Jeyamohan's Blog, page 61
July 31, 2025
ஓஷோ:மரபு மீறலும் 5
கேரளத்தில் நம்பூதிரி நகைச்சுவை என்ற ஒரு வகை உண்டு. அசட்டுத்தனமும் புத்திசாலித்தனமும் முயங்கக்கூடிய இடத்தில் இருக்கும் நகைச்சுவை. அதில் ஒரு பிரபலமான நகைச்சுவை இது. தஞ்சாவூரை சேர்ந்த பண்டிதர் ஒருவர் சம்ஸ்கிருத கவிதை ஒன்றை எழுதி அதை எடுத்துக்கொண்டு கேரளா முழுக்க சுற்றிவந்தார். கடைசியாக தோலன் என்ற பெயர்கொண்ட ஒரு நம்பூதிரியை சந்திக்கிறார். தோலன் நம்பூதிரி வேடிக்கையானவர், அவருக்கு எழுதப்படிக்க தெரியாது. பண்டிதர் நம்பூதிரியிடம் சொல்கிறார், ”இந்த கவிதையை மேலமங்கலம் நம்பூதிரியிடம் காண்பித்தேன். அவருக்கு அர்த்தம் தெரியவில்லை. கீழமங்கலம் நம்பூதிரிக்கும் தெரியவில்லை. பூமுள்ளிக்கும் கீழில்லத்துக்கும் சென்றேன். அவர்களுக்கும் தெரியவில்லை. பதினெட்டு நம்பூதிரி மனைகளுக்கும் சென்றுவிட்டேன். யாருக்கும் அர்த்தம் தெரியவில்லை”.
உடனே தோலன் அவரிடம் மிக ஆர்வமாக ‘இங்க கொண்டா’ என்று அதை வாங்கி பார்த்துவிட்டு அப்படியே அவரிடம் திருப்பிக்கொடுத்து ‘என் பெயரையும் பட்டியலில் சேர்த்துக்கொள்’ என்றார்.
தெரியாத ஒன்றை எல்லாவற்றிலும் சேர்த்துக்கொள்ளலாம். க.நா.சு. ‘இல்லாதது’ என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.
இல்லாததைப் போல
அழகானதொன்றும் இல்லை.
இல்லாததை கண்
உள்ளவர்களும் காண முடியாது
விளக்கேற்றியும் காண முடியாது
இல்லாததால் உபயோகம் ஒன்றுமில்லை
அதைப்போல உபயோகமானதும் ஒன்றுமில்லை
இல்லாததை அளக்க முடியாது
அழிக்க முடியாது
என்னதான் இல்லை
என்று சொல்ல முடியாது
உலகம் என்றுமே இல்லாததாக
இருந்திருந்தால்…
எப்படியெல்லாம்
நாம் உருவாகியிருக்கலாம் !
ஓஷோவை பற்றி பேசுவதில் உள்ள சௌகர்யம் என்னவென்றால், ஓஷோ போன்ற ஒருவரை நீங்கள் எந்தவொரு சிந்தனை மரபிலும் சேர்த்துக்கொள்ளலாம். ஏனெனில் அவர் ஒரு மறுப்புவாதி (Nihilist), ஐயுறுவாதி (Skeptic). மறுப்புவாதிக்கு அல்லது ஐயுறுவாதிக்கு எல்லா சிந்தனை பள்ளிகளிலும் ஒரு நாற்காலி இருக்கும். குமரி மாவட்ட கோவில்களில் எந்த உள்ளூர் சாமிகள் எப்படி இருந்தாலும் அரவணைப்போத்தி என்று ஒரு சாமி இருக்கும். எல்லோருக்கும் படையல் முடித்த பிறகு சட்டுவத்தில் சிறிது சர்க்கரை பொங்கல் மீதமிருக்கும். அதை ஒரு பூவரசு இலையில் வழித்து அரவணைப்போத்திக்கு வைப்பார்கள். எப்படியோ அதற்கும் ஒரு படையல் கிடைக்கும்.
சிந்தனையை பற்றி பேசவரும்போது ஓஷோவை எங்கு வைப்பது என்பது எப்போதும் ஒரு பெரிய சிக்கல். அவரை எதிலும் சேர்க்கலாம். ஆனால் எதிலும் சேரவும் மாட்டார். புத்தகக் கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஓஷோவின் நூல்களை பார்த்தாலே கொஞ்சம் விஷயம் தெரிந்தவர்களுக்குக்கூட தலைசுற்றல் வரும். ஒருபுறம் தத்துவ நூல்கள் இருக்கும், இலக்கிய நூல்கள் இருக்கும். ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத விஷயங்களை விளக்கியிருப்பார். ஒருபுறம் ஜென் பௌத்தம் பற்றியும், மறுபுறம் தந்த்ரா பற்றியும் பேசுவார். இரண்டும் ஒன்றுக்கொன்று நேர் எதிரானவை. ஒருபுறம் கீதை இருக்கும், அந்தப்பக்கம் ரூமி இருப்பார். இவ்வளவையும் சொல்லக்கூடிய இவர் யார் என்று பார்த்தால், நேர் எதிராக நின்று சுத்தமாக தத்துவமும் கொள்கையும் எதற்குமே அர்த்தம் கிடையாது என்று அவர் பேசும் வேறொரு உரையும் இருக்கும். ஓஷோவை எங்கே வட்டமிட்டு சுழிப்பது என்பது ஒரு சிக்கலான விஷயம். நம்முடைய சமகாலத்தில் இவ்வளவு பெரிய புதிர் நம்முடன் வாழ்ந்து கடந்து சென்றது என்பது விந்தையான ஒன்றுதான்.
ஆனால் இந்தியர்களாகிய நமக்கு புதிர்களை சந்திப்பது என்பது புதிது அல்ல. நமது ஞானிகள், ஆன்மீகத் தலைவர்கள் பெரும்பாலானோர் புதிரானவர்களே. காந்தியே ஒரு மாபெரும் புதிர்தான்.இந்தவகையான புதிர்களை எதிர்கொள்வதற்கென்றே நாம் பல ஆண்டுகளாக நல்ல வழியொன்றை வைத்திருக்கிறோம். இதை சொல்லும்போது ஒரு நம்பூதிரி நகைச்சுவை நினைவுக்கு வருகிறது. கொல்லம் அரசருக்கு கேசவன் என்ற பெரிய யானை இருந்தது. கொடூரமான யானை, யார் அருகில் சென்றாலும் கொன்றுவிடும். ஆனால் தோலன் நம்பூதிரி கேசவன் தன்னை எதுவும் செய்யமாட்டான் என்று சொல்லிக்கொண்டிருந்தார். இவர் ஏன் இப்படி சொல்கிறார், ஒருவேளை யானை வித்தை எதுவும் தெரிந்திருக்குமோ என்று அவரை வரவழைத்து, ‘எப்படி கேசவன் உங்களை மட்டும் எதுவும் செய்யமாட்டான்’ என்று கேட்கின்றனர். அதற்கு தோலன் ‘அது எப்படீன்னா, நான் அவன் பக்கத்தில் போவதும் கிடையாது, அவனை என் பக்கத்தில் வரவிடுவதும் கிடையாது’ என்றார். கடந்த ஈராயிரம் ஆண்டுகளாக நாம் இந்த கொள்கையின் அடிப்படையில்தான் ஞானிகளை கையாண்டு வருகிறோம். ஓஷோ இந்தப்பக்கம் வருவதும் கிடையாது, நாம் அந்தப்பக்கம் செல்வதும் கிடையாது.
இங்கே ஓஷோ பற்றிப் பேசுபவர்கள், ஓஷோவை அறிந்துவிட்டதாகச் சொல்லிக்கொள்பவர்கள் பெரும்பாலும் தோலனின் நிலைபாடு கொண்டவர்களே. தங்களுக்கு உகந்த ஓர் ஓஷோவை அவர்கள் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அந்த ஓஷோ ஏற்கனவே நம் மரபில் இருந்துகொண்டிருக்கும் ஒரு வழக்கமான உருவத்தின் நகல்தான். “ஓஷோவா, அவர் ஒரு ஞானி அல்லவா?” என்று எளிதாகச் சொல்லிவிடுகிறார்கள். “ஞானிகளை நம்மால் புரிந்துகொள்ள முடியாது” என்கிறார்கள். எவராவது புரிந்துகொள்ள முயன்றால் “அதெப்படி ஞானியை நீ விமர்சிக்கலாம், விமர்சிக்க நீ யார்?” என்று சீற்றம் அடைகிறார்கள். இவர்களுக்கும் ஓஷோவுக்கும் எந்த உரையாடலுமில்லை. உரையாடாதவனுக்கு ஓஷோ எந்த பொருளையும் அளிப்பதுமில்லை.
‘நீங்கள் ரூமியை பற்றி பேசுகிறீர்கள், பின்பு கீதை பற்றியும் பேசுகிறீர்கள்’ என்று அவருடைய ஆளுமையிலுள்ள அந்தப் புதிரை பற்றி நாம் அவரிடம் கேட்டிருந்தால் ஒரு உரையாடல் தொடங்கியிருக்கும். ஆனால் நாமோ ‘அவருக்கென்னங்க, அவரு மகான். அப்படித்தான் சொல்வார். நாம நம்ம சோலிய பாக்கணும்க’ என்பதாக அப்படியே கடந்து வந்துவிடுகிறோம். இங்கே ஓஷோ பற்றி எப்படிப் பேசியிருக்கிறார்கள், என்னெவெல்லாம் பேசியிருக்கிறார்கள் என நமக்குத் தெரியும். ஆனால் இந்த புதிரை பற்றி கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளில் தமிழில் யாராவது எழுதியிருக்கிறார்களா என்று சிந்தித்துப்பாருங்கள். இந்த இடத்தில் இருந்துதான் ஓஷோவை பற்றி பேசத்தொடங்கலாம் என்று நினைக்கிறேன்.
