Jeyamohan's Blog, page 66

July 23, 2025

வேதாசலம்,வாழ்த்துக்கள்- ஒரு கேள்வி.

 

தமிழ்விக்கி- தூரன் விருது: வெ.வேதாசலம் வேதாசலத்துக்கு விருது- கடிதம் வேதாசலம், மின்னஞ்சல் எதற்காக? நம் வரலாற்றாசிரியர்கள் ஏன் மறைக்கப்பட்டிருக்கிறார்கள்?

அன்புள்ள ஜெ

அந்திமழை இதழில் வேதாசலம் அவர்களின் பேட்டியை படித்தேன். ( வரலாற்றில் பொற்காலம் இருண்டகாலம் என்பது கிடையாது! -தொல்லியல் ஆய்வாளர் வெ.வேதாசலம் ) அதில் ஒரு வரி சொல்கிறார். “எனக்கு விருது கிடைத்ததற்கு எனது மாணவர்கள் வாழ்த்தவில்லை என்று ஜெயமோகன் வருத்தப்பட்டுள்ளார். அதைக்குறிப்பிட்டு என்னிடம் இது பற்றிக் கேட்டார்கள். என்னிடம் படித்த மாணவர்களும் எனது நண்பர்களும் நலம் விரும்பிகளும் விருது கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஜெயமோகன் தளத்தில் இது சார்ந்து அவர்கள் வாழ்த்து தெரிவிக்கவில்லையே தவிர என்னிடம் நேரிலும் தொலைபேசியிலும் மின்னஞ்சல்களிலும் வாட்ஸ் அப்பிலும் நிறைய பேர் விருதுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து  இருக்கிறார்கள் என்பதைக் கூறிக் கொள்கிறேன்.”

உங்கள் எதிர்வினை என்ன? நானறிந்து எவரும் முகநூலில்கூட ஒரு வரி எழுதவில்லை. அதைத்தான் நீங்கள் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். பொதுவெளியில் வாழ்த்து சொல்லாமல் தனிப்பட்ட முறையில் கூப்பிட்டு வாழ்த்துவது பிழையா என்ன?

அரங்க. ராமகோபாலன்.

இணையத்தில் கிடைக்கும் இலவச நூல்கள் திருவெள்ளறை வெ.வேதாசலம் எண்பெருங்குன்றம் வெ.வேதாசலம் அன்புள்ள ராமகோபாலன்,இதற்கான நேர்ப்பதிலை இப்படிச் சொல்லலாம். நிகழவிருப்பது வேதாசலம் அவர்களின் வீட்டு விசேஷம் அல்ல, அவருக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து சொல்வதற்கு. அவருக்கு லாட்டரியில் பணம் கிடைக்கவும் இல்லை. இது அவர் பெறும் பொது அங்கிகாரம், ஒரு வரலாற்றாய்வாளராக. ஆகவே அவருக்கு பொதுவெளியில்தான் வாழ்த்து சொல்லவேண்டும், ஒரு வரலாற்றாய்வாளராக அவர்மேல் உங்களுக்கு மதிப்பு இருந்தால் அதைப் பதிவுசெய்ய வேண்டும். அதுவே அடிப்படை நெறி. நெருக்கமானவர் என்றால் மட்டும் தனிப்பட்ட முறையிலும் சொல்லலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் சொல்லிவிட்டு, பொதுவெளியில் அமைதியாக இருப்பது ஒரு வகை தந்திரம் மட்டுமே. இதை திரும்பத் திரும்ப எவர் விருதுபெற்றாலும் காண்கிறோம். நண்பர் ஒருவர் சொன்னார், இது நம் மக்களின் சோம்பலையே காட்டுகிறது என்று. அப்படி அல்ல. தாங்கள் தின்ற ஒவ்வொரு பிரியாணிக்கும் ஒரு பதிவு போட எவருக்கும் சோம்பல் இல்லை. ஒருவருக்கு பிறந்தநாள் என்றால் வரிசைகட்டிக்கொண்டு வாழ்த்து தெரிவிக்கிறார்கள். ஆனால் ஒருவர் குறிப்பிடத்தக்க ஏதேனும் ஏற்பை அல்லது மதிப்பைப் பெற்றால் அமைதியாகிவிடுகிறார்கள். அது சோம்பல் அல்ல. அந்த மனநிலை மிகமிக இருள் மண்டிய ஒன்று. சம்பந்தப்பட்டவர் உண்மையில் எவர் என்பதைக் காட்டுவது. நான் என் தளத்தில் வாழ்த்துச் சொல்லவேண்டும் என்று சொல்லவில்லை. சமூகவலைத்தளங்களில் செயல்படுபவர்கள் அங்கே ஒரு வரி எழுதலாம் அல்லவா? அந்த தயக்கத்தின் காரணங்கள் பலவற்றுள் ஒன்று எந்தச் சிக்கலிலும் சிக்கிக்கொள்ளக்கூடாது என்னும் ஜாக்கிரதை உணர்வு. வேதாசலம் போன்ற ஒரு வரலாற்றாசிரியருக்கு எதிரி என எவருமிருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் ஒரு சுதாரிப்பு. பொதுவெளியில் ஒருவரை வாழ்த்தி இன்னொருவரின் எதிர்ப்புக்கு ஏன் ஆளாகவேண்டும் என்னும் கவனம். ஒருவகையான நடுத்தரவர்க்கக் கீழ்மைதான் அது. ஏன் வாழ்த்து சொல்லவேண்டும்? தமிழ்ச்சூழலில் உண்மையான ஆய்வைச் செய்பவர்கள், மெய்யான புனைவிலக்கியத்தை எழுதுபவர்கள், அறிவியக்கச் செயல்பாட்டாளர்கள் மிக எளிய ஏற்பைக் கூட அடைவது இல்லை. தங்களை எவரேனும் படிக்கிறார்களா என்ற குழப்பமே அவர்களுக்கு இருக்கும். ஒரு வாழ்த்து வழியாக நாம் அவர்களுக்கு ஓர் உறுதிப்பாட்டினை அளிக்கிறோம். தொடர்ந்து செயல்படுவதற்கான ஊக்கத்தை அளிக்கிறோம். அவர்கள் பணியாற்றுவது நம் மொழிக்கு, நம் பண்பாட்டுக்கு. நாம் அவர்களுக்குச் செய்யத்தக்க ஒரே கைமாறு அந்த வாழ்த்து மட்டும்தான்.

