Jeyamohan's Blog, page 2237
May 15, 2012
நாஞ்சில்நாடன் அமெரிக்கப் பயணம்
அன்புள்ள ஜெயமோகன்
வரும் ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 15 வரை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அமெரிக்காவிலும் கனடாவிலும் பயணித்து வாசகர்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளிலும், அவரை கவுரவிக்கும் சில பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொள்ள இருக்கிறார். அவரது அமெரிக்க/கனடா பயணம் குறித்தான கீழ்க்கண்ட நிரலை உங்கள் தளத்தில் வெளியிடும்படி கேட்டுக் கொள்கிறேன். ஜூன் 30 அன்று நாஞ்சில் நாடன் கலந்து கொண்டு உரையாற்றும் பொது நிகழ்ச்சி ஒன்று கலிஃபோர்னியா சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் அனேகமாக ஜூன் 30 அன்று நடைபெறும். மேலும் அவர் நிகழ்த்தும் சில நிகழ்ச்சிகளும் இப்பகுதியில் இடம் பெறவுள்ளன. நிகழ்ச்சியின் இடம், நேரம் குறித்து பின்னர் அறிவிக்கிறேன். நிகழ்ச்சி நிரல் குறித்து மேலதிக விபரங்களுக்கு கீழ்க்கண்ட முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.
ராஜன் – 510-825-2971 – strajan123@gmail.com
பாலாஜி – 617-239-8551 – bsubra@gmail.com
அன்புடன்
ராஜன்
5/30/2012 Wednesday Arrival in Boston BA0036 / BA1524 Depart – 05:31 AM
5/31/2012 Thursday Boston Visit
6/1/2012 Friday Start to NY
June 2, 3, 4 2012 Sat/Sun/Mon NYC, New Jersey
6/5/2012 Tuesday Start back to Boston
6/6/2012 Wednesday New Hampshire – Meyyappan
6/7/2012 Thursday MIT, Harvard – Arvind
6/8/2012 Friday Start to Washington DC United Airlines 363 Depart – 7:30 PM
6/9/2012 Saturday DC Tamil School Meet – Velmurugan
6/10/2012 Sunday Nirmal – Washington DC
6/11/2012 Monday Velmurugan – Mt Vernon, Baltimore, DC
6/12/2012 Tuesday Flight to Son Ganesh’s place from IAD
June 13 – 17 Charlotte NC
June 18 – July 2 San Francisco, Bay area
July 3 – 8 Texas/Dallas
July 9 – 14 Minneapolis/st. Louis
7/15/2012 Sunday Start to Toronto
July 16 till July 23 Canada – Niagara Falls
7/24/2012 Tuesday Start back to Bangalore from Boston BA0212 / BA0119 Depart – 19:10:00
7/26/2012 At Bangalore Arrive – 4:30:00
தொடர்புடைய பதிவுகள்
நுண்தகவல்களும் நாஞ்சிலும்
நகுலன் நினைவு
உண்பேம்
கடிதங்கள்
நாஞ்சில்நாடன் கூட்டம் மக்கள் தொலைக்காட்சியில்…
நாஞ்சில்நாடன் பாராட்டுவிழா பதிவுகள்
ஜனவரி 3
கடிதங்கள்
குணங்குடி-நாஞ்சில்
நக்கலும் நாஞ்சிலும்
May 14, 2012
ஒப்ரா வின்ஃப்ரேயும் அமீர்கானும்
அன்பின் ஜெ..
சில ஆண்டுகளுக்கு முன்னால், விஜி, ஓப்ரா வின்ஃப்ரேயின் தொலைக் காட்சி நிகழ்வுகளைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பார். ஓப்ரா, சிறுவயதில் பாலியல் பலாத்காரப்படுத்தப் பட்டு, பின் சமூக தொடர் ஒன்றைத் துவங்கி மிகப் பிரபலமான ஒருவர். பல எபிஸோட்கள் மிகவும் நெகிழ வைத்தவை என்று சொல்வார்.. கேலியாக, நான் அவரை ‘ஒப்பாரி வின்ஃப்ரே என்று சொல்வேன்.
அதிகம் பார்த்ததில்லை.
ஆனால், சென்ற வாரம் “சத்யமேவ ஜெயதே” என்னும் அமீர் கானின் தொடர் பார்த்தேன். மிகவும் பாதித்து விட்டது.
பெண் சிசுக் கொலை என்னும் தலைப்பில் அந்த 1.30 மணி ஆவணம், பெண் சிசுக் கொலை என்னும் தலைப்பை நன்றாக ஆராய்ந்து, அதன் காரணங்களை, அது பற்றிய தவறான எண்ணங்களை அகற்றி, பாதிக்கப் பட்டவர்களுடன் உரையாடி, அது சம்பந்தமாக மேலே செய்ய வேண்டிய காரியங்களைக் குறிப்பிட்டு நேயர்களையும் அதில் ஈடுபட அழைத்து – இது போன்ற ஒரு முழுமையான தொடர் கண்டு மிக நாட்களாயிற்று.
மிக முக்கியமாக, ராஜஸ்தானில், sting operation மூலம் வெளிக் கொணரப்பட்ட, பெண் சிசுக் கொலைக்கு உடன் போகும் மருத்துவர்களை வெளிக் கொணர்ந்த பத்திரிகையாளர்களுடனான பேட்டி. ஒரு சமூக சாதனையாளர்களாகக் கொண்டாடப் பட வேண்டிய அவர்கள், பல்வேறு கோர்ட்களில் அலைக்கழிக்கப் படும் அவலத்தையும் சுட்டிக் காட்டி, ராஜஸ்தான் அரசுக்கு, அவ்வளவும் கேஸ்களையும் ஒரு கோர்ட்டுக்கு மாற்றக் கேட்கும் ஒரு மனுவுக்கு ஆதரவு திரட்டினார். இது ஒரு மிக முக்கியமான ஒரு செயல்பாடு. சும்மா போன போக்கில் நம் நாட்டின் பிரச்சினைகளைப் பற்றி வெறும் உணர்ச்சிகரமாகப் பேசி விட்டுப் போய்விடாமல், அதை மாற்ற ஒரு துரும்பை எடுத்துப் போடும் ஒரு மிக முக்கியமான முயற்சி.
இவ்வாரம் சிறு வயதில் பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப் படுபவர்களைப் பற்றி.
மிகவும் துணிச்சலாக ஒரு இள வயது பெண்ணும், ஆணும் முன் வந்து தாங்கள் பாதிக்கப் பட்ட கொடுமையைக் கூறினார்கள். இந்தியப் பொதுவெளிக்கு இது மிகவும் புதிது.
இதன் பல பரிமானங்களையும் வழக்கம் போல் ஆராய்ந்து, மன நல மருத்துவர்கள், குழந்தைகளுக்கு உதவும் 1098 child help line போன்றவர்களுடன் பேசி, – இது பற்றிய ஒரு சட்டம் கூட இல்லாத கொடுமையையும் சுட்டிக் காட்டினார்.
சிறு குழந்தைகளுடன் ஒரு சின்ன வொர்க்ஷாப் நடத்தினார். பாலியல் அத்துமீறல்கள் என்பதை எப்படிக் குழந்தைகள் உணர்ந்து கொள்வது என்பது பற்றி.
வழக்கம் போல, ஒரு மனு – பாராளுமன்ற மேலவையில் ஒரு இளம் பருவ பாலியல் தடுப்புச் சட்டம் இன்னும் நிறைவேறாமல் இருப்பதைச் சுட்டிக் காட்டி, அதை நிறைவேற்றக் கோரும் ஒரு மனு.
எஸ்.எம்.எஸ்கள் மூலம் ஆதரவு திரட்டி, அந்த எஸ்.எம்.எஸ்களின் கட்டனத்துக்கு ஈடான ஒரு தொகையைத் திரட்டி. child help line நிறுவனத்துக்கு வழங்கும் ஒரு திட்டத்தையும் வைத்திருக்கின்றார். அதற்கு, ரிலையன்ஸ் ஃபௌவுண்டேஷனின் துணையையும் வைத்திருக்கிறார்.
மிக மிகத் துணிச்சலான, நேர்மையான முயற்சி. தன் புகழை ஒரு சமூகக் காரியத்துக்குப் பயன்படுத்தும் அமீர் பாராட்டப் படவேண்டியவர். ஒரே சமயத்தில், தூர்தர்ஷன், ஸ்டார் மற்றும் பல்வேறு மொழித் தொலைக்காட்சிகளிலும் வெளியாக ஒப்பந்தங்கள் என்று மிக புத்திசாலித்தனமாகவும் செயல் பட்டிருக்கிறார்.
அண்ணா ஹசாரேயின் போராட்டத்துக்குப் பின் அடுத்த மிக முக்கியமான சமூகச் செயல்பாடு இது. ஈஸ்வர் அல்லா தேரே நாம் நாவலில், ஆதி சொல்வார், ‘காந்திய வழி அருகம்புல் போல.. கோடையில் காய்ந்தது போல் இருந்தாலும், ஒரு நாள் மழைக்கு மீண்டும் முளைத்தெழுந்துவிடும்’ என்று. எவ்வளவு உண்மை?
அன்புடன்
பாலா
சார்,
இன்று காலை நாங்களும் அமீர்கானின் சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியைப் பார்த்தோம். இன்னொரு விவாத நிகழ்ச்சி என்று நினைத்த எங்களுக்கு இந்நிகழ்ச்சி நடத்தப்பட்ட விதம் ஆச்சரியம் தந்தது. முதலில் பாலியல் தொந்தரவுக்கு ஆளான குழந்தைகளைப் பற்றிய புள்ளி விவரம், அதைப் பற்றி மேலும் அதிக விவரங்கள், பிறகு அதனால் பாதிக்கப்பட்ட இருவரின் பேட்டி, ஒரு பொது ஒரு மனநல மருத்துவரின் விளக்கங்கள், அதன்பின் Child Helpline-ஐச் சேர்ந்த ஒருவரோடு அவரது அனுபவம் குறித்து சிறிது நேரம் பேச்சு, குழந்தைகளுடன் அவர்களுக்கு பாலியல் அத்துமீறல்கள் குறித்த அறிமுகம் என்று 1:30 மணி நேரத்தில் மிக நன்றாகத் தொகுக்கப் பட்டிருந்தது.
இன்றைய நிகழ்ச்சியில் மிகவும் யோசிக்க வைத்த விஷயம் குழந்தைகளை நம்பாத பெற்றோர்கள்தான். ரத்தம் வழியும் குதத்தைக் காண்பித்தும் நிறைய மாம்பழம் சாப்பிட்டதால் வந்த பிரச்சினை என்று தன் மகனைச் சமாதானப்படுத்திய அன்னையை என்ன சொல்வது? பின்னர் அவரே இந்நிகழ்ச்சியில், ‘குழந்தைகள் சொல்வதைக் கவனியுங்கள், நம்புங்கள். இதுபோன்ற விஷயங்களில் பெரியவர்கள் சொல்வதை நம்பாதீர்கள்’ என்றார்.
மிகவும் தைரியமாக தங்களுக்கு நிகழ்ந்த மோசமான சம்பவங்களை இதுபோன்ற பொது நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
தமிழ் மொழிபெயர்ப்பு கொடுமையாக இருந்தது. சற்று நேரத்தில் பொறுக்க முடியாமல் ஹிந்தியிலேயே (ஆங்கில சப்-டைட்டில்களுடன்) பார்க்கத் தொடங்கினோம்.
இதுபோன்ற விஷயங்கள் தனக்கோ, தன்னைச் சார்ந்தவர்களுக்கோ நிகழாததாலேயே அவற்றைப் பற்றி எந்த அறிவும், கவலையுமற்ற மனிதர்களை இந்நிகழ்ச்சி கண்டிப்பாகக் கொஞ்சமாவது யோசிக்கவைக்கும் என்று நினைக்கிறேன்.
- ஆனந்த் உன்னத்.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
May 13, 2012
விஷ்ணுபுரம் – ஒருகடிதம்
அன்பு ஜெ,
வணக்கம். தங்களுடைய விஷ்ணுபுரம் நாவலை இப்போது படித்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை இத்தனை அருமையான வித்தியாசமான நாவல் தமிழில் எழுதப்படவில்லை என்பதை அறிந்தே வாங்கினேன். உங்களின் உலோகம் நாவலையும், காவல்கோட்டத்தையும் வாங்கினாலும், அது என்னை முழுவதுமாக புரட்டிப்போடப் போகிறது என்று தெரியாமல் விஷ்ணுபுரத்தினைத்தான் படிக்கக் கையில் எடுத்தேன்.
