கோட்சே ஒரு கோட்பாட்டின் கருவி
தந்தை பெரியாரையும் தந்தை அம்பேத்கார் அவர்களையும் எப்பாடு பட்டேனும் இந்த மண்ணை விட்டும் மக்களிடம் இருந்தும் அப்புறப்படுத்திவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அதையும் இதையும் எதையாவதையும் செய்துகொண்டே இருக்கிறது ஒரு கும்பல்.அவர்களது சிலைகளை உடைக்கிறார்கள், கேவலமாகப் பேசுகிறார்கள். அவர்களது சித்தாந்தங்களை பின்பற்றும் தோழர்களை அச்சுறுத்துகிறார்கள், தாக்குகிறார்கள், அவர்கள்மீது வழக்குகளைப் போடுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் கருப்பைப் பார்த்தாலே அஞ்சுகிறார்கள். அதன் விளைவாக கருப்பு சட்டை அணிந்தவர்களைக் கைது செய்யுமளவுகூடத் துணிகிறார்கள்.திமிறின் உச்சத்திற்கே போனவராய் பாஜகவின் தேசியச் செயலாளர் திரு H.ராஜா அவர்கள் தந்தை பெரியாரை செருப்பால் அடித்திருக்க வேண்டும் என்றார். அதையும் இந்தப் பெரியார் மண் பொறுமையோடு சகித்து செரித்தது.கருப்புச் சட்டை அணியக்கூடாது என்று அவர்கள் அதிகாரப்பூர்வமற்ற வகையில் உத்தரவு போட்ட பிறகு தெருவில் கருப்புச் சட்டைகளின் எண்ணிக்கை அதிகமானது. அதுவரை கருப்புச் சட்டைகளே இல்லாதிருந்த என்னிடம் இப்போது நான்கு கருப்பு சட்டைகள்.இவ்வளவு அடாவடிகளை செய்தபிறகும் இவர்களை காயம்படாமல் இந்தச் சமூகம் பாதுகாக்கிறதே. அது எப்படி?இவர்களைக் காயப்படுத்துவதால் இந்தப் பிரச்சினை மாறிவிடாது என்பதை அந்தக் கிழவன் இந்தச் சமூகத்திற்கு புரிய வைத்துவிட்டு போயிருக்கிறார். புரியவைத்து என்றால் சும்மா இல்லை இவர்களைக் காயப்படுத்துவதால் பிரச்சினை தீர்ந்துவிடாது என்பதை இப்படி ஒரு சூழல் வந்தபோது சரியாக அதை எதிர்கொண்டு புரிய வைத்திருக்கிறார்.அதனால்தான் தமிழ்ச்சமூகம் இவர்களது தொடர் கடுஞ்செயல்களை மென்று செரிக்கிறதே அல்லாமல் இவர்கள் நினைப்பதுபோல் இவர்களைப் பார்த்து பயந்தெல்லாம் இல்லை.1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முப்பதாம் நாளன்று கோட்சேவால் காந்தி சுட்டு கொல்லப் படுகிறார்.மராத்தியப் பார்ப்பனர் ஒருவரால் காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி காட்டுத் தீயாய் தேசமெங்கும் பரவுகிறது. வட மாநிலங்களில் உள்ள பார்ப்பனர் அல்லாத மக்கள் கொதித்தெழுகிறார்கள். கண்ணில் படும் பார்ப்பனரை எல்லாம் தாக்கத் தொடங்குகிறார்கள். பார்ப்பனர்கள் வசிக்கும் அக்ரஹாரங்கள் தரைமட்டமாக்கப் படுகின்றன. பார்ப்பனர்களுக்கு எதிரான வகுப்புக் கலவரத்தை அடக்க இயலாமல் தான் தவித்துப் போனதாக அப்போதைய மராட்டிய மாநில உள்துறை அமைச்சர் திரு மொராஜி தேசாய் அவர்கள் பிற்காலத்தில் எழுதியிருக்கிறார்.ஆனால் தமிழ் நாட்டில் அப்படிப்பட்ட கலவரங்கள் ஏதும் இல்லை. திரு H.ராஜாவின் உறவினர்கள் வடமாநிலங்களிலே கடுமையாகத் தாக்கப்பட்டு உயிருக்கு அபயம் தேடி அலைந்த காலகட்டத்தில் அவரது குடும்பம் தமிழ்நாட்டில் இயல்புநிலை மாறாமல் வாழ முடிந்தது.மற்ற மாநிலங்களைப் போல் அல்லாது தமிழ்நாட்டில்தான் “பார்ப்பனர் அல்லாதோர் இயக்கம்” வலுவாக இருந்தது. மற்ற மாநிலங்களைவிடவும் தமிழ்நாட்டில்தான் பார்ப்பனர்களுக்கு எதிரான கருத்தியக்கம் வலுவாகவும் தொடரச்சியாகவும் நடைபெற்றது.அப்படி இருக்கும்போது மற்ற வடமாநிலங்களில் இருந்த அளவுக்கு என்றுகூட சொல்ல இயலாது பார்ப்பனர்களுக்கு கொஞ்சம்கூட பாதிப்பே தமிழகத்தில் இல்லாததற்கு எது காரணம்?பார்ப்பனர்களுக்கு எதிராக மிகக் கடுமையான இயக்கம் கட்டிய தந்தை பெரியார்தான் தமிழகத்தில் பார்ப்பனர்கள் அப்போது பாதுகாப்பாக வாழ முடிந்ததற்கு காரணம். இதில் முரணெதுவும் இல்லை.31.01.1948 அன்று திருச்சி வானொலி நிலையம் தந்தை பெரியாரிடம் அஞ்சலி உரை ஒன்றை கேட்டு ஒலிப்ரப்புகிறது. அந்த உரையும் அதற்கு முந்தைய அறிக்கையும் அவரது தொடர் அறிவுரைகளுமே இந்தத் தமிழ் மண் காந்தியின் மரணத்தின் பொருட்டு பதட்டமையாமல் இருந்ததற்கான முக்கியமான காரணம்.நன்னிலம் அருகேயுள்ள சன்னாநல்லூரில் தந்தை பெரியார் பேசுகிறார். அப்போது இளைஞராயிருந்த கலைஞர் காந்தியார் கொலை குறித்து கொந்தளித்துப் பேசுகிறார். இறுதியாக உரையாற்ற வந்த பெரியார் கலைஞரையும் அவரொத்த இளைய சமூகத்தையும் ஆற்றுப்படுத்தும் விதமாக பேசுகிறார்.“சுட்டதற்காக நாம் துப்பாக்கி மீது ஆத்திரப் படலாமா?” என்று கேட்டார் பெரியார். காந்தியின் கொலை ஒட்டிய நாட்களில் அவர் சுற்றி சுழன்று இப்படிப் பேசி அமைதிப் படுத்தினார்.“ஒருவன் குற்றம் செய்தால் அவனும் அவனது குடும்பத்தாரும் அவனது குலத்தினரும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற இந்துமதத்தின் பழங்கால நீதியை கோட்சே விசயத்திலும் கைகொள்ள வேண்டும் என்று நாம் நம்பவோ விரும்பவோ இல்லை.” அத்தோடு அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. அவர் தொடர்கிறார்”அது நியாயமும் இல்லை”கோட்சே செய்த கொலைக்காக அவனையோ அவனது குடும்பத்தையோ வம்சத்தையோ தாக்குவதோ அழிப்பதோ நியாயம் அல்ல என்பதை புரிய வைக்கிறார்.காந்தி சுடப்பட்டதற்கு அந்தத் துப்பாக்கி எப்படி ஒரு கருவியோ அதுபோலவே கோட்சேயும் ஒரு கருவிதான் என்று கூறுகிறார்.ஒரு கோட்பாடு கோட்சேவை இயக்கியது. கோட்சே அந்தத் துப்பாக்கியை இயக்கினான். அந்தத் துப்பாக்கியை உடைத்துப் போடுவதால் கோட்சே உட்கார்ந்து விடமாட்டான். அவனது கைக்கு இன்னொரு புது துப்பாக்கி வந்துவிடும். கோட்சேவைக் கொன்று போடுவதால் அந்தக் கோட்பாடு வாளாய் இருந்துவிடாது. அதன் கைகளுக்குள் இன்னொரு கோட்சே அகப்படுவான். எனவே இந்தக் கொடுமைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டுமெனில் அந்தக் கோட்பாட்டோடு சமர் செய்ய வேண்டும் என்று அவர் தெளிய வைத்ததால்தான் காந்தியின் மறைவை ஒட்டி எந்த விதமான அசம்பாவிதமும் இங்கு நிகழவில்லை.அதைப் புரிந்துகொண்டதால்தான் தமிழ் மக்கள் H.ராஜா போன்றவர்கள் எது செய்தாலும் சகிக்கிறார்கள். ராஜா அவர்களை எதிர்கொள்வதால் பிரச்சினை தீர்ந்துவிடாது. ராஜா இல்லாவிட்டால் இன்னொரு நபரை அவர்களது கோட்பாடு அடுத்த நொடியே தயாரித்து விடும். எனவே ராஜாவின் கோட்பாட்டோடுதான் நாம் சமர் செய்ய வேண்டும் என்பது நம் மக்களுக்குத் தெரியும்.அவர்கள் நமது அடையாளங்களோடு மோதுகிறார்கள்.நாம் அவர்களது கோட்பாடுகளோடே சமர் செய்வோம்.#சாமங்கவிந்து முப்பது நிமிடங்கள்
19.10.2018
19.10.2018
Published on October 19, 2018 21:01
No comments have been added yet.
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)