சந்திரசேகரர்- கடிதங்கள்

அன்பின் ஜெ..


அப்பாடி.. ஒரு வழியா ஒரு வட்டம் முடிவுக்கு வந்து விட்டது.


ஒபிலிக்ஸின் (obelix) பாஷையில் சொல்வதென்றால் – zigzagly..


இருவரின் குறைகளும் நிறைகளும் ஒரே contextல் பார்த்துப் பேசும் போது முழுமையடைகிறது.


ஒரு முழுமையான குருவைக் காண்பிக்க வேண்டி நின்ற பால் பிரண்டனுக்கு, ரமணரைக் காட்டிய அதே சந்திரசேகரர்தான், ரமணர் தன் தாய்க்குக் கோவில் கட்டக் கூடாது என்று சொன்னவர்.


தலையார்க் கான் என்னும் பார்ஸி பக்தை, ரமணர் முதலில் தங்கியிருந்த ஆயிரங்கால் மண்டபத்தைப் புனருத்தாரணம் செய்த விழாவுக்கு வந்த ராஜாஜிக்குக் கறுப்புக் கொடி காட்டி வீணாக்கிய நேரத்தில், பெரியார் ரமணரைச் சந்தித்திருக்கலாமேன்னு தோணும்..


இருபது வயதில் வெறுப்பு விருப்புகள் அதிகம்.


நாற்பத்தைந்தில் ஒரு மிதமான பார்வை வந்திருக்கிறது..


நீங்கள் நின்று கொண்டிருக்கும் அதே நிலையில் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருக்கிறேன். சந்தோஷம்!


அன்புடன்


பாலா


சந்திரசேகரேந்திர சரஸ்வதியைப் பற்றிய உங்கள் பதிவு நடுநிலையாய் இருந்தது. கல்கியில் அரைப்பக்கம் தேர்ந்தெடுத்துப் பிரசுரித்ததை ஒரு காலத்தில் விடாமல் படிப்பதுண்டு. நீங்கள் சொன்னமாதிரி தீண்டாமையைப் பற்றிக் கொஞ்சம்கூடத் தன் வைதீக வட்டத்தை விட்டு யோசிக்காதவர் அவர். பிராமணன் இப்போதெல்லாம் தன் ஆச்சாரங்களை பின்பற்றவில்லை என்று புலம்பிவிட்டு, ஆனாலும் அவன் பிராமணன்தான் மற்றவர்கள் தொடக்கூடாது என்றே விரும்பினார். என்றாவது எல்லா பிராமணரும் மறுபடியும் சடங்கு சம்பிரதாயங்களை ஒழுங்காகக் கடைப்பிடிப்பார்கள் என்ற நப்பாசையே அவரது பேச்சில் தெரிந்தது. வரதட்சணை வாங்கினால் அந்தக் குடும்பத்தினர் சங்கர மடத்தில் பத்திரிக்கை வைத்து ஆசீர்வாதம் வாங்கவரக்கூடாது என்றவுடன் எல்லாரும் வரதட்சணை வாங்குவதை நிறுத்தவில்லை. மடத்தில் பத்திரிக்கை வைப்பதை நிறுத்திவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.


பிராமணர்கள் எப்படி என்று இது ஒரு உதாரணம். எனக்கு இந்த மாதிரி so called பிராமண நண்பர்கள் அதிகம்.


அவர்கள் யாருமே எதையுமே சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. பிறகு எதற்கு பிராமணன் உசந்தவன் என்று அலட்டிக் கொள்கிறீர்கள் என்று அடிக்கடி தோன்றும்.


என்னைப் பொறுத்தவரை லௌகீக வாழ்க்கையில் தன் 'கவனம்' இல்லாமல் உள்முகப் பயணத்தில் கவனம் வைப்பவனே, பிராமணன். அவர்கள் எல்லா ஜாதியிலும் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் வைதீகம் mainstream ல் இருந்தது. அது சமூக,அரசியல் காரணங்களால் கூட இருக்கலாம் அதை வைத்து இன்று குதிப்பவர்கள் கணிசமாகவே இருக்கிறார்கள்.. அப்படிப் பார்த்தால் புத்தமதம், சமணம் கூட mainstream ல் இருந்து பின்னர் விலகியிருக்கிறது.


