இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 82

October 15, 2018

வலம் போகும் நரியும் கடிக்கும் இடம் போகும் நரியும் கடிக்கும்

"Teachers who are reluctant to express or scared of expressing their views on issues that affect the society they are part of shouldn't call themselves educators. A society that is gifted with critical educators is a blessed society"என்று இன்றைய “THE HINDU” வில் எழுதியிருக்கிறார் முனைவர் ஆல்பர்ட். இதைத்தான் நாமும் கரடியாய் கத்திக்கொண்டிருக்கிறோம் பேசத் தெரிந்த காலம் முதலாய்.என்ன செய்வது? நாம் தமிழில் கத்துகிறோம். அவர் ஆங்கிலத்தில் கத்துகிறார். ஆயிரம் இருந்தாலும் ஆங்கிலத்திற்கு மவுசு அதிகம்தானே. இதையே டிசைன் டிசைனாக கத்திய நாமே அவர் ஆங்கிலத்தில் கத்துவதை மேற்கோள் காட்டுகிறோமே.ஆங்கிலத்தில் அல்ல எந்த மொழியில் ஒருவர் இதைப் பேசியிருந்தாலும் இதை எடுத்தாளவே செய்வோம்.தங்களது சமூகத்தைப் பாதிக்கும் விஷயங்களைப் பற்றி பேச மறுக்கிற அல்லது பேசப் பயப்படுகிற எந்த ஒரு ஆசிரியரும் தன்னை கல்வியாளர் என்று அழைத்துக் கொள்கிற அருகதையை இழக்கிறார்கள் என்கிறார் ஆல்பர்ட்.நானெல்லாம் என்னை ஆசிரியர் என்றுகூட கொள்வதில்லை. உண்மையை சொல்வதெனில் நானொரு பள்ளிக்கூடத்து ஊழியன், அவ்வளவே.நாம் மாதாமாதம் கட்டிய போட்ட சீட்டுப் பணத்தை எடுப்பதற்கு GST கேட்கிறார்களா?எவ்வளவோ தள்ளி எடுக்கிறோம், கூடக் கொஞ்சம் தள்ளி எடுத்துட்டோம்னு போயிடுவோம். தெரியாமலா சொன்னாங்க எவ்வளவுதான் எண்ணெய தடவிகிட்டு உழுந்து பொறண்டாலும் ஒட்டுறதுதான் ஒட்டும்னு. என்ன எழுதியிருக்கோ அதுதான் வரும் என்று ஒதுங்கிப் போகிற ஆசிரியர்களை நமக்குத் தெரியும்.இதெல்லாம் நியாயமாப்பா? என்று கேட்டால், வேற என்ன செய்யச் சொல்ற? இதுக்காகப் போயி அவங்கிட்ட மல்லுக்கு நிக்கச் சொல்றியா? புடிக்கலையா இனிமேல் சீட்டுப் போடாம இருந்துக்கனும். படிச்ச நாம வம்புக்கு போறதெல்லாம் அழகல்ல.தன்னைப் பாதிக்கிற விஷயத்திற்கே எதிர்வினையாற்ற மறுக்கிறவர் எப்படி அய்யப்பன் ஆலயத்திற்குள் பெண்கள் போகலாமா வேண்டாமா என்பது குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு வினையாற்றப் போகிறார்.பெட்ரோல் விலை தினமும் தினமும் தாறுமாறாக ஏறிக் கொண்டிருக்கிறதே என்றால் முடியலைனா சைக்கிளில் போகலாம்பா. காசும் மிச்சம். போக, உடம்பிற்கும் நல்லது என்கிற ஆசிரியர்களை எனக்குத் தெரியும்.ரஃபேலில் ஊழல் பார்த்தாயா என்றால் அதனால நமக்கென்ன நஷ்டம் என்கிற ஆசிரியர்கள் நிறைய.நரி வலம் போனால் என்ன? இடம் போனால் என்ன? நம்மக் கடிக்காம போனால் சரி என்கிற ஆசிரியர்கள் வலம் போகும் நரியும் நம்மை கடிக்கும், இடம் போகும் நரியும் நம்மைக் கடிக்கும் என்பதை முதலில் உணர வேண்டும்.எது நடந்தா நமக்கென்ன எட்வின்? நமக்கு வர சம்பளத்துல பைசாவ குறைக்க ஒருத்தனாலயும் முடியாது. நம்ம வேலை எதுவோ அத மட்டும் பார்ப்போம் என்று ஒவ்வொருநாளும் என்னை நெறிப்படுத்த முயற்சி செய்து தோற்றுப்போகிற நண்பர்கள் ஏராளம்.”படிச்ச நாம வம்புக்குப் போறதெல்லாம் அழகல்ல” என்கிறார்களே. எனில் எதுதான் அழகு?.“நம்ம வேலை எதுவோ அதை மட்டும் பார்ப்போம்” என்கிறார்களே, அவர்களையும் உள்ளடக்கிய நம்ம வேலைதான் எது?மேலே கேட்கப்பட்ட இரண்டு கேள்விகளுக்கும் ஒரே விடைதான்.பாதிப்பு நமக்கு மட்டுமல்ல. அது எல்லோருக்குமானது என்கிறபோது அதற்கான எதிர்வினையை யாராவது பார்த்துக் கொள்வார்கள். நாம் நமது வேலையை பார்ப்போம். நமது வேலை பள்ளிக்குப் போவது ஒழுங்காக பாடங்களை நடத்துவது, பிள்ளைகளை படிக்க வைப்பது, மிக நல்ல மதிப்பெண்ணோடு அவர்களை தேர்ச்சிபெற செய்வது, உயர் கல்விக்கு அவர்களை வழிநடத்துவது, நன்கு சம்பாரித்து தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று மகிழ்ச்சியாய் வாழ்வதற்கு அவர்களை வழிநடத்துவது போன்றவை என்கிறார்கள்.இவை நல்ல விஷயங்கள்தான். இல்லை என்று சொல்லவில்லை.ஆனால் உயர் கல்வியே நமது பிள்ளைகளுக்கு கிடைத்துவிடக் கூடாது என்று அடம் பிடிக்கும் அரசுகளும் கனவான்களும் அசுர பலத்தோடு எழுந்து சண்டமாருதம் செய்துகொண்டிருக்கும்போது நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருந்தோம் எனில் நமக்கு கல்வி இல்லை வேலை இல்லை வாழ்க்கையும் இல்லை என்று சொல்வார்கள். சொல்வார்கள் என்ன ஏற்கனவே சொல்லத் தொடங்கி விட்டார்கள்.ஆயிரத்து இருநூறு மதிப்பெண்ணிற்கு ஆயிரத்தி நூற்றி எழுபத்தி ஆறு மதிப்பெண் பெற்ற நமது மகள் அனிதாவை அவர்கள் ஏற்கனவே தற்கொலை செய்து விட்டார்கள்.இப்போதும் ஒதுங்கிப் போவோம் எனில் நேற்று அரியலூரில் நடந்தது நாளை நம் ஊரில் நடக்கும். நாளை மறுநாள் நமது தெருவிலும் அதற்கு அடுத்த நாள் நமது வீட்டிலும் நடக்கும்.சராசரி ஆசிரியனுக்கு நல்ல துணை, நல்ல மக்கள், நல்லதொரு வீடு, நல்லதொரு மகிழுந்து என்று கனவு நீளும்நல்ல ஆசிரியனுக்கு நமது கடமை பிள்ளைகளுக்கு ஒழுங்காக போதிப்பது என்ற வகையில் கனவு இருக்கும்ஒரு மிகச் சிறந்த ஆசிரியனுக்கு தான் ஒரு கல்வியாளனாக வேண்டும் என்ற கனவு அவனைத் தூங்கவிடாமல் தொந்தரவு செய்யும்.ஆசிரியனுக்கும் கல்வியாளனுக்கும் என்ன வேறுபாடு என்று ஆல்பர்ட் சொல்வதை நாம் நம் பாஷையில் சொல்வோம்நமக்கு மட்டுமா பிரச்சினை? அனைவருக்கும்தானே அது. எனில் அடுத்தவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நாம் நாம் வாங்கும் சம்பளத்திற்கு ஒழுங்காக வேலை பார்ப்போம் என்று கருதினால் அவர் ஒரு நல்ல ஆசிரியர்.அவர்களை மட்டுமா பாதிக்கும்? அவர்களை பாதிக்கும் எதுவும் நம்மையும் பாதிக்கும். எனவே சமூகத்தைப் பாதிக்கும் எது குறித்தும் மாணவர்களுக்குப் புரியும் பாஷையில் எடுத்து அம்பலப்படுத்துவதும் அதை கேள்வி கேட்டு எதிர்வினையாற்றும் உணர்வையும் தைரியத்தையும் பிள்ளைகளுக்கு ஊட்டினால் அவன் கல்வியாளான்.விமர்சனம் செய்கிற கல்வியாளர்களைப் பெற்றிருக்கக் கூடிய சமூகம் ஆசிர்வதிக்கப்பட்ட சமூகம் என்கிறார் ஆல்பர்ட்.நமக்கு ஏக்கமாய் இருக்கிறது.#சாமங்கவிந்த நேரம் சரியாய்15.10.2018
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 15, 2018 18:20

