உஸ்தாத்
முத்த மழை பாடலுக்குள் வருகிற திருகுதாளங்களைக குடையத் தொடங்கி, எப்படியோ எந்த நேர்க் காரணமும் இன்றி குஜாரி தோடிக்கு வந்து நின்றேன். யூ ட்யூபுக்கென்ன. எதைக் கேட்டாலும் அள்ளிக் கொட்டுகிறது. அப்படிக் கொட்டியதில் தொட்டெடுத்த ஒரு குஜாரி தோடி, பக்கவாட்டில் சுபபந்துவராளி போலத் தோற்றமளித்ததில் சிறிது குழப்பமாகி வித்வானும் நண்பருமான ஈரோடு நாகராஜனிடம் விசாரித்தபோது இரண்டுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்களைப் பாடிக்காட்டி விளக்கினார்.
அதுவல்ல பெரிது. அவர் கொடுத்த ஓர் உதாரண லிங்க்கில் பிஸ்மில்லா கான் இருந்தார். எப்படி மைசூர்பா, பக்லவா போன்றவற்றை ஒரு துண்டோடு நிறுத்த முடியாதோ அப்படித்தான் உஸ்தாத்.
அன்றெல்லாம் அவர் என் வேலையைக் கெடுத்தார். முத்தமழை எக்கேடு கெடட்டும். எனக்கு உஸ்தாத் போதும். கேட்டுக்கொண்டே இருந்தேன். இந்தக் கலைஞன் எப்பேர்ப்பட்ட சாகசங்களைச் செய்திருக்கிறான் என்று திகைத்துத் திகைத்துத் தணிந்தபடி அவரைப் பற்றி எங்கெங்கோ தேடி, எதையெதையோ படித்துக்கொண்டிருந்தேன்.
வாரத்துக்கு ஏழு நாள்கள். எனவே எனக்கு ஏழு செட் டிரெஸ் போதும் என்று வாழ்நாள் முழுவதும் ஏழு செட் உடைகளுடனே வாழ்ந்தவர். இரண்டு ரொட்டி, ஒரு தம்ளர் பால்தான் அவரது அதிகபட்ச உணவு. ஆடம்பர கார், பெரும் பங்களா, ஆள் அம்பு ஜபர்தஸ்துகள் ஏதும் கிடையாது. சைக்கிள் ரிக்ஷா பயணம்தான் பெரும்பாலும்.
“பணத்தைச் செலவு செய்வது எப்படி என்றே தெரியாத மனிதர் நீங்கள். எதற்காக ஒரு கச்சேரிக்கு ஐந்து லட்ச ரூபாய் வாங்குகிறீர்கள்?” என்று நுஸ்ரத் ஃபதே அலிகான், பிஸ்மில்லா கானை ஒரு முறை கேட்டார்.
“என்ன செய்வது? என் வீட்டுக்குள் ஒரு குட்டி இந்தியாவே குடியிருக்கிறது. எல்லோரும் சாப்பிடவேண்டாமா?” என்று சிரித்துக்கொண்டே பதில் சொன்னார்.
உஸ்தாத் பிஸ்மில்லா கான் காலமானபோது இந்தியர்கள் அளவுக்கே ஆப்கனிஸ்தான், இராக், இரான், ஒன்றிரண்டு மேற்கு ஆப்பிரிக்க நாடுகள், பாகிஸ்தான் போன்ற பகுதிகளில் வசிக்கும் இசை ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கும் வருத்தத்துக்கும் உள்ளானார்கள். இந்திய இசை என்றாலே அங்கெல்லாம் கான் சாஹிபின் ஷெனாய்தான். அவர் இருந்த காலத்தில், அவரளவு சர்வதேசப் புகழ் பெற்ற இந்திய இசைக் கலைஞர்களை இரண்டு கை விரல்களுக்குள் அடக்கிவிடலாம்.
சோக ரசத்துக்காகவே உருவாக்கப்பட்ட வாத்தியம் என்று நினைக்கும் அளவுக்கு அழுதுவடியும் இயல்புள்ள ஷெனாயை சோப்புப் போட்டு குளிப்பாட்டி, சரிகை வேட்டி கட்டி, அதன் தலைக்கு ஒரு கிரீடமும் சூட்டி உச்சாணிக் கிளையில் கொண்டுபோய் உட்காரவைத்தவர் பிஸ்மில்லா கான். ஒரு முழம் பூ சைஸுக்குத்தான் அந்தக் கருவி இருக்கும். பூனையின் முனகல் போல் ஒலி கிளம்பும். ஆனால் கான் சாஹிப் உதட்டில் உட்கார்ந்துவிட்டால் சமயத்தில் புல்லாங்குழல் போலவும் நாகஸ்வரம் மாதிரியும் சாக்ஸபோனாகவும்கூட அவதாரம் எடுத்துவிடும்.
இந்திய சாஸ்திரிய சங்கீதத்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உருவானதற்கு பிஸ்மில்லா கான் செய்த பங்களிப்பு மிக அதிகம். இந்தியாவின் முதல் சுதந்தர தினத்தன்றும் முதல் குடியரசு தினத்தன்றும் அவர் ஷெனாய் வாசித்தார் என்பதோ, இன்றுவரை ஒவ்வொரு சுதந்தர தின அணிவகுப்பு நடைபெறும்போதும் தூர்தர்ஷன் அவரது இசையைத்தான் பின்னணியில் ஒலிக்கவிடுகிறது என்பதோ பெரிய விஷயமில்லை. இந்தியாவின் மத நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டின் சின்னங்களாக உலகம் பார்க்கும் ஒரு சில விஷயங்களுள் கான் சாஹிபும் ஒருவர் என்பது முக்கியமானது.
