கொற்றவையும் சன்னதமும்

அன்புள்ள ஜெயமோகன்,


நான் தங்களின் மூன்று வருட வாசகன். உங்களை கோவைப் புத்தகக் கண்காட்சியில் சந்தித்துப் பேசியது நினைவிருக்கலாம். “பண்படுதல்” பற்றியும் “டி.டி கோசம்பி” ஆவணப் படத்தைப் பற்றியும் என் எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துகொண்டேன். என்னுடைய இலக்கிய, சமூக, அரசியல் தளங்களில் உருவாகி வந்தக் கருத்துக்கள் அனைத்திலும் உங்களின் தாக்கம் மிக அதிகம். உங்களின் விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல் நாவல்களை முடித்து விட்டு இப்பொழுது “கொற்றவை” படித்துக் கொண்டிருக்கிறேன். சுமார் 400 பக்கங்கள் கடந்த நிலையில் கிட்டத்தட்ட கிறங்கிய நிலையில் இருக்கிறேன். விஷ்ணுபுரம் கூட இவ்வளவு தாக்கத்தை உண்டாக்கவில்லை. முக்கியமாக மூன்றாம் அத்தியாயத்தில் உள்ள “குலக்கதை சொன்னது” பகுதிகள் என் வாழ்வில் என்றென்றும் இருக்கப் போகிறவை. உங்களுக்கு இந்தக் கடிதம் எழுத நேற்று இரவு நடந்தவையே காரணம்.



நாவலில் “சேரன் மலையாற்றூர் சென்று தாங்கும் முதல் இரவு” பகுதியைப் படித்து முடித்து விட்டு இனம் புரியாத ஏக்கத்தில் தூங்கச் சென்றேன். மனம் மிக விழிப்பு நிலையில் இருக்க நாவலில் இதுவரைப் படித்ததை மனதில் ஓட்டிப்பார்த்தேன்.இப்படிச் செய்கையில் முதலில் நினைவிற்கு வரும் விஷயம் எனக்கு மிக முக்கியமாகப் படும். அதிலிருந்தே நாவலைப் பற்றிய என் கருத்துக்களைத் தொகுக்கத் துவங்குவேன். அப்படி என் நினைவில் எழுந்த காட்சியைக் கண்டு ஒரு நிமிடம் துணுக்குற்றேன். ஏனென யோசிக்கையில் எனக்கு என் சிறு வயது சம்பவம் நினைவிற்கு வந்தது.


அப்போது எனக்கு பதினொன்று, பன்னிரண்டு வயது இருக்கும். மாலை பள்ளி முடித்து சோர்வாக வீடு திரும்பி இருந்தேன். பொதுவாக காய்ச்சலுக்கு முந்தைய நாள் வரும் வெப்ப மூச்சுக்காற்றும் உடல் வலியும் வந்துவிட்டிருந்தன. எப்போதும் போல் முகம் கழுவி உடை மாற்றிக் கட்டிலில் அமர்ந்தேன். ஏதேதோ யோசித்துக் கடைசியில் யோசிப்பதையே விட்டுவிட்டு “வெற்றாக” இருக்க, திடீரென “அப்படியா” என்ற அம்மாவின் குரல் எனக்கு எட்டியது.. சட்டென திரும்பிப் பார்க்கையில் அம்மா பக்கத்துக்கு வீட்டக்காளுடன் பேசிக்கொண்டு இருந்தாள். என்னவென அறிவதற்குள் என்னை எழுப்பி வீட்டை சாத்தி சாவியைப் பக்கத்துக்கு வீட்டாரிடம் கொடுத்துவிட்டு நடந்தாள். அவள் நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் கிட்டத்தட்ட அவள் பின்னால் ஓடிக்கொண்டிருந்தேன். அக்காட்சி இன்றும் நன்றாக என் நினைவில் உள்ளது. என் அன்னையின் கைபிடித்துக் கொண்டு அவள் பார்வை நேரே இருக்க நானோ தரையையேப் பார்த்து நடக்க என் கால்கள் எனக்கு முன்னே செல்வதைக் கண்டு கொண்டிருந்தேன். சிமென்ட் ரோடு, தார் ரோடு, மண் ரோடு மீண்டும் சிமென்ட் ரோடென நடந்து கடைசித் தெருவுக்குள் நுழைந்த போது தெரிந்துகொண்டேன் பெரியம்மா வீட்டுக்கு செல்கிறோமென.


அப்போது என் பெரியம்மாவிற்கு மாடிப்படியில் தவறி விழுந்ததால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. காலை நகர்த்தவே முடியாமல் பெரியம்மா எப்போதும் படுத்துக் கொண்டே இருந்தார்கள்.


