இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 86

September 6, 2018

இந்த வீதியிலே புகுந்திருக்கிற சிவப்பு சமுத்திரமும் ...




ஒன்று தெற்கிலும் ஒன்று வடக்கிலுமாக நேற்று இரண்டு பேரணிகள்இரண்டின் நோக்கங்களுக்கும் இடையில் அம்பானியின் அசையா சொத்துக்கள் முழுவதையும் அடுக்கி வைத்துவிட முடியும்ஒன்று ஒரு கட்சியில் ஒரு மனிதரை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அந்தக் கட்சியின் தலைமையை நிர்ப்பந்திப்பதற்காக காசு கொடுத்துத் திரட்டப்பட்ட சிறு கூட்டம்மற்றொன்று தேசத்தின் எல்லாத் திக்குகளிலும் இருந்து உழைக்கும் மற்றும் உழவுத்தொழில் செய்யும் திரளின் உரிமைக்காக செங்கொடியோடு திரண்ட எளிய ஜனங்களின் மாபெரும் பேரணிமாண்புமிகு பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் நேற்று சென்னையில் நடந்த பேரணி அனைத்து மக்களையும் திரும்பிப் பார்க்கச் செய்ததாக்க் கூறியுள்ளார்தில்லியில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான CPI(M) கட்சியைச் சார்ந்த CITU மற்றும் AIKS கையிலே தங்களது அமைப்புகளின் பதாகைகளை ஏந்தியபடி சத்தியமும் ஆவேசமும் கலந்த கோஷங்களோடு நாடாளுமன்ற வீதியைக் குலுக்கினர்.


அவர்கள் கோரிக்கை யாரோ ஒரு தனிப்பட்ட மனிதன் சார்ந்தது அல்ல.சேற்றிலும் ஆலைகளிலும் காடுகளிலும் வெய்யில் சாலைகளிலும் உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்துபோன கோடானு கோடி உழைக்கும் திரளின் குறைந்தபட்ச வாழ்வுரிமைக்கான கோரிக்கைகளை காற்றைக் கிழித்து முழக்கங்களாக்கி வெற்றுக் கால்களோடு வீதியை அளந்தக் கூட்டம்.கீழ்வரும் அவர்களது கோரிக்கைகள் அநியாயமானவை என்று யார் கூறினாலும் அவர்களை அடுத்தமுறை சந்திக்காமலே செத்துவிட வேண்டும் என்று நினைப்பவன்1) கவுரவமான வேலை
2) நியாயமான கூலி
3) தரிசுநிலப் பகிர்வு
4) விலைபொருட்களுக்கான நியாயமான விலை
5) விவசாயக் கடன் தள்ளுபடி
6) கட்டுப்படுத்தப்பட்ட விலைவாசி
7) சமூகப் பாதுகாப்பு
8) எல்லோருக்கும் கல்வி
9) சீரான சுகாதார வசதி
10) தரகை, தனியார் மயத்தை ஒழிப்பது
11) தொழிலாளார் நலச் சட்டங்களைப் பாதுகாப்பது



என்ன கேட்கிறார்கள்?விவசாயக் கூலித் தொழிலாளிகளும் உழைக்கும் திரளும் பணிபுரியும் இடங்களில் அவர்களை சக மனிதனாக மதிக்கிற சூழலைக் கேட்கிறார்கள். இப்படிக் கேட்கிற சூழலை அவர்களுக்கு இன்னமும் வைத்திருப்பதற்காகவே இந்தச் சமூகம் சன்னமான அளவிற்கேனும் நாசமாகப் போக வேண்டும்.பதினேழு வயதுக் குழந்தை தன் வீட்டில், ஆலையில் அல்லது ஏதோ ஒரு இடத்தில் வேலை பார்க்கும் ஒரு 50 வயது மனிதனை ஒருமையில் அழைக்கும் நிலை இன்றைக்கும் இருக்கிறதே.பத்தாவது பதினைந்தாவது மாடிக்கு சாரத்தில் நின்றபடி கீழிருந்து தம்மை நோக்கி எறியப்படும் ஜல்லித் தட்டை கலவைத் தட்டை பிடித்து தமக்கும் மேலே சாரத்தில் நிற்பவருக்கு எறிந்து பணிபுரிவது எத்தனைப் பாதுகாப்பற்றதுஅந்த ஊழியர்களுக்கு பணிப் பாதுகாப்பு, உயிர்ப் பாதுகாப்பு என் ஊதியப் பாதுகாப்பேனும் உண்டா?அவர்களது ஒவ்வொரு கோரிக்கையும் நியாயமானது மட்டுமல்ல நீண்டகாலக் கோரிக்கைகளும் ஆகும்.இந்தக் கோரிக்கைகளை அவர்கள் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதற்குத்தான் லட்சம் பேர் நேற்று தில்லியிலே திரண்டார்கள்.மாண்புமிகு பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் அந்த மய்ய அரசின் ஒரு முக்கியமான பிரதிநிதி.ஆகவே அது அவரது கவனத்திற்காகவும் நடந்த பேரணிதான்.ஆனால் அவரோ ஒரு தனி மனிதனை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று ஒரு மனிதனுக்காக நடந்த மிகச் சிறிய ஊர்வலத்தில் கரைந்துபோய் சிலாகித்த நிலையில் இருக்கிறார்இவர்கள் இப்படி இருப்பார்கள் என்று தெரிந்ததால்தான், இவர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளை உதாசீனப் படுத்துவார்கள் என்று உணர்ந்ததால்தான் அவர்கள் மிகுந்த பொறுப்புணர்வோடு முழங்கினார்கள்,“சூழ்கிற கருப்பு மேகங்களும் இந்த வீதியிலே புகுந்திருக்கிற சிவப்பு சமுத்திரமும் மோடி அரசை அதிகாரத்திலிருந்து தூக்கி எறியும்”இது நிச்சயம் நடக்கும் மாண்புமிகு பொன் ராதாகிருஷ்ணன் அவர்களே.#சாமங்கவிய 56 நிமிடங்கள்
06.09.2018
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 06, 2018 18:38

பேசவேண்டியவர் எங்கள் முதல்வர்.

