தன்னை ஆண்டவரே என்று அழைக்கும் ஒரு அருட்சகோதரியையே....

மூன்று நான்கு விஷயங்களை இன்று சொல்ல இருக்கிறது. அவற்றை திரும்பத் திரும்ப ஜனங்களிடம் கொண்டு சேர்க்கவேண்டிய அவசியம் இருப்பதாகப் படுகிறது. நான்கையும் இன்றே முடியுமா என்று தெரியவில்லை. முடியாத பட்சத்தில் மிச்சத்தை நாளை வைத்துவிடுவோம்.அவ்வப்போது நாம் பரபரப்பதற்கு ஏதேனும் நடந்துகொண்டே இருக்கின்றன. நாமும் ஒன்றில் இருந்து மற்றொன்றிற்குத் தாவி அதில் கரைந்து தீவிரமாகி விடுகிறோம். இந்த மாற்றம் நிகழும்போதே பழையதை மறந்துவிடுகிறோம்.புதிதில் கரைந்து தீவிரமாவதும் மட்டும் அல்ல புதிதில் கரையும்போதே பழையதை மறந்து கடப்பதும்தான் மாற்றத்தின் கூறாகவும் உள்ளது.மக்கள் ஒன்றும் குற்றவாளிகள் அல்ல. அவர்கள் பழையதை மறப்பதும் ஒன்றும் குற்றம் அல்ல. அவர்கள் மறக்கிறார்கள் என்பது அந்த விஷயத்தின் நியாயத்தில் இருந்து விலகிப் போகிறார்கள் என்று பொருள் அல்ல. வழக்கமாக புதிய ஒன்று வரும்போது அதிலேயே ஈர்க்கப்படுவது என்பது இயல்புதான்.அவர்கள் மறக்க மறக்க அவர்கள் மறந்தவற்றை அவர்களுக்கு ஞாபகப் படுத்துவது மக்கள்மேல் அக்கறை உள்ளவர்களின் கடமை.அந்தவகையில் ஆகச் சமீபத்தில் மறந்துபோனதும் நாம் அவர்களுக்கு நினைவூட்ட வேண்டியதும் பாதிரியார் குரியாகோஸ் அவர்களது மர்ம மரணம் குறித்தே ஆகும்.கேரளாவில் ஒரு கன்னிகாஸ்திரி, தான் பிஷப் பிராங்கோ முளய் கல்லினால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக புகார் கூறியதும் ஒட்டுமொத்த இந்தியாவும் பற்றிக்கொண்டது. பார்க்கிற இடமெல்லாம் இதுவே பேச்சாக இருந்தது.இதில் ஆணாதிக்கம் இருந்தது மட்டுமல்ல பதவி ஆதிக்கமும் இருந்தது. அந்த வகையில் இது இரட்டைக் குற்றமாகிறது.அந்த பிஷப்பிற்கு எதிராக ரகசிய சாட்சி அளித்திருந்தவர் பாதிரியார் குரியாகோஸ் அவர்கள். அவர் பிஷப்பிற்கு எதிராக சாட்சி சொன்னதுமே திருச்சபை அவரை ஜலந்தருக்கு மாற்றியது. இதுவே சாட்சியை மிரட்டுவதுதான்.இதற்காகவேகூட திருச்சபைமீது வழக்கு போடலாம்.இதுகுறித்தும்கூட பரபரப்பாகவே இந்தச் சமூகம் இயங்கியது. குறையற்று இயங்கியது. பாதிக்கப்பட்ட அந்த சகோதரிக்காக கொதித்தெழுந்து குரல் கொடுத்தது.அடுத்தடுத்து விஷயங்கள் வரவர மக்களும் அவைநோக்கி நகரத் தொடங்கி விட்டார்கள்.சிலநாட்களுக்கு முன்னால் ஜலந்தரில் தனது அறையில் பாதிரியார் குரியாகோஸ் அவர்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் என்று 23.10.2018 நாளிட்ட தீக்கதிர் சொல்கிறது.தனது அண்ணனது மரணத்தில் தமக்கு சந்தேகம் இருப்பதாக அவரது தம்பி ஜோஸ் கூறியுள்ளார். தனது அண்ணன் உயிரோடு இருந்தால் பிஷப்பிற்கு எதிரான சாட்சியங்கள் வலுப்பெறக்கூடும் என்பதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் அவர் சந்தேகப்படுகிறார்.அவர் இதுகுறித்து ஆலப்புழா காவல்துறையின் உயர் அதிகாரிகளை சந்தித்து புகார் அளித்துள்ளார்.பொதுவாக பிஷப்பை அனைத்து கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் “ஆண்டவர்” என்றே அழைப்பார்கள். கன்னிகாஸ்திரிகளும் பிஷப்பை “ஆண்டவர்” என்றே அழைப்பார்கள். நிச்சயமாக பாதிக்கப்பட்ட அந்த சகோதரியும் அந்த பிஷப்பை :”ஆண்டவர்” என்றே அழைத்திருக்கக் கூடும்.அப்படிப்பட்ட உயர்வான இடத்தில் இருந்த அந்த பிஷப் மூன்று குற்றங்களை செய்திருக்கிறார்1) தன்னை ஆண்டவரே என்று அழைக்கும் ஒரு அருட்சகோதரியையே வல்லுறவு கொண்டிருக்கிறார்
2) தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தனக்கு எதிராக சாட்சி சொன்னவரை பணியிடமாற்றம் செய்திருக்கிறார்
3) பாதிரியார் குரியாகோஸ் அவர்களது மரணம் ஒரு கொலைமூலம் நிகழ்ந்திருக்குமானால் அதில் அவருக்கும் பங்கிருக்கும்இவ்வளவும் நடந்திருக்கிறது என்பதை அதை மறந்திருக்கும் மக்களுக்கு நினைவூட்டுவதுகூட என் வேலை என்று நினைத்தேன்.அவ்வளவுதான்.*
தேதி சரியாக நினைவில் இல்லை. அநேகமாக இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மூன்று என்று கருதுகிறேன். இது தவறாக இருக்கும் பட்சத்தில் அதற்காக வருத்தம் தெரிவிக்கவேண்டிய அவசியம் எல்லாம் இல்லை. எனவே செப்டம்பர் மூன்று என்றே கொள்வோம்.அன்று தூத்துக்குடி நோக்கி பறந்து கொண்டிருந்த விமானத்தில் பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் திருமதி தமிழிசை அவர்கள் பயணிக்கிறார். அதே விமானத்தில் கனடாவில் ஆராய்ச்சியை மேற்கொள்ளும் சோஃபியா என்ற பெண்ணும் பயணித்திருக்கிறார்.விமானம் தரை இறங்குகிறது.விமான நிலையத்தில் உள்ள காவலர்களிடம் திருமதி தமிழிசை சோஃபியாமீது புகார் தருகிறார்.”பாசிச பாஜக ஒழிக” என்று கோஷமிட்டார் என்பதுதான் சோஃபியாமீதான புகார்.அந்தப் புகாரை அவர் மறுக்கவில்லை. ”ஆமாம் கூறினேன்தான், இனியும் கூறுவேன்தான்” என்று தைரியமாக கூறியிருக்கிறார் சோஃபியா.சோஃபியா கைது செய்யப்படுகிறார்.இதைக் காவலர்கள் விசாரித்தார்களா என்றால் இல்லை என்றுதான் தோன்றுகிறது. ஒருக்கால் திருமதி தமிழிசைமீது யாரேனும் புகார் அளித்தால் அவரை சோஃபியாவைக் கைது செய்ததுபோல் கைது செய்திருப்பார்களா என்றால் இல்லை என்று உறுதியாகக் கூறமுடியும்.விமானத்தில் இருந்து இறங்கிய தனது மகளை திருமதி தமிழிசையும் அவரது சகாக்கள் சிலரும் மறித்து அங்குள்ள காவல்நிலையத்திற்கு அழைத்துக்கொண்டுபோய் கைது செய்ய வைத்தனர் என்று புதுக்கோட்டை காவல் நிலையத்தில் சோஃபியாவின் தந்தை டாக்டர் சாமி புகார் அளித்திருக்கிறார்.அந்தப் புகார் கண்டுகொள்ளப்படாமல் கிடக்கவே அவர் நீதிமன்றத்திற்குப் போகிறார்.தூத்துக்குடி மூன்றாவது நடுவர் நீதிமன்றம் அந்தப் புகாரை விசாரித்து அதன் விவரங்களை தமக்கு நவம்பர் 20 குள் தமக்குத் தரவேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது என்ற செய்தியை 26.10.2018 தமிழ் இந்து கூறுகிறது.விமானத்தில் இருந்து இறங்கிய ஒரு பெண்ணை ஏறத்தாழ பத்துபேர் பலாத்காரமாக அது காவல்நிலையமாக என்றாலும் அழைத்துக் கொண்டு போகலாம் என்பது எந்த விதத்தில் நியாயம்.எதிராகப் பேசினால் பலாத்காரமாக அடக்குவார்கள், எந்த நியாயமும் இல்லாத பூமியாகப் போனது என்று நொந்துபோய் இந்த சம்பவத்தில் இருந்து கடந்து போனவர்களின் தகவலுக்காக இது.#சாமங்கவிய சரியாக ஒரு மணி நேரமிருக்கிறது
28.10.2018
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 28, 2018 23:46
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.