இறுதிச் சடங்கு
சரி நாம் திருமணம் செய்துகொள்ளலாம். அவ்வளவுதானே? திருப்தியா? சந்தோஷமா?
யெஸ். தேங்ஸ். ஆனால் ஊரறிய. எனக்கு பேப்பரில் போட்டோ வரவேண்டுமென்ற ஆசையெல்லாம் இல்லை. ஆனால் குறைந்தபட்சம் நம் நண்பர்களுக்குத் தெரியவேண்டும். பெற்றோருக்குத் தெரியவேண்டும். உறவினர்களுக்கு அப்புறம்.
அவன், அவனை ஒரு கணம் உற்றுப் பார்த்தான். புன்னகை போல் ஒன்று வந்த மாதிரி இருந்தது. ஆனால் முழுதாக இல்லை. ஆல்ரைட். சொல்லிவிடுவோம்.
செருப்பு பிஞ்சிடும் ராஸ்கல் என்றாள் அம்மா. நீ என் பிள்ளையே இல்லை என்று அப்பா சொன்னார். மச்சி ட்ரீட் உண்டா என்றான் ராமச்சந்திரன். விருந்தில்லாத கல்யாணமா. அதெல்லாம் அமர்க்களப்படுத்திவிடலாம் என்று அவன் சொன்னான்.
இரண்டு பேரும் உட்கார்ந்து விருந்துக்கு மெனு எழுதினார்கள். இரவு விருந்து. மதுவுக்குப் பிறகான விருந்து. டின்னர் பஃபே ப்ளேட்டொன்றுக்கு இரண்டாயிரத்தி முன்னூறு என்று பேசி பதினைந்து பேரை போனில் அழைத்தார்கள். ஓலா ஆட்டோ வரவழைத்து கேஷுவல்ஸுக்குச் சென்று துணி எடுத்தார்கள். கோட் சூட்தான் இதற்கெல்லாம் பொருத்தம். ஆனால் அவன் வேண்டாம் என்று சொல்லிவிட்டான். கேஷுவலாக இருப்போம். நமது வாழ்வில் இது ஒரு சம்பவம்தான். சமூகத்துக்குத்தான் சரித்திரம்.
டேய் ஃபர்ஸ்ட் நைட் உண்டா என்றான் ராமச்சந்திரன். பல நல்லிரவுகள் முடிந்துவிட்ட பிறகு இப்படி ஒரு கேள்வி. அபத்தத்தின் அழகியல். ராமச்சந்திரனுக்கும் தெரிந்ததுதான். ஆனாலும் கேட்பதில் இப்போது ஒரு சுகம். நல்லது நண்பா. என்ன வேண்டுமானாலும் கேள். கண்டிப்பாக முதலிரவு உண்டு.
பால் சொம்பு? பூ அலங்காரம்? டேய் நீ அவன் கால்ல விழுவியா? என்னதாண்டா பண்ணுவிங்க? ஒன்ன நீ எப்படி ஒய்ஃப் பொசிஷன்ல ஃபிக்ஸ் பண்ணிகிட்ட? அவந்தான் மேல் பார்ட்னர்னு டிசைட் பண்ணது அவனா நீயா? ஃப்ளாட் புக் பண்ணிட்டிங்களா? அக்கம்பக்கத்துல இருக்கறவங்க அப்ஜெக்ட் பண்ணாங்கன்னா?
இரவெல்லாம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். எல்லோருக்கும் கேள்விகள் இருக்கின்றன. ஆர்வக் குறுகுறுப்பு இருக்கிறது. தேசத்துடனும் கலாசாரத்துடனும் வரக்கூடிய சிக்கல்களுடனும் எதிர்கொள்ள நேரும் பிரச்னைகளுடனும் பொருத்திவைத்துப் பேசுவதில் ஒரு சுகம் இருக்கிறது. இருக்கக்கூடாது என்று நினைப்பது அபத்தம். இல்லாதிருந்தால் விசேஷம் என்று தோன்றினால் சரி.
ராமச்சந்திரன்தான் அதையும் கேட்டான். எதிர்காலத்தில் எப்போதாவதேனும் யாராவது ஒரு பெண்ணைப் பிடித்துப் போனால்?
