Pa Raghavan's Blog, page 5

April 28, 2025

பிரதி கர்ப்பம்

Pa Raghavan

எப்போதாவது எழுதுபவர்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை. எப்போதாவது மட்டும் எழுதாமல் இருப்போருக்கு மட்டுமே இந்த வலியின் தீவிரம் புரியும்.

ஒரு பெரிய நாவல் அல்லது ஏதாவது ஒரு புனைவல்லாத நூலை எழுத ஆரம்பிப்பேன். முன்னதாகப் பல மாத காலம் – சில சமயம், சில வருட காலம் அதற்காக உழைத்திருப்பேன். தகவல்கள் தேடித் திரட்டித் தொகுத்து, ஒரு வடிவத்துக்குக் கொண்டு வந்த பின்புதான் எழுதலாம் என்றே தோன்றும். அதன் பிறகு நல்ல நாள் பார்த்து, ஊர் உலகத்தில் வசிக்கும் அனைத்து தெய்வங்களையும் சகாயத்துக்குக் கூப்பிட்டு வைத்துக்கொண்டு, என்னைக் காக்கும் சித்தர்களைத் தொழுது, மனத்துக்கண் தாற்காலிக மாசிலனாகி, செயலொன்றே சித்தம் என்று ஆரம்பித்திருப்பேன். பத்திருபது நாள்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லாமல் எழுதி நூறு, நூற்றைம்பது பக்கங்கள் அல்லது பதினையாயிரத்தில் தொடங்கி இருபதாயிரம் சொற்கள் வரை எழுதி முடித்திருப்பேன். ஏதாவது ஒரு காரணத்தினால் ஒன்றிரண்டு நாள்களுக்கு எழுத முடியாமல் போகும். பிறகு எனக்கே தெரியாமல் சுதி பிசகி நின்றுவிடும்.

அப்படி நிற்கும் பிரதிகளைச் சிறிது இடைவெளி விட்டு மீண்டும் தொடரப் பார்ப்பேன். பெரும்பாலும் முடியாது. எனவே மீண்டும் முதலிலிருந்து எழுத ஆரம்பிப்பேன். அப்படி எழுதி நிறைவு செய்த நூல்கள் சில உண்டு.

உதாரணமாகக் கபடவேடதாரி. இந்த நாவலை மூன்று முறை கிட்டத்தட்ட முழுமைக்கு அருகே கொண்டு சென்று நிறுத்தி, நிறுத்தி, மீண்டும் முதலில் இருந்து தொடங்கி, நான்காவது முறைதான் எழுதி முடிக்க முடிந்தது. என்ன காரணம் என்று கேட்டால், தெரியாது. பூனைக்கதையின் இரண்டாம் பாகத்தை மட்டும் முழுதாக இரண்டு முறை எழுதியிருக்கிறேன். இறவானில் ஒரு குறிப்பிட்ட அத்தியாயத்தை மட்டும் பதினேழு முறை மாற்றி மாற்றி எழுதிப் பார்த்தேன். முற்றிலும் வேறு வேறு வடிவங்களில்.

அரசியல் நூல்கள் எழுதும்போது இது அடிக்கடி நடக்கும். 9/11, ஐ.எஸ்.ஐ., காஷ்மீர் (நினைவுப் பிசகால் மாற்றிச் சொல்லியிருக்கிறேன்.)  சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு – மூன்றையும் முழுதாகவே இரண்டு முறை எழுதியிருக்கிறேன். வட கொரியா எழுதும்போது குறைந்தது இருபது முறையாவது வேலை தடைப்பட்டு நின்றது. கிட்டத்தட்ட ஒரு வருட காலம் என் மனைவிக்குக் கூடச் சொல்லாமல் ரகசியமாக எழுதிக்கொண்டிருந்துவிட்டு, இறுதியில் அவளது ஆலோசனை இல்லாமல் அதை எழுதி முடிக்கவே முடியாது என்று தோன்றிய பின்புதான் ஒருநாள் காலை நடையின்போது நான் அதை எழுதிக்கொண்டிருக்கும் விஷயத்தைச் சொன்னேன். பிறகு எழுத்துக்கான திட்டத்தை அவள் சொன்னபடி வகுத்துக்கொண்டு மீண்டும் எழுதத் தொடங்கி, ஐந்து மாதங்களில் முற்றிலும் புதிய பிரதி ஒன்றை எழுதி நிறைவு செய்து அச்சுக்குக் கொடுத்தேன். இவையெல்லாம் எப்படியாவது முடித்துவிட்ட புத்தகங்கள்.

ஆனால் இன்று வரை ஏன் நின்றது என்றும் தெரியாமல், எப்படித் தொடர்வது என்றும் புரியாமல் போட்டு வைத்திருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை இருபதுக்கு மேலே (மேலே உள்ள படத்தில் இருக்கும் கோப்புகளை எண்ணிக்கொள்ளுங்கள்). இதில் மூன்று நாவல்களும் அடங்கும்.

எழுதும் விஷயத்தில் நான் மிகுந்த கவனமும் கூர்ந்த அக்கறையும் கொண்டவன். மனத்துக்குள் முற்றிலும் தயாராகாமல் எழுதத் தொடங்கியதே இல்லை. கருவும் மொழியும் உருத் திரண்டு, ஒத்திசைவாய் வருவதை உறுதி செய்துகொள்ளாமல் ஆரம்பிக்க மாட்டேன். நாவல் என்றால் களமும் மொழியும். கதாபாத்திரங்களையோ சம்பவங்களையோ சிந்திக்க மாட்டேன். அது எழுத எழுதத் தன்னால் வந்துவிடும். சலம் ஆரம்பிப்பதற்கு முன்னால் அதர்வன் அதன் கதாநாயகனாக இருப்பான் என்றுதான் நினைத்தேன். ஆனால், எழுதத் தொடங்கிய பத்தாவது அத்தியாயத்தில், ‘நீ யார் அதை முடிவு செய்வது?’ என்று நாவல் குத்சனை யானை மீது ஏற்றிக்கொண்டு போய்விட்டது.

அப்படி நடப்பது சாதாரணமான விஷயம். எல்லோருக்கும் எப்போதும் நடக்கும். அதுவல்ல என் சிக்கல். எவ்வளவுதான் உரிய ஆயத்தங்களுடன் எழுத உட்கார்ந்து, காலமும் நேரமும் சகாயம் செய்தாலும்கூடச் சில புத்தகங்கள் பாதியில் நின்றுவிடும். இறுதிவரை அதைத் தொடர்ந்து முடிக்க வழி புலப்படாது.

‘முதல் நாவலைத் தொடங்கினேன். பாதியில் நின்று, மிகுந்த மனச்சோர்வாகிவிட்டது’ என்று சொல்லிக்கொண்டு பலபேர் வருவார்கள். அப்படிப் பாதியில் நின்றதற்கெல்லாம் சோர்ந்து போவதென்றால் இந்நேரம் நான் மனநோய் விடுதியில்தான் இருந்திருப்பேன் என்று சொல்வேன். எழுதுபவனுக்கு அடிப்படையில் ஓர் எருமைமாட்டுத்தனம் தேவை. எழுத்து தொடங்கி வாழ்க்கை வரை எதையும் உணர்ச்சிவசப்படாமல், நிதானம் குலையாமல் அணுகத் தெரிவது மிகவும் முக்கியம் என்று கருதுகிறேன். சொல்கிறேனே தவிர, வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் தடுமாறி விழுந்திருக்கிறேன். ஆனால் எப்போதும் எழுத்தில் அப்படி நிதானம் தவறியதில்லை. அப்படியும் சில பிரதிகள் தேங்கிவிடுகின்றன.

இவ்வாறு நின்றுபோன புத்தகங்களைக் குறித்து ஓரிரு மாதங்களுக்கு முன்னர் சொக்கனுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். எழுதி முடித்து இன்னும் அச்சாகாத புத்தகங்களைக் குறித்து அவன் சொன்னான். அதிர்ஷ்டவசமாக எனக்கு அப்படிப்பட்ட அனுபவம் ஏதுமில்லை. பல வருடங்கள் காத்திருந்து இரண்டு சிறுவர் நூல்கள் பிரசுரமாயின. நானே வேண்டாம் என்று நிறுத்தி வைத்த ஓர் அரசியல் நூலை (ஹமாஸ்), இப்போது வெளியிடலாம் என்று நினைத்து, சில வருடங்களுக்கு முன்னர் கொண்டு வந்தேன். வேறு வருந்தத்தக்க அனுபவங்கள் ஏதும் பதிப்பு சார்ந்து எனக்கு ஏற்பட்டதில்லை.

ஆனால், இந்த நின்று போன புத்தகங்கள் அடங்கிய ஃபோல்டரைப் பார்க்கும் போதெல்லாம் சிறிது துக்கம் எழும். உடனே அதை மூடி வைத்துவிட்டு வேறு ஏதாவது செய்ய ஆரம்பித்துவிடுவேன். ஏனென்றால், அத்துக்கத்தைப் பெருக அனுமதித்தால் வேறெந்த வேலையும் செய்ய முடியாது.

இரண்டு, இரண்டரை வருடங்களுக்கு முன்னர் ஒரு நாவலை எழுத ஆரம்பித்தேன். அது மட்டும் வெளிவருமானால் அநேகமாக அனைத்து உலக மொழிகளுக்கும் செல்லக்கூடிய தகுதியுடன் இருக்கும் என்று தீர்மானமாகத் தோன்றியது. கருவாக மனத்தில் அது விழுந்தபோதே அதிலிருந்த சர்வதேசத்தன்மையைக் கண்டுகொண்டேன். வாழ்வில் வேறெதற்குமே தராத உழைப்பினை அதற்குச் செலுத்தியிருந்தேன். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுக் காலம், தரவு சேகரிப்புக்கும் ஆய்வுக்குமே செலவானது. எனக்கு வருமானம் தரக்கூடிய அனைத்துப் பணிகளையும் உதறிவிட்டு (எழுத்துப் பயிற்சி வகுப்புகள் உள்பட.) முழு மூச்சாக அந்நாவலை எழுத ஆரம்பித்தேன்.

வழக்கத்துக்கு விரோதமாக அதன் ஒவ்வோர் அத்தியாயமும் ஒரு குறுநாவல் அளவுக்குப் பெருகிக்கொண்டே சென்றது. அது நான் எண்ணிப் பார்த்திராதது. அத்தியாயங்களை ஆகக் கூடியவரை சிறிதாக அமைப்பதையே எப்போதும் விரும்புவேன். ஆனாலும் என் கட்டுப்பாட்டை மீறி, ஒவ்வோர் அத்தியாயமும் ஐயாயிரம், ஆறாயிரம் சொற்களுக்கெல்லாம் சென்றுகொண்டிருந்தது.

சரி, என்னதான் ஆகிறதென்று பார்ப்போம் என்று எழுதிக்கொண்டே இருந்தேன். ஒன்பது அத்தியாயங்கள் ஓடி, ஓரிடத்தில் முட்டிக்கொண்டு நாவல் நின்றது.