பிஸ்மில்லா கான் ஒரு ஷியா முஸ்லிம். கடைசிவரை ஒழுங்காக ஐந்து வேளை தொழுதுகொண்டிருந்தவர். அதே ஆத்மசுத்தியுடன் காசி விசுவநாதர் ஆலயத்துக்கும் போய் வழிபட்டு வருவார். இஷ்டதெய்வம் யார் என்று கேட்டால் தயங்காமல் சரஸ்வதி என்று சொல்லுவார். மார்ச் 21, 1916ம் ஆண்டு பீகார் மாநிலத்தில் பிறந்த பிஸ்மில்லா கான் தமது நான்கு வயதில் காசிக்குப் போய் தாய் மாமனிடம் ஷெனாய் கற்றுக்கொள்ள ஆரம்பித்ததிலிருந்து காசிவாசி ஆகிவிட்டார். பாரத் ரத்னா, பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ என்று இருக்கும் அத்தனை தேசிய விருதுகளையும் பெற்று, உலகம் முழுக்கக் கச்சேரிகள் செய்து, மூன்று பல்கலைக் கழகங்களின் டாக்டர் பட்டங்களையும் பெற்றபிறகு பிஸ்மில்லா கானிடம் ஒரு சமயம் ‘உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத கச்சேரி எது?’என்று கேட்டபோது அவர் சொன்ன பதில்: ‘கச்சேரியா? கங்கைக் கரையில் உட்கார்ந்து மணிக்கணக்கில் வாசித்துப் பழகிய நாள்கள்தாம் என்னால் மறக்கமுடியாதவை. எத்தனை மீனவச் சிறுவர்களும் ஏழைப் பெண்மணிகளும் கூலித் தொழிலாளிகளும் மெய் மறந்து கேட்டு ரசித்திருக்கிறார்கள் தெரியுமா? நான் ஒரு கலைஞன் என்று முதல் முதலில் எனக்கு உணர்த்தியவர்களே அவர்கள்தாம்.’
இதைத்தான் பிறகு கே. பாலச்சந்தர் சிந்து பைரவியில் ஜேகேபியின் கதாபாத்திரத்துக்கு முகமாக வைத்தார்.
பலபேருக்குத் தெரியாத விஷயம், பிஸ்மில்லா கான் ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்பது. சத்யஜித் ரே இயக்கிய ஜல் சாஹர் பாருங்கள். பின்னால் இயக்குநர் கௌதம் கோஷ், அவரது வாழ்க்கையையே அடிப்படையாக வைத்து ‘Sange Meel Se Mulaqat’ எடுத்தபோது ‘ம்ஹும். ராய் படம் மாதிரி இல்லை’ என்று கமெண்ட் அடித்தார்.
தனது இசையின் உருக்கத்தின் மூலம் கேட்பவர்கள் அத்தனை பேர் கண்களிலும் கண்ணீர் வரவழைத்த பிஸ்மில்லா கான் கண்ணிலும் ஒரு சமயம் நீர் வந்தது. அந்தப் பாவம் ஆந்திர அரசைச் சேரும். கான் சாஹிபின் வாழ்வில் நடந்த ஒரே கசப்பான சம்பவம் அது.
2002 ஜனவரியில் ஆந்திர பிரதேசத்தில் ‘Festival of Andra Pradesh’ என்று அரசு ஆதரவுடன் ஒரு திருவிழா கொண்டாடினார்கள். பல பெரிய கலைஞர்கள் பங்குகொண்ட இந்த விழாவில் பிஸ்மில்லா கான் வந்து ஷெனாய் வாசிக்க வேண்டும் என்று விரும்பியது, நிகழ்ச்சியை நடத்திய லலித் கலா வேதிகா என்கிற அமைப்பு. ஆனால் அவரது சம்பளமான ஐந்து லட்சம் தரமுடியாது என்றும் மூன்று லட்சம்தான் தருவோம் என்றும் சொன்னார்கள்.
ஆந்திர பிரதேச அரசே ஆர்வமுடன் அழைக்கிறதே என்று கான் சாஹிப் ஒப்புக்கொண்டு விழாவுக்கு வந்தார். வந்து இறங்கியவரை கெஸ்ட் ஹவுஸ் வாசலில் இரண்டு மணிநேரம் காக்கவைத்துவிட்டு, ரூம் கொடுக்க முடியாது என்று அழிச்சாட்டியம் செய்து திருப்பி அனுப்பியதோடு மட்டுமல்லாமல், நிகழ்ச்சியும் கேன்சல் என்று சொல்லிவிட்டார்கள்.
‘எண்பத்தாறு வயதில் எனக்கு இது தேவையில்லைதான்’ என்று கண்ணீர் மல்கச் சொன்னார் பிஸ்மில்லா கான்.
உலகின் எந்த மூலையில் யார் கூப்பிட்டாலும் மறுக்காமல் போய் வாசித்துவந்த பிஸ்மில்லா கான், அந்தச் சம்பவத்துக்குப் பிறகு ஆந்திராவுக்கு மட்டும் போகவே இல்லை.
All rights reserved. © Pa Raghavan - 2022