Jeyamohan's Blog, page 2244

March 26, 2012

சந்திரசேகரரும் ஈவேராவும்

அன்புள்ள ஜெ,


நீங்கள் ஈவேரா பற்றி எழுதியிருந்த கட்டுரையை வாசித்தேன். என்னுடைய நெடுநாள் ஆதங்கம் இது. நீங்கள் பெரியாரை அவரது குறைகளுடன் சமநிலைப்பார்வையில் பார்க்கிறீர்கள். அதே சலுகையை ஏன் பெரியாருக்கு அளிக்கமாட்டேன் என்கிறீர்கள்? ஏன் பெரியாரை மட்டும் எப்போதும் எதிர்ர்த்தே எழுதுகிறீர்கள்? இதை விளக்கமுடியுமா?


செம்மணி அருணாச்சலம்


[image error]


அன்புள்ள செம்மணி அருணாச்சலம்,


நீங்கள் தொடர்ந்து என் கருத்துக்களை வாசிப்பவர், நாம் ஓர் உரையாடலில் இருக்கிறோம். ஈவேரா பற்றி நான் எழுதியவற்றை வாசியுங்கள். நான் எங்காவது ஈவேரா அவர்களை பற்றி அவமதிப்பாக எதையாவது சொல்லியிருக்கிறேனா? எங்காவது அவரது வரலாற்றுப்பாத்திரத்தை அல்லது அவர் தமிழ்ச்சமூகத்துக்கு அளித்த சேவையைக் குறைத்து மதிப்பிட்டிருக்கிறேனா? நான் ஒரு முறைகூட அவரைப்பற்றிய மதிப்பையும் அவரது பங்களிப்பையும் பற்றிய ஒரு குறிப்பு இல்லாமல் அவரை விமரிசித்ததில்லை.


ஆனாலும் விமர்சனங்களே அதிகம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதற்கான காரணத்தை நம்முடைய பெரியாரியர்களிடம்தான் நீங்கள் பார்க்கவேண்டும். ஸ்மார்த்த பிராமனர்கள் எப்படி சந்திரசேகர சரஸ்வதி அவர்களை முனிவர் என்றும் ஞானி என்றும் மனித தெய்வம் என்றும் அற்புதங்கள் நிகழ்த்தியவர் என்றும் சொல்கிறார்களோ அதே மனநிலைதான் பெரியாரியர்களிடமும் உள்ளது. அவர்கள் ஈவேரா அவர்களை தமிழகத்தின் தலைசிறந்த சிந்தனையாளர் என்றும் தமிழக வரலாற்றின் தலைசிறந்த சீர்திருத்தவாதி என்றும் தமிழக முற்போக்கு அரசியலின் முன்னோடி என்றும் சொல்கிறார்கள்.


சந்திரசேகர சரஸ்வதி அவர்களை ஞானி அல்லது மகான் என்று ஒருவர் சொல்வது அவரது சொந்தச் சாதிப்பிடிப்பினால். அதற்குமேல் அந்தக் கூற்றுக்கு மதிப்பேதும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் உண்மையான தீவிரத்துடன் சந்திரசேகர சரஸ்வதி பிராமணர்களின் ஆசாரங்களை வலியுறுத்தியதனால் அந்தக் கட்டுப்பாடுகளை ஏற்கமுடியாத, அதேசமயம் வைதிகர் என்ற இடத்தையும் விரும்பக்கூடிய லௌகீக பிராமணர்களால் ஒரு போர்த்தந்திரமாகவே சந்திரசேகர சரஸ்வதி ஒரு ஞானி என்னும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்.


வைதிகரல்லாத ஒருவர் உண்மையிலேயே அப்படிச் சொன்னாரென்றால் ராமகிருஷ்ணர், ரமணர், வள்ளலார், நாராயணகுரு போன்றவர்களிடமிருக்கும் அனுபூநிநிலையை சுட்டிக்காட்டி அந்த கடந்த நிலை ஒருபோதும் ஆசாரவாதிகளுக்குக் கைகூடுவதில்லை, அவர்களால் அதைப் புரிந்துகொள்ளவும் முடியாது என்பேன். அவர்களின் நூல்களையும் தனிவாழ்க்கையையும் சுட்டிக்காட்டுவேன்.


ஆனால் பெரியாரியர்கள் ஈவேரா அவர்களைத் தமிழகத்தின் தலைசிறந்த சிந்தனையாளர் என்று சொல்வது மட்டுமல்ல அதை ஒரு அதி உக்கிரமான பிரச்சரமாகவே சொல்லி சூழலில் நிலைநாட்டி வருகிறார்கள். அவர் இல்லாவிட்டால் தமிழகத்தின் பெரும்பாலான மக்கள் மாடுதான் மேய்த்துக்கொண்டிருப்பார்கள் என்ற ஒற்றைவரியை எந்த வரலாற்றுப்பிரக்ஞையும் இல்லாமல் சொல்லி நிறுத்தி வருகிறார்கள். அதன் விளைவாக தமிழகத்தின் தலித் அரசியல் முன்னோடிகளை,தொழிற்சங்க முன்னோடிகளை,சீர்திருத்த முன்னோடிகளை இருட்டில் தள்ளுகிறார்கள்.


இந்நிலையில் ஈவேரா அவர்களின் உண்மையான மதிப்பைச் சொல்லியாகவேண்டியிருக்கிறது. ஈவேரா அவர்கள் தமிழ்ப்பண்பாட்டின் மிகமுக்கியமான சமூக சீர்திருத்தவாதி என்பதில் ஐயமில்லை. தமிழ்ச்சமூகத்தின் சிந்தனை வளர்ச்சியில் அவருடைய பங்கு மறுக்கமுடியாதது. ஆனால் அவரை அசல்சிந்தனையாளர் என்று சொல்வது சிந்தனை என்றால் என்ன என்றே தெரியாத நிலைக்கே கொண்டுசெல்லும். அவருடைய பேச்சும் எழுத்தும் சிந்தனையாளனுக்குரியதல்ல.


ஈவேரா அவர்களின் அணுகுமுறை எல்லாவற்றையும் செவிவழியாக பொதுவாகப் புரிந்துகொள்ளும் கிராமிய அணுகுமுறையாகவே இருந்தது. அவர் மிகச்சிக்கலான இந்தியப்பண்பாட்டுப் பின்னலை, மதச்சிந்தனைகளை, இந்தியவரலாற்றின் நெடுங்காலப்பரிணாமத்தை அறிய எந்த முயற்சியும் எடுத்துக்கொள்ளவில்லை. மிகப்பொத்தாம்பொதுவாக முரட்டுத்தனமாக அதை அணுகி அதன்மூலம் பெற்ற முடிவுகளை ஓங்கிச் சொன்னார்.



ஈவேரா அவர்களுக்கு முன்னாலும் அவரது சமகாலத்திலும் இந்தியச் சமூகத்தின் பண்பாட்டையும் வரலாற்றையும் நுட்பமாகவும் விரிவாகவும் ஆராய்ந்த சிந்தனையாளர்கள் பலர் உண்டு. அவர்களை நோக்கிச் செல்லத் தடையாக இருப்பது ஈவேரா அவர்களைப்பற்றி உருவாக்கப்படும் இந்த மிகை மதிப்பீடுதான்.


ஈவேரா அவர்களின் கருத்துவெளிப்பாட்டுமுறை என்பது கருத்துப்பூசல் சார்ந்தது. சொல்லப்போனால் 'கன்னாபின்னாவென்று ' வசைபாடுவது அது. அது நம்முடைய கிராமத்துப் பெரியவர்களிடம் உள்ளது. வசைபாடுவது என்பதே ஒரு சாதாரணத் தமிழ் மனநிலை. எங்காவது எவரையாவது யாராவது ஒருவர் வசைபாடுவதை நாம் தமிழகத்தில் கேட்டுக்கொண்டே இருக்கலாம். இந்த காரணத்தால்தான் ஈவேரா அதிகமாக ரசிக்கப்பட்டார், படுகிறார். ஆனால் அது சிந்தனையாளனின் வழி அல்ல. இக்காரணத்தால்தான் அவரை அவர் காலத்துச் சிந்தனையாளர்கள் எவரும் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. ஏனென்றால் அவரிடம் ஒரு விவாதமே சாத்தியமல்ல.


ஈவேரா அவர்களின் இந்த பொத்தாம்பொது பார்வையும் முரட்டு வெளிப்பாடும் தமிழில் ஆழமாக வேரூன்றிவிட்டது. ஏனென்றால் இது பின்பற்ற எளிதானது. எந்த அறிவார்ந்த உழைப்பையும் கோராதது. அதேசமயம் சிந்தனையாளராக செயல்படுகிறோம் என்ற நிறைவையும் அளிப்பது.ஒருவர் அம்பேத்கரையோ இ.எம்.எஸ்ஸையோ பின்பற்றினால் எதை எதிர்க்கிறோமோ அதையே ஆழமாகக் கற்கவேண்டும் என்ற கட்டாயத்தை அடைவார். ஈவேரா அவர்களைப் பின்பற்றினால் தீவிரமாக வசைபாடினால் மட்டும் போதும். தமிழகத்தில் தலித்தியரும் மார்க்ஸியரும்கூட ஈவேராவின் அணுகுமுறையைப் பின்பற்றுகிறார்கள் என்பதற்கான காரணம் இதுவே.


ஆகவேதான் ஈவேரா அவர்களை விமர்சித்தாகவேண்டியிருக்கிறது. அவரது வழிமுறைகள் ஒரு சிந்திக்கும் சமூகத்துக்கு உரியன அல்ல என்று சொல்ல வேண்டியிருக்கிறது. அவருடைய பங்களிப்பை ஏற்றபடியே அதைச் சொல்லியாகவேண்டும். சொல்லப்போனால் ஈவேரா அவர்களிடம் எனக்கிருக்கும் ஒரே விமர்சனம் இது மட்டும்தான். இதையே எப்போதும் சொல்லிவருகிறேன்.


ஈவேரா அவர்களின் வைதிக எதிர்ப்பு எனக்கு ஏற்புடைய கருத்துதான் என்பதை என் எழுத்துக்களைப் பார்க்கும் எவரும் அறிந்துகொள்ளலாம். இந்திய ஞானமரபுக்குள் உள்ள அவைதிகப்போக்குகளை அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து நான் பல்லாண்டுக்காலமாக எழுதி வருகிறேன். ஈவேரா அவர்களின் சமூக சீர்திருத்தக் கருத்துக்களில் அனேகமாக அனைத்திலுமே எனக்கு உடன்பாடுதான் உள்ளது. நேர்மாறாக சந்திரசேகர சரஸ்வதி அவர்களின் சமூகக் கருத்துக்களில் எவற்றுடனும் உடன்பாடு இல்லை.


ஆனால் நான் ஈவேரா அவர்களை விமர்சிப்பது அவர் சிந்தனையாளராக எனக்கு எதையுமே அளிக்கவில்லை என்பதைக்கொண்டுதான். கிட்டத்தட்ட அவரது அதே தரப்பை எடுத்த அம்பேத்கரின் ஒவ்வொரு பக்கமும் என்னை வளரச்செய்கிறது. இ.எம்.எஸ்ஸும் கெ.தாமோதரனும் தேவிபிரசாத் சட்டோபாத்யாயவும் ராகுல்ஜியும் எனக்குக் கற்பிக்கிறார்கள். இந்த வேறுபாட்டை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். என் விமர்சனம் அதற்காகவே.


ஈவேரா அவர்களின் தனியாளுமை பற்றி எனக்குப் பெருமதிப்பு உண்டு. அவரது செயல்பாடுகளில் காந்தியவாதிகளுக்கு நிகரான அர்ப்பணிப்பு எப்போதும் இருந்துள்ளது. நான் எப்போதும் அவரை காந்தி அல்லாத இன்னொருவரிடம் ஒப்பிட்டதில்லை. ஈவேரா அவர்களை என்னுடைய குருமரபு தங்கள் குருநாதர்களில் ஒருவராகவே எண்ணி வந்திருக்கிறார்கள். நித்ய சைதன்ய யதி துறவு பூண முடிவெடுத்தபோது நடராஜகுருவின் ஆணைப்படி நேரில்சென்று ஈ.வே.ரா அவர்களிடம் விபூதி வாங்கி ஆசி பெற்றார் என்பதை நான் பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன். நான் ஈவேரா அவர்களை வைத்திருப்பதும் அந்த இடத்தில்தான்.