எழுதிய வரை புத்தகமாக்கினால் நிச்சயமாக அறுநூறு பக்கங்கள் வரும் என்று தோன்றியது. ஆனால் அது நான் எழுத நினைத்திருந்த நாவலின் இருபது சதம்கூட இல்லை. என் மொத்த சக்தியையும் திரட்டி அடுத்த அத்தியாயத்துக்குள் நுழைந்துவிடப் பல மாதங்கள் முயற்சி செய்தும் நடக்கவில்லை. எத்தனையோ நாள் இரவெல்லாம் துக்கம் பொங்கிக் கண்ணீர் வரும். என்னை எழுத வைத்துக்கொண்டிருக்கும் சித்தர்களெல்லாம் கைவிட்டுவிட்டுச் சென்றுவிட்டார்களோ என்றெல்லாம் அஞ்சி நடுங்கி, உறக்கத்தில் அலறி எழுந்திருக்கிறேன். நான் அப்படி உறக்கத்தில் அலறி எழுந்துகொள்வதற்கு என் மனைவியும் மகளும் வேறு பல குடும்பக் காரணங்களைக் கண்டுபிடித்துச் சொல்லிக்கொண்டிருந்ததை வைத்தே ஒரு கதை எழுதலாம் போலிருந்தது.

இது இப்படியே நீடித்தால் உண்மையிலேயே பைத்தியம் பிடித்துவிடும் என்று தோன்றியது. ஒருநாள் திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதிக்குச் குடும்பத்துடன் சென்று சிறிது நேரம் உட்கார்ந்திருந்துவிட்டு வந்தேன். அன்றிரவு உறக்கத்தில் சலத்தின் ஊற்றுக்கண் திறந்துகொண்டது. அது, யதி எழுதுவதற்கு முன்னால் மனத்தில் உதித்த கரு.

எழுத ஆரம்பித்து முடிக்க முடியாதிருப்பவை பற்றிய வருத்தங்கள் நிச்சயமாக எனக்குண்டு. முடித்தவை குறித்த நினைவுகளால் அதனை மறைத்து வைத்துக்கொள்கிறேன். பிரதிகளின் கர்ப்பகாலம் தெரிந்துவிட்டால் எழுதுவதில் உள்ள புதிர்த்தன்மை நீர்த்துவிடும் என்று இதற்கு சமாதானம் சொல்லிக்கொள்கிறேன்.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 28, 2025 17:30

April 24, 2025

மகாத்மா காந்தி சிகரெட்

Pa Raghavan

ஒருவர் பிரபலமாக இருந்தால் அவரை விளம்பரப் படங்களுக்குப் பயன்படுத்திக்கொள்வார்கள். இக்காலத்தில் பெரும்பாலும் திரைப்படத் துறையினர். அல்லது கிரிக்கெட் வீரர்கள். வேறு துறைப் பிரபலங்கள் வருவதை அபூர்வமாகவே பார்க்கிறோம்.

ஆனால் யோக்கியமாக ஒப்பந்தம் செய்து, உரிய தொகை கொடுத்தே விளம்பரங்களில் நடிக்கச் சொல்கிறார்கள். அத்துமீறல்கள் இதில் இப்போது இருக்கின்றனவா என்று தெரியவில்லை. இது விஷயத்தில் முன்னொரு காலத்தில் அநியாய அழிச்சாட்டியமெல்லாம் நடந்திருக்கும் போலிருக்கிறது.

பெயர் தெரியாத ஒரு சிகரெட் கம்பெனி, ‘மகாத்மா காந்தி சிகரெட்’ என்றொரு பிராண்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது. எந்த வருடத்திலிருந்து எப்போது வரை அது இருந்தது என்று தெரியவில்லை. ஆனால் 1921 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியான யங் இந்தியாவில் காந்தி இது குறித்து ஒரு குறிப்பு எழுதியிருக்கிறார். மது, சிகரெட் இரண்டின் மீதும் தனக்குள்ள ஒவ்வாமையை விரிவாக எடுத்துச் சொல்லி, சம்பந்தப்பட்ட நிறுவனம், அந்த பிராண்டை நிறுத்திக்கொள்ளவோ, மக்கள் அதைப் புறக்கணிக்கவோ செய்தால் மிகுந்த நன்றி சொல்வேன் என்று பணிவுடன் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தக் குறிப்பில் இருந்து நான் எடுத்துக்கொண்ட விஷயங்கள் இரண்டு.

1. 1921லேயே காந்தி, மகாத்மா என்று அறியப்பட்டிருக்கிறார்.

2. காந்தியை விளம்பர மாடலாகக் கொண்டால் பொருள் விற்கும் என்று அப்போதே வியாபாரக் கணக்குகள் போடப்பட்டிருக்கின்றன.

கீழே கொடுக்கப்பட்டுள்ள காந்தியின் மறுப்பைப் பாருங்கள். மறுப்பு-எதிர்ப்பு-கண்டனம்தான் சாரம். ஆனால் சற்றும் பதறாத இயல்பும் நிதானம் தவறாத மொழியும் நிச்சயமாகத் திகைப்பூட்டும்.

யங் இந்தியா, ஜனவரி 12, 1921 இல் வெளியானது.

நிலமெல்லாம் ரத்தம் என்ற தலைப்பில் வெற்றிமாறன் ஒரு படம் எடுக்கிறார் என்று தெரிய வந்தபோது எவ்வளவு எரிச்சலடைந்தேன் என்பதை எண்ணிப் பார்க்கிறேன். வெட்கத்துடன் இம்மனிதரின் தாள் பணிவதல்லாமல் செய்வதற்கு வேறொன்றுமில்லை.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 24, 2025 11:03

April 23, 2025

சலுகை வாரம்

Pa Raghavan

உலகுக்கெல்லாம் புத்தக தினக் கொண்டாட்டம் ஒரு நாள் என்றால் என் பதிப்பாளர்கள் இம்மாத இறுதி வரை (ஏப்ரல் 30) அனைத்துப் புத்தகங்களுக்கும் இருபத்தைந்து சதவீதச் சலுகை அறிவித்திருக்கிறார்கள். இது என் புத்தகங்களுக்கு மட்டுமல்ல. ஜீரோ டிகிரி வெளியிட்டிருக்கும் அனைத்துப் புத்தகங்களுக்கும் என்றாலும் நமது வாசகர்களுக்குத் தனியே எடுத்துச் சொல்வது கடமை அல்லவா?

நேற்று வெளியான சலம் தொடங்கி, ஜீரோ டிகிரி இதுவரை வெளியிட்டுள்ள என்னுடைய 79 புத்தகங்களையும் இந்த வாரம் முழுவதும் (ஏப்ரல் 30 வரை) 25 சதவீதம் சிறப்புச் சலுகை விலையில் பெறலாம். மீண்டும் ஒருமுறை இந்த வாய்ப்பு எப்போது வரும் என்று தெரியாது. அவர்களுடைய இணையத்தளத்தில் நீங்கள் ஆர்டர் செய்யும்போது check out பக்கத்தில் தள்ளுபடித் தொகை காட்டப்படும். எனவே…

ஆர்வமுள்ளோர் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஜீரோ டிகிரி இணையத்தளத்தில் என்னுடைய புத்தகங்கள் அடுக்கப்பட்டுள்ள பக்கம் இது.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 23, 2025 22:35

உருப்படாதது

Pa Raghavan

புத்தக அடுக்கை எப்போதெல்லாம் சுத்தம் செய்கிறேனோ, அப்போதெல்லாம் புதைபொருள் ஏதாவது கிடைக்கும். அவை என் முந்தைய காலத்தின் ஏதாவது ஒரு பக்கத்தை நிச்சயமாக நினைவூட்டும். எண்ணிப் பார்த்தால் சிறிது வியப்பாகவே இருக்கிறது. புத்தக அடுக்குகள் தவிர, வீட்டில் வேறெங்கும் எதிலும் என் தடயங்களை என்றுமே கண்டெடுத்ததில்லை.

முன்பெல்லாம் அடிக்கடி ரயில் டிக்கெட்டுகள் எந்தப் புத்தகத்திலிருந்தாவது கீழே விழும். ஓரிரு முறை சீசன் டிக்கெட்டைக் கண்டெடுத்திருக்கிறேன். அவை குமுதம் காலத்துப் பொருள்கள். போஸ்ட் கார்ட்கள், இன்லண்ட் லெட்டர்கள் அகப்பட்ட காலமும் முடிந்துவிட்டது. போஸ்ட் கார்டுகள் பெரும்பாலும் திகசி அல்லது லாசராவிடமிருந்து வந்தவையாக இருக்கும். தொடக்க காலத்துக் கதை நிராகரிக்கப்பட்ட கடிதங்கள், பிரசுரத்துக்குத் தேர்வான கடிதங்கள், ஆஃபர் லெட்டர்கள் எனப் பலவற்றையும் புத்தகங்களுக்குள்ளேயே வைத்திருக்கிறேன். அவை ஒவ்வொன்றும் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பிறக்கும்.

இந்தக் கடிதங்கள் எல்லாம் சாதுவானவை. அவை போக பான்பராக் கவர்கள், மானிக்சந்த் கவர்கள், மாவாத் தூள், மாவா பாக்கெட்டுகள் எப்போது புத்தக அடுக்கைக் கலைத்தாலும் எதிலிருந்தாவது கீழே விழும். பான்பராக் ஒரு ரூபாய்க்குக் கிடைத்த காலத்தில் அதை மென்றிருக்கிறேன். பிறகு மானிக்சந்த். அது சற்று விலை அதிகமென்றாலும் ருசியின் பொருட்டு அங்கே சிறிது காலம். இவை இரண்டுமே வாங்க முடியாத விலைக்குச் சென்றதும் ஃபூல்சந்த் சூப்பர் என்றொரு பிராண்டை சில காலம் பயன்படுத்தியிருக்கிறேன். அதற்கும் பிறகுதான் மாவா.

பதினெட்டு வயதில் தொடங்கிய இந்தப் புகையிலைப் பொருள்கள் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்தி இரண்டாண்டுகள் ஆகின்றன. கொடுமை என்னவென்றால், சென்ற வாரம் புத்தக அடுக்கைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது ஏதோ ஒரு புத்தகத்துக்கு உள்ளே இருந்து ஒரு ஃபூல்சந்த் சூப்பர் பாக்கெட் கீழே விழுந்தது. 1996 முதல் 2000 ஆவது ஆண்டு வரை அது என் பக்கத்துணையாக இருந்திருக்கிறது. இரண்டாயிரமாவது ஆண்டு குமுதத்தில் வேலைக்குச் சேர்ந்தபோதுதான் புரசைவாக்கம் சேட்டுகளின் மாவாவுக்கு ரசிகனாகிப் போனேன்.

நிற்க. அந்த ஃபூல்சந்த் சூப்பர் பாக்கெட்டைப் பார்த்ததும் ஒரு தருணம் நினைவுக்கு வந்தது. நியாயமாக ஒரு கதையாகவே எழுதக்கூடிய சம்பவம்.

