Pa Raghavan's Blog, page 27
December 25, 2015
இந்த வருடம் என்ன செய்தேன்? – 2015
தமிழில் கிடைக்கும் வைக்கம் முகம்மது பஷீரின் அனைத்துக் கதைகளையும் இந்த ஆண்டு வாசித்து முடித்தேன். இங்கொன்றும் அங்கொன்றுமாகப் படித்திருந்தாலும் இப்படி மொத்தமாகப் படித்தது மகத்தான அனுபவம். பல கதைகளை வாசிக்கும்போது உணர்ச்சி வசமாகிக் கண்ணீர் வந்தது. நீயெல்லாம் ஏண்டா எழுதற என்று திரும்பத் திரும்ப என்னை நானே கேட்டுக்கொள்ள நேர்ந்தது. இந்த உலகில் உண்மையைக் காட்டிலும் அழகானது வேறில்லை. அதை அப்பட்டமாக வெளிப்படுத்துவதினும் பெரிது வேறில்லை. என்னை பஷீர் பக்கம் திருப்பிவிட்ட மாமல்லனுக்கு நன்றி.
இந்த வருடத்துக்குள் படித்து முடிக்கவேண்டும் என்று போன வருடம் எண்ணி ஆரம்பித்த மகாத்மா காந்தி நூல் வரிசையில் மூன்றைத்தான் முடிக்க முடிந்தது. காந்தியைப் படிக்கவும் பயிலவும் தியானம் கூடவேண்டியிருக்கிறது. சும்மா எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்தால் ஓட்டிவிட முடிவதில்லை. 2016ல் இன்னொரு மூன்று நூல்களை வாசித்து யோசிக்க முடிந்தாலே பெரிய விஷயம் என்று தோன்றுகிறது.
போன வருஷம் வரை ரத்தக் கொதிப்பு, சர்க்கரை என்று பூச்சாண்டி வியாதிகள் ஏதும் இல்லை. இந்த வருடம் பிபி வந்துவிட்டது. செயல்வேகத்தை இந்தப் பிரச்னை எத்தனை பாதிக்கிறது என்பதை அனுபவபூர்வமாக உணர்கிறேன். முன்னளவு இரவு நேரத்தில் கண் விழிக்க முடிவதில்லை. அதிக நேரம் படிக்க, எழுத சிரமமாக உள்ளது. கட்டிப் பிடித்து உட்கார வைக்கும் ஸ்கிரிப்டாக இல்லாத பட்சத்தில் எந்தப் படத்தையும் பத்து நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடிவதில்லை. இந்த வருடம் நான் முழுதாகப் பார்த்த ஒரே படம் தனி ஒருவன். பத்து பத்து நிமிடங்கள் பார்த்த படங்கள் இருபதுக்குமேல் இருக்கும் (பாபநாசம், தூங்காவனம் உள்பட).
2012 டிசம்பரில் தொடங்கிய வாணி ராணி மூன்றாண்டுகளைக் கடந்து நான்காமாண்டில் அடியெடுத்து வைக்கிறது. இரண்டு வருடங்களாகக் கல்யாணப் பரிசும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்த இரண்டைத் தவிர இந்த வருடம் வேறு எந்த சீரியலும் ஒப்புக்கொள்ளவில்லை. நிறைய எழுதுவதன் மீதிருந்த மோகம் குறைந்து வருவதை உணர்கிறேன். செய்வன திருந்தச் செய்.
இயக்குநர் பத்ரிக்காக ஒரு திரைப்பட ஸ்கிரிப்ட் எழுதிக்கொண்டிருக்கிறேன். அநேகமாக ஜனவரி முதல் வாரத்தில் முடிப்பேன். இன்னொரு படத்துக்கு அழைப்பு வந்திருக்கிறது. ஏப்ரலில் தொடங்கலாம்.
இந்த வருடம் பயணம் அதிகமில்லை. பள்ளிக்கால நண்பர்கள் பாபு, பன்னீருடன் ஷீர்டிக்குச் சென்று வந்தது மிகுந்த மன நிறைவை அளித்தது. வேறொரு சுற்றுலாவுக்குத் திட்டமிட்டு அது முடியாமல் போய்விட்டதில் சற்று வருத்தம்.
புத்தகங்களோ பத்திரிகைத் தொடர்களோ இல்லாத வருடம். எந்தப் பத்திரிகையையும் படிக்காத வருடமும்கூட. செய்தித்தாள்களைத் தவிர பிற வாராந்திரிகள் எதுவுமே பிடிக்காது போய்விட்டது. வாரப் பத்திரிகைகள் செய்யவேண்டிய பல காரியங்களை தி ஹிந்துவே செய்துவிடுவதால் அது ஓர் இழப்பாகவும் தெரியவில்லை.