நான் எப்படி ஓஷோவை அறிமுகம் செய்துகொண்டேன் என்பதில் இருந்து தொடங்கவேண்டும். 1974இல் The Illustrated Weekly of India என்ற வாரஇதழில் நிறைய படங்களுடன் ஒரு கட்டுரை வெளியானது. அந்த கட்டுரை வெளியாகி கிட்டத்தட்ட பதினைந்து நாட்களுக்கு பிறகு சில ஆசிரியர்கள் அந்த பிரதியை கையில் வைத்துக்கொண்டு ஆர்வமுடன் பேசிக்கொண்டிருப்பதை கவனித்தேன். அப்போது எனக்கு பன்னிரண்டு வயது இருக்கும். அவர்கள் என்னை வெளியே அனுப்பிவிட்டனர். அதன்பின் வேறு எதையோ எடுக்க உள்ளே சென்றபோது அந்த பிரதியையும் எடுத்து வந்து, வீட்டிற்கு சென்று பரபரப்புடன் அதை பார்த்தேன்.
ஓஷோவின் புனே ஆசிரமத்தில் டைனமிக் தியானப் பயிற்சிகள் நடப்பதைப் புகைப்படம் எடுத்திருக்கின்றனர். அது ஓஷோ ஆசிரமத்தில் அவர்களே எடுத்துக்கொண்டது. ஆனால் அது எப்படியோ கசிந்துவிட்டதாக சொல்கிறார்கள். ஓஷோவே அதை வெளியே கசியவிட்டார் என்ற வதந்தியும் உண்டு. எப்படியோ அது அந்த வார இதழில் பிரசுரமாகி, அதனால் மொத்த இந்தியாவும் அதிர்ச்சியடைந்தது. உடனே இந்தியாவின் அத்தனை வட்டாரமொழிப் பத்திரிக்கைகளும் இரண்டாம்கட்ட அதிர்ச்சி அடைந்தன. குமுதம், விகடன், தந்தி போன்ற இதழ்கள் அந்த செய்தியை வெளியிட்டன. தந்தி ஒரு அற்புதமான வார்த்தையை கண்டுபிடித்தது. அது ‘செக்ஸ் சாமியார் ரஜ்னீஷ்’ என்பது. அப்போது அவர் பகவான் ரஜ்னீஷ் என்று பரவலாக அறியப்பட்டிருந்தார்.
இந்த Illustrated Weekly இதழை ஒரு குறியீட்டு அடையாளமாகவே சொல்ல விரும்புகிறேன். ஓஷோவை பற்றிப் பேசும் எல்லா விஷயங்களிலும் நீங்கள் இந்த வாரஇதழை ஒரு தரப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த இதழின் ஆசிரியர் குஷ்வந்த் சிங் (Khushwant Singh) அந்த வழக்கில் ஒரு கட்சிக்காரர். அவர் தன்னை ஒரு அதிநவீன மனிதராகக் காட்டிக்கொண்டவர். அதாவது பாலியல் சுதந்திரம் பற்றி பேசுவார், பாலியல் நகைச்சுவைகளை எழுதுவார், கட்டற்ற வாழ்க்கை பற்றி பேசுவார், நவநாகரீக உலகங்களை பற்றி சொல்வார். அந்த காலகட்டத்தின் எல்லா விஷயங்களுக்கும் எதிரான ஒருவர். ஆனால் பொற்கோவிலில் இந்திய ராணுவம் நுழைந்தபோது தனது பத்மபூஷண் விருதை சீற்றத்துடன் திருப்பிக்கொடுக்கும் அளவுக்கு தீவிரமான சீக்கியர். அதுதான் அவருடைய உண்மையான முகம். உயர்குடியில் பிறந்தவர், எதையும் அலட்சியமாக எடுத்துக்கொள்ளும் மனநிலை கொண்டவர், ஆனால் அடிப்படையில் கேசதாரி சீக்கியர்.
இந்தியாவில் இது மிகவும் சௌகரியமான ஒரு விஷயம். வீட்டில் நீங்கள் பெரிய நாமத்தை போட்டுக்கொண்டு இருக்கலாம். ஆனால் வெளியே அறிவியல் புனைவெழுத்தாளராக தோற்றமளிக்கலாம். அதிலிருக்கும் முரண்பாட்டை ஒப்புக்கொள்வதற்கு உங்களுக்கு எழுபது வயது தாண்டவேண்டும். அதன்பின் நீங்கள் நாமத்தை போட்டுக்கொண்டு வெளியே வரலாம். இத்தகைய முகம்தான் இந்தியாவின் பிரபல ஊடகங்களின் முகம். தமிழில் குமுதம் அப்படிப்பட்டது. ஆமையை தண்ணீரில் போட்டு தண்ணீரை சூடுபடுத்திக்கொண்டே இருந்தால் அது சூடாவதே தெரியாமல் கொதிக்கும்வரை நீந்திக்கொண்டிருக்கும் என்பார்கள். இந்த இதழ்கள் மெல்ல மெல்ல இந்தியச் சமூகத்தை அனைத்துவகை ஒழுக்கமீறல்களுக்கும் பழக்கப்படுத்தின. ஆனால் எந்த வகையான அரசியல் மீறலுக்கும், தத்துவ மீறலுக்கும் பழக்கப்படுத்தவுமில்லை. ஆகவே மிகக் கட்டுப்பெட்டியான அரசியலும், சமூகவாழ்க்கையும் கொண்ட ஒரு சமூகம் கூடவே ரகசியமான பாலியல்மீறல் சார்ந்த கனவுகளும் கொண்டதாக உருவாகியது. அதை உருவாக்கியவை இந்த இதழ்கள். இவைதான் மீறலுக்காக ஓஷோவைக் குற்றம் சாட்டின, செக்ஸ் சாமியார் என்றன.
ஒட்டுமொத்தமாக இந்த தமிழ் இதழ்களின் பங்களிப்பு என்னவென்றால், சமுதாயத்தின் சபைநாகரீக விளிம்புகளை சமுதாயத்துக்கே தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிவிடுவதுதான். அதாவது ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு டிகிரியை கூட்டிவைப்பது. அதைத்தான் குமுதம் செய்தது.உதாரணமாக, எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ஒரு கதையில் ஒரு பையன் அண்டா திருடுவான். ஒரு வீட்டின் பின்னால் பெரிய அண்டா ஒன்று இருக்கும். அவனால் அதை தூக்கமுடியாது. பள்ளிக்கூடம் செல்லும்போது ஒவ்வொரு நாளுக்கும் ஒரு இன்ச் வீதம் அதை நகர்த்தி வைப்பான். அண்டா ஒரு இன்ச் நகர்ந்தால் அதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அவ்வாறு ஆறுமாதகாலம் அந்த அண்டாவை வசதியான இடத்திற்கு நகர்த்தி அது ஒரு சரிவின் விளிம்பை அடையச் செய்வான். அதன்பின் அதை உருட்டி எடுத்துச் சென்றுவிடுவான். அப்படியான அண்டாஉருட்டிகளான பத்திரிக்கைகள்தான் Illustrated Weekly, குமுதம் போன்றவை.அவை உருவாக்கிய ஓஷோவின் உருவம்தான் நம்மில் பெரும்பாலானவர்களின் உள்ளத்தில் உள்ளது.
எல்லா செய்திகளிலும் காமம் உண்டு என்பதை கண்டுபிடித்ததுதான் குஷ்வந்த் சிங்கின் சாதனை. குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி குஷ்வந்த் சிங்கின் தமிழ் நகல் அன்றி வேறல்ல.ஜெயகாந்தனிடம் ஒருமுறை பேசும்போது ஒரு கதை சொன்னார். ஒரு மகப்பேறு மருத்துவர் சென்னையில் இருந்திருக்கிறார். அவரிடம் ஒருவர் தனது மனைவியை அழைத்து செல்கிறார். அங்குதான் அந்த பெண்ணின் முதல் பிரசவத்தின்போது அவளைக் காட்டியதாக அவர் மருத்துவரிடம் சொல்கிறார். மருத்துவர் அந்த பெண்ணை பார்த்துவிட்டு ‘அப்படியா, எனக்கு முகம் அடையாளம் தெரியவில்லை’ என்றார். ‘நீங்கள்தான் அவளுக்கு அறுவை சிகிச்சை செய்தீர்கள்’ என்கிறார் கணவர். ‘அப்படியா, தெரியாதே’ என்கிறார் மருத்துவர். அதன் பின்பு அப்பெண்ணை பரிசோதிப்பதற்காக ஆடைகளை களைத்துவிட்டு பார்த்தபோது ‘ஓ, நீயா’ என்றாராம். இவர்களுக்கு தெரிந்தது ஒன்றுதான். அதைத்தான் எல்லா இடங்களிலும் பார்ப்பார்கள்.
