இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 85

September 18, 2018

காவித் திரளைவிட காக்கித் திரள் பலம் வாய்ந்தது





அன்பிற்குரிய பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவரும் எங்கள் பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரியவரான எங்கள் குமரி அய்யா அவர்களின் மகளுமான திருமதி தமிழிசை அவர்களுக்கு,வணக்கம்.தினமும் தினமும் பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. ஏறிக்கொண்டே போகிறது என்று சொன்னால் நீங்களே ஒத்துக்கொள்ள மாட்டீர்கள். நாளும் நாளும் ஏற்றிக்கொண்டே இருக்கிறீர்கள்.நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் கூடிக்கொண்டே போகிறது.இவை இரண்டும் ஆட்டோ ஓட்டுநர்களை மிகக் கடுமையாக பாதிக்கும் விஷயங்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.மிக நல்ல நிலையில் ஓடிக்கொண்டிருக்கும் ஆட்டோ ஓட்டுநரையே இவை இரண்டு விஷயங்களும் மிகக் கடுமையாய் பாதிக்கும்.ஒரு நாளைக்கு 125 லிருந்து 150 கிலோமீட்டர் ஓட்டினால்தான் 1500 ரூபாய் கிடைக்கும் என்று கொள்வோம். கொஞ்சம் கூடலாம் அல்லது குறையலாம்.நல்ல நிலையில் உள்ள ஆட்டோவெனில் இருபது கிலோமீட்டருக்கு ஒரு லிட்டர் குடிக்கும். வயதான ஆட்டோ எனில் 15 கிலோமீட்டர் கொடுக்கும். நாம் இரண்டிற்கும் இடையில் ஒரு லிட்டருக்கு 17 கிலோமீட்டர் என்று கொள்ளலாம்.ஒரு நாளைக்கு 150 கிலோமீட்டர் எனில் (150/17) 8.8 லிட்டர் பெட்ரோல் தேவைப்படும். தற்போதைய நெரிசலும் சிக்னல்களில் நிற்பதனாலும் இன்னும் ஒரு லிட்டர் கூட வரும். பத்து லிட்டர் என்று கொண்டால் தோராயமாக 850 ரூபாய் ஆகிறது.வாடகை வண்டி எனில் அதற்கொரு 250 ரூபாய். திடீரென ஏற்படும் பஞ்சர் அல்லது கார்பரேட்டர் அடைப்பு அல்லது வண்டி முதலாளியிடம் கேட்கமுடியாத சில்லறை மராமத்து செலவினங்கள் என்ற வகையில் ஒரு 50 ரூபாய் செலவாகும். இந்த வகையில் ஏறத்தாழ 1150 ரூபாய் செலவாகும்.ஆக 1500 ரூபாய்க்கு வண்டி ஓட்டினால் அவருக்கு 350 ரூபாய்தான் மிஞ்சும்.இந்த நிலையில் தினமும் தினமும் பெட்ரோல் விலையை உயர்த்திக்கொண்டே போனால் அவருக்கான மிச்சம் குறையும் என்பது நீங்கள் அறியாததா தாயே.பெட்ரோல் உயர்வு தன்னை பாதிக்காது என்று சொல்ல படத்தில் உள்ள திரு கதிர் ஒன்றும் மத்திய அமைச்சர் அல்ல. மத்திய அமைச்சரின் அந்த அலட்சியமான கூற்றையும் எங்கள் அய்யாவின் மகளால் ஒருபோதும் மனதார ஏற்க முடியாது என்பதையும் நான் அறிவேன்,எளிமையான ஆட்டோ ஓட்டுநரான அவர் இப்படியே பெட்ரோல் விலை ஏறிக் கொண்டிருந்தால் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழி இல்லாத நிலைக்கு தள்ளப்படுவார்.இந்த 350 ரூபாயும் குறையும் எனில் அதைக் கொண்டு அவர் தனது குடும்பத்தை எப்படி நடத்துவார்? அவரது குழந்தைகளை எப்படி படிக்க வைப்பார்?ஆகவே தனது ஸ்டாண்ட் அருகே உரையாற்ற வந்த உங்களிடம் இது நியாயமா எனக் கேட்டுள்ளார். அதை நீங்கள் சட்டை செய்யாத்தால் திரும்பத் திரும்பக் கேட்டிருக்கிறார்.அந்த ஏழை முதியவரை உங்களது கட்சிக்காரர்கள் உங்கள் எதிரிலேயே நையப் புடைத்திருக்கிறார்கள்.கொஞ்சமும் சலனமே இல்லாமல் அந்த இடத்தைக் கடந்து போயிருக்கிறீர்களே. இது நியாயமா தமிழிசை அவர்களே?.”ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளொக்கும்” என்பதை எங்கள் அன்பிற்கும் மரியாதைக்கும் எப்போதும் பாத்திரமாயிருக்கக் கூடிய தமிழறிஞர் குமரி அய்யா அவர்களின் செல்லப் பிள்ளையான உங்களுக்கு நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?கொஞ்சம் தரையில் நடக்க முயற்சி செய்யுங்கள் திருமதி தமிழிசை.பரபரப்பு அரசியல் நிலை இல்லாதது தாயே.காவித் திரளைவிட காக்கித் திரள் பலம் வாய்ந்தது என்பதையும் அருள்கூர்ந்து புரிந்துகொண்டு அரசியல் நடத்துங்கள்.நன்றி.அன்புடன்,
இரா.எட்வின்

#சாமங்கவிய ஒரு மணி பத்து நிமிடங்கள்15.09.2018
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 18, 2018 09:46

