Jeyamohan's Blog, page 62

July 29, 2025

தெய்வநிழல்

2013 செப்டெம்பர் எட்டாம்தேதி ஆந்திரத்தில் நல்கொண்டா என்ற ஊருக்கு அருகில் உள்ள பன்னகல் என்ற சிறு கிராமத்துக்குச் சென்றிருந்தோம். தொல்பொருட்துறையால் பேணப்பட்டுவரும் ‘பச்சன சோமேஸ்வரர்’ ஆலயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கே ‘சாயா சோமேஸ்வரர்’ ஆலயம் பற்றி எழுதிவைக்கப்பட்டிருந்ததைப் படித்தோம். அந்த ஆலயம் பன்னகலிலில் இருந்து மேலும் தள்ளி, கரும்பும் சோளமும் வளர்ந்து பச்சை அலைகள் நெளியக்கிடந்த விரிந்த வயல்பரப்புக்கு நடுவே செந்நிற நதிபோல ஓடிய செம்மண்சாலைக்கு மறு நுனியில் இருந்தது. கார் புயல்பட்ட படகுபோல அலைபாய, அந்தச்சாலையில் சென்று சற்றே திரும்பியபோது பச்சைக்கடலலைகளில் மிதக்கும் கப்பலின் முகப்பு போல கோயிலின் கற்கும்பம் தெரிந்தது.

காரை நிறுத்திவிட்டு இரவுமழையால் சேறாகிப்போன செம்மண் களிப்பாதையில் தடுமாறி நடந்து சாயாசோமேஸ்வர் கோயிலை நோக்கிச் சென்றோம். வயல்வெளியிலிருந்து நீர்த்துளிகளை அள்ளி வீசிய காற்றில் உடம்புசிலிர்த்துக் கொண்டிருந்தது. வெயில் எழ ஆரம்பிக்கவில்லையென்றாலும் ஒளிர்ந்த மேகங்களின் வெளிச்சம் இதமாக பரவி நிறங்களையும் ஆழங்களையும் மேலும் அழுத்தமானதாகக் காட்டியது.

காகதீய பாணியில் கட்டப்பட்ட கோயில் அது. கருவறைக்குமேலேயே எழுந்த அதிக உயரமில்லாத பிரமிடு வடிவத்தில் பல அடுக்குகளாக உயர்ந்து செல்லும் கோபுரம் உச்சியில் தஞ்சை பெரியகோயிலில் இருப்பது போன்ற கற்கும்பத்தைச் சென்றடைந்தது. சுற்றுச்சுவர் ஆங்காங்கே உடைந்து சரிந்திருக்க, கற்பாளங்கள் பரவிய திருமுற்றத்தில் கல்லிடுக்குகளில் நெருஞ்சி பூத்துக் கிடந்தது.

அர்த்தமண்டபத்தில் ஏறியதுமே அதுவரை இருந்த கோயிலின் பாழடைந்த தோற்றம் விலகி, என்றும் புதுமை அழியாத கலையின் வசீகரம் சூழ்ந்துகொண்டது. காகதீயர் காலக் கலை என்பது தன் முழுமையை அர்த்தமண்டபத்தை அமைப்பதிலேயே எய்தியிருக்கிறது. அறுபட்டைத் தூண்கள். அவற்றின் மேல் வட்டவடிவ கபோதங்கள். மேலே கவிழ்ந்த தாமரை வடிவக்கூரை. தூண்களிலும் உத்தரங்களிலும் நுண்ணிய சிற்பங்கள். ஒரு முழ உயரமுள்ள நடனமங்கை அணிந்திருக்கும் கைவளையலின் செதுக்குவேலைகளைக்கூட கல்லில் கொண்டுவந்திருக்கும் கலைநுட்பம்

மலர்களைப் பார்க்கும்போது இந்த ஆச்சரியம் உருவாவதுண்டு. இத்தனை சிக்கலான நுண்மையான அலங்காரங்கள் எதற்காக? வண்டு வந்து தேன்குடிப்பதற்காக என்பார்கள் அறிவியலாளர். வண்டு அவ்வலங்காரங்களைப் பொருட்படுத்துகிறதா என்ன? ஒவ்வொரு பூவுக்கும் ஒவ்வொரு நுண்மை. மூக்குத்தி அளவுள்ள பூவுக்குள் பற்பல அடுக்குகளாக உள்ளே சென்றுகொண்டே இருக்கும் அதிநுண்ணிய அலங்காரங்கள். காலையில் விரிந்து மாலையில் உதிரும் ஒரு மலருக்குள் எவருமே எப்போதுமே அறியாமல் அவை நிகழ்ந்து மறைந்துகொண்டே இருக்கின்றன.

அதை இயற்கையின் படைப்புக் கொந்தளிப்பு என்று மட்டுமே சொல்லமுடியும்.நம்முடைய மரபில் அதற்கு லீலை என்று பெயர். அலகிலா விளையாட்டு என்று பொருள். கேளி என்றும் இன்னொரு சொல் உண்டு. பிரபஞ்சங்களைப் படைப்பது அந்த சக்திக்கு ஒரு விளையாட்டு. விளையாட்டு என்பது விளையாடலின் உவகையின் பொருட்டு மட்டுமே நிகழ்வது. உருவாக்குவதன் பரவசத்தை மட்டுமே அப்போது படைப்பவன் உணர்கிறான்.

செவ்வியல் [கிளாசிக்] கலை என்பது இயற்கையின் படைப்புத்தன்மையை தானும் அடைவதற்காக மனிதன் எடுக்கும் பெருமுயற்சி. ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தை பக்கத்துக் கட்டிடத்தில் ஏறி நின்று நோக்கினால் கோபுரத்தின் மடிப்புக்கு உள்ளே நிற்கும் தேவனின் சிலையின் ஒவ்வொரு நகையிலும் சிற்பி செய்திருக்கும் நுண்ணிய செதுக்கல்கள் பிரமிப்பூட்டுகின்றன. இப்படி ஒரு கட்டிடம் வராமலிருந்தால் அச்சிலையை சாதாரணமாக மனிதக் கண்கள் பார்க்கவே முடியாது. தமிழ்மண்ணில் உள்ள பல லட்சம் சிற்பங்களில் பார்க்கவே படாத சிற்பங்களே அதிகம். கம்பராமாயணத்தின் அத்தனை பாடல்களையும் நுண்மையுணர்ந்து ரசித்த ஒரு வாசகன் இருக்கவே முடியாது.

செதுக்கிச் செதுக்கிக் கண்முன் தெரியும் பரப்பையே கலையால் நிரப்பிவிடுபவன் கலைஞன். அது ஒரு முழுமை. எவருமே பார்க்காவிட்டால்கூட அது அங்கே தன் முழுமையுடன், ஒரு காட்டுப்பூ போல, திகழ்ந்திருக்கும்.

சாயாசோமேஸ்வர் ஆலய மண்டபத்தில் இருந்து உள்ளே சென்றோம். கருவறைமுன் ஒரு பன்னிரண்டு வயதுப்பையன். எட்டுவயது தோன்றும் முகத்தில் வறுமையின், சத்துக்குறைவின் தேமல்கள். சட்டை இல்லாத மெல்லிய உடல். அவன்தான் பூசாரி. ‘பன்னஹல்க அஜய்குமார்’ என்று பெயர். எட்டாம் வகுப்பு மாணவன். காலையில் பூஜைமுடிந்து பள்ளிக்குச் செல்வானாம். இடிந்து, தொல்பொருள்துறை பாதுகாப்பில் இருக்கும் கோயிலுக்கு எவருமே வணங்க வருவதில்லை.

கருவறைக்குள் நுழைந்த அஜய்குமார் பள்ளத்தில் இறங்கிச் சென்றான். அவனுடைய தலைமட்டும் தெரிந்தது. வெளியே நின்றபோது  எதிரே உள்ள சுதைச்சுவர் மட்டுமே தெரிந்தது. கீழே ஆழத்தில் இருந்த லிங்கத்தின் அருகே அவன் ஒரு விளக்கைக் கொளுத்தி வைத்தபோது சட்டென்று லிங்கத்தின் நீளமான நிழல் அச்சுவரில் எழுந்தது. சாயாசோமேஸ்வர் என்ற பெயர் அப்போதுதான் புரிந்தது. சாயை என்றால் நிழல். அந்த ஆலயத்தில் லிங்கத்தின் நிழல்தான் கோயில்கொண்டு வழிபடப்படுகிறது.

கண்முன் நின்று மெல்ல அதிர்ந்த லிங்கநிழலையே நோக்கிக் கொண்டிருந்தேன். காற்று வீசியதில் நிழல்லிங்கம் எம்பி எழுந்து மீண்டும் அடங்கியபோது மனம் பதறியது. ஆழியலை வந்து கரையை மோதுவது போல நினைவுகள். கனத்துப்போனவனாக வெளிவந்து ஈரக்காற்று முகத்தில் பரவ, கார் நோக்கி நடந்தேன். மேலும்மேலும் கோயில்கள். அனுபவங்கள். ஆனால் எங்கள் பயணம் காசியை அடைந்தபோது நான் மீண்டும் சாயாசோமேஸ்வரை நினைத்துக் கொண்டேன்.

காசிக்கு நான் முதலில் வந்தது 1981இல். தனியாக வந்தேன். துறவி என்று சொல்லக்கூடாது, பரதேசி என்று சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட ஒருமாதம் கண்ட இடத்தில் தூங்கி இலவச உணவுகளை உண்டு இங்கே வாழ்ந்தேன். என் உயிர்நண்பன் ராதாகிருஷ்ணனின் தற்கொலையால் மனம்குலைந்து படிப்பை விட்டுவிட்டு அலைந்த நாட்கள் அவை. அதன்பின் என் அம்மாவும் அப்பாவும் தற்கொலை செய்துகொண்டதை ஒட்டி மீண்டும் உக்கிரமான பேதலிப்புக்கு உள்ளாகி 1984 இறுதியில் மீண்டும் காசிக்கு வந்தேன்.

காசி அழகற்ற நகரம். பித்தனின் தலைக்குள் நெரியும் எண்ணங்கள் போல அதன் மிகக்குறுகிய தெருக்களில் வண்டிகளும் மாடுகளும் மக்களும் முட்டிமோதுகிறார்கள். ஆனால் சந்துகள் எல்லாம் எப்படியோ கங்கையின் படிக்கட்டு ஒன்றை நோக்கிச் சென்று இறங்கும். இருண்ட சந்துகளின் வலைப்பின்னலில் வழிதவறாமல் காசியில் அலைய முடியாது. ஏதோ ஒரு கணத்தில் வழி திரும்பி சட்டென்று கங்கை நோக்கி திறக்கும் படித்துறையாக ஆகும். தரையில் விழுந்த வானம் போல பளீரென ஒளிவிடும் கங்கையின் நீர்வெளி. அந்தக் கணத்தின் உவகைக்காகவே காசியின் கடப்பைக்கல் பரப்பப்பட்ட சாக்கடைச்சந்துகளில் அலையலாம். அந்தக் கணத்தின் கண்டடைதலுக்காகவே கங்கையை இழக்கலாம்.

ஆனால் காசியளவுக்கு ஆர்வமூட்டும் இன்னொரு நகரம் இந்தியாவில் இல்லை. பலவகையான மக்கள் வந்து குழுமியபடியே இருக்கிறார்கள். மூதாதையர்களுக்கு நீர்க்கடன்செய்யவருபவர்கள். குடும்பச்சுமைகளைத் தீர்த்துவிட்டுக் கடைசி நீராட வருபவர்கள். சுற்றுலாப்பயணிகள். பக்தர்கள். பெரிய சங்குவளையிட்ட ராஜஸ்தானிப் பெண்கள். இரும்புத்தண்டைகளும் காப்புகளும் போட்ட பிகாரிப்பெண்கள். பெரிய மூக்குத்தி வளையங்கள் போட்ட ஒரியப்பெண்கள். குடுமிகள். பஞ்சக்கச்சங்கள். பைஜாமாக்கள்…. இது இந்தியாவின் ஒரு கீற்று. தெருக்களில் எப்போதும் ஆர்வமூட்டும் ஒரு விசித்திர முகம் தென்படும். மண்கோப்பையில் கொதிக்கும் டீ. பால்சுண்டவைத்த இனிப்புகள். புளிக்கும் ஜாங்கிரி. இலைத்தொன்னையில் இட்டிலியும் நீர்சாம்பாரும். எங்கும் நிறைந்த சைக்கிள்ரிக்‌ஷா மணியோசை. காசியின் சின்னச்சின்ன சந்துகளில் வாழ்க்கை நுரைத்துக் கொந்தளிக்கிறது. மக்கள்மீது பாசம் கொண்ட ஒருவன் காசியை எப்படியோ விரும்ப ஆரம்பித்துவிடுவான்.

