Pa Raghavan's Blog, page 3
June 10, 2025
தின்றுத் தீராத ருசி
நஃபெ என்றுதான் நியாயமாக அதனைச் சொல்ல வேண்டும். Knafeh என்பது ஸ்பெல்லிங். சிரியா அல்லது பலஸ்தீன் அல்லது எகிப்தில் இது தோன்றியிருக்கலாம் என்பது குத்துமதிப்பான ஊகம்.
இந்தக் கோயில், மசூதி, பாதி இடிந்த சுவர் வகையறாக்களுக்கெல்லாம் இரண்டாயிரம், மூவாயிரம், நாலாயிரம், ஐயாயிரம் வருட வரலாற்றை எப்படியோ தோண்டி எடுத்துவிடுகிறார்கள். எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்திருக்கக்கூடிய வாசுகி பாம்புக்குக் கால் தடமும் மூழ்கிப் போன மகாபாரதக் கிருஷ்ணனின் துவாரகைக்குக் கடல் தடமும் எளிதில் அகப்பட்டுவிடுகிறது. மத்தியக் கிழக்கிலேயேகூட கில்காமெஷ் போன்ற ஆதிப் புராதன காவியங்கள் இன்றும் தொன்மத்தின் வாசனையை ஊதுபத்திப் புகை போலப் பரப்பிக்கொண்டிருக்கின்றன. ஆனால் உணவு என்று வரும்போது மட்டும் ஒரு பத்தாம் நூற்றாண்டுச் சரக்குக்குக் கூடத் தோன்றிய இடத்தில் குழப்பம்.
வேறு வழியில்லை. பசி ருசி அறியாது. ருசி, தடம் அறியாது.
நஃபெ என்கிற குனாஃபா. சிரியா அல்லது பலஸ்தீன் அல்லது எகிப்து. எல்லைகளற்ற காலமென்றால்கூடச் சரி. இது வெறும் பத்தாம் நூற்றாண்டு. இங்கே ஆதித்திய சோழனின் மகன் முதலாம் பராந்தக சோழன், பாண்டியர்களை வென்று அவர்களை இலங்கைக்குத் துரத்தியடித்த காலம். சீனாவில் முதல் முதலில் நாணயங்கள் தாளில் அச்சடிக்கப்பட்ட காலம். பாரசீகத்துப் பார்சிகள் இந்தியாவுக்குக் குடியேறிய காலம். ஆப்பிரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அடிமை வியாபாரம் கொடிகட்டிப் பறந்த காலம். துருக்கியை ஆண்ட கலீஃபாக்கள் அந்த நூதனமான இனிப்பைத் தங்கள் காலை உணவாக ஆக்கிக்கொண்டு இனிதே ஆட்சி புரிய ஆரம்பித்தார்கள்.
நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு சீனத்தை ஆண்ட ஹான் வம்சத்து மன்னர்கள் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நூடுல்ஸ்தான் நஃபெ என்கிற குனாஃபாவின் அடிப்படை. அதே ஆட்டா அல்லது அரிசி மாவுதான் மூலப் பொருள். நூடுல்ஸின் அதே தயாரிப்பு முறை. முட்டை சேர்த்தது, சேர்க்காதது என்னும் இரண்டு ஜாதிகள் இதில் பின்னால் உருவாக்கப்பட்டன. மூல மாவை எடுத்து வைத்துக்கொண்டு, சாஸ்திரத்துக்குக் கொஞ்சம் தண்ணீர் தெளித்துவிட்டுக் கை கையாக வெண்ணெய் அள்ளிப் போட்டு பிசைவதே குனாஃபா உருவாக்கத்தின் முதல் படி. சப்பாத்திக்கு மாவு பிசைவது போலத்தான்.
ஆனால் தென்னிந்தியர்கள் மாவு பிசைவதற்கும் வலது மேலாக்கைத் தலை வரை இழுத்துவிட்ட வட இந்தியப் பெண்மணிகள் மாவு பிசைவதற்கும் வித்தியாசம் உண்டு. நாம் மாவு பிசைவதற்கு விரல்களைக் கணிசமாகப் பயன்படுத்துவோம். அவர்கள் சுக்கிர மேட்டால் அழுத்திப் பிசைவார்கள். போதாக்குறைக்கு ஜாகிர் உசேன் தபலாவில் நூதன சத்தங்கள் எழுப்புவதற்கு எப்படி உள்ளங்கைகளின் கீழ்ப்பகுதியை வைத்து அழுத்தித் தேய்ப்பாரோ, அப்படி அழுத்தம் கொடுத்து மாவுக்கு மசாஜ் செய்வார்கள்.
குனாஃபாவுக்கான மாவும் இத்தகைய மசாஜைக் கோரும். அப்படித் தேய்த்துத் தேய்த்துப் பதப்படுத்தும்போது சற்றே உருக்கிய, சற்றே உப்புப் போட்ட வெண்ணெயைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக்கொள்வார்கள். பலஸ்தீனிய நபுல்ஸி சீஸை அதன் மேலே கொட்டிக் கலந்து சிறிது ஊற வைப்பது மரபு. இந்த ஓர் ஆதாரத்தைக் கொண்டு குனாஃபாவின் பிறப்பிடம் பலஸ்தீன் என்ற முடிவுக்குக் கிட்டத்தட்ட வரலாம்.
ஏனென்றால் குனாஃபா தோன்றி, ஆகக் குறைந்தபட்சம் ஏழெட்டு நூற்றாண்டுகள் வரை வேறொரு சீஸைக் கொண்டு அது தயாரிக்கப்பட்டதற்கு ஆதாரங்கள் இல்லை. எகிப்து, பலஸ்தீன், சிரியா, லெபனான், துருக்கி. இந்தப் பிராந்தியங்களில்தான் அது மிகவும் பிரபலமாக இருந்திருக்கிறது. வரைபடத்தை எடுத்து வைத்துக்கொண்டு பார்த்தீர்கள என்றால், அரையடி ஸ்கேலால் ஒரு நேர்க்கோடு போட்டுவிடலாம். பிறகு உலகம் சுற்றத் தொடங்கியபோதுதான் எல்லா விதமான பாலாடைக் கட்டிகளும் இதன் தயாரிப்பில் சொருகப்பட்டிருக்கின்றன.
ஆயிரம் சொன்னாலும் மூலத்தின் ருசி மற்றதில் இருக்காது அல்லவா? ஆனால், பலஸ்தீனிய நபுல்ஸிக்கு நாம் எங்கே போவது? இங்கே கிடைக்கிற சீஸைக் கொண்டுதான் நமக்கு குனாஃபா தயாரிக்கிறார்கள். உண்மையில் குனாஃபாவின் சர்வதேசப் புகழுக்கு அடிப்படைக் காரணம் அந்த பலஸ்தீனிய சீஸ் மட்டுமே. அதன் ருசி விவரிப்புக்கு அப்பாற்பட்டது என்பார்கள். நபுல்ஸியில் இனிப்பு – உப்பு இரண்டு ரகங்களும் உண்டு. குனாஃபாவுக்குப் பயன்படுத்துவது இனிப்பு சீஸ். உருக்கியது. மிதமான சூட்டில் அதைப் பிசைந்து வைத்திருக்கும் மூல மாவின் மீது கொட்டிக் குளிப்பாட்டி மூடி வைப்பார்கள். மாவு நன்கு தளதளவென்று தயாரானதும் நூடூல்ஸ் செய்யும் முறைப்படி செய்து எடுத்துக்கொண்டுவிடுவது. பிறகு பிஸ்தா பருப்புகளை நெய்யில் வறுத்து நொறுக்கி, இட்லிப் பொடி தரத்துக்குக் கொண்டு வந்து அதன்மீது கொட்டி நிரப்ப வேண்டியது. இதுதான் அடித்தளம். இதனை பான் பீடா சுருட்டுவது போலச் சுருட்டி நீள நீளமாக டிரேவில் அடுக்கிவிடுவார்கள்.
குனாஃபாவுக்குப் பயன்படுத்தப்படுவது சர்க்கரைப் பாகு. ஆனால் குலோப் ஜாமூனுக்குச் சேர்க்கிற அளவுக்குப் பாகில் சர்க்கரை இராது. அளவு குறைந்த சர்க்கரை. இனிப்பது போல இருக்க வேண்டும். ஆனால் தொண்டையில் இறங்கும்போது மாயமாகிவிட வேண்டும். இன்னும் கொஞ்சம் இனிக்காதா என்று ஏங்கச் செய்யும் விதமான இனிப்பு. குனாஃபாவுக்குக் கரைக்கும் சர்க்கரைப் பாகில் சிறிது பன்னீர் சேர்ப்பார்கள். சில வகை குனாஃபாக்களுக்கு ஆரஞ்சு சிரப் சேர்ப்பதும் உண்டு. கொதிக்கக் கொதிக்க இந்தச் சர்க்கரைப் பாகை மேற்படி பிஸ்தா-நூடூல்ஸ் பீடா படலத்தின்மீது கொட்டி, முழுச் சர்க்கரைக் கரைசலும் இரண்டல்ல; ஒன்றென்று அத்வைதம் போல உள்ளே இறங்கி மறையும் நேரத்தில் அடுப்பிலிருந்து இறக்கி, அதன் தலையில் ஒரு படி நெய்யைக் கொட்டினால் முடிந்தது சோலி. கொட்டிய நெய்யின்மீது அலங்காரத்துக்கு மீண்டும் அந்த பிஸ்தாப் பொடியைத் தூவுவது அரபிக் கலைஞர்களின் அழகுணர்ச்சிக்குச் சான்று.
வெறும் குனாஃபா ஒரு நல்ல உணவு. மிதமான இனிப்பும் வலுவான சீஸ் ருசியும் மணமும் மேலோங்கியிருக்கும். இரண்டு துண்டு (துண்டின் அளவு அவரவர் கொள்ளளவு சார்ந்தது) குனாஃபாவைத் தின்று ஒரு டீ குடித்தால் ஒருவேளை உணவு முடிந்துவிடும். முதல் உலகப் போரின் முடிவில் துருக்கி விழுந்து, ஒட்டாமான் சாம்ராஜ்ஜியம் சிதறுகிற காலம் வரை அந்தப் பக்கத்து சுல்தான்கள் காலை பல் விளக்கிவிட்டுப் பெரும்பாலும் இதைத்தான் முதல் உணவாக உட்கொண்டிருக்கிறார்கள்.