September 17, 2018

65/66 காக்கைச் சிறகினிலே செப்டம்பர் 2018

அனைத்தையும் அனுபவித்துதான் உணரவேண்டும் என்றெல்லாம் இல்லை. சில விஷயங்களை கற்பனையாக நினைத்துப் பார்த்தாலே கண்களில் பயம் கசிய அப்படியே மிரண்டு உறைந்து போய்விடுவோம்.பக்கத்து ஊரில் இருக்கக்கூடிய அணையொன்று உடைந்து போனது என்பதை நேரில் போய் பார்த்தால்தான் அதன் பாதிப்புகளை உணர முடியும் என்றால் அவர்களுக்கல்ல இந்த மாதத்தின் கடைசி பக்கங்கள்.தமிழகத்தின் முக்கியமான அணைகளில் ஒன்றான எங்கள் ஊர் முக்கொம்பு அணை உடைந்ததை நேரில் பார்த்த எங்களுக்கு அது தந்த பாதிப்புகளை விடவும், அதனால் எங்களுக்கு ஏற்பட்ட வேதனைகளை விடவும் இதுவரை ஆண்ட ஆட்சியாளர்களின் மீதும் மணல் மபியாக்கள்மீதும் எங்களுக்கு ஏற்படும் கோவம்தான் அதிகமாய் இருக்கிறது.திருச்சி மாவட்டம் முக்கொம்பு என்னும் இடத்தில் காவிரியின் மீது கட்டப்பட்டிருக்கும் அணை மேலணை ஆகும். இதுவரை அகன்ற காவிரியாக ஓடி வரும் நதியை காவிரி என்றும் கொள்ளிடம் என்றும் இரண்டாகப் பிரிக்கிற வேலையை மேலணை செய்கிறது.உள்ளபடி சொல்ல வேண்டுமானால் மேலணையில் இரண்டு அணைகள் உள்ளன. ஒரே நதியாக அகன்று பரந்து வரும் காவிரி அந்த இடத்தில் இரண்டாகப் பிரிகிறது. தெற்குப் பகுதி காவிரி என்றும் வடக்குப் பகுதி கொள்ளிடம் என்றும் அழைக்கப் படுகிறது.காவிரியில் ஒரு அணையும் கொள்ளிடத்தில் ஒரு அணையும் கட்டப்பட்டிருக்கிறது. காவிரிப்பகுதியில் நீர் அதிகமாகவும் கொள்ளிடம் பகுதியில் நீர் குறைவாகவும் இருக்கும். பொதுவாக கட்டுக்கடங்காத அளவு நீர்வரத்து இருந்தால் மட்டுமே கொள்ளிடத்தில் நீர் திறந்து விடப்படும். இன்னும் சொல்லப் போனால் காவிரிப் பகுதியில் உள்ள அணையின்மீது நடக்கும்போது ஏற்படும் ஒருவிதமான அச்சம் கொள்ளிடத்தில் கட்டப்பட்டுள்ள அணையின்மீது நடக்கும்போது இருக்காது. அத்தகைய சாந்தமான அணையில் இருந்துதான் ஒன்பது மதகுகள் உடைந்திருக்கின்றன.அந்தப் புள்ளி தொடங்கி கல்லணையில் இவ்விரு நதிகளும் மீண்டும் இணைகிற வரைக்கும் இந்த இரண்டு நதிகளுக்கும் இடையில் இருக்கிற தீவில் திருவரங்கம், திருவானைக்கோவில், சர்க்கார்பாளையம் உள்ளிட்ட ஏராளமான ஊர்கள் உள்ளன. இரண்டு நதிகளிலும் சற்று அதிகமான அளவில் நீர் திறந்துவிடப்பட்டு சன்னமான அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலே இந்த ஊர்கள் அதிலுங் குறிப்பாக கல்லணைக்கு அருகில் உள்ள ஊர்கள் சொல்லொணா பாதிப்பிற்கு ஆளாகும்.அணையின் ஒன்பது மதகுகள் இதுவரை உடைந்திருக்கின்றன. இந்த வகையில் சொல்லி அரற்றிக் கொள்கிற அளவில் பாதிப்பு இல்லை. ஆனால் மொத்தம் உள்ள நாற்பத்தி சொச்சம் மதகுகளும் மொத்தமாகவோ அல்லது பெரும்பான்மை மதகுகளோ உடைந்துபோகும் பட்சத்தில் மொத்தத் தமிழகமும் இரக்கப்படும் நிலைமைக்கு திருச்சி போகும்.இந்தச் சேதத்திற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் உள்ளன.1) அணையின் நிலைமையை அவ்வப்போது ஒழுங்காகப் பரிசீலிக்காதது. பரிசீலிக்கப் பட்டிருப்பின் அணை உடைவதற்கான ஆபத்தை உணர்ந்து அணையைப் பராமரிக்காதது.ஒருக்கால் பரிசீலிக்கப்பட்டு ஆபத்தைக் கண்டுணராமல் இருந்திருப்பின் ஒழுங்காக பரிசீலிக்காதது.2) மணல்திருட்டை ஊக்குவித்ததன் மூலம் அணையை பலவீனப் படுத்தியது.மேலணை உடைந்து நமக்குத் தரும் பாடம் இதுதான்,நதியைச் சீண்டாதீர்கள் கனவான்களே.******************************************************************************இதற்கு மழை காரணம் அல்ல.இதை அப்படியே ஏற்க முடியாதவர்களும் இதை ஏற்பார்கள்,இதற்கு மழை மட்டுமே காரணம் அல்ல.
குடகுப் பகுதியில் மழை ருத்ர தாண்டவமாடுவதாக செய்திகள் கூறுகின்றன. கடந்த மே மாதம் முதலே பேயாட்டம் ஆடிவரும் மழையினால் வீடுகள் சூறையாடப்பட்டு சாலைகள் துண்டாடப்பட்ட நிலையில் சிறு சிறு பாலங்கள் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப் பட்டதாக செய்திகள் வருகின்றன. உண்மையோ பொய்யோ அல்லது மிகையோ நாமறியோம். ஆனால் குடகு மாவட்டத்தில் ஒரு ஊரையே காணோம் என்று வருகிற செய்திகள் நமக்கு கண்ணீரை வரவழைக்கின்றன. அந்தச் செய்தி பொய்யாக இருக்க வேண்டும் என்று மனது கிடந்து தவியாய்த் தவிக்கிறது.இந்தத் துயரம் தோய்ந்த சூழலிலும் ‘எங்களுக்குத் தண்ணீர் தரல இல்ல, உனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்’ என்று சபிப்பவர்களை நம்மால் ஒருபோதும் ரசிக்கவோ ஏற்கவோ இயலாது.