எழுவர் விடுதலை குறித்து மாநில அரசே முடிவெடுக்கலாம் என்று உச்சநீதி மன்றம் கூறியிருக்கிறது.அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க முடியாது என்று இதற்கு மாண்பமை பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகிறார்.இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு கொடுத்திருக்கிறது.பேசவேண்டியவர் எங்கள் முதல்வர்.கொஞ்சம் ஒதுங்குங்க சார்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 06, 2018 08:37

September 5, 2018

05.09.2018

இன்று காலை கூட்டு பிரார்த்தனைக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது.அந்தக் குழந்தை திருக்குறளைக் கூற வரும்வரை எல்லாமே வழமையாகத்தான் சென்றுகொண்டிருந்தன.“தோன்றிற் புகழொடு தோன்றுக” என்ற குறளை அவள் கூறத் தொடங்கியதும் நிமிர்கிறேன்.இரண்டு வாரங்களுக்கு முன்னால் ஒரு குழந்தை இதே குறளைக் கூறினாள். நான் பேசும்போது தோன்றும்போது புகழோடு யாரும் புகழோடு தோன்றிவிட முடியாது. ஒருவனது புகழுக்கும் உழைப்புக்கும் தொடர்பிருக்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.இன்று மீண்டும் அதே குறளை ஒரு குழந்தை எடுத்து வந்திருக்கிறாள். ஏன் இப்படி செய்கிறாள்? கவனிக்கத் தோன்றியதுகவனிக்கிறேன்.குறளை தெளிவாகக் கூறினாள்குறளை முடித்ததும் அவள் பொருள் சொல்ல ஆரம்பித்ததும் உற்சாகத்தில் மிதக்க ஆரம்பித்து விட்டேன்“இப்ப ஒருத்தர் ஒரு வேலைக்கு போகறதுன்னு முடிவெடுத்துட்டார்னு வச்சுக்கங்க. அவர் அந்த வேலைக்கு வரும் முன்னரே அந்த்த் தொழிலை முழுவதுமாக கற்றுத் தேற வேண்டும்.அப்படி அந்த்த் தொழிலைக் கற்ரு அந்த வேலையில் எக்ஸ்பர்ட்டா ஆயிட்டார்னா தேர்ந்து எடுத்த அந்தத் தொழிலுக்குள் தோன்றும் பொழுதே அதாவது நுழையும் பொழுதே புகழ் கிடைக்கும்.அது மட்டும் அல்ல ஒரு தொழிலில் நுழையும்போதே புகழடைய வேண்டுமானால் அந்தத் தொழில்மீது அவனுக்கு ஒரு வெறியே இருக்க வேண்டும். இதைத்தான் வள்ளுவர் ‘தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்கிறார்” என்றாள்.அது சரியா தப்பா என்பதெல்லாம் அப்புறம். முதலில் இந்த முயற்சியைக் கொண்டாட வேண்டாமா?அனுபவத்தில் சொல்கிறேன்,குழந்தைகளை சுயமாக சிந்திக்க அனுமதித்தால் கங்குகள் கிடைக்கும்#சாமங்கவிய முப்பத்தி ஐந்து நிமிடங்கள்
05.09.2018
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 05, 2018 21:01