ஆதிவாசிகளின் துயரம் பற்றி Illustrated Weekly ஒரு கட்டுரை வெளியிடும். ஆனால் அதில் திறந்த மார்பகங்கள்தான் முக்கியமாக இருக்கும். செஸ் விளையாட்டை பற்றிய ஒரு கட்டுரையில்கூட நிர்வாண பெண்களின் படங்கள் இருக்கும். ஏனெனில் எகிப்தில் ஏதோவொரு அரசன் ஏதோவொரு காலத்தில் நிர்வாண பெண்களை வைத்து செஸ் விளையாடியிருக்கிறார். அதை கண்டுபிடித்து இவர் வெளியிடுவார். நடிகை சாமி கும்பிட்டார் என்பதை தலைப்பு செய்தியாக போடக்கூடிய தந்திதான் ஓஷோவை செக்ஸ் சாமியார் என்று முத்திரையிட்டாது. நடிகை கர்ப்பம் என்று நான்கு ஆச்சர்யக்குறிகள் போடும் செய்தித்தாளிலும், அந்தக் கர்ப்பத்திற்கு உண்மையான காரணம் யார் என கிசுகிசு போடும் இதழிலும் தான் ரஜ்னீஷ் செக்ஸ் சாமியாராக குறிப்பிடப்பட்டார்.
அன்றைய செய்தியால் இந்தியா முழுக்க நடுத்தர வர்க்கத்திற்கு பெரிய அதிர்ச்சியும் தார்மீக கோபமும் ஏற்படுகிறது. கிட்டத்தட்ட இருபதாண்டுகாலம் இந்தியாவில் அது நீடித்தது. ஒருவகையில் ஓஷோ இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு காரணமாக அமைந்தது Illustrated Weekly இல் இருந்து தொடங்கி வளர்ந்து வந்த கசப்புதான். அந்த ஒவ்வாமை இலக்கியவாதிகளிடமும் இருந்தது. நான் எண்பதுகளில் தமிழ் இலக்கியவாதிகளை சந்திக்கும்போது அவர்கள் அனைவருமே ஜே.கிருஷ்ணமூர்த்தியை பின்பற்றுபவர்களாக இருந்தனர். பிரமிள் ஜே.கே.வை கிருஷ்ணா என்றுதான் சொல்வார். சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ஜெயகாந்தன் உள்ளிட்ட பலர் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் மேல் பற்றுகொண்டவர்களாக இருந்தனர். அசோகமித்திரன் ஜே.கே. கதாபாத்திரமாக வரும் கதைகளை எழுதியிருக்கிறார். ஆனால் ஒருவர்கூட ஓஷோவின் வாசகரோ ஆதரவாளரோ கிடையாது. சு.ரா. ஓஷோவின் ஒரேயொரு புத்தகத்தை படித்திருப்பதாகவும், ஓர் உரையை நேரில் கேட்டிருப்பதாகவும் சொன்னார். “ஓஷோ பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்று அவரிடம் கேட்டேன். சுருக்கமாக ‘பெரிய வாயாடி’ என்றார். ஏனெனில் இவர்களுடைய ஏதோவொரு வகையான ஒழுக்கத்தை அல்லது தார்மீகத்தை ஓஷோவின் கருத்து சீண்டுகிறது. அவரை ஏற்பது அவ்வளவு கௌரவமாக இருக்காதோ என்பதாக எண்ணுகிறார்கள். உண்மையை சொல்லவேண்டுமென்றால் எனக்கும் அவ்வாறுதான் இருந்தது. நானும் அன்றைக்கு ஒரு ஒழுக்கமான நல்ல பையன்.
நான் அப்போது கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜே.ஹேமச்சந்திரன் அவர்களிடம் இதுபற்றி கேட்டேன். அவர் எனக்கு தாய்மாமன் முறை. அவர் என்னை உட்காரவைத்து சொன்னார் ‘பூர்ஷ்வா கலாச்சாரம் தன்னைத்தானே இப்படி சீரழித்துக்கொள்ளும். இது ஒரு நோய்க்கூறு. குஷ்டநோயின் முதல் கொப்புளம். இவ்வாறுதான் முதலாளித்துவம் அழியும். ஏனெனில் பூர்ஷ்வா கலாச்சாரத்திற்கு உயர்ந்த வகையான இன்பங்கள் கிடையாது. கீழ்த்தரமான இன்பங்களே உள்ளன. எனவே அது சூதாடும், விபச்சாரம் செய்யும், இம்மாதிரி காமச் சோதனைகளை செய்துபார்க்கும்’. எனக்கும் அப்போது அது சரியென்றே தோன்றியது.
நீண்டநாட்கள் கழித்து, தொண்ணூறுகளுக்கு பிறகு அன்று இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி வெளியிட்ட அந்த புகைப்படங்களைப் பார்க்கும்போது அவை மிகவும் சர்வசாதாரணமாக தெரிந்தன. அதில் ஆறேழு பெண்கள் திறந்த மார்பகங்களோடு இருந்தனர். அமெரிக்காவில் மியாமி கடற்கரைக்கு சென்றால் ஐம்பதாயிரம் பெண்கள் திறந்த மார்பகங்களோடு இருப்பார்கள். அந்தச் சோதனையே கூட காமச்சோதனை அல்ல, காமத்தை அவதானிக்கும் பயிற்சிதான். காமத்தைப் பற்றி காமக்கிளர்ச்சி இல்லாமல் தெரிந்துகொள்வதற்கான ஒரு வழிமுறைதான்.
அதன்பின், சொல்லப்பட்டவற்றில் இருந்து மாறாக நான் ஒரு உணர்வை அடைந்தேன். 1982இல் ஒருமுறை திருவனந்தபுரத்தில் இலக்கிய அழகியல் குறித்து பேசும் மார்க்சியச் சிந்தனையாளராகிய எம்.என்.விஜயன் பேசிக்கொண்டிருந்தார். ஆசார்ய ரஜ்னீஷ் இவ்வாறு சொல்கிறார் என்று சொல்லி ஒரு விஷயத்தை சொன்னார். எரிக் ஃப்ராம் (Erich Fromm) எழுதிய The Art of Loving என்ற நூல் அப்போது வெளிவந்திருந்தது. அந்த நூலில் எரிக் ஃப்ராம் எதை சொல்கிறாரோ அதை பகவான் ரஜ்னீஷ் முப்பதாண்டுகளுக்கு முன்பே சொல்லியிருப்பதாக விஜயன் பேசினார். ஒரு படுக்கையில் நான்குபேர் என்ற தலைப்பில் கேள்விபதிலாக அமைந்திருந்த ஒரு கட்டுரை அது. அதில் ஓஷோ ஒரு பெண்ணிடம் சொல்கிறார், ‘நீயும் உனது கணவனும் படுக்கையில் இருக்கும்போது உண்மையில் அதில் நான்குபேர் இருக்கிறீர்கள். உனது கணவனை பற்றிய உனது பிம்பம், உன்னைப்பற்றிய உன் கணவனின் பிம்பம், அத்துடன் உண்மையான நீங்கள் இரண்டுபேர் என மொத்தம் நான்குபேர் இருக்கிறீர்கள். இந்நான்கு புள்ளிகளும் உருவாக்கும் முடிவற்ற சாத்தியக்கூறுகள் வழியாகத்தான் உங்கள் உறவுகள் ஒவ்வொருநாளும் நிகழ்கிறது’.
நாம் எப்படி மானுட உறவுகளை உருவாக்கிக் கொள்கிறோம். ஒரு மனிதனைப்பற்றி நாம் கொண்டிருக்கும் பிம்பத்துடன்தான் உண்மையில் உறவு வைத்துக்கொள்கிறோம். அந்த மனிதனை நாம் அறிவதில்லை. அவரைப்பற்றிய பிம்பத்தை வைத்து அம்மனிதனை நாம் வசதியாக மறைத்துக்கொள்கிறோம். அதுவே அவர் என நம்புகிறோம். அந்த பிம்பத்தோடு உறவுகொள்வதுதான் சாத்தியம், அதற்கப்பால் அம்மனிதரைப் பற்றிய உண்மையை நம்மால் அறியமுடியாது என்கிறார் எரிக். அம்மனிதர் உங்களுக்கு காட்டும் முகம் ஒரு நடிப்பு என்றாலும்கூட, நடைமுறையில் அவ்வளவுதான் சாத்தியம் என்கிறார்.
அந்த உரையை கேட்டபோதுதான் ‘இவர் யாரைப்பற்றி சொல்கிறார், அந்த செக்ஸ் சாமியார் பற்றியா ? அவர் இவ்வளவு ஆழமாக பேசியிருக்கிறாரா’ என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அப்போதுதான் முதன்முறையாக ஒரு சிந்தனையாளராக ஓஷோ எனக்கு அறிமுகமாகிறார். அப்போது வினோத் கன்னா என்ற இந்தி நடிகர் நடிப்பை விட்டுவிட்டு ஓஷோ கம்யூனுக்கு சென்று துறவியாகியிருந்தார். அதுபற்றிய செய்திகள் பரபரப்பாக வந்துகொண்டிருந்தன. இத்தகைய பரபரப்புச் செய்திகளை தாண்டி ஓஷோ இவ்வளவு நூல்களை எழுதியிருக்கிறார் என்றோ, இவ்வளவு உரைகளை ஆற்றியிருக்கிறார் என்றோ எந்த செய்தியும் வரவில்லை.
