Pa Raghavan's Blog
October 22, 2025
எழுத்துப் பயிற்சி வகுப்பு – நவம்பர் 1
எழுத்துப் பயிற்சி வகுப்புகள்
நவம்பர் 1, 2025 ஆரம்பம்
தொடர்ச்சியாக நான்கு வாரங்கள்.
16 மணி நேரம்
சனி-ஞாயிறுகளில் மட்டும்
இந்திய நேரம் மாலை 7.00-9.00 மணி
பாடங்கள்: புனைவு (Fiction), அல்புனைவு (NonFiction), சமூக ஊடக எழுத்து, மொழிநடை (Style)
எழுத்தார்வம் மிக்க, கற்பதில் நாட்டமுள்ள புதியவர்களை வரவேற்கிறேன்.
எழுத வேண்டும் என்ற ஆர்வமுள்ளது. ஆனால் முடியவில்லை;எழுத வேண்டும் என்ற ஆர்வமுள்ளது. ஆனால் சரியாக வருவதில்லை;எழுத வேண்டும் என்ற ஆர்வமுள்ளது. தொடங்கும் எதையும் முடிக்க முடிவதில்லை;எழுதுகிறேன், ஆனால் யாரும் பொருட்படுத்துவதில்லை;பல சிறந்த புத்தகங்களைப் படித்து ரசிக்கிறேன், எதனால் அவை நன்றாக உள்ளன என்று புரிகிறது. ஆனால் நான் எழுதுவது அப்படி இருப்பதில்லை. அது ஏனென்று தெரியவில்லை;ஒன்றிரண்டு புத்தகங்கள் வெளிவந்துவிட்டன. ஆனால் அவை யாருடைய கவனத்துக்கும் செல்லவில்லை. எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை;எனக்கு வாசகர்கள் வேண்டும். எனக்கு ரசிகர்கள் வேண்டும். என் எழுத்து படிக்கப்பட வேண்டும். என் எழுத்து பரவலாக வேண்டும். என் எழுத்து புத்தகமாக வேண்டும். என் எழுத்து கொண்டாடப்பட வேண்டும்…எத்தனையோ பேர் எத்தனை எத்தனையோ காரணங்களைச் சொல்லி வருகிறார்கள். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சூரணம் எல்லாம் கிடையாது. எழுத்தில் இரண்டே ரகம்தான்.
நல்ல எழுத்து. நன்றாக இல்லாத எழுத்து. நல்லது வெல்லும். அல்லாதது வெல்லாது. முடிந்தது.
என் வகுப்புகளில் நல்ல எழுத்தை இனம் காட்டுவதை ஒரு பகுதியாகவும் நன்றாக இல்லாத எழுத்தின் அங்க லட்சணங்களை அலசி ஆராய்வதைப் பெரும்பகுதியாகவும் எப்போதும் அமைத்துக்கொள்கிறேன். இசையைப் போல, ஓவியம் போல எழுத்தும் கலைதான். கலையைக் கற்பிக்க இயலாது. ஆனால் நுட்பங்களைக் கற்றுத்தான் தேறித் தெளிய வேண்டும். நுட்பம் அறியாமல் எழுதும்போதுதான் சிறப்பு வெளிப்படாமல் குவியலில் ஒரு துகளாகிறது.
எழுத்துத் துறையில் எந்த தேவதையும் யார் தலையிலும் கைவைத்து ஆசி வழங்கி, ஓரிரவில் காவியம் பாட வைக்காது. அடிப்படை ஆர்வமும் கற்கும் வேட்கையும் இடைவிடாத பயிற்சியும் இருந்தால் மட்டுமே சாத்தியம். முட்டி மோதி நான் பெற்றதைத்தான் வகுப்புகளில் என் மாணவர்களுக்குத் தருகிறேன். ஆர்வம் உள்ளவர்கள் வரலாம்.
உங்கள் இடத்தை உறுதி செய்ய +91 8610284208 என்ற எண்ணுக்கு வாட்சப் செய்யலாம்.
வகுப்பு தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
All rights reserved. © 2004-2025 Pa Raghavan .
October 18, 2025
பதினைந்து சதவீதம்
தீபாவளியை முன்னிட்டு ஜீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனம் வெளியிட்டுள்ள அனைத்துப் புத்தகங்களுக்கும் பதினைந்து சதவீதம் சிறப்புத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
என்னுடைய சமீபத்திய நாவல் மிருது, பலூசிஸ்தான் விடுதலைப் போராட்ட வரலாறு உள்ளிட்ட, அச்சில் உள்ள 81 புத்தகங்களையும் பார்வையிட்டு வாங்குவதற்குக் கீழே உள்ள சுட்டியைப் பயன்படுத்துக.
ஜீரோ டிகிரியில் பாராவின் புத்தகங்கள்
வாசக நண்பர்களுக்கு மனமார்ந்த தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்.
All rights reserved. © 2004-2025 Pa Raghavan .
October 10, 2025
எழுதும்போது செய்யவே கூடாத தவறுகள் – வகுப்பு
மேற்கண்ட தலைப்பில் ஒருநாள் சிறப்பு வகுப்பு நாளை மறுநாள் ஞாயிறன்று (அக்டோபர் 12) நடக்கும் (zoom class). ஆர்வமுள்ளோர் நாளைக்குள் இணையலாம். பழைய மாணவர்கள், புதிய மாணவர்கள் அனைவருக்கும் இது பொது.