ஸ்ரீபாதம் படிக்கும்பொழுது முதலில் பொம்மைக்கடையில் தனியாக விடப்பட்ட குழந்தையொன்று எப்படி கண்ணில்படும் பொருட்களையெல்லாம் எடுத்துவைத்துக் கொள்ள இயலுமோ அப்படித்தான் நீங்கள் விஷ்ணுபுரம் என்ற நகரில் நிகழும் சம்பவங்களை எழுத்துக்களாக வடித்திருக்கின்றீர்கள் என நினைத்தேன். ஸ்ரீபாதத்தின் இறுதி அத்தியாயங்களைப் படிக்கும் பொழுதுதான் எல்லா கதாபாத்திரங்களும் ஒன்றுக்கொன்று எப்படி தொடர்புறுகின்றன என்பது தெரிந்தது. மிக நேர்த்தியான கட்டமைப்பினைக் கொண்ட இந்த நாவலை நான் குழந்தைக்கு ஒப்பிட்டதை எண்ணி வெட்கம் கொண்டேன். வீரன் கொல்லப்படும் இடத்தினை தவிர்த்திருக்கலாமே, ஒரு வாசகனை அழவைத்துப்பார்க்கையில் எழுத்தாளர்களுக்கு என்ன சுகமென்று நினைத்தேன். அதன் பின்தான் எல்லாமும் அந்த சம்பவத்தோடு பின்னிப் பிணைந்து நடக்கின்றன என்பதை உணர்ந்தேன். வீரனுக்காக கவலைகொண்ட மனம், அவன் காலில் மிதிபட்டு இறந்த இருபது பேருக்காக வருத்தம் அடையாதது கண்டு வியந்தேன். அப்போதே விஷ்ணுபுரம் பற்றி உங்களுக்கு எழுதியிருந்தாலோ, வலைப்பக்கத்தில் எழுதியிருந்தாலோ, அது உலகிலேயே விஷ்ணுபுரம் பற்றி ஞானமே இல்லாமல் எழுதியதாக இருந்திருக்கும். இறைவன் அருளால் அந்தத்தவறை நான் செய்யவில்லை. இந்தக்கடிதம் கூட எத்தனை தூரம் ஞானமானது எனத்தெரியவில்லை.
இப்போது ஸ்ரீபாதத்தினை முடித்தும் என்னால் அதைவிட்டு நகரமுடியவில்லை. இந்த நாவல் எழுத்தாளனைப்போல வாசகனையும் களப்பணி செய்ய கட்டளை இடுகிறது. மிகப்பெரும் தேடல்களில் இருந்து கட்டமைக்கப்பட்டவைகள் என்பதால், சிற்ப மரபுகள், யானை, குதிரை சாஸ்திரங்கள் பற்றி வரும் போது அறிவார்ந்த கற்பனை இல்லாமல் வறட்சியாக இருக்கின்றன என் கற்பனைகள். வீரனை சிறுனி என்று வாமனன் குறிப்பிடும்போது அதற்குள் இருக்கின்ற அத்தனையும் அறிந்து கொள்ள மனம் விழைகிறது. மரபுகளையும் சாஸ்திரங்களைப் பற்றியும் அடிப்படைகளைப் புரிந்துகொண்டு படித்தால் நாவலின் அடுத்தகட்ட பரிணாமத்தையும் நான் உணரமுடியும் என நம்புகிறேன். லலிதாம்பிகை நகைகளை வர்ணிக்கும்போதும், வைஜயந்தியும் சித்திரையும் தங்களை அழைத்துச்செல்ல வருகின்ற பெண் கூட்டத்தில் இருக்கும் இசைக் கருவிகளைப் பார்க்கும்போதும், குதிரை நாச்சியாரின் பெருமை விளங்கும் போதும் நான் கண்கள் இல்லாதவனாக உணர்கிறேன். உதாரணமாக அந்த இசைக் கருவிகள் எப்படியிருக்கும், அவைகள் எந்த இசையை எப்படி தரும் என்பதையெல்லாம் அறியாமல் ஒளி மங்கியது போல அவர்களை கற்பனை செய்தேன். அவைகளைப் பற்றி எங்கு சென்று படிக்கலாம் என்று சொன்னால் மிக்க கடமைபட்டவனாக இருப்பேன்.
ஸ்ரீபாதம் முழுக்க விரவியிருக்கும் கடவுள்கள் இந்து மதத்தில் இருப்பவைகள் என்பதால் கருடன், இந்திரன் என்றவுடன் என்னால் கற்பனை செய்ய இயலுகிறது. ஸ்ரீசக்கரத்தின் அமைப்புகளை உணர முடிகிறது. விஷ்ணுபுர கோவில்களின் பிரம்மாண்டத்தை அறியமுடிகிறது. ஆனால் பௌத்தம் பற்றிய அடிப்படை அறிவு இல்லாமல் போதிசத்துவர் என்று வருகிறபோது என் அறிவை நாவல் கேலி செய்கிறது. சென்று அறிந்துவிட்டு பின் வந்து என்னைத் தொடு என்று சொல்வது போல இருக்கிறது. அதிகார வர்க்கத்தின் எதிர்ப்புக் குரல்களும், எளியவர்களின் வாழ்வியல் நெறிகளையும் ஏற்கனவே பல வாசகர்கள் உங்களிடம் தாங்கள் உணர்ந்ததாகக் கூறியிருக்கிறார்கள். இந்து மதத்தில் ஓரினச்சேர்க்கை இருந்ததா என்று ஆச்சரியத்தில் வினவியிருக்கின்றாரகள். என்றாலும் இவைகளை நானும் உணர்ந்தேன் என்று கூறாமல் இருக்க முடியவில்லை.
மஹாபாரதம் போன்ற உறுதியான தளத்தினை விஷ்ணுபுரத்தில் காண்கிறேன். கிளைக்கதைகளும் பெரும் நாவலாக மாற்றமெடுத்து நிற்கும் மரபை, மீண்டும் விஷ்ணுபுரம் வழிவகை செய்திருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரங்களைப் பற்றியும் ஒரு தனி காவியம் உருவாக விஷ்ணுபுரம் அனுமதியும் தருகிறது. நளன் – தமயந்தி போல விஷ்ணுபுரத்தில் மூழ்கிப்போகும் ஒரு சிறந்த வாசகனால் எழுத்தாளனாகவும் மாற முடியும் என நம்புகிறேன். நமது தலைமுறையிலோ, அல்லது நம் வருங்கால தலைமுறையிலோ விஷ்ணுபுரத்தினை ஆராய்ந்து என் எண்ணத்திற்கு உயிர் கொடுக்கும் நிகழ்வு நடக்குமெனத் தோன்றுகிறது. வெறும் ஒரு பாகம் படித்த சாதாரணமான எனக்கே இந்த விஷயம் தோன்றும்போது, நிச்சயமாக இதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். விஷ்ணுபுரத்தினை அடிப்படையாகக் கொண்டு சிறுகதைகள், நாவல்கள் வருவதை வரவேற்பீர்கள் என நம்புகிறேன். அப்படி எழுத முனைபவர்களுக்கு தாங்கள் நிச்சயம் வழிகாட்ட வேண்டும்.
நாவலைப் படித்து முடித்ததும் கடிதம் எழுதலாம், இப்போது எழுதினால் அதில் தவறுகள் இருக்க வாய்ப்புகள் உண்டு என்று அறிவு எடுத்துக் கூறுவதை மனம் ஏற்கவில்லை. மேலும் எனக்கு முன்பு படித்தவர்களுக்கு உங்கள் நாவலை அடிப்படையாக் கொண்டு படைப்புகளைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமிருந்தால் அவர்களும் உங்கள் கருத்துகளை அறிந்து கொள்ள இது சந்தர்ப்பமாக இருக்கும் என நினைக்கின்றேன். எனவேதான் இக்கடிதம் எழுதினேன். என்னுடைய எண்ணம் நகைப்புக்குரியதாக இருந்தால் மன்னித்துவிடவும். விஷ்ணுபுரம் அள்ள அள்ளக் குறையாத மணிமேகலையின் அமுதசுரபியாக இருந்தும், அது இந்த நாவலோடு முடிந்துவிடக்கூடாது என்பதே என் எண்ணம். நான் இன்னும் இன்னும் விஷ்ணுபுரத்தில் மூழ்கக் காத்திருக்கிறேன்.
நன்றி
அன்புடன்,
ந.ஜெகதீஸ்வரன்.
சகோதரன் இணையதளம்
அன்புள்ள ஜெகதீஸ்வரன்,
விஷ்ணுபுரம் மட்டுமல்ல, ‘கிளாஸிக்’ தன்மை உடைய எந்த நாவலும் வாசிப்புக்கு ஒரு அறைகூவலையே அளிக்கிறது. எந்நிலையிலும் அந்த வாசிப்பு முடிந்துவிடுவதில்லை. ஒரு நாவலை வாசிக்க அனைத்து நூல்களையும் வாசிக்கவேண்டும் என்ற நிலையை அது எப்படியோ உருவாக்கிவிடுகிறது.
விஷ்ணுபுரம் பேசிக்கொண்டிருப்பது நம்முடைய சொந்தப்பண்பாட்டின் உள்ளடுக்குகளைப்பற்றி. நாம் அதை இழந்துவிட்டோம் என்பதனால் இந்தத் திகைப்பு ஏற்படுகிறது. அப்படியென்றால் கோதிக் காலகட்டம் பற்றிய ஒரு ஸ்பானிஷ் நாவல் நமக்கு எவ்வளவு தூரம் அன்னியமானது?அதை வாசிக்க நாம் எவ்வளவு முயற்சிகளை எடுக்கிறோம்? அம்முயற்சிகளில் ஒரு பகுதியை எடுத்தாலே விஷ்ணுபுரத்தை உள்வாங்கிக்கொள்ள முடியும்.
உண்மையில் நாவல் அளிக்கும் தகவல்களை ‘முழுமையாகவும் தெளிவாகவும்’ புரிந்துகொள்ளவேண்டுமென்ற கட்டாயமேதும் இல்லை.அத்தகவல்கள் நம்முடைய ஆழ்மனத்தில் எங்கெங்கோ பதிவாகியுள்ளன. அவை நமக்கு ஒரு கனவுநிலையை அளிக்கின்றன. கற்பனையை எப்படியோ தூண்டுகின்றன. நாவல் உத்தேசிப்பதும் அதைத்தான். அந்தக் கனவெழுச்சியும், அதன் மூலம் உருவாகும் படிமங்களுமே அந்நாவல் அளிக்கும் முதல்கட்ட அனுபவம்.
தகவல்களை மேலும் மேலும் அறிந்து விரித்து எடுத்துக்கொண்டே செல்வதென்பது நாவலை மேலும் அறிய வழிவகுக்கும். நாவலின் அடுக்குகள் விரியும். அது நாம் நம்மை, நம்முள் உறையும் நம் பண்பாட்டு ஆழத்தை அறியும் முயற்சியும் கூட. அது எளிதில் சாத்தியமாகாது. நாம் எந்தளவுக்குப் பயில்கிறோம் என்பதைப் பொறுத்தது அது.
ஆகவே முதல்முறை வாசிக்கையில் முற்றிலும் தகவல்கள் அனைத்தையும் தெரிந்துகொண்டு வாசிக்கவேண்டுமென்பதில்லை. வாசிக்க வாசிக்க நாவல் விரியலாம். விவாதங்கள் அதற்கு உதவலாம். வாசித்தது நிறைவாகிவிட்டது என்ற எண்ணம் மட்டும் வராமலிருந்தால் போதும்.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
விஷ்ணுபுரத்தின் வாசலில்…
கனவும் வாசிப்பும்
கொற்றவையும் சன்னதமும்
சந்திப்புகள் — சில கடிதங்கள்
நான் கண்ட விஷ்ணுபுரம்
விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம்
மேலான உண்மை — சீனு கடிதம்
அறிதலுக்கு வெளியே-சீனு
விஷ்ணுபுரம்- விமர்சனம்
விஷ்ணுபுரம் விருது விழா 2011 -டிச 18-கோவையில்
பரிணாமவாதமும் இந்திய மதங்களும்
கடிதங்கள்
கதைகளின் வழி
சிற்பச்செய்திகள்
அறிதல்-அறிதலுக்கு அப்பால்
தீராநதி நேர்காணல்- 2006
கடிதங்கள்.
கடிதங்கள்
இரு கடிதங்கள்
கடிதங்கள்
பாலமுருகனின் நாவல்
வணக்கம் ஜெ. நலமா? பாலமுருகன் அண்மையில் நாவல் வெளியிட்டிருந்தார். மலேசியாவில் வந்த நாவல்களில் வாசிக்க வேண்டிய படைப்பு. அந்நாவல் குறித்து எழுதியுள்ளேன்.
நன்றி,
நவீன்
நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்: அறங்களை மீறிய வாழ்வு!