காசி மரணத்தின் நகரமும் கூட. இங்கே மரணம்தான் முக்கியமான தொழில். முக்கியமான பேசு பொருள். பொழுதுபோக்கும் மரணம்தான். காசி என்றாலே பிரபலமான மணிகர்ணிகா கட், அரிச்சந்திர கட் என்ற இரு பெரும் சுடலைப்படிக்கட்டுகள்தான் நினைவுக்கு வரும். காசிக்கு மகாமசானம் என்றொரு பெயர் உண்டு. காசியில் ஒருபோதும் சிதை அணையக்கூடாது என்று ஒரு வரம் உள்ளதாம். காசிவாசி காலபைரவ மூர்த்திக்கு சிதைப்புகைதான் தூபம்.. அந்த  வரம் இன்றுவரை இல்லாமலாகவில்லை. எப்போதும் சுடலைப்படிகளில் பிணங்கள் எரிந்து கொண்டிருக்கும். பிணங்கள் எரிய பிணங்கள் மஞ்சள் சரிகை மூடி காத்துக் கிடக்கும். பிணங்களை சைக்கிளில் வைத்துக் கட்டியபடி சந்துகளில் ஓட்டிவருவார்கள். ஆட்டோ ரிக்‌ஷாக்களின் மேலே ஏற்றி வருவார்கள். ஒற்றைமூங்கிலில் பிணத்தைச் சேர்த்து கட்டி தூக்கிவந்து சுவரில் சாத்தி வைத்து விட்டு அமர்ந்து டீ குடிப்பார்கள். காசியில் மரணம் அதன் பொருளை இழந்துவிட்டிருக்கிறது.

காசி அன்னியர்களின் நகரம். இந்தியாவெங்கும் இருந்து  சாமியார்களும் பைராகிகளும் காசிக்குத்தான் வந்துகொண்டிருக்கிறார்கள். விதவிதமான சாமியார்களை இங்கே காணாலாம். மொட்டைகள், சடைகள், தாடிகள். கனல்போல் கண்கள் எரியும் துறவிகள். கைநீட்டும் பிச்சைக்காரர்கள். அஹோரிகள் என்று சொல்லப்படும் கரிய உடை தாந்த்ரீகர்களும், நாகா பாபாக்கள் என்று சொல்லப்படும் முழுநிர்வாணச் சாமியார்களும் அவர்களில் உக்கிரமானவர்கள். சாமியார்களுக்கு இங்கே நூற்றுக்கணக்கான இடங்களில் அன்னதானம் உண்டு. ஆகையால் எவரும் பசித்திருப்பதில்லை. பிச்சை எடுக்கும் சாமியார்கள் அனேகமாகக் காசியில் இல்லை. தேவையான பணம்  அவர்களைத் தேடிவந்து காலில் விழும்.

இதைத்தவிர உலகம் முழுக்கவிருந்து ஹிப்பிகள், நாடோடிகள், ஓரினச்சேர்க்கையாளர்கள், போதை அடிமைகள், மனநோயாளிகள் காசிக்கு வந்தபடியே இருக்கிறார்கள். நீர்த்துளி நீர்தேங்கியதை நாடுவதைபோல அவர்கள் காசியை நாடுகிறார்கள். நான் முன்பு வந்தபோது வெள்ளையர்கள் மட்டுமே கண்ணில்பட்டார்கள். இப்போது அதேயளவுக்கு மஞ்சள் இனத்தவரும் தெரிகிறார்கள். வணிகநாகரீகத்தால் வெளியே தள்ளப்பட்ட மனிதர்கள் அவர்கள். காசியில் இருந்துகொண்டு அவர்கள் நம்மை பித்தெடுத்த கண்களால் வெறித்துப் பார்க்கிறார்கள்.

காசி போதையின் நகரம். ஆகவே அதற்கு ‘ஆனந்தகானனம்’ என்றும் பெயர் உண்டு. போதை என்றால் கஞ்சா அல்லது சரஸ் அல்லது ஃபாங். கஞ்சாகுடிக்கும் சிலும்பிகளைத் தெருவில் போட்டு விற்கிறார்கள். எங்கே கைநீட்டினாலும் கஞ்சா கிடைக்கும். மேலும் தீவிரமான போதைப்பொருட்களும் சாதாரணமாகக் கிடைக்கும். ரங் என்றால் பிரவுன்சுகர். ரஸ் என்றால் மார்ஃபின் ஊசி. தால் என்றால் எக்ஸ்டஸி மாத்திரைகள். நள்ளிரவின் அமைதியில் அல்லது காலையின் கடுங்குளிரில் எந்நேரத்திலும் படித்துறைகளை ஒட்டிய சந்துகளிலும் மண்டபங்களிலும் சாமியார்கள் கஞ்சாவுடன் அமர்ந்திருப்பதைக் காணலாம். அதைத்தவிர சாமியார்கள் கூடிவாழும் பல பாழடைந்த மண்டபங்களும் நதிக்கரைக் குடில்களும் காசியில் உண்டு. காசி வைராக்யத்தின், துறவின் நகரம். காசி பைத்தியத்தின் நகரம். காசி சுடலைச் சாம்பல் பூசிய பித்தனின் வாசஸ்தலம்.

நள்ளிரவில் காசியில் நுழைந்தபோது பாலத்தின் மேலிருந்து அந்த பிறைச்சந்திரவடிவமான படித்துறை வரிசையைப் பார்த்தேன். வர்ணா ஆறு முதல் அஸ்சி ஆறுவரையிலான 108 படித்துறைகளுக்குத்தான் வருணாசி என்று பெயர். காலஃபைரவ க்ஷேத்ரம் என்பது மருவி காசி. செவ்வைர நெக்லஸ் ஒன்று விழுந்து கிடப்பதுபோலப் படித்துறை விளக்குகள் ஒளிர்ந்தன. அருகே கங்கையின் நீர் இருளுக்குள் உலோகப் பரப்புபோல பளபளத்தது. கார் கடந்து சென்றபின்புதான் என் நெஞ்சின் அழுத்ததை உணர்ந்தேன்.

தாளமுடியாத நெஞ்சக்கனலுடன் காசிக்கு வந்த நாட்களில் அதன் கூட்டமே எனக்கு ஆறுதல் அளித்தது. கூட்டத்துக்குள் புகுந்து முட்டிமோதி இடித்து சென்றுகொண்டே இருக்கும்போது மனத்தின் எடைமுழுக்க உப்புப்பாறை நீரில் கரைவதுபோல மறைந்துவிடுவதாக தோன்றும். போகும்வழியில் ஏதாவது ஒரு கடையில் சப்பாத்தி தானமாகப் போடுவார்கள். நீத்தார்கடன்செய்தபின் காசியின் ஏதாவது ஒருகடையில் பணம்கொடுத்து ஐம்பது,நூறுபேருக்கு உணவு என்று ஏற்பாடுசெய்து போவது வட இந்திய வழக்கம். ஒருவேளை நான்கு சப்பாத்தி வாங்கினால் எனக்கு பின்னர் உணவு தேவையில்லை

கால்களைத்து மண்டபங்கள் எதிலாவது அமர்ந்த கணமே தனிமை என்னைச் சூழ்ந்துகொள்ளும். ஒளிரும் கங்கைநதி. காலமே நதியாக வழிந்து கடல்தேடுகிறது. அதில் ஆடும் ஓடங்கள். நீராடும் உடல்களின் நெளிநெளியும் நிழல்பிம்பங்கள். மனம் உருகி உருகி ஒரு கணத்தில் அழ ஆரம்பித்திருப்பேன். பலமணிநேரம் நீளும் அழுகை. அழுகை தேய்ந்து அப்படியே நான் தூங்கிவிடவேண்டும். அதுமட்டுமே அன்று எனக்கு ஓய்வு. ஒரு கணத்தில் விழித்துக்கொள்ளும்போது மொத்த நகரமே இடிந்து என்மீது விழுவதுபோல ஓசைகள் என்னைத்தாக்கும்.

காசியில் இருந்த நாட்களில் ஒருதடவைக்குமேல் நான் விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்றதில்லை. எந்தக் கோயிலுக்குள்ளும் நுழைந்ததில்லை. கோயில்கள் எனக்குப் பதற்றமூட்டின. ஆனால் சிதை எரியும் காசிப்படித்துறைகள் மிகமிக ஆறுதல் தருவதாக இருந்தன. குளிர்ந்த டிசம்பர் இரவுகளில் சிதையின் வெப்பத்தை உடலெங்கும் ஏற்றபடி மணிகர்ணிகா கட்டில் அமர்ந்திருப்பதில் ஆனந்தம் இருந்தது. காசியில் சிதைகள் நான்கடி நீளமே இருக்கும். பிணத்தின் காலும் தலையும் வெளியே கிடக்கும். வயிறும் மார்பும் எரிந்து உருகிச் சொட்டி வெடித்து மடிந்ததும் கால்களை மடக்கி தீக்குள் செருகுவார்கள்.

எரியும் பிணத்தின் முகம் உருகி அமுங்கி,  மெல்லமெல்ல மண்டைஓட்டு வடிவம் கொள்வதன் பேரழகை மீண்டும் மீண்டும் பார்த்திருக்கிறேன். பின்னர் ‘நான் கடவுள்’ படப்பிடிப்புக்காக ஒருமாதம் காசியில் தங்கியிருக்கும் போதும் பலமுறை சிதையருகிலேயே நின்றிருக்கிறேன். இப்போது சென்றபோதும் அரிச்சந்திரா கட்டத்தில் தலைக்குமேல் எரியும் மதியவெயிலில் ஒரு பிணம் முழுமையாக எரிந்தழிவது வரை நின்றிருந்தேன். அந்தக் காட்சி மண்ணில் உள்ள அனைத்தையுமே செரித்து அழித்துக் கொண்டிருக்கும் அளவிலாக் காலத்தை சில நொடிகளில் கண்டு முடிப்பதுபோன்றது.

அன்று, காலை நேரத்தில் சிதையருகே இருந்தபோதுதான் முதன்முறையாக ஒரு பண்டாரம் என்னிடம் பேசினார். ”தமிழாளாய்யா?” என்றார்.

”ஆமாம்” என்றேன்.

”அய்யோன்னு சொல்றதைக் கேட்டேன்”என்றார்.

சிலும்பியை அவரது சீடர் பற்றவைத்துக் கொண்டிருந்தார். நகைத்தொழிலாளர்கள் பொன்னுருக்கும் கவனத்துடன்.

சாமி  ”எந்தூரு?”என்றார்.

நான் ஒன்றும் சொல்லவில்லை .

”அதுசெரி. அப்ப சாமியாயிட்டுது…ஹஹஹ!”

அந்தச்சிரிப்பின் பொருள் இன்று புரிகிறது.

”வேண்டப்பட்டவங்க செத்தாச்சாக்கும்?”என்றார் சாமி.

தலையசைத்தேன்.

”யாரு?”

நான் ”அம்மா..” என்றேன்..ஏனோ அப்பா நினைவு அப்போது வரவில்லை.

”முன்னையிட்ட தீ முப்புரத்திலே…” என்று சிரித்து இருமி சீடனிடம் ”லே நாயே எடுரா” என்று சொல்லி சிலும்பியை வாங்கி ஆழ இழுத்துப் புகைவிட்டார்.

நாலைந்துமுறை இழுத்துவிட்டு தலையை சிலுப்பிக் கொண்டு சீடனுக்கு அளித்துவிட்டார். சீடன் மனநோயாளி போல இருந்த இளைஞன். அவன் ஆழ இழுத்துவிட்டு பரட்டைத்தலைமுடியின் நிழல் முகத்தில் விழ அப்படியே குனிந்து அமர்ந்திருந்தான். என் வலப்பக்கம் கங்கை நூறாயிரம் நிழல்பிம்பங்கள் நெளிய அலைவிரிந்து சென்றது. இடப்பக்கம் மக்கள்திரள். பேச்சுக்குரல்கள் அருவி ஒலிபோல. வண்ணங்கள் காலை ஒளியில் கொப்பளித்துக் கொண்டிருந்தன.

”இந்தாலே நாயே”என்று சாமி எனக்கு சிலும்பியை நீட்டியது.

”வேண்டாம்”என்றேன்.

”பிடிலே நாயே”என்றார்.

கங்குபோல சிவந்த கண்கள். இரு சிதைகள் எரியும் புதர்மண்டிய மலைபோல முகம். வாங்கிக் கொண்டேன். ஒருகணம் தயங்கினேன். பின்னர் வாயில் வைத்து இழுத்தேன். தேங்காய்நார்புகை தொண்டையில் மார்பில் கமறியது இருமிக் குமுறியபடி திரும்ப நீட்டினேன்.

”இந்தாலே” என்று சாமி மீண்டும் நீட்டினார்.

எனக்கு ஒன்றும் ஆகவில்லை. என் மனதில் எண்ணங்கள் சீராகவே இருந்தன. நான் மீண்டும் அதை வாங்கி ஆழ இழுத்தேன். இப்போது அந்தக் கமறல் குறைந்திருந்தது. சீடன் ”ஹிஹிஹி”என்று சிரித்து என்னை பார்த்தான். வாய் கோணலாக இருந்தது. சாமியார் மீண்டும் எனக்கு சிலும்பியை நீட்டினார்.