ஆண்டிறுதிப் பேய் மழையும் வெள்ளம் அளித்த அதிர்ச்சியும் மறக்கமுடியாதவை. அள்ளிக் கொடுப்பதிலும் சரி; அள்ளி எடுத்துச் செல்வதிலும் சரி, இயற்கை ஒன்றுதான் பாரபட்சமின்றி நடந்துகொள்கிறது. அத்தனை பெரிய இடருக்குப் பிறகு பத்தே நாளில் நகரம் மீண்டதை விழிப்புணர்வுடன் கவனித்தேன். விவரிக்க முடியாத மன எழுச்சி தந்த இந்தத் தருணத்துக்குள் ஒரு நாவல் இருப்பதாகப் பட்டது. எழுதிப் பார்க்கலாமென்று நினைத்திருக்கிறேன்.
நண்பர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகள்.
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
December 14, 2015
பழைய உறவு
மனிதன் பழக்கத்தின் அடிமை என்பதுதான் எத்தனை உண்மை!
என் மேக் புக் ஏருக்கு என்னவோ ஆகிவிட்டது. கடந்த இரு தினங்களாக அது வேலை செய்யவில்லை. முதலில் T என்ற ஒரு கீ மட்டும் இயங்காதிருந்தது. அதன்மீது ஏறி உட்கார்ந்தால்தான் எழுத்து வரும் என்பது போல. குத்து குத்தென்று குத்திப் பார்த்ததில் மொத்தமாகவே கீ போர்ட் பழுதாகியிருக்கவேண்டும். இப்போது டைப் செய்ய ஆரம்பிக்கும் முன்பே – அதாவது மேக்கைத் திறந்த உடனேயே அது தன்னிஷ்டத்துக்கு ஒரு 100, 200 T போடுகிறது. எந்த Appஐத் தொட்டாலும் ஆம்புலன்ஸ் மாதிரி கத்துகிறது.
எனவே பழுது நீக்கும் வரை விண்டோஸ் லேப்டாப்பில் பணியாற்றவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இங்குதான் ஆரம்பித்தது சிக்கல்.
2004ல் முதல் முதலில் பத்ரி எனக்கு ஒரு ஐபிஎம் லெனொவோ லேப்டாப்பைக் கொடுத்தார். அன்றிலிருந்து நான் லெனொவொ விசுவாசியாகக் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்புவரை பல்வேறு கருப்பு எருமை லேப்டாப்புகளில்தான் வேலை பார்த்திருக்கிறேன். எனது மாட்டடி தாங்கும் திறன் அதற்கு மட்டுமே உண்டு. எத்தனை அடித்தாலும் என்மீது அதற்கு இருந்த சிநேகம் தீர்ந்ததில்லை.
ஆனால் மேக்குக்கு மாறியபின் நான் லெனொவொவை ஒரு தியேட்டராக மட்டுமே பயன்படுத்தி வந்திருக்கிறேன். விஎல்சி மட்டுமே அதில் நான் பயன்படுத்திய ஒரே ஆப்.
இப்போது ஏற்பட்ட தாற்காலிக நிர்ப்பந்தத்தால் மீண்டும் விண்டோசில் வேலை செய்ய வேண்டி வர, எனக்கே அச்சமூட்டுமளவுக்கு சொதப்புகிறேன். இந்த மூன்றாண்டுகளில் என் விரல்கள் மதம் மாறியிருக்கின்றன. விண்டோஸின் கட்டளைத் தம்பிரான்கள் அன்னியப்பட்டுப் போயிருக்கிறார்கள். கமாண்ட் அழுத்தி அழுத்திப் பழகிய விரல், கண்ட் ரோலுக்கு பதில் அடிக்கடி ஆல்ட் அழுத்துகிறது. ரைட் க்ளிக் என்பதையே மறந்திருக்கிறேன். இரு விரல்களால் பூவைப் போல் தொட்டு எடுத்து ஒற்றிய பழக்கமே இதிலும் வருகிறது. விண்டோசானது எனது இந்த மாறுபட்ட நடவடிக்கையைக் கண்டு காறித் துப்புகிறது. சீ போடா சோமாறி என்கிறது.
சின்னச் சின்ன விஷயங்கள்தாம். இன்னும் இரண்டு நாள் இதிலேயே வேலை செய்தால் மீண்டும் கை பழகிவிடும்தான். ஆனால் எட்டாண்டுகளுக்கு மேல் பழகிய நுட்பம் மூன்றாண்டு காலத்தில் முற்றிலும் அன்னியமாகிவிடுமா! நம்பமுடியவில்லை.
இன்னொன்றும் சொல்லவேண்டும். விண்டோசில் இருந்து மேக்குக்கு மாறியபோது நான் தடுமாறியது இரண்டே தினங்கள். அதன்பின் அது என் வசமாகிவிட்டது. அந்த எளிமை இதில் இல்லாததுதான் இந்தத் தடுமாற்றத்துக்குக் காரணமோ என்று இப்போது தோன்றுகிறது.
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
November 19, 2015
இறுதிச் சடங்கு – விவாதங்கள்
இறுதிச் சடங்கு சிறுகதை சில விவாதங்களைக் கிளப்பியிருப்பதை அறிந்தேன். சிறுகதைகளைப் பொருட்படுத்தி விவாதிப்போர் இன்னும் இருப்பதே ஆசுவாசமளிக்கிறது.
