Pa Raghavan's Blog, page 33

January 10, 2013

மறுபதிப்பு குறித்த ஒரு மறுபதிப்பு

எனது மாயவலை மறுபதிப்பு தயாராகிவிட்டது. புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வந்துவிடும். [மதிநிலையம் வெளியீடு].


750 முதல் 900 வரை நல்ல மார்க்கெட்டிலும் ஆயிரம் முதல் பத்தாயிரம் வரை கள்ள மார்க்கெட்டிலும் [பின்னது பிரதிகள் மட்டும்] விலை போய்க்கொண்டிருந்த இக்காவியமானது மக்கள் பதிப்பு – மலிவுப் பதிப்பாக வெறும் ரூ. 500க்கு கிடைக்கும் என்பது இனிக்கும் சேதி.


இவ்வினிப்புக்கு இனிப்பு சேர்க்க பதிப்பாளரானவர், மாயவலை வாங்குவோருக்கு குற்றியலுலகம் இலவசம் என்று வேறு அறிவித்துள்ளார். ஏ வாசக நல்லவனே, விரைந்து வா!


[இதே தகவல் இதே சொற்களில் பத்தி பிரிக்கப்படாமல் சிலேட்டில் முன்னதாக வெளியானது. எனவே இது ஒரு மறு பிரசுரம்.]


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)

Share/Bookmark

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 10, 2013 07:01

December 31, 2012

புத்தாண்டு வாழ்த்து

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்

நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை

கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்

மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம். (திருவாய்மொழி 5.2.1)


நண்பர்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். 2013ல் மின்வெட்டு குறைந்து யாவரும் நீண்ட நெடுநேரம் சீரியல் பார்த்துக் களிக்க எல்லாம் வல்ல எம்பெருமானைப் பிரார்த்திக்கிறேன்.


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)

Share/Bookmark

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 31, 2012 10:12

இந்த வருடம் என்ன செய்தேன்?

எழுதினேன் என்று ஒரு வரியில் முடித்துவிட முடியும். ஆனால் இந்த வருடம் என்னைச் செலுத்திய சில மனிதர்களை நினைவுகூர வேறு பொருத்தமான சந்தர்ப்பம் அமையாது.


கடந்த ஜூலை மாதத் தொடக்கத்தில் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எண் புதிதாக இருந்ததால் யாரென்று தெரியாமல்தான் எடுத்தேன். ‘நான் முரளிராமன் பேசறேன். எப்படி இருக்கிங்க ராகவன்?’ என்றது குரல். திகைத்துவிட்டேன். மிகப் பல வருடங்களுக்கு முன்னர் ஜெயா டிவியில் நான் ஒரு சீரியலுக்கு எழுதிக்கொண்டிருந்த காலத்தில் அறிமுகமானவர் அவர். ஜெயா டிவியின் பிரதான மூளை அவர்தான் அப்போது. ஓரிரு முறை சந்தித்ததுடன் சரி. பெரிய தொடர்புகள் இல்லை. ஆனால் என்னை அவரும் அவரை நானும் தொடர்ந்து கவனித்து வந்திருக்கிறோம்.


‘உங்ககிட்ட கொஞ்சம் பேசணுமே? ராடன் ஆபீசுக்கு வரிங்களா?’ என்றார். மீண்டும் திகைப்புடன் கூடிய சிறு தயக்கம். ராடனில் முரளி ராமனா!


போன பிறகுதான் தெரிந்தது. அவர் அப்போதுதான் ராடனில் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றிருந்தார். ஒரு சிறு முன்னுரை கூட இல்லை. நேரடியாக விஷயத்துக்கு வந்தார். ‘செல்லமேக்கு நீங்க எழுதணும்.’


செல்லமேவுக்கு நான் ஏற்கெனவே ஒரு முறை எழுதச் சென்றிருக்கிறேன். கொஞ்ச நாள்தான். சில அரசியல் காரணங்களால் தொடர இயலாமல் போய்விட்டது. முரளிராமனிடம் அதைப்பற்றிப் பேசுவதா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்தபோதே ‘எழுதுங்க’ என்று அழுத்தமாகச் சொன்னார் சுபா வெங்கட். ராடன் க்ரியேடிவ் டீமின் தலைவர். சொன்ன கையோடு திருமதி ராதிகாவிடமும் அழைத்துச் சென்று உட்கார வைத்தார். சில நிமிடங்கள்தாம். என் எழுத்தின்மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை எனக்கு முக்கியமாகப் பட்டது. எழுதவேண்டும் என்று உறுதியாகத் தோன்றியது.


ஆனால் ஏற்கெனவே நான் இரண்டு சீரியல்களுக்கு எழுதிக்கொண்டிருந்தேன். முத்தாரம், முந்தானை முடிச்சு. ‘அதெல்லாம் சமாளிப்பிங்க. எனக்குத் தெரியும்’ என்றார் சுபா.


எனக்கும் தெரியும். முடியாதது என்று ஒன்று இல்லை. எல்லாமே திட்டமிடலில் இருக்கிறது. ஆனாலும் ஒரு தயக்கம் இருந்தது. இந்தக் கட்டத்தில் சுபா எனக்களித்த நம்பிக்கையும் உற்சாகமும் சிறிதல்ல. ‘மேடத்துக்கு உங்க ரைட்டிங் ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்கதான் எழுதணும்னு விரும்பறாங்க.. கதை இப்ப போயிட்டிருக்கற ஏரியாவுல உங்க காண்ட்ரிப்யூஷன் ரொம்ப முக்கியமா இருக்கும்’ என்றார்.