நான் பெருமூச்சுடன் கங்கையைப் பார்த்தேன். பல்லாயிரம் வருடங்கள், பலகோடி நீத்தார் நினைவுகள். ஓடி ஓடிச் சென்றடையும் முடிவிலியாகிய கடல். அது நீத்தார் நினைவுகள் அலைபுரளும் பெருவெளி. நினைக்க வாழ்பவர் எல்லாமே நீத்தார் ஆகப்போகிறார்கள். இன்று இதோ கரையில் நடக்கும் இவர்கள் அனைவரையும் நாளை வேறு எவரோ இங்கே கொண்டுவந்து கரைக்கப்போகிறார்கள்.

சிதையில் இருந்து சற்றே சாம்பலை எடுத்து சொந்தக்காரர்களிடம் தந்துவிட்டு அதே கனலில் அடுத்த பிணத்தைத் தூக்கி வைத்தார்கள். மஞ்சள் சரிகைப் போர்வையில் இருந்து ஒரு கைமட்டும் வெளியே நிராதரவாக நீட்டி நின்றது. இரண்டு பிணங்கள் சிதைகாத்து வண்டல் தரையில் கிடந்தன. சிதைச்சாம்பல் சுமந்த இரு படகுகள் ஆடின. அப்பால் மனிதர்கள். செத்த பிணத்தருகே இனி சாம்பிணங்கள். தலையைப் பின்னாலிருந்து ஒரு காற்று தள்ளியது. உட்கார்ந்த இடம் பள்ளமாக ஆகி நான் இறங்கிக் கொண்டே இருந்தேன். ”பிடிலே நாயே”என்று சாமி வெகுதூரத்தில் சொன்னார்.

நான் சிலும்பியைத் திருப்பிக் கொடுக்கும்போது கவனித்தேன்; கங்கைக் கரைப் படித்துறைகள், அப்பால் தெரிந்த ஓங்கிய ராஜபுதனபாணிக் கோட்டைச்சுவர்கள், அதன்மீதெழுந்த இடிந்த கட்டிடங்கள் அனைத்தும் நெளிந்துகொண்டிருந்தன. கங்கைவலப்பக்கம் இருந்து இடப்பக்கம் மாறிவிட்டதா? அல்லது நதிநீர் எழுந்து காசியையே மூடிவிட்டதா? நதியாழத்தில் இருந்துதான் பார்த்துக்கொண்டிருக்கிறேனா?

திரும்பி இடப்பக்கம் பார்த்தேன். என் முதுகெலும்பில் சிலிர்த்தது. கங்கை ஓடிக்கொண்டிருக்க அதன் மீது நிழல்கள் நெளிவற்று, அசைவற்று, கண்ணாடியில் வரையப்பட்ட ஓவியம்போல நிலைத்து நின்றிருந்தன. ஒருகணம் – அல்லது அது பல மணி நேரமாகவும் இருக்கலாம்- அதைப்பார்த்து இருந்துவிட்டு நான் சிரிக்க ஆரம்பித்தேன். ‘என்ன இது பைத்தியம் போல ஒரு சிரிப்பு’ என்று எண்ணியபடியே மேலும் சிரித்தேன்.

அந்தக் காட்சியின் வசீகரத்தை எத்தனையோ முறை மீண்டும் கனவில் மீட்டியிருக்கிறேன். சொல்லப்போனால் இருபத்தைந்து வருடங்களாக அந்தக்காட்சியையே நாவல்களாக எழுதித்தள்ளிக் கொண்டிருக்கிறேன்.

Feb 11, 2014

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 29, 2025 11:35

ஓஷோ: மரபும் மீறலும் 3

(2021 மார்ச் 12,13,14 தேதிகளில் கோவையில் கிக்கானி அரங்கில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். எழுத்தில் பதிவுசெய்தவர் விவேக் ராஜ் )

ஓஷோவின் கொடை

ஓஷோ பற்றிய இந்த உரை ஓஷோ சொன்னவை என்னென்ன என்று சொல்வது அல்ல என்று சொன்னேன். ஓஷோவை புரிந்துகொள்வதும் மதிப்பிடுவதும்தான். எனில் ஓஷோவின் பங்களிப்புதான் என்ன?

1. மரபை நோக்கிய விமர்சன பார்வை.

ஓஷோ பற்றிய அறிமுகம் இல்லாத ஒருவருடைய, வாழ்நாளில் ஓஷோவின் ஒரு புத்தகத்தைக்கூட படிக்காத ஒருவருடைய, சிந்தனையில் என்னென்ன பிரச்சனைகள் இருக்குமோ அவற்றை இல்லாமல் செய்ததுதான் ஓஷோவின் கொடை எனலாம். ஒருபோதும் ஓஷோவை வாசிக்காத ஒருவருடைய முதல் பிழை என்பது சிந்திக்கவேண்டியது, அடையவேண்டியது அனைத்துமே ஏற்கெனவே மரபில் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டிருப்பதுதான். முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்பதில் தொடங்கி; அன்றைக்கே நம் ஆட்கள் யோசித்து வைத்திருக்கிறார்கள், அறிவியல் எல்லாம் மதத்திலேயே உள்ளது, வேதங்களில் ராக்கெட் உள்ளது, திருக்குறளில் கொரோனாவுக்கு மருந்து உள்ளது என்பதாக அந்த எண்ணம் உச்சம் நோக்கிச்செல்லும்.

சாமானியர் இங்கே எல்லாமே சிந்திக்கப்பட்டுவிட்டது, இனி நானோ எனக்கு பின்னால் வரக்கூடியவர்களோ யோசிப்பதற்கு எதுவுமில்லை, எல்லாமே கடந்த காலத்தில் உள்ளது என்று எண்ணுவார்கள். இந்த மனப்பான்மையில் ஒருவர் எந்த அளவுக்கு தீவிரமாக இருக்கிறாரோ அந்த அளவுக்கு பின்னோக்கி செல்வார். ஏனெனில் அவருடைய கால்கள் கடந்த காலத்தை நோக்கி திரும்பி இருக்கின்றன. வேதப்பழமை நோக்கிச் செல்பவர்களை எள்ளி நகையாடி விமர்சிப்பவர்கள் இன்னொரு பழமைக்குச் செல்கிறார்கள்.வெதகாலத்தையும் தாண்டி பழங்குடி காலத்திற்கே சென்று உட்காரக்கூடியவர்கள் நம்மைச்சுற்றி இருக்கிறார்கள். ஓஷோவின் அறிமுகம் இல்லாதவருடைய சிந்தனையின் மிகப்பெரிய கோளாறாக இருப்பது இதுதான், ஞானம் அவ்வளவும் மரபில் உள்ளது, அதை மீட்டெடுக்க வேண்டியதும் அதற்கு மறுவிளக்கம் அளிக்கவேண்டியதும்தான் நாம் செய்யவேண்டியது என்ற மனப்பான்மை.

இன்று இவ்வளவு அறிவியல் கல்வி, பத்திரிக்கைகள், வாசிப்புகள் வந்தபிறகு அத்தகைய மனப்பான்மை குறைந்திருக்கும் என்று நான் கருதியிருந்தேன். ஆனால் சமூக வலைதளங்கள் வந்தபின் பார்க்கும்போது அதிர்ச்சியளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், தொண்ணூறு சதவீதம் பேரும் அத்தகைய பழமைவாதிகளாகத்தான் இருக்கிறார்கள். புதிதாக ஒன்றை சொல்லவேண்டும் என்றால் அதற்கு ஒரு பழைய நூலை எடுத்துவைத்துக்கொண்டு உரையளிக்க வேண்டும். நீங்கள் ஒரு சமுதாயக் கருத்தை சொல்லவேண்டும் என்றால் ‘வள்ளுவர் அழகாக சொல்கிறார்…’ என்று ஆரம்பிக்க வேண்டும். ஏன் வள்ளுவர்தான் சொல்லவேண்டுமா, நீங்கள் சொல்லக்கூடாதா ?

வேதங்களுக்கு உரையளிக்கும்படியாகத்தான் அத்வைத நூல்களை எழுதமுடியும் என்பதாக ஒரு காலகட்டம் இருந்தது. சங்கரரை பற்றி விமர்சிக்கக்கூடியவர்கள் சொல்லும் விஷயம் உண்டு. அவர் கூறும் கருத்துகள் வேதத்திற்கு உவப்பானவை அல்ல, ஆனால் வேதங்களை சுருதியாகச் சொன்னாலொழிய அவருடைய தரப்பு நிறுவப்படாது என்பதால் வேண்டுமென்றே வேதத்தை மூலநூலாக, சுருதியாக அவர் சொல்கிறார் என்பதே. இல்லையெனில் அவருடைய தரப்பை இந்தியச் சமூகம் ஏற்றுக்கொள்ளாது என்கிறார்கள். இன்றும் அந்த மனநிலை நிலவுகிறது.

நீங்கள் ஏதோவொரு மூலநூலை சொல்லவேண்டும், ஏற்கெனவே முன்னோர்கள் சொல்லிவிட்டனர் என்று சொல்லவேண்டும். ஒரு முன்னோர் சொன்னதை மறுக்கவேண்டும் என்றால் இன்னொரு முன்னோர் சொன்னதை சொல்லவேண்டும். கீதையை மறுக்க திருக்குறளைச் சொல்லவேண்டும்.  இதுதான் இந்திய சிந்தனையில் இருக்கும் மிகப்பெரிய தேக்கநிலை. இந்திய சிந்தனை முறையை இப்போது பார்க்கும்போது பெரும்பாலும் அது வள்ளுவர் கோட்டத்துத் தேர் போலத்தான் இருக்கிறது. சக்கரமெல்லாம் உண்டு, ஆனால் அசையாது. காலாகாலத்திற்கு அது அங்கு இருக்கும். இவ்வகையான ஆட்கள்தான் ஓஷோவின் எதிர்தரப்பாக இருப்பவர்கள். அவர்கள் ஓஷோவின் செல்வாக்கு இல்லாதவர்கள். அதுபோன்ற சாமானியர் நிரம்பியுள்ள நம் சூழலில் மரபை நோக்கிய ஒரு நவீனப்பார்வையை, விமர்சன பார்வையை உருவாக்கி அளிக்கிறார் என்பது ஓஷோவின் மிக முக்கியமான முதற்கொடை.

2. சிந்தனையை ஒழுக்கத்திலிருந்து பிரித்தல்.

பொதுவாக தத்துவ சிந்தனை, மெய்ஞானம் போன்றவை ஒழுக்கத்துடன் பின்னிப்பிணைந்தவை என்கிற மாயை இங்கு உண்டு. சுந்தர ராமசாமி ஒரு நகைச்சுவை சொன்னார். மேரி கியூரிக்கு நோபல்பரிசு அறிவிக்கப்பட்டபோது சுந்தர ராமசாமியின் தாய்மாமா ஒருவர் சொன்னாராம், ‘என்ன நோபல்பரிசு வாங்கினால் என்ன, அறுத்துக் கட்டுன பொண்ணுதானே’ என்று. அவர் விதவையாகி மறுபடியும் திருமணம் செய்துகொண்டவள்தானே, அவளுக்கு நோபல்பரிசு கிடைத்தால் என்ன இல்லாவிட்டால் என்ன, ஒழுக்கம்தான் முக்கியம், பத்தினியாய் இருப்பதுதான் முக்கியம் என்பதுதான் அவர் கருத்து. இதை கேட்கும்போது தமாஷாக இருக்கலாம். ஆனால் இந்த மனநிலை இன்றுவரை உள்ளது. ஒரு சிந்தனையாளனை பற்றி ஒரு சிறிய ஒழுக்க அவதூறை கிளப்பினால் போதும், அவருடைய அத்தனை பக்தர்களும் மனமுடைந்து போவார்கள். அதுவரை அவரை புகழ்ந்துகொண்டிருந்த அத்தனைபேரும் பாய்ந்து வந்து அவரை கடித்துக் குதற ஆரம்பிப்பார்கள். அது வரை அவர்மேல் ஆர்வம் காட்டாத கும்பல் திரண்டு வந்து நாக்குச் சொட்ட வம்பு பேசும். உண்மையில் ஒரு சிந்தனையாளனை கவிழ்க்க வேண்டுமென்றால் அவனது சிந்தனையை எதிர்கொள்ள வேண்டியதில்லை, அவன் மீது ஒழுக்க அவதூறுகளை கிளப்பினால் போதும்.

ஆசாரம், ஒழுக்கம் போன்றவைகளை சிந்தனைக்கு சமானமானதாக, சிந்தனையைவிட ஒருபடி மேலானதாக, சிந்தனைக்கான நிபந்தனையாக இந்திய மனம் எண்ணிக்கொண்டிருக்கிறது. நீங்கள் மதிப்புக்குரிய ஒருவராக நினைக்கக்கூடிய ஒருவர் நீங்கள் நினைக்கும் அதே ஒழுக்கத்தை கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள். அப்படி இல்லை என்றால் வசைபாடுவீர்கள். ஆனால் இந்திய மனங்களுக்கு ஓஷோ கற்பித்த ஒன்று, அல்லது கற்பிக்க முயன்று தோற்ற ஒன்று, ஒழுக்கம் வேறு சிந்தனை வேறு என்பதுதான்.

ஒழுக்கம் சிந்தனையோடு பிணைக்கப்பட்டிருப்பதற்கு முக்கிய காரணம்,  அது பள்ளிக்கூடத்தில் சொல்லிக்கொடுக்கப்படும் இருப்பதால்தான். சிந்தனைகளின் தொடக்கம் ஒழுக்கத்துடன் இணைத்தே நமக்கு அறிமுகமாகிறது. ஒழுங்காக இருக்கவேண்டும் என்றுதான் பள்ளிக்கூடத்தில் முதலில் சொல்லிக்கொடுக்கப் படுகிறது. அதோடு இணைந்துதான் மற்ற சிந்தனைகள் சொல்லிக்கொடுக்கப் படுகின்றன. தத்துவத்தின் நோக்கமே ஒரு குழந்தையை ‘ஒழுங்காக’ இருக்க வைப்பதற்குத்தான் என்ற சித்திரம் நம் மனதில் உண்டாகிவிடுகிறது. ஆகவே நம்மையறியாமலேயே ஒழுக்கத்தையும் சிந்தனையையும் ஒன்றாக நினைக்க ஆரம்பித்துவிடுகிறோம். சிந்தனைக்கு ஒழுக்கத்தை நிபந்தனையாக்க ஆரம்பித்து, ஒருகட்டத்தில் சிந்தனை இல்லாவிட்டாலும் பரவாயில்லை ஒழுங்காக இருந்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிடுகிறோம்.

ஒருவர் வாழ்நாள் முழுக்க வெறும் மானுடவிரோதமான ஆசாரவாதம் பேசி, மானுட வெறுப்பை மட்டுமே முன்வைத்து, ஆனால் மிகச்சரியான ஒரு ஒழுக்கசீலராக வாழ்ந்து மறைந்தால் நாம் அவருக்கு அவ்வளவு கௌரவத்தையும் கொடுப்போம், கடவுளுக்கு நிகராக வைப்போம். இது நம் மரபில் வேரூன்றிய ஒன்று. ஏராளமான உதாரணங்களை இங்கே நம்மால் காணமுடியும்.

இங்குதான் ஓஷோ வருகிறார். அவருடைய கொடை என்பது அதுதான். சிலசமயம் அவரை பார்க்கும்போது, ஒரு மாபெரும் கற்பாறையில் தலையை முட்டி உடைத்துக்கொண்டவர் என்ற எண்ணமே ஏற்படுகிறது. ஒழுக்கம் வேறு, சிந்தனை வேறு என்று சொல்லிக்கொண்டே இருந்தார். ‘ஆமாங்க, வேறுதான்’ என்று அவர் முன்னால் சொல்லிவிட்டு வெளியே வந்து ‘அவரு பெரியவருங்க, அப்படி சொல்வார், அதையெல்லாம் நாம் அப்படியே எடுத்துக்க முடியுங்களா?’ என்று நாம் இந்தப்பக்கம் வந்துவிடுவோம்.

இவ்வாறுதான் நாம் ஓஷோவை எதிர்கொள்கிறோம். ஓஷோவை தனது சிந்தனையில் சந்திக்காத ஒருவர் இத்தகைய பிழைப்புரிதலில் இருந்து வெளிவரமுடியாது.

3. தத்துவம், மெய்ஞானம், இலக்கியம் மூன்றையும் உள்ளடக்கிய அணுகுமுறை

ஓஷோவை அறியாதவர்களிடம் மூன்றாவதாக உள்ள பிழைபுரிதல் என்பது, தத்துவம், ஆன்மிகம், இலக்கியம் இம்மூன்றையும் வேறுவேறாக நினைப்பது. உண்மையில் அது இந்திய மரபில் இல்லை. கபீரை நீங்கள் கவிஞர் என்று சொல்வீர்களா ? தத்துவவாதி என்று சொல்வீர்களா ? அல்லது மெய்ஞானி என்று சொல்வீர்களா ? வள்ளலாரை எப்படி சொல்வீர்கள் ? அம்மூன்றும் ஒன்றுதான். ஆனால் நவீன சிந்தனைத்துறையில் அம்மூன்றையும் வெவ்வேறாக பார்க்கும் பார்வை நமக்கு உள்ளது. கடந்த முப்பதாண்டுகளில் இந்தியாவில் மெய்ஞானம் பேசியவர்களில் எத்தனைபேர் நவீன இலக்கியத்தை மேற்கோள் காட்டியிருக்கிறார்கள் ? எனக்குத் தெரிந்து யாருமே கிடையாது. நேர்மாறாக, ஜே.கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் கவிதை, இலக்கியம் போன்றவை தத்துவத்திற்கும் மெய்ஞானத்திற்கும் எதிரானவை, மனமயக்கத்தை கொடுத்து களிப்பை மட்டும் அளிப்பவை என்று சொல்லியிருக்கின்றனர். அம்மூன்றையும் அவர் பிரிக்கிறார். ஓஷோ ஒருவர்தான் நவீனகாலகட்டத்தி அம்மூன்றும் சந்திக்கக்கூடிய புள்ளியில் நின்று பேசிய ஒரே மாபெரும்  ஆன்மிக ஆளுமை. அத்தகைய கொடை சாதாரணமானதல்ல.

ஓஷோ ஒருபுறம் புத்தர் பற்றியும் கிருஷ்ணன் பற்றியும் பேசுகிறார். மறுபுறம் சாக்ரடீஸ் பற்றி பேசுகிறார். அதே தீவிரத்தோடு நிகாஸ் கசந்த்சாகீஸின் சோர்பா எனும் கிரேக்கன் (Zorba the Greek, Nikos Kazantzakis) பற்றியும் தஸ்தாயெவ்ஸ்கி பற்றியும் பேசுகிறார். இம்மூன்றையும் அவர் ஓரிடத்தில் இணைக்கிறார். நான் ஓஷோயிஸ்டுகளிடம் கேட்பேன், ‘உங்கள் ஆள் தஸ்தாயெவ்ஸ்கி பற்றி அவ்வளவு சொல்கிறாரே, நீங்கள் ஏதாவது படித்துப் பார்த்தீர்களா ?’ என்று. ‘இல்லிங்க, அது இலக்கியம். அதெல்லாம் படிக்கிறதிலிங்க. நம்ம பாதை ஞானம் மட்டும்தான். அவர் சொன்னதிலேயே குர்ஜீஃப் மட்டும்தான் படிப்பேன்’ என்பார்கள்.

ஓஷோ குர்ஜீஃப் (George Gurdjieff) பற்றி பேசும் அதே முக்கியத்துவத்தோடு  கசந்த்சாகீஸ் Nikos Kazantzakis) பற்றியும் ஜெ.டி.சாலிங்கர் (J.D.Salinger) பற்றியும் சொல்கிறார். அவர் ஏன் தத்துவத்தையும் ஆன்மீகத்தையும் இலக்கியத்தையும் ஒரே இடத்தில் வைத்துப்பேசுகிறார் என்பதை நீங்கள் யோசித்து பார்த்திருக்கிறீர்களா? இந்திய சிந்தனையில் அவருடைய கொடை என்பது இந்த இணைப்பை அவர் நிறுவ முயன்றதுதான் என நான் நினைக்கிறேன்.  அதனால்தான் இங்கு நவீன இலக்கியவாதிகளுக்கு நெருக்கமானவராக ஓஷோ இருக்கிறார். அவர்களுக்கு அவரிடம் பேசுவதற்கு ஓர் இடம் உள்ளது.

ஓஷோ ஏன் இலக்கியத்தை தத்துவத்திற்கு நிகராக எடுத்துச் சொல்கிறார் என்பது முக்கியமான கேள்வி. மெய்ஞானத்தை உணர்ந்த ஞானிகள் தத்துவத்தை கையிலெடுப்பார்கள். ஏனெனில் அவர்கள் உணர்ந்த மெய்ஞானத்தை பிறருக்கு அவர்கள் தத்துவத்தை கொண்டுதான் விளக்கமுடியும். ஆகவேதான் இலக்கியம் தேவையில்லை என்று சொன்ன ஜே.கிருஷ்ணமூர்த்தி தத்துவம் தேவையில்லை என்று சொல்லவில்லை. ஜே.கே தத்துவத்தை மறுக்கிறார், ஆனால் தத்துவ மொழியில்தான் பேசுகிறார். அவ்வளவு உரைகளையும் அவர் தத்துவமாகத்தான் முன்வைக்கிறார், தத்துவ ஞானியாகத்தான் அறியப்படுகிறார். ஏனெனில் மெய்ஞானம் அறிந்தவர் வாய்திறந்தால் தத்துவமாகத்தான் பேசமுடியும்.

ஒரு ஞானிக்கு அவருடைய ஞானத்தின் உலகியல் பொருத்தப்பாடு மீதும் ,அது வெளிப்படும் மரபான தத்துவத்தின் மீதும் ஆழ்ந்த ஐயம் இருக்குமென்றால் மட்டும்தான் அவர் இலக்கியத்துக்குள் வருவார். இலக்கியத்தில் கவிழ்ப்பாக்கம் (Subversion) என்ற ஒன்று உண்டு. மரபாந தத்துவத்தையோ மெய்ஞானத்தையோ படிப்பவர்கள் ஒருவித வசதியான, பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார்கள். அவை அவர்களை நிலைகுலையவோ ,பதற்றமுறவோ ,அமைதியிழக்கவோ செய்வதில்லை. ஆகவேதான் மரபுவழி தத்துவமும்,  ஆன்மீகமும் பேசப்படும் இடத்தில் நீரிழிவும் இரத்த அழுத்தமும் கொண்ட அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் வந்து உட்கார்கிறாகள். ஏனெனில் அதற்குமேல் அவர்களால் ஓர் அதிர்ச்சியை தாங்க முடியாது. ஆகவே மென்மையாகவும், போகிற வழிக்கு புண்ணியம் தேடித்தருவதாகவும் ஒன்றை சொல்லும்படி தத்துவப்பேச்சாளரிடம் கேட்கிறார்கள். அது கிடைக்கிறது. சொகுசாக, சௌகரியமாக, இதமாக, நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது. இருக்குமிடத்தில் இருந்து முன்னகர்த்தாததாக இருக்கிறது.

ஆனால் இலக்கியம் அப்படி அல்ல. இலக்கியத்தில் ஒரு ‘கவிழ்ப்பு’ இருக்கிறது. நீங்கள் எதை நம்பிக்கொண்டிருக்கிறீர்களோ அது உண்மையில்லை என்று இலக்கியம் சொல்லும். நீங்கள் ஆழ்ந்து நம்பும் ஒரு விஷயத்தின்மீது அது உண்மைதானா என்ற ஐயத்தை உண்டாக்கும். இலக்கியம் படைப்பூக்கம் கொண்ட அமைதியின்மையை (Creative restlessness) உண்டாக்கும். ஆகவேதான் பொதுவாக வழக்கமான ஆன்மீக ஆர்வம் கொண்டவர்கள் பெரும்பாலும் இலக்கியம் படிப்பதில்லை. தியானம், யோகம் போன்றவற்றை பயிலும் நவீன ஆன்மீக சாதகர்கள் நவீன இலக்கிய தேவையில்லை என்கிறார்கள். அது ஒருமாதிரி மன அமைதியின்மையை அளிக்கிறது என்பார்கள். காமகுரோதமோகங்களை தூண்டுகிறது என்கிறார்கள். அவர்களுக்கு அத்தகைய மனஅமைதி எதிலிருந்து வருகிறது என்றால், அமைதியிழக்க செய்யக்கூடிய அடிப்படை கேள்விகளை அவர்கள் எதிர்கொள்ளாமல் இருப்பதில் இருந்தே. அக்கேள்விகளை இலக்கியம் கொண்டுவந்து எதிரே நிறுத்துகிறது. அவர்கள் அஞ்சும் அத்தகைய அமைதியின்மையை இலக்கியம் உண்டாக்குகிறது.