தொடர்புடைய பதிவுகள்
மலேசியா ஒரு கடிதம்
கடிதங்கள்
சிறுகதை பட்டறையும் வல்லின கலை இலக்கிய விழாவும்
மலேசியாவில் இருந்து திரும்பினேன்
பினாங்கில் நான்காம்நாள்..
ஜெயமோகனுடன் மூன்றாவது நாள்
கெடா
ஜெயமோகனுடன் இரண்டாவது நாள்-2
பினாங்கிலே…
பேசித் தீராத பொழுதுகள் கே.பாலமுருகன்
மலேசியாவிலே
மலேசியா பயணம்
மலை ஆசியா 7
மலை ஆசியா 6
மலை ஆசியா 5
மலை ஆசியா 4
பாலமுருகன் பதில்
விமரிசகனின் தடுமாற்றங்கள்
மலை ஆசியா 3
மலை ஆசியா 2
May 12, 2012
ஓஷோ-கடிதங்கள்
அன்பு ஜெயமோகன்..!
ஓஷோ குறித்த தங்களின் பதிவைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். திரைப்படத்தில் சண்டைக்காட்சியின் போது, கதாநாயகன் மீது அடி விழுந்து விடக்கூடாது என்று தோன்றும் மன நிலையே ஒவ்வோரு முறையும் ஏற்படுகிறது. ஓஷோ பற்றி நீங்கள், எப்போதும் சரியாகத்தான் சொல்லி வருகிறீர்கள். ஆனால், அதைப் புரிந்து கொள்ளாதவர்கள் தங்கள் மீது வசை மாரி பொழிந்து விடுவார்களோ? என்ற அச்சம் இருந்தது. ”ஓஷோ – உடைத்து வீசப்பட வேண்டிய பிம்பம்-3″ அதைப் போக்கிவிட்டது. படிக்கப் படிக்க என் உடல் நடுங்க தொடங்கி விட்டது. காரணம், ஓஷோவின் மீது என் மனதில் வெகு காலம், தோன்றி வந்த உணர்வுகளும் அதேதான்.
பத்து ஆண்டுகளுக்கு முன்னால், ஆன்மீகத் தேடலில் சுற்றி அலைந்து கொண்டிருந்தேன். ஒரு முறை ஓஷோ பற்றிய தியான வகுப்புக்குச் செல்ல நேர்ந்தது. அப்போது, எனக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்து. நான் ஆத்தூர் மேல் நிலைப்பள்ளியில் படித்த போது, 7ஆம் வகுப்பில் வீராச்சாமி என்பவர் வகுப்பு ஆசிரியராக இருந்தார். தினமும் வருகைப் பதிவு குறிக்கும் போது ‘‘டேய் ரஜீனிஷ், நீயும் சாமியாரா போறீயாடா?’’ என்று, ரஜீனிஷ் என்ற பெயர் கொண்ட மாணவனைக் கிண்டல் செய்வார். ரஜினிகாந்தைத் தெரியும், ரஜீனிஷ் என்று சாமியாரா? யார் அது? அப்போது தோன்றும். இந்தப் பெயரை நான் காதில் கேட்கும் போது, ஓஷோ இறந்து ஒரு வருடம் (1991) ஆகியிருந்தது. அந்த ரஜீனிஷ்சாமியார்தான் இப்போது ஓஷோ என்ற பெயரால் அழைக்கப்படுவதாக சொன்னார்கள். ஆரம்பத்தில் அவர் புத்தகமும், ஆங்கில உரைகளும் ஒரு வித கிளர்ச்சியை கொடுத்தன. கொஞ்சம், கொஞ்சமாக அந்த தாடிக்காரன் என்னை விழுங்கத் தொடங்கினார்.
ஒரு கட்டத்தில் பூனாவில் உள்ள ஓஷோ ஆசிரமத்திற்கு சென்றேன். அங்கு நான் கண்ட காட்சிகள் என்னை உலுக்கிப் போட்டன. ஓஷோ சொல்லியது ஒன்று,அவரைப் பின்பற்றுவதாக சொல்லும் மக்கள் நடந்து கொள்வது ஒன்றாக இருந்தன. பெரும்பாலும், அங்கு வருபவர்கள், வெளிநாட்டுக்காரர்கள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதை வேடிக்கை பார்ப்பதும். ஓஷோ சமாதியில் வேண்டுதல் செய்பவர்களும்தான் அதிகமாக இருந்தார்கள். தன்னைப் பரிசோதித்துப் பார்க்க வந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஏறத்தாழ ஐந்து நட்சத்திர விடுதி போல இருந்த ஆசிரமத்தின் தோற்றமே பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.
ஓஷோ வின் ‘நியோ சன்னியாசி’ கொண்டாட்டத்தின் போது, நானும் சன்னியாஸம் பெற்றுக் கொண்டேன். எதற்காக என்றால் ஓஷோ என்ற பிம்பத்தை உடைக்க, அவர் வழியில் சென்றேன். உள்ளே, செல்லச் செல்ல அவர் மறைந்து போனார். நான் மட்டுமே நின்று கொண்டிருந்தேன். ‘‘என்னை எப்போதும் முன்னிலைப் படுத்த வேண்டாம். நான் உங்கள் குரு அல்ல. உங்கள் நண்பன் அல்ல. சாதரண சக மனிதன். என்னுடைய அனுபங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அந்த வார்த்தைகளில் மயங்கினால், உங்களைப் போல முட்டாள் யாருமல்ல. என்னைக் கடந்து செல்லுங்கள்…’’ என்று சுட்டிக்காட்டியதை உணர்ந்த போது, இந்த உலகமே வேறு விதமாகத் தெரிந்தது.
‘‘ஓஷோ அதைச் சொன்னார், இதைச் சொன்னார்…’’ என்று சுட்டிக் காட்டும் அறிவு ஜீவிகளைப் பார்க்கும் போது, சிரிக்காமல் இருக்க முடியவில்லை. இன்றளவும் என் வீட்டில் ஓஷோவின் புகைப்படங்கள் ஒன்று கூட இல்லை. வெகு சொற்பமான, முக்கியமான ஓஷோ புத்தகங்களும், சி.டிக்களும் மட்டுமே வைத்திருக்கிறேன். முன்பு சேகரித்த வைத்த ஞானக் குப்பைகளைத் தூக்கி எறிந்துவிட்டேன். எப்போதாவது, ஓஷோ தியான முகாம்களுக்கு செல்வது வழக்கம். (என்னதான் நடக்கிறது என்பதைப் பார்க்க) ஆனால், அங்கு காணும் காட்சிகளை சகிக்க முடியவில்லை. ஒரு சிலரைத் தவிர, பணம் சம்பாதிக்கவும், தங்களை ஓஷோவின் வாரிசு போலக் காட்டிக் கொள்ளவுமே முகாம்களை நடத்துகிறார்கள்.
அதிலும் அங்கு வரும் நபர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். கழுத்தில் மணி மாலை அணிவதையும், தன்னுடைய படத்துக்கு மாலை மரியாதை செய்வதையும் உயிருடன் இருக்கும் போதே, ஓஷோ தவிர்க்கச் சொன்னார். ஆனால், சட்டைக்கு வெளியே ஓஷோ படம் போட்ட டாலரை மாட்டிக் கொள்வது, வெண்தாடி தவழும் ஓஷோ படத்தை வணங்குவது என்று… ஓஷோ சொல்லியவைகளுக்கு மாறான செயல்களே பலவும் நடக்கின்றன. சில நேரங்களில் ஓஷோவின் சுதந்திரத்தைத் தப்பாகப் புரிந்து கொண்ட கார்ப்பரேட் கம்பெனி, இளைஞர்களும், பெண்களும்… பார்ட்டிக்கு செல்லும் மனோபாவத்தில் வருகிறார்கள். இதானலேயே அந்தப் பக்கம் தலை காட்ட பயமாக இருக்கிறது.
ஒரு முறை ஓஷோ வாழ்ந்த காலகட்டத்தில், அவரைப் பின்பற்றியவர்களைக் காண வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் நிறையப் பேர் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இரண்டு, மூன்று பேரை சந்தித்தேன். அவர்கள் இன்று நித்தியானந்தா, ரவி சங்கர்… என்று வேறு ஓட்டலுக்கு மாறியிருந்தார்கள். இறுதியாக அவிநாசியில் சித்தார்த் என்பவரை சந்தித்தேன். ஓஷோ வாழ்ந்த காலத்தில் பூனா சென்று நேரில் அவரைப் பார்த்திருக்கிறார். சில ஆண்டுகள் ஓஷோ ஆசிரமத்தில் வாழ்ந்தும் இருக்கிறார்.
அவரிடம் பேசியபோது பல திறப்புகள் என்னுள் தோன்றியது. ‘‘ஓஷோ, என்றாலே எல்லோரையும் விமர்சிப்பவர், அரசியல்வாதிகளைத் திட்டுபவர்… எதையும், ஏட்டிக்குப் போட்டியாக சொல்பவர்… என்ற எண்ணம் அப்போதைய இளைஞர்களுக்கு இருந்தது. எனக்குத் தெரிந்த நண்பர்கள், ஓஷோ போலவே, உடை உடுத்துவது, எல்லோரையும் ஏளனமாகப் பேசுவது, எல்லாவற்றையும் மறுத்துப் பேசுவது… என்று இருந்தார்கள். இன்று அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. சிலர் தற்கொலை கூட செய்து கொண்டார்கள். ஓஷோவைத் தவறாக புரிந்து கொண்டவர்கள்தான் அதிகம்…’’ என்று சொன்னார். இந்த விஷயங்களை எல்லாம் தொகுத்து, விகடன் தீபாவளி மலர் 2011 இல் கட்டுரையாக எழுதியுள்ளேன்.
இறுதியாக… ஓஷோ கத்தியுடன் நிற்கிறார். அவரை வெட்டிச் சாய்ப்பதற்கு நம்மிடம் துணிவும், தெளிவும் வேண்டும். இல்லையே நாம் ஆன்மீக முடவர்களாகக் காலம் முழுவதும் சுற்றி அலையத்தான் நேரிடும்.
நேசத்துடன்,
பொன்.செந்தில்குமார்,
அன்புள்ள ஜெ.,
ஓஷோ எனக்குக் கல்லூரிப் பருவத்தில் அறிமுகமானார். அப்போது அவர் ‘செக்ஸ் சாமியார்’ என்ற லேபிளோடுதான் அறிமுகமானார். கட்டற்ற நுகர்வு என்ற அடையாளம் அவர்மீது அழுத்தமாக ஒட்டப்பட்டுள்ளது. ஆனால் அவர் நூல்களைத் தொடர்ந்து படிக்கும்போதுதான் தெரிந்தது – அவர் நுகர்வை ஒரு தியானமாக செய்யச் சொல்லுகிறார் என்பது.
உடலுறவோ, புகைபிடித்தலோ – எதையும் மிகுந்த பிரக்ஞையுடன் ஒரு தியானமாக ஒவ்வொரு கணத்தையும் உள்வாங்கி செய்வது எவ்வளவு கடினம் என்பது அதை முயற்சிக்கும்போதுதான் தெரிகிறது.
“நான் செக்ஸைப் பற்றிப் பத்து சதவிகிதம் தான் பேசியிருக்கிறேன்… மீதி 90% ஆன்மீக விஷயங்களைப் பேசுகிறேன்.. ஆனால், என்னை செக்ஸ் சாமியார் என்று சொல்வது பார்ப்பவர்களின் மனநிலையைத்தான் காட்டுகிறது…. விபத்தை ரசிப்பதற்காகக் கார்ப் பந்தயத்தைப் பார்ப்பவர்களைப் பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை” – இது ஓஷோ சொன்னது.
ஞானிகளை நாம் அவர்களின் தளத்தில் புரிந்துகொள்ள வேண்டும்… ஆனால் நாம் எப்போதுமே நம்முடைய தளத்திற்கு ஞானிகளை இறக்கித்தான் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம்… இதுவும் அவர் சொன்னதுதான்…
நன்றி
ரத்தன்
ஜெ
கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன் நான் ஓஷோ புத்தகம் படிக்கிறேன் என்று தெரிந்ததும் எனக்குக் கிடைத்ததெல்லாம் பல்வேறு அறிவுரைகள். அதுவரை என்னைக் கண்டுகொள்ளாதவர்களுக்கு எல்லாம் என்மீது ஏனோ பயங்கர அக்கறை பிறந்துவிட்டது.
