சிந்திக்கும் குழந்தைகளுக்காக…
உங்கள் பனிமனிதன் நாவல் என் குழந்தைகளின் ஃபேவரைட் ஆக இருந்தது. பதினைந்து ஆண்டுகளுக்கு பின் நான் என் குழந்தைகளுக்கு அவற்றை வாசித்துக் காண்பித்தேன். தினசரி ஓர் அத்தியாயமாக வாசிப்பேன். அவர்களுக்குபுனைவில் ஆர்வம் உருவாவதற்கும் , நவீன சிந்தனைகள் மேல் ஆர்வம் வருவதற்கும் அது காரணமாக அமைந்தது.
இன்றைக்கு என் அக்காவின் பேரக்குழந்தைகளுக்கு அதே நாவலை ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து சொல்லிக் கொடுக்கிறேன். வெள்ளிநிலம், உடையாள் இரண்டு கதைகளையும் வாசித்துச் சொன்னேன். அவற்றிலுள்ள சாகசக்கதை, நகைச்சுவை ஆகியவற்றுடன் அறிவியலும், தத்துவமும் இணைந்து ஆழமான ஒரு புரிதலை ஏற்படுத்தின.
ஆங்கிலத்தில் ஏராளமான குழந்தை இலக்கியங்கள் உள்ளன. அவற்றை குழந்தைகள் விரும்பி வாசிக்கிறார்கள். அப்படியென்றால் பனிமனிதனோ, வெள்ளிநிலமோ ,உடையாளோ கூடுதலாக அளிப்பது என்ன? அவை இந்தியாவின் குழந்தைக்கதைகள் என்னும் அம்சம்தான் முக்கியமானது. ஓர் இந்தியக்குழந்தை அவற்றை இன்னும் கூர்மையாக ரசிக்கமுடியும். இந்தியப்பண்பாட்டைப் புரிந்துகொள்ளவும் அவை உதவும்.
அதைவிட முக்கியமாக இன்னொன்று உண்டு. அந்த நூல்களிலுள்ள அறிவியல் செய்திகளை ஆங்கிலத்திலும் வாசிக்கலாம், அந்நூல்களிலுள்ள மாயம், சாகசம் எல்லாம்கூட வெளியேயும் உண்டு. ஆனால் அவற்றிலுள்ள வரலாறு, தத்துவம், ஆன்மிகமெய் ஆகியவற்றை வெளியே வாசிக்கமுடியாது. ஓர் இந்தியக்குழந்தையின் மனதில் எழும் பலவாறான கேள்விகளுக்கான விடைகள் இந்த நாவல்களிலுள்ளன. இந்த நாவல்கள் அவர்களே அந்தக் கேள்விகளை விடைகளாக ஆக்கிக்கொள்ளும் வழிகளையும் காட்டுகின்றன. அந்தச் சிந்தனைப்பயிற்சி இன்றைய குழந்தைகளுக்கு மிகமிக அவசியமானது.
தமிழில் இந்த நூல்கள் மிகப்பெரிய கொடை. போதிய அளவுக்கு அவை தமிழில் பெரும்பாலும் வாசிக்கப்படவில்லை. முக்கியமான காரணம் இன்றைய பிள்ளைகள் அதிகமும் ஆங்கிலம் வழியாக வாசிப்பவை என்பதுதான். அவற்றை ஆங்கிலத்தில் சொல்லும் அளவுக்குப் புரிதலும் நம்மவர்களிடம் இல்லை.
என் மனமார்ந்த நன்றிகள்.
ரா. கிருஷ்ணசாமி
அன்புள்ள கிருஷ்ணசாமி,
இந்த மூன்று நாவல்களுமே உடனடியாக ஆங்கிலத்தில் வரவுள்ளன- சர்வதேசப்பதிப்புகளாகவும் வெளிவரவுள்ளன. இவை இந்திய குழந்தைகளை உத்தேசித்து எழுதப்பட்டவை. நம் குழந்தைகளின் அறிவியலறிவும், ஆர்வமும் அதிகம். மொழித்திறன் குறைவு. நம் குழந்தைகளுக்கு நாம் எழுதவேண்டிய நூல்கள் நுட்பமான அறிவியல், வரலாறு, தத்துவம் ஆகியவை கொண்ட நூல்கள். ஆனால் மொழி குழந்தைகளுக்குரியதாக அமையவேண்டும். அந்தவகையில் இவை அமைந்துள்ளன. குழந்தைமொழியில் எழுதப்பட்ட இலக்கிய ஆக்கங்கள் இவை.
குறிப்பாக உடையாள் எனக்கு மிக அணுக்கமான ஒன்று. ஒரு முகமே பிரபஞ்சமாக ஆவது. சாக்தத்தின் அடிப்படையை விளக்கும் ஆன்மிக நூல் அது. அமெரிக்காவில் அதை வாசித்துக்கேட்ட குழந்தை,பத்துவயதான மாணவி, உடனடியாக அதன் பெண்மைய பார்வையைச் சென்றடைந்தது எனக்கு மிக மனநிறைவூட்டிய அனுபவம்.
இன்று குழந்தைகளை வாசிக்கச் செய்தாகவேண்டிய கட்டாயம் அக்குழந்தைகள் ஏதேனும் துறையில் வெற்றிகொண்டவர்களாக அமையவேண்டும் என விரும்புபவர்களுக்கு உள்ளது. அது எளிய வேலை அல்ல. மிகமிகச் சவாலான ஒன்று. உலகம் முழுக்கவே இன்றைய ‘செல்பேசி’ சூழல் குழந்தைகளை காணொளிகள், இணையவிளையாட்டுக்கள் நோக்கி இழுக்கிறது. மேலைக்கல்விச்சூழலில் திட்டமிட்டு குழந்தைகளை வாசிப்பு நோக்கிச் செலுத்துகிறார்கள். பாதிக்குமேல் குழந்தைகள் தப்பித்துக் கொள்கின்றன.
நம் சூழலில் பெற்றோரே குழந்தைகளின் கைகளில் செல்பேசியை அளித்து அந்த உலகுக்குள் தள்ளிவிடுகிறார்கள். மூர்க்கமான மனப்பாடக் கல்வியை அளிக்கும் கல்விநிலையங்கள் உள அழுத்தத்தை அளித்து குழந்தைகளை மேலும் செல்பேசி என்னும் சதிக்குழியை நோக்கிச் செலுத்துகின்றன. நாம் நம் குழந்தைக்கு வாசிப்பை அறிமுகம் செய்யலாம், ஆனால் மற்றகுழந்தைகளை நம் குழந்தைகள் தவிர்க்கமுடியாது. அவர்கள் வளரும் சூழல் அவர்களை சும்மாவிடாது.
ஆகவே மிகமிக ஆற்றலுடன் குழந்தைகளை வாசிப்புக்குள் கொண்டுவரவேண்டும். ஆனால் நம் சூழலில் பெற்றோரே எதையும் வாசிப்பதில்லை. வாசிப்பதன் அவசியம் பற்றிக்கூட நம் பெற்றோருக்குத் தெரிவதில்லை. வாசிப்பு என்பது வெட்டிவேலை என்று நம்பும் கூட்டத்தினரும், அதைப் பிரச்சாரம் செய்யும் மூடர்களும் ஏராளமாக உள்ளனர். வாசிப்பின் வழியாகவே குழந்தை தனக்கான தனி உலகை உருவாக்கிக் கொள்ள முடியும். நூல்கள் மட்டுமே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறனை அளிக்கின்றன. காட்சியூடகங்கள் எவையாயினும் அனைவருக்கும் ஒன்றையே பரிமாறுகின்றன, ஆகவே சராசரிகளையே உருவாக்குகின்றன.
வரும் செயற்கை நுண்ணறிவுக்காலகட்டத்தில் அந்தவகையான சராசரிகள் தவிர்க்கப்படுவார்கள். தனித்திறன் ஒன்றே மதிக்கப்படும். அதை முன்னரே அறிந்துதான் வெளிநாட்டுக் கல்விநிலையங்கள் தனித்திறனை அளிக்கும் கல்வியை முன்னெடுத்தன, அவற்றில் முதன்மையானது வாசிப்புப் பழக்கம்தான்.
ஆனால் குழந்தைகளுக்கு நூல்களை வாங்கிக்கொடுத்தால் மட்டும் போதாது. வாசிக்கும்படிக் கட்டாயப்படுத்தினாலும் பயனில்லை. அவர்கள் சுவாரசியமாக வாசிப்பில் நுழையவேண்டும். எளிய கதைகள் இன்றைய குழந்தைகளுக்குச் சலிப்பூட்டுகின்றன. ஒரு குழந்தை கணிப்பொறி விளையாட்டுக்குள் செல்கிறது என்றால் அதன் மூளைக்கு ஒரு சவால் அங்கே உள்ளது என்றே பொருள். அதற்கிணையான சவாலை வாசிப்பு அளிக்கவேண்டும். அத்தகைய நூல்கள் பல்லாயிரக்கணக்கில் வேண்டியிருக்கின்றன. ஆனால் நம் குழந்தை எழுத்தாளர்கள் தாங்கள் குழந்தைகளாக இருந்தபோது வாசித்தவற்றை இப்போது எழுதுகிறார்கள்.
இந்த தேவையை முன்னுணர்ந்தே நான் பனிமனிதன் உள்ளிட்ட நூல்களை எழுதினேன். அவற்றில் இன்றைய நவீன அறிவியலின் கொள்கைகளை, சமூகவியல் சித்தாந்தங்களை, தத்துவக் கொள்கைகளை விவாதித்தேன். மொழி மட்டும் எளிமையானது, திட்டமிட்டு குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது. பனிமனிதன் நாவலில் பரிணாம அறிவியல் முதல் நவீன உளவியல் வரை பேசப்பட்டுள்ளன. வெள்ளிநிலம் நாவல் உலக மதங்கள் உருவாகி வந்துள்ள வரலாற்றுப்பரிணாமம் விவரிக்கப்பட்டுள்ளது. அதற்கும் அப்பால் சென்று தத்துவார்த்தமான மெய்யியல் விவாதமே உடையாளில் உள்ளது.
நான் ஆச்சரியத்துடன் பார்க்கும் ஒரு விஷயம் என்னவென்றால் அறம் கதைகள் இன்றைய இளம்சிறார்களுக்கு மிக விருப்பமானவையாக உள்ளன என்பதுதான். அவற்றிலுள்ள உலகம் முதிர்ந்தவர்களுக்குரியது. ஆனால் அவை நம் சமூகச்சூழலை, நம் பிரச்சினைகளை, நாம் வளர்ந்து வந்த பாதையை இளையோருக்கு அறிமுகம் செய்கின்றன. பெரியவர்களை விட முதிர்ச்சியுடன் அவற்றை இளையோர் வாசிக்கிறார்கள். தமிழில் மட்டும் அல்ல ஆங்கிலம் வழியாக இந்தியா முழுக்கவே அந்த வாசிப்பு நிகழ்கிறது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும்கூட Stories of the True மிக விரும்பப்படும் நூலாக உள்ளது.
இன்றைய பெற்றோர் இந்நூல்களை குழந்தைகளுக்கு அளித்து கூடவே அந்த அறிவுத்துறைகளைப் பற்றியும் விவாதிப்பார்களானால் அதில் ஏதோ ஒன்று குழந்தைகளை தொட்டுக்கொள்ளும். அவர்கள் எதில் ஆர்வம்கொண்டாலும் அது நல்ல தொடக்கமாக அமையும்.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