அதை ஏன் பொதுவெளியில் முன்வைக்கவேண்டும்? இங்கே ஒரு வரலாற்றாசிரியன், ஒரு எழுத்தாளன் பற்றி பொதுவெளியில் ஒரு வரிகூட எழுதப்படுவதில்லை. நூல்களை வாசிப்பவர்கள் அதைப்பற்றி எங்கேனும் ஒரு வரி எழுதுவது அரிதினும் அரிது. சிலருக்கு அதற்குத் தயக்கம் இருக்கலாம். ஒரு விருது ஓர் ஆய்வாளருக்கு வரும்போது ஒரு வரி வாழ்த்தை எழுதுவதன் வழியாக அவரை நாம் பொதுவெளியில் முன்னிறுத்துகிறோம். இன்னும் சிலருக்கு அறிமுகம் செய்கிறோம். அவ்வாறுதான் அறிஞர்கள் பேசப்படுகிறார்கள்.

கேரளத்தில் ஓர் அறிஞருக்கு ஒரு விருது வருமெனில் பல ஆயிரம் வாழ்த்துக்கள் வந்து குவிகின்றன. அதன் வழியாக அவர் இன்னும் பல ஆயிரம்பேரிடம் சென்று சேர்கிறார்.  அவ்வாறுதான் அறிவியக்கம் மக்களால் முன்னெடுக்கப்படுகிறது.

இங்கே ஒரு சாதாரண சினிமாவுக்கு குறைந்தது ஐந்தாயிரம் மதிப்புரைகள் வருகின்றன, ஒரு லட்சத்துக்கு மேல் சமூக ஊடகப் பதிவுகள் வருகின்றன. தமிழ்ச்சமூகம் சினிமா சார்ந்த மனநோய் கொண்டது என்பதனால் அது இயல்பே. அந்த ஒழுக்கில்தான் இங்கே எழுத்தாளர்கள், கட்டுரையாளர்கள் என்றெல்லாம் சொல்லிக் கொள்வோரும் இணைந்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்கக் கூடாதுதான்.

ஆனால் அந்த அறிஞரை அறிந்தவர்கள், அவருடைய வகுப்புகளில் ஒரு முறையேனும் பங்கெடுத்தவர்கள் ஒரு வரிகூட எழுதக்கூடாது என்று எச்சரிக்கையாக இருக்கிறார்கள் என்றால், ரகசியமாக அவருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு அமைதியடைகிறார்கள் என்றால், அது சாதாரணமான ஒன்று அல்ல. அது திட்டமிட்ட ஓர் எதிர்மறைச் செயல்பாடு மட்டுமே. என்னால் அதை கீழ்மை என்று மட்டுமே கொள்ளமுடியும்.

ஜெ

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 23, 2025 11:31

கொற்றவை பயணம்

கொற்றவை வாங்க

அன்புள்ள ஜெ, 

வணக்கம்.

தொல்குடியினரின் காலத்திலிருந்த குமரி முதல் இன்றைய குமரி வரை ஒரு காலப் பயணம்.

கண்ணகி, கோவலன் , நீலி/கவுந்தியடிகளுடன் நெய்தல், மருதம், குறிஞ்சி, பாலை மற்றும் முல்லை ஆகிய ஐவகை நிலங்களின் வழியே பூம்புகாரிலிருந்து மதுரை நோக்கிய பயணம்.

வஞ்சிமா நகரில் இருந்து அன்னையின் ஆலயத்திற்கு ஏழு மலை குடிகளின்  வழியே சேரன் செங்கூட்டுவனும், பெருந்தேவி, பரிவாரங்களுடன் சென்ற பயணம். 

இளங்கோவடிகளின் மதுரையில் இருந்து கழுகுமலையில் உள்ள மணிமேகலையின் அறச்சாலை நோக்கி நடந்த  பயணம். 

எல்லோர் பசிப் பிணியும் தீர்க்க வழி செய்யும் மணிமேகலை அன்னையின் கடற் பயணம்.

டச்சு கப்பல் தலைவன் வான்– கோய்ஸ்  கொடுங்கோளூருடன் நடத்திய போரின் கொடும் பயணம்.

தங்கள் குடும்பத்தினருடன் குமரி அன்னையையும், தங்கள் அன்னையையும் உணர்ந்த குமரி பயணத்துடன் முடிகிறது இந்த கொற்றவை பயணம்.

நான் மிகவும் விரும்பிய பயணம் சேரன் செங்குட்டுவனுடன் மலை மீது சென்ற பயணம். அன்றைய கேரளா நாட்டின் அழகில் மயங்கியது மனம். ஐவகை நிலங்களின் வர்ணனையும், அந்நிலங்களை மிகவும் விரும்பி வாழும் உயிரினங்களின் வழியே அவற்றை காண்பதும் பேரனுபவமாக இருந்தது. 

(நெய்தல்– சுறா

மருதம்– தவளை

குறிஞ்சி– குட்டி குரங்கு

பாலை– செந்நாய்

முல்லை – கன்று குட்டி)

ஆனால் கோவலன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், அவனின் மரணத்தை நோக்கி, என்பது தெரிந்திருந்ததால் ஒருவகை படபடப்புடனே வாசித்துக் கொண்டிருந்தேன். மீள்வாசிப்பில் இன்னும் ரசிக்க முடியும் என்று நினைக்கிறேன். 

தமிழ் வார்த்தைகளில்  விளையாடி இருக்கிறீர்கள். பண்டையன் பாண்டியனானது. அதேபோல் ‘தாலி‘ என்ற சொல்லும், அது எவ்வாறு வந்தது என்ற விளக்கமும் சிறப்பாக இருந்தது. (தாலம்– தட்டு, தலம்– இலை, அரசிலையை வைத்து அன்று தாலி கட்டினர். இப்போது அது பொன்னாலான அரசிலை தாலியாக மாறிவிட்டது. இலை வாடினாலும் அன்பு வாடாது என்பது கவிதை.) 

ஒவ்வொரு வரியிலும் எத்தனை வர்ணனைகள். வஞ்சி பெருநகரில் அன்னையின் ஆலய பிரதிஷ்டை விழாவை நேரில் கண்டது போல் உள்ளது. நாள் குறித்ததில் தொடங்கி மக்களின் கொண்டாட்டமும் , மன்னன் கிளம்பி கலந்து கொள்வதும், நான்கு சமயங்களும் ஒன்று சேர்ந்து விழாவை நடத்துவதும்  கண் முன்னே விரிகிறது.