“இப்ப மட்டும் திறந்து விடற. இப்ப வேணாம், நீயே வச்சுக்க”, என்கிற வாதத்தையும் ரசிக்கிற நேரம் இதுவல்ல.ஆனால் தமிழகத்தில் இருந்து கிளம்பும் இத்தகைய குரல்களுக்குப் பின்னால் உள்ள நியாயத்தையும் வலியையும் துயரையும் யாரும் புறந்தள்ளிவிட முடியாது என்பது மட்டுமல்ல, யாரும் புறந்தள்ளிவிடக் கூடாது என்பதையும் இந்த இடத்திலே நமது கோரிக்கையாக வைக்கிறோம்.அதேபோல நிறைய வரும் போது நிறையத் தருகிறோம் என்று அவர்கள் சொல்வது முற்றும் வறட்டுத் தனமானதும் அல்ல.அவர்கள் கூறுவதற்கும், நாம் கேட்பதற்கும், இந்த அளவிற்கு இன்று குடகு சேதப்பட்டு நிற்பதற்கும் இரண்டு காரணங்கள்தான் என்பதைத்தான் நாம் திரும்பத் திரும்பக் கூறுகிறோம்.1) பணப்பயிர்களான தேநீர், காபி, ஏலம் ,மிளகு, மற்றும் பழங்களைப் பயிரிடுவதற்காக குடகு மலைப் பகுதியில் இயற்கை நமக்கு அரணாகத் தந்திருந்த சோலாஷ் காடுகளைப் பெருமளவு அழித்தது.
2) சுற்றுலாவை வளர்க்கிறேன் என்ற பெயரில் பெரிய ரெசார்ட்களை ஏற்படுத்தியதோடு பெரிய பெரிய பங்களாக்களை அந்த மலையில் ஏற்படுத்தியது.‘சோலாஷ்’ என்பது இயற்கை கருணையோடு நமக்களித்த பெருவரம். நீளமான கோரைப் புற்களைப் போன்ற ஒரு அடர்ப்புதர்ப் பகுதியே சோலாஷ் காடுகள் ஆகும். எவ்வளவு கொடூரமான மழை பெய்தாலும் அவற்றை முற்றாய் முழுதாய் இவை உறிஞ்சி வைத்துக் கொள்ளும்.தான் உறிஞ்சி வைத்துக் கொண்டதை பல மாதங்களுக்கு சேமித்து வைத்து கொஞ்சம் கொஞ்சமாக கசியத் தரும். எனில், ஒருமுறை பெய்த நீர் சோலாஷால் உறிஞ்சி வைத்துக் கொள்ளப்பட்டு பல மாதங்களுக்கு அவை கீழே ஓடி வரும். நீரின் வேகம் குறைவாய் இருக்கும்.இப்போது அவற்றை அழித்து விட்டதால் சேமிக்க வாய்ப்பற்று மொத்த நீரும் ஒரே நேரத்தில் முரட்டுத் தனமாய் கீழிறங்குகிறது. வேகம் அதிகம், நீரும் அதிகம் என்பதால் இயற்கையாகவே சேதமும் அதிகம் என்றாகிறது.இப்படிப் புரிகிறமாதிரிப் பார்ப்போம்,சோலாஷ் இல்லாததால் நீர் முழுவதும் ஒரே நேரத்தில் இறங்கி விடுகிறது. கர்நாடகாவும் இப்போதே நீரைத் திறந்து விடுகிறோம். சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று நம்மிடம் கூறுகிறது.மாறாக சோலாஷ் அழிக்கப் படாமல் இருந்திருப்பின் நீர் சேமிக்கப் பட்டிருக்கும். நீர் சேமிக்கப்பட்டிருந்தால் அதிக காலத்திற்கு நீர் கீழிறங்கிக் கொண்டிருக்கும். அதிக காலத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக நீர் இறங்கிக் கொண்டிருந்தால் கர்நாடகமும் உரிய கால இடைவெளியில் நமக்கு நீரைக் கொடுக்க முடியும். உரிய கால இடை வெளியில் கர்நாடகா நமக்கு நீரைத் தரும் எனில் தஞ்சை எப்போதும் நெற்களஞ்சியமாகவே இருந்திருக்கும்.இதுமட்டும் அல்ல, குடகு மலைப் பகுதியில் கட்டப்பட்டுள்ள முரட்டுக் கட்டிடங்களுக்காக உறிஞ்சப்படும் நீரும் அதிக பாரம் தரும் சமமின்மையும்கூட இத்தகைய பேரழிவுகளுக்கு காரணமாகின்றன.ஆக, மீண்டும் சோலாஷைக் கட்டமைத்து இத்தகைய முரட்டுக் கட்டிடங்களை அழித்துப் போட்டால் அல்லது புதிதாக கட்ட்டங்களுக்கு அனுமதி மறுத்தாலே போதும் இத்தகைய பேரழிவுகளும் இருக்காது, இரு மாநிலத்து மக்களும் மகிழ்ச்சியோடும் சமாதானத்தோடும் வாழ முடியும்
***************************************************************************கேரளாவைப் புரட்டிப் போட்டிருக்கிறது பெருமழை. மழையின் வேகத்தைவிடவும் அதிவேகமாய் அங்குள்ள அரசும் மக்களும் குறிப்பாக மீனவர்களும் மண்ணை மறுகட்டமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.1) எதிர்க்கட்சித் தலைவரோடு இணைந்து நிவாரணப் பணிகளை முடுக்கிவிடும் தோழர் பினரயி விஜயன்
2) எமது மீனவர்கள்தான் எமது நேவி என்ற முதல்வரின் உருக்கத்தில் நெகிழ்ந்த மீனவர்கள் அது போதும் இதற்காக அரசு தருவதாய் சொன்ன ஊதியத்தை நிராகரித்தது
3) அரைக்கால் டவுசரோடு சேற்றில் இறங்கிப் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள்
4) பேரிடர்ப் பணியில் தோள்கொடுக்கும் தமிழ்நாட்டு மக்கள்
ஆகியோர் நெகிழ்த்துகிறார்கள்.1) கொடுத்த அரிசிக்கான பணத்தை கொடுக்க ஒப்புக் கொண்ட நிவாரணாப் பணத்தில் கழிப்பதாகக் கூறும், அரேபிய நாடுகள் தரும் உதவியைத் தடுக்கிற மத்திய அரசும்
2) இதிலும் மதவெறியை நுழைக்கிற குருமூர்த்தி மற்றும் எச் ராஜாவும் எரிச்சலைத் தருகிறார்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 17, 2018 19:32

