Jeyamohan's Blog, page 63
July 28, 2025
அ.கி. ஜயராமன்
எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாசிரியர், இதழாசிரியர். காதம்பரி மாத இதழை அ.கி.கோபாலனுடன் இணைந்து நடத்தினார். ஜோதி நிலையம் பதிப்பகத்தின் நிறுவனர். இப்பதிப்பகத்தின் வழியாக வெளியான மொழிபெயர்ப்புகள் முக்கியமானவை. சரத் சந்திரரின் பெரும்பான்மையான நாவல்கள், சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்ததில் முக்கியப்பங்கு வகித்தவர்.
அ.கி.ஜயராமன் – தமிழ் விக்கி
புராணமயமாதல் எங்கும்…
சி.என் அண்ணாத்துரைபுராணமயமாதல் என்ற கட்டுரையைக் கண்டேன். மனிதர்களை அதீதமாகப் புகழ்வதும், தாங்கள் அறிந்த எல்லா அற்புதக் கதைகளையும் அவர்கள் மேல் ஏற்றுவதும் நம் வழக்கம். இது நம்முடைய கல்வியறிவில்லாத பழைய மனநிலையில் இருந்து வருவது. வாய்மொழிப் பண்பாடும் எழுத்துப் பண்பாடும்கட்டுரையில் நீங்கள் சொன்னதுபோல இது நம்முடைய வாய்மொழி- புராண மரபு சார்ந்த மனநிலை. எத்தனை படித்தாலும் நாம் வெளியே வருவதில்லை.
புராணமயமாதல் எங்கும்…
This shows the real problem of India: we have too much history to know and preserve. That is why we never bother about our history. We discuss history only if it is useful for our silly caste and religious politics.
Our history and we..
தமிழ்விக்கி தூரன் விழா: அழைப்பிதழ், வருகைப்பதிவு
ஆண்டுதோறும் தமிழ்விக்கி இணையக் கலைக்களஞ்சியம் சார்பாக கலைக்களஞ்சியத் தந்தை பெரியசாமி தூரன் நினைவாக ஆய்வாளர்களுக்கு விருதுகள் வழங்கி வருகிறோம். தமிழ் விக்கி -தூரன் விருதுகள் இது வரை
2022 கரசூர் பத்மபாரதி (மானுடவியல் ஆய்வாளர்)2023 மு. இளங்கோவன் (பண்பாட்டு ஆய்வாளர்)2023 எஸ்.ஜே. சிவசங்கர் (வட்டாரப் பண்பாட்டு ஆய்வாளர்)(சிறப்பு விருது)2024 மோ.கோ. கோவைமணி (சுவடியியல் ஆய்வாளர்)ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முனைவர் வெ.வேதாசலம் அவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
விருதுவிழா வரும் ஆகஸ்ட் 16 (சனி) அன்று மாலை நிகழ்கிறது. வழக்கம்போல ஈரோடு நகர் அருகே கவுண்டச்சிப்பாளையம் (சென்னிமலை சாலை) ராஜ்மகால் திருமணமண்டபத்தில் இந்த விழா நடைபெறும்.
இவ்விழாவில் இரண்டு சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்கிறார்கள். வரலாற்றாசிரியரும் தொல்லியலாளருமான முனைவர் எ. சுப்பராயலு கலந்துகொள்கிறார். கூடவே ஆந்திர நாட்டு தொல்லியலாளர் பேரசிரியர் வசந்த் ஷிண்டே கலந்துகொள்கிறார்.
எல்லா ஆண்டும்போல ஒருநாள் முன்னரே ஆகஸ்ட் 15 அன்று பிற்பகல் முதல் உரையாடல் அமர்வுகள் தொடங்குகின்றன.
அறிவுத்தளத்தில் செயல்படும் ஒருவருக்கு தொல்லியல், வரலாறு போன்ற களங்களில் என்ன நிகழ்கிறது என்று அறிவது அடிப்படைத்தேவை. ஆனால் அதற்கான வாய்ப்புகள் இன்று இல்லை. பொதுவாசகர்கள் அவ்வாறு அறிந்துகொள்வதற்கான வாய்ப்பாக இந்த உரையாடல் அரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவை அரங்கினர் கேட்கும் வினாக்களுக்கு நிபுணர்கள் பதில் சொல்லும் வகையில் அமைந்துள்ளதனால் மிகச்சுவாரசியமான நிகழ்வுகளாகவே ஒவ்வொரு ஆண்டும் அமைந்து வருகின்றன. தமிழகத்தில் இத்தகைய ஓர் அரங்கு இதுவே முதல்முறை. வாசகர்கள், அறிவுச்செயல்பாட்டில் ஆர்வமுள்ளவர்கள் அனைவரையும் அழைக்கிறோம்.
உரையாடல் அரங்குகள் ஆகஸ்ட் 15 வெள்ளிக்கிழமை (மாலை) ஆறுமுக சீதாராமன் (நாணயவியல் ஆய்வாளர்)முனைவர் வெ.வேதாசலம் (தொல்லியல் ஆய்வாளர், விருதுபெறுபவர்)ஜி. கண்ணபிரான் (வானியல் ஆய்வாளர்)உரையாடல் அரங்குகள் ஆகஸ்ட் 16 சனிக்கிழமை காலைவேலுதரன் (சிற்பவியல் ஆய்வாளர்)முனைவர் வசந்த் ஷிண்டே (தொல்லியல் ஆய்வாளர்)முனைவர் சுப்பராயலு (கல்வெட்டு ஆய்வாளர்)
வழக்கம்போல இந்த ஆண்டும் தமிழிசை அறிஞராகத் திகழ்ந்த பெரியசாமி தூரன் நினைவாக தமிழின் மிகச்சிறப்பான நாதஸ்வரக் கலைஞர்குழு ஒன்றை தெரிவுசெய்து அடையாளம் காட்டுகிறோம். ஒலிப்பெருக்கி இல்லாமல், மென்மையான இசையாக நாதஸ்வர இசை நிகழும்.
சிறப்பு நாதஸ்வரம் மயிலை எம்.கார்த்திகேயன், கோளேரி ஜி. வினோத்குமார் சிறப்பு தவில் அடையார் ஜி. சிலம்பரசன், கும்முடிப்பூண்டி ஆர்.ஜீவாநண்பர்கள் வெள்ளியன்றே வந்து கலந்துகொள்ளவேண்டும் என விரும்புகிறோம். தங்கும் வசதி- உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தங்கும்வசதி விரும்புவோர் கீழ்க்கண்ட படிவத்தை நிரப்பி பதிவுசெய்துகொள்ள வேண்டும்.
வருகைப் பதிவுக்கான படிவம் இணைப்புJuly 27, 2025
ஓஷோ: மரபும் மீறலும்-1
(2021 மார்ச் 12,13,14 தேதிகளில் கோவையில் கிக்கானி அரங்கில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். எழுத்தில் பதிவுசெய்தவர் விவேக் ராஜ் )
நண்பர்களே, இந்த கிக்கானி அரங்கில் தொடர்ந்து பல உரைகளை ஆற்றியிருக்கிறேன். இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் தொடரும் உரைகளையும் ஆற்றியிருக்கிறேன். இருந்தும் ஒவ்வொரு முறையும் மேடையேறும்போது வரும் மெல்லிய பதற்றத்திற்கு இப்போதும் ஆளாகிறேன். முதன்மையாக, நான் என்னை ஒரு பேச்சாளனாக கருதிக்கொள்ளவில்லை. நான் பெரிதும் மதிக்கும் மரபின் மைந்தன் முத்தையா போன்ற பெரும் பேச்சாளர்கள் இருக்கும்போது நான் எழுத்தாளன் என்ற தகுதியோடுதான் பேசவேண்டியுள்ளது. அதற்கப்பால், இது ஓஷோவை பற்றிய உரை. இந்த கோவை ஓஷோவினுடைய மையங்களில் ஒன்று. நான் இணையத்தில் தேடிப்பார்த்தபோது இங்கு ஓஷோவை பற்றி பேசக்கூடிய, ஓஷோவின் டைனமிக் தியான பயிற்சிகளை அளிக்கக்கூடிய ஏறத்தாழ முப்பது நாற்பது மையங்கள் இருக்கின்றன. தமிழகத்தில் ஓஷோவின் சிந்தனை வலுவாக இருக்கும் இடங்களில் ஒன்று கோவை. ஆகவே கோவையில் பேசுவது என்பது ஒரு சிக்கலான விஷயம்.
