கள்
கூடங்குளம் — ஒரு கடிதம்
கூடங்குளம்
கூடங்குளமும் கலாமும்
நிலக்கரியும் அணுசக்தியும்-கடிதம்
அனலும் அணுவும்
கூடங்குளம் இரு கடிதங்கள்
கூடங்குளம்-கடிதம்
கூடங்குளம் அனுபவப்பதிவு
கூடங்குளம் செய்திகள்
ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை
கூடங்குளம் கடிதங்கள்
அணுமின்சாரமின்றி வேறு வழி இல்லையா?
கூடங்குளம்
சந்திரசேகரர்- ராம்குமாரின் கடிதம்
அன்பின் ஜெயமோகன் அவர்களே, உங்களது இணைய வழி எழுத்துக்களைத் தொடர்ந்து வாசிப்பவன் நான்.
அதனாலேயோ என்னவோ உங்களைப் பற்றி அதிகம் விமர்சனமும் எனக்குள் எழுகிறது. உங்களுடன் அதைப் பகிர்ந்து கொள்ள விரும்பியதால் இந்த மடல் இயற்றுகிறேன்.
ஹிந்துத்துவச் சார்புள்ள விஷயங்கள் பற்றி நீங்கள் எழுதும் போதும் ஞான மரபுகள் குறித்து நீங்கள் கருத்துக்கள் பரிமாறும் போதும் பலர் உச்சி குளிர்ந்து போகிறார்கள். ஹிந்துத்துவ சார்புடையவர் ஜெயமோகன் என்றும் இவராவது ஹிந்து தர்மத்தை திட்டாமல் இருக்கிறாரே என்று மகிழ்ந்து போகிறவர்கள் இருக்கிறார்கள். அதையே காரணமாகக் கொண்டு பார்ப்பன அடிவருடி என்றும் பார்ப்பனீத்தை வளர்ப்பவர் என்றும் உங்களை வசைபாடுபவர்களும் உண்டு.
ஆனால் இங்கே நான் கவலைப்படுவதெல்லாம் உங்களை ஹிந்துதர்மத்தின் சார்புடையவர் என நம்பி உங்கள் பின்னால் ஞானமரபு தேடுதல் மயக்கத்தில் உங்களை வாசிக்கும் அப்பாவி ஹிந்துக்களைப் பற்றித்தான். காரணம் ஹிந்து பாரம்பரியம் பேசி, ஹிந்து ஞானமரபு பேசி அறிவுத்தேடலும் ஞானத் தேடலும் உள்ள ஹிந்துக்களை எல்லாம் ஆட்டுமந்தை போல கூட்டமாக உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்கச் செய்து, பின்னர் அவர்களின் நம்பிக்கைகள் அல்லது அவர்கள் தனிப்பட்ட முறையில் நல்ல விஷயம் என்று நம்பும்ஹிந்து மத ஆன்மீக விஷயங்களை, உங்கள் அறிவு ஜீவித்தனத்தால் கொஞ்சம் கொஞ்சமாக அறுத்து, சுக்கு நூறாக்கி காலில் போட்டு மிதித்து அவர்களை தன் சொந்த தர்ம நம்பிக்கைகளின் மீதே சந்தேகம் கொள்ளச் செய்து இனி என்ன செய்வது, நம்பி வாழ்வதற்கு ஏதேனும் பொருள் வேண்டுமே என அவர்களை திகைத்துத் திக்கு முக்காடிப் போகச் செய்து விடுகிறீர்கள்.
இதற்கு சில முக்கிய உதாரணங்களாக, நீங்கள் ஹிந்துக்கள் அதிக மரியாதை கொண்டிருக்கும் ராமகிருஷ்ண மடத்தை 'சீழ்கட்டி' என்று கூறியதும், பலர் தங்கள் இஷ்ட தெய்வமாக வணங்கும் காஞ்சி மஹா பெரியவரைப் பற்றிய உங்கள் தரப்பான விமர்சனத்ததையும் சொல்வேன். இது உதாரணம் தான். இதைப் போல பலவற்றை அறிவு ஜீவித்தனம் என்று கூறி அடித்து நொறுக்குவதைப் பார்க்க முடிகிறது.
வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவு தமிழகத்தில் தான் ஹிந்து தர்மமும் ஆன்மீகமும், ஒரு பக்கம் நாத்திகர்களிடமும், மறுபக்கம் அறிவு ஜீவிகளிடமும் சிக்கிச் சின்னா பின்னமாகிக் கொண்டு இருக்கிறது. உங்களைப் போன்றவர்கள் ஹிந்துக்களை உள்ளே இருந்து அழிக்கும் சக்தியாகப் பார்க்கத் தோன்றுகிறது. ஏனெனில் மற்றவர்கள் பேச்சைக் கேட்பதை விட உங்களின் பேச்சே சரி என நம்புபவர்கள் நீங்கள் சொன்ன உடனே தங்கள் நம்பிக்கைகளைத் தூக்கி எரிந்து விடத் தயாராக இருக்கிறார்கள்.
மீண்டும் உதாரணம், http://www.jeyamohan.in/?p=26158 இந்தத் திரியில் மு பழனிச்சாமி என்பவரது சராசரி நம்பிக்கை உங்களால் தகர்க்கப்பட்டது. அது அவரது விருப்பம். ஆனால் இது போல ராமகிருஷ்ண மடத்தின் மீதிருந்த பலரது மரியாதையும் மதிப்பீடும் உங்களால் தகர்க்கப் பட்டிருக்கும். இன்னும் அது போல எத்தனை எத்தனை ஹிந்துக்களின் ஆணிவேரான மதிப்பீடுகளை நீங்கள் உங்கள் அறிவுஜீவித்தனத்தை வெளிப்படுத்துவதாக எண்ணித் தகர்க்கப் போகிறீர்கள்?
உங்களைப் போன்ற ஹிந்துசார்பு அறிவுஜீவிகளால் நடக்கப் போவது ஒன்றே ஒன்று தான்! நீங்கள் மதம் மாறாமல்எஞ்சி இருக்கும் கொஞ்ச நஞ்சம் மிச்சமிருக்கும் ஹிந்துக்களின் தங்கள் சொந்த மதத்தின் மீதான நம்பிக்கைகளையும் வேறருத்து அவர்களை நிர்மூலமாக நிர்கதியாக விட்டுவைக்கப் போகிறீர்கள். நம்புவதற்கு எந்தப் பொருளும் இல்லாமல் நிற்கும் அவர்களை சிலுவையைக் காட்டி பாதிரியார்கள் இழுத்துச் செல்லப் போகிறார்கள். அதற்கான பாதையை உள்ளிருந்தே உருவாக்கித் தரும் கழுத்தறுப்பு வேலையை நீங்கள் கச்சிதமாகச் செய்துகொண்டிருக்கிறீர்கள்.
ஆக நாத்திகவாதிகளும் அறிவுஜீவி ஹிந்துக்களும் சேர்ந்து ஹிந்துக்களை பிற மதங்களுக்குத் தள்ளத்தான் போகிறீர்கள் என்பது உறுதியாகிறது.
பிறரை நீங்கள் மதிப்பீடு செய்கிறீர்கள், உங்களைப் பற்றிய எனது மதிப்பீடு இதோ!
உயர்வானவர்கள் யாராக இருந்தாலும் நீங்கள் பரிவு காட்டினால் தான் அவரை உயர்ந்தவராகக் கருத முடியும். நீங்கள் புகழ்ந்துரைக்கும் பட்சத்தில் தான் அவரது மதிப்பீடு உறுதி செய்யப்படும். உங்கள் பரிவையோ, கருணையையோ, புகழுரையையோ பெறாதவர்கள் உயர்ந்தவராகக் கருதப்பட மாட்டார்கள். இந்த பிம்பம்த்தைத் தான் நீங்கள் உருவாக்க நினைக்கிறீர்கள்.
இது ஒரு எழுத்து அரசியல்.
தெரியாமல் தான் கேட்கிறேன் நீங்கள் யார் பிறரை மதிப்பீடு செய்து கொண்டே இருக்க?? உங்களது மதிப்பீடுகள் தான் உங்களால் விமர்சிக்கப்படும் நபர்களின் மதிப்பிற்கு அளவுகோலா?