நான் அவ்வளவு ஒன்றும் யோக்கியமில்லை என்று என் பெற்றோருக்குத் தெரியும். ஆனால் எவ்வளவு அயோக்கியன் என்று சரியாகத் தெரியாத காலம் ஒன்று இருந்தது. அப்போது நாங்கள் குடியிருந்த வீட்டின் மாடியில் குடியிருந்தவர்களுக்கு மூன்று பெண்கள். அந்த மூவரில் ஒருத்தி பார்க்கக் கொஞ்சம் ஸ்டைலாக இருப்பாள். இரவெல்லாம் ஸ்டீரியோவில் பாட்டுப் போட்டு அலறவிடுவாள். படியிறங்கி வரும்போதும் போகும்போதும் அவளது ஹீல்ஸ் செருப்பு பிரத்தியேகமாக ஒரு சத்தமெழுப்பும். வாரப்படாத கூந்தலும் தொளதொளவென்ற சட்டைக்காரிச் சட்டையும் தொடையை இறுக்கிப் பிடிக்கும் ஜீன்ஸ் பேன்ட்டுமாக, அவள் எப்போதும் என் அம்மாவின் கண்களுக்கு ஒரு ‘உருப்படாதது’.

உண்மையில் அந்தப் பெண் பரம சாது. தங்கமான குழந்தை. ஆனால் உலகம் தோற்றத்தைக் கொண்டல்லவா யாரையும் மதிப்பிடுகிறது?

சரி, எனக்கென்ன. நான் ஒரு ஃபூல்சந்த் சூப்பரை உரித்து வாயில் கொட்டிக்கொண்டு ஜன்னல் வழியே வெளியே குப்பையை வீசிவிடுவேன். வீடு பெருக்க வருகிற பெண்மணி காம்பவுண்டுக்கு உட்புற இடைவெளியையும் பெருக்கித் தள்ளுவார் என்கிற நம்பிக்கையில் செய்தது அது.

ஆனால் அவரோ, நமது பண்பாடு மீறாத பெண்மணியாக இருந்திருக்கிறார். அந்த ஓரடி இடைவெளியில் யார் வரப் போகிறார்கள், என்ன பெரிய குப்பை இருந்துவிடப் போகிறது என்று அந்தப் பக்கமே தலைவைத்துப் படுக்க மாட்டார் என்பது மிகவும் தாமதமாகத்தான் தெரிந்தது.

என்றைக்கோ எதற்கோ அந்தப் பக்கம் சென்ற என் அம்மா, ஜன்னலுக்கு வெளியே குவிந்து கிடந்த ஃபூல்சந்த் சூப்பர் பொட்டலங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இயல்பாக அவரது தலை உயர்ந்து மாடி ஜன்னலைப் பார்த்தது. அதுதான் அந்த ‘உருப்படாதது’ வசிக்கும் அறை. அங்கிருந்துதான் ஸ்டீரியோ அலறும்.

‘நான் சொல்லல, அது உருப்படாதுன்னு? பாரு. பான்பராக் போட்டு, பாக்கெட்டை வெளிய கொட்டிக் குவிச்சிருக்கா. இதெல்லாம் நாளைக்கு இன்னொருத்தன் வீட்டுக்கு வாழப் போயி என்ன பாடு படுத்தப் போகுதோ?’ என்று புலம்பிக்கொண்டே குப்பைகளை அள்ளிக் கொட்டிவிட்டு வந்தார்.

அதன் பிறகு வீட்டில் நான் பாக்குப் போடுவது இன்னும் எளிதாயிற்று. எத்தனை பாக்கெட்டுகளை ஜன்னலுக்கு வெளியே வீசினாலும் அது நான் போட்டதல்ல. மாடி வீட்டு உருப்படாதது போட்டது. அந்தப் பெண்ணை என்னைக் காக்க வந்த பெண் தெய்வமாகவே எண்ணிக்கொண்டேன்.

பிறகு எங்கள் வீட்டுக்கு ஒரு பெண் தெய்வம் வந்தது. இது சற்று உக்கிரமான தெய்வம். அநீதிகளுக்கு அடிபணியாததும், சுட்டிக்காட்டினால் பிரச்னையாகும் என்று தெரிந்தால், அழுத்தந்திருத்தமாகவே சுட்டிக்காட்டும் இயல்பு கொண்டதுமானது.

வீட்டுக்குத் தெரியாமல் நான் செய்துகொண்டிருந்த காரியத்தை முதல் முதலில் போட்டுக் கொடுத்து மாட்டிவிட்ட புண்ணியவதி என் மனைவியே.

‘பாக்குப் போட்டுத் துப்பறதும் குப்பைய வெளிய கொட்றதும் மாடி வீட்டு சுப்ரியா இல்ல. உங்க புள்ளதான்’ என்று அனைத்துக் குடும்ப உறுப்பினர்களுக்கும் எதிரே போட்டு உடைத்தாள்.

இல்லவே இல்லை, இருக்கவே இருக்காது என்று அப்போதும் என் அம்மா சொல்லத்தான் செய்தார். ஆனால் உண்மைக்கென்று ஒரு வாசனை உண்டு. அது ஃபூல்சந்த் சூப்பர் குட்காவின் வாசனையைக் காட்டிலும் வீரியம் மிக்கது.

இருபத்தேழு, இருபத்தெட்டு வருடங்களுக்குப் பிறகு இப்போது அந்த ஃபூல்சந்த் சூப்பர் பாக்கெட் ஒன்று ஒரு புத்தகத்தினுள் பதுங்கியிருந்து வெளிப்படும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அந்த மாடி வீட்டு சுப்ரியா இப்போது எங்கே இருக்கிறாளோ எப்படி இருக்கிறாளோ தெரியாது. அவளுக்கே ஒரு குழந்தை பிறந்து, அது வளர்ந்து பெரிதாகியிருக்கும். ஃபூல்சந்த் சூப்பர் என்றொரு குட்கா பிராண்ட் ஒரு காலத்தில் இருந்ததென்ற தகவல்கூட அவளுக்குத் தெரிந்திருக்காது. அவ்வளவு ஏன்? எந்தக் காலத்திலோ கீழ் வீட்டில் குடியிருந்த என் முகமே அவளுக்கு நினைவிருக்க வாய்ப்பில்லை. என் அம்மா அவளை உருப்படாதவற்றின் பட்டியலில் வைத்திருந்த சரித்திரக் குறிப்பும் தெரிந்திருக்காது.

எல்லாவற்றையும் இருபத்தெட்டு வருடங்களாகத் தனக்குள் சேகரித்து வைத்திருந்த அந்தப் பழைய குட்கா பாக்கெட்டை ஒருமுறை முகர்ந்து பார்த்துவிட்டுக் குப்பையில் போட்டேன். பிறகு இதை எழுதினேன்.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 23, 2025 00:23

April 19, 2025

அபினுக்கு அப்பால்

Pa Raghavan

கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் என்ற பொதுத் தலைப்பில் சீனி விசுவநாதன் பாகம் பாகமாக பாரதியின் படைப்புகளைச் செம்பதிப்பாகக் கொண்டு வந்திருக்கிறார். அவை வெளியான காலத்தில் உடனுக்குடன் ஒவ்வொரு பாகத்தையும் ஆர்வமுடன் வாங்கினேன். ஆயினும் எப்படியோ சில பகுதிகள் விடுபட்டுவிட்டன. இந்தக் காலவரிசைப்படுத்தலின் முக்கியத்துவம் என நான் கருதுவது, ஒரு கலைஞனின் சிந்தனை காலக்கட்டம் தோறும் எப்படி வளர்ந்து, இறுதியில் என்னவாக மலர்ந்து நிறைந்திருக்கிறது அல்லது வாடிச் சுருங்கியிருக்கிறது என்பதை அறிய முடிவதுதான்.

நேற்று, என்னுடைய புத்தக அடுக்குகளைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது சீனி விசுவநாதன் பதிப்புகளை எடுத்துச் சிறிது நேரம் புரட்டிக்கொண்டிருந்தேன். தனது வாழ்வில் மூன்று சித்தர்களை பாரதி நேரில் சந்தித்துப் பெற்ற அனுபவங்களைப் பதிவு செய்திருக்கிறார். அவர்கள் அவருக்கு உண்மை ஞானம் என்பது என்னவென்று தெரிந்துகொள்வதற்கான பாதையைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அந்தத் தருணங்களுக்குப் பிறகு பாரதி எழுதிய பாடல்களில் மட்டுமே ‘ஆன்மிகம்’ வருகிறது. அதற்கு முன்பு அவர் எழுதிய பக்திப் பாடல்கள் அனைத்தும் வெறும் துதியாக உள்ளன. கண்ணன் மீது, விநாயகர் மீது, முருகன் மீது, இதர பல தெய்வங்களின்மீது அவர் பாடிய எதுவும் ‘தேறித் தெளிந்தவனின்’ சொற்களாக அல்லாமல் உணர்ச்சிமயத்துக்கு அப்பால் வேறெதையும் அறியாத வேறொரு கவிஞனையே சுட்டிக்காட்டுகின்றன.

பாரதி சந்தித்த மூன்று சித்தர்களைப் பற்றிய குறிப்புகள் அவரது சுய சரிதையில் வருகின்றன. குள்ளச்சாமி என்றொரு சித்தர். கோவிந்தசாமி என்றொரு சித்தர். பிறகு யாழ்ப்பாணச் சாமி என்பவர்.

இதில் குள்ளச்சாமி, பாரதியை மிகவும் பாதித்தவர் என்று எண்ண முடிகிற விதமாக அவரைக் குறித்துச் சற்று நிறையவே எழுதியிருக்கிறார்.

‘சாமி, நீங்க யாருன்னு எனக்குப் புரியல. ஒரு பார்வைல பரமசிவனா தெரியறிங்க. இன்னொரு பார்வைல பைத்தியக்காரனாட்டம் தெரியறிங்க. சின்னப் பசங்களோட ரோட்ல திரியறிங்க. சொறிநாய்ங்க கூடல்லாம் விளையாடிட்டிருக்கிங்க. உங்கள கேடகரைஸ் பண்ண முடியல. நீங்களே சொல்லிடுங்க, யார் நீங்க?’ என்று ஒரு சந்தர்ப்பத்தில் அவரிடம் கேட்கிறார்.

சித்தர் அப்போது நல்ல மூடில் இருந்திருக்கிறார். சரி, வா என்று ஒரு பாழடைந்த வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். புராதனமான, இடிபாடுகள் மிகுந்த, யாரும் வசிக்காத இடம். அங்கே ஒரு கிணறு இருந்திருக்கிறது. அதனருகே பாரதியை அழைத்து வரும் குள்ளச்சாமி, ‘மேல பாரு’ என்று சொல்லவும் பாரதி அண்ணாந்து பார்த்திருக்கிறார்.

‘என்னா தெரியுது?’

‘சூரியன்.’