ஓஷோவின் பாணியில் சொல்வதென்றால் இதற்கு ஒரு நகைச்சுவையை சொல்லலாம். இது சினிமாவில் பேசப்படும் சன்னிலியோன் பற்றிய நகைச்சுவை. அவர் சஞ்சய்லீலா பன்சாலியின் படத்தில் நடிக்கிறார். அப்போது பன்சாலி அவரிடம் ஒரு காட்சியை விவரிக்கிறார். ‘நீங்கள் ஜன்னலோரமாக தொடுவானத்தை பார்த்துக்கொண்டு கண்களில் கண்ணீரோடு நிற்கிறீர்கள். சல்மான்ஜி உங்கள் பின்னால் வந்து உங்களை அணைத்து ஆறுதலாக…’ என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே சன்னி அவரிடம் நிறுத்தும்படி கையை காண்பித்து, ‘டாகி பொசிஷன் தானே, மேற்கொண்டு சொல்’ என்றாராம். ஆகையால் ஏற்கெனவே தெரிந்த ஒன்றையே ஓஷோ ரசிகர்களுக்கு சொல்கிறேனா என்ற எண்ணம் ஏற்படாமல் இல்லை. அவர்களுக்கு தெரியாத ஒன்றை சொல்கிறேன், அல்லது அவர்கள் யோசிக்காத கோணத்தில் அவர்களுக்கு தெரிந்த ஒன்றை சொல்கிறேன் என்று எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த உரையில் ஓஷோ என்ன சொல்கிறார், அவர் தரப்பு என்ன, அவரது கருத்துகள் என்ன என்பதை நான் சொல்லவரவில்லை. ஏனெனில், ஓஷோவா ஜெயமோகனா யார் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் என்று கேட்டால் அது ஓஷோதான். கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் அதிகமாக வாசிக்கப்படும் நூல்கள் ஓஷோ எழுதிய நூல்கள்தான். தமிழில் அதிகமாக விற்கும் மூன்று எழுத்தாளர்களில் ஒருவர் ஓஷோ. ஓஷோவின் படைப்புகளை கோவையை சேர்ந்த புவியரசு போன்றவர்கள் அற்புதமாக மொழிபெயர்த்து தமிழில் கொண்டுவந்தார்கள். கண்ணதாசன் பதிப்பகம் போன்ற பதிப்பகங்கள் ஓஷோவை வைத்தே பணக்காரர்கள் ஆனார்கள். ஓஷோ அந்த அளவுக்கு தமிழில் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர். ஆகவே ஓஷோவை நான் அறிமுகப்படுத்துவது என்பது எம்.ஜி.ஆரையோ கருணாநிதியையோ அறிமுகப்படுத்தி உரையாற்றுவதற்கு சமம். அவர் புகழ்பெற்ற பெரிய ஆளுமை. நான் ஓஷோவை வகுத்துக்கொள்ள, ஓஷோவை ஒட்டுமொத்தச் சிந்தனைபரப்பில் பொருத்திக்கொள்ள முயல்கிறேன்.
ஓஷோவின் பெரும்புகழ்
ஓஷோவின் புகழுக்கு என்ன காரணம் என்ற கேள்வியிலிருந்து இந்த உரையை தொடங்கலாம் என்று நினைக்கிறேன். தமிழ், மலையாளம் மட்டுமல்லாமல் இந்தியா முழுக்கவே ஓஷோவுக்கு அந்த பெரும்புகழ் எங்கிருந்து வருகிறது ?
ஓஷோவின் புகழுக்கான காரணங்களாக சில அம்சங்களை சொல்லலாம்.
1.மீறல்
ஓஷோவை புகழ்பெறச்செய்யும் முதல் விஷயம், ஓஷோவிடம் இருக்கும் மீறல் எனும் அம்சம். இளைஞர்கள் படிக்கத்தொடங்குவதே பதின்பருவத்தில்தான். அந்த பருவத்தில் அவர்களுக்கு மீறல்தான் முக்கியமாக உள்ளது. அவர்கள் தந்தையிடமிருந்தும்; குடும்பம், மதம், அரசாங்கம், பள்ளிக்கூடம், ஆசிரியர்கள் போன்றவற்றிடமிருந்தும் வெளியேற விரும்புகிறார்கள். அப்படி வெளியே கூட்டிச்செல்பவராக ஓஷோ இருக்கிறார். மீறல்தான் ஓஷோவின் மையமான கருத்தாக இருக்கிறது. துடிப்புறச் செய்யக்கூடிய, மீறிச்செல் என்று சொல்லக்கூடிய ஒன்றாக அவரது எழுத்துகள் உள்ளன.
எனது நண்பர் ஒருவர் சொன்னதுபோல, பதின்பருவத்தில் சிகரெட் பிடிப்பது போலத்தான் ஓஷோவை படிப்பது. சிகரெட் என்பது சிகரெட்டிற்காக பிடிக்கப்படுவது அல்ல. சிகரெட் பிடிக்கக்கூடாது என்று அப்பா சொல்வதால், சிகரெட் பிடிப்பதை தெரிந்துகொண்டால் அவர் அதிர்ச்சியடைவார் என்பதனால், அது அளிக்கக்கூடிய விறுவிறுப்பிற்காக சிகரெட் பிடிக்கிறார்கள். அத்துமீறல் எனும் அம்சம் ஓஷோவை தமிழகம் முழுக்க கொண்டுசென்று சேர்க்கிறது.
2. எதிர்ப்பு
நாம் அனைவ் அனைவருக்குமே வாழ்க்கையின் ஒரு காலகட்டத்தில் உங்களை நோக்கி பேசப்படுபவைகளை எதிர்த்து பேசவேண்டிய ஒரு சூழல் ஏற்படுகிறது. நமது சிந்தனை எப்படி உருவாகி வருகிறது என்பதை பார்த்தால் தெரியும். பிறந்ததில் இருந்து நம்மிடம் எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். மூக்கில் கைவைக்காதே, கையை கழுவு என்று தொடக்கி; பொய் சொல்லாதே, வீட்டுப்பாடம் எழுது என்பதாக நம்மை நோக்கி ஆணைகள் கொட்டப்படுகின்றன. கடவுள், ஆசாரம், அரசாங்கம், ஒழுக்கம் , அறம் என சிந்தனைகள் நம் மேல் அழுத்தப்படுகின்றன. ஏதோவொரு கணத்தில் நாம் எதிர்ச்சொல் கூறவேண்டிய நிலை வரும்போது நமக்கு ஒரு வீம்பு உருவாகி வருகிறது. அக்காலகட்டத்தில்தான் எல்லாவிதமான எதிர்ப்புச் சிந்தனைகள் மீதும் ஈர்ப்பு ஏற்படுகிறது.
ஓஷோவிடம் மொத்தமாகவே ஒருவித எதிர்ப்பு இருக்கிறது. அவர் எதிர்ப்புநிலையுடன் வெளிப்படுகிறார் என்ற எண்ணம் ஒரு தொடக்கநிலை வாசகனுக்கு அவரை முக்கியமானவராக ஆக்குகிறது. அதுதான் அவரை ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்த வட்டாரங்களில் இருக்கும் முக்கியமான எதிர்ப்புச் சிந்தனையாளர்களுடன் அடையாளப்படுத்த வைக்கிறது.தமிழகத்தில் ஓஷோவை பேசக்கூடிய பலர் இங்கு ஏற்கெனவே மரபு எதிர்ப்புத்தன்மையுடன் பேசியவர்கள், அல்லது சிந்தனையை ஒருவித எதிர்ப்புத்தன்மையுடன் முன்வைத்தவர்களுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இங்கு பலர் ஓஷோவை ஈ.வெ.ரா.வுடன் அடையாளப்படுத்துவதை நீங்கள் பார்க்கலாம். இத்தகைய எதிர்ப்பு அம்சம் ஓஷோவை தொடர்ந்து வாசிக்க வைக்கும் ஓர் எழுத்தாளராக நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது.