நண்பர் ஆர்வி இந்தக் குறிப்பை அனுப்பியிருந்தார்.நண்பர்களின் கருத்துகளோடு உடன்படவோ முரண்படவோ நான் விரும்பவில்லை. நான் சொல்ல நினைத்தது இதனைத்தான் என்று மைக் பிடிப்பதைக் காட்டிலும் அவலம் வேறில்லை. வாசகர்களுக்கு ஒரே ஒரு குறிப்பை மட்டும் நான் தரலாம்.
இந்தக் கதையின் தலைப்பு – உள்ளே வருகிற ஒரு வரி – இறுதிச் சம்பவம் மூன்றையும் ஒரு நேர்க்கோட்டில் பிடித்தால் நான் சொல்ல வந்தது பிடிபட்டுவிடும்.
அப்படி அகப்படாமலே போனால்தான் என்ன? கதை என்பது கடைசி வரியில் இருப்பதல்ல.
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
November 7, 2015
இறுதிச் சடங்கு
சரி நாம் திருமணம் செய்துகொள்ளலாம். அவ்வளவுதானே? திருப்தியா? சந்தோஷமா?
யெஸ். தேங்ஸ். ஆனால் ஊரறிய. எனக்கு பேப்பரில் போட்டோ வரவேண்டுமென்ற ஆசையெல்லாம் இல்லை. ஆனால் குறைந்தபட்சம் நம் நண்பர்களுக்குத் தெரியவேண்டும். பெற்றோருக்குத் தெரியவேண்டும். உறவினர்களுக்கு அப்புறம்.
அவன், அவனை ஒரு கணம் உற்றுப் பார்த்தான். புன்னகை போல் ஒன்று வந்த மாதிரி இருந்தது. ஆனால் முழுதாக இல்லை. ஆல்ரைட். சொல்லிவிடுவோம்.
செருப்பு பிஞ்சிடும் ராஸ்கல் என்றாள் அம்மா. நீ என் பிள்ளையே இல்லை என்று அப்பா சொன்னார். மச்சி ட்ரீட் உண்டா என்றான் ராமச்சந்திரன். விருந்தில்லாத கல்யாணமா. அதெல்லாம் அமர்க்களப்படுத்திவிடலாம் என்று அவன் சொன்னான்.
இரண்டு பேரும் உட்கார்ந்து விருந்துக்கு மெனு எழுதினார்கள். இரவு விருந்து. மதுவுக்குப் பிறகான விருந்து. டின்னர் பஃபே ப்ளேட்டொன்றுக்கு இரண்டாயிரத்தி முன்னூறு என்று பேசி பதினைந்து பேரை போனில் அழைத்தார்கள். ஓலா ஆட்டோ வரவழைத்து கேஷுவல்ஸுக்குச் சென்று துணி எடுத்தார்கள். கோட் சூட்தான் இதற்கெல்லாம் பொருத்தம். ஆனால் அவன் வேண்டாம் என்று சொல்லிவிட்டான். கேஷுவலாக இருப்போம். நமது வாழ்வில் இது ஒரு சம்பவம்தான். சமூகத்துக்குத்தான் சரித்திரம்.
டேய் ஃபர்ஸ்ட் நைட் உண்டா என்றான் ராமச்சந்திரன். பல நல்லிரவுகள் முடிந்துவிட்ட பிறகு இப்படி ஒரு கேள்வி. அபத்தத்தின் அழகியல். ராமச்சந்திரனுக்கும் தெரிந்ததுதான். ஆனாலும் கேட்பதில் இப்போது ஒரு சுகம். நல்லது நண்பா. என்ன வேண்டுமானாலும் கேள். கண்டிப்பாக முதலிரவு உண்டு.
பால் சொம்பு? பூ அலங்காரம்? டேய் நீ அவன் கால்ல விழுவியா? என்னதாண்டா பண்ணுவிங்க? ஒன்ன நீ எப்படி ஒய்ஃப் பொசிஷன்ல ஃபிக்ஸ் பண்ணிகிட்ட? அவந்தான் மேல் பார்ட்னர்னு டிசைட் பண்ணது அவனா நீயா? ஃப்ளாட் புக் பண்ணிட்டிங்களா? அக்கம்பக்கத்துல இருக்கறவங்க அப்ஜெக்ட் பண்ணாங்கன்னா?
இரவெல்லாம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். எல்லோருக்கும் கேள்விகள் இருக்கின்றன. ஆர்வக் குறுகுறுப்பு இருக்கிறது. தேசத்துடனும் கலாசாரத்துடனும் வரக்கூடிய சிக்கல்களுடனும் எதிர்கொள்ள நேரும் பிரச்னைகளுடனும் பொருத்திவைத்துப் பேசுவதில் ஒரு சுகம் இருக்கிறது. இருக்கக்கூடாது என்று நினைப்பது அபத்தம். இல்லாதிருந்தால் விசேஷம் என்று தோன்றினால் சரி.
ராமச்சந்திரன்தான் அதையும் கேட்டான். எதிர்காலத்தில் எப்போதாவதேனும் யாராவது ஒரு பெண்ணைப் பிடித்துப் போனால்?