September 4, 2018

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு,வணக்கம்.தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டிருந்த உங்களது தலைவரை இழந்து தவிக்கும் உங்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழர்கள் ஒவ்வொருவருக்கும் என் சார்பிலும், “காக்கைச் சிறகினிலே” சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.”காக்கை” வந்த அடுத்தநாளே அதை வாசித்துவிட்டு எங்களோடு உரையாடும் திமுக மாநில நிர்வாகிகள் இருக்கிறார்கள். எனவே இந்த மடல் உங்களை வந்தடைவர்தற்கான வாய்ப்புகள் உண்டு என்பதையும் நானறிவேன்.திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற ஒரு பெரிய வெகுஜன அரசியல் இயக்கத்தில் அந்த இயக்கத்தின் செயல் தலைவரான உங்களுக்கு இந்த நேரம் எவ்வளவு அழுத்தத்தைத் தரும் என்பது புரிந்துகொள்ளக் கூடியதே. அத்தகைய சூழலிலும் திமுகவின் சார்பில் ஒருகோடி ரூபாயை கேரளப் பேரிடருக்கு நிவாரணமாக அளித்ததோடு திமுகவின் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தஙகளது ஒருமாத ஊதியத்தை இதற்காக வழங்குவார்கள் என்று அறிவித்திருக்கிறீர்கள். அதற்காகவும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து பேரதிகமாய் ஏதேதோ அமைப்புகளின் அபிமானிகளும் ஆதரவாளர்களும் ஊடகங்களில் ஊனுருக உயிர் கசிய விவாதங்களைத் தொடங்கி விட்டார்கள். அவரவர் வேலைகளை அவரவர் பார்க்கட்டும்.இந்த இதழ் அச்சாகி வாசிப்புக்கு வரும்வேளையில் நீங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகி இருப்பீர்கள். அதற்கான நெஞ்சார்ந்த வாழ்த்தினை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.நான் விரும்புகிறேனோ இல்லையோ, நான் உங்களுக்கு வாக்களிக்கிறேனோ இல்லையோ தமிழ்நாடு ஒருநாள் உங்கள் ஆளுகைக்குள் வரும் என்பதை உணர்ந்தே இருக்கிறேன்.
அதனடிப்படையில்தான் தங்களோடு கொஞ்சம் உரையாட ஆசைப்படுகிறேன்.”நெஞ்சுக்கு நீதி” ஏறத்தாழ 4750 பக்கங்கள் வரும் என்கிறார்கள். தொடர்ந்து எழுதுபவன் என்கிற முறையில் எனக்கு இது பெரும் வியப்பாக இருக்கிறது.4750 பக்க சுயசரிதை வேறெதுவும் உண்டா என்பது குறித்து என்னிடம் தகவல்கள் ஏதும் இல்லை. 4750 பக்கங்களுக்குப் பிறகும் தீவிர செயல்பாட்டோடு கூடிய ஒரு நீண்ட வாழ்க்கை அவருக்கு மிச்சம் இருந்திருக்கிறது. அதையும் அவர் எழுதியிருந்தால் அது இன்னும் ஒரு 3000 பக்கங்களுக்கு நகர்ந்திருக்கக் கூடும்.இரண்டு விஷயங்கள் என்னை வியப்பின் உச்சிக்கு கொண்டு போகின்றன1) ஒரு எழுத்தாளர் தன் வாழ்நாளில் 5000 பக்கங்கள் எழுதினாலே பெரிது. தன் வாழ்க்கையைப் பற்றி மட்டுமே ஒரு மனிதர் 5000 பக்கங்கள் எழுதியிருக்கிறார்.
2) தனது 75 விழுக்காடு வாழ்க்கையைப் பற்றி மட்டுமே 5000 பக்கங்கள் வருமளவிற்கு அந்த மனிதருக்கு வாழ்க்கையில் செய்திகள் இருந்திருக்கின்றன.இதுபோக அவர் நாடகங்கள் எழுதியிருக்கிறார், திரை வசனம் எழுதியிருக்கிறார், கவிதைகள் எழுதியிருக்கிறார், புதினங்கள் எழுதியிருக்கிறார், கட்டுரைகள் எழுதியிருக்கிறார், சங்கத் தமிழ், குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா என்று ஏராளாம் எழுதியிருக்கிறார்.தனது கட்சித் தோழர்களுக்கென்று அவர் எழுதிய கடிதங்கள் கடித இலக்கிய வகையிலே வரும்.கலைஞரது எழுத்திலே உங்களுக்கும் விமர்சனம் இருக்கவே செய்யும். எனக்கும் அவரது பல செயல்பாடுகளின்மீதும் முடிவுகளின்மீதும் இருப்பதைப் போலவே அவரது எழுத்துக்களின்மீதும் விமர்சனம் உண்டு. உண்மையைச் சொல்லப்போனால் அவரது எழுத்தின்மீதான விமர்சனம் அவருக்கும் இருந்திருக்கவே செய்யும். அவற்றை அவரது நெருங்கிய நண்பர்களிடம் அவர் பகிர்ந்து கொண்டிருக்கவும் கூடும். கொஞ்சம் சிரமப்பட்டு அவற்றை திரட்டி நூலாக்குங்கள். அது நீங்கள் அவருக்கு செய்யும் பெரும் பங்களிப்பாக அமையும்.