3. மேற்கோள்களாக ஆகும் தன்மை
ஓஷோவின் புகழுக்கு முக்கியமான காரணமாக இருப்பது, அவர் மேற்கோள்களாக, துணுக்குகளாக, தனித்தனிச் செய்திகளாக உடைப்பதற்கு ஏற்ற எழுத்தாளராக இருப்பதே. கோவில்பட்டி கடலைமிட்டாய் போல துண்டுதுண்டுகளாக உடைப்பதற்கென்றே அவை உள்ளூர ஆக்கப்பட்டிருக்கின்றன என்று படுகிறது. ஒட்டுமொத்தமாக ஒரு பெரும் சிந்தனையாக, ஒரு முழுமையான வடிவில் ஓஷோ உங்களிடம் வந்து சேர்வதில்லை. உண்மையிலேயே அவரிடம் அத்தகைய ஒத்திசைவு அல்லது ஒற்றைநோக்கு கிடையாது. அவரிடம் ஒருங்கிணைந்த தத்துவப்பார்வையே இல்லை. ஆகவே வாரஇதழ்த் துணுக்குகளாக ஓஷோவை கொண்டுசென்று சேர்க்க முடியும். பீன் பேக் (bean bag) இருக்கைகளைக் குழந்தைகள் கிழித்துவிட்டால் அதன்பிறகு எதுவுமே செய்யமுடியாது. அந்த அறை முழுக்க அந்த சிறிய உருளைகள் பரவிவிடும். அதுபோல ஓஷோவின் ஒரு புத்தகம் துகள்களாக மாறி ஒரு நாடுமுழுக்க பரவிவிடும். மீண்டும் அதை திரட்ட முடியாது. இங்கு பெரும்பாலானோர் மேற்கோள்களாகத்தான் ஓஷோவை தெரிந்து வைத்திருக்கின்றனர். ஏழாவது எட்டாவது படிக்கும்போதே ஓஷோ தெரியவந்துவிடுகிறார்.
ஆசிரியர்களாகிய எனது நண்பர்கள் சொல்வார்கள், பள்ளியில் படிக்கும் பையன்களில் ஒரு பையன் ஓஷோவை படித்துவிட்டால் அந்த வகுப்பில் பத்து பதினைந்துபேர் ஓஷோவை படித்துவிடுவர் என்று. ஒரு தொற்றுநோய் போல அவர் பரவிவிடுவார். ஆசிரியர்கள் இன்னொன்றையும் சொல்வார்கள். எந்த பையன் ஓஷோவை படிக்கிறானோ அவன் பெரும்பாலும் தேர்வுகளில் தோற்றுவிடுவான். என்ன காரணம் என்றால் ஓஷோ அமைப்புகளுக்கு எதிரானவர். இந்த பையன் படிப்பது மனிதர்கள் உருவாக்கியதிலேயே மிகப்பெரிய அமைப்பான கல்விக்கூடத்தில். அதனால் அவனது முதல் எதிர்ப்பே கல்விக்கூடத்திற்கு எதிரானதாக இருக்கும். ஆகவே அவன் ஆசிரியர்களுக்கு எதிராகவே திரும்புவான். அதனால் பெரும்பாலும் தோற்றுவிடுவான். எனவே வகுப்புகளில் ஓஷோ என்ற சொல்லையே சொல்லவிடமாட்டேன் என்று சொல்லும் ஆசிரியர்களை நான் சந்தித்திருக்கிறேன்.
4. எளிமை
இம்மூன்று காரணங்களால் ஓஷோ தமிழகம் முழுக்க இளைஞர்கள் நடுவே பரவலாக புகழ்பெற்று இருக்கிறார். அதன் பின்பும் அவருக்கு ஒரு முகம் இருக்கிறது. அதை நான்காவதாக சொல்லலாம். அது அவர் ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் என்பதால். அவர் மிக எளிமையான, மிக வெளிப்படையான மொழி கொண்டவர். மிக எளிமையாக திரும்பத் திரும்ப சொல்வார். ஓஷோவை கடந்து வந்தவர்கள் சொல்லும் முதல் குற்றச்சாட்டு என்பது அவர் மீண்டும் மீண்டும் சொல்கிறார் (He repeats) என்பதே. சிந்தனையில் அறிமுகமாகும் ஒருவனுக்கு ஓஷோவின் எளிமை மிக சௌகரியமானதாகவும், இதமானதாகவும் உள்ளது. அவர் புரிந்துகொள்வதற்கான சவால்களை உங்களுக்கு அளிப்பதில்லை. தொடர்ச்சியாக உங்களை உள்ளே அமரவைத்திருக்கிறார், உங்களை ஆக்கிரமிக்கிறார். எவ்விதமான சிடுக்குகளையும் அவர் அளிப்பதில்லை.
ஆனால் உண்மையில் சிந்தனை என்பது அப்படியில்லை. நீங்கள் அதிலிருந்து அடுத்த கட்டத்திற்கு வந்து தீவிரமான சிந்தனைகளை சந்திக்கநேர்ந்தால் அந்த எளிமை என்பது வெறும் தொடக்கம் மட்டும்தான், ஆரம்ப பள்ளிக்கூடம் மட்டும்தான் என்பது தெரியவரும். சிந்தனை என்பது அடுக்குகளாகவும் சிடுக்குகளாகவும் செல்லக்கூடியது; அது முரணியக்கங்களால் ஆனது; ஒன்றிலிருந்து இரண்டுக்கு அல்ல, ஒன்றிலிருந்து எண்பத்தெட்டுக்கு தாவவேண்டியது என்பது உங்களுக்கு தெரியவரும். அது தெரியவருகிறவரைக்கும் ஓஷோ உங்களை மிக வசதியாக உள்ளே உட்காரவைத்திருப்பார்.
ஓஷோவின் வாசகர்களாக நாம் பார்ப்பவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் ஆரம்பநிலையில் ஓஷோவை அறிமுகம் செய்துகொண்டவர்கள். அந்த ஆரம்பநிலைக்கு மேல் அடுத்தகட்ட நகர்வு இல்லாமல் பெரும்பாலும் ஓஷோவின் உலகிலேயே வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். இந்த காரணத்தினாலேயே ஓஷோவை தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழில் ஏறத்தாழ ஓஷோவின் 350 நூல்கள் வாசிக்கக்கிடைக்கின்றன. தமிழர்களுடைய படிப்புப்பழக்கத்தின் அளவை வைத்துப்பார்த்தால் பத்தாண்டுகள் ஓஷோவை மட்டும் படித்து ஒருவன் வாசகனாக திகழ்ந்துவிட முடியும். ஆகவேதான் ஓஷோ இங்கு இந்த அளவிற்கு புகழ்பெற்று இருக்கிறார்.
ஓஷோவும் நம் எல்லைகளும்
ஓஷோவை இங்கு பலவகைகளில் மேற்கோள் காட்டுபவர்கள் தங்களுடைய எல்லைகளை ஓஷோமேல் ஏற்றுகிறார்கள். அதன் பிரச்சனைதான் இங்குள்ளது. ஓஷோவை அவர்கள் எப்படி புரிந்துவைத்திருக்கிறார்களோ அதன் வழியாக நாம் ஓஷோவை பார்க்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறோம். ஓஷோவின் உலகம் மிகப்பெரியது, மிக விரிவான சிந்தனை முறைகளை அவர் மேற்கோளாகக் காட்டுகிறார். ஆனால் கடந்த ஐம்பதாண்டுகளில் ஓஷோவின் பின்புலம் என்ன, எங்கிருந்து தொடங்கி அவர் ஓஷோ வரை வந்திருக்கிறார், ஓஷோவுக்கும் இன்று இந்தியாவில் இருக்கும் பிற சிந்தனைமுறைகளுக்கும் இடையேயான ஒப்பீடும் உறவும் முரண்பாடும் என்னென்ன, இன்று உருவாகி முன்சென்றுகொண்டிருக்ககும் சிந்தனைகளோடு ஓஷோவுக்கு இருக்கும் தொடர்பு என்ன போன்ற விஷயங்களை பற்றி தமிழில் எனக்குத்தெரிந்து எதுவுமே எழுதப்படவில்லை. அதைப்பற்றி யாரும் பேசி நான் கேள்விப்பட்டதும் இல்லை. இதுதான் நம்முன் இருக்கும் முக்கியமான சவால்.