ஓஷோ இந்தியாவை விட்டுச்சென்று, அங்கே பிரச்சினைகளுக்கு ஆளாகி, மீண்டும் இங்குவந்து, தொண்ணூறுகளில் மறைந்த பிறகுதான் அவருடைய நூல்கள் தமிழில் பரவலாகக் கிடைக்க ஆரம்பித்தன. அவர் பேசிமுடித்து முப்பதாண்டுகளுக்கு பிறகுதான் தமிழில் ஒரு சிந்தனையாளராக அறிமுகமானார். நமக்கு ஓஷோ என்ற அந்த ஆளுமையை, சங்கடமான சிக்கலூட்டக்கூடிய அந்த மனிதனை, தவிர்த்துவிட்டு அந்த சிந்தனைகளை பார்ப்பதற்கு அவர் மறையவேண்டியிருந்தது. இது நவீன காலமாகிவிட்டது. இதுவே கொஞ்சம் பழைய காலமாக இருந்திருந்தால் நாம் வசதியாக ஒரு சிலுவையை உருவாக்கி அவரை அறைந்து, புனிதராக்கி அல்லது தெய்வமாக ஆக்கி கோவிலில் நிறுத்தியிருப்போம். தீர்க்கதரிசிகளோ சிந்தனையாளர்களோ உயிருடன் இருக்கையில் ஒருவித சங்கடத்தை அளிக்கிறார்கள். அவர்களை சிலையாக, ஒருவித அடையாளமாக மாற்றவேண்டியுள்ளது. அதன்பிறகு நாம் அவர்களை சௌகரியமாக அணுகுகிறோம். நான் தொண்ணூறுகளில் யோகி ராம்சுரத்குமாரை சந்தித்தபோது அவரிடம் சொன்னேன், ‘இங்கு சுற்றியிருக்கும் அனைவரும் நீங்கள் சிலையாக மாறுவதற்கு காத்திருக்கிறார்கள்’ என்று. கற்சிலை மிகவும் வசதியானது. பேசும் சிலை அவ்வளவு வசதியானது அல்ல.
அக்காலகட்டத்தில் ‘காமத்தில் இருந்து கடவுளுக்கு’ என்ற புத்தகம் தமிழில் வந்தது. அது ஓஷோவின் ஆரம்பகால நூல்களில் ஒன்று. அதன் தலைப்பு காரணமாகவே இங்கு அதிகமாக படிக்கப்பட்டது. தமிழில் ஒரு சிறப்பான விஷயம் என்னவென்றால் பாலியல் தொடர்பான எதுவும் சிறப்பான விற்பனையை அடையும் என்பதே. தமிழ்ச்சமூகம் மிகப்பெரிய பாலியல் வறுமையும், அதன் விளைவான ரகசியத் தேடலும், அதை ஒளித்துக்கொள்வதற்கான ஒழுக்கப்பாவனைகளும் கொண்டது. மின்சாரம் வந்த புதிதில், பழைய மணிக்கொடி இதழில் ‘மின்சார நீர்’ விற்பனை பற்றிய செய்தி வந்திருந்ததை கண்டிருக்கிறேன். தண்ணீரில் மின்சாரம் பாய்ச்சி, அதை குப்பிகளில் அடைத்து ,ஆண்மை விருத்திக்கு என்று சொல்லி விற்றிருக்கிறார்கள். ஆண்மை விருத்திக்கு நல்லது என்று சொல்லி எதை வேண்டுமானாலும் விற்கக்கூடிய ஒரு பண்பாட்டு வெளி தமிழகம் என்று சொல்லலாம். அன்று குமுதம் உட்பட இதழ்கள் பலமணிநேரம் ஆண்மைச் சக்தியை தூக்கி நிறுத்தக்கூடிய யோகசக்தி உடையவர் என்று ரஜ்னீஷை பற்றி பேசிவந்தன. ‘இருக்கும்போல, நாமென்ன கண்டோம்’ என்று தமிழர்கள் அந்த புத்தகத்தை வாங்கிப் படித்தார்கள். அப்படித்தான் அந்த புத்தகம் தமிழகம் முழுக்க பரவலாக அறியப்பட்டது.
அதற்கும் முன்னால் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் ‘அறிந்ததினின்றும் விடுதலை’ என்ற புத்தகம் தமிழில் வந்திருந்தது. நான் அன்று பலவிதமான தத்தளிப்புகளில் இருந்த காலம். அப்போது அந்த புத்தகத்தை படித்தேன். ஜே.கே. பற்றிய எனது விமர்சனம் ஒன்று இப்போதும் உண்டு. படிக்கப்படிக்க சரியானது என்று தோன்றி, படித்து முடித்தவுடன் ஒட்டுமொத்தமாகவே அந்தப்பார்வை தவறானதாக நமக்குள் மாறக்கூடிய விசித்திரமான ஒரு தன்மை அதில் உண்டு. எனக்கு அந்த புத்தகத்தை படித்து முடித்தவுடன் எதோ வலையில் விழுந்து மாட்டிக்கொண்டது போல இருந்தது. ஒன்றும் செய்யவேண்டியதில்லை, சும்மா ஒழுகிச் சென்றுகொண்டே இருந்தால்போதும், தியானமும் அறிதலும் ஆராய்தலும் பயனில்லை. எந்தச் செயலும் வெறும் எதிர்விளைவையே உருவாக்கும். எதை அறிந்தாலும் அறிவைத்திரட்டி மேற்கொண்டு அறியாமல் தடுத்துக்கொள்வதையே செய்கிறோம்… இப்படியே செல்லும் சிந்தனைகள். எப்போதுமே ஜே.கே.யின் நூல்களை படிக்கும்போது ஏற்படும் கேள்வி, ‘சரி,இப்போ என்னங்குற?’ என்பதுதான்.
அந்த வலையில் இருந்து என்னை வெளியே கொண்டுவந்தது ஓஷோவின் காமத்திலிருந்து கடவுளுக்கு தான். அதன்பிறகு வெறியுடன் சிலகாலம் ஓஷோவை படித்தேன். இந்த உரைக்காக மீண்டும் தனியே ஓஷோவை படிக்கக்கூடாது என்ற முடிவுடன் இருந்தேன். மீண்டும் அவரை படிக்க முடியுமா என்பதும் தெரியவில்லை. நான் எனக்கு ஓஷோ என்ன பொருள் அளித்தார் என்றே பேச விரும்புகிறேன். நுணுக்கமான ஓர் ஆய்வை நான் முன்வைக்கவில்லை. இந்நூற்றாண்டில், ஓஷோ உச்சத்தில் இருந்தபோது தன் அறிதல்பயணத்தைத் தொடங்கிய ஓர் இந்திய எழுத்தாளனுக்கு, அடுத்த தலைமுறையினனுக்கு, ஒட்டுமொத்தமாக அவர் என்னவாக பொருள்படுகிறார் என்பதுதான் இந்த உரையின் பேசுபொருள்.
பல இடர்களிலிருந்தும் தளைகளிலிருந்து ஓஷோ நம்மை எப்படியெல்லாம் விடுவிக்கிறார் என்பதை சொன்னேன். பசுமாட்டிற்கு மூக்கை சுற்றி கயிறுகட்டி மூக்கணாங்கயிறு போட்டிருப்பார்கள். எருமைக்கு மூக்கில் உள்ள மெல்லிய சவ்வில் ஒரு வளையத்தை போட்டு பிடித்திருப்ப்பார்கள். கரடிக்கு அதன் விரைப்பையில் துளையிட்டு அதில் கம்பியை கட்டி பிடித்திருப்ப்பார்கள். மரபு உங்களுக்கு எத்தகைய மூக்கணாங்கயிறு போட்டிருக்கிறது என்பது உங்களுக்குத்தான் தெரியும். எனக்கு போட்டிருந்தது கரடிக்கு போட்டிருந்தது போல. அதைவிட்டு வெளியே வருவதற்கு எனக்கு ஓஷோ பெரிய அளவில் உதவினார்.
இன்று இந்த மேடையில் ஓஷோவை பற்றி பேசும்போது மிகுந்த நன்றியுணர்வுடன், என்னை கட்டியிருந்த வாதைகளில் இருந்து விடுவித்த ஒரு பேயோட்டி என்ற அளவில்தான் பேசுகிறேன். இங்கு ஒரு பெரிய பாவனை இருந்துகொண்டிருக்கிறது. நான் சிறுவனாக இருந்தபோது எம்.ஜி.ஆரின் இதயக்கனி என்ற படம் வந்தது. அந்த படத்தில் ‘இன்பமே உந்தன் பெயர் …’ என்றொரு பாடல் உண்டு. அந்த பாடல் அளவுக்கு மோசமான ஒரு போர்னோகிராஃபி இன்றுகூட இணையத்தில் கிடைக்காது. ஆடைகள் அணிந்திருப்பது மட்டும்தான் வேறுபாடு. சிவாஜி கணேசனின் ஒரு படத்தில் வரும் ‘நாலுபக்கம் வேடர் உண்டு’ என்றொரு பாடலில் சிவாஜியும் சுஜாதாவும் ஒரு குழிக்குள் இருப்ப்பார்கள். அந்தக் குழியின் அனைத்து சாத்தியங்களையும் அவர்கள் பரிசீலிப்ப்பார்கள். அந்த அளவுக்கு ஒரு மோசமான போர்னோகிராஃபி இன்றுவரை இல்லை. ஆனால் இதையெல்லாம் அம்மா, பிள்ளை என்று குடும்பமாக சென்று பார்த்துக்கொண்டிருந்தோம். அது நமக்கு தவறாக தெரியவில்லை. ஆனால் முத்தமிட்டுக்கொண்டால் ஆபாசம். ஒரு கதையில் முலை என்று சொன்னால் அது ஆபாசக்கதை. ஒரு சாதாரண ஆண்பெண் உறவு விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது, கேட்டால் அதிர்ச்சியடைவோம். இத்தகைய அபத்தமான பாவனையை நமக்கு சுட்டிக்காட்டி இதிலிருந்து வெளியே வருவதற்கான வழியை திறந்தவர் ஓஷோ. அதன்பிறகுதான் நான் அவரை தொடர்ந்து படிக்கத்தொடங்கினேன்.
(மேலும்)
கோளேரி வினோத்குமார்
தமிழிசை முன்னோடிகளில் ஒருவர்பெரியசாமித் தூரன்.அவர் நினைவாக வழங்கப்பட்டுவரும் தமிழ்விக்கி-தூரன் விருது இந்த ஆண்டு வெ.வேதாசலம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. விழா வரும் ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நிகழ்கிறது. அவ்விழாவில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கே உரிய இசைமரபான நாதஸ்வரத்தில் இளைய தலைமுறையில் முதன்மைக் கலைஞர்களை அடையாளம் காட்டி வருகிறோம். இந்த ஆண்டு அந்த இசைக்குழுவில் நாதஸ்வர இசைக்கலைஞரான கோளேரி வினோத்குமார் கலந்துகொள்கிறார்
கோளேரி வினோத்குமார் – தமிழ் விக்கி
தேவதேவன் அருகிருத்தல்- நாகநந்தினி
சில நாட்கள் எல்லாம் நன்றாக அமைந்து விடுகின்றன. சென்ற ஜூலை 6 ஆம் தேதியும் அப்படி ஒரு நாள். கவிஞர் வேணு வேட்ராயன் அவர்கள் ஒருங்கிணைத்த “தேவதேவன் அருகிருத்தல்” கவிதை சந்திப்பில் 20 பேர் பங்கெடுத்தோம். ஒரு மாதமாக தேவதேவன் அவர்களின் கவிதையின் மதம் கட்டுரை, “நீல நிலாவெளி” மற்றும் “பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்” கவிதை தொகுதிகளை வாசித்து கொண்டிருந்தேன். நண்பர்கள் வாட்ஸ்அப் குழுமத்தில் பகிர்ந்த பல முக்கியமான கவிதைகளையும் வாசித்தேன்.
புதிய திறப்புகள்
கவிதையின் மதம் கட்டுரைகள், ஆளுமைகளை துறப்பது குறித்து விரிவாக பேசியது. கவிதை கூடுகையின் முதல் கேள்வியே, ஆளுமைகளை ரத்து செய்வது குறித்து தான் எழுந்தது.
கவிஞர் கொட்டும் அருவி போல், சீராகவும், மிகவும் மென்மையாகவும் தன் கருத்துக்களை முன்வைத்தார் . எந்த ஒரு விஷயத்தையும் தத்துவமாக ஆக்கி விட்டால், அதை அமைப்புகள் கைக்கொள்ளும். அதன் உண்மையான சாராம்சம் திரிந்து விடும் என்று பொறுமையாக, பல உதாரணங்களுடன் விளக்கினார்.
இயற்கை கொடுமையானதா, ஒன்றை ஒன்று அடித்து தின்பதா என்கிற கேள்விக்கு, முற்றிலும் புதிய விளக்கம் கொடுத்தார். தேவை அன்றி இயற்கை எடுக்காது என்று புரிய வைத்தார். அனைத்து வாழ்வுகளும் மகத்தானவை. அதே சமயம் அவை பெரிய அடையாளங்களை விட்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இயல்பாக இருந்தால் போதும் என்று விளக்கினார்.
பட்டாம்பூச்சி பற்றிய அவரது கவிதையை மேற்கோள் காட்டி, வாழ்க்கையின் நிலையாமையை, அத்தனை மகிழ்ச்சியான ஜீவனும், ஒரு அடையாளமும் இல்லாமல் இறந்து போகும் தன்மைதான், நிதர்சனம் என்று சொன்னார்.
கவிதை ஒரு ஆன்ம அனுபவம்
கடவுள் பற்றிய கவிதையில், மனிதன் செய்கின்ற அனைத்து தீமைகளுக்கும், கடவுளை பொறுப்பாக்க முடியாது என்ற இடத்தை விளக்கி, கவிஞரின் தரிசனத்தை முன் வைத்தார். மிகவும் ஆழமாக சென்ற அந்த கலந்துரையாடல் மூலம், சமூகத்தில் கவிஞர்கள் வகிக்கும் பங்கு எவ்வளவு முக்கியமானது என்று புரிந்து கொள்ள முடிந்தது.
கவிஞர்கள் ஒரு வகையில் விதி சமைப்பவர்கள். அவர்களுடைய உச்ச நிலை தான் கவிதை ஆகிறது. கவிஞர் தன்னை பற்றிய சுய அடையாளத்தை/ஆளுமையை விடும் பொழுதுதான், கவிதை ஒரு ஆன்மீக அனுபவமாக விரிகிறது என்கிறார்.
இந்த நிலையில் இருந்து தான் கவிஞர்கள் சமரசமற்ற கவிதை படைக்க முடியும் என்றார். ஒரு உயர்ந்த தரிசனம் இல்லாத, ஆன்மீக அனுபவமாக இல்லாத எதுவும் நல்ல கவிதையே அல்ல என்று சொன்னார்.
உதிர்ந்த இலைகள் , அரைகுறை உள்ளொளி , பிரமிள்
ஏன் உதிர்ந்த இலைகளை பற்றி இத்தனை கவிதைகள் எழுதுகிறீர்கள் என்று கேட்டதற்கு, தன் கண்ணில் அவை தொடர்ந்து கண்ணில் பட்டு கொண்டு இருப்பதாகவும், வாழ்க்கையின் உண்மையை அதில் பார்ப்பதாகவும் சொன்னார்.
தனக்கே உரிய மென்மையான பாணியில், சாமியார்களையும், ஆன்மீக குருக்களையும், அரைகுறை உள்ளொளி பெற்றவர்கள் என்று விமர்சித்தார். பிரமிள் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, தன்னுடன் அவருடைய பரிச்சயம், பிரமிள் எழுத வந்த சூழ்நிலை, அப்பொழுது எழுத்து உலகில் இருந்த அரசியல் எல்லாவற்றையும் சுருக்கமாக விளக்கினார்.
பெண்களை பற்றி
பெண்களை பற்றி பெண்களே எழுதும் கவிதைகளில் கூட, இயல்பாக பெண்கள் விரும்பும் அடையாளத்தை துறக்க சொல்லியோ, அல்லது அலங்காரம் போன்ற விஷயங்களை கேலி செய்தோ சில வரிகள் வரும். ஆனால் தேவதேவன் அவர்கள், அத்தகைய கூறுகளை, பெண்மையின் இயல்பாக ஏற்று கொண்டு, அவற்றை அங்கீகரித்து எழுதுவார்.
“முடிச்சு” என்கிற கவிதையில் வரும் முதுகு பற்றிய விவரணைகள், அதை ஆணின் பரந்த மார்போடு ஒப்பிட்டு எழுதியதை குறித்து அவரிடம் கேட்டோம். பெண்களின் முகத்தை விட்டு முதுகை ஒரு நட்பான, ஆதுரமான உறுப்பாக காட்டியது எப்படி என்று வியந்து பாராட்டினோம்.
அதை பற்றி அவரிடம் கேட்ட பொழுது, தானே ஒரு பெண்ணாக உணர்ந்த தருணங்களை சொன்னார். மிக சிறிய வயதில், தன்னுடைய அக்காவின் தோழிகள் சூழ்ந்த இடத்தில் இருந்ததை நினைவு கூர்ந்தார்.
நீலி இதழில் அவர் எழுதிய “புதிய ஏற்பாடு” கவிதையை மேற்கோள் காட்டி, ஆண் பெண் உறவு பரிமாணத்தை பற்றிய தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இந்த விஷயத்தில் தன்னுடைய மனநிலையே, எவ்வாறு முன்பு இருந்ததை விட மாறி இருக்கிறது என்று, தனிமையில் ஞானம் தேடும் தன்னுடைய பழைய கவிதையை கூறி விளக்கினார்.
வாசக உரையாடல்
மூன்று வகையான வாசகர்களை தான் தொடர்ந்து சந்திப்பதாக சொன்னார். அவர் மீது மிகவும் பக்தி கொண்டவர்கள், அவரை பற்றிய அறிமுகம் இல்லாதவர்கள், அவரை தீவிரமாய் எதிர்ப்பவர்கள்.இரண்டாம் வகை வாசகர்கள்தான் மிகவும் முக்கியம் என்றும், தான் அவர்களுடன் உரையாடி, தன்னை பற்றி ஒரு புரிதலை உண்டாக்க முயற்சி செய்வதாக கூறினார்.
கூடுகையின் ஆரம்பத்திலேயே, தன்னை பாராட்டி பேச வேண்டாம் என்றும், கவிதை பற்றி இருக்கும், புரிதல் சார்ந்த சந்தேகங்களை தீர்த்து கொள்ளும்படியும் சொன்னார்.அவருடைய முக்கியமான கவிதைகளை ஒருவர் படிக்க, எந்த வரி, எப்படி முக்கியம் என்று விளக்கினார். யாரையும் புண்படுத்த கூடாது என்பதை தன் இயல்பாகவே கொண்டு இருக்கிறார் இந்த பெரும் கவிஞர்.
தண்ணீருக்காக காத்திருந்த பொழுதும், அந்த வீட்டுக்காரர்கள் மனம் வருந்தி விடக்கூடாது என்று, திரும்பி வராமல் நின்ற மனம் அவருக்கு. மானசா கிருபாவின் குழந்தைக்கு கதை சொல்லி தூங்க வைத்ததையும், அந்த கவிதையை “ஏஞ்சல்” தொகுதியில் இருந்து படிக்கவும் வைத்தார்.
அருமையான ஏற்பாடுகள்
கூடுகை நடந்த பிகின் பள்ளி, ஒரு சோலை போல மரங்கள் சூழ, அருமையான இயற்கை கட்டுமானத்துடன் இருந்தது. சரண்யா உணவு, மற்றும் இதர ஏற்பாடுகளை அருமையாக செய்து இருந்தார்.
கவிஞர் வேணு வேட்ராயன் அவர்கள், தொடர்ந்து கேள்விகள் கேட்டு, கூடுகையை சுவாரஸ்யமாக கொண்டு சென்றார். கவிநிலவனும், தீபாவும் பாடிய பாடல்கள் கூடுகைக்கு செறிவு சேர்த்தன. மழை, மூங்கில் மரங்கள் நிறைந்த பூங்கா, மனம் ஒத்த நண்பர்கள் என்று மொத்த நாளும் கொண்டாட்டமாக இருந்தது.
கூடுகையில் கற்றுக்கொண்டவை
கவிதையை, மிகவும் deconstruct செய்ய முயற்சி செய்ய கூடாது. நேரடியாக புரிந்து கொள்வதை விடவும், கவிஞர் கொண்டுள்ள பொது கருத்துக்கள் மூலம் அதை புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். கவிஞருடனான சந்திப்புகள், உரையாடல்கள் அதற்கு மிகவும் உதவும்.கவிதைக்கு மிகவும் அலங்காரமான வார்த்தைகளோ, உருவகங்களோ தேவை இல்லை. மிக எளிமையான மொழியில், உறுதியான கருத்துக்களை சொல்லி விட முடியும்.கவிதையை, கதை போல வாசிக்காமல், சில முறை வாசித்து விட்டு, அது புரிவதற்கான நேரத்தை கொடுக்க வேண்டும். அதை பற்றி பல கோணங்களில் சிந்திக்க வேண்டும். பல கேள்விகளுக்கு பதில் அளிக்கும் பொழுது கவிஞர், “இதை நீ முதலில் இப்படி யோசித்து பார்,” என்று தொடர்ந்து சொல்லியபடி இருந்தார்.வாழ்க்கை கவித்துவமான தருணங்கள் நிறைந்தது. கொஞ்சம் திறந்த மனதுடன், அனைத்தையும் ரசிக்க வேண்டும். அதுதான் கவிதையை புரிந்து கொள்வதற்கான முதல் படி.கவிதையின் தளம் மிகவும் சுருக்கமானது. குறைந்த வார்த்தைகளில், கவிஞருக்கும் படிப்பவருக்கும் ஆன பொதுவான ஒன்று புரிந்துகொள்ள படுகிறது. சில சமயம் அதில் தவறுகள் நேரலாம். ஒவ்வொருவருக்கும் வேறு, வேறு அர்த்தங்கள் புரிபடலாம். அது வாசிப்பின் போதாமை தான். தொடர் வாசிப்பும், விவாதமும், உரையாடலும், அத்தகைய தவறான புரிதல்களை களைய உதவும்.மிகவும் நன்றியுடன்,
நாக நந்தினி
புராணமயமாதல்
என்னைப் பொறுத்த அளவில் குரு என்பவர் நிச்சயமாக மதிக்கப் பட வேண்டியவர். என்னை விட மேலானவர். உதாரணமாகத் தமிழ் இலக்கியத்தில் எனக்கிருந்த ஒரு சுவையை மறுபடியும் உங்கள் தளம் மூலம்தான் பெற்றேன். அவ்விஷய்த்தில் உங்களை குருவாக நான் மதிப்பேன். ஆனால் நீங்களும் ஒரு மனிதர், விருப்பு வெறுப்பு நிறைந்தவர் என்ற ஒரு கோணமும் என்னிடம் இருக்கும்.
புராணமயமாதல்I enjoyed Ajithan’s two conversations regarding Western philosophy and Wagner. It seems he is personally obsessed with Schopenhauer and Wagner. I came to know that he is your son and an energetic, creative writer. However, he is not mentioning any creative writers as his icons.
Schopenhauer and WagnerJuly 30, 2025
பண்பாட்டின் தொடக்ககாலத்தைத் தேடி
நம் மதம், நம் பண்பாடு, நம் நம்பிக்கைகளின் வேர்கள் எங்கே உள்ளன? தேடித்தேடிச்சென்றால் குகைகளில் மனிதர்கள் வாழ்ந்த தொன்மையான காலகட்டத்திற்கே செல்லவேண்டியிருக்கிறது. அங்கே அவர்களின் வாழ்க்கைப்போராட்டம் மட்டும் அல்ல அவர்களின் கனவுகளும்கூட பதிவாகியுள்ளன. அவற்றிலிருந்தே நாம் நம் அகம் என நினைக்கும் அனைத்தும் உருவாகியுள்ளன.
உடனிருப்போர்
வணக்கம்.
நான் இணையத்தில் தங்கள் பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக வாசித்து வருபவன். கிட்டத்தட்ட ஆரம்பகால பதிவுகளில் இருந்தே தொடர்ந்து வருகிறேன்.
நடுவில், வேலை நெருக்கடியில் சில நாட்கள் தவறிவிட்டால், விட்டதை ஒரே மூச்சில் தேடிப்படித்த பின்பே மனம் இயல்பாகும். இப்போதுவரை அப்படியே.
அப்படிதான், ‘காவியம்‘ ஆரம்பித்த சிலநாட்கள் தொடர்ச்சியாக வாசித்துவந்தேன். பின்பு, வேலை நெருக்கடியில் சில நாட்கள் தவறவிட்டேன். மீண்டும் தொடரச்சென்றபோது தவறவிட்ட அத்தியாயங்கள் காணக் கிடைக்கவில்லை.
ஏன் இப்படி?
இருக்கும் அத்தியாயங்களில் ‘காவியம்‘ படித்து முடித்தாகிவிட்ட போதிலும் படிக்காமல் விட்ட ‘அந்த‘ அத்தியாயங்கள் மனதில் குறையாகவே நிற்கின்றன.
ஏன் இப்படி!?
சத்யானந்தன்
*
அன்புள்ள சத்யானந்தன்,
நாவல்களை தொடராக இந்த தளத்தில் வெளியிடுவது இரண்டு காரணங்களுக்காக. ஒன்று, எனக்கே அவற்றை தொடர்ச்சியாக எழுதி முடிக்கும் தீவிரம் அமையவேண்டும் என்பதற்காக. இரண்டு, எனக்கு மிக அணுக்கமான வாசகர்களுடன் அந்த கதைமூலம் ஒரு தொடர் உரையாடலில் இருக்கவேண்டும் என்பதற்காக.
என் தீவிர வாசகர்களுக்காக மட்டுமே இவை எழுதும்போதே தொடராக வெளியிடப்படுகின்றன. பாதிக்குமேல் வாசகர்கள் தொடர்ச்சியாக வாசிக்காமல் தோன்றியபோது அவ்வப்போது வந்து வாசிப்பவர்கள் என அறிவேன். அவர்களின் வாழ்க்கைச்சூழல்களும் அதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் ஒவ்வொருநாளும் வந்து வாசிப்பவர்கள் மட்டுமே என்னுடன் ஒரு மானசீக உரையாடலில் இருப்பவர்கள், என் உண்மையான வாசகர்கள் என்பது என் எண்ணம். அவர்களுடன் நான் நேரிடையாக உரையாடாமல் இருக்கலாம், ஆனால் நான் அவர்களுடனேயே இருக்கிறேன். ஆகவே நாவலை எழுதும்போது அவர்களும் உடனிருக்க விரும்புகிறேன்.
இது தொடர்கதை அல்ல. எழுதப்படும் ஒரு நாவல் மட்டுமே. அதாவது அது நாவலின் பணிச்சாலை மட்டுமே. எழுதப்படும்போதே ஒரு படைப்பை வாசிப்பது என்பது மிக அணுக்கமானவர்கள் மட்டுமே செய்யவேண்டிய ஒன்று இல்லையா? பல சமயம் எழுதப்பட்டு ஐந்து நிமிடங்களுக்குள் இதன் அத்தியாயங்கள் வெளியாகின்றன. எழுதி முடிக்கப்பட்டபின் நாவல் மேலும் சீரமைக்கப்பட்டு, தொகுப்பாளர்களால் பார்க்கப்பட்டு, நூல்வடிவம் பெறும். வாசிக்காமல் விட்டவர்கள் அப்போது வாசிக்கலாம். இணையத்தில் முழுமையாக நாவல் இருக்குமென்றால் உடனடியாக அவை பிடிஎஃப் வடிவில் சுற்றுக்கு விடப்படுகின்றன என்பதனால் அவை நீக்கம் செய்யப்படுகின்றன. இணையத்தில் இருந்து நீக்கப்பட்டாலும் சுழற்சிக்கு விடப்படுகின்றனதான், ஆனால் அந்த அளவுக்கு இல்லை.
வெண்முரசு முழுக்கவே இணையத்தில் உள்ளது. அதற்குக் காரணம் அதன் விலை. அந்த விலை காரணமாக வாசிக்க விரும்புபவர்கள் அதை வாசிக்காமலாக வேண்டாம் என்பதனால் அதை மட்டும் இணையத்தில் இருந்து நீக்கவில்லை. அதை வாங்குபவர்கள் ஒரு சேமிப்பாக, உரியவர்களுக்கு ஒரு பரிசாக, ஒரு அடையாளமாகவே பெரும்பாலும் வாங்குகிறார்கள்.
ஜெ
ஓஷோ: மரபும் மீறலும்-4
இந்த உரை யாருக்காக ?
(2021 மார்ச் 12,13,14 தேதிகளில் கோவையில் கிக்கானி அரங்கில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். எழுத்தில் பதிவுசெய்தவர் விவேக் ராஜ் )
நண்பர்களே,
ஓஷோ பற்றிய உரையின் இரண்டாவது நாளாகிய இன்று, இந்த உரையை உண்மையிலேயே தொடங்கவிருக்கும்போது, மேலும் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த உரை யாருக்காக?
முதன்மையாக, பொதுவாசகர்களுக்காக. ஓஷோவை பற்றிய சிறிய அறிமுகங்கள், குட்டிக் கட்டுரைகள், அவரைப்பற்றிய மேற்கோள்கள், அவ்வப்போது எவராவது ஓஷோவைப்பற்றி சொல்லக்கூடிய வரிகள் வழியாகவே அறிந்திருக்கக்கூடியவர்களுக்காக. அதாவது இலக்கியம், அரசியல், சமூகவியல் ஆகியவற்றில் நூல்களைப் படிக்கக்கூடிய பொது வாசகர்களுக்காக. அத்தகைய வாசகர்களுக்கு ஓஷோவை எப்படி புரிந்துகொள்வது, எங்கே நிறுத்துவது, எப்படி தொடங்குவது என்ற அறிமுகத்தை அளிப்பதற்காகவே இந்த உரையை இங்கு ஆற்றுகிறேன்.
இரண்டாவதாக, ஆன்மீகமான தேடல் கொண்டு, மரபார்ந்த ஆன்மீகத்தில் இருந்து வெளியே வந்து வேறொரு வகையான ஆன்மீகத்தை நோக்கி செல்லக்கூடிய இடத்தில் இருக்கக்கூடியவர்கள் சிலர் உள்ளனர். அவர்களுக்கு ஓஷோவிடம் செல்லத்தக்க ஒரு பாதையை துலக்குவது இந்த உரையின் நோக்கம்.
மூன்றாவதாக, இந்திய சிந்தனை மற்றும் மெய்ஞான மரபை ஒட்டுமொத்தமாக தொகுத்துக்கொள்ளவும் புரிந்துகொள்ளவும் முயற்சி செய்யக்கூடியவர்கள் சிலர் உள்ளனர். அவர்களுக்காக அந்த மாபெரும் பரப்பில் ஓஷோ என்ற மனிதரை, சிந்தனையாளரை, ஞானியை எங்கு வைப்பது என்றும், அவருடைய முன்பின் தொடர்ச்சிகள் என்ன என்றும் வரையறுக்க முயல்கிறேன்.
என்னுடைய தகுதி என்ன ?
சரி, இந்த உரையை ஆற்றுவதற்கான என்னுடைய தகுதி என்ன என்பதையும் நானே கேட்டுக்கொள்கிறேன். பொதுவாக நம் மரபில் அதையும் ஒருவன் சபை நடுவே சொல்லியாகவேண்டும் என்னும் வழக்கம் உள்ளது. அறிவுச்சபைகளில் போலித்தன்னடக்கம் பிழையானது, தன் தகுதியை அறிவித்துக்கொள்வதே அடிப்படையான தேவை. என் தகுதிகள் என்னென்ன?
1. இலக்கியவாதி
எனது முதல் தகுதி, நான் ஓஷோவின் அடிப்படைப் பேசுபொருளான இலக்கியத்தைச் சார்ந்தவன் என்பது. இன்று ஓஷோ இருந்திருந்தால் அவரால் மேற்கோள் காட்டப்படும் தகுதி கொண்ட இலக்கியவாதி என்றே என்னைச் சொல்வேன். நான் தஸ்தாயெவ்ஸ்கியை விட ஒருபடி குறைவானவனாக என்னை நினைக்க மாட்டேன். இன்று இந்த உலகத்தில் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் குறைந்தபட்சம் பத்துபேர்தான் எனக்கு நிகரானவர்களாக இருப்பார்கள் என்று நான் உறுதியாகவே சொல்லமுடியும்.
2. தத்துவ மாணவன்
தத்துவம் பற்றிப் பேசும் தகுதி என்ன என்று பார்த்தால், நான் ஒரு தத்துவ மாணவன். இந்தியாவின் தலைசிறந்த தத்துவஞானி என்று சொல்லத்தக்க ஒருவருடைய மாணவன். குரு நித்யாவின் காலடியில் பல ஆண்டுக்காலம் அமர்ந்தவன். நாராயணகுருவின் தத்துவ மரபின் தொடர்ச்சி என்று என்னை அடையாளப்படுத்திக்கொள்பவன். இந்த எல்லையை தாண்டி வேறு எதையும் நான் கோரமாட்டேன்.
3. ஆன்மீக நாட்டம்
ஆன்மீகத் தகுதி என்ன என்று பார்த்தால், முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆன்மீக தேடல் கொண்டு அலைந்து திரிந்து ஆசிரியர்களை கண்டடைந்தவன். என் வகையில் ஒரு யோகசாதகன் என்ற அளவிலே இந்த உரையை ஆற்றுகிறேன்.
ஓஷோவின் மூன்று முகங்களான இலக்கியம், தத்துவம், ஆன்மிகம் என்பதில் எனது தகுதி என்பது இதுதான். இதை ஓரளவேனும் ஏற்றகவர்கள் என் உரையை கவனிக்கலாம், அல்லாதவர்கள் புறக்கணிக்கலாம். ஒன்றும் பிழையில்லை.
இதற்கப்பால் உள்ள ஒரு கேள்வி, எந்த மரபில் இருந்துகொண்டு இந்த உரையை நான் ஆற்றுகிறேன் என்பது. நான் ஓஷோவின் மாணவனோ அவருடைய மரபை சேர்ந்தவனோ அல்ல. நான் இங்கு நித்ய சைதன்ய யதியின் மாணவனாக, நாராயணகுருவின் அத்வைத மரபை சேர்ந்தவனாக நின்றுதான் பேசுகிறேன். ஓர் அவையில் பேச எழுகையில் தன் மரபு என்ன, தன் நிலைபாடு என்ன என்பதையும் சொல்லியாகவேண்டும் என்னும் வழக்கம் இந்தியாவில் உண்டு.
அத்வைத மரபை சார்ந்தவனுக்கு ஓஷோவை பற்றி பேசுவதற்கான இடம் இருக்கிறதா என்பது அடுத்த கேள்வி. அவர் எல்லா மரபுகளையும் நிராகரித்தவர் அல்லவா? ஒரு குறிப்பிட்ட தத்துவக் கொள்கையைக் கொண்டு அவரை விவாதிப்பது சரியாகுமா? நித்யா வேடிக்கையாக சொன்னதுபோல, அத்வைதம் ஒரு ரப்பர் எண்ணெய். ரப்பர் கொட்டையில் இருந்து எண்ணெய் எடுப்பார்கள். அதற்கு நிறம், மணம், குணம் எதுவும் கிடையாது. அதை எதோடும் சேர்க்கலாம். நாம் அனைவரும் சாப்பிடும் ‘சுத்திகரிக்கப்பட்ட’ தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் அனைத்துமே முக்கால்வாசி ரப்பர் எண்ணெய்தான். அத்வைதமும் அப்படித்தான்.
நீங்கள் எந்தவொரு தத்துவ சிந்தனையை எடுத்துக்கொண்டாலும் அதன் பெரும்பகுதி அத்வைதமாகத்தான் இருக்கும். ஏனெனில், அடிப்படையில் அத்வைதம் என்பது ஒரு தத்துவ கொள்கை அல்ல, அது ஒரு தரிசனம். அதை ஒருமைத் தரிசனம் என்று சொல்கிறார்கள். இரண்டின்மை, பிளவின்மை என்றும் சொல்லலாம். ஆங்கிலத்தில் Absolutism எனலாம். அந்த தரிசனத்தை விளக்கும்பொருட்டு உருவானவைதான் அதன் தத்துவக் கருவிகள். அதாவது அதை ஐயப்படுபவர்களிடம் விளக்கும்பொருட்டும், மறுப்பவர்களிடம் விவாதிக்கும் பொருட்டும், அதை உலகியலில் வைத்து புரிந்துகொள்ள முயல்பவர்களுக்கு விளக்கமளிக்கும் பொருட்டும் உருவானவைதான் அதன் தத்துவமெல்லாம்.
ஆகவே தத்துவ விவாதங்களில் அத்தனை சிந்தனை முறைகளையும் அத்வைதம் எடுத்துக்கொள்கிறது. அதனுடன் உரையாடாத எந்தவொரு தத்துவ சிந்தனையும் இன்று இருக்கமுடியாது. சாங்கிய தரிசனம் பெருமளவுக்கு கிருஷ்ணனுடைய கீதையில் உள்ளது. பௌத்த சிந்தனைகள்தான் சங்கரருடைய சிந்தனைகளை விளக்க பெருமளவிற்கு உதவின. இன்றைய நவீன சமூகவியல், மொழியியல் சிந்தனைகளையும் அத்வைதம் உள்ளிழுத்துக்கொள்ளும். அத்தனை சிந்தனை முறைகளையும் பயன்படுத்திக்கொண்டு தனது தரப்பை சொல்லும் தன்மை அத்வைதத்திற்கு உண்டு. ஆகவே ஒரு அத்வைதி நவீன அறிவியலை எடுத்துக்கொண்டுகூட பேசலாம். உலகிலுள்ள எல்லாவற்றைப் பற்றியும் அத்வைதம் பேசமுடியும். அத்வைதம் ஒரு நிலைபாடு அல்ல, ஒரு பிரபஞ்ச தரிசனம் மட்டுமே. ஓஷோவைப் பற்றிய விமர்சனத்தை இந்த நிலைப்பாட்டில் இருந்துகொண்டு நான் சொல்லலாம்.
இதற்கும் மேல் ஓர் அத்வைதிக்கு ஓஷோவுடன் உரையாடுவதற்கான பொது இடம் ஒன்று உள்ளது. அவர் கீதை பற்றி எழுதிய மாபெரும் உரை அவருக்கும் அத்வைதத்திற்குமான ஒரு பாதையை திறக்கக்கூடியது. அத்வைதத்தை அவர் எப்படி பார்க்கிறார், அதை அத்வைதம் எப்படி பார்க்கிறது என்பதற்கான விளக்கம் அந்த நூலில் உள்ளது. ஆகவே இந்த நிலைப்பாட்டில் இருந்துகொண்டு ஓஷோவைப்பற்றிய சித்திரத்தை அளிக்கலாம் என்று நினைக்கிறேன்.
(மேலும்)
கும்முடிபூண்டி ஜீவா
தமிழிசை முன்னோடிகளில் ஒருவர் பெரியசாமித் தூரன்.அவர் நினைவாக வழங்கப்பட்டுவரும் தமிழ்விக்கி-தூரன் விருது இந்த ஆண்டு வெ.வேதாசலம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. விழா வரும் ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நிகழ்கிறது. அவ்விழாவில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கே உரிய இசைமரபான நாதஸ்வரத்தில் இளைய தலைமுறையில் முதன்மைக் கலைஞர்களை அடையாளம் காட்டி வருகிறோம். இந்த ஆண்டு அந்த இசைக்குழுவில் தவில் இசைக்கலைஞரான கும்முடிப்பூண்டி ஜீவா கலந்துகொள்கிறார்
கும்முடிபூண்டி ஜீவா
கும்முடிபூண்டி ஜீவா – தமிழ் விக்கி
ஆரணியில் ஒரு முன்னுதாரணம்
எதிர்வரும் ஆகஸ்ட் 1 அன்று துவங்கும் நாகை புத்தக திருவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக சினிமா பிரபலங்கள் அழைக்கப்பட்டமை கொண்டு, 1314 ஆவது முறையாக மீண்டும் மதிப்பீடுகள் சரிந்து விட்டதாக எழுத்தாளர்களில் குறிப்பிட்ட சாரர் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.
கடந்த ஆகஸ்ட் துவங்கி இந்த ஆகஸ்ட் வரை, (நூல் வெளியீட்டுக்கு அழைக்கப்பட்டு பேசபட்டவை, பிற கலந்துரையாடல் அமர்வுகளுக்கு அழைக்கப்பட்டு பேசபட்டவை என்பதை தவிர்த்து,) இந்த சூழலில் கவனம் பெற வேண்டிய நூல் இது என்று ஒவ்வொரு எழுத்தாளரும் எழுதி கவனப்படுத்திய நூல்கள் எண்ணிக்கை எத்தனை இருக்கும்? தொடர்ந்து நூல்கள் குறித்து எழுதிக்கொண்டு இருக்கும் சுரேஷ் பிரதீப், சுனில் கிருஷ்ணன், தொடர்ந்து இலக்கியம் குறித்து பேசிக்கொண்டு இருக்கும் மனுஷ்ய புத்திரன், பவா செல்லத்துரை என ஒரு பத்து பதினைந்து பேர். அவர்களை தவிர்த்தால் மிச்ச எழுத்து “ஆளுமைகள்” எல்லோருக்கும் பேச இருக்கும் ஒரே விஷயம் சினிமா.
எழுத்தாளர்கள் சினிமா குறித்து பேசிக்கொண்டிருக்கும் சூழலில், சினிமா பிரபலங்கள் (அவர்களாவது) புத்தகங்கள் குறித்து பேச வருவது நன்றுதானே.
இதே தேதியில் ஆரணியில் புத்தக திருவிழா நடக்கிறது. அங்கே சுதாகர் என்று ஒரு இலக்கிய வாசகர் இருக்கிறார். நோய் உள்ள இடத்தில்தான் வைத்தியம் தேவை என்பதை போல, இலக்கியம் இல்லா இடத்தில் தொடர்ந்து இலக்கியத்தை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
மாத மாதம் ஒவ்வொரு எழுத்தாளர்களை அழைத்து அங்குள்ள, அறிமுக வாசகர்களுடன் சந்திப்பு ஏற்பாடு செய்கிறார். ஒவ்வொரு எழுத்தாளர் பிறந்த நாளையும் முடிந்த அளவு விளம்பரம் செய்து, அன்று அந்த எழுத்தாளருக்கான சிறப்பு கூட்டம் நடத்துகிறார். (சென்ற தி ஜா பிறந்த நாளுக்கு ஜி குப்புசாமி அவர்கள் சிறப்பு விருந்தினர்).
கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வரும் ஆரணி புத்தக திருவிழாவை ஆரணி சுதாகர்தான் முன்னின்று நடத்திவருகிறார். அதை வாசகர் மத்தியில் கொண்டு செல்ல தன்னால் ஆனது அனைத்தும் செய்கிறார். இலக்கிய நூல்களுக்கு மட்டுமே என தானே தனியாக விழாவில் ஒரு அரங்கம் அமைக்கிறார். ஊர் முழுக்க எழுத்தாளர்களின் முகங்கள் கொண்ட பாதாகைகளை நிறுவுகிறார். ஒவ்வொரு ஷேர் ஆட்டோ, பிற வாகனம் என அந்த ஓட்டுநர் வசம் பேசி, அந்த வாகனத்தில் விளம்பர பதாகை ஓட்டி, கிராமம் வரை செய்தியை கொண்டு சேர்க்கிறார்.
இப்படி வருடம் முழுக்க. இது போக கொரானா முடக்கம் துவங்கிய நாள் முதல் ஒவ்வொரு நாளும் குறைந்தது 100 பேர் பலனடையும் வண்ணம் அன்னதானம் நிகழ்த்திக்கொண்டு இருக்கிறார். வயது முதிர்ந்த ஆதரவற்றோருக்கான இடம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எதிர்கால கனவுடன் சென்று கொண்டிருக்கிறார். எல்லாமே கையில் பெரிதாக காசு இன்றி, சம்பாதிப்பதை இதில் போடுவது, பிறர் வசம் கேட்டு வாங்குவது என்று செய்து கொண்டு இருக்கிறார். (சென்ற ஆண்டு நடிகர் கார்த்தி அவரது பணிக்கு பாராட்டு தெரிவித்து ஆதரித்துள்ளார்)
ஆம், தமிழ் இலக்கியம் தன் இயல்பால் செயல் ஆளுமைகளை பிறப்பித்துக்கொண்டே இருக்கிறது. அந்த நிறையில் ஒருவர் சுதாகர்.
ஆகவே குறிப்பிட்ட அந்த மதிப்பீடுகளின் சரிவு சாரர், பிரியதுக்கு உரிய அந்த ஏழுத்தாளர்கள், நம்பிக்கை இழக்க தேவை இல்லை. அவர்கள் அறியாத சுதாகர் போன்ற ஆளுமைகள் இருக்கிறார்கள். இலக்கியத்துக்கு ஒரு குறையும் நேராது :).
கடலூர் சீனு
மரபிசைப் பயிற்சி- கடிதம்
Sri Manikandan’s conversation is truly an ‘eye opener.’ He enlarges our ‘perception’ and clarifies the ‘vision’ about art. We are living with the eyes only; that is why we have a proverb: ‘For an eight-foot body, eyes are the main organs.
On arts and eyes…நீங்கள் இப்போது கின்டர் கார்டனில் இருக்கிறீர்கள் ஆகவே தொடர்ச்சியான கேட்டல் பயிற்சி வழியாகவே இதற்குள் போக முடியும் என்றார். சங்கதி கமகம் போன்ற தொழில்நுட்ப சொற்களுக்குள் அதிகம் சென்று குழம்பாமல் பொறுமையுடன் கேட்டுப் பழகுவதற்கான பயிற்சி மிக முக்கியமானது என்றார் ஆசிரியர்.
மரபிசைப் பயிற்சி- கடிதம்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers






