இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 81

November 7, 2018

“அப்புறம் இவன மட்டும் ஏன் தடுக்கிறீங்க"

அன்பின் மாரிசெல்வராஜ்,வணக்கம்.மிச்சம் உள்ள ஒன்பது படங்கள் எவை எவை என்று கேட்டுவிடக்கூடாது என்ற நிபந்தனையோடு ஒன்றை சொல்கிறேன்,நான் பார்த்த நல்ல பத்து படங்களுள் “பரியேறும் பெருமாள் BA.BL, மேல ஒரு கோடு” ம் ஒன்று.வழக்கமாக திரைப்படங்கள் குறித்த அபிப்பிராயங்களை எழுதக் கூடியவன் அல்ல நான். பரியேறும் பெருமாளைப் பார்த்த பிறகு அதுகுறித்து எழுதாமல் கடக்க முடியவில்லை. என்னளவில் இதுவே இந்தப் படத்தின் வெற்றிக்கான அடையாளங்களுள் ஒன்றென்று கருதுகிறேன்.1980 இடைஜூனில் தொடங்கிய எனது கல்லூரி வாழ்க்கையின் முதல் நாளில் எங்கள் துறைத் தலைவரான ஜூடித் லூயிஸ் அம்மாவை ”டீச்சர்” என்று அழைத்தவன் நான். இது போதும், எனக்கும் இந்தப் படத்திற்கும் இடையிலான கெமிஸ்ட்ரி எத்தகையதானதாக இருக்கும் என்பதை உங்களால் எளிதாக ஊகிக்க முடியும்.முதன்முறையாக ஒரு பையன் அதுவும் ஆங்கில இலக்கிய வகுப்பு பிள்ளை தன்னை “டீச்சர்” என்று அழைத்ததைக் கேட்டு அதிர்ந்த அந்தத் தாயார் ஒரு புன்னகையோடு அதைக் கடந்த காட்சியை பரியேறும் பெருமாள் தனது பேராசிரியை அவர்களை டீச்சர் என்று அழைக்கும் காட்சி எனக்குள் மீண்டுமொருமுறை கொண்டு வந்தது. இந்தப் படத்தை நான் நான்குமுறை பார்த்ததற்கான காரணங்களுள் மிக முக்கியமான காரணம் இந்தக் காட்சி.பொதுவாக தமிழ்வழியில் பொதுப்பள்ளிகளில் படித்து கல்லூரிவரும் பிள்ளைகளை அதுவும் தலித் பிள்ளைகளை இந்த சமூகம் பார்க்கிற பார்வை கோணலான பகடியாகத்தான் இருக்கிறது. அந்தக் குழந்தைகளுக்கு கல்லூரியிகளில் கிடக்கும் சவால்களை சிக்கல்கள் கூர்மையானவை. அதற்கானத் தீர்வுகளை சொல்லாவிட்டாலும் பரவாயில்லை அவற்றை உள்ளது உள்ளபடி உள்வாங்கி சமூகத்தின் பார்வைக்கு வைக்கிற வேலையையேனும் திரைப்படங்கள் செய்தால் பரவாயில்லை. அந்தக் குழந்தைகள் எதிகொள்கிற நுட்பமான சவால்களை மூன்றாம்தர பகடியாக மாற்றி சமூகத்தின் அரிப்பை சொரிந்துவிடுகிற வேலையையே பல திரைப்படங்கள் செய்கின்றன.இந்தப் படத்தில் ஒரு காட்சி,ஆங்கிலப் பேராசிரியர் “A” வில் ஆரம்பிக்கும் நூறு சொற்களை எழுதிவருமாறு இம்போசிஷன் தருவார். அதை எழுதியது யார் என்பதெல்லாம் சுவாரிசியமான வேறு விஷயம். அதைக் கொடுப்பதற்காக பேராசிரியரிடம் போனவர், “ சார், வீட்டுப்பாடம்” என்பார். ஒரு சட்டக் கல்லூரியில் ஒரு பேராசிரியர் இம்போசிஷன் எல்லாம் கொடுக்க முடியுமா? என்பதெல்லாம் கடந்து கிராமத்துப் பொதுப்பளிப் பிள்ளைகளின் எதார்த்தமான, பவுடர் பூசாத இயல்பு நிலையை அனுபவித்து வைத்திருக்கிறீர்கள்.ஆணவக் கொலைகள் எப்படி நடக்கின்றன என்பதை மிக நுட்பமாக படத்தில் வைத்திருக்கிறீர்கள்.ஒரு பெண் தலித் பையனோடு தொடர்ந்து அன்போடு சுற்றிக்கொண்டிருக்கிறாள் என்பதற்காக அவளை ஓங்கி அறைகிறான் அவளது அண்ணன். அவள் சுவற்றிலே மோதி மயங்கி விழுகிறாள். செத்து விட்டாள் என்று தவறாகக் கருதுகிறார்கள். அந்தப் பெரியவரை அனுகுகிறார்கள். அவர் உள்ளே போகிறார். அந்தக் குழந்தையோ உயிரோடு இருக்கிறாள். அவளை முதலில் கொலைசெய்து அடுத்ததாய் அவளை தற்கொலை செய்துவிட்டு வெளியே சாந்தமாய் வருகிறார்.ஒருக்கால் அவள் உயிரோடு இருப்பது தெரிந்திருந்தால் அவளது பெற்றோர் அவளை கொன்றிருக்க சம்மதிக்காமல்கூட இருந்திருக்கக்கூடும்.அண்ணன்காரன் அடித்து செத்துப்போனவளை தற்கொலையாக்கி வந்திருக்கிறார் என்பதுதான் அவர்களது நினைப்பு. அதுதான் அவருக்கு அந்தக் குடும்பம் கொடுத்த அசைன்மெண்ட். அப்படியிருக்க உயிரோடு இருக்கும் அந்தக் குழந்தையை ஏன் அவர் கொன்றுபோட வேண்டும்?இந்த இடத்தில் இன்னொரு காட்சியைப் பொறுத்திப் பார்ப்பது சரியாக இருக்கும்.பரியேறும் பெருமாளை கொலைசெய்ய வேண்டிய அசைன்மெண்ட்டோடு அந்தப் பெரியவரை அணுகுகிறார்கள். அவனது படத்தைப் பார்த்ததும் சொல்வார்,“அய்யோ, இந்தப் பையன எனக்குத் தெரியுமேப்பா. லா காலேஜ்ல படிக்கிறான். நல்லப் பையனாச்சே. நான் வேணா ஒரு தரம் பேசிப் பார்க்கவா?”ஆக, அவருக்கும் கொலை செய்வதில் தயக்கமெல்லாம் இருக்கவே இருக்கிறது. பிறகு ஏன் கொலகளை செய்துகொண்டே இருக்கிறார்?அதற்கும் அந்தக் காட்சியிலேயே விடை இருக்கிறது.அவர் அந்த அசைன்மெண்டுக்கு ஒத்துக் கொண்டதும் பணம் கொடுக்கிறார்கள். வாங்க மறுக்கிறார். இதை குலதெய்வத்துக்கு செய்யற வேலையா நினைத்து செய்வதாகக் கூறுகிறார்.இந்த இடம்தான் மிக நுட்பமான, இதுவரை எந்தப் படத்திலும் இவ்வளவு அழுத்தமாக சொல்லப்படாத விஷயம்.கொஞ்சம் வெளியே இன்னொரு காட்சிக்குப் போய் வருவது இந்த நுட்பத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாய் புரிய வைக்கும் என்று நம்புகிறேன்.