ஓஷோவினுடைய சிக்கலே இதுதான் என்று சொல்லலாம். ஓஷோ ஒருமுறை சொன்னார், ”ஜே.கிருஷ்ணமூர்த்தி, யாரும் தன்னை பின்தொடர வேண்டாம் என்றார். ஆனால் நான், எல்லோரும் என்னை பின்தொடருங்கள் என்று சொல்கிறேன். கிருஷ்ணமூர்த்தியை எல்லோரும் பின்தொடர்கின்றனர், என்னை யாருமே பின்தொடர்வதில்லை”. ஆனால் உண்மையில் நமக்கு, நம் பொருட்டு சிந்திப்பதை இன்னொருவரிடம் ஒப்படைப்பது என்பது சௌகரியமாக உள்ளது. ஓர் ஆசிரியரோ சிந்தனையாளரோ சிந்திக்க வேண்டும், அதை அவர் புத்தகமாக எழுதவேண்டும், நாம் அதை மேற்கோள்காட்டி பேசிக்கொண்டிருக்கவேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். ‘அவர் சொன்னதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்’ என்று ஒரு சிந்தனையாளரை பின்பற்றுபவரிடம் நாம் கேட்கமுடியாது. ஓஷோவை பின்தொடர்பவர்கள் எவருமே ஓஷோவை பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை சொல்பவர்கள் அல்லர். ஓஷோ இப்படி சொல்கிறார், அப்படி சொல்கிறார் என்பவர்கள், ‘ஓரிடத்தில் ஓஷோ சொல்கிறார்…’ என்று ஆரம்பிப்பவர்கள். அத்தகைய மனநிலைக்கு எதிராகத்தான் நான் இங்கு எனது ஒட்டுமொத்த உரையையும் வடிவமைத்திருக்கிறேன். ஆகவே இது ஒரு கட்டமைக்கும் உரையல்ல. ஒருவகையில் கட்டவிழ்க்கும் உரை.
(மேலும்)
லட்சுமிஹர்
தமிழில் புனைகதைகள் எழுதிவரும் எழுத்தாளர், சிறுகதையாசிரியர். திரைப்படத்துறையில் படத்தொகுப்பாளராகப் பணிபுரிகிறார்.
லட்சுமிஹர்வேதாசலம், கடிதம்
அன்புள்ள ஜெ ,
வணக்கம். தமிழ் விக்கி தூரன் விருது-2025 ஏற்கவுள்ள தொல்லியல் ஆய்வாளர் வெ.வேதாசலம் அவர்களின் அந்திமழை பேட்டியை வாசித்தேன். வரலாற்றில் பொற்காலம் இருண்டகாலம் என்பது கிடையாது! -தொல்லியல் ஆய்வாளர் வெ.வேதாசலம்
இப்பேட்டி அவர் இதுகாறும் செய்தவைகள் குறித்த சித்திரத்தை அளிக்கிறது. கல்வி, வேலை, ஆசிரியர், களப்பணிகள், குடும்பம் எனத் தொட்டுச்செல்லும் பேட்டியை வாசிக்கையில் ஒரு ஆய்வு மாணவனாக மிகுந்த மன எழுச்சியை அடைந்தேன். அப்பேட்டியில் உள்ள எழுத்தைவிட புகைப்படங்கள் அதிகம் பேசுகின்றன. கீழடியில் ஒரு கை பானைமேல் சிநேகமாய் இருக்கிறதென்றால் மற்ற கையும், கால்சட்டையும் கீழடி மண்ணைத் தொட்டு அறிந்திருக்கும் சுவடுகளுடன் இருக்கின்றன. பாரம்பரிய நடைப் பயணம் என்னும் பெயரில் பொதுமக்களுடன் 300க்கும் மேற்பட்ட இடங்களில் உரையாடியிருக்கிறார். மேடை, ஒலிபெருக்கி என எதுவுமின்றி பொதுமக்கள்சூழ அவர் உரையாற்றும் காட்சி கண்டு என் கண்கள் கலங்கின. எவருக்கும் தொல்லியலைப் போதிக்கும் அவரின் பணி மெச்சத்தக்கது. இந்தப்பேட்டி மிக நன்றாக வந்திருக்கிறது. இடையே அங்கங்கே வரும் அனுபவத்தெறிப்புகள் பேட்டியைப் பலமடங்கு சுவாரஸ்யமாக்குகின்றன.
‘களப்பிரர் காலம் இருண்ட காலம் ‘என்று ஒரு கருத்து முன் வைக்கப்படுகிறது. ஆனால் அது தவறு என்பதற்கு ஆதரவாக ஏராளமான சான்றுகள் கிடைக்கின்றன. சைவம் மறுமலர்ச்சி அடைந்தது அந்தக் களப்பிரர் காலத்தில்தான். அந்தக் காலத்தில்தான் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காவிய நூல்கள் எழுதப்பட்டன.
எப்போதும் உண்மை அமைதியாகத்தான் இருக்கும். ஆரவாரம் செய்யாது. அறிவார்ந்த செயல் செய்யும்போது உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது.
முதலில் தமிழ்நாட்டு அளவில் பார்க்க வேண்டும்; பிறகு இந்திய அளவில் பார்க்க வேண்டும்;அதன் பின்பு உலக அளவில் பார்க்க வேண்டும் என்கிற பார்வை எனக்கு விரிவடைந்தது.
என்றுமே தமிழ்நாட்டில் மூன்றாவது மொழி இருந்தது இல்லை.
சோழர்கள் பல்லவர்களுடன் ஒப்பிடும் போது பாண்டியர்கள் பற்றி அதிகம் எழுதப்படாத நிலையைக் கண்டேன். பெயர்க் குழப்பம் கூட பாண்டியர்கள் பற்றிப் பெரிய ஆய்வுகள் நடைபெறத் தடையாக அமைந்து பின்னடைவாக இருந்திருக்கலாம்.
என்பனவெல்லாம் மேலும்மேலும் வாசிக்கத் தூண்டுகின்றன. இவையெல்லாம் தமிழ்நாட்டை மேலும் புரிந்துகொள்ள உதவுமென நம்புகிறேன்.
அவர் பணிகள் குறித்து வாசிக்க வாசிக்க அவர்மீதான மதிப்பு பெருகுகிறது. மிகுந்த பொறுப்புணவுடனும் மனஊக்கத்துடனும் தொடர்ந்து களப்பணியாற்றுகிருக்கிறார். வெ.வேதாசலம் அவர்களைக் காட்டித்தந்தமைக்கு நன்றி.
தொல்லியல் ஆய்வாளர் வெ.வேதாசலம் அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.
நன்றி,
விஜயகுமார்.
தேவதேவன், கவிதையின் மதம்
கடந்த ஜுலை 6 அன்று தமிழின் முதன்மை கவிஞர்களில் ஒருவரான தேவதேவனுடன் ஒரு நாள் அமர்வு நடந்தது. கவிஞர் வேணு வேட்ராயன் அவர்களின் முன்னெடுப்பில் தொடக்க நிலை கவிதை வாசிப்பாளர்களுக்காக நிகழ்ந்த அமர்வில் 19 பேர் கலந்து கொண்டனர். முன்பே கவிதையின் மதம் புத்தகம் மற்றும் தேர்வு செய்யப்பட்ட கவிதை பகுதிகள் பகிரப்பட்டு அனைவரும் வாசித்துவிட்டு வந்திருந்தோம்.
முதலில் தேவதேவன் அவரது கவிதையின் மதம் புத்தகம் சார்ந்து கேள்விகளையும் கவிதை அனுபவங்களையும் அமர்வில் அமைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டது அமர்வு முழுவதற்குமான திசைகாட்டியாக அமைந்தது.