பிடிக்க வாய்ப்பில்லை என்று சொன்னால் புரியப் போவதில்லை. எனவே புன்னகை செய்தான். அவன் புன்னகை அவனுக்குப் பிடித்திருந்தது. எனவே அவனும் புன்னகை செய்தான்.
பொண்ணுங்கள பிடிக்கவேகூடாதான்ன? புடிச்ச பொண்ணெல்லாம் புடிச்ச தங்கச்சி. அவ்ளதான்.
எல்லோருமே வாழ்த்துச் சொன்னார்கள். எல்லோருமே கட்டிப் பிடித்து கைகுலுக்கினார்கள். எல்லோருக்குள்ளும் ஒரு எகத்தாளம் இருக்கத்தான் செய்யும். விட்டுச் சென்ற பிறகு ஒருவருக்கொருவர் போன் செய்து இன்னும் சில மணி நேரம் பேசுவார்கள். எல்லாம் தெரிந்ததுதான்; எல்லாம் உள்ளதுதான்.
இரவு முழுவதும் மொட்டை மாடியில் பேசிக் களைத்து அதிகாலை அனைவரும் கிளம்பினார்கள். மச்சான் ஒம்பதே காலுக்கு முகூர்த்தம். மறந்துடாதிங்கடா. ஈவ்னிங் ஏழு மணிக்கு சோழால மீட் பண்றோம்.
கிளம்பும்போது மீண்டும் ராமச்சந்திரன்தான் கேட்டான். கோச்சிக்கலன்னா இன்னும் ஒரே ஒரு கொஸ்டின்.
சொல்லு.
கல்யாணத்துக்கப்பறம் ஒருவேள அவன் செத்துட்டா? ஐமீன்.. இல்ல, நீ செத்துட்டா?
ஒரு கணம் அனைவரும் பேச்சற்றுப் போனார்கள். அவன் யோசித்தான். அவனும் யோசித்தான். ஆத்திரமூட்டக்கூடிய கேள்விதான். ஆனாலும் இதை யோசித்ததில்லை. அவன் கேட்பது விதவைத் திருமணம் பற்றி. அல்லது மனைவியை இழந்தவனின் மறுமணம் பற்றி.
தப்பா நெனச்சிக்காத மச்சான். கேக்கலன்னா எனக்கு மண்ட வெடிச்சிரும்.
நோ ப்ராப்ளம் என்றான் அவன். அப்ஸல்யூட்லி நோ ப்ராப்ளம் என்றான் அவன்.
பட் வி நீட் டு திங்க் அபவுட் திஸ். இது ஒடம்புலேருந்து மனசுக்குப் போன ஒறவுடா. கொஞ்சம் பேஜார்தான். யோசிச்சிட்டு சொல்றேன், ஓகேவா?
அவர்கள் கிளம்பிச் சென்றார்கள்.
திருமணம் முடிந்து இரவு பார்ட்டி ரகளையாக நடந்தது. வீட்டுக்குப் போகும் வழியில்தான் விபத்தானது. அவன் ஸ்பாட்டிலேயே செத்துப் போனான். பாதி வழியில் நண்பர்கள் அத்தனை பேரும் பதறியடித்துத் திரும்பி வந்தார்கள். அவன் கதறிக்கொண்டிருந்தான். ராமச்சந்திரன் தலையில் அடித்துக்கொண்டு அழுதான். என்னை சாவடிங்கடா.. எழவெடுத்த மூதேவி நான் ஏண்டா அப்படி ஒரு கேள்விய கேக்கணும்? நான் நல்லவன் இல்லடா.. எனக்கு நல்ல மனசு இல்லடா.. என் நாக்குல சனி இருக்குடா.. என்னைக் கொல்லுடா டேய்…
பழக்கமில்லாமல் வெகுநேரம் அழுததில் அவனுக்குத் தலை வலித்தது. மிகவும் சோர்வாக இருந்தது. நண்பர்கள் யார் யாருக்கோ போன் செய்து தகவல் சொல்லிக்கொண்டிருந்தார்கள். எப்படியும் காலைதான் பாடியை எடுக்க முடியும் என்றார்கள்.
அவன் மெல்ல எழுந்து தள்ளாடியபடி பாத்ரூமுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டான். சௌகரியமாக சுவரோரம் சாய்ந்து தரையில் அமர்ந்துகொண்டு பேண்ட்டின் ஜிப்பை அவிழ்த்தான்.
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
October 24, 2015
கல்கியும் நானும்
இந்தாங்க சார். தலையங்கம் ரெடி. படிச்சிப் பாருங்க. சரியா இருந்தா வெச்சிக்கங்க. எதுனா சேக்கணும்னு தோணிச்சின்னா சேருங்க. பெரிசா இருக்குன்னு தோணிச்சின்னா வெட்டிக்கங்க.