பரி பேருந்தில் ஏறுகிறான். அந்தப் பெரியவருக்குப் பக்கத்தில் இருக்கை இருக்கிறது. கூப்பிட்டு அமரச் சொல்லி அவனோடு பேச்சுக் கொடுக்கிறார். அவனது ஊரைக் கேட்டதும் அவன் ஒரு தலித் பையன் என்பதைத் தெரிந்து கொள்கிறார். அடுத்த கணமே ஒருவித அசூசையோடு எழுந்து கொள்கிறார்.அவனைக் கொன்றுபோட சொல்கிறபோது அவனை நல்ல பையன் என்கிறார்.ஆக கொலை என்பது அவர் ஆசைப்பட்டோ, பணத்திற்காகவோ செய்வதில்லை.அவருக்குள் விதைக்கப்பட்டு பெரிதாய் வளர்ந்து கிடக்கும் தூய்மைவாதமே அவரை இத்தனைக் கொலைகளை செய்ய வைக்கிறது. தங்களது குலப் பிள்ளை தலித் பிள்ளையைத் திருமணம் செய்தால் தனது ஜாதி அசுத்தப்பட்டு விடும். அது குல தெய்வத்திற்கு அசிங்கம். சாமி அசிங்கப்படுவதை விட ஆணவக் கொலை செய்து அதைத் தடுத்துவிடுவது உத்தமம். தனது குடும்பத்தினால் தமது தெய்வமும் சாதியும் அச்சிங்கப்படுவதை தம்மால் தடுக்க முடியாவிட்டால் குடும்பத்தோடு தற்கொலை செய்வதுதான் பரிகாரம் என்று அப்பாவி சாதி இந்துக்களிடம் விதைக்கப்பட்டிருக்கிறது.தூய்மைவாதம் என்பது ஒரு சித்தாந்தம். அது அசிங்கமானதொரு சித்தாந்தம். அதனோடு சண்டைபோடுவதும் மாற்றுவதும்தான் சாதி அழிப்பின் முதல் வேலையாக இருக்க முடியும் என்பதை இந்தப் படம் தெளிவாக எடுத்து வைக்கிறது.பரியின் தந்தையை எவ்வளவு உசிரோட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறீர்கள். அவரது முதல்வரோடான சந்திப்பு அருமை. அதுவும் போனதடவை வேறொரு மனிதனை அப்பா என்று அழைத்து போயிருக்கிறான் என்பதை முதல்வர் சொன்னதுன் அதை எதிர்கொள்கிற அவரது பாங்கும், வெளியே வந்த்தும் தனது மகனிடம் “பயந்துட்டாங்கப்பா” என்று கூறும் வெகுளித்தனமும், அதை ஒரு புன்னகையோடு பரி எதிர்கொள்கிற இடமும் என்னை கலங்க வைத்தன மாரி.விசாரனை முடிந்ததும், ”படிச்சு பெரிய ஆளா வரனும். எல்லோரும் உன்னை மதித்து தொழனும். போ, ஏதாவது செய்” என்று கல்லூரி முதல்வர் சொல்வது எனது குரலும் மாரி. என் பள்ளிக் குழந்தைகளை நான் அப்படித்தான் வளர்க்கிறேன்.இதை சொன்னதும் பயந்துபோன பேராசிரியை இந்த வழிகாட்டுதலால் அவன் ஏதாவது தப்பு செய்துவிடப் போகிறான் என்று அச்சப்படுகிறார். அப்போது சன்னமாய் ஒரு உரையாடலை வைத்திருப்பீர்கள்,“அவங்கள உங்களால திருத்த முடியுமா?”முடியாது என்பதாக அந்தப் பேராசிரியர் தலை அசைப்பார்.“அப்புறம் இவன மட்டும் ஏன் தடுக்கிறீங்க? தற்கொல செய்துக்கறதவிட அவன் போராடிச் சாகட்டும்”செம, செம, செமடா மாரிப்பையா.பரி முன்னால் உட்கார்ந்திருப்பான். அந்தப் பையன் அது தன் இடம் என்பான்.“பட்டா போட்டிருக்கா?” என்பான் பரி.“ஆமா” என்பான் அந்தப் பையன்இது அந்தப் பையனுக்கும் பரிக்கும் இடையேயான உரையாடல் அல்ல மாரி. ஆதிக்க சாதிக்கும் ஒடுக்கப்பட்ட சாதிக்கும் இடையேயான உரையாடல்.”நீ போய் பின்னாடி உட்கார்” என்பான் பரி“நீ சொல்லி நான் கேட்கனுமோ?” என்பான் அந்தப் பையன்.அந்தக் கேள்வி ஆதிக்க சாதியின் திமிர்க் கேள்வி“அப்ப நீங்க சொன்னா மட்டும் நாங்க ஏன் கேட்கனும்” என்ற ஒடுக்கப்பட்டத் திரளின் கோவம் கலந்த பதிலாகவே இந்தப் படத்தைப் பார்க்க முடிகிறது.அவளது தந்தையிடம்,“அவ ரொம்பக் கொடுத்து வச்சவ சார். அவ நெனச்சத எல்லாம் எங்க வேணாலும் எப்ப வேணாலும் பேச முடியுது. ஆனா எனக்கு அப்படி இல்ல சார்” என்பான்.“நீங்க நீங்களா இருக்கற வரைக்கும் நான் நாயாதான் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிற வரைக்கும் மாறாது சார்”என்பது ஆதிக்க சாதியோடான நமது ஒரு வகை உரையாடல் மாரி.ஆதிக்க சாதியை எதிர்கொள்ளும் போது1) நாம வாங்கிவந்த எழுத்து இது என்று எதையும் தாங்குவது என்பது ஒரு நிலை
2) அடிச்சா திருப்பி அடிப்பேன் என்பது ஒரு நிலை
3) அவனோடு நியாயத்தை உரையாட முயல்வது என்பது ஒரு வகை
4) தவிர்க்கவே இயலாதபோது திருப்பியும் அடித்துக் கொண்டே அவனோடன உரையாடலையும் தொடர்வது என்பது அபூர்வமான நிலைஅதை நீங்கள் சரியாய், மிகச் சரியாய் கையாள்வதாகப் படுகிறது.பள்ளித் தேர்வறைக் காட்சியில் இன்னும் கவனமாய் இருந்திருக்கலாம். சாதியை ஒழிப்பதும் பொதுக் கல்வியைக் காப்பாற்றுவதும் மிக முக்கியம். பொதுப் பள்ளிகளில் இப்படித்தான் தேர்வு நடக்கும் என்று சித்தரிப்பது பொதுப்பள்ளிகளை மூடிவிட வேண்டும் என்று துடிக்கும் ஆளும் வர்க்கத்திற்கு வரமாய் அமையும்.நினைத்துப் பாருங்கள் சாதி ஒழிந்து பொதுப் பள்ளிகள் இல்லாத நிலை வந்தாலும் பாதிக்கப்படுவது நாம்தான்.போக,நீலமும் கருப்பும் சிவப்பும் இணைந்து களப்பட்டால்தான் நகர முடியும் என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது இந்த அப்பனின் “நேயர் விருப்பம்”மாரிக்கும் பேத்திக்கும் என் அன்பும் முத்தமும்,மருமகளுக்கு என் அன்பும் வாழ்த்தும்அன்புடன்,
இரா.எட்வின்.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 07, 2018 23:01