லேஷந்த் சொல்றதுதான் ஞாயிறு திங்கள்

மின்சாரம் எங்களோடு காய் விட்டுவிட்டு மூன்றுதெரு தாண்டி நடைபயிற்சிக்கு சென்றுவிட்ட அந்த இருட்டுப் பொழுதில் அவரது அம்மாவோடும் அக்காவோடும் நம்மவீட்டு மொட்டை மாடிக்கு வந்திருந்தார் லேஷந்த் சார்.தெருவே இருண்டு கிடந்த அந்தப் பொழுதில் நம்மவீட்டு மொட்டைமாடி மட்டும் வெளிச்சமாயிற்று.மொட்டை மாடியில் குறுக்கும் நெடுக்குமாய் ஓடிக்கொண்டே இருந்தார்.அவர் பின்னால் அவரை விரட்டிக்கொண்டே ஓடியது வெளிச்சம்வெளிச்சத்தை வெளிச்சம் விரட்டியதுவெளிச்சமும் வெளிச்சத்தை விரட்டிய வெளிச்சமும் இசையை இறைத்துக்கொண்டே போயினஅந்தப் பொழுதில் நான் அங்கிருந்தது ஒரு கொடுப்பினைஒரு புள்ளியில் விட்டு அவரை இழுத்து தன் மடியில் கிடத்தியவாறே”எங்க, ஞாயிறு, திங்கள் சொல்லு”திமிறினார், திமிறினார் ஒருவாறாக மனம் இறங்கினார்,“ஞாயிறு, திங்கள், செவ்வாய். வியாழன், வெள்ளி, புதன், ம்ம்ம்ம்...,சனி”“டேய் செவ்வாய்க்கு அப்புறம் வியாழானாடா. செவ்வாய் , புதன்... எங்க சொல்லு”“ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி, புதன், வியாழன், சனி””என்னடா இப்படி மாத்தி மாத்தி சொல்ற”“நான் சொல்றதுதான் ஞாயிறு திங்கள்”எனக்கென்னமோ லேஷந்த் சார் சொல்ற வரிசையில்தான் கிழமைகளை வைக்க வேண்டும் என்று தோன்றுகிறது.உங்களுக்கு?
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 15, 2018 09:50

October 13, 2018

மேல்நிலை முதலாமாண்டுப் பொதுத்தேர்வின் அவசியம்


“பதினோராம் வகுப்பு மதிப்பெண் எதற்காகவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாது” என்று கல்வி அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் கூறியிருக்கிறார். அது குறித்து உரையாடவேண்டிய அவசியம் இருக்கிறது.
அதுஎந்தக் கோடை என்று சரியாய் நினைவில்லை. அநேகமாக 2015 கோடையாக இருக்க வேண்டும். பள்ளிக்கல்விக் கட்டமைப்பில், பாடத்திட்டத்தில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்பதைக் கண்டடைய கருத்துக் கேட்புக் கூட்டங்களை பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்திருந்தது.
அந்தக்கோடையின் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முற்பகல் ஒரு அமர்வு பிற்பகல் ஒரு அமர்வு என ஒவ்வொரு வாரமும் நான்கு அமர்வுகளாக கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்தது. அப்போதைய தமிழ்நாடு தொடக்கப்பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் திரு கார்மேகம் இதற்காக அழைக்க வேண்டியவர்களின் முகவரிகளைக் கேட்டார். நான் கொடுத்த பட்டியலில் இருந்தும் ஏறத்தாழ பதினைந்து தோழர்களை அழைத்திருந்தார்கள்.
தமிழ்நாடு இணையக் கழகத்தில்தான் அமர்வுகள் நடந்தன.
ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், கலைஞர்கள், திரைத் துறையினர், அரசியல்வாதிகள் என்று சகல தரப்பிலிருந்தும் தகுதி வாய்ந்தவர்களை அழைத்து அவர்களாது கருத்துக்களை அறிந்து அவற்றிற்கேற்ப மாற்றங்களைக் கொண்டு வருமாறு கல்வித்துறை உயரதிகாரிகளுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்கள் உத்திரவிட்டிருந்ததாகவும் அறிய முடிந்தது.
நிறைய திட்டுவார்கள். கோவப்படாமல் காது கொடுத்து கேளுங்கள். எவ்வளவு வேண்டுமானாலும் திட்டிக் கொள்ளட்டும். ஆனால் எதற்காகத் திட்டுகிறார்களோ அதற்கான மாற்றத்தையும் அவர்கள் சொல்லவேண்டும். அத்தகையோரை மட்டுமே அழைத்து உரையாடுங்கள் என்று மாண்பமை அமைச்சர் கூறினார் என்பதைக் கேள்விபட்டபோது அப்படி ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது.
அந்த அமர்வுகளை பள்ளிக் கல்வித்துறையின் அன்றைய முதன்மைச் செயலாளரான திரு உதயச்சந்திரன் சார் அவர்கள் வழிகாட்டுதலில் பள்ளிக்கல்வித் துறையின் இயக்குநர்கள் திரு கார்மேகம் மற்றும் திரு இளங்கோவன் ஆகியோர் சிறப்புறச் செய்திருந்தனர்.
முதல் சனி பிற்பகல் அமர்வில் நான் கலந்துகொண்டேன். என்னோடு எழுத்தாளர்கள் பிரபஞ்சன், இமையம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு ரவிக்குமார், மற்றும் பேராசிரியர் கல்யாணி அய்யா ஆகியோர் கலந்து கொண்டோம்.  
அன்றைய முற்பகல் அமர்வில் தோழர் கஜேந்திரபாபு கலந்து கொண்டார்.
பன்னிரண்டிலிருந்து பதினைந்து அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதிகாரிகள் அனைவரும் நாங்கள் பேசியதை கூர்ந்து கவனித்த்தோடு நாங்கள் பேசியவற்றை குறிப்பும் எடுத்துக் கொண்டனர். வழக்கமாக அதிகாரிகள் பேசுவதை கர்ம சிரத்தையோடு குறிப்பெடுப்பது எங்கள் வழக்கம். வழக்கம் என்பதைவிட அப்படி குறிப்பெடுக்க வேண்டும் என்பது எங்களுக்கான உத்தரவு. அப்படி எழுதுகிறோமா என்று சோதிக்கிற அதிகாரிகளும் உள்ளனர். அப்படிப்பட்ட எங்களுக்கு எங்களது கருத்துக்களை கவனமாக குறிப்பெடுக்கும் அதிகாரிகளைப் பார்க்க மகிழ்ச்சியாயிருந்தது.   
எனக்குவலப்புறம் பிரபஞ்சனும் இடப்புறம் கல்யாணி அய்யாவும் அமர்ந்திருந்தனர். எனக்கு நேரெதிரே உதயசந்திரன் சார் அமர்ந்திருக்கிறார்.
அமெரிக்கா, ஜப்பான்,ஜெர்மன் உள்ளிட்ட 34 நாடுகள் இணைந்து  ”ORGANAISATION FOR ECONOMIC COOPERATION AND DEVELOPMENT” என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த 34 நாடுகளும் தங்களை ”OCED நாடுகள்” என்றும் அழைத்துக் கொள்கின்றன.
இந்தநாடுகள் தங்களது குழந்தைகளின் கல்வித் தரம் வலுவாகவும் எதிர்காலத்தை சிறந்த முறையில் கட்டமைக்க உதவுவதாகவும் இருக்க வேண்டும் என்றும் கருதின. இதற்கு தங்களது குழந்தைகளின் கல்வியை சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கருதின. இந்த வேலையை செய்வதற்காக “PROGRAMME FOR INTERNATIONAL STUDENT’S ASSESMENT” என்றொருஅமைப்பை ஏற்படுத்தின. இந்த அமைப்பு சுருக்கமாக PISA என்று அழைக்கப் படுகிறது.
எந்தக்காரணத்தைக் கொண்டும் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது இல்லை என்று அந்த அமைப்பு முடிவு செய்தது. அதே நேரம் எந்த நாடு கேட்டுக் கொண்டாலும் அந்த நாட்டு மாணவர்களின் கல்வித் தரத்தை சோதித்து அறிக்கைத் தர முன்வந்தது.
அந்தவகையில் 2009 ஆம் ஆண்டு இந்தியா தனது குழந்தைகளின் கல்வித் தரத்தை ஆய்ந்து சொல்லுமாறு அந்த அமைப்பைக் கேட்டுக் கொண்டது. அந்த ஆண்டு அந்த அமைப்பைத் தவிர 40 நாடுகள் தங்கள் பிள்ளைகளின் கல்வித் தரத்தை ஆய்ந்து சொல்லுமாறு கோரின.
ஆய்வுநடத்தப்பட்ட 74 நாடுகளுள் இந்தியா 73 வது நாடாக வந்தது. இது குறித்து விரிவாக பேசிக் கொண்டே வந்த நான் இதற்கு காரணம் ”புரிந்துகொண்டு கற்றலில்” நம் குழந்தைகளுக்கு உள்ள போதாமைதான் என்றேன். தற்போது உள்ள தேர்வு முறையே இதற்கு காரணம் என்று கூறினேன்.
”சரி என்ன செய்யலாம்?” என்றார் உதயசந்திரன் சார்.
“பத்தாம் வகுப்பு வரைக்கும் தேர்வே வேண்டாம். பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு செமஸ்டர் முறையில் தேர்வு வைக்கலாம்” என்றேன்.
”இதை செய்தால் உங்களுக்கு கோயில் கட்டி கும்பிடுவோம் சார்” என்றபோது சார் சிரித்து வைத்தார்.
இதேவிஷயத்தை இன்னும் விரிவாகவும் இன்னும் ஆழமாகவும் கல்யாணி அய்யா எடுத்து வைத்தார். என்ன அவர் நீட் வேண்டும் என்றார். நான் கூடாது என்றேன்.
”நாங்கள் முடித்தபோது எட்வினும் சாரும் பாதி கோவில் கட்டலாம்“ என்றபோது தன்னையும் அறியாமல் கல்யாணி அய்யா என் கையைப் பிடித்து அழுத்தினார்.
ஆக, பதினோராம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத் தேர்வு என்பதற்கான குரல்களுள் என்னுடைய குரலும் ஒன்று.
இதன்விளைவுகளை நாம் புரிந்து கொள்வதற்கு நாம் இன்னும் ஐந்து ஆண்டுகளேனும் காத்திருக்க வேண்டும். ஒரு தேர்வு மட்டுமே நடந்திருக்கக் கூடிய சூழலில் அதன் விளைவுகளை ஆராய்தல் என்பது ஏறத்தாழ சிறுபிள்ளைத் தனமே ஆகும்.
பதினோராம்வகுப்பிற்கு பொதுத் தேர்வு என்று வந்ததுமே மெட்ரிக் பள்ளிகள் அதைக் கடுமையாக எதிர்க்கத் தொடங்கின. அவர்களது எதிர்ப்பிற்கு வலுவான காரணம் உண்டு.
நான்உட்பட பதினோராம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு என்றே தவறாகவே சொல்கிறோம். அது அப்படி அல்ல. பத்தாம் வகுப்பு வரைக்கும்தான் எண்களில் வகுப்புகளைச் சுட்ட வேண்டும். அதன்பிறகு ஒன்று +1, +2 என்று சுட்டலாம் அல்லது மேல்நிலை முதலாமாண்டு, மேல்நிலை இரண்டாம் ஆண்டு என்று சுட்டலாம்.
எனில்+1 ற்கு 600 மதிப்பெண். +2 ற்கு 600 மதிப்பெண். இப்படியான கட்டமைப்பில் குழந்தைகள் +1 பாடங்களையும் +2 பாடங்களையும் கற்றுத் தேர்ந்தால்தான் தேர்ச்சிபெற முடியும். எனில், மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சிபெற்று வரும் குழந்தை இரண்டு ஆண்டு பாடங்களையும் கற்றிருப்பார்கள். அது அவர்களுடைய மேல்படிப்பிற்கு உதவும். இப்படி இருக்க தரமான கல்விக்கான பள்ளிகள் என்று தங்களைத் தாங்களே விளம்பரப்படுத்திக் கொள்ளும் மெட்ரிக் பள்ளிகள் இதை ஏன் எதிர்க்க வேண்டும்?
அரசுப்பள்ளிகளிலும் அரசு உதவிபெறும் பள்ளிகளிளும் +1 இல் + பாடங்களையும் +2 இல் +2 பாடங்களையும் மட்டுமே நடத்த முடியும். ஆனால் மெட்ரிக் பள்ளிகளில் இரண்டு ஆண்டுகளிலும் இரண்டாமாண்டு பாடங்களை மட்டுமே நடத்துவார்கள்.
சிலபள்ளிகளில் காலாண்டிற்குப் பிறகு இந்த பாதகத்தை செய்வார்கள். பல பள்ளிகளில் ஜூன் முதலே +2 பாடங்களை ஆரம்பித்து விடுவார்கள். ஆக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் ஒரு ஆண்டில் படிக்கும்  +2 பாடப்புத்தகங்களை மெட்ரிக் குழந்தைகள் இரண்டு ஆண்டுகள் படிப்பார்கள். நீட் வருவதற்குமுன் +2 பாடங்களை மூன்று ஆண்டுகள் படிக்க வைத்த பள்ளிகளும் உண்டு. சமயபுரம் SRV மாதிரி விதிவிலக்குகளும் உண்டு.
பெற்றோர்களும் தங்கள்குழந்தைகள் +2 வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு மெட்ரிக் பள்ளிகள்தான் சரியான இடம் என்று கருதி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை நிராகரித்து தங்கள் குழந்தைகளை மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்க ஆரம்பித்தார்கள். இதன் விளைவாக மெட்ரிக் பள்ளிகள் செழித்துப் பெருத்தன அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் பல மூடப்படும் நிலைக்கு வந்துள்ளன.
இப்போது+1 லும் பொதுத் தேர்வு உண்டென்பதால் அந்தந்த வருடத்திற்கு அந்தந்த பாடம் என்று வந்து விட்டதால் இதற்கு ஏன் மெட்ரிக் பள்ளிகளில் காசைக் கொட்டிக்கொண்டு என்று பெற்றோர்கள் பிள்ளைகளை மீண்டும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர்க்க ஆரம்பித்தார்கள். மெட்ரிக் பள்ளிகள் பாதிப்பைச் சந்தித்தன.
மெட்ரிக்பள்ளி கனவான்கள் அதிர்ந்து போனார்கள். தங்களது கல்லா இளைப்பதை சொல்லி இந்த முறையை மாற்ற முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். எனவே அவர்கள் வேறு ஒரு காரணத்தைத் தேடினார்கள்.
இந்தஆண்டு குழந்தைகள் +1 பொதுத் தேர்வை எழுதினார்கள். முதல்முறையாக இருப்பதால் குழந்தைகளுக்கு சிரமம் இருந்தது என்பது உண்மைதான்.
இத்தனைஆண்டுகளாக இல்லாத வகையில் +1ல் பொதுத்தேர்வு என்பது சில குழந்தைகளுக்கு குழப்பத்தைத் தந்தது. அப்படித்தான் சொல்வார்கள் ஆனால் பொதுத் தேர்வு இருக்காது என்றுகூட சில குழந்தைகள் நம்பினார்கள். ஏன், சில ஆசிரிய நண்பர்களுக்கேகூட +1ல் பொதுத் தேர்வு நடக்காது என்று நம்பினார்கள்.
+1ல் சரியாக தேர்வு எழுதாத பிள்ளைகளுக்கு போன வருடம்தான் தேர்வு, இந்த வருடமும் தேர்வு, அடுத்த வருடமும் தேர்வு என்றால் சோர்வாகக்கூட பட்டது. பெற்றோர்கள் முணுமுணுக்கத் தொடங்கினார்கள். ஆனால் காலப்போக்கில் இது சரியாகக்கூடியது என்பதை இவர்கள் உணர்ந்துவிடக் கூடாது என்பதில் சிலர் கவனமாக இருந்தார்கள். அவர்களுள் மெட்ரிக் பள்ளி முதலாளிகளும் அடங்குவர்.
இவர்கள்குழந்தைகளுக்குதொடர்ந்து மூன்று ஆண்டுகள் பொதுத் தேர்வா? பிள்ளைகளது உடலையும் மனதையும் இது பாதிக்காதா? என்று குமுறத் தொடங்கி விட்டார்கள்.
இவர்களதுகுரலைத்தான் மாண்புமிகு அமைச்சர் அவர்களும் ஒலிக்கத் துவங்கி இருக்கிறார்.
+1 குழந்தைகளுக்கு பொதுத் தேர்வு உண்டு. தேர்ச்சி பெற வேண்டும். ஆனால் +1 மதிப்பெண்ணை கணக்கில் கொள்ள மாட்டோம். +2 மதிப்பெண்ணைக் கொண்டுதான் அவனது மேல்படிப்பு தீர்மானிக்கப்படும் என்கிறார்.
இதைத்தான்மெட்ரிக் பள்ளி கனவான்கள் எதிர்பார்த்தார்கள்.
இப்பொழுதுஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் முதலாமாண்டு முதலாமாண்டு பாடங்களையும் இரண்டாமாண்டில் இரண்டாமாண்டு பாடங்களையும் நடத்த வேண்டும். ஆனால் மெட்ரிக் பள்ளிகள் தேர்ச்சிக்குரிய அளவு மட்டும் முதலாமாண்டு பாடங்களை நடத்திவிட்டு முதலாமாண்டிலேயே இரண்டாமாண்டு பாடங்களை நடத்த ஆரம்பித்து விடுவார்கள். இனி, மீண்டும் மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்கைக்காக மைல் கணக்கில் வரிசை நிற்கும். அவர்களது கல்லா நிரம்பி வழியும்.
அரசுமற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர்க்கை குறையும். பையப் பைய இந்தப் பள்ளிகள் மாணவர்கள் இன்மையால் பூட்டப்படும்.
+1 பொதுத் தேர்வு மெட்ரிக் பள்ளிகளைக் கொஞ்சம் பாதித்தது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை சன்னமாக நிமிர்த்தியது. நடைமுறையில் பொதுப்பள்ளிகளின் நிர்வாகி மாண்பமை அமைச்சர். இன்னும் கொஞ்சம் சரியாய் சொன்னால் பொதுப்பள்ளிகளின் முதலாளி அவர். எனில் தனியார் பளிகளுக்கு நட்டம் பொதுப்பள்ளிகளுக்கு லாபம் என்று வரும் இந்தப் புள்ளியில் அவர்தான் லாபத்தை அனுபவிக்கப் போகிறவர்.
அவர்எப்படி தனக்கு நட்டமும் தனியார் பள்ளி முதலாளிகளுக்கு லாபமும் வருகிறமாதிரி மட்டுமே சிந்திக்கிறார் என்று தெரியவில்லை.
மூன்றாண்டுதொடர் பொதுத்தேர்வுகள் பிள்ளைகளை பாதிக்குமா? என்று கேட்டால் “பாதிக்கலாம்” என்பதே பதில்.
”எனில், மாற்ற வேண்டாமா?”
“மாற்ற வேண்டும்தான்”
“அதைத்தானே செய்திருக்கிறோம்” என்றால் இப்போதும் மூன்றாண்டுகளுக்கு தொடர்ந்து பொதுதேர்வு வருகிறதே.
என்னதான்செய்யலாம்?
+1 ற்கும் +2 விற்கும் பொதுதேர்வு இருக்கட்டும். +1 இல் 600 +2 வில் 600 ஆக 1200 மதிப்பெண் இருக்கட்டும்.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எடுத்துவிடலாம்.
நன்றி: காக்கைச் சிறகினிலே அக்டோபர் 2018
             