என்னுடைய வழக்கமான வகுப்புகள் நிறைய கதைகளுடன் நடக்கும். வந்தவர்களுக்கு இது தெரியும். இந்த வகுப்பு சற்று வேறு மாதிரி இருக்கும். கூடா 40 என்று ரைமிங்காகத் தலைப்பு வந்துவிட்டதே தவிர, எழுதிப் பார்க்கும்போது நாற்பதல்ல – அறுபது எழுபது தவறுகள் – எல்லாமே படுபயங்கரத் தவறுகளின் பட்டியலாக வருகிறது.
ஆனால் இது முக்கியம். தெரிந்துகொண்டே தீரவேண்டியது. வாழ்நாள் முழுதும் சலிக்காமல் எழுதியும் உரிய அங்கீகாரம் இல்லாமல் புழுங்கும் பலரை அறிவேன். மீள்வதற்கு ஒரே வழிதான். எழுதும்போது நம்மையறியாமல் செய்யும் பிழைகளைத் தெரிந்துகொண்டு களையப் பார்ப்பதே அறிவுடைமை.
கவனம். இது எழுத்துப்பிழை, இலக்கணப் பிழை களையச் சொல்லித்தரும் வகுப்பல்ல. எனக்கு அதற்கெல்லாம் பொறுமையும் இல்லை.
ஆர்வமுள்ளோர் வருக. விவரங்களுக்கு வாட்சப் எண்: 8610284208.
All rights reserved. © 2004-2025 Pa Raghavan .
October 9, 2025
வாழ்வில் இல்லாததும் எழுத்தில் உள்ளதும்
எழுத்தில் நகைச்சுவை கூடுவதென்பது வாழ்க்கையை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதைப் பொறுத்தது. எதையும் விலகி நின்று பார்க்கப் பழகிவிட்டால் நகைச்சுவை தன்னியல்பாக வந்துவிடும். அதாவது, எழுதுபவன் தனிப்பட்ட முறையில் உணர்ச்சிவசப்படவே கூடாது. சிலருக்கு இது இயல்பாக அமையும். பழக்கத்தின் மூலமும் கொண்டு வரலாம். தரபேதம் இருக்கும் ஆனாலும் முழுப் பழுதாகாது.
நகைச்சுவையை முதல் முதலில் Non Fiction இல்தான் முயற்சி செய்தேன். டாலர் தேசத்தில் அது சரியாகக் கூடி வந்தது. உக்கிரமும் தீவிரமும் கூடிய பல இடங்களில் தம்மை மறந்து சிரித்துவிட்டதாகப் பல வாசகர்கள் சொன்னார்கள். அங்கே அவர்கள் சிரிக்காவிட்டால் அடுத்தப் பக்கத்துக்கு நகர மாட்டார்கள் என்று கணித்துச் செய்யப்பட்டது அது. பிறகு ஓம் ஷின்ரிக்கியோ எழுதியபோது எனது முயற்சிக்கு அவசியமே இல்லாமல் அந்த சப்ஜெக்டே உரிய நகைச்சுவையை அள்ளிக் கொடுத்ததைக் கண்டேன்.
நாவல்களைப் பொறுத்தவரை நகைச்சுவை உள்பட எதையும் நான் திட்டமிடுவதில்லை. ஒரு வரியில் ஒரு யோசனை தோன்றும். அதை முகர்ந்துகொண்டு அது போகும் இடமெல்லாம் பின்னால் போவேன். என்ன வருகிறதோ அதுதான். இருநூறு பக்க அலகிலா விளையாட்டாயினும் சரி, எண்ணூறு பக்க சலம் ஆனாலும் சரி. அது அப்படித்தான். வாசகர்கள் அடிக்கடி இதனைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். என்னுடைய புனைவல்லாத எழுத்தில் இருக்கும் நகைச்சுவை உணர்ச்சி ஏன் நாவல்களில் இருப்பதில்லை? இதற்கு நேர்மையான ஒரே பதில், எனக்குத் தெரியாது என்பதுதான்.
இதோடு இன்னொன்றைச் சொல்லிவிட வேண்டும். மிருதுவை ஒரு காதல் கதையாக எண்ணித்தான் ஆரம்பித்தேன். அது ஒரு நகைச்சுவை நாவலாக உருமாற்றம் கண்டதற்கும் உண்மையில் நான் பொறுப்பில்லை.
மிருதுவின் முதல் வரைவை சேனலில் எழுதினேன். அதாவது எழுத்துப்பிழைகள் உள்பட எந்தத் திருத்தமும் பார்க்காமல் வெந்த தோசையை எடுத்துத் தட்டில் போடுவது போல எழுதி முடித்ததும் சேனலில் போட்டேன். நாவல் நிறைவடைந்து மூன்று மாதங்கள் அதை மறந்துவிட்டுப் பிறகு எடுத்து வைத்துக்கொண்டு வரி வரியாக எடிட் செய்யத் தொடங்கியபோதுதான் அதன் கட்டமைப்பிலேயே நகைச்சுவை உள்ளோடி இருந்ததைக் கண்டேன். இரண்டாம் வரைவை முடிக்கும்போது தெளிவாகவே தெரிந்துவிட்டது. அது ஒரு நகைச்சுவைப் புனைவுதான்.
இதனை எழுதும்போது எனக்கு இருந்த ஒரு வசதி, கதாபாத்திரங்களுக்கோ, சம்பவங்களுக்கோ நான் காத்திருக்க அவசியமே ஏற்படவில்லை. எல்லோருமே இருந்தவர்கள். எல்லாமே நடந்தவை. ஒருவருக்கு நடந்ததை இன்னொருவருக்கு நடந்ததாகவும் ஒருவரது அடையாளத்தை வேறொருவரின் அடையாளமாகவும் மாற்றி அமைக்கும் வேலை மட்டுமே எனக்கு இருந்தது. தனித்த ஒரு நகைச்சுவை வசனம்கூட இல்லாமல் மொத்த நாவலும் ஒரு மென்முறுவலைப் பூசிக்கொண்டு வந்து உட்கார்ந்துவிட்டது. முன்பொரு கதை (கால் கிலோ காதல்) இப்படி அமைந்திருக்கிறது. ஆனால் அது நாவலாக வரவில்லை. சற்று நீண்ட கதையாக மட்டும் இருந்தது. மிருது தன்னளவில் ஒரு பிரதேசத்தின், ஒரு தலைமுறையின், ஒரு வாழ்வின், ஒரு காலக்கட்டத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைத் தெளிவாகக் காட்டிவிடுகிறது.