நான் இங்கு குறிப்பிட்டு சொல்ல விரும்பும் ஒரு விஷயம் அவர் எழுத்தின்மீது அவருக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கை.நெருக்கடி நிலையைப்பற்றி உங்களுக்கு நான் கூறுவது என்பது திரு மோடியிடமே ஒருவன் நூறு பொய்களைக் கூறுவதற்கு சமமாகும். ஆனாலும் உங்களுக்கான இந்தக் கடித்தத்தின் வாயிலாக நானே ஒருமுறை அதை மீள அசைபோட ஆசைப்படுகிறேன்.கலைஞரை மிகவும் வெறிகொண்டு எதிர்ப்பவர்களும் இந்தியா முழுமையையும் இந்த மண்ணின் மகத்தான தலைவர்களையும் ஏதோ ஒரு வகையில் கொடூரமாக காவு கொண்ட நெருக்கடி நிலையின் கோரக் கரத்தினின்று தமிழகத்தையும் தமிழகத் தலைவர்களையும் குறிப்பாக பெருந்தலைவர் காமராசர் அவர்களையும் அவர் காப்பாற்றிய பாங்கினை நன்றியோடு நினைவு கூரவே செய்கிறார்கள்.இதையும் இதனால் அவரது கட்சியும் உங்களது குடும்பமும் எதிர்கொண்ட இன்னல்களையும் இன்றைய காங்கிரஸ் தலைவர்களே மிகுந்த நெகிழ்வோடு மேடைகளில் எடுத்து வைப்பதை காண முடிகிறது.அன்று அவர் இந்திராவின் பக்கம் சாய்ந்திருந்தால் அந்தப் புள்ளியில் இருந்து வரலாற்றில் அவர் இல்லை. அவர் நெருக்கடி நிலையை அவ்விதமாக எதிர் கொண்டிருக்கவில்லை என்றால் இன்றைக்கு திராவிடக் கட்சிகள் இருந்திருக்க வாய்ப்பில்லை.இப்பவும் நான் சொல்ல வந்ததுகூட வேறு திரு ஸ்டாலின். நெருக்கடி நிலையின்போது பத்திரிக்கைகளுக்கு ”இரட்டைத் தணிக்கை” இருக்கிறது. முரசொலிக்கு இன்னும் கூடவே நெருக்கடிகள் இருந்த நேரம். நீங்கள் உள்ளிட்ட திமுக தோழர்கள் சிறையில். யாரும் அவரோடு இல்லை. சற்றேறக்குறைய தன்னந்தனி மனிதனாக நிற்கிறார்.அவரது கருத்துக்களை மக்களிடம் கொண்டுபோக வேண்டும். மேடை போட்டு பேச முடியாது. பத்திரிக்கை மூலமாக கருத்தைக் கொண்டுபோக முடியாது. அவரே முரசொலி அலுவலகம் போகிறார். மக்களுக்கான தனது கருத்துக்களை அவரே அச்சுக் கோர்க்கிறார். அவரே துண்டறிக்கைகளாக அவற்றை அச்சடிக்கிறார் யாரும் இல்லாத சூழலிலும்.எப்படி விநியோகிப்பது?அவரே களமிறங்குகிறார். திமுக கொடியை ஒரு கழியிலே கட்டி அதைத் தன் தோளிலே சாய்த்துக் கொள்கிறார். அண்ணா சாலையிலே நின்றுகொண்டு போவோர் வருவோருக்கெல்லாம் அந்தத் துண்டறிக்கைகளை விநியோகிக்கிறார்.நேற்றுவரை இந்த மண்ணின் முதல்வர். இன்று கையிலே கட்சிக் கொடியோடு துண்டறிக்கைகளை அந்த மனிதனால் எப்படி விநியோகிக்க முடிகிறது? காரணம் மிகவும் எளிதானது. அவர் எழுத்தின்மீது அவருக்கிருந்த நம்பிக்கை. தன் எழுத்து மக்களை நெருக்கடிக்கு எதிராக களமிறக்கும் என்பதில் அவருக்கிருந்த நம்பிக்கை.அவரை அவரே எதிர்பார்க்காத வகையில் குளித்தலையில் அண்ணா காரணம் இல்லாமல் ஒன்றும் களம் இறக்கவில்லை திரு ஸ்டாலின். அதற்குப் பின்னனியில் அவருக்கு வலுவான காரணமும் நம்பிக்கையும் இருந்தது.குளித்தலைக்குப் பக்கத்தில் இருந்த ஒரு குட்டி ஜமீந்தார் தன்னிடம் இருந்த பலநூறு ஏக்கர் நிலங்களைக் கொண்டு ஏகப்பட்ட குடும்பங்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தார். தனி ஒருவனாக களம் இறங்கி ஆட்களைத் தனது பேச்சாலும் செயலாலும் ஒன்றுதிரட்டி அந்த ஜமீந்தாருக்கு எதிராகப் போராடி அந்த அடிமைகளுக்கு அந்த ஜமீந்தாரின் நிலத்தைப் பிரித்து வாங்கிக் கொடுத்திருந்ததாகக் கூறுகிறார்கள்.திமுக இவ்வளவு பலமாக இல்லாத சூழ்நிலையில், ஆளுங்கட்சி முதலாளிகளுக்கு ஆதரவாக இருந்த ஒரு சூழ்நிலையில் அதை அவர் சாதித்திருக்கிறார் என்றால் அதற்காக மக்கள் அவரை வெற்றிபெற வைத்திருக்கிறர்கள் என்றால் அதிலிருந்து ஒரு பாடம் உங்களுக்கு இருக்கிறது திரு ஸ்டாலின்.உழைக்கிற மக்களோடு நின்று அவர்களுக்காக போராடினால் அவர்களது வாழ்க்கை விடியும். அந்த எளிய மக்கள் தம் பக்கம் நின்றவர்களைக் கைவிட மாட்டார்கள் என்பதே அது.அருள்கூர்ந்து யோசித்துப் பாருங்கள் திரு ஸ்டாலின். திமுக உழைக்கும் மக்களிடம் இருந்து பையப் பைய முதலாளிகள் பக்கம் நகர்ந்து போய் இருக்கிற உண்மை உங்களுக்குப் புரியும். மேடைகளில், அறிக்கைகளில் மக்களுக்காகப் பேசுவதோடு மட்டும் இல்லாமல் வாழ்க்கைக்கான அவர்களது போராட்டங்களில் அந்த எளிய மக்களோடு திமுகவை கொண்டு நிறுத்துங்கள்.