எண்ணங்களற்ற தன்னிச்சையான செயல்கள் அனைத்துமே கவிதை என்றும் அந்தக் கணங்களில் வாழ்வினை தொடர்ச்சியாக அமைத்துக் கொள்வதையே நாம் செய்ய வேண்டும். அதுவே நம் மீட்சிக்கான வழி என்ற தரிசனத்தை முன் வைத்து இப்போது இருக்கும் மதங்களையும் அமைப்பினையும் தத்துவங்களையும் நிராகரிப்பதற்கான தர்க்க பூர்வமான மறுப்பினையும் முன் வைத்திருந்தார். இதற்கு முன் தோன்றிய அனைத்து ஞானிகளாலும் கருத்துக்களாலும் அறிவினாலும் மனிதர்களின் துன்பத்தை போர்களை நிறுத்த முடியவில்லை. எனவே இவை அனைத்தும் தோல்வியடைந்தவையே என்கிறார். நான் எனும் எண்ணங்களை, அடையாளங்களை, மரபினை, பெயரை, நாட்டினை துறந்து எண்ணமற்ற பொழுதில் உருவாகும் செயல்களையே அனைத்திற்கும் மாற்றாக முன்னிறுத்துகிறார்.
இதுவே என் செய்தி
இயேசுவே
மதமாகிய சிலுவையிலிருந்தும்
உம்மை நான் மீட்பேன்
இதுவே என் சேதி என் தந்தையே.
உமது ஆசைகளையும் தோல்விகளையும்
கண்ணீரையும் இரத்தத்தையும்
நான் அறிவேன்.
துயர் நீக்க அறிந்த
கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியத்தில்
உம்மை நான்
இளைப்பாற்றுவேன் என் தந்தையே.
கவிதை என்பதை வாழ்க்கையாகவே சொல்கிறார். எல்லா உயர்ந்த தருணங்களும் செயல்களும் கவிதைகளே என்பதே தேவதேவனின் முடிவு. கவிதையை கலையாக்கிவிட்டால் அன்பு செலுத்த முடியாமலாகிறது. எந்திரங்கள் போல கவிதை உற்பத்தி நிகழுமே தவிர அவை கவிதை ஆகாது. உண்மையாக வாழ்ந்தால் எளிமையான சொற்களில் கவிதைகள் வெளிப்படும்.
உதாரணமாக கல்யாணத்தில் கண்ட வணக்கம் சொல்லும் பொம்மையை கண்டபோது அவர் அடைந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
கவிதை உலக வாழ்வை மதிப்பிடுகிறதே என்று கவிதையை உலக வாழ்வு மதிப்பிட முடியாது. கவிதையை கவிதைதான் மதிப்பிட முடியும். வேறு எதற்கும் கவிதையை மதிப்பிட அதிகாரம் கொடுக்கப்படவில்லை.
கவிதை என்பதை ரத்தினமாக பிரமிள் சொல்வதை குறிப்பிட்டு, ரத்தினம் ஒரே சமயத்தில் இயற்கையின் அற்புதத்தின் குறியீடாகவும், பேராசையின் குறியீடாகவும் திகழ்வதன் சிக்கலை அவிழ்த்து வாழ்வை மீட்சிக்கொள்ள செய்வதே கவிதை என்று குறிப்பிடுகிறார்.
நாம் மரணத்திற்கு அஞ்சுவதோ, இறப்பினால் துயரமடைவதோ நம்முடைய தன்னுணர்வினால் நிகழ்கிறது. கவிதையின் மதத்தில் இருப்பவனுக்கு இவை துயரளிப்பதல்ல என்கிறார்.
ஒரு வண்ணத்துப் பூச்சியின் வாழ்க்கை என்னும் கவிதையில்
ஒரு நாள் என் தோட்டத்தில் ஈரத்தரையில்
உதிர்ந்த ஒரு மலர் போல் அது கிடந்தது
நல்லடக்கம் செய்யும் சுற்றமோ
மறைவுக்குக் கண்கலங்கும் உறவுகளோ
சமூகமோ தேசமோ இன்றி
அது அனாதையாய் மரித்திருந்தது
நெஞ்சுருகும் பார்வையின் முத்தம்
ஒரு கவிதை –
இவைதானோ அதன் மொத்த
வாழ்க்கையின்
மர்மமான இலட்சியம்?
இன்று அது நிறைவேறியதையோ
எளிய உயிர்கள் நூறுகள் கூடி
ஊர்வலமாய் அதை எடுத்து செல்ல
முயல்வதையோ
கண்களில்லாத கால்கள்
அதை மிதித்தபடி செல்வதையோ
ஒரு பெருக்குமாறு அதை குப்பைகளோடு
குப்பையாய்
ஒரு மூலைக்கு ஒதுக்கி விடுவதையோ
எதைப்பற்றிய கவலையுமில்லாமல்
எல்லாவற்றையும் அதுவே
ஒதுக்கிவிட்டதாய்
ஈரமான என் தோட்ட நிலத்தில்
மரித்துக் கிடந்தது அது.
மேலும் இயற்கையின் கருணையை அறியாதவனுக்கு அவர்
ஒரு அனாதைப்பிணம் தனியாக இருப்பதில்லை
அதன் மீது எவ்வளவு ஈக்கள் மொய்த்திருக்கின்றன
என்று சொல்லி செல்கிறார்.
மதம் மனிதனின் நன்மைக்காகவே உள்ளது மனிதர்களே அவற்றை தவறாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்ற வாதத்தினை முன் வைப்பவர்களை கடுமையாகவே எதிர்க்கிறார். அப்படியானால் உங்களுக்கு மதம் முக்கியமானதாக இருக்கிறது. ஒரு அடையாளத்தை சூடிக் கொள்ளும் விழைவு தான் அது என்கிறார்.
கடவுள் எனும் கவிதையில்
மனிதனால் மனிதனுக்கு உருவான துயரத்தை மட்டும்
மனிதனே துடைக்கட்டும் என்று விட்டுவிட்டார்
கடவுள்
மேலும்
அவருக்கே அது புரியாதல்லவா?
என்கிறார்.
அதே போன்றே ஒரு ஆளுமையினை பெரிதாக எண்ணிக் கொள்பவர்களையும் நிராகரிக்கிறார். கவிஞர்கள் அபூர்வ மனிதர்கள் என்பதையோ பல ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் தோன்றுவார்கள் என்பதையோ, இன்னும் எத்தனை பெரிய மனிதர்களை, தத்துவங்களை, மதங்களை இன்னும் நம் மடத்தனத்தால் உருவாக்கிக் கொள்ளப் போகிறோம்?
உதாரணமாக திருவள்ளுவரின் பற்றுக பற்றறான் பற்றினை பற்று விடற்கு என்ற குறளினைக் கொண்டு அவரை அசாதாரண கவியாக காணும் போதே தோன்றின் புகழொடு என்ற குறளில் அவரை நிராகரிக்கவும் செய்கிறார்.
இது வரையிலான எந்த ஆளுமை வழிபாடும் மக்களுக்கு மீட்பாக அமையவில்லை என்று சொல்லி தன்னையும் அவர் நிராகரிக்கிறார். தனது கவிதைகளை மட்டுமே முன்னிறுத்துகிறார். அதனால் தான் தனது பெயரை தேவதேவன் என்று வைத்துக் கொண்டுள்ளேன்.
உடைந்த பூமியை மீண்டும் ஒட்டுவதற்கு பூமிக்கு வெளியே இருப்பவனால் தான் முடியும் என்கிறார்.
தன்னை நிராகரிப்பது என்பது எத்தனை கடினமானது என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டோம். அதில் தன்முனைப்பிற்கும் செயல் விழைவிற்கும் எந்த அர்த்தமும் இல்லை என்பதோடு, கடவுளின் ராஜ்ஜியத்தில் கவிதையின் மதத்தில் வாழ முடியாது போகிறது என்பது பேரதிர்ச்சியாகவே இருந்தது. ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் தனது செயலின் வழியை தேர்வு செய்யவும் அதன் வழியே தன்னை ஆராய்ந்து வெளிப்பட்டு இந்த வாழ்வினை அர்த்தப்படுத்திக் கொள்ளலாம் என்றும் நினைத்தவர்களுக்கு ஒன்றுமே எண்ணாமல் நீங்கள் செய்யும் செயலே முதன்மையானது என்று சொல்பவர் உருவாக்கும் பதற்றம் வெவ்வேறு கேள்விகளாக வெளிப்பட்டது.