September 16, 2018

ஜெய் ராக வேந்தா

சிங்கபூர் இசை நிகழ்ச்சி.எங்கள் கருப்பு ராக வேந்தனின் கையசைவுக்கு ஏற்ப வெள்ளை சீமாட்டிகளும் சீமான்களும் வயலைன் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.பெருமையும் திமிருமாய் கவனிக்கிறேன்.இதில் என்ன திமிர் வேண்டிக் கிடக்கு?இருக்கு.காந்தியாரை ரயிலில் இருந்து தள்ளும்போது அந்த வெள்ளையர்கள் சொன்னது,“கேவலமான கருப்பு இந்திய நாயே”இத்தனைக்கும் காந்தியார் நல்ல சிவப்பு. அவரையே அப்படி சொன்ன வெள்ளைச் சீமாட்டிகளும் சீமான்களும் எங்கள் கருப்பு ராக வேந்தனின் கை அசைவுக்கு இயங்குவதைப் பார்க்கும்போது ஏற்பட்ட பெருமையும் திமிரும் இது.ஜெய் ராக வேந்தா
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 16, 2018 21:50

கற்றுக் கொள்வோம்

உலகமே எதிர்பார்க்கும் JNU மாணவர் பேரவை தேர்தல் முடிந்து பிள்ளைகள் வெற்றிச் சிரிப்பை வெளிப்படுத்தும் ஒவ்வொரு முறையும் சொல்வதுதான்“தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்று பிள்ளைகள் ஒவ்வொரு முறையும் நமக்கு பாடம் சொல்லித் தருகிறார்கள்”இந்த நான்கு பிள்ளைகளில் ஒருவர் எனக்கு பொதுச் செயலாளராக வரக்கூடும்.அது வரைக்கும் என்னை விட்டு வை இயற்கையா
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 16, 2018 07:16

அது அவர் குரல் இல்லையாம்

விநாயகர் ஊர்வலம் தொடர்பாக திரு H.ராஜா அவர்களுக்கும் காவலர்களுக்கும் பிரச்சினை எழுகிறது.காவலர்கள் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து கூறுகிறார்கள்"ஹைகோர்டாவது மயிராவது" என்கிறார் ராஜாபிரச்சினையானதும் அது என் குரல் இல்லை என்கிறார்இதில் விநாயகர் பக்தி இதற்குள் எல்லாம் நமக்கு எதுவும் இல்லைஅதை அவர் சொன்னாரா என்பதை விசாரிக்க வேண்டும்அவரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்அவர் பெரியாரை பேசியபோதே நீதிமன்றம் சுதாரித்திருந்தால் இந்த அளவிற்கான தைரியம் அவருக்கு வந்திருக்காது
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 16, 2018 00:28

September 15, 2018

14.09.2018

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கால் நூற்றாண்டிற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழு பேரையும் மாநில அரசு விரும்பினால் அமைச்சரவைக் கூடி முடிவெடுத்து விடுவித்துக் கொள்ளலாம் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவு வந்தவுடனே பெரும்பான்மை தமிழ் மக்கள் உடனே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கத் துவங்கி விட்டார்கள்.தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவர் திரு மு.க..ஸ்டாலின் அவர்கள் ”காலம் தாழ்த்தாது உடனடியாக அவர்களை விடுதலை செய்வதற்கு மாநில அரசு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்” என்று கோரியுள்ளார்.மாநில அரசும் காலத்தை வீணடிக்காமல் அவசர கதியில் களம் இறங்கியது. அமைச்சரவை உடனே கூடியது. எழுவரையும் விடுவிப்பது என்று தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுகிறதுகூடிய வேகத்தினும், தீர்மானம் நிறைவேற்றிய வேகத்தினும் கூடுதல் வேகத்தோடு அதை மாநில ஆளுநருக்கு அனுப்பி வைக்கிறது. அவை அனைத்தின் வேகத்தினும் அதிக வேகத்தோடு அந்த்த் தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்புகிறார் மாண்புமிகு ஆளுநர்.உச்சநீதி மன்றத்தின் பெஞ்ச் அளித்துள்ள உத்தரவு தெளிவாக இருக்கிறது. மாநில அரசு விரும்பினால் அவர்களே தீர்மானம் நிறைவேற்றி அவர்களை விடுதலை செய்யலாம்.மாநில அரசு அவர்களை விடுதலை செய்ய விரும்புகிறது. தீர்மானம் நிறைவேற்றுகிறது. இந்தத் தீர்மானத்திற்கு இந்த அரசின் நிர்வாகத் தலைவரான ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்காக அந்தத் தீர்மானத்தை மாண்பமை ஆளுநர் அவர்களுக்கு அனுப்பி வைக்கிறது.இந்த நிலையில் ஒன்று அவர் அதை ஏற்று அதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும். அல்லது அதை ஏற்க மறுத்து அரசுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும். அதன் பிறகு என்ன செய்வது என்பது அதன் பிறகான விஷயம்.
ஆளுநரோ அதை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தெளிவு பெறுவதற்காக அனுப்புகிறார். உச்சநீதி மன்றம் பிறப்பித்த உத்தரவை மாற்றுகிற அதிகாரம் உள்துறை அமைச்சகத்திற்கு இருப்பதாகப் படவில்லை.எப்படிப் பார்த்தாலும் இது நீதிமன்ற அவமதிப்பே.இது ஒருபுறம் இருக்க பாஜகவும் காங்கிரசின் பல தலைவர்களும் ஊடகங்களில் லபோ திபோ என்று கொதிக்கிறார்கள்.ராஜீவ் காந்தி கொலைக்கு ஒரு நியாயம் வேண்டாமா? என்கிறார்கள்.வேண்டும், நிச்சயமாக வேண்டும்.ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் கனவான்களே, அவரது கொலையைப் போலவே இளவரசன் கொலைக்கும் சங்கர் கொலைக்கும் நியாயம் வேண்டும் என்பதுதானே நியாயம்ஒன்று புரியுமா, இவற்றில் எந்த வழக்கையும் நீங்கள் முறையாக விசாரிக்கவே இல்லை.ராஜீவ் கொலை வழக்கில் இன்னும் விசாரிக்க வேண்டி இருப்பதாக கமிஷன் சொல்லவில்லையா நியாயவான்களே?. எனில், வழக்கு இன்னும் முடியவே இல்லையே. அப்புறம் எப்படி இவர்கள் குற்றவாளிகள் ஆவார்கள்?குற்றவாளிகளைத் தண்டியுங்கள். அதற்கு நீங்கள் விசாரனைக் கைதியை விசாரிப்பதுபோல திரு சுப்ரமணியசாமியை விசாரிக்க வேண்டி வரும். அவரையும் திருச்சி வேலுசாமியையும் விசாரிக்காமல் உங்களால் இந்த வழக்கில் ஒரு முடிவுக்கு வர முடியாது.இந்த வழக்கை சரியாக முன்னெடுப்பதில் திருமதி சோனியா காந்தியே முனைப்பு காட்டாததில் கவலை தெரிவிக்கும் வேலுசாமி தன்னை அழைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கொண்டே இருக்கிறார். அவர் காங்கிரச்காரரும்கூட.இந்த நேரத்தில் போலிசாருடன் தனக்கு ஏற்பட்ட விவாத்த்தில், “ஹை கோர்ட்டாவது மயிராவது” என்று பாஜக வின் தேசிய செயலாளார் H.ராஜா கூறியிருக்கிறார்.இந்த தேசத்தை ஆளும் கட்சியின் தேசிய செயலாளர் கோர்ட்டாவது மயிராவது என்பது அந்தக் கட்சியின் நிலைப்பாடு அல்ல எனில் அவரை கட்சியைவிட்டு விலக்க வேண்டும். அதை செய்யாவிட்டால் கட்சியின் நிலைப்பாடும் அதுதான் என்று கொள்ள வேண்டும்.முட்டிக்கு முட்டி தட்டி அவரை உள்ளே போடுங்கள்.அவர்களை விடுவிக்க வேண்டும் என்று திமுக கோருகிறது. ஆளும் அதிமுக விடுதலை செய்ய முயற்சிக்கிறது.எழுவரின் விடுதலையை எதிர்க்கும் கட்சிகளோடு தேர்தல் உடன்பாடு கொள்வதிற்கில்லை என்று ஏன், திமுகவும் அதிமுகவும் கூறக்கூடாது?#சாமங்கவிய ஒரு மணி 6 நிமிடங்கள்
14.09.2018
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 15, 2018 23:33