இன்னொரு விஷயத்தை நான் இங்கே அவசியம் உங்களோடு உரையாட ஆசைப்படுகிறேன்.கலைஞர் இறந்தவுடன் அல்லது இறந்து விடுவார் என்று உறுதியாக தெரிந்தவுடன் நீங்கள் உங்கள் குடும்பத்தினரோடு சென்று முதல்வரைச் சந்தித்து அவரை அடக்கம் செய்வதற்கு மெரினாவில் இடம் கேட்கிறிறீர்கள். பிறகு முறைப்படி கட்சிமூலமாக கோரிக்கை வைக்கிறீர்கள். அந்தக் கோரிக்கையை அரசு நிராகரிக்கிறது.இரவோடு இரவாக உயர்நீதிமன்றத்தை அணுகி வெற்றி பெறுகிறீர்கள். எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறீர்கள். அதற்காகவே உங்களுக்கு ஒரு பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.கலைஞர் இறந்தபிறகு இட ஒதுக்கீட்டிற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார் என்றும் நீதிமன்றத் தீர்ப்பு வந்த்தும் மரணத்திற்குப் பிறகும் கலைஞர் வென்றார் என்றும் திமுக தோழர்கள் எழுதுவதை கண்ணீரோடு என்னாலும் ரசிக்கவே முடிந்தது திரு ஸ்டாலின்.ஆனாலும் அதை கலைஞரது போராட்டம் என்றோ அல்லது மரணத்திற்குப் பிறகான அவரது வெற்றி என்று மட்டுமோ நீங்கள் எடுத்துக் கொள்ளமாட்டீர்கள் என்று நம்புகிறேன். இதில் நமக்கான ஒரு பாடம் இருக்கிறது.கலைஞரை அடக்கம் செய்துவிட்டு வந்து படுத்து எழுந்திருப்பதற்குள் அக்கிரஹாரத்து பெண் ஒருவர், ”இனி மெரினா சென்று வந்தால் வீடு வந்ததும் குளித்துவிட்டு பூனூலை மாற்ற வேண்டும்” என்று எழுதுகிறார்.அதாவது கலைஞரை மெரினாவில் புதைத்ததால் மெரினா தீட்டுப் பட்டு விட்டதாம். அதுவும் பூனூலை மாற்றும் அளவிற்கு அந்தத் தீட்டின் வீரியம் இருக்கிறதாம். பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது ஸ்டாலின்.அவர்கள் அப்பட்டமாக வெளியே வந்து விட்டார்கள் திரு ஸ்டாலின்.ஆனால் அதை நாம் சரியாக எதிர்கொள்கிறோமா? என்ற அச்சம் என்னுள் இருக்கிறது.பார்ப்பன ஆதிக்கத்தை கலைஞர் என்ற சூத்திரர் வென்றுவிட்டதாகவே பெரும்பான்மை பதிவுகள் வந்தன. திமுக தலைவர்கள் சிலரும் அதே பாதையில் நகர முயற்சித்தது மிகுந்த மன வருத்தத்தைத் தந்தது.”பார்ப்பனரல்லாதார் இயக்கம்” என்று முன்னோர்கள் துவக்கியதன் பொருள் நசிந்துவிடக்கூடாது திரு ஸ்டாலின்.இது ஒரு சுடுகாட்டுப் பிரச்சினை. கலைஞர் என்ற மிகப் பிற்படுத்தப்பட்ட தலைவரை மெரினாவில் வைத்தால் கடற்கரை தீட்டுப்படும் என்று சொல்வது பார்ப்பனத் திமிர் அன்றி வேறெதுவும் இல்லை.ஆனால் அதிலிருந்து வெற்றி பெறுவது இடைசாதி வெற்றி என்றோ சூத்திர வெற்றி என்றோ மட்டும் குறுகிக் கொள்ளப்படுமானால் சொல்வதற்கு ஒன்று இருக்கிறது திரு ஸ்டாலின்.இடைசாதியைச் சார்ந்த ஒருவருக்கு அவருக்கு உரிய நினைவிட்த்தை மறுப்பது பார்ப்பனத் திமிர் என்றால் இடைசாதி தெருக்கள் வழியாக தலித் பிணங்கள் கொண்டு செல்வதற்கு ஏற்படும் இடையூறுகளை என்னவென்று சொல்வது?இன்னமும் ஊர்த் தெருக்களில் தந்தை அம்பேத்கரின் சிலைகள் சேதப் படுகிறதே திரு ஸ்டாலின்.அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?நீங்கள் இதை அருள்கூர்ந்து அக்கறையோடு பரிசீலிக்க வேண்டும் என்று அன்போடு வேண்டுகிறேன்.பார்ப்பனியத்திற்கு எதிரான இடைசாதி விடுதலைக்கு முன் நிபந்தனை தலித் விடுதலை என்பதை நீங்கள் புரிந்து கொண்டு நகர்வீர்கள் எனில் அது தமிழ் நாட்டிற்கு நல்லதுகளையும் அமைதியையும் கொண்டுவந்து சேர்க்கும். அல்லாது போனால் அது மதவெறி (அது எந்த மதமாயினும்) பாசிஸ்டுகளுக்கு வாசலைத் திறந்துவிடுகிற காரியத்தை சத்தமின்றி செய்யும்.தோழமைகளை அரவணைத்து நீங்கள் வெற்றி காணவும் இந்த மண் அதனால் பயனுறவும் வேண்டுமாய் வாழ்த்துகிறேன்.நன்றி.அன்புடன்,
இரா.எட்வின்.நன்றி: காக்கை செப் 2018
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 04, 2018 18:18