தேவதேவனின் தரிசனத்தின் முன்னோடிகளாக ஜே கிருஷ்ணமூர்த்தி, புத்தர் இவர்களை குறிப்பிட்ட போது, மீண்டும் நீங்கள் ஆளுமை உருவாக்கத்தின் சிக்கலில் மாட்டிக் கொள்கிறீர்கள் என்றார். நீங்கள் எந்த ஆளுமையையும் முன்னிறுத்தாவிட்டல் இந்த தரிசனத்தை முன்னெடுப்பு செய்வது எவ்வாறு என்ற கேள்விக்கு, ஒவ்வொரு காலத்திலும் இந்த தரிசனத்தோடு மனிதர்கள் உருவாகி வருவார்கள் என்ற நம்பிக்கையை முன் வைத்தார்.
ஒரு உரையாடல்
நான் இல்லாதபோது, அன்பே
நீ என்ன செய்து கொண்டிருந்தாய்?
நான் உன்னையே நினைத்துக் கொண்டிருக்க
வேண்டும் என நீ ஆசைப்படுகிறாயோ?
என் செயல்களை அறியும் ஆர்வமோ?
நீ இல்லாத போது
நீ என்ன செய்து கொண்டிருப்பாய்
என்பதை யோசித்துப் பார்.
அதுவேதான்,
அதுவே நாம் அடைய வேண்டிய
வழியும் ஓளியும் வாழ்வும்!
இந்த கவிதையின் தருணத்தை குழந்தைமையாக களங்கமின்மையாக ஒவ்வொருவரும் அறிந்து தான் இருக்கிறார்கள். அதை அறியாத ஒரு மனிதனும் இல்லை. இந்த கால இடமற்ற கவிதையின் கணத்தில் வாழும் மனிதன் கடவுளாகவே இருக்கிறான். அந்த கவிதை தருணம் தான் நாம் வாழ வேண்டிய மதம் என்று உணர்ந்து வாழ்வாக மாற்றிக் கொள்வதையே நாம் செய்ய வேண்டியது, மனிதன் தனது காம குரோத மோகங்களுக்காக பல சாக்கு போக்குகளை தேடிக் கண்டுபிடித்து கொள்கிறான் என்கிறார்.
அப்போது
எல்லோரும் இப்படி ஆகமுடியும்
எல்லாவற்றையும்
களைந்து நின்ற
காலமற்றபோதே
கடவுளானேன்
இதைச் சொல்லும்
இப்போது தவிர.
கடவுளின் போது
நானில்லை
நீயுமில்லை
ஒரு சொல்லுமில்லை
காதலும்
செயலும் மட்டுமே
இருந்தன அப்போது.
இந்த சமூக கட்டமைப்பிலிருந்து தப்பிக்கும் வழியாகவே ஆண்டாளும் காரைக்கால் அம்மையாரும் பக்தியை பற்றிக் கொள்ள நேர்ந்தது. காரைக்கால் அம்மையார் பேயுருக் கொண்டார் என்பதையும் இதே கோணத்தில் புரிந்து கொள்ளலாம் என்று கூறியது புதிய பார்வையாக இருந்தது.
இங்கிருக்கும் கடவுள் சிலைகளும் கோவில்களும் தேவையற்றதும் தோல்வியடந்தவையுமாக இருக்கிறது. இவை இருப்பதினால் தான் இயற்கையை மனிதன் பார்க்க மறுக்கிறான். அதன் பெருங்கருணையையும் இயற்கையை தாண்டிய ஒத்திசைவையும் அறிந்து கொள்ளாது போகிறான்.
ஒரு மரத்தைக் கூட காண முடியவில்லை
ஒரு மரத்தடி நிழல் போதும்
உன்னை தைரியமாய் நிற்க வைத்துவிட்டுப்
போவேன்
வெட்ட வெளியில் நீ நின்றால்
என் மனம் தாங்க மாட்டேன் என்கிறது
மேலும்
மரத்தடியில் நிற்கையில்தான்
நீ அழகாயிருக்கிறாய்
கர்ப்பிணிப்பெண்ணை
அவள் தாயிடம் சேர்ப்பது போல
உன்னை ஒரு மர நிழலில் விட்டுப்போக
விழைகிறேன்
மரங்களின் தாய்மை
முலை முலையாய் கனிகள் கொடுக்கும்
கிளைகளின் காற்று
வாத்சல்யத்துடன் உன் தலையை கோதும்
மரம் உனக்கு பறவைகளை
அறிமுகப்படுத்தும்
பறவைகள் உனக்கு வானத்தையும்
தீவுகளையும்
வானமோ அனைத்தையும்
அறிமுகப்படுத்திவிடும்
ஒரு மரத்தடி நிழல் தேவை
உன்னை தைரியமாய் நிற்க வைத்து
விட்டுப் போவென்
இந்த பெருங்கருணையையும் பேரன்பையும் மனிதன் உணர்ந்து கொண்டால் அவனுக்கு வெறுப்பு உணர்வே இல்லை. என்னை உங்களால் கோவப்பட வைக்க முடியாது. நான் கடவுளின் ராஜ்ஜியத்தில் 40 வருடங்களாக வாழ்ந்து வருவதை என்னுடைய கவிதைகளை படிக்கும் போது என்னால் உணர முடிகிறது.
பிரமிள் அவரது வெறுப்புணர்வினால் தான் அவருக்கு நிறைய எதிரிகளை உருவாக்கி கொண்டு எதிர்ப்பவராக சுருங்கிப் போனார். தமிழ் இலக்கியச் சூழல் அவரை பலி கொண்டது. பிரமிளின் கருத்துக்களை அவரை விட தீவிரமாகவும் அதிகமாகவும் சொல்லியிருக்கும் நான் அனைவருக்கும் அன்புக்கு உரியவனாகவே இருக்கிறேன். ஏனெனில் இந்த எதிர்ப்புக் கவிதைகளை மனிதர்களின் மீது கொண்ட அன்பினால் தான் நான் எழுதியிருக்கிறேன்.
ஒசாமா பின்லேடன்
எவ்வளவு கம்பீரமாய் ஒலிக்கிறது உன் பெயர்
என் பெயரைப் பொலவே
உன்னைப் போலவே
ஒவ்வொரு கவிஞனும் – நானும் –
ஒரு தீவிரவாதிதானே
ஒரு சிறு வேறுபாடு மாத்திரமே உண்டு
உன்னிடமிருப்பது அறியாமையும் வெறுப்பும்
இக்கவிஞனிடமிருப்பதோ ஞானமும் அன்பும்
அன்பு மீதூறி நான் உன்னை
ஆரத் தழுவிக்கொள்ளும் இவ்வேளை
இதோ யுத்தம் முடிகிறது
சாந்தி மலர்கிறது
யாரோ ஒருவன் என எப்படிச் சொல்வேன்
குப்பைதொட்டியோரம்
குடித்துவிட்டு விழுந்துகிடப்போனை.
வீடற்று நாடற்று
வேறெந்தப் பாதுகாப்புமற்று
புழுதி படிந்த நடைபாதையில்
பூட்டு தொங்கும் கடை ஒட்டிப்
படுத்து துயில்வோனை.
நள்ளிரவில் அரசு மருத்துவமனை நோக்கி
கைக்குழந்தை குலுங்க அழுது கொண்டு ஓடும் பெண்ணை.
நடைபாதைப் புழுதியில் அம்மணமாய்
கைத்தலையணையும் அட்டனக்காலுமாய்
வானம் வெறித்துப் படுத்திருக்கும் பைத்தியக்காரனை.
எதையும் கவனிக்க முடியாத வேகத்தில்
வாகனாதிகளில் விரைவோனை.
காக்கிச் சட்டை துப்பாக்கிகளால் கவிலங்குடன்
அழைத்துச் செல்லப்படும் ஒற்றைக் கைதியை.
நான் மிகவும் நேர்மறையான கவிதைகள் மட்டுமே எழுதியவனாக கருதிக் கொள்கிறார்கள். ஆனால் நான் பெண்களைப் பற்றிய கடும் விமர்சனங்களையும் முன் வைத்திருக்கிறேன் (உதாரணம் – பாலியல் தொழிலாளி பங்கஜவல்லி கவிதை) ஆனால் அந்த கவிதையில் வரும் பெண்ணாக என்னையே தான் நான் நினைத்துக் கொள்கிறேன்.
அதே நேரத்தில் மனித உணர்வுகள் அது எத்தகைய தீவிரமானதாக இருப்பினும் கவிதையாகாது. ஒரு பெற்றோரால் கைவிடப்பட்ட சிறுமி தனது தம்பியின் மீது கொண்டுள்ள அக்கறை, பாசமே தவிர அன்பு இல்லை. (உதாரணம் பெரியம்மாவும் சூரியனும் கவிதை).