இத்தனை பயணங்களையும், அதன் வழியே பல்வேறு அனுபவங்களையும் கொடுத்த உங்களுக்கு, மனதின் ஆழத்திலிருந்து மிக்க நன்றி. 

என்றும் அன்புடன், 

S.ராஜேஷ்வரி

கோவை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 23, 2025 11:31

இந்திய தத்துவம் கற்றல்..

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் உங்களுடைய முழுமையறிவு குழு அறிவிக்கும் வகுப்புகளையும் அதை ஒட்டி நீங்கள் விவரித்து வெளியிடும் ஒளிப்பதிவுகளையும் வெகு நாட்களாக கவனித்து பின் தொடர்ந்து வருகிறேன். கடந்த மார்ச் மாதம் நடந்த ஆயுர்வேத வகுப்புகளில் கலந்து கொண்டதன் மூலம் முற்றிலும் புதியதோர் பரிமாணத்தில் என்னால் எல்லாவற்றையும் காணமுடிந்தது. நான் உண்ணும் உணவு முதல் அது தொடங்கி, நம்மை பாதிக்கும் ஜனநாயகம் வரை அது நீண்டது.

நித்திய வனத்தில் இருந்து நான் விடைபெற்று என் வீட்டை நோக்கி பயணிக்கும் போது தான் பல சிந்தனைகள் எனக்குள் தோன்றின. நான் யோசித்து கேள்விக்குள்ளாக்கி வைத்திருக்கும் பல மன மாதிரிகளை ஆயுர்வேத வகுப்புகள் தொட்டு, சில இடத்தில் பதில் அளித்து சென்றது. நீங்கள் சொல்லும் அறிவு இயக்கம் தமிழ்நாட்டில் நித்திய வனத்தில் தான் நிகழ்கிறது என்று உணர்ந்தேன். அங்கு நடக்கும் உரையாடல்களும் கருத்து மோதல்களும் அதிலிருந்து அடையும் புரிதல்களும் என்னை பிரமிப்பில் ஆழ்த்தின. இப்படியான விவாதங்களும் கருத்து பகிர்வுகளும் என்னுடைய அன்றாட வாழ்க்கை சூழலில் அமைவது மிகவும் அரிது. நானாக முன்னெடுத்து அவற்றை பேசினாலும் எளிதாக அதை திசைமாற்றி சினிமாவிற்கும், சமூக வலைத்தளத்தில் நிகழும் அற்பத்தனங்களுக்கும் கொண்டு சென்று விடுவார்கள். ஆனால் அறிவுபூர்வமான உரையாடல்களையும் சிந்திக்கதக்க கருத்துகளையும் அங்கு எளிதாக காண முடிந்தது.

அப்படி நடந்த சில உரையாடல்களில் நான் கவனித்தது அல்லது என் கவனத்தை வெகுவாக கவர்ந்தது நீங்கள் எடுக்கும் தத்துவ வகுப்பை சார்ந்ததாக இருந்தது. மிக சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஜெ எப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்வார் என்பது தான்.

உங்களுடைய படைப்புகளை படித்து இருக்கிறேன். மிகவும் பிடித்தவையும் கூட. மிக நெருக்கமானதாக உணர்ந்திருக்கிறேன். அதே சமயத்தில் நீங்கள் முன்வைக்கும் கருத்துக்களையும் வெகுவாக என்னால் புரிந்து கொள்ளவும் முடிகிறது. எனவே என்னுடைய கவனம் முழுக்க தத்துவ வகுப்பின் மீது திரும்பியது. நான் நித்திய வனத்தில் உள்ளவர்களிடம் ஆயுர்வேத வகுப்பின் சமயம் கேட்டபோது அவர்கள் வரும் ஜூன் மாதம் மீண்டும் தத்துவ வகுப்பின் முதல் நிலை வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் என்றார்கள். அதன் அறிவிப்பை வலைத்தளத்தில் எதிர்பார்த்து எல்லா தினமும் தோன்றும்போதெல்லாம் எடுத்து பார்ப்பதுண்டு.

அப்படி சில நாட்களுக்கு முன் பார்த்த போது தான் உணர்ந்தேன், தத்துவ வகுப்பு ஐந்தாம் நிலைக்கான அறிவிப்பு தான் வந்திருக்கிறது. இதே போல நான்காவது நிலைக்கான அறிவிப்பு வந்த போதும் ஏமாற்றமடைந்தேன். ஆனால் இந்த முறை கடந்து போகவோ, காத்திருக்கவோ எனக்கு மனம் இல்லை. அதுதான் இந்த கடிதம் எழுதுவதற்கு காரணமும் கூட.

என்னுடைய உள்ளுணர்வு சொல்வதெல்லாம் எப்படியும் வர வேண்டாம் என நீங்கள் சொல்ல மாட்டீர்கள் என்பதுதான். அது தரும் தைரியத்தில் தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். உங்களுடைய கருத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

நீங்கள் ஒரு பதிவில் கூறியது போல நான் என்ன சாப்பாடு கிடைக்கும் என்றெல்லாம் கேட்க மாட்டேன். தங்குவதற்கு வசதி எல்லாம் வேண்டியதில்லை. என்னிடத்தில் தங்கும் கூடாரம் உள்ளது. ஏற்கனவே அங்கு வந்த போதும் எனக்கு தோன்றியது, கூடாரம் அடித்து இரவின் ஓசையை நிதானமாக கேட்பதற்கு சரியான இடம் என்றுதான். எனவே அதையும் எடுத்துக் கொண்டுதான் வரவிருக்கிறேன். உங்களுடைய ஒப்புதல் வந்ததற்கு பின்.

இப்படிக்கு பேரன்புடன்,

ஹரி சரவணன்

அன்புள்ள ஹரி,

கோவை புத்தகவிழாவிலும் ஏராளமானவர்கள் என் தத்துவநூல்களை ஒரு தொகுப்பாக வாங்கியதாகச் சொன்னார்கள். அடுத்த தத்துவ முகாம் பற்றி விசாரித்ததாகவும் அறிந்தேன். முதல் தத்துவ முகாம் எப்போது நிகழும் என கேட்டார்கள்.

பலர் கோரிக்கைக்கு ஏற்ப செப்டெம்பரில் முதல் தத்துவ முகாமை மீண்டும் நடத்தலாமென நினைக்கிறேன். நீங்கள் அப்போது தொடர்பு கொள்ளலாம். முதல் தத்துவ முகாமிலிருந்து தொடர்ச்சியாக வருவதே உகந்தது.