பேருந்துப் பயணத்தின்போது அறிமுகமான ஒருவர் என்னைக் கிட்டத்தட்ட வலுக்கட்டாயமாக கோவையிலிருந்த தியான மையத்துக்கு அழைத்துச் சென்றார். என்னை உள்ளே அனுப்பிவிட்டு அவர் வெளியே காத்திருந்தார். வெளியே வந்தபிறகு ‘என்ன, இவர்களெல்லாம் யாரென்று புரிந்ததா? இனிமேல் ஓஷோவெல்லாம் படிப்பியா?’ என்றார். அவருடைய எண்ணம் அந்தச் சூழலைக் கண்டு நான் பயந்து ஓஷோவை விட்டுவிட்டு ஓடி வந்துவிடுவேன் என்பது அப்போதுதான் புரிந்தது.
அங்கு நிலவிய சூழல் முதலில் கொஞ்சம் அதிர்ச்சி தந்தாலும், அது அவர் கட்டமைத்துக் கொண்ட பிம்பத்தின் காரணம் என்பது புரிந்தது. அதைக் கொண்டு அவர் உயிரோடு இருந்த சமயத்தில் எப்படி இருந்திருக்க முடியும் என்று யூகிக்க முடிந்தது.
அவர் தேடியதெல்லாம் ஆன்மிகம் என்ற போர்வையில் ஒளிந்து கொள்ள விரும்பும் கோழைகளையல்ல. ஆன்மீகத்திற்காக எல்லாச் சவால்களையும் எதிர்கொள்ளக்கூடிய சீடர்களைத்தான். அதற்கு அவர் உருவாக்கிக் கொண்ட பிம்பம் உதவி செய்தது. அந்த பிம்பத்தைக் கடந்து அவரிடம் வருபவர்கள், கொஞ்சமாவது ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது
ஓஷோ மையத்தோடு நான் தொடர்பு கொண்டிருந்தபோதே மெல்லமெல்ல விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. தீட்சை பெற்றவர்களுக்குக் கட்டாயமாக இருந்த மெரூன் நிற உடையும், ஓஷோ படம் போட்ட மாலையும் வசதிக்கேற்றபடி அணிந்து கொள்ளலாம் என்று சொல்லப்பட்டது. அவர்களுக்குத் தரப்பட்டிருந்த சுவாமி, மா போன்ற அடைமொழிகள் நீக்கப்பட்டன. அவருடைய பெரும்பாலான நூல்கள் ஆங்கிலத்திலிருந்து தமிழிலும், பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டன.
அடுத்த சில வருடங்களிலேயே ஓஷோவின் பிம்பம் பெரிதளவு மாற்றப்பட்டுவிட்டது. எனக்குத் தெரிந்த அளவில் இன்று ஓஷோ படிக்கும் பலருக்கும் அவரைப் பற்றி முன்பிருந்த பிம்பம் தெரியாது. அவர்களது இன்றைய வாழ்க்கை முறைக்கு அவை ஒத்து வருகின்றன. அவரைப் படிப்பதால் அவர்கள் எந்தவிதத்திலும் தங்களை மாற்றிக் கொள்ளத் தேவையில்லை. அதனால்தான் அவர்கள் அவரை விரும்புகிறார்கள்.
அவர்களைப் பற்றி ஜெ சொல்லி இருக்கும் வரிகள் மிக முக்கியமானவை.
//ஓஷோ சொன்ன இருத்தலின் கொண்டாட்டத்தை இன்றைய வாசகன் கட்டற்ற நுகர்வுக்களியாட்டமாகப் புரிந்துகொள்கிறான். நுகர்வின் சுரண்டல் மீதான குற்றவுணர்ச்சியைத் தவிர்க்க அதைப் பயன்படுத்திக்கொள்கிறான். அவர் கற்பித்த கட்டற்ற அகம் என்பதை இன்றைய உலகின் அநீதிக்கு முன் கண்களை மூடிக்கொண்டு தன் சுயநலத்திலும் கோழைத்தனத்திலும் ஊறிக்கிடக்க சாக்காக்கிக் கொள்கிறான்//
அதனால் ஓஷோவை மறுப்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.
ஆனந்த் உன்னத்
அன்புள்ள ஜெயமோகன்,
ஓஷோ ஒரு தேர்ந்த சொற்பொழிவாளர்.
அவரின் குரல் (உச்சரிப்பு கொஞ்சம் வட இந்தியத் தன்மை கொண்டிருந்தாலும்..). அதன் மித வேகம்.. எல்லாமே, கேட்பவரின் மனத்தைத் தயாராக்கி, அவர் திசையை நோக்கித் திருப்பி விடுகி்ன்றன.
ஜெயமோகன் சொல்லியது போல் – அவர் ஒரு கிலுகிலுப்பைப் பாம்பு..
ஜென் பத்து மாடுகள் புத்தகத்தின் முதல் வரி – “we enter on a rare pilgrimage” என்னுள் ஒரு பெரும் திறப்பை உண்டாக்கியது. அந்தப் பத்து ஓவியங்கள் வழியே நம்முடன் வருகிறார்.
அதற்கு முன்பு ஜென் பத்து மாடுகள் பற்றி சில புத்தகங்கள் படித்ததுண்டு. அவை வெறும் தகவலாக மட்டுமே மனதுள் நுழைந்திருந்தன. ஆனால், ஓஷோ நம் உள் நுழைந்து, ஒரு சக பயணியாக, ஒரு soul mate போலப் பயணிக்கிறார்.
ஒரு தெளிவான மாணவனுக்கு, ஓஷோவும், ஆசிரமும், களியாட்டங்களும் தாண்டிய ஓஷோ தெரிவார். அவர் உருவாக்கிய பிம்பம் வெறும் சீட்டுக் கட்டு கோபுரமே.
அவரின் மேற்கோள்கள் வழியேயும் பயணிக்கலாம். அவற்றை நாம் செல்ல வேண்டிய சாலையின் வழிகாட்டிப் பலகையென்று உணர்ந்து கொண்டால். (அவையே மந்திரங்களாகவும், நெறிகளாகவும் மாறிவிட்ட இடமே இன்றைய ஆசிரமம். ஆசிரமம் அவரின் உரைகளைப் பாதுகாத்து வைத்திருக்கும் ஒரு கோடௌன் மட்டுமே).
” Orgasm is momentary bliss; Bliss is eternal orgasm ” இப்படிச் சொல்லவும் ஒரு ஞானி தேவை.
பாலா
http://childhood-pictures.blogspot.in/2011/11/osho-rajneesh-old-photos-collection.html
தொடர்புடைய பதிவுகள்
ஓஷோ — உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் — 3
ஓஷோ — உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் — 2
ஓஷோ — உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் — 1
காந்தி காமம் ஓஷோ
கிரிமினல் ஞானி
ஓஷோ-கடிதங்கள்
ஓஷோ — கடிதங்கள்
ஓஷோ — கடிதங்கள்
முட்டாள்களின் மடாதிபதி
தத்துவம், தியானம்-கடிதம்
May 11, 2012
ஏழாம் உலகம்- ஒரு பதிவு
அன்புள்ள ஜெ.,
ஏழாம் உலகத்தைக் கடந்து போக இயலாமல், அதை எழுதிக் கடக்க முயன்றிருக்கின்றேன். எழுதிப் பழக்கம் இல்லாததால் (வாசிப்புப் பழக்கமே சற்றுக் குறைவு), என்னால் இயன்றவரை எனது எண்ணங்களைக் கோர்வையாகக் கொடுக்க முயன்றுள்ளேன். எனது புரிதல் எந்த அளவு உள்ளது என்று தெரிந்து கொள்ள ஆவல்.
நேரம் கிடைக்கும் போது படிக்கவும். இந்தத் தொந்தரவுக்கு மன்னிக்கவும்.
நன்றி,
-பாலாஜி.
ஏழாம் உலகம்.
ஞாயிற்றுக்கிழமை பின் மதியம். முன்தினம் தொடங்கிய ‘ஏழாம் உலகம்’ நாவலை வாசித்து முடித்து நிமிர்ந்தேன். மனத்தினுள் அலை அலையாய் எண்ணக் கொந்தளிப்புகள். ஒரு நிலைக்கு வர முடியாத தடுமாற்றம். எல்லாம் சேர்ந்தடங்கி ‘எரப்பாளி’ என்ற வார்த்தை மட்டும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. வெளியே சென்று வெயிலில் அமர்ந்தேன். யாருமில்லாத தெருவில் கண் கூசும்படி விழுந்து தெறித்துக்கொண்டிருந்த வெயிலைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். மீண்டும் ‘எரப்பாளி’, ‘எரப்பாளிப் பய’ எனும் ரீங்காரம். நினைவோடையில் ஒரு நாள் முன் சென்று, இந்நாவலை வாசிக்கத் தொடங்கியதிலிருந்து என்னுள் நிகழ்ந்த மாற்றங்களை எண்ணிப் பார்க்கிறேன்.
இருள் பிரியாத அதிகாலை நேரத்தில் பண்டாரமும், அவர் மனைவி ஏக்கியம்மையும், பேசுவதிலிருந்து தொடங்கி அந்த உலகை எட்டிப் பார்க்கத் தொடங்கும் நாம், அந்த முதல் அத்தியாயம் முடிவதற்குள் ஒரு அடிவயிற்றுப் புரட்டலோடு அந்தப் பாதாளத்தினுள் விழுந்து விடுகிறோம். பண்டாரத்தின் ‘உரு’க்களில் ஒன்றான முத்தம்மை பெற்றெடுக்கும் ‘ரசனிகாந்த்’துடன் நாமும் ஏழாம் உலகில் புதிதாகப் பிறக்கிறோம். நம்மைச் சுற்றி அந்த உலகின் மக்கள் ஒவ்வொருவராக அறிமுகமாகிறார்கள். பண்டாரத்தின் தொழிலைக் கவனித்துக் கொள்பவர்கள் – (மாதவன்) பெருமாள், வண்டி மலை. அவர்களின் தொழில் முதலீடுகள், ‘உரு’க்கள் – முத்தம்மை, ரசனிகாந்த், குய்யன், ராமப்பன், குருவி, எருக்கு, தொரப்பன்,மாங்காண்டிச் சாமி முதலானோர். இந்த ‘உரு’க்களின் பேச்சு, நட்பு, சண்டை, சிரிப்பு, இழப்பு,பழக்க வழக்கம், இவை எல்லாவற்றிலும் வாழ்தலின் கொண்டாட்டமும், இன்றியமையாமையும் அபரிமிதமாக வெளிப்படுகின்றன.
எனக்கு வாசிப்பில் ஆர்வம் இருக்கும் அளவு அனுபவம் இல்லை. மேலும், சில புத்தகங்களைப் படிப்பதற்கு நேரம், காலமெல்லாம் கனிந்து வர வேண்டும் என்பது போன்ற மூட நம்பிக்கைகளால் இது போன்ற புத்தகங்களை அடுக்கி வைத்து அழகு மட்டும் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடைய இந்த மடத்தனத்திலிருந்து வெளிவர இது ஒரு நல்ல தொடக்கம் என்று எண்ணுகிறேன். புத்தகத்தின் பக்கங்கள் நகர நகர, பல படிமங்கள் என்னுள் உருவாகி, திரிந்து, விரிந்து கொண்டிருப்பதை உணர்ந்தேன். இது எனக்கு முற்றிலும் ஒரு புதிய அனுபவம்.
ஜெ.வின் எழுத்து நான் முற்றிலும் எதிர்பார்க்காத வகையில் என்னை வசீகரித்தது. அவரது இணைய எழுத்துக்களுக்கு மட்டும் (நவீனத் தமிழ் இலக்கிய அறிமுகம் மற்றும் சில சிறுகதைகள் உட்பட) பரிச்சயமான எனக்கு, இந்த நாவல் தந்து கொண்டிருந்த உக்கிர தரிசனங்கள் நிலை குலைய வைத்தன. இத்தனைக்கும் அவர் பயன்படுத்திய கூறல் முறை ஆர்ப்பாட்டமில்லாதது. வலிகளும், வதைகளும், வேதனைகளும் நிரம்பிய இந்த உலகத்தை சித்தரிக்கும் எழுத்தில் துளிக்கூட மிகையுணர்ச்சியோ, செயற்கையான உரிச்சொற் பிரயோகங்களோ காணப்படவில்லை. இயல்பான, செறிவான, நேரடியான எழுத்து. படைப்பின் தீவிரமே, காட்சிகளில், மொழியின் உதவியின்றி இயல்பாக வெளிப்படுகின்றன. உதாரணத்திற்கு சில,
தைப்பூசத்திற்க்கு பிச்சைக்காரர்களை வண்டியில் அடைத்து எடுத்துச் செல்லும் பொழுது, மாங்காண்டிச் சாமியை விவரிக்கும் காட்சி (…ஒரு கை, இரு கால்கள் இல்லாதவர்…). மேலும், வண்டியின் ஆட்டத்தில் அவரை வைத்த இடத்திலிருந்து விழுந்து வேறு இடத்தில் கிடந்தார் என ஒற்றை வரியில் ஒரு கொடுமையை சொல்லிச் செல்லுதல்.