November 2, 2018

தேர்தல் கிட்டக்க வருவது புரிகிறது மோடி சார்

வேலை இல்லையா பக்கோடா போட்டு விற்பனை செய்யுங்கள் என்று திரு மோடி அவர்கள் சொன்னபோது தேர்தலுக்கு காலமிருந்தது

மோடி சொல்கிறார்,

சிறு குறு தொழில்களுக்காக கடன் கேட்பவருக்கு ஒரு கோடி ரூபாய் வரையில் 59 நிமிடங்களுக்குள் வங்கிகள் கடன் தரவேண்டுமாம்

தேர்தல் கிட்டக்க வருவது புரிகிறது மோடி சார்

மட்டுமல்ல,

தேர்தலில் நீங்கள் வென்றால் வேலை இல்லை என்றால் பிச்சை எடுங்கள் என்றுகூட எங்கள் இளைஞர்களைப் பார்த்து நீங்கள் கூறக்கூடும் என்பதும் எமக்குத் தெரியும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 02, 2018 07:12

November 1, 2018

அதை அவன் தின்று விட்டான்

Q7 தொலைக்காட்சி 23.10.2018 அன்று பதிவேற்றம் செய்திருந்த தோழர் திருமுருகன் அவர்களது நேர்காணலை இன்று பார்த்தேன். அதில் அவர் கீழமை நீதிபதிகளைக் குறித்து மிக நல்லபடியாக கூறினார். தமிழ்நாட்டு கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகள் சமரசமற்று நியாயமாக இருப்பதாகக் கூறினார்.அவர் ஒரு வழக்கு குறித்து கூறியது நெகிழ்த்தியது. இத்தனைக்கும் அவர் புனைவாகக் கூறினாரா அல்லது உண்மையான வழக்கா என்பது தெரியவில்லை. அநேகமாக புனைவாகத்தான் இருக்கும். ஆனால் நாடு இருக்கும் நிலையில் இது உண்மையாக இருப்பதற்கும் வாய்ப்பிருக்கவே செய்கிறது. எதுவாக இருப்பினும் அதனுள் இருந்த மனிதம் என்னை நெகிழ்த்தியது.ஒரு இளைஞன் தாங்க இயலாத பசியின் காரணமாக ஒரு தேநீர்க்கடையில் இருந்து இரண்டு “பன்”களை எடுத்து சாப்பிட்டு விடுகிறான். பிடிபட்டும் விடுகிறான். லாவகமாக தப்பித்து செல்வதற்கு அவன் என்ன திரு மல்லையாவா? பிடிபட்ட அவனைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறார்கள். வழக்கை பதிவு செய்வதற்கு ஆகும் காகிதங்களின் விலைகூட பெறாது அவன் திருடித் தின்ற பன்களின் விலை என்பது காவலர்களுக்குத் தெரியும்.ஆனாலும் அவர்கள் அவன்மீது திருட்டு வழக்கைப் பதிவு செய்து அந்த இளைஞனை கீழமை நீதிமன்றத்திற்கு கொண்டு வருகிறார்கள்.இதற்காக காவலர்கள்மீது நமக்கொன்றும் கோவம் இல்லை. பாவம், அவர்கள் என்ன செய்வார்கள். திரு சேகரைக் கொண்டுபோக முடியவில்லை. திரு H.ராஜவைக் கொண்டுபோக முடியவில்லை. கிடைத்த இவனையாவது கொண்டுபோகலாம் என்று முடிவெடுத்து விட்டார்கள். அதுவும் சரி, பொன்னை வைக்கவேண்டிய இடத்தில் பூவையாவது வைக்கவேண்டாமா?வழக்கை விசாரித்த நீதிபதி காவலர்களை பார்த்து கேட்கிறார்,“திருடன் என்கிறீர்கள். திருட்டை நிரூபிக்க வேண்டும் என்றால் அவன் திருடிய பொருளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டுமே. அவன் திருடிய பொருள் எங்கே?”“அதை அவன் தின்று விட்டான்”இப்போது நீதிபதி அந்த இளைஞனைப் பார்த்து கேட்கிறார்,“இன்று காலைக் கடனை முடித்தாயா தம்பி?”“முடித்தேங்க சாமி””எங்க”“போலீஸ் ஸ்டேஷன் கழிவறையில்”எனில், அவன் திருடிய பொருள் இப்போது காவல்நிலையத்து கழிவறையில். இவனைப் பிடித்ததும் அவனை நீதிமன்றத்திற்கு கொண்டுவந்ததற்கு பதில் அவனை சாப்பாட்டுக் கடைக்கு அழைத்து சென்று ஒரு வேளை சாப்பாடு வாங்கிக் கொடுத்திருக்க வேண்டும் என்ற ஆலோசனையோடு அந்த இளைஞனை விடுதலை செய்கிறார் நீதிபதி.இப்பவும் சொல்கிறேன் இது புனைவே ஆயினும் இதற்கு நெருக்கமாகவே கீழமை நீதிமன்றங்கள் நடந்து கொள்கின்றன என்பதற்கு தோழர் திருமுருகன் காந்தியின் விடுதலையும் திரு கோபால் அவர்கள்மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதுமே சமீபத்திய உதாரணங்கள்.தோழரது நேர்காணலைக் கேட்டபடியே மடியில் கிடக்கிற 23.10.2018 நாளிட்ட “விடுதலை”யில் இத்தகைய கீழமை நீதிமன்றங்களையும் சிதைப்பதற்கான வேலைகளில் மத்திய அரசு களம் இறங்கிவிட்ட செய்தியைப் பார்க்க முடிந்தது.கீழமை நீதிமன்ற நீதிபதிகளையும் அதற்கு கீழ் உள்ள நீதிமன்ற நீதிபதிகளையும் தமிழக அரசே TNPSC மூலம் உயர்நீதிமன்றத்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் பேரில் தேர்ந்தெடுக்க வேண்டும்.இதேபோலத்தான் மற்ற மாநிலங்களிலும் கீழமை மற்றும் அதற்கும் கீழ் உள்ள நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும்.அனால் இந்தியா முழுவதும் தற்போது காலியாக உள்ள ஏறத்தாழ ஆறாயிரம் கீழமை மற்றும் அதற்கு கீழுள்ள நீதிமன்றங்களின் நீதிபதிகளை மத்திய அரசே நேரடியாக நியமிக்க இருப்பதாக அந்த செய்தி கூறுகிறது.இது மாநில அரசின் உரிமையைப் பறிப்பதாகும். போக, மத்திய அரசே நேரடியாக இந்த நீதிபதிகளை நியமித்தால் இந்தி மற்றும் சமஸ்கிருதம் மட்டுமே தெரிந்த தமிழ் அறியாத நீதிபதிகள் நம் மண்ணில் நியமிக்கப் படுவதற்கான வாய்ப்புகளே அதிகம். வாய்ப்புகள் என்ன, தவிர்க்கவே முடியாத பட்சத்தில் தமிழ் தெரிந்த நீதிபதிகள் சிலரும் நியமிக்கப்படலாம். அவ்வளவுதான்.நீதிபதிகள் வழக்கு சார்ந்த மண்ணின் கலாச்சாரமும் மொழியும் சிக்கல்களும் அறிந்தவராக இருப்பது அவசியம். அது இல்லாமல் வெறுமனே சட்டத்தின் துணைகொண்டு மட்டும் வழக்குகளைப் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கும்.நீதிமன்றங்களில் மூன்றுகோடியே முப்பது லட்சம் வழக்குகள் தேங்கி நிற்கின்றன என்று நமது குடியரசுத் தலைவர் மாண்புமிகு ராம்நாத் கோவிந்த் கூறியிருக்கிறார். இவற்றில் பல மூன்று தலைமுறைகளாக இழுத்துக் கொண்டிருப்பவை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு ரஞ்சன் கோகாய் கூறுகிறார் என்றும் அன்றைய விடுதலை கூறுகிறது.எனில் விரைவாக நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடுதானே மத்திய அரசு இதை செய்கிறது. இதையும் உள்நோக்கத்தோடு பார்த்தால் எப்படி என்றுகூட சிலர் கேட்கக் கூடும்.இதுதான் காரணம் எனில் மாநில அரசுகளை உசுப்பி விட்டு இந்தக் காரியத்தை செய்ய வைக்க வேண்டுமே தவிர தானே செய்யக்கூடாது.குழந்தைக்கு இன்று தேர்வு. அவனோ தூங்கிக் கொண்டிருக்கிறான் என்று கொள்வோம். எதையேனும் செய்து அவனை எழுப்பி தேர்வெழுத அனுப்ப வேண்டுமே அன்றி பிள்ளை தூங்கிக் கொண்டிருக்கிறான் என்பதற்காக நாமே சென்று தேர்வு எழுத முடியாது.1) மாநில அரசுகளின் உரிமையை மத்திய அரசு பறிக்கிறது
2) தமிழ் மண்ணின் நீதிமன்றங்களில் இருந்து தமிழை சுத்தமாகத் துடைத்துப்போடப் பார்க்கிறது மத்திய அரசுஎன்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். தோழர் திருமுருகன் அவர்களது நேர்காணல் இவை கடந்தும் என்னைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போனது.இவைகளே ஆபத்தானவைதான் கொடுரமானவைதான் நியாயமற்றவைதான். ஆனால் இவற்றைவிடக் கொடூரமானதும் நியாயமற்றதும் ஆபத்தானதுமான ஒரு விஷயத்தை தோழர் திருமுருகன் அவர்களது நேர்காணல் உணர்த்தியது.திரு கோபால் அவர்களது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது தோழர் திருமுருகன் காந்தி விடுதலை செய்யப்பட்டது போன்ற நியாயங்களும் இனி மக்களுக்காகப் போராடுபவர்களுக்கு கிடைத்துவிடக் கூடாது என்பதே அது.அவர்கள் நமக்கு எதிராக செய்யும் எதையும் தீர்க்க சிந்தித்தே செய்கிறார்களே தவிர ஏனோதானோ என்று எதையும் செய்வதில்லைஅவர்கள் இவ்வளவு தூரம் வந்தபிறகும் நாம் ஏனோதானோ என்று இருப்பது நியாயம் இல்லை என்பதை சொல்லவே இன்றைக்கு இவ்வளவு நேரம் நான் விழித்திருந்ததே#சாமங்கவிந்து ஒரு மணி நேரம்
01.11.2018
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 01, 2018 22:50

