Pa Raghavan's Blog, page 4
June 4, 2025
சலம்: ஒரு மதிப்புரை – கதிரவன் ரத்தினவேல்
தடித்த புத்தகங்களுக்கு எப்போதும் ஒருவித எதிர்பார்ப்பு இருக்கிறது. அவை நம்மை யதார்த்த வாழ்விலிருந்து கடந்து ஒரு வெவ்வேறு பரிணாமத்திற்குள் அழைத்துச் செல்கின்றன. அந்த அனுபவம் சும்மா ஒரு ஓய்வு அல்ல – முழுமையான விடுதலை. ஒரு எழுத்தாளன், “இனி சொல்ல ஒன்றுமில்லை” என்ற வரைக்கும் சொல்லத் துணியும் போது, அந்தச் சொற்களுக்குள் நாம் நம்மையே மறந்துவிடுகிறோம்.இனி சொல்ல ஒன்றுமில்லை எனும்வரையும் சொல்லித் தீர்ப்பதற்கான சுதந்திரம் பெற்ற ஜீவிகளவை என்பதும்தான்.
முன்மாதிரிகள் ஏதுமற்ற நாவலென்பதாலேயே சலத்தின் மீது எனக்கு ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. பற்றாக்குறைக்கு பள்ளி மாணவன் போல குறிப்பெடுத்து படித்துக் கொண்டிருந்த பாராவைக் காண நேர்கையில் ஆர்வம் அதிகரித்து விட்டது.
வால்கா முதல் கங்கை வரையில் மட்டுமே இக்காலகட்டத்தை போகிறபோக்கில் கண்ட நினைவு. மற்றபடி நவீன இலக்கியவெளியில் காணாத கதைக்களம்.
முதலில் வேதங்கள் நான்கில் மற்றவைக்கும் அதர்வணத்திற்குமான வேறுபாட்டை புரிந்துக் கொள்ள வேண்டும்.
இந்த உதாரணம் ஓரளவு பொருந்துமென்று நினைக்கிறேன். காலகாலமாக மன்னர்களுக்கும் வள்ளல்களுக்கும் மட்டுமே இலக்கியங்கள் என்றிருந்த நிலையை எப்படி பாரதி எளிய வடிவில் இலகுவாக மக்களை நோக்கித் திருப்பினானோ அது போல தேவர்களுக்கும் வழிபாடுகளுக்கும் மட்டுமே இருந்த வேதங்களை கடந்து மக்களுக்காக, அவர்களின் அன்றாடங்களுக்காக உருவான மந்திரங்களைக் கொண்டது அதர்வண வேதம்.
திரிவேதங்கள் என்று சொல்லி முதல் மூன்று போதுமென ஒரு கூட்டம் முயன்றும் அதர்வணத்தை மக்களிடமிருந்து அவர்களால் பிரிக்க முடியாமல் போகவே வேறு வழியின்று சதுர்வேதங்களாக்கினர் என்றொரு கருத்துமுண்டு.
மன்னர்களுக்கான யாகங்கள், வழிபாடுகள் பற்றிய முதல் மூன்று வேதங்களால் மக்களுக்கென்ன பயன்? மாறாக அதர்வணத்தில் அனைத்தும் மக்களுக்கே!
வாழ்வியல் சடங்குகளுக்கான மந்திரங்கள்
நோய்கள் நீங்கும் மந்திரங்கள்
வளமும் பசுமையும் பெற வேண்டிய மந்திரங்கள்
தினசரி வாழ்வின் பயன்படும் வழிபாட்டு முறைகள்
இவை அனைத்தும் நேரடியாக மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்தவை.
அதுவும் மட்டும் இல்லாமல், ஆயுர்வேதம் என்ற மருத்துவ முறை கூட அதர்வண வேதத்தின் ஒரு பகுதியாகவே சொல்லப்படுகிறது.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதிருந்த நம்பிக்கைகளுக்கு பழக்கங்களுக்கெதிராக நிகழ்ந்த கலகமாகவே அதர்வண வேதம் பார்க்கப்படுகிறது.
இன்னொரு விசயம், மற்ற வேதங்களைப் போல் பல நூறு ரிஷிகளால் அல்லாமல் பெரும்பாலும் ஒரே நபரால் உருவாக்கப்பட்டது. அதனாலேயே அதர்வன் பெயரிலேயே அழைக்கப் படுகிறது. அடுத்து இதில் அதிகம் பங்களித்தவர் அங்கீரச மகரிஷி.
இது போன்ற தகவல்களெல்லாம் கடவுளைத் தேடி “சாத்தானின் கடவுளுக்காக” பயனித்திருக்கையில் பாராவுக்கு கிடைத்திருக்கும். மேலும் உண்மையில் வேத வரிகளில் சொல்லப்பட்டிருப்பதற்கும் நடைமுறையிலிருப்பதற்குமான வேறுபாட்டின் அழுத்தமே அவரை சலத்தை எழுத வைத்திருக்கும் என அவதானிக்கிறேன் அது பிழையாகவும் இருக்கலாம்.
ஆதி, அந்தம் அறியாத அதர்வனைக் குறித்து பாரா உண்டாக்கியிருக்கும் சித்திரம் பிடித்திருந்தது. குறிப்பாக அவனது உயரம், எப்போதும் மூடியிருக்கும் ஒற்றைக்கண், மௌனத்தை ஆயுதமாக கையாலும் லாவகம். புரிந்துக் கொள்ளாதவர்களிடம் எதற்காக பேசிக் கொண்டு!
சாரன் – அது நாம்தான், கிட்டத்தட்ட வாசகனை பாத்திரமாக களமிறக்கியிருக்கிறார். ஏதுமறியாது ராஜனின் ஆணைக்கினங்க சர்சுதி கரையோரமாக மாறிமாறி ஒவ்வொரிடமும் கதைக் கேட்டு நடப்பது சாட்சாத் நாமேதான்.
கதிரவன் ரத்தினவேல்(உனக்கு எப்படி Naruto பற்றி இவ்வளவெ தெரிந்திருக்கிறது என்ற கேள்விக்கு நான் அங்கே இருந்தேனே என்று அத்தொடரின் முக்கிய காட்சியில் பார்வையாளர் இடத்தில் வெகுஜனத்தில் ஒருவனை போட்டோஷாப் மூலம் அமர்த்தியிருக்கும் மீம் ஒன்று அனிமி வட்டத்தில் பிரபலமானது. அதனை சலத்திற்கும் பொருத்தலாம். நானும் நூறு நாளும் அந்த ஆத்தோரமாதாங்க நடந்துட்டுருந்தேன், என்னை பாக்கலையா நீங்க!?)
குத்சன் – சூத்திர முனி – மூட முனியென்பதே பொருந்தும். கர்ணனைப் போல் வாழ்வில் அனைத்து இடங்களிலும் தவறிழைத்து வஞ்சிக்கப்படுபவனாகத்தான் தெரிந்தான். உணர்ச்சியை மட்டும் வென்றிருந்தால் எங்கோ சென்றிருப்பான். சாரன் இவன் குறித்து அதர்வனிடம் சொல்லும் ஓரிடம் வரும். “அவனுக்கு மட்டும் நீ கற்பித்திருந்தால் உன் சொல் ஒன்று கூட இவ்வுலகில் மறையாதபடிக்கு செய்திருப்பானவன்”
மாறி மாறி நேசிக்கும் வேண்டப்பட்ட விரோதிகள். நியாயத்திற்கும் தர்மத்திற்கும் இடையேதான் எவ்வளவு தூரம்.
ஆரியவர்த்தம் ஓரளவு கங்கைக்கரையில் அமைந்து விட்ட காலகட்டம். ஆரியர்களுக்கும் பூர்வகுடிகளுக்கும் ஒப்பந்தம் ஏதுமில்லா அமைதிக்காலம். அப்போது ஒரு தேசத்தில் இருந்து தனது ராஜனின் ஆணைக்கினங்க ஒரு மகரிஷியைக் கொல்வதற்காக செல்லும் சாரனிடமிருந்து கதை துவங்குகிறது. அவன் நோக்கம் நிறைவேறுவதுடன் கதை நிறைவுறுகிறது என்று மட்டும் சொன்னால் அதைவிட பித்தலாட்டம் வேறேதுமில்லை. ஆனால் அதுதான் கதைச்சுருக்கம்.
செல்லும் சாரன் யார்,
கொல்லப்பட வேண்டிய ரிஷி யார்,
ஏன் கொல்லப்பட வேண்டும்?
எதற்கு இவனுக்கு இந்த பணி வந்து சேர்கிறது?
வழியில் இவன் காண்பவர்கள்,
அவ்வனுபவங்கள்,
அக்காலகட்டத்தில் தேசத்தில் மக்களின் நிலை,
அவர்களது வாழ்க்கை முறை,
வழிபாடுகள்,
வர்ணமுறை,
யுத்தம்,
மாயம்,
பைசாசங்கள்,
தேவதைகள்,
தெய்வங்கள்,
கந்தர்வன்,
அனைத்திற்கும் மேலாக கூடவே வரும் சர்சுதி.
இதெல்லாம் கூட சரி, நான் முற்றிலும் எதிர்பாராதது காலப்பயணம். Time traveler’s wife எனக்கு மிகவும் பிடித்த நாவல். அதை நினைவூட்டும்படி ஓரிடத்தில் எனக்கு அதிர்ச்சி காத்திருந்ததை நான் எப்படி அறிந்திருப்பேன்?
சரி, ஆனால் நான் தான் இன்னும் பிறக்கவேயில்லையே? பிறக்காதவர் எப்படி அவ்வபோது அதர்வணுடன் இருந்தீர்கள்?
இறந்த பின்னும் எப்படி என்னுடன் அதர்வண் இருக்கப் போகிறானோ அப்படி!
குத்சன் பாத்திரம் தனி, அவனது வாழ்க்கையை, உணர்ச்சிகளை பற்றி மட்டுமே நிறைய எழுதலாம். எப்போதும் முதலில் அவன் பக்கமே நியாயம் இருப்பதாகத் தோன்றும். ஆனால் நியாயம் வேறு தர்மம் வேறு என்பது பின்னால்தான் புரியும்.
ரிதமென்றால் என்ன என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். புரிந்தும் புரியாமலே வந்துக் கொண்டிருக்கையில் அந்த யானைக் கொலையையொட்டிய மறுபிறப்பில் அனைத்தும் தெளிந்து விடும். எதை மாற்ற முடியாததோ அதுவே ரிதம்.
பல மாயாஜாலக் காட்சிகள் குத்சனையோட்டியே நிகழ்கின்றன. வாசிப்பில் சில நேரம் கற்பனைக்கு சவால்விடும் காட்சிகள் நிகழும். விஷ்ணுபுரத்தில் இறுதியில் நிகழும் ஊழிக்கூத்தினைப் போல. அஹிர்புத்தன்யன் என்றொரு தெய்வத்தை எங்குக் கண்டடைந்தாரோ! ஆனால் போகிறபோக்கில் சொல்லியிருக்க மாட்டார் என்ற நம்பிக்கையில் நானும் தேடினேன்.