அத்துடன் இந்த வகுப்புகளில் எந்த சமரசமும், விட்டுக்கொடுத்தலும் இல்லாமல் நடத்தவேண்டும் என உறுதியாக இருக்கிறேன். எப்படிக் கற்பிக்கப்படவேண்டுமோ அப்படி மட்டுமே தத்துவம் கற்பிக்கப்படும்.

ஜெ

 

 

The discussion focused on the natural rock formations and their symbolic significance. significance is a good one. I visited that place 30 years ago and still have that memory vividly in my mind.

Presence of Nature 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 23, 2025 11:30

பன்றிவேட்டை, நூல்வெளியீடு

நாளை கோவையில் லக்ஷ்மி சரவணக்குமாரின் நாவல் பன்றிவேட்டை வெளியீடு. நாஞ்சில்நாடன், பால நந்தகுமார், லோகமாதேவி ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 23, 2025 07:54

July 22, 2025

வாக்னரின் மண்ணில் இருந்து…

வாக்னர் வாழ்ந்த இல்லம் சுவிட்சர்லாந்தில் உள்ளது. ஜூலை 6 2025 அன்று நானும் அருண்மொழியும் சைதன்யாவும் அங்கே சென்றிருந்தோம். நண்பர் வெங்கட் அழைத்துச் சென்றார். வாக்னர் வாழ்ந்த அந்த இல்லம் ஒரு நினைவகமாக உள்ளது. அந்த இல்லத்தை முன்வைத்து வாக்னர் பற்றி ஒரு சிறிய அறிமுக உரையாடல் சைதன்யாவுடன்.

—————————————————————————————————–

ஐரோப்பிய இலக்கியம்- இசை இரண்டிலுமே உச்சம் என கருதப்படும் வாக்னர் இலக்கியம் மற்றும் இசையை அறிமுகம் செய்யும் வகுப்பு. அஜிதன்.

நாள் ஜூலை 25, 26 மற்றும் 27

programsvishnupuram@gmail.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 22, 2025 11:36

புனைவின் கனவுக்காலம்!

அன்புள்ள ஜெ,

தங்கப்புத்தகம் தொகுப்பிலுள்ள கதைகளை முன்னரே வாசித்திருக்கிறேன். உண்மையில் இரண்டுமுறை வாசித்திருக்கிறேன். அந்தக்கதைகள் உங்கள் இணையத்தளத்தில் கோவிட் காலகட்டத்தில் வெளிவந்தபோதே வாசித்தேன். அதன்பின்னர் அவை நூலாக வந்தபோதும் வாசித்தேன். என்னை கவர்ந்த கதைகள் அதிலுள்ளன. 

ஆனால் இப்போது அந்தக் கதைகளைப் பற்றிய உரையாடல்களைக் கேட்கும்போது 

நான் வாசிக்கவே இல்லையோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. நான் அவற்றை ஒருவகையான திரில் கதைகளாகவே வாசித்தேன். அவற்றின் ஆழம் எனக்கு கிடைக்கவில்லை. குறிப்பாக கரு கதையில் அந்த இளைஞன் எப்படி ஒரு ஆன்மிக அடையாளமாக ஆகிறான், அவன் ஷம்பாலாவில் இருந்து வருபவனா என்றெல்லாம் யோசிக்கவே இல்லை. 

அதேபோல தங்கப்புத்தகம் கதை அஜிதன் சொல்வதுபோல பிரதி எடுக்க மட்டுமே முடியும் நூல் அல்ல, பிரதியெடுக்கவே முடியாத நூல், அது ஒரு ஆன்மிக அனுபவத்தின் குறியீடு என்று புரியவில்லை. 

இதற்கான காரணம் என்ன என்று யோசிக்கிறேன். நாங்கள் சிலர் ஒரு வாசிப்புக் குழுமத்தில் இருக்கிறோம். அதிலுள்ள பெரும்பாலான வாசகர்கள் பெண்கள். நிறைய கதை படிப்பவர்கள். ஆனால் வேறேதுமே தெரியாது. கதைபடிப்பதனால் கதை பற்றி கருத்துச் சொல்ல முடியும் என நினைக்கிறார்கள். எந்த நாவலையும் , எந்தச் சிறுகதையையும் கதையாக மட்டுமே பார்த்துக் கருத்துச்சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். வரலாறு, தத்துவம் ,குறியீடுகள் ஒன்றுமே அவர்களுக்குத் தெரியாது. மனித உள்ளத்தின் இயல்புகள் கூடத் தெரியாது. கதாபாத்திரங்களின் உட்சிக்கல்களும் விரிவும்கூடப் புரியாது. அப்படியே பாலகுமாரன் கல்கி கதைபோல எல்லா நாவல்களையும் படிப்பார்கள்.

அந்த வாசிப்புமுறை எனக்கும் பழகிவிட்டிருக்கிறது. என்னால் ஆழமாகப் போகவே முடியாதபடி ஆகிவிட்டது. இது ஒரு பெரிய இழப்பு என நினைக்கிறேன். புனைவுக்களியாட்டுச் சிறுகதைகளை மீண்டும் வாசிக்கவேண்டும் என நினைக்கிறேன்.

ஆர்

அன்புள்ள ஆர்,

உங்கள் கருத்து சரிதான். இலக்கியவாசிப்பின் தொடக்கக் காலகட்டத்தில் நமக்கு அதைப்பற்றி உரையாட ‘யாராவது’ கிடைத்தால்போதும். எவருடன் பேசினாலும் நம் வாசிப்பு விரிவாக நிகழும். ஆனால் ஒரு கட்டத்தில் ‘ஆழமாக’ உரையாடுபவர்களை நோக்கிச் சென்றாகவேண்டும். இல்லாவிட்டால் நம் வாசிப்பு தேங்கிவிடும்.

பின்நிலை வாசகர்களில் இரண்டு வகை உண்டு. தொடக்கநிலை வாசகர்கள், தேக்கநிலை வாசகர்கள். தொடக்கநிலை வாசகர்கள் இன்னும் வாசிக்க ஆரம்பிக்காதவர்கள், அவர்களுக்கு மேலே செல்லும் ஆர்வமுண்டு என அவர்களின் தேடலே காட்டும். ஆனால் தேக்கநிலை வாசகர்கள் எங்கோ நின்றுவிட்டவர்கள். அவர்களால் புதிய எதையும் வாசிக்கமுடியாது. எதனுள்ளும் ஆழமாகச் செல்லவும் முடியாது. எது தங்களுக்கு முன்னரே தெரியுமோ அதையே அவர்கள் திரும்பவும் வாசிப்பார்கள். அதையே சொல்லிக்கொண்டும் இருப்பார்கள். அவர்கள் பிறருடைய வாசிப்புக்குப் பெரும் தடைகளாக அமைபவர்கள்.