நான் மகாசுவாமிகள் பற்றி எழுதியதை வைத்து மட்டும் இந்தக் கருத்தைச் சொல்லவில்லை. காரணம் எனக்கும் உங்களை ரொம்பப் பிடிக்கும். உங்களது பல கட்டுரைகளை மீண்டும் மீண்டும் படித்து லயித்திருக்கிறேன். பிறருக்குப் படிக்க சிபாரிசு செய்திருக்கிறேன். ஆனால் உங்களது நம்பவைத்துக் கழுத்தறுக்கும் மித்ர த்ரோக முறையிலான விமர்சனங்களும், மதிப்பீடுகளும் பிறரை கீழாக மதிப்பீடு செய்து உங்களை, அவர்களை விட உயர்ந்தவன் என்கிற நிலைக்கு படிப்பவர்களை நினைக்கச் செய்துவிடும் எழுத்துக்களும், உங்களை 'கழுத்தறுப்பவர்' என்றே எண்ணத்தோன்றுகிறது. அதைத்தான் இங்கே பதிவு செய்கிறேன்.
பொதுவாக நீங்கள் பிறரால் உயர்வாக மதிக்கப்படுபவற்றையும், உயர்வாக மதிக்கப்படும் நபர்களையும், நம்பப்படும் விஷயத்தையும், எப்பொழுதும் கீழாக விமர்சித்து மிதித்து தன்னை விட அவைகள் அல்லது 'அவர்கள்' பற்றிய மதிப்பீடுகள் கீழானவையே என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள் அல்லது அதற்கு முயல்கிறீர்கள்.
எம் எஸ் சுப்புலக்ஷ்மி முதல், ஆன்மீக குருக்கள், மக்கள் தலைவர்கள் எனப் பலரை நீங்கள் விமர்சிக்கிறீர்கள். போட்டு மிதிக்கிறீர்கள். மதிப்பீடு செய்கிறீர்கள். அந்த மதிப்பீடுகள் தான் சரி என வாதிடவும் செய்கிறீர்கள். அதனை ஏற்காதவர்களை அதற்கும் கீழாக காலில் போட்டு மிதித்து வசைபாடுகிறீர்கள். உனக்கென்ன தெரியும் என்று எக்காளமிடுகிறீர்கள். இது உங்களது பாணியாகவே போய்விட்டது. ( நானறிந்தவரைப் பெரும்பாலும் இறந்தவர்களைப் பற்றியே நீர் விமர்சிக்கிறீர்!).
ஒரே நபரை புகழ்வதும், அவரையே வேறொரு இடத்தில் இகழ்வதும் செய்து அற்புதமாக அரசியல் செய்கிறீர். 'நீங்கள் திட்டுகிறீர்கள்' என்று கோபித்தால் நான் புகழ்ந்தேனே என்பீர்கள். 'நீங்கள் புகழ்கிறாரீர்களே?' என்று விமர்சித்தால் 'நான் திட்டினேனே' என்பீர்கள். பெரியவர் கருணாநிதிக்கும் உங்களுக்கும் இந்த வகை அரசியலில் பெரிய வித்யாசமில்லை.
நாளைக்கே, ஹிந்துக்கள் பெரிதும் மதிக்கும் ராமகிருஷ்ண மடத்தை அவமதிக்கும் விதமாக அதனை 'சீழ்கட்டி' என்று ஏசினாயே!' என்று கேட்டால்! 'நான் அதே மடத்தை எப்படிப் புகழ்ந்திருக்கிறேன் தெரியுமா?' என்பீர்கள்.
மீண்டும் சொல்கிறேன், பிறரை கீழாக விமர்சிப்பது மூலமாக தன்னை அந்த இடத்தில் நிறுத்திக் கொண்டுவிட்டதாக நீங்கள் நினைக்கிறீர்கள். உங்களால் விமர்சிக்கப்படுபவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதை விட அவர்களை விமர்சிப்பதால் நீங்கள் உயர்ந்து நிற்பதாக உணர்கிறீர்கள். அல்லது அப்படி உணர முயற்சிக்கிறீர்கள்.
சுஜாதாவை விமர்சித்து அவர் 'ஒன்றுமில்லை' என்று அவர் மீது இருக்கும் உயர் மதிப்பை போட்டுடைத்து அந்த இடத்தைத் தனதாக்கிக் கொள்ள முயல்கிறீர்கள். இப்படி பிறரை கீழாக மதிப்பீடு செய்து தன்னை அவர்களை விட உயர்ந்தவன் என்கிற நிலைக்கு படிப்பவர்களை நினைக்கச் செய்துவிடும் அரசியல் செய்கிறீர்கள். உங்களைப் படிப்பவர்கள் மனதில், அவர்கள் உயர்வாக நினைத்திருப்பவரை விட, நீங்கள் எவ்வளவு உயர்ந்தவன் என்று காட்டிக்கொள்ள உதவும் உத்தி!
அது சுயநலமானது. தேவையற்றது.
இப்படியே தன்னை உயர்வானவராக அறிவு ஜீவியாகக் காட்டிக்கொள்ள ஹிந்து மதத்தை அதன் நம்பிக்கை சார்ந்த மதிப்பீடுகளை, விஷயங்களை ஒவ்வொன்றாகப் பொறுமையாக நசுக்கி உடைத்து காலில் போட்டு மிதித்து அவற்றை ஒன்றுமில்லாமல் செய்கிறீர்கள்.
உங்களைப் போன்ற அறிவு ஜீவி ஹிந்துக்களால் நடக்கப் போவது இதுதான்!
நாத்திக வாதிகள் + அறிவு ஜீவி ஹிந்துக்கள் – ஹிந்துக்கள் = ஹிந்துமத அழிப்பு!
அன்புடன் உங்களை மிகவும் நேசிக்கும்
ராம் குமார்
www.hayyram.blogspot.com
[image error]
அன்புள்ள ராம்குமார்,
உங்கள் கோபம் புரிகிறது.
இந்த தளத்தில் நீங்கள் எதிர்வினையாற்றியது பெரும்பாலும் பிராமணசாதி விமர்சிக்கபடுகிறது என்ற எண்ணம் உங்களுக்கு உருவாகும்போது மட்டுமே. பரவாயில்லை, அது உங்களுடைய சுயம்.
ஒருவர் தன்னை இந்து மதத்தின் தலைவர் என முன்வைத்துக்கொண்டு இந்துக்களில் ஆறில் ஒருபங்கு மக்களை மனிதருக்குரிய மதிப்பு ஏதும் இல்லாமல் மிருகங்களாக வாழவேண்டும், அதுவே மரபு என வாதிடுகிறார். அது இந்துமதத்தை காப்பது என்றும், அவர் அப்படிச் சொன்னது மனிதாபிமானமல்ல என்று சொல்வது இந்துமதத்தை அழிப்பது என்றும் நீங்கள் நினைக்கிறீர்கள்
இந்துமதம் என்பது பிராமணர்கள் மட்டும் அல்ல . உங்கள் மகாப்பெரியவாளால் இழிசினராக நினைக்கப்பட்டு ஒதுக்கிவைக்க பரிந்துரைக்கப்பட்ட கோடானுகோடி இந்துக்களுக்கும் மனமும் உணர்வுகளும் உண்டு- இவ்விரு விஷயங்களையும் உங்கள் மனதை போர்த்தியிருக்கும் திரையைத்தாண்டி என்னால் உணர்த்திவிட முடியாது.
சிலருக்கு உணர்த்த முடியும் என நினைக்கிறேன். விமர்சனங்கள் எல்லாம் அதற்காகவே. நான் மதபிரச்சாரகன் அல்ல. எழுத்தாளன். ஆகவே அடிப்படை மனிதாபிமானம் உடையவர்கள் மட்டும் என்னை வாசித்தால் போதும்.
உங்களைப்போன்ற ஒருவரின் நிராகரிப்பு எனக்கு கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம். நன்றி
நன்றி
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
விரல் மொழியாக்கம்
ஜெ,
நான் உங்களின் வாசகன் சிவக்குமார், ஷாஜி அவர்களின் நூல் வெளியீடு விழாவில் உங்களிடம் நேரில் பேசியிருக்கிறேன். உங்களின் அனுமதியுடன் உங்களின் சில சிறுகதைகளை ஆங்கிலத்தில் ஏற்கனவே மொழிபெயர்த்துள்ளேன். ஒரு வாரத்திற்கு முன்னால்தான், உங்களின் மற்றுமொரு சிறுகதையான விரல் என்ற சிறுகதையை ஆங்கிலத்தில் மொழியெர்த்து இந்த தளத்தில் பதிவிட்டிருக்கின்றேன். http://rendering-endeavors.blogspot.in/2012/02/finger.html நீங்கள் வாசித்தீர்களானால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.
சிவகுமார்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