கடைசித் தெருவில் நுழைந்து வீட்டு முன் கதவைத் திறந்து பெரியம்மா விழுந்த மாடிப் படிகளில் ஏறி வீட்டிற்குள் நுழைந்து வலப் பக்கம் திரும்பியவுடன் நான் பார்த்தது நிமிர்த்த முதுகுடன் கால்களை சம்மணமிட்டு உக்கிரமாக அமர்ந்திருக்கும் என் பெரியன்னையை. அகன்ற விழிகளுடன், சிறிய உறுமல் சத்தத்துடன், மெல்லிய இட வல அசைவுடன் அமர்ந்திருந்தாள். ஒரு கணத்தில் மனதில் பல்வேறு உணர்ச்சிகள் நாலாப்புறமும் எழுந்து அடங்கியது. பிறகு மனது வெறுமையுடன் அந்தக் காட்சியை மட்டும் உள்வாங்கிக் கொண்டிருந்தது. நான் அவளின் கட்டுப் போட்டிருந்த காலையே கவனித்துக் கொண்டிருந்தேன். கால்களில் எவ்வித அசைவும் இன்றி உறைந்திருந்தன.



அதற்குள் என் பெரியம்மாவின் மகளும் வந்திருந்தார்கள். என் மனதில் அங்கு நடக்கும் எதுவும் மனதில் ஏறவில்லை. என் மனமெல்லாம் அக்கால்களே நிறைந்திருந்தன. ஓர் மனவெழுச்சி உடல் வலிகளைக் கடந்து சென்றிருப்பதை முதன் முறையாகக் கண்டுகொண்டிருந்தேன். நடு நடுவில் சுய நினைவிற்குத் திரும்பிய போது என் அம்மாவும், அக்காவும் தன் வருங்காலத்தைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அனைத்திற்கும் ஓரிரு சொற்களில் பதில் வந்து கொண்டிருந்தது. பின்பு என் பெரியம்மாவிற்கு தீபாராதனை காட்டி, அவர்களிடம் ஆசி பெற்று, விபூதியும் நெற்றியில் வாங்கிக் கொண்டு அங்கிருந்து வந்தோம். வீட்டிற்கு வந்ததும்தான் நினைவிற்கு வந்தது உடல் வலி பறந்திருப்பது.


ஆம்! கொற்றவையில் முதலில் என் மனதில் பதிந்தவை பல்வேறு மக்கள் “சன்னதம்” கொள்ளும் பகுதிகள் தான். அதைக் குறியீடாகக் கொண்டு நீங்கள் உணர்த்தி இருக்கும் ஆதி மனிதனின் குரலை! பிரபஞ்ச மனதின் ஒரு துளியை! மொழிக்குள் சிக்காத பொருளை! முடிவிலியின் ஒரு முனையை!


நாவலை இருமுறையாவது முழுவதுமாக வாசித்து விட்டு அதைப் பற்றிய என் பார்வையை விரிவாக எழுதுகிறேன்!


மிக்க நன்றி ஜெ!!! அனைத்திற்கும்….


அன்புடன்,

பாலாஜி

கோவை



அன்புள்ள பாலாஜி


விஷ்ணுபுரத்தை அதன் தியானமனநிலைகளில் மொழி கொள்ளும் தர்க்கமற்ற ஓட்டத்தையும் கட்டற்ற படிமங்களையும் உள்வாங்காத ஒருவர் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. கொற்றவையை அதில் உள்ள விதவிதமான சன்னதங்களைப் புரிந்துகொள்ளாமல் உள்வாங்கமுடியாது.


இருவேறு உச்சநிலைகள். இருவேறு பிரபஞ்சஉணர்ச்சிகள். முந்தையது அறிவின் கோலால் எப்போதும் கலக்கப்படுகிறது . பிந்தையது ஒரு கட்டத்தில் பைத்தியம் ஆடையைக் கழற்றி வீசுவதுபோலப் பிரக்ஞையைத் துறந்து முன்செல்கிறது.


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

தீராநதி நேர்காணல்- 2006
விஷ்ணுபுரம், கொற்றவை…கடிதங்கள்
சந்திப்புகள் — சில கடிதங்கள்
நான் கண்ட விஷ்ணுபுரம்
விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம்
மேலான உண்மை — சீனு கடிதம்
அறிதலுக்கு வெளியே-சீனு
விஷ்ணுபுரம்- விமர்சனம்
விஷ்ணுபுரம் விருது விழா 2011 -டிச 18-கோவையில்
கடிதங்கள்
பரிணாமவாதமும் இந்திய மதங்களும்
கடிதங்கள்
கதைகளின் வழி
கொற்றவை- கரு. ஆறுமுகத் தமிழன்
சிற்பச்செய்திகள்
அயோத்தி தாசர்-கடிதங்கள்
அறிதல்-அறிதலுக்கு அப்பால்
கொற்றவை,கடிதங்கள்
கொற்றவை கடிதம்
கொற்றவை-கடிதம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 29, 2012 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.