பிடிக்க வாய்ப்பில்லை என்று சொன்னால் புரியப் போவதில்லை. எனவே புன்னகை செய்தான். அவன் புன்னகை அவனுக்குப் பிடித்திருந்தது. எனவே அவனும் புன்னகை செய்தான்.
பொண்ணுங்கள பிடிக்கவேகூடாதான்ன? புடிச்ச பொண்ணெல்லாம் புடிச்ச தங்கச்சி. அவ்ளதான்.
எல்லோருமே வாழ்த்துச் சொன்னார்கள். எல்லோருமே கட்டிப் பிடித்து கைகுலுக்கினார்கள். எல்லோருக்குள்ளும் ஒரு எகத்தாளம் இருக்கத்தான் செய்யும். விட்டுச் சென்ற பிறகு ஒருவருக்கொருவர் போன் செய்து இன்னும் சில மணி நேரம் பேசுவார்கள். எல்லாம் தெரிந்ததுதான்; எல்லாம் உள்ளதுதான்.
இரவு முழுவதும் மொட்டை மாடியில் பேசிக் களைத்து அதிகாலை அனைவரும் கிளம்பினார்கள். மச்சான் ஒம்பதே காலுக்கு முகூர்த்தம். மறந்துடாதிங்கடா. ஈவ்னிங் ஏழு மணிக்கு சோழால மீட் பண்றோம்.
கிளம்பும்போது மீண்டும் ராமச்சந்திரன்தான் கேட்டான். கோச்சிக்கலன்னா இன்னும் ஒரே ஒரு கொஸ்டின்.
சொல்லு.
கல்யாணத்துக்கப்பறம் ஒருவேள அவன் செத்துட்டா? ஐமீன்.. இல்ல, நீ செத்துட்டா?
ஒரு கணம் அனைவரும் பேச்சற்றுப் போனார்கள். அவன் யோசித்தான். அவனும் யோசித்தான். ஆத்திரமூட்டக்கூடிய கேள்விதான். ஆனாலும் இதை யோசித்ததில்லை. அவன் கேட்பது விதவைத் திருமணம் பற்றி. அல்லது மனைவியை இழந்தவனின் மறுமணம் பற்றி.
தப்பா நெனச்சிக்காத மச்சான். கேக்கலன்னா எனக்கு மண்ட வெடிச்சிரும்.
நோ ப்ராப்ளம் என்றான் அவன். அப்ஸல்யூட்லி நோ ப்ராப்ளம் என்றான் அவன்.
பட் வி நீட் டு திங்க் அபவுட் திஸ். இது ஒடம்புலேருந்து மனசுக்குப் போன ஒறவுடா. கொஞ்சம் பேஜார்தான். யோசிச்சிட்டு சொல்றேன், ஓகேவா?
அவர்கள் கிளம்பிச் சென்றார்கள்.
திருமணம் முடிந்து இரவு பார்ட்டி ரகளையாக நடந்தது. வீட்டுக்குப் போகும் வழியில்தான் விபத்தானது. அவன் ஸ்பாட்டிலேயே செத்துப் போனான். பாதி வழியில் நண்பர்கள் அத்தனை பேரும் பதறியடித்துத் திரும்பி வந்தார்கள். அவன் கதறிக்கொண்டிருந்தான். ராமச்சந்திரன் தலையில் அடித்துக்கொண்டு அழுதான். என்னை சாவடிங்கடா.. எழவெடுத்த மூதேவி நான் ஏண்டா அப்படி ஒரு கேள்விய கேக்கணும்? நான் நல்லவன் இல்லடா.. எனக்கு நல்ல மனசு இல்லடா.. என் நாக்குல சனி இருக்குடா.. என்னைக் கொல்லுடா டேய்…
பழக்கமில்லாமல் வெகுநேரம் அழுததில் அவனுக்குத் தலை வலித்தது. மிகவும் சோர்வாக இருந்தது. நண்பர்கள் யார் யாருக்கோ போன் செய்து தகவல் சொல்லிக்கொண்டிருந்தார்கள். எப்படியும் காலைதான் பாடியை எடுக்க முடியும் என்றார்கள்.
அவன் மெல்ல எழுந்து தள்ளாடியபடி பாத்ரூமுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டான். சௌகரியமாக சுவரோரம் சாய்ந்து தரையில் அமர்ந்துகொண்டு பேண்ட்டின் ஜிப்பை அவிழ்த்தான்.
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)