அந்த முதல் பத்து நூற்றாண்டுக் காலம் ஆகக் கூடியவரை மன்னர்கள், பிரபுக்கள், பெரும் பணக்காரர்களின் சொகுசு டிஷ்ஷாக இருந்த குனாஃபா, அதன் பிறகு மெல்ல மெல்லக் கடைகளுக்கு வர ஆரம்பித்திருக்கிறது. இது மன்னர் உணவு அந்தஸ்திலிருந்து மக்கள் உணவாக மறுமலர்ச்சி பெற்ற காலக்கட்டத்தில் நபுல்ஸி சீஸுக்கு பதில் நயமான பிற சீஸ்கள் உள்ளே நுழைந்தன. மத்தியக் கிழக்கிலும் ஏராளமான அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.
உலகத்துக்கு ஓர் உலகத்தரமான தின்பண்டத்தை, அதன் மூலப் பொருள்களுள் ஒன்றான சீஸைக் கொடுத்துவிட்டு பலஸ்தீனியர்கள் அன்றாட உணவுக்கு அவதிப்படத் தொடங்கிய அவலமெல்லாம் பிற்கால சரித்திரம்.
All rights reserved. © Pa Raghavan - 2022
June 8, 2025
Yathi – A review: Jinapriya AjithaDoss
This is a book which I avoided for a while because it states as story of sages…and I thought it would be a sad story and confusing a lot…
Oh man…you dont expect a revenge thriller with a prelude of philosophies.
A typical family is described with normal desires of parents. When starting to read about the confusions of the sons, we probably assume the teenage confusions due to hormonal changes. As we progress, the knots are put tight that we start looking of evidences of ancestral karma or blessing of God to the family to move towards moksha
When the elder one talks abt Rishi under water, calling of animals etc we expect the Siddhar or a story of a Nayanmar types. Then suddenly he vanishes, it does bring heaviness but not scariness. Then comes the 2nd, who bring the scariness. And the way he puts a fakes a shield over his carnal desires as if he is looking the body as flesh and blood, we think he may be a cannibal or a nara mamisam thinnum sadhu…but suddenly turns him to virtuous boy…and when we expect him to fulfill his parent’s desires, alas he is gone. We are told in the beginning the last boy would be 3rd to disappear. But when he decides that, thinking of his affection to his mom will be his shortcoming, there brings the heaviness. And he happens to be the corporate samiyar you see . The fourth is the third son…left to go on till the marriage day and boom…he is gone…
All these just take you on the flow, the twist comes in the last parts, which will make you feel so unsettled. It is a shock.
The description of Madikere, Kuttralam, the description of the underwater pond (hallucination scene), the usage of drugs, the way we look for signs to reinforce our beliefs are all so so well written
Right from Yogis (Guru of Vimal), to Siddhars to Tantric Yogas, Adharvana practices, Make beliefs, Drug usages, Hallucinations, to Corporate Gurus are all brought in so naturally into the flow
The scene setting in ECR , thiruvidandhai, kelambakkam is so well done.
The uncle character is the most pitiest among all. Next is the dad, though he is the reason (reason for what will be spoiler alert), because he never knows at all that he is the victim to the fruit of his misdeeds.
There are sentences sprinkled all the over the novel for our deep thoughts:
முடிந்ததைச் செய்வதுதான் யோகம். முடிந்ததையும் செய்யாதிருப்பதுதான் யோகத்தின் எதிர்நிலை.
அறிமுகமற்ற முகங்களின் நடுவேதான் தனிமையின் உச்சத்தைக் கண்டுணர முடியும். கூட்டத்தில் கரைவது காற்றில் கரைவதினும் பேரனுபவம்.
*
ஒரு போதையாகிவிடும் அளவுக்குத் தனிமை பழகிவிடுவதும் ஆபத்தே அல்லவா?
The scary part comes in last parts. The actual plot. The plot leaves the reader so unsettled. I had to read thrice the last 500 pages to understand the way the knots are unknotted. There is absolutely no remorse of the whole happening from any of the characters. Rather a contentment that the characters have inspite of the happenings- which is what makes it so scary.
The meaning and goal of Yoga or Penance could be anything. Penance is not renouncing outwardly, it is a mindset. What we choose matters.
Lighter note, whoever gets into adultery or affairs, be careful, you never know how you or who, may have to repay for the misdeeds; And when you see any man in rags or dogs looking at you on streets, better to think twice than feeling disgusted, never know who that soul is ;if there are signs from nature but reinforced by human, double confirm if they are real or not.
One of the must reads. Makes us get into some deep thinking.
Netflix should do a series with this.
O
2022 ஆம் ஆண்டு இந்த மதிப்புரை எழுதப்பட்டிருக்கிறது. ஃபேஸ்புக் மெமரியில் இருந்து கண்டெடுத்தேன்.
All rights reserved. © Pa Raghavan - 2022
June 6, 2025
அன்பில் ஊறிய தோஷம்
இந்தக் கேள்விகளும் பதில்களும் 2021 ஆம் ஆண்டு Binge Tamil செயலித்தளத்தில் பிறந்தவை. கபடவேடதாரி அங்கே தொடராக வெளியாகிக்கொண்டிருந்தபோது வாசகர்கள் கேட்டவையும் அதற்கு நான் அளித்த பதில்களும். சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட கேள்விகள் அப்போது கேட்கப்பட்டன. பெரும்பாலும் பதில் சொல்லியிருந்தேன். அவற்றில் சிறந்த ஆறு கேள்வி பதில்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவை இவை. இன்று படிக்கும் யாருக்காவது பிடிக்கலாம் என்பதால் இங்கே போட்டு வைக்கிறேன்.
கோபி சரபோஜிஎழுதிய பல நூறு பக்கங்களை டெலிட் செய்ய நேரும்போது ஏன் அப்படிச் செய்ய நேர்ந்தது என எப்பொழுதாவது நினைத்ததுண்டா? திருப்தி இல்லை; அதனால் டெலிட் தவிர வேறு வழியிருக்கவில்லை என்றாலும், பல நேரங்களில் அப்படிச் செய்ய நேர்கையில் என்ன நினைத்துக்கொள்வீர்கள்?
எப்போதும் ஏராளமாக டெலிட் செய்ய வேண்டியிருக்காது. சில சமயம் அப்படி ஆகிவிடும். என்னிடம் ஒரு பிரச்னை உண்டு. எழுதிக்கொண்டிருக்கும்போது பாதியில் நிறுத்தினால் விட்ட இடத்தில் இருந்து இரண்டு மூன்று நாள் இடைவெளிக்குப் பிறகு திரும்பத் தொடங்கத் தெரியாது. மிகவும் தடுமாறிவிடுவேன். மீண்டும் முதலிலிருந்து ஆரம்பிப்பேன். இதனாலேயே தொடர்ந்து எழுதி முடிக்கும் மனநிலை, சூழல், உடல் நிலை அமையும்போது மட்டுமே பெரிய பணிகளைத் தொடுவேன். அப்படியும் எழுதியதில் திருப்தி வராமல் டெலீட் செய்யத் தோன்றினால் அது பற்றி யோசிக்கவோ வருந்தவோ மாட்டேன். திரும்பத் திரும்ப அழித்துவிட்டு எழுதுவது எனக்குப் பிடிக்கும். யதியின் இறுதியில் வரும் மயானக் காட்சியை மட்டும் சுமார் அறுபது விதமாக எழுதிப் பார்த்திருக்கிறேன். இறவானில், ஹராரி சிம்பொனியை அரங்கேற்றும் கனவுக் காட்சிக்கு என்னிடம் 17 வர்ஷன்கள் இருந்தன. அனைத்திலிருந்தும் சில வரிகளை எடுத்துத் தொகுத்துத்தான் அந்த அத்தியாயத்தை இறுதி செய்தேன்.
அனுராதா பிரசன்னாஎழுத்துதான் வாழ்வு என்றாலும் ஏதோ ஒரு நொடியில் அந்தந்த வயதுக்கான, வருடங்களுக்கான விஷயங்களை miss பண்ணியதாக நினைத்ததுண்டா?இந்தக் கேள்விக்கு நெடு நேரம் மிகவும் நேர்மையாக யோசித்துப் பார்த்தேன். இல்லை என்கிற பதில்தான் உறுதியாகத் தோன்றுகிறது. கல்லூரி நாள்களில் செய்த அத்துமீறல்களைக் கூட ஆர்வத்துடன் செய்த நினைவில்லை. நான் ஒரு மக்குப் பையன் என்கிற தாழ்வுணர்ச்சிதான் என்னைப் பொறுக்கித்தனங்களை நோக்கித் தள்ளுகிறது என்பதை உணர்ந்தேதான் அவற்றைச் செய்தேன். அதனால்தான் கணப் பொழுதில் அனைத்தையும் உதறிவிட்டு ஆன்மிகத்துக்குள் ஒளிந்துகொள்ள இடம் தேடி ஓட முடிந்தது. அதில் எனக்கு அறியக் கிடைத்த அனைத்துமே என் தகுதிக்கு அப்பாற்பட்டவை என்று இப்போதுவரை தோன்றுகிறது. அதனால்தான் அடங்கி ஒடுங்க முடிந்தது. நான் மூச்சுவிட்டுக்கொண்டிருக்க எழுத்துதான் வழி என்று அங்கே உத்தரவாகிவிட்ட பிறகு மறு சிந்தனையே இல்லை. எழுத ஆரம்பித்த மிகத் தொடக்க காலத்திலேயே அசோகமித்திரனை சந்தித்துவிட்டேன் என்பதால் இது அகங்காரம் கொள்ள இடமே இல்லாத பாதை என்ற தெளிவு உண்டானது. என்ன ஒன்று; இன்னும் சிறிது முன்னால் தொடங்கியிருக்கலாம். இன்னும் நிறைய படித்திருக்கலாம். காலத்தை மிகவும் வீணடித்திருக்கிறேன். அந்த ஒரு வருத்தம் தவிர வேறு குறையே இல்லை.
