யானைப்பலி – கடிதம்

அன்புள்ள ஜெ.மோ,


வணக்கம்.


உங்கள் யானைப்பலி கட்டுரை கண்டேன். மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். அடிக்கடி ‘யானைகள் அட்டகாசம்’ செய்தி வெளியாகும் கோவை மாவட்டத்தில் இருக்கும் எனக்கு, யானைகள் படும் பாடு உங்களைப் போலவே துயரத்தை ஏற்படுத்தி வருகிறது.


யானைகள் நடமாடும் வழித்தடங்களை ஆக்கிரமித்து கான்கிரீட் கட்டடங்களையும் வேலிகளையும் அமைத்துவிட்ட நிலையில், யானைகள் தடுமாறுகின்றன. அவை தடம் மாறிக் குடியிருப்புப் பகுதிக்குள் நுழையும்போது, “யானைகள் அட்டகாசம்” என்று செய்தி வெளியிட்டு அதுகுறித்து சட்டசபையிலும் நாம் பேசுகிறோம். உண்மையில் அட்டகாசம் செய்வது யார்? யானைகளைக் கண்காணிக்க கருவி மாட்டுவதற்காக மயக்க ஊசி செலுத்தியதில் உயிரிழந்த யானைக்கு பதில் சொல்ல யாருமில்லை. கேட்கவும் நாதியில்லை.


இது குறித்த எனது ‘வென்றவனின் பிரகடனம்’ என்ற கவிதை எனது வலைப்பூவில் 12.07.2011 -ல் எழுதினேன் (http://kuzhalumyazhum.blogspot.in/2011/07/88.html).


யானைகள் நமக்குப் பிரியமானவை. அதே சமயம் நம்மால் அதிகமாகக் கொடுமைப்படுத்தப்படுபவை. அரை வயிறு கூட நிறையாமல், கோவில் வாசலில் நாம் போடும் ஒரு ரூபாய்க் காசுக்காக நமது தலையை வருடப் பயிற்சி அளிக்கப்பட்ட பரிதாப ஜீவன்களாக அவை காட்சி அளிக்கின்றன.


நீங்கள் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு தகவலும் உண்மை. இந்த அடிமைத் தளையை உடைக்க அனைவரும் குரல் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. உங்கள் தார்மீக ஆவேசம் அனைவரிடத்திலும் பரவ வேண்டும். சூழல் இயக்கங்கள் இதனை ஒரு போராட்டமாகவே முன்னெடுக்க வேண்டும்.


உங்கள் கட்டுரைக்கு மனமார்ந்த நன்றி.


-வ.மு.முரளி


ஜெ ,


யானைப்பலி வாசித்தேன். ஒரு முறை குருவாயூர் சென்றிருந்தபோது யானை அருகில் வெகு நேரம் நின்றிருந்தேன். இரு யானைகள் இருந்தன. ஒரு யானை சிறிது ஆவேசத்துடன் முன்னும் பின்னும் நகர்ந்து கொண்டிருந்தது. அதன் பாகன் அருகில் இல்லை. அமைதியாய் இருந்த யானையின் பாகன் அங்கிருந்தார். நான் அருகில் சென்றபோது என்னைக் கடுமையாகத் திட்டினார், சட்டெனக் கோபம் வரும் எனக்கு அன்று துளிக்கூட வரவில்லை. எனக்கு விஷ்ணுபுரத்தில் பைத்தியமாக அலையும் பாகனை நேரில் காண்பதுபோல் இருந்தது. எனக்கு இருக்கும் அளவுகடந்த யானைப் பிரியத்தின் வேர் அந்தப் பைத்தியப் பாகன்தான்.


ராதாகிருஷ்ணன்


தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 03, 2012 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.