பொய் என்று மட்டும் உங்களால்.....

அந்தக் குழந்தை உங்களை பாசிஸ்ட் என்று முழங்குகிறாள்நீங்கள் அவள் பின்னணியைத் தேடுகிறீர்கள்நக்சல் என்கிறீர்கள்தீவிரவாதி என்கிறீர்கள்பார்த்தீர்களா தமிழிசை , அவள் சொல்வது பொய் என்று மட்டும் உங்களால் முனகக்கூட முடியவில்லைதைரியம் இருந்தால் இல்லை என்று நிறுவுங்கள்அதன்பிறகு அவள்மீது நீங்கள் மானநஷ்ட வழக்கே போடலாம்அதுவரை அருள்கூர்ந்து உங்கள் அலப்பறையை நிறுத்துங்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 04, 2018 06:23

September 3, 2018

03.09.2018

இன்று காலை பள்ளிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த நேரம் தோழர் முத்தையா அழைத்தார். வழக்கமாக அந்த நேரத்தில் அவர் அழைக்கிறவர் இல்லை. ஏதோ முக்கியமான செய்தி போல என்று அலைபேசியை எடுத்தேன்.“பள்ளிக்கூடத்துக்கு கிளம்பிட்டு இருக்கீங்களா?”“ஆமாம்”“வைரமுத்து பேசினார்”“என்னவாம் தோழர்”இந்த மாத காக்கையை வாசித்ததும் அதில் இருக்கும் தோழர் முத்தையாவின் எண்ணைத் தொடர்பு கொண்டிருக்கிறார். இவர் அலைபேசியை எடுத்ததும், “எட்வினா?” என்று கேட்டிருக்கிறார்.தான் எட்வின் இல்லை என்று சொன்னவர் தான் காக்கையின் ஆசிரியர் முத்தையா என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கிறார்.தன்னை வைரமுத்து என்றுஅறிமுகம் செய்து கொண்ட கவிஞர் தான் காக்கையை ( Kaakkai Cirakinile ) தொடர்ந்து வாசித்து வருவதாகவும் இதழ் மிகவும் செறிவோடு இருப்பதாகவும் கூறியவர் தான் அழைத்தது எனது இந்த மாத காக்கையில் திரு ஸ்டாலினுக்கான எனது கடிதம் குறித்து பேசவே என்று சொல்லியிருக்கிறார்.அந்த மொழியும், நுட்பமும், விஷயமும் என்னை உடனே பேச வைத்தது. எட்வினிடம் சொல்லிவிடுங்கள் என்று சொல்லிவிட்டு வைத்து விட்டார் என்று சொல்லிவிட்டு “சரி பள்ளிக்கு கிளம்புங்க” என்று சொல்லிவிட்டு இவர் வைத்து விட்டார்.சன்னமாக மகிழ்ச்சி அப்பிக் கொண்டது என்பதை மறைக்க விரும்பவில்லை.வண்டியை வண்டி ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு வந்து பேருந்து ஏறும் நேரம் அலைபேசி சிணுங்கியது. புதிய எண்ணாக இருந்தது. ஏதோ ஒரு நண்பர் லீவு சொல்வதற்காக பேசுகிறார் போல என்று நினைத்துக் கொண்டே எடுத்து “வணக்கம் எட்வின்” என்கிறேன். “வைரமுத்து பேசுகிறேன்” என்கிறார்.“அண்ணே, சொல்லுங்க என்கிறேன்”அந்தக் கடிதம் குறித்து சிலாகித்து ஆறு நிமிடங்கள் பேசுகிறார்.மொழி, நுட்பம், பாராக்களைப் பிரித்திருக்கிற பாங்கு, விஷயம் என்று பேசிக் கொண்டே போனவர் “சமீபத்தில் நான் வாசித்த மிகச் சிறந்த படைப்புகளுள் இதுவும் ஒன்று. சமீபத்தில் நான் வாசித்த ஆகச் சிறந்த கட்டுரை இது. கலைஞரைப் பற்றி அவரது மரணத்திற்குப் பிறகு வந்து தான் படித்தவற்றுள் இது சிறந்தது.இப்படி ஒரு கட்டுரை கலைஞரின் பார்வைக்கு சென்றிருந்தால் மகிழ்ந்து அழைத்துப் பேசியிருப்பார் என்றவர் லேண்ட்லைன் எண்ணைக் கொடுத்துவிட்டு பேசிவிட்டு வந்து சந்திக்குமாறு கூரியவர் காக்கைக்கு கடிதமும் எனது கடிதம் குறித்து ஒரு கட்டுரையிலும் எழுதுவதாகச் சொன்னார்.சொன்ன மாதிரியே காக்கைக்கு மின்னஞ்சல் அனுப்பி விட்டார்.வைரமுத்து பாராட்டியதும் கரைந்துபோகாதே என்று நண்பர்கள் சொல்லக்கூடும்.அப்படி இல்லை. நிச்சயமாய் இல்லை.போப் குறித்த அவரது கட்டுரையில் விலங்குகளைபோல் திரிந்த என்பதுமாதிரி ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றி கவிஞர் வைரமுத்து எழுதியதைக் கடுமையாக விமர்சிக்கிறோம்தான்.இவருக்கு எதிர்வினையாக தோழர் அறிவுறுவோன் எழுதியதை ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் காக்கையில் உரிய முக்கியத்துவத்தோடு வைத்தோம்.அந்தக் கட்டுரைகளை தோழர் க.சி அகமுடைநம்பி உச்சி முகர்ந்து பாராட்டியக் கடிதத்தை இந்த இதழில் வைத்திருக்கிறோம்.தமது மின்னஞ்சலில் இந்த இதழில் வெளிவந்துள்ள அனைத்துப் படைப்புகள் குறித்தும் வைரமுத்து குறிப்பிடுகிறார். எனில் இதையும் அவர் வாசித்திருப்பார்.தேவைப்படும்போது அவர்மீதான விமர்சனங்களைப் பதியவே செய்வோம். அதில் எமக்கு எந்தத் தயக்கமும் இல்லை.ஆனால் அவரது அழைப்புகள் எம்மை உற்சாகப் படுத்தியது என்ற உண்மையை இங்குப் பதிவது அவசியம் என்று பட்டது..வழக்கமாக எழுத்தை மெச்சிக் கொண்டாடுபவன் என்று சொல்லப்படுகிற எனக்கு அதைத் தொடர வேண்டும் இன்னும் பேரதிகமாகத் தொடரவேண்டும் என்று தோன்றுகிறது#சாமங்கவிய ஐம்பத்தியெட்டு நிமிடங்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 03, 2018 18:28