அபிநயா ஶ்ரீகாந்த்யதி, இறவான், கபடவேடதாரி மூன்று படைப்புகளிலும் முக்கியக் கதாபாத்திரங்கள் அறிவும் ஞானச் செருக்கும் கொண்டவர்களாக அமைந்தது திட்டமிட்டதா? தற்செயலா?திட்டமிட்டு இதையெல்லாம் செய்ய முடியாது. எல்லாம் அமைவதுதான். எப்படியோ எல்லா கதாபாத்திரங்களிலும் பகுதியளவு நான் இருந்துவிடுகிறேன் அல்லவா! அதைத் தவிர்க்க முடியாது. நான் என்னவாக இல்லையோ அதைச் சில பாத்திரங்களின் மீது ஏற்றிப் பார்க்க மனம் விரும்புகிறது என்று நினைக்கிறேன்.
ஜினோவிஎளிதில் திருப்தியடையச் செய்யும் தொலைக்காட்சித் தொடருக்கான எழுத்தை மேற்கொள்ளும் அதே நாளில் ரசனை மிகு இலக்கியப் புதினங்களையும் கால அட்டவணைக் கிரமத்தில் எழுதுவதாக ஒருமுறை பதிவிட்டிருந்தீர்கள். முதலாமதன் அயற்சியோ மந்தமோ, இரண்டாவதை பாதிக்காமல் எப்படித் தற்காத்துக்கொள்கிறீர்கள்?தொலைக்காட்சித் தொடர்களுக்கு எழுதுவது என் ஜீவனோபாயம். அங்கே நான் எழுத்தாளனல்ல. தொழிலாளி மட்டுமே. தவிர, காதல் கொண்டு மனத்தைப் பறிகொடுக்கும் அளவுக்கு இந்தத் தொழில் பேரழகியல்ல. தொடர்களுக்கான கதை உருவாக்கங்களில் நான் பங்குபெறுவதில்லை. கதை அல்லது திரைக்கதை எழுதுவதுமில்லை. தரப்படும் காட்சிகளை வசன வடிவத்தில் மாற்றித் தருகிறேன். அவ்வளவுதான். எனது மொழி வங்கியின் ஒரு சதவீதம்கூட இதற்குப் பயன்படுவதில்லை. மொத்தமே முன்னூறு சொற்களுக்குள் தொடர் வசனங்களை அடைத்துவிட முடியும் என்று நினைக்கிறேன். கடுமையான வேலை நெருக்கடி நாள்களில் உடல் சோர்வு இருக்குமே தவிர இது மனத்தளவில் எந்த பாதிப்பும் தராது. கொலைக் காட்சி, மரணக் காட்சி, திருமணக் காட்சி, முதலிரவுக் காட்சி, குடும்பம் பிரியும் காட்சி, சேரும் காட்சி என்று எதை எழுதினாலும் உணர்ச்சிவசப்பட வாய்ப்பே இருக்காது. ஏனெனில் அனைத்தையும் குறைந்தது ஐந்நூறு முறை ஏற்கெனவே எழுதியிருப்பேன். அதே முன்னூறு சொற்களுக்குள் அவை அடங்கியிருக்கும். எனவே, வேலை முடிந்ததும் என் விருப்பமான செயல்பாடுகளில் ஈடுபட இது ஒரு தடையாகவே இராது. ஒரு நான்கு பக்கம் அசோகமித்திரனையோ, ராமசாமியையோ, பஷீரையோ படித்துவிட்டு எழுத ஆரம்பித்துவிட்டால் நான் வேறு ஆள்.
அன்பின் ஷிஜோஇறவான் நாவல்ல, பேருண்மைகள் சிறுவர்களுக்கு எப்போதும் தரிசனமாக அகப்படுகின்றன. பெரியவர்களால் தரிசனங்களின் மயிர்க்கூச்செரியச் செய்யும் பிரகாசத்தைத் தாங்க முடிவதில்லைன்னு சொல்லியிருக்கிங்க. அப்படி உங்களால் தாங்க முடியாத பிரகாசம் என்ன?இந்த அன்பு, பேரன்பு, நிபந்தனையற்ற அன்பு, கட்டுக்கடங்காத பாசம், உயிரனைய உறவு எல்லாமே அழகிய மீபுனைவுகள் என்பதை உணர்ந்தறிந்ததைச் சொல்வேன். நம்மை நாமேகூட நூறு சதம் விரும்ப முடியாது என்பதுதான் உண்மை. திரும்பத் திரும்ப இது எனக்கு நிரூபிக்கப்பட்ட தருணங்களை என்னால் சரியாக எதிர்கொள்ள முடிந்ததில்லை. பல பெரிய தோல்விகளை, அவமானங்களைச் சந்தித்திருக்கிறேன். வேறொருவர் என்றால் எழுந்திருக்கக்கூட முடியாத அளவுக்கு மகத்தான தோல்விகள். ஆனால் அப்போதெல்லாம் அநாயாசமாக எழுந்து வந்திருக்கிறேன். அதே சமயம் யுக யுகாந்திரமாகத் தொடரப் போவதென நினைக்கும் உறவுகள் கணப் பொழுதில் முறிந்து போய்விடுகின்றன. எல்லாமே அன்பில் ஊறிய தோஷம்தான்.
ஜெயச்சந்திர ஹஷ்மிஎழுத்தைப் பொறுத்தவரையில் ஒரு எழுத்தாளனுக்குக் கிடைக்கக்கூடிய ஆகப் பெரிய விடுதலை எது? ஆகப் பெரும் சிறை எது?எனக்கு இதற்குப் பொதுவான பதில் சொல்லத் தெரியவில்லை. என்னை மட்டும் முன்வைத்துச் சொல்லவா? எழுதுவதை ஒரு சுத்திகரிப்பு நடவடிக்கையாகவே நான் பார்க்கிறேன். என் கசடுகளை என்னால் முற்றிலுமாகப் பெருக்கித் தள்ள முடியுமோ முடியாதோ. என் கசடுகள் என்னென்ன என்று அறிவதற்கு எழுத்து எனக்கு உதவுகிறது. என் குறைகளை நான் பூரணமாக அறிந்தவன் என்பது எவ்வளவு பெரிய விடுதலை தெரியுமா? இதை விவரிக்கவே முடியாது. அவ்வளவு ஆசுவாசம் தரும். ஆனால் என்ன பிரச்னை என்றால், அந்த ஆசுவாசம் குற்ற உணர்வு என்னும் ஒரு பை-ப்ராடக்டுடன் வரும். எந்தக் குற்ற உணர்வில் இருந்து தப்பிப்பதற்காக ஆன்மிகத்தைத் தேடி ஓடினேனோ, எந்த ஆன்மிகம் என்னைப் பொருந்தாதவன் என்று இந்தப் பக்கம் திருப்பிவிட்டதோ, இந்த எழுத்தும் அந்தக் குற்ற உணர்வை அதன் மினுமினுப்பு குலையாமல் அப்படியேதான் பராமரிக்கிறது. இதைக் காட்டிலும் ஒரு சிறைப்படுதல் இருக்க முடியுமா? ஒரே ஒரு வித்தியாசம், காரணம் புரியாத துக்கம் என்று எனக்கு இன்று ஏதுமில்லை. என் அனைத்துத் துயரங்களுக்கும் எனக்குக் காரணம் தெரியும். அது, எழுதுவதன் மூலம் நான் கண்டறிந்ததே.
அனைத்துக் கேள்விகளையும் பதில்களுடன் படிக்க இங்கே செல்க.
All rights reserved. © Pa Raghavan - 2022
June 4, 2025
சலம்: ஒரு மதிப்புரை – கதிரவன் ரத்தினவேல்
தடித்த புத்தகங்களுக்கு எப்போதும் ஒருவித எதிர்பார்ப்பு இருக்கிறது. அவை நம்மை யதார்த்த வாழ்விலிருந்து கடந்து ஒரு வெவ்வேறு பரிணாமத்திற்குள் அழைத்துச் செல்கின்றன. அந்த அனுபவம் சும்மா ஒரு ஓய்வு அல்ல – முழுமையான விடுதலை. ஒரு எழுத்தாளன், “இனி சொல்ல ஒன்றுமில்லை” என்ற வரைக்கும் சொல்லத் துணியும் போது, அந்தச் சொற்களுக்குள் நாம் நம்மையே மறந்துவிடுகிறோம்.இனி சொல்ல ஒன்றுமில்லை எனும்வரையும் சொல்லித் தீர்ப்பதற்கான சுதந்திரம் பெற்ற ஜீவிகளவை என்பதும்தான்.
முன்மாதிரிகள் ஏதுமற்ற நாவலென்பதாலேயே சலத்தின் மீது எனக்கு ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. பற்றாக்குறைக்கு பள்ளி மாணவன் போல குறிப்பெடுத்து படித்துக் கொண்டிருந்த பாராவைக் காண நேர்கையில் ஆர்வம் அதிகரித்து விட்டது.
வால்கா முதல் கங்கை வரையில் மட்டுமே இக்காலகட்டத்தை போகிறபோக்கில் கண்ட நினைவு. மற்றபடி நவீன இலக்கியவெளியில் காணாத கதைக்களம்.
முதலில் வேதங்கள் நான்கில் மற்றவைக்கும் அதர்வணத்திற்குமான வேறுபாட்டை புரிந்துக் கொள்ள வேண்டும்.
இந்த உதாரணம் ஓரளவு பொருந்துமென்று நினைக்கிறேன். காலகாலமாக மன்னர்களுக்கும் வள்ளல்களுக்கும் மட்டுமே இலக்கியங்கள் என்றிருந்த நிலையை எப்படி பாரதி எளிய வடிவில் இலகுவாக மக்களை நோக்கித் திருப்பினானோ அது போல தேவர்களுக்கும் வழிபாடுகளுக்கும் மட்டுமே இருந்த வேதங்களை கடந்து மக்களுக்காக, அவர்களின் அன்றாடங்களுக்காக உருவான மந்திரங்களைக் கொண்டது அதர்வண வேதம்.
திரிவேதங்கள் என்று சொல்லி முதல் மூன்று போதுமென ஒரு கூட்டம் முயன்றும் அதர்வணத்தை மக்களிடமிருந்து அவர்களால் பிரிக்க முடியாமல் போகவே வேறு வழியின்று சதுர்வேதங்களாக்கினர் என்றொரு கருத்துமுண்டு.
