வேதாசலம், கடிதம்
அன்புள்ள ஜெ ,
வணக்கம். தமிழ் விக்கி தூரன் விருது-2025 ஏற்கவுள்ள தொல்லியல் ஆய்வாளர் வெ.வேதாசலம் அவர்களின் அந்திமழை பேட்டியை வாசித்தேன். வரலாற்றில் பொற்காலம் இருண்டகாலம் என்பது கிடையாது! -தொல்லியல் ஆய்வாளர் வெ.வேதாசலம்
இப்பேட்டி அவர் இதுகாறும் செய்தவைகள் குறித்த சித்திரத்தை அளிக்கிறது. கல்வி, வேலை, ஆசிரியர், களப்பணிகள், குடும்பம் எனத் தொட்டுச்செல்லும் பேட்டியை வாசிக்கையில் ஒரு ஆய்வு மாணவனாக மிகுந்த மன எழுச்சியை அடைந்தேன். அப்பேட்டியில் உள்ள எழுத்தைவிட புகைப்படங்கள் அதிகம் பேசுகின்றன. கீழடியில் ஒரு கை பானைமேல் சிநேகமாய் இருக்கிறதென்றால் மற்ற கையும், கால்சட்டையும் கீழடி மண்ணைத் தொட்டு அறிந்திருக்கும் சுவடுகளுடன் இருக்கின்றன. பாரம்பரிய நடைப் பயணம் என்னும் பெயரில் பொதுமக்களுடன் 300க்கும் மேற்பட்ட இடங்களில் உரையாடியிருக்கிறார். மேடை, ஒலிபெருக்கி என எதுவுமின்றி பொதுமக்கள்சூழ அவர் உரையாற்றும் காட்சி கண்டு என் கண்கள் கலங்கின. எவருக்கும் தொல்லியலைப் போதிக்கும் அவரின் பணி மெச்சத்தக்கது. இந்தப்பேட்டி மிக நன்றாக வந்திருக்கிறது. இடையே அங்கங்கே வரும் அனுபவத்தெறிப்புகள் பேட்டியைப் பலமடங்கு சுவாரஸ்யமாக்குகின்றன.
‘களப்பிரர் காலம் இருண்ட காலம் ‘என்று ஒரு கருத்து முன் வைக்கப்படுகிறது. ஆனால் அது தவறு என்பதற்கு ஆதரவாக ஏராளமான சான்றுகள் கிடைக்கின்றன. சைவம் மறுமலர்ச்சி அடைந்தது அந்தக் களப்பிரர் காலத்தில்தான். அந்தக் காலத்தில்தான் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காவிய நூல்கள் எழுதப்பட்டன.
எப்போதும் உண்மை அமைதியாகத்தான் இருக்கும். ஆரவாரம் செய்யாது. அறிவார்ந்த செயல் செய்யும்போது உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது.
முதலில் தமிழ்நாட்டு அளவில் பார்க்க வேண்டும்; பிறகு இந்திய அளவில் பார்க்க வேண்டும்;அதன் பின்பு உலக அளவில் பார்க்க வேண்டும் என்கிற பார்வை எனக்கு விரிவடைந்தது.
என்றுமே தமிழ்நாட்டில் மூன்றாவது மொழி இருந்தது இல்லை.
சோழர்கள் பல்லவர்களுடன் ஒப்பிடும் போது பாண்டியர்கள் பற்றி அதிகம் எழுதப்படாத நிலையைக் கண்டேன். பெயர்க் குழப்பம் கூட பாண்டியர்கள் பற்றிப் பெரிய ஆய்வுகள் நடைபெறத் தடையாக அமைந்து பின்னடைவாக இருந்திருக்கலாம்.
என்பனவெல்லாம் மேலும்மேலும் வாசிக்கத் தூண்டுகின்றன. இவையெல்லாம் தமிழ்நாட்டை மேலும் புரிந்துகொள்ள உதவுமென நம்புகிறேன்.
அவர் பணிகள் குறித்து வாசிக்க வாசிக்க அவர்மீதான மதிப்பு பெருகுகிறது. மிகுந்த பொறுப்புணவுடனும் மனஊக்கத்துடனும் தொடர்ந்து களப்பணியாற்றுகிருக்கிறார். வெ.வேதாசலம் அவர்களைக் காட்டித்தந்தமைக்கு நன்றி.
தொல்லியல் ஆய்வாளர் வெ.வேதாசலம் அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.
நன்றி,
விஜயகுமார்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