ஒரு நாள் இணையத்தில் 'தெய்வத்தின் குரல்' முழுப் புத்தகமும் (மின்னூல்) கிடைத்தது. 4700 பக்கமும் ஒரே மூச்சில் படித்தேன். (இப்போதும் அடிக்கடி ஏதாவது பக்கத்தைத் தேர்ந்தெடுத்துப் படிப்பதுண்டு) சத்தியமாகச் சொல்லவேண்டும் என்றால் அவர் படித்த நூல்களுக்கு அளவே இருந்திருக்காது என்றே தோன்றுகிறது. இந்த மண்ணின் கலைகள் பற்றிய ஒரு சிறு அறிமுகம் (அறிமுகம்தான்) இந்த புத்தகத்தில் நிறையவே கிடைக்கிறது. ஒத்துப்போகவே முடியாதவைகளும் படிக்கப் படிக்க வந்துகொண்டே இருக்கும். நிராகரித்தபடியே போகவேண்டியதுதான். பக்திதான் பிரதானம். வைதீகம் பற்றிய பெருமைகள் நிறையவே உண்டு. ஆனால் நீங்கள் சொன்ன மாதிரி ignore பண்ணவேமுடியாத நூல்.


தமிழ்ச் சொற்களின் வேர்ச்சொற்கள் பற்றிய நிறைய நிறைய குறிப்புகள் என்னை அதிகம் கவர்ந்தன. அதே போல யோகம் பற்றியதும்.


ஞானமடைந்தவர்கள் கூட அவர்கள் அதற்கு முன்பு சொன்னவை அபத்தங்களாகவே இருக்கலாம். இவரைப் பற்றித் தெரியாது. ஒரு பாரம்பரிய மடத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். அதில் கண்டிப்பாக அபத்தங்கள் இருக்கும். அது இல்லாதவர் என்றெல்லாம் கூறவேமுடியாது. அதிலும் மாறிக்கொண்டே வரும் சமூகம் பற்றிய கருத்துகள் செல்லாத நோட்டுக்களாகவே இருந்தன. அது mainstream லிருந்து வைதீகம் போகிறதே என்று வந்த புலம்பலாகவே எனக்குப் படுகிறது.


இப்போது மடம் இருக்கும் நிலமை ஹா…ஹா….ஹா….தான். எப்படி சிரிப்பது என்று தெரியவில்லை. ஆனாலும் நீங்கள் சொல்கிற இந்த முரணியக்கம் எல்லாத் துறைகளிலும் தேவையாய்த்தான் இருக்கிறது. இல்லையெனில் ஒருசார்பு அராஜகம் பண்ண ஆரம்பித்துவிடுகிறது. அது எந்த பக்கமாகவும் இருக்கலாம்.


-மாயன் (அகமும் புறமும்)


http://ahamumpuramum.blogspot.com/


அன்புள்ள ஜெ,


இந்தக் கட்டுரைக்கு மிக்க நன்றி. இந்து வேத மரபு, கலைகள், சமயம், காவியம் ஆகியவற்றின் மீதும், நவீனக் கல்வி, சாதிய மறுப்பு, சமுதாய சமத்துவம் ஆகியவற்றின் மீதும் இணையான பற்றும் மதிப்பும் கொண்டிருப்பவன் நான். என்னைப் போன்ற ஒருவனுக்கு, இதில் விளையும் குழப்பங்களையும் தடுமாற்றங்களையும் சமநிலையில் நோக்க வேண்டியதன் அவசியத்தை அருமையாக உணர்த்தியது இந்தக் கட்டுரை.


// ஆனால் சந்திரசேகர சரஸ்வதி அவர்களை நான் வெறுக்கமுடியாது. ஏனென்றால் நியாயஉணர்ச்சியும், மகத்தான நட்புணர்ச்சியும், அப்பழுக்கற்ற நேர்மையும் கொண்டவரான ; அதேசமயம் சாதிவெறியரும், ஆணாதிக்கவாதியுமான என் அப்பா வயக்கவீட்டில் பாகுலேயன் பிள்ளையை நான் இன்னும் வெறுக்கவில்லை. //


இந்த வரிகள் நெகிழ்ச்சியூட்டி விட்டன. என் நினைவில் இவை என்றும் நீங்காமல் இருக்கும்.


அன்புடன்,

ஜடாயு


அன்பின் ஜெ.


சந்திரசேகர சரஸ்வதி – அருமை. சோற்று கணக்கு படித்த அனுபவத்தைக் கொடுத்தது.


சந்திரசேகரை மேலோட்டமாகப் பிடிக்காது. இருந்தாலும் ஆழ் மனத்தில் ஒரு நல்லெண்ணம் இருந்தது. அதைத் தர்க்க பூர்வமாக அப்பட்டமாகப் பேசி நீங்க நடுநிலைக்கு கொண்டு வந்திட்டீங்க. இனிமேல் நாமளும் பப்ளிக்கா சொல்லிக்கலாம்லே. அவர் எங்காளு தான்னு. ( தமிழ். இந்தியன்)


எப்படி இப்படி எல்லாம் எழுத முடிகிறது உங்களால். சான்சே இல்லை. கொன்னுட்டீங்க. எல்லா விசயங்களையும் அறுத்து எங்களுக்கு சிகிச்சை கொடுத்திட்டீங்க.


ஏதும் மடம் ஆரம்பிக்கிற ஐடியா இருந்தா சொல்லவும்.


வாழ்க


முத்துகுமார்


திரு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்


தங்களின் மகாத்மா பற்றிய கட்டுரைகள் எல்லாம் மிக அற்புதமான விஷயங்களைச் சொல்லி வருகிறது, நான் காந்தியின் மீது மிகுந்த மரியாதை கொண்டவன், பலர் அவரைப்பற்றி அவதூறு பேசும்போது, அவரைப்போல ஒருநாள் கூட வாழமுடியாதவர்கள்தான் அப்படி பேசுவார்கள் என்று தோன்றும். உங்கள் கட்டுரைகள் எனக்கு அவர்களோடு வாதிக்க மிகவும் உதவி இருக்கின்றன.


இந்த சந்திரசேகர சங்கராச்சாரியார் மீது மிகுந்த மரியாதை இருந்தாலும், அவரின் பிராமண எண்ணங்கள் எனக்கு உடன்பாடில்லைதான் ஆனால் காந்தியோடு அவர் கொண்ட இந்த கருத்துவேறுபாடும் அந்த சந்திப்பு பற்றிய நுணுக்கமான உங்கள் விவரிப்பு என்னை மிகவும் பிரமிக்க வைத்தது. சந்திரசேகரின் வாதம் பற்றி எனக்கு பெரிய பிரமிப்பு இல்லை, அவரின் எண்ணங்கள் அப்படித்தான் இருக்கக் கூடும்

என்பது அவரின் சில புத்தகங்கள் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது.ஆனால் அவர் காந்தியை சூத்திரர் என்பதால் மாட்டுத் தொழுவத்தில் சந்திக்க நினைத்ததும் எனக்கு அவர் மீது இருந்த மதிப்பை குறைத்துவிட்டது.


ஒரு சூத்திரனிடம் தான் சார்ந்த மதம் அழியக்கூடாதென்று கண்ணீர்விட்டுப் பிச்சை எடுப்பதில் குற்றமில்லை, அந்த சூத்திரனை சந்திக்க தமிழகத்தில் இருந்து கேரளாவரை நடந்து போனதில் குற்றமில்லை ஆனால் அந்த சூத்திரனை சந்திக்க ஒரு தொழுவத்தைத் தேர்ந்தெடுக்க மட்டும் தெரிந்திருக்கிறது. என்ன கொடுமை.


நிறையத் தகவல்கள் நிறைந்த கட்டுரை. மிகவும் நிறைவாக உணர்கிறேன். கூடவே நாராயணகுரு அவர்கள் தான் காந்திக்கு தீண்டாமைப்பற்றிய தெளிவைக்கொடுத்தவர் என்றும் படித்திருக்கிறேன், அது உங்கள் கட்டுரை மூலம் மேலும் அறிந்ததில் மிகவும் மகிழ்ச்சி.


மகாத்மா பற்றிய உங்கள் கட்டுரைகள் என்றும் நிலைத்திருக்கும்


அன்புடன்


தவநெறிச்செல்வன்

தொடர்புடைய பதிவுகள்

பெரியார்- அறிவழகனின் கடிதம்
காந்தியும் சந்திரசேகர சரஸ்வதியும்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 03, 2012 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.