மன்னர்களுக்கான யாகங்கள், வழிபாடுகள் பற்றிய முதல் மூன்று வேதங்களால் மக்களுக்கென்ன பயன்? மாறாக அதர்வணத்தில் அனைத்தும் மக்களுக்கே!
வாழ்வியல் சடங்குகளுக்கான மந்திரங்கள்
நோய்கள் நீங்கும் மந்திரங்கள்
வளமும் பசுமையும் பெற வேண்டிய மந்திரங்கள்
தினசரி வாழ்வின் பயன்படும் வழிபாட்டு முறைகள்
இவை அனைத்தும் நேரடியாக மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்தவை.
அதுவும் மட்டும் இல்லாமல், ஆயுர்வேதம் என்ற மருத்துவ முறை கூட அதர்வண வேதத்தின் ஒரு பகுதியாகவே சொல்லப்படுகிறது.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதிருந்த நம்பிக்கைகளுக்கு பழக்கங்களுக்கெதிராக நிகழ்ந்த கலகமாகவே அதர்வண வேதம் பார்க்கப்படுகிறது.
இன்னொரு விசயம், மற்ற வேதங்களைப் போல் பல நூறு ரிஷிகளால் அல்லாமல் பெரும்பாலும் ஒரே நபரால் உருவாக்கப்பட்டது. அதனாலேயே அதர்வன் பெயரிலேயே அழைக்கப் படுகிறது. அடுத்து இதில் அதிகம் பங்களித்தவர் அங்கீரச மகரிஷி.
இது போன்ற தகவல்களெல்லாம் கடவுளைத் தேடி “சாத்தானின் கடவுளுக்காக” பயனித்திருக்கையில் பாராவுக்கு கிடைத்திருக்கும். மேலும் உண்மையில் வேத வரிகளில் சொல்லப்பட்டிருப்பதற்கும் நடைமுறையிலிருப்பதற்குமான வேறுபாட்டின் அழுத்தமே அவரை சலத்தை எழுத வைத்திருக்கும் என அவதானிக்கிறேன் அது பிழையாகவும் இருக்கலாம்.
ஆதி, அந்தம் அறியாத அதர்வனைக் குறித்து பாரா உண்டாக்கியிருக்கும் சித்திரம் பிடித்திருந்தது. குறிப்பாக அவனது உயரம், எப்போதும் மூடியிருக்கும் ஒற்றைக்கண், மௌனத்தை ஆயுதமாக கையாலும் லாவகம். புரிந்துக் கொள்ளாதவர்களிடம் எதற்காக பேசிக் கொண்டு!
சாரன் – அது நாம்தான், கிட்டத்தட்ட வாசகனை பாத்திரமாக களமிறக்கியிருக்கிறார். ஏதுமறியாது ராஜனின் ஆணைக்கினங்க சர்சுதி கரையோரமாக மாறிமாறி ஒவ்வொரிடமும் கதைக் கேட்டு நடப்பது சாட்சாத் நாமேதான்.

(உனக்கு எப்படி Naruto பற்றி இவ்வளவெ தெரிந்திருக்கிறது என்ற கேள்விக்கு நான் அங்கே இருந்தேனே என்று அத்தொடரின் முக்கிய காட்சியில் பார்வையாளர் இடத்தில் வெகுஜனத்தில் ஒருவனை போட்டோஷாப் மூலம் அமர்த்தியிருக்கும் மீம் ஒன்று அனிமி வட்டத்தில் பிரபலமானது. அதனை சலத்திற்கும் பொருத்தலாம். நானும் நூறு நாளும் அந்த ஆத்தோரமாதாங்க நடந்துட்டுருந்தேன், என்னை பாக்கலையா நீங்க!?)
குத்சன் – சூத்திர முனி – மூட முனியென்பதே பொருந்தும். கர்ணனைப் போல் வாழ்வில் அனைத்து இடங்களிலும் தவறிழைத்து வஞ்சிக்கப்படுபவனாகத்தான் தெரிந்தான். உணர்ச்சியை மட்டும் வென்றிருந்தால் எங்கோ சென்றிருப்பான். சாரன் இவன் குறித்து அதர்வனிடம் சொல்லும் ஓரிடம் வரும். “அவனுக்கு மட்டும் நீ கற்பித்திருந்தால் உன் சொல் ஒன்று கூட இவ்வுலகில் மறையாதபடிக்கு செய்திருப்பானவன்”
மாறி மாறி நேசிக்கும் வேண்டப்பட்ட விரோதிகள். நியாயத்திற்கும் தர்மத்திற்கும் இடையேதான் எவ்வளவு தூரம்.
ஆரியவர்த்தம் ஓரளவு கங்கைக்கரையில் அமைந்து விட்ட காலகட்டம். ஆரியர்களுக்கும் பூர்வகுடிகளுக்கும் ஒப்பந்தம் ஏதுமில்லா அமைதிக்காலம். அப்போது ஒரு தேசத்தில் இருந்து தனது ராஜனின் ஆணைக்கினங்க ஒரு மகரிஷியைக் கொல்வதற்காக செல்லும் சாரனிடமிருந்து கதை துவங்குகிறது. அவன் நோக்கம் நிறைவேறுவதுடன் கதை நிறைவுறுகிறது என்று மட்டும் சொன்னால் அதைவிட பித்தலாட்டம் வேறேதுமில்லை. ஆனால் அதுதான் கதைச்சுருக்கம்.
செல்லும் சாரன் யார்,
கொல்லப்பட வேண்டிய ரிஷி யார்,
ஏன் கொல்லப்பட வேண்டும்?
எதற்கு இவனுக்கு இந்த பணி வந்து சேர்கிறது?
வழியில் இவன் காண்பவர்கள்,
அவ்வனுபவங்கள்,
அக்காலகட்டத்தில் தேசத்தில் மக்களின் நிலை,
அவர்களது வாழ்க்கை முறை,
வழிபாடுகள்,
வர்ணமுறை,
யுத்தம்,
மாயம்,
பைசாசங்கள்,
தேவதைகள்,
தெய்வங்கள்,
கந்தர்வன்,
அனைத்திற்கும் மேலாக கூடவே வரும் சர்சுதி.
இதெல்லாம் கூட சரி, நான் முற்றிலும் எதிர்பாராதது காலப்பயணம். Time traveler’s wife எனக்கு மிகவும் பிடித்த நாவல். அதை நினைவூட்டும்படி ஓரிடத்தில் எனக்கு அதிர்ச்சி காத்திருந்ததை நான் எப்படி அறிந்திருப்பேன்?
சரி, ஆனால் நான் தான் இன்னும் பிறக்கவேயில்லையே? பிறக்காதவர் எப்படி அவ்வபோது அதர்வணுடன் இருந்தீர்கள்?
இறந்த பின்னும் எப்படி என்னுடன் அதர்வண் இருக்கப் போகிறானோ அப்படி!
குத்சன் பாத்திரம் தனி, அவனது வாழ்க்கையை, உணர்ச்சிகளை பற்றி மட்டுமே நிறைய எழுதலாம். எப்போதும் முதலில் அவன் பக்கமே நியாயம் இருப்பதாகத் தோன்றும். ஆனால் நியாயம் வேறு தர்மம் வேறு என்பது பின்னால்தான் புரியும்.
ரிதமென்றால் என்ன என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். புரிந்தும் புரியாமலே வந்துக் கொண்டிருக்கையில் அந்த யானைக் கொலையையொட்டிய மறுபிறப்பில் அனைத்தும் தெளிந்து விடும். எதை மாற்ற முடியாததோ அதுவே ரிதம்.
பல மாயாஜாலக் காட்சிகள் குத்சனையோட்டியே நிகழ்கின்றன. வாசிப்பில் சில நேரம் கற்பனைக்கு சவால்விடும் காட்சிகள் நிகழும். விஷ்ணுபுரத்தில் இறுதியில் நிகழும் ஊழிக்கூத்தினைப் போல. அஹிர்புத்தன்யன் என்றொரு தெய்வத்தை எங்குக் கண்டடைந்தாரோ! ஆனால் போகிறபோக்கில் சொல்லியிருக்க மாட்டார் என்ற நம்பிக்கையில் நானும் தேடினேன்.
மாபெரும் சமுத்திரத்திலிருந்து நீரினையே உடலாகக் கொண்டு சர்ப்பமாக அஹிர்புத்தன்யன் எழுவதாகக் கண்ட கற்பனையை சாமான்யன் கண்டிருந்தால் கோவில் கட்டக் கிளம்பியிருப்பான். சர்சுதியோடு இணைக்கும்படியான தெய்வத்தைக் கொண்டுவந்ததெல்லாம் தரமான செய்கை. நீரே தெய்வமாகி!
ஆனால் நான் எதிர்பார்த்திருந்தது மக்களின் வாழ்வியல்கள் பேசும் அதிக அத்தியாயங்களை! ஊருக்கு வெளியே ஆசிரமமென்று போனதால் எனக்கு ஏமாற்றமே! என்ன செய்வது? ஜனத்திரள் இல்லாமல் சாகசங்கள் இராது, அதை எதிர்பார்க்காமல் வாசிப்பது எனக்கு சிரமமே!
இத்தனை நூறு பக்கங்களையும் வாசிக்க வைப்பதற்கான பாராட்டு, கதையைக் காட்டிலும் எழுத்து நடைக்கே சென்றடைய வேண்டும். இத்தனை எளிமையாக இல்லாவிட்டால் இவ்வளவு பக்கங்கள் வாசிக்க இயலாது.
முக்கியமாக ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் வரிகளை நான் மிகவும் இரசித்தேன்.
நான் சாரன், நான் அதர்வன், நான் குத்சன்
இவ்வரிகள் வருகையில் இனம்புரியாத உவகைக்குள்ளாவேன். அதை மட்டும் மனதிற்குள் base voice ல் சொல்லிக் கொள்வேன்.
சலம் ஒரு தொடக்கம்தான். பாரா தொட்டிருக்கும் களத்தைக் கடந்து நடக்கத் தொடங்கினால் பற்பல சர்ச்சைகளையும் ஏன் கலவரங்களையுமே காண நேரிடலாம்.