 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 13, 2018 21:07

October 11, 2018

நெறியோடும், வீரியத்தோடும் நடத்திக் காட்டிய ஜல்லிக்கட்டுப் போராட்டம் குறித்து....

தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கும் மாணவர்களை சந்திக்க வந்த அமைச்சர் கூறுகிறார்,“பாருங்கள், நேற்று முந்தினம்கூட இந்தியாவில் நடந்த சாலை விபத்துகளில் 32 பேர் இறந்து போனார்கள். இந்திய மாணவர்களைப் பாருங்கள். உங்களை மாதிரி போராடிக்கொண்டா இருக்கிறர்கள். நல்லப் பிள்ளைகளா கல்லூரிக்கு போய்க்கொண்டு இருக்கிறார்கள்.”இப்படிக் கூறியவர் பெயர் தெரியவில்லை. ஆனால் அவர் வங்க தேசத்தின் அமைச்சர் என்று 07.08.2018 நாளிட்ட தமிழ் இந்து கூறுகிறது.மாணவர்கள் போராடிக்கொண்டிருந்த இடம் வங்க தேசத்தின் தலைநகர் டாக்கா.போராட்டத்திற்கான காரணம் தொடர்ந்து உயிர்ப்பலி வாங்கிக் கொண்டிருக்கும் சாலை விபத்துக்களை கட்டுப்படுத்தக் கோரி29.07.2018 அன்று டாக்கா பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த மாணவர்கள்மீது தாறுமாறாக வந்த பேருந்து ஒன்று மோதியதில் ஒரு மாணவனும் ஒரு மாணவியும் உயிரிழக்கிறார்கள்.பொதுவாகவே வங்கத்தில் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகள் சாலைவிபத்துகளின் வழியாக ஏற்படுவதாகவும் அதிலும் குறிப்பாக டாக்காவில் சாலை விபத்துகள் ஏற்படுத்தும் உயிரிழப்புகள் பேரதிகம் என்று உணர்ந்த மாணவர்கள் உணர்கிறார்கள். உடனே அவர்கள் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த பதாகைகளுடன் தொடர் போராட்டத்தில் குதித்துவிட்டனர்.மாணவர்கள் போராட்டத்தில் குதித்ததும் டாக்கா மாநகர காவல்துறை ஆணையர் மாணவர்களை சந்திக்கிறார். வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் வங்கநாட்டு மக்கள் அங்கு விதிகளுக்கு உட்பட்டு வாகனங்களை ஓட்டுவதாகவும் ஆனால் உள்ளூரில் விதிகளை மதிக்காமல் தாறுமாறாக வாகனங்களை ஓட்டுவதாகவும் கூறுகிறார். இதனால்தான் விபத்துகளும் அதன்மூலமாக பேரதிக அளவில் உயிர்ப்பலிகள் ஏற்படுவதாகவும் கூறுகிறார்.அதாவது சுற்றி வளைத்து விபத்துகளுக்கும் உயிர்ப்பலிகளுக்கும் வாகன ஓட்டிகள்தான் காரணம், அரசு எந்த விதத்திலும் இதற்கு காரணம் அல்ல, எனவே மாணவர்கள் இதற்காக அரசுக்கு எதிராகப் போராடுவதை விடுத்து கல்லூரிகளுக்கு செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்.மாணவர்கள அவரது சமாதானத்தை ஏற்கவில்லை.மாணவர்களது போராட்டத்தில் சமூகவிரோதிகள் கலந்து அந்தப் போராட்டத்தைப் பயன்படுத்தி சமூகவிரோத செயல்களில் ஈடுபட இருப்பதாகவும் அப்படி நிகழ்ந்தால் மாணவர்களையும் சமூகவிரோதிகளையும் பிரித்துப் பார்க்க முடியாத நிலை ஏற்படும் என்றும் அதனால் சமூகவிரோதிகளுக்கான இலக்கில் மாணவர்களும் பலியாகக்கூடும் என்றும் வதந்திகளைக் கட்டவிழ்த்து விட்டார்கள்.இதற்கும் மாணவர்கள் அசரவில்லை. தங்களது கோரிக்கையையும் போராட்டத்தையும் கூர்படுத்தினார்கள்.இப்போது மாணவர்கள் வாகனச் சோதனையில் இறங்கினார்கள். வாகனங்களை மறித்து ஆவணங்களை சரிபார்த்தார்கள்.வாகன சோதனையில் வாகனங்கள் போகவேண்டிய திசைக்கு எதிர்த் திசையில் ஒரு மகிழுந்து வந்து கொண்டிருந்தது. அதை மறித்து சோதனையிட்டபோது அது ஒரு அமைச்சரின் மகிழுந்து என்பது தெரிய வந்தது.இன்னொரு இடத்தில் நடந்த வாகன சோதனையில் ஒரு அமைச்சரின் ஓட்டுநருக்கு ஓட்டுநர் உரிமமே இல்லாத உண்மை தெரிய வந்த்து.மாணவர்கள் அரசுக்கும் மக்களுக்கும் அம்பலப் படுத்தினார்கள்.வங்கத்தில் குறிப்பாக டாக்கா மாநகரில் பேரதிக அளவில் விபத்துகளும் உயிர்ப்பலிகளும் ஏற்படுவதாகவும் அதை அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரினர். விபத்துக்கான காரணங்களையும் அவர்கள் தெளிவாக வரிசைப் படுத்தினார்கள்.எனக்கென்னவோ வங்கக் கல்வியை வணங்கிவிட வேண்டும் என்று படுகிறது.அறிவைத் தருவது என்பது கல்வியின் ஒரு கூறுதான். சக மனிதனுக்கு ஆதரவாக, அநீதிக்கு எதிராகப் அச்சமும் சமரசமும் இன்றி போராடுவது என்பது அறிவின் ஒரு கூறு. அத்தகைய அறிவினை வங்கத்துக் கல்வி கொடுத்திருப்பதையே இந்தப் போராட்டம் எடுத்துரைக்கிறது.அறிஞர்களை, மருத்துவர்களை, தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குவது மட்டுமல்ல கல்வியின் வேலை. மக்களை நெறிப்படுத்தவும் மக்கள் போராட்டங்களில் களமேகும் பக்குவத்தையும் கல்வி தர வேண்டும். வங்க்க் கல்வி அதை சரியாய் செய்திருக்கிறது,யாருடைய அலட்சியத்தாலோ மக்கள் பலியாவதற்கு எதிராக வங்க மாணவர்கள் போராட்ட களத்தில் நிற்கிறார்கள்.அவர்களை பார்த்துதான்,“பாருங்கள், நேற்று முந்தினம்கூட இந்தியாவில் நடந்த சாலை விபத்துகளில் 32 பேர் இறந்து போனார்கள். இந்திய மாணவர்களைப் பாருங்கள். உங்களை மாதிரி போராடிக்கொண்டா இருக்கிறர்கள். நல்லப் பிள்ளைகளா கல்லூரிக்கு போய்க்கொண்டு இருக்கிறார்கள். நீங்களும் அவர்களைப் போல நீங்கள்ளும் நல்ல பிள்ளைகளாக கல்லூரிகளுக்கு செல்லுங்கள்” என்று கூறுகிறார்.அவர் என்ன வேண்டுமானாலும் அவரது பிள்ளைகளிடம் சொல்லட்டும். அதற்கு ஏன் தேவை இல்லாமல் இந்திய மாணவர்களை வம்புக்கிழுக்கிறார் என்று தெரியவில்லை. அதற்காக அந்த அமைச்சருக்கு என் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எம் இளைஞர்களும் மாணவர்களும் ஒன்றிணைந்து நெறியோடும், வீரியத்தோடும் நடத்திக் காட்டிய ஜல்லிக்கட்டுப் போராட்டம் குறித்து அந்த அமைச்சருக்கு யாரேனும் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் 3507 பாதசாரிகள் பலியானார்கள் என்ற தகவலை 08.10.2018 ஆம் நாளிட்ட தமிழ் இந்து தருகிறது என்ற போசெய்தியை எம் பிள்ளைகளுக்கு எடுத்துக்கூறவும் கடமைபட்டிருக்கிறேன்.சென்ற ஆண்டு நடந்த சாலை விபத்துகளின் மொத்த பலி எண்ணிக்கை அல்ல இது என்பதையும் பலியான பாதசாரிகளின் எண்ணிக்கை மட்டுமே இது என்பதையும் நம் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லவும் நான் கடமை பட்டிருக்கிறேன்.இந்த பலி எண்ணிக்கை அச்சமூட்டுவதாகவும் உறைய வைப்பதாகவும் உள்ளதுஇவை நிகழ்வதற்கான சில காரணங்கள்,1) விதிகளை மதிக்காத ஓட்டுநர்கள்
2) குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவது
3) வாகனக்கள் போகவேண்டிய திசைக்கு எதிர்த் திசையில் வாகனங்களை ஓட்டுவது
4) அலை பேசிக்கொண்டே வாகனக்களை ஓட்டுவது
5) தேவையான அளவு தூங்காமல் தூக்கக் கலக்கத்தோடு வாகனங்களை ஓட்டுவது
6) வேடிக்கைப் பார்த்துக் கொண்டே சாலையைக் கடப்பது
7) அலை பேசிக்கொண்டே சாலையைக் கடப்பது
   போதுமான அளவில் போக்குவரத்து காவலர்கள் இல்லாதிருப்பது
9) போதுமான அளவு பாதசாரிகளுக்கான நடைபாதை இல்லாதிருப்பதுஇதற்கு மாணவர்கள் என்ன செய்ய முடியும்?1) ஓட்டுநர்களிடமும் பாதசாரிகளிடமும் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்துவது
2) போதுமான போக்குவரத்து காவலர்களையும் நடைபாதைகளையும் கேட்டு அரசைக் கோருவதுஇதற்கெல்லாம் போராடக்கூடத் தேவை இல்லை. கைவசமுள்ள அத்தனை கலைவடிவங்களோடும் களமேகினாலே போதும்.#சாமங்கவிந்து ஒரு மணி 22 நிமிடங்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 11, 2018 18:59

