01.09.2018
அன்பின் திரு ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம்.மீண்டும் மீண்டும் உங்களுக்கு கடிதம் எழுதுவதில் எனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை.இன்னும் சொல்லப்போனால் இன்னும் சில கடிதங்களுக்கான தேவையும் இருக்கிறது . எழுதவும் செய்வேன்.இன்று இரவு பெரம்பலூர் பாலாஜி பவனில் சாப்பிட்டுவிட்டு வந்து வண்டியை எடுக்கும்போது ஒரு மகிழுந்து அருகே வந்து நிற்கிறது. வண்டியில் திமுக கொடி.முன் இருக்கையில் இருந்து இறங்கிய தம்பி என்னை வணங்குகிறார். நம்மைதானா? அல்லது பின்னால் யாரும் நிற்கிறார்களா? என்று திரும்பிப் பார்க்கிறேன். பின்னால் யாரும் இல்லை. என்னை நோக்கி கையை நீட்டியவாறே வருகிறார்.உறுதிதான், நம்மைதான் வணங்கியிருக்கிறார். அன்பொழுக புன்னகைத்தவாறே கைகுலுக்குகிறேன். தான் பெரம்பலூர் நகரச் செயலாளர் பிரபாகரன் என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறார். கலைஞர் நினைவேந்தலன்று எனது உரை நச்சென்று இருந்ததாகவும் கலைஞர் மற்றும் திமுக குறித்து நான் பேசியவை புதிய செய்திகள் என்றும் கூறியவர், இதுமாதிரியான செய்திகளுக்கான தேடலுக்கு எனது உரை அன்று தீனி போட்டதாகவும் கூறினார்.கிட்டத்தட்ட இதையேதான் அந்த மகிழுந்தை ஓட்டி வந்த திமுக மாணவர் அணியின் மாவட்டப் பொறுப்பில் இருக்கும் தம்பியும் கூறினார்.அவர்களது இந்தத் தேடலும் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டபின் தாங்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதியும் மிகச் சரியாகப் பொறுந்துகின்றன.அந்த உரையின் ஓரிடத்தில் மாவட்டத் தலைநகரங்கள் தோறும் நூலகங்கள் அமைக்கப் படும் என்று கூறியிருக்கிறீர்கள்.செய்திகளுக்கான தேடல் இருப்பதாக கட்சியின் இளைய பிள்ளை உணர்கிறார். இளைஞர்களுக்கு உரிய செய்தி சேரவேண்டும். எனவே மாவட்டம் தோறும் நூலகங்கள் அமைக்க வேண்டும் என்பதை அந்தக் கட்சித் தலவர் அதே நேரத்தில் உணர்கிறார்,ஊழியனது தேடலும் தலைவரது பொறுப்புணர்வும் ஒரு சரியானப் புள்ளியில் கை குலுக்குகின்றன.இதை மட்டும் நீங்கள் செய்துவிட்டால் திமுகவின் இளைய பிள்ளைகள் கோட்பாட்டுத் தெளிவோடு இருப்பார்கள். அந்தக் கோட்பாட்டில் எமக்கு விமர்சனம் இருக்கும் என்றால் அதை இதய சுத்தியோடு செய்வோம் என்பது வேறு. இது ஒரு புறத்து விஷயமும் அல்ல. எமது கோட்பாடுகள் குறித்த உங்கள் விமர்சனத்தையும் நிபந்தனையாகக் கொண்டதுதான் இது.மொழி குறித்து, மொழி வளர்ச்சி குறித்து, மொழிச் சீர்திருத்தம் குறித்து, மொழி வளர்ச்சிக்கும் மொழிச் சீர்திருத்தத்திற்கும் இடையிலான வேறுபாடு குறித்தும், பன்முகத் தன்மையின் தேவை குறித்தும், ஒற்றைத் தனத்தின் கீழ்மை குறித்தும், மதச் சகிப்புத் தன்மை குறித்தும், பெண்ணுரிமை குறித்தும், எந்த மொழிமீதும் வெறுப்பு இருக்க்க் கூடாது என்பது பற்றியும், அதே வேளை திணிப்பை எவ்வளாவு வலுகொண்டு எவர் செய்தாலும் அதைவிட வலுவாய் அதை எதிர்க்க வேண்டிய அவசியத்தையும் திமுக இளைஞர்கள் கற்பது அவசியம்.போக, பிற்படுத்தப்பட்டவர்களின் விடுதலைக்கு தலித் விடுதலை முன்நிபந்தனை என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.இவற்றைப் புரிந்துகொள்வதற்கு நீங்கள் அமைக்கப் போவதாய் உள்ள நூலகங்கள் பெரிதும் உதவும்.இந்தி எதிர்ப்பிற்கும் இந்தித் திணிப்பை எதிர்ப்பதற்கும் வேறுபாடுகள் உள்ளன ஸ்டாலின் சார்.அதையும் அவர்களுக்கு அந்த நூலகங்கள் வழங்கும்.நூலகங்கள் அமைக்கும்போது கூட்ட அரங்குகளோடு அவற்றை உருவாக்குங்கள்.சிறு சிறு பிரசுரங்களை வெளியிடுவதும் அவற்றை கொண்டுபோய் சேர்ப்பதும் அவசியம் திரு ஸ்டாலின்.தைரியமாய் செய்யுங்கள். இதை எல்லாம் நீங்கள் செய்யும்பொழுது உங்கள் கட்சி மட்டும் அல்ல தமிழகமே கொஞ்சம் புரளும்.அன்புடன்,
இரா.எட்வின்.#சாமங்கவிய 49 நிமிடங்கள்
இரா.எட்வின்.#சாமங்கவிய 49 நிமிடங்கள்
Published on September 01, 2018 23:13
No comments have been added yet.
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)