சமீபத்தில் கூட ஒருவர் வால்கா முதல் கங்கை வரை புதினத்தை புளுகென்று திட்டிக் கொண்டிருந்தார். ஆரியர்கள் பூர்வகுடிகள் என்பது அவரது வாதம். அவரெல்லாம் சலம் படிக்க வாய்ப்பேயில்லை என நினைத்து ஆறுதல் கொள்கிறேன்.
அக்கால கட்டத்தைய மக்களது வாழ்வியல் குறித்து பல தகவல்கள் பேசப்பட்டுள்ளன. நான் அவற்றைக் குறிப்பெடுத்து வைக்காததால் விரிவாக பேச முடியவில்லை. வேறு யாரேனும் பேசக்கூடும் என்று நம்புகிறேன். குறிப்பாக என்னென்ன வகையான உணவுகள்! அதிதியாக சாரன் தங்கியிருக்கையில் கவனிப்பாக பரிமாறப்படும் உணவுகளை மட்டும் குறித்து வைத்து கற்பனை செய்துப் பார்த்தேன்.
புதினத்திற்கு புதிய களம். பக்கங்களின் எண்ணிக்கையைக் கண்டு மிரளாமல் வாசித்தால் புது அனுபவம் கிட்டும்.
சலம் – நாவல் வாங்க இங்கே செல்க.
All rights reserved. © Pa Raghavan - 2022
May 31, 2025
மெட்ராஸ் பேப்பர் ஆண்டு விழா
நண்பர்களுக்கு வணக்கம்.
மெட்ராஸ் பேப்பர் வார இதழ், மூன்று வருடங்களை நிறைவு செய்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஜூ 1, 2025 – இன்று ஆண்டுவிழா.
* இது என்ன பத்திரிகை, எப்படி இருக்கும், எத்தனை நாள் தொடர்ந்து வரும் என்று எது குறித்தும் சிந்திக்காமல், என் மீது கொண்ட நம்பிக்கையினால், கேள்விப்பட்ட மறு கணமே முதல் ஆயுள் சந்தா அளித்து ஆரம்பித்துவைத்த நண்பர்கள் ஏ.எஸ். புவனேசுவரன், மாம்பலம் சந்திரசேகர்;
* தமிழ்ப் பத்திரிகை உலகில் மிகவும் தாமதமாகத் தோன்றினாலும் தனித்துத் தெரியவும் தரத்தினால் மட்டுமே அடையாளம் காணப்படவும் அடித்தளம் அமைத்துத் தந்து, இன்றுவரை இடைவெளியின்றித் தம் எழுத்தால் உயர்த்திப் பிடித்துக்கொண்டிருக்கும் விமலாதித்த மாமல்லன், எஸ். சந்திரமௌலி;
* இதனை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல அனைத்து விதங்களிலும் இடைவிடாமல் முயற்சி செய்துகொண்டிருக்கும் பத்மா அர்விந்த், தி.ந.ச. வெங்கடரங்கன்;
* சகலவிதமான நெருக்கடி நேரங்களிலும் நிபந்தனையற்று என்னோடு நிற்கும் செல்வ முரளி, நஸீமா ரஸாக்;
* மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்கள் என்று என் மாணவர்கள் இன்று எங்கெங்கும் கொண்டாடப்பட முக்கியமான காரணம், தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கும் அவர்களது புத்தகங்கள். என் சொல் அன்றி வேறெதையும் கருதாமல் மெட்ராஸ் பேப்பர் பெயரிலேயே ஒரு இம்ப்ரிண்ட் தொடங்கி அவர்களுடைய முதல் புத்தகங்கள் வெளிவர வழி செய்யும் ஜீரோ டிகிரி ராம்ஜி நரசிம்மன்;
* ஆயிரத்தெட்டு பேமெண்ட் கேட்வே இம்சைகள் இருந்தாலும் சகித்துக்கொண்டு சந்தா செலுத்திப் படிக்கும் வாசக நண்பர்கள்;
* டெட்லைன் கெடுபிடிகளுக்குப் பழக்கப்படுத்திக்கொண்டு, தமது அன்றாடப் பணிகளுக்கிடையில் தொடர்ச்சி விடுபடாமல் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள்
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
இன்று மாலை ஆறு மணிக்கு ஆண்டு விழா கூகுள் மீட் வழி நடைபெற உள்ளது. பத்திரிகையாளர் சந்திரமௌலி விழாவுக்குத் தலைமை ஏற்கிறார். பத்திரிகையாளர் ரமேஷ் வைத்யா வாழ்த்துரை வழங்குகிறார். வேறு யாரும் பேசப் போவதில்லை. இந்நிகழ்ச்சி முற்று முழுதாக வாசகர் விழாவாக நடைபெற வேண்டுமென்பது எங்கள் விருப்பம்.
மெட்ராஸ் பேப்பர் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் இருப்பார்கள். நானும் இருப்பேன். வாசகர்கள் அனைவருடனும் கலந்துரையாடலாம். கேள்விகள் கேட்கலாம். மெட்ராஸ் பேப்பர் தொடர்பான தமது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளலாம். எழுத்து-பத்திரிகை-வாசிப்பு சார்ந்து என்ன வேண்டுமானாலும் கேட்கலாம், பேசலாம், விவாதிக்கலாம்; காத்திருப்போம்.
கூகுள் மீட்டின் அதிகபட்சக் கொள்ளளவு 100. எனவே முதலில் வருவோருக்கு முன்னுரிமை. நிகழ்ச்சி சரியாக மாலை ஆறு மணிக்குத் தொடங்கும். ஐந்து மணிக்கு என் வாட்சப் சேனலில் லிங்க் தருவேன்.
வருக.
All rights reserved. © Pa Raghavan - 2022
May 29, 2025
ஆன்மாவும் அவரைக்காயும்
எனக்கு பீன்ஸ் பிடிக்கும். கொத்தவரங்காய் தவிர பீன்ஸ் குடும்பத்தில் உள்ள அனைத்து விதமான காய்களும் உவப்பானவையே. வேறு வழியில்லை என்றால் கொத்தவரங்காயையும் சாப்பிடுகிறேன். ஆனால் காய்கறி வாங்கக் கடைக்குச் செல்வது நானாக இருந்தால் நிச்சயமாக அதை மட்டும் வாங்க மாட்டேன்.
பொதுவாகத் தாவர உணவு மட்டும் எடுத்துக்கொள்பவர்களுக்கு வேண்டுதல் வேண்டாமை கூடாது. இருக்கிற சொற்பத்தில் கிடைப்பன அதனினும் சொற்பம். இதில் தேர்வு செய்து உண்பதெல்லாம் அடாது என்று நினைப்பேன். ஆனால் நியாயங்களும் நாவும் பெரும்பாலும் ஒத்துப் போவதில்லை.
இருக்கட்டும், சொல்ல வந்தது வேறு. எனக்குக் கொத்தவரங்காயை எப்படிப் பிடிக்காதோ, அதே போலப் பித்தகோரஸுக்கு அவரைக்காய் பிடிக்காது. பீன்ஸ் குடும்பத்தில், கொத்தவரங்காயாவது மெல்லிய கசப்புச்சுவை கொண்டது. அவரை என்ன பாவம் செய்ததென்று தெரியவில்லை. ஆனால் என்னைப் போலவே மிகத் தீவிரமான தாவர உணவுக் கொள்கை கொண்ட ஒரு மனிதர், வாழ்நாள் முழுவதும் அவரைக்காயை வெறுத்து வந்திருக்கிறார் என்றால் அதன் காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினேன்.
படிக்கிற காலத்தில் பித்தகோரஸ் தியரம் என்ற பதம் என் வாழ்வின் குறுக்கே வந்திருக்கிறது. கணிதம், அறிவியல் போன்ற பாடங்களில் இவ்வாறு எது எதிர்ப்பட்டாலும் நகர்த்திவிட்டு நகர்ந்துவிடுபவனாக இருந்ததால் அப்போது நான் பித்தகோரஸைப் பொருட்படுத்தவில்லை. அது பெரும்பிழை என்று பின்னாள்களில் உணர்ந்தேன்.
அவர் கணித மேதை மட்டுமல்ல. தத்துவவாதி. தன்னைப் பின்பற்றவும் வழிபடவும்கூட ஆயிரக் கணக்கானவர்களைக் கொண்டிருந்தவர். பித்தகோரியம் என்று அவரது கொள்கைகளின் அடிப்படையில் அக்குறுங்குழுவினர் ஒரு மதத்தையே உருவாக்கி, பின்பற்றி வாழ்ந்திருக்கிறார்கள். அப்பேற்பட்டவரின் வாழ்க்கையில் அவரைக்காய் ஏதோ விளையாடியிருக்கிறது. இல்லாவிட்டால் அவர் அதை அவ்வளவு வெறுத்து ஒதுக்கியிருக்க வேண்டியதில்லை.
கிமு 570இல் கிரேக்கத்தில் பிறந்த பித்தகோரஸ், எகிப்திலும் இராக்கிலும் தனது இளமைக்காலத்தைக் கழித்திருப்பதாகத் தெரிகிறது. கணிதம், தத்துவம், வானியல், விவசாயம் என்று ஏகப்பட்ட துறைகளில் அவருக்கு ஆர்வம் இருந்திருக்கிறது. ஆர்வம் இருந்த அனைத்துத் துறைகளிலும் தீவிரமாக இறங்கி அகழ்ந்தெடுக்கப் பார்த்திருக்கிறார். என்ன எடுத்தார் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் அவர் சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்திலும் அவருக்கு ஏதோ ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கருத்து இருந்திருக்கிறது. தனது கருத்துகளை வாழ்நாள் முழுதும் அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார்.
எனவே அவருக்கு எல்லா துறைகளிலும் ஏராளமான எதிரிகளும் இருந்திருக்கிறார்கள். பித்தகோரஸ் என்ன சொன்னாலும் எதிர்த்துப் பேச எங்கும் எப்போதும் ஒரு கூட்டம் தயாராக இருந்திருக்கிறது. எப்போது அவர் தனது சித்தாந்தங்களைத் தொகுத்து ஒரு மதமாக்கப் பார்த்தாரோ, அப்போது அந்த எதிரிகள் அத்தனை பேரும் ஒன்று திரண்டு எதிர்க்கத் தொடங்கினார்கள்.
கிறிஸ்து பிறப்பதற்கு ஐந்நூறு வருடங்களுக்கு முன்பு இத்தாலியில் இருந்தபடி (க்ரோடொனா என்ற நகரில் குடியிருந்திருக்கிறார்) மரணம்-மறுபிறப்பு குறித்தெல்லாம் அவர் பேசியிருக்கிறார் என்பதைப் படித்தபோது வியப்பாக இருந்தது. இறந்தவரின் ஆன்மாவுக்கு அழிவில்லை என்கிற இந்து மதக் கொள்கைதான் பித்தகோரஸுக்கும் இருந்திருக்கிறது. அழிவற்ற ஆன்மா உடனடியாக இன்னொரு உடலைத் தேடிக்கொண்டு விடுகிறதென்று அவர் சொன்னார். அன்றைய ஐரோப்பாவில் இதையெல்லாம் யாரும் நம்பத் தயாராக இல்லை. அவரைப் பைத்தியம் என்றும் பித்தலாட்டக்காரன் என்றும் இடைவிடாமல் எதிர்ப்பிரசாரம் செய்துகொண்டிருந்தார்கள்.
பித்தகோரஸ் அதையெல்லாம் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. இசைக்குள்தான் கணிதம் வாழ்கிறது என்றார். எண்கள்தாம் எல்லாம்; அவற்றுக்கு மாய சக்தி உண்டு என்றார். கணிதத்தையும் இசையையும் ஒரு காக்டெய்ல் ஆக்கி வானியல் சார்ந்த தரிசனங்களைப் பெற முடியும் என்று வாழ்நாள் முழுதும் தீவிரமாக அவர் நம்பியிருக்கிறார். அது சார்ந்த பல பரீட்சார்த்த முயற்சிகளையும் செய்து பார்த்திருக்கிறார். அவை என்னவென்ற விவரம் சரியாகக் கிடைப்பதில்லை.
இந்த மனிதர் ஏன் இலக்கியத்தை விட்டு வைத்தார் என்றுதான் அவரைப் பற்றிப் படிக்கும்போது தோன்றியது. ஏ ஸ்கொயரும் பி ஸ்கொயரும் எக்கேடு கெடட்டும். இவ்வளவு ஆர்வங்கள் உடைய ஒருவர், எழுதலாம் என்று நினைக்காமல் மதம் தொடங்கி போதிக்க நினைத்ததைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.
அப்புறம் அந்த அவரைக்காய்.
பித்தகோரஸுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. பீன்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த அவரைக்காய் ஒரு கெட்ட காய். அசப்பில் அது மாமிசம் போலவே தோற்றமளிக்கிறது. என்றால், அது தாவரமே என்றாலும் உண்ணத்தகுந்ததல்ல என்று தீர்மானமாகச் சொன்னார். பித்தகோரஸுக்கு இந்து மதத்தில் உள்ளதைப் போல மேல் உலகம்-பூமி-கீழ் உலகம் என்கிற கருத்தக்கத்தில் தீவிர நம்பிக்கை இருந்திருக்கிறது. இந்த அவரைக்காய், பூமிக்கும் அதற்குக் கீழான உலகங்களுக்கும் வேர்களின் வழியே பாதை அமைக்கிறதென்று அவர் மனப்பூர்வமாக நம்பினார். தாம் நம்பியதைத் தமது சீடர்களுக்கும் சொல்லி, போகிற இடங்களில் பார்க்கிற அனைவருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்; யாரும் அவரைக்காயைச் சாப்பிட வேண்டாம் என்று அச்சுறுத்தி அனுப்பி வைக்கும் அளவுக்கு அதில் அவர் தீவிரம் கொண்டிருந்தார்.
அவரது மரணம் குறித்துத் தெளிவான சரித்திரத் தகவல்கள் இல்லை. ஆனால் பல்வேறு கதைகள் இருக்கின்றன. அவற்றுள் அவரைக்காய் கதையும் ஒன்று.
பித்தகோரஸின் கருத்துப்படி, அவரை பயிரிடப்பட்டிருக்கும் வயல்வெளியைக் குறுக்கே கடந்து போகக் கூடாது. அந்த வயலைக் கடப்பது என்பது முன்னோர்களின் ஆன்மாவை மிதித்துச் செல்வது போன்றது என்று அவர் சொன்னார்.
அப்படிப்பட்டவர் ஒரு சமயம் அவரது எதிரிகளிடம் சிக்கிக்கொண்டார். வாழ்க்கை முழுவதும் பல்வேறு தரப்பட்ட எதிரிகளால் துரத்தப்பட்டுக்கொண்டே இருந்த பித்தகோரஸை அவரது சீடர்கள்தாம் ஆபத்தின்றி பத்திரமாகப் பாதுகாத்து வந்திருக்கிறார்கள். ஏதோ ஒரு சந்தர்ப்பம். எங்கோ ஓரிடம். சீடர்களுடன் அவர் சென்றுகொண்டிருந்தபோது எதிரிகள் சுற்றி வளைத்துவிட்டார்கள். கைது செய்து இழுத்துச் சென்று அடைத்து வைத்தார்கள்.
விடிந்தால் கொன்றுவிடுவார்கள். எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்று சீடர்கள் முடிவு செய்து, ஏதோ ஓர் உபாயத்தைக் கண்டறிந்து பித்தகோரஸின் கட்டுகளை அவிழ்த்து, அவரைத் தப்பித்து ஓடிவிடச் சொல்லியிருக்கிறார்கள். அப்படி ஓடிக்கொண்டிருந்த பித்தகோரஸ், ஓரிடத்தில் மிகப்பெரிய அவரைத் தோட்டம் ஒன்றை எதிர்கொள்ள நேர்ந்திருக்கிறது.
அதைக் கடந்தால், உயிர் பிழைத்துவிடலாம் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். ஆனால் கொள்கை என்ன ஆவது? அவரை பயிரிடப்பட்டிருக்கும் வயல்வெளியைக் கடந்தால் அது முன்னோரின் ஆன்மாவை மிதிப்பதற்குச் சமமல்லவா?
செய்வதறியாமல் பித்தகோரஸ் குழப்பத்துடன் அப்படியே நின்றுவிட்டார். இப்போது, துரத்தி வந்த எதிரிகள் தாவிப் பிடித்து அவரைக் கொன்றுவிட்டார்கள்.
இது வெறும் கதையா, உண்மையிலேயே பித்தகோரஸின் முடிவு இப்படித்தான் நேர்ந்ததா என்று தெரியாது. ஆனால் சாகவிருக்கும் தறுவாயிலும் கொள்கையை விட்டுத்தர மனமில்லாத ஒரு மனிதன் எப்பேர்ப்பட்டவனாக இருந்திருப்பான்!
எனக்குக் கணக்கு வராது. அறிவியல் பிடிக்காது. வானியலெல்லாம் மழை வருமா வராதா என்று வெதர் ஆப்பில் பார்த்துத் தெரிந்துகொள்ளும் அளவோடு சரி. தத்துவங்களை முற்றிலுமாக வெறுப்பவன். மதத்தின் மீது அறவே நம்பிக்கை இல்லாதவன். எனவே, எந்த விதத்திலும் பித்தகோரஸை நினைத்துக்கொள்ள நியாயமே இல்லாதவன் ஆகிறேன். ஆயினும் இந்த ஒரு கதை என்னை அவர்பால் சுண்டி இழுத்துக்கொண்டே இருக்கிறது.
என்றைக்காவது பித்தகோரஸை அல்லது அவரைப் போன்ற ஒருவனை வைத்து ஒரு நாவல் எழுதலாம். ஆனால் எனக்கு நன்றாகத் தெரியும், ஒருவேளை அது நடக்குமானால் என் நாவலின் நாயகன் அவரைக்காயை வெறுக்க மாட்டான். கொத்தவரங்காயைத்தான் வெறுப்பான்.
All rights reserved. © Pa Raghavan - 2022
May 24, 2025
uFOCUS: விசுவாமித்திர கோத்திரத்தில் ஒரு செயலி
எழுதுவதற்கு நான் பயன்படுத்தும் simpleText என்னும் செயலி (Writeroom இறந்துவிட்ட பின்பு) உண்மையிலேயே சிறப்பானது, எளிமையானது. கண்ணை உறுத்தும் எந்தக் கொசகொசவும் கிடையாது. அதன் ஒரே சிக்கல், word count சொதப்பும். முதல் பன்னிரண்டு சொற்கள் வரை ஒழுங்காகக் கணக்குக் காட்டும். பிறகு இஷ்டத்துக்குக் குறைத்துக்கொண்டே போகும். ஐந்நூறு சொற்கள் எழுதியிருக்கிறோம் என்று அது காட்டும் எண்ணிக்கையைக் கொண்டு ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. காப்பி செய்து கூகுள் டாக்கிலோ, வேர்டிலோ போட்டுப் பார்த்தால் கூசாமல் ஆயிரத்து நூறு என்று காட்டுவான்.
இந்த இம்சையினாலேயே அதற்கும் ஒரு மாற்று கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருந்தேன். iA writer என்றொரு செயலி அகப்பட்டது. மிகத் தரமான ப்ளைன் டெக்ஸ்ட் எடிட்டர். தேவைப்பட்டால் மார்க் டவுன் வசதி வாய்க்காலைத் திறந்துகொள்ளலாம். வேண்டாமென்றால் விறுவிறுவென்று எழுதிக்கொண்டே செல்லலாம். Word count துல்லியமாக இருக்கும். மைக்ரோசாப்ட் வேர்ட், ஆப்பிள் பேஜஸ் காட்டும் எண்ணிக்கையுடன் ஒத்துப் போகும். (இவனெல்லாம் சரியாகத்தான் காட்டுகிறானா என்பது இன்னொரு தனி வினா. நான் அதைக் குடைந்ததில்லை. ஆனால் லிப்ரே ஆபீசுக்கும் மைக்ரோசாஃப்ட் வேர்டுக்கும் சொல் எண்ணிக்கை வித்தியாசம் வரும். அதிகமில்லை என்றாலும் அவசியம் இருக்கும்.)
iA writer இல் என்ன ஒரு சிக்கலென்றால், விலை அதிகம். தவிர மேக்குக்கு ஒன்று, ஐபேடுக்கு ஒன்று, ஐபோனுக்கு ஒன்று என்று தனித்தனியே வாங்க வேண்டும். நாம் என்றைக்கு ஒரே இடமாகக் குப்பை கொட்டியிருக்கிறோம்? கொட்டுகிற குப்பையை சாத்தியமுள்ள எல்லா இடங்களிலும் கொட்டி வைப்பதே தமிழர் மரபு. மரபு மீறாத மறத் தமிழனுக்கு இதனாலேயே இந்த iA writer வேண்டாம் என்று தோன்றியது.
iA writer போலவே இருக்க வேண்டும். அதிலுள்ள அனைத்து வசதிகளும் வேண்டும். வேர்ட் கவுண்ட்டும் சரியாக இருக்க வேண்டும். கண்ணை உறுத்தாத எளிமை அவசியம். செயலிக்குள் இருந்தபடியே லைப்ரரி ஆக்சஸ் வேண்டும். Preview mode அவசியம். மூட் மாறும்போது தடதடவென சத்தமாகத் தட்ட வசதியாக டைப்ரைட்டர் மோட் கூடுதலாக இருந்தால் நல்லது. எக்ஸ்போர்ட் ஆப்ஷன்கள் தேவை. நேரடியாக பிடிஎஃப் ஆக்க முடிவது நல்லது.
இப்படியெல்லாம் மணல் கயிறு எஸ்.வி. சேகர் திருமணத்துக்குப் பெண் தேடப் போடும் நிபந்தனைகள் போல நான் எதிர்பார்க்கும் அனைத்துக் கல்யாண குணங்களுடனும் இன்று ஒரு செயலி அகப்பட்டது.
அச்சு அசல் iA Writer போலவே உள்ளது. அனைத்து வசதிகளும் அப்படி அப்படியே. எடிட்டரின் நிறம், நீள அகலங்கள், எழுத்துரு, அதன் அளவு எதை வேண்டுமானாலும் இஷ்டத்துக்கு மாற்றிக்கொள்ள முடிகிறது. Focus குலையாதிருக்க எழுதுகிற வரி மட்டும் பளிச்சென்று தெரிகிறது. எழுதி முடித்த வரிகள், பத்திகள் அனைத்தும் மப்பாகிவிடுகின்றன. எங்கே கொண்டு கர்சரை வைக்கிறோமோ, அந்த இடத்தில் வெளிச்சம் விழுகிறது. மார்க் டவுன் சௌகரியம் உள்ளது.
இதெல்லாமா பெரிது? இந்த நல்ல செயலி இலவசமாகவே ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது.
இப்படி கவனம் கவரும் செயலி ஏதாவது அகப்படும்போது அதை உருவாக்கியவர் யார் என்று தேடிச் சென்று பார்ப்பேன். uFocusஐ உருவாக்கியவர் பெயர் நிக்கோலஸ் கிக். எது அவரை இந்தச் செயலியை உருவாக்கத் தூண்டியது என்று பார்த்தால், மனிதர் நமது சாதிக்காரராக இருக்கிறார்.
‘I created uFocus because I couldn’t find my ideal (and affordable) writing environment.’
என்று அவரது இணையத்தளத்தில் எழுதி வைத்திருக்கிறார்.
சொர்க்கம் உனக்கில்லை, நரகம் உனக்கு வேண்டாமெனில் உனக்கென ஒரு சொர்க்கத்தை நான் உருவாக்கித் தருவேன் என்று சூரிய வம்சத்துத் திரிசங்குவுக்கு நம்பிக்கையளித்த விசுவாமித்திரரின் தீவிர விசிறியாக, நிக்கோலஸ் கிக்கின் இம்மானுட குலச் சேவையை மானசீகமாகப் பாராட்டிவிட்டு இந்தக் குறிப்பை எழுதுகிறேன்.
வேர்ட் கவுண்ட் 383 என்று காட்டுகிறது. தூக்கி pages இல் போட்டுப் பார்த்தாலும் அதையேதான் காட்டியது.
எனவே, இனி uFocus. நன்றி, Nicolas Kick.
All rights reserved. © Pa Raghavan - 2022
May 16, 2025
நீ வேறு, நான் வேறு – புதிய தொடர்
இது காலம் கருதி ஆரம்பிக்கப்படுகிற தொடர். வரலாற்றால் துரோகம் இழைக்கப்பட்ட ஒரு மாபெரும் மக்கள் கூட்டத்தின் மறுமலர்ச்சி சரித்திரம்.
நமக்குப் பாலஸ்தீனப் பிரச்னை தெரிந்த அளவுக்குக் குர்திஸ்தான் பிரச்னை தெரியாது. ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை அறிவோம். ஆனால் உய்குர் படுகொலைகள் பற்றி அறியமாட்டோம். அப்படித்தான், காஷ்மீர் பிரச்னையில் செலுத்தும் கவனத்தை பலூசிஸ்தான் விடுதலைப் போராட்டத்தில் செலுத்தத் தவறினோம்.
இரண்டுக்கும் சம வயது. இரண்டுக்கும் காரணம் பாகிஸ்தான். ஒரே வித்தியாசம், காஷ்மீர் ஒன்றுபட்ட இந்தியாவின் ஓர் அங்கம். பலூசிஸ்தான் வஞ்சகத்தால் பாகிஸ்தானுடன் ஒட்ட வைக்கப்பட்ட, தனித்துவம் மிக்க ஓர் இனத்தவரின் மண். தனது சுதந்தரத்துக்குப் பிறகு 1948 ஆம் ஆண்டு பாகிஸ்தான், காஷ்மீர் மீது படையெடுத்து எப்படி அதன் ஒரு பகுதியை அபகரித்ததோ, அதையேதான் பலூசிஸ்தானிலும் செய்தது. ஆனால் ஒரு பகுதியல்ல. பலூச் மக்களின் மொத்த நிலத்தையும் எடுத்து விழுங்கிவிட்டது.
ஒரு வகையில் அது பிரிட்டனின் கூட்டுச் சதி. இன்னொரு வகையில் பாகிஸ்தானின் பிரத்தியேக சூழ்ச்சி வலை. எப்படியானாலும் இன்றுவரை பலூசிஸ்தான் மக்கள் தமது விடுதலைக்காகப் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தியா தம் பக்கம் நிற்க வேண்டும் என்று இன்றைக்குக் கோரிக்கை வைத்து, சுதந்தரப் பிரகடனம் செய்திருக்கிறார்கள்.
இம்மாதம் (மே 2025) இரண்டாம் தேதி தொடங்கிய பலூசிஸ்தான் விடுதலைப் போராட்டத்தின் இறுதிக் கட்ட நடவடிக்கைகள் ஒன்பதாம் தேதி அதன் உச்சத்தைத் தொட்டு, சுதந்தர பலூசிஸ்தான் அறிவிப்பு வெளியிடப்பட்டது. உலகம் திகைக்க ஒரு நாளாக அன்று ஆகிப் போனது. உண்மையில் பலூசிஸ்தானை நாம் பொருட்படுத்திக் கவனிக்கத் தொடங்கியதே அதன் பிறகுதான். ஆனால் அந்த ஓர் அறிவிப்பின் பின்னால் எழுபத்தேழு ஆண்டுக் கால அடக்குமுறையும் மிதிபட்ட வேதனையும் வதைபட்ட வலியும் இழப்பின் கண்ணீர்க் கறையும் உண்டு.
பாகிஸ்தானின் முகம் என்று நாம் அறிந்த ஒன்றனுக்கு அப்பால் இன்னொரு முகம் அதற்குண்டு. அது இன்னும் பயங்கரமானது. மேலும் கொடூரமானது. ஈவு இரக்கமற்றது. நியாய தருமங்களைச் சற்றும் கருதாதது. பலூசிஸ்தான் மக்கள் அதைத்தான் இத்தனை ஆண்டுக் காலமாகவும் கண்டு அனுபவித்து வந்திருக்கிறார்கள். இது அவர்கள் விடுபடத் துடிக்கும் காலம்.
இருபதாண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானின் வரலாற்றை எழுத நேர்ந்தபோது பலூசிஸ்தான் விவகாரம் குறித்துப் படிக்கத் தொடங்கினேன். ஆனால் காஷ்மீரை மையப் புள்ளியாக வைத்து இந்தியா-பாகிஸ்தான் உறவு மற்றும் பகையின் கதையாக அது விரிந்தபோது பலூசிஸ்தான் பிரச்னை இயல்பாகவே அந்தக் கண்ணியில் விடுபட்டுப் போனது. இப்போது அதற்கு நேரம் அமைகிறது.
வரும் திங்கள்கிழமை முதல் (மே 19) மெட்ராஸ் பேப்பரில் நாள்தோறும் இதனை எழுதத் திட்டமிட்டிருக்கிறேன். எப்போதும் என் உடன் இருக்கும் வாசக நண்பர்களை இப்போதும் வாசித்துக் கருத்துச் சொல்ல அன்புடன் அழைக்கிறேன்.
All rights reserved. © Pa Raghavan - 2022
May 11, 2025
வாசன் மலர்
நேற்று எஸ்.எஸ். வாசன் நூற்றாண்டு மலரைச் சிறிது நேரம் புரட்டிக்கொண்டிருந்தேன். படித்துப் பல்லாண்டுகள் ஆகிவிட்டதால் சில விவரங்கள் மறந்திருந்தன. ஒரு கட்டுரையை முழுக்கப் படித்தேன். செய்ய இருந்த வேலையெல்லாம் மறந்து போய் அடுத்தடுத்து எட்ட கட்டுரைகளை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். நிறுத்தவே மனம் வரவில்லை.
உத்வேகம் தரக்கூடிய புத்தகங்களுக்கு என்று ஒரு பெரிய சந்தை உண்டு. 2003ம் ஆண்டு விகடன் வெளியிட்ட இந்த மலர் அப்படிச் சந்தையில் இருக்கும் எந்தப் புத்தகத்தினும் சிறப்பானது, வீரியம் மிக்கது. வாசன் என்ற ஆளுமையை நேரில் கண்டு பழகியவர்களின் அனுபவங்கள்தாம். ஆனால் எதுவுமே வெறும் துதிக் கட்டுரைகள் அல்ல. ஒரு வெற்றியாளரைக் குறித்து எழுதும்போது அவர் வெற்றியடைந்த கதையைச் சொல்வதினும், அவரது எந்தெந்தத் திறமைகள், குணங்கள் வெற்றியை நோக்கி நகர்த்தின என்பதைச் சுட்டிக் காட்டுவதுதான் சரியான எழுத்தாக இருக்கும். இம்மலர் அதனைக் கச்சிதமாகச் செய்திருக்கிறது.