September 13, 2018

கொஞ்சம் ஆயுளை நீட்டிக் கொள்கிறோம்.

இன்று மூன்று விஷயங்களைக் குறித்து எழுத வேண்டும்ஒன்று நெகிழ்வினைத் தந்தது
மற்றொன்று மகிழ்வினைத் தந்தது
இன்னுமொன்று நம்பிக்கையைத் தந்ததுபொதுவாகவே அதிகாரிகள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிக்கிறார்கள். பொன்னும் மண்ணுமாய் வாங்கிக் குவிக்கிறார்கள். நிமிர்ந்து பார்த்து ‘என்ன விஷயம்?’ என்று கேட்பதற்கே ஒரு விலை வைத்திருக்கிறார்கள் என்று விரவிக் கிடக்கிற பொதுப்புத்தியை மறுப்பதற்கு முடியாதவர்களாகவே இருக்கிறோம்.இன்னும் சிலர் “அந்தக் காலத்துல எல்லாம் எப்படி இருந்தது தெரியுமா?” என்று ஆரம்பித்தார்கள் என்றால் ஏதோ அந்தக் காலத்தில் எல்லாம் லஞ்சமே இல்லாதது போலவும் இப்போது லஞ்சம் இல்லாமல் எதுவுமே இல்லாதது போலவும் ஒரு கருத்தியலை நிறுவ முயற்சிக்கிறார்கள்.இரண்டுமே பழுதான பார்வையின் விளைவுகள்.எல்லாக் காலத்திலும் இப்போது இருப்பது போன்றே லஞ்சமும் ஊழலும் இருந்தன. முன்பிருந்ததைப் போலவே இந்தக் காலத்திலும் லஞ்ச லாவன்யம் இல்லாத அதிகாரிகளும் இருக்கவே செய்கிறார்கள்.தனது அலுவலகத்தில் பணிபுரியும் ஆகக் கடைநிலை ஊழியர் கட்டியுள்ள வீட்டை விடவும் சிறிய மற்றும் அவசியத் தேவைக்கு அதிகமாக ஒரு சொட்டு ஆடம்பரமும் இல்லாத ஒரு எளிய வீட்டினை எங்கள் முதன்மைக் கல்வி அலுவலர் வாங்கியிருக்கிறார்.இன்று புதுமனைப் புகுவிழா வைத்திருந்தார்.ஒரு புத்தகத்தைக்கூட யாரும் அன்பளிப்பாகத் தரக்கூடாது என்ற நிபந்தனையோடு அழைத்திருந்தார்.இப்படி ஒரு நேர்மையான அதிகாரியிடம் வேலை பார்க்கிற வாய்ப்பு எப்போதாவது அமையும்.எமக்கு இப்போது வாய்த்திருக்கிறது. அந்த வகையில் ஆசிர்வதிக்கப் பட்டிருக்கிறோம்.”நான் பணி ஒய்வு பெறும் வரைக்கும் இங்கேயே இருந்து தொலைங்க” என்று சொன்னேன்.என்னைவிடவும் சின்னவர்.பணி ஓய்வு பெற்றதும் இவர் குறித்து உரிமையோடும் அதிகாரி ஊழியன் தயக்கம் இன்றியும் எழுத ஆசை.நிச்சயம் எழுதுவேன்.இது இன்று நெகிழ்வைத் தந்த விஷயம்***************************************************Kaakkai Cirakinile இதழில் இந்த மாதம் நான் திரு ஸ்டாலின் அவர்களுக்கு எழுதிய கடிதம் சென்று சேர்ந்திருக்கிறது.நிறைய தோழர்கள் தம்மோடு இது குறித்து நெகிழ்ச்சியோடு உரையாடுவதாக தோழர் முத்தையா நெகிழ்வோடு அவ்வப்போது தெரிவித்தபடியே இருக்கிறார்.கவிஞர் வைரமுத்து தோழர் முத்தையாவோடும் என்னோடும் பேசினார். அந்தக் கடிதத்தை படித்ததும் பேசாமல் இருக்கவே முடியவில்லை என்று அவர் கூறினார்.நான் தஞ்சையிலே நடந்த “கறிச்சோறு” விமர்சனக் கூட்டத்திலே சொன்னதுதான்,வைரமுத்து என்னோடு பேசியதில் எனக்கொன்றும் இல்லை. ஆனால் அவர் என் படைப்பு குறித்து பேசியது நெசமாகவே மகிழ்ச்சியைத் தந்த விஷயம்.முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான திருமதி சுப்பு லட்சுமி அம்மா பேசினார்கள்.அய்யா க.திருநாவுக்கரசு பேசினார்.இன்னும் ஏராளாமான விசாரிப்புகளை அந்தக் கடிஷம் கொண்டுவந்து சேர்த்ததுஇவை எல்லாம் கடந்து தம்பி முருக தீட்சண்யா உலகத் தரம் வாய்ந்த கடிதங்களை எல்லாம் இந்தக் கடிதம் அசைபோட வைத்து விட்டதாக ஒரு அழகான பதிவை வைத்திருக்கிறான்.அந்த அளவில் இந்தக் கடிதம் ஒரு அழகான பதிவை நமக்கு கை ஏந்தி வாங்கித் தந்திருக்கிறதுதம்பி முருக தீட்சண்யாவிற்கு என் நன்றி.இவற்றால் கொஞ்சம் மகிழ்ந்து போயிருக்கிறேன்.***********************************”ரெக்கைகளை
வெட்டி விட்ட்தாய்
சந்தோசப் படுகிறாய்
எனக்கு நடக்கவும் தெரியும்”என்று தம்பி Yazhi Giridharan போகிற போக்கில் எழுதிப் போகிறான்.இதை யாரேனும் கவிதை இல்லை என்றால் நான் அவர்களோடு பேசுவதை நிறுத்திக் கொள்வேன்.அளவுக்கு அதிகமான கட்டுப்பாடுகளாலோ அல்லது துரோகத்தினாலோ தற்கொலைக்குத் தயாராகும் ஒருவர் தற்கொலை செய்வதற்கு முன் இதை வாசித்தால் தற்கொலை தவிர்க்கப் படும்.நிறைய நம்பிக்கையைத் தருகிறாய் யாழி.இதுமாதிரி அதிகமாய்த் தாருங்கள் பிள்ளைகளே. கொஞ்சம் ஆயுளை நீட்டிக் கொள்கிறோம்.#சாமங்கவிய 17 நிமிடங்கள்
13.09.2018
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 13, 2018 21:51