எனவே சங்கடமான கேள்விகளை கேட்கக்கூடிய ஒரு மாணவனை வெளியே அனுப்பிவிட்டு வகுப்பெடுக்கக்கூடிய ஒரு ஆசிரியர் போலவே மரபார்ந்த ஆன்மிக- தத்துவ ஞானிகள் இருக்கின்றனர். ஓர் இலக்கியவாதி அமர்ந்திருக்கும் அரங்கில் ஒரு வழக்கமான தத்துவவாதி பேசினாரென்றால், அந்த தத்துவவாதி உருவாக்கும் மொத்த ஒருங்கிணைவையும் தகர்க்கக்கூடிய ஒரு கேள்வியை கேட்கக்கூடிய இயல்பு அந்த இலக்கியவாதிக்கு இருக்கும். அதனால்தான் நீங்கள் தஸ்தாயெவ்ஸ்கியையோ, செக்காவையோ உள்ளே வைத்துக்கொண்டு தத்துவம் பேசமுடியாது. அவர்களை வெளியே அனுப்பிவிட்டு தத்துவம் பேசுவதே வசதியானது. அனைத்து மரபான இந்திய தத்துவ ஞானிகளும் நவீன இலக்கியத்தை வெளியே அனுப்பிவிட்டு தத்துவத்தை பேசிக்கொண்டிருந்தனர். இலக்கியவாதிகளிடம் ‘வந்து வகுப்பிலே உட்கார். உன்னையும் வைத்துக்கொண்டு தத்துவம் பேசமுடியுமா பார்க்கிறேன்’ என்று முயன்றவர் ஓஷோ. இது அவருடைய முக்கியமான கொடை.

ஆனால் என்ன துரதிருஷ்டம் என்றால், ஓஷோவை தொடர்ந்து வந்த அவருடைய மாணவர்கள் எவருமே இலக்கியத்தை அவ்வாறு உள்ளே விடவில்லை என்பதுதான். ஓஷோவின் மாணவ மரபில் இருந்து தஸ்தாயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ பற்றியோ , கசன்சகீஇஸின் ‘சோர்பா எனும் கிரேக்கன்’ பற்றியோ ஒரு நல்ல விமர்சன கட்டுரை எழுதப்பட்டது கிடையாது. தமிழில் ஓஷோ எவ்வளவு புகழ்பெற்றவர்! ஆனால் ஓஷோ சொன்ன எந்த நூலும் அவ்வாறு புகழ்பெறவில்லை அல்லவா? அவரது மாணவர்கள் மீண்டும் ஓஷோவை ஒரு மரபுவழி ஞானியாக ஆக்குகிறார்கள். அந்த ஞானியின் சபையில் இருக்கத் தேவையில்லை என்று தஸ்தாயெவ்ஸ்கியையும் செக்காவையும் வெளியே அனுப்பிவிடுகிறார்கள். ஓஷோவை வெறும் உதிரிவரிகளாக அறிந்திருப்பவர்கள் பற்றி நான் பேசவில்லை. ஓஷோவை விமர்சனம் செய்தாலே வந்து வசைபாடக்கூடிய எளிய உள்ளங்களை நான் ஓஷோவுடன் இணைத்துப்பார்க்கவே விரும்பவில்லை. நான் ஓஷோவை ஆழ்ந்து கற்றறிந்தவர்களையே சொல்கிறேன். அவர்களே அப்படித்தான் இருக்கிறார்கள் என்கிறேன்.

ஓஷோவின் அந்தக் கொடை ஒரு சாதாரண விஷயமல்ல. இந்தியாவின் நீண்ட மரபில் தத்துவமும் ஆன்மீகமும் இலக்கியமும் இணைந்திருந்த காலம் உண்டு.  அந்த சரடு அறுபட்டது. அற்புதமான பக்தி இலக்கிய காலகட்டத்துக்கு பிறகு அந்த இணைவு ஓஷோவிடம்தான் நடக்கிறது. நான் பக்தி இலக்கியம் என்று சொல்லும்போது அதையும் மரபான மெய்ஞானம் என்றே இங்கே பலர் எண்ணுவீர்கள். ஆனால் நம்மாழ்வார் என்ற கவிஞரைத்தான் நாம் ஆன்மீகத்தின் உச்சமென வைத்திருக்கிறோம் இல்லையா?.சமீபத்தில் தென்தமிழகத்தின் கோயில்களுக்கு ராய் மாக்ஸம் (Roy Moxham) என்ற ஆங்கிலேய அறிஞரை அழைத்துச்சென்றோம். அங்குள்ள சிலைகளை பார்த்து அவர்கள் யார் யார் என்று கேட்டுக்கொண்டிருந்தார். அச்சிலைகளை ஆண்டாள் என்றும் நம்மாழ்வார் என்றும் அறிமுகப்படுத்திச் சொன்னேன். ‘அவர்கள் யார்?’ என்று கேட்டார். ‘கவிஞர்கள்’ என்றேன். ‘இவ்வளவு கவிஞர்களை கோவில் கர்பகிருகத்தில் உட்காரவைத்திருக்கும் பண்பாடு வேறு எங்கும் இல்லை’ என்றார்.

ஆம், கர்ப்பகிருகத்தில் கவிஞர்கள் அமர்ந்திருக்கும் பண்பாடுதான் நமக்கிருந்தது.ஆனால் இன்று தத்துவ விவாதத்தில் கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் வெளியே அனுப்பக்கூடிய ஒரு காலகட்டம் உருவாகி வந்துள்ளது. ஓஷோ அதற்கு விதிவிலக்கு. ஆகவேதான் இம்மூன்றையும் ஓஷோவின் கொடை என்றேன். ஓஷோ அல்லாதவர்களிடம் இந்த இடைவெளியும் அவர்களுடைய சிந்தனையில் ஒரு அகழியும் இருந்துகொண்டே இருக்கிறது. அதைத்தாண்டி அவர்களால் வரமுடிவதில்லை.

இந்த உரையில் இதுவரையில் என்ன சொல்லவேண்டும் என்ற தொகுப்பைத்தான் கொடுத்திருக்கிறேன். எப்படி உரையை தொடங்கவிருக்கிறேன் என்பதைத்தான் இதுவரை சொல்லியிருக்கிறேன். பலர் இங்கு புன்னகைப்பது தெரிகிறது. பொதுவாக எனது நாவல்களில் முதல் அத்தியாயத்தை பெரும்பாலானவர்கள் படிக்க முடியாதபடிக்கு எழுதுவது என் வழக்கம். அதை படித்தபின்பு அடுத்த அத்தியாயத்தை படிக்கக்கூடியவர்கள் மட்டும் படித்தால் போதும் என்பதால்தான். நந்தியை வாசலுக்கு நேராக அமரவைப்பதை ஒரு கலைக்கொள்கையாகவே நான் கொண்டிருக்கிறேன்.  இத்தகைய அறிமுகத்துக்கு பிறகுதான் நான் ஓஷோவுக்கு செல்ல விரும்புகிறேன்.

(மேலும்)

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 29, 2025 11:34

அடையார் சிலம்பரசன்

தமிழிசை முன்னோடிகளில் ஒருவர்பெரியசாமித் தூரன்.அவர் நினைவாக வழங்கப்பட்டுவரும் தமிழ்விக்கி-தூரன் விருது இந்த ஆண்டு வெ.வேதாசலம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. விழா வரும் ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நிகழ்கிறது. அவ்விழாவில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கே உரிய இசைமரபான நாதஸ்வரத்தில் இளைய தலைமுறையில் முதன்மைக் கலைஞர்களை அடையாளம் காட்டி வருகிறோம். இந்த ஆண்டு அந்த இசைக்குழுவில் தவில் இசைக்கலைஞரான அடையாறு சிலம்பரசன் கலந்துகொள்கிறார்

அடையார் சிலம்பரசன் அடையார் சிலம்பரசன் அடையார் சிலம்பரசன் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 29, 2025 11:33

அடையாறு சிலம்பரசன்

தமிழிசை முன்னோடிகளில் ஒருவர்பெரியசாமித் தூரன்.அவர் நினைவாக வழங்கப்பட்டுவரும் தமிழ்விக்கி-தூரன் விருது இந்த ஆண்டு வெ.வேதாசலம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. விழா வரும் ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நிகழ்கிறது. அவ்விழாவில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கே உரிய இசைமரபான நாதஸ்வரத்தில் இளைய தலைமுறையில் முதன்மைக் கலைஞர்களை அடையாளம் காட்டி வருகிறோம். இந்த ஆண்டு அந்த இசைக்குழுவில் தவில் இசைக்கலைஞரான அடையாறு சிலம்பரசன் கலந்துகொள்கிறார்

அடையாறு சிலம்பரசன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 29, 2025 11:33

வேதாசலம், கடிதங்கள்

தமிழ்விக்கி- தூரன் விருது: வெ.வேதாசலம் வேதாசலத்துக்கு விருது- கடிதம் வேதாசலம், மின்னஞ்சல் எதற்காக? நம் வரலாற்றாசிரியர்கள் ஏன் மறைக்கப்பட்டிருக்கிறார்கள்? வேதாசலம்,வாழ்த்துக்கள்- ஒரு கேள்வி.

அன்புடையீர்

வணக்கம். நலம்தானே?நேற்று இரவு அந்திமழை இணையதளத்தில் வெளிவந்த உங்களுடைய நீண்ட விரிவான நேர்காணலைப் படித்தேன். வரலாற்றில் பொற்காலம் இருண்டகாலம் என்பது கிடையாது! -தொல்லியல் ஆய்வாளர் வெ.வேதாசலம் ) பதினொரு பிள்ளைகள் கொண்ட பெரிய குடும்பத்தில் பிறந்து, பெற்றோரின் தளரா முயற்சியாலும் ஆர்வத்தாலும் கல்வி கற்று உயர்ந்த உங்கள் இளமைப்பருவச் செய்திகளை இந்த நேர்காணல் இல்லாவிட்டால் எங்களைப் போன்றவர்கள் தெரிந்துகொள்ள வழி இருக்காது. வேலையோடு வீட்டுக்குப் போ என்னும் ஆசிரியர் சொல் இறைவன் காட்டிய வழி என்றே தோன்றுகிறது. அதன் பிறகு இன்று வரையிலான உங்கள் ஆய்வுப் பயணங்கள்  பெரிய வரலாற்றுச் செய்தியைப் போல உள்ளது. சிற்றூர்களில் ஓர் ஆய்வாளருக்கு ஏற்படக்கூடிய சிரங்களை போகிற போக்கில் ஒரு புன்னகையோடு சொல்லிவிட்டு கடந்துவிட்டீர்கள். எதிர்காலத்தில் சில நல்ல உள்ளங்களால் உங்கள் நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும் என்றே நான் நம்புகிறேன்.வாழ்த்துகள்அன்புடன்பாவண்ணன்**Dear Thiru.Vedachalam. congrats on the Thooran award conferred on you. I am happy to hear that. All the best. Baskaran


S.Theodore Baskaran**

Dear Sir

Heartiest congratulations on receiving the Thooran award.I have started to read your contributions in Jeyamohan’s site and it is really inspiring.As always the recognitions to anything in a higher plane comes late but with this award I hope more people start getting inspired by you and start understanding the contributions you have made to history.of Tamil Nadu/RegardsRamesh**அன்புடையீர்வணக்கம்தமிழ்விக்கி- தூரன் விருது பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்தங்கள் பணி மேன் மேலும் சிறக்க அந்த எல்லாம் வல்ல இறைவனின் அருள் உங்களுடன் உடன் இருப்பதாகஅன்புடன்அ மு தௌபீக்**அன்புள்ள சார் அவர்களுக்கு தூரன் விருதுக்காக உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். போனவருடம் தூரன்விழாவில் நானும் கலந்து கொண்டிருந்தேன். உங்கள் அமர்விலும் இருந்திருக்கிறேன். உங்கள் பணிகளைப்பற்றித்தெரிந்து வியந்திருக்கிறேன். மறுபடியும் என் வாழ்த்துக்களைச் சொல்லிக்கொள்கிறேன்.

With Regards,

 T.Daisy,Trichy.  ** 

அன்புள்ள திரு. வெ. வேதாசலம் அவர்களுக்கு,

2025 ஆம் ஆண்டுக்கான தமிழ்விக்கி-தூரன் விருது உங்களுக்கு வழங்கப்படவிருப்பது அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். ஜெயமோகன் அவர்களின் எழுத்துக்களை வாசிக்கும் ஒரு வாசகனாக, உங்கள் ஆய்வுகளின் முக்கியத்துவத்தையும், தமிழ் வரலாறு மற்றும் பண்பாட்டுக் களத்தில் நீங்கள் ஆற்றிவரும் முப்பதாண்டு காலப் பங்களிப்பையும் அவரது எழுத்துக்கள் மூலம் அறிந்து கொண்டேன்.

தமிழின் முதன்மையான ஆய்வாளர்களில் ஒருவரான உங்களுக்கு இந்த விருது வழங்கப்படுவது தமிழுக்கும், தமிழ் ஆய்வுலகிற்கும் கிடைத்த பெருமை. உங்கள் அரிய பணிகளுக்காக எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

நன்றி

சாரதி

**

வணக்கம்.

தமிழ் விக்கி – தூரன் விருது 2025 தங்களுக்குக் கிடைத்திருப்பது குறித்து மிக்க மகிழ்வெய்துகின்றேன்.  சென்ற ஆண்டே நான் மனதில் நினைத்த ஒன்று இப்பொழுது நிகழ்ந்திருக்கிறது.  வாழ்த்துக்கள்.  நிகழ்வில் நேரில் கலந்துக்கொள்கிறேன்.நன்றிபேரன்புடன்முனைவர் மோ.கோ. கோவைமணி**

வணக்கம் சார். என் பெயர் வெங்கட பிரசாத். பிறந்து வளர்ந்த ஊர் சென்னை. தற்போது பணி நிமித்தமாக அமெரிக்காவில் இருக்கிறேன்.

தமிழ் விக்கி தூரன் விருது பெறும் உங்களுக்கு என் வாழ்த்துகள். அறிவியக்க பணியில் தொடர்ந்து ஈடுபடுத்தி  கொண்டு, அடுத்து வரும் தலைமுறைக்கு நீங்கள் கை அளித்து வரும் செல்வம் உண்மையில் பெரும் மதிப்புடையது.

அங்கீகாரம், கவனம் என்ற எந்த வெளி ஊக்கத்தையும் நோக்காமல், மன நிறைவு மட்டுமே போதும் அதே என் முன்னே செலுத்தும் விசை என வாழும் நீங்கள் – யாரும் காணாத பாலையிலும் நிறைவாக பெய்யும் மழை மேகம் போல.

அந்திமழை இதழில் உங்கள் பேட்டி படித்தேன். இயல்பான ஆனால் தீர்க்கமான பதில்கள். மிகவும் ரசித்தேன்.

வெங்கடப் பிரசாத்

**
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 29, 2025 11:32

A Restaurant That Serves More Than a Free Meal

ஆகஸ்ட் மாதம் என் அறம் கதைகளின் ஆங்கில மொழியாக்கமான Stories Of the True நூலின் சர்வதேசப்பதிப்பு அமெரிக்கப் பதிப்பகமான Farrar, Straus and Giroux ஆல் வெளியிடப்படுகிறது. அதனை ஒட்டி ஒரு முன்னோட்டம் Electric Literature  இலக்கிய இதழில் பிரியம்வதாவின் அறிமுகக் குறிப்புடன் வெளியாகியுள்ளது.

A Restaurant That Serves More Than a Free Meal

நூலை இப்போதே பதிவுசெய்து வாங்கலாம்

Stories Of the True Macmillan

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 29, 2025 11:31

The rain!

Plant sprouts in the field and farmer is watering it; pansy seedlings in the farmer’s garden , agriculture, plant and life concept (soft focus, narrow depth of field)

Every time I talk about Vedanta, I am accused of rejecting the subtle philosophical differences created by the internal contradictions or internal debates of Hinduism by presenting Vedanta as the premier philosophical vision of India. I continue to provide explanations about it.

The rain!

 

இந்து ஞான மரபு, தத்துவங்கள், பகவத் கீதை, உபநிடதங்கள் மற்றும் பல இதர நூல்களை விரிவாக, ஆழமாகக் கற்று உணர்ந்த நீங்கள், கோயில்களின் சூட்சுமங்களைப் பற்றிப் பேசும் நீங்கள், கடவுள் நம்பிக்கை அறவே இல்லாமல் இருப்பது பெரும் ஆச்சரியம் அளிக்கிறது.

கடவுள்நம்பிக்கை உண்டா?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 29, 2025 11:30

July 28, 2025

மொசார்த் -பண்பாட்டின் இசைவு

ஆஸ்திரியாவில் சால்ஸ்பர்க் என்னும் ஊரில் மொசார்த் வாழ்ந்த இல்லம் நினைவகமாக உள்ளது. அங்கே சென்றிருந்தோம். மொசார்த் ஐரோப்பிய இசையின் ஒத்திசைவை உருவாக்கியவர், அதன் வழியாக ஐரோப்பியப் பண்பாடு உருவாக வழியமைத்தவர். சைதன்யாவுடன் மொசார்த் பற்றி ஒரு சிறு உரையாடல்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 28, 2025 11:36

சுந்தர ராமசாமியும் சிங்கப்பூர் சிறுகதைப்போட்டியும்

ஓர் ஒளிர்விண்மீன் சு.ரா- கடிதம்

சு.ரா.நினைவின் நதியில் வாங்க

அன்புள்ள ஜெ,

அண்மையில் இணையத்தில் நிகழ்ந்த ஒரு விவாதம், அதைப்பற்றிய என் சந்தேகம் இது. சிங்கப்பூர் தமிழ்ச்சங்கம் சார்பில் ஒரு சிறுகதைப்போட்டி நிகழ்ந்ததாகவும், அதற்கு சுந்தர ராமசாமி நடுவராக அழைக்கப்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது. தன் பார்வைக்கு வந்த சிறுகதைகளில் எவையுமே அப்போட்டியின் விருதுக்குத் தகுதியானவை அல்ல என்று சுந்தர ராமசாமி தீர்ப்பு சொன்னாராம். ஒரு போட்டி என்றால் அதில் பங்குகொண்டவற்றில் எது முதலில் எது இரண்டாமிடத்தில் என்று சொல்வதுதான் நடுவரின் பணி. போட்டியில் எவருமே முதலிடத்தில் வரவில்லை என்று நடுவர் சொல்லமுடியுமா என்ன? எனக்கும் இந்த சந்தேகம் வந்தது. ஆகவேதான் இதைக் கேட்கிறேன்

அருண்

அன்புள்ள அருண்,

சுந்தர ராமசாமி வாழ்ந்தபோது இதற்கு பதில் சொல்லியிருக்கிறார். இந்நிகழ்வு நடைபெற்று நாற்பதாண்டுகள் கடந்துவிட்டிருக்கின்றன.

முதல்விஷயம், இப்படி ஒரு நிகழ்வை பற்றிய விவாதத்தின்போது சுந்தர ராமசாமி போன்ற ஓர் இலக்கியமுன்னோடி ஏன் அதைச் செய்தார், அதன் விளைவு என்ன என்று மட்டும்தான் இன்று விவாதம் நிகழமுடியும். ஏனென்றால் இன்று அது ஒரு வரலாற்று நிகழ்வு. உலகம் முழுக்க இலக்கிய, கலை, சிந்தனைக்களங்களின்  முன்னோடிகள் பற்றிய விவாதம் அந்த தளத்தில் மட்டுமே நிகழ்கின்றது. அப்படி புகழ்பெற்ற பல விவாதங்கள் உண்டு. அவர் என்ன செய்திருக்கவேண்டும் என்றெல்லாம் பேசுவது அபத்தம். இலக்கியம் பற்றி சுந்தர ராமசாமிக்கு வகுப்பெடுக்கவும், அவர் செயல்மேல் தீர்ப்பெழுதவும் இங்கே எவருக்குத் தகுதி?

இந்தவகையான எந்த பேச்சை எவர் பேசினாலும் பேசுபவர் என்ன எழுதிச் சாதித்துவிட்டார் என்று முதலில் கேட்பவனே இலக்கிய வாசகன். ‘எது உன் அறிவியக்கப் பங்களிப்பு?’ என்ற கேள்விக்கு பின்னரே ஒருவர் நம்மிடம் சொல்லும் எந்தக் கருத்தையும் நாம் செவிகொள்ளவேண்டும். இன்று, சமூக ஊடகச்சூழலில் எதையும் வம்புப்பேச்சாக மாற்றிக்கொண்டிருக்கும் அற்பர்களை இந்த வகையான விவாதங்களில் இருந்து முழுமையாக விலக்கிவிட வேண்டும். அந்த மனநிலையை உருவாக்கிக் கொள்ளாத ஒருவர் தானும் நாளடைவில் அற்பவம்பராக உருமாறிவிடுவார்.

*

இலக்கியம் ஓட்டப்போட்டி அல்ல என்று தெரிந்தவனே இலக்கியம் பற்றிப் பேசும் அடிப்படைத் தகுதி கொண்டவன். ஓட்டப்போட்டியில் முதலில் வந்தது யார் என்பது புறவயமானது. எவரும் முடிவுசெய்ய முடியும் அதை. இலக்கியப்போட்டியில் அது முழுக்க முழுக்க நடுவர்களின் அகவயமான முடிவு. அதை எந்த வகையிலும் புறவயமாக நிரூபிக்க முடியாது. ஆகவேதான் தகுதிவாய்ந்த நடுவர்களை நாடுகிறார்கள். சுந்தர ராமசாமி போன்ற ஒருவர் அதனால்தான் அப்போட்டிக்கு நடுவராகத் தேவைப்பட்டார்.

ஆகவே இந்த விவாதத்தின் முதல் கேள்வியே ஏன் சுந்தர ராமசாமி அழைக்கப்பட்டார் என்பதுதான். எவர்வேண்டுமென்றாலும் செய்யத்தக்க ஒரு ‘முடிவை மதிப்பிடும் பணியைச்’ செய்வதற்காக அவர் அழைக்கப்படவில்லை. சுந்தர ராமசாமி மட்டுமே ஆற்றத்தக்க ஒரு பணிக்காகவே அவர் அழைக்கப்பட்டார். அக்கதைகள் மேல் அவருடைய பார்வை படவேண்டும், அவர் என்ன நினைக்கிறார் என்று தெரியவேண்டும் என்பதற்காகவே அவர் அழைக்கப்பட்டார். அந்தக் கதைகள் பற்றி அவருடைய கருத்து அவருடைய ஆளுமையால்தான் முக்கியத்துவம் அடைகிறது, அதை இன்னொருவர் சொல்லிவிட முடியாது.  இலக்கிய முன்னோடி இப்படி ஒரு பணியை ஒப்புக்கொள்வதே ஒரு நல்வாய்ப்பு, ஓர் அரிய இலக்கிய நிகழ்வு. அவர் நடுவராக இருந்த ஒரே இலக்கியப் போட்டி அது என்பதை நாம் நினைவில்கொள்ளவேண்டும்.

சர்வதேச அளவில் எத்தனையோ இலக்கியப் போட்டிகளில் போட்டிக்கு வந்த எந்தப் படைப்பும் தகுதியானது அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும் பணம் ஊதியம் பெற்றுக்கொண்டு அவ்வாறு அறிவித்த பல நடுவர்கள் உள்ளனர். கூகிள் பார்க்கத் தெரிந்த எவரும் அதை தெரிந்துகொள்ள முடியும். அது மிக இயல்பான ஒரு நடைமுறை. படைப்புகள் தரமில்லை என்றால் அவ்வாறு அறிவிப்பதும் நடுவரின் கடமைதான். நடுவர் புகழ்பெற்ற இலக்கிய ஆளுமை என்றால் அம்முடிவு என்பது அந்தச் சூழல்மேல் முன்வைக்கப்படும் முக்கியமான விமர்சனம், மேலும் முன்னகர்வதற்கான அறைகூவல். எந்த இலக்கியச் சூழலுக்கும் ஓர் இலக்கியப் பேராசானின் விமர்சனம் என்பது ஓர் அருள்தான், அவரை எதிர்க்கவும், முழுமையாகக் கடந்துசெல்லவும்கூட அதுவே தொடக்கம். சிங்கையின் மெய்யான நவீன எழுத்தாளர்கள் அந்த அறைகூவலை அடுத்த கால்நூற்றாண்டில் ஏற்றுக்கொண்டு முன்னெழுந்து வந்தனர் என்பது வரலாறு.

*

முதலில் நாம் அறியவேண்டியது அந்தச் சிறுகதைப்போட்டி ஒரு தனியார் அமைப்பு நடத்தியது அல்ல என்பதே. சிங்கப்பூர் ,மலேசியா போன்ற நாடுகள் மலாய், சீன மொழிகளுக்கு இணையாக தமிழுக்கும் இடமளித்து பெரும் நிதிக்கொடைகளை அளிக்கின்றன. அந்தப் பெருந்தொகை பெரும்பாலும் கருத்தரங்குகளுக்குச் செலவழிக்கப்படுகிறது. தனிப்பட்ட ஆய்வுகளுக்கான நிதிக்கொடைகளாகச் செல்கிறது. அத்துடன் இந்த வகையான போட்டிகளில் பரிசாக வழங்கப்படுகிறது. எப்போதும் இச்செயல்பாடுகள் மெல்ல மெல்ல ஒரு சிறுகுழு, அல்லது அமைப்புகளின் பிடிக்குள் சென்றுவிடும். அதற்கப்பால் இன்னொரு நாட்டின் சூழல்பற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை, தமிழ்ச்சூழலில் எங்கும் நிகழ்வதுதான்.  

அந்தச் செயல்பாடுக்கு சிங்கை அரசு ஏற்கும்படியான் ஒரு ‘அதிகாரபூர்வ’ ஏற்பை உருவாக்கத்தான் தமிழகத்தில் இருந்து எழுத்தாளர்களை அழைத்து நடுவர்களாக ஆக்கிக்கொண்டிருந்தனர். நம் எழுத்தாளர்களும் சிங்கப்பூர் அழைப்பு, கூடவே கொஞ்சம் சன்மானம் என்றதுமே நன்றிப்பெருக்கில் கண்ணீர் மல்கி, அழைப்பவர்களைத் தொழுது, அச்சூழலைப் புகழ்ந்து, அவர்கள் நாடியதைச் செய்துகொண்டும் இருந்தனர். 

சிங்கை, மலேசிய இலக்கியச் சூழல் என்பது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் இருந்து அங்கே சென்ற தமிழ் மறுமலர்ச்சி இயக்கங்களில் இருந்து உருவானது, அது ஓர் ஆக்கபூர்வமான தொடக்கம். சிங்கை, மலேசிய இலக்கிய முன்னோடிகள் அனைவரும் அந்த மறுமலர்ச்சி அலையில் உருவானவர்கள். அவர்களில் சாதனையாளர்கள் உண்டு, ஆனால் அந்த அலை கால்நூற்றாண்டுக்குப் பின் தேக்கம் அடைந்தது. கல்வியாலர்களால் அது கைப்பற்றப்பட்டது.  நவீன இலக்கியம் நோக்கிய முன்னகர்வே நிகழாமல் பல பத்தாண்டுகள் சிங்கை, மலேசிய இலக்கியச் சூழலில் தேக்கம் நிலவியது. கல்வித்துறை வழியாகக்கூட நவீன இலக்கியம் அறிமுகம் செய்யப்படவில்லை. இதெல்லாம் மிக எளிமையாக வாசிப்பவர்களுக்குக் கூட இன்று தெரிந்த வரலாறு.

சுந்தர ராமசாமி நடுவராகச் செல்ல காரணமாக அமைந்தவர் நா.கோவிந்தசாமிஅவர் சிங்கை இலக்கியச் சூழலில் ஒரு கலகக்காரராக திகழ்ந்தவர். நவீன இலக்கியம் அறிந்தவர். சிங்கை சூழலின் அன்றைய தேக்கநிலை பற்றிய கடும் ஒவ்வாமையும் கொண்டவர். அவர் சிங்கப்பூரில் என்ன நிகழ்கிறது என்ற உண்மையை சிங்கப்பூர் அரசுக்குக் காட்ட விரும்பியதனால்தான் சுராவை அழைக்க ஏற்பாடு செய்தார் என்றே நான் அறிந்திருக்கிறேன். சு.ரா அன்று பல சர்வதேச இலக்கிய விழாக்களுக்கு அழைக்கப்பட்ட ஆளுமை, ஃப்ரான்ஸிஸ்வா க்ரோ போன்ற சர்வதேச அறிஞர்களால் பாராட்டப்பட்டவர். ஆகவே அவருடைய இடமும் தகுதியும் என்ன என்று சிங்கப்பூர் கலாச்சாரத்துறையினருக்குத் தெரியும். சு.ரா அவரிடம் எதிர்பார்க்கப்பட்டது போலவே அவருக்கு அளிக்கப்பட்ட கதைகள் எவையுமே கதைகளே அல்ல என்று சொல்லிவிட்டார். ஏனென்றால் அவை உண்மையிலேயே கதைகள் அல்ல. அவை பரிசுக்காக ஒப்பேற்றப்பட்டவை.

சு.ராவின் கருத்து அங்கே ஓர் அதிர்ச்சியை உருவாக்கியது. தமிழிலக்கியம் என்ற பேரில் என்ன நிகழ்கிறது, நிதி எப்படி எங்கே செல்கிறது என்பதை கவனித்தாகவேண்டும் என்ற கட்டாயத்தை அரசுக்கு அது உருவாக்கியது என்பதே நான் அறிந்தது. உண்மையில் சு.ரா இடித்துரைத்த பின்னர்தான் சிங்கப்பூர் இலக்கியத்தில் குறுங்குழு ஆதிக்கம் குறைந்தது. மிக ஆக்கபூர்வமான மாற்றங்கள் அதன்பின் உருவாயின. சிங்கப்பூரின் இளைய தலைமுறைக்கு அவர்கள் இலக்கியத்தில் இருக்கும் இடமென்ன என்று அப்பட்டமாக தெரியத் தொடங்கியது. அதைப்பற்றிய விவாதங்கள் வழியாக அவர்கள் தமிழில் எழுதப்பட்ட சிறந்த படைப்புகளை அறிமுகம் செய்துகொள்ளத் தொடங்கினர். அதுகாறும் கல்வித்துறை உட்பட அனைத்து தளங்களிலும் மறைக்கப்பட்டிருந்த நவீனத் தமிழிலக்கிய மேதைகள் அப்படித்தான் அங்கே அறிமுகமானார்கள்.

என்னிடம் ஒரு சிங்கை எழுத்தாளர் சொன்னார், புதுமைப்பித்தன் என ஒருவர் எழுதினார் என்பதையே அதன் பின்னர்தான் அவர் அறிந்தார் என்று. அதுவரை மு.வரதராசனார் மட்டுமே அங்கே இலக்கிய ஆளுமையாக கட்டமைக்கப்பட்டிருந்தார். அவரைத்தாண்டி நவீன இலக்கியம் நோக்கிய நகர்வு நிகழாமல் கல்வித்துறை இறுக்கிக் கட்டப்பட்டிருந்தது. ஆகவே இன்றைய சிங்கப்பூர் இலக்கியத்தின் நவீனத்தன்மை என்பது சு.ரா அந்தக் கதைகளைப் பற்றிச் சொன்ன அந்தக் கருத்தில் இருந்து தொடங்குகிறது என்பதுதான் உண்மை.

கு.அழகிரிசாமி மலேசிய இலக்கியம் பற்றிச் சொன்ன கடுமையான கருத்துக்கள் மலேசியாவில் அதிர்ச்சியை, ஒவ்வாமையை உருவாக்கின. ஆனால் அதன் விளைவாகவே அங்கே நவீன இலக்கியப் பிரக்ஞையும் உருவானது. இன்று வல்லினம் போன்ற இலக்கிய இதழில் எழுதும் படைப்பாளிகள் தமிழின் முதன்மையான படைப்பாளிகளுக்கு நிகராக வெளிப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் தொடக்கமெனக் கொண்டிருப்பது அந்த விவாதங்களையே. பல பத்தாண்டுகளுக்குப் பின் சு.ரா அதை சிங்கை இலக்கியத்திற்குச் செய்தார். அதன்பின் உருவான நவீனச் சிங்கை இலக்கியம் சு.ராவுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது.

சு.ரா இன்று இருந்திருந்தால் அங்குள்ள சில நவீன இலக்கியவாதிகளாவது அவர் முன் வந்து நின்று “இப்ப சொல்லுங்க, எப்படி இருக்கு எங்க கதை?” என்று தன்னம்பிக்கையுடன் கேட்கமுடியும். சுரா அதை புன்னகையுடன் ஏற்கவும்கூடும். அந்த இடம் அங்கே உருவானது அவர் முன்வைதத விமர்சனத்தால்தான். அது அங்குள்ள இளைய தலைமுறைக்குத் தெரியும்.  

சரி, இதெல்லாம் இலக்கிய விஷயம், வாசிப்பவர்களும் எழுதுபவர்களும் பேசிக்கொள்ளவேண்டியது. எந்தத் தொடர்பும் இல்லாத முகநூல் வம்பர்களுக்கு என்ன வேலை இதில்? திரும்பத் திரும்ப இவர்கள் உருவாக்கும் இந்த வம்புகளுடனேயே நாம் ஏன் மோதிக்கொண்டிருக்கிறோம்?.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 28, 2025 11:35

ஓஷோ: மரபும் மீறலும்-2

ஓஷோ: மரபும் மீறலும்-1

(2021 மார்ச் 12,13,14 தேதிகளில் கோவையில் கிக்கானி அரங்கில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். எழுத்தில் பதிவுசெய்தவர் விவேக் ராஜ் )

ஓஷோவின் சிந்தனை முறைமை

ஓஷோவின் சிந்தனைகளை பின்தொடர்பவர்களுக்கு ஒரு முறைமை, ஒருவித பாணி உள்ளது. அது என்ன என்பதை முதலில் சொல்ல விரும்புகிறேன். இவற்றையெல்லாம் ஒரு தனிப்பட்ட அவதானிப்பாகவே சொல்கிறேன். ஆனால் ஓஷோவை தொடர்ந்து படிப்பவர்கள், ஓஷோயிஸ்டுகளை தொடர்ந்து கவனிப்பவவர்களுக்கு நான் சொல்லும்பதே ‘சரிதான், இதை நான் கவனித்திருக்கிறேன்’ என்று சொல்லத்தோன்றும்.

1. சிந்தனை என்பது மின்னதிர்ச்சி போன்றது

ஓஷோ சிந்தனையாளர்கள் பொதுவாக சிந்தனை என்பது ஒருவித மின்னதிர்ச்சி அனுபவம் என்று நம்புவார்கள். தொட்டால் ஜிர்ரென்று ஏறவேண்டும் என்பதுபோல. ஏனெனில் ஓஷோ அவ்வாறுதான் இருக்கிறார். நெடுங்காலம் நீங்கள் ஓஷோவை படித்துக்கொண்டிருந்தீர்கள் என்றால் அந்தக்கருத்தைச் சென்று சேர்ந்துவிடுவீர்கள். ஓஷோவின் சிந்தனைகள் உங்களுக்கு என்ன மாதிரியான விறுவிறுப்பை, மின்னதிர்ச்சியை, துடிப்பை அளிக்கிறதோ அதை எல்லா சிந்தனைகளிலும் நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். அதனால்தான் ஓஷோவில் தொடங்கக்கூடிய பலர் ஓஷோவே தொடர் உரைகளாக நிகழ்த்தி எழுத்தில்வந்த கீதை உரை, தம்மபதம் உரை போன்ற பெரிய, அழுத்தமான நூல்களை படித்திருக்க மாட்டார்கள். அவருடைய எளிமையான தொகுப்புகளைத்தான் படித்திருப்பார்கள். ஏனெனில் சிந்தனை என்பது விறுவிறுப்பு  என்ற எண்ணத்தால்தான்.

ஆனால் சிந்தனையில் பழக்கம் உள்ளவர்களுக்கும் தத்துவவாதிகளை பயில்பவர்களுக்கும் தெரியும், பெரும்பாலும் சிந்தனைகளுக்கு அத்தகைய ‘மின்னதிர்ச்சி’ அம்சம் கிடையாது என்று. சிந்தனையில் ஒருவித சுகம் இருக்கிறது. Philo-Sophia என்கிறார்கள். அறிவுத்தேவதையின் மேல் பற்று கொள்ளுதல் என்பதுதான் Philosophy. அதில் இருக்கும் இன்பம் என்பது மின்னதிர்ச்சி பெற்று மூளை துடித்தெழக்கூடிய அனுபவம் மட்டும் அல்ல. அதுவும் ஓர் அனுபவம் தான். ஆனால் அது ஒரு தொடக்கம் மட்டுமே. தொடக்கநிலையில் அவ்வாறு இருக்கலாம். ஆனால் பின்னால் செல்லச்செல்ல, மிகச்சரியாக ஒரு சிந்தனையை மற்றொன்றுடன் பொருத்தமுடிவதை கண்டுகொள்வதன் பேரின்பம்தான் தத்துவத்தின் இன்பம் என நாம் அறிவோம். அது, கட்டுமான விளையாட்டுப் பொருட்களை அடுக்கி அடுக்கி ஒரு கட்டமைப்பை உருவாக்கும் குழந்தை அடையும் இன்பம் போன்ற ஒன்று. நீங்கள் மலைகளை அடுக்கி அதை அடையமுடியும் என்றால் அது தத்துவத்தின் இன்பம். கட்டமைப்பதன் இன்பம், தொகுத்துக்கொள்வதன் இன்பம்.

நீங்கள் இரண்டு விஷயங்களை அவதானிக்கிறீர்கள். ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு ஒருவித தாவலை நிகழ்த்துகிறீர்கள். அவ்வாறான பல அவதானிப்புகள் ஒரு மாயக்கணத்தில் ஒன்றுடன் ஒன்று இணைந்து உங்களுக்கு ஒரு புரிதலை அளிக்கின்றன. ஒரு வரையறையை, அல்லது கொள்கையை திரட்டித்தருகின்றன. ஒன்றை கண்டடைவதே தத்துவத்தின் இன்பம் என்பது. அதில் ஒரு உழைப்பும் தொடர்ச்சியான கவனமும் உள்ளன. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்காக அகம் வளர்ந்து செல்லும் பயணம் உள்ளது. சில சமயங்களில் அது இயலாமல்போகும் தவிப்பும் உள்ளது. நீங்கள் அடுக்கி வைத்த ஆயிரத்தில் ஒன்றேயொன்று குறைவதனால் உருப்பெறாமல் இருக்கக்கூடிய தவிப்பு அது. நீங்கள் அறிந்த ஆயிரம், இன்னும் ஐந்தை அறிந்தால் முழுமையடையும். ஆனால் அந்த ஐந்தை அறிவதற்கு இன்னும் ஐம்பது ஆண்டுகள்கூட ஆகலாம். அதற்கான தவிப்பு அது.

