எதற்கு இந்தப் புத்தகம்?

Pa Raghavan

நீ வேறு, நான் வேறு:
பலூசிஸ்தான் விடுதலைப் போராட்ட வரலாறுபாலஸ்தீனத்து முஸ்லிம்கள் வேறு, இஸ்ரேலிய யூதர்கள் வேறு. அப்படித்தான் பலூசிஸ்தானில் வசிக்கும் பலூச்சிகள் வேறு, பாகிஸ்தானில் வசிக்கும் முஸ்லிம்கள் வேறு.1948 ஆம் ஆண்டிலிருந்து பாலஸ்தீனத்து முஸ்லிம்களுக்குச் சிக்கல் தொடங்கியது. இன்றுவரை அது தொடர்கிறது. அதே ஆண்டுதான் பலூசிஸ்தான் மக்களுக்கும் பிரச்னை ஆரம்பித்தது. இன்னும் ஓயவில்லை.அங்கே நடக்கும் அதே குடியேற்ற அரசியல் இங்கும் நடக்கிறது. அங்கே நடக்கும் அதே இனப்படுகொலை இங்கும் நடக்கிறது. ஒரே வித்தியாசம், அங்கே  வெளிப்படையாக நடக்கிறது; பலூசிஸ்தானில் என்ன செய்தாலும் பாகிஸ்தான் அதை வெளியே சொல்வதில்லை.பாலஸ்தீனத்தின் தனிநாடு கோரிக்கைக்கு இன்று பல்வேறு உலக நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. பலூசிஸ்தானின் தனிநாடு கோரிக்கை இன்னும் கோரிக்கை அளவிலேயேதான் இருக்கிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்க ஆதரவு இருக்கிறது. பாகிஸ்தானுக்கும் அமெரிக்க ஆதரவு இருக்கிறது.இன்றைய சூழ்நிலையில், தாற்காலிகமாகவாவது பாலஸ்தீனத்தில் அமைதி ஏற்படலாம்.  பலூசிஸ்தானில் கண்ணுக்கெட்டும் தொலைவில் அதுவும் சாத்தியமில்லை. மிதிபடுவது ஒன்றே விதியாகிப் போன இனம் அது.இன்றைக்குப் பத்து வரிகளில் பலூசிஸ்தானின் நிலைமையை எடுத்துச் சொல்லி, பாலஸ்தீனத்துடன் அதை ஒப்பிட்டுவிட முடிகிறது. இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குமுதத்தில் பாகிஸ்தானின் அரசியல் வரலாற்றை எழுதிக்கொண்டிருந்தபோது எவ்வளவு முயற்சி செய்தும் பலூசிஸ்தானைக் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இப்போதுமேகூட பலூச்சிகள் எக்ஸ் தளத்தில் நேரடியாகத் தங்கள் பிராந்தியத்தில் நடப்பதைத் தொடர்ந்து பதிவு செய்து வருவதனால் மட்டுமே முடிகிறது. எக்ஸ் தளத்தின் மூலமே அவர்களைத் தொடர்புகொண்டு பேசவும் முடிகிறது. இல்லாவிட்டால் இப்போதும் அது ஒரு மர்ம தேசம்தான்.பலூசிஸ்தான் குறித்து அறிவதற்கான முயற்சிகளை முதல் முதலில் 2001 ஆம் ஆண்டு மேற்கொண்டேன். உண்மையிலேயே அன்றெனக்குக் கிடைத்தது படுதோல்வி மட்டுமே. பிறகு பாகிஸ்தான் உளவுத் துறை பற்றிய புத்தகத்துக்கான தகவல் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது இந்திய உளவுத் துறை பலூசிஸ்தானில் மேற்கொண்ட சில நடவடிக்கைகள் – அவற்றை முறியடிப்பதற்குப் பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகள் குறித்த பாகிஸ்தான் தரப்புத் தகவல்கள் சில கிடைத்தன. அவற்றின் நம்பகத்தன்மை மிகவும் கேள்விக்குரியவை எனத் தோன்றியது. இந்திய உளவுத் துறையில் பணியாற்றியவர்கள் யாராவது  நேரடியாகப் பேசினாலொழிய உண்மை நிலவரம் தெரிய வாய்ப்பில்லை என்று நினைத்தேன். அதற்கான சில முயற்சிகளையும் மேற்கொண்டேன். ஆனால் நான் எதிர்பார்த்த அளவுக்குப் போதிய தகவல்களைப் பெற முடியவில்லை. இந்தியத் தரப்பு – பாகிஸ்தான் தரப்பு எனச் சில வாதங்களைப் பெற முடிந்ததே தவிர பலூச்சிகளின் உண்மையான பிரச்னையின் வேர் புலப்படவேயில்லை.கடந்த மே மாதம் ஒன்பதாம் தேதி எக்ஸ் தளத்தில் மிர் யார் பலோச், பலூசிஸ்தானின் விடுதலையை அறிவித்ததை அடுத்துத் தொடர்ச்சியாக உலகெங்கும் பரவி வசிக்கும் பலூச்சிகள் திரை விலக்கி வெளியே வந்து பேசத் தொடங்கிய பின்னர்தான் உண்மையில் அங்கே என்ன நடக்கிறது என்பதே புலப்பட ஆரம்பித்தது. பலூசிஸ்தானைச் சேர்ந்த சில மனித உரிமைப் போராளிகள், பலூச்சி தேசியவாத இயக்கங்களைச் சேர்ந்த சில மிதவாதிகள் மூலம் கிடைத்த தகவல்கள் இந்தப் புத்தகத்தை எழுதப் பெருமளவு உதவின. BLAவின் பரப்புரைக் குழு தொழில்முறை நேர்த்தியுடன் இன்றைக்குச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தாக்குதல் சம்பவத்தையும் அதன் காரணங்களுடன் விளக்கி, அதில் சம்பந்தப்பட்ட போராளிகளின் புகைப்படங்கள், அவர்களைப் பற்றிய தகவல்களுடன் வெளியிடுகிறார்கள். பலூசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் இதுவரை செய்து வந்திருக்கும் அத்தனை அட்டூழியங்களும் இன்றைக்கு ஆவணங்களாக்கப்பட்டுவிட்டன. சில  பத்திரிகையாளர்கள்-ஆய்வாளர்களின் நேரடி அனுபவங்கள் புத்தகமாகவும் வெளிவரத் தொடங்கியுள்ளன. இனி, அங்கே விடிய வேண்டியதுதான் மிச்சம்.தமிழில் பலூசிஸ்தான் பிரச்னை குறித்த விரிவான, சரியான அறிமுகத்தைத்  தரவேண்டும் என்று நினைத்தேன். பலூச்சிகளின் வரலாற்றுக்குள் முழுதாக இறங்கிப் பார்த்தால், அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் பாலஸ்தீனத்து முஸ்லிம்கள் அனுபவிக்கும் கொடுமைகளுக்குச் சற்றும் குறைவற்றதென்று தோன்றும். அங்கே அவர்கள் முஸ்லிம்கள் என்பதால் அவதிப்படுகிறார்கள். இங்கே இவர்கள் முஸ்லிம்களே ஆனாலும் பலூச்சிகளாக இருப்பதால் அவதிப்படுகிறார்கள். மதமும் இனமும் அரசியலாகும்போது வலியும் வேதனையும் சிறுபான்மையினருடையவை ஆகிவிடுகின்றன. மனித குலம் தோன்றிய நாளாக இதுதான். இப்படித்தான். இலங்கை ஆனாலும் பலூசிஸ்தான் ஆனாலும் உக்ரைன் ஆனாலும் பாலஸ்தீன் ஆனாலும் ஒரு தரப்பை மிதித்துத்தான் பெருந்தரப்பு பிழைத்துக் கிடக்கிறது. நாம் செய்யக்கூடியதெல்லாம் வரலாற்றைச் சரியாகப் புரிந்துகொண்டு சாய்வுகளற்று அணுக முயல்வது மட்டும்தான்.இந்தப் புத்தகம் அதற்கு உதவும் என்று நம்புகிறேன். புத்தகம் வரும் 13 ஆம் தேதி திங்களன்று வெளியாகிறது.30 சதவீதச் சலுகை விலையில் முன்பதிவு செய்ய இங்கே செல்லவும்.

Share

All rights reserved. © 2004-2025 Pa Raghavan .

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 09, 2025 19:04
No comments have been added yet.