‘குனி. அப்புடியே கிணத்துத் தண்ணியப் பாரு.’

பாரதி பார்க்கிறார்.

‘இப்ப என்னா தெரியுது?’

‘அதே சூரிய வெளிச்சம்தான் தண்ணில விழுது.’

‘அவ்ளதான் மேட்டர். போ.’

சொல்லிவிட்டுப் போய்விடுகிறார். பாரதி எழுதுகிறார்:

தேசுடைய பரிதிஉருக் கிணற்றினுள்ளே
தெரிவதுபோல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்
பேசுவதில் பயனில்லை, அனுபவத்தால்
பேரின்பம் எய்துவதே ஞானம் என்றான்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் அந்தச் சித்தர் எப்போதும் சுமந்து வரும் அழுக்கு மூட்டை குறித்து பாரதி அவரிடம் கேட்டிருக்கிறார்.

‘எதுக்குங்க இந்த கப்படிக்கற மூட்டைய எப்பம்பாரு தூக்கிட்டுத் திரியறிங்க? சித்தர்னா இப்படித்தான் இருந்தாகணும்னு எதாச்சும் ரூல் இருக்குதா?’

அதற்குக் குள்ளச்சாமி சொல்கிறார், ‘டேய் நானாச்சும் வெளிய, முதுகுல தூக்கிட்டு சுத்தறேன். நீ உள்ளார இல்ல குவிச்சி வெச்சிருக்கற?’

புறத்தே நான் சுமக்கின்றேன் அகத்தினுள்ளே
இன்னதொரு பழங்குப்பை சுமக்கி றாய்நீ

– என்பது பாரதியின் விவரிப்பு. சம்பவங்களை, அவை நடந்த விதத்திலேயே கவிதையில் அவர் விவரிப்பதைப் படிப்பது பேரனுபவமாக இருக்கிறது.

பாரதி சந்தித்த இன்னொரு சித்தர், கோவிந்த சாமி. இவர் சற்று வேறு மாதிரி போலிருக்கிறது. கவிஞரை முதலில் திகைக்க அடித்துவிட்டு, அதன் பிறகுதான் உபதேசிக்கத் தொடங்கியிருக்கிறார். அதாவது, பாரதியின் (மறைந்த) தாய் தந்தையின் உருவத்தைத் தான் ஏந்தி அவர்முன் காட்சியளித்திருக்கிறார்.

‘செத்துப் போன உன் அப்பன் ஆத்தாள பாத்துக்க.’

இது எப்படி சாத்தியம்? பாரதியின் பெற்றோரை சித்தருக்குத் தெரியாது. அவர்கள் வாழ்ந்தது வேறு காலம். இறந்தவர்களின் உருவைத் தன் முகத்தில் ஏந்தி, அவர்களது பிள்ளைக்கு ஒரு மனிதன் காட்டினால் அவன் சுருண்டு காலில் விழுந்துவிட மாட்டானா?

அதுதான் நடந்திருக்கிறது.

… இறந்த எந்தை
தன்னுருவம் காட்டினான் பின்னர் என்னைத்
தரணிமிசைப் பெற்றவளின் வடிவம் உற்றான்
அன்னவன்மா யோகியென்றும் பரம ஞானத்
தனுபூதி உடையனென்றும் அறிந்துகொண்டேன்
மன்னவனைக் குருவென நான் சரணடைந்தேன்
மரணபயம் நீங்கினேன்; வலிமை பெற்றேன்.

இதில் ‘மரணபயம் நீங்கினேன்’ என்கிற சொற்கள்தாம் சாரம். எதுவும் அழிவதில்லை; உடலைத் தவிர என்கிறது கீதை. இந்த சாமி அதை பாரதிக்குப் புரிய வைத்த விதத்தில் சிறிது மேஜிக் கலந்திருந்தாலும் சொல்ல நினைத்தது சரியாகச் சென்று சேர்ந்துவிட்டதுதான் முக்கியம்.

யாழ்ப்பாணச் சாமி என்ற மூன்றாவது சித்தரைக் குறித்து எழுதும்போது, தங்கத்தால் இழைத்துக் கோயில் கட்டி, லிங்கப் பிரதிஷ்டை செய்து நீங்கள் கும்பிடுகிறீர்கள். எனக்கு இவன் கண்கள் போதும். இவனைப் பார்ப்பதும் சிவனைப் பார்ப்பதும் எனக்கு ஒன்றுதான் என்று சொல்லிவிடுகிறார்.

பாரதியின் சித்தர் தொடர்புகளைத் தொட்டால் உடனே நம் நினைவுக்கு வருவது குள்ளச்சாமி அவருக்கு அபின் கொடுத்தார் என்கிற விவரம்தான். அதைத்தான் பல ஆய்வறிஞர்கள் விரித்து விவரித்துக் களித்திருக்கிறார்கள். வ.உ. சிதம்பரம் பிள்ளைகூடத் தனது புத்தகம் ஒன்றில் இது குறித்து மிக விரிவாகச் சொல்லி, அந்தக் கருமத்தை விட்டுத் தொலையப்பா என்று நண்பருக்கு அக்கறையுடன் அறிவுரை சொன்னதைக் குறிப்பிட்டிருக்கிறார்.

குள்ளச்சாமியிடம் பாரதி பெற்றது அபின் மட்டுமல்ல. ஆனால் துரதிருஷ்டவசமாக பாரதியின் வாழ்வில் அந்தக் கட்டத்தைத் தோண்டி எடுத்து நாம் பெறுவது அது ஒன்றைத்தான்.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 19, 2025 18:36

April 18, 2025

ஆன்ட்டி வெறியன்

Pa Raghavan

முன்னொரு காலத்தில் அருணாவின் கண்களை ரசித்தேன். பிறகு ஜெயப்ரதா, மாதவி போன்றோரையும் அதே காரணத்துக்காக ரசித்தேன். சிலுக்கு ஸ்மிதாவைப் பார்த்த பிறகு கண் மூக்கு காது என்றெல்லாம் இல்லாமல் மொத்தமாகவே இது எம்மாதிரியான வடிவம் என்று திகைத்து நின்ற அனுபவம் ஏற்பட்டது. பாரதி ராஜாவின் என்னுயிர்த் தோழன் பார்த்தபோது அந்தப் படத்தின் கதாநாயகியைப் பிடித்தது. பிறகு சுவலட்சுமியைப் பிடித்தது. ஊர் உலகமெல்லாம் சிம்ரன் ஜோதிகாவின் பின்னால் சுற்றிக்கொண்டிருந்தபோது என்னால் அவர்கள் இருவரையுமே ரசிக்க முடியாதிருந்தது. இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு எல்லா மொழி நடிகைகளும் எல்லா மொழிப் படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்கள். ஆனால் பார்ப்பதற்கு எல்லோருமே ஒரே மாதிரி இருப்பது போலத் தென்பட்டது. உலக அழகிகள் என்று சொல்லப்பட்டவர்களை என்னால் ரசிக்க முடியவில்லை. ஆனால் சங்கீதாவைப் பிடித்தது (பாலா படத்தில் நடித்தவர்). இங்கே பெரிய ரசிகர்கள் படை இல்லாத பூனம் பஜ்வா, நிக்கி கல்ரானி, பூஜா ஹெக்டே போன்றோரை ரசித்தேன். விஜய் டிவி சீரியல் மூலம் அறிமுகமான ஹேமாராஜ் சதீஷ், லாவண்யா, ஷாலினி போன்றோரை இன்று ரசிக்கிறேன். பெயர் தெரியாத சில விளம்பரப் பட நடிகைகள் இருக்கிறார்கள். ஏதோ ஒரு சூப்பர் சிங்கர் போட்டியில் பார்த்த பெயர் நினைவில் இல்லாத இன்னொரு பெண் இருக்கிறாள். இவர்களையெல்லாம் நிதானம் இடறாமல் கூர்ந்து ரசிக்கிறேன்.

பெரும்பான்மை சமூகம் இவர்களை ரசிக்கிறதா, இல்லையா என்பது பற்றியெல்லாம் நான் பொருட்படுத்துவதில்லை. என் ரசனை உயர்ந்ததா, சுமாரானதா, தாழ்ந்ததா என்பது குறித்தும் அக்கறையில்லை. நான் ரசிக்கிறேன். அவ்வளவுதான்.

நிற்க. இந்த நீண்ட பட்டியலுக்கும் விளக்கத்துக்கும் பின்னால் ஒரு விவகாரம் இருக்கிறது.

என் வீட்டில் அவ்வப்போது என்னுடைய ரசனைகள் சார்ந்த தீவிர விமரிசனக் கூட்டம் நடைபெறும். அப்படியொரு தருணத்தில் என் மகள், ‘அப்பா உன் ரசனை அடிப்படையில் நீ ஒரு சரியான ஆன்ட்டி வெறியன்’ என்று சொன்னாள். அவள் இறுதி ஆண்டுப் படிப்புக்குச் செல்லவிருக்கும் பொறியியல் கல்லூரி மாணவி. அவளது வகுப்புத் தோழர்களில் சிலர் இத்தகைய ஆன்ட்டி வெறியன்களாக இருப்பதை நினைவுகூர்ந்து ஆன்ட்டி என்கிற பதத்துக்கு அவளது தலைமுறை வைத்திருக்கும் இலக்கணத்தைச் சொன்னாள். அதன் அடிப்படையில் நான் தற்போது ரசிக்கத் தொடங்கியிருக்கும் கயாடு லோஹரும் ஒரு ஆன்ட்டிதான். அவள் அதைச் சொன்னதுமே என் மனைவி ‘கயாடுவின் புஸ்ஸி ஆனந்த்’ என்று குறிப்பிட்டாள். அந்த விளியில் இருந்த நுணுக்கத்தை மிகவும் ரசித்தேன். இருவர் சொன்னதையும் எண்ணி நாளெல்லாம் சிரித்துக்கொண்டிருந்தேன்.

திரைப்படங்கள் சார்ந்த என்னுடைய ரசனையை மிக எளிதாக இரண்டாகப் பிரித்துவிட முடியும். ஒன்று, மிகத் தீவிரமான இரானியப் படங்கள், ஹங்கரி, பிரெஞ்சுப் படங்களைப் பார்ப்பேன். இதைப் பெரும்பாலும் அலுவலகத்தில் தனியே இருக்கும்போது மட்டுமே செய்வேன். வீட்டில் இருக்கும்போது சுந்தர் சி ரக நகைச்சுவைப் படங்களைப் பார்ப்பேன். விஜய் படம், அஜித் படம், சூர்யா படம், ரஜினி-கமல் படங்கள் போன்றவற்றில் பெரிய விருப்பம் இருந்ததில்லை. மீறிச் சில படங்களைப் பார்க்கிறேன் என்றால் அது என் மனைவிக்காகவோ மகளுக்காகவோ உடன் செல்வதாக மட்டுமே இருக்கும். கடைசியாக நானே விரும்பி புக் செய்து, சென்று பார்த்து ரசித்துவிட்டு வந்த படம் மதகஜ ராஜா என்று சொன்னால் எளிதாகப் புரியும் என்று நினைக்கிறேன்.