September 2, 2018

02.09.2018

காக்கையில் திரு ஸ்டாலின் அவர்களுக்கு நான் எழுதியிருந்த கடிதம் சரியாக சென்று சேர்ந்ததில் கொஞ்சம் மகிழ்ச்சியாயிருக்கிறது.கலைஞர் நினைவேந்தலின் பொருட்டு செப்டம்பர் மாத காக்கையை ஒரு வாரம் முன்னதாகவே முடித்திருந்தோம். அட்டைப் படம் தோழர் ட்ராட்ஸ்கி மருது வரைந்த கலைஞர் படம். என்னுடைய கடிதம் உட்பட கலைஞர் குறித்த மூன்று கட்டுரைகள். எனவே நினைவேந்தல் அன்று அரங்கத்தில் விநியோகித்தால் நன்றாக இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடு.வெள்ளியன்று திருச்சி NCBH மேலாளர் திரு முரளி அழைத்தார். போன வாரம்தான் நான் தரவேண்டிய பாக்கித் தொகையை வாங்கிப் போனார். கணக்கில் விடுபடல் இருந்து கேட்கிறார்போல என்று நினைத்தேன்.எடுத்ததும், “அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு” என்று ஆரம்பித்தார். கடிதம் நன்றாக இருப்பதாக கூறினார். புதிய தகவல்கள் என்றும் எடுத்துச் சொன்ன விதம் நன்றாக இருந்தது என்றும் கூறினார்.மாலை ஷார்ஜாவில் இருந்து வந்திருந்த தங்கை தீபாவின் கணவர் சிவா படித்துப் பார்த்துவிட்டு “மாமா, ஒரு கம்யூனிஸ்டாலதான் இப்படி எழுத முடியும்” என்றவர் கடவூர் நூலகத்திற்கு சந்தா கட்டிவிட்டு சென்றார்.இரவு ‘ஜனசக்தி’ யில் பணியாற்றும் பிரபு தோழர் முத்தையாவிடம் எண் வாங்கி அரைமணி நேரமெனும் பேசியிருப்பார்.நேற்று ராஜமுருகு பாண்டியன் (அரச முருகு பாண்டியன்) அழைத்து கடிதத்தின் இறுதிப் பகுதியைக் குறித்து நெகிழ்ந்தான்.சூத்திர விடுதலைக்கு தலித் விடுதலை முன்நிபந்தனை என்பதை நெகிழ்ந்து கொண்டாடினான்திரு க.திருநாவுக்கரசு அவர்களும் முன்னால் மத்திய அமைச்சர் சுப்பு லட்சுமி ஜெகதீசன் அம்மாவும் கடிதம் குறித்து பேசியதாக தோழர் முத்தையா கூறினார்.இருவரும் என்னிடமும் பேசினார்கள்.மருது மற்றும் மோகன்ராஜின் கலைஞர் குறித்த கட்டுரைகளும் வரவேற்பைப் பெற்றிருப்பதாகவும் முத்தையா கூறினார்அந்தக் கடிதத்தில் நெருக்கடி நிலையின்போது கலைஞர் துண்டறிக்கைகளை முரசொலி அச்சகத்தில் அச்சடித்தார் என்று எழுதியிருப்பேன். அது அப்படி அல்ல என்றும் அதை தனது ‘நக்கீரன்’ அச்சகத்தில் தான் அடித்து சென்று கலைஞரிடம் கொடுத்த்தாகவும் கூறினார்.சுப்புலட்சுமி அம்மா “பிரமாதம் எட்வின், ஆமா தளபதிக்கு நீ கடிதங்களை இணையத்தில் எழுதுகிறாயாமே, இதுவரை எழுதியவற்றை எனக்கு மின்னஞ்சல் செய். இனி எழுதுவதை முரசொலிக்கு அனுப்பு என்றார்இரண்டு விஷயங்கள்1) யாரும் ஏன் இப்படி ஸ்டாலினுக்கெல்லாம் எழுதிக் கொண்டு என்று கேட்கவில்லை
2) எப்படி ஸ்டாலினை ஸ்டாலின் என்று அழைக்கலாம் என்றும் யாரும் கோவப்படவில்லைஇரண்டுமே நல்ல விஷயங்கள்கலைஞருக்கு ஏன் இவ்வளவு பக்கங்கள் என்று யாரேனும் கேட்டால் காக்கையை நடத்துமளவு நாங்கள் இருக்கிறோம் எனில் அதில் கலைஞரின் பங்கும் உண்டு என்பதே எமது பதில்அந்தக் கடிதத்தை நாளை வைக்கிறேன்Kaakkai Cirakinile#சாமங்கவிய இருபத்தியாறு நிமிடங்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 02, 2018 18:42

இளைப்பாறிவிடாதே மகளே....





இளைப்பாறிவிடாதே மகளே
அதற்குள்இருக்கின்றன கணக்குகள் நிறையஅரசியல் செய்கிறோம் உன் மரணத்தை வைத்தென்றார்கள்இதுதானா படிப்பதற்கு 
இல்லவே இல்லையா வேறெதுவும் 
என்றார்கள்ஆயிரத்து நூற்றி எழுபத்தாறு எடுத்தவளால்
நீட் தேற முடியாதெனில் 
பாடத்தில் கோளாறென்றார்கள்நீட்டைத் தேறியவனால் 
ஆயிரத்தி நூற்றி எழுபத்தியாறு எடுக்க முடியாதெனில்?சாய்சில் விடுகிறார்கள் இதை 
எதையும் விடாது படித்து 
கரைகண்ட கனவான்கள்தெரியுமா மகளே
நீட் எழுத உன் தம்பிகளும் தங்கைகளும்
தேசம் முழுக்க அலைந்த கதை?கேள்விகள் தவறாம்
ஆனால் இழப்பீடு கிடையாதாம்கண்டடைந்து விட்டார்கள் 
நம்மை ஒழிப்பதற்கான ஆயுதம் 
ஒன்றைமுளைக்கும் இனி
தவறான கேள்விகளுக்கான
பயிற்சி நிலையங்கள்முடித்துவிடவில்லை எதையும் நாங்கள்
உன்னை இறுதியாய்க் குளிப்பாட்டியபிறகுகருப்பும்
சிவப்பும்
நீலமும்
உன் பெயரால் களத்திலேனும் 
கரம் கோர்ப்போம்அந்த அரசியலை 
நாங்கள்
செய்து முடிக்கும் வரைமகளே
அருள்கூர்ந்துஇளைப்பாறி விடாதே
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 02, 2018 00:11