நியாயமாக எனக்குத் தூக்கிவாரிப் போட்டிருக்கவேண்டும். ஆனால் ஒரே கிளுகிளுப்பாகிவிட்டது. அரிச்சுவடி கற்கக் கல்கிக்குப் போய்ச்சேர்ந்திருந்த காலம். யார் என்ன எழுதி அனுப்பினாலும் நாலு வரியையாவது அடித்துவிட்டு நான் எழுதிச் சேர்ப்பதில் ஒரு கெட்ட சுகம் கண்டுகொண்டிருந்தேன். ஆனால் தலைவர் எழுதிய (ராஜேந்திரன் சாரை அப்படித்தான் அழைப்போம்.) தலையங்கத்திலேயே கைவைக்க ஒரு வாய்ப்பு வரும் என்று எண்ணியதில்லை. அதுவும் அவரே தருகிற வாய்ப்பு.
அந்த புதன்கிழமையை என்னால் மறக்க இயலாது. நாலாக வெட்டிய கேலண்டர் தாளின் பின்புறத்தில் நாநூறு கொசு அடித்துப் போட்ட மாதிரியான கையெழுத்தில் அவர் நுணுக்கி நுணுக்கி எழுதிய தலையங்கம் என்னிடம் வந்தபோது மாலை நாலரை இருக்கும்.
ஆர்வம் பொங்க அவசரமாக ஒருதரம் படித்தேன். அதன்பிறகு பேனாவைத் திறந்துகொண்டு ‘எடிட்‘ செய்ய ஆயத்தமானேன். மணி ஐந்து. ஐந்தரை. ஆறு. பிரதி கம்போஸுக்குப் போகவேண்டும். எத்தனை முறை படித்தபோதும் என்னால் அந்த நாலு கால் பக்க பேப்பர்களில் நாலு எழுத்தைக்கூட மாற்ற முடியவில்லை. ஒரு சொல்லை மாற்றி இன்னொன்றைப் போடலாமென்றால்கூட முடியவில்லை. மகத்தான தோல்வி.
அந்த இதழ் வெளியாகி, ஒருவார இடைவெளியில் மீண்டும் என் பணி ஆரம்பமானது. அதே போன்ற புதன் கிழமை. அதே மாலை வேளை. தலைவரிடமிருந்து தலையங்கம் வந்தது. உடனே இண்டர்காமில் அழைப்பும் வந்தது.
தலையங்கம் அனுப்பிட்டேன் சார். படிச்சிப் பாருங்க. சரியா இருந்தா வெச்சிக்கங்க. எதுனா சேக்கணும்னு தோணிச்சின்னா சேருங்க. பெரிசா இருக்குன்னு தோணிச்சின்னா வெட்டிக்கங்க.
மீண்டும் தோல்வி. அப்போதுதான் யோசிக்க ஆரம்பித்தேன். ஒரு சிறந்த எடிட்டருக்கு இரண்டு தகுதிகள் அடிப்படையில் தேவைப்படுகின்றன. ஒன்று, அடுத்தவன் கைவைக்க முடியாத தரத்தில் எழுதுவது. இரண்டாவது, தன்னகங்காரம் என்ற ஒன்று அறவே இல்லாதிருப்பது.
நான் வம்புக்காக அல்லது வீம்புக்காக அவரது தலையங்கத்தில் ஓரிரு மாற்றங்கள் செய்திருந்தாலும் அவர் கோபித்துக்கொள்ளப் போவதில்லை. அவரது சுபாவம் நானறிவேன். ஆனால் ஒரு பயிற்சி நிலைப் பத்திரிகையாளன் பாடம் பயிலத் தனது தலையங்கத்தையே பலி கொடுத்தாலும் பரவாயில்லை என்கிற மனநிலை எத்தனை பேருக்கு வரும்?
படித்த காலத்தில் என் பள்ளி ஆசிரியர்கள் தராத பிரமிப்பையும் வியப்பையும் கல்கியில் தலைவர் எனக்கு அளித்தார். உண்மையில், என் அகங்காரம் சரணடைந்த இடம் அது ஒன்றே.
கல்கி எத்தனையோ பேரை வளர்த்திருக்கிறது. எத்தனையோ பேரை வாழவைத்திருக்கிறது. ஆனால் என்னளவுக்கு இந்தப் பத்திரிகையை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டவர்கள் உண்டா என்று தெரியவில்லை. குறிப்பாக, சீதா ரவி ஆசிரியர் பொறுப்புக்கு வந்தபிறகு அலுவலகத்தில் நான் அனுபவித்த பூரண சுதந்தரத்தைச் சொற்களால் விவரிக்க முடியாது. இஷ்டத்துக்கு எழுதித் தீர்த்தேன். பரீட்சை என்று எண்ணி நிறைய விஷப்பரீட்சைகள் செய்து பார்த்தேன். ஆசிரியர் ஒருபோதும் முகம் சுளித்ததில்லை. கண்டித்ததில்லை. கூடாதென்று சொன்னதில்லை.
பின்னாளில் நான் ஆசிரியரானபோது என்னிடம் பணியாற்றியவர்களுக்கு நான் அப்படிப்பட்ட சுதந்தரத்தை அளித்தேனா என்று எண்ணிப் பார்க்கிறேன். கொஞ்சம் வெட்கமாகத்தான் இருக்கிறது.