வாழ்க்கை வரலாறுகள், தன்னம்பிக்கை நூல்கள், சுய முன்னேற்ற நூல்கள், வெற்றிக் கதைகள் எழுத விரும்புகிறவர்கள் இதனை மனத்தில் கொள்ள வேண்டும். சும்மா ஒருவர் போராடினார், கஷ்டப்பட்டார், இரவு பகலாக உழைத்தார், புதிதாக யோசித்தார், நிறைய தோற்றார், இறுதியில் ஜெயித்தார் என்று எழுதுவது எந்த வகையிலும் படிப்பவர்களுக்கு உத்வேகம் தராது. உபயோகமாகவும் இராது.
ஒவ்வொரு மனிதருக்கும் நூற்றுக் கணக்கான நிறங்கள் இருக்கும். இந்த நிறம் என்பது குணத்தையும் உள்ளடக்கியதுதான். நல்லவர் என்பது பொதுவான பண்பு. ஒருவர் எல்லோரிடத்திலும், எல்லா சந்தர்ப்பங்களிலும், எல்லா காலக் கட்டத்திலும் நல்லவராகவே இருக்க முடியாது. அவருக்குக் கோபமே வராது என்பது சரியான கணிப்பு அல்ல. கோபமே இல்லாமல் ஒரு முழு வாழ்வை வாழ்ந்து முடிக்க முடியாது. அதே போலத்தான் அவர் இரக்க சுபாவமுள்ளவர், அவர் நகைச்சுவையாகப் பேசுவார், அவர் எப்போதும் சிந்தனை வயப்பட்டிருப்பார் என்பன போன்ற விவரிப்புகளும்.
ஒரு சராசரி மனிதன் சாதனையாளன் ஆவதற்கு (அது நோக்கமாக இல்லாவிட்டாலும்) சில பயிற்சிகளை அவசியம் மேற்கொண்டாக வேண்டியிருக்கும். தெரிந்து செய்யலாம், இயல்பாகவும் செய்யலாம். அதுவல்ல முக்கியம். ஆனால் குறிப்பிட்ட பயிற்சிகளில் மனம் ஒருமுகப்படுவதற்கு அவரை உந்தித் தள்ளும் இயல்புகள் எவை என்று பார்ப்பது முக்கியம்.
இந்த மலரில் அசோகமித்திரன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். வாசனுக்கு திறமைமிக்க ஊழியர்கள் பலர் தாமாகவே கிடைத்தார்கள் என்று அதில் சொல்கிறார். நாம் உடனே என்ன நினைப்போம்? அது அவரது அதிர்ஷ்டம்.
ஆனால் வேறொரு கட்டுரையில் வாசன் தமது ஊழியர்களை எப்படிக் கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டார் என்பதை இன்னொருவர் எழுதுகிறார். திறமையை இனம் காண்பது – கிடைத்த திறமைசாலிகளைத் தக்க வைத்துக்கொள்வது என்று இரண்டு விஷயங்கள் இதில் அடங்கியிருக்கின்றன.
ஒரு வட நாட்டு நடிகை இங்கே நடிக்க வந்தபோது அவரை ஒரு மதன மாளிகையில் தங்க வைத்து, பிரமித்துப் போகும் அளவுக்கு உபசரித்த கதையை ஒருவர் எழுதியிருக்கிறார். அடுத்தப் பக்கத்திலேயே இன்னொரு நடிகைக்கு அவர் வக்கீல் நோட்டீஸ் கொடுத்து மிரட்டிய கதை வருகிறது. இரண்டுக்குமே தொழில் சார்ந்த காரணங்கள்தாம். நியாயமான காரணங்கள். ஆனால் இரண்டு சம்பவங்களின்போதும் தனிப்பட்ட ஆர்வமோ, விருப்போ, வெறுப்போ இல்லாமல்தான் அவர் நடந்துகொண்டிருக்கிறார். எப்போதும் சமநிலையில் இருப்பது வெற்றிக்கு மிக முக்கிய சூட்சுமம் என்பார்கள். அதை நேரடியாகச் சொல்லாமல் இந்த இரு சம்பவங்களும் வாசன் என்னும் ஆளுமையின் சமநிலை குலையாத மனப்பாங்கைப் புரியச் செய்துவிடுகின்றன.
அந்நாளில் என்.எஸ். கிருஷ்ணன் ஒரு சூப்பர் ஸ்டார். அவர் நடிக்கும் படங்களில் அவரது நகைச்சுவைப் பகுதிகளை அவரே எழுதி, இயக்கிக் கொடுத்துவிடுவதுதான் வழக்கமாக இருந்திருக்கிறது. வாசனும் அவரைத் தமது ஒரு படத்துக்கு அழைத்தார். என்.எஸ்.கே. தனது பாணியில் ஒரு நகைச்சுவைப் பகுதியை எழுதி, இயக்கிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.
ஆனால் போட்டுப் பார்த்தபோது வாசனுக்கு நிறைய விஷயங்கள் இடித்தன. எனவே கிருஷ்ணன் கொடுத்த மொத்தப் படச் சுருளில் பாதியை வெட்டி எடுத்துவிட்டு மிச்சத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். கிருஷ்ணனுக்குக் கோபம் வந்துவிட்டது. அது எப்படி நான் எடுத்துத் தந்ததை நீங்கள் வெட்டலாம்?
வாசன் அவரை உட்கார வைத்து முழுப் படத்தையும் போட்டுக் காட்டியிருக்கிறார். நீக்கப்பட்ட காட்சிகளை ஏன் நீக்கினேன் என்று விளக்கியிருக்கிறார். சும்மா சுற்றி வளைத்துத் தனது செயலை நியாயப்படுத்துவதல்ல. ஒரு வரி. ஒரே ஒரு விளக்கம். அவ்வளவுதான். நீங்கள் செய்தது சரி என்று சொல்லிவிட்டு கிருஷ்ணன் எழுந்து சென்றுவிட்டார்.
அந்த ஒரு வரி விளக்கம் வாசன் எவ்வளவு பெரிய திரைக்கதை வல்லுநர் என்பதை விளக்கிவிடுகிறது.
இந்தக் கட்டுரை முடியும் இடத்தில், வாசன் சினிமா கற்றுக்கொண்ட ஆரம்பக் காலம் குறித்த வேறொரு கட்டுரை இருக்கிறது. இரண்டையும் இணைத்து சிந்தித்தால், நேர்த்தியாகக் கற்றுக்கொள்ளும் ஒரு தொழில் தருகிற தன்னம்பிக்கை, எம்மாதிரி நெருக்கடி சமயங்களில் எவ்வளவு சிறப்பாக வேலை செய்யும் என்பது விளங்கிவிடும்.
தமிழில் எழுதப்பட்ட எந்த ஒரு வெற்றியாளரின் வாழ்வும் இந்த மலருக்கு நிகரானதல்ல. இத்தனைக்கும் இது ஒரு தொகுப்பு நூல்தான். கால வரிசைப்படுத்தலோ, வெற்றி சூட்சுமங்களை விளக்கும் நோக்கமோ இதில் கிடையாது. வாசன் என்னும் ஆளுமையின் நினைவைப் போற்றுவதற்காகத் தயாரிக்கப்பட்டதுதான். ஏராளமான நபர்கள், ஆளுக்கொரு விதமாக அவரவர் மொழியில், அவரவர் அனுபவத்தை எழுதியிருப்பதுதான். எந்த ஒழுங்கு வட்டத்துக்குள்ளும் அடங்காது.
இருப்பினும் ஒரு சிறந்த வெற்றி நூல் / வாழ்க்கைச் சித்திர நூல் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்க இது ஒரு மகத்தான கையேடு. இப்போது அச்சில் இருக்கிறதா, கிடைக்கிறதா என்று தெரியவில்லை.
All rights reserved. © Pa Raghavan - 2022
May 10, 2025
உரைநடை இலக்கணம்
நாளை (மே 12) காலை பத்து மணிக்கு, சென்னை தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலக வளாக அரங்கில் நடைபெறும் கல்லூரி மாணவர்களுக்கான எழுத்துப் பயிற்சி முகாமில் கலந்துகொள்கிறேன்.
பதிநான்கு நாள்கள் நடைபெறும் இம்முகாமில் உரைநடைப் பிரிவில் முதல் வகுப்பினை நான் எடுக்கிறேன். சிறந்த உரைநடை எழுத்தின் அடிப்படை இலக்கணங்கள் என்பது எனக்குத் தரப்பட்டுள்ள கருப்பொருள்.
கல்லூரி மாணவர்களிடையே தமிழில் எழுதும் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக நூலக இயக்கம் முன்னெடுக்கும் இம்முயற்சி மிக முக்கியமானது. தமிழில் எழுதுவதும் வாசிப்பதும் ஈராயிரக் குழவிகளின் தலைமுறையில் கணிசமாகக் குறைந்து வருகிற சூழலில், மனுஷ்யபுத்திரன் நூலக ஆணைக் குழுத் தலைவராக இருப்பதனால் இதெல்லாம் அங்கே சாத்தியமாகிறது.
நாளை காலை பத்து மணி முதல் பதினொன்றரை மணி வரை என் வகுப்பு. பிறகு அடுத்தடுத்த பாடங்கள், அடுத்தடுத்த ஆசிரியர்கள். முழுமையான விவரங்களைக் கீழே தந்துள்ள அழைப்பிதழில் (பெரிதாக்கிப் பார்த்துப்) பெறலாம்.
வருக.
பிகு: வகுப்பில் கலந்துகொள்ளப் பதிவு செய்த கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல், எழுத்துக் கலையைப் பயில்வதில் ஆர்வமுள்ள பிறரும் வரலாம் என்று மனுஷ்யபுத்திரன் சொல்லியிருக்கிறார். சென்னையில் உள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்க.
All rights reserved. © Pa Raghavan - 2022