நான் ஒரே ஒரு நல்ல காதல் கதையையாவது எழுத வேண்டும் என்று இருபத்தெட்டு ஆண்டுகளாக என் மனைவி சொல்லிக்கொண்டிருக்கிறாள். மிருதுவில் அதைச் செய்துவிட வேண்டும் என்ற முடிவுடன்தான் ஆரம்பித்தேன். ஆனால் இது ஒரு நல்ல நகைச்சுவை நாவலாக அமைந்துவிட்டது.
வாழ்வில் வந்து போகாத ஒன்று எழுத்தில் மட்டும் எப்படி வரும்?
—
மிருது முன்பதிவுக்கு (30% சிறப்புச் சலுகை விலையில்) இங்கே செல்க.
புத்தகம் அக்டோபர் 13, திங்களன்று வெளியாகும். முன்பதிவு செய்வோர் அனைவருக்கும் கையெழுத்திட்டு அனுப்பி வைப்பேன்.
All rights reserved. © 2004-2025 Pa Raghavan .
எதற்கு இந்தப் புத்தகம்?
நீ வேறு, நான் வேறு: பலூசிஸ்தான் விடுதலைப் போராட்ட வரலாறுபாலஸ்தீனத்து முஸ்லிம்கள் வேறு, இஸ்ரேலிய யூதர்கள் வேறு. அப்படித்தான் பலூசிஸ்தானில் வசிக்கும் பலூச்சிகள் வேறு, பாகிஸ்தானில் வசிக்கும் முஸ்லிம்கள் வேறு.1948 ஆம் ஆண்டிலிருந்து பாலஸ்தீனத்து முஸ்லிம்களுக்குச் சிக்கல் தொடங்கியது. இன்றுவரை அது தொடர்கிறது. அதே ஆண்டுதான் பலூசிஸ்தான் மக்களுக்கும் பிரச்னை ஆரம்பித்தது. இன்னும் ஓயவில்லை.அங்கே நடக்கும் அதே குடியேற்ற அரசியல் இங்கும் நடக்கிறது. அங்கே நடக்கும் அதே இனப்படுகொலை இங்கும் நடக்கிறது. ஒரே வித்தியாசம், அங்கே வெளிப்படையாக நடக்கிறது; பலூசிஸ்தானில் என்ன செய்தாலும் பாகிஸ்தான் அதை வெளியே சொல்வதில்லை.பாலஸ்தீனத்தின் தனிநாடு கோரிக்கைக்கு இன்று பல்வேறு உலக நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. பலூசிஸ்தானின் தனிநாடு கோரிக்கை இன்னும் கோரிக்கை அளவிலேயேதான் இருக்கிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்க ஆதரவு இருக்கிறது. பாகிஸ்தானுக்கும் அமெரிக்க ஆதரவு இருக்கிறது.இன்றைய சூழ்நிலையில், தாற்காலிகமாகவாவது பாலஸ்தீனத்தில் அமைதி ஏற்படலாம். பலூசிஸ்தானில் கண்ணுக்கெட்டும் தொலைவில் அதுவும் சாத்தியமில்லை. மிதிபடுவது ஒன்றே விதியாகிப் போன இனம் அது.இன்றைக்குப் பத்து வரிகளில் பலூசிஸ்தானின் நிலைமையை எடுத்துச் சொல்லி, பாலஸ்தீனத்துடன் அதை ஒப்பிட்டுவிட முடிகிறது. இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குமுதத்தில் பாகிஸ்தானின் அரசியல் வரலாற்றை எழுதிக்கொண்டிருந்தபோது எவ்வளவு முயற்சி செய்தும் பலூசிஸ்தானைக் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இப்போதுமேகூட பலூச்சிகள் எக்ஸ் தளத்தில் நேரடியாகத் தங்கள் பிராந்தியத்தில் நடப்பதைத் தொடர்ந்து பதிவு செய்து வருவதனால் மட்டுமே முடிகிறது. எக்ஸ் தளத்தின் மூலமே அவர்களைத் தொடர்புகொண்டு பேசவும் முடிகிறது. இல்லாவிட்டால் இப்போதும் அது ஒரு மர்ம தேசம்தான்.பலூசிஸ்தான் குறித்து அறிவதற்கான முயற்சிகளை முதல் முதலில் 2001 ஆம் ஆண்டு மேற்கொண்டேன். உண்மையிலேயே அன்றெனக்குக் கிடைத்தது படுதோல்வி மட்டுமே. பிறகு பாகிஸ்தான் உளவுத் துறை பற்றிய புத்தகத்துக்கான தகவல் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது இந்திய உளவுத் துறை பலூசிஸ்தானில் மேற்கொண்ட சில நடவடிக்கைகள் – அவற்றை முறியடிப்பதற்குப் பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகள் குறித்த பாகிஸ்தான் தரப்புத் தகவல்கள் சில கிடைத்தன. அவற்றின் நம்பகத்தன்மை மிகவும் கேள்விக்குரியவை எனத் தோன்றியது. இந்திய உளவுத் துறையில் பணியாற்றியவர்கள் யாராவது நேரடியாகப் பேசினாலொழிய உண்மை நிலவரம் தெரிய வாய்ப்பில்லை என்று நினைத்தேன். அதற்கான சில முயற்சிகளையும் மேற்கொண்டேன். ஆனால் நான் எதிர்பார்த்த அளவுக்குப் போதிய தகவல்களைப் பெற முடியவில்லை. இந்தியத் தரப்பு – பாகிஸ்தான் தரப்பு எனச் சில வாதங்களைப் பெற முடிந்ததே தவிர பலூச்சிகளின் உண்மையான பிரச்னையின் வேர் புலப்படவேயில்லை.கடந்த மே மாதம் ஒன்பதாம் தேதி எக்ஸ் தளத்தில் மிர் யார் பலோச், பலூசிஸ்தானின் விடுதலையை அறிவித்ததை அடுத்துத் தொடர்ச்சியாக உலகெங்கும் பரவி வசிக்கும் பலூச்சிகள் திரை விலக்கி வெளியே வந்து பேசத் தொடங்கிய பின்னர்தான் உண்மையில் அங்கே என்ன நடக்கிறது என்பதே புலப்பட ஆரம்பித்தது. பலூசிஸ்தானைச் சேர்ந்த சில மனித உரிமைப் போராளிகள், பலூச்சி தேசியவாத இயக்கங்களைச் சேர்ந்த சில மிதவாதிகள் மூலம் கிடைத்த தகவல்கள் இந்தப் புத்தகத்தை எழுதப் பெருமளவு உதவின. BLAவின் பரப்புரைக் குழு தொழில்முறை நேர்த்தியுடன் இன்றைக்குச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தாக்குதல் சம்பவத்தையும் அதன் காரணங்களுடன் விளக்கி, அதில் சம்பந்தப்பட்ட போராளிகளின் புகைப்படங்கள், அவர்களைப் பற்றிய தகவல்களுடன் வெளியிடுகிறார்கள். பலூசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் இதுவரை செய்து வந்திருக்கும் அத்தனை அட்டூழியங்களும் இன்றைக்கு ஆவணங்களாக்கப்பட்டுவிட்டன. சில பத்திரிகையாளர்கள்-ஆய்வாளர்களின் நேரடி அனுபவங்கள் புத்தகமாகவும் வெளிவரத் தொடங்கியுள்ளன. இனி, அங்கே விடிய வேண்டியதுதான் மிச்சம்.தமிழில் பலூசிஸ்தான் பிரச்னை குறித்த விரிவான, சரியான அறிமுகத்தைத் தரவேண்டும் என்று நினைத்தேன். பலூச்சிகளின் வரலாற்றுக்குள் முழுதாக இறங்கிப் பார்த்தால், அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் பாலஸ்தீனத்து முஸ்லிம்கள் அனுபவிக்கும் கொடுமைகளுக்குச் சற்றும் குறைவற்றதென்று தோன்றும். அங்கே அவர்கள் முஸ்லிம்கள் என்பதால் அவதிப்படுகிறார்கள். இங்கே இவர்கள் முஸ்லிம்களே ஆனாலும் பலூச்சிகளாக இருப்பதால் அவதிப்படுகிறார்கள். மதமும் இனமும் அரசியலாகும்போது வலியும் வேதனையும் சிறுபான்மையினருடையவை ஆகிவிடுகின்றன. மனித குலம் தோன்றிய நாளாக இதுதான். இப்படித்தான். இலங்கை ஆனாலும் பலூசிஸ்தான் ஆனாலும் உக்ரைன் ஆனாலும் பாலஸ்தீன் ஆனாலும் ஒரு தரப்பை மிதித்துத்தான் பெருந்தரப்பு பிழைத்துக் கிடக்கிறது. நாம் செய்யக்கூடியதெல்லாம் வரலாற்றைச் சரியாகப் புரிந்துகொண்டு சாய்வுகளற்று அணுக முயல்வது மட்டும்தான்.இந்தப் புத்தகம் அதற்கு உதவும் என்று நம்புகிறேன். புத்தகம் வரும் 13 ஆம் தேதி திங்களன்று வெளியாகிறது.30 சதவீதச் சலுகை விலையில் முன்பதிவு செய்ய இங்கே செல்லவும்.
All rights reserved. © 2004-2025 Pa Raghavan .
பலூசிஸ்தான் விடுதலைப் போராட்ட வரலாறு – புதிய புத்தகம்
நீ வேறு, நான் வேறு
கடந்த மே மாதம் 9 ஆம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள பலூசிஸ்தான் மாகாணம் தன்னை விடுவித்துக்கொண்டதாக அறிவித்தது. பலூசிஸ்தான் என்கிற பிராந்தியம் குறித்தும் அதன் பிரச்னைகள் குறித்தும் உலகம் சற்றே விரிவாகத் தெரிந்துகொள்ள அமைந்த முதல் தருணம் அது.
1948 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானின் பிடியில் சிக்கிச் சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கும் பலூசிஸ்தானின் விடுதலைப் போராட்ட வரலாறு மிக நீண்டது; தீவிரமும் தகிப்பும் கொண்டது. கடந்த எழுபதாண்டுகளுக்கும் மேலாகத் திட்டமிட்டு மறைக்கப்பட்டது. விரிவான ஆய்வுக்குப் பிறகு மெட்ராஸ் பேப்பர் வார இதழின் தினசரிப் பகுதியில் இதனைத் தொடராக எழுதினேன்.
பலூசிஸ்தான் விடுதலைப் போராட்ட வரலாறு இப்போது ஜீரோ டிகிரி பிரசுரம் மூலம் புத்தகமாக வெளிவருகிறது.
அக்டோபர் 13 ஆம் தேதி புத்தகம் வெளியாகிறது. முன்பதிவு செய்வோருக்கு முப்பது சதவீத சிறப்புத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
புத்தகத்தை முன்பதிவு செய்ய இங்கே செல்க.
முன்பதிவு செய்வோருக்கு அக்டோபர் 13 ஆம் தேதி பிரதியில் கையெழுத்திட்டு அனுப்பிவைப்பேன்.
All rights reserved. © 2004-2025 Pa Raghavan .
மிருது – புதிய நாவல்
கடந்த ஜனவரியில் ‘சலம்’ எழுதி முடித்ததும் அதன் பிடியிலிருந்து விடுபடுவதற்காக எழுதிய நாவல் மிருது. சலத்தின் உக்கிரம், ஆக்ரோஷம், தகிப்பு அனைத்திலிருந்தும் முற்றிலும் விலகி, தொட்ட இடமெல்லாம் வருடித்தரும் விதமாக இதனை எழுதினேன். ஒரு கொண்டாட்ட மனநிலையில் எழுதியது எனலாம். இந்நாவலில் கூடி வந்திருக்கும் நகைச்சுவை இதற்குமுன் எனக்கு ஒரு புனைகதையில் அமையாதது. அது தானாக நேர்ந்தது. அதனாலேயே இது எனக்கு மிகவும் பிடித்த நாவலாகிப் போனது.
மிருது, அக்டோபர் 13 ஆம் தேதி வெளியாகிறது. என்னுடைய அனைத்துப் புத்தகங்களையும் வெளியிடும் ஜீரோ டிகிரி பப்ளிஷிங்கின் எழுத்து பிரசுரம் இதையும் வெளியிடுகிறது.
முப்பது சதவீதச் சிறப்புத் தள்ளுபடி விலையில் முன்பதிவு செய்ய இங்கே செல்க.
முன்பதிவு செய்வோருக்கு அக்டோபர் 13 ஆம் தேதி பிரதியில் கையெழுத்திட்டு அனுப்புவேன்.
All rights reserved. © 2004-2025 Pa Raghavan .
August 15, 2025
மெட்ராஸ் பேப்பர் – சுதந்தர நாள் விழா
இன்று மாலை (ஆகஸ்ட் 15, 2025) ஆறு மணிக்கு மெட்ராஸ் பேப்பர் வார இதழ் நடத்தும் சுதந்தர நாள் விழாவுக்கு உங்களை அன்புடன் அழைக்கிறேன். நிகழ்ச்சி zoom வழி நடைபெறும். விவரங்கள் மேலே காணும் அழைப்பிதழில் உள்ளன. இணைவதற்கான லிங்க், கீழே.
வருக.
நிகழ்ச்சியில் இணைவதற்கான zoom link இங்கே உள்ளது. சரியாக மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும்.
All rights reserved. © 2004-2025 Pa Raghavan .
July 24, 2025
வேட்டி
இகவாழ்வில் ஒவ்வொருவருக்கும் விடை தெரியாத வினாக்கள் ஆயிரம் இருக்கும். எனக்கு உள்ளவற்றுள் முதன்மையான வினா, வேட்டி எப்படி இடுப்பில் நிற்கிறது என்பது.
அழகாக வேட்டி கட்டிக்கொள்வோரை எனக்குப் பிடிக்கும். இடுப்பில் அதனை வெறுமனே சொருகிக்கொண்டு நாளெல்லாம் பொழுதெல்லாம் ஊர் திரிவோர் பலரை அறிவேன். பாதுகாப்பு கருதி பெல்ட் கட்டிக்கொள்பவர்கள், லுங்கி மடித்து விடுவது போல வேட்டி நுனியில் நான்கு மடிப்பு வைத்து இறுக்கிக்கொள்வோரையும் பார்த்திருக்கிறேன். வேட்டியை இடுப்பில் நிலைநிறுத்துவது ஒரு கலை என்றால், அது விலகிக் கவர்ச்சி காட்டாமல் வண்டி ஓட்டுவது இன்னும் பெரிய கலை. மேற்படி இரண்டு கலைகளிலுமே என் முயற்சிகள் படுதோல்வி கண்டிருக்கின்றன. ஏழெட்டு கழுதை வயதான பின்பும் எனக்கு வேட்டி கட்ட வரவில்லை. மீறி, கட்டிக்கொண்டு வண்டியை எடுத்தால் வீதிக்கெல்லாம் ரம்பா டான்ஸ் காட்டும்படி ஆகிவிடுகிறது.
என் மனைவிக்கு இது குறித்த வருத்தம் உண்டு. ஒரு நாள் கிழமை என்றால்கூட அரை டிராயரைப் போட்டுக்கொண்டு நிற்கிறானே என்று வருத்தப்படுவாள். தொப்பையுள்ள மற்றவர்கள் எல்லாம் வேட்டி கட்டாமலா இருக்கிறார்கள்? நீ வேண்டுமென்றே அதை நிராகரிக்கிறாய்.
இல்லை. நான் வேண்டுமென்று வேட்டி கட்டாதிருப்பதில்லை. உண்மையிலேயே எனக்கு வேட்டி இடுப்பில் நிற்பதில்லை. அது அவிழ்ந்துவிடாமல் இருப்பதற்காக இடுப்பில் மிக வலுவான அஸ்திவாரமெல்லாம் போடுவேன். மடித்து மடித்து இழுத்துச் சொருகி என்னவெல்லாமோ செய்வேன். எல்லாம் சரியாகச் செய்துவிட்டது போலத்தான் இருக்கும். ஆனால் கட்டி முடித்து வெளிப்பட்டால், பார்ப்பவர்கள் சிரிக்கும்படியாக அமைந்துவிடும். முன்புறம் சரியாகப் பாதம் மறையும் அளவுக்கு இடைவெளிவிட்டுத்தான் இடுப்பில் மடித்திருப்பேன். ஆனால் பின்பக்கம் விளக்குக் கம்பம் பார்த்த நாய் போல அது தூக்கிக்கொண்டு நிற்கும். காணச் சகிக்காது. அதை இறக்கிவிடலாம் என்று பார்த்தால் முன்புறத் தொப்பைச் சரிவில் வேட்டி விழுந்துவிடும்.
ஆ, தொப்பை. அது என் தீராத அவமானம். ஐந்து வருட காலம் படு உக்கிரமான பேலியோ டயட் இருந்து இருபத்தெட்டு கிலோ எடை குறைத்தபோதும் அது மட்டும் குறைவேனா என்று நின்று ஆட்டம் காட்டியது. வெறுத்துப் போய்தான் டயட்டையே விட்டொழித்துவிட்டுப் பழைய பாசத்தில் மத்தியப் பிரதேசத்தைச் செழிக்க வைக்கத் தொடங்கினேன். மீண்டுமொரு முயற்சியெல்லாம் சாத்தியமா என்று தெரியவில்லை. எனவே, என் உருண்டு திரண்ட தொப்பையை உள்ளடக்கித்தான் வேட்டி கட்டப் பழக வேண்டும்.
இன்னொன்று. என்னைக் காட்டிலும் பெரிய தொப்பை உள்ளவர்களை அடிக்கடி பார்க்கிறேன். அவர்கள் எல்லோரும் எளிதாக வேட்டி கட்டிக்கொண்டு வெளியே வருகிறார்கள். ஆனால் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் என் தொப்பையின் தனித்துவம் நிகரற்றது. கடம் வடிவ, தவில் வடிவத் தொப்பையர்களின் இடுப்புகளில் வேட்டி நிற்பதில் சிக்கலில்லை போலிருக்கிறது. என்னுடையது ஓர் அருவியின் உச்சிப்பாறையை நிகர்த்தது. வேட்டி என்றில்லை. பேன்ட் அணிந்தாலும் தொப்பைக்கு மேலே நிற்காமல் சரிந்து விழும். பேன்ட்டுக்கு பெல்ட் போட்டு இறுக்கினாலும் சரிந்துதான் விழும்.
இதனைத் தவிர்க்க இரண்டு வித உத்திகளைக் கையாள்கிறேன்.
1. தொப்பைக்குக் கீழே அணியும் வகையில் மெலிதான எலாஸ்டிக் தன்மை கொண்ட ஜீன்ஸ் பேன்ட்களை மட்டும் அணிகிறேன்.
2. அதி அவசியம் இல்லாத மீட்டிங்குகளுக்கு பேன்ட் அணிந்து செல்வதேயில்லை. எங்கும் எப்போதும் எலாஸ்டிக் வைத்த அரை டிராயர்தான்.
பேன்ட்டுக்கே இந்த நிலைமை என்றால் வேட்டி எப்படி? அதுதான் தெரியவில்லை.
சிறு வயதுகளில் இந்த அளவு தொப்பையெல்லாம் எனக்கில்லை. ஆனாலும் நானொரு வளரும் பிள்ளையாகவே அப்போதும் இருந்தேன். அக்காலங்களில் கட்டம் போட்ட லுங்கிகளே என் விருப்பமான வீட்டு உடையாக இருந்தது. ஒரு சம்பவம், இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. அப்போது நான் பாலிடெக்னிக் படித்துக்கொண்டிருந்தேன். ஏதோ ஒரு விடுமுறைக் காலம் என்று நினைவு. வீட்டில் லுங்கியை மடித்துக்கட்டிக்கொண்டு இங்குமங்கும் திரிந்துகொண்டிருந்த சமயத்தில், திருக்கண்ணபுரத்தில் இருந்து என் அப்பாவின் மாமா எதிர்பாராமல் வந்தார். மிகவும் வயதானவர். சௌரிராஜப் பெருமாள் கோயிலில் பணியாற்றுபவர். படு பயங்கர ஆசாரசீலர். வீட்டு வாசலில் நின்று கண்ணை இடுக்கி, புருவத்துக்கு மேலே விரல்களைக் குவித்து என்னைப் பார்த்தார். சரியான வீட்டுக்குத்தான் வந்திருக்கிறோமா, முகவரி மாறிவிட்டோமா என்கிற சந்தேகத்தில் பார்ப்பது போலத் தெரிந்தது. எனக்கு அவரை அடையாளம் தெரிந்தது. எனவே வேகமாக வாசலுக்குச் சென்று வரவேற்றேன்.
‘இருக்கட்டும் இருக்கட்டும். பார்ஸார்தி இருக்கானா?’ என்றார்.
‘உள்ள வாங்க. இப்ப வர்ற நேரம்தான்’ என்று சொன்னேன்.
ஓரிரு நிமிடங்களுக்குள்ளாகவே அப்பா வந்துவிட்டார் என்றாலும் அவர் தலையைக் காணும் வரை அம்மனிதர் வீட்டுக்குள் காலெடுத்து வைக்கவேயில்லை.
பிறகு அப்பாவிடம் சொன்னார், ‘உம்பிள்ள உள்ள வான்னுதான் கூப்ட்டான். ஆனா கைலி கட்டிண்டிருந்தானா, கொஞ்சம் தெகச்சுப் போயிட்டேன்.’
வாசகசாலை அருண்லுங்கி அநாசாரம் என்று தெரிந்த பின்பு அதன்மீது இன்னும் பாசம் அதிகமாகிப் போனது. 2004 ஆம் ஆண்டு வரை வீட்டில் லுங்கிதான் அணிந்து வந்தேன். கிழக்கு பதிப்பகம் ஆரம்பித்து, அங்கே பணியில் சேர்ந்த பின்புதான் அரை டிராயர் அறிமுகமானது. அரை டிராயருடன் ஆபீசுக்கும் வரலாம் என்று நல்வழி காட்டி அதைத் தானே தொடங்கி வைத்தவர் பத்ரி. பத்ரியிடம் கற்பதற்கு எவ்வளவோ நல்ல விஷயங்கள் உண்டு. நான் அரை டிராயர் அணிந்து எங்கு வேண்டுமானாலும் சுற்றலாம் என்பதை மட்டும் கற்றேன்.
இன்றுவரை அதுதான் என் உடையாக உள்ளது. இடுப்பில் இருப்பதே தெரியாது. வியர்க்காது. மணிக்கணக்காக உட்கார்ந்து வேலை பார்க்கலாம். அப்படியே கிளம்பி வெளியே போகலாம். என் தொப்பை அங்கீகரித்த ஒரே ஆடை அதுதான்.
செல்வேந்திரன், வாசகசாலை அருண் போன்ற எழுத்துலக நண்பர்கள் அழகாக வேட்டி கட்டிக்கொண்டு விழாக்களுக்கும் புத்தகக் காட்சிகளுக்கும் வரும்போது சிறிது ஏக்கமாகப் பார்ப்பேன். சிலதெல்லாம் ஏக்கமாகவே நீடித்திருப்பதுதான் நாட்டுக்கு நல்லது என்று நினைத்துக்கொண்டுவிடுவேன்.
All rights reserved. © 2004-2025 Pa Raghavan .
July 21, 2025
கருவி(யி)ன் குற்றம்
சிறிய விஷயங்களில் சிறப்பாக விளக்கு பெறும் கலையில் நான் விற்பன்னன்.
ஓர் உதாரணம், என்னால் இயர்போன் அணிந்து நடக்க முடியாது. என்னதான் திருகு திருகென்று திருகி உள்ளே சொருகினாலும் அந்தக் காதுக் குமிழ் கீழே விழுந்துவிடும். அல்லது திருகும் வேகத்தில் பாடுவது நின்றுவிடும். திருக வேண்டாம்; சொருகினால் போதும் என்பது தெரியும். ஆனால், உலகுக்கே ஒழுங்காக வேலை செய்யும் அக்கருவி எனக்கு மட்டும் செய்யாது. இதனாலேயே ஆப்பிள் ஏர்பாட் வாங்கும் ஆசையை நிரந்தரமாகத் தவிர்த்திருக்கிறேன்.
பல்லாண்டுக் காலமாக ஒரு சோனி வயர்ட் ஹெட்போன் மாட்டிக்கொண்டுதான் நடைப் பயிற்சிக்குச் சென்றுகொண்டிருந்தேன். அது ஏற்கெனவே மண்டை பெருத்த மகாதேவனான என் சிரத்தைத் திரிசிரமாக்கிக் காட்டும். பிராந்தியமே என்னை ஒரு வினோத ஜந்துவைப் போலப் பார்க்கும். ஒரு கட்டத்தில் அது நடையை பாதிக்கத் தொடங்கியதால் பாட்டு கேட்பதை நிறுத்திவிட்டு, கிண்டிலை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன். ஒரு மணி நேரத்தில் முப்பது, நாற்பது பக்கங்கள் படிக்க முடிந்தது. ஆனால் நடந்து முடித்ததும் வழக்கத்தினும் களைப்பாகிவிடும். சரிப்படவில்லை.
என் மனைவி பலநாள் போதனை செய்து, திட்டி, சொல்லிக் கொடுத்து கழுத்தில் மாட்டிக்கொள்ளும் வசதியுள்ள ப்ளூடூத் இயர்போனைப் பழக்கினார். இதில் ஒரு சௌகரியம் என்னவெனில், காதுக் குமிழ் கீழே விழுந்தாலும் கருவி தரையில் விழுந்து மாளாது. கழுத்தில் மாட்டிக்கொண்டு புன்னகை மன்னன் கமலைப் போலத் தொங்கும்.
கல்லூரி மாணவியான என் மகள் ஐடி கார்டுடன் இதனையும் நிரந்தரமாகவே கழுத்தில் அணிந்துகொண்டு இருப்பதையும் அவளையொத்த பிற மாணவர்களும் இவ்வண்ணமே செய்வதையும் பார்த்து சிறிது நம்பிக்கை வந்தது. அவள் உபயோகித்துக் கடாசிய இயர்போன் ஒன்றை மாட்டிக்கொண்டு நடைப் பயிற்சிக்குச் செல்லத் தொடங்கினேன்.
என் காதில் அப்படி என்ன பிரச்னை என்று உண்மையிலேயே தெரியவில்லை. பத்தடிக்கு ஒருமுறை அது கழண்டு விழுந்துகொண்டே இருந்தது. இருப்பினும் விடா முயற்சியின் காரணமாக ஏதோ ஒரு நன்னாளில் அது என் காதுகளின் காதலை ஏற்றுக்கொண்டு தங்கத் தொடங்கிவிட்டது. சொகுசாகப் பாட்டு கேட்டுக்கொண்டு நல்லபடியாகத்தான் நடந்துகொண்டிருந்தேன்.
திடீரென ஒருநாள் அக்கருவி மரணத் தறுவாயை அடைந்தது. முழு சார்ஜ் ஏற்றினாலும் முதல் பாடலின் பாதியிலேயே எவனோ ஒரு தென்னமெரிக்கன் வந்து விடைபெறுகிறேன் நண்பனே என்று இசுப்பானியத்தில் சொல்லிவிட்டுச் செத்துவிடுவான்.
சரி, வேறு வாங்கலாம் என்று நினைத்தபோது அட்மின் ஆனவர் மறுத்தார். மகளிடம், பயன்படுத்தாத ஏர்டொப் 441 என்னும் ப்ளூடூத் கம்மல் உள்ளது. அதன் கோவிந்தா மஞ்சள் நிறம் பிடிக்காமல் (நான் வாங்கித் தந்ததுதான்) அவள் இன்னொரு வசதியான கம்மல் வாங்கிவிட்டதால் இந்தப் பழைய நிராகரிக்கப்பட்ட நீலப்பல் கம்மலை அணிந்துகொண்டுதான் நான் நடைக்குச் செல்ல வேண்டும் என்று உத்தரவானது.
இது என்னைப் போலவே உருண்டையானது. அசப்பில் ஒரு உருளைக்கிழங்கு போண்டாவைக் காதில் சொருகியது போல இருக்கும். காது துவாரங்களுக்குள் சொருகி எப்படிச் சுழற்றினாலும் இரண்டடி நடந்தால் கீழே விழுந்துவிடும். சுழற்றாமல் அப்படியே சொருகப் பார்த்தால் பாடாது. அதுகூடப் பரவாயில்லை. என் கைபேசியுடன் pare ஆகிற விஷயத்தில் ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு மாதிரி நடந்துகொள்ளும். சில நாள் அதன் செல்லப்பெட்டியைத் திறக்கும்போதே பேசியுடன் இணைந்துகொள்ளும். சில நாள் புரட்டிப் போட்டு அடித்தாலும் இணையாது. வேறு வழியின்றி கல்லூரிக்குக் கிளம்பும் அவசரத்தில் உள்ள மகளிடமே சென்று நிற்பேன். அவள் தொட்டால் மட்டும் உடனே இணையும் பித்தலாட்டத்தை அது எங்கிருந்து கற்றது என்று தெரியாது.
இணைவது ஒரு பிரச்னை என்றால் முன்சொன்ன, நடக்கும்போது நட்டுக்கொண்டு விழும் பிரச்னைக்கு அவளாலும் ஒன்றும் செய்ய முடியாது. கடந்த சில மாதங்களாகப் பாட்டுக் கேட்கவோ, தொலைபேசியில் யாருடனாவது பேசிக்கொண்டோ நடப்பதே பெரும் பிரச்னையாக இருந்தது. காதில் உள்ள உருளைக்கிழங்கு போண்டா கீழே விழுந்துவிடாதிருப்பது குறித்து மட்டுமே சிந்தித்தபடி நடப்பது ஒரு பெருங்கொடுமை.
தாங்கவே முடியாமல் அமேசானில் ஒரு நீலநிறத் தாலியை ஆர்டர் போட்டேன் (JBL Tune 215BT) மூவாயிரம் விலை. ஐம்பது சதமானத் தள்ளுபடி. மேலுக்கு அமேசான் பே க்ரெடிட் கார்ட் உபயோகித்து நான் சேகரித்து வைத்திருந்த 960 ரூபாயைக் கழித்துக்கொள்ளச் சொல்லி, ரூபாய் 539க்கு பேரத்தை முடித்தேன். அது சில மாதங்கள் ஒழுங்காகப் பாடியது. ஆனாலும் என்ன? இந்த இரண்டு கே கிட்டுகள் பயன்படுத்தும் எந்த ஓர் உபகரணமும் என் காதில் ஏற மறுக்கிறது. அப்படியே ஏறி உட்காரும் கருவி வேறு விதங்களில் இம்சிக்கிறது. உதாரணமாக ஒரு நல்ல படே குலாம் அலிகான் கஸல் கச்சேரியைப் பத்து நிமிடங்கள் வலப்புறக் காதிலும் அடுத்த ஐந்து நிமிடங்கள் இடப்புறக் காதிலுமாக மாற்றி மாற்றி உங்களால் கேட்க முடியுமா? நான் ஆசைப்பட்டு வாங்கிய காதுக் கருவி அப்படித்தான் இசையைப் பகுப்பாய்வு செய்து கொடுத்தது.
வெறுத்துப் போய் அதையும் தூக்கி எறிந்தேன். மண்டை பெருத்த மகாதேவன்களுக்கு ஹெட்செட்களே சரி. இரண்டு காதுகளிலும் ஹார்லிக்ஸ் பாட்டில் மூடிகளைப் போல அழுத்தி மூடிக்கொண்டு தலைக்கு மேலே பெண் குழந்தைகள் அணியும் ஹேர் பேண்டையே சற்றுப் பட்டையாகப் பொருத்தினாற்போல மாட்டிக்கொண்டு நடக்கிறேன். கால மாற்றத்தால் இப்போது ஒயர் தேவைப்படுவதில்லை. எல்லாம் நீலப் பல். எல்லாம் வசதியாகவே இருக்கிறது.
என்ன ஒன்று, எப்போதும் சார்ஜ் போட மறந்துவிடுகிறேன். அதுவும் எப்போது உயிரை விடப் போகிறேன் என்று சொல்லிவிட்டுச் சாவதில்லை என்பதால் வாரத்தில் ஒரு நாளாவது ஹெட் செட் என்பதை ஒரு செட் ப்ராபர்ட்டியாக மட்டுமே சுமந்துகொண்டு நடக்க வேண்டியதாகிவிடுகிறது.
All rights reserved. © 2004-2025 Pa Raghavan .