சுந்தர் சியைத் தாண்டி நான் வர மறுப்பதனாலேயே நானொரு பூமர் தலைமுறைப் பிரதிநிதி என்று என் மகள் சொல்வாள். பூமராக இருப்பதனால்தான் ஆன்ட்டி வெறியனாகவும் இருக்கிறேன் என்பது அவளது தரப்பு. உண்மையில், திரைப்படங்களின் மீதான ஈர்ப்பு போய்விட்டது. வலிந்து என்னை மாற்றிக்கொள்ள நினைத்துப் பார்க்க உட்கார்ந்தாலும் ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு மேலே எந்தப் படத்தையும் பார்க்க முடிவதில்லை. ஆனால் சுந்தர் சியின் முத்தின கத்திரிக்கா என்ற படத்தைக் குறைந்தது இருநூறு முறை பார்த்திருப்பேன். அநேகமாக வாரம் ஒரு முறையாவது நிச்சயமாகப் பார்க்கிறேன். அது அலுப்பதில்லை. காரணம், சிந்திப்பதற்காகவோ, கற்பதற்காகவோ, எதையாவது தேடிப் பெறும் சுகத்துக்காகவோ நான் அந்த ரகப் படங்களைப் பார்ப்பதில்லை. சாப்பிட உட்காரும் நேரத்தில் பத்து நிமிடங்கள் என்னை மறந்து சிரித்து இளைப்பாறும் பொருட்டு மட்டுமே பார்க்கிறேன். அவை என்னை ஏமாற்றுவதில்லை.

அழகிகள் என்று நான் கருதும் பெண்களும் இந்த வகைமைக்குள் வருபவர்களாகத்தான் இருக்க வேண்டும். நடிகைகளின் வயதையோ நிறத்தையோ திருமணம் ஆனவர், ஆகாதவர், சினிமா நடிகை-டிவி நடிகை என்கிற பிரிவினையையோ ஒருபோதும் கருதுவதில்லை. மேலே உள்ள பட்டியலைக் கூர்ந்து பார்த்தீர்களென்றால் குண்டு – ஒல்லி பேதமும் இல்லை என்பது விளங்கும். இந்தப் பெண்களுக்கும் சுந்தர் சி படங்களுக்கும் என்னளவில் பெரிய வித்தியாசங்கள் இல்லை. நிச்சயமாக ரசிக்கிறேன். ஆனால் எந்தக் கட்டத்திலும் நெக்குருகி நின்றதில்லை. இந்தத் தலைமுறைக்கு அவர்கள் ஆன்ட்டியாகத் தோன்றலாம். ஆனால் நிச்சயமாக நான் வெறியனெல்லாம் இல்லை.

நான் சுருண்டு விழுந்து தாள் பணிந்து கிடக்கும் இடங்கள் சில உள்ளன. சித்தர்களின் மெய்யியல், காந்தியின் நேர்மை, திருவருட்பாவின் அழகு, பழைய ஏற்பாட்டின் கவித்துவம், பிஸ்மில்லா கான், இளையராஜா போன்றோரின் இசை, பஷீர், அசோகமித்திரன், வண்ணநிலவன் போன்றோரின் எழுத்து, ஆப்பிள் கணினியின் பயன்பாட்டு எளிமை, மினியன், ஆஸ்வல்ட் போன்ற பொம்மைப் படங்களின் அழகியல், எல்லா வகை இனிப்புகளிலும் உறைந்திருக்கும் பிரம்மத்தின் ருசி – இங்கெல்லாம் புழங்கும் நான் வேறு ஆள். இந்தச் சிறிய பட்டியலில் உள்ள எதையும் யாரையும் நான் வெறுமனே ரசிப்பதில்லை. சொல்லப் போனால் ரசித்த காலமெல்லாம் முடிந்துவிட்டது. மாறாக நான் – அது அல்லது அவர்கள் என்னும் இருமை நிலையைத் தகர்த்து இரண்டறக் கலந்துவிடப் பார்க்கிறேன். ஆனால், என்னைச் சுற்றி இருப்போரிடம் இருந்து கவனமாக அந்த வேறு ஆளை மறைத்து வைத்துவிடுகிறேன். அவனைப் புரிந்துகொள்ளவோ, ரசிக்கவோ, குறைந்தபட்சம் விமரிசனம் செய்யவோ, கிண்டல் செய்து மகிழவோகூட முடியாது.

சுந்தர் சி படங்களை, கயாடு லோஹரை ரசிப்பவனாக; ஒரு நல்ல பூமராக, ஆன்ட்டி வெறியனாகக் காட்சியளிப்பதில் எனக்கு மகிழ்ச்சியே. ஒரு வகையில் எனது தீவிர மனம் குவியும் புள்ளிகளின் பிரத்தியேகத்தன்மையை அது காப்பாற்றித் தருகிறது. அர்த்தமற்ற கருத்துக் குவியல்களின் குப்பை அவற்றின்மீது உதிராமல் பார்த்துக்கொள்ள முடிகிறது. அப்படி இருப்பதனால்தான் என்னால் இரண்டு ஆண்டுகளில் அதர்வ வேதத்தை அர்த்தம் புரிந்து கற்க முடிந்தது. ஒரு பெண் கதாபாத்திரம் கூட இல்லாத சலத்தை எழுத முடிந்தது.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 18, 2025 17:30

April 15, 2025

என்றும் இருக்கும் இனம்

Pa Raghavan

உங்களுக்கு இது மிகவும் சாதாரண விஷயமாகத் தோன்றலாம். தவறில்லை. ஆனால் எனக்கு அப்படியல்ல. முப்பது வருடங்களுக்கு மேலாக எழுதுவதைத் தவிர வேறெதையும் கருதாதவனுக்கு இது ஒரு சரித்திரத் தருணம். பல்வேறு சந்தர்ப்பங்களில் வேறு பல விதங்களில் இது எனக்கு நிகழ்ந்திருக்கிறது என்றாலும் இந்தத் தருணம் முற்றிலும் வேறு விதமானது.

வாட்சப் சேனலில் மிருது என்றொரு கதையை எழுதத் தொடங்கினேன். சலம் போன்றதொரு உக்கிரமான நாவலை எழுதி முடித்த பிறகு நான் சமநிலைக்கு வருவதன் பொருட்டு ஆரம்பித்த மிக எளிய, நகைச்சுவையுடன் கூடிய காதல் கதை. எழுதிப் பிரசுரிப்பதில் இருந்து எட்டு மணி நேரம் மட்டுமே அத்தியாயம் சேனலில் இருக்கும். அதன் பிறகு டெலிட் செய்துவிடுவேன் என்று சொல்லியிருந்தேன். பெரிய காரணங்கள் ஏதுமில்லை. எழுதுவதில் எனக்கு இருக்கும் கமிட்மெண்ட், படிப்பதில் வாசகருக்கு இருக்க வேண்டுமென்கிற குறைந்தபட்ச எதிர்பார்ப்பு. அவ்வளவுதான்.

பன்னிரண்டு அத்தியாயங்கள் அப்படித்தான் வெளியாயின. வெளியான வேகத்தில் படித்துவிட்டு வாசகர்கள் மதிப்புரைகளையும் கேலிச் சித்திரங்களையும் அனுப்பிக்கொண்டிருந்தார்கள். சில நாள் பகல் பொழுதில் எழுதுவேன். சில நாள் மாலை வேளைகளில். சில நாள் இரவு. இதர வேலைகள் முடியும்போது மிருதுவை எழுதுவது என்று வைத்துக்கொண்டிருந்தேன்.

நேற்றிரவு மெட்ராஸ் பேப்பர் வெளியீடு தொடர்பான பணிகள் மிகவும் நேரம் இழுத்துவிட்டதால் மிருது அத்தியாயத்தை எழுத முடியவில்லை. ‘தாமதமாகும்; நள்ளிரவுக்குள் பிரசுரித்துவிடுவேன்’ என்று அறிவித்திருந்தேன். சொன்னபடி நள்ளிரவுக்குப் பத்து நிமிடங்களுக்கு முன்பாகவே அத்தியாயத்தைப் பிரசுரித்தேன்.

அதில் சிறப்பேதுமில்லை. ஆனால், ‘நள்ளிரவு நெருங்குகிறது; அத்தியாயம் இன்னும் வரவில்லை’ என்று அதே நேரத்தில் ஒரு மின்னஞ்சல் வருகிறது. அத்தியாயம் பிரசுரமானதும், ‘அத்தியாயம் வந்துவிட்டது’ என்று அதே வாசகர் அக்னாலட்ஜ் செய்கிறார். அந்நேரத்தில் விழித்திருந்து அத்தியாயத்தைப் படித்துவிட்டு மூன்று பேர் மதிப்புரை எழுதுகிறார்கள். நான்கு மீம்கள் வருகின்றன. என்ன நடக்கிறது என்று எனக்கு உண்மையிலேயே புரியவில்லை.

ஒரு கதை நன்றாக இருக்குமானால் எங்கிருந்தாவது எப்படியாவது வாசகர்கள் தேடி வருவார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நள்ளிரவுப் பொழுதில் உறக்கத்தை மறந்து காத்திருந்து படித்துவிட்டுக் கையோடு கருத்தும் எழுதுவார்கள் என்பது இக்காலக்கட்டத்தின் தன்மைக்குப் பொருந்தாதது. இது நிச்சயமாகவே நான் எதிர்பாராதது. எழுதுவதில் எனக்குள்ள கமிட்மெண்ட்டைக் காட்டிலும் படிப்பதில் வாசகர்களுக்கு இருக்கும் தீவிரம் உண்மையிலேயே என்னைத் திகைப்புறச் செய்தது.

முன்னொரு காலத்தில் கல்கி பத்திரிகையில் அலை ஓசை முதல் முறை தொடராக வெளிவந்தபோது, தனது கிராமத்து மக்கள் கல்கி பார்சல் வருவதற்காக ரயிலடியில் சென்று காத்திருந்ததைப் பார்த்திருக்கிறேன் என்று என் அப்பா அடிக்கடி சொல்வார். ஏதோ ஓர் அத்தியாயத்தில் யாரோ ஒரு கதாபாத்திரம் இறந்துவிட்டபோது, ‘அடியே, சீதா போயிட்டாடி…!’ என்று ஒரு கையில் கல்கியை உயர்த்திப் பிடித்துக்கொண்டு யாரோ ஒரு பெண் வீதிக்குள் கதறியபடியே ஓடி வந்த காட்சியை அவர் விவரிக்கும்போது பேச்சு மூச்சற்றுக் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறேன்.