சிறந்த மாணவன் என்று பேரெடுப்பது சுலபம். சிறந்த ஆசிரியராக இருப்பது ரொம்பக் கஷ்டம். கல்கி எனக்கு அப்படிப்பட்ட ஆசிரியர்களை அளித்த இடம்.
வணங்குகிறேன்.
(கல்கி நவம்பர் 1, 2015 இதழ்)
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
October 18, 2015
மேட்டர் மூன்று வகைப்படும்
இந்த உலகம் மேட்டரால் ஆனது.
மேட்டர் மூன்று வகைப்படும்.
solid, liquid, gas.
இந்த மூன்றுமே பெரும்பாலும் எரியும் தன்மை கொண்டவை.
ஊதுபத்தியைக் கொளுத்தி பிளாஸ்டிக்கின்மீது வைக்காதே. பிளாஸ்டிக் உருகும்.
இதுவே ஊதுபதிக்கு பதில் மெழுகுவர்த்தியாக இருந்தால், உருகி வழியவே செய்யும்.
நீ ஸ்கூலில் படிக்கும்போது இதெல்லாம் உனக்கு சொல்லிக் கொடுக்கவில்லையா அப்பா?
இன்றைய காலை இப்படியாக விடிகிறது.
மகள் சொன்னது சரிதான். நான் கொஞ்சம் தத்தி என்பதில் சந்தேகமில்லை.
presence of mind பத்தாது என்பாள் அதர்ம பத்தினி. அதுவும் பகுதியளவில் சரியே.
திருத்திக் கொள்ளலாம். நாலு கழுதை வயதுதானே ஆகிறது?
ஆனால் மகளே, மேட்டர் மூன்று வகைதானா? திட திரவ வாயுவோடு சரியா?
ஆத்மா மேட்டராகாதா?
அது ஒன்றுதான் மேட்டர் என்று கேனக்கிறுக்கன் நினைத்துக்கொண்டிருக்கிறானே.
கேட்கவில்லை. கேட்டிருந்தால் பதில் வேறிடத்திலிருந்து வந்திருக்கும்.
நீ உருப்படமாட்டாய்.
இதுவும் தெரிந்ததுதான்.
ஒழியட்டும்.
மேட்டர் மூன்று வகைப்படும்.
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
October 3, 2015
பல்லி விழாப் பலன்
பல்லியொன்று மேலே
படுத்துக் கிடந்தது
நகரும் வழியாகக் காணோம்
உஸ் உஸ்ஸென்று சத்தமெழுப்பிப்
பார்த்தேன்; ம்ஹும்.
ஹேய், போவென்று
எழுந்து கையாட்டிப் பார்த்தேன்
அது காது கேளாத பல்லி
தட்டித் துரத்த தடியேதும்
அருகில் இல்லை
தானே நகரவும் அதற்கு வழி
தெரியவில்லை
எந்தக் கணம் தவறி விழும் என்ற
அச்சத்தில்
டாய்லெட் சரியாகப் போகவில்லை
பல்லிவிழும் பலனில் உச்சந்தலைக்கு
நல்லதாக ஏதுமில்லை
பாதியில் எழ வழியின்றி
மீதியை முடிக்க வகையின்றி
இந்தக் காலை இப்படியாகப் போனதில்
ரொம்பக் கோபம்
ஒரு பக்கெட் தண்ணீர் பிடித்து
உயரத் தூக்கி அடித்தேன்
நகர்ந்த பல்லி அமர்ந்துகொண்டதிக்
கவிதைபோன்ற கக்
கூஸில்.
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
August 30, 2015
note to self
பத்திரிகை செத்துப் பலகாலமாச்சு
பக்கம் போகாதே, பாழ்
புத்தகம் எழுதாதே
ராயல்டி வராது
ஃபண்டட் சீரியலில் ஒதுங்காதே
பாதியில் தூக்கிவிடுவார்கள்
சினிமா வேண்டாம்
ரிலீசாகாது
ஃபேஸ்புக் ட்விட்டரெல்லாம்
பத்து காசுக்குப் பிரயோசனமில்லை
எழுதத் தெரிந்தால் ஶ்ரீராமஜெயம் எழுது
போகிற காலத்தில் புண்ணியம்.
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
August 22, 2015
(கர்ம) வினைத் தொகை
ஒரு வரி. ஒரே ஒருவரிக் கோபம். கோபம் கூட இல்லை அது. விவரிக்க முடியாத ஒரு பெருந்துயரத்தின் மிக மெல்லியக் கசிவு. நேற்று முதல் என்னைச் செயல்படவிடாமல் அடித்துக்கொண்டிருக்கிறது அந்தப் பெரியவரின் சொல்.