September 1, 2018

01.09.2018

அன்பின் திரு ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம்.மீண்டும் மீண்டும் உங்களுக்கு கடிதம் எழுதுவதில் எனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை.இன்னும் சொல்லப்போனால் இன்னும் சில கடிதங்களுக்கான தேவையும் இருக்கிறது . எழுதவும் செய்வேன்.இன்று இரவு பெரம்பலூர் பாலாஜி பவனில் சாப்பிட்டுவிட்டு வந்து வண்டியை எடுக்கும்போது ஒரு மகிழுந்து அருகே வந்து நிற்கிறது. வண்டியில் திமுக கொடி.முன் இருக்கையில் இருந்து இறங்கிய தம்பி என்னை வணங்குகிறார். நம்மைதானா? அல்லது பின்னால் யாரும் நிற்கிறார்களா? என்று திரும்பிப் பார்க்கிறேன். பின்னால் யாரும் இல்லை. என்னை நோக்கி கையை நீட்டியவாறே வருகிறார்.உறுதிதான், நம்மைதான் வணங்கியிருக்கிறார். அன்பொழுக புன்னகைத்தவாறே கைகுலுக்குகிறேன். தான் பெரம்பலூர் நகரச் செயலாளர் பிரபாகரன் என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறார். கலைஞர் நினைவேந்தலன்று எனது உரை நச்சென்று இருந்ததாகவும் கலைஞர் மற்றும் திமுக குறித்து நான் பேசியவை புதிய செய்திகள் என்றும் கூறியவர், இதுமாதிரியான செய்திகளுக்கான தேடலுக்கு எனது உரை அன்று தீனி போட்டதாகவும் கூறினார்.கிட்டத்தட்ட இதையேதான் அந்த மகிழுந்தை ஓட்டி வந்த திமுக மாணவர் அணியின் மாவட்டப் பொறுப்பில் இருக்கும் தம்பியும் கூறினார்.அவர்களது இந்தத் தேடலும் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டபின் தாங்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதியும் மிகச் சரியாகப் பொறுந்துகின்றன.அந்த உரையின் ஓரிடத்தில் மாவட்டத் தலைநகரங்கள் தோறும் நூலகங்கள் அமைக்கப் படும் என்று கூறியிருக்கிறீர்கள்.செய்திகளுக்கான தேடல் இருப்பதாக கட்சியின் இளைய பிள்ளை உணர்கிறார். இளைஞர்களுக்கு உரிய செய்தி சேரவேண்டும். எனவே மாவட்டம் தோறும் நூலகங்கள் அமைக்க வேண்டும் என்பதை அந்தக் கட்சித் தலவர் அதே நேரத்தில் உணர்கிறார்,ஊழியனது தேடலும் தலைவரது பொறுப்புணர்வும் ஒரு சரியானப் புள்ளியில் கை குலுக்குகின்றன.இதை மட்டும் நீங்கள் செய்துவிட்டால் திமுகவின் இளைய பிள்ளைகள் கோட்பாட்டுத் தெளிவோடு இருப்பார்கள். அந்தக் கோட்பாட்டில் எமக்கு விமர்சனம் இருக்கும் என்றால் அதை இதய சுத்தியோடு செய்வோம் என்பது வேறு. இது ஒரு புறத்து விஷயமும் அல்ல. எமது கோட்பாடுகள் குறித்த உங்கள் விமர்சனத்தையும் நிபந்தனையாகக் கொண்டதுதான் இது.மொழி குறித்து, மொழி வளர்ச்சி குறித்து, மொழிச் சீர்திருத்தம் குறித்து, மொழி வளர்ச்சிக்கும் மொழிச் சீர்திருத்தத்திற்கும் இடையிலான வேறுபாடு குறித்தும், பன்முகத் தன்மையின் தேவை குறித்தும், ஒற்றைத் தனத்தின் கீழ்மை குறித்தும், மதச் சகிப்புத் தன்மை குறித்தும், பெண்ணுரிமை குறித்தும், எந்த மொழிமீதும் வெறுப்பு இருக்க்க் கூடாது என்பது பற்றியும், அதே வேளை திணிப்பை எவ்வளாவு வலுகொண்டு எவர் செய்தாலும் அதைவிட வலுவாய் அதை எதிர்க்க வேண்டிய அவசியத்தையும் திமுக இளைஞர்கள் கற்பது அவசியம்.போக, பிற்படுத்தப்பட்டவர்களின் விடுதலைக்கு தலித் விடுதலை முன்நிபந்தனை என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.இவற்றைப் புரிந்துகொள்வதற்கு நீங்கள் அமைக்கப் போவதாய் உள்ள நூலகங்கள் பெரிதும் உதவும்.இந்தி எதிர்ப்பிற்கும் இந்தித் திணிப்பை எதிர்ப்பதற்கும் வேறுபாடுகள் உள்ளன ஸ்டாலின் சார்.அதையும் அவர்களுக்கு அந்த நூலகங்கள் வழங்கும்.நூலகங்கள் அமைக்கும்போது கூட்ட அரங்குகளோடு அவற்றை உருவாக்குங்கள்.சிறு சிறு பிரசுரங்களை வெளியிடுவதும் அவற்றை கொண்டுபோய் சேர்ப்பதும் அவசியம் திரு ஸ்டாலின்.தைரியமாய் செய்யுங்கள். இதை எல்லாம் நீங்கள் செய்யும்பொழுது உங்கள் கட்சி மட்டும் அல்ல தமிழகமே கொஞ்சம் புரளும்.அன்புடன்,
இரா.எட்வின்.#சாமங்கவிய 49 நிமிடங்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 01, 2018 23:13

August 28, 2018

என் தலையீட்டு உரிமை

கலைஞரது நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு பாரதிய ஜனதாக் கட்சியையும் திமுக அழைத்திருக்கிறது"மதவெறியால் நாட்டையே சுடுகாடாகத் துடிக்கும் அவர்களை எப்படி அழைக்கலாம்?“இதைக் கேட்பதற்கு நமக்கு உரிமையேகூட கொஞ்சம் உண்டுதான்.ஆனால், அடிப்படையில் அது அவர்கள் நிகழ்ச்சி. அவர்கள் அழைக்கிறார்கள். அதற்கான காரணங்களும் உரிமையும் அவர்களிடம் உண்டு.பிரச்சினை என்னவெனில்,எந்த பிஜேபியை திமுக அழைத்திருக்க வேண்டாம் என்று நாம் உரிமையோடு கேட்டோமோ அந்த பிஜேபி வாஜ்பாய் நினைவேந்தலுக்கு நம்மை அழைத்திருக்கிறார்கள்முன்னதை சொல்வதற்கு எனக்கு உள்ள உரிமை எனக்கு உயிருக்கு உயிரான நண்பன் தனது வீட்டு விஷேசத்திற்கு யாரை அழைக்கலாம் என்பதிலான எனது தலையீடுஇரண்டாவது என்பது எனது குடும்பத்தை, தெருவை, நாட்டை சுடுகாடாக்க துடிப்பவர் வீட்டு விஷேசத்தில் என் தகப்பன் கலந்து கொள்ளலாமா என்பதிலான என் தலையீட்டு உரிமைபோகக்கூடாது தந்தையே
28.08.2018முன்னிரவு 07.41
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 28, 2018 07:12

இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.