September 11, 2018

தஞ்சை வாசகசாலை

முன்பெல்லாம் மாதம் ஒரு கூட்டமேனும் தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் எனக்கு. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையேனும் சுகன், நா. விச்வநாதன் உள்ளிட்ட எனது தஞ்சைத் தோழர்களை சந்தித்து விடுவேன்.கூட்டங்களைக் குறைத்துக் கொள்வது என்று ஒரு புள்ளியில் முடிவெடுத்ததும் இந்த வாய்ப்பு குறைந்தது. அவசர அவசரமாக சுகன் செத்துப் போனதும் நான் தஞ்சைக்குப் போவதே நின்றுபோனது.இந்தச் சூழலில் ஒரு அதிகாலையில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பி தஞ்சை வாசக சாலையில் சி.எம்.முத்து அவர்களின் நாவலான “கறிச்சோறு” குறித்து பேச வேண்டும் என்று அழைத்ததும் ”எந்த மறுப்பும் சொல்லாமல்” என்று சொன்னால் அது பொய், ஆசை ஆசையாக ஒதுக்கொண்டேன் என்பதே உண்மை.இதற்கு இரண்டு காரணங்கள்,நாவி உள்ளிட்ட தஞ்சைத் தோழர்களை சந்திக்கிற வாய்ப்பு என்பது ஒன்று.தோழர் கல்பனாசேக்கிழார் செல்வம் அவர்கள் சொல்லித்தான் தோழர் சி.எம்.முத்து அவர்களின் “கறிச்சோறு” எனக்கு தெரிய வந்தது. வாய்ப்பு கிடைத்து பேசுகிறபோதெல்லாம் கல்பானா முத்து குறித்தும் அவரது எழுத்து குறித்தும் சிலாகித்துக் கொண்டே இருக்கிறார். கல்பனா தோழர் முத்துவை இப்படி சிலாகிக்கிற அளவிற்கு உலகில் எந்த ஒரு எழுத்தாளனையாவது யாரும் சிலாகித்திருப்பார்களா என்பதும் இந்த உண்மை தோழர் முத்துவிற்கு தெரியுமா என்பதும் எனக்குத் தெரியவில்லை.இந்த வாய்ப்பைப் பயன்படுத்தியாவது அவரது நாவல்களை வாசித்துவிடுவது என்பது இரண்டாவது காரணம்.தம்பி Dinesh Palani Raj தஞ்சையில் இருந்து சமயபுரம் வரைக்கும் இரு சக்கர வாகனத்தில் வந்து புத்தகத்தைக் கொடுத்துவிட்டுப் போனார். ஒரு கூட்டத்தை நடத்தும்போது ஒரு பொறுப்பாளர் எப்படி எல்லாம் உழைக்க வேண்டும் என்பதை அவரிடம் இருந்து நெகிழ்ச்சியோடு கற்றுக் கொண்டேன்.கூட்டம் தொடங்குவதற்கு வெகு நேரம் முன்னமே அரங்கிற்குள் நுழைந்தால் எனக்கும் முன்னமே தோழர் Pena Manoharanஅவர்களும் முத்து அவர்களும் வந்திருந்தனர்.தோழர்கள் ஹேமலதா கார்த்திகேயன் அவர்களும் Kannammal Manoharan அறிமுகம் ஆனார்கள்.இருவரும் தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர்கள்.ஹேமா உரையாற்றினார். நேர்த்தியாக இருந்தது. அவரிடம் எனக்குப் பிடித்தது உரையாற்றுவதில் அவருக்கு இருந்த ஆசை. ஆசைப் படுபவன்தான் அடைவான் என்பதுதான் விதி.எங்கு தொடங்குவது, எப்படி நகர்வது, எங்கு முடிப்பது என்ற நுட்பங்களில் அவர் தேரும் புள்ளியில் ஒரு மிகச் சிறந்த உரையாளர் நமக்குக் கிடைப்பார். காரணம் மொழியும் குரலும் அவர் சொன்னதை எல்லாம் செய்கின்றன.கண்ணம்மா உணர்ச்சிப் பிழம்பாக அதே நேரம் பிசிறற்று உரையாடுகிறார். அவரது வாசிப்பின் ஆழத்தை நான் சொல்லியே ஆக வேண்டும். வார்த்தைகளைத் தேடித் தேடி சேகரித்து, சேகரித்தவற்றை இழைத்துக் குழைத்து சாரலாய்த் தெளிக்கிறார்.மிக நேர்த்தியாக தொகுத்தளித்தார்.என்னை முற்றாய் வாசித்தவர்களில் அவரும் ஒருவராயிருக்கிறார். எப்போதோ நான் எழுதி மறந்துபோனஎந்தச் சுடுகாட்டின்
எத்தனையாவது
பிணம் நான்?என்ற கவிதையை அவர் சொன்ன போது மிரண்டே போனேன். கண்கள் பனிக்க உணர்ச்சிப் பிழம்பாய் புன்னகைவழி அழுதுகொண்டே அந்தக் கவிதையை அவர் சிலாகித்ததில் நெகிழ்ந்து போனேன். என் கடைசி பக்கங்கள் அனைத்தும் அவருக்கு அத்துப்படியாய் இருக்கிறது. நன்றி கண்ணம்மா.சொன்னபடி நல்ல பிள்ளையாய் கட்டுரை கொடுங்கள்இடைசாதி அரசியலை எந்த விதமான வறட்டுத் தனமோ முரட்டுத்தனமோ இல்லாமல் இவ்வளவு இயல்பாக ஒரு நாவலின் வழி தர முடியுமா என்பது அய்யம்.வாசகனை முறுக்கேற்றுகிற வேலையை இந்த நாவல் எந்த இடத்திலும் செய்யவில்லை.உள்ளதை உள்ளபடி அழகான புனைவாக்கி இருக்கிறார்.பல இடங்களில் கைகளை தலைக்குமேலே தூக்கி கரவொலித்தார். பண்டிதனாய் இல்லாமல் ஒரு எளிய வாசகனாக நிற்கிறோம் என்று புரிந்தது.“கறிச்சோறு” குறித்து இரண்டொரு நாளில் எழுதுவேன்.இனி கூட்டங்களுக்கு போவது என்று முடிவெடுத்திருக்கிறேன்.என்னோடு எடுத்த புகைப்படத்தை முகநூலில் பதிந்திருக்கிறார் தமிழ் பாலா. அந்த ஈரத்திற்கு என் அன்பும் முத்தமும்போக, Kaakkai Cirakinile குடியரசு இரண்டு இரண்டாண்டு சந்தாக்கள் கிடைத்தன. இன்னும் சில வரும். காக்கையை கொண்டு சேர்க்க உதவுவதாலும் இத்தகைய பயணங்கள் இனிக்கின்றனஇன்னொன்று ஜனவரி மாதத்தில் பிறந்து 72 மணி நேரத்திற்குள் என் தங்கை மகனுக்கு ஒரு மேஜர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வந்தது. மாப்பிள்ளை வெளிநாட்டில், தங்கை மணப்பாறையில் ஒரு மருத்துவ மனையில், பிள்ளைக்கு திருச்சியில் அறுவை.அழுதுகொண்டே இருந்தேன். முடியவே முடியாது என்று தோன்றிய பொழுது அதுகுறித்து ஒரு பதிவு போட்டிருந்தேன். அதை நினைவு கொண்டு “தம்பி எப்படி இருக்கான்?” என்று தோழர் Subhasree Muraleetharan கேட்டபோது கலங்கிப் போனேன்.நன்றி சுபா#சாமங்கவிய 19 நிமிடங்கள்
10.09.2018
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 11, 2018 02:22

September 8, 2018

போர்த்தொழிலில் ஊழல் ஒருபோதும் ஆகாது

”‘யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்,
போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது; தன்
தார் ஒடுங்கல் செல்லாது; அது தந்தபின்,
வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ?”என்று ராமருக்கு வசிஸ்டர் அறிவுரை கூறுவதாக கம்பராமாயணத்தில் வருகிறது.ஒரு மன்னன் அடுத்த நாட்டு மன்னனோடு பகை கொள்வதற்கு பதில் அன்பை தெளிக்க முன் வருவான் எனில் இந்த மண்ணில் போர் ஏற்படாது.அதாவது நாடுகள் பகை மறந்து அன்பை சந்தனமாக தேய்த்து ஒருவருக்கொருவர் பூசிக் கொண்டால் இந்த மண்ணில் போரே இருக்காது.எந்த நாடு சமாதானத்தை தூவுவதன் மூலம் போரைத் தவிர்க்கிறதோ அந்த நாட்டின், அந்த நாட்டின் மன்னனின் புகழ் இப்புவி எங்கும் பரந்து விரியும்.போரே இல்லை என்றானால் படையினர் போரில் சாக மாட்டார்கள். எனில், போர் வீரர்களின் எண்ணிக்கை குறையாது. அத்தோடு அவ்வப்போது படைக்கான ஆள்சேர்ப்பின் மூலம் படையின் பலம் கூடிக்கொண்டே இருக்கும்.போரில் இடையறாது ஈடுபடும் நாடு தொடர்ந்து வீரர்களை இழக்கும்.எனவே பகை கொள்ளாத நாடு போர் செய்யாது. போர் இல்லை எனில் வீரகளை இழக்கத் தேவை இருக்காது.வீரர்களை இழக்காத படை பலமான படை.யாக இருக்கும். பலமான படை பயம் கொடுக்கும். நம் மீதான பயம் நமக்கு பாதுகாப்பைத் தரும்.இதை எல்லாம் நான் சொல்லவில்லை மாண்புமிகு பிரதமர் அவர்களே, மாண்புமிகு பாதுகாப்புத் துறை அமைச்சர் அவர்களே. நீங்கள் பெரிதும் போற்றித் துதிக்கிற, இன்னும் சொல்லப்போனால் யாருடைய பெயரால் ராஜியத்தைக் கட்டமைக்க விரும்புகிறீர்களோ அந்த ராமபிரானுக்கு வசிஸ்டர் கூறியது.எங்களுக்கு அது புராணம். ஆனால் உங்களுக்கு அது ஆன்மீக ஆவணம் என்று நீங்கள் கூறுகிறீர்கள்ஆனால் நீங்களே போர் விமானக்களை வாங்கிக் குவிக்க முனைகிறீர்கள். இதில் என்ன தவறு இருக்கிறது. போர் விமானங்கள்தானே வாங்குகிறோம். போர் செய்வதற்காக நாங்கள் ஒன்றும் அலையவில்லையே என்று நீங்கள் கேட்கக் கூடும். போர் விமானங்களை வாங்குவதன் மூலம் நமது பலம் பெருகும். நமது பலம் பெருகினால் நம் மீது யாரும் போர் தொடுக்க அஞ்சுவார்கள். எனில், போர் தடுக்கப்படும்.ஆக, இதுகூட கம்பனின் கனவுதானே என்றும் நீங்கள் கேட்கக் கூடும்.ஊழலுக்கு போர் விமானம் வாங்கினால் ஒருநாடும் நம்மைக் கண்டு பயப்படப் போவதில்லை.ஆனால் இதை ஏதோ நீங்கள் மட்டுமே செய்யவில்லை என்பதும், முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் போட்ட ஒப்பந்தத்தின் நீட்சிதான் இது என்றும் எங்களுக்குத் தெரியும்ஆனால் 526 கோடிக்கும் 1670 கோடிக்கும் இடையே மலை அளவு இடைவெளி இருக்கிறது.போர் விமானக்களுக்கு உதிரி பாகங்களைத் தயாரிப்பதில் 75 ஆண்டுகால அனுபவம் உள்ள பொதுத் துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாடிகல் நிறுவனத்தை விடுத்து 13 நாட்களே வயது கொண்ட அம்பானியின் நிறுவனத்திற்கு உதிரிப்பாகங்களைத் தயாரிக்கும் வாய்ப்பை நீங்கள் வாங்கிக் கொடுத்திருப்பதில் சந்தேகம் இருப்பதாக ஃப்ரான்ஸ் நாட்டின் அரசு தொலைக்காட்சியான ஃப்ரான்ஸ் 24 அய்யம் வெளியிடுகிறதுநீங்கள் ஊழலற்றவர்கள் என்றால் அதை நிறுவுங்கள். இந்த ரபேலில் காங்கிரஸ்தான் ஊழல் செய்த்து என்றால் அதை நிறுவி தண்டனை வாங்கிக் கொடுங்கள். எங்களுக்கு அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.அப்போதும் சொன்னோம். இப்போதும் அதையே சொல்கிறோம். எப்போதும் இதையேதான் சொல்வோம்,யாரொடும்