அவரை எனக்குக் கடந்த ஓராண்டாகத்தான் தெரியும். அவரைக் குறித்து நான் அறிந்த முதல் தகவல் அவர் ஒரு கடன்காரர் என்பது. இன்றுவரை இதை மட்டுமே விரிவாக, இன்னும் விரிவாக, மேலும் விரிவாகக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஊரெல்லாம் கடன். வெளியூரிலும் கடன். இத்தனைக்கும் அவருக்கு வாரிசுகள் கிடையாது. மனைவி மட்டும்தான். கண் தெரியாத தங்கையின் குடும்பத்தையும் (தங்கை, தங்கையின் கணவர், ஒரு மகள்) சேர்த்துச் சுமந்துகொண்டிருக்கிறார்.
ஏதோ ஒரு காலத்தில் அவரும் நன்றாக வாழ்ந்திருப்பார். பணி ஓய்வுக்குப் பிறகு இப்படி ஆகிவிட்டது போலிருக்கிறது. பிரதி மாதம் பதினைந்து தேதி தாண்டிவிட்டால் போதும். அவர் வீட்டில் எப்போதும் குரல்கள் ஓங்கியே ஒலிக்கும். ஒவ்வொருவரும் அடுத்தவரைத் திட்டிக்கொள்வார்கள். சண்டை போட்டுக்கொள்வார்கள். சபித்துக்கொள்வார்கள். கோபத்தில் படாரெனக் கதவை அடித்துச் சாத்திக்கொண்டு பெரியவர் வெளியே போய்விடுவார். வீதியில் நின்று ஒரு பீடி குடித்துவிட்டுத் திரும்பினால் அடுத்த அரை மணிக்கு சத்தம் இராது. பிறகு மீண்டும் ஆரம்பிக்கும். இரவு வரை தொடரும்.
அவரது போன் எப்போதும் அடித்துக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு அழைப்பிலும் யாராவது கொடுத்த பணத்தைக் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். ஒவ்வொருவரிடமும் அவர் ஒரு பொய் சொல்லுவார். நாளை தந்துவிடுவேன். நேற்றே வந்தேன்; நீ இல்லை. அடுத்த வாரம் தலையை அடகு வைத்தாவது கொடுத்துவிடுகிறேன், இப்படியாக.
சொல்லலாம். ஒவ்வொரு கடன்காரரும் இப்படித்தான் என்று. ஆனால் அந்த மனிதருக்கு எழுபது வயது. அவருக்கு ஏதாவது ஒன்றாகிவிட்டால் அவரது மனைவியின் கதியென்னவென்று தெரியாது. அவர்கள் தூக்கிச் சுமக்கும் அந்தத் தங்கை குடும்பம் அடுத்த நாள் அந்த வீட்டில் இருக்குமா தெரியாது. ரொம்பக் கஷ்ட ஜீவனம். பாவம்தான்.
ஆனால் மனிதர் ரொம்ப நல்லவர். இந்த வயதில் சிரமம் பார்க்காமல் நடந்தே எங்கும் போவார். மளிகையோ காய்கறியோ மற்றதோ – எங்கு விலை மலிவோ அங்கு மட்டுமே செல்வார். ஐவர் கொண்ட குடும்பத்துக்குக் கால் கிலோ காய் வாங்கி வருவார். யார் யாரோ பயன்படுத்தாது விட்ட ரேஷன் கார்டுகளைத் தேடிப் போய் வாங்கி சர்க்கரையோ ரவையோ அரிசியோ வாங்கி வருவார். ஓசி பேப்பர் படிப்பார். வீட்டில் ஏசி கிடையாது. வாஷிங் மெஷின் கிடையாது. மிக்சி கிரைண்டர் கிடையாது. எப்போதும் ஏதாவது ஓர் அறையில் மட்டுமே விளக்கு எரியும். இப்படி இருந்தும் எப்படி அறுநூறு எழுநூறு மின்சாரக் கட்டணம் வருகிறது என்று தெரியாமல் கண்டபடி கத்துவார்.
கோபம் ஒன்றுதான் அவரது பொழுதுபோக்கு. நாளெல்லாம் பொழுதைப் போக்குவார்.
நேற்றைக்கு அது நடந்தது. மதியம் ஒரு மணி இருக்கும். அவர் வீட்டுக் கதவு சாத்தியிருந்தது. உள்ளே அவர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். பரிமாறிக்கொண்டிருந்த மனைவியை அவர் திட்டிக்கொண்டிருந்த சத்தம் வெளியே கேட்டது.
‘சனியனே, ஒரு மனுசன் ஆயுசு பூரா மூணு வேளையும் ஊறுகாய தொட்டுக்கிட்டு எப்படி சோறு திம்பான்? வாங்கிட்டு வர்ற காயெலாத்தையும் எங்க கொண்டு கொட்டித் தொலைக்கறே?’
திடுக்கிட்டுவிட்டேன். மூன்று வேளை உணவுக்கும் ஊறுகாய் மட்டுமே சைட் டிஷ். அதுவும் வாழ்நாள் முழுதும். இது எப்படி சாத்தியம்? கோபத்தில் கத்துவதுதான் என்றாலும் அவரது அடி வயிற்று ஓலத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அவரது மனைவி பதில் சொன்னதாகத் தெரியவில்லை. அவருக்குப் பழகியிருக்கலாம்.