ஒரு சீரியலின் வெற்றிக்கு மிக முக்கிய மூளைகள் நான்கு. இயக்குநர். திரைக்கதை ஆசிரியர். வசனகர்த்தா. ஒளிப்பதிவாளர். நான் உள்ளே நுழைந்த சமயம் இந்த நான்கு பேருமே புதிதாக உள்ளே வரும் நேரமாக இருந்தது. இயக்குநர் ஓ.என். ரத்னம், எஸ்கேவியின் மாணவர். திரைக்கதைக்கு வந்திருந்த குரு சம்பத்குமாரை ஏற்கெனவே நான் நாதஸ்வரம் டிஸ்கஷனில் சந்தித்திருக்கிறேன். மிக எளிமையான மனிதர். அபாரமான திறமைசாலி. ஒளிப்பதிவாளர் காசி என் பழைய நண்பர். எப்போதும் என் விருப்பத்துக்குரிய டெக்னீஷியன்.


தயக்கத்தைத் தள்ளி வைத்துவிட்டு உற்சாகமாக வேலையை ஆரம்பித்தேன். ஒரு நாளை மூன்று எட்டு மணிநேரங்களாகப் பிரித்துக்கொண்டு, ஒவ்வொரு செஷனுக்கும் இரண்டு மணிநேர ஓய்வு என்று வகுத்துக்கொண்டு எழுதினேன். தொடக்கத்தில் ஒரு சில தினங்கள் முழி பிதுங்கியது உண்மை. ஆனால் பழகிவிட்டது.


ஒரு மாதிரி இந்த வண்டி ஓடிவிடும் என்று நம்பிக்கை பிறந்த மறு நாளே சினி டைம்ஸில் இருந்து தயாரிப்பாளர் சித்திக் போன் செய்தார். ‘கொஞ்சம் நேர்ல வாங்களேன். ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.’


மனெ தேவுரு.


இது நான் சத்தியமாக எதிர்பாராத விஷயம். தூக்கி வாரிப்போட்டுவிட்டது. ‘எப்படி சார் முடியும்? நாலெல்லாம் கட்டுப்படியே ஆகாது சார்’ என்றேன்.


‘எல்லாம் முடியும். பண்ணுங்க. நீங்கதான் பண்ணணும். நீங்கதான் பண்றிங்க’ என்றார்.


எனது நடைமுறைச் சிக்கல்களைச் சொன்னேன். ஒரு சீரியலுக்கு ஒரு நாளைக்கு எழுத ஆகிற நேரம். மூன்று சீரியல்களுக்கு அநேகமாக தினமும் 17 மணிநேரம் ஆகிறது. இதில் இன்னொன்றை எப்படிச் சொருகுவது? அதுவும் இது கன்னட சீரியல். நான் தமிழில் எழுதி அனுப்பி, அதை வேறொருவர் மொழி மாற்றி தினசரி ஷூட்டிங் நடந்தாக வேண்டும். நடக்கிற கதையா?


‘பண்ணிடுவிங்க’ என்று சிரித்தார்.


நான் மீண்டும் எனது நேர சார்ட்டைத் திருத்தி அமைக்க நேர்ந்தது. தினசரி காலை 9 மணிக்கு எழுத உட்கார ஆரம்பித்தேன். முன்னர் பத்து மணிக்குத் தொடங்குவேன்.  பன்னிரண்டு வரை எழுதிக்கொண்டிருந்ததை ஒன்றரை என்று திருத்தினேன். அதன்பின் சாப்பிட்டுப் படுத்தால் முன்பெல்லாம் ஐந்து வரை தூங்குவேன். அது நான்கு என்றாயிற்று. தூங்கி எழுந்து இரண்டு மணிநேரம் சும்மா இருப்பதை மாற்றி, ஒரு மணிநேரம் மட்டும் சும்மா இருப்பது என்று வைத்துக்கொண்டேன். மாலை ஐந்தரை, ஆறு மணிக்கு மீண்டும் எழுதத் தொடங்கினால் அதிகாலை இரண்டரை அல்லது மூன்று மணி வரை வேலை ஓடும். இடையிடையே ட்விட்டர். பிரவுசிங். மெசஞ்சரில் அரட்டை. இளையராஜா பாட்டு. நொறுக்குத்தீனி.


முதுகு வலி வராமலிருக்கும்படியாக ஒரு சௌகரியமான நாற்காலி வாங்கிக்கொண்டேன். என் உயரம் அல்லது குள்ளத்துக்குப் பொருத்தமாக இன்னொரு மேசை செய்துகொண்டேன். ரிலாக்ஸ் செய்துகொள்வதற்காக ஒரு கீ போர்டு. கரண்டு போனாலும் எழுதியதை நேரத்துக்கு அனுப்பி வைக்க வசதியாக ஒரு டேட்டா கார்ட்.


ஒன்றும் பிரமாதமல்ல. சமாளித்துவிடலாம் என்றுதான் இப்போதும் தோன்றியது. உடனே மீண்டும் ராடனிலிருந்து சுபா அழைத்தார்.


சிவசங்கரிக்கு ஸ்க்ரீன் ப்ளே பண்ணணுமே ராகவன்?’


இடைப்பட்ட காலத்தில், திட்டமிடுகிற விஷயத்தில் முத்தாரத்தில் எனக்குப் பேருதவியாக இருந்த எஸ்கேவியின் இணை இயக்குநர் நீராவி பாண்டியன், மனெ தேவுருவுக்கு இயக்குநராகி பெங்களூர் சென்றிருந்தார். அதனால் முத்தாரம் வேலை கொஞ்சம் கழுத்தை நெரிக்க ஆரம்பித்திருந்தது. இருப்பினும் ஒரு சவாலாக ஏற்று, சிவசங்கரிக்கும் எழுதத் தொடங்கினேன். [இதன் இயக்குநர் தங்கபாண்டியனும் எஸ்கேவியின் மாணவர்தான். ஒரு குருவுக்கும் அவரது நான்கு சீடர்களுக்கும் ஒரே சமயத்தில் எழுதும் ஒரே எழுத்தாளன் உலகிலேயே நாந்தான் என்று நினைக்கிறேன்]


நேர ஒழுங்கு, கட்டுப்பாடு எல்லாம் இப்போது எங்கே போயினவென்று தெரியவில்லை. எந்த நேரமும் எழுதுகிறேன். எல்லா நேரமும் சிந்திக்கிறேன். ஜனவரியில் செல்லமே நிறைவடைந்து  ராடனின் அடுத்த ப்ராஜக்ட் ஆரம்பிக்கவிருக்கிறது. அதற்கும் எழுதியாக வேண்டும். இது முடியும் – அது தொடங்கும் ஒரு மாதகால அவகாசத்தில் இரண்டுக்குமே சேர்த்து எழுதியாக வேண்டியிருக்கும். ஆக, ஆறு.


பார்க்கிறவர்கள் அனைவரும் உடம்பை கவனிங்க சார் என்கிறார்கள். தினமும் கொஞ்சம் வாக்கிங் போகிறேன். அதைத்தாண்டி வேறெதுவும் செய்ய முடிவதில்லை. முன்னைப் போல் இப்போது நொறுக்குத்தீனிகள் நிறைய தின்பதில்லை. கொஞ்சம் கட்டுப்படுத்தியிருக்கிறேன். படிப்பு சாத்தியமில்லாமல் இருக்கிறது. டாய்லெட்டில் இருக்கும் நேரம் மட்டும்தான் படிக்க முடிகிறது. சமயத்தில் அங்கும் மொபைலை எடுத்துச் சென்று ஆங்ரி பேர்ட் விளையாட ஆரம்பித்துவிடுகிறேன்.


வெளியிடங்களுக்குப் போவது அறவே நின்றுவிட்டது. இந்த வருடம் என் அறையைத் தாண்டி ஹாலுக்குக் கூட அதிகம் போகவில்லை. மூன்று படங்கள் பார்த்தேன். ஒன்று மாற்றான். படு குப்பை. இன்னொன்று துப்பாக்கி. பிடித்திருந்தது. நீதானே என் பொன் வசந்தம் பார்க்கவேண்டும் என்று தோன்றவில்லை. மனைவி விரும்பியதால் உடன் செல்ல நேர்ந்தது. இசையை மட்டும் ரசித்துவிட்டு வந்தேன்.


நீண்ட நாள் ஆசையான மேக்புக் ப்ரோ வாங்கவேண்டும் என்ற எண்ணம் இவ்வாண்டு அடிக்கடி ஒரு பேராவலாக எழுந்து இம்சித்துக்கொண்டிருந்தது. ஆனால், தயக்கம் பலமாக இருக்கிறது. குறைந்த அளவு நாள்களே என்றாலும் மத மாற்றத்துக்கான கால அவகாசத்தைத் தரக்கூடிய சூழல் எனக்கில்லை. இன்றுவரை எண்ணம், எண்ணமாகவேதான் இருக்கிறது. இன்னும் அதிவேக லேப்டாப் ஒன்று கிடைக்குமா என்றுதான் அவ்வப்போது திங்க்பேட் சைட்டில் தேடிக்கொண்டிருக்கிறேன். யாராவது ஒரு நல்ல கையடக்க சூப்பர் கம்ப்யூட்டரை சிபாரிசு செய்யவும்.


இந்த ஆண்டு படித்து முடித்த புத்தகங்கள் என்று பார்த்தால் மிகவும் சொற்பம். அரவிந்தன் நீலகண்டனின் உடையும் இந்தியா எனக்குப் பிடித்தது. கம்யூனிஸ்டுகளைக் காய்ச்சி எடுத்த அவருடைய வேறொரு புத்தகம் அதைக் காட்டிலும் அதிகம் பிடித்தது. கீதா ப்ரஸ்ஸின் பகவத்கீதை மொழிபெயர்ப்பில் அடிக்கடி என்னை இழந்தேன். அவர்களது அனைத்து சிறு வெளியீடுகளையும் மொத்தமாக வாங்கிப் படித்தேன். ஒரு சிலவற்றை நண்பர்களுக்குப் பரிசாகவும் அளித்தேன். நம்பூதிரிப்பாடின் இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு, விடியல் வெளியீடாக வந்த டிராட்ஸ்கியின் வாழ்க்கை வரலாறு, அம்பேத்கர் நூல் தொகுதியில் காஷ்மீர் குறித்த பாகம், ஷ்யாமா சரண் லாஹிரி குறித்த ஒரு புத்தகம், ரத்தப் படலம் என்ற காமிக்ஸ் புத்தகம் ஆகியவை படித்தவற்றுள் உடனே நினைவுக்கு வருபவை. பத்திரிகைகளில் பிரமாதமாக ஏதும் எழுதவில்லை. கோகுலத்துக்கு ஒரு சிறுவர் தொடர் எழுத ஆரம்பித்தேன். அதோடு சரி. இணையத்திலும் வெளியிலுமாக அவ்வப்போது எழுதிய நகைச்சுவைக் கட்டுரைகளைத் தொகுத்து ஒரு புத்தகம் வருகிறது. அன்சைஸ். மனைவிக்கு இதில் மட்டும் பெரிய வருத்தம். கிருஷ்ணருக்கு ஒரு நவீன பயக்ரஃபி எழுதப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். அதற்கான ஆயத்தங்களும் செய்ய ஆரம்பித்தேன். நேரமில்லாமல் அந்த வேலை பாதியில் நிற்கிறது. கட்டுரைத் தொகுப்பையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது, இந்த வருட இலக்கிய சேவை பத்தவே பத்தாது என்கிறார்.


எழுதியது போக, வீட்டுக்கு என்ன செய்தேன்? தெரியவில்லை. வீட்டில் இருந்தேன். வீட்டில் மட்டும்தான் இருந்தேன். அது போதுமா என்று கேட்டால் அடிக்க வந்துவிடுவார்கள்.


நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள். புத்தகக் கண்காட்சியில் நேரில் சந்திப்போம்.


O


சென்ற வருடம் என்ன செய்தேன்?



Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)

Share/Bookmark

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 31, 2012 06:24

December 19, 2012

அஞ்சல் வழித் துன்பம்

எனது குறுவரிக் குப்பத்தில் கொட்டுகிற ரத்தினக் குப்பைகளை உடனுக்குடன் வாசித்து மகிழ்வதில் உள்ள நடைமுறைப் பிரச்னைகள் குறித்து வாசகர்கள் அவ்வப்போது வருத்தம் தெரிவித்து வந்தார்கள்.


தளத்துக்கு நேரில் வந்து வாசிப்பது சிரமம், இங்கே எழுதுவது நேரடியாக ட்விட்டருக்கு வந்து விழும்படிச் செய்யமுடியுமா என்று கேட்டார்கள். இதென்ன போங்காட்டம்? ட்விட்டருக்கு மட்டும் போகலாம், இங்கே வரமுடியாதா?


அதான் ஆர்.எஸ்.எஸ். ஃபீட் இருக்கிறதே என்றால், அது முடியாதாம். ஃபீட் ரீடர் அவுட் ஆஃப் ஃபேஷன் ஆகி வருகிறது போலிருக்கிறது.


இப்பிரச்னைக்கு நல்லதொரு தீர்வாக சிலேட்டுத் தளத்தில் மின்னஞ்சல் மூலம் குறுவரிகளை உடனுக்குடன் பெறுவதற்கு ஒரு வசதி செய்திருக்கிறேன். முதலில் ஃபீட் பர்னர் சப்ஸ்கிருப்ஷனுக்கு வழி செய்தேன். அதனைக் காட்டிலும் ஜெட்பேக் சிறந்தது என்று சிலர் சொன்னார்கள்.


நான் என்னத்தைக் கண்டேன்? போடு ஒரு ஜெட்பேக்.


இனி சிலேட்டில் எழுதுபவற்றை நீங்கள் நேரடியாக மின்னஞ்சலில் பெறலாம். அதுவும் உடனுக்குடன்.


போதுமல்லவா?


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)

Share/Bookmark

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 19, 2012 09:25

December 15, 2012

கொத்தனாரின் நோட்டுசு

என் நண்பர் இலவசக் கொத்தனாரின் இலக்கணப் புத்தகம் வெளியாவதில் எனக்குப் பிரத்தியேக மகிழ்ச்சி. இப்படி ஒரு புத்தகம் வரவேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசைப்பட்டவன் நான். அந்த ஆசாமியைப் பிடித்து தமிழ் பேப்பரில் எழுத வைத்தபோது முதலில் பலபேர் சந்தேகப்பட்டார்கள். இலக்கணமெல்லாம் யார் படிப்பார்கள் என்றார்கள். நல்லவேளை, ஏன் படிக்கவேண்டும் என்று யாரும் கேட்கவில்லை.


Tamil Elankkana Kaiyedu 1 copyகொத்தனாரின் புத்தகத்துக்குச் சில சிறப்புகள் உண்டு. முதலாவது யாரையும் இது பயமுறுத்தாது. இலக்கணத்தை இத்தனை எளிமையாகக்கூட சொல்லித்தர முடியுமா என்று வியப்பேற்படுத்தும். படிக்க ஆரம்பித்துவிட்டால் இன்னும் கொஞ்சம் வராதா என்று ஏங்க வைக்கும். ஒரு காலத்தில் நன்னன் செய்த காரியம்தான். கொத்தனார் அதை இன்னும் எளிமையாக்கி, தோளில் கைபோட்டுப் பேசுகிற தோழமை வாத்தியார் அவதாரம் எடுத்திருக்கிறார்.


இணையத்திலும் சரி, வெளியிலும் சரி. தமிழன் சலிக்காமல் கைமா பண்ணுகிற வஸ்து, தமிழிலக்கணம். எத்தனை விதமாக போதித்தாலும் சரக்கை உள்ளே ஏற்றிக்கொள்ளாமல் கவனமாகத் தப்பு செய்வதில் தமிழனுக்கு நிகர் யாருமில்லை. ட்விட்டரில் நண்பர்கள் செய்யும் பல தமிழ்ப் பிழைகளை அவ்வப்போது கொத்தனார் திருத்திக்கொண்டே இருப்பார். ஆர்வத்தில் சில சமயம் நானும் இந்தத் திருப்பணியில் [என்றால், தண்ட காரியம் என்று பொருள்]  ஈடுபட்டுவிடுவதுண்டு. ஆனால் பெரும்பாலும் அலுத்து சலித்து, தோற்றுத் திரும்புவதே வழக்கம். என்ன சொன்னாலும் கேட்காத விடாக்கண்டர்களால் நிறைந்தது வியனுலகு.


பிரச்னை இல்லை. கொத்தனாரின் இந்தக் கட்டுரைகள் இப்போது புத்தகமாக வருவதன் லாபம், இது பல பள்ளி மாணவர்களுக்குப் போய்ச் சேரும். அடுத்தத் தலைமுறையாவது அவசியம் உருப்படும்.


புத்தகக் கண்காட்சியில் லைன் கட்டி மாணவர்களை வழிநடத்திவரும் ஆசிரியப் பெருமக்களே, இந்தப் புத்தகத்தை உங்கள் மாணவர்களுக்கு வாங்கிப் படிக்க சிபாரிசு செய்யுங்கள். அதற்கு முன்னால் நீங்கள் ஒருதரம் வாங்கிப் படியுங்கள். ஒரு கணக்கப் பிள்ளை [லைன் மாறிட்டியாய்யா?]  எத்தனை எளிதாகத் தமிழிலக்கணம் சொல்லித்தருகிறார் என்று பாருங்கள்.


கோட்டு சூட் போட்ட கோமகனுக்கும் குமரித் தமிழுக்கும் என்ன சம்மந்தம் என்று உதாசீனம் செய்யாதீர்கள். கோட்டு கோபியை ஏற்ற தமிழ்ச் சமூகம், இந்த கோட்டு கொத்தனாரையும் ஆதரித்து ஆவன செய்வதே தமிழிலக்கணம் தழைக்க வழி.


பிகு:- தவறின்றித் தமிழ் எழுத/ பேசக் கற்றுத்தருகிற இந்தப் புத்தகத்தின் பின்னட்டை வாசகங்களில் ஐந்து தவறுகள் இருக்கின்றன. என்னை நினைத்துக்கொண்டு மருதன் தலையில் ஓங்கி ஒரு குட்டு குட்டிக்கொள்ள வேண்டுகிறேன். அடுத்தப் பதிப்பில் அவற்றைச் சரி செய்யவும்.


கிழக்கு வெளியிட்டிருக்கும் இந்நூலை ஆன்லைனில் வாங்க இங்கே போகவும்.


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)

Share/Bookmark

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 15, 2012 07:56

December 11, 2012

இணையத்தில் மதி நிலையம்

என்னுடைய மற்றும் பலருடைய புத்தகங்களை வெளியிட்டு வரும் மதி நிலையம் ஒருவழியாகத் தனக்கொரு இணையத்தளத்தைத் தொடங்கியிருக்கிறது.


தளத்தை இங்கே சென்று பார்க்கலாம்.


ஆனால் இத்தளத்தில் இப்போது காசு கொடுத்து நேரடியாகப் புத்தகங்களை வாங்கும் வசதி இல்லை. ஏனென்று தெரியவில்லை. வேண்டிய புத்தகத்தைக் குறிப்பிட்டு மின்னஞ்சல் செய்தால் கூரியர் அல்லது புறா மூலம் புத்தகத்தை அனுப்பிவைத்துவிடுவோம் என்று வாக்களித்திருக்கிறார்கள். வாசகர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.


இங்குள்ள எனது பெரும்பாலான புத்தகங்கள் மதி நிலையத்தின் மூலம் மறு அச்சு பெற்றுக்கொண்டிருக்கின்றன என்பது வாசகர்கள் அறிந்ததே. சென்ற வருடம் எனது குற்றியலுலகம் என்னும் உலக இலக்கியத்தைப் பதிப்பித்தவர்கள், இவ்வருடம் அன்சைஸ் என்னும் அமர காவியத்தையும் பதிப்பிக்கிறார்கள்.


இவை தவிர, தாலிபன், உணவின் வரலாறு, யானி, பாகிஸ்தான் அரசியல் வரலாறு, கொலம்பிய போதை மாஃபியா, மாயவலை போன்ற மறு அச்சு நூல்களும் எதிர்வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் அலைந்து திரியும் வாசகர்களின் கேரி பேக்குகளை அலங்கரிக்கும்.


மதி நிலையத்தின் கேட்லாக் ஒன்று கேட்டிருக்கிறேன். பாதி அச்சாகிவிட்டது. மீதி உள்ளவை மிக அதிக பக்கங்கள்; அச்சாக நாளெடுக்கும் என்றார்கள். உளவுத்துறை தகவலின்படி அவை அனைத்தும் சொக்கனின் புத்தகங்கள் குறித்த தகவல்கள் உள்ள பக்கங்கள்.


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)

Share/Bookmark

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 11, 2012 10:28

December 10, 2012

நற்செய்தி அறிவிப்பு

இணையப் பத்திரிகைகள், ஃபேஸ்புக், கூகுள் பிளஸ் போன்ற பொது வெளிகள் எதிலும் நான் பலகாலமாக எழுதாமலே இருந்து வருகிறேன். விட்டகுறையாக ட்விட்டரில் மட்டும் சமீப மாதங்கள் வரை எழுதி வந்தேன்.


இப்போது அதுவும் இல்லை. கடந்து சென்ற அக்டோபர் 24, விஜயதசமி தினம் தொடங்கி எனக்கான பிரத்தியேகக் குறுவரிப் பலகையை இத்தளத்துக்குள்ளேயே உருவாக்கிக்கொண்டு அங்குதான் எழுதி வருகிறேன்.


இனி எழுதலாம் என நினைப்பவற்றையும் இங்கும் அங்குமாகத்தான் எழுதுவேனே ஒழிய, சமூக வலைத்தளங்கள், டம்ளர், டேக்சா போன்ற புதுக்கவர்ச்சிகளைப் பயன்படுத்தும் எண்ணம் இல்லை. அவ்வண்ணமே அடுத்தவர் வலைப்பதிவுகளில் கமெண்ட் போடும் உத்தேசமும் இல்லை.


இதெல்லாம் எதற்காகவென்பீர்களேயானால், அப்போதைக்கிப்போதே சொல்லிவைத்தேன் அரங்கமாநகருளானே என்னும் ஆழ்வார் வாக்குக்கேற்ப, என் பேரில் வெளியிடங்களில் நீங்கள் எதைக்கண்டாலும் அதன் உரிமையாளன் நானல்ல என்பதை நிறுவுவதற்காகவே.


சில நிமிடங்களுக்கு முன்னர் எனது ட்விட்டர் பக்கத்துக்குள் போக முயற்சி செய்தபோது கடவுச்சொல் தவறு என்று வந்தது. ஏழெட்டு முறை முயன்றும் அதே நற்செய்தி. ஒருவழியாக நண்பர் பெனாத்தல் சுரேஷின் உதவியால் உள்ளே நுழைந்து கடவுக் கதவை மாற்றிவைத்துவிட்டு இதனை எழுதுகிறேன்.


எனக்கு ஊர்ப்பட்ட வேலை இருக்கிறது. முன்னைப்போல் இணையத்தில் அதிக நேரம் புழங்குவதுமில்லை. வருகிற சில நிமிடங்களில் யார் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று முழுதாகப் பார்த்துப் போகக்கூட முடிவதில்லை. இந்த லட்சணத்தில் சந்து வெளி நாகரிகத்தை அகழ்வாராய்ந்து, பேர் கெடுக்கும் புண்ணியவான்களின் முகத்திரை கிழிக்கவெல்லாம் எனக்கு திராணியில்லை.


ஆகவே இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், நிகழும் நந்தன வருடம் கார்த்திகை 25ம் தேதி முதலாகவும், கிபி 2012, டிசம்பர் 10ம் தேதி முதலாகவும் என்னுடைய இந்த writerpara.com மற்றும் இதன் ஒட்டுத்தளமான slate.writerpara.com என்கிற இரு இடங்கள் தவிர, இணையவெளியில் நான் வேறெங்கும் வெறும் ஸ்ரீராமஜெயம் கூட எழுதுவதில்லை என உறுதிபூண்டிருக்கிறேன்.


சுபமஸ்து.


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)

Share/Bookmark

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 10, 2012 10:04

December 6, 2012

தலைப்பிட இஷ்டமில்லை

சாகிற காட்சியில் நடிப்பதைப் பொதுவாகக் கலைஞர்கள் விரும்பமாட்டார்கள். யாரையும் சாகடிக்காமல் ஒரு தொலைக்காட்சித் தொடரை இறுதிவரை நகர்த்திச் செல்ல முடியாது. வாழ்வைக் காட்டிலும் கதைகளில் மரணமானது மிகக் கோரமான வடிவம் கொள்ளும். ஒரு மரணக் காட்சியை எழுதுவது போன்ற இம்சை எழுத்தாளனுக்கு இங்கு வேறில்லை.


எழுதுபவனை விடுங்கள். எடுப்பவர்களுக்கு அது இன்னும் பெரிய அவஸ்தை. ஒரு நடிகர் – அல்ல – ஒரு கதாபாத்திரம் இறக்கப் போகிறது என்பது இயக்குநருக்கும் எழுத்தாளருக்கும்தான் முதலில் தெரியும். கதைப்போக்கை கவனிக்கும் உதவியாளர்களுக்கு அடுத்தபடியாகத் தெரியவரும். சக நடிகர்களுக்கு மூன்றாவதாக. சம்மந்தப்பட்ட கலைஞருக்கு இறுதியாக.


இறுதி வரையிலுமேகூட அவருக்குத் தெரியாமல் அவரைச் சாகடித்துவிடக்கூடிய கலை மேதைமை கொண்டோர் உண்டு. ‘இப்ப இவன் உங்கள வெஷம் வெச்சி கொல்லப் பாக்கறான் சார்! நீங்க துடிச்சிக்கிட்டே மயங்கி விழறிங்க.. வாய்ல நுரை தள்ளுது. நீங்க செத்துட்டதா சந்தோஷப்பட்டுக்கிட்டு வில்லன் அவுட் போயிடறான். ஒரு ராம்ப் அடிச்சா, காணாம போன உங்க பொண்ணு உங்கள தேடி வரா. அவ உங்கள காப்பாத்தறா…’


விவரித்துவிட்டு, சாகடிப்பது வரையிலான காட்சியை எடுத்து விடுவார்கள். காணாமல் போன பெண்ணின் கால்ஷீட்டை கவனிக்கும் ஷெட்யூல் டைரக்டர் அடுத்த வினாடி காணாமல் போய்விடுவார்.


நடந்திருக்கிறது.


இன்னும்கூட சில உத்திகள் உண்டு. இறக்கும் காட்சியை எடுத்துவிட்டு அதைக் கனவு என்று சொல்லிவிடலாம். அதற்கு முன் வரக்கூடிய பல காட்சிகளை மிச்சம் வைத்து இறப்புக் காட்சி எடுத்ததன் பின் ஓரிரண்டு தினங்கள் வரவழைத்து அவற்றை ஷூட் செய்துவிடுவது. சம்மந்தப்பட்ட கலைஞர் தான் கதையில் இறந்ததையே மறந்துவிடுவார். அடுத்த ஷெட்யூலுக்கு அழைக்காதபோதுதான் அவரால் கதையின் கோவையை மீட்டு யோசிக்க முடியும். அல்லது எபிசோட் பார்த்துவிட்டு யாராவது விசாரிப்பார்கள். அப்போதைய தருணங்களில் இயக்குநர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பது வழக்கம்.


இந்தக் கஷ்டமெல்லாம் எதற்காக? சொல்லிவிட்டே சாகடிக்கலாமே?


என்றால் முடியாது. இனி இக்கதையில் நீ இல்லை என்றால் எந்த நடிகரும் அடுத்த நாள் ஷூட்டிங்குக்கு வரமாட்டார்கள். கால்ஷீட் தராமல் கொன்றே விடுவார்கள். இன்று நேற்றல்ல. தொன்று தொட்டு இதுவே வழக்கம்.


நிறைய பார்த்திருக்கிறேன். சமீபத்தில்தான் சற்றும் நம்பமுடியாத வேறுவிதமானதொரு அனுபவம் வாய்த்தது.


ஒரு தொடர். ஒரு மரணம். ஒரு கலைஞர். கொன்றாகிவிட்டது. அவருக்கும் தெரியும். இனி அவ்வளவுதான். இக்கதையில் இனி நானில்லை.


ஆனால் அந்தக் காட்சியை எடுத்து பல நாள் கழித்து இன்னொரு காட்சி, முந்தைய காட்சியின் தொடர்ச்சியே போன்ற காட்சியை எடுக்க வேண்டி வந்தது. கொன்று புதைத்த உடலை வெளியே எடுத்து போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பியாக வேண்டும். இதற்காக இறந்ததாகக் காட்டிய கலைஞரை திரும்ப அழைத்து வந்து குழியில் படுக்கச் சொல்ல முடியாது. நம்மைக் கொன்றுவிடுவார்கள்.


எனவே பிணத்தைத் தோண்டி எடுத்து வண்டியில் ஏற்றுகிற காட்சியில் பிணத்தின் முகத்துக்கு க்ளோஸே போகாதபடியாக – அதே சமயம் அது ஓர் உறுத்தலாகவும் தெரியாதபடியாகக் காட்சியை எழுதி அனுப்பிவிட்டேன்.


ஷூட்டிங் முடித்து இரவு இயக்குநர் பேசினார். ‘நல்லா இருந்திச்சி சார் சீன். பட் கொஞ்சம் மாத்திக்கிட்டேன்.’


‘என்ன மாத்தினிங்க?’


‘பாடிக்கு க்ளோஸ் வெச்சிக்கிட்டேன். ஒரு ஃபீல் கிடைக்கும்ல?’


அதிர்ந்துவிட்டேன். டூப் வைத்து எடுத்தாலெல்லாம் ஃபீல் வராதே. இயக்குநருக்கா தெரியாது? என் சந்தேகத்தைத் தெரியப்படுத்திய போது அவர் சொன்ன பதில் என் அன்றைய உறக்கத்தை அழித்தது.


‘டெட் பாடின்னாலும் பரவால்ல சார். வந்து நானே பண்ணிக்குடுத்துடறேன். ஒரு நாள்னா ஒருநாள். வருமானத்த எதுக்கு விடணும்னு கேட்டாங்க சார்.’


இந்த பதில் கூட எனக்குப் பெரிதில்லை. இதன் பின்னால் இருந்த காரணம்தான்.


அந்தக் கலைஞரின் வாழ்க்கைத் துணை படுத்த படுக்கையாக இருக்கிறார். இவரது நடிப்பு வருமானம் ஒன்றுதான் அவரை இன்னும் மூச்சுவிட வைத்துக்கொண்டிருக்கிறது. இன்று நேற்றல்ல. பல்லாண்டு காலமாக. சற்றும் சோர்ந்துபோகாமல், தான் வாழ்வதே தன் துணைக்காகத்தான் என்று இருக்கிறார் அவர். அந்தக் காதல், அதன் தீவிரம், தன் துணையைச் சாகவிடக்கூடாது என்பதில் அவருக்கு இருக்கிற ஆக்ரோஷம் – இதெல்லாம் அப்புறம் தெரியவந்த விஷயம்.


என்னால் நம்பவே முடியவில்லை. சினிமா வேறு. தொலைக்காட்சித் தொடர்களைப் பொறுத்தவரை, என்ன ஆனாலும் இறக்கும் காட்சியில் நடிப்பதை யாரும் விரும்பமாட்டார்கள். ஆனால், இறந்த உடலாகக்கூட நடிக்கிறேன் என்று சொன்ன கலைஞரை முதல்முறையாக அப்போதுதான் அறிந்தேன்.


கலை பெரிது. காசு அதனினும் பெரிது. காதல் அனைத்திலும் பெரிது.


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)

Share/Bookmark

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 06, 2012 10:56

December 4, 2012

பேயோன் முன்னுரை

விரைவில் மிகப்பெரிய வெற்றியடையவிருக்கும்போது வெளிவரவிருக்கும் எனது ‘அன்சைஸ்’ புத்தகத்துக்குப் பேயோன் எழுதியிருக்கும் முன்னுரை பின்வருமாறு:-


வாசக வாசகியரே, இந்நூலைப் படிக்குமுன் உங்கள் புன்னகை மீசைகளை முறுக்கி விட்டுக்கொள்ளுங்கள். பின்னால் வருத்தப்படாதீர்கள். பா. ராகவனின் இந்தப் புத்தகத்தை முதலிலிருந்து கடைசி வரை படித்த நேரமனைத்தும் ஒரு மெல்லிய புன்னகை எனது இதழ்களிரண்டிலும் ஒரு சராசரி எட்டு மாதக் குழந்தை போல் தவழ்ந்தது. காரணம் உள்ளடக்கம். நகைச்சுவை என்ற இவரது எழுத்தின் குறிக்கோள் ஆரம்பத்திலேயே அம்பலப்பட்டு சந்தியைச் சிரிக்கவைக்கும் என நம்புகிறேன். சிரிக்கவைத்து, ஏன் சிரித்தோம் என்று சிந்திக்கவும் வைத்து, ‘அட ஆமாம், இதற்குச் சிரிக்காமல் அழவா செய்வார்கள்?’ என்று மீண்டும் ஒருமுறை சிந்திக்கவைக்கும் கட்டுரைகளின் தொகுப்பிது.


ராகவன் இப்போது தொலைக்காட்சித் தொடர்களுக்குப் போய் பெண்களை அழவைப்பதிலும் அவர்களின் ரத்த அழுத்தத்தைப் புகுந்தவீட்டார் போல் ஏற்றிவிடுவதிலும் முழுநேரமாக ஈடுபட்டுவருகிறார். சமீபகாலம் வரை இந்த நபர் ஆனந்தக் கண்ணீரையும் சொரிய வைத்துக்கொண்டிருந்தார் என்பதற்கு இந்தப் புத்தகம் வலுவான சாட்சி. இந்நூலில் காணக் கிடைப்பவை பா.ரா.வின் சிறு சிறு வாழ்வனுபவத் துளிகள். இவை நமக்கு ஏற்படாமல் தப்பித்தோம் என்று நம்மை (பின்னே பிறரையா?) நினைக்கவைக்குமளவு இத்துளிகளை விரிவாக வர்ணிக்கிறார் பா.ரா.


எழுத்தாளர் பா. ராகவன் தனது மொழிநடையில் சில சுதந்திரங்களை ஏற்றுக்கொள்கிறார். ஆதெள கீர்த்தனாம்பர நடை, தானியங்கி எழுத்து, மலைப் பிரசங்க நடை ஆகிய மூன்றின் சங்கமம் இவர் நடை. வார்த்தை விளையாட்டுச் சிலேடைகளைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். சொந்தத் துன்பங்கள், சுயசுபாவப் போக்குகள், விநோத மனிதர்கள், அன்றாடச் சிக்கல்கள், நகர வாழ்க்கை அவலங்கள், வாழ்க்கைமுறை விசித்திரங்கள் அனைத்தையும் தழுவிப் புத்தக இறுதிக்குச் செல்கிறது புத்தகம். ‘டெஸ்க்டாப் மானிட்டரின் முதுகு கர்ப்பம்’, ‘இனி நான் ஆரோக்கியசாமி’, ‘சட்டை ஒரு தேசம்’ போன்ற உயர்நகைச்சுவைப் பிரயோகங்கள் உங்களுக்கு சிரிப்பைத் தரவில்லை என்றால் அவற்றை நீங்கள் இன்னும் படிக்கவில்லை என்று அர்த்தம். படியுங்கள்.


நகைச்சுவை எழுத்தின் அடிப்படையான அம்சங்களில் ஒன்று சுய எள்ளல். நம்மைப் பார்த்து நாம் சிரிக்காவிட்டால் வேறு யார் சிரிக்கப்போகிறார்கள்? சரி, யாரெல்லாம் சிரிக்கப்போகிறார்கள்? பல பேர். ஆனால் யாருக்கும் நம்மைப் பற்றி நம் அளவுக்குத் தெரியாதல்லவா? அதனால் நம் மீதான நம் சிரிப்பில் இயற்கையாகவே நமது கைதான் ஓங்கியிருக்கும். அதில்தான் தொடங்குகிறது தனக்கு மிஞ்சித்தான் தான தருமம். இதில் நூலாசிரியர் கொடையேழு வள்ளல்களில் ஒருவர் (கடையேழு என்பதை நகைச்சுவைக்காக மாற்றி கொடையேழு என்று எழுதியிருக்கிறேன். இங்கு சிரிக்கவும்). இவரது சுயபாடுபொருள்கள் இவரது சொந்த உருவம் (‘அன்சைஸ்’ என்ற கட்டுரை), நடைமுறை இன்னல்களுக்கு எழுத்தாளக் கையாலாகாத்தனங்கள் ஆற்றும் எதிர்வினை (விசாரணைக்கு வா), அர்த்தமுள்ள அபிலாஷைகளில் அகத்தார் ஆர்வங்காட்டாமை (ஜெய் ஸ்ரீராம்!), மறைமுக நகைக் கலாச்சாரத்திற்கு ஆன்மீக ஆரோக்கியங்களின்பேரில் பலியாதல் (ஜடாமுடிக்கு வழியில்லை), சிந்தாமல் சாப்பிடத் தெரியாமை (பங்கரை) என எடுத்துக்காட்டுகளை எடுத்துக் காட்டிக்கொண்டே போகலாம்.


ஆசிரியர் மற்றவர்களையும் மற்ற விசயங்களையும் எள்ளுகிறார். அண்டைவீட்டார், சினிமாவுக்கு வரும் மருத்துவர்கள், அரசு இயந்திர மனிதர்கள், பொட்டி தட்டும் இயந்திரவாயர்கள், நண்பர்கள், சினிமா-தொலைக்காட்சிக்காரர்கள், சில பெண்கள் எனப் பலரையும் இடிக்கிறார். அவர்களின் உளவியலை அவர் ஆராய்ந்து பார்ப்பதில்லை. ஒரு மருத்துவர் தான் அளிக்கும் சிகிச்சைக்கு உட்பட வேண்டிய மனிதர்களைப் பழுதடைந்த இயந்திரங்களாகப் பார்ப்பது போல் பா.ரா. தான் கதையாடும் மனிதர்களைப் பார்க்கிறார் எனப் படுகிறது. எல்லோரும் நடமாடும் விவரணைகள். இங்கே சிந்தனைக்கு வேலை இல்லை, சிரிப்புக்குத்தான் வேலை. ஆனால் இவர்களையும் இவர்கள் தொடர்பான சம்பவங்களையும் தொலைக்காட்சித் தொடர்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளாமல் இந்த நூலுக்குத் தாரை வார்ப்பதன் மூலம் பணநஷ்டப்படுகிறாரோ என்று தோன்றுகிறது.


பா.ரா.வின் சிரிப்புச் சத்தம் புத்தகம் முழுவதும் கேட்கிறது. இது எத்தகையதான சிரிப்பு எனில், ‘நீயும் சேர்ந்து சிரி. ஏனென்றால் இதில் இதற்கு மேலும் ஒன்றும் இல்லை. நம்மால் ஆகப்போவதும் ஒன்றும் இல்லை’ என்ற செய்தியைச் சொல்லும் சிரிப்பு. அதே சமயத்தில் கல்வி, சினிமா, இலக்கியம், இதழியல், இசை, பொருளாதாரம் போன்ற விசயங்களைப் பற்றி சீரியசாகவும் எழுதியிருக்கிறார் இந்தப் புத்தகத்தில். தீவிரக் கட்டுரைகளும் வாசிப்புக்கு உகந்தவையாக உள்ளன. தீவிரமான ஆசாமிகளுக்கு அவை பிடிக்கலாம். இவற்றில் விவாதிக்கத்தக்க விசயங்களும் உள்ளன.


இவை அனைத்தினுடாகவும் ஒரு ஓரமாக, ஆனால் தூக்கலாக வெளிப்படுவது பா.ரா.வின் சமகால வைணவ அடையாளம். பல கட்டுரைகளில் வியப்பையோ விசனத்தையோ வெளிப்படுத்த எம்பெருமான் உதவிக்கு அழைக்கப்படுகிறார். வாசிப்பு விரிவு சற்றுக் குறைவாக இருக்கக்கூடியவர்கள் இதென்ன ஒரே வேதாந்த தீபிகையாகக் கொட்டுகிறது என்று வியக்கலாம். பா.ரா. அடுத்து வரும் (தமது) புத்தகங்களில் நகைச்சுவைக்கு விவிலியத் தமிழ் நடையை ஒருகை பார்க்க வேண்டும் என்பது என் அவா.


பேயோன் / 23-10-2012


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)

Share/Bookmark

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 04, 2012 05:57