அந்தவகையான வாசகர்களில் பல வகையினர் உண்டு. சிலர் சில அரசியல்கொள்கைகளை ஒட்டி வாசிப்பார்கள், எங்கும் அதை மட்டுமே தேடுவார்கள். சிலருக்கு இலக்கியம் என்றாலே அதில் ஆண்பெண் உறவு மட்டுமே தேவை, பாலியல் மீறலை மட்டுமே தேடுபவர்களும் உண்டு. அதை மட்டுமே ‘நுட்பம்’ என்று நினைப்பார்கள். அது சென்றகாலத்து பாலியல் இறுக்கம் கொண்ட சூழலில் இருந்து உருவான மனநிலை. சிலர் கதைவேகம் மட்டுமே இலக்கியம் என நினைப்பார்கள். சிலர் சமூக யதார்த்தம் மட்டுமே இலக்கியம் என நம்புவார்கள்.

அப்படி எங்கே நின்றிருந்தாலும் அது தேக்கமே. இலக்கியம் என்பதே தொடர்ச்சியான முன்னகர்வுக்காகத்தான். சிந்தனையில், மெய்யுணர்வில் நிகழும் வளர்ச்சியையே இலக்கியத்தின் பயன் என்று சொல்கிறோம்.

*

புனைவுக்களியாட்டு என்ற பேரில் கோவிட் காலகட்டத்தில் நான் வெளியிட்ட கதைகள் இன்று உலகமெங்கும் மொழியாக்கம் செய்து வெளியிடப்படுகின்றன. உலகின் எந்த ஒரு இலக்கிய இதழுக்கு அனுப்பப்பட்டாலும் அவை உடனே ஏற்புபெறுகின்றன. பல தொகுதிகள் ஆங்கிலத்தில் சர்வதேசப்பதிப்புகளாக வெளிவரவுள்ளன. மெல்லமெல்ல அவை உலக அளவிலேயே இலக்கியத்தில் நிகழ்ந்த முக்கியமான வெளிப்பாடு என கொள்ளப்படும் என நம்புகிறேன்.

அவை அன்றைய என் உள எழுச்சியால் அத்தனை வேகமாக எழுதப்பட்டன. எதிர்மறைச்சூழலில் மிகுந்த வீச்சுடன் ஒளி நோக்கிச் செல்வதே என் இயல்பு. அதையே அக்கதைகளிலும் நிகழ்த்தியிருக்கிறேன். அது என் தரிசனம். என் தனிவாழ்க்கையின் ஆழ்ந்த இருட்பயணங்களினூடாக, என் தேடலின் விளைவாக, நான் கண்டடைந்தது அது. அது நானேதான். அந்த என்னை மீண்டும் மீண்டும் என் புனைவுகளினூடாகக் கண்டடைகிறேன்.

அக்கதைகள் அப்படி கொத்துக் கொத்தாக வெளியிடப்பட்டமையால் அவற்றுக்கு கூடுதல் கவனம் கிடைத்தது. அத்தனை கதைகளா என்னும் திகைப்பு அவற்றை வாசிக்கச் செய்தது – தமிழில் அதிகமாக வாசிக்கப்பட்ட சிறுகதைகள் அவையாகவே இருக்கும். அவை தொடர்ச்சியாக இன்றும் பேசப்படுகின்றன. ஆனால் அவை அப்படி வெளியிடப்பட்டமையாலேயே முழுமையான வாசிப்பைப் பெறமுடியாமலும் போயின. ஒரு நல்ல கதை இன்னொரு நல்ல கதையை மறைத்துவிட்டது.

அத்துடன் அக்கதைகளில் துப்பறியும்கதை, திகில் கதை, வரலாற்றுக்கதை, மிகுகற்பனை கதை, உருவகக்கதை என பல்வேறு வகைகள் இருந்தன. ஒரு வகைக் கதை உருவாக்கும் மனநிலை இன்னொருவகைக் கதை உருவாக்கும் மனநிலைக்கு எதிரானது. ஆகவே பல வாசகர்கள் நல்ல கதைகளை கவனிக்கவில்லை. சிலர் வாசித்திருந்தாலும்கூட நினைவுகூர்வதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு சில ‘விருப்பமான’ கதைகள் இருக்கும். பேச்சில் ஒரு கதையை இன்னொருவர் சொன்னால் திகைப்பும் வியப்பும் அடைந்து ‘அந்தக் கதையை எப்படி கவனிக்காமல் விட்டோம்’ என மருகுவார்கள்.

அவற்றில் பல கதைகள் தமிழில் பொதுவாக இலக்கியச் சிறுகதைகளின் வட்டம் என வகுக்கப்பட்டவற்றை முழுமையாகக் கடந்தவை. ஆகவே பழைய வாசகர்களின் தேங்கிப்போன வாசிப்பு அவற்றை அடைவதற்குப் பெரிய தடை. புதிய வாசிப்பு, புதிய முன்னகர்வு இன்றி அவற்றை அடைய முடியாது. தன் சொந்த ரசனையை, நுண்ணுணர்வை மட்டுமே நம்பி வாசிப்பவர் மட்டுமே அவற்றை உணர முடியும்.

அக்கதைகளை வாசிக்கச் சிறந்த வழி தொகுப்புகளாக வாசிப்பதுதான். ஏனென்றால் தொகுப்புகள் ஒரே வகையான கதைகள் கொண்டவை. ஆயிரம் ஊற்றுகள் வரலாற்றுக் கதைகளின் தொகுப்பு என்றால் , பத்துலட்சம் காலடிகள் துப்பறியும் கதைகள் கொண்டது. உருவகக்கதைகளாலானது மலைபூத்தபோது. நாயக்கர் காலகட்டத்து வரலாற்றுக்கதைகளின் தொகுதி படையல்.

இந்தவகையாக ஒரே கதைக்களம் கொண்ட கதைகளை வாசிக்கையில் ஒரு கதை இன்னொரு கதைக்கான மனநிலையை அளிப்பதை, ஒரு நாவல்போல ஒட்டுமொத்தமாகக் கதையுலகம் திரண்டுவருவதைக் காணலாம். ஒரு சிறுகதைமேல் உச்சகட்ட கவனம் குவிய, அதன் குறியீட்டுத்தன்மையோ தரிசனமோ நம்மில் துல்லியமாகத் திரள அந்த வாசிப்பு மிகமிக உதவியானது. ஒருகதையை வாசிக்கையில் பலசமயம் முந்தைய கதையில் நாம் கவனிக்காமல் விட்ட நுணுக்கங்கள் பிடிகிடைக்கலாம்.

சில கதைகளுக்கு அவற்றுக்குரிய ஓர் உரையாடல்முறை, மொழிநடை உருவாகி வந்திருக்கும். அவற்றை தொடர்ச்சியாக வாசிப்பவர்கள் எளிதில் பழகிக்கொள்ளலாம். ஆகவேதான் அந்தக் கதைகள் பொதுப்பேசுபொருள், பொதுக்களம் சார்ந்து தொகுக்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவப் பின்னணி கொண்ட கதைகள் இன்னும் தொகுக்கப்படவில்லை , அந்த அளவு கதைகள் இல்லை. படையல் தொகுதியில் இணையத்தில் வெளிவராத மங்கம்மாள் சாலை போன்ற குறுநாவல் இடம்பெற்றுள்ளது. அந்த தொகுதியின் சிறந்த கதையும் அதுவே.

தங்கப்புத்தகம் தொகுதியிலுள்ள கதைகள் எல்லாமே ஆன்மிக உருவகங்கள்தான். அகப்பயணங்களை மட்டுமே அவை பேசுகின்றன. சற்று தியான அனுபவம் கொண்டவர்கள் அனைவருமே அந்த கதைகளின் உணர்வுநிலைகளையும், பேசுபொருளையும் ஏற்கனவே கொஞ்சம் அறிந்திருப்பார்கள். அப்படி ஒரு எண்ணத்துடன் அக்கதைகளை வாசித்தாலே போதும், இயல்பாகவே அவை திறந்துகொள்ளும். உண்மையில் பலவீனமான வாசிப்புகொண்டவர்களின் சூழல் அளிக்கும் தடை இல்லாமலிருந்தாலே அவை தெளிவாக தன்னை விளக்கும்.

நான் கதைச்சுவாரசியத்தை முதன்மையாக எண்ணுபவன். நான் கதைசொல்லி என்றே என்னை உணர்பவன். ஆனால் வெறும் கதைகளை எழுதுபவன் அல்ல. வெறும் கதைகளாக அவற்றை வாசிக்கலாமா? வாசிக்கலாம். அப்படி வாசிப்பவர்கள் அபத்தமாக ஏதாவது சொல்வார்கள்தான், ஆனால் கதை அவர்களின் ஆழுள்ளத்தை தொட்டிருக்கும். சிலகாலம் கழித்தாவது அவர்கள் அக்கதைகள் உருவாக்கும் சாராம்சத்தை வந்தடைவார்கள். அப்படி பலபேரைக் கண்டிருக்கிறேன்.

இந்தக்கதைகள் தமிழில் இன்னமும்கூட மதிக்கத்தக்க வாசிப்பைப் பெறவில்லை என்றே நினைக்கிறேன். தெலுங்கில், மலையாளத்தில், கன்னடத்தில், ஆங்கிலத்தில் அவை மொழியாக்கம் செய்யப்படும்போது வரும் தீவிரமான, உணர்ச்சிகரமான, ஆழமான வாசிப்புகளைப் பார்க்கையில் தமிழக வாசிப்பு ஏமாற்றம் அளிப்பதை மறுக்கவில்லை. ஏனென்றால் இங்கே நாம் இலக்கியத்தை சில்லறை அரட்டையாக ஆக்கியுள்ளோம், எப்போதுமே எதிர்மனநிலையுடன் இருப்பவர்களின் கொசுத்தொல்லையும் பெரிய சிக்கலாக உள்ளது.

ஆனால் நல்ல வாசகர்கள் பலர் மிக இளைய தலைமுறையில் இருந்து உருவாகி வருவதையும் காண்கிறேன். இன்று உலகமெங்கும் வெவ்வேறு நிலங்களில் இக்கதைகளின் மீதான வாசிப்பும் விவாதமும் நிகழ்ந்துகொண்டிருப்பதை காண்கிறேன். வெளிநிலத்து வாசிப்புகள் தமிழ் வாசிப்பை மேலும் கூர்மையாக்கும் என எதிர்பார்க்கிறேன்.

தங்கப்புத்தகம் கதைத்தொகுதியின் ஆன்மிகம் ஒரு கோணத்தில் நமக்கு அன்னியமானது. அது பௌத்தம் சார்ந்தது. இந்து மதம் உருவாக்கும் வழக்கமான ஆன்மிகத்தின் எல்லைகளைக் கடந்தே நாம் அதை அடைய முடியும். அதைப்போலவே முதுநாவல் உருவாகும் சூபி ஆன்மிகத்தையும் நம் மரபும், நம் வளர்ப்பும் அளிக்கும் இயல்பான தடையைக் கடந்தே அடையமுடியும். அப்படி தடைகளைக் கடப்பதற்கே இலக்கியம் எழுதப்படுகிறது இல்லையா?

ஜெ

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 22, 2025 11:35

குந்துநாதர்

குந்துநாதர் இஷுவாகு குலமன்னர் சூரியதேவருக்கும், இராணி ஸ்ரீதேவிக்கும், அஸ்தினாபுரத்தில் மகனாகப் பிறந்தார். குந்து என்பதற்கு வட மொழியில் நவரத்தினங்களின் குவியல் எனப் பொருள். 100,000 ஆண்டுகள் வாழ்ந்த குந்துநாதர் சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார்.

குந்துநாதர் குந்துநாதர் குந்துநாதர் – தமிழ் விக்கி

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 22, 2025 11:33

July 21, 2025

பண்பாடல்

நீண்டகாலம் ஆகவில்லை, ஒரு விவாதம் இணையத்தில் நிகழ்ந்தது. பண்பாடு பற்றி நான் பேசியபோது ஒருவர் வந்து ‘பண்பாடு என்பது என்ன?’ என்று கேட்டார். கேட்டவர் மேல் எனக்கு பெரிய மரியாதை ஏதுமில்லை, அவர் ஒரு முதிரா (முதிரவாய்ப்பில்லா) அறிவுஜீவி என்பது என் எண்ணம். ஆகவே அவர் பெயரைச் சொல்லவில்லை. இந்தவகையான கேள்விகளைக் கேட்பது போலிஅறிவுச்செயல்பாடுகளின் வழிகளில் ஒன்று. ‘சீரியஸாக’ சிந்திக்கிறோம் என்னும் பாவனை இது. ‘இது நியாயம் அல்ல’ என்று நாம் எதையேனும் சொன்னால் உடனே வந்து ‘நியாயம் என்பது என்ன?’ என்று தத்துவார்த்தமாக ஆரம்பிப்பது, எதையாவது சொல்ல முற்படுவது.

அதிலுள்ள பிரச்சினை என்ன? அறம், நீதி, அன்பு, கருணை, பண்பாடு, நாகரீகம், மரபு என நாம் பயன்படுத்தும் சொற்களின் அர்த்தங்கள் ஒரு சொற்சூழலால் வரையறை செய்யப்படுபவை. அச்சொற்சூழலுக்குள் உள்ள அனைவருக்கும் அவற்றின் பொருள் தெரிந்திருக்கும். அல்லது, அப்படி நாம் உருவகித்துக்கொண்டாகவேண்டும். ஒவ்வொரு உரையாடலிலும் இந்த அடிப்படைகளை வரையறை செய்து நிறுவியபின்னரே பேசவேண்டும் என்றால் அதைப்போல அபத்தம் வேறில்லை

அச்சொற்களை வரையறை செய்யக்கூடாதா? முயலலாம், ஆனால் அது எப்போதுமே தத்துவார்த்தமான வரையறையே ஆகும். ஒரு பண்பாட்டுச்சூழலில், ஒரு குறிப்பிட்ட உரையாடற்சூழலில் மட்டுமே அவற்றுக்கு ஒரு பொது வரையறை அளிக்கமுடியும். அதுவும் மிகப்பொதுவான ஒரு வரையறை, அதன்பின் அவ்வரையறையை கொஞ்சம் விரிவாக்கி விரிவாக்கி தொடர்ந்து பொருள்கொள்ளவேண்டும். எந்தச் சமூகமும் அச்சொற்களுக்கு அறுதிப்பொருள் அளிக்கமுடியாது, அளிக்கும் சமூகம் அழிந்துவிட்ட ஒன்று, வாழ்க்கை நிகழாத ஒன்று.

நான் அன்று பண்பாட்டுக்கு அச்சொற்சூழலில் ஒரு பொருள் அளித்தேன் “நம் ஆழுள்ளத்தை உருவாக்கியிருக்கும் படிமங்கள், ஆழ்படிமங்கள் மற்றும் நம்பிக்கைகளின் தொகுப்பையே பண்பாடு என்கிறோம்”. என்னுடன் விவாதித்தவர் அதை மறுத்து விழுமியங்களே பண்பாடு என வாதிட்டார். நான் அது அவரது கருத்து என்றே எடுத்துக்கொண்டேன். அப்படி அவரவருக்கான பொதுவான வரையறையை உருவாக்கிக்கொள்வதே நாம் செய்வது.

நாம் பண்பாடு என்று சொல்வது விழுமியங்கள், வாழ்க்கை முறைகள், ஆசாரங்கள், நம்பிக்கைகள், சமூகஅமைப்புகள் ஆகியவற்றைத்தான். நீதியுணர்ச்சி, அறவுணர்ச்சி, பாசம் ,கருணை எல்லாம் பண்பாட்டின் வெளிப்பாடுகள். வேட்டிகட்டுவது, சேலை கட்டுவது, பொட்டுவைப்பது, இலைபோட்டுச் சாப்பிடுவது எல்லாமே பண்பாட்டு அடிஅயாளங்கள்தான். பெரியவர்களைப் பார்த்தால் எழுவதும், வரவேற்பதற்காகக் கைகூப்புவதும் பண்பாடுதான். சாவுச்சடங்குகளும் பிறப்புச்சடங்குகளும் பண்பாட்டின் பகுதியே. இறைநம்பிக்கை, மறுபிறப்பு நம்பிக்கை, பாவபுண்ணிய நம்பிக்கை ஆகியவையும் பண்பாடுதான். குடும்பம், சாதி, கிராமம் போன்ற அமைப்புகளும் பண்பாடுதான். ஆனால் ஒட்டுமொத்தமாக இவையனைத்துக்கும் அடியில் இருக்கும் பண்பாடு என்பது ஒருவகையான அகக்கட்டுமானம். ஒவ்வொருவரின் உள்ளத்தில் இருப்பது அது. ஆழுள்ளத்தில் அதன் வேர்கள் உள்ளன. அதன் கட்டுமானப்பொருள், building block என்பது படிமங்கள்தான். அவை ஆழ்படிமங்களாக, தொன்மங்களாக வெவ்வேறுவடிவங்களில் இருக்கலாம்.

இலக்கியமும் கலைகளும் அந்த படிமங்களைக் கையாண்டு தங்களை நிகழ்த்திக்கொள்பவை. ஒலிப்படிமங்கள் இசை என்றும், காட்சிப்படிமங்கள் ஓவியமும் சிற்பமும் என்றும், மொழிப்படிமங்கள் இலக்கியம் என்றும் சொல்லலாம். ஆனால் இலக்கியம் உட்பட எல்லா நுண்கலைகளும் ஒன்றுடனொன்று பிணைந்து, ஒன்றை ஒன்று பயன்படுத்திக்கொண்டுதான் செயல்படுகின்றன. பண்பாட்டின் அடிப்படை அலகுகளான படிமங்களை உருவாக்குபவை, மாற்றியமைப்பவை கலைகளும் இலக்கியமும்தான். ஆகவேதான் அவற்றைப் பண்பாட்டு உருவாக்கச் செயல்பாடுகள் என்கிறோம்.

ஆகவே, ஒரு பண்பாடு பற்றி பேச முதன்மைத் தகுதிகொண்டவர்கள் கலைஞர்களும் எழுத்தாளர்களுமே. அவர்களின் கருத்துக்களுக்கு ஆய்வேடுகளின் முறைமை இருப்பதில்லை. தேவையுமில்லை. ஆய்வேடுகளின் முறைமை என்பது அவற்றுக்கு புறவயமான நம்பகத்தன்மையை உருவாக்கும்பொருட்டு கையாளப்படுவது. ஏனென்றால் ஆய்வேடு தன்னளவில் தொடர்புறுத்துவது. கலையிலக்கியம் புறவயமானது அல்ல, அது அந்த கலைஞனின், ஆசிரியனின் அகத்தின் வெளிப்பாடு மட்டுமே. அவனுடைய வெளிப்பாடு வழியாக நாம் அவனையே சென்றடைகிறோம். அவன் சொல்பவை தன்னை, தன் அகத்தை கருவியாக்கி அறிந்தவை. ஆகவேதான் உலகம் முழுக்க கலைஞர்களின் எழுத்தாளர்களின் பண்பாட்டு அவதானிப்புகள் ஆய்வாளர்களால் அத்தனை கூர்ந்து கவனிக்கப்படுகிறன, விவாதிக்கப்படுகின்றன.

ஓர் எழுத்தாளனாக நான் எழுதவந்த காலம் முதலே புனைவெழுத்துக்கு அப்பால் என்னுடைய அகவயமான பண்பாட்டு அவதானிப்புகளை முன்வைத்துக்கொண்டே இருக்கிறேன். இணையம் வந்தபின் எனக்கு அன்றாடம் எழுதுவதற்கான ஊடகம் அமைந்தது. இவை அவ்வாறு நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. வெளிவந்த காலகட்டங்களில் இவை வெவ்வேறுவகையான விவாதங்களையும் உருவாக்கியவை. அவ்விவாதங்கள் எத்தகையவை ஆயினும் ஒரு சூழலில் பண்பாட்டு விவாதங்கள் நிகழ்ந்துகொண்டே இருந்தாகவேண்டும். அரசியல், சினிமா என இடைவிடாது விவாதம் நிகழும் தமிழ்ச்சூழலில் பண்பாட்டின் அடிப்படைகளைப் பற்றிய விவாதங்கள் அரிதினும் அரிதானவை. ஆகவே இந்த விவாதங்கள் காலம்கடந்த முக்கியத்துவம் கொண்டவை.

ஒரு பண்பாடு தன் அடிப்படைகளைப் பற்றி விவாதித்துக்கொண்டே இருக்கவேண்டும். தன் நம்பிக்கைகளை, வாழ்க்கைமுறைகளை, ஆசாரங்களை, அறங்களை. மறுபரிசீலனைசெய்யவும் முன்னகரவும் அதுவே வழி. அத்தகைய விவாதங்கள் அடங்கியது இந்நூல். செறிவான மொழியில் அமைந்துள்ள நூல், ஆனால் வாசகர்களுடன் நேரடியாக உரையாடும் தன்மைகொண்டது, ஆகவே தடையற்ற வாசிப்பனுபவமும் ஆவது. தன்னை, தன் சூழலை, தன் வரலாற்றை ஆழ்ந்தறியவும் தனக்கான பார்வையை உருவாக்கிக்கொள்ளவும் விழையும் வாசகர்களுக்கானது.

ஆனால் இந்நூல் எந்த கொள்கை, கோட்பாடு, அமைப்பு சார்ந்ததும் அல்ல. எனக்கு எழுத்தாளன் என்பதற்கு அப்பால் எந்த அடையாளத்தையும் வைத்துக்கொள்ள நான் விரும்புவதில்லை. மேலும் உறுதியான கொள்கைகளும் கோட்பாடுகளும் அமைப்புகளும் எப்படியோ ஒரு கருத்தை பரப்பி நிலைநாட்டி அதனூடாக அதிகாரத்தை அடையும் நோக்கம் கொண்டவை. இங்கே கருத்துத்தள விவாதம் என்பது முழுக்கமுழுக்க அப்படி ஏதேனும் ஒரு அதிகாரத்தரப்பின் குரலாகவே உள்ளது. இது அந்த தரப்புகளின் மோதல்களுக்கு வெளியே அந்தரங்கமாக ஓர் எழுத்தாளனும் வாசகனும் உணரும் பண்பாட்டைப் பற்றிய விவாதம்.

என் மதிப்பிற்குரிய ஆசிரியர் பி.கே.பாலகிருஷ்ணன் தொடர்ச்சியாக பண்பாட்டு விவாதங்களில் ஈடுபட்டு வந்தவர். பண்பாட்டு விவாதங்களைச் செறிவாகவும், அதேசமயம் நல்ல வாசிப்புத்தன்மையுடனும் நிகழ்த்த முடியும் என்று காட்டியவர். இந்நூல் அவ்வகையில் அவருடைய அடியொற்றியது, ஆகவே அவருக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

இந்நூலை வெளியிட்ட உயிர்மை பதிப்பகத்திற்கும் மறுபதிப்பை வெளியிட்ட நற்றிணை பதிப்பகத்துக்கும் இப்போதைய பதிப்பை வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் நன்றி.

ஜெயமோகன்

எர்ணாகுளம்

13 ஏப்ரல் 2025

(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடான பண்படுதல் நூலின் முன்னுரை)

பண்படுதல் வாங்க
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 21, 2025 11:35

குழ கதிரேசன்

கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர். சிறார் இலக்கியப் படைப்பாளி. சிறார் பாட நூல்கள் ஆசிரியர். சாகித்ய அகாடமி வழங்கும் பால் சாகித்ய புரஸ்கார் விருது பெற்றவர். ஐந்திணை பதிப்பகத்தை நிறுவி இலக்கிய நூல்களை வெளியிட்டு வருகிறார்.

குழ கதிரேசன் குழ கதிரேசன் குழ கதிரேசன் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 21, 2025 11:33

வேதாசலம் பேட்டி- அந்திமழை

தமிழ்விக்கி- தூரன் விருது: வெ.வேதாசலம் வேதாசலத்துக்கு விருது- கடிதம் வேதாசலம், மின்னஞ்சல் எதற்காக? நம் வரலாற்றாசிரியர்கள் ஏன் மறைக்கப்பட்டிருக்கிறார்கள்? வேதாசலமும் வாசகர்களும் – ஒரு கேள்வி

மதுரையைச் சுற்றியுள்ள சமணக் குன்றுகளை ஆய்வு செய்து இவர் எழுதிய ‘எண்பெருங்குன்றம்’ மாபெரும் ஆவணமாகத் திகழ்கிறது.  தமிழகத் தொல்லியல் துறையின் முதுநிலைக் கல்வெட்டாய்வாளர், அகழாய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இரு முறை தமிழ்நாடு அரசின் சிறந்த நூலுக்கான விருதுகள், கல்வெட்டியலுக்காக வெங்கையா விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். அவர் இப்போது ‘தமிழ் விக்கி தூரன் விருது-2025 ‘ பெறவுள்ளார். இந்த நிலையில்  அவருடன் ஓர் உரையாடல் .

வரலாற்றில் பொற்காலம் இருண்டகாலம் என்பது கிடையாது! -தொல்லியல் ஆய்வாளர் வெ.வேதாசலம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 21, 2025 11:33

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.