குருடன் தொரப்பு, தன் குழந்தையைத் தொட்டுப் பார்க்க விழையும் காட்சி. அதோடு ஒட்டி நிகழும் சம்பவம்.
ஆனால், நாவலின் துல்லியமான கட்டமைப்பு, பல காட்சிகளை உள்வாங்கி, விரிய விட்டு, மேலேடுத்துச் செல்ல கச்சிதமாக உதவுகின்றன. உதாரணத்திற்கு, மேலே குறிப்பிட்ட, இரு காட்சிகளுடனும், அந்தந்த அத்தியாயங்கள் முடிவடைகின்றன. இவ்வாறு கட்டமைப்பில் உள்ள சரியான இடைவெளிகளில், மொழி சுட்டிக் காட்ட வேண்டிய தேவையின்றி, கதையின் ஓட்டத்தை ஆழமாக புரிந்து கொள்ள உதவுகிறது.
இன்னும் சொல்லப்போனால், அந்த வட்டார வழக்கின் பிரயோகம் மிகவும் அருமை. எனக்குப் பெரிதும் பழக்கமில்லாத அந்த பேச்சு மொழி எனது வாசிப்பின் வேகத்தைக் குறைத்தாலும், அந்த பாஷையில் இயல்பாகவே ஒரு எக்காளமும், அங்கதச் சுவையும், அலட்சியமும் கலந்திருப்பது போலத் தோன்றியது. உக்கிரமான கருவில் விரிவடையும் காட்சிகளை சித்தரிக்க இவ்வழக்கைப் பயன்படுத்தும் போது, காட்சியின் தீவிரத்தோடு மொழியின் அங்கதம் வலுவாக மோதுகிறது. இம்மோதலில் வெளிப்படுவதே கதையின் மைய ஓட்டமான ‘வாழ்தலின் கொண்டாட்டம்’ எனத் தோன்றியது.
இந்நாவலை வாசிக்கும்போது என்னுள் உருவான காட்சிப் படிமங்களும், கதாபாத்திர உருவங்களும் என்னைப் பலவகையில் ஆச்சரியப்படுத்தியது. ‘நான் கடவுள்’ பார்ப்பதற்கு முன் இந்நாவலைப் படிக்கவில்லையே என்ற வருத்தம் சிறிது (மிக மிகச் சிறிது) இருந்தாலும், காட்சிகளைப் படிமப்படுத்துவதில் படத்தின் பாதிப்பு என்னுள் ஆரம்பக் கட்டத்திற்குப் பிறகு மறைந்து விட்டது. தைப்பூசப் பழனியின் கூட்ட நெரிசலை என்னைச் சுற்றி உணர்ந்தேன். பண்டாரத்தோடும், எரப்பாளிகளோடும் திரிந்தேன். ஆனால் பாத்திரங்களை உருவாக்கிக்கொள்ளும்போது மட்டும் திரைப்படம் வலுவாகக் குறுக்கிட்டது. ‘ராமப்பன்’ வரும்பொழுதெல்லாம் ‘விக்கிரமாதித்தன் நம்பி’ என்னுள் உறப்போடு உருவானார். அதைக் கடைசி வரையில் என்னால் மாற்ற இயலவில்லை. அதே போல அந்த மாங்காண்டிச் சாமி. ஆனால், பண்டாரத்தை உருவகிக்கும்போது அந்த வில்லன் நடிகர் தோன்றவில்லை. பண்டாரத்தின் விரிவான சித்தரிப்பு, என்னைப் படத்தைத் தாண்டி சிந்திக்க வைத்தது.
பண்டாரத்தின் சம்பந்தியம்மாள் ஒரு ஆச்சரியம். அவள் பண்டாரத்தைத் திட்டி, சண்டை போடும் காட்சியில் என்னுள் துல்லியமாக உருவானாள். நான் பதின்ம வயதில் (15-16 வருடங்களுக்கு முன்) சில நண்பர்களுடன் வேறு இடத்திற்குச் சென்று கிரிக்கெட் விளையாடும்போது ஒரு சமயத்தில், சுமார் 40 வயதுள்ள ஒரு பெண்மணி இதே போல அவரை ஒத்த வயதுடைய ஒரு ஆணை (கணவனோ யாரோ, நினைவில்லை) இது போலவே திட்டிக் கொண்டிருந்தார். என் மனதில் அந்த வயதில் உச்சபட்ச அதிர்ச்சிக்குள்ளான பெண் பிம்பம் அது. இருந்தும் கால ஓட்டத்தில் நான் முற்றிலும் மறந்து போன ஒரு பிம்பம். இந்த பாத்திரத்தை கடக்கும் போது, என் மூளை மடிப்புகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு குதித்த அந்த பிம்பத்தைக் கண்டு அரண்டே போனேன். ஏனோ ஒரு ‘தூள் சொர்ணாக்காவோ’ அல்லது வேறு சினிமா பாத்திரமோ தோன்றாமல், இப்படிப் பல வருடங்களுக்கு முன் நான் நிஜ வாழ்க்கையில் கண்டு மறந்து போன ஒரு உருவம் வந்ததற்குக் காரணம் ஒன்றே ஒன்று தான் தோன்றுகிறது – படைப்பின் நம்பகத்தன்மை மற்றும் யதார்த்தச் சித்தரிப்பு.
தொடக்கத்தில், பண்டாரத்தின் குற்ற உணர்ச்சியற்ற முருக பக்தி எனக்கு வியப்பளித்தது. அவர் மீது வெறுப்பு வந்தது. பிறகு, அவர் பழனியில் உருப்படி வாங்க ஆசைப்பட்டு, ஒரு நாயக்கரின் ஆளோடு ஒரு வீட்டினுள் சென்று அங்கு அவருக்குக் காட்டப்படும் உருக்கள் (நாக்கறுத்த, கண் குத்திய சிறுவர், சிறுமியர்) கண்டு நடுங்கி பின் வாங்கி வெளியே வரும்போது சிறிது நெருங்கி வருகிறார். போகப் போக அவரது குடும்ப வாழ்வின் குழப்பங்கள், கஷ்டங்கள் ஆகியவை காணக் காண அவர் மீது பரிதாபம் உண்டாவதைத் தவிர்க்க இயலவில்லை. அதே போல ஏக்கியம்மாள். “…நாம மனசறிஞ்சு யாருக்கும் ஒரு கெடுதல் நினைக்கல…” என்று அவள் சொல்லும்பொழுது நமக்கு ஆச்சரியமே மிஞ்சுகிறது.
இதே போல, கொண்டாட்டமான பல பாத்திரங்கள்,
‘எருக்கு’ – பெருமாள் அவளை ஆஸ்பத்திரியிலிருந்து விடுவிக்க பொய்த் தாலி கட்டினான் என்று தெரிந்தும், அதை உண்மையாக எடுத்துகொண்டு அவனை ‘இஞ்சேருங்க’ என்று அழைப்பது.
‘குய்யன்’ – பண்டாரம் தன் மகள் திருமணத்திற்கு தங்களை அழைப்பார் என எதிர்பார்த்து, அதில்லையென்றான பிறகு, கல்யாண சாப்பாடு வேண்டுமென்று அடம் பிடிப்பது.
‘ராமப்பன்’ – உருப்படிகளோடு ஒன்றாக அனைவரையும் அணைத்துச் செல்வது.
இவற்றை எல்லாம் விட அற்புதம், முத்தம்மை பாத்திரம். அவள் மூலம், இப்படைப்பின் பல்வேறு இடங்களில் மனித இருத்தலின் அவசியத்தை, வலியுறுத்திக்கொண்டே இருக்கிறார் ஜெ. அவள் பிள்ளைகள் ஒவ்வொன்றாக அவளிடம் இருந்து பிரிக்கப்பட்டு விற்கப்படும் போதும் அவள் தாங்கமுடியாத துயருறுகிறாள். ஆனாலும், மீண்டும் வாழ்வதின் மேலுள்ள ஆசையால் மீள்கிறாள். இவை எல்லாம் தாண்டி படைப்பின் இறுதியில் அவள் எதிர்கொள்ளும் அதிர்ச்சி, துயரம், வாசித்துக் கொண்டிருக்கிற நம்மை மிரள,பதைபதைக்க வைக்கிறது. அது மனிதப் பண்பாட்டுக்கே விடப்பட்ட சவாலெனத் தோன்றுகிறது. அதிலிருந்து அவள் மீளுவாளா என்ற சந்தேகம் வலுவாகிறது.
மொத்தத்தில், ஜெ. நாவலின் முன்னுரையில் சொன்னது போல, இருத்தலின் அவசியத்தை, கொண்டாட்டத்தை முன் வைக்கும் அற்புதமான படைப்பு என்பதை உணர்கிறேன். மீள் வாசிப்பில் இப்படைப்பு எனக்கு பல புதிய கதவுகளைத் திறக்கும் என்று நம்பிக்கையோடு அந்த மனநிலைக்காக காத்திருக்கிறேன்.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
ஓஷோ – உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் – 3
தஸ்தயேவ்ஸ்கி ஓஷோவுக்குப் பிரியமானவர். தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலில் உள்ள மையக்கதாபாத்திரங்களில் ஒன்றான மர்மல்டோஃப் பற்றி ஓஷோ பேசியிருக்கிறார். [ஓஷோ மேலை இலக்கியத்தில் யாரையெல்லாம் கவனித்திருக்கிறார், அவர்களுடன் அவர் எந்த கீழைச்சிந்தனையாளரை இணைத்திருக்கிறார் என்பது மிக முக்கியமாக கவனிக்கத்தக்கது]
தன்னை ஒரு கீழ்த்தரமான குடிகாரனாக, மோசடிக்காரனாக, பொறுப்பற்ற தந்தையாக, முற்றிலும் கீழ்மகனாக உணரும் மார்மல்டோஃப் தன் மீட்பர் தன்னிடம் ஒரு புனிதராக வந்தால் அவர் முகத்தில் காறி உமிழ்வேன் என்கிறான். அவரும் தன்னைப்போன்ற ஒரு பொறுக்கியாக, கையாலாகாதவராகத்தான் தன்னிடம் வரவேண்டும் என்கிறான். தன் அழுக்குகளையும் துக்கங்களையும் தானும் கொண்டவராக தன்னைப் போன்றவர்களில் ஒருவராக இருக்கவேண்டும் என்கிறான்.
மிக நுட்பமான ஒரு மனநிலை இது. ஓஷோ எப்போதுமே இந்த மனநிலையை அங்கீகரிப்பதை அத்தனை உரைகளிலும் காணலாம். அவர்களுக்கு ஓஷோ உபதேசம் செய்வதில்லை. அவர்களை வழிநடத்துவதில்லை. அவர்களுடன் சேர்ந்து அவரும் போதை இழுத்து, புணர்ச்சிக்களியாட்டமிட்டு, கொண்டாடினார். தொழுநோயாளிகள் நடுவே தன்னையும் தொழுநோயாளியாக ஆக்கிக்கொண்ட மருத்துவனின் பெருங்கருணை.
ஆனால் ஓஷோ அவர்களில் ஒருவராக ஒருபோதும் இருக்கவில்லை. அவரது மனம் பீட் தலைமுறையின் எந்தப் பண்பாட்டு அடையாளங்களிலும் நிலைகொள்ளவில்லை. அது கிருஷ்ணனின் ஞானவிளையாட்டை, புத்தரின் ஞானச்சமநிலையைத்தான் எப்போதும் நாடியது. அவரது சொற்கள் எல்லாம் அவற்றின் அனைத்து மேல்மட்ட அராஜகங்களுடனும் ஆழத்து நிலைத்த பேரமைதியையே சுட்டி நின்றன.
இங்கே சுடுகாட்டுப்பக்கமாக நான் காலைநடை செல்வதுண்டு. நகரத்தின் புறனடைப்பகுதி என்பதனால் குப்பைகள் வந்து குவியும் இடம் அது. ஒருநாள் கன்னங்கரிதாக ஏதோ மலக்கிடங்கை அள்ளிக்கொண்டுவந்து கொட்டியிருந்தார்கள். ஏழெட்டு நாட்களுக்குப்பின் மீண்டும் அவ்வழியாகச் சென்றேன். அந்தக் கரும்பரப்பு முழுக்க மகத்தானதோர் வண்ணக் கம்பளம் போல சின்னஞ்சிறு செடிகள் அடர்த்தியாக தளிர்விட்டு செந்நிறமான சிறிய பூக்களுடன் இளவெயிலாடி நின்றன.
கண்ணீர் மல்கச்செய்யும் உச்சநிலையில் அங்கே நெடுநேரம் நின்றேன். அந்தப் பேரெழில் மலர்கள்! அவற்றின் தேனும் நறுமணமும் எந்த தெய்வத்துக்கும் பூஜைப்பொருளாகும் தூய்மை கொண்டதுதானே? ஒரு வகையில் அந்த மலமும் கூட அந்தத் தூய்மை கொண்டதுதான். பல்லாயிரம் உயிர்களுக்கு பிரம்மத்தின் பருவடிவமாக வந்த உணவு அல்லவா அது? அன்னம் லட்சுமி என்றால் அதுவும் லட்சுமியல்லவா?
என் குடலும் நாசியும் மனமும்தான் அதை அருவருப்பாக்குகின்றன. அதற்கு அப்பால் ஒப்பீட்டில்லாத பெருவெளியில் அதுவும் மலரும் ஒன்றேயல்லவா? பேதபுத்தியே ஞானத்தை மறைக்கும் திரை என்கிறது வேதாந்தம். நூறுநூறாண்டுக்காலம் அதைக் கற்றறிந்தாலும் பேதங்களைக் கடப்பது சாத்தியமாவதில்லை. ஆனால் மலம் மலராகும் லீலையை உணராமல் மெய்ஞானமில்லை.

தஸ்தயேவ்ஸ்கி
முப்பதாண்டுகளுக்கு முன்னால் ஓஷோவின் ஓர் ஆன்மீக விவாதத்தில் பெண்குறி பற்றிய ஆபாச நகைச்சுவையை வாசிக்க நேர்ந்தபோது அடைந்த அதிர்ச்சியை நினைவுறுகிறேன். பாவம்-புண்ணியம், அறம்-மறம், அழகு-அருவருப்பு, கருணை-குரூரம், நன்மை-தீமைக்கு அப்பால் உள்ள ஒரு வெளியை எங்கேனும் உணராமல் ஒருவன் ஓஷோவின் எந்த நூலையாவது உள்வாங்கிக்கொள்ளமுடியுமா என்ன?
இன்று அச்சிடப்பட்டு குவிக்கப்படும் ஓஷோ நூல்களை முற்றிலும் வேறு சூழலில் இளம் வாசகர்கள் வாசிக்கிறார்கள். இன்று உலகம் முழுக்க மாறிவிட்டிருக்கிறது. கட்டற்றநுகர்வே உலகின் ஒரே கொள்கையாக ஆக்கப்பட்டுவிட்டது. உலகளாவிய வணிக சக்திகள் அதற்கான சிந்தனைகளை, கலைகளை உருவாக்கித்தள்ளுகிறார்கள். அவை உலகளாவிய மோஸ்தர்களாக பிரம்மாண்டமான ஊடக சக்தி மூலம் பரப்பப்படுகின்றன.
ஓஷோ சொன்ன இருத்தலின் கொண்டாட்டத்தை இன்றைய வாசகன் கட்டற்ற நுகர்வுக்களியாட்டமாகப் புரிந்துகொள்கிறான். நுகர்வின் சுரண்டல் மீதான குற்றவுணர்ச்சியை தவிர்க்க அதைப் பயன்படுத்திக்கொள்கிறான். அவர் கற்பித்த கட்டற்ற அகம் என்பதை இன்றைய உலகின் அநீதிக்கு முன் கண்களை மூடிக்கொண்டு தன் சுயநலத்திலும் கோழைத்தனத்திலும் ஊறிக்கிடக்க சாக்காக்கிக் கொள்கிறான்.
அவ்வுலகைப்பற்றி மட்டுமே பேசிய ஆசாரவாதிகளிடம் இந்த உலகை, இந்தக்கணத்தைப்பற்றி பேசிய ஓஷோவின் சொற்களை தன்னுடைய லௌகீக வெறியை நியாயப்படுத்தும் தர்க்கமாக ஆக்கிக்கொள்கிறான்.
ஒருவன் தன் சொந்த அனுபவத்தால், சொந்த ஞானத்தால் செய்யவேண்டிய அகப்பயணத்தை அவர் சுட்டிக்காட்டினார். அதற்குப்பதிலாக அவரது நூல்களின் சில வரிகளை அவ்வப்போது சொல்வதே போதும் என்று புரிந்துகொண்டிருக்கிறான். நுண்ணிய மெய்ஞானம் பற்றிய ஓஷோவின் வரிகளை சினிமாப்பாட்டு வரிகளைச் சொல்வதுபோல எங்கும் சொல்லிக்கொண்டிருக்கிறான்.
ஓஷோ என்பது ஒரு மாபெரும் பிம்பம். இருபதாம் நூற்றாண்டின் இப்பகுதியில் வந்துசென்ற ஒரு ஞானி தனக்கென உருவாக்கிக்கொண்ட பிம்பம். அந்தப் பிம்பமே அவரது கையில் இருந்த சம்மட்டி. அதைக்கொண்டுதான் அவர் இங்கிருந்த பாறைகளை உடைத்தார்.
ஆசார மடாதிபதிகளையும் மந்திரத்தில் மாங்காய் வரவழைப்பவர்களையும் கும்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு முன்னால் தன்னை கடவுள் என அறிவித்துக்கொண்டு அவர் முன்வைத்த பிம்பம் முதலாவது. சிக்குப்பிடித்த தலையும் கலங்கிய கண்களுமாக தன்னைச்சுற்றி வந்து கூடிய இளையதலைமுறைக்கு முன்னால் வைரப்பட்டைகளும் ரோல்ஸ்ராய்ஸ்கார்களுமாக வந்து அமர்ந்து அவர் காட்டிய பிம்பம் இன்னொன்று. அவ்விரண்டையும் தொகுத்து அவரே உருவாக்கிச்சென்றது ஓஷோ என்ற பிம்பம்.
ஓஷோவின் இந்தப் பிம்பம் கிலுகிலுப்பைப் பாம்பு [rattle snake] காட்டும் வாலைப்போன்றது. பொய்யான கண்கள் உள்ள போலியான தலை அந்த வால்நுனி. கண்ணைப்பறிக்கும் நிறமும் கவனத்தைக் கவரும் சத்தமும் கொண்டது. அவர் இரைகளை அதைக்கொண்டே கவர்கிறார். அவை அதை அவரது தலை என எண்ணி அருகே சென்று திகைத்துப்பார்க்கையில் தன் உக்கிர விஷத்தால் தீண்டுகிறார். மயங்கி திசைகலங்கிய இரையை இமையாவிழிகள் சிரிக்க மெல்ல விழுங்குகிறார். வயிற்றைக்கிழித்து வெளிவருபவர்களை மட்டும் ஆசீர்வதிக்கிறார்.
ஓஷோ உருவாக்கி வைத்த பிம்பத்துக்கு உள்ளே ஓஷோ இருக்கிறார். ஓஷோவை உடைக்காத எவராலும் அவரை அறிய முடியாது. ஓஷோ அவரது சொற்களாலும் புகைப்படங்களாலும் தன்னைச்சுற்றி உருவாக்கி வைத்திருப்பது மிகச்சிக்கலான ஒரு பிம்பவலை. ஒரு சுருள்வழிப்பாதை. அதைத் தாண்டி அவரை அணுகுபவர்களுக்குரியது அவரது ஞானம்.
ஓஷோவே மீண்டும் மீண்டும் அதைத்தான் சொல்கிறார். அவரது மைய வரியே அதற்கான அறைகூவல்தான். அறிதல் என்பது கடந்துசெல்லுதலே என்கிறார் ஓஷோ.
புத்தரை தெருவில் கண்டால் அக்கணமே கொன்றுவிட்டு மேலே செல் என்கிறார் ஓஷோ. இருபதாண்டுகளுக்கு முன் நான் குருதிவழிய கொன்று வீழ்த்திய ஓஷோவுக்கு என் குருவணக்கம்!
தொடர்புடைய பதிவுகள்
ஓஷோ — உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் — 2
ஓஷோ — உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் — 1
காந்தி காமம் ஓஷோ
கிரிமினல் ஞானி
ஓஷோ-கடிதங்கள்
ஓஷோ — கடிதங்கள்
ஓஷோ — கடிதங்கள்
முட்டாள்களின் மடாதிபதி
தமிழில் வாசிப்பதற்கு…
அசடன்
குற்றமும் தண்டனையும்
தத்துவம், தியானம்-கடிதம்
இருவகை எழுத்து
தஸ்தயேவ்ஸ்கி:கடிதங்கள்
குற்றமும் தண்டனையும்
May 10, 2012
ஓஷோ – உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் – 2
புராதனமான சீன ரகசிய மெய்ஞானநூல் ஐ ச்சிங். மாற்றங்களின் புத்தகம் என்று அதற்குப் பெயர். அதை இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னாலேயே சோதிடநூலாகப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். மொத்த நூலுமே பலவகையான கூறுகளாகப் பிரிக்கப்பட்டு இன்று ஒரு சோதிட உபகரணமாக உள்ளது.
ஒரு காலகட்டத்தின் நூலை இன்னொரு காலகட்டம் தனக்கேற்ப கையாள்கிறது. இது இலக்கியத்துக்கு சரிவரும். ஏனென்றால் பன்முக வாசிப்பு வழியாகவே இலக்கியம் தன்னை பெருக்கிக் கொள்கிறது. இலக்கிய வாசிப்பென்பது பெருகும் வாசிப்பு.
ஆனால் ஞானநூல்களுக்கு இது சரியல்ல. அது குறுகும் வாசிப்பு. மையம் நோக்கி கூர்ந்து செல்லும் வாசிப்பு. ஆகவே அதை எல்லா கோணத்திலும் அணுகி அறியவேண்டியிருக்கிறது. ஆகவேதான் அவற்றுக்கு உரைகள் தேவையாகின்றன, ஆசிரியர்கள் தேவையாகிறார்கள்.
நூல்களுக்குப் பொருந்துவது ஆசிரியர்களுக்கும் பொருந்தும். ஒரு காலகட்டத்தை நோக்கி பேசிய ஞானாசிரியனை இன்னொரு காலகட்டத்தில் நின்று பொத்தாம்பொதுவாகப் புரிந்துகொள்வது மிகப்பிழையானது. ஆனால் அது அடிக்கடி நிகழ்கிறது.
ஓஷோ கொந்தளித்த எழுபது எண்பதுகளை நோக்கி பேசியவர். அமைதியிழந்த தலைமுறையின் ஆசான் அவர். அவரை இன்றைய தலைமுறை தங்களுக்கேற்ப அணுகுகிறது. ஓஷோவை வணிகமுத்திரையாக ஆக்குபவர்கள் அதை ஊக்குவிக்கிறார்கள். ஓஷோ மீதான இன்றைய அசட்டு வாசிப்புகளுக்கு இதுவே காரணம்.
இன்றைய தலைமுறையின் பிரச்சினைகள் இரண்டு. ஒன்று முன்னேற்றவேட்கை. ஆகவே அவரக்ள் ஓஷோவை ஒரு நவீன ஆன்மீக சுயமுன்னேற்ற எழுத்தாளராகப் பயன்படுத்துகிறார்கள். இரண்டாவது பிரச்சினை, மன அழுத்தம். ஆகவே அவரை மன அழுத்தம் தணிக்கும் ஓர் உளவியல் நிபுணராக அணுகுகிறார்கள்.
நான் ஓஷோவை இரு வகையில் பகுத்துக்கொள்வேன். அவரது நூல்கள், அவரது ஆளுமை. இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற விஷயங்கள். ஆனால் ஒன்றை ஒன்று நிரப்பக்கூடியவை.
ஓஷோவின் நூல்கள் என நான் சொல்லும்போது கீதை, தம்மபதம் முதல் உலகின் முக்கியமான மெய்ஞான நூல்களுக்கு அவர் அளித்துள்ள விளக்கவுரைகளையே குறிப்பிடுகிறேன். இந்த நூல்களை பயில்வதற்கு என ஒரு புத்தம்புதிய வழியை ஓஷோ திறந்தார். அதுவே அவரது முதன்மைப்பங்களிப்பு.
மரபான ஞானநூல்களைப்பயில இரு வழிகளே இருந்தன. ஒன்று, மரபான அமைப்புகள் வழியாகப் பயில்வது. கீதையை கீதை உபன்னியாசகர்கள் வழியாக அறிவது போல. இன்னொரு வழி, நவீன ஆய்வாளர்கள் வழியாக வாசிப்பது. டாக்டர் ராதாகிருஷ்ணன் அல்லது டி.டி. கோஸாம்பி வழியாக வாசிப்பது போல.

நிகாஸ் கசந்த்ஸகிஸ்
இவ்விரு வழிகளுமே அந்நூல்களை ‘நேற்றில் வைத்து’ வாசிப்பவை. மரபான வாசிப்பு என்பது அந்நூல் ஒரு பண்டை ஞானம் என்ற பாவனை கொண்டது. ஆய்வு வாசிப்பு சென்று மறைந்த வரலாற்றைப்புரிந்துகொள்ளும் நோக்கு கொண்டது. ஓஷோ அந்நூல்களை ‘இன்றில் வைத்து’ வாசிக்கும் வழியைத் திறந்தார். அது மிகப்புரட்சிகரமான ஒரு வழி.
இந்நூல்கள் மீது அவற்றின் தொன்மை உருவாக்கும் பிரமைகளை தூக்கி வீசினார் ஓஷோ. அவற்றுக்கு அளிக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான உரைகளின், விளக்கங்களின் சுமைகளைக் களைந்தார். இன்றைய மனிதன் தன் இன்றைய வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் நோக்குடன் இன்றைய அறிவுச்சூழலில் நின்று அவற்றை அணுகச்செய்தார். அவசரமாகப் பயணம் செய்யவிருப்பவன் ரயில்அட்டவணையை ஆராய்வதுபோல அவற்றை வாசிக்கச்செய்தார்.
இந்த மூல நூல்கள் மீது ஓஷோ எடுத்துக்கொள்ளும் சுதந்திரம் பிரமிப்பூட்டுவது. அவற்றை அவர் பயன்படுத்துகிறார். அவற்றை அவர் கோயில் கருவறையின் அம்பாள் சிலையை அணுகுவதுபோல அணுகவில்லை. தாய்மடி மீது ஏறி உழப்பி மூத்திரமடித்து துள்ளி விளையாடும் பிள்ளைபோல அணுகினார்.
ஓஷோவின் இந்த ஆய்வுமுறையைத்தான் நாம் முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டும். மூலநூல்கள் மீது தன் முழுக்கற்பனையாலும் உள்ளுணர்வாலும் மோதும் அவரது பிரக்ஞை எவ்வளவு தூரம் செல்கிறது என்பதே நாம் கவனிக்கவேண்டியது.
அதற்குப்பதிலாக அவரை அம்மூலநூல்களுக்கு இன்னொரு உரை எழுதியவர் என்று பார்த்து அந்த உரையை கடைசிச்சொல் என எடுத்துக்கொண்டால் பலசமயம் பெரும் பிழைகளுக்குச் சென்று சேர்வோம். அந்நூல்களை மிக எளிமைப்படுத்திக்கொள்வோம். இன்று பெரும்பாலானவர்கள் செய்வது அதையே.
காரணம், ஓஷோவை இங்கே பெரும்பாலானவர்கள் படிப்பது அவர் படிக்க எளிதாக இருக்கிறார் என்பதனாலேயே. அனேகமாக அவரது எல்லா நூல்களும் சொற்பொழிவுகள் அல்லது உரையாடல்கள். வாயால் சொல்லப்படுபவை எப்போதுமே செறிவற்ற சரளமான மொழியில் இருக்கும். ஒரு கட்டுரையில் நான்கு வரிகளில் சொல்லப்படவேண்டியதை உரையில் நான்கு பத்திகளில் சொல்லியிருப்பார்கள். உரைகளை கட்டுரையாக்கும்போது நீர்த்துப்போன, திரும்பத்திரும்ப ஒன்றையே சொல்லக்கூடிய, ஓரு நடை உருவாகிறது. அதிகம் வாசிக்காத வாசகர்களுக்கு அது மிகுந்த ஈர்ப்பை அளிக்கிறது.
இப்படி வாசிக்க நேரும் ஆரம்பகட்ட வாசகர்களில் ஒருசாரார் ஓஷோ வழியாக உலகமெய்ஞானத்தையே வாசித்துவிட்டதாக நினைக்க ஆரம்பிக்கிறார்கள். உலகமெய்ஞானிகளில் முக்கியமானவர்கள் அவர்களுக்கு ஓஷோ வழியாக அறிமுகமாகிவிடுகிறார்கள். அந்த உரைகளைக் கொண்டு அந்த ஞானிகளை முழுமையாக அள்ளிவிட்டதாக நினைத்துக்கொள்கிறார்கள்.
இந்த ஓஷோ வாசகர்கள் ‘நிபந்தனையற்ற அன்பு’ ‘வாழ்க்கையை அப்படியே ஏற்றுக்கொள்ளுதல்’ போன்ற சில வரிகளை வைத்துக்கொண்டு தங்களை குட்டி ஞானிகளாக கற்பனைசெய்துகொண்டு அனைவரையும் குனிந்து பார்த்து ஒரு அபத்தமான அறியாமையுலகில் வாழ ஆரம்பிக்கிறார்கள்.
ஓஷோ அளிக்கும் இந்தப்போதைதான் அவரது நூல்களின் வெற்றிக்குக் காரணம். இந்தப் படிமத்தையே இன்று ஓஷோவின் அமைப்பு முன்வைக்கிறது. ஓஷோவின் இந்த உரைநூல்களில் சிலவற்றை வாசித்தாலே போதும். அவற்றில் ஏதேனும் ஒரு உரை அந்த மூலநூலை அணுகும் நமக்கான பாதையை காட்டிவிடும். அதன்பின் ஓஷோவை தவிர்த்து அந்நூலை நாமே நம் ஞானத்தாலும் கற்பனையாலும் உள்ளுணர்வாலும் மேலே வாசித்துச்செல்லவேண்டும்.
அதுவன்றி ஓஷோ அளிக்கும் உரையையே முழுமையானது என்று கொண்டால் நாம் அந்நூல்களை இழந்துவிடுவோம். அந்நூல்களை அவை உருவான வரலாற்றுப்புலத்தில் ஞானவிவாதக்களத்தில் வைத்தே புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு நிகழ்ச்சி. சாது அப்பாத்துரை என்று ஒரு ஞானி யாழ்ப்பாணத்தில் இருந்தார். அவர் நல்லூர் முருகன் கோயிலில் இருக்கையில் அங்கே பத்திரிகையாளர் மணியன் சாமி கும்பிட வந்தார். அங்கே சட்டையை கழற்றவேண்டும் என்ற சம்பிரதாயம் உண்டு. மணியன் தயங்கினார். அங்கே இருந்த அப்பாத்துரை சிரித்துக்கொண்டே கேட்டார் “ஏம்பா, இந்த துணிச்சட்டையை கழட்டிட்டு இங்கே நுழையவே இப்டி யோசிக்கிறியே. உடம்புச் சட்டையை கழட்டிட்டு அங்கே எப்டி நுழைவே?”
நாம் நுழையும் மெய்ஞானத்தின் கோயில் வாசலில் நிற்கிறார் ஓஷோ. ‘டேய் சட்டையை கழட்டிட்டு உள்ள வாடா வெண்ணே’ என்று மண்டையில் குட்டுகிறார். அவரது பணி அதுதான்.
ஓஷோவின் நூல்கள் கட்டுக்கோப்பான உள்அமைப்பு கொண்டவை. சீராக அவை நம்மை அழைத்துச்செல்கின்றன. நேர் மாறாக ஓஷோ என்னும் ஆளுமை நம்மை சிதறடித்துக்கொண்டே இருக்கிறார். நாம் மதிப்பவற்றை அவமதிக்கிறார், நம்புகிறவற்றை மறுக்கிறார், நாம் கண்ணீர்விடும் இடங்களில் சிரித்துக்கொண்டாடுகிறார்.
ஓஷோவின் நூல்களில் ஏன் சோர்பா இடம்பெறுகிறார்? சோர்பா த க்ரீக் என்ற நிகாஸ் கசந்த்ஸகிஸின் நாவல் அன்றைய இளைஞர்களை உலுக்கிய சில நூல்களில் ஒன்று. சோர்பாவின் வாழ்க்கை இலக்கற்றது, கனவுகளற்றது, முழுக்கமுழுக்க இன்பநாட்டம் சார்ந்தது. ஆனால் கள்ளமற்றது, கொண்டாட்டமானது.
அவனை ஒரு மாலுமியாகக் காட்டுகிறார் கசந்த்ஸகிஸ். ஏனென்றால் ஐரோப்பிய மனதில் மாலுமி வாழ்க்கை பற்றிய ஒரு கனவு எப்போதும் உண்டு. எழுபதுகளின் மன அழுத்தம் மிக்க தலைமுறைக்கு சோர்பா பெரியதோர் ஆதர்ச பிம்பம்.
ஓஷோவின் இலக்கு, அந்தப் பரட்டைத்தலை இளைஞருலகமே. ஆகவே அந்த பிம்பத்தை ஓஷோ எடுத்தாள்கிறார். ஆனால் மேலை மனம் எளிதில் புரிந்துகொள்ளும் சோர்பா வழியாக அந்தத்தேடலை, புத்தரை நோக்கி, கிருஷ்ணனை நோக்கி கொண்டு வருகிறார்.
ஓஷோ முன்னால் வந்து நின்றவர்கள் இருவகை. ஆசாரத்தில் வேரூன்றிய சம்பிரதாயமான சிந்தனை கொண்ட எளியமனங்கள் ஒரு சாரார். கசந்துபோன,கொந்தளிப்பு நிறைந்த இன்னொரு சாரார்.
மரபான எல்லாவற்றையும் கட்டிப்பிடித்துக்கொண்டிருந்த முதல்தலைமுறையை அவமதித்து உடைத்துப்போட்டார் ஓஷோ. மரபான எல்லாவற்றையும் தூக்கி குப்பையில்போட முயன்ற தரப்பிடம் தானும் இணைந்துகொண்டு அவர்களின் கண்கள் வழியாகவே கிருஷ்ணனையும் புத்தரையும் ஜென் ஞானிகளையும் பார்க்கச்செய்தார். அதுவே அவரது பங்களிப்பு. ஆம், அவர் அதற்காக வந்தவர்.
அதற்காகவே ஓஷோவின் பேச்சுமுறை எழுத்துமுறை அனைத்தும் உருவாகியிருக்கிறது. அவரது பேச்சில் உள்ள தடாலடிகள், திரிபுகள் அனைத்தும் அதற்காகவே. அவரது பாலியல் மீறல்கள், அவர் கற்பித்த பொறுப்பில்லாத சுதந்திரம் எல்லாம் அதற்காகவே.
[மேலும்]
தொடர்புடைய பதிவுகள்
ஓஷோ — உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் — 1
காந்தி காமம் ஓஷோ
கிரிமினல் ஞானி
ஓஷோ-கடிதங்கள்
ஓஷோ — கடிதங்கள்
ஓஷோ — கடிதங்கள்
முட்டாள்களின் மடாதிபதி
தத்துவம், தியானம்-கடிதம்
அறம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறதா?
யானைக்கறி
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். யானைப்பலி கட்டுரையைப் படித்த மனக்கலக்கமே இன்னமும் தீரவில்லை. அசாம் காடுகளிலுள்ள தண்டவாளப்பாதைகளில் அடிபட்டு இறக்கும் யானைகள் ஒருபக்கம், தங்களின் வாழ்விடத்திற்குள் யானை புகுந்துவிட்டதென அந்த் தாக்கும் மக்கள் மறுபக்கம். உண்மையிலேயே யானைகளுக்கு மிகவும் சிக்கல்தான். இதோ இந்தச் சுட்டியைப் பாருங்கள். யானைகள் உணவிற்காகவும் கொல்லப்படுகின்றன. மனிதனின் அடாவடித்தனத்திற்கு அளவேயில்லாமல் போய்விட்டது.
தங்களது நேரத்திற்கு மிக்க நன்றி.
பாலா
http://www.occupyforanimals.org/elephant-meat.html
அன்புள்ள பாலா,
கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆப்ரிக்க பின்னணி கொண்ட கதை ஒன்றில் அ.முத்துலிங்கம் யானையைக் கொன்று ஒருவாரம் தின்றுகொண்டே இருக்கும் மக்களைப்பற்றி எழுதியிருக்கிறார்.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
யானைப்பலி
நயினார்
May 9, 2012
ஓஷோ – உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் – 1
இரண்டு சினிமாக்கள் நினைவுக்கு வருகின்றன. இரண்டுமே பாலசந்தர் எடுத்தவை. இரண்டுமே கமலஹாசன் நடித்தவை. 1980ல் வெளிவந்த வறுமையின் நிறம் சிவப்பு. 1988ல் வெளிவந்த உன்னால் முடியும் தம்பி.
இந்த இரு படங்களுக்கும் நடுவே உள்ள தூரம் என்பது இரு தலைமுறைகளுக்கு, இரு காலகட்டங்களுக்கு நடுவே உள்ள தொலைவு. வறுமையின் நிறம் சிவப்பு எண்பதுகளில் வெளியானாலும் அது உண்மையில் எழுபதுகளின் மனநிலைகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்திய படம். தொண்ணூறுகளுக்குப் பின்னால் வலுப்பெற்ற மனநிலைகளையும் எண்ணங்களையும் காட்டும் படம் உன்னால் முடியும் தம்பி.