அது, கதைகள் கட்டி ஆண்ட காலம். இன்று அதெல்லாம் கற்பனையில் கூடச் சாத்தியமில்லாத விஷயமாகிவிட்டது. ஆனால் நமது எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் திரும்பத் திரும்பப் பாடும் ‘வாசகர்கள் இல்லாமல் போய்விட்டார்கள்’ என்னும் சோகப் பாடல் பொருளற்றது என்பதை நேற்று திடமாகக் கண்டுணர்ந்தேன். எழுதுபவனும் எழுத்தும் சரியாக இருக்குமானால் படிப்பதற்கு வாசகர்கள் எல்லா தலைமுறையிலும் தயாராகவே இருக்கிறார்கள். அவர்களைச் சரியாகச் சென்றடைகிறோமா என்பதுதான் விஷயம்.

சலம் புத்தக ஆக்கம் முடிந்து, அச்சுக்குப் போனபின்பு, அத்தனை பெரிய நாவல், அவ்வளவு விலைகூடிய புத்தகத்தை எத்தனை பேர் உடனே வாங்கிப் படிக்க நினைப்பார்கள் என்று சிறிது கவலைப்பட்டேன். கெட்டி அட்டைப் பதிப்பைக் குறைவாகவும் சாதாரண பதிப்பைச் சிறிது அதிகமாகவும் வெளியிட்டுப் பார்க்கலாம் என்று என் பதிப்பாளரிடம் சொன்னேன். ஆனால் முன்பதிவு அறிவிக்கப்பட்டபோது நடந்தது முற்றிலும் வேறு. என் கணிப்புக்கு நேர் மாறாக, விலை கூடிய கெட்டி அட்டைப் பதிப்பினைத்தான் வாசகர்கள் அதிக அளவில் விரும்பிப் பதிவு செய்திருந்தார்கள். இரு விதப் பதிப்புகளுக்கும் ஆர்டர் செய்திருந்த மொத்த வாசகர்களின் எண்ணிக்கை அதைக் காட்டிலும் ஆச்சரியமளித்தது. இப்போது நான் அதை வெளியிடப் போவதில்லை. புத்தகம் வெளியாகும் நாளில் புகைப்படங்களைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

சொல்ல வந்தது இதுதான். வாசகன் இறந்துவிட்டான் என்பது இலுமினாட்டிகளின் பொய்ப் பிரசாரம். உலகுள்ள வரை அவன் இருப்பான். இனி என்றென்றும் எனக்கு இக்கவலை இராது.

நேற்றைய எனது நள்ளிரவுப் பொழுதை வாழ்நாள் முழுதும் மறக்க முடியாதபடி செய்துவிட்ட வாசகர்கள் ரவி அர்விந்த், காந்தி பாபு, வினோத்குமார் சுப்பிரமணியன், வெங்கடேசன் சிங்கபுத்திரன், சத்தியநாராயணன் ஆகியோருக்கு என் தீரா அன்பு.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 15, 2025 21:00

September 6, 2019

Pen to Publish 2019 – போட்டி அறிவிப்பு

நண்பர்களுக்கு வணக்கம்.


Amazon Pen to Publish திட்டத்துக்கு இது மூன்றாவது வருடம். எழுத்தாளர்கள், எழுதுபவர்கள், எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்கள் அனைவரையும் இதில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறேன். ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் என மூன்று மொழிகளில் நடத்தப்படும் இப்போட்டியில் இம்முறை தமிழுக்கான தேர்வுக் குழுவில் நானும் நண்பர் சரவண கார்த்திகேயனும் இருக்கிறோம். தேர்வு செய்வதெல்லாம் பிற்பாடு நடப்பது. இப்போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோருக்கு உதவுவதே எங்கள் முதல் நோக்கம்.


கிண்டில் குறித்து – கிண்டில் டைரக்ட் பப்ளிஷிங் குறித்து – பென் டு பப்ளிஷ் போட்டி குறித்து உங்களுக்கு எம்மாதிரியான சந்தேகம் / குழப்பம் இருந்தாலும் எங்களைக் கேட்கலாம். இருபத்து இரண்டு அதிகாரபூர்வ மொழிகள் கொண்ட தேசத்தில் இரண்டு மொழி எழுத்தாளர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு என்றால், அதில் ஒன்றாகத் தமிழ் இடம் பெற்றிருப்பதை எண்ணிப் பாருங்கள். மகிழ்ச்சி அடையும் தருணம்தான். அதே சமயம் பொறுப்புணர்வுடன் எழுத வேண்டியதும் அவசியம்.


ஏனென்றால்,


1. உலகளாவிய கவனம்

2. பல லட்சக்கணக்கில் பரிசுத் தொகை

3. உங்கள் படைப்பு Amazon Prime மூலம் படமாக்கப்படும் வாய்ப்பு


என்று மூன்று மிக முக்கியமான சாத்தியங்கள் இதில் உள்ளன. தமிழ் அடையாளத்துடன் சர்வதேசப் படைப்புகளின் முன்னால் நீங்கள் உங்கள் படைப்பை நிறுத்தப் போகிறீர்கள். அதிலும் வெற்றி கண்டு ஆண்டின் சிறந்த எழுத்தாளராக வாகை சூடுவது எத்தனை சிறப்பு! எவ்வளவு பெரிய கௌரவம்!


இது இம்முறை நிகழவேண்டும். தமிழ் எழுத்தாளர்கள் அத்தனை பேரும் ஆர்வமுடன் இப்போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.


என்ன எழுதலாம்?


* நாவல் எழுதலாம்

* சிறுகதைத் தொகுப்பு அனுப்பலாம்

* கட்டுரைத் தொகுப்பாகவும் இருக்கலாம்

* கவிதையானாலும் பிரச்னை இல்லை


பத்தாயிரம் சொற்களுக்கு மேலே போகும் படைப்புகள் ஒரு பிரிவு. அதற்குள் நிறைவடையும் படைப்புகள் இன்னொரு பிரிவு. இரண்டிலும் பரிசுகள் உண்டு. விவரங்கள் யாவும் இக்குறிப்பின் அடியில் தரப்பட்டிருக்கும் சரவண கார்த்திகேயனின் இணையத்தளச் சுட்டியில் உள்ளன.


எழுத்தாளர்கள் தமது புத்தகங்களை மின்வெளியில் தாமே பதிப்பித்துக்கொள்ள வழி செய்யும் KDP என்னும் கிண்டில் டைரக்ட் பப்ளிஷிங்கின் எல்லைகளை இன்னும் விரிவாக்கும் முயற்சி இது. தொடக்க நிலையில் உள்ள இக்களத்தில் இப்போது நல்லதும் அல்லதுமாக ஏராளமான புத்தகங்கள் வருகின்றன. வாசகர்கள் அதிகம் வாசிக்கும் புத்தகங்களின் அடிப்படையிலேயே டாப் 10 போன்ற பட்டியல்கள் தயார் செய்யப்படுகின்றன.


இந்த Pen to Publish போட்டி மூலம் நல்லது / அல்லது என்ற பாகுபாடே இல்லாமல் நல்லதை மட்டும் எழுத்தாளர்கள் மொத்தமாக முன்னிறுத்தினால் வாசகர்கள் தேர்ந்தெடுப்பதும் நல்லனவாக மட்டுமே அமைந்துவிடும் அல்லவா?


எந்த ஒரு படைப்புக்கும் உயிரளிப்பது உண்மை. உண்மையின் ஆன்மாவைத் தொடாமல் எதையும் எழுதாதீர்கள்.


எளிய வாசகர்களை மனத்தில் கொள்ளுங்கள். அவர்கள்தாம் அதிகம் பேர். மங்கி வரும் வாசிப்பு வழக்கத்தை இன்னும் தக்க வைத்து, தழைக்க வைக்கும் பெரும் பணி ஆற்றி வருபவர்கள். லட்சக்கணக்கான வாசகர் சமூகத்தின் முன்னால் உங்கள் படைப்பு பரிசீலனைக்கு வைக்கப்படுகிறது என்பதை மறவாதீர்கள்.


நீங்கள் மறக்காதிருக்க வேண்டிய இன்னொன்று – பெரும்பான்மை வாசகர்கள் காத்திரமான படைப்புகளை இன்று நாடிச் செல்லத் தொடங்கியிருக்கிறார்கள் என்பது. கிரைம் கதைகள், காதல் கதைகள், குடும்பக் கதைகள் வாசிப்போர் எண்ணிக்கை அதிகம்தான். ஆனால் அவர்கள் விரும்புவதைக் காட்டிலும் சிறந்த ஒன்றைத் தருகிறபோது யாரும் வேண்டாம் என்று சொல்லமாட்டார்கள்.


எனவே மயக்கங்களோ, குழப்பங்களோ வேண்டாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தரமானதொரு படைப்பை எழுதுவதுதான். எழுதி முடித்தபின் கிண்டில் டைரக்ட் பப்ளிஷிங் மூலம் அதனை நேரடியாக வெளியிடுங்கள். kindle unlimited (select) ஆப்ஷனைத் தேர்ந்தெடுங்கள். குறிச்சொற்கள் இடும் இடத்தில் முதல் கட்டத்தில் Pen to publish – 2019 என்று மறக்காமல் குறிப்பிடுங்கள். போட்டிக்கு உங்கள் படைப்பு தகுதி பெற்று விடுகிறது.


வாசகர்கள் தேர்ந்தெடுத்துத் தரும் சிறந்த படைப்புகளில் இருந்து பரிசுக்குரிய படைப்புகளை நானும் சிஎஸ்கேவும் தேர்ந்தெடுப்போம். அதற்குப் பிறகு திருவிழாதான்.


ஒரு விஷயம். எழுத்துத் துறையில் இதுவரை வழங்கப்பட்டு வருகிற பரிசுத் தொகைகளைக் காட்டிலும் இது மிக மிக அதிகம். ஆகச் சிறந்த ஒரு படைப்புக்கே அப்பரிசு போய்ச் சேரவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்கவிருக்கிறோம்.


வேண்டியது உங்கள் ஒத்துழைப்பு.


முதலில் இக்குறிப்பை உங்கள் பக்கங்களில் ஷேர் செய்துவிட்டு வாருங்கள். உங்கள் எழுத்தாள நண்பர்கள் அனைவருக்கும் இப்போட்டி குறித்துத் தெரியப்படுத்துங்கள். கலந்துகொள்ள ஊக்குவியுங்கள்.


முழு விவரமும் இங்கே உள்ளது. நிதானமாகப் படித்துப் புரிந்துகொள்ளுங்கள்: http://www.writercsk.com/2019/09/pen-...


தொடர்ந்து பேசுவோம்.