October 31, 2018

4 ரூபாய் கீரைக்கட்டின் விலையை 6 ரூபாய்க்கு

அவர்கள் இருவரையும் நண்பர்கள் என்று விளிப்பது கொஞ்சம் அதிகம் என்று யாருக்கேனும் தோன்றினால் இரண்டு வணிகர்கள் என்று அவர்களைக் கொள்ளலாம். அதில் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை. ஒருவர் ராமநாதபுரத்திலும் மற்றவர் மதுரையிலும் கடைகளை கட்டமைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள் என்று கொள்வோம்.ராமநாதபுரத்தில் பனை சம்பந்தமான பொருட்கள் உற்பத்தியாகின்றன என்றும் மதுரையில் காய்கறிகள் அதிகமாய் விளைகின்றன என்றும் கொள்வோம். ராமநாதபுரத்துக்காரர் தான் ஏற்கனவே விற்கும் பொருட்களோடு காய்கறிகளையும் விற்க ஆசைப்படுகிறார். மதுரைக்காரர் தான் ஏற்கனவே விற்கும் பொருட்களோடு பனை பொருட்களை விற்க ஆசைப்படுகிறார்.அந்த இரண்டு பேருக்குமிடையே இயல்பாகவே ஒரு ஒப்பந்தம் ஏற்படுகிறது.மதுரைக்காரர் காய்கறிகளை வாங்கி இந்த ராமநாதபுரத்திற்கு அனுப்பிவிட வேண்டியது. காய்கறிகள் வரும் அதே டாடாஏசில் ராமநாதபுரத்துக்கு பனை பொருட்களை வாங்கி அனுப்பிவிடுவது. ஒரே வாடகையில் இருவரும் பயனடையத் தொடங்கினார்கள்.இவர்கள் இருவருக்குமிடையேயான வியாபார ஒப்பந்தம் நாளுக்கு நாள் விரிவடைந்தது. அது இயல்பானதும்கூட. இவர் மதுரையில் இருந்து ராமநாதபுரத்திற்கு தேவையான இன்னும் அதிகப் பொருட்களையும் அவர் ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு இன்னும் அதிகப் பொருட்களையும் வாங்கி அனுப்புகின்றனர்.இருவருக்கும் வியாபாரம் பெருகியது.ஒருக்கட்டத்தில் ராமநாதபுரத்துக்காரர் வருத்தத்தில் சாய்கிறார். காரணம் இவர் மதுரைக்கு அனுப்பும் பொருட்களின் விலையைவிட அங்கிருந்து இவர் வாங்கும் பொருட்களின் விலை அதிகமாய் உள்ளது. ஒரு கட்டத்தில் அவருக்கு கோவம் கோவமாய் வருகிறது.மதுரைக்காரருக்கு இந்த ஒப்பந்த்தின் மூலம் தன்னைவிட லாபம் கிடைப்பதாக நினைக்கிறார். இதனால் இந்த வியாபாரத்தில் ஒரு பற்றாக்குறை இவருக்கு ஏற்பட்டிருப்பதாக இவர் கருதுகிறார்.இவர் கொஞ்சம் நிதானமாகவும் நியாயமாகவும் யோசிப்பவராக இருந்தால் இரண்டு காரியங்களை செய்திருக்கலாம்.1) இன்னும் அதிகமான பொருட்களை வாங்கி இவர் மதுரைக்கு அனுப்புவதன் மூலம் லாபத்தை அதிகரித்திருக்கலாம்
2) மதுரைக்காரர் அடையும் லாபத்தைவிட இவருக்கு லாபம் கூட இருக்க வேண்டும் என்று நினைத்தால் அங்கிருந்து வாங்கும் பொருட்களின் அளவை குறைத்திருக்கலாம்இவர் நிதானமாக யோசிப்பவரும் இல்லை நியாயமாக யோசிப்பவரும் இல்லை.அவரைவிட நமக்கு 40 ரூபாய் குறைவாக லாபம் என்ற வகையில் விழும் 40 ரூபாய் பற்றாக்குறையை மதுரையில் இருந்து வந்திருக்கும் இருபது கீரைக்கட்டுகளின் விலையை கட்டுக்கு இரண்டு ரூபாய் கூட்டி பற்றாக்குறையை நிரவ முயற்சிக்கிறார்.இவரது இந்த செயலை பார்க்கும் சிறு குழந்தைகூட அநியாயம் என்று சொல்லும்.இப்போது ராமநாதபுரம் என்பதை அமெரிக்கா என்றும் மதுரையை சீனா என்றும் கொஞ்சம் மாற்றி எடுத்துக் கொள்ளுங்கள்.ராமநாதாபுரம் வியாபாரியை இயல்பாகவே திரு ட்ரம்ப் என்று இப்போது உங்களால் யூகித்துவிட முடியும்.சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களால் 40,000 கோடி டாலர் அளவிற்கு வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக ட்ரம்ப் உணர்கிறார். அதை ஈடுகட்ட வேண்டும் என்று யோசிக்கிறார். இதிலும் தவறெதுவும் இல்லை. இன்னும் சரியாக சொல்வதெனில் இதுதான் சரியும்கூட.அதற்கு இவர் என்ன செய்திருக்க வேண்டும்1) ஏற்றுமதியை அதிகரித்திருக்க வேண்டும்
2) அல்லது இறக்குமதியை குறைத்திருக்க வேண்டும்இரண்டையும் செய்யாமல் ராமநாதபுரத்துக்காரர் 4 ரூபாய் கீரைக்கட்டின் விலையை 6 ரூபாய்க்கு உயர்த்தியதைப் போல இறக்குமதிப் பொருட்களுக்கான வரியை அதிகரித்து தமக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய 40,000 கோடி டாலர் பற்றாக்குறையை ஈடுகட்டுகிறார்.பேச வேண்டியவர்கள் மௌனமாக இருக்கிறார்கள். நம்மால் முடியவில்லை.#சாமங்கவிய 59 நிமிடங்கள்
31.10.2018
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 31, 2018 22:13

October 30, 2018

சீன நிலா

சீனாவின் “செயற்கை நிலா”  குறித்து  கொஞ்சம் உரையாட இருக்கிறது.

”தூரத்து ஊரின் தெருவிளக்கு” என்று நிலவை பாரதிதாசன் எழுதியுள்ளதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி இல்லை என்றாலும் அதனால் ஒன்றும் பாதகம் இல்லை. இதை யார் எழுதியது என்று யாரேனும் கூறினால் அதை சேர்த்துக் கொள்ளலாம்.

அப்படி யாரும் இதுவரை எழுதவில்லை என்றாலும் பாதகம் இல்லை. நான் இப்போது அதை எழுதியாகக்கூட இருக்கட்டும்

நிலா எல்லோருக்கும் பிடித்தமானதாகவே எல்லா காலத்திலும் இருந்திருக்கிறது. அதுவும் தமிழ் மண்ணில் நிலாவிற்கு எப்போதும் உன்னதமான ஒரு இடம் இருக்கிறது.

எமது அன்னைகள் எமக்கு நிலாவைக் காட்டிதான் சோறு ஊட்டினார்கள்.

இடுப்பின் இடதுபுறம் பிள்ளை, பிள்ளையை வளைத்துப் பிடித்திருக்கும் கை விரல்கள் பிள்ளைக்கான அமுதுக்கிண்ணியை பிடித்திருக்க, வலதுகையின் ஆட்காட்டி விரல் தவிர்த்து மற்ற நான்கு விரல்களும் பாப்பா அல்லது தம்பிக்கான ஒரு கவளம் உணவமுதை கவ்வியபடி சுட்டு விரலால்   பிள்ளைக்கு நிலாவைக் காட்டி ரசனையில் பிள்ளை விழும் சந்தர்ப்பத்தில் லாவகமாக ஊட்டிவிட்டு உதடு துடைத்துவிடும் காட்சி எங்களின் அடையாளம்.

என் தாத்தனும் பாட்டியும் தங்களது குழந்தைப் பருவத்தில் இப்படித்தான் உணவெடுத்தார்கள். அவர்கள் எம் பெற்றோருக்கும் அவர்கள் எமக்கும் நாங்கள் எங்கள் பிள்ளைகட்கும் இப்படித்தான் ஊட்டினோம்.

”நிலா இங்கே வா வா” என்று அழைத்துப் பார்த்தோம். நிலவிற்குப் போனவர்கள் மொழியில் அதற்கான கனவு பதியப்பட்டிருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் தமிழ் சினிமாப் பாடலில் அந்தக் கனவை நாம் பதிந்து வைத்திருக்கிறோம்.

“நிலவே உன்னை அறிவேன்
அங்கே நேரே ஓர்நாள்
வருவேன்”

என்று பதிந்து வைத்தோம்.

வெட்டவெளி, இருட்டு, வானத்தை ஒருவன் அன்னாந்து பார்க்கிறான். உயரத்தில் வெகு தூரத்தில் ஒரு விளக்கு கணக்காய் நிலவு காய்கிறது. அது தூரத்து ஊரின் தெருவிளக்காய் நம் கவிஞனுக்குப் படுகிறது.

ஆக நிலவை தெருவிளக்காய் நம் கவிஞன் பார்த்திருக்கிறான். இதை சீன விஞ்ஞானி படித்தானோ என்னமோ தெரியவில்லை. தமிழ்க்கவி கண்ட கனவை நனவாக்கும் முயற்சியில் வெற்றியின் வெகு கிட்டத்திற்குப் போய்விட்டான்.

சீனாவில் பேரதிக எண்ணிக்கையில் தெருவிளக்குகள் உள்ளன. அவை இரவு வேளைகளில் தொடர்ந்து எரிகின்றன. இதனால் அரசுக்கான மின் செலவு எகிறிக்கொண்டு போகிறது. எப்படியாவது இந்த செலவினைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சீன அரசு முடிவெடுத்த்து. செலவைக் குறைக்க வேண்டும் என்ற முடிவு தெருக்களை இருட்டுக்குள் தள்ளிவிடக்கூடாது என்றும் அது கருதியது.

இதற்கான மாற்று ஏற்பாட்டை ஆய்வு செய்யுமாறு அது “டியான் பூ நியூ ஏரியா சயின்ஸ் சொசைட்டி” என்ற அமைப்பைக் கேட்டுக் கொண்டது.

இந்த நிறுவனம் அரசு தம்மைக் கேட்டுக்கொண்டபடி ஒரு மாற்று நோக்கி தீவிரமாக ஆராயத் தொடங்கியது. அவர்களது ஆராய்ச்சி அவர்களை செயற்கை நிலாவை நோக்கி இட்டுத் தள்ளியது.

சூரிய ஒளியை உள்வாங்கி வெளிக்கக்கும் ஒரு ரிஃப்லெக்டர் போன்ற அமைப்புதான் நிலா என்ற உண்மை அவர்களை அதுநோக்கியே சிந்திக்க வைத்தது. அவர்களும் அதை நோக்கியே சிந்தித்தார்கள்.

சூரியனிலிருந்து வெப்பத்தை எடுத்து மின்சாரம் தயாரித்து அதிலிருந்து விளக்குகளை எரியவிடுவதைவிட சூரியனிலிருந்து ஒளியை எடுத்து பயன்படுத்துவது என்ற முடிவிற்கு வந்தார்கள்.

அதுகுறித்தே ஆராய்ந்தார்கள். இப்போது அவர்களது ஆய்வு முடிவுகளை அமல்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். வானத்தில் செயற்கை நிலவை இருத்துவது. அந்த செயற்கை நிலவின்மேல் விழும் சூரிய ஒளியை சேமித்து இரவில் எடுத்துக் கொள்வது என்கிற முடிவில் வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கிறார்கள்.

பகலில் உள்வாங்கும் சூரிய ஒளியை இரவில் தெருக்களில் இறைக்கப் போகிறார்கள். தேவைப்படாத நேரத்தில் அணைத்து வைக்கவும் முடியும் என்கிறார்கள்.

ஒளியை சேமிக்க முடியும் என்பது எனக்குப் புதியதாய் இருக்கிறது.