வறுமையின் நிறம் சிவப்பு இந்தியாவில் அறுபது எழுபதுகளில் நிலவிய உக்கிரமான வேலையில்லாத் திண்டாட்டத்தைப்பற்றிப் பேசுகிறது. ‘வேலையில்லா பட்டதாரி’ என்ற சொல்லாட்சி அன்று மிகப்பிரபலம். இணையான இன்னொரு சொல்லாட்சி ‘முதிர்கன்னி’. ஒரே பிரச்சினையின் இருமுகங்கள். இவ்விரு சரடுகளையும் பின்னியே அன்றைய கதைகளும் படங்களும் வெளிவந்தன.
வறுமையின் நிறம் சிவப்பு நகரத்தில் வேலையில்லாமல் அனாதையாக விடப்பட்ட இளைஞர்களின் பட்டினியை காட்டுகிறது. அவர்களின் மனக்கசப்பும், விரக்தியும், அமைப்பு மீதான கோபமும், ஒட்டுமொத்தமான ஏளனமும் அதன் காட்சிகளில் வெளிப்படுகின்றன. குப்பைத்தொட்டியை துழாவும் கதாநாயகனிடம் ‘அங்கே என்ன செய்றே?’ என்று கதாநாயகி கேட்கையில் ‘ம்ம்ம் இன்னும் கொஞ்சம் தோண்டினா சோஷலிசமே கிடைச்சிரும்போல இருக்கு’ என்று அவன் சொல்வது உதாரணம்.
முழுமையான விரக்தியில் முடியும் ‘வறுமையின் நிறம் சிவப்பு’க்கு நேர் மாறான படம் ‘உன்னால் முடியும் தம்பி’. தலைப்பே அதைச் சொல்லிவிடுகிறது. எண்பதுகளில்தான் தமிழில் சுயமுன்னேற்ற நூல்கள் வெளிவர ஆரம்பித்து எண்ணையில் தீ போல பரவின. அந்த எழுத்தாளர்களில் முதன்மையானவரான எம்.எஸ்.உதயமூர்த்தியின் பேச்சுக்களை அடிபப்டையாகக் கொண்டு உருவான படம் அது. கதாநாயகன் பெயரே சத்யமூர்த்திதான்.
எழுபது எண்பதுகள் இலட்சியவாதத்தைப் பேசின. இளைஞர்கள் பொதுநலம் நாடுபவர்களாக, போராடுபவர்களாக இருக்கவேண்டும் என இலக்கியமும் அரசியலும் அறைகூவின. ஆனால் எண்பதுகளின் தொடக்கத்தில் வெளிவர ஆரம்பித்த சுயமுன்னேற்ற நூல்கள் ஒரு தனிமனிதனின் இயல்பான இலக்கு சுய முன்னேற்றம்தான் என்று சொல்ல ஆரம்பித்தன.
பாப் மார்லியும் சேகுவேராவும் எழுபதுகளின் இலட்சிய புருஷர்கள். எண்பதுகளில் ராக்ஃபெல்லரும் ஃபோர்டும் அந்த இடத்துக்கு வந்து அமர்ந்தார்கள். தகுதிகளை வளர்த்துக்கொண்டு கொஞ்சம் கவனமாக செயல்பட்டால் பணமும் அதிகாரமும் கைவரும், அதுவே வாழ்க்கையின் வெற்றி என அந்த சுயமுன்னேற்ற நூல்கள் சொல்லின.
அன்றைய சூழலை வைத்தே அந்தக் கூற்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எண்பதுகளில் இந்தியா கடைப்பிடித்துவந்த அரைகுறை சோஷலிசம் மீதான நம்பிக்கை தகர்ந்தது. பொதுத்துறைகள் செயலிழந்து தேங்கின. பெரும் வேலைநிறுத்தங்களால் தொழில்துறை உறைந்து நின்றது. விளைவாக உச்சகட்ட வேலையில்லாமை. நாம் முன்னுதாரணமாகக் கொண்ட சோவியத் ருஷ்யாவே தத்தளித்துக் கொண்டிருந்தது.
அந்நிலையில்தான் அமெரிக்க பாணி முதலாளித்துவத்துக்கான குரல்கள் எழ ஆரம்பித்தன. தனியார்த்துறைக்கான கோரிக்கைகள் எழுந்தன. அந்தப் பொதுவான எண்ண ஓட்டம்தான் மெல்ல மெல்ல முதிர்ச்சி கொண்டு ராஜீவ் காந்தியில் செயல்வடிவம் பெற்று சோஷலிசத்தை தூக்கிப்போடச்செய்தது. அமெரிக்கத் தொழில்நுட்ப முதலாளித்துவத்தின் முகமான சாம் பிட்ரோடா வந்து சேர்ந்தார். உலகமயமாக்கல் ஆரம்பித்தது.
உலகமயமாக்கல் கீழ்மட்ட வறுமையை பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. ஆனால் நடுத்தரவர்க்கத்துக்கு வாய்ப்புகளை அதிகரித்தது. வேலையில்லா திண்டாட்டம் குறைய ஆரம்பித்தது. உருவாகி வந்த புதிய வாய்ப்புகளுக்காக முண்டியடித்த இளைஞர்களுக்கு நம்பிக்கையை ஊட்டுபவையாக அந்தச் சுயமுன்னேற்ற நூல்கள் அமைந்தன.
வேலைசெய்து ஊதியம் பெறுவது என்பதே நம்முடைய பழைய மனநிலையாக இருந்தது. வேலையை ஒரு போட்டியாக, போராக நாம் கற்பிதம்செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தை முதலாளித்துவம் உருவாக்கியது. போட்டியையே வாழ்க்கைவிதியாகக் கொண்ட ஒரு சமூகத்தை கட்டமைக்க வேண்டியிருந்தது. அதைச்செய்தவை சுயமுன்னேற்ற நூல்கள்.
பொதுநலன், சமூகநலன் எதைப்பற்றியும் கவலைகொள்ளவேண்டாம் என அவை கற்பித்தன. படிகளில் ஏறுவதே வாழ்க்கை என்று சித்தரித்தன. நம்முடைய அரசியல் பிரக்ஞையில் இந்தச் சுயமுன்னேற்ற நூல்கள் உருவாக்கிய பெரும் மாற்றத்தை நாம் இன்னும் சரியாக மதிப்பிடவில்லை.
எண்பதுகளில் இருந்து நம் கல்லூரிச்சூழல் எப்படியெல்லாம் மாறிவந்திருக்கிறது என்று பார்த்தாலே இது புரியும். எண்பதுகளில் கல்லூரிகள் அரசியல் சித்தாந்தங்களின் நாற்றங்கால்கள். கொந்தளிப்பும் பதற்றமும் கொண்டவை. இன்றைய கல்லூரிகளில் அரசியலே இல்லை. மாணவர்கள் முழுக்கமுழுக்க தொழில்முறை நோக்கு கொண்டவர்கள். அன்று அரசியல்பிரக்ஞை கொண்ட, வாசிக்கும் பழக்கம் கொண்ட, கலைத்திறன் கொண்ட மாணவர்கள் கதாநாயகர்களாகக் கருதப்பட்டனர். இன்று, பணக்கார மாணவர்கள், நன்றாகப்படிக்கும் மாணவர்களே கல்லூரிகளின் நாயகர்கள்.
இந்தமாற்றம் நிகழ ஆரம்பிக்கும் காலகட்டத்தைக் காட்டுகிறது உன்னால் முடியும் தம்பி. ஆனால் அன்று இந்தச் சுயநலச் சிந்தனைகள் இன்னும் முதிரவில்லை. முந்தைய இலட்சியவாதத்தின் சாயலும் கொஞ்சம் இருந்தது. அந்தப்படத்தில் சத்தியமூர்த்தி கொஞ்சம் இலட்சியவாத நோக்கு கொண்டிருக்கிறான். சேவைகள் செய்கிறான். ஆனால் வறுமையின் நிறம் சிவப்பு முந்தைய காலகட்டத்தின் முற்றிய விரக்தியைக் காட்டுகிறது.
இன்றைய இளைஞர்களால் வறுமையின் நிறம் சிவப்பு காட்டும் சூழலை, அந்த மனநிலையை சரியாகப் புரிந்துகொள்ளமுடியாமல் போகலாம். இரண்டாமுலகப்போருக்குப் பின்னால் மேலைநாடுகளில் உருவான மனச்சோர்வும் நம்பிக்கை இழப்பும் கலையில், இலக்கியத்தில், தத்துவத்தில், அரசியலில் கொந்தளிப்பை உருவாக்கிக்கொண்டிருந்தன. இளைய தலைமுறை எதிர்ப்பும், விரக்தியும் கொண்டதாக தெருவில் இறங்கியது.
கலையிலக்கியத்தில் பீட் தலைமுறை [Beat Generation] உருவாகி வந்தது. பொதுப்பேச்சில் ஹிப்பி இயக்கம் என இதைச் சொல்வார்கள். அரசியலில் செ குவேரா பாணி வன்முறைக்கிளர்ச்சி எழுந்தது. உலக அளவில் அது பரவியது.
இந்தியாவில் நேரு காலகட்டம் முடிந்தபின் பிறந்த தலைமுறை இலட்சியவாதத்தில் நம்பிக்கை இழந்தது. சுதந்திரத்துக்குப்பின் கல்வி பரவலாகியது, ஆனால் நேரு அரசின் முதலாளித்துவ திட்டங்கள் காரணமாகத் தொழில்கள் வளரவில்லை. ஆகவே வேலையில்லா திண்டாட்டம் உருவாகியது. ஒரு தலைமுறையே செயலற்று கோபம் கொண்டு தெருவில் நின்றது.
அவர்களுக்கு ஹிப்பி இயக்கத்தின் மனநிலைகளும் சேகுவேரா பாணி தனிநபர் வன்முறை அரசியலும் பெரும் ஈர்ப்பை அளித்தன. தாடியையும் முடியையும் நீளமாக வளர்த்துக்கொள்வது, வீட்டுக்குச் செல்லாமல் நண்பர்களுடன் அலைவது, கஞ்சா முதலிய போதைகளைப் பயன்படுத்துவது என ஒரு உலகம். இன்னொரு உலகம் நக்சலைட் இயக்கம் சார்ந்தது. இந்தியாவில் நக்சலைட் இயக்கம் அரசால் கொடூரமாக நசுக்கப்பட்டபோது மனச்சோர்வு கொண்டவர்களின் எண்ணிக்கை மேலும் பெருகியது.
இந்தக்காலகட்டத்தில்தான் நான் என் முதிரா இளமையை ஆரம்பித்தேன் என்பதனால் எனக்கு நேரடி மனப்பதிவே உண்டு. அக்கால எழுத்துக்களில் திரைப்படங்களில் எல்லாம் இந்த இலக்கற்ற கோபத்தையும் எதிர்ப்பையும் காணலாம். அந்தக் கோபத்தை உடல்மொழி மூலம் ஜஞ்சீர் என்ற படத்தில் கச்சிதமாக வெளிப்படுத்திய அமிதாப் பச்சன் பெரும் நட்சத்திரமாக ஆனார்.
தமிழில் அந்தக் கோபத்தைப் பதிவுசெய்த பிற திரைப்படங்கள் என துரை இயக்கிய பசி [1979] ராபர்ட் ராஜசேகரன் இயக்கிய பாலைவனச்சோலை [1981] பாரதிராஜாவின் நிழல்கள் [1984] போன்றவற்றைச் சொல்லலாம்.
இலக்கியத்தில் மிக அழுத்தமான பதிவுகள் கலாப்ரியாவின் நீள்கவிதையான ‘எட்டையபுரம்’, அசோகமித்திரனின் நாவலான ‘தண்ணீர்’ போன்றவை.
ஓஷோவைப்பற்றிப் பேசுவதற்காகவே இந்த விரிவான சித்தரிப்பை அளித்தேன். இந்த காலகட்டப்பிரிவினை இல்லாமல் ஓஷோவை சரியாகப் புரிந்துகொள்ள முடியாது. இப்படிச் சொல்லலாம். ஓஷோ முந்தைய காலகட்டத்தை நோக்கிப் பேசியவர். இன்று அவரை இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் தேவைக்கும் பார்வைக்கும் ஏற்ப புரிந்துகொள்கிறார்கள்.
[மேலும்]
.
தொடர்புடைய பதிவுகள்
காந்தி காமம் ஓஷோ
கிரிமினல் ஞானி
ஓஷோ-கடிதங்கள்
ஓஷோ — கடிதங்கள்
ஓஷோ — கடிதங்கள்
முட்டாள்களின் மடாதிபதி
தத்துவம், தியானம்-கடிதம்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