October 9, 2018

அரசு மருத்துவமனைகளை நம்புவதும் ...

நேற்றொரு நல்ல செய்திஅக்டோபர் இரண்டாம் தேதியன்று நிகழ்ந்த ஒரு மதிப்புமிக்க செய்தியை 08.10.2018 அன்றைய தமிழ் இந்து வெளியிட்டிருந்ததுஅரசு மருத்துவமனைகள் குறித்த தவறான பொதுப்புத்திகள் ஏராளம் உள்ளன. அவற்றில் குறிப்பிட்டு சொல்லும்படியான இரண்டு1) அரசு மருத்துவமனையில் எந்த வசதியும் இருக்காது. போதுமான அளவில் மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள். அப்படியே இருந்தாலும் அவர்கள் ஒழுங்காக பணிக்கு வரமாட்டார்கள். வந்தாலும் ஒழுங்காக சிகிச்சை தரமாட்டார்கள். தேவையான மருந்துகள் இருக்காது
2) பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது கௌரவக் குறைச்சலானதுமுதலில் எனக்கும் அரசு மருத்துவமனைகளுக்குமான உறவைப் பொதுவில் பந்தி வைக்க விரும்புகிறேன்.நான்கு ஆண்டுகளுக்கு முன் ஒருமுறை நள்ளிரவு நெருங்கும் நேரத்தில் திடீரென்று கீர்த்தனா தீராத வயிற்றுவலியில் துடிக்கிறாள். என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனக்குத் தெரிந்த இரண்டு மூன்று தனியார் மருத்துவமனைகளுக்குப் போகிறோம். மருத்துவர்களைப் பிடிக்க முடியவில்லை. ”பேசாம GH போகலாம்பா” என்கிறான் கிஷோர். பிள்ளைத் துடிக்கிறாள். தனியார் மருத்துவர்களைப் பிடிக்க முடியவில்லை. பையன் GH போகலாம் என்கிறான். வேறு வழியில்லாமல் சம்மதிக்கிறேன. அழுத்தி அடிக்கோடிட்டு சொல்கிறேன்,வேறு வழியில்லாமல்தான் அரசு மருத்துவமனைக்கு பிள்ளையை அழைத்துப்போக சம்மதிக்கிறேன்.விபத்துப் பிரிவை ஒட்டியுள்ள பகுதிக்குப் போகிறோம். பர்த்தவுடன் இரண்டு செவிலியர்கள் கீர்த்தனாவை அழைத்துக்கொண்டு போகிறார்கள்.“பாப்பா பேரு என்னங்க சார்?””கீர்த்தனா”“ஒன்னும் இல்ல கீர்த்தனா , பயப்படாத” என்றவாறே அவளை அழைத்துப் போகிறார்.இந்த நேரத்தில் அந்த வார்த்தைகள் எனக்கு ஆறுதாலாய் இருந்தது என்பது மட்டும் அல்ல, தேவையாகவும் இருந்தது.ஒரு செவிலியர் பக்கத்து அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மருத்துவரை அழைத்து வருகிறார். 30 வயது மதிக்கத்தக்க ஒரு மருத்துவர் முகத்தைக் கழுவியபடி வருகிறார். கால்மணிநேரம் முகம் சுளிக்காமல், புன்னகை மாறாமல் சிகிச்சை அளிக்கிறார்கள்.“ஊசி போட்டிருக்கோம் சார். தூங்கிடுவா, ஒன்னும் பயம் இல்ல. யாராச்சும் போய் பாலும் பன்னும் வாங்கி வாங்க. கொடுத்ததும் கூட்டிட்டுப் போங்க. திரும்ப வலி வந்ததுன்னா கூட்டிட்டு வாங்க” என்றவாறே “என்ன படிக்கிற?” என்கிறார்.“நல்லா படி” என்றவாறே அவளது கன்னத்தைத் தட்டிக் கொடுத்துவிட்டு அவரது அறைக்குப் போய்விட்டார்.ஒருநாள் இரவு தோனி என் கையில் இருந்த கேக்கை கவ்வ முயற்சித்தபோது அவனது பல் என் சுண்டு விரலில் பட்டு ரத்தம் கொட்ட ஆரம்பித்துவிட்டது. மருத்துவமனைக்குப் போகவேண்டாம் என்று மறுத்துவிட்டேன். பதினோறு மணிக்கு வீடுதிரும்பிய கிஷோர் இதைக் கேள்வி பட்டதும் தூக்கி வண்டியில் போட்டுக் கொண்டு GH ஓடுகிறான்.அந்த நேரத்திலும் மருத்துவர் இருக்கிறார். ஊசி போடுகிறார். நான்கு நாட்களைக் குறித்து தந்து ஊசிகளைப் போட்டுக்கொள்ள அறிவுறுத்துகிறார்.அந்த நான்கு நாட்களும் காலை ஏழு மணிக்கு மருத்துவமனை போகிறேன். மருத்துவர்கள் இருக்கிறார்கள்.அரசு மருத்துவமனைகள் குறித்த பொதுப்புத்திகள் அனைத்தும் உடைந்து போகின்றன. இதற்காக அரசு மருத்துவமனைகள் 100 விழுக்காடு சரி என்றெல்லாம் சொல்லவில்லை. எல்லாத் துறைகளிலும் இருக்கிறமாதிரியே நல்லதும் கெட்ட்தும் அரசு மருத்துவமனைகளிலும் உண்டு.அரசு மருத்துமனைகள் 100 விழுக்காடு சரி என்று சொல்லமுடியாது, ஆனால் அரசு மருத்துவமனைகளை 100 விழுக்காடு சரியாக வைத்திருக்க வேண்டும். அதற்கு விவரம் அறிந்தவர்களும் அரசு உயர் அதிகாரிகளும் அரசு மருத்துவமனைக்குப் போக வேண்டும். அப்போதுதான் உரிமைகளைக் கோர முடியும். அப்போதுதான் ஏழை மற்றும் உழைக்கும் திரளுக்கு உரிய மருத்துவம் கிடைக்கும். எனக்கு கிடைத்த அனுபவம் பொதுப்புத்திக்கு எதிராக இருந்தது.  நேற்று விராலிமலை அரசு மருத்துவமனையில் நடந்தது பொதுப் புத்தியின் கன்னத்தில் மலேர் மலேரென்று ஓங்கி ஓங்கி அறைகிறது.புதுக்கோட்டை மாவட்டம் காரையூரைச் சேர்ந்த முப்பத்தியெட்டு வயதான பிரபுவிற்கு இடுப்பு மூட்டுகள் இரண்டும் சிதிலமடைந்துவிடவே அவரால் கூலி வேலைக்குப் போக முடியவில்லை. குடும்பம் வறுமையில் தத்தளிக்கிறது. வருமானம் சுத்தமாக நின்றுவிட்டது.அவரும் தனியார் மருத்துவமனைக்குப் போகிறார். அறுவை சிகிச்சைக்கு 8 லட்சம் என்கிறார்கள். மனுஷன் 50000 ரூபாயை ஒரு நேரத்தில் சேர்ந்தார்ப்போல் பார்த்திராதவர்.வேறு வழியில்லை, போகிற வரை வலிமறக்க மருந்து வாங்கித் தின்று விதி முடியும்போது போய்விடலாம் என்ற முடிவோடு விராலிமலை அரசு மருத்துவமனைக்குப் போகிறார்.அங்கிருந்த மருத்துவர்கள் ஜோசப் விஸ்வநாத் மற்றும் ஹேமா அலமேலு அவருக்கு நம்பிக்கை தருகின்றனர். சின்ன அறுவை போதும், மீண்டும் முன்புபோலவே இயங்கலாம் என்கின்றனர். எந்தவிதமான நம்பிக்கையும் இல்லை வேறு வழியும் இல்லை என்கிற நிலையில் சம்மதிக்கிறார். அக்டோபர் இரண்டாம் தேதி அறுவை நடக்கிறது. ஐந்தாம் தேதி வீட்டிற்கு அனுப்பப் படுகிறார்.இயல்பான நிலைக்கு அவர் வந்துவிட்டதாக செய்தி கூறுகிறது.நாம் செய்யவேண்டியதுஅரசு மருத்துவமனைகளை நம்புவதும் நம்பச் செய்வதும் அரசு மருத்துவமனைகளைக் காப்பாற்ற போராடுவதுமேயாகும்#சாமங்கவிந்து 55 நிமிடங்கள்
10.10.2018//
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 09, 2018 22:58