ஏற்கனவே நான் சொல்லியதுதான் இது. இன்று நான் ஈவேராவைச் சந்தித்தால் என் ஆசிரியரின் ஆசிரியராக அவரை எண்ணி முதலில் காலில் விழுந்து வணங்கி ஆசிபெறுவேன். அதன்பின்னர் அவரிடம் அவரைப்பற்றிக் கடுமையாக விமர்சனம் செய்து பேசுவேன். அவரைப்பற்றி நான் அறிந்தவரையில் அவர் என்னை முழுமனதுடன் ஆசியளிக்கவும் நான் சொல்லும் எல்லா விமர்சனங்களையும் கேட்கவும் கொஞ்சமும் தயங்கமாட்டார்.


பெரியாரியர்கள் ஈவேரா அவர்களை நிலைநாட்டும் அரசியல் நோக்குடன் உருவாக்கும் மிகைகளையும் வரலாற்றுத்திரிபுகளையும்தான் நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். வைக்கம்போராட்டம் ஓர் உதாரணம். இந்தத் திரிபுகள் மூலம் அவர்கள் உண்மையான போராளிகள் பலரை மறைக்கிறார்கள் என்பதே என்னுடைய விமர்சனம். பக்தர்களால் வரலாறு திரிபு செய்யப்படுவதென்பது இங்கே சாதாரணம். சந்திரசேகர சரஸ்வதி அவர்களுக்கும் காந்திக்குமான சந்திப்பின் வரலாறு திரிக்கப்பட்டது போல. இரண்டையுமே மறுத்து நானறிந்த உண்மையைச் சொல்கிறேன்.


சந்திசேகர சரஸ்வதி அவர்கள் ஒரு மடத்தாலும் அதைச்சேர்ந்தவர்களாலும் ஊடகத்தில் நிலைநிறுத்தப்படுகிறார். ஆனால் ஈவேரா அவர்களுக்கு ஐம்பதாண்டுக்கும் மேலாக பிரம்மாண்டமான அரசு ஆதரவு உள்ளது. சந்திரசேகர சரஸ்வதி அவர்களைத் தமிழில் எவரும் விமர்சிக்கலாம். பெரியாரியர்கள் ஈவேரா அவர்களை விமர்சனத்துக்கே அப்பாற்பட்டவராக நினைக்கிறார்கள். ஈவேரா அவர்களின் பெயரைச் சொல்வதே அவமதிப்பு என்னும் கெடுபிடிநிலையை உருவாக்குகிறார்கள். அமனநிலையில்தான் ஈவேரா பற்றி நான் சொல்லும் சாதாரணமான விமர்சனங்களும் வரலாற்றுத்தகவல்களும் எல்லாம் பெரும் தாக்குதல்களாகக் கொள்ளப்படுகின்றன.


நடுநிலையாளர்கள் சிலர் தவிர எவரும் என்னுடைய தரப்பைப் புரிந்துகொள்ளப்போவதில்லை என நான் அறிவேன். சந்திரசேகர சரஸ்வதி பற்றிய கட்டுரையை ஆசார பிராமணர்கள் அவர்களின் 'மகாப்பெரியவா' பற்றிய கடும் விமர்சனமாகவே பார்ப்பார்கள். பெரியாரியர்களுக்கு அது 'சங்கராச்சாரி'யைப் பாராட்டும் கட்டுரையாகத் தெரியும். என்னுடைய ஈவேரா விமர்சனங்கள் அவரைப் புகழ்ந்து எழுதப்பட்டவை என ஆசாரபிராமணர்கள் நினைக்கிறார்கள். பெரியாரியர்கள் அவற்றை வசைபாடல்களாக எண்ணுகிறார்கள்


இரண்டுநாட்களுக்கு முன்னால் ஒருவர் ஈவேரா அவர்கள் மணியம்மையை மணந்துகொண்டதைப்பற்றிக் கடுமையான விமர்சனம் முன்வைத்து அதனடிப்படையில் ஈவேரா அவர்களை மதிப்பிட்டார். நான் சொன்னேன் 'உங்களுக்கு ஒரு சுயநலமில்லாத உக்கிரமான சீர்திருத்தவாதி ஒருவர் தேவை என்றால் நீங்கள் அவரது மிகைநடத்தைகளையும் சேர்த்துத்தான் வாங்க வேண்டும்' அவர் உடனே என்னை ஒரு பெரியாரியர் என வசைபாட ஆரம்பித்தார். கொஞ்ச நேரத்தில் எனக்கே சந்தேகமாகிவிட்டது, நான் யார் என்று. இதை எழுதி அதை நானே தெளிவுபடுத்திக்கொள்கிறேன்.


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

சந்திரசேகர சரஸ்வதி
அயோத்திதாசர் என்னும் முதற்சிந்தனையாளர்-1
ஈவேரா: கடிதம்
பெரியார்-அறிவழகன் கடிதம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 26, 2012 11:30

நான் கண்ட விஷ்ணுபுரம்


விஷ்ணுபுரத்தை முதல் முறை படிக்கும்பொழுது முதல் ஐம்பது பக்கங்கள் கடினமாக இருந்தது. மொழியும், நடையும் பழகிய பின் திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல் விஷ்ணுபுரத்தில் தொலைந்து போய்விட்டேன்.


சிலிகான் ஷெல்ப் இணையதளத்தில் விஷ்ணுபுரம் பற்றி ஒரு விமர்சனத்தொடர்


தொடர்புடைய பதிவுகள்

விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம்
மேலான உண்மை — சீனு கடிதம்
அறிதலுக்கு வெளியே-சீனு
விஷ்ணுபுரம்- விமர்சனம்
விஷ்ணுபுரம் விருது விழா 2011 -டிச 18-கோவையில்
பரிணாமவாதமும் இந்திய மதங்களும்
கடிதங்கள்
கதைகளின் வழி
சிற்பச்செய்திகள்
அறிதல்-அறிதலுக்கு அப்பால்
தீராநதி நேர்காணல்- 2006
கடிதங்கள்.
கடிதங்கள்
இரு கடிதங்கள்
கடிதங்கள்
இன்செப்ஷன், நனவுணர்வில் கண்ட கனவு
வைணவத்தின் மூன்றுநிலை கோட்பாடு
படைப்புடன் அடையாளப்படுத்திக்கொள்ளுதல்
விஷ்ணுபுரம்,விவாதம்
மதிப்புரைக்கு ஓர் இணையதளம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 26, 2012 11:30

கூடங்குளம் உண்ணாவிரதம்

சுப.உதயகுமார் பதினைந்தாண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டுக்குத் திரும்பி வந்த புதிதில் வீட்டுக்கு வந்து என்னை அறிமுகம் செய்துகொண்ட நண்பர். அன்று முதல் அவரது நட்பு அவ்வப்போதான சந்திப்புகள் வழியாக நீடிக்கவே செய்கிறது. கூடங்குளத்தில் அவர் இருந்துவரும் உண்ணாவிரதம் இப்போது எட்டாவது நாளாக நீடிக்கிறது. அவரை எனக்குத்தெரியும். அவர் அதை சமரசமில்லாத தீவிரத்துடன் மட்டுமே செய்வார். அது மனம் கலங்கச்செய்கிறது.


[image error]


ஒரு அரசியல் தொண்டரின் உண்ணாவிரதம் சகமனித மனங்களைத் தொடும் ஆற்றலை இழந்துவிட்டதா என்னும் ஐயம் அண்ணா அசாரே உண்ணாவிரதத்தைக் கிண்டல் செய்தவர்களின் இணைய பிதற்றல்களை வாசித்தபோதே ஏற்பட்டது. மேலும் அது வலுப்பெறுகிறது. எதையும் அரட்டைக்கொண்டாட்டமாக ஆக்கிக்கொண்டிருக்கும் தலைமுறைக்கு முன்னால் உதயகுமார் உயிரை முன்வைக்கிறாரா?


இந்தநிமிடம் வரை நம்முடைய முக்கியமான அதிகார பீடங்கள் எவையும் அவரை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. இதுவரை அவரைநோக்கி ஒப்புக்குக்கூட ஒரு சமாதானக்குரல் வரவில்லை. மிரட்டல்களும் அவதூறுகளும் மட்டுமே வந்துகொண்டிருக்கின்றன. ஒரு தனி குடிமகனின் உயிருக்குக்கூட ஆட்சியாளர்களே பொறுப்பு என நினைக்கப்பட்ட காலம் போய்விட்டதுபோல.


இந்தச் சூழலில் உதயகுமார் இருக்கும் உண்ணாவிரதம் பொருளிழந்து போகிறது. காந்தியப் போராட்டம் என்பது மனித ஆன்மாக்களுடன் பேசமுனையும் போராட்டம். உயிர்துறப்பதன் மூலம் ஆகப்போவது ஒன்றும் இல்லை.


இன்னும் வலுவாக சமான மனங்களைத் திரட்டிக்கொண்டு, இன்னும் பிரச்சார ஆற்றலை தொகுத்துக்கொண்டு இன்னும் வலுவாக இந்தப் போராட்டத்தை மீட்டெடுக்கலாம். எள்ளி நகையாடும் ஆன்மாவற்ற கும்பலுக்கு முன்னால் அவர் கிடக்கும் அந்தக்கோலம் நெஞ்சைக் கனக்கச்செய்கிறது.


தொடர்புடைய பதிவுகள்

கூடங்குளம் அனுபவப்பதிவு
கூடங்குளம் — இரு கடிதங்கள்
கூடங்குளம் — ஒரு கடிதம்
கூடங்குளம்
கூடங்குளமும் கலாமும்
நிலக்கரியும் அணுசக்தியும்-கடிதம்
அனலும் அணுவும்
கூடங்குளம் இரு கடிதங்கள்
கூடங்குளம்-கடிதம்
கூடங்குளம் செய்திகள்
ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை
கூடங்குளம் கடிதங்கள்
அணுமின்சாரமின்றி வேறு வழி இல்லையா?
கூடங்குளம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 26, 2012 03:20

March 25, 2012

சந்திரசேகர சரஸ்வதி

அன்புள்ள ஜெ.எம்


நான் நீண்டநாட்களாக தமிழ் வார இதழ்களை வாசிப்பவன். எனுடைய குடும்பத்திலும் கல்கி , விகடன் போன்ற இதழ்களை சின்னவயசு முதலே வாசிப்போம். அந்த இதழ்கள் வழியாக எனக்கெல்லாம் காஞ்சி சங்கராச்சாரியார் மீது பெரிய மரியாதை ஏற்பட்டது. காந்திக்கும் சந்திரசேகரருக்கும் நடந்த சந்திப்பை பற்றிய உங்களுடைய கட்டுரையை வாசித்ததும் என்னுடைய நம்பிக்கையிலே அடி விழுந்தது. எனக்கு பெரிய மனச்சோர்வு. நீங்கள் சொல்வது உண்மை. தீண்டாமையை கடைப்பிடித்த ஒருவரை எப்படி மகான் என்று சொல்லமுடியும் ? இந்த உண்மைகளை நாம் அறியாமலே விட்டுவிட்டோமே என்று வருந்தினேன். காஞ்சி சங்கராச்சாரியார் நிறைய அருட்பணிகளை செய்திருக்கிறார் என்கிறார்களே. எனக்கு அதில் நம்பிக்கை வரவில்லை. என்னுடைய மதிப்பை நான் இழந்துவிட்டேன். ஆனால் அதற்கு உங்களுக்கு நான் நன்றி சொல்லவேண்டும்


மு.பழனிச்சாமி



அன்புள்ள பழனிச்சாமி,


நான் எந்த ஒரு விஷயத்திலும் கருத்துக்களை கூடுமானவரை சமநிலையுடன் சொல்லவே முயல்கிறேன். ஒவ்வொன்றும் அதற்கான முரண்பட்ட நியாயங்களுடன் இயங்குகின்றன என்பதே என்னுடைய தரப்பு. இதைத்தான் நான் கருத்துக்களின் முரணியக்கம் என்கிறேன். என்னிடம் எப்போதுமே 'ரெண்டிலே ஒண்ணைச்சொல்லு' என்கிறார்கள். 'சரி நீ எந்தப்பக்கம் ,அதைச்சொல்லு' என்கிறார்கள். பலசமயம் 'சொல்ல மாட்டேன் போ' என்கிறேன். உடனே ' அப்ப நீ என்ன சொன்னாலும் நீ சொல்வது இதுதான்…நீ இன்னார்தான்' என்கிறார்கள். இந்த வம்பிலேயே என் சொற்கள் நீண்டு நீண்டு செல்கின்றன


என்னைப்பொறுத்தவரை காஞ்சி பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி அவர்கள் எந்த வகையிலும் வெறுக்கப்படவேண்டியவர் அல்ல. அவர் மீது எனக்கு மதிப்புண்டு. அதை எழுதியும் இருக்கிறேன். உடனே அவரது ஆசாரவாதம் எனக்கு ஏற்புள்ளதா என்று கேட்பீர்கள். இல்லை நான் அதை எதிர்க்கிறேன். எவ்வகையிலும் ஏற்க மாட்டேன். ஆனால் அவரது ஒட்டுமொத்த ஆளுமையின் பகுதியாகவே அதை நான் பார்க்கிறேன். அவரை ஒட்டுமொத்தமாக மதிப்பிடும்போது அதையும் நான் கருத்தில்கொள்வேன்


சந்திரசேகர சரஸ்வதி அவர்களை பலவகையில் காந்தியுடன் ஒப்பிடலாம். அவர்கள் கண்ணாடிப்பிம்பம் போல எதிரெதிர் நிலைகளில் சமானமானவர்கள். அவரும் காந்தியைப்போல அப்பட்டமானவர். அவரும் காந்தியைப்போலவே சுயநலமற்ற கர்மயோகி. அவருக்கான களம் எதுவோ அதில் ஒவ்வொரு கணமும் முற்றிலும் முழுமையுடன் வாழ்ந்து மறைந்தார். அவர் நம்பிய எதிலும் சமர்சம் செய்துகொள்ளவில்லை. அந்தக் களத்தில் உள்ள குறைபாடுகளுக்கும் பிழைகளுக்கும் அப்பால் அந்த வாழ்க்கையின் முழுமையை நாம் கருத்தில்கொண்டே ஆகவேண்டும்.


இந்தியாவின் நவீனகாலகட்டத்தில் பெரும்பாலும் அனைவருமே கருத்துக்களை நாசூக்காகச் சொல்லவும், சங்கடகரமான சொந்தக்கருத்துக்களை அந்தரங்கமாக வைத்துக்கொள்ளவும் பழகிக்கொண்டார்கள். அதுவே பொருத்தமான நடத்தை என நம்மால் இன்று ஏற்றுக்கொள்ளவும் பட்டிருக்கிறது. நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொருவரும் சாதி, ஆசாரங்கள் பற்றி உள்ளூர என்ன கருத்து கொண்டிருக்கிறார்கள் என நாம் ஊகிக்கவே முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக நெருங்க நெருங்க அது தெரியவரும்.


அப்படி நெருங்கி அறியும்போது காணக்கிடைக்கும் சித்திரம் எப்போதுமே அதிர்ச்சி அளிப்பது. மிகப்பெரும்பாலானவர்களுக்கு சாதி பற்றி மிகப்பழைமையான எண்ணங்களே உள்ளன என காண்போம். அவை அவர்களின் பெற்றோர்களால் அளிக்கப்பட்டவையாக இருக்கும். அந்த நம்பிக்கைகளை வெளியே கொண்டுவந்து ஒரு விவாதத்துக்கு தயாராகவோ, மறுபரிசீலனை செய்யவோ அவர்கள் தயாராக இருப்பதில்லை. அந்த நம்பிக்கை உள்ளூர காற்றுப்படாமல் புழுங்கி நொதித்து நாறிக்கொண்டிருக்கும்.


நாம் அறிந்த பல சீர்திருத்தச் செம்மல்கள், முற்போக்குத்தோழர்கள், பகுத்தறிவுப் பகலவன்களின் அந்தரங்கம் சந்திரசேகரர் சொன்ன தரப்பில் இருந்து அதிகம் மாறுபட்டது அல்ல. இரண்டாவது 'லார்ஜு'க்குப்பின்னர் பலர் தலித்துக்களைப்பற்றிப் பேச ஆரம்பிக்கும்போது புறங்கழுத்தில் படார் படாரென அடிவிழும் உணர்வை நான் அடைந்திருக்கிறேன். நம் சூழலில் சந்திரசேகர சரஸ்வதி சொல்லிய கருத்துக்கு அத்தனை தூரம் எதிர்கருத்து இருந்திருந்தால் என் தலித் நண்பர்கள் அவர்கள் சொந்தவாழ்க்கையில் சந்தித்த எந்த அவமானத்தையும் அடைந்திருக்கவேண்டியதில்லை


சந்திரசேகர சரஸ்வதி அவர்களை ஐம்பதாண்டுக்காலம் வசைபாடியவர்கள் பலர் அவரளவுக்கே சாதியப் பிடிப்பு கொண்டவர்கள் என்பதே உண்மை. நான் பல முக்கியமான மனிதர்களுடன் உரையாடும்தோறும் இந்த அந்தரங்கங்களை மேலும் மேலும் அறிகிறேன். ஆகவே இன்று எனக்கு ஆரம்ப கால அதிர்ச்சிகள் இல்லை. இதனால் ஒருவர் பொதுவெளியில் என்னதான் முற்போக்கும் சமத்துவமும் பேசினாலும் அதை ஒரு பாவனையாகவே காண்பேன். அவரது தனிவாழ்க்கையை வைத்தே அவரை மதிப்பிடுவேன்.


கருத்துக்களைப்பார், தனிவாழ்க்கையைப்பார்க்காதே என்று அதற்கு பதில்கூச்சல் போடுவார்கள். நான் அதை நம்பவில்லை. காரணம், பெரும்பாலான தருணங்களில் அந்தரங்கத்தை ஒளித்துக்கொள்ளவே அதி தீவிரம் பாவனைசெய்யப்படுகிறது.எனக்கு தனிவாழ்க்கையே முக்கியம். என் தனிவாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் எவரும் பரிசீலனை செய்யலாம் என்பதே என் தரப்பு பதில்.


இச்சூழலில் ஒருவர் தான் யாரோ அதை எவ்வகை பசப்பும் இல்லாமல் அப்பட்டமாக முன்வைப்பது என்பது அபாரமான துணிவுள்ள ஒருசெயலே. அது எத்தகைய பிற்போக்குத்தனமாக இருந்தாலும் சரி. அந்த நேர்மை அந்த ஆளுமையின் ஒரு முக்கியமான சிறப்பியல்பு என்றே நான் எடுத்துக்கொள்வேன்.


சந்திரசேகர சரஸ்வதி மிகப்பழைமையான ஒரு ஆசாரவாதத்தின் பிரதிநிநி. ஆசாரவாதத்தை அசையாமல் காக்கும்பொருட்டு உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பின் தலைவர். அப்படி தலைமை வகிப்பதற்காகவே சிறுவயதில் இருந்து உருவாக்கப்பட்டவர். அதற்கான பயிற்சிகளை மட்டுமே பெற்றவர். அதற்கு அப்பால் உலகப்பழக்கமோ நவீனசிந்தனைகளுடன் அறிமுகமோ இல்லாதவர். அவருக்கு கிடைத்த களம் அது. அவரது கர்மரங்கம் அது. அதில் அவர் ஒருநூற்றாண்டுக்காலம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்பட்டிருக்கிறார்.


அந்த கர்மத்தை அவர் யோகமாகவே செய்திருக்கிறார். அவரது நீண்ட வாழ்க்கையில் அவரது முதல் எதிரிகள்கூட அவரது ஒழுக்கம் மீது சந்தேகம் கொண்டதில்லை. இத்தனை வருடங்களில் எந்தச் சந்தர்ப்பத்திலும் அவரது நேர்மை ஐயத்துக்கு உள்ளாக்கப்பட்டதில்லை. கோடிக்கணக்கான சொத்துக்கள் புழங்கிய ஓர் அமைப்பின் தலைவராக இருந்த அவர், பெரும்செல்வர்களால் வணங்கப்பட்ட அவர், நடுத்தெருவில் தூங்கும் துறவியின் வாழ்க்கையையே வாழ்ந்தார். எந்த சுகபோகமும் அவரைக் கவரவில்லை. அவருக்கு சொல்லப்பட்ட வாழ்க்கைக்கான ஆசாரங்கள் ,நெறிகள், விதிமுறைகள் எதையும் எப்போதும் மீறவில்லை.


அந்த அமைப்பின் தலைவரிடம் நம்முடைய மரபு எந்த பரந்த சாஸ்திர ஞானத்தை எதிர்பார்க்குமோ அது அவரிடமிருந்தது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்காலம் இந்து மரபின் ஞானமும் கர்மமும் கலந்த ஒட்டுமொத்ததை அவர் சலிக்காமல் பிரச்சாரம் செய்திருக்கிறார். நான் எப்போதும் வாசிக்கும் நூல்களில் ஒன்று அவரது தெய்வத்தின்குரல். இந்துப்பண்பாட்டின் புராணமரபை, காவிய மரபை, சிற்பமரபை, சோதிட மரபை, வாழ்க்கைச்சடங்குகளை அவரளவுக்கு கற்றுத்தெளிந்த பேரறிஞர்கள் மிக அபூர்வம். உண்மையான ஆர்வம் கொண்ட ஒருவருக்கு அந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் அவனை வெட்டித்திறக்கும் மின்னல்கள் வெளிப்படும்.


நான் கல்கியில் ஒருமுறை அவரது ஒற்றைப்பத்தி ஒன்றை வாசித்தேன். மீனாட்சி என்றால் என்ன என்று சொல்கிறார். மீன்விழி என்றால் மீனின் விளிம்புவடிவம்போல கண்ணுடையவள் என்றுதான் பொருள் சொல்கிறார்கள், அதைவிட முக்கியமான பொருள் உண்டு என்கிறார். மீன் கண்களை இமைப்பதில்லை. இறைவியும் இமையாவிழிகொண்டவள் என்பதனால்தான் அவளுக்கு மீனாட்சி என்று பெயர். கைக்குழந்தையை வைத்திருக்கும் அன்னை ஒரு கணமேனும் கண்மூடுவதில்லை. கண்ணை மூடினால் அவள் அகக்கண் பலமடங்கு கூர்மையுடன் திறந்திருக்கும். இந்தப்பிரபஞ்சம் சக்தியின் மடியில் கிடக்கும் கைக்குழந்தை– என்று அவர் சொல்லியிருந்தார்


மின்னதிர்ச்சி பட்டதுபோல அன்று அந்த வரிகளை அறிந்தேன். மதுரைக்குப்போய் அம்மன் முன் நின்றபோது தமிழ்ப்பண்பாட்டின் கண்ணும் கருத்தும் எட்டா அடியாழத்தில் இருந்து வந்த அந்தப்பெரும்படிமம் என்னை கண்கலங்கிச் சிலிர்க்கச்செய்தது. அது அவரது சொந்த ஞானம் அல்ல, மரபின் ஞானம். ஆனால் அதைச் சொல்ல அவர் மட்டுமே இருந்தார். அந்த வரிகள் வழியாக என்னுடைய படைப்பு மனம் சென்ற தூரம் அதிகம். கொற்றவை நாவல் வரை அந்தப்பயணம் என்னை கொண்டு வந்து சேர்த்தது. அதுவே அவரது பணி. அதைச்சொல்பவர் என்பதே அவரது இடம்.


இந்தியாவில் எப்படியும் இருநூறு பாரம்பரிய மடங்களாவது இருக்கும். தமிழகத்தில் முக்கியமான பாரம்பரிய மடங்கள் பத்துக்குமேல் உள்ளன. இவற்றில் வெறெந்த மடாதிபதியும் தனக்கு அளிக்கப்பட்ட கர்மரங்கத்தில் இந்த அர்ப்பணிப்பை காட்டவில்லை. எவரும் அந்த வாழ்க்கையை ஒரு கர்மயோகமாக வாழ்ந்து முழுமைசெய்யவில்லை. நேர்மாறாக அதை வெறும் அதிகாரமாக மட்டுமே பார்த்தனர். துறவிகளாக அல்ல, மன்னர்களாகவே வாழ்ந்து மறைந்தனர்.


நாம் சந்திரசேகர சரஸ்வதி அவர்களை விவேகானந்தருடனும் காந்தியுடனும் ஒப்பிடலாகாது. அவர் ஏவப்பட்ட இவ்வுலகப்பணி [அதற்கான சொல் 'நியோகம்'] அது அல்ல. அவருக்கு கிடைத்த 'வேடம்' ஆசாரமான ஒரு அமைப்பின் ஆசாரமான தலைவர் என்பதே. அதை அவர் முழுமைசெய்தார். அவரை அந்தப்பணியை செய்த பிறருடன் மட்டுமே ஒப்பிடவேண்டும். அது அவரை யார் என்று காட்டும்.


அந்நிலையில் அவர் பணியாற்றிய அந்த அமைப்பு தேவையா என்பதுதான் முதல் வினாவாக எழும். இந்தியப் புரோகிதமரபு என்பது வேதகாலம் முதலே இருந்து வரக்கூடியது. எப்போதுமே அது ஆசாரவாதத்தின் குரல்தான். எப்போதுமே அது மாற்றமில்லாத தன்மைக்காக வாதாடி வந்திருக்கிறது. எல்லா மாற்றங்களுக்கு எதிராகவும் அதிஉக்கிரமாகப் போராடி வந்திருக்கிறது. புரோகிதசிந்தனையான பூர்வமீமாம்சை என்பது இந்தியாவின் எல்லா ஞானமரபுகளுக்கும் ஒரு எதிர்தரப்பு. இந்தியாவின் எல்லா சிந்தனைப்பாய்ச்சல்களும் அந்த புரோகித மரபுடன் முரண்பட்டு போராடித்தான் முன்னகர்ந்திருக்கின்றன. கபிலர் முதல் நாராயணகுரு வரை.புத்தர் முதல் விவேகானந்தர் வரை.


அப்படியென்றால் அந்த ஆசாரவாதத்தின் தரப்பு எதற்கு? அது அழியலாமே? நான் ஒருபோதும் அப்படிச் சொல்லமாட்டேன். ஏனென்றால் நான் கருத்துக்களின் முரணியக்கத்தை நம்பக்கூடியவன். புரோகிதர்களின் ஆசாரவாதம் இந்து மரபின் நிலைச்சக்தி. எந்த ஒரு மதத்திலும், அரசியல்கோட்பாட்டிலும் கொள்கையிலும் அப்படி நிலைச்சக்தி என ஒன்று இருக்கும். அதுவே அந்த மரபை உறுதியாக காலத்தில் நிலைநாட்டுகிறது. அதை எதிர்த்துத்தான் அந்த மரபின் எல்லா வளர்ச்சிகளும் நிகழ்கின்றன.


மாற்றத்தின் காலகட்டத்தில் நின்று பார்க்கையில் மாற்றங்களுக்கு எதிராக நிலைகொள்ளும் நிலைச்சக்தி ஓர் எதிர்மறை இருப்பாகவே தோன்றுகிறது. எல்லா வளர்ச்சிகளும் அந்த நிலைச்சக்தியுடன் போராடிக்கொண்டிருக்கின்றன. முழுச்சக்தியுடன் அதை உடைக்க முயல்கின்றன. அந்த எதிர்ப்பு பலசமயம் வெறுப்பாக மாறுகிறது. நான் நம்பும் இந்துஞான மரபு என்பது புரோகித மரபுக்கு முற்றிலும் எதிரானது. புரோகித மரபின் ஒரு சிந்தனையைக்கூட ஏற்க முடியாத நிலையில் இருப்பது. நூற்றாண்டுக்களாக அதை உடைத்துக்கொண்டே இருப்பது


ஆனால் நிலைச்சக்தியின் தேவை என்ன என்பது அந்த ஒட்டுமொத்த மரபே அழியக்கூடிய வாய்ப்பு வரும் காலங்களில் மட்டுமே தெரியவரும். இந்தியப் புரோகிதவர்க்கம் இல்லை என்றால் இஸ்லாமிய ஆட்சிக்காலத்தில் இந்து மரபு அழிந்திருக்கும் என்பதுதான் அப்பட்டமான உண்மை. வேதாந்திகளும் தர்மகர்த்தாக்களும் அல்ல , ஆயுதங்கள் இல்லாமல் ஆக்ரமிப்பாளகளை எதிர்த்துச்சென்று நின்று கூட்டம்கூட்டமாக உயிர்துறந்த புரோகிதவர்க்கமே இந்து ஆலயங்களை அழியாமல் நிலைநிறுத்தியது.


பெரும்பாலான நேரங்களில் அப்பாவிகளின் கூட்டத்தற்கொலையே ஆக்ரமிப்பாளர்களை பின்வாங்கச்செய்திருக்கிறது .கோயிலின் மூலச்சிலைகளை தூக்கிக்கொண்டு நாடுநாடாக ஓடியது அவர்கள்தான். செல்வங்களை புதைத்துவைத்துக்கொண்டு காடுகளில் காத்துக்கிடந்ததும் அவர்களே,.மீனாட்சியும் அரங்கனும் அண்ணாமலையும் எல்லாம் அவர்கள் தோள்களில் ஏறிச்சென்றே நாடோடிகளானார்கள், பின்பு மீண்டு வந்தனர்


நூற்றாண்டுகளாக பிடிவாதமாக அழிவுக்கு எதிராக போராடியது இந்துமதத்தின் நிலைச்சக்தியான பிராமண ஆற்றல். உலகவரலாறில் இதற்கிணையான ஒரு பெருநிகழ்வு உண்டா என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. திரும்பத் திரும்ப ஆலயங்களை கட்டி எழுப்பிக்கொண்டிருந்தார்கள். வெட்ட வெட்ட முளைத்துக்கொண்டிருந்தார்கள். மீண்டும் மிண்டும் இந்து மதத்தின் குறியீடுகளை அழியாமல் பேணினார்கள். நூல்களை நினைவிலும் வாய்மொழி மரபிலும் தக்கவைத்துக்கொண்டார்கள்.


பல கோயில்களை வெறும் கருத்துவடிவில் நீடிகக் வைத்தார்கள். பல ஊர்களில் முந்நூறு வருடம் கோயில் இருந்த இடத்தில் ஒரு கல்கூட மிஞ்சாத வெற்று நிலத்தில் அக்கோயிலின் நினைவை பூஜைசெய்தும் தொன்மத்தை சொல்லியும் நிலைநிறுத்தியிருக்கிறார்கள். மிகச்சிறந்த உதாரணம் தஞ்சையின் பத்தூர்.


நவீனத்துவம் தீவிரம் கொண்ட ஐம்பதுகளில் இந்துச்சாதிகளில் பெரும்பாலானவர்கள் மரபுகளை கைவிட்டார்கள். புதிய காலகட்டத்தின் எல்லா லாபங்களையும் அள்ளிவிடுவதற்காக முன்னால் தாவினார்கள். அந்த வேகத்தில் நம் ஆலயங்களில் பெரும்பகுதி அனைத்து இந்துக்களாலும் கைவிடப்பட்டு கற்குப்பைகளாக எஞ்சியது. ஆனால் அந்தக்கோயில்கள் எவற்றையும் பிராமணர்கள் கைவிடவில்லை. எந்த ஒரு கோயிலும் பிராமணர் இல்லாத காரணத்தால் பூஜை நின்று போகவில்லை. ஒரு பிச்சைக்காரன் மாதம் சம்பாதிக்கும் தொகையில் பாதிகூட வருமானம் இல்லாத நிலையில் அக்கோயில்களை தங்கள் தர்மத்துக்கு கட்டுப்பட்டு பிராமணர்கள் நிலைநிறுத்தினார்கள்.


இன்றும் ஒருவேளை நல்ல ஓட்டல்சாப்பாட்டின் விலையை மாதச்சம்பளமாக ஏற்றுக்கொண்டு தினம் மூன்றுவேளை நம் கைவிடப்பட்ட பழைய ஆலயங்களில் பூஜைசெய்யும் பலநூறு அர்ச்சகர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு பயணத்திலும் அத்தகையோரைக் கண்டுகொண்டிருக்கிறேன். உலகின் எந்த மதத்திலும் அதன் பூசாரிகள் இத்தனை பரிதாபகரமான நிலையில் இல்லை. சின்னஞ்சிறு மதமான சமணத்தில்கூட!


ஆசாரவாதிகள் என்பதனாலும் , அச்சமூகம் நவீன சமூகத்தில் பெற்ற லௌகீக வெற்றிகள் உருவாக்கிய பொறாமை காரணமாகவும் பிராமணர்கள் ஒவ்வொருநாளும் வசைகளை பெற்றுக்கொண்டு, அவமதிப்புகளை ஏற்றுக்கொண்டு இந்த பெரும் பணியை செய்து வருகிறார்கள். அவர்கள் நிலைச்சக்திகள் என்பதனால், மாற்றமில்லாமலிருப்பதே அவர்களுக்கு அளிக்கப்பட்ட தர்மம் என்பதனால் அதைச்செய்கிறார்கள்.


இந்துமதம் வேரோடு அழியவேண்டும் என்று சொல்பவர்களிடம் எனக்கு பேச ஏதுமில்லை. அவர்கள் மூன்று வகை. எங்கோ எப்படியோ இந்துமதத்தையும் இந்தியாவையும் அழிக்க எண்ணும் மதமாற்ற அமைப்புகளின் நிதியையும் ஆதரவையும் பெற்றுக்கொள்பவர்கள் ஒருசாரார். அந்த வலுவான சிறுபான்மையினரின் உக்கிரமான பிரச்சாரத்துக்கு பலியாகி இதுதான் முற்போக்கு போல என எண்ணும் அப்பாவிகள் இரண்டாம் தரப்பு. இருதரப்புக்கும் இந்துமதம் பற்றி ஏதும் தெரியாது. ஆர்வமும் இல்லை, அறிவுத்தகுதியும் இல்லை.


உண்மையிலேயே இந்து மதத்தை ஆழ்ந்து கற்று முழுமையான எதிர்நிலை எடுத்தவர்கள் உண்டு. அம்பேத்கர் போல. ராகுல சாங்கிருத்யாயன் போல. கெ.தாமோதரன் போல.இ.எம்.எஸ் போல. அதற்கான இடம் எப்போதும் கருத்துச்செயல்பாட்டில் இருக்கிறது. மறுக்கப்படாத ஒரு கருத்துத்தரப்பு இருக்க முடியாது. ஆகவே இப்பேரறிஞர்களின் அந்த மறுப்பும் போற்றத்தக்கதே. ஓர் உண்மையான இந்து அவர்களிடம் விவாதிப்பதன் மூலம் தன்னை வளர்த்துக்கொள்ளமுடியும். நான் என்றுமே அவர்களை என் ஆசிரியர்கள் என்ற நிலையில் வைத்தே பேசுகிறேன்.


இந்துமதம் மீது அக்கறை கொண்ட ஒருவர், அது நீடிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒருவர், அதன் நிலைச்சக்தியின் பங்களிப்பை ஏற்றுக்கொண்டுதான் மேலே செல்வார். அது நிலைச்சக்தி என்பதனாலேயே அது எந்த மாற்றத்தையும் எதிர்க்கும். அதற்கு வந்து சேர்ந்தவற்றை அப்படியே தக்கவைத்துக்கொள்ளவே முயலும். தீண்டாமையானாலும்சரி விதவைத்திருமண மறுப்பானாலும் சரி. மனிதாபிமானமோ காலமாற்றமோ அதற்கு பொருட்டல்ல. அது புதையல் காக்கும் பூதம். அதன் பணி அதுவே என எண்ணினால் அதை வெறுக்க முடியாது. அதை எதிர்த்து வெல்வதை முழுமையான சமநிலையில் நின்று செய்ய முடியும்


பிராமண நிலைச்சக்தியை வெறுப்பதற்கான உரிமை யாருக்கேனும் உண்டு என்றால் தீண்டாமைக்கு ஆளான ஒடுக்கப்பட்ட சாதியிலிருந்து வந்த நாராயணகுருவின் இயக்கத்தினருக்குத்தான் . ஆனால் நாராயணகுரு ஒரு தருணத்திலும் அப்படிச் சொல்லவில்லை. நடராஜகுருவும் நித்யசைதன்ய யதியும் சொன்னதில்லை. நிலைச்சக்தி என்ற வகையில் அவர்களை சமநிலையுடன் பார்க்க என்னை கற்பித்தவரே நித்யாதான். இந்தச்சொற்கள் பெரும்பாலும் அவருடையவை.


அப்படியென்றால் நிலைச்சக்தி அப்படியே மாறாமல் நீடிக்க வேண்டுமா? தீண்டாமை உட்பட அனைத்தும் அப்படியே இருக்கவேண்டுமா? இல்லை. நிலைச்சக்தியின் பணி மாறாமலிருப்பது மட்டுமே. அதை எதிர்ச்சக்தி மாற்றிக்கொண்டேதான் இருக்கும். காஞ்சிமடம் கூட சந்திரசேகர சரஸ்வதி காலத்தில் இருப்பது போல இன்றில்லை. அந்த மாற்றமே இயல்பானது. எந்த தளத்திலும் அதுவே உகந்தது.


அது நிகழாமல் ஒற்றைப்படையாக மாற்றம் நிகழ்ந்த இடங்களில் எல்லாம் வன்முறை விளைந்து ஒட்டுமொத்த அழிவே எஞ்சியது. ஸ்டாலினும் மாவோவும் உதாரணங்கள். பழமையை எதிர்கொண்டு மாற்றி புதுமை தன்னை நிகழ்தாமல் அது பழமையை அடித்தொழித்து மேலே வந்த இடங்களில் கொஞ்சநாளிலேயே பழமை மேலதிக வல்லமையுடன் மீண்டு வந்திருக்கிறது. முஸ்தபா கமால் பாஷாவின் துருக்கி உதாரணம்.


இந்துமதம் என்பது பலநூற்றாண்டுக்கால வரலாறுள்ள ஒரு மரபு. நூற்றுக்கணக்கான நம்பிக்கைகள் , வழிபாட்டுமுறைகள் இணைந்து உருவானது. ஏராளமான ஞானத்தரப்புகள் கொண்டது. முற்றிலும் மாறுபட்ட குறியீட்டு முறைமைகளும் வரலாற்று அடையாளங்களும் கொண்டது. இந்த மாபெரும் அமைப்பு மானுட இனத்துக்கே ஒரு பாரம்பரியச்ச் சொத்து என நான் நினைக்கிறேன். இன்று ஐரோப்பாவின் கார்ப்பரேட் நிதியுடன் இணைந்து வரும் கிறித்தவ மதவெறி இதை அழிக்க எல்லா ஆற்றலையும் செலவிடுகிறது. அதை ஏற்று நம்மில் பல அறிவுஜீவிகளும் இன்று கூவுகிறார்கள். இது ஒரு முற்போக்குச் செயல்பாடாகவே ஆகிவிட்டிருக்கிறது


ஒருவேளை அந்த மாபெரும் வரலாற்றுச்சக்திகளால் இந்து மதம் அழியும் என்றால் என்றாவது ஒருநாள் மானுட இனம் அதற்காக வருந்தவேபோகிறது. பசுமைப்புரட்சியால் இயற்கையை அழித்தமைக்கு வருந்துவதைப்போல. [அதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன என்றே நான் நினைக்கிறேன் ] இதன் மாபெரும் வரலாற்றுப்பின்புலமும், பிரம்மாண்டமான உள்விரிவும், உள்ளே நிகழும் பல்வேறுதரப்புகளுக்கிடையேயான முரணியக்கமும்தான் இதன் சிறப்பியல்புகள். அவையே இதன் தடைகளும்கூட. யானைக்கு எடையே வலிமையும் தடையுமாக இருப்பதைப்போல.


இதன் குறைகள் களையப்பட்டு இதன் பாரம்பரிய வல்லமை தக்கவைக்கப்பட்டு இது நீடிக்கவேண்டுமென நான் விரும்புகிறேன். அதற்கு இதற்குள் ஒரு பெருவிவாதம் நிகழ்ந்தபடியே இருக்கவேண்டும். இதற்குள் இதை நவீனப்படுத்தும் சக்திகள் செயல்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். இல்லையேல் வெறும் ஆசாரமாக தேங்கிப்போகும். அதேசமயம் இத நிலைச்சக்தி நீடிகக்கவும்வேண்டும், இல்லையேல் இன்றைய நவீன மனத்தால் புரிந்துகொள்ளப்படாதவை எல்லாமே குப்பைக்கூடைக்கு அனுப்பப்பட்டுவிடும். ஒற்றைபப்டையான ஒன்றாக இது கட்டமைக்கப்பட்டுவிடும்.


மிகச்சிறந்த உதாரணம் கஜூராகோ. தீண்டாமை சம்பந்தமான விஷயத்தில் காந்தியை நான் ஆதரிப்பேன். சந்திரசேகர சரஸ்வதி அவர்கள் என் முழு எதிர்ப்புக்குரியவர். ஆனால் காந்தி கஜுராகோவின் பெரும் கலைப்பொக்கிஷங்களை உடைத்து அழிக்கவேண்டும் என்றார். அவரால் பாலுறவை அருவருப்புடன் மட்டுமே பார்க்க முடிந்தது. ஆனால் சந்திரசேகர சரஸ்வதி அவர்கள் கோயில்களில் உள்ள பாலியல்சிலைகளை பிரபஞ்சலீலையின் சித்தரிப்பு என்று சொல்கிறார். அவற்றை உருவாக்கிய பல்லாயிரம்வருடப் பாரம்பரிய மனத்தை விளக்குகிறார்.


சந்திரசேகர சரஸ்வதி இல்லாமல் காந்தி மட்டுமே இருக்கும் ஒரு அமைப்பு இந்தியாவில் உருவாகுமென்றால் தீண்டாமையுடன் சேர்த்து கஜூராகோவும் குப்பைக்கூடைக்குப் போய்விடும். ஆகவேதான் நான் முரணியக்கத்தை வலியுறுத்துகிறேன். அதற்காக நிலைச்சக்தி தேவை என்கிறேன். அந்நிலைச்சக்தியாக ஆசாரவாத அமைப்பான காஞ்சி மடத்தை அங்கீகரிக்கிறேன். அதன் தலைவராக சந்திரசேகர சரஸ்வதி அவர்கள் ஆற்றிய அர்ப்பணிப்புள்ள பெரும் வாழ்க்கை மதிப்பு மிக்கது என்கிறேன்.


இரு நிகழ்ச்சிகள். கோயில்பட்டி வில்லிசைப்புலவர் அய்யாக்குட்டி பற்றி எழுத்தாளர் சொ.தருமன் ஒரு சிறு நூல் எழுதியிருக்கிறார். வில்லிசை என்பது ஒரு நாட்டுப்புறக்கலை. அதை தன் புலமையாலும் அர்ப்பணிப்பாலும் மேலெடுத்துச்சென்றவர் அய்யாக்குட்டி. நாட்டுப்புறக்கலைஞர் என்பதனால் அவருக்கு சமூக கௌரவம் இருக்கவில்லை. அவரைப்பற்றி கேள்விப்பட்டு ஒருமுறை அவரை தன் முன் வில்லிசை செய்ய அனுமதிக்கிறார் சந்திரசேகர சரஸ்வதி .அந்நிகழ்ச்சிக்குப்பின் அவரை மடத்துக்கு வரவழைத்து ஆஸ்தான கலைஞராக அங்கீகாரம் கொடுத்து கௌரவித்தார் அவர்


வாழ்நாள் முழுக்க அய்யாக்குட்டிக்கு சமூக கௌரவம் அளிக்கும் அடையாளமாக இருந்தது அது என்கிறார் சொ.தருமன். மேடைகளில் காஞ்சி பெரியவர் அளித்த அந்த அங்கீகாரத்தைச் சொல்லாமல் அவர் நிகழ்ச்சியை ஆரம்பித்ததில்லை. அத்தகைய பலநூறு பேரை நாம் சுட்டிக்காட்டமுடியும்.


இன்னொரு நிகழ்ச்சி. அறுபதுகளில் நடந்தது. நெல்லை மாவட்டத்தில் ஒரு காளிகோயில். நெடுங்காலமாக அது கைவிடப்பட்டு கிடந்தது. அதை எடுத்துக்கட்டி கும்பாபிஷேகம்செய்யவேண்டும். ஆனால் உள்ளே வைக்கவேண்டிய மூலச்சிலை எப்படி இருக்க வேண்டும்? ஒரு சோதிடர் சொல்ல காஞ்சிக்குச் சென்று சந்திரசேகர சரஸ்வதி அவர்களிடம் கேட்டார்கள். அந்தமூலச்சிலையின் நகல்வடிவம் கோயிலின் சுவர்கள் அல்லது தூண்களில் எந்த இடத்தில் இருக்கக்கூடும் என அவர் சொன்னார். தேடிக்கண்டுபிடித்து நகலெடுத்து மைலாடிக்கு வந்து அதைச் செய்து கொண்டு சென்று கருவறையை நிறுவினார்கள்.


இவ்விரு செயல்களும் ஒரு மடாதிபதிக்கு கடமையானவை. ஆனால் சாதிப்பின்புலத்தை வைத்துப்பார்த்தால் அவற்றைச் செய்யவேண்டியவை மாபெரும் சைவ மடங்கள்தான். அந்த மடங்கள் எதிலும் அதைப்பற்றிய அக்கறையோ ஞானமோ உடையவர்கள் இருக்கவில்லை. சந்திரசேகர சரஸ்வதிதான் அதைச் செய்தார். இத்தகைய பல்லாயிரம் நிகழ்ச்சிகளைச் சுட்டிக்காட்டமுடியும். அதற்கான அர்ப்பணிப்புடன் சந்திரசேகர சரஸ்வதி இருந்தார். ஆகவேதான் அவர் மெல்லமெல்ல முக்கியத்துவம் பெற ஆரம்பித்தார்.


இச்செயல்களும் இந்து மதத்துக்குத் தேவையே என நான் நினைக்கிறேன். ராமகிருஷ்ண மடமோ காந்தியோ இதைச்செய்ய முடியாது. ஓர் ஆசாரவாத அமைப்பின் பணி இது. அத்தகைய அமைப்பு இல்லாவிட்டால் இவ்விஷயங்கள் மெல்ல மெல்ல அழிந்தே போகும். இந்து மதத்தின் தொன்மங்களும், ஆசாரங்களும் , கோயில்களும், சிற்பங்களும் இல்லாவிடால் மிச்சமிருப்பது என்ன? கொஞ்சம் அச்சிடப்பட்ட நூல்கள். அவற்றை எதைக்கொண்டு புரிந்துகொள்வது? குறியீடுகள்தான் மதம். குறியீடுகள்தான் கலை, இலக்கியம். குறியீடுகளை கையாளும்போதுதான் தத்துவம் கவித்துவ ஆழம் கொள்கிறது. இல்லையேல் அது வெறும் சொல்வெளி


திரும்பவும் சொல்கிறேன். ஆசாரவாதம் நம்மால் ஏற்றுக்கொள்ளவே முடியாத விஷயங்களைச் சுமந்துகொண்டிருக்கும். ஆனால் நம் பழமையின் செல்வமும் அங்குதான் உள்ளது. அதனுடன் நாம் மோதலாம், நிராகரிக்க முடியாது.


நாம் ஊடகங்களிலும் தனிவாழ்க்கையிலும் ஞானமோ விவேகமோ இல்லாத மனம்சூம்பிப்போன பிராமணர்களைக் கண்டு அருவருப்படைவது அடிக்கடி நிகழ்வதுதான். தங்கள் சாதிகாரணமாகவே தாங்கள் மேலானவர்கள் என நம்புபவர்கள், பிறரை இழிவாக எண்ணுபவர்கள், எங்கும் எதிலும் குழு சேர்ந்து ஆதிக்கம் செலுத்துபவர்கள். அவர்கள் தங்கள் அடையாளமாக சந்திரசேகர சரஸ்வதி அவர்களை முன்னிறுத்துகிறாரக்ள். நாம் அவரை அந்த மனிதர்களின் பிரதிநிதி என அடையாளப்படுத்திக்கொள்கிறோம். அதைச்செய்யக்கூடாது என நான் என்னை மீண்டும் மீண்டும் பழக்கிக் கொள்வேன்


அதைவிட நான் என்னைப் பழக்கிக்கொள்ளும் ஒன்றுண்டு. ஒரு பிராமணர் தன் சாதியமேட்டிமையை காட்டும்போது வரும் எரிச்சல் அதே மேட்டிமையைக் காட்டும் வேளாளரை அல்லது கொங்குக்கவுண்டரை காணும்போது வருவதில்லை. அதற்குக் காரணம் நம் சுய அடையாளமே. சாதிச்சிறுமை இல்லாத எத்தனை பேர் நம்முடைய சமூகத்தில் உண்மையில் இருக்கிறார்கள்? அப்படியானால் எத்தனைபேரை நாம் விரும்பமுடியும், மதிக்கமுடியும்?


ஒரு நண்பர் சந்திரசேகர சரஸ்வதி அவர்களை ஒரு விவாதத்தில் மிகமிகக் கடுமையாக திட்டி நொறுக்கினார். அவரது அப்பாவையும் எனக்கு தெரியும். நான் கேட்டேன் 'ஒரு கேள்வி மட்டும் கேட்கிறேன் . உங்கள் அப்பா ஒரு அருந்ததியரை ஒருமுறையாவது உங்கள் வீட்டு திண்ணையில் உட்காரச்செய்திருக்கிறாரா?' திகைத்தபின் 'இல்லை' என்றார் நண்பர். 'இனிமேல் அதற்கு சம்மதிப்பாரா? உங்களால் அவரிடம் பேசி அதற்குச் சம்மதிக்கவைக்கமுடியுமா?' நண்பர் 'சாத்தியமே இல்லை' என்றார்.


'இதோ காஞ்சி சங்கராச்சாரியார் பற்றி நீங்கள் சொல்லும் எல்லா வார்த்தைகளையும் உங்கள் அப்பாவைச் சொல்லவும் பயன்படுத்துவீர்களா?' என்றேன். அவரால் பதில் சொல்லமுடியவில்லை. 'இதேதான் எல்லாருக்கும் பிரச்சினை. நம் அப்பாக்கள் எல்லாருமே இப்படித்தான். எத்தனையோ மரபார்ந்த உயரிய பண்புகளின் இருப்பிடம் அவர்கள். கூடவே மரபின் இந்த இருட்டும் அழுக்கும் அவர்களிடம் இருக்கிறது. நாளை நம் பிள்ளைகளுக்கு நாமேகூட இப்படி தோன்றலாம். நாம் நம் அப்பாக்களை ஏற்கமுடியாது, எதிர்க்கலாம், விலகிச்செல்லலாம், அவர்களுக்கு இடமே இல்லாத புதிய உலகை படைக்கலாம் ஆனாலும் வெறுக்கமுடியாது' என்றேன்.


சந்திரசேகர சரஸ்வதி ஓர் ஆசாரப் பிராமண மடத்தின் தலைவர். ஸ்மார்த்த பிராமணர்களின் குரு. தன்னை ஒரு ஆசாரவாதியாக உணரும் ஒரு ஸ்மார்த்தர் அவரை தன் ஆசிரியராக , வழிகாட்டியாகக் கொள்வதை நான் புரிந்துகொள்கிறேன். அவர் தன் பக்தியால் அவரை ஞானி என்றும் முனிவர் என்றும் சொல்லும்போது அதை சொல்பவரின் அறியாமை என எண்ணி புன்னகையுடன் கடந்து செல்வேன். மரபைப் பேணுவதில் அவரது பங்களிப்பை ஏற்கிறேன். அதற்கான மதிப்பை அவருக்கு அளிப்பேன். என் மதத்தின் மரபான ஞானக்குவையில் பெரும்பகுதியை அறிந்து சொன்னவர் என்பதனால் அவரை கூர்ந்து வாசிப்பேன். அதற்காக அவரை வணங்குவேன்.


ஆனால் அவரது சமூகக் கருத்துக்களை ஒரு சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அவை மானுட விரோதமானவை, இன்றைய நிலையில் இந்து மதத்துக்கு அழிவை உருவாக்குபவை என்றே நினைப்பேன். அக்கருத்துக்களுடனும் அதைச் சொல்லும் அவரது ஆளுமையுடனும் எவ்வளவு முடியுமோ அத்தனை மூர்க்கத்துடன் மோதுவேன்.


ஆனால் சந்திரசேகர சரஸ்வதி அவர்களை நான் வெறுக்கமுடியாது. ஏனென்றால் நியாயஉணர்ச்சியும், மகத்தான நட்புணர்ச்சியும், அப்பழுக்கற்ற நேர்மையும் கொண்டவரான ; அதேசமயம் சாதிவெறியரும், ஆணாதிக்கவாதியுமான என் அப்பா வயக்கவீட்டில் பாகுலேயன் பிள்ளையை நான் இன்னும் வெறுக்கவில்லை. அவரை நான் வெறுத்த நாட்கள் உண்டு. ஏதோ ஒரு கணத்தில் அவரைக் கொலை செய்வதைப்பற்றிக்கூட நினைத்திருக்கிறேன் என்பதுதான் உண்மை. ஆனால் இன்று அவரை புரிந்துகொள்கிறேன்.


காந்தியும் விதவைகளும்




சாதிபற்றி மீண்டும்…




இலக்கியமும் நவீன இலக்கியமும்


எந்த அடையாளம்?


சாதிபேசுதல்

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 25, 2012 11:30

விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம்


விஷ்ணுபுரம் காட்டப்படுகிறது, நம்மால், அதன் நதிக்கரை காற்றை உணரமுடியுமளவு. காட்சி அடுக்குகளாகவே கதை எடுத்துச் செல்லப்படுகிறது. ஒவ்வொரு காட்சியும் சொல்லப்படாத ஒன்றின் மௌனத்துடன் மறைகிறது. மீண்டும் வேறு காட்சிகளில் அதன் முடிவு சொல்லப்பட்டு நீள்கிறது. நம் கண்முன் நெய்யப்படும் கம்பளம் போல விரிகிறது.ஒருவகையில், இலக்கியத்தின் எல்லைகளை மீறி சினிமாவாகவும், சினிமாவால் என்றைக்குமே முழுமையாக சுவீகரிக்க முடியாத இலக்கியமாகவும். உயிரூட்டமான ஒரு காட்சியில் நீளும் மனப்பிரவாகமென.


விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம் – 1, 2

தொடர்புடைய பதிவுகள்

மேலான உண்மை — சீனு கடிதம்
அறிதலுக்கு வெளியே-சீனு
விஷ்ணுபுரம்- விமர்சனம்
விஷ்ணுபுரம் விருது விழா 2011 -டிச 18-கோவையில்
பரிணாமவாதமும் இந்திய மதங்களும்
கடிதங்கள்
கதைகளின் வழி
சிற்பச்செய்திகள்
அறிதல்-அறிதலுக்கு அப்பால்
தீராநதி நேர்காணல்- 2006
கடிதங்கள்.
கடிதங்கள்
இரு கடிதங்கள்
கடிதங்கள்
இன்செப்ஷன், நனவுணர்வில் கண்ட கனவு
வைணவத்தின் மூன்றுநிலை கோட்பாடு
படைப்புடன் அடையாளப்படுத்திக்கொள்ளுதல்
விஷ்ணுபுரம்,விவாதம்
மதிப்புரைக்கு ஓர் இணையதளம்
காடு,பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம்:கடிதங்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 25, 2012 11:30

March 24, 2012

கூடங்குளம் – இரு கடிதங்கள்

ஐய,


கூடங்குளம் தொடர்பாக நான் அனுப்பிய கடிதங்களை பதிவிடும்படி கோருகிறேன்.


சாமி


அன்புள்ள சாமி,


கூடங்குளம் முதலிய விஷயங்களில் எனக்கு வரும் கடிதங்கள் பலவகை. கீழே கண்ட கடிதம்போல. இந்தவகைக் கடிதங்களைக் கண்டதும் உடனடியாக நான் ஃபில்டர் போட்டுவிடுகிறேன். என் மின்னஞ்சல் பட்டியலைவிட ஃபில்டர் பட்டியல் நான்குமடங்கு பெரியது. உங்கள் கடிதங்கள் அங்கே இருக்கலாம்.


ayya writer these long period where you gone?you are working in bsnl.i

know.will you releave from that" thenda sambalam".if u do this your

thinking always correct.please give gap for our generation.vishnupuram

jeyamohan sir you do your duty.because cell phone towers cause so many

problems to us can you stop these?


sreeni vasan

excelsreenivasan@gmail.com


ஆகவே விட்டுவிடுங்கள்.


ஜெ


ஜெ,


கூடங்குளம் போராட்டத்தை 88 முதலே கவனித்துவருவதாகச் சொன்னீர்கள். அதில் இருந்து கண்டுகொண்ட பாடங்களை நீங்கள் விரிவாக எழுதினால் அனைவருக்கும் உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.


அருண்


அன்புள்ள அருண்,


கூடங்குளத்தில் நான் கண்ட பாடம் ஒன்றுதான். நம்பிக்கையூட்டும் விஷயமும் கூட. அதாவது நம் நாட்டில் தேசபக்திக்கு எந்தக் குறையும் இல்லை. கொஞ்சநாள் மின்சாரம் இல்லாமலானால் எல்லாருமே தேசபக்தியை வெளிப்படுத்த ஆரம்பித்துவிடுகிறார்கள்.


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

கூடங்குளம் — ஒரு கடிதம்
கூடங்குளம்
கூடங்குளமும் கலாமும்
நிலக்கரியும் அணுசக்தியும்-கடிதம்
அனலும் அணுவும்
கூடங்குளம் இரு கடிதங்கள்
கூடங்குளம்-கடிதம்
கூடங்குளம் அனுபவப்பதிவு
கூடங்குளம் செய்திகள்
ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை
கூடங்குளம் கடிதங்கள்
அணுமின்சாரமின்றி வேறு வழி இல்லையா?
கூடங்குளம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 24, 2012 23:26

கூடங்குளம் இரு கடிதங்கள்

ஐயா


கூடங்குளம் தொடர்பாக நான் அனுப்பிய கடிதங்களை பதிவிடும்படி கோருகிறேன்


சாமி


அன்புள்ள சாமி


கூடங்குளம் முதலிய விஷயங்களில் எனக்கு வரும் கடிதங்கள் பலவகை. கீழே கண்ட கடிதம்போல. இந்தவகை கடிதங்களைக் கண்டதும் உடனடியாக நான் ஃபில்டர் போட்டுவிடுகிறேன். என் மின்னஞ்சல் பட்டியலைவிட ஃபில்டர் பட்டியல் நான்குமடங்கு பெரியது. உங்கள் கடிதங்கள் அங்கே இருக்கலாம்


ayya writer these long period where you gone?you are working in bsnl.i

know.will you releave from that" thenda sambalam".if u do this your

thinking always correct.please give gap for our generation.vishnupuram

jeyamohan sir you do your duty.because cell phone towers cause so many

problems to us can you stop these?


sreeni vasan

excelsreenivasan@gmail.com


ஆகவே விட்டுவிடுங்கள்


ஜெ


ஜெ,


கூடங்குளம் போராட்டத்தை 88 முதலே கவனித்துவருவதாகச் சொன்னீர்கள். அதில் இருந்து கண்டுகொண்ட பாடங்களை நீங்கள் விரிவாக எழுதினால் அனைவருக்கும் உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்


அருண்


அன்புள்ள அருண்


கூடங்குளத்தில் நான் கண்ட பாடம் ஒன்றுதான். நம்பிக்கையூட்டும் விஷயமும் கூட. அதாவது நம் நாட்டில் தேசபக்திக்கு எந்த குறையும் இல்லை. கொஞ்சநாள் மின்சாரம் இல்லாமலானால் எலலருமே தேசபக்தியை வெளிப்படுத்த ஆரம்பித்துவிடுகிறார்கள்


ஜெ


தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 24, 2012 23:26

காந்தியும் விதவைகளும்

அன்பின் ஜெ எம்.,


காந்தியின் சனாதனம் கட்டுரைத் தொடரில் தீண்டாமைக் கொடுமையை ஏற்காத, உண்மையான சனாதனியாக காந்தி தன்னை வெளிப்படுத்திக் கொண்டதையும், சுருதிநூல் ஆதாரத்துடன் அவர் கருத்துக்கு எதிர்வாதம் வைக்க மக்களால் ஏற்கப்பட்டிருந்த சமயத்தலைவர்களாலும் கூட இயலாமல் போனதையும் சுட்டிக் காட்டியிருந்தீர்கள். தீண்டாமைக் கொடுமை போலவே பாலிய மணங்களும் அவற்றின் உடனிகழ்வாக நேரும் விதவைநிலைக் கொடுமைகளும் சமய சம்மதம் இருப்பதான பாவனையில் இந்துமதத்தில் நிலவி வந்ததற்கும் கூடத் தன் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வந்திருப்பவர் காந்தியடிகள் .


[சந்திரசேகரர் உள்ளிட்ட மடத் தலைவர்கள் தலை முடி மழிக்காத விதவைகளின் முகத்தில் விழித்தால் அன்று முழுவதும் ஆகாரம் அருந்த மாட்டார்கள் என்பதற்காகவே அவர்கள் முன்னிலையில் விதவையர் செல்வது கூடப் பாவம் என அஞ்சிய நிலையே வெகு நாள் நீடித்திருந்தது. 1920 காலகட்டத்தில் - தஞ்சைக் கிராமம் ஒன்றில், வழக்கறிஞராக இருந்த ஒருவர், சந்திரசேகரருக்குப் பாதபூஜை செய்ய வேண்டுமென்பதற்காகவே -முடி களையாமல் வைத்திருந்த - பத்து வயதுப் பாலிய விதவையான தன் குழந்தைப் பெண்ணைக் கிராமத்து எல்லையிலுள்ள வேறொரு வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு மடாதிபதிக்குப் பாதபூஜை செய்த சம்பவத்தை என் தாய் தன் வாழ்நாளின் இறுதிக்கட்டம் வரை ஆவேச உணர்ச்சியுடன் நேரடி அனுபவமாக எனக்கு விவரித்திருக்கிறார்கள்.]


இவ்வாறு பிஞ்சுப் பருவத்தில் நிகழும் குழந்தை மணங்களும் வைதவ்யக் கொடுமைகளும் சனாதனத்திற்கே சாபக் கேடுகளாய் அமைந்திருப்பவை என்பதை தான் நடத்தி வந்த இதழ்களில் செய்திகளாகவும் கட்டுரைகளாகவும் வெளியிட்டு அக்கொடுமைகள் சார்ந்த சமூக மனச்சாட்சியைத் தூண்டியதில் காந்திக்குக் கணிசமான பங்கிருக்கிறது என்பதைக் கொஞ்சமும் மறுப்பதற்கில்லை.


என்றாலும் இது சார்ந்து நீண்ட நாட்களாக என் நெஞ்சைக் குடைகிற ஐயம் ஒன்றும் இருக்கிறது. காந்தி சார்ந்த பன்முக விளக்கங்களை விரிவான பின்னணியில் வைத்து வரும் தாங்களே இந்த ஐயத்தையும் தெளிவிக்க முடியும் என எண்ணுவதால் இதை உங்கள் முன் வைக்கிறேன்.


விதவை மறுமணத்தை வெளிப்படையாக ஏற்றவர், ஆதரித்தவர் காந்தியடிகள். வைதவ்யம் என்பது எந்தக் காரணத்தாலும் ஒரு பெண்ணின் மீது திணிக்கப்படக்கூடாது என உறுதியாகக் கருத்துரைத்திருப்பவர். ஆனாலும் கூட 'எந்த ஒரு பெண் தானே விரும்பி வைதவ்யத்தை மேற்கொள்ளுகிறாளோ அவளே என் வணக்கத்துக்குரியவள்' என்றும் ஓரிடத்தில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.


நிச்சயம் இதை ஒரு முரண்பாடு என நினைத்து நான் இந்த ஐயத்தை வைக்கவில்லை; விதவை நிலையைத் தேர்வு செய்வதும் மறுதலிப்பதும் அந்தந்தப் பெண்ணின் தனிப்பட்ட உரிமை என்ற பொருளிலேயே அவர் அதைச் சொல்லியிருக்கக் கூடும். ஆனாலும் கூட வைதவ்யம் காக்கும் பெண்ணே தன் வணக்கத்துக்குரியவள் என்று அவர் சொல்லும் அந்தக் கூற்று அவரது சீர்திருத்தக் கருத்தின் தூண்டுதலால் மறுமணம் செய்யத் துணிந்து முன் வரும் பெண்ணின் மனம் உளைச்சலுக்கு ஆளாக்கித் தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையை அவள் கொள்ள வழி வகுத்து விடாதா..? அல்லது அவர் கருத்துரைத்த சூழல் சார்ந்த என் புரிதலில் ஏதும் பிழையா-? தெளிவிக்க வேண்டுகிறேன்.


எம் ஏ சுசீலா



அன்புள்ள சுசீலா,


காந்தியின் இந்தக்கருத்தில் குழப்பமாக ஏதும் இல்லை. பாலியல் குறித்த அவரது நிலைப்பாடே புலன்ஒறுப்பை அடிப்படையாகக் கொண்டதுதான். அவர் பாலுறவு பற்றி என்னென்ன சொல்லியிருக்கிறார் என்று முழுமையாகப் பார்த்தால் இதைப் புரிந்துகொள்ளலாம்.


காந்தியைப் பொறுத்தவரை பாலுறவு என்பது முழுக்கமுழுக்க இனவிருத்திக்கான இன்றியமையாத செயல்பாடு மட்டும்தான். அதை இன்பத்துக்காகச் செய்வதென்பது பாவம். பாலுறவில் இருக்கும் நாட்டம் என்பது மனித மனத்தை உலகியலில் கட்டிப்போடுவது. ஆகவே அது ஆன்மீகத்துக்கு எதிரானது.


காந்தி ஆன்மீகத்தை பக்தி, சேவை இரண்டின் கலவையாகவே கண்டார். பக்தியிலும் சேவையிலும் மனம் ஈடுபடுவதற்குக் காமமே முதல் தடை. ஆகவே புலன்களை ஒடுக்கியாகவேண்டும் என்று நினைத்தார்.


இதில் அவர் வெளிப்படையாக இருந்தார். தனக்கு அந்தக் கட்டுப்பாட்டை நாற்பது வயதிலேயே விதித்துக்கொண்டார். பிறருக்கும் அதே ஆலோசனையைச் சொன்னார். வேதனையான வேடிக்கை என்னவென்றால் மிக இளம் வயதுடையவர்களுக்கு, திருமணமே செய்யாதவர்களுக்குக் கூட அவர் புலன் ஒடுக்கத்தையே அறிவுறுத்தினார்.


திருமணமான தம்பதிகள் கூட தாம்பத்தியத்திலேயே முற்றிலும் புலனடக்கத்துடன் வாழவேண்டும் என்று காந்தி ஆலோசனை சொல்லியிருக்கிறார். மக்கள் சேவைக்கு வருபவர்கள் திருமணத்தைத் தவிர்க்கவேண்டும் என்றும், திருமணமானாலும் புலனடக்கம் பயிலவேண்டும் என்றும் சொன்னார். இதையெல்லாம் அவர் கிட்டத்தட்ட கட்டாய விதியாகவே தன் ஆசிரமங்களில் வலியுறுத்தி வந்தார். அவரை ஏற்றுப் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அந்த வாழ்க்கையை மேற்கொண்டார்கள்.


காந்தியின் பார்வையில் இல்லறம் என்பது ஒருபடி கீழானதே. லௌகீகத்தில் சிக்கிக்கொள்ளாமல் பக்தியும் சேவையும் செய்வதே உயர்ந்த வாழ்க்கை. அப்படி வாழ்பவர்கள் மேலானவர்கள். காந்தி எல்லாவகையான உலக இன்பங்களும் மனதை சுயநலத்தில் ஆழ்த்துபவை என்று நினைத்தார். இன்றியமையாத அளவுக்கு மேல் எந்த உலக இன்பத்தை அடைந்தாலும் அது ஆன்மீகமாக நம்மை அழிக்கும் என்றார்.


இதை அவர் எல்லா மனிதர்களுக்கும்தான் சொன்னார். அவருக்கே உரிய அப்பாவித்தனத்துடன் நேருவுக்கே இந்த ஆலோசனையைத்தான் சொல்லிக்கொண்டிருந்தார். இன்னும் ஒருபடி மேலாகப் போய் இந்திராகாந்திக்கே காந்தி இந்த ஆலோசனையைத்தான் சொன்னார்.


ஆகவே புலனடக்கம் பயிலும் விதவை, திருமணம் செய்த விதவையை விட மேலானவள் என்று காந்தி சொன்னதாகப் பொருள்கொள்ள வேண்டியதில்லை. புலனடக்கம் பயிலும் எவரும் குடும்பம் நடத்தும் எவரையும்விட மேலானவர் என்றே அவர் சொன்னார். ஒரு விதவை மறுமணம் செய்ய விரும்பினால் காந்தி அது இயல்பானதே என்பார், அதற்கு அவளுக்கு எல்லா உரிமையும் உண்டு என்பார். ஆனால் அவள் அவரிடம் ஆலோசனை கேட்டால் திருமணம் செய்யாமல் சேவையும் பக்தியுமாக வாழவேண்டும், அதுவே மேலான வாழ்க்கை என்றே சொல்வார்.


இந்த மனநிலையை காந்தி அவரது குடும்பத்தின் சமணப்பின்புலத்தில் இருந்தே பெற்றுக்கொண்டார். சமணம் இரண்டாயிரமாண்டுகளாக இந்த மதிப்பீட்டைத்தான் முன்வைக்கிறது. பின்னர் காந்தி புரிந்துகொண்ட மரபான கிறித்தவத்தின் மதிப்பீடுகளும் இதனுடன் இணைந்தே சென்றன.


காமத்தை காந்தி புரிந்துகொண்ட விதமும் சரி, அதை வெல்ல அவர் முயன்ற விதமும் சரி எனக்கு ஏற்புடையவை அல்ல. அது அவரது சமணப்பின்புலமும் அவரது முதல்குருவான ராய் சந்திராவும் அவருக்கு அளித்த ஒரு குறைபட்ட புரிதல் என நினைக்கிறேன். அது இந்து ஞானமரபுக்கு உரியதும் அல்ல. காந்தி சமண ஞானத்தைக் கிறித்தவ வழிமுறைகளுடன் கண்டபடி குழப்பிக்கொண்டார்.


புலன் ஒடுக்கத்தை இந்து யோக மரபு அனைவருக்கும் பரிந்துரைக்கவில்லை. அப்படிப் பரிந்துரைப்பது மிகமிக ஆபத்தானது. முழுமையான புலனடக்கம் யோகத்தில் ஆர்வம் கொண்டவர்களுக்கு மட்டுமே உரியது. யோகம் புலன்களை வெல்வதற்குப் பல வழிமுறைகளை பரிந்துரைக்கிறது. அகத்தையும் புறத்தையும் பழக்கும் வழிமுறைகள் அவை. அவற்றைக் கருத்தில் கொள்ளாமல் மூர்க்கமாக புலன்களை ஒடுக்குவது மனக்கொந்தளிப்புக்குத்தான் கொண்டு செல்லும். காந்தியின் ஆசிரமங்களில் அந்தக் கொந்தளிப்புகள் எப்போதும் பிரச்சினைகளை உருவாக்கின. நடராஜகுருவும், நித்ய சைதன்ய யதியும் காந்தியின் பாலியல் புரிதல்களைப் பற்றிக் கண்டித்து எழுதியிருக்கிறார்கள்.


நானும் இதைப் பலமுறை விரிவாகவே எழுதியிருக்கிறேன். ஆனால் காந்தி சொன்னதை இன்னும் விரிவான பின்புலத்தில் வைத்தே புரிந்துகொள்ளமுடியும் என நினைக்கிறேன். காந்தியின் இந்த நிலைப்பாடு அவரது காலகட்டத்துக்குப் புதியது அல்ல. உலகமெங்கும் அவரது சமகாலச் சிந்தனையாளர்கள் பலர் பாலியல் ஒறுப்பை முன்னிறுத்தினார்கள். காந்தி பாலியலை எப்படிப் பார்த்தாரோ அதற்கு சமானமாகவே தல்ஸ்தோயும் பார்த்தார். தன் மாணவர்களுக்கு அவர் பாலியல் ஒறுப்பை வலியுறுத்தினார்.


சொல்லப்போனால் காந்தியின் காலகட்டம் கிட்டத்தட்ட முடியும்போதுதான் தனிமனிதனின் பாலியல் சுதந்திரத்தின் முக்கியத்துவம் ஐரோப்பிய சிந்தனையில் ஒரு முக்கியமான விஷயமாக ஆகியது. அதற்கு சிக்மண்ட் ஃப்ராய்ட் ஒரு தொடக்கப்புள்ளி. அதற்கு முன் அங்கே பாலியலின் முக்கியத்துவம் பற்றிப் பேசிய அனைவருமே கிறித்தவ மதமரபால் ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஐரோப்பாவில் இருந்த பாலியல் அடக்குமுறை உலகில் எங்குமே இருந்ததில்லை.


அதை எதிர்த்து ஐரோப்பாவின் எழுத்தாளர்களும் கலைஞர்களும் தத்துவவாதிகளும் சேர்ந்து பாலியல் சுதந்திரத்தை, பாலியல் உரிமையை வாதிட்டு நிலைநாட்டினார்கள். அதை அவர்கள் தனிமனித உரிமையின் ஒரு பகுதியாகவே கண்டார்கள். ஆனால் அதைத்தொடர்ந்து வந்த முதலாளித்துவம் பாலியலை ஒரு முக்கியமான வணிகப்பொருளாக ஆக்கியது. முதலாளித்துவம் நுகர்வை அடிப்படையாகக் கொண்டது. கட்டற்ற நுகர்வுக்கு கட்டற்ற இன்ப நாட்டம் தேவை. கட்டற்ற இன்பநாட்டம் கட்டற்ற பாலியல் வழியாகவே வரமுடியும்.


ஆகவே பாலியல்சுதந்திரத்தை முன்னிறுத்தியது முதலாளித்துவம். எல்லா ஊடகங்கள் வழியாகவும் அதைப் பெருக்கியது. நுகர்வுக்கான விளம்பரத்துக்குப் பாலியல் முக்கியமான ஊடகமாக ஆகியது. நவீன வணிக ஊடகம், பாலியலை மேலும் மேலும் பெருக்கிக்கொண்டிருக்கிறது. அதற்குத் தேவையான சிந்தனைகளைப் பல தளங்களில் இன்றைய முதலாளித்துவம் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. உடலைக் கொண்டாடுதல், வாழ்க்கையைக் கொண்டாடுதல் என்றெல்லாம் பல்வேறு பெயர்களில் நவீனமுதலாளித்துவம் இன்று முன்வைப்பதெல்லாம் நுகர்வைக் கொண்டாடுவதைத்தான்.


நம்மைச் சுற்றி 'அனுபவி, பயப்படாதே, தயங்காதே, கட்டுப்படுத்திக்கொள்ளாதே, குற்றவுணர்ச்சி தேவையே இல்லை' என நவீனமுதலாளித்துவம் முழங்கிக்கொண்டிருக்கிறது. அதன் நடுவே நின்றுகொண்டு நாம் காந்தியைப் பார்க்கிறோம். அவர் நூற்றாண்டுகளுக்குப் பின்னால் எங்கோ இருப்பவர் போலத் தோன்றுகிறது. அவர் பாலியல்பற்றிச் சொன்னதெல்லாம் அடக்குமுறை போலத் தோன்றுகிறது.


சாமானிய மனிதர்கள் உலக இன்பங்களுக்காக வாழ்பவர்கள். யோகிகளைப்போல அவர்களும் புலன்களை ஒடுக்கவேண்டும் என காந்தி சொன்னது அசட்டுத்தனம். ஆனால் காமமும் நுகர்வுவெறியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என அவர் உணர்ந்திருந்தார். கட்டற்ற நுகர்வு உலகை அழிவுக்குக் கொண்டுசெல்லும் என அவர் நினைத்தார். அதற்காகவே நுகர்வையும் காமத்தையும் கட்டுப்படுத்தவேண்டுமென வாதிட்டார். அதில் ஓர் உண்மை இருக்கிறது என்றே தோன்றுகிறது.


ஜெ


தொடர்புடைய பதிவுகள்

லாரி பேக்கர்
காந்தியின் சனாதனம் — கடிதங்கள்
காந்தியும் சந்திரசேகர சரஸ்வதியும்
காந்தியின் சனாதனம்-6
காந்தியின் சனாதனம்-5
காந்தியின் சனாதனம்-4
காந்தியின் சனாதனம்-3
காந்தியின் சனாதனம்-2
காந்தியும் சனாதனமும்-1
இந்திய நிர்வாகம் — கடிதம்
அதிகாரமும் கலங்கலும் — கடிதம்
கலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] — 3
காந்தியும் கடவுளும்
சைவ வெறுப்பா?
காந்தியும் லோகியாவும்
கடிதங்கள்
பாரதி விவாதம் 8 — விமர்சனம் எதற்காக ?
பாரதி விவாதம் 5 — தோத்திரப் பாடல்கள்
உணவும் விதியும்
காந்தி-சுபாஷ் , கடிதம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 24, 2012 11:30

கூடங்குளம் – ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,


வணக்கம். கூடங்குளம் பற்றிய தங்களின் பதிவைப் பார்த்தேன். அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு எழுதியிருக்கிறீர்கள். ஒரு ஆதங்கம் ஏமாற்றம் கோபம் தெரிகிறது. இதில் உந்தப்பட்டு தங்களின் தளத்தில் நீண்ட நாட்களுக்கு முன் படித்த கூடங்குளம் பற்றிய பிற கட்டுரைகளை மீண்டும் படித்தேன்.


இதில் இரண்டு விஷயங்கள். ஒன்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கருத்து. மற்றொன்று அதைப் பார்க்கும் இயக்கும் மனிதனை சார்ந்தது. இந்த அறிவியல் கருத்தில் மனிதனின் அரசியல் அதாவது சுயநலம் பேராசை சுய விருப்பு வெறுப்புகள் கலந்துவிட்டபடியால் நம்மால் இந்த விஷயத்தில் ஒரு ஒத்த அறிவார்த்த அறிவியல் கருத்தை உருவாக்க முடியவில்லை. அதையும் உணராமல் விவாதத்தில் ஈடுபடும் மனிதனின் குணத்தால் இங்கு சுமுகமான நிலையில் கருத்துப் பரிமாற்றங்கள் ஏற்படவில்லை.


மனிதனின் தேவைகள் அதிகரித்தபடியாலும் அசௌகரியங்களைத் தாங்கும் மனநிலை குறைந்துவிட்டபடியாலும் இன்று மின்சாரத்தேவைகள் மிக அதிகம். நான் படித்துப் புரிந்தவகையில் எந்த வழியில் நாம் மின்னுற்பத்தி செய்தாலும் அதில் சாதக பாதகங்கள் இருக்கின்றன. ஆனால் மின்சாரம் வேண்டும். அதிகம் வேண்டும். அது எப்படி? இந்த ஒரு பெரிய தேவையின் முன்னால் எந்தப் போராட்டமும் வெற்றியடைவது கடினமே.


எந்தப் பற்றாக்குறை நிலையிலும் லாபம் அதிகம். அதுவும் சமுதாயத்தின் பற்றாக்குறை நிலையை சரி செய்யும் பொறுப்பும் அதை செயல் படுத்தும் பொறுப்பும் அதிகாரமும் ஒரே அரசியல் செயலாட்சித் துறைகள் இடத்தில் இருப்பதால் அவர்கள் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இந்த அணுமின் நிலையத்தால் லாபம் பலருக்கு. அதுவும் நமக்கு கிருபை அருளும் மனதுடன் நாம் அறியாத வழிகளில் நமது வாழ்வை மேம்பட வைக்கிறோம் என்று நினைக்கும் செயலாட்சித் துறையினர் இருக்கும்போது அவர்கள் சமுதாய காந்திய போராட்டங்களை அறியாக் குழந்தைகள் செய்யும் சுட்டிகளாகவே பார்ப்பார்கள். அவர்களின் பொறுமை கடந்தால் பிரம்படிதான்.


அதிலும் இன்றுள்ள மின்பற்றாக்குறை கடின நிலையில் லாபம் காணக் காத்திருக்கும் அரசியல் செயலாட்சித் துறைகள் இருக்கும்போது இந்த விதமான போராட்டங்களை சமுதாயமெங்கும் பரவச் செய்திருக்கவேண்டாமா? அப்போதுதானே அந்தத்துறைகள் போதிய மரியாதையுடன் இந்தப் போராட்டத்தைப் பார்க்கும். இல்லையேல் இது ஒரு சட்ட ஒழுங்கு விஷயமாகவே பார்க்கப்படும். நீங்கள் நினைப்பது போல் இந்தப் போராட்டத்தில் பெரும் உண்மை இருக்குமேயானால் அவர்கள் இந்த விஷயங்களைப் பொதுத்தளத்தில் பலரறிய வைக்காமல் விட்டது ஒரு பெரும் தவறே. பலர் வந்தார்கள் உதவ இருப்பதாக சொன்னார்கள். என்ன ஆயிற்று? மேதா பாட்கர், திருமாவளவன், விஜயகாந்த்……….


அதிலும் சமுதாய உள்ளுணர்வுகளை செயல்முறைகளை அறிந்த நீங்கள் இதில் கோபப்பட என்னயிருக்கிறது? அணுஉலை எரியும். மின்னுற்பத்தி ஆகும். அதை இனிமேல் தடுப்பது கடினமே.


அன்புடன்,

திருச்சி வே. விஜயகிருஷ்ணன்


தொடர்புடைய பதிவுகள்

கூடங்குளம்
கூடங்குளமும் கலாமும்
நிலக்கரியும் அணுசக்தியும்-கடிதம்
அனலும் அணுவும்
கூடங்குளம் இரு கடிதங்கள்
கூடங்குளம்-கடிதம்
கூடங்குளம் அனுபவப்பதிவு
கூடங்குளம் செய்திகள்
ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை
கூடங்குளம் கடிதங்கள்
அணுமின்சாரமின்றி வேறு வழி இல்லையா?
கூடங்குளம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 24, 2012 11:30

March 23, 2012

வளைகுடா பயணம்

வரும் ஏப்ரல் 11 ,12 தேதிகளில் துபாய்க்கும் , 13 லிருந்து ஐந்து நாட்களுக்கு குவைத்துக்கும் நானும் நாஞ்சில்நாடனும் அங்குள்ள தமிழ்ச்சங்கம் ஒன்றின் அழைப்பின் பேரில் பயணமாகிறோம். நண்பர்களின் ஏற்பாடு.


முழு நிகழ்ச்சி நிரல் பின்பு அறிவிக்கப்படும்,


நாஞ்சில் 'மரபிலக்கிய அறம்' பற்றியும் நான் 'அறன் எனப்படுவது யாதெனின்' என்ற தலைப்பிலும் உரையாற்றவிருக்கிறோம்.


தொடர்புக்கு


துபாய்:senshe -

me.senshe@gmail.com

குவைத்:Siddrth -neotamizhan@gmail.com


தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 23, 2012 11:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.