மாபெரும் சமுத்திரத்திலிருந்து நீரினையே உடலாகக் கொண்டு சர்ப்பமாக அஹிர்புத்தன்யன் எழுவதாகக் கண்ட கற்பனையை சாமான்யன் கண்டிருந்தால் கோவில் கட்டக் கிளம்பியிருப்பான். சர்சுதியோடு இணைக்கும்படியான தெய்வத்தைக் கொண்டுவந்ததெல்லாம் தரமான செய்கை. நீரே தெய்வமாகி!
ஆனால் நான் எதிர்பார்த்திருந்தது மக்களின் வாழ்வியல்கள் பேசும் அதிக அத்தியாயங்களை! ஊருக்கு வெளியே ஆசிரமமென்று போனதால் எனக்கு ஏமாற்றமே! என்ன செய்வது? ஜனத்திரள் இல்லாமல் சாகசங்கள் இராது, அதை எதிர்பார்க்காமல் வாசிப்பது எனக்கு சிரமமே!
இத்தனை நூறு பக்கங்களையும் வாசிக்க வைப்பதற்கான பாராட்டு, கதையைக் காட்டிலும் எழுத்து நடைக்கே சென்றடைய வேண்டும். இத்தனை எளிமையாக இல்லாவிட்டால் இவ்வளவு பக்கங்கள் வாசிக்க இயலாது.
முக்கியமாக ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் வரிகளை நான் மிகவும் இரசித்தேன்.
நான் சாரன், நான் அதர்வன், நான் குத்சன்
இவ்வரிகள் வருகையில் இனம்புரியாத உவகைக்குள்ளாவேன். அதை மட்டும் மனதிற்குள் base voice ல் சொல்லிக் கொள்வேன்.
சலம் ஒரு தொடக்கம்தான். பாரா தொட்டிருக்கும் களத்தைக் கடந்து நடக்கத் தொடங்கினால் பற்பல சர்ச்சைகளையும் ஏன் கலவரங்களையுமே காண நேரிடலாம்.
சமீபத்தில் கூட ஒருவர் வால்கா முதல் கங்கை வரை புதினத்தை புளுகென்று திட்டிக் கொண்டிருந்தார். ஆரியர்கள் பூர்வகுடிகள் என்பது அவரது வாதம். அவரெல்லாம் சலம் படிக்க வாய்ப்பேயில்லை என நினைத்து ஆறுதல் கொள்கிறேன்.
அக்கால கட்டத்தைய மக்களது வாழ்வியல் குறித்து பல தகவல்கள் பேசப்பட்டுள்ளன. நான் அவற்றைக் குறிப்பெடுத்து வைக்காததால் விரிவாக பேச முடியவில்லை. வேறு யாரேனும் பேசக்கூடும் என்று நம்புகிறேன். குறிப்பாக என்னென்ன வகையான உணவுகள்! அதிதியாக சாரன் தங்கியிருக்கையில் கவனிப்பாக பரிமாறப்படும் உணவுகளை மட்டும் குறித்து வைத்து கற்பனை செய்துப் பார்த்தேன்.
புதினத்திற்கு புதிய களம். பக்கங்களின் எண்ணிக்கையைக் கண்டு மிரளாமல் வாசித்தால் புது அனுபவம் கிட்டும்.
சலம் – நாவல் வாங்க இங்கே செல்க.
All rights reserved. © Pa Raghavan - 2022
May 31, 2025
மெட்ராஸ் பேப்பர் ஆண்டு விழா
நண்பர்களுக்கு வணக்கம்.
மெட்ராஸ் பேப்பர் வார இதழ், மூன்று வருடங்களை நிறைவு செய்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஜூ 1, 2025 – இன்று ஆண்டுவிழா.
* இது என்ன பத்திரிகை, எப்படி இருக்கும், எத்தனை நாள் தொடர்ந்து வரும் என்று எது குறித்தும் சிந்திக்காமல், என் மீது கொண்ட நம்பிக்கையினால், கேள்விப்பட்ட மறு கணமே முதல் ஆயுள் சந்தா அளித்து ஆரம்பித்துவைத்த நண்பர்கள் ஏ.எஸ். புவனேசுவரன், மாம்பலம் சந்திரசேகர்;
* தமிழ்ப் பத்திரிகை உலகில் மிகவும் தாமதமாகத் தோன்றினாலும் தனித்துத் தெரியவும் தரத்தினால் மட்டுமே அடையாளம் காணப்படவும் அடித்தளம் அமைத்துத் தந்து, இன்றுவரை இடைவெளியின்றித் தம் எழுத்தால் உயர்த்திப் பிடித்துக்கொண்டிருக்கும் விமலாதித்த மாமல்லன், எஸ். சந்திரமௌலி;
* இதனை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல அனைத்து விதங்களிலும் இடைவிடாமல் முயற்சி செய்துகொண்டிருக்கும் பத்மா அர்விந்த், தி.ந.ச. வெங்கடரங்கன்;
* சகலவிதமான நெருக்கடி நேரங்களிலும் நிபந்தனையற்று என்னோடு நிற்கும் செல்வ முரளி, நஸீமா ரஸாக்;
* மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்கள் என்று என் மாணவர்கள் இன்று எங்கெங்கும் கொண்டாடப்பட முக்கியமான காரணம், தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கும் அவர்களது புத்தகங்கள். என் சொல் அன்றி வேறெதையும் கருதாமல் மெட்ராஸ் பேப்பர் பெயரிலேயே ஒரு இம்ப்ரிண்ட் தொடங்கி அவர்களுடைய முதல் புத்தகங்கள் வெளிவர வழி செய்யும் ஜீரோ டிகிரி ராம்ஜி நரசிம்மன்;
* ஆயிரத்தெட்டு பேமெண்ட் கேட்வே இம்சைகள் இருந்தாலும் சகித்துக்கொண்டு சந்தா செலுத்திப் படிக்கும் வாசக நண்பர்கள்;
* டெட்லைன் கெடுபிடிகளுக்குப் பழக்கப்படுத்திக்கொண்டு, தமது அன்றாடப் பணிகளுக்கிடையில் தொடர்ச்சி விடுபடாமல் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள்
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
இன்று மாலை ஆறு மணிக்கு ஆண்டு விழா கூகுள் மீட் வழி நடைபெற உள்ளது. பத்திரிகையாளர் சந்திரமௌலி விழாவுக்குத் தலைமை ஏற்கிறார். பத்திரிகையாளர் ரமேஷ் வைத்யா வாழ்த்துரை வழங்குகிறார். வேறு யாரும் பேசப் போவதில்லை. இந்நிகழ்ச்சி முற்று முழுதாக வாசகர் விழாவாக நடைபெற வேண்டுமென்பது எங்கள் விருப்பம்.
மெட்ராஸ் பேப்பர் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் இருப்பார்கள். நானும் இருப்பேன். வாசகர்கள் அனைவருடனும் கலந்துரையாடலாம். கேள்விகள் கேட்கலாம். மெட்ராஸ் பேப்பர் தொடர்பான தமது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளலாம். எழுத்து-பத்திரிகை-வாசிப்பு சார்ந்து என்ன வேண்டுமானாலும் கேட்கலாம், பேசலாம், விவாதிக்கலாம்; காத்திருப்போம்.
கூகுள் மீட்டின் அதிகபட்சக் கொள்ளளவு 100. எனவே முதலில் வருவோருக்கு முன்னுரிமை. நிகழ்ச்சி சரியாக மாலை ஆறு மணிக்குத் தொடங்கும். ஐந்து மணிக்கு என் வாட்சப் சேனலில் லிங்க் தருவேன்.
வருக.
All rights reserved. © Pa Raghavan - 2022
May 29, 2025
ஆன்மாவும் அவரைக்காயும்
எனக்கு பீன்ஸ் பிடிக்கும். கொத்தவரங்காய் தவிர பீன்ஸ் குடும்பத்தில் உள்ள அனைத்து விதமான காய்களும் உவப்பானவையே. வேறு வழியில்லை என்றால் கொத்தவரங்காயையும் சாப்பிடுகிறேன். ஆனால் காய்கறி வாங்கக் கடைக்குச் செல்வது நானாக இருந்தால் நிச்சயமாக அதை மட்டும் வாங்க மாட்டேன்.
பொதுவாகத் தாவர உணவு மட்டும் எடுத்துக்கொள்பவர்களுக்கு வேண்டுதல் வேண்டாமை கூடாது. இருக்கிற சொற்பத்தில் கிடைப்பன அதனினும் சொற்பம். இதில் தேர்வு செய்து உண்பதெல்லாம் அடாது என்று நினைப்பேன். ஆனால் நியாயங்களும் நாவும் பெரும்பாலும் ஒத்துப் போவதில்லை.
இருக்கட்டும், சொல்ல வந்தது வேறு. எனக்குக் கொத்தவரங்காயை எப்படிப் பிடிக்காதோ, அதே போலப் பித்தகோரஸுக்கு அவரைக்காய் பிடிக்காது. பீன்ஸ் குடும்பத்தில், கொத்தவரங்காயாவது மெல்லிய கசப்புச்சுவை கொண்டது. அவரை என்ன பாவம் செய்ததென்று தெரியவில்லை. ஆனால் என்னைப் போலவே மிகத் தீவிரமான தாவர உணவுக் கொள்கை கொண்ட ஒரு மனிதர், வாழ்நாள் முழுவதும் அவரைக்காயை வெறுத்து வந்திருக்கிறார் என்றால் அதன் காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினேன்.
படிக்கிற காலத்தில் பித்தகோரஸ் தியரம் என்ற பதம் என் வாழ்வின் குறுக்கே வந்திருக்கிறது. கணிதம், அறிவியல் போன்ற பாடங்களில் இவ்வாறு எது எதிர்ப்பட்டாலும் நகர்த்திவிட்டு நகர்ந்துவிடுபவனாக இருந்ததால் அப்போது நான் பித்தகோரஸைப் பொருட்படுத்தவில்லை. அது பெரும்பிழை என்று பின்னாள்களில் உணர்ந்தேன்.
அவர் கணித மேதை மட்டுமல்ல. தத்துவவாதி. தன்னைப் பின்பற்றவும் வழிபடவும்கூட ஆயிரக் கணக்கானவர்களைக் கொண்டிருந்தவர். பித்தகோரியம் என்று அவரது கொள்கைகளின் அடிப்படையில் அக்குறுங்குழுவினர் ஒரு மதத்தையே உருவாக்கி, பின்பற்றி வாழ்ந்திருக்கிறார்கள். அப்பேற்பட்டவரின் வாழ்க்கையில் அவரைக்காய் ஏதோ விளையாடியிருக்கிறது. இல்லாவிட்டால் அவர் அதை அவ்வளவு வெறுத்து ஒதுக்கியிருக்க வேண்டியதில்லை.
கிமு 570இல் கிரேக்கத்தில் பிறந்த பித்தகோரஸ், எகிப்திலும் இராக்கிலும் தனது இளமைக்காலத்தைக் கழித்திருப்பதாகத் தெரிகிறது. கணிதம், தத்துவம், வானியல், விவசாயம் என்று ஏகப்பட்ட துறைகளில் அவருக்கு ஆர்வம் இருந்திருக்கிறது. ஆர்வம் இருந்த அனைத்துத் துறைகளிலும் தீவிரமாக இறங்கி அகழ்ந்தெடுக்கப் பார்த்திருக்கிறார். என்ன எடுத்தார் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் அவர் சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்திலும் அவருக்கு ஏதோ ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கருத்து இருந்திருக்கிறது. தனது கருத்துகளை வாழ்நாள் முழுதும் அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார்.
எனவே அவருக்கு எல்லா துறைகளிலும் ஏராளமான எதிரிகளும் இருந்திருக்கிறார்கள். பித்தகோரஸ் என்ன சொன்னாலும் எதிர்த்துப் பேச எங்கும் எப்போதும் ஒரு கூட்டம் தயாராக இருந்திருக்கிறது. எப்போது அவர் தனது சித்தாந்தங்களைத் தொகுத்து ஒரு மதமாக்கப் பார்த்தாரோ, அப்போது அந்த எதிரிகள் அத்தனை பேரும் ஒன்று திரண்டு எதிர்க்கத் தொடங்கினார்கள்.
கிறிஸ்து பிறப்பதற்கு ஐந்நூறு வருடங்களுக்கு முன்பு இத்தாலியில் இருந்தபடி (க்ரோடொனா என்ற நகரில் குடியிருந்திருக்கிறார்) மரணம்-மறுபிறப்பு குறித்தெல்லாம் அவர் பேசியிருக்கிறார் என்பதைப் படித்தபோது வியப்பாக இருந்தது. இறந்தவரின் ஆன்மாவுக்கு அழிவில்லை என்கிற இந்து மதக் கொள்கைதான் பித்தகோரஸுக்கும் இருந்திருக்கிறது. அழிவற்ற ஆன்மா உடனடியாக இன்னொரு உடலைத் தேடிக்கொண்டு விடுகிறதென்று அவர் சொன்னார். அன்றைய ஐரோப்பாவில் இதையெல்லாம் யாரும் நம்பத் தயாராக இல்லை. அவரைப் பைத்தியம் என்றும் பித்தலாட்டக்காரன் என்றும் இடைவிடாமல் எதிர்ப்பிரசாரம் செய்துகொண்டிருந்தார்கள்.
பித்தகோரஸ் அதையெல்லாம் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. இசைக்குள்தான் கணிதம் வாழ்கிறது என்றார். எண்கள்தாம் எல்லாம்; அவற்றுக்கு மாய சக்தி உண்டு என்றார். கணிதத்தையும் இசையையும் ஒரு காக்டெய்ல் ஆக்கி வானியல் சார்ந்த தரிசனங்களைப் பெற முடியும் என்று வாழ்நாள் முழுதும் தீவிரமாக அவர் நம்பியிருக்கிறார். அது சார்ந்த பல பரீட்சார்த்த முயற்சிகளையும் செய்து பார்த்திருக்கிறார். அவை என்னவென்ற விவரம் சரியாகக் கிடைப்பதில்லை.
இந்த மனிதர் ஏன் இலக்கியத்தை விட்டு வைத்தார் என்றுதான் அவரைப் பற்றிப் படிக்கும்போது தோன்றியது. ஏ ஸ்கொயரும் பி ஸ்கொயரும் எக்கேடு கெடட்டும். இவ்வளவு ஆர்வங்கள் உடைய ஒருவர், எழுதலாம் என்று நினைக்காமல் மதம் தொடங்கி போதிக்க நினைத்ததைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.
அப்புறம் அந்த அவரைக்காய்.
பித்தகோரஸுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. பீன்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த அவரைக்காய் ஒரு கெட்ட காய். அசப்பில் அது மாமிசம் போலவே தோற்றமளிக்கிறது. என்றால், அது தாவரமே என்றாலும் உண்ணத்தகுந்ததல்ல என்று தீர்மானமாகச் சொன்னார். பித்தகோரஸுக்கு இந்து மதத்தில் உள்ளதைப் போல மேல் உலகம்-பூமி-கீழ் உலகம் என்கிற கருத்தக்கத்தில் தீவிர நம்பிக்கை இருந்திருக்கிறது. இந்த அவரைக்காய், பூமிக்கும் அதற்குக் கீழான உலகங்களுக்கும் வேர்களின் வழியே பாதை அமைக்கிறதென்று அவர் மனப்பூர்வமாக நம்பினார். தாம் நம்பியதைத் தமது சீடர்களுக்கும் சொல்லி, போகிற இடங்களில் பார்க்கிற அனைவருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்; யாரும் அவரைக்காயைச் சாப்பிட வேண்டாம் என்று அச்சுறுத்தி அனுப்பி வைக்கும் அளவுக்கு அதில் அவர் தீவிரம் கொண்டிருந்தார்.
அவரது மரணம் குறித்துத் தெளிவான சரித்திரத் தகவல்கள் இல்லை. ஆனால் பல்வேறு கதைகள் இருக்கின்றன. அவற்றுள் அவரைக்காய் கதையும் ஒன்று.
பித்தகோரஸின் கருத்துப்படி, அவரை பயிரிடப்பட்டிருக்கும் வயல்வெளியைக் குறுக்கே கடந்து போகக் கூடாது. அந்த வயலைக் கடப்பது என்பது முன்னோர்களின் ஆன்மாவை மிதித்துச் செல்வது போன்றது என்று அவர் சொன்னார்.
அப்படிப்பட்டவர் ஒரு சமயம் அவரது எதிரிகளிடம் சிக்கிக்கொண்டார். வாழ்க்கை முழுவதும் பல்வேறு தரப்பட்ட எதிரிகளால் துரத்தப்பட்டுக்கொண்டே இருந்த பித்தகோரஸை அவரது சீடர்கள்தாம் ஆபத்தின்றி பத்திரமாகப் பாதுகாத்து வந்திருக்கிறார்கள். ஏதோ ஒரு சந்தர்ப்பம். எங்கோ ஓரிடம். சீடர்களுடன் அவர் சென்றுகொண்டிருந்தபோது எதிரிகள் சுற்றி வளைத்துவிட்டார்கள். கைது செய்து இழுத்துச் சென்று அடைத்து வைத்தார்கள்.
விடிந்தால் கொன்றுவிடுவார்கள். எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்று சீடர்கள் முடிவு செய்து, ஏதோ ஓர் உபாயத்தைக் கண்டறிந்து பித்தகோரஸின் கட்டுகளை அவிழ்த்து, அவரைத் தப்பித்து ஓடிவிடச் சொல்லியிருக்கிறார்கள். அப்படி ஓடிக்கொண்டிருந்த பித்தகோரஸ், ஓரிடத்தில் மிகப்பெரிய அவரைத் தோட்டம் ஒன்றை எதிர்கொள்ள நேர்ந்திருக்கிறது.
அதைக் கடந்தால், உயிர் பிழைத்துவிடலாம் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். ஆனால் கொள்கை என்ன ஆவது? அவரை பயிரிடப்பட்டிருக்கும் வயல்வெளியைக் கடந்தால் அது முன்னோரின் ஆன்மாவை மிதிப்பதற்குச் சமமல்லவா?
செய்வதறியாமல் பித்தகோரஸ் குழப்பத்துடன் அப்படியே நின்றுவிட்டார். இப்போது, துரத்தி வந்த எதிரிகள் தாவிப் பிடித்து அவரைக் கொன்றுவிட்டார்கள்.
இது வெறும் கதையா, உண்மையிலேயே பித்தகோரஸின் முடிவு இப்படித்தான் நேர்ந்ததா என்று தெரியாது. ஆனால் சாகவிருக்கும் தறுவாயிலும் கொள்கையை விட்டுத்தர மனமில்லாத ஒரு மனிதன் எப்பேர்ப்பட்டவனாக இருந்திருப்பான்!
எனக்குக் கணக்கு வராது. அறிவியல் பிடிக்காது. வானியலெல்லாம் மழை வருமா வராதா என்று வெதர் ஆப்பில் பார்த்துத் தெரிந்துகொள்ளும் அளவோடு சரி. தத்துவங்களை முற்றிலுமாக வெறுப்பவன். மதத்தின் மீது அறவே நம்பிக்கை இல்லாதவன். எனவே, எந்த விதத்திலும் பித்தகோரஸை நினைத்துக்கொள்ள நியாயமே இல்லாதவன் ஆகிறேன். ஆயினும் இந்த ஒரு கதை என்னை அவர்பால் சுண்டி இழுத்துக்கொண்டே இருக்கிறது.
என்றைக்காவது பித்தகோரஸை அல்லது அவரைப் போன்ற ஒருவனை வைத்து ஒரு நாவல் எழுதலாம். ஆனால் எனக்கு நன்றாகத் தெரியும், ஒருவேளை அது நடக்குமானால் என் நாவலின் நாயகன் அவரைக்காயை வெறுக்க மாட்டான். கொத்தவரங்காயைத்தான் வெறுப்பான்.
All rights reserved. © Pa Raghavan - 2022
May 24, 2025
uFOCUS: விசுவாமித்திர கோத்திரத்தில் ஒரு செயலி
எழுதுவதற்கு நான் பயன்படுத்தும் simpleText என்னும் செயலி (Writeroom இறந்துவிட்ட பின்பு) உண்மையிலேயே சிறப்பானது, எளிமையானது. கண்ணை உறுத்தும் எந்தக் கொசகொசவும் கிடையாது. அதன் ஒரே சிக்கல், word count சொதப்பும். முதல் பன்னிரண்டு சொற்கள் வரை ஒழுங்காகக் கணக்குக் காட்டும். பிறகு இஷ்டத்துக்குக் குறைத்துக்கொண்டே போகும். ஐந்நூறு சொற்கள் எழுதியிருக்கிறோம் என்று அது காட்டும் எண்ணிக்கையைக் கொண்டு ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. காப்பி செய்து கூகுள் டாக்கிலோ, வேர்டிலோ போட்டுப் பார்த்தால் கூசாமல் ஆயிரத்து நூறு என்று காட்டுவான்.
இந்த இம்சையினாலேயே அதற்கும் ஒரு மாற்று கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருந்தேன். iA writer என்றொரு செயலி அகப்பட்டது. மிகத் தரமான ப்ளைன் டெக்ஸ்ட் எடிட்டர். தேவைப்பட்டால் மார்க் டவுன் வசதி வாய்க்காலைத் திறந்துகொள்ளலாம். வேண்டாமென்றால் விறுவிறுவென்று எழுதிக்கொண்டே செல்லலாம். Word count துல்லியமாக இருக்கும். மைக்ரோசாப்ட் வேர்ட், ஆப்பிள் பேஜஸ் காட்டும் எண்ணிக்கையுடன் ஒத்துப் போகும். (இவனெல்லாம் சரியாகத்தான் காட்டுகிறானா என்பது இன்னொரு தனி வினா. நான் அதைக் குடைந்ததில்லை. ஆனால் லிப்ரே ஆபீசுக்கும் மைக்ரோசாஃப்ட் வேர்டுக்கும் சொல் எண்ணிக்கை வித்தியாசம் வரும். அதிகமில்லை என்றாலும் அவசியம் இருக்கும்.)
iA writer இல் என்ன ஒரு சிக்கலென்றால், விலை அதிகம். தவிர மேக்குக்கு ஒன்று, ஐபேடுக்கு ஒன்று, ஐபோனுக்கு ஒன்று என்று தனித்தனியே வாங்க வேண்டும். நாம் என்றைக்கு ஒரே இடமாகக் குப்பை கொட்டியிருக்கிறோம்? கொட்டுகிற குப்பையை சாத்தியமுள்ள எல்லா இடங்களிலும் கொட்டி வைப்பதே தமிழர் மரபு. மரபு மீறாத மறத் தமிழனுக்கு இதனாலேயே இந்த iA writer வேண்டாம் என்று தோன்றியது.
iA writer போலவே இருக்க வேண்டும். அதிலுள்ள அனைத்து வசதிகளும் வேண்டும். வேர்ட் கவுண்ட்டும் சரியாக இருக்க வேண்டும். கண்ணை உறுத்தாத எளிமை அவசியம். செயலிக்குள் இருந்தபடியே லைப்ரரி ஆக்சஸ் வேண்டும். Preview mode அவசியம். மூட் மாறும்போது தடதடவென சத்தமாகத் தட்ட வசதியாக டைப்ரைட்டர் மோட் கூடுதலாக இருந்தால் நல்லது. எக்ஸ்போர்ட் ஆப்ஷன்கள் தேவை. நேரடியாக பிடிஎஃப் ஆக்க முடிவது நல்லது.
இப்படியெல்லாம் மணல் கயிறு எஸ்.வி. சேகர் திருமணத்துக்குப் பெண் தேடப் போடும் நிபந்தனைகள் போல நான் எதிர்பார்க்கும் அனைத்துக் கல்யாண குணங்களுடனும் இன்று ஒரு செயலி அகப்பட்டது.
அச்சு அசல் iA Writer போலவே உள்ளது. அனைத்து வசதிகளும் அப்படி அப்படியே. எடிட்டரின் நிறம், நீள அகலங்கள், எழுத்துரு, அதன் அளவு எதை வேண்டுமானாலும் இஷ்டத்துக்கு மாற்றிக்கொள்ள முடிகிறது. Focus குலையாதிருக்க எழுதுகிற வரி மட்டும் பளிச்சென்று தெரிகிறது. எழுதி முடித்த வரிகள், பத்திகள் அனைத்தும் மப்பாகிவிடுகின்றன. எங்கே கொண்டு கர்சரை வைக்கிறோமோ, அந்த இடத்தில் வெளிச்சம் விழுகிறது. மார்க் டவுன் சௌகரியம் உள்ளது.
இதெல்லாமா பெரிது? இந்த நல்ல செயலி இலவசமாகவே ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது.
இப்படி கவனம் கவரும் செயலி ஏதாவது அகப்படும்போது அதை உருவாக்கியவர் யார் என்று தேடிச் சென்று பார்ப்பேன். uFocusஐ உருவாக்கியவர் பெயர் நிக்கோலஸ் கிக். எது அவரை இந்தச் செயலியை உருவாக்கத் தூண்டியது என்று பார்த்தால், மனிதர் நமது சாதிக்காரராக இருக்கிறார்.
‘I created uFocus because I couldn’t find my ideal (and affordable) writing environment.’
என்று அவரது இணையத்தளத்தில் எழுதி வைத்திருக்கிறார்.
சொர்க்கம் உனக்கில்லை, நரகம் உனக்கு வேண்டாமெனில் உனக்கென ஒரு சொர்க்கத்தை நான் உருவாக்கித் தருவேன் என்று சூரிய வம்சத்துத் திரிசங்குவுக்கு நம்பிக்கையளித்த விசுவாமித்திரரின் தீவிர விசிறியாக, நிக்கோலஸ் கிக்கின் இம்மானுட குலச் சேவையை மானசீகமாகப் பாராட்டிவிட்டு இந்தக் குறிப்பை எழுதுகிறேன்.
வேர்ட் கவுண்ட் 383 என்று காட்டுகிறது. தூக்கி pages இல் போட்டுப் பார்த்தாலும் அதையேதான் காட்டியது.
எனவே, இனி uFocus. நன்றி, Nicolas Kick.
All rights reserved. © Pa Raghavan - 2022
May 16, 2025
நீ வேறு, நான் வேறு – புதிய தொடர்
இது காலம் கருதி ஆரம்பிக்கப்படுகிற தொடர். வரலாற்றால் துரோகம் இழைக்கப்பட்ட ஒரு மாபெரும் மக்கள் கூட்டத்தின் மறுமலர்ச்சி சரித்திரம்.
நமக்குப் பாலஸ்தீனப் பிரச்னை தெரிந்த அளவுக்குக் குர்திஸ்தான் பிரச்னை தெரியாது. ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை அறிவோம். ஆனால் உய்குர் படுகொலைகள் பற்றி அறியமாட்டோம். அப்படித்தான், காஷ்மீர் பிரச்னையில் செலுத்தும் கவனத்தை பலூசிஸ்தான் விடுதலைப் போராட்டத்தில் செலுத்தத் தவறினோம்.
இரண்டுக்கும் சம வயது. இரண்டுக்கும் காரணம் பாகிஸ்தான். ஒரே வித்தியாசம், காஷ்மீர் ஒன்றுபட்ட இந்தியாவின் ஓர் அங்கம். பலூசிஸ்தான் வஞ்சகத்தால் பாகிஸ்தானுடன் ஒட்ட வைக்கப்பட்ட, தனித்துவம் மிக்க ஓர் இனத்தவரின் மண். தனது சுதந்தரத்துக்குப் பிறகு 1948 ஆம் ஆண்டு பாகிஸ்தான், காஷ்மீர் மீது படையெடுத்து எப்படி அதன் ஒரு பகுதியை அபகரித்ததோ, அதையேதான் பலூசிஸ்தானிலும் செய்தது. ஆனால் ஒரு பகுதியல்ல. பலூச் மக்களின் மொத்த நிலத்தையும் எடுத்து விழுங்கிவிட்டது.
ஒரு வகையில் அது பிரிட்டனின் கூட்டுச் சதி. இன்னொரு வகையில் பாகிஸ்தானின் பிரத்தியேக சூழ்ச்சி வலை. எப்படியானாலும் இன்றுவரை பலூசிஸ்தான் மக்கள் தமது விடுதலைக்காகப் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தியா தம் பக்கம் நிற்க வேண்டும் என்று இன்றைக்குக் கோரிக்கை வைத்து, சுதந்தரப் பிரகடனம் செய்திருக்கிறார்கள்.
இம்மாதம் (மே 2025) இரண்டாம் தேதி தொடங்கிய பலூசிஸ்தான் விடுதலைப் போராட்டத்தின் இறுதிக் கட்ட நடவடிக்கைகள் ஒன்பதாம் தேதி அதன் உச்சத்தைத் தொட்டு, சுதந்தர பலூசிஸ்தான் அறிவிப்பு வெளியிடப்பட்டது. உலகம் திகைக்க ஒரு நாளாக அன்று ஆகிப் போனது. உண்மையில் பலூசிஸ்தானை நாம் பொருட்படுத்திக் கவனிக்கத் தொடங்கியதே அதன் பிறகுதான். ஆனால் அந்த ஓர் அறிவிப்பின் பின்னால் எழுபத்தேழு ஆண்டுக் கால அடக்குமுறையும் மிதிபட்ட வேதனையும் வதைபட்ட வலியும் இழப்பின் கண்ணீர்க் கறையும் உண்டு.
பாகிஸ்தானின் முகம் என்று நாம் அறிந்த ஒன்றனுக்கு அப்பால் இன்னொரு முகம் அதற்குண்டு. அது இன்னும் பயங்கரமானது. மேலும் கொடூரமானது. ஈவு இரக்கமற்றது. நியாய தருமங்களைச் சற்றும் கருதாதது. பலூசிஸ்தான் மக்கள் அதைத்தான் இத்தனை ஆண்டுக் காலமாகவும் கண்டு அனுபவித்து வந்திருக்கிறார்கள். இது அவர்கள் விடுபடத் துடிக்கும் காலம்.
இருபதாண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானின் வரலாற்றை எழுத நேர்ந்தபோது பலூசிஸ்தான் விவகாரம் குறித்துப் படிக்கத் தொடங்கினேன். ஆனால் காஷ்மீரை மையப் புள்ளியாக வைத்து இந்தியா-பாகிஸ்தான் உறவு மற்றும் பகையின் கதையாக அது விரிந்தபோது பலூசிஸ்தான் பிரச்னை இயல்பாகவே அந்தக் கண்ணியில் விடுபட்டுப் போனது. இப்போது அதற்கு நேரம் அமைகிறது.
வரும் திங்கள்கிழமை முதல் (மே 19) மெட்ராஸ் பேப்பரில் நாள்தோறும் இதனை எழுதத் திட்டமிட்டிருக்கிறேன். எப்போதும் என் உடன் இருக்கும் வாசக நண்பர்களை இப்போதும் வாசித்துக் கருத்துச் சொல்ல அன்புடன் அழைக்கிறேன்.
All rights reserved. © Pa Raghavan - 2022
May 11, 2025
வாசன் மலர்
நேற்று எஸ்.எஸ். வாசன் நூற்றாண்டு மலரைச் சிறிது நேரம் புரட்டிக்கொண்டிருந்தேன். படித்துப் பல்லாண்டுகள் ஆகிவிட்டதால் சில விவரங்கள் மறந்திருந்தன. ஒரு கட்டுரையை முழுக்கப் படித்தேன். செய்ய இருந்த வேலையெல்லாம் மறந்து போய் அடுத்தடுத்து எட்ட கட்டுரைகளை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். நிறுத்தவே மனம் வரவில்லை.
உத்வேகம் தரக்கூடிய புத்தகங்களுக்கு என்று ஒரு பெரிய சந்தை உண்டு. 2003ம் ஆண்டு விகடன் வெளியிட்ட இந்த மலர் அப்படிச் சந்தையில் இருக்கும் எந்தப் புத்தகத்தினும் சிறப்பானது, வீரியம் மிக்கது. வாசன் என்ற ஆளுமையை நேரில் கண்டு பழகியவர்களின் அனுபவங்கள்தாம். ஆனால் எதுவுமே வெறும் துதிக் கட்டுரைகள் அல்ல. ஒரு வெற்றியாளரைக் குறித்து எழுதும்போது அவர் வெற்றியடைந்த கதையைச் சொல்வதினும், அவரது எந்தெந்தத் திறமைகள், குணங்கள் வெற்றியை நோக்கி நகர்த்தின என்பதைச் சுட்டிக் காட்டுவதுதான் சரியான எழுத்தாக இருக்கும். இம்மலர் அதனைக் கச்சிதமாகச் செய்திருக்கிறது.
வாழ்க்கை வரலாறுகள், தன்னம்பிக்கை நூல்கள், சுய முன்னேற்ற நூல்கள், வெற்றிக் கதைகள் எழுத விரும்புகிறவர்கள் இதனை மனத்தில் கொள்ள வேண்டும். சும்மா ஒருவர் போராடினார், கஷ்டப்பட்டார், இரவு பகலாக உழைத்தார், புதிதாக யோசித்தார், நிறைய தோற்றார், இறுதியில் ஜெயித்தார் என்று எழுதுவது எந்த வகையிலும் படிப்பவர்களுக்கு உத்வேகம் தராது. உபயோகமாகவும் இராது.
ஒவ்வொரு மனிதருக்கும் நூற்றுக் கணக்கான நிறங்கள் இருக்கும். இந்த நிறம் என்பது குணத்தையும் உள்ளடக்கியதுதான். நல்லவர் என்பது பொதுவான பண்பு. ஒருவர் எல்லோரிடத்திலும், எல்லா சந்தர்ப்பங்களிலும், எல்லா காலக் கட்டத்திலும் நல்லவராகவே இருக்க முடியாது. அவருக்குக் கோபமே வராது என்பது சரியான கணிப்பு அல்ல. கோபமே இல்லாமல் ஒரு முழு வாழ்வை வாழ்ந்து முடிக்க முடியாது. அதே போலத்தான் அவர் இரக்க சுபாவமுள்ளவர், அவர் நகைச்சுவையாகப் பேசுவார், அவர் எப்போதும் சிந்தனை வயப்பட்டிருப்பார் என்பன போன்ற விவரிப்புகளும்.
ஒரு சராசரி மனிதன் சாதனையாளன் ஆவதற்கு (அது நோக்கமாக இல்லாவிட்டாலும்) சில பயிற்சிகளை அவசியம் மேற்கொண்டாக வேண்டியிருக்கும். தெரிந்து செய்யலாம், இயல்பாகவும் செய்யலாம். அதுவல்ல முக்கியம். ஆனால் குறிப்பிட்ட பயிற்சிகளில் மனம் ஒருமுகப்படுவதற்கு அவரை உந்தித் தள்ளும் இயல்புகள் எவை என்று பார்ப்பது முக்கியம்.
இந்த மலரில் அசோகமித்திரன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். வாசனுக்கு திறமைமிக்க ஊழியர்கள் பலர் தாமாகவே கிடைத்தார்கள் என்று அதில் சொல்கிறார். நாம் உடனே என்ன நினைப்போம்? அது அவரது அதிர்ஷ்டம்.
ஆனால் வேறொரு கட்டுரையில் வாசன் தமது ஊழியர்களை எப்படிக் கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டார் என்பதை இன்னொருவர் எழுதுகிறார். திறமையை இனம் காண்பது – கிடைத்த திறமைசாலிகளைத் தக்க வைத்துக்கொள்வது என்று இரண்டு விஷயங்கள் இதில் அடங்கியிருக்கின்றன.
ஒரு வட நாட்டு நடிகை இங்கே நடிக்க வந்தபோது அவரை ஒரு மதன மாளிகையில் தங்க வைத்து, பிரமித்துப் போகும் அளவுக்கு உபசரித்த கதையை ஒருவர் எழுதியிருக்கிறார். அடுத்தப் பக்கத்திலேயே இன்னொரு நடிகைக்கு அவர் வக்கீல் நோட்டீஸ் கொடுத்து மிரட்டிய கதை வருகிறது. இரண்டுக்குமே தொழில் சார்ந்த காரணங்கள்தாம். நியாயமான காரணங்கள். ஆனால் இரண்டு சம்பவங்களின்போதும் தனிப்பட்ட ஆர்வமோ, விருப்போ, வெறுப்போ இல்லாமல்தான் அவர் நடந்துகொண்டிருக்கிறார். எப்போதும் சமநிலையில் இருப்பது வெற்றிக்கு மிக முக்கிய சூட்சுமம் என்பார்கள். அதை நேரடியாகச் சொல்லாமல் இந்த இரு சம்பவங்களும் வாசன் என்னும் ஆளுமையின் சமநிலை குலையாத மனப்பாங்கைப் புரியச் செய்துவிடுகின்றன.
அந்நாளில் என்.எஸ். கிருஷ்ணன் ஒரு சூப்பர் ஸ்டார். அவர் நடிக்கும் படங்களில் அவரது நகைச்சுவைப் பகுதிகளை அவரே எழுதி, இயக்கிக் கொடுத்துவிடுவதுதான் வழக்கமாக இருந்திருக்கிறது. வாசனும் அவரைத் தமது ஒரு படத்துக்கு அழைத்தார். என்.எஸ்.கே. தனது பாணியில் ஒரு நகைச்சுவைப் பகுதியை எழுதி, இயக்கிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.
ஆனால் போட்டுப் பார்த்தபோது வாசனுக்கு நிறைய விஷயங்கள் இடித்தன. எனவே கிருஷ்ணன் கொடுத்த மொத்தப் படச் சுருளில் பாதியை வெட்டி எடுத்துவிட்டு மிச்சத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். கிருஷ்ணனுக்குக் கோபம் வந்துவிட்டது. அது எப்படி நான் எடுத்துத் தந்ததை நீங்கள் வெட்டலாம்?
வாசன் அவரை உட்கார வைத்து முழுப் படத்தையும் போட்டுக் காட்டியிருக்கிறார். நீக்கப்பட்ட காட்சிகளை ஏன் நீக்கினேன் என்று விளக்கியிருக்கிறார். சும்மா சுற்றி வளைத்துத் தனது செயலை நியாயப்படுத்துவதல்ல. ஒரு வரி. ஒரே ஒரு விளக்கம். அவ்வளவுதான். நீங்கள் செய்தது சரி என்று சொல்லிவிட்டு கிருஷ்ணன் எழுந்து சென்றுவிட்டார்.
அந்த ஒரு வரி விளக்கம் வாசன் எவ்வளவு பெரிய திரைக்கதை வல்லுநர் என்பதை விளக்கிவிடுகிறது.
இந்தக் கட்டுரை முடியும் இடத்தில், வாசன் சினிமா கற்றுக்கொண்ட ஆரம்பக் காலம் குறித்த வேறொரு கட்டுரை இருக்கிறது. இரண்டையும் இணைத்து சிந்தித்தால், நேர்த்தியாகக் கற்றுக்கொள்ளும் ஒரு தொழில் தருகிற தன்னம்பிக்கை, எம்மாதிரி நெருக்கடி சமயங்களில் எவ்வளவு சிறப்பாக வேலை செய்யும் என்பது விளங்கிவிடும்.
தமிழில் எழுதப்பட்ட எந்த ஒரு வெற்றியாளரின் வாழ்வும் இந்த மலருக்கு நிகரானதல்ல. இத்தனைக்கும் இது ஒரு தொகுப்பு நூல்தான். கால வரிசைப்படுத்தலோ, வெற்றி சூட்சுமங்களை விளக்கும் நோக்கமோ இதில் கிடையாது. வாசன் என்னும் ஆளுமையின் நினைவைப் போற்றுவதற்காகத் தயாரிக்கப்பட்டதுதான். ஏராளமான நபர்கள், ஆளுக்கொரு விதமாக அவரவர் மொழியில், அவரவர் அனுபவத்தை எழுதியிருப்பதுதான். எந்த ஒழுங்கு வட்டத்துக்குள்ளும் அடங்காது.
இருப்பினும் ஒரு சிறந்த வெற்றி நூல் / வாழ்க்கைச் சித்திர நூல் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்க இது ஒரு மகத்தான கையேடு. இப்போது அச்சில் இருக்கிறதா, கிடைக்கிறதா என்று தெரியவில்லை.
All rights reserved. © Pa Raghavan - 2022
May 10, 2025
உரைநடை இலக்கணம்
நாளை (மே 12) காலை பத்து மணிக்கு, சென்னை தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலக வளாக அரங்கில் நடைபெறும் கல்லூரி மாணவர்களுக்கான எழுத்துப் பயிற்சி முகாமில் கலந்துகொள்கிறேன்.
பதிநான்கு நாள்கள் நடைபெறும் இம்முகாமில் உரைநடைப் பிரிவில் முதல் வகுப்பினை நான் எடுக்கிறேன். சிறந்த உரைநடை எழுத்தின் அடிப்படை இலக்கணங்கள் என்பது எனக்குத் தரப்பட்டுள்ள கருப்பொருள்.
கல்லூரி மாணவர்களிடையே தமிழில் எழுதும் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக நூலக இயக்கம் முன்னெடுக்கும் இம்முயற்சி மிக முக்கியமானது. தமிழில் எழுதுவதும் வாசிப்பதும் ஈராயிரக் குழவிகளின் தலைமுறையில் கணிசமாகக் குறைந்து வருகிற சூழலில், மனுஷ்யபுத்திரன் நூலக ஆணைக் குழுத் தலைவராக இருப்பதனால் இதெல்லாம் அங்கே சாத்தியமாகிறது.
நாளை காலை பத்து மணி முதல் பதினொன்றரை மணி வரை என் வகுப்பு. பிறகு அடுத்தடுத்த பாடங்கள், அடுத்தடுத்த ஆசிரியர்கள். முழுமையான விவரங்களைக் கீழே தந்துள்ள அழைப்பிதழில் (பெரிதாக்கிப் பார்த்துப்) பெறலாம்.
வருக.
பிகு: வகுப்பில் கலந்துகொள்ளப் பதிவு செய்த கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல், எழுத்துக் கலையைப் பயில்வதில் ஆர்வமுள்ள பிறரும் வரலாம் என்று மனுஷ்யபுத்திரன் சொல்லியிருக்கிறார். சென்னையில் உள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்க.
All rights reserved. © Pa Raghavan - 2022
May 9, 2025
அஞ்சலி: ரேவதி (என்கிற) ஈ.எஸ். ஹரிஹரன்
ரேவதி என்கிற ஈ.எஸ். ஹரிஹரன் நேற்றிரவு காலமானார் என்று இன்று காலை தகவல் வந்தது. வாழ்வில் யார் யார் இல்லாவிட்டால் இன்றைய நான் இல்லை என்று எண்ணிப் பார்த்தேன். அந்தச் சிறிய பட்டியலில் அவர் இருந்தார்.
டிசம்பர் 6, 1992 ஞாயிற்றுக்கிழமை அன்று கல்கியில் வேலைக்குச் சேர்ந்தேன். நல்ல நாள் என்று பார்த்ததால், ஞாயிறு என்று பார்க்கவில்லை. அலுவல் நேரம், விடுமுறை நாள் போன்றவற்றில் அரசு அலுவலகங்களைப் போலவே துல்லியம் கடைப்பிடித்தாலும், கல்கி என் விஷயத்தில் அதற்குச் சம்மதித்ததன் காரணம் மிக எளிமையானது. ஆசிரியர் கி. ராஜேந்திரனின் இயல்பே அதுதான். எதையும் மறுக்க மாட்டார். அன்றைக்கு ஈக்காடுதாங்கலில் கல்கி அலுவலகத்துக்குச் சென்று வேலையில் சேர்ந்தேன். கிரா என்னை எடிட்டோரியலுக்கு அழைத்துச் சென்று ஓர் இருக்கையில் அமரச் சொன்னார். ‘கொஞ்ச நேரம் எதுனா எழுதிட்டிருங்க. இன்னிக்கி அது போதும். நாளைலேருந்து கரெக்டா பத்து மணிக்கு வந்துருங்க’ என்று சொன்னார்.
மறுநாள் எனக்கு ஹரிஹரன் சார் அறிமுகமானார். அவர் கோகுலத்தின் ஆசிரியர். காய்ச்சிய பாலின் மீது படியும் ஆடை போன்ற தோற்றம் அவருக்கு. குணமும் குரலும்கூட அதே மிருது. எல்லா சந்தர்ப்பங்களிலும் எல்லோரிடமும் ஒரே விதமான தொனியில்தான் பேசுவார். அது கீழ்க்குரல் இல்லை. ஓங்கியும் ஒலிக்காது. வால்யூம் பட்டனை எப்போதும் ஒன்றில் வைத்தால் எப்படி ஒலிக்குமோ அப்படி. இந்த மனிதருக்கு கோபம், வெறுப்பு, சலிப்பு இதெல்லாம் வரவே வராதா என்று ஆச்சரியமாக இருக்கும். ஆனால் வராது. விடுமுறை நாள்களில் விளையாடித் தீர்த்த பின்பு என்ன செய்வதென்று தெரியாமல் இங்குமங்கும் அலைந்து திரியும் சிறு குழந்தையைப் போலத்தான் எப்போதும் இருப்பார்.
கல்கியில் முதல் முதலில் என்னை அவருக்குத்தான் உதவியாளனாக அமர்த்தினார்கள். சின்னப்பையன் என்று அலட்சியம் காட்ட மாட்டார். மிகவும் மரியாதையோடு நடத்துவார். ‘இதைச் செய்’ என்று சொல்ல மாட்டார். ‘செய்ய முடியுமா? நேரம் இருக்கா?’ என்றுதான் கேட்பார். கோகுலத்துக்கு வருகிற கதைகளை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்தார். கதைகளில் இடம் பெறும் ஒரு சொல்கூடப் பன்னிரண்டு வயதுச் சிறுவர் சிறுமியருக்குப் புரியாமல் போய்விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்.
‘குழந்தைகளுக்கு எழுதற கதைல என்ன இருக்கணும்? ஒண்ணு சிரிப்பு வரணும். இல்லேன்னா எதாவது ஒண்ண புதுசா தெரிஞ்சிக்கணும். இந்த ரெண்டும் இல்லேன்னா அது சரியா இல்லேன்னு அர்த்தம்’ என்பார்.
‘அதாவது ரிஜெக்ட் பண்ணிடலாம். கரெக்டா சார்?’ என்று அழுத்திக் கேட்டாலும், ‘திருத்தி சரி பண்ண முடியறதான்னு பாக்கலாம்’ என்றுதான் சொல்வாரே தவிர, எதையும் யாரையும் எதன் பொருட்டும் நிராகரிக்கும் மனம் அடிப்படையிலேயே அவருக்குக் கிடையாது.
கோகுலத்தின் முதலாசிரியர் அழ. வள்ளியப்பாவின் காலத்தில் நான் எட்டாம் வகுப்புச் சிறுவன். அப்போதே கோகுலத்தில் எழுதியிருக்கிறேன். ஹரிஹரன் சாருக்கு அது தெரியும். எனவே என்னை கோகுலத்துக்கு மீண்டும் நிறைய எழுதும்படிச் சொல்லிக்கொண்டிருப்பார். ஆனால், அந்நாள்களில் என் கவனமெல்லாம் கல்கியில் எழுதுவது சார்ந்தே இருந்தது. வேலை பார்ப்பது கோகுலத்துக்காக இருந்தாலும் வாரம் ஒரு சிறுகதையாவது கல்கிக்கு எழுதிக் கொடுத்துக்கொண்டே இருப்பேன். சிறுகதை பிரசுரமாகாவிட்டால் ஏதாவது கட்டுரை எழுதுவேன். சினிமா விமரிசனம் எழுதுவேன். டிவி விமரிசனம் எழுதுவேன். ஏதோ ஒன்று. கல்கியில் வாரம் தவறாமல் என் பெயர் வருகிறதா என்பதில் அப்படியொரு வெறி.
ஹரிஹரன் சாருக்கு நான் கோகுலத்தின்மீது ஆர்வமில்லாமல் இருந்ததில் உண்மையிலேயே மிகுந்த வருத்தம். அது எனக்கு நன்றாகத் தெரியும். என்னை எப்படியும் கல்கிக்கு மாற்றிக்கொண்டுவிடுவார்கள் என்பது அவருக்கும் தெரியும். இருந்தாலும் விடாப்பிடியாக என்னைச் சிறுவர்களுக்கு எழுதச் சொல்லிக்கொண்டே இருப்பார்.
அடிப்படை டெஸ்க் வேலைகளில் அவர்தான் எனக்குப் பயிற்சி அளித்தார். கல்கியில் அப்போது சில பக்கங்கள் மட்டும் வண்ணத்தில் வரும். சில பக்கங்கள் இரண்டு வண்ணங்களில் வரும். அதற்கேற்பக் கதை-கட்டுரைகளை எப்படித் தேர்ந்தெடுப்பது, எதற்கு நான்கு வண்ணம் தேவை, எதற்கு இரண்டு வண்ணங்கள் (கறுப்பு + நீலம் அல்லது கறுப்பு + மெஜந்தா) போதும், இந்த வண்ண வேறுபாடு வாசகரை உறுத்தாத விதத்தில் எப்படிப் பக்கங்களை வடிவமைப்பது என்பதையெல்லாம் அவரிடம்தான் கற்றேன். ஏனோ, நான் கோகுலத்தில் இருந்த ஆறேழு மாதங்களில் ஒரு கதையோ, பாடலோ, துணுக்கோகூட அதில் எழுதவேயில்லை. அப்போது எனக்கு அது குறித்து வருத்தமே ஏற்படவில்லை. ஆனால் அவருக்கு அது பெரிய குறையாகத் தோன்றியிருக்கிறது என்பது பிறகு புரிந்தது. அவரே பல முறை என்னிடம் அது குறித்து வருத்தப்பட்டுச் சொல்லியிருக்கிறார்.
பயிற்சி முடிந்து என்னைக் கல்கிக்கு மாற்றினார்கள். அதன் பிறகும் ஹரிஹரன் சாரை தினமும் பார்ப்பேன், பேசுவேன், சீண்டுவேன் எல்லாம் செய்வேனே தவிர, அவர் இருந்த காலம் வரை கோகுலத்துக்கு எதையுமே எழுதவில்லை. கல்கி அப்போது எண்பது பக்கங்கள். எண்பதில் இருபது பக்கங்களையாவது நான் எழுதிவிட வேண்டும் என்று வெறி கொண்டு வேலை செய்வேன். கண்டேபிடிக்க முடியாதபடி ஒரே இதழில் நான்கைந்து வேறு வேறு மொழி நடைகளிலெல்லாம் எழுதியிருக்கிறேன்.
எனக்குப் பிறகு அவருக்கு உதவி ஆசிரியராக சுஜாதா வந்து சேர்ந்தார் (இப்போது இந்து தமிழ் திசையில் இருக்கிறார்). ஹரிஹரன் சார் ஓய்வு பெறவிருந்த சமயம் அது. தன் குழந்தையை இன்னொரு குழந்தையின் பொறுப்பில் விட்டுவிட்டுக் கடை வீதிக்கு அவசரமாகப் புறப்பட்டுப் போகும் ஒரு தாயைப் போல அவர் சுஜாதாவுக்கு ‘கோகுலத்தைக் கற்பித்த’ காட்சிகள் இன்னும் எனக்கு நினைவிருக்கின்றன.
விடைபெற்ற நாளிலும் அவர் எனக்குச் சொன்னது ஒன்றுதான். ‘கோகுலத்துக்கு எழுதணும். மறந்துடக்கூடாது.’
நான் கோகுலத்தையோ அவரையோ உயிருள்ளவரை மறக்க முடியாது. ஆனால் என் ஆத்திரங்கள், பதற்றங்கள், ஆவேசம் அனைத்தும் தணிந்து, அந்தப் பத்திரிகையில் எழுத வருவதற்கு மேலும் பத்தாண்டுகள் தேவைப்பட்டன. கோகுலத்தில் நான் ‘புதையல் தீவு’ எழுதிய நாள்களில் இதழ் வெளியானதும் எனக்கு வருகிற முதல் போன் ஹரிஹரன் சாருடையதாகத்தான் இருக்கும். ‘ஐஸ் க்ரீம் பூதம்’ எழுதியபோது ஒரு முறை சொன்னார்,
‘எனக்குத் தெரியும், என்னிக்காவது இந்தப் பக்கம் வந்துடுவிங்கன்னு.’
அந்தக் குரலில் இருந்த குதூகலத்தை இப்போது எண்ணிக்கொள்கிறேன். மிக நிச்சயமாக ஒரு குழந்தைக்கு மட்டுமே சாத்தியமான வெளிப்பாட்டு விதம் அது. அவரது வாழ்த்தை ஆசியாக எடுத்துக்கொள்வதாகச் சொன்னேன்.
கற்றுக்கொடுப்போரைத் தவிர, பிற அனைவருக்கும் நாம் படுகிற கடன்களை எப்படியாவது அடைத்துவிட முடியும். தீராக்கடன் என்பது ஆசிரியர்களிடம் படுவது ஒன்றே. ஹரிஹரன் சார், இறுதிவரை என்னைக் கடன்காரனாக வைத்திருக்கப் போகும் மிகச் சிலருள் ஒருவர்.
அஞ்சலி.
All rights reserved. © Pa Raghavan - 2022
May 7, 2025
குறிப்புகளைப் பற்றிய ஒரு குறிப்பு
கையால் எழுதிக்கொண்டிருந்த நாள்களில் என் கையெழுத்து நன்றாக இருந்தது. எவருக்கும் புரியும்படி இருந்தது. குறிப்பாக, பவுண்டன் பேனாக்களைப் பயன்படுத்தி எழுதிக்கொண்டிருந்தபோது உண்மையிலேயே அச்செழுத்தைப் போலவே இருக்கும். பார்க்கர், பைலட் பேனாக்கள், எழுதுபவனின் கையெழுத்தை மெருகூட்டுவதற்கென்றே உருவாக்கப்படுபவை என்று தோன்றும்.
என் கையெழுத்து கெடத் தொடங்கிய புள்ளி, பால்பாயிண்ட் பேனாக்களில் எழுத ஆரம்பித்ததுதான் என்று நினைக்கிறேன். அதிலிருந்து கம்ப்யூட்டருக்கு மாறிய பின்பு, கையால் எழுதுவது அறவே நின்று போனது. எப்போதாவது எழுத நேரும்போதுதான் அது கெடத் தொடங்கியிருக்கிறது என்பது உறைக்கும். ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இனிமேல் கையால் எதற்கு எழுதப் போகிறோம் என்கிற அலட்சியம். அப்படியே விட்டுவிட்டதால் அது தன் இஷ்டத்துக்கு மோசமாகிப் போனது.
சென்ற மாதம் ஆன்லைன் கீதை வகுப்பு ஒன்றனில் சேர்ந்தேன். பதினெட்டு நாள் வகுப்பு. வகுப்பு நடத்தியவர் நல்ல ஞானஸ்தர். பேசும்போதே பத்தி பிரித்துத் தெளிவாகப் பேசுபவராக இருந்தார். கீதையை நான் அணுகும் விதமும் அவர் அணுகிய விதமும் முற்றிலும் வேறு வேறாக இருப்பினும் புதிதாகச் சில தரிசனங்கள் அந்த வகுப்பில் எனக்குக் கிடைத்தன.
விஷயம் அதுவல்ல. அந்த வகுப்பில் கலந்துகொண்ட பதினெட்டு நாள்களும் தவறாமல் அவர் பேசும்போது குறிப்பெடுத்தேன். அவர் என்னவோ நிறுத்தி நிதானமாகத்தான் ஒவ்வொரு சுலோகத்தையும் விளக்கினார். ஆயினும் என்னையறியாமல் கிறுக்கித் தள்ளித்தான் எழுதிக்கொண்டேன். மொத்த வகுப்புகளும் முடிந்த பின்னர் அந்த நோட்டுப் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தால் எனக்கே என் கையெழுத்து அவமானமாக இருந்தது. ஒரு அவசர ஆத்திரத்துக்குக் கூட இன்னொருவரிடம் எடுத்துக் காட்ட முடியாது என்று தோன்றியது. நல்ல வேளையாக நான் எழுதுவது எனக்கே புரியாமல் போவதில்லை. அதை நினைத்து மகிழ்ச்சியடைய வேண்டியதுதான் என்று எண்ணிக்கொண்டேன்.
ஒருவரது கையெழுத்து அவரது குணத்தை வெளிக்காட்டும் என்பதை நான் நம்பவில்லை. மிக அழகான கையெழுத்தைக் கொண்ட மிக மோசமான மனிதர்களை நான் அறிவேன். அதைப் போலவே மிக மோசமான கையெழுத்துடைய நல்லவர்களையும் அறிவேன். ஆனால், என் கையெழுத்தைக் கொண்டு என்னால் அறிய முடிந்ததெல்லாம் ஒன்றுதான். பழக்கம் விட்டுப் போனால் எதுவானாலும் சீக்கிரம் கெட்டுப் போய்விடும்.
கடிதங்கள் வழக்கில் இருந்த காலத்தில் கையெழுத்து, பேசுபொருளாக இருந்தது. இன்று அதை யாரும் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. மிகவும் மோசமாக எழுதப்படும் கையெழுத்து மட்டும் எப்போதாவது சுட்டிக்காட்டப்படுகிறது. சமீபத்தில் சலம் நாவல் பிரதியில் வாசகர் ஒருவருக்கு ‘அன்புடன்’ என்று எழுதிக் கையெழுத்திட்டிருந்த லட்சணத்தைச் சுட்டிக்காட்டி நண்பர் ரமேஷ் வைத்யா ஃபேஸ்புக்கில் கிண்டல் செய்திருந்தார். சிறிது வெட்கமாக இருந்தது.
சில சமயம் தோன்றும். முயற்சி செய்தால் முடியாத செயல் என்ற ஒன்றில்லை. ஆனால் முழு மூச்சாக இறங்க வேண்டும். அப்படிச் சாதித்தவை பல உண்டு. கணிசமான நேரத்தையும் உழைப்பையும் கோரும் விஷயங்களை இப்போதெல்லாம் இது நமக்குத் தேவையா, எடுப்பதா வேண்டாமா என்று தீரப் பரிசீலிக்காமல் கை வைப்பதில்லை. எத்தனை மூட்டைகளைத்தான் முதுகில் ஏற்றிக்கொண்டே போவது?
கையெழுத்து சார்ந்து எனக்குள்ள கவலையெல்லாம் ஒன்றுதான். இப்போது நேரம் இல்லாவிட்டாலும் பிற்காலத்தில் என் மகள் அவற்றைப் படித்துப் பார்க்க நினைக்கலாம். என் கதைகள், கட்டுரைகள் என்று எதுவும் கையெழுத்துப் பிரதியாக இப்போது இல்லை. பிறர் எழுதியவை, பேசியவை, நான் படித்தவை சார்ந்து எழுதி வைத்த குறிப்புகள்தாம் உள்ளன. அவற்றை அவள் எப்போதேனும் எடுத்துப் படித்துப் பார்க்க வேண்டும் என்பது என் விருப்பம். நான் ஒரு தரமான ‘நோட்ஸ்’ தயாரிப்பாளன். என் குறிப்புகளைக் கொண்டு மிக நிச்சயமாக அந்தக் கருப்பொருள் சார்ந்து நான் அறிந்தவற்றின் முழுமையை எட்டித் தொட்டுவிட முடியும் என்று நம்புகிறேன். அதனைப் பிடித்துக்கொண்டு இன்னும் பரந்த வெளியில் தேடிச் செல்லவும் ஆங்காங்கே வழி சொல்லியிருப்பேன்.
சலம் எழுதுவதன் பொருட்டு சுமார் இரண்டாண்டுக் காலம் அதர்வ வேதத்தையும் அதன் உபநிடதங்களையும் மட்டும் படித்துக்கொண்டிருந்தேன். வீட்டிலும் அலுவலகத்திலுமாகக் கையால் எழுதிய குறிப்புகள், கணினியில் டைப் செய்து வைத்த குறிப்புகள், போனில் எழுதி வைத்த குறிப்புகள், பிடிஎஃப்பில் ஹைலைட் செய்து, கமெண்ட் பாக்ஸில் எழுதியவை, பிடிஎஃப்களிலேயே பக்கவாட்டில் ஆப்பிள் பென்சில் கொண்டு எழுதிய குறிப்புகள், தொடர்பான இணையச் சுட்டிகள் என்று அவற்றை மட்டும் தொகுத்தால் இன்னொரு சலம் அளவுக்குப் புத்தகமே தேறும்.
எக்காலத்திலாவது என் மகள் அவற்றையெல்லாம் எடுத்துப் பார்ப்பாள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. சில குறிப்புகள் அவளுக்குப் புரியும். பெரும்பாலும் புரியாமல் போகப் போகிறதென்பதுதான் வருத்தமாக இருக்கிறது. வாழ்க்கை முழுதும் ஒரு மனிதன் அப்படி என்ன கிறுக்கித் தள்ளியிருக்கிறான் என்கிற ஆர்வத்தை மட்டும் தனக்கென வைத்துக்கொண்டு அந்தப் பிரதிகளைத் தனக்கடுத்த தலைமுறைக்கு அவள் விட்டுச் செல்லக்கூடும்.
அவளது ஓய்வுக் காலத்தில், அதைப் படிக்க முடியாவிட்டாலும் இந்தக் குறிப்பைப் படிப்பாள் அல்லவா? என் புத்தகங்களில் என்னையும் என் நோட்டுப் புத்தகங்களில் என் அக்கறைகளையும் சேமித்து வைத்திருக்கிறேன் என்பதாவது அப்போது அவளுக்குப் புரியும்.
இந்த இரண்டுக்கும் நடுவே உள்ள குறுகிய இடைவெளியில்தான் வாழ்ந்து தீர்த்துக்கொண்டிருக்கிறேன்.
All rights reserved. © Pa Raghavan - 2022
May 4, 2025
பயண இலக்கியம்
குலசேகரபுர க்ஷேத்திரமென்னும் குரோம்பேட்டையிலிருந்து தெற்கே பதினைந்து மைல்களுக்கு அப்பால் உள்ள காட்டாங்குளத்தூர் என்னும் தலத்துக்கு, பாலிய சிநேகிதன் ஒருவனது குமாரத்தியினுடைய கலியாண நிமித்தம் சென்று வர வேண்டியிருந்தது. முன்னொரு காலத்தில் வேதாசலபுரமென்றும் பின்னொரு காலத்தில் மறைமலை நகரென்றும் அழைக்கப்பட்ட காட்டாங்குளத்தூருக்கு சாலை மார்க்கமாக அல்லாமல் மின்சார இரயில் வண்டி மார்க்கமாகப் பயணப்பட முடிவு செய்தேன்.
இந்நாள்களில் புறநகர் இரயிற் பயணங்களை மேற்கொள்வதென்பதே எனக்கு அரிதாகிப் போய்விட்டது. எங்கு செல்வதென்றாலும் இரு சக்கர வாகனத்திலோ ப்ளெசரிலோ செல்லும் வழக்கம் உண்டான பின்பு புறநகர் இரயிற் பயணம் நினைவை விட்டே அகன்றுவிட்டிருந்தது. ‘நீங்கள் அவ்வாறு இருத்தல் ஆகாது. மக்களோடு மக்களாகப் பயணஞ்செய்து திரும்புவதன் சந்தோஷத்தினை இழக்கின்றீர்கள். தவிர பிரயாண நெரிசலில் சிக்காது சென்று வரவும் அதுவே சரியான உபாயமுமாகும்’ என்று மனையாளும் பரிந்துரைத்தபடியினாலே காட்டாங்குளத்தூர் கலியாண வைபவத்துக்கு இரயில் பயணம் மேற்கொள்வதென்று தீர்மானஞ் செய்துகொண்டேன்.
விடிகாலை சூர்யோதயத்துக்கு மிகவும் முன்னால் ஐந்து மணி அளவிலேயே எழுந்து ஸ்நானபானஞ்செய்து, ஐந்தே முக்காலுக்குத் தயாரானேன். என் மனையாளே இரு சக்கர வாகனத்தில் என்னை ஏற்றிச் சென்று இரயிலடியில் இறக்கிவிட்டார். முன்னொரு காலத்திலே நான் குரோம்பேட்டை என்னும் குலசேகரபுரத்தின் இரயிலடிக்கு நாடோறும் படியேறி இறங்குபவனாக இருந்ததெல்லாம் நினைவைக் கவ்வி ஆக்கிரமித்துக் குதியாட்டம் போடத் தொடங்கியது. மூன்று பத்தாண்டுகள் கழிந்த பிற்பாடும் ரயிலடியின் தோற்றத்தில் எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை என்பதைக் காண அதிசயமாயிருந்தது. இடப்புறமொன்றும் வலப்புறமொன்றுமாக இரண்டு நடைமேடைகள் புதிதாக எழுப்பப்பட்டிருந்தன. ஜனங்கள் விண்ணளாவிய படிகளில் ஏறி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவதிப்படாதிருக்கும் பொருட்டு சர்க்கார் எப்போதோ தானியங்கி மின்சாரப் படிக்கட்டுகளைக் கட்டுவித்திருக்க வேண்டும். அதை நமது கலாசாரப்படிப் பயன்கொள்ளத் தகாததாக உருமாற்றிக் கழட்டி வைத்திருந்தனர். நான் நீண்ட பெரும் படிகளேறி மேலே சென்று பயணச் சீட்டு வாங்குமிடத்தை அடைந்தேன்.
காட்டாங்குளத்தூருக்குச் சென்று திரும்பும் விதமான சீட்டொன்றைக் கோரி, நூறு உரூபாத் தாளினைச் சீட்டுப் பணியாளரிடம் நீட்டியபோது, ‘சில்லறையாக இருபது உரூபா இருந்தால் கொடுங்கள்’ என்று சொன்னார். இது எனக்குச் சிறிது வியப்பையும் மேலதிகக் குழப்பத்தையும் விளைவித்து, ‘எத்தனை உரூபா?’ என்று கேட்டு உறுதி செய்துகொள்ளப் பார்த்தேன்.
‘போகப் பத்தும் திரும்பி வருவதற்குப் பத்துமென ஆக மொத்தம் இருபது உரூபா’ என்று சீட்டுப் பணியாளர் மீண்டும் சொல்லவே, இருபது உரூபாக்களை எண்ணிக் கொடுத்துச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, இரயில் வண்டி வந்து நிற்கும் நடைமேடையை நோக்கி இறங்கத் தொடங்கினேன்.
கால மாற்றத்தில் விலைவாசி எல்லாம் ஆகாசத் தொலைவினை நோக்கிச் சென்றுவிட்டிருந்தாலும் சாமானிய மக்கள் செலவுச் சுமையின்றிப் பயணஞ் செய்வதன் பொருட்டு இரயிற்பாதைக் கட்டணத்தை மட்டும் பெரிய அளவினிலே உயர்த்தாது விட்டு வைத்திருக்கும் சர்க்காரின் பெரிய மனத்தினை எண்ணிச் சிலாகித்த வண்ணம் இரயில் வருவதற்காகக் காத்திருக்கலானேன்.
சில மணித்துளிகளில் சென்னை கடற்கரையிலிருந்து திருக்கச்சி மாநகர் வரை செல்லும் இரயில் வண்டியொன்று வந்து நின்றது. ஏறியதும் சன்னலோர இருக்கை சித்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். இவ்வாறு சன்னலோர இருக்கையில் அமர்ந்து இரயிற் பிரயாணஞ்செய்து நெடுங்காலமாகிவிட்டதை நினைத்துக்கொண்டேன். காலைச் சூரியனின் முதற் கிரணங்கள் படரத் தொடங்கிவிட்டிருந்தன. புள்ளினங்கள் வானில் விரைய, சில்லென்ற காற்று மேனியில் மோத, இரயிற் பயணம் ஆரம்பமானது.
வண்டி சானடோரியம், தாம்பரம் என்கிற இரண்டு நிறுத்தங்களைக் கடந்து பயணப்படத் தொடங்கியபோது, காலை நேர ஆரோக்கிய உணவெனச் சொல்லி அவித்த நிலக்கடலை விற்றுக்கொண்டு வந்தார் ஒரு நாரி. முன்பெல்லாம் பழைய செய்தித் தாளில் பொட்டணம் மடித்துத் தருவார்கள். இன்றோவெனில் காகிதக் கிண்ணத்தில் அவித்த நிலக்கடலையைக் குவித்துத் தருகிறார்கள். அந்த விடிகாலைப் பொழுதினிலும் அவித்த கடலையை விரும்பி உண்ணும் மக்கள் இருப்பதைக் கண்டு மனத்தின்கண் குறித்துக்கொண்டேன். அவ்வண்ணமே புஷ்பங்கள் விற்கும் பெண்களும் பாடசாலைகளுக்குச் செல்லும் பிள்ளைகளுக்குப் பயன்படும் பென்சில், பேனாக்களை விற்போரும் கூவி விற்றுச் சென்றதைக் கண்டேன். அவர்களைப் பொருட்படுத்தாது, பெட்டியிலிருந்தோர் அவரவர் கைப்பேசியில் கண்ணுங்கருத்துமா யிருந்ததையுங் கண்டேன்.
இரயில் வண்டி பெருங்களத்தூர் நிறுத்தத்தை நெருங்கியது. பண்டொரு காலத்தில் பிற்காலப் பல்லவர்களுக்கும் மிச்சம் மீதமிருந்த பிற்காலச் சோழர்களுக்கும் யுத்தம் மூண்டபோது அது நிகழ்ந்த பெரும் களமாக இருந்தபடியினாலே அந்தத் தலத்துக்குப் பெரும் களத்தூர் என்ற பெயர் உண்டானது. (இதனைத் திரித்து, சோழர்கள் ஆண்ட காலத்திலே பெரிய குளமொன்று இந்த இடத்தினில் இருந்தபடியினாலே இது பெருங்குளத்தூர் என அழைக்கப்பட்டதாகவும் பின்னர் அது மருவி பெருங்களத்தூரானதாகவும் சொல்வர். ஆயினும் அதற்கு சரித்திர சாட்சியங்கள் கிடையா. சரிதான், பல்லவ-சோழ யுத்த களேபரத்துக்கேனும் சரித்திர சாட்சியம் உண்டாவென்பீரானால் அதுவும் கிடையா.) ஆனால் இந்த ஊரினையும் கமலகாசன் என்னும் கலாவிற்பன்னர் உருக்கொண்ட களத்தூரினையும் போட்டுக் குழப்பிக்கொள்ளல் ஆகாது. வெறும் களத்தூர், முதுகளத்தூர், பெருங்களத்தூர், சிறுகளத்தூர் என மாகாணமெங்கும் பல போர்களின் நினைவாகக் களப்பெயர் பூண்ட தலங்கள் உண்டு.
பெருங்களத்தூரினின்று புறப்பட்ட இரயில் வண்டி அடுத்தபடியாக வண்டலூர் நிறுத்தத்தில் நின்றது. சுற்றிலும் வனம் அடர்ந்த மலைகளும் சிறியதொரு நதியும் ஓடிய பிராந்தியமாகப் பொது யுகம் இரண்டாம் நூற்றாண்டு வரையிலும் இத்தலம் திகழ்ந்திருக்கிறது. அதன் பிறகு வனம் சுருங்கி, மலைகள் நாலாபுறமும் பெயர்க்கப்பட்டு, நதி சேர்த்த வண்டலெல்லாம் கட்டுமானப் பணிகளுக்கென்று எடுத்துச் செல்லப்பட்ட பின்பு, நதியும் தீர்ந்துபோய் விடவே, சிறியதொரு கானுள்ள பிராந்தியமாகச் சுருக்கி வடிவமைக்கப்பட்டது. கால மாற்றத்தில் இவையெல்லாம் தவிர்க்க இயலாததன்றோ? இருப்பினும் நமது சரித்திரம் வேர் கொண்ட புவியியலினை முற்றிலுமாக மறந்துவிடுதல் தகாதென்ற எண்ணத்தில் சர்க்கார் இந்தத் தலத்தினிலே கானுயிர்களுக்கென ஒரு பூங்கா அமைத்துச் செம்மையாகப் பராமரித்து வருகின்றார்கள். சிங்கம், புலி போன்ற கொடுமிருகங்களிலிருந்து நாய் பூனை போன்ற மென்மிருகங்கள் ஈறான ஐயறிவினங்கள் இந்தப் பூங்காவிலே சௌக்கியமாக வாசஞ்செய்து வருகின்றன.
வண்டலூர் நிறுத்தத்தினை அடுத்து வந்தது ஊரப்பாக்கம் இரயில் வண்டி நிறுத்தம். இது காலத்தால் மிகவும் பிற்பட்ட குடியிருப்புப் பிராந்தியமென அறியப்படுவது. மக்கட்தொகைப் பெருக்கம் மிகத் தொடங்கி, வடக்கே சென்னை மாநகரமும் தெற்கே செங்கற்பட்டு மாநகரமும் இடுப்பூதிப் போக ஆரம்பித்தபோது இரு பெரும் நகரங்களுக்கு இடைப்பட்ட மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலப் பரப்பும் கானிழந்து ஆங்காங்கே மேகத் திட்டுகளைப் போலே கான்கிரீட்டெனும் கவின்மிகு கற்கோலம் பூணத் தொடங்கியதன் விளைவாக உற்பத்தியான நகரங்களுள் இதுவும் ஒன்றாகும். இதனையடுத்த கூடுவாஞ்சேரி என்கிற இரயில் நிறுத்தப் பிராந்தியமும் அப்படியே உருவானது என்பதும் நினைவிற் கொள்ளத் தக்கது. இப்புதிய நகரங்களின் இறுதியொட்டாக வருகின்ற பாக்கம், சேரி போன்ற பதங்களைக் கூர்த்து நோக்குவோமானால் ஆதியிலே இவ்விடங்கள் எவ்விதமாக இருந்தனவென்பது தெள்ளெனப் புலப்படும்.
எட்டு மணி ஆவதற்கு எட்டு மணித்துளிகள் இருந்தபோது ஒரு வழியாக இரயில் வண்டி காட்டாங்குளதூர் நிறுத்தத்துக்கு வந்து சேர்ந்தது.
இறங்கும்போதே காட்டாங்கொளத்தூர் என்ற பிழைபட்ட பெயர்ப்பலகை கண்ணில் தென்படவே, சிரித்துக்கொள்ளும்படியானது. பெருங்களத்தூரைப் பெருங்குளத்தூராக்கியதைப் போலவே காட்டாங்குளத்தூரைக் காட்டாங்கொளத்தூராக்கிவிட்டிருக்கின்றார்கள்!
முன்னொரு காலத்தில் இந்த ஊரின் சிறப்பைச் சொல்வதற்குச் சிவானந்த குருகுலம் எனும் ஓர் ஆசிரமம் இருந்தது. ஆசிரமம் இருக்கும் இடத்தைச் சுற்றிப் பெருங்காடாக மட்டுமே இருக்கும். மாலைப் பொழுதில் நரிகளைப் பார்வையிடலாம். சற்று உள்ளடங்கிச் சென்றால் வேறு சில காட்டு மிருகங்களும் காணக் கிடைக்கும் என்றாலும் மிருகங்களைத் துன்பப்படுத்தலாகாது என்னும் எண்ணத்தில் நான் சென்றதில்லை. பிற்பாடு மக்கள் இங்கெல்லாம் குடியேறத் தொடங்கிய பின்பு வீடுகளும் சாலைகளும் விளக்குகளும் வணிக வளாகங்களும் கலாசாலைகளும் இதர நவீனங்களும் ஆமைபோலப் புகுந்து நிறைந்துவிட்டிருக்கின்றன. மிருகங்கள் இருந்த இடமும் தெரியாமல், சென்ற இடமும் தெரியாமல் போய்விட்டன.
காணாத காட்சியெல்லாம் கண்டு ரசித்த வண்ணம் இரயில் நிலையத்தினின்றும் வெளியேறிச் சாலையை அடைந்தேன்.
கண்ணெட்டும் தொலைவிலேயே நான் போகவிருந்த கலியாண மண்டபம் இருந்தது. மகிழ்ச்சியுடன் அதனை எட்டிப் பிடித்து, வைபவத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திவிட்டு, பாலிய நண்பர்களையெல்லாம் சந்தித்துச் சிறிது நேரம் சல்லாபித்துக்கொண்டிருந்தேன். பிரிய மனமின்றிப் பிரிந்து மீண்டும் காட்டாங்குளத்தூர் இரயில் நிலையத்தை அடைந்தபோது நேரம் ஒன்பதாகியிருந்தது. செங்கற்பட்டிலிருந்து சென்னைக் கடற்கரை நோக்கிச் செல்லும் இரயில் வண்டி வந்ததும் ஏறிக்கொண்டேன்.
ஒன்றரை நாழிகைப் பொழுதுக்குள் குரோம்பேட்டை இரயில் நிலையத்தை வந்தடைந்துவிட முடிந்தது. பேசி வைத்திருந்தாற்போலே மனையாள் மீண்டும் இரு சக்கர வாகனத்துடன் இரயிலடிக்கு வந்து காத்திருந்தாள். எனவே அதிலேறி இல்லம் வந்தடைந்து, சென்று வந்த சங்கதிகளையும் க்ஷேமலாபங்களையும் அவளிடம் சொல்லிக் களித்தேன். குறுக்கிடாமல் கேட்டுக்கொண்டிருந்துவிட்டுப் பிறகு அவளொரு முத்தாய்ப்பு வைத்தாள். அதுவாவது:-
‘இருவது ரூவாய்ல மேட்டர் முடிஞ்சதுல கிளுகிளுப்பாகி இவ்ள பேசுற. இதே கார் வெச்சிகிட்டுப் போயிருந்தேன்னா ஆயிர்ருவா பழுத்திருக்கும். அப்ப இந்த வாயி திறக்கும்?’
All rights reserved. © Pa Raghavan - 2022