#Amazon #PentoPublish #kdp #amazonkindleindia


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 06, 2019 11:40

May 17, 2019

புத்தகங்களின் எதிர்காலம்


பத்ரியின் இந்தக் குறிப்பைப் படித்தது முதல் திரும்பத் திரும்ப இதே சிந்தனையாக இருக்கிறது. அவர் சொல்லியிருப்பது சரி. ரயில், பஸ் பயணங்களில் யாரும் புத்தகம் படிப்பதில்லை இந்நாள்களில். கிண்டில் கருவி என்பது தமிழ்ச் சூழலில் இன்னும் மிகச் சிறுபான்மையினருடைய ஆடம்பரமாகவே கருதப்படுகிறது. கிண்டில் கருவியையாவது காசு கொடுத்து வாங்க வேண்டும். கிண்டில் அளிக்கும் இலவச ஆப்களில் கருவியில் உள்ள சகல வசதிகளுடனும் உங்கள் மொபைல் அல்லது டேபில் படிக்க முடியும். டெஸ்க்டாப்பில் படிக்கலாம். லேப்டாப்பில் படிக்கலாம். எல்லாக் கதவுகளும் படிப்பதற்குத் திறந்தேதான் இருக்கின்றன. இருந்தாலும் ஏன் யாரும் படிக்க விரும்புவதில்லை? இது கால மாற்றத்தில் நிகழும் தேக்கம் என்று எடுத்துக்கொள்ளப்பட வேண்டியதா?


ஆனால் பிற மொழிகளில் நிலைமை இத்தனை மோசமில்லை என்றே தெரிகிறது. ஆங்கிலம், ஃப்ரெஞ்சு, ஜெர்மன், ஜப்பானிய மொழிகளில் கிண்டில் மின் நூல்களின் வளர்ச்சி கணிசமாக அதிகரித்திருப்பதாகக் கேள்விப்படுகிறேன். இந்தியாவிலும் அந்த உயரங்களைச் சுட்டிக்காட்டுவதன் பொருட்டுத்தான் அமேசான் போட்டிகள் வைக்கிறது. லட்சக்கணக்கான பரிசுகள் தருகிறது. வாங்கிப் படிப்போருக்கு வசதியாக அன்லிமிடெட் போன்ற வாய்ப்புகளைத் தருகிறது. அமேசானின் திடீர் டீல்கள், இன்றைய தள்ளுபடி, இவ்வாரத் தள்ளுபடி, இம்மாதத் தள்ளுபடி என்று வாசகர்களுக்கும் நிறையத்தான் கிடைக்கிறது.


இருந்தாலும் புத்தகங்கள் விற்பதில்லை. யாரும் படிப்பதில்லை. ஃபேஸ்புக், வாட்சப், யுட்யூப் போதும்.


அவலமும் அபாயமும் மிகுந்த இப்பிரச்னை எங்கிருந்து உருவாக ஆரம்பித்தது என்று யோசித்துப் பார்க்கலாம். ‘எம்பிள்ளைய நான் இங்கிலீஷ் மீடியத்துல போட்டிருக்கென்‘ என்று என்றோ ஒரு தகப்பன் பெருமையுடன் சொன்ன அந்த எல்கேஜி மாணவன் இன்று பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு மேற்படிப்பு சார்ந்த ஆராய்ச்சிகளில் இருக்கிறான். நிறையப் படிக்கிறான். எல்லாம் ஆங்கிலப் புத்தகங்கள். நாவல்கள். புதிர் நூல்கள். கிண்டிலும் கையுமாகவே அலைகிறான்.


எண்ணிப் பார்த்தால் குறைந்தது பதினெட்டு வருடப் படிப்புக் காலம். இதனை முற்றிலும் ஆங்கில வழியில் அவன் கடந்திருக்கிறான். இனியும் அவ்வழியே அவனுக்கு வசதியானது. எளிதானது. அவன் அப்படித்தான் போவான். ‘என்னடா சாப்பிடற?’ என்று கேட்டால், ‘ரெண்டு இட்லி போதும்மா‘ என்று நல்ல தமிழில் நிச்சயம் பதில் சொல்வான். ஆனால் அவனால் தமிழ் நூல் ஒன்று இட்லியைவிட ருசியாக இருந்தாலும் பொருந்திப் படிக்க முடியாது. இவ்வளவு எழுதுகிற என்னாலேயே, தேவைக்காக அல்லாமல் வெறும் ஆர்வத்துக்காக ஒரு ஆங்கில நூலை முழுமையாகப் படிக்க முடிந்ததில்லை. நான் படித்த ஆங்கில நூல்கள் அனைத்துமே என் தொழில் சார்ந்த ஆய்வுகளுக்காகவும் தேவைகளுக்காகவும் படித்தவை மட்டுமே. ஓரான் பாமுக்கையும் மார்க்குவேஸையும் முரகாமியையும் தமிழில் படிக்கும் சாத்தியங்கள் வந்துவிட்டபடியால் அவர்களைப் பங்காளிகளாக்கி வைத்துக்கொள்வதுதான் வசதி.


பிரச்னை பள்ளி வளாகத்தில் தொடங்குகிறது. ஆங்கில வழிப் படிப்பில் உள்ளோருக்கு ஒப்புக்கு ஒரு பாடம் தமிழ் இருக்கும். தமிழ் அல்லது இந்தி என்ற வாய்ப்பு இருக்கும். இதனாலெல்லாம் தமிழ் பின்னால் போய்விடுகிறது. பள்ளி முடித்த புத்துணர்ச்சியுடன் வாசிப்புலகுக்கு வருகிற மாணவன், அதுவரை வாசித்ததெல்லாம் வேறு. ஆங்கில ஜாங்கிரி இலக்கியங்கள். சுவாரசிய மாயதந்திரக் கதைகள். கடவுள் பாதி மனிதன் பாதி ஃபேண்டஸிக் காவியங்கள். அவனிடம் பொன்னியின் செல்வனைக் கொடுத்தால்கூடப் பத்து பக்கங்களுக்குமேல் படிக்க முடிவதில்லை. காரணம், வாசிப்பு வேகம் தமிழில் அவர்களுக்கு அறவே இல்லை. நீங்கள் கவனித்துப் பாருங்கள். இவ்வருடம் 10வது, 12வது முடித்து வெளியே வரும் எந்த ஒரு பையனும் பெண்ணும் தமிழ்ப் புத்தகங்களை விரும்பி வாசிக்ககூடியவர்களாக இருக்க மாட்டார்கள். தவறி ஒன்றிரண்டு பேர் இருந்தால் அவர்கள் அரசுப் பள்ளி மாணவர்களாக இருப்பார்கள்.


இவர்கள்தாம் எதிர்கால வாசகர்கள் என்னும்போது தமிழில் கதைகளையும் கட்டுரை நூல்களையும் அச்சிட்டு வைத்துக்கொண்டிருப்பது அபத்தம் என்று தோன்றுவதில் வியப்பில்லை.


கிண்டில் ஒரு மாற்றா?


ஓரளவுக்கு ஆம் என்று சொல்வேன். கிண்டிலை நான் தொலைக்காட்சித் தொடர்களுடன் ஒப்பிட விரும்புகிறேன். இந்தத் தலைமுறைக்கு முந்தைய, அதற்கும் முந்தைய தலைமுறைகளைச் சேர்ந்த, பத்தாம் வகுப்பு வரை ஒழுங்காகத் தமிழ் படித்த, வீட்டில் வாங்கும் கல்கி குமுதம் விகடன்களை விடாமல் படித்த பெண்கள் கிண்டிலில் வாசிக்க விரும்புகிறார்கள். அது பெண்களால் பெண்களுக்கும் ஆண்களால் பெண் பெயரில் பெண்களுக்கும் எழுதப்படும் குடும்ப / காதல் / குற்றக் கதைகள். அரை மணி நேரத்தில் படித்து முடித்துவிட்டு உடனே மறந்துவிடலாம். அடுத்ததை எடுத்துவிடலாம். மாதம் 165 ரூபாய் சந்தா கட்டினால் போதும். பத்துப் பத்தாக எத்தனைப் புத்தகங்களையும் எடுத்துப் படிக்கலாம். அன்லிமிடெட் சாத்தியங்கள். கடந்த சில மாதங்களாக இந்த இயலை மிகத் தீவிரமாக கவனித்து வருபவன் என்ற முறையில் சொல்கிறேன். பிரபல எழுத்தாளர்கள் நம்பவே முடியாத அளவுக்கு இங்கே புதிய பிரபலங்கள் பலர் உதித்திருக்கிறார்கள். அன்லிமிடெடில் வெளியிட்டு ஐந்து நாள் இலவசம் கொடுத்து ஐம்பதாயிரம் ஒரு லட்சம் தொடு எண்ணிக்கை பெற்று சம்பாதிக்கும் எழுத்தாளர்கள். அவர்களுக்கு அங்கே தனியொரு வாசகர் கூட்டம் சேர்கிறது. இக்கதையின் முடிவு என்னவாக இருக்கும் என்று யூகித்து வையுங்கள். அடுத்த சனிக்கிழமை வெளியாகும் இதன் இரண்டாம் பாகத்தில் முடிவு தெரியும் என்று புத்தகப் பக்கத்தில் எழுதி விளம்பரம் வைக்கிறார்கள். பத்திரிகைகள் தொடர் அத்தியாயங்களை வெளியிட்டு இறுதியில் அது ஒரு நாவல் புத்தகமாக அச்சாகும் முன்பெல்லாம். இப்போது ஒரு நாவலை வெளியிட்டு, இரண்டாம் பாகத்தை அடுத்த அத்தியாயமாகச் சுட்டிக்காட்டுகிறார்கள் இந்தப் புதிய அலை எழுத்தாளர்கள்.


இவற்றை யார் படிக்கிறார்கள்?


மிக நிச்சயமாக 28 வயதுக்கு மேற்பட்ட பெண்கள். மாத நாவல்களை வாங்கிப் படித்துக்கொண்டிருந்தவர்கள். இப்போது மொபைல் போனிலேயே அதைப் படித்துவிட முடிகிற மகிழ்ச்சியைக் கொண்டாடுபவர்கள். இதே வயது ஆண்களும் இருக்கிறார்கள். ஆனால் ஒப்பீட்டளவில் எண்ணிக்கை குறைவு. அவர்கள் அன்லிமிடெட் சந்தாவையும் தவிர்த்துப் படிக்க வழி தேடி ஏடகம் போன்ற இடங்களில் அடைந்துவிடுகிறார்கள். மட்டரகமான பிடிஎஃப், பக்கம்தோறும் வாட்டர் மார்க் இருந்தாலும் ஒரு புத்தகம் ஓசியில் கிடைக்கிறது என்றால் விடத் தோன்றுமா. ஆனால் டவுன்லோட் செய்து வைக்கும் இந்தத் திருட்டு பிடிஎஃப்களை அவர்களில் எத்தனைப் பேர் முழுதாகப் படிக்கிறார்கள் என்று தெரியாது.


கடந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் ஒரு விஷயம் கவனித்தேன். புத்தகம் வாங்கிச் சென்றவர்களுள் பெரும்பாலானவர்கள் 50க்கு மேற்பட்ட வயதினர். என் மதிப்புக்குரிய எழுத்தாளர் நண்பர் ஒருவர் (70+ வயது) உடல் நலம் சரியில்லாத போதும் வண்டி வைத்துக்கொண்டு வந்து அள்ளிப் போட்டுக்கொண்டு போனதைக் கண்டேன். அவர்களுக்குக் கிண்டில் தெரியாது; புரியாது. வாசிப்பு என்றால் அச்சுப் புத்தகம்தான்.