சிந்தனை, தத்துவம் என்பது அப்படிப்பட்டதுதான். தத்துவம் என்பது எப்போதும் அந்த மின்னதிர்ச்சியை அளிக்கவேண்டியதில்லை. அதிலிருந்து மேலே செல்லும்போதுதான் உண்மையான தத்துவத்தின், மெய்யறிவின் சவால்கள் உள்ளன. ஆனால் தத்துவமும் மெய்யறிதலும் எப்போதுமே மின்னதிர்ச்சியை அளிப்பவை என்பதாக ஒரு எதிர்பார்ப்பை ஓஷோ உருவாக்குகிறார். இது பெரும்பாலும் ஓஷோயிஸ்டுகளுடைய சிந்தனை முறைமையாக இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

2 எதிர்ப்பு சிந்தனைமுறை

நான் பார்த்தவரை ஓஷோ சிந்தனையாளர்கள் அத்தனைபேருமே அவருடைய எதிர்ப்பு நோக்கையே  தங்களுடைய சிந்தனை முறையாக கொண்டிருக்கிறார்கள். மேடையில் பேசத்தொடங்கும்போதே அவர்கள் எதிர்நிலை எடுக்கிறார்கள். சிந்தனையின் எதிர்நிலை என்பது ஒருவகையான குழி. அதில் தொடங்கி ,அதை பயின்றிருக்கிறீர்கள் என்றால் அதிலிருந்து அவ்வளவு எளிதாக வெளியே செல்லமுடியாது. நாத்திகத்தின் மிகப்பெரிய சிக்கலே, அதனால் ஆத்திகத்தை விட பெரிதாக ஆகமுடியாது என்பதுதான் என்துதான். ஏனெனில் அது எதிர்நிலை. எதை எதிர்க்கிறீர்களோ அதற்கு இணையாக மட்டும்தான் உச்சபட்சமாக செல்லமுடியும். அதற்குமேல் செல்லமுடியாது. நேர்நிலைச் சிந்தனைக்குத்தான் முடிவில்லாத வளர்ச்சி உள்ளது.

சிந்தனை என்பது தனது வழியை தானே உருவாக்கிக்கொண்டு செல்வது. வேறொன்றுக்கு எதிர்வினையாகவோ வேறொன்றை மறுத்தோ உருவாவதல்ல. அதன் தொடக்கநிலையில்கூட அதற்கு முன்செல்லும் உந்துதல்தான் இருக்குமேவொழிய விலகிச்செல்லும் சக்தி இருக்காது. ஆகவே வேறு எதுவொன்றை மறுத்தும் எதிர்த்தும் உருவாகக்கூடியது தன்னளவிலேயே இரண்டாம்நிலைச் சிந்தனையாகத்தான் இருக்கமுடியும்.

3 விவாத மறுப்புத்தன்மை

விவாதங்களை மறுக்கக்கூடிய தன்மை ஓஷோவின் சிந்தனைகளில் உண்டு. ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஓஷோ மிகத்தீவிரமாக இந்திய சிந்தனையின் மையத்தில் இருந்திருக்கிறார். காந்தியம், சோஷலிசம் தொடங்கி எல்லா வகையான சிந்தனைமுறைகளையும் ஓஷோ மறுத்து பேசியிருக்கிறார், நிராகரித்திருக்கிறார். இந்திய சனாதனம் அதற்கு எதிரான இந்திய மார்க்ஸியம் இரண்டுக்கும் எதிரி அவர். ஆனால் எந்தவொரு மாற்று சிந்தனைமுறையுடனாவது அவர் உரையாடலை தொடங்கியிருக்கிறாரா? அல்லது ஓஷோ மரபினர் உரையாடியிருக்கிறார்களா?

உரையாடல் என்பது சிந்தனையில் மிக முக்கியமான அம்சம். இரண்டுவகையான முரணியக்கங்கள் வழியாகத்தான் சிந்தனை முன்னகர முடியும்.

அ. மாற்று சிந்தனைகளுடனான முரணியக்கம் – ஒரு சிந்தனை தனக்கு இணையான மாற்று சிந்தனை வழியாக முரணியக்கத்தை நிகழ்த்தும். இது நேர்கருத்து (Thesis) என்றால் அது முரண்கருத்து (Anti Thesis). இவைகளுடைய உரையாடல் வழியாகத்தான் அந்த சிந்தனை முன்னகர முடியும் (Synthesis). இதைத்தான் முரணியக்கம் (Dialectics) என்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட சிந்தனை தனக்கு இணையான மாற்றுச் சிந்தனையுடன் விவாதித்து, அதிலிருந்து பெற்றுக்கொண்டும், அதை மாற்றிக்கொண்டும் முன்னகரும்.

ஆ. தனக்குள்ளேயே முரண்படுவதன் முரணியக்கம் – ஒரு சிந்தனை தனக்குத்தானே முரண்பட்டு தனக்குள் ஒரு முரணியக்கத்தை உண்டாக்கிக்கொள்ளும். தலைப்பிரட்டை தனது வாலால் தன்னைத்தானே சவுக்கால் அடித்து முன்னகருகிறது என்று ஒரு அழகான கவிதை வரி உண்டு.

சிந்தனைகளில் இத்தகைய முரணியக்கம் முக்கியமானது. ஓஷோவின் சிந்தனைகளில் உள்ள முக்கியமான குறைபாடுகளில் ஒன்று இத்தகைய உரையாடலோ முரணியக்கமோ இல்லாததே. ஓஷோவின் மொத்த சிந்தனைச் செயல்பாடுமே எதிர்தரப்பை எள்ளி நகையாடுவதாகத்தான் இருக்கும். எதிர்தரப்பை அவதூறு செய்யவும், கீழ்மைப்படுத்தவும்கூட அவர் எப்போதும் முயன்றிருக்கிறார். அவருடைய உரைகளில் காந்தியைப் பற்றி சொல்லப்பட்டவைகளை பார்த்தீர்கள் என்றால் தெரியும். நம் சூழலில் காந்தி பற்றிப் பேசப்பட்ட எல்லா அவதூறுகளையும் வசைகளையும் எந்தப் பரிசீலனையும் இல்லாமல் ஓஷோ தானும் சொல்லியிருக்கிறார். இன்றுவரைக்கும் இந்த மூன்றாவது அம்சம் ஓஷோயிஸ்டுகளின் பலவீனமாக உள்ளது. இன்றுகூட சமூகவலைதளங்களில் பார்த்தால், ஒரு கருத்துக்கு எதிராக எல்லா தரப்பும் கருத்து சொல்லியிருக்கும். ஆனால் ஓஷோ தரப்பின் கருத்து இருக்காது. அந்தக்குரல் வேறெங்கோ தனியாக ஒலித்துக்கொண்டிருக்கும்.

இம்மூன்று அம்சங்களும் கூடியது ஓஷோவின் சிந்தனைப்பாணி . இந்த பாணியை பற்றி இங்கு குறிப்பிடக்காரணம், நாம் நினைப்பதுபோல நாமனைவரும் சுதந்திர சிந்தனையாளர்கள் அல்ல என்பதே. நாம் அனைவருமே நமக்குரிய சிந்தனைப்பாணியை (Pattern) கொண்டிருக்கிறோம். மீண்டும் இங்கு ஓஷோவின் பாணியை பின்பற்றி ஒரு நகைச்சுவை சொல்லலாம். ஒரு சிறுவன் பள்ளிக்கூடத்திற்கு தாமதமாக வருகிறான். ஏன் தாமதம் என்று ஆசிரியர் கேட்கிறார். ‘எங்க வீட்டு பசுவை காளையிடம் கொண்டுசெல்ல வேண்டியிருந்தது, அதனால் தாமதம்’ என்றான் சிறுவன். ‘உங்க அப்பாவிடம் சொல்லவேண்டியதுதானே’ என்று ஆசிரியர் கேட்கிறார். அதற்கு அந்த சிறுவன், ‘சொல்லலாம்தான். ஆனால் காளைதானே அதற்கு பெஸ்ட் !’ என்கிறான்.

நம் மனதிற்குள் இதுபோன்ற ஒரு முறைமை இருக்கும். அதனடிப்படையில்தான் நாம் சிந்திக்க முடியும். நாம் அந்த முறைமையை கவனித்திருக்க மாட்டோம். ஆனால் நாம் தன்னியல்பாக அந்த வகையில்தான் சிந்திப்போம். ஒரு சூட்டுக்கோலால் சூடுபட்டால்தான் துள்ளி அந்தப்பக்கம் செல்வோம். அதுவரை நாம் நமது எல்லைகளை கடக்க மாட்டோம். ஆஸ்திரேலியா சென்றபோது ஒன்று சொன்னார்கள். கிட்டத்தட்ட கன்னியாகுமரி ஜில்லா அளவுக்கு பெரிய மாட்டுப்பண்ணைகள் அங்கே இருக்கின்றன. ஐம்பதாயிரம் ஏக்கர், ஒரு லட்சம் ஏக்கர் அளவுக்கு பெரிய பண்ணைகள். அங்கு முழுக்க மாடுகள் வளர்க்கின்றனர். ஆஸ்திரேலியா ஆழமில்லாத மண் கொண்டதால் அங்கு பெருமளவுக்கு புல்வெளிகள்தான் இருக்கும். இந்த புல்வெளிகளில் மாடுகளை வளர்க்கத் தொடங்கும்போதே சுற்றிலும் மின்வேலி அமைத்து மின்சாரத்தை பாய்ச்சிவிடுவார்கள். அதற்குள் மாடுகளை விட்டு வளர்ப்பார்கள். மின் அதிர்ச்சியை அடையும் மாடுகள் அந்தக் கம்பியை நெருங்காது. சிறிது நாட்களுக்குப் பின் மின்சாரத்தை நிறுத்திவிடுவார்கள். ஆனால் எந்த மாடும் மின்வேலியை தாண்டிச்செல்லாது. மேலும் சில நாட்கள் கழித்து அங்கு வேலியே இல்லாமலாகிவிடும். ஆனால் உளரீதியாக எந்த மாடும் அந்த வேலி இருந்த எல்லையை தாண்டிச்செல்லாது. ஏதோ ஒரு மாடு  எதனாலோ அஞ்சி ஓடி வேலியைத் தாண்டிவிட்தென்றால் அதன்பின் மற்ற மாடுகளும் தாண்டிவிடும்.

சிந்தனையிலும் நமது முறைமைகள், எல்லைகள் நம்மை அறியாமலேயே உருவாகி விடுகின்றன. அந்த முறைமைக்குள்தான் நாம் மீண்டும் மீண்டும் சிந்திக்கிறோம். ஏன் புத்தகங்களை படிக்கவேண்டும், ஏன் ஆசிரியர்களை தேடிச்செல்ல வேண்டும் என்றால் புதிய சிந்தனைக் கருத்துகளை தெரிந்துகொள்வதற்கு அல்ல; நாம் இப்போது சிந்திக்கும் முறைமையை உடைத்து வேறொரு சாத்தியத்தை அடைவதற்காகவே. அதனால்தான் நல்லாசிரியர்கள் யாருமே அன்பானவர்களோ இனிமையானவர்களோ இருப்பதில்லை. அவர்கள் பெரும்பாலும் மறைந்த பின்னர்தான் நம்மால் நேசிக்கப்படுகிறார்கள். அது என்னுடைய அனுபவமும் கூட. ‘புத்தகத்தை மூடிவைத்துவிட்டு எழுந்து வெளியே போ’ என்று ஊட்டி குளிரில் நித்யா என்னை வெளியே நிற்கவைத்திருக்கிறார். எனது எழுத்தாளன் எனும் ஆணவத்தின்மேல் அதிகமான அடிவிழுந்த தருணங்களை நான் ஊட்டியில் எனது ஆசிரியர் முன்னால் அமர்ந்துதான் அடைந்திருக்கிறேன். ‘இந்த ஆள் என்ன பெரிய ஆளா?’ என்று நானே சொல்லிக்கொண்டு கிளம்பி நாகர்கோவிலுக்கு சென்றுவிட்டேன். பிறகு அது மிகவும் அற்பமானதாக தோன்றி இரண்டுநாட்களில் மீண்டும் கிளம்பி ஊட்டி சென்றேன்.

நான் ஒரு விஷயத்தை எனக்கான வழியில் தன்னியல்பாக யோசிக்கிறேன். அந்த பாதையில் இருந்து விலக்கி கொண்டுசெல்வது அவ்வளவு எளிதல்ல.அதனால்தான் ஓஷோ உருவாக்க்கும் இந்த முறைமை பற்றிய கவனம் நமக்கு வேண்டும் என்கிறேன். அதை நாம் கண்காணிக்கவேண்டும், அதில் நாம் சிக்கிக்கொண்டிருக்கிறோமா என்று நாமே பரிசீலனை செய்துகொள்ளவேண்டும்.

அப்படியெனில் ஓஷோ அளித்த கொடை என்னவாக இருக்கும் என்பதுதான் அடுத்த கேள்வி. இந்திய சிந்தனை முறைக்கு ஓஷோ எதை அளித்தார் ?

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 28, 2025 11:34

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.