2020 ஆம் ஆண்டு  நிலாவைவிட எட்டு மடங்கு ஒளியைத் தரக்கூடிய முதல் செயற்கை நிலாவை சீனா ”ஜிசாங் செயற்கைகோள் ஏவுத் தளத்தில்” இருந்து ஏவ உத்தேசித்திருக்கிற தகவலை 21.10.2018 நாளிட்ட ”தமிழ் இந்து” கூறுகிறது.

இது வெற்றி பெற்றால் அடுத்தடுத்து செயற்கை நிலாக்களை ஏவுவதற்கு சீனா திட்டமிட்டிருப்பதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

கம்பம் தேவை இல்லை, விளக்குகள் தேவை இல்லை, கம்பிகள் அறுந்து உயிர்ப்பலிகள் ஏற்படுமோ என்ற கவலை தேவை இல்லை.

சீனா தயாரித்துக் கொண்டிருக்கும் செயற்கை நிலா 50 சதுர கிலோ மீட்டர் அளவிற்கு ஒளி தரும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இதன் மூலம் 170 மில்லியன் அமெரிக்க டாலரை மிச்சப்படுத்த முடியும் என்று கூறுகிறார்கள். அதாவது 1700 லட்சம் அமெரிக்க டாலர்கள் மிச்சமாகும் என்று கணக்கிடுகிறார்கள்.

ஒரு டாலர் என்பது இந்திய மதிப்பில்  கிட்டத்தட்ட 80 ரூபாய். எனில், 50 சதுர கிலோமீட்டர் அளவிற்கான செயற்கை நிலா பயன்பாடு ஒரு லட்சத்து முப்பத்தி ஆறாயிரம் லட்சம் ரூபாய் மிச்சமாகும்.

எனில் மொத்த சீனாவும் இந்தப் பயன்பாட்டிற்குள் வரும்போது எவ்வளவு மிச்சமாகும். அவ்வளவு தொகையையும் ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுத்தினால் அந்தச் சமூகம் எவ்வளவு முன்னேறும்.

நினைக்க நினைக்க கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கிறது. ஆனாலும் நம்பிக்கை இருக்கிறது,

என்றேனும் ஒரு நாள் நம் பிள்ளை செயற்கை சூரியனை ஏவக்கூடும்.

       
#சாமங்கவிந்து 34 நிமிடங்கள்
30.10.2018
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 30, 2018 20:09

October 28, 2018

தன்னை ஆண்டவரே என்று அழைக்கும் ஒரு அருட்சகோதரியையே....

மூன்று நான்கு விஷயங்களை இன்று சொல்ல இருக்கிறது. அவற்றை திரும்பத் திரும்ப ஜனங்களிடம் கொண்டு சேர்க்கவேண்டிய அவசியம் இருப்பதாகப் படுகிறது. நான்கையும் இன்றே முடியுமா என்று தெரியவில்லை. முடியாத பட்சத்தில் மிச்சத்தை நாளை வைத்துவிடுவோம்.அவ்வப்போது நாம் பரபரப்பதற்கு ஏதேனும் நடந்துகொண்டே இருக்கின்றன. நாமும் ஒன்றில் இருந்து மற்றொன்றிற்குத் தாவி அதில் கரைந்து தீவிரமாகி விடுகிறோம். இந்த மாற்றம் நிகழும்போதே பழையதை மறந்துவிடுகிறோம்.புதிதில் கரைந்து தீவிரமாவதும் மட்டும் அல்ல புதிதில் கரையும்போதே பழையதை மறந்து கடப்பதும்தான் மாற்றத்தின் கூறாகவும் உள்ளது.மக்கள் ஒன்றும் குற்றவாளிகள் அல்ல. அவர்கள் பழையதை மறப்பதும் ஒன்றும் குற்றம் அல்ல. அவர்கள் மறக்கிறார்கள் என்பது அந்த விஷயத்தின் நியாயத்தில் இருந்து விலகிப் போகிறார்கள் என்று பொருள் அல்ல. வழக்கமாக புதிய ஒன்று வரும்போது அதிலேயே ஈர்க்கப்படுவது என்பது இயல்புதான்.அவர்கள் மறக்க மறக்க அவர்கள் மறந்தவற்றை அவர்களுக்கு ஞாபகப் படுத்துவது மக்கள்மேல் அக்கறை உள்ளவர்களின் கடமை.அந்தவகையில் ஆகச் சமீபத்தில் மறந்துபோனதும் நாம் அவர்களுக்கு நினைவூட்ட வேண்டியதும் பாதிரியார் குரியாகோஸ் அவர்களது மர்ம மரணம் குறித்தே ஆகும்.கேரளாவில் ஒரு கன்னிகாஸ்திரி, தான் பிஷப் பிராங்கோ முளய் கல்லினால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக புகார் கூறியதும் ஒட்டுமொத்த இந்தியாவும் பற்றிக்கொண்டது. பார்க்கிற இடமெல்லாம் இதுவே பேச்சாக இருந்தது.இதில் ஆணாதிக்கம் இருந்தது மட்டுமல்ல பதவி ஆதிக்கமும் இருந்தது. அந்த வகையில் இது இரட்டைக் குற்றமாகிறது.அந்த பிஷப்பிற்கு எதிராக ரகசிய சாட்சி அளித்திருந்தவர் பாதிரியார் குரியாகோஸ் அவர்கள். அவர் பிஷப்பிற்கு எதிராக சாட்சி சொன்னதுமே திருச்சபை அவரை ஜலந்தருக்கு மாற்றியது. இதுவே சாட்சியை மிரட்டுவதுதான்.இதற்காகவேகூட திருச்சபைமீது வழக்கு போடலாம்.இதுகுறித்தும்கூட பரபரப்பாகவே இந்தச் சமூகம் இயங்கியது. குறையற்று இயங்கியது. பாதிக்கப்பட்ட அந்த சகோதரிக்காக கொதித்தெழுந்து குரல் கொடுத்தது.அடுத்தடுத்து விஷயங்கள் வரவர மக்களும் அவைநோக்கி நகரத் தொடங்கி விட்டார்கள்.சிலநாட்களுக்கு முன்னால் ஜலந்தரில் தனது அறையில் பாதிரியார் குரியாகோஸ் அவர்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் என்று 23.10.2018 நாளிட்ட தீக்கதிர் சொல்கிறது.தனது அண்ணனது மரணத்தில் தமக்கு சந்தேகம் இருப்பதாக அவரது தம்பி ஜோஸ் கூறியுள்ளார். தனது அண்ணன் உயிரோடு இருந்தால் பிஷப்பிற்கு எதிரான சாட்சியங்கள் வலுப்பெறக்கூடும் என்பதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் அவர் சந்தேகப்படுகிறார்.அவர் இதுகுறித்து ஆலப்புழா காவல்துறையின் உயர் அதிகாரிகளை சந்தித்து புகார் அளித்துள்ளார்.பொதுவாக பிஷப்பை அனைத்து கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் “ஆண்டவர்” என்றே அழைப்பார்கள். கன்னிகாஸ்திரிகளும் பிஷப்பை “ஆண்டவர்” என்றே அழைப்பார்கள். நிச்சயமாக பாதிக்கப்பட்ட அந்த சகோதரியும் அந்த பிஷப்பை :”ஆண்டவர்” என்றே அழைத்திருக்கக் கூடும்.அப்படிப்பட்ட உயர்வான இடத்தில் இருந்த அந்த பிஷப் மூன்று குற்றங்களை செய்திருக்கிறார்1) தன்னை ஆண்டவரே என்று அழைக்கும் ஒரு அருட்சகோதரியையே வல்லுறவு கொண்டிருக்கிறார்
2) தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தனக்கு எதிராக சாட்சி சொன்னவரை பணியிடமாற்றம் செய்திருக்கிறார்
3) பாதிரியார் குரியாகோஸ் அவர்களது மரணம் ஒரு கொலைமூலம் நிகழ்ந்திருக்குமானால் அதில் அவருக்கும் பங்கிருக்கும்இவ்வளவும் நடந்திருக்கிறது என்பதை அதை மறந்திருக்கும் மக்களுக்கு நினைவூட்டுவதுகூட என் வேலை என்று நினைத்தேன்.அவ்வளவுதான்.*
தேதி சரியாக நினைவில் இல்லை. அநேகமாக இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மூன்று என்று கருதுகிறேன். இது தவறாக இருக்கும் பட்சத்தில் அதற்காக வருத்தம் தெரிவிக்கவேண்டிய அவசியம் எல்லாம் இல்லை. எனவே செப்டம்பர் மூன்று என்றே கொள்வோம்.அன்று தூத்துக்குடி நோக்கி பறந்து கொண்டிருந்த விமானத்தில் பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் திருமதி தமிழிசை அவர்கள் பயணிக்கிறார். அதே விமானத்தில் கனடாவில் ஆராய்ச்சியை மேற்கொள்ளும் சோஃபியா என்ற பெண்ணும் பயணித்திருக்கிறார்.விமானம் தரை இறங்குகிறது.விமான நிலையத்தில் உள்ள காவலர்களிடம் திருமதி தமிழிசை சோஃபியாமீது புகார் தருகிறார்.”பாசிச பாஜக ஒழிக” என்று கோஷமிட்டார் என்பதுதான் சோஃபியாமீதான புகார்.அந்தப் புகாரை அவர் மறுக்கவில்லை. ”ஆமாம் கூறினேன்தான், இனியும் கூறுவேன்தான்” என்று தைரியமாக கூறியிருக்கிறார் சோஃபியா.சோஃபியா கைது செய்யப்படுகிறார்.இதைக் காவலர்கள் விசாரித்தார்களா என்றால் இல்லை என்றுதான் தோன்றுகிறது. ஒருக்கால் திருமதி தமிழிசைமீது யாரேனும் புகார் அளித்தால் அவரை சோஃபியாவைக் கைது செய்ததுபோல் கைது செய்திருப்பார்களா என்றால் இல்லை என்று உறுதியாகக் கூறமுடியும்.விமானத்தில் இருந்து இறங்கிய தனது மகளை திருமதி தமிழிசையும் அவரது சகாக்கள் சிலரும் மறித்து அங்குள்ள காவல்நிலையத்திற்கு அழைத்துக்கொண்டுபோய் கைது செய்ய வைத்தனர் என்று புதுக்கோட்டை காவல் நிலையத்தில் சோஃபியாவின் தந்தை டாக்டர் சாமி புகார் அளித்திருக்கிறார்.அந்தப் புகார் கண்டுகொள்ளப்படாமல் கிடக்கவே அவர் நீதிமன்றத்திற்குப் போகிறார்.தூத்துக்குடி மூன்றாவது நடுவர் நீதிமன்றம் அந்தப் புகாரை விசாரித்து அதன் விவரங்களை தமக்கு நவம்பர் 20 குள் தமக்குத் தரவேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது என்ற செய்தியை 26.10.2018 தமிழ் இந்து கூறுகிறது.விமானத்தில் இருந்து இறங்கிய ஒரு பெண்ணை ஏறத்தாழ பத்துபேர் பலாத்காரமாக அது காவல்நிலையமாக என்றாலும் அழைத்துக் கொண்டு போகலாம் என்பது எந்த விதத்தில் நியாயம்.எதிராகப் பேசினால் பலாத்காரமாக அடக்குவார்கள், எந்த நியாயமும் இல்லாத பூமியாகப் போனது என்று நொந்துபோய் இந்த சம்பவத்தில் இருந்து கடந்து போனவர்களின் தகவலுக்காக இது.#சாமங்கவிய சரியாக ஒரு மணி நேரமிருக்கிறது
28.10.2018
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 28, 2018 23:46

October 19, 2018

கோட்சே ஒரு கோட்பாட்டின் கருவி

தந்தை பெரியாரையும் தந்தை அம்பேத்கார் அவர்களையும் எப்பாடு பட்டேனும் இந்த மண்ணை விட்டும் மக்களிடம் இருந்தும் அப்புறப்படுத்திவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அதையும் இதையும் எதையாவதையும் செய்துகொண்டே இருக்கிறது ஒரு கும்பல்.அவர்களது சிலைகளை உடைக்கிறார்கள், கேவலமாகப் பேசுகிறார்கள். அவர்களது சித்தாந்தங்களை பின்பற்றும் தோழர்களை அச்சுறுத்துகிறார்கள், தாக்குகிறார்கள், அவர்கள்மீது வழக்குகளைப் போடுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் கருப்பைப் பார்த்தாலே அஞ்சுகிறார்கள். அதன் விளைவாக கருப்பு சட்டை அணிந்தவர்களைக் கைது செய்யுமளவுகூடத் துணிகிறார்கள்.திமிறின் உச்சத்திற்கே போனவராய் பாஜகவின் தேசியச் செயலாளர் திரு H.ராஜா அவர்கள் தந்தை பெரியாரை செருப்பால் அடித்திருக்க வேண்டும் என்றார். அதையும் இந்தப் பெரியார் மண் பொறுமையோடு சகித்து செரித்தது.கருப்புச் சட்டை அணியக்கூடாது என்று அவர்கள் அதிகாரப்பூர்வமற்ற வகையில் உத்தரவு போட்ட பிறகு தெருவில் கருப்புச் சட்டைகளின் எண்ணிக்கை அதிகமானது. அதுவரை கருப்புச் சட்டைகளே இல்லாதிருந்த என்னிடம் இப்போது நான்கு கருப்பு சட்டைகள்.இவ்வளவு அடாவடிகளை செய்தபிறகும் இவர்களை காயம்படாமல் இந்தச் சமூகம் பாதுகாக்கிறதே. அது எப்படி?இவர்களைக் காயப்படுத்துவதால் இந்தப் பிரச்சினை மாறிவிடாது என்பதை அந்தக் கிழவன் இந்தச் சமூகத்திற்கு புரிய வைத்துவிட்டு போயிருக்கிறார். புரியவைத்து என்றால் சும்மா இல்லை இவர்களைக் காயப்படுத்துவதால் பிரச்சினை தீர்ந்துவிடாது என்பதை இப்படி ஒரு சூழல் வந்தபோது சரியாக அதை எதிர்கொண்டு புரிய வைத்திருக்கிறார்.அதனால்தான் தமிழ்ச்சமூகம் இவர்களது தொடர் கடுஞ்செயல்களை மென்று செரிக்கிறதே அல்லாமல் இவர்கள் நினைப்பதுபோல் இவர்களைப் பார்த்து பயந்தெல்லாம் இல்லை.1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முப்பதாம் நாளன்று கோட்சேவால் காந்தி சுட்டு கொல்லப் படுகிறார்.மராத்தியப் பார்ப்பனர் ஒருவரால் காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி காட்டுத் தீயாய் தேசமெங்கும் பரவுகிறது. வட மாநிலங்களில் உள்ள பார்ப்பனர் அல்லாத மக்கள் கொதித்தெழுகிறார்கள். கண்ணில் படும் பார்ப்பனரை எல்லாம் தாக்கத் தொடங்குகிறார்கள். பார்ப்பனர்கள் வசிக்கும் அக்ரஹாரங்கள் தரைமட்டமாக்கப் படுகின்றன. பார்ப்பனர்களுக்கு எதிரான வகுப்புக் கலவரத்தை அடக்க இயலாமல் தான் தவித்துப் போனதாக அப்போதைய மராட்டிய மாநில உள்துறை அமைச்சர் திரு மொராஜி தேசாய் அவர்கள் பிற்காலத்தில் எழுதியிருக்கிறார்.ஆனால் தமிழ் நாட்டில் அப்படிப்பட்ட கலவரங்கள் ஏதும் இல்லை. திரு H.ராஜாவின் உறவினர்கள் வடமாநிலங்களிலே கடுமையாகத் தாக்கப்பட்டு உயிருக்கு அபயம் தேடி அலைந்த காலகட்டத்தில் அவரது குடும்பம் தமிழ்நாட்டில் இயல்புநிலை மாறாமல் வாழ முடிந்தது.மற்ற மாநிலங்களைப் போல் அல்லாது தமிழ்நாட்டில்தான் “பார்ப்பனர் அல்லாதோர் இயக்கம்” வலுவாக இருந்தது. மற்ற மாநிலங்களைவிடவும் தமிழ்நாட்டில்தான் பார்ப்பனர்களுக்கு எதிரான கருத்தியக்கம் வலுவாகவும் தொடரச்சியாகவும் நடைபெற்றது.அப்படி இருக்கும்போது மற்ற வடமாநிலங்களில் இருந்த அளவுக்கு என்றுகூட சொல்ல இயலாது பார்ப்பனர்களுக்கு கொஞ்சம்கூட பாதிப்பே தமிழகத்தில் இல்லாததற்கு எது காரணம்?பார்ப்பனர்களுக்கு எதிராக மிகக் கடுமையான இயக்கம் கட்டிய தந்தை பெரியார்தான் தமிழகத்தில் பார்ப்பனர்கள் அப்போது பாதுகாப்பாக வாழ முடிந்ததற்கு காரணம். இதில் முரணெதுவும் இல்லை.31.01.1948 அன்று திருச்சி வானொலி நிலையம் தந்தை பெரியாரிடம் அஞ்சலி உரை ஒன்றை கேட்டு ஒலிப்ரப்புகிறது. அந்த உரையும் அதற்கு முந்தைய அறிக்கையும் அவரது தொடர் அறிவுரைகளுமே இந்தத் தமிழ் மண் காந்தியின் மரணத்தின் பொருட்டு பதட்டமையாமல் இருந்ததற்கான முக்கியமான காரணம்.நன்னிலம் அருகேயுள்ள சன்னாநல்லூரில் தந்தை பெரியார் பேசுகிறார். அப்போது இளைஞராயிருந்த கலைஞர் காந்தியார் கொலை குறித்து கொந்தளித்துப் பேசுகிறார். இறுதியாக உரையாற்ற வந்த பெரியார் கலைஞரையும் அவரொத்த இளைய சமூகத்தையும் ஆற்றுப்படுத்தும் விதமாக பேசுகிறார்.“சுட்டதற்காக நாம் துப்பாக்கி மீது ஆத்திரப் படலாமா?” என்று கேட்டார் பெரியார். காந்தியின் கொலை ஒட்டிய நாட்களில் அவர் சுற்றி சுழன்று இப்படிப் பேசி அமைதிப் படுத்தினார்.“ஒருவன் குற்றம் செய்தால் அவனும் அவனது குடும்பத்தாரும் அவனது குலத்தினரும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற இந்துமதத்தின் பழங்கால நீதியை கோட்சே விசயத்திலும் கைகொள்ள வேண்டும் என்று நாம் நம்பவோ விரும்பவோ இல்லை.” அத்தோடு அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. அவர் தொடர்கிறார்”அது நியாயமும் இல்லை”கோட்சே செய்த கொலைக்காக அவனையோ அவனது குடும்பத்தையோ வம்சத்தையோ தாக்குவதோ அழிப்பதோ நியாயம் அல்ல என்பதை புரிய வைக்கிறார்.காந்தி சுடப்பட்டதற்கு அந்தத் துப்பாக்கி எப்படி ஒரு கருவியோ அதுபோலவே கோட்சேயும் ஒரு கருவிதான் என்று கூறுகிறார்.ஒரு கோட்பாடு கோட்சேவை இயக்கியது. கோட்சே அந்தத் துப்பாக்கியை இயக்கினான். அந்தத் துப்பாக்கியை உடைத்துப் போடுவதால் கோட்சே உட்கார்ந்து விடமாட்டான். அவனது கைக்கு இன்னொரு புது துப்பாக்கி வந்துவிடும். கோட்சேவைக் கொன்று போடுவதால் அந்தக் கோட்பாடு வாளாய் இருந்துவிடாது. அதன் கைகளுக்குள் இன்னொரு கோட்சே அகப்படுவான். எனவே இந்தக் கொடுமைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டுமெனில் அந்தக் கோட்பாட்டோடு சமர் செய்ய வேண்டும் என்று அவர் தெளிய வைத்ததால்தான் காந்தியின் மறைவை ஒட்டி எந்த விதமான அசம்பாவிதமும் இங்கு நிகழவில்லை.அதைப் புரிந்துகொண்டதால்தான் தமிழ் மக்கள் H.ராஜா போன்றவர்கள் எது செய்தாலும் சகிக்கிறார்கள். ராஜா அவர்களை எதிர்கொள்வதால் பிரச்சினை தீர்ந்துவிடாது. ராஜா இல்லாவிட்டால் இன்னொரு நபரை அவர்களது கோட்பாடு அடுத்த நொடியே தயாரித்து விடும். எனவே ராஜாவின் கோட்பாட்டோடுதான் நாம் சமர் செய்ய வேண்டும் என்பது நம் மக்களுக்குத் தெரியும்.அவர்கள் நமது அடையாளங்களோடு மோதுகிறார்கள்.நாம் அவர்களது கோட்பாடுகளோடே சமர் செய்வோம்.#சாமங்கவிந்து முப்பது நிமிடங்கள்
19.10.2018
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 19, 2018 21:01

எந்த ஒரு ஆளுநரும் மக்கள் ஆளுநராக முடியாது....

09.01.2018 அன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “நேருக்கு நேர்” நிகழ்ச்சியினை இணையத்தில் இன்று பார்த்தேன். தம்பி கரு.பழநியப்பன்தான் Karu Palaniappan சிறப்பு விருந்தினர்.மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பையப் பையக் கைப்பற்றுகிறது என்று பழநியப்பன் அழுத்துகிறார். மைய அரசு மெல்ல மெல்ல மாண்புமிகு எடப்பாடி பழநிச்சாமி அவர்களின் உரிமைகளையும் வேலைகளையும் ஆளுநர் மூலமாக கைப்பற்றத் தொடங்கி இருப்பதாக பழநியப்பன் கூறுகிறார்.இப்படியாக நேர்காணல் மெல்ல மாண்புமிகு ஆளுநர் அவர்கள் மாநில அரசின் செயல்பாடுகளுக்குள் அத்துமீறி தலையிடுவதைக் குறித்து நகர்கிறது.அவரும் சேர்ந்துதனே மாநில அரசு. இன்னும் சொல்லப்போனால் ஆளுநர்தானே மாநில அரசின் தலைவர். அப்படி என்றால் அவரது தலையீடு என்பது நியாயமானதுதானே என்பதுமாதிரி புன்னகை மாறாமல் கேட்ட நெறியாளாரிடம் புன்னகை மாறாமலே பழநியப்பன் சொல்கிறார்,“நியாயம் இல்லை”பிறகு என்னதான் அவர் செய்வதாம்?சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை பிரச்சினை வந்தால் அதை எண்ணி முடிவெடுக்க வேண்டும். மத்திய அரசு அறிக்கை ஏதும் கேட்டால் தரவேண்டும்.கேட்பவருக்கும் சொல்பவர்க்கும் மட்டுமல்ல நிகழ்ச்சியைப் பார்க்கும் நமக்கும் சிரிப்பு வருகிறது.”அப்படி என்றால் மற்ற காலங்களில் அவர் சும்மா உட்கார்ந்து இருக்க வேண்டியதுதானா?. ஆளுநர் என்பவர் ஆளுநர் மாளிகைக்கு வருபவர்களோடு தேநீர் பருகிக் கொள்வதோடு நின்றுகொள்ள வேண்டியதுதானா?”சட்டென தெறிக்கிறார் பழநியப்பன்,கொஞ்சமும் சலனமே இல்லாமல் பதில் வருகிறது,
“ஆமாம்”அந்த நேர்காணலில் மரியாதைக்குரிய அமைச்சர் பாண்டியராஜன் அவர்கள் கிட்டத்தட்ட மத்திய அரசின் முகவராகவே மாறியிருப்பதை நிறுவுகிறார் அவர். அதற்கு மூன்று விஷயங்களை கூறுகிறார்1) மத்திய அரசின் விரும்பியதால் திரு பாண்டியராஜன் திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்களோடு வெளியேறுகிறார்
2) மீண்டும் மைய அரசு விரும்பியபடி அதிமுகவின் இரண்டு பிரிவுகளும் இணைந்தபோது அவற்றின் ஒரு பிரிவில் இருந்து பாண்டியராஜன் மட்டுமே அமைச்சராகிறார்
3) இப்போது ஆளுநரை வைத்து மாநில அரசின் உரிமைகளை மைய அரசு கைப்பற்றும் போது திரு பாண்டியராஜன் ஆளுநரை “மக்கள் ஆளுநர்” என்கிறார்இந்த மூன்று விஷயங்களும் தமிழகத்தில் விவாதிக்கப் படாதவை. விவாதிக்கப் படாதவை என்பதைவிட இவை இன்னமும் அதிமுகவிற்கு எதிர் அரசியல் புரிபவர்களாலேயே உரிய முறையில் புரிந்துகொள்ளப் படாதவைஇதை இன்னும் வெளிப்படையாகப் புரிந்து கொள்வதெனில் “அதிமுக அமைச்சரவையில் இருக்கக்கூடிய பிஜேபி பிரதிநிதி பாண்டியராஜன்”. அவர் பிஜேபியிலும் இருந்தவர் என்பது இந்த அய்யத்தை இன்னும் இன்னுமாய் வலுவாக்குகிறது. இதுகுறித்து நமக்கென்ன? அதுகுறித்து கவலைப்பட வேண்டிய எடப்பாடி அவர்களே கொஞ்சமும் கவலைப்படுவதாகத் தெரியவில்லையே என்ற கூற்றும்கூட உண்மைதான்.அவருக்கு அதிமுகவை காப்பாற்ற வேண்டும், மாநில உரிமையைக் காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பெல்லாம் இருப்பதாகத் தெரியவில்லை. அவருக்குத் தெரியும், தமது எல்லை எதுவரை என்பது. ஆகவே இருக்கும் வரைக்கும் முடிந்த வரைக்கும் பார்த்துக் கொள்வது என்பதில் அவர் கவனமாக இருக்கிறார்,ஆனால் பொது மக்களாகிய நமக்கு இந்த மண்ணும் இந்த மண்ணின் விழுமியங்களும் மிகவும் முக்கியமானவை. இத்தகைய முதல்வரையும் அவரது சகாக்களையும் வேண்டிய மட்டும் “பார்த்துக் கொள்ள” அனுமதித்துவிட்டு தங்களது மதவெறி பாசிசத்தை இந்த மண்ணில் அவர்கள் தெளிக்க முயற்சிப்பதை பொது மக்கள் பார்த்துக் கொண்டு வாளாயிருந்துவிட முடியாது.எந்த ஒரு ஆளுநரும் மக்கள் ஆளுநராக முடியாது என்கிறார் பழநியப்பன்மக்கள் இயக்குநராக பழநியப்பன் இருக்கிறபோது மக்கள் ஆளுநர் இருக்கக்கூடாதா?ஒரு நொடிகூட இடைவெளி விடாமல் இடைமறிக்கிறார் பழநியப்பன்,முடியாது, முடியவே முடியாது.”எனக்கு மக்கள் பணம் தருகிறார்கள். அவர்கள் தரும் பணத்திற்காக நான் இயக்குகிறேன். ஆகவே நான் அவர்களுடைய இயக்குநன். மக்கள் இயக்குநன். ஆனால் ஆளுநர் ஆளுநரானதற்கும் மக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை”சரி,இவர்கள் ”பார்த்துக் கொண்டே” இருப்பார்கள்.அவர்கள் இவர்களைப் பார்த்துக்கொள்ள விட்டு தங்களது சாம்ராஜ்யத்திற்கு கால்கோள் செய்ய பாடு படுகிறார்கள்.நாமென்ன செய்யப் போகிறோம்?#சாமங்கவிய 23 நிமிடங்கள்
18.10.2018
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 19, 2018 02:48

October 18, 2018

இல்லாட்டி அவங்க மது மிஸ்ட சொல்லி கொட்ட சொல்லுவாராம்

இந்தத் தெருவுல...
இந்த ஊருல...
இந்த வட்டாரத்துல....
இந்த மாநிலத்துல....
இந்த தேசத்துல...
ஏன் இந்த உலகத்துல 

எங்க லேஷந்த் சார் மாதிரி யாரால இவ்வளவு அழகா "அ" எழுத முடியும்?

இவ்வளவு அழகா "1" எழுத முடியும்எல்லாரும் ஒழுங்கா "V GOOD" போடனுமாம்இல்லாட்டி அவங்க மது மிஸ்ட சொல்லி கொட்ட சொல்லுவாராம்லேஷந்த் சார் சொன்னத சொல்லிவிட்டேன்அப்புறம் உங்க இஷ்டம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 18, 2018 09:44

October 17, 2018

“வரி விதிப்பின் அரசன் இந்தியா”

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய இந்தியா ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது? என்று செய்தியாளர்கள் கேட்டபோது

"அமெரிக்க அதிபரை மகிழ்விக்கத்தான்" என்று ட்ரம்ப் சொன்னதாக 03.10.2018 ஆம் நாளிட்ட "தமிழ் இந்து" கூறுகிறது

ஒரு தனிமனிதரை மகிழ்விப்பதற்காக ஒரு தேசத்தை அதன் தலைவர் ஒரு ஒப்பந்தத்திற்குள் கொண்டு சேர்க்கிறார் என்றால் அவர் தனது தேசத்தை விற்கத் துணிகிறார் என்று அர்த்தம்

இந்த இடத்தில் இந்தியா என்பதை இந்தியப் பிரதமர் என்று கொள்வதும் சரிதான்.

இன்னும் கொஞ்சம் சரியாய் சொல்வதெனில் அப்படி சொல்வதுதான் சரி.

எனில்,, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்வதில் இந்தியா ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது? என்பதை அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய இந்தியப் பிரதமர் ஏன் இவ்வளவு ஆர்வமாக உள்ளார்? என்றுதான் கொள்ள வேண்டும்.

வழக்கமாக ஒரு நாடு மற்ற நாடுகளோடு வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள ஆசைப்படுவது இயல்பான ஒன்றுதான். அந்த வகையில் அமெரிக்காவோடு இந்தியா வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புவது என்பதும் இயல்பானதுதானே. பிறகு ஏன் அப்படி ஒரு கேள்வியை அந்த செய்தியாளர் திரு ட்ரம்ப் அவர்களிடம் கேட்கவேண்டிய தேவை ஏன் வந்தது?

பொதுவாகவே இதுமாதிரிக் கேள்விகளோடு “இவ்வளவுக்குப் பிறகும்” என்ற இரண்டு வார்த்தைகள் மறைந்திருக்கும்.

கடை வைத்திருக்கும் ஒருவருக்கு வர்த்தகமே நோக்கம். தம்மிடம் இருக்கும் பொருட்களை கொண்டு சேர்க்க அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார் யாரோடு வேணுமானாலும் பேசுவார். அவர் ஏன் அவரிடம் வியாபாரம் செய்ய ஆர்வமாயிருக்கிறார்? என்று யாரும் கேட்பதில்லை. உண்மையை சொல்லப் போனால் யாரையாவது அவர் தவிர்ப்பார் என்று சொன்னால் வியாபாரத்துல யாரு என்னன்னு எல்லாம் பார்க்கக் கூடாது என்றே அவருக்கு அறிவுரை கூறுவார்கள்.

”அவங்கிட்ட போயி எதுக்கு இந்த ஆளு வியாபாரம் செய்ய அலையறான்? என்று யாரேனும் கேட்டால்,

1) அவன் அடிமாட்டு விலைக்கு பேரம் பேசுபவனாக இருக்க வேண்டும்
2) வாங்கிய பொருளுக்கு உரிய விலையை உரிய நேரத்தில் தராமல் இழுத்தடிப்பவனாக இருக்கும்

இவை இங்கும் பொருந்துமா?

சத்தியமாய் பொருந்தும்.

இந்த உரையாடலுக்கு சில நாட்களுக்கு முன்னர்தான் “வரி விதிப்பின் அரசன் இந்தியா” என்று அவர் கூறியிருந்தார்.

அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா அதிக அளவில் இறக்குமதி விதிப்பதாக அவர் கூறியிருந்தார்.

”ஹார்லி டேவிட்சன்” என்பது அமெரிக்காவின் மிகப் பிரபலமான மோட்டார் நிறுவனம். அதன் உரிமையாளர் அரசியல் செல்வாக்கும் உள்ளவர். அவரது நிறுவனத்தில் இருந்தும் மோட்டார் சைக்கிள்களை இந்தியா இறக்குமதி செய்கிறது.

அதற்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியின் அளவு அதிகமாக இருப்பதாக ட்ரம்ப்பிற்கு புகார் செல்கிறது. அதன்பொருட்டுதான் அவர் மிகக் கோவமாக “வரி விதிப்பின் அரசன் இந்தியா” என்று கூறினார்.

அவர் இது விஷயத்தில் மிகவும் வெளிப்படையாகவே உரையாடினார்.

மோட்டர் சைக்கிள்மீது 100 சதவிகித வரி என்பது மோசடியானது என்பது மாதிரி பேசிய அவர் விலை அதிகமாக இருந்தால் மக்கள் எப்படி அதை வாங்குவார்கள்? மக்கள் வாங்கவில்லை என்றால் அதன் உரிமையாளர் நட்டமடைய மாட்டாரா என்பதே அவரது ஆதங்கம்.

இந்தியப் பிரதமர் மாண்புமிகு மோடி அவர்களோடு நேரிடையாகவே இதுகுறித்தும் அவர் பேசி இருக்கிறார். திரு மோடி அவர்களும் வரியைக் கணிசமாக்க் குறைத்திருக்கிறார். ஆனாலும் இன்னமும் வரி அதிகமாய்த்தான் உள்ளது என்று ட்ரம்ப் கூறியிருக்கிறார்

இந்த இடத்தில் மூன்று விஷயங்களைப் பார்க்க வேண்டும்

1) அமெரிக்கப் பொருட்களுக்கு விலையைக் குறைப்பதன் மூலம் ட்ரம்ப்பின் நண்பர்களான அமெரிக்க முதலாளிகளுக்கு நம் பிரதமர் நட்டம் வராமல் பார்த்துக் கொள்கிறார்
2) பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களுக்கு விலையை ஏற்றுவதன் மூலமும் ரஃபேல், நிலக்கரி உள்ளிட்ட விஷயங்கள் மூலமும் உள்ளூரில் உள்ள தனது முதலாளி நண்பர்கள் பெரு லாபம் அடையவும் நடவடிக்கை எடுக்கிறார்.
3) இவ்வளவு வக்கனையாகப் பேசும் ட்ரம்ப் தனது நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிலும் குறிப்பாக சீனப் பொருட்களுக்கு 25% கூடுதல் வரி விதித்திருப்பதாக 17.06.2018 நாளிட்ட “விடுதலை” கூறுகிறது

குறிப்பாக இறக்குமதி செய்யப்படும் இரும்பிற்கே இத்தனை கூடுதலாக வரி விதிக்கப் பட்டிருப்பதாக விடுதலை கூறுகிறது. இறக்குமதி செய்யப்படும் இரும்பின் விலை கூடினால் இரும்பினால் செய்யப்படும் பொருட்களின் விலை கூடும். அதை எப்படி அமெரிக்க மக்கள் வாங்கு இயலும் என்று யோசிக்க மறுப்பவர் ட்ரம்ப்.

ட்ரம்ப்பிற்கு அக்கறை அமெரிக்க மக்கள் மீது அல்ல. அவரது அக்கறை அவரது நண்பர்களான அமெரிக்க முதலாளிகள்மீது.

இங்கும் நமது பிரதமரின் அக்கறை தமது மக்கள் மீது அல்ல. அவரது முதாலாளி நண்பர்கள் மீதே அவர் அல்லும் பகலும் அக்கறையோடு இருக்கிறார்.

மோசமான நாடான இந்தியா அமெரிக்காவோடு வர்த்தக ஒப்பந்தம் செய்யத் துடிக்கிறதே கவனம் இருக்கிறதா? என்பதல்ல அந்த செய்தியாளரின் கேள்வி.

அமெரிக்க இவ்வளவு மோசமான நாடு என்று தெரிந்தும் ஏன் இந்தியா இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது? என்பதே அவரது கேள்வியின் நுட்பமான பொருள்

எனது கவலை எல்லாம்

இத்தனை நிபந்தனைகளுக்குப் பிறகும் அமெரிக்காவோடு வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறீர்கள்?

பெரு முதலாளிகளின் பிடியில் இருந்து எப்போது விடுபட்டு மக்களைப் பற்றி எப்போது சிந்திப்பீர்கள்?

என்றெல்லாம் எப்போது நமது செய்தியாளர்கள் திரு மோடி அவர்களை நேருக்கு நேராய் கேட்பார்கள்

#சாமங்கவிய 42 நிமிடங்கள்
17.10.2018
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 17, 2018 20:50

இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.