பகை கொள்ளலன்
என்றபின்
போரொடுங்கும்
புகழொடுங்காதுஅதைவிட முக்கியம்,போர்த்தொழிலில் ஊழல் ஒருபோதும் ஆகாது#சாமங்கவிந்து 50 நிமிடங்கள்
08.09.2018
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 08, 2018 01:06

September 7, 2018

LIC நமது சொத்து. நாமென்ன செய்யலாம்?

ஆரவாரமே இல்லாமல் ஒரு பொதுத்துறை நிறுவனம் 60 ஆண்டுகள் தொடர்ந்து லாபமீட்டியபடியே இருக்கிறது. ஏறத்தாழ பதினாறு லட்சம் கோடி அளவில் சொத்துக்களை மட்டும் குவித்து வைத்திருக்கிறது.பதினாறு லட்சம் அளவிற்கு சொத்து மட்டுமெனில் லாபம் எவ்வளவு என்பது பாமரத்தனமாய் விரியும் கேள்வி.ஆக இத்தனைச் சொத்தும் லாபமும் பொதுத்துறைக்கு. பொதுத்துறை என்பது மக்களுடையது. எனில் இந்தச் சொத்தும் லாபமும் மக்களுடையது.ஏற்கனவே 246 தனியார் ஆயுள் காப்பீட்டுக் கழகங்களை ஒன்றிணைத்து இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் உருவாக்கப் பட்டிருக்கிறது என்பதையறியும்போது இரண்டு விஷயங்கள் நம்மை வியப்பிலாழ்த்துகின்றன.1) 246 பெருமுதலாளிகளின் கொள்ளை
லாபத்திலிருந்து நிறுவனங்களை
மீட்பதோ அதைப் பொதுவில்
நிறுவனப் படுத்துவதோ எவ்வளவு
சிரமமானதுபெயரைக்கூட வெளிப்படுத்தாமல்
அந்தக் கடினமான காரியம். இந்த
நேரத்தில் சமஸ்தானங்களை
ஒன்றிணைத்த மோசடிக்காக
ஆயிரக்கணக்கான டன் அளவில் ஒரு
துருப் பிடித்த மனிதனுக்கு இரும்புச்
சிலை வைக்கப்படும் அநியாயத்தையும்
சேர்த்தே பார்க்க வேண்டும் என்பது2) 56 ஆம் ஆண்டிற்கு முன்னமே
காப்பீட்டின் அவசியத்தை மக்கள்
உணர்ந்திருந்திருக்கிறார்கள் என்பதுஇவ்வளவு சொத்தையும் லாபத்தையும் மக்களுக்கு மடை மாற்றிய ஸ்தாபனம் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்லாபமும் சொத்தும் மக்களுக்கு மட்டுமல்ல, லட்சக் கணக்கானோருக்கு நிறுவனத்திலேயே வேலை வாய்ப்பும் முகவர்கள் என்கிற வகையில் பல லட்சம் ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்குகிற இந்த நிறுவனத்தை, விபத்துக்களால், மரணத்தால் குடும்பங்கள் நொறுங்கிப் போகாமல் மீண்டும் இயல்பாய் இயங்க கரம் நீட்டும் இந்த நிறுவனத்தை மீண்டும் சில பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்க்க காங்கிரசும் பிஜேபியும் படாத பாடு படுகிறார்கள்.ஒருபக்கம் நிறுவனத்தைக் காப்பதற்காகப் போராடிக் கொண்டே நிறுவனம் துவங்கி 60 ஆண்டுகள் நிறைவதை ஒட்டி வார விழாவை அதன் ஊழியர்கள் கொண்டாடுகிறார்கள்LIC நமது சொத்து.நாமென்ன செய்யலாம்?
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 07, 2018 12:26

இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.