October 7, 2018

மாற்று மருத்துவம் என்பது...

அன்புள்ள கீர்த்தி,மீண்டுமொருமுறை உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன்இன்று காலையே இதை எழுத நினைத்தேன். பிறந்தநாளன்று உன் தோழிகளுடனான உனது கொண்டாட்ட மனநிலையைத் தொந்தரவு செய்துவிடக் கூடாது என்பதால் அப்போது இதை செய்யவில்லை.அது வடிந்து இயல்பு நிலைக்கு நீ இப்போது வந்திருப்பாய். அதனால்தான் இதை இப்போது உனக்கு எழுதுகிறேன்.இப்போது உனக்கு இது புரியாவிட்டால் அருள்கூர்ந்து இதை பத்திரப் படுத்து. படிப்பை முடித்து நீ மருத்துவப் பணியைத் தொடங்கும் நாளில் மறக்காமல் இதை எடுத்து வாசி. அதற்கு எதற்கு இவ்வளவு அவசரம்? அப்போதே கூறலாமே என்று நீ கேட்கலாம். ஒருக்கால் அப்போது நான் இல்லாமல் போய்விட்டால்?உன்னையும் அண்ணனையும் பொதுப்பள்ளியில், தமிழ்வழியில் படிக்க வைத்ததைத் தவிர உங்கள்மீது எனது விருப்பத்தையோ கோட்பாடுகளையோ நான் ஒருபோதும் திணித்தது இல்லை. நீங்கள் விரும்பியதை எல்லாம் தந்திருக்கிறேனோ இல்லையோ ஆனால் நீங்கள் விரும்பாத எந்த ஒன்றையும் உங்கள்மீது ஒருபோதும் திணித்தது இல்லை, கடவுள் உட்பட. அண்ணன் இறைநம்பிக்கையற்று வளர்கிறான், நீ கடவுள் நம்பிக்கையோடு வளர்கிறாய். இவற்றுள் நான் ஒருபோதும் தலையிட்டது இல்லை.யோசித்து பாரேன், ஹோமியோ என்பதுகூட நீ விரும்பித் தேர்வு செய்ததுதான்.என் பிள்ளைகளிடம் எனக்கு ஒரு கோரிக்கை உண்டு மகளே. ஆனாலும் இதுகூட கையேந்திய நிலையிலான என் இறைஞ்சல்தானேதவிர கட்டாயப்படுத்துவதாய் நீ கொள்ளத் தேவை இல்லை. நான் கூறுவதை பரிசீலனை செய்யுமாறான கோரிக்கைதான். இது குறித்து என்னோடு உரையாடலாம், விவாதிக்கலாம், ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம்.அண்ணனது பணிநிலை என்னவாக இருக்கும் என்பது இன்னும் உறுதியாகவில்லை. உனது பணிநிலை உறுதியாகிவிட்டது. ஆகவேதான் இதை முதலில் உன்னிடத்தில் வைக்கிறேன்ஹோமியோ மருத்துவராக வேண்டும் என்பது உனது ஆசைகளுள் ஒன்று. அநேகமாக பதினோராம் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்தே உனக்குள் இந்தக் கனவு இருப்பதை என்னால் உணர முடிந்தது. நானுமே ஹோமியோ நோயாளியாகவே இருந்தவன் என்பதாலும் ஹோமியோ மக்களுக்கான மாற்று மருத்துவம் என்பதாலும் உன்னை இதுநோக்கி கொஞ்சம் உற்சாகப் படுத்தினேன்.உன்னை மருத்துவம் படிக்க வைப்பது பணம் செய்வதற்காக அல்ல சாமி.ஹோமியோ என்பது மாற்று மருத்துவம் என்பதும், அது மக்கள் மருத்துவம் என்பதும் ஏழைகளுக்கான மருத்துவம் என்பதும் பாமர மனிதனான அப்பாவின் கருத்து. அப்படி எல்லாம் இல்லை என்றாலும் நான் உன்னை ஹோமியோ படிக்க வைத்துதான் இருப்பேன். அது ஏழை எளிய மக்களுக்கான மாற்று மருத்துவம் என்பதால்தான் இவ்வளவு மகிழ்ச்சியோடும் கொண்டாட்டத்தோடும் படிக்க வைக்கிறேன்.இந்த நேரத்தில் இந்த பாமரத் தந்தையின் பார்வையில் மாற்று மருத்துவம் என்றால் என்ன என்பது குறித்தும் உன்னோடு உரையாட விரும்புகிறேன்.டெராமைசினுக்கு பதில் ஏதாவது ஹோமியோ மருந்து கொடுப்பதற்கோ அல்லது ஊசிக்கு பதில் ஏதோ ஒரு திரவத்தை க்ளோப் என்றழைக்கப்படும் உருளைகளில் கலந்து கொடுப்பதற்கோ மட்டும் மாற்று மருத்துவம் என்று பெயரல்ல என்று நான் கருதுகிறேன். பக்க விளைவுகள் இல்லாத மருந்து என்பதுகூட மாற்று மருத்துவத்தின் ஒரு சிறு கூறுதானே தவிர அதுவே மாற்று மருத்துவம் அல்ல.பல நோய்களுக்கு அறுவைசிகிச்சை இல்லாமலே ஹோமியோ மூலம் குணப்படுத்த முடியும் என்று நம்புபவன் நான்.இவை எல்லாமும் மாற்று மருத்துவத்தின் கூறுகள்தான். ஆனால் மாற்று மருத்துவம் என்பது இவை மட்டும் அல்ல கீர்த்தனா. அது இன்னும் நுட்பமானது, உன்னதமானது.அலோபதி மருத்துவம் என்பது அதிக செலவு வைப்பதாக இருக்கிறது. நாளுக்குநாள் ஏழைகளுக்கும் மருத்துவத்திற்கும் இடையேயான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது.மருத்துவம் முற்றாய் முழுதாய் கார்ப்பரேட் கைகளுக்குள் போய்விட்டது. ஏழைகளுக்கு வைத்தியம் இல்லை என்பதே இன்றைய எதார்த்தமாக இருக்கிறது.தலைவலிக்காகப் போனால்கூட ஆயிரக் கணக்கில் பணம் கறக்கிற வித்தையில் கார்ப்பரேட் மருத்துவம் கற்றுத் தேர்ந்திருக்கிறது. ஒன்று தெரியுமா கீர்த்தி, பிணங்களுக்கு வைத்தியம் பார்க்கிற வித்தையிலும் கார்ப்பரேட் மருத்துவம் பிஎச்டி முடிந்திருக்கிறது.மருத்துவமே பார்க்காமல் இன்சூரன்ஸ் க்ளைம் செய்து அதன்மூலம் வருகிற தொகையை நோயாளியோடு பங்கு போட்டுக்கொள்ளும் மருத்துவமனைகளும் உள்ளதாக செய்திகள் வருகின்றன.யாரும் அறியாமல் அழுதுகொண்டிருக்கிறேன் கீர்த்தி.அதற்கு எதிரான ஒரு மாற்று மருத்துவ இயக்கம் இப்போது அவசியமான தேவையாகிறது. இந்த இயக்கம் அலோபதிக்கு எதிரான வறட்டு இயக்கமாக மாறிவிடக் கூடாது. இன்னும் சொல்லப்போனால் அத்தகையதொரு இயக்கத்தில் ஹோமியோ, சித்தா, ஆயூர்வேதம் போன்ற மருத்துவர்களோடு அலோபதி மருத்துவர்களும் அவசியம் இருக்க வேண்டும் என்றே கருதுகிறேன்மாற்று மருத்துவத்தின் இரு முக்கிய கூறுகளாக நான் பார்ப்பது1) மாற்று மருந்துகள் மற்றும் மாற்று சிகிச்சை
2) காசுக்கான மருத்துவம் என்பதில் இருந்து ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்ட ஜனங்களுக்குமான மருத்துவம்மக்களுக்கு எதிரான கார்ப்பரேட் மருத்துவத்திற்கெதிரான மாற்றைத் தருகிற திரளில் என் மகளும் ஒரு புள்ளி என்றால் நான் பெரிதும் மகிழ்வேன்.நெருக்கடிநிலை காலத்தில் கலைஞருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் இன்று இறந்துவிட்டார். அவரைப் பற்றி குறிப்பிடும்போது இருபதுரூபாய் டாக்டர் இறந்துபோனதாக திரு மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.கலைஞருக்கே வைத்தியம் பார்த்தவர் என்று இதைப் பார்ப்பது ஒரு விதம். 20 ரூபாய்க்குமேல் அவர் மருத்துவக் கட்டணம் பெற்றதில்லை. எனவே அவர் ஏழைகளுக்கான மருத்துவர் கொண்டாடுவது இன்னொரு விதம். அவர் கலைஞருக்கு சிகிச்சை அளித்தவர் என்பது பெருமைக்குரியதுதான். ஆனால் 20 ரூபாய் மருத்துவர் என்பதுதான் அவருக்காக நான் கை எடுத்துக் கும்பிட்டதற்கான காரணம்.மருத்துவர் ராமதாசு அவர்களை கூட்டங்களிலும் எழுத்திலும் எவ்வளவோ விமர்சித்திருக்கிறேன். ஆனால் மருத்துவர் அய்யா என்றே விளிக்கிறேன். காரணம் அவருக்கு திண்டிவனத்தில் ரெண்டுரூபா டாக்டர் என்று ஒரு பெயர் உண்டு. ஏதோ ஒரு காலத்தில் ஏழைகளிடம் ரெண்டு ரூபாயை மட்டும் வாங்கிக் கொண்டு ஏழைகளின் மருத்துவராக அவர் செயல்பட்டிருக்கிறார். அதற்கான எனது மரியாதை இது.மருத்துவம் முடித்ததும் உனக்கு இரண்டு வழிகள் உள்ளன1) காசு சம்பாதித்து சொகுசாய் வாழலாம்
2) ஏழைமக்களின் மருத்துவராய் வசதி குறைவான ஒரு வாழ்க்கையை வாழலாம்மரிய எலேனா என்ற இடத்தில் இருந்த செம்புச் சுரங்கத்தில் வேலைபார்த்த தொழிலாளத் தோழர்களைப் பார்க்க பாப்லோ நெருடா போகிறார். அப்போது தோழர் உங்களை எங்களுக்குத் தெரியும். நீங்கள் எங்கள் கவிஞர் என்று சொன்னபோது நெகிழ்ந்து கலங்கி “எனக்கு கிடைத்த விருதுகளிலேயே இதுதான் பெரிய விருது” என்று கூறினார் நெருடா.அப்படியான ஒரு அனுபவத்தில் என் மகள் நெகிழ்ந்து கலங்கினால் நான் பெரிதும் மகிழ்வேன்.ஒருக்கால் அப்போது நான் இல்லை என்றால் அதுதான் நீ ஆசையாய் ‘லூசு அப்பா’ என்று அழைப்பாயே அந்த லூசு அப்பாவிற்கான உன் பொருளுள்ள அஞ்சலியாகும்மகிழ்ந்து நீண்டு வாழ்க கீர்த்திஅன்புடன்,
அப்பா.#சாமங்கவிய ஒரு மணி ஆறு நிமிடங்கள்
07.10.2018
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 07, 2018 18:35

October 6, 2018

கலைஞர் சமாதிக்கு போகும் திமுகவினருக்கு....

தம்பி கரு.பழனியப்பனின் சமீபத்திய உரை ஒன்றை யூட்யூபில் கேட்கிற வாய்ப்பு கிடைத்ததுகலைஞருக்கான நினைவேந்தல் நிகழ்வு அதுஅவரது உரையை இப்படி முடித்திருந்தார்,கலைஞர் சமாதிக்கு போகும் திமுகவினர் தமக்குப் பிடித்த புத்தகத்தை எடுத்துப்போய் அங்கு வைத்துவிட்டு வந்துவிடுமாறு கூறினார்.போகும் ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த புத்தகத்தை கலைஞரது சமாதியில் வைத்துவிட்டு அங்கு இருக்கும் புத்தகங்களில் தமக்குத் தேவையான புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டு திரும்புமாறும் கூறினார்பழநியப்பனின் கோரிக்கை நடைமுறைப்படுத்தப் படுமானால் அது வெறிகொண்ட வாசகராக வாழ்ந்து மறைந்த அந்த மனிதருக்கான உண்மையான அஞ்சலியாக இருக்கும்இரண்டு விஷயங்கள் இங்கு சொல்லப்படாத நிபந்தனைகள்1) தாம் படித்ததில் தமக்குப் பிடித்ததை மட்டுமே கலைஞரது சமாதியில் வைக்க வேண்டும்
2) தமக்குப் பிடித்த புத்தகத்தை கலைஞரது சமாதியில் இருந்து எடுத்துவரும் புத்தகத்தை அவசியம் வாசிக்க வேண்டும்இதை நேர்மையாக நடைமுறைபடுத்தினால் கலைஞர் சமாதிக்கு போய் வந்த ஒருவர் அதன்பொருட்டு இரண்டு நூல்களை வாசித்திருப்பார்திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட அலுவலகங்களில் நூலகங்கள் ஏற்படுத்தப்படும் என்று அந்தக் கட்சியின் தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் கூறியிருந்த நிலையில் கரு.பழனியப்பனின் இந்த கோரிக்கை அவசியமாக நடைமுறைப்படுத்தப் படுவது நல்ல விளைவுகளைத் தரும்இதை கலைஞர் சமாதி என்பதைக் கடந்து பொது மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், ரயிலடிகள், சந்தைகள் போன்ற இடங்களிலும் விரிவுபடுத்தலாம்இதன்மூலம் ஒரு மனிதன் தான் வாசித்து முடித்த புத்தகத்தோடு சென்று நூல்களுக்கென்று ஒடுக்கப்பட்டுள்ள இடத்தில் அதை வைத்துவிட்டு தனக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு போவதன் மூலம் ஒரு நூலை வாங்கியதன்மூலம் இரண்டாவது நூலையும் வாசித்து விடுவார், அடுத்தடுத்து இந்த இடங்களுக்கு போகும்போது அவர் ஒரே புத்தகத்தை வாங்கியதன் மூலம் ஒரு கட்டத்தில் நூற்றுக் கணக்கான புத்தகங்களை வாசித்துவிடக்கூடிய வாய்ப்பை பெற்றுவிடுவார்ஒருவர் திருச்சியில் இருந்து மதுரை போகிறார் என்று வைத்துக் கொள்வோம். வீட்டில் இருந்து தான் வாசித்து முடித்த புத்தகம் ஒன்றை கையோடு எடுத்து வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். பேருந்து நிலையத்தில் புத்தகப் பரிமாற்றத்திற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் வைத்துக் கொள்வோம்.அவர் வீட்டில் இருந்து கொண்டு வந்திருந்த புத்தகத்தை வைத்துவிட்டு 48 அல்லது 64 பக்க அளவிலான ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு மதுரை பேருந்தில் அமர்ந்து வாசிக்கத் தொடங்கினால் மதுரைக்கான இரண்டரைமணிநேரப் பயணத்தில் அதை வாசித்து விடுவார்.அதேபோல மதுரையிலிருந்து திருச்சி வருவதற்குள் இன்னொமொரு புத்தகத்தை வாசித்துவிட முடியும் அவரால்ஆக, ஒருவர் மதுரை சென்று திரும்புகிற பயணநேரத்தில் இரண்டு புத்தகங்களை வாசித்துவிட முடியும்இது நினைக்கிற மாதிரி அப்படி ஒன்றும் எளிதான காரியம் இல்லை. நிறைய நடைமுறைச் சிக்கல்கள் இதி உள்ளன என்பது பழனியப்பனுக்கும் தெரியும், எனக்கும் தெரியும்.ஆனால் இது தீர்க்கவே முடியாத சிக்கல் இல்லை1) வைக்கப்படும் நூல்களின் பாதுகாப்பு
2) தாறுமாறாக நூல்களை யாரும் எடுத்துக் கொண்டு சென்றுவிடாமல் மேலாண்மை செய்வது
3) தரக்குறைவான, ஆபாசமான நூல்கள் அந்த இடங்களுக்கு வரவிடாமல் கண்கானிப்பதுபோன்ற காரியங்கள் சிரமமானவைதான். ஆனால் இயலாதவை அல்ல. தொடங்கி ஒரு வடிவம் பெறுகிறவரையில் இது சிரமம்தான். ஆனால் ஒரு கட்டம்வரை நகர்த்திவிட்டோம் என்றால் பிறகு இது ஒரு ஜீவநதிபோல தானாய் நகர ஆரம்பித்துவிடும்.எந்தஒரு சமூகநலத் திட்டத்தைவிடவும் அதிக பலனைத் தருகிற திட்டமாகவும் இது இருக்கும்.இடதுசாரி கட்சி அலுவலகங்களில் இதை நடைமுறைப் படுத்தவேண்டும் என்பது என் கோரிக்கை.இதற்கான திட்டமிடுதலிலோ செயலாக்குவதிலோ நமது பங்களிப்பு தேவைப்படும் பட்சத்தில் தயாராகவே உள்ளோம்#சாமங்கவிந்து 2 நிமிடங்கள்
07.10.2018
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 06, 2018 18:56

தர்மயுத்தத்தின் உள்வெளி மற்றும் புறவெளிக் கூறுகள்

எடப்பாடி அவர்களை நீக்குங்கள் என்னை ஆதரியுங்கள் என்பதாக அங்குதினகரன் மற்றும் சசிகலா அவர்களின் குடும்பத்தையும் வெளியேற்றிவிட்டு என்னை முதல்வராக்குங்கள் என்று இங்குஎன்னை நோக்கி சட்டமன்ற உறுப்பினர்கள் வருவார்கள் நான்தான் அதிமுக என்று பொதுவெளியில்இது தர்மயுத்தத்தின் உள்வெளி மற்றும் புறவெளிக் கூறுகள்துணைமுதல்வர் என்பது தர்மயுத்தத்தின் விளைவு
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 06, 2018 10:08

”நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவன்” என்று...

ஒரே கேள்வி திரு பன்னீர் சார்”நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவன்”என்று நீங்களே உங்களைப் பற்றிக் கூறிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏன் வந்தது?
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 06, 2018 08:56

October 5, 2018

ஒன்றிணையுங்கள்

இந்த வரிசையில் இந்த செய்திகளை முந்தாநாள் (04.10.2018) நான் வாசித்தது தற்செயலாகத்தான்1) ராஜஸ்தானிலும் மத்தியப் பிரதேசத்திலும் நடக்க இருக்கிற சட்டமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ்வாதிக் கட்சி தனித்துப் போட்டியிடும் என்பதாக இன்றைய THE HINDU வில் வந்திருக்கக் கூடிய அந்தக் கட்சியின் தலைவர் மாயாவதியின் அறிக்கை
2) ”கூட்டணி என்பதே காங்கிரஸ் கட்சியின் ரத்தத்திலே கிடையாது. காங்கிரசைப் பொறுத்தவரை நேரு குடும்பம்தான்” என்பதாக இந்திய சட்ட அமைச்சர் மாண்புமிகு ரவி ஷங்கர் பிரசாத் இன்றைய THE HIIDU வில் தந்திருக்கும் அறிக்கை
3) பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஓரணியாக திரட்டுவது உறுதி என்பதாக இன்றைய தினமணியில் வந்திருக்கக் கூடிய காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு சசி தரூர் அவர்களின் அறிக்கைஇந்தியாவிற்கான மிகப் பெரிய அச்சுறுத்தலாக, உலகமே பொறாமைப்படும் இந்தியாவின் பன்முகத் தன்மையை சிதைத்துப்போடும் செயலில் தனது அதிகாரம் செல்வாக்கு அனைத்தையும் கையெடுத்து அதிதீவிரமாய் வெறிகொண்டு இயங்கும் பாஜகவை, எந்தக் கேள்விக்கும் பதில்தரத் தேவையில்லை என்று மக்களை அவமதிக்கும் பாஜகவை, எதிர்கொள்வதற்கு எதிர்க்கட்சிகள் எதுகடந்தும் ஒன்றிணைவது அவசியமாகப்படும் இந்த நேரத்தில் மாயாவதி அவர்கள் இப்படி பேசியிருப்பது கவலையளிப்பதாக இருக்கிறது.“they (congress) are getting arrogant and are under the misconception that they can defeat the BJP on their own, but the ground reality is that people haven’t forgiven the congress for mistakes and corruption. They don’t seem to be ready to rectify themselves”என்று மாயாவதி அவர்கள் கூறியிருப்பதை காங்கிரஸ் எப்படி எடுத்துக் கொள்கிறது என்று தெரியவில்லை. ஆனால் மிகுந்த அக்கறையோடும் கவனத்தோடும் இதை காங்கிரஸ் அணுகவேண்டும் என்று இந்த மண்ணின்மீது நேசம் வைத்திருக்கிற ஒவ்வொருவரும் விரும்புகிறோம்.காங்கிரஸ் ஆட்சியில் ஒப்பந்தம் செய்யப்பட்டபோது இருந்த விலையைவிட ஒன்பது சதவீதம் குறைவான விலையில் ரஃபேலிடம் இருந்து தாங்கள் விமானங்களை வாங்குவதாக பாஜக கூறுகிறது. எனில் விலை குறையும்போது வாங்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை கூடுவதற்கு பதில் குறைந்திருப்பது ஏன்? இதுவே சந்தேகத்தைத் தருகிறது. கேட்டால் பதில் சொல்ல மறுக்கிறார்கள். மாற்று அரசாங்கம் வந்தால்தான் என்ன நடந்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும் என்று செய்தியாளார்கள் சந்திப்பில் திரு ப.சிதம்பரம் அவர்கள் கூறியுள்ளதை காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் உணர வேண்டும்.1) ரஃபேலில் என்னதான் நடந்திருக்கிறது
2) பணமதிப்பிழப்பு ஏன் கொண்டுவரப்பட்டது?
3) இதனால் பலனடைந்தவர்கள் யார்?
4) வங்கிகளை ஏமாற்றிவிட்டு பெருமுதலாளிகள் பாதுகாப்பாக வெளிநாடுகளுக்கு தப்பித்துச் செல்வதின் பின்னனியில் உள்ள அரசியல் என்ன?
5) பெட்ரோல் டீசல் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. இதனால் பலனடைந்தவர்கள் யார்?போன்ற விவரங்கள் எல்லாம் மக்களுக்கு தெரிய வேண்டும். இது சாத்தியப்பட வேண்டுமானால் மத்தியில் பாஜக அல்லாத மாற்று அரசு வரவேண்டும்.குறைந்தபட்சம் இதற்காகவேனும் மத்தியில் ஒரு மாற்று ஆட்சி வரவேண்டும் கனவான்களே. இன்னொருமுறை பாஜக வந்துவிட்டால் அகிலேஷ் சொன்னதுமாதிரி நாமெல்லாம் பக்கோடா விற்க போவதைத் தவிர வேறு வழியில்லை தலைவர்களே.செல்வி மாயாவதி அவர்களுக்கும் இதில் பொறுப்பு உண்டு. காங்கிரஸ் தவறு செய்யவில்லை என்று சொல்லவில்லை. காங்கிரஸ் ஊழலே செய்யவில்லை என்றும் சொல்லவில்லை. ஆனால் அவை எதைவிடவும் பாஜக என்பது கொடிதானது என்பதை இந்த நான்கரை ஆண்டுகால அவர்களது ஆட்சி எழுத்துக்கூட்டி நமக்கு பாடம் நடத்துகிறது என்பதை நீங்கள் உணரவேண்டும் மாயாவதி. நீங்களேகூட சோனியா காந்தியும் ராகுலும் நேர்மையான அணுகுமுறையோடு இருப்பதாகக் கூறியுள்ளீர்கள் என்று ”இந்து” சொல்கிறது.இதை திரு ராகுலுக்கும் திருமதி சோனியா அவர்களுக்கும் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம்.அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சி நிச்சயம் எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் திரு சசி தரூர் கூறியுள்ளதாக “04.10.2018 தினமணி” கூறுகிறது.மாநிலத் தேர்தல்களில் கூட்டணிக் கட்சிகளை உதாசீனம் செய்துவிட்டு பாராளுமன்றத்தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் என்பது அயோக்கியத் தனமானது மட்டுமல்ல நடைமுறை சாத்தியமில்லாததும் ஆகும்.மாயாவதி அவர்களின் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து திரு திக் விஜயசிங் பதில் அளித்துள்ளார்.எல்லோருக்கும் ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.திரு O.பன்னீர்செல்வம் அவர்கள் தன்னை சந்தித்ததாக திரு டிடிவி தினகரன் கூறியதும் சிலர் பதறினார்கள். சிலர் சிரித்தார்கள். சிலர் கடந்து போனோம். அது நல்லது என்றும், டிடிவி தினகரனும் O.பன்னீரும் எடப்பாடி அவர்களும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அப்போதுதான் திமுகவை வெற்றிகொள்ள முடியும் என்றும் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு கனகராஜ் கூறுகிறார்.சுருட்டுவதைத் தவிர எந்தவிதமான கோட்பாடுகளுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாத அதிமுக அணியினர் தங்களது எதிரியான திமுகவை வீழ்த்த ஒன்றிணைய வேண்டும் என்று கனகராஜ் போன்ற மனிதர்களே யோசிக்கும் போது,தலைவர்களே எதுகடந்தும் ஒன்றிணைய முயற்சி செய்யுங்கள்.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 05, 2018 23:19

இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.