இரவு என் மனைவியிடம் இந்தச் சம்பவத்தைச் சொல்லி அவருக்காகக் கொஞ்சம் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தேன். இந்த வயதில் இவர் இத்தனை சிரமப்படவேண்டாம்.
‘கால் கிலோ காய் எத்தனை பேருக்குப் போதும்? என்னதான் அறுவது வயசுக்கு மேலன்னாலும் வீட்ல இருக்கறவர் அவரோட மாப்ள. தங்கச்சி புருஷன். அந்தம்மா அவருக்குத்தான் டெய்லி மொதல்ல சாப்பாடு போடுவாங்க. அவர் சாப்ட்டு, அந்த தங்கச்சி சாப்ட்டு, அவங்க பொண்ணு சாப்ட்டு, நாலாவதாத்தான் இவர் சாப்பிட உக்கார்றார். அப்பறம் காய் எங்க மிஞ்சும்?’
இதற்குமேல் எனக்கு பேசத் தோன்றவில்லை. ஐந்தாவதாகச் சாப்பிடும் அவரது மனைவியை எண்ணிக்கொண்டேன். ஆண்டவன் அவருக்கு சாதத்தை மட்டுமேனும் மிச்சம் வைத்திருப்பான். அவசியம்.
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
August 13, 2015
ஆயிரம் ரூபாய் தீவிரவாதம்
ஆயிரம் பக்கப் புத்தகங்களை நானே எழுதியிருக்கிறேன். ஆனால் ஆயிரம் ரூபாய் விலையுள்ள புத்தகத்தைப் பூமணிதான் எழுதியிருக்கிறார்.”
என்று சிலகாலம் முன்னர் ஒரு ட்விட் போட்டேன். விதி வலிது அல்லது நல்லது. மாயவலையின் புதிய செம்பதிப்பு இப்போது ஆயிரம் ரூபாய் விலையில் வெளியாகியிருக்கிறது (மதி நிலையம்). கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இத்தனாம்பெரிய (கிட்டத்தட்ட 1300 பக்கங்கள்) குண்டு புஸ்தகத்தை மதி நிலையத்தார் ஐந்நூறு ரூபாய்ப் பதிப்பாகவே விற்றுக்கொண்டிருந்தார்கள். சற்றே சுமாரான பேப்பர், அதைவிடச் சுமாரான அட்டையில் அச்சுத்தரம் மட்டும் சிறப்பாக இருக்கும்படி பார்த்துக்கொண்டு அந்த விலைக்குக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். வாசக மகாஜனங்கள் வாங்கிக் கொண்டாடினாலும் எனக்குத்தான் அந்தப் பதிப்பு பிடிக்கவில்லை. பதிப்பகத்தாரைப் படாதபாடு படுத்தி இந்தப் பணக்கார எடிஷனைக் கொண்டு வந்த பாவமோ புண்ணியமோ என்னையே சாரும்.
என் அனுபவத்தில் டாலர் தேசம், மாயவலை, நிலமெல்லாம் ரத்தம், ஹிட்லர் – இந்த நாலு புத்தகங்களும் என்ன விலை வைத்தாலும் விற்கின்றன (அவற்றின் முதல் பதிப்பு தொடங்கி). இணைய உத்தமர்கள் எத்தனை ஆயிரம் திருட்டு பிடிஎஃப் சர்க்குலேட் செய்தாலும் இதன் விற்பனை பாதிக்கப்படுவதில்லை. எனவே மக்களுக்காக இரண்டு பதிப்பு போட்டால் நூலாசிரியனுக்காக ஒரு பதிப்பு என்பதில் தப்பில்லை என்று தோன்றியது.
ஜெயமோகன் வேறு வெண்முரசு செம்பதிப்பு மேளா நடாத்திக்கொண்டிருக்கிறார். தீவிர அ-இலக்கியவாதியானவன் தன் பங்குக்கு இந்தளவாவது தமிழ் மகாஜனங்களைக் கலவரப்படுத்தாவிட்டால் எப்படி?
எனவே அசத்தல் பைண்டிங், அசகாய பேப்பர், சொக்கன் பெருமூச்சுவிட கலர் கலராகப் பட்டுநூல் உள்ளிட்ட கிளுகிளு அம்சங்களுடன் அழகு கொஞ்சும் அற்புத எடிஷனாக மாயவிலை, 1000 உரூபாய் விலையில். தமிழகமெங்கும் அனைத்துப் புத்தகக் கடைகளிலும் இது கிடைக்கும். இணையத்திலும் வாங்க முடியும் (விகேன்புக்ஸ், என்னெச்செம் இன்னபிற). மதி நிலையத்துக்கு எழுதிக் கேட்டும் (mathinilayambooks@gmail.com) தபாலில் பெறலாம்.
மாயவிலையோடு கூட நிலமெல்லாம் ரத்தமும் மறு பதிப்பாக வெளிவந்திருக்கிறது. இதுவும் கெட்டி அட்டை, உயர்ரகத் தாள் எடிஷன். விலை ரூ. 600.
ததாஸ்து.
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)