ஆனால் இனி வரும் தலைமுறை அச்சு நூல்களை அவ்வளவாக விரும்பாது என்றே தோன்றுகிறது. தவிர, வாசக விருப்பம் என்பதும் கணிசமாக மாறிவிட்டிருக்கிறது. நீண்ட படைப்புகளைப் பலர் இப்போது விரும்புவதில்லை. எடுத்தால் உடனே முடித்துவிடக்கூடியதாக இருக்க வேண்டியது முக்கியம். அவர்களுக்கு முன்னுரை முகவுரைகள்கூட வேண்டாம். முதல் வரியில் கதை. நாற்பத்து ஐந்து பக்கத்தில் முற்றும். அவ்வளவுதான்.


இரண்டாயிரமாண்டுத் தொடக்கத்தில் தமிழில் புனைவு அல்லாத அரசியல், சமூகம், வரலாறு, அறிவியல், தொழில்நுட்பம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த அபுனை நூல்கள் நிறைய வெளிவர ஒரு விதத்தில் நான் காரணமாக இருந்தேன். அந்தப் புத்தகங்கள் அப்போது நன்றாக விற்கவும் செய்தன. இன்றுவரை அவற்றின் மறுபதிப்புகள் செல்லுபடியாகிக்கொண்டிருப்பதையும் அறிவேன்.


ஆனால் என்ன விசித்திரம் என்றால் அச்சு நூல்களாகப் பெருவெற்றி கண்ட இத்தகைய பல புத்தகங்கள் மின்நூல் வடிவில் விற்பதே இல்லை. அபுனை நூல் வாசிக்க கிண்டில் ஒரு சரியான கருவியில்லை என்று ஏன் தோன்றுகிறது? இது புரியவில்லை. நான் எனது கிண்டிலில் பெரும்பாலும் புனைவல்லாத புத்தகங்களைத்தான் வைத்திருக்கிறேன்; வாசிக்கிறேன். எனக்கு இதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் என்னை வைத்து எடை போட முடியாது; கூடாது. பொதுப் பார்வையில் எளிய கதைகளை வாசிக்க கிண்டில் உதவும் என்ற எண்ணம் பலருக்கு உண்டாகியிருக்கிறது. அதற்குச் சேவை செய்யும் கரங்கள் பல புதிதாக முளைத்திருக்கின்றன. ஒளிவுகளற்ற அமேசானின் தளத்தில் இந்த வியாபாரத்துக்கான சாத்தியங்கள் எளிதாக உள்ளன. எனவே அங்கு எளிய குடும்ப நாவல்கள் நிறைய விலை போகின்றன. இலக்கியம் என்னும் சிறுபான்மை வரையறைக்குள் வருபவையும் அன்லிமிடெடில் போனால் சில புதிய வாசகர்களைப் பெறுகின்றன. ஆசிரியருக்குச் சிறிது பணமும் வருகிறது. (அன்லிமிடெடில் போனால் அங்கிருந்து நேரே டெலிகிராம் திருட்டு பிடிஎஃப் சேனல்களுக்குப் போய்விடும் என்பதைச் சொல்ல வேண்டாமல்லவா? அதற்கும் இடம் கொடுத்துத்தான் இதனை முயற்சி செய்ய வேண்டும்.)


எப்படி யோசித்தாலும் பதிப்புத் தொழில் நிலைபெற வாசகர் தேவை. பள்ளி நாள்களில் இருந்து தாய்மொழி முக்கியம் என்று சொல்லிக் கொடுத்து வளர்க்கக்கூடிய ஆசிரியர்கள் தேவை. தமிழ்ப் புத்தகங்களைக் காசு கொடுத்து வாங்கிக் கொடுத்துப் படிக்க வைக்கும் பெற்றோர் தேவை. இந்த மூன்றும் சரியாக இருந்தால்தான் எதிர்காலத்தில் இப்போதுள்ள சிறுபான்மை வாசகர்களாவது எண்ணிக்கைக் குறையாதிருப்பார்கள். என் கவலை இதுவெல்லாம்கூட அல்ல.


Annaikku kaalaila aaru mani irukkum. Kozhi kokkarakoooonnu koovuhi. En pondaatti thalai niraiya malliya poo veccikkittu vandhu ennai usuppuna.


என்று தொடங்கி ஒரு முழுநீள கிண்டில் புத்தகம் அன்லிமிடெடில் வந்துவிடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று தோன்றிக்கொண்டே இருக்கிறது. அப்போது அதை ஆடியோவில் கேட்கும் வசதி சேரும். அதைக் கேட்கத் தொடங்குவோம். மீண்டும் பாட்டி கதை சொன்ன காலத்துக்குப் போய்ச் சேருவோம்.


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
3 likes ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 17, 2019 11:44

May 3, 2019

வெட்டி முறித்த காதை

பொதுவாக வெயிற்காலங்களில் என்னால் சரியாக எழுத முடியாமல் போகும். நான் ஒன்றும் நாளெல்லாம் வீதியில் திரிகிற உத்தியோகஸ்தன் இல்லைதான். ஆனாலும் வெக்கை நினைவில் நிறைந்துவிடுகிறபோது வெளியைக் காட்டிலும் இம்சிக்கும். இம்முறை வழக்கத்தைவிடக் கோடைக்காலம் கொடூரமாக இருக்கும் என்று இன்று மனத்தில் பட்டது. சகிக்க முடியாத சூடு. பத்து நிமிடம் வெளியே போய் வந்ததற்கே காது எரிந்தது. பாதங்கள் எரிந்தன. உச்சந்தலையில் குமுட்டி அடுப்பு ஏற்றி வைத்த மாதிரி இருந்தது. என்ன பயங்கரம்!


எழுத்து வேகம் கணிசமாக மட்டுப்பட்டிருக்கிறது. மூச்சைப் பிடித்துக்கொண்டு சீரியல் வேலைகளை எப்படியோ முடித்துவிடுகிறேன். மற்றதை எப்படிச் சரி செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. ஆனால் வெட்டியாக இல்லை. வரிசையாக என்னுடைய புத்தகங்களை அமேசான் கிண்டிலில் ஏற்றும் பணி ஒருபுறம் நடந்துகொண்டிருக்கிறது. என்கோடிங் கன்வர்ஷன் குஸ்திகள் தீவிரமடைந்துள்ளன. இடையே ரிலாக்ஸ் செய்ய ஃபோட்டோஸ்கேபில் அட்டைகள் வடிவமைக்கிறேன். தரத்தில் சமரசமில்லாத, வடிவ நேர்த்தி பிசகாத, கூடியவரை பிழைகளற்ற மின்நூல்களைத் தரவேண்டும் என்ற எண்ணமே இதனை விடாமல் செய்ய வைக்கிறது. (இதனால்தான் திருப்தி தராத அட்டைப்படங்களைத் திரும்பத் திரும்ப மாற்றிக்கொண்டிருக்கிறேன்.)


மறுபுறம் செல்வமுரளி உதவியுடன் எனது இணையத் தளத்தை நிறைய சுத்தம் செய்தேன். குறிப்பாகப் புத்தகப் பகுதியை ஒழுங்கு செய்ய முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. இனி எனது ரைட்டர்பாரா தளத்திலேயே நீங்கள் புத்தகங்களைப் பார்வையிட்டு அங்கிருந்தே நேரடியாக அமேசானில் மின்நூல்களை வாங்கலாம். ப்ரிண்ட் வர்ஷன் இருக்குமானால் அதையும் சேர்த்து வாங்கலாம். [பாதி நூல்களை மின்னூல்களாக்கிவிட்டேன். இன்னும் சிறிது மிச்சம் உள்ளது. அவையும் விரைவில் கிண்டிலில் வந்துவிடும்]

தளத்தின் புத்தகப் பகுதியை ஒழுங்கு செய்ய நினைத்து, மொத்தத் தளத்திலும் கைவைத்து சீர்திருத்தும்படியானது. எந்த விஷயத்திலும் எளிதில் திருப்தியுறாத என்னை சகித்துக்கொண்டு பொறுமையாக இந்தப் பணியைச் செய்துகொடுத்த செல்வமுரளிக்கு என் மனமார்ந்த நன்றி. இவரது யூனியம்மா ஃபாண்ட்களைத்தான் மின்நூல்களின் அட்டைப்படங்களில் தலைப்பு வைக்கப் பயன்படுத்துகிறேன். எங்கோ கிருஷ்ணகிரி பக்கத்தில் குக்கிராமத்தில் உட்கார்ந்துகொண்டு இணையக் கட்டுமானப் பணியின் சகல சந்து பொந்துகளிலும் புகுந்து எழும் இந்த இளைஞரை மிகவும் விரும்புகிறேன். இவரை எனக்கு அடையாளம் காட்டிய என் நண்பர் மாயவரத்தான் ரமேஷ்குமாருக்கு நியாயமாக நன்றி சொல்ல வேண்டும். ஆனால் அவர் கோபிப்பார்; வேண்டாம்.


நண்பர்களிடம் நான் வேண்டுவது ஒன்றுதான். எனது இணையத் தளத்துக்கு ஒரு பத்து நிமிடம் நேரம் ஒதுக்கி, கம்ப்யூட்டர் / லேப்டாப், மொபைல்/ டேப் / மேக்புக் என சாத்தியமுள்ள அனைத்துக் கருவிகள் வழியாகவும் ஆராய்ந்து பாருங்கள். இன்னும் என்னெல்லாம் செய்யலாம் என்று உங்களுக்குத் தோன்றுகிறதோ, அவற்றைச் சொல்லுங்கள்.(writerpara@gmail.com)


இந்தத் தளத்தின் புத்தகப் பகுதி ஒரு நூலகம் போல இருக்கவேண்டும் என்று நினைத்தேன். இங்கிருந்தபடியே அமேசானில் நீங்கள் புத்தகத்தை அச்சுப் பதிப்பாகவும் மின்நூலாகவும் வாங்க ஒரே க்ளிக் வசதிக்கு விருப்பப்பட்டேன். அது இப்போது சாத்தியமாகியிருக்கிறது.


இந்த சீசனுக்கான தள ஆப்பரேஷன் பணிகளை இதோடு நிறுத்திக்கொள்கிறேன். முதலில் கல்கியில் எழுதிக்கொண்டிருக்கும் புல்புல்தாராவை முடித்துவிட்டு Fake Idஐ முடிப்பதில் மும்முரமாக வேண்டும். ஆண்டிறுதிக்குள் இன்னொரு நாவலும் யோசித்துக்கொண்டிருக்கிறேன். (தலைப்பு: ‘அல்லா அழைக்கிறார்; அன்ரிசர்வ்டில் வாருங்கள்.’) யாராவது ஸ்பான்சர் செய்து என்னை மங்கோலியாவுக்கோ சைபீரியாவுக்கோ அனுப்பிவைத்தால் நடக்கும்.


மற்றபடி நான் சௌக்கியம்.


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 03, 2019 10:42