புதிய ஏற்பாடு கவிதையில் ஆண்கள் அனைவரையும் பெண்ணாக மாறும்படி எழுதியிருப்பதை குறித்து கேட்டதற்கு இளம் வயதில் ஆண் தனித்து அறிய எதுவோ இருக்கும் என்று கருதியிருந்ததாகவும் ஆனால் தற்போதைய நிலையில் நான் எழுதியிருக்கும் கவிதை என்று புதிய ஏற்பாடு பற்றிக் கூறினார்.
ஒரு கவிஞன் அனைத்து புறச் சூழல்களையும் எதிர் கொள்பவனாக இருப்பதினால் எல்லா வகையான கவிதைகளும் உருவாவதும் அதனை எழுதுவதும் முக்கியமானது என்கிறார்.
நம் உறுப்புகள் ஒவ்வொன்றும் எவ்வளவு நேசத்துடன் உள்ளது. நம் கையால் நம்மை தொடுவதன் மூலம் எத்தகைய அன்பினை நாம் உணர்கிறோம். நாம் சும்மா நடக்கும் போது செடிகளை தொட்டுக் கொண்டே செல்வது ஒரு கவிதையின் தருணம் என்றே சொல்கிறார்.
கவிதையின் மதம்
அதற்குக் கடவுள்கள் இல்லை
கோயில்கள் இல்லை.
பூஜைகள் இல்லை
புனித நூல்கள் இல்லை
சடங்குகள் இல்லை
தனித்து நிற்கும் ஆசாரங்கள் இல்லை
பரப்புவதற்கும் விரிப்பதற்குமான
தத்துவங்கள் இல்லை.
அது தன்னைத்தானே விளக்குவதால்
அறிஞர்களும் புலவர்களும்
அதற்கு தேவையில்லை
கவிஞர்கள் கூடத் தேவையில்லை
ஆனால் அதன் இலட்சியமோ
மனிதர்கள் எல்லோரையுமே
கவிஞர்களாக்கிவிடுவதாயிருப்பதுதான்
விந்தை.
இலட்சியம் கொண்டிருக்காத
வேளையிலெல்லாம்
அது தன்னை மறைத்துக் கொண்டு
சுதந்திரமாக வாழ்கிறது
இலட்சியம் கொண்டிருக்கும்போதெல்லாம்
அச்சத்தால் நாம் உருவாக்கியிருக்கும்
அனைத்துக் கட்டுமானங்களையும் உடைத்து –
தன் இலட்சியத்தையும் கூட –
நொறுக்கியபடிதான்
தன்னை வெளிப்படுத்துகிறது அது.
ஒவ்வொன்றையும் தனது மென்மையான குரலில் நிதானமாகவும் உறுதியாகவும் உற்சாகத்தோடும் அவர் பேசியதும், அவரது முன்னால் அவர் விரும்பி சேகரித்து வைத்திருந்த இலைகளும் பூக்களும், நாள் முழுவதுமான அவரது அருகாமையும் ஒரு பேருணர்வை உருவாக்கியது. மாலை நான்கு மணியுடன் அமர்வுகள் முடிந்ததும் அனைவரும் பரவசத்துடன் பேசிக் கொண்டு பிரிந்தோம். நிகழ்வினை ஒருங்கிணைத்த சரண்யாவிற்கு நன்றி.
அன்புடன்
க சரத்குமார்
With a smile
In one of Guru Nitya Chaidanya Yati’s autobiographical speeches, it is recounted that Nataraja Guru approached a group of young students gathered under a tree and engrossed in a serious discussion.
ஈ.எம்.எஸ் பற்றிய காணொளி நெகிழ்ச்சியானது. நீங்கள் தொடர்ச்சியாக அவரைப்பற்றி எழுதி வந்திருக்கிறீர்கள். ஆனாலும் இந்தக் காணொளியில் தெரியும் அந்த உணர்வுகள் மிக அருமையாக உள்ளன. உங்கள் இளமையில் உங்களை ஆட்கொண்ட பேராளுமையின் ஞானமும் வரலாற்றுப் பாத்திரமும் இன்றுவரை உங்களில் தொடர்வதைச் சொல்லியிருக்கிறீர்கள்
இ.எம்.எஸ் என்னும் அறிஞர்July 26, 2025
தொல்குடியின் ஞானம் நம்மிடையே உள்ளதா?
திம்மண்ண மரிமண்ணு என்னும் ஊரிலுள்ள தொன்மையான ஆலமரம் இது. உலகின் மிகப்பெரிய ஆலமரம் என்றும் சொல்லப்படுகிறது. பல ஏக்கர் பரப்புக்கு விரிந்த ஒற்றை ஆலமரம். அது தெய்வமாக வழிபடப்படுகிறது. அதன் ஆன்மிகம் என்ன?
சிந்திக்கும் குழந்தைகளுக்காக…
உங்கள் பனிமனிதன் நாவல் என் குழந்தைகளின் ஃபேவரைட் ஆக இருந்தது. பதினைந்து ஆண்டுகளுக்கு பின் நான் என் குழந்தைகளுக்கு அவற்றை வாசித்துக் காண்பித்தேன். தினசரி ஓர் அத்தியாயமாக வாசிப்பேன். அவர்களுக்குபுனைவில் ஆர்வம் உருவாவதற்கும் , நவீன சிந்தனைகள் மேல் ஆர்வம் வருவதற்கும் அது காரணமாக அமைந்தது.
இன்றைக்கு என் அக்காவின் பேரக்குழந்தைகளுக்கு அதே நாவலை ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து சொல்லிக் கொடுக்கிறேன். வெள்ளிநிலம், உடையாள் இரண்டு கதைகளையும் வாசித்துச் சொன்னேன். அவற்றிலுள்ள சாகசக்கதை, நகைச்சுவை ஆகியவற்றுடன் அறிவியலும், தத்துவமும் இணைந்து ஆழமான ஒரு புரிதலை ஏற்படுத்தின.
ஆங்கிலத்தில் ஏராளமான குழந்தை இலக்கியங்கள் உள்ளன. அவற்றை குழந்தைகள் விரும்பி வாசிக்கிறார்கள். அப்படியென்றால் பனிமனிதனோ, வெள்ளிநிலமோ ,உடையாளோ கூடுதலாக அளிப்பது என்ன? அவை இந்தியாவின் குழந்தைக்கதைகள் என்னும் அம்சம்தான் முக்கியமானது. ஓர் இந்தியக்குழந்தை அவற்றை இன்னும் கூர்மையாக ரசிக்கமுடியும். இந்தியப்பண்பாட்டைப் புரிந்துகொள்ளவும் அவை உதவும்.
அதைவிட முக்கியமாக இன்னொன்று உண்டு. அந்த நூல்களிலுள்ள அறிவியல் செய்திகளை ஆங்கிலத்திலும் வாசிக்கலாம், அந்நூல்களிலுள்ள மாயம், சாகசம் எல்லாம்கூட வெளியேயும் உண்டு. ஆனால் அவற்றிலுள்ள வரலாறு, தத்துவம், ஆன்மிகமெய் ஆகியவற்றை வெளியே வாசிக்கமுடியாது. ஓர் இந்தியக்குழந்தையின் மனதில் எழும் பலவாறான கேள்விகளுக்கான விடைகள் இந்த நாவல்களிலுள்ளன. இந்த நாவல்கள் அவர்களே அந்தக் கேள்விகளை விடைகளாக ஆக்கிக்கொள்ளும் வழிகளையும் காட்டுகின்றன. அந்தச் சிந்தனைப்பயிற்சி இன்றைய குழந்தைகளுக்கு மிகமிக அவசியமானது.
தமிழில் இந்த நூல்கள் மிகப்பெரிய கொடை. போதிய அளவுக்கு அவை தமிழில் பெரும்பாலும் வாசிக்கப்படவில்லை. முக்கியமான காரணம் இன்றைய பிள்ளைகள் அதிகமும் ஆங்கிலம் வழியாக வாசிப்பவை என்பதுதான். அவற்றை ஆங்கிலத்தில் சொல்லும் அளவுக்குப் புரிதலும் நம்மவர்களிடம் இல்லை.
என் மனமார்ந்த நன்றிகள்.
ரா. கிருஷ்ணசாமி
அன்புள்ள கிருஷ்ணசாமி,
இந்த மூன்று நாவல்களுமே உடனடியாக ஆங்கிலத்தில் வரவுள்ளன- சர்வதேசப்பதிப்புகளாகவும் வெளிவரவுள்ளன. இவை இந்திய குழந்தைகளை உத்தேசித்து எழுதப்பட்டவை. நம் குழந்தைகளின் அறிவியலறிவும், ஆர்வமும் அதிகம். மொழித்திறன் குறைவு. நம் குழந்தைகளுக்கு நாம் எழுதவேண்டிய நூல்கள் நுட்பமான அறிவியல், வரலாறு, தத்துவம் ஆகியவை கொண்ட நூல்கள். ஆனால் மொழி குழந்தைகளுக்குரியதாக அமையவேண்டும். அந்தவகையில் இவை அமைந்துள்ளன. குழந்தைமொழியில் எழுதப்பட்ட இலக்கிய ஆக்கங்கள் இவை.
குறிப்பாக உடையாள் எனக்கு மிக அணுக்கமான ஒன்று. ஒரு முகமே பிரபஞ்சமாக ஆவது. சாக்தத்தின் அடிப்படையை விளக்கும் ஆன்மிக நூல் அது. அமெரிக்காவில் அதை வாசித்துக்கேட்ட குழந்தை,பத்துவயதான மாணவி, உடனடியாக அதன் பெண்மைய பார்வையைச் சென்றடைந்தது எனக்கு மிக மனநிறைவூட்டிய அனுபவம்.
இன்று குழந்தைகளை வாசிக்கச் செய்தாகவேண்டிய கட்டாயம் அக்குழந்தைகள் ஏதேனும் துறையில் வெற்றிகொண்டவர்களாக அமையவேண்டும் என விரும்புபவர்களுக்கு உள்ளது. அது எளிய வேலை அல்ல. மிகமிகச் சவாலான ஒன்று. உலகம் முழுக்கவே இன்றைய ‘செல்பேசி’ சூழல் குழந்தைகளை காணொளிகள், இணையவிளையாட்டுக்கள் நோக்கி இழுக்கிறது. மேலைக்கல்விச்சூழலில் திட்டமிட்டு குழந்தைகளை வாசிப்பு நோக்கிச் செலுத்துகிறார்கள். பாதிக்குமேல் குழந்தைகள் தப்பித்துக் கொள்கின்றன.
நம் சூழலில் பெற்றோரே குழந்தைகளின் கைகளில் செல்பேசியை அளித்து அந்த உலகுக்குள் தள்ளிவிடுகிறார்கள். மூர்க்கமான மனப்பாடக் கல்வியை அளிக்கும் கல்விநிலையங்கள் உள அழுத்தத்தை அளித்து குழந்தைகளை மேலும் செல்பேசி என்னும் சதிக்குழியை நோக்கிச் செலுத்துகின்றன. நாம் நம் குழந்தைக்கு வாசிப்பை அறிமுகம் செய்யலாம், ஆனால் மற்றகுழந்தைகளை நம் குழந்தைகள் தவிர்க்கமுடியாது. அவர்கள் வளரும் சூழல் அவர்களை சும்மாவிடாது.
ஆகவே மிகமிக ஆற்றலுடன் குழந்தைகளை வாசிப்புக்குள் கொண்டுவரவேண்டும். ஆனால் நம் சூழலில் பெற்றோரே எதையும் வாசிப்பதில்லை. வாசிப்பதன் அவசியம் பற்றிக்கூட நம் பெற்றோருக்குத் தெரிவதில்லை. வாசிப்பு என்பது வெட்டிவேலை என்று நம்பும் கூட்டத்தினரும், அதைப் பிரச்சாரம் செய்யும் மூடர்களும் ஏராளமாக உள்ளனர். வாசிப்பின் வழியாகவே குழந்தை தனக்கான தனி உலகை உருவாக்கிக் கொள்ள முடியும். நூல்கள் மட்டுமே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறனை அளிக்கின்றன. காட்சியூடகங்கள் எவையாயினும் அனைவருக்கும் ஒன்றையே பரிமாறுகின்றன, ஆகவே சராசரிகளையே உருவாக்குகின்றன.
வரும் செயற்கை நுண்ணறிவுக்காலகட்டத்தில் அந்தவகையான சராசரிகள் தவிர்க்கப்படுவார்கள். தனித்திறன் ஒன்றே மதிக்கப்படும். அதை முன்னரே அறிந்துதான் வெளிநாட்டுக் கல்விநிலையங்கள் தனித்திறனை அளிக்கும் கல்வியை முன்னெடுத்தன, அவற்றில் முதன்மையானது வாசிப்புப் பழக்கம்தான்.
ஆனால் குழந்தைகளுக்கு நூல்களை வாங்கிக்கொடுத்தால் மட்டும் போதாது. வாசிக்கும்படிக் கட்டாயப்படுத்தினாலும் பயனில்லை. அவர்கள் சுவாரசியமாக வாசிப்பில் நுழையவேண்டும். எளிய கதைகள் இன்றைய குழந்தைகளுக்குச் சலிப்பூட்டுகின்றன. ஒரு குழந்தை கணிப்பொறி விளையாட்டுக்குள் செல்கிறது என்றால் அதன் மூளைக்கு ஒரு சவால் அங்கே உள்ளது என்றே பொருள். அதற்கிணையான சவாலை வாசிப்பு அளிக்கவேண்டும். அத்தகைய நூல்கள் பல்லாயிரக்கணக்கில் வேண்டியிருக்கின்றன. ஆனால் நம் குழந்தை எழுத்தாளர்கள் தாங்கள் குழந்தைகளாக இருந்தபோது வாசித்தவற்றை இப்போது எழுதுகிறார்கள்.
இந்த தேவையை முன்னுணர்ந்தே நான் பனிமனிதன் உள்ளிட்ட நூல்களை எழுதினேன். அவற்றில் இன்றைய நவீன அறிவியலின் கொள்கைகளை, சமூகவியல் சித்தாந்தங்களை, தத்துவக் கொள்கைகளை விவாதித்தேன். மொழி மட்டும் எளிமையானது, திட்டமிட்டு குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது. பனிமனிதன் நாவலில் பரிணாம அறிவியல் முதல் நவீன உளவியல் வரை பேசப்பட்டுள்ளன. வெள்ளிநிலம் நாவல் உலக மதங்கள் உருவாகி வந்துள்ள வரலாற்றுப்பரிணாமம் விவரிக்கப்பட்டுள்ளது. அதற்கும் அப்பால் சென்று தத்துவார்த்தமான மெய்யியல் விவாதமே உடையாளில் உள்ளது.
நான் ஆச்சரியத்துடன் பார்க்கும் ஒரு விஷயம் என்னவென்றால் அறம் கதைகள் இன்றைய இளம்சிறார்களுக்கு மிக விருப்பமானவையாக உள்ளன என்பதுதான். அவற்றிலுள்ள உலகம் முதிர்ந்தவர்களுக்குரியது. ஆனால் அவை நம் சமூகச்சூழலை, நம் பிரச்சினைகளை, நாம் வளர்ந்து வந்த பாதையை இளையோருக்கு அறிமுகம் செய்கின்றன. பெரியவர்களை விட முதிர்ச்சியுடன் அவற்றை இளையோர் வாசிக்கிறார்கள். தமிழில் மட்டும் அல்ல ஆங்கிலம் வழியாக இந்தியா முழுக்கவே அந்த வாசிப்பு நிகழ்கிறது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும்கூட Stories of the True மிக விரும்பப்படும் நூலாக உள்ளது.
இன்றைய பெற்றோர் இந்நூல்களை குழந்தைகளுக்கு அளித்து கூடவே அந்த அறிவுத்துறைகளைப் பற்றியும் விவாதிப்பார்களானால் அதில் ஏதோ ஒன்று குழந்தைகளை தொட்டுக்கொள்ளும். அவர்கள் எதில் ஆர்வம்கொண்டாலும் அது நல்ல தொடக்கமாக அமையும்.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers



