Jeyamohan's Blog, page 3
October 20, 2025
செவ்வியலின் அணிகலன்கள்
ஒரு மரபான கோயிலைப் பார்க்கிறோம். நுணுக்கமான சிற்பச்செதுக்குகள். எவரும் சிற்பங்களை நின்று பார்ப்பதுகூட இல்லை. அப்படியென்றால் அவற்றுக்கான நோக்கம்தான் என்ன? அவை வீண் ஆடம்பரங்களா? இல்லை, அவை தத்துவார்த்தமாகவும் முக்கியமானவை. நம் அன்றாடவாழ்க்கை சார்ந்தும் முக்கியமானவை. எப்படி?
இந்திய இலக்கியத்தில் வேதாந்தம்
இந்திய இலக்கியத்தில் அத்வைதத்தின் நேரடியான செல்வாக்கு பல தளங்களில் நிகழ்ந்துள்ளது. வேதாந்தம் இந்திய இலக்கியம் தோன்றும்போதே உடன் தோன்றியது. இந்திய இலக்கியத்தின் சாரமாக இருந்து கொண்டிருப்பது. மரபான உவமையை பயன்படுத்தினால், பாலும் நெய்யும் ஒன்றென உருவாவது போல என்று சொல்லலாம். இந்திய இலக்கியத்தின் பெரும்படைப்புகளான ராமாயணம், மகாபாரதம் இரண்டுமே வேதாந்தத்தை நோக்கிச் செல்லும் தன்மை கொண்டவை. இந்தியாவின் முதன்மைக் காவியங்கள் பலவும் அவற்றின் உச்சங்களில் வேதாந்த தரிசனத்தையே வெளிப்படுத்துகின்றன.
வேதாந்தம் முதிர்ந்து, அத்வைதம் இங்கு தோன்றி ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் ஆகிறது. அத்வைதத்தின் செல்வாக்கு அதன் பிறகு வந்த படைப்புகளில் எப்போதும் உண்டு. மரபிலக்கியத்தில் நேரடியாக தத்துவ வெளிப்பாடு என்பது அரிதாகவே நிகழ்கிறது. பௌத்த, சமணக் காவியங்களில் ஒரு பகுதி நேரடியான அறவுரையாகவே அமைவதுண்டு. அங்கே பௌத்த ,சமணக் கருத்துகள் அதன் கதாபாத்திரங்களாக வரும் பௌத்த, சமண ஞானிகளால் வெளிப்படையாகவே சொல்லப்படுவதுண்டு. மணிமேகலையில் சிலப்பதிகாரத்தில் சீவக சிந்தாமணியில் எல்லாம் சமண ,பௌத்த கருத்துகளை தெளிவாகவே பிரித்து எடுத்துவிட முடிகிறது.
ஆனால் பொதுவான பெருங்காவியங்களில் அவ்வாறு தத்துவ விவாதம் நேரடியாக நிகழ்வதில்லை. அது காவிய ஒருமைக்கு எதிரானதாகவே கருதப்பட்டது. ஆனால் காவியத்தின் பேசுபொருளாக இருக்க வேண்டிய அறம், பொருள், இன்பம், வீடு என்பவற்றில் அறம், வீடு ஆகிய இரண்டையும் பேசும் சந்தர்ப்பங்களில் தத்துவ சிந்தனை பேசுபொருளாக மாறுகிறது.
அறவுரை என்பது காவியங்களில் வெவ்வேறு காவிய கதாபாத்திரங்களினூடாக வெளிப்பட்டுக் கொண்டே இருப்பது. அவ்வாறாக இந்தியாவின் பெருங்காவியங்களில் வெளிப்படும் தத்துவ சிந்தனை பெரும்பாலும் வேதாந்தத்தின் வெளிப்பாடாகவே உள்ளது. அத்வைதத்தின் மறுதரப்பாகக் கருதப்படும் வைதீகம் சார்ந்தும், மரபார்ந்த வழிபாட்டு முறைகள் சார்ந்தும் உருவாக்கப்பட்ட புராணங்களிலேயே கூட தத்துவம் என ஒன்று வெளிப்படும்போது அது வேதாந்தத்திற்கு நெருக்கமாக இருப்பதையே பார்க்கிறோம். அவ்வகையில் பதினெட்டு புராணங்களுமே வேதாந்த வெளிப்பாடு கொண்டவை என்பதை ஓர் ஆய்வாளர் கூறி விட முடியும். பிற்கால சம்ஸ்கிருதக் காவியங்களில் பெரும்பாலும் உலகியல் அதாவது சிற்றின்பம் ஓங்கி நிற்பதனால் அவற்றில் தத்துவத்தின் இடம் மிக குறைவாகவே உள்ளது என்பதை மறுக்க முடியாது. ஆயினும் வாழ்வின் பொருள் குறித்தும், வாழ்வுக்கு அப்பால் உள்ள வாழ்க்கை குறித்தும் அக்காவியம் பேசமுற்படும் இடங்களில் எல்லாம் தத்துவம் என வெளிப்படுவது வேதாந்தமே ஆகும்.
மரபான இலக்கியங்களில் வேதாந்தம் இரண்டு வகையில் வெளிப்படுகிறது. ஒன்று கதாபாத்திரங்களின் உரையாடல் மற்றும் அறவுரைகளில். இன்னொன்று கதாபாத்திரங்களின் கட்டமைப்பு, அவர்களின் வாழ்க்கைப் பரிணாமம் ஆகியவற்றின் வழியாக ஆசிரியர் வெளிப்படுத்தும் பார்வையினூடாக. உதாரணமாக ரகுவம்ச மகாகவியம் ரகுவின் குலத்தின் அரசர்களைச் சார்ந்த கதைகளை, பெரும்பாலும் அவர்களின் அக வாழ்க்கையை, சொல்லும் தன்மை கொண்டிருந்தாலும் கூட ஒவ்வொரு தருணத்திலும் வாழ்வின் துயரங்கள் மீட்புகள் ஆகியவற்றைப் பற்றிய தரிசனம் வேதாந்தத்திற்கு மிக நெருக்கமானதாகவே உள்ளது
ரகுவம்சத்தின் தொடக்கத்திலேயே அதை பார்க்க முடியும். திலீபனையும் சுதக்ஷிணையையும் குறித்த சித்திரத்தில் குழந்தையின்மையால் துன்பப்பட்ட அவர்கள் வசிஷ்டரை நாடிச் சென்று அவரிடம் இருந்து காமதேனு என்னும் தெய்வீகப்பசுவை மேய்க்கும் ஆணை பெற்று , அதையே தவம் எனச் செய்து காட்டில் வாழ்ந்து திலீபனை கருவறுகிறார்கள். இந்த தருணத்தில் வேதாந்தம் முன்வைக்கும் ’பற்று அறுத்தல்’. ’விடுபடுதல்’ என்னும் கூறுதான் அவர்களை நிறைவுறச் செய்து, தாயும் தந்தையும் ஆக்குகிறது என்று பார்க்க முடியும். திலீபன், சுதக்ஷிணை இருவருமே அரசுப் பொறுப்புகளில் இருந்தும், ஆடம்பரங்களில் இருந்தும் விடுபட்டு; மாடு மேய்க்கும் வாழ்க்கை ஒன்றுக்குள் செல்லும்போதுதான் அவர்களின் உள்ளம் விடுபடுகிறது, தொடர்ந்து உடல் விடுபடுகிறது,. அவர்கள் அந்தப் பசுவிடமிருந்துதான் தங்கள் பிள்ளைவரத்தையும் பெறுகிறார்கள். வேதாந்தம் முன்வைக்கும் வாழ்க்கைப் பார்வையை இங்கே உணர முடிகிறது. இத்தகைய தருணங்கள் மரபிலக்கியத்தில் ஏராளமாகவே காணப்படுகின்றன.
நவீன இலக்கியத்தில் வேதாந்தம் மிகத் தீவிரமான ஒரு செல்வாக்கை செலுத்தி இருக்கிறது. இந்தியாவின் நவீனத்தன்மையை உருவாக்கிய இந்து மறுமலர்ச்சி, தேசிய மறுமலர்ச்சி ஆகிய இரண்டுமே ஒருவகையில் வேதாந்தத்தின் கொடைகள் என்று சொல்லலாம். இந்திய வேதாந்தம் ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தரினூடாக நவவேதாந்தம் என வடிவெடுத்தது. தயானந்த சரஸ்வதி, ராஜாராம் மோகன் ராய், ராமகிருஷ்ணர், நாராயண குரு ஆகியோரினூடாக பல நிலைகளாக உருவாகிவந்த அந்த நவவேதாந்த அலைதான் இந்திய மறுமலர்ச்சியை சாத்தியமாக்கியது. (நவவேதாந்தம்- தமிழ்விக்கி)
இந்திய தேசிய எழுத்தாளர்கள் அல்லது மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் என்று சொல்லப்படும் தொடக்க காலப் படைப்பாளிகள் அனைவருமே மூன்று முகங்கள் கொண்டவர்கள்.
1) அவர்கள் இந்திய தேசிய மறுமலர்ச்சியின் குரலாக ஒலித்தனர்
2) இந்து மத மறுமலர்ச்சி இந்து மத சீர்திருத்தம் சமூக சீர்திருத்தம் ஆகியவற்றின் முகங்களாகத் திகழ்ந்தனர்.
3) வேறொரு வகையில் அவர்கள் வட்டார தேசியத்தையும் உருவாக்குபவர்களாக இருந்தார்கள்.
பாரதி, வள்ளத்தோள், குவெம்பு, கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு ஆகியவர்களை இந்த வரையறைக்குள் மிக எளிதாகப் பொருத்த முடியும் என்பதை பார்க்கலாம்
அவர்களின் பொதுவான அம்சமாக இருந்த ஆன்மீகம் அல்லது தத்துவம் என்பது அத்வைதம்தான். அவகளின் சீர்திருத்தப் பார்வை என்பது மதம் முன்வைக்கும் மூடநம்பிக்கை மற்றும் ஆசாரவாதம் ஆகியவற்றுக்கு முற்றிலும் எதிரானதாக இருந்தது. பலசமயம் அவர்கள் வழிபாட்டுமுறைகளை எல்லாம் நிராகரித்து தூய இறையனுபவத்தை மட்டுமே முன்வைத்தனர்.. அவர்கள் தீவிரமான சீர்திருத்த நோக்கம் கொண்டிருந்தார்கள், சமத்துவ பார்வை கொண்டிருந்தார்கள். அவற்றோடு இணைந்துபோகும் தன்மை கொண்டதாக இருந்தது இந்தியாவில் நவ வேந்தாந்தம் மட்டுமே.
இந்திய தேசிய படைப்பாளிகளின் இரண்டாவது நிலையில்கூட பெரும்பாலானவர்கள் நவ வேதாந்தத்திற்கு அணுக்கமானவர்களாகவே இருந்தார்கள். க.நா.சு., செல்லப்பா நகுலன், போன்றவர்களை வேதாந்தத்திற்கு அணுக்கமானவர்கள், வேதாந்தப் பார்வையை முன் வைத்தவர்கள் என்றே சொல்லிவிட முடியும். விவேகானந்தர், நாராயண குருவுக்கு அடுத்த தலைமுறை வேதாந்திகளுடன் அவர்களுக்கு அணுக்கமான தொடர்பு இருந்தது. உதாரணமாக கநாசு, நகுலன் இருவருக்குமே கேரள வேதாந்தியான ஆத்மானந்தா முக்கியமான முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். நகுலன் படைப்புகளில் ராமகிருஷ்ணரின் குரல் எப்போதும் ஊடாடிக்கொண்டிருந்தது.
ஏறத்தாழ மூன்று தலைமுறைகளாக உருவாகி வந்த நவ வேதாந்தத் துறவிகள் இந்தியாவெங்கும் சமூக சீர்திருத்த கருத்துக்களை பரப்புவதிலும், கல்வி நிறுவனங்களை உருவாக்கி பொதுக் கல்வியை நிலைநாட்டுவதிலும் பெரும்பங்கு ஆற்றி இருக்கிறார்கள். இந்திய மொழிகளின் பெரும்பாலான தொடக்ககாலப் படைப்பாளிகள் அந்த இயக்கங்களுடன் இணைந்து செயல்பட்டிருக்கிறார்கள். ஆகவே அவர்கள் அனைவரிலும் வேதாந்தம் அதாவது அத்வைதம் தீவிரமான ஒரு சிந்தனைச் செல்வாக்கை செலுத்தியுள்ளது. உதாரணமாக தமிழகத்தில் கலைக்களஞ்சியத்தை தொகுத்தவர் தொடக்ககால இலக்கிய முன்னோடியான பெரியசாமி தூரன் அத்தகைய ஓர் அத்வைத அமைப்பில் பணியாற்றியவர். அவருடைய சமகாலத்தவரும் ஒருவகையில் அவருடைய சமூகத்தைச் சேர்ந்தவருமான சுவாமி சித்பவானந்தர் தமிழகத்தில் நவவேதாந்தத்தின் முதன்மை உருவான அறியப்பட்டார். அவர்களுக்கு இடையே நல்லுறவு இருந்தது.
இவ்வாறாக இந்தியா முழுக்க அத்வைதத்திற்கும் நவீன இலக்கியத்திற்கும் இடையே ஒரு வலுவான இணைப்பை நாம் காண முடியும். இரண்டு வகையில் அந்த இணைப்பு பிற்காலத்தில் உடைந்தது. ஒன்று நவீனத்துவம் இந்திய மொழிகளில் நுழைந்தபோது அதிலிருந்த அவநம்பிக்கை மற்றும் எதிர்ப்புவாத நோக்கு ஆகியவை வேதாந்தத்திற்கு எதிரானவையாக இருந்தன. தமிழில் அந்த உடைவுக்கு புதுமைப்பித்தன் முன்னோடி உதாரணம் என்று சொல்லலாம். இரண்டாவதாக இந்தியா முழுக்க உருவான மார்க்சிய அலை அடிப்படையில் வேதாந்தப் பார்வைக்கு எதிரானதாக இருந்தது. அது ஐரோப்பிய மையம் கொண்டதும், இந்திய மரபு எதிர்ப்புத் தன்மை கொண்டதுமாகவே தொடக்க காலத்தில் இருந்தது.
ஆனால் பின்னர் நவீனத்துவத்துக்குள்ளும் மார்க்சியத்துக்குள்ளும் நவவேதாந்தம் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை நுணுக்கமாக அடைந்தது. இந்தியா முழுக்க மார்க்ஸியர்கள் தங்கள் சீர்திருத்த நோக்கை நவவேதாந்தத்துடன் இணைத்து புரிந்து கொள்ளும் ஒரு போக்கு எழுந்தது. விவேகானந்தர் மார்க்ஸியர்களுக்கு ஏற்புடையவரானார். கேரளத்தில் விவேகானந்தர் பிறந்தநாளை மார்க்ஸியக் கட்சி கொண்டாடுகிறது. திட்டவட்டமான மார்க்சியர் என்று சொல்லத்தக்க ஜெயகாந்தன் விவேகானந்தரின் குரலாகவே தமிழகத்தில் ஒலித்தார் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். கேரளத்தில் பி.கேசவதேவ் மார்க்சியராகவும் நவ வேதாந்தியராகவும் திகழ்ந்தார்.
இந்திய இலக்கியத்தில் மரபார்ந்த கோணத்தில் நவீன கோணத்திலும் எப்போதுமே வேதாந்தம் அடிப்படையான ஒரு தரிசனமாக இருந்து கொண்டே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
கபிலர் குன்று
கபிலர் உயிர்விட்டதாக கருதப்படும் இடத்தில் அமைந்துள்ள குன்று. விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் வட்டத்தில் கபிலர் குன்று உள்ளது. இங்கு கபிலர் உயிர்துறந்தார் என்றும் ஆகவே கபிலக்கல் என்னும் பாறை அவர் நினைவாக உள்ளது என்றும் கல்வெட்டுச்செய்தி ஒன்று உள்ளது.
கபிலர் குன்று – தமிழ் விக்கி
வாழ்த்துக்கள், முனைவர் ஜெயமோகன்!
அன்புள்ள ஜெ, நவராத்ரிக்கு சொந்த ஊரான கொட்டாரத்திற்கு வந்திருந்தேன். தொடர்ந்த மழையால் பச்சை கொப்பளித்து கிடந்தது ஊர். புதுப்பச்சையின் ஒளி சூடியிருந்த காலையை மேலும் அழகாக்கியது உங்களுக்கு அளிக்கப்படவிருக்கும் “மதிப்புறு முனைவர்” பட்டத்திற்கான அறிவிப்பு. வயதும், அனுபவமும் தற்செயல் என்ற வார்த்தையை அபத்தமாகக் காணப் பழக்கியிருக்கிறது.
பொதுவாக நீங்கள் விருதுகளை ஏற்பவரில்லை. அதிலும் குறிப்பாக அரசு மற்றும் கல்வித்துறை சார்ந்த விருதுகளை புறக்கணிப்பவராகவே இருந்து வந்துள்ளீர்கள். இடையில் பத்மஶ்ரீ விருது வந்தது. அதை கவனமாக மறுத்தீர்கள். ஒரு வாசகனாக, என் எழுத்தாளருக்கு அளிக்கப்பட்ட கௌரவம் மறுக்கப்பட்டது எனக்கு வருத்தமே. ஆனால் அதன் பின்னிருந்த எழுத்தாளனின் சுயம் அந்த கௌரவத்தை விட பெரிதானது என்ற புரிதல் அவ்வருத்தத்தை சமன் செய்தது. அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் புக் பிரம்மாவின் வாழ்நாள் சாதனையாளர் விருது. இயல், புக் பிரம்மா இரண்டிற்கும் ஓர் ஒப்புமை உண்டு. இரண்டுமே இலக்கிய வாசிப்புடைய வாசகர்களின் தேர்வு.
நமது கல்வித்துறையின் வாசிப்புத் தரம் மிகப் பிரசித்தமானது. அவர்கள் “Post Modernism” என்பதை “Post Mortem” என்று புரிந்து கொண்டவர்கள். இலக்கணம், கொள்கைகள், அரசியல், பண்பாடு, சாதி, இனம் சார் பிடிப்புகள் எனப் பல வகையான ஆய்வுக் கூறுபாட்டு கருவிகள் கொண்டவர்கள். ஒருவகையில் கல்வித்துறை அப்படித்தான் செயல்பட்டாக வேண்டும். தனக்கான நெறிகளும், தரக் கட்டுப்பாடுகளும், வரையறுக்கப்பட்ட, மீள மீள நிகழ்த்த தக்க விளைவுகளும் கொண்டவை அவை. எனவே இயல்பாக ஒரு இயந்திர கதிக்குச் செல்ல விதிக்கப்பட்டவை. அதனுள் நுழையும் எவரையும் அந்த இயந்திர விதிகளுக்குள் இயல்பாகப் பொருந்திக் கொள்ளச் செய்யும் வல்லமை அதற்குண்டு. இவை இன்று நேற்று நடப்பவை அல்ல. தொன்று தொட்டே இது தான் நிலை. தண்டி தன் காவிய இலக்கண நூலான ‘காவ்யதர்ச’த்தை செய்தது காஞ்சி கடிகையில் தானே.
மற்றொரு உதாரணம், உங்களின் சமீபத்திய ‘காவியம்’ நாவலில் வரும் சாதவாகனப் பேரரசின் ‘காவியபிரதிஷ்டான’ சபை. குணாட்யரையே மொழி என்பது ஆழுள்ளத்தின் வாகனம் தான் என்ற அடிப்படையையே மறக்கடித்த பெருமை அச்சபைக்குண்டு. அவரை வெற்றி கொண்ட சர்வவர்மரையும் அப்படி ஒரு சராசரியாக்கி ‘ப்ருஹத் கதை’ எனும் காவியத்தை உதாசீனப்படுத்த வைத்தது. எனவே கல்வித்துறையின் ஏற்பு, அது அளிக்கும் விருதுகள் போன்றவற்றிலும் மேற்கூறிய சார்புகள், சாய்வுகள் இருப்பதை தவிர்க்க இயலாது. எனவே ஒரு சுயாதினமான ஒரு எழுத்தாளர் இந்த அமைப்புகளின் மீது ஒவ்வாமையோடு இருப்பது இயல்பானதே. அது தான் முறையும் கூட. ஏனெனில் அத்தகைய ஓர் எழுத்தாளரின் படைப்பு தான் கல்வி நிறுவனங்களை தமது அடுத்த கட்ட பரிணாமத்திற்கு கடத்தும். அன்றும், இன்றும், என்றும் இலக்கியம் கண்டதற்குத் தான் இலக்கணம்.
இந்நிலையில் ஒரு மாற்றம், தங்களின் உலகியல் சார்ந்த தேவைகளை போதிய அளவிற்கு நிறைவேற்றிய, அதற்கும் மேலாக இலக்கிய வாசிப்பில் ஆர்வம் கொண்ட, இணைய கால புது வாசகர்களின் அலையால் நிகழத்துவங்கியது. முதலில் உலகியல் வெற்றிகளை உறுதிப்படுத்தும் துறைகளில் துவங்கிய இந்த வாசகர் அலை மெல்ல மெல்ல இலக்கியம் என்ற இயக்கத்தை அனைத்துத் துறைகளிலும் ஊடுருவச் செய்தது. இதன் நீட்சி கல்வித் துறையிலும் நிகழ்ந்தது. அரங்கசாமி, முனைவர். சக்தி கிருஷ்ணன் போன்றவர்கள் கல்வித்துறையில் ஈடுபடுவது ஒரு நல்ல தொடக்கம்.
தமிழகத்தில், அதிலும் குறிப்பாக கல்வித்துறையில் கவனம் பெற வேண்டுமெனில் முற்போக்கு என்ற பெயரில் மரபை மொத்தமாக துறந்தாக வேண்டும் என்பது எழுதப்படாத விதி. எந்தவொரு வகையிலும் தமிழர் பண்பாடு, வரலாறு, கலை, இலக்கியம், தத்துவம் என எந்த ஒன்றும் நம் பாரத மரபோடு தொடர்புறுத்தப் பட்டு விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தாக வேண்டும். எனவே நிறுவனத்தின் பெயர் துவங்கி கருத்தியல் வரை மிகக் கவனமாக பாரத மரபு தவிர்க்கப்பட்டாக வேண்டும். இந்த பின்னணியில் வைத்துப் பார்க்கையில் பொயு ஆறாம் நூற்றாண்டில் நிகழ்ந்த தக்ஷஷிலா பல்கலைக்கழகத்தின் பெயரில் தமிழ்நாட்டில் ஒரு பல்கலைக்கழகம் துவங்கப்பட்டிருப்பதே பெரும் சாதனை தான். அதன் தாளாளர் திரு தனசேகரன் அவர்கள் தங்கள் வாசகர் என்பது இன்னும் கூடுதலான மகிழ்ச்சி.
ஒரு வகையில் இலக்கிய வாசிப்பு உடையவர்கள் கல்வித்துறையில் நுழைவது காலத்தின் கட்டாயமும் கூட. இன்று செயற்கை நுண்ணறிவு பொதுப் பயன்பாட்டிற்கு வந்துவிட்டிருக்கிறது. இந்த செயற்கை நுண்ணறிவு மானுடம் கண்டடைந்த தொழில்நுட்பங்களை தானும் மானுடர் போல இயல்பாக கையாண்டு மானுடர் தரும் செயல்விளைவுகளை உருவாக்கக் கூடிய சாத்தியத்தை தன்னுள் கொண்டிருக்கிறது. எனவே பல துறைகளிலும், குறிப்பாக நான் பணியாற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் நிதர்சனம் வேறு. செயற்கை நுண்ணறிவு என்பதன் செயல்விளைவு தேவையான அளவு, திருப்திகரமாக இருக்க வேண்டுமெனில், அது என்ன செய்ய வேண்டும், அது செயல்பட வேண்டிய தளம் பற்றிய முழுமையான தகவல்கள் போன்றவற்றை முறையாக அதற்குத் தெரிவிக்க வேண்டும். எளிய, அன்றாட ஆங்கிலம் தான் அதன் மொழி. இதை “அறிவிப்பு தொழில்நுட்பம்” என்று அழைப்பர். செயற்கை நுண்ணறிவுக்குத் தரப்படும் “அறிவிப்பின்” தரத்தைப் பொறுத்து அதன் முடிவுகள் வேறுபடும். இதன் பொருள், மொழியாளுமை மிகுந்த ஒருவருக்கு அது தரும் முடிவுகளுக்கும், ஒரு சராசரி மொழித்திறன் உள்ள ஒருவருக்கு அது தரும் முடிவுகளுக்கும் பாரதூர வேறுபாடுகள் இருக்கும்.
செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டின் ஆகப் பெரிய சிக்கலே இந்த இடம் தான். காலங்காலமாக நம் கல்வித்துறையும், பொது சமூகமும் மொழி என்பதை முற்றிலுமாக புறக்கணித்தே வந்துள்ளன. இன்றிருக்கும் உலகளாவிய தொழில்நுட்ப வல்லுனர்களில் தனக்கென மொழியாளுமை உள்ளவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்பது தான் யதார்த்தம். இந்தியா மட்டுமல்ல, அமெரிக்கா, ஐரோப்பாவிற்கும் இது தான் நிலை. மிகச் சில நாடுகளே “பகுத்தாய்வை” முன்னிறுத்தும் கல்வி முறைகளில் இருந்து “படைப்பாக்கத்தை” முன்னிறுத்தும் கல்வி முறைகளுக்கு நகரத் துவங்கியுள்ளன. சிங்கப்பூர் சிறந்த உதாரணம்.இந்நிலையில் மொழியாளுமை உருவாகி வர மிகச்சிறந்த வழி என்பது இலக்கிய வாசிப்பு மட்டுமே. அதை கல்வித்துறை நிறுவனங்கள் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். இப்போது பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் புகைப்பட குழுமங்கள், இயற்கை ஆராய்ச்சி, பறவை பார்த்தல் போன்ற ஆர்வம்சார் குழுக்கள் செயல்படத் துவங்கியுள்ளன. இதன் தொடர்ச்சியாக வாசிப்புக் குழுமங்களும் உருவாகும். மெல்ல மெல்ல இலக்கிய வாசிப்பு ஒரு துணையறிவுச் செயல்பாடாக கல்வித்திட்டத்தின் ஒரு பகுதியாக மாறத் துவங்கும். அதற்கு முதலில் மொழி, இலக்கியம் பற்றிய ஒரு புறவயமான பார்வை அந்த கல்வி நிறுவனங்களுக்கு வர வேண்டும். அதற்கு அது அந்த துறையின் முதன்மை பங்களிப்பாளர்களை அது அடையாளம் கண்டு மாணவர்கள் முன் வைக்க வேண்டும்.
தங்களுக்கு அளிக்கப்படவிருக்கும் இந்த பட்டம் குறைந்தபட்சம் தக்ஷஷிலா பல்கலைக்கழகத்தில் மேற்கூறிய இவை நடக்கக் கூடும் என்ற நம்பிக்கையைத் தருகிறது. எனவே தான் அந்த பல்கலையின் முதல் மதிப்புறு முனைவர் பட்டம் தங்களுக்கு வழங்கப்படுவதும், அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள முன்வந்திருப்பதும் நிச்சயம் தற்செயல் அல்ல என நினைக்கிறேன். மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜெ.
அன்புடன்,
அருணாச்சலம் மகாராஜன்.
கரூர் விபத்து, அறிதல்
கரூர் சாவுகள் பற்றிய உங்கள் பார்வை உண்மை..ஒரு சமூகவியல் மாணவன் என்ற முறையில் கரூர் கூட்டத்தை ஒரு Mob என்று சமூகவியலில் கூறுவார்கள். அதாவது கட்டுக்கடங்காத கொள்கையற்ற கூட்டம் என்பார்கள்.இதை நாம் எங்கும் காணலாம்.
கரூர் விபத்து, கடிதம்
A Land for Buddha is a beautiful little text. The line stating that Buddha descended from the Himalayas and returned to the mountains struck me profoundly. We encounter countless texts,
The land of BudhaOctober 19, 2025
தற்கடமை
மானுட மட்காக்குப்பைகள்
ஒரு கேள்வி. ஒருவர் தன்னுடைய குடும்பத்தை மட்டுமே முழுநேரமாக பேணினார் என்றால்; பிள்ளைகளை பற்றி மட்டுமே எண்ணி, பிள்ளைகளை நல்ல நிலையில் நிறுத்துவதை மட்டுமே செய்து வாழ்க்கையை முடித்தார் என்றால்; அவர் முக்தி அடைய தகுதியானவர் என்று இந்து மெய்யியல் சொல்லுமா? அதாவது மரபான இந்து நம்பிக்கைப்படியே அவர் முக்திக்கு அருகதைகொண்ட ‘சாத்விகர்’ தானா? அல்லது கூடுதலாக கடைசிக்காலத்தில் கொஞ்சம் நாமஜெபம், கொஞ்சம் கோயில்குளம் வழிபாடு, கொஞ்சம் பிரார்த்தனைகள் மட்டும் செய்தால் போதுமா?
விரிவாக சித்தரிக்கிறேன். ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத் தலைவர், ஒரு வேலையும் வாழ்வதற்கான அடிப்படை வசதிகளையும் கொண்டவர். அவர் தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் ஊர் மெச்சும்படி மருத்துவம் அல்லது ஐஐடியில் சேர்க்க வேண்டும், வெளிநாட்டு வேலைக்கு அனுப்பவேண்டும் என்பதை மட்டுமே இலக்காகக்கொண்டு வாழ்கிறார். ஒரு பைசாகூட வீணடிக்கவில்லை. தன்னைப்பற்றி எண்ணியதே இல்லை. அவர்கள் இருவரையும் அவர் உயர்ந்த பொறுப்புகளில் ஏற்றிவிட்டு, அவர்களுக்குச் செய்ய வேண்டிய சமூகக்கடமைகள் அனைத்தையும் செய்துவிட்டார் என்று கொள்வோம்.
நம் பொதுப்பார்வையின்படி அவர் தன் கடமையைச் செய்தவர். சமூகம் மதிக்கும் ஒன்றை நிகழ்த்தியவர். நடைமுறையில் ஒரு தியாகி. கடமையைச் செய்தபின் அவர் வயோதிகத்தில் கோயில்களுக்குச் செல்கிறார். சில அறச்செயல்களில் ஈடுபடுகிறார். நோன்புகள் நோற்கிறார். அதாவது அவர் இங்கே அனைத்தையும் செய்து முடித்து, விண்ணுலகம் செல்வதற்குரியவற்றையும் செய்கிறார். சரி, அவர் விண்ணகம் செல்வார், அல்லது முக்தி அடைவார் என்று இந்து மரபு சொல்லுமா?
இந்து மத அடிப்படைகளை கற்ற ஒருவருக்கு தெரியும், ஒருபோதும் அப்படி இந்து மரபு சொல்லாது. அறிவற்ற பௌராணிகர்கள் அல்லது பேச்சாளர்கள் தவிர எந்த மத அறிஞரும் அதைச் சொல்ல மாட்டார். அந்த தந்தை தன் உலகியல் கடமைகளை மட்டுமே செய்தவர், அதற்கப்பாலுள்ள இரு கடமைகளை செய்யாதவர், ஆகவே முக்திக்கு அல்லது விண்ணுலகுக்குச் செல்லமுடியாதவர். அந்த இரண்டு கடமைகள் இவை. ஞானத்தை தேடி முன்னகர்ந்து அகவிடுதலையை அடைதல், வாழ்நாளெல்லாம் நற்செயல்களைச் செய்து புண்ணியத்தை ஈட்டிக்கொள்ளுதல். உலகியலை விரும்புபவர் உலகியலிலேயே உழல்வார். ஆகவே அவர் திரும்பவும் அதே உலகியல்சுழற்சியில்தான் பிறந்து விழுவார் என்றுதான் இந்துமரபு அறுதியிட்டு கூறும். உலகியலை வெட்டி விடுதலை அடைவதையே கீதை முதல் நிபந்தனையாகச் சொல்கிறது.
இதே கேள்வியுடன் வந்த முதியவர் ஒருவருக்கு விடை அளிக்கையில் நித்யா பாதி நகைச்சுவையாகச் சொன்னார். “உங்கள் உலகியல் வாழ்க்கையில் உங்களுக்கு முழுநிறைவா?”. அவர் “இல்லை குரு” என்றார். “அந்த அடையப்படாதவற்றை எல்லாம் அடைவதற்காக உங்கள் மனம் தவிக்கிறது அல்லவா”. அந்த நபர் புரிந்துகொண்டு தலையசைத்தார். “பிறகு எப்படி நீங்கள் வீடுபேறு அடைய முடியும்?” என்றார் நித்யா. உலகியல் ஒருபோதும் நிறைவை அளிக்காது. அடையுந்தோறும் அதிருப்தியே வளரும். செய்யுந்தோறும் செயல் மிச்சமிருக்கும். நாம் பிறருடன் நம்மை ஒப்பிட்டுக்கொண்டு மனக்குறைகளையே பெருக்கிக்கொள்வோம். அந்த மனக்குறைகளே நம்மை உலகியலில் கட்டிப்போடும். அதிலிருந்து விலகவே முடியாது. அதில் இருந்து சாவு நம்மை விடுவிப்பதில்லை என்பதே இந்து மெய்யியலின் கூற்று.
உலகியல் என்பது ஒரு வணிகம். ஆகவே அங்கே எதற்கும் விலை உண்டு. உண்மையில் உலகியலில் தியாகம் என்பது கிடையாது. நாம் எவருக்கு எதை அளித்தாலும் நிகரான ஒன்றை திரும்ப எதிர்பார்ப்போம். பிள்ளைகளுக்கான கடமையை தன்னை அப்படியே தியாகம் செய்து நிறைவேற்றிய ஒருவர் அவர்கள் அதற்காக தன்னிடம் நன்றியுடன் இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பதே விலை கோருவதுதான். நாம் ஏதேனும் ஒரு மகிழ்ச்சியை அளித்தே பிறிதொன்றை பெற்றுக்கொள்கிறோம். ஆகவே நாம் அளித்தது எது என்னும் கணக்கு நம்மிடம் எப்போதும் இருக்கும்.
கடமையைச் செய்வதை மட்டுமே வாழ்வென அமைத்துக் கொண்டவர் அதிலிருந்து எந்த நிறைவையும் அடைந்திருக்க மாட்டார். மாறாக அவர் அடைந்திருப்பதெல்லாம் ‘இப்படி இருந்திருக்கலாமே’ என்னும் எளிய் அதிருப்திகளும், ‘இது நிகழ்ந்திருக்கலாமே’ என்னும் விடுபடல்களும் மட்டுமேதான். அந்த அதிருப்திகளையும் விடுபடல்களையும் நிரப்புவதற்காக அவர் மீண்டும் பிறப்பார் என்று நித்யா சொன்னார். அடுத்த பிறவிக்கு கொண்டுசெல்வது அவற்றை மட்டுமே. அவை விதைகள் போல. இந்த பிறவியில் ஈட்டியவை அவை. ‘உள்ளங்கையில் ஒரு பிடி விதைகளை பிடித்துக்கொண்டு மீண்டும் கருப்பையில் இருந்து வெளிவருவீர்கள்’ என்றார் நித்யா. கேள்வி கேட்டவர் வெளிறிப்போனதை நினைவுகூர்கிறேன்.
ஆகவே உலகில் ஈடுபடுபொருவர் அந்த உலகில் மட்டுமே மீண்டும் மீண்டும் உழல்பவராகவே நீடிப்பார். ஒரு புதிர்ப்பாதை போல உலகியல் அவரை முழுமையாக இழுத்து ஈடுபடுத்திக் கொள்ளும். முடிவில்லாமல் சுற்றிவரச் செய்யும். உலகியலில் இருந்து விடுபட வேண்டும் என்ற வேட்கை ஒரு துளியாவது ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும் என்றுதான் இந்து மதம் சொல்கிறது. உலகியலில் இருந்து விடுபடுவதற்காக ஒரு அடியை ஏனும் ஒரு எடுத்து வைத்தாக வேண்டும்.
அந்த காலடிதான் வீடுபேறின் தொடக்கம். அதிலிருந்து தான் அவர் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த உலகியலின் சுழற்சியில் இருந்து அடுத்த நிலை நோக்கிச் செல்லமுடியும். அவர் அந்த விழைவுடன் மறைந்தால்கூட அது மீண்டும் ஒரு தொடக்கமாக அடுத்த பிறவியில் தொடரும் என மரபான மதநம்பிக்கை சொல்கிறது. ‘அறஞ்செய விரும்பு’ என்னும் சொல்லின் பொருள் இதுவே. அந்த விருப்பமே அவரை மீட்பது.
ஆகவே உலகில் கடன்களை முழுக்க முற்றாக முடித்த ஒருவர் ஒருபோதும் வீடுபேறு அடைய மாட்டார் என்றுதான் இந்து அடிப்படைகளைக்கொண்டு சொல்ல முடியும். ஆனால் நம்மிடையே இருக்கும் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் உலகியலை மட்டுமே தங்களுடைய வாழ்க்கையின் சாரம் எனக் கொண்டிருக்கிறார்கள். அதுவே வாழ்நாள் சாதனை என நினைக்கிறார்கள். அவர்கள் மாபெரும் ஆன்மீக இருளில் இருக்கிறார்கள்.
மதத்தை விட்டுவிட்டு நடைமுறை நோக்கில் பார்த்தால் கூட ஒருவர் தன்னுடைய வாழ்க்கையின் இறுதியில் ஏதேனும் நிறைவை அடைய வேண்டுமென்றால் அதற்கான வழி ஒன்றே. தன்னுடைய இயல்பு என்ன என்று உணர்ந்து, அந்த இயல்பை நிறைவு செய்யும் செயல்களை செய்து, அதனூடாக தன்னியல்பாகவே ஒரு முழுமையை நோக்கி நகர்வதுதான். ‘நான் வாழ்ந்தேன், நான் இதை இயற்றினேன்’ என்று சொல்ல அவருக்கு ஏதேனும் ஒன்று உலகியலுக்கு அப்பால் இருந்தாகவேண்டும். ஏனென்றால் அங்கே மட்டுமே அவர் மெய்யான இன்பத்தை அடைகிறார். விடுதலையையும் நிறைவையும் அளிக்கும் செயலே மெய்யான இன்பம் என்பது.
அந்த தன்னறத்தை இயற்றி நிறைவை அடையாத ஒவ்வொருவரும் அதிருப்தியும் கசப்பும் நிறைந்தவர்களாகத்தான் எஞ்சுவர். அந்த அதிருப்தியை கசப்பையும் தங்களுடைய வாரிசுகள் மேல் ஏற்றி வைத்து அன்பின்மையையும் வெறுப்பையும் திரும்ப ஈட்டி கொள்வார்கள். அந்த இருளில் இறுதி காலத்தில் திளைத்து மடிவார்கள். அவர்கள் ஒவ்வொருவரிடம் திரும்பத் திரும்ப இந்த காணொளிகள் வழியாக நான் சொல்வது ‘உங்களுக்கான உலகத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்’ என்பதையே
இன்று ஒருவரின் அறுபது வயதில் அவருடைய பிள்ளைகள் அவர்களின் வாழ்க்கை அமைத்துக் கொண்டிருப்பார்கள். அவருக்கென்று ஒரு தனி வாழ்க்கை இல்லை என்றால், அவர் பிள்ளைகளின் வாழ்க்கையில் ஓர் ஒட்டுண்ணியாக கடித்துத் தொங்கிக்கொண்டிருக்க நேரிடும். அப்படி உலகியலுக்காக வாழ்ந்தாலும் ஒரு கட்டத்தில் ‘என் கடன் முடிந்தது, என் வாழ்க்கையை நான் இனியாவது வாழ வேண்டும்’ என்று சொல்பவர்கூட ஒருவகையில் விடுதலையை அடைய வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் விடுபடுவதற்கான விழைவாவது உருவாகியிருக்கிறது. அது ஒரு சிறு பொறி. அதுகூட போதும்.
நினைவில் நிறுத்துக, கடமைகளில் முதன்மையானது ஒருவர் தனக்குத் தானே நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய கடமைதான். அதை தற்கடமை என்று சொல்லலாம்.
பூவை செங்குட்டுவன்
தமிழின் முருகபக்திப் பாடல்களில் மிகப்புகழ்பெற்ற பத்தில் இரண்டு பாடல்கள் ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்’ மற்றும் ‘திருப்புகழை பாடப்பாட’ . இரண்டையும் எழுதியவர் பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன். திராவிட இயக்க ஆதரவாளராக இருந்து ‘கருணையும் நிதியும் ஒன்றால் சேர்ந்தால் கருணாநிதி’ போன்ற பாடல்களை எழுதியவரும் அவரே
பூவை செங்குட்டுவன்
பூவை செங்குட்டுவன் – தமிழ் விக்கி
ரமேஷ் பிரேதன் விருது- எதிர்வினைகள்
அன்புள்ள ஜெ,
ரமேஷ்– விருதுகள் பற்றி நீங்கள் எழுதிய கட்டுரை கண்டேன். இந்த விருதுகள் பற்றிய கருத்தை ஒரு நண்பர் ஆவேசமாகச் சொன்னார். “எவ்ளவோ நல்ல எழுத்தாளங்க இருக்காங்க” என்றார்.
நான் சொன்னேன். “நீங்க உங்களை தவிர அஞ்சு எழுத்தாளர் பேரைச் சொல்லுங்க…” கூடவே சேர்த்துக்கொண்டேன். “ஆனா அவங்களைப் பத்தி நீங்க முன்னாடியே ஒரு பத்தியாவது எழுதியிருக்கணும். இப்ப அவங்க ஏன் முக்கியமானவங்கன்னு அவங்களோட புத்தகங்களை முன்வைச்சு ஒரு பத்து நிமிஷமாவது பேசணும்”
அவர் திகைத்துவிட்டார். இங்கே எவரும் எந்த நூலைப்பற்றியும் பேசுவதில்லை. எந்தப் படைப்பாளிகளையும் குறிப்பிடுவதில்லை. ஒரு புத்தகம் வெளிவந்தால் மயான அமைதிதான். ஆனால் ஒரு வம்பு என்றால் பாய்ந்து வருவார்கள். எவ்வளவு சிறிய மனிதர்கள். நினைக்க நினைக்க குமட்டலை அளிக்கும் அற்பர்கள்.
ராஜ மருதுபாண்டியன்
அன்புள்ள ஜெ
உங்கள் கட்டுரை வரும்வரை விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் விருதுகள் பற்றிய விவாதங்களை மட்டும் கவனித்துக்கொண்டிருந்தேன். சரியான விளக்கம் வரும் என்று எதிர்பார்த்தேன். கண்டிப்பாக உங்களிடம் விரிவான விளக்கம் இருக்கும். போகிறபோக்கில் விஷ்ணுபுரம் அமைப்பு முடிவெடுக்காது என்ற நம்பிக்கை இருந்தது. இத்தனை விரிவான கணக்கீடும் விவாதங்களும் நிகழ்ந்த பின்புதான் இந்த விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன என்பதே இந்த விருதுகளின் மதிப்பை காட்டுகிறது.
விஷ்ணுபுரம் அமைப்புகளின் விருதுகளைத் தீர்மானிப்பதில் இளையதலைமுறை வாசகர்களின் பங்களிப்பு இத்தனை தூரம் இருப்பதும் மிக மகிழ்ச்சியான ஒன்று.
எம்.பாஸ்கர்
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் ரமேஷ் விருது பெற்றுள்ள படைப்பாளிகள் பற்றிய சுருக்கமான அறிமுகம் வாசித்தேன். நான் தேவிலிங்கம் எழுதிய நெருப்பு ஓடு நாவல் வாசித்துக்கொண்டிருக்கிறேன். மிக வித்தியாசமான ஒரு படைப்பு.
ஆர். குமரேஷ்
விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 1 – தேவி லிங்கம் விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 2 – சஜு விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 3 – செல்வகுமார் பேச்சிமுத்து விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 4 – அசோக் ராம்ராஜ் விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 5 – அழகிய மணவாளன்கீதையை அறிதல், கேட்டலும் வாசித்தலும்- கிரி
அன்புள்ள ஆசிரியருக்கு,
கோவையில் நீங்கள் ஆற்றிய கீதை உரைகளை பலமுறை கேட்டிருக்கிறேன். வீட்டில், காரில் செல்லும் போது, நடைபயிற்சியின்போது. முக்கியமான வரிகள் அதைக்கேட்ட இடத்துடன் என் மனதில் பதிந்திருக்கிறது. அந்த இடத்திற்குச் செல்லும்போது அந்தந்த வரி மனதில் எழுந்துவருவதையும் உணர்ந்திருக்கிறேன்.
கீதையை அறிதல் கட்டுரைகள் தளத்தில் வெளியானபோது சில பகுதிகளை வாசித்தேன். அது உங்கள் குரலாகவே எனக்குள் ஒலித்தது.
இம்முறை வெள்ளிமலையில் வாசிப்புப்பயிற்சி முடிந்தவுடன், தொடர்பயிற்சிக்க்காக கீதையை அறிதல் புத்தகத்தை வாசிக்கலாம் என சில நண்பர்கள் முடிவுசெய்தோம். அதன்படி அவரவர் எழுதிய சுருக்கக்குறிப்புகளை வாட்சப் குழுவில் பகிர்ந்துகொள்ளத்துவங்கினோம்.
கீதையை அறிதலை குறிப்புகள் எடுக்கத் தொடங்கியதுமே என் பிழை புரிதல்களும், இடைவெளிகளும் தெரிய ஆரம்பித்தன. தனித்தனி செய்திகளாக, கருத்துக்களாக, உவமைகளாக, கதைகளாக நினைவில் வைத்திருந்தேனே தவிர அதை சரியாக தொடர்புருத்திக்கொள்ளவில்லை. அதன் தர்க்கக்கட்டமைப்பும், தத்துவார்த்தக்கட்டமைப்பும் தெளிவாகி வந்தது.
இதுவரை காதால் கேட்க்கும் விஷயங்களையே நான் சரியாக உள்வாங்குகிறேன், புரிந்துகொள்கிறேன் என்று நினைத்திருந்தேன். ஆனால் புத்தகமாக வாசிக்கும்போது உங்கள் உரையின் மொத்த கட்டமைப்புமே புரிகிறது என்று கண்டுகொண்டேன். இந்த காரணத்திற்காக இப்புத்தகத்தை நண்பர்கள் அனைவருக்கும் பரிந்துரை செய்வேன். நான் உங்கள் கீதை உரையை பலமுறை கேட்டவன், எல்லாவற்றையும் புரிந்துகொண்டேன் என்னும் ஆணவத்தை இந்தப்புத்தகம் உடைப்பதை நாமே உணர்ந்து ரசிக்கலாம்.
இன்று அதிகாலை 4 மணிமுதல் சரியாக தூக்கம் வராமல், அடுத்தடுத்த அத்தியாயங்களைப் படிக்கலாம் என அமர்ந்தேன்.
குறிப்பாக நான்காம் நாள் உரையின் கட்டுரைகள். எவ்வளவு மேலோட்டமாக தகவல்களைமட்டும் நினைவில் வைத்திருந்து இருக்கிறேன்!. கீதையின் புனைவுப்பாவனைகளுக்கு அப்பால் சென்று அறிய வேண்டிய மறைஞானப்பொருள் பற்றிய வரிகள், சர்வமிதம் ஜகத் மோகிதம், ஈஸோவாஸ்வம் ஜகத் சர்வம் இவைகளிலிருந்து நீங்கள் சென்ற தொலைவு. மூன்று வகையான காம்ங்களைப் பற்றி குறிப்பிட்டது. புகை நெருப்பை மறைப்பதுபோல, அழுக்கு கண்ணாடியை மறைப்பதுபோல, கருப்பை கருவை மறைப்பதுபோல. இம்முறை தெரிந்துகொள்ளவில்லை, உணர்ந்துகொண்டேன். இதை நீங்கள் உணர்த்தியவிதம் bliss.
முந்தியநாள் சனிக்கிழமை படையலுக்காக வைக்கப்பட்டிருந்த பலவகையான காய்கறிகள், பழங்கள், மலர்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். எவ்வளவு வண்ணங்கள், வடிவங்கள், சுவைகள், ஈஸோவாஸ்யம் இதன் சர்வம் என்று கண்ணீருடன் சொல்லிக்கொண்டேன்.
இது அனைத்திலும் உறைகின்ற அதை அறிவேனா தெரியவில்லை. ஆனால், அது வெளிப்படும் இதை அறிகிறேன். இதை உணர்த்திய உங்களுக்கு என் நன்றிகள்.
ஒவ்வொரு முறை உங்கள் பாதம் பணியும்போதும் சங்கடமாக மறுத்துவிடுவீர்கள். இம்முறை அதை அறியும் முகூர்த்தம் எனக்கு வாய்க்கட்டும் என வாழ்த்துங்கள்.
கிரி
ஆஸ்டின்
October 18, 2025
தெற்கு கரோலைனா நூலறிமுக நிகழ்வுகள்
அக்டோபர் 27, திங்களன்று காலை 11 மணிக்கு நீங்கள் கால்ட்டன் கவுண்டி உயர்நிலைப்பள்ளி மாணவர்களிடையே உரையாடுகிறீர்கள். ஆங்கிலத்துறை ஆசிரியர் முனைவர் ஏஞ்சல் டக்கருடன் உங்கள் கதைகள் குறித்தும், இலக்கியப் புனைவுகளை வாசித்தல், புனைவெழுத்தின் நுட்பங்கள் குறித்தும் உரையாடல்; மாணவர்கள் உங்கள் கதைகளைக் குறித்து பேசுவர்; பின் கேள்வி நேரமும் உண்டு.
கால்ட்டன் கவுண்டி உயர்நிலைப் பள்ளி 1400 மாணவர்கள் கொண்டது. நான் இங்குதான் கணிதத்துறைத் தலைவராக இருக்கிறேன். வாசிப்பிலும், புனைவெழுத்திலும் ஆர்வம் கொண்ட மாணவர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள். உங்களைச் சந்திக்க பல மாணவர்களும், ஆசிரியர்களும் ஆர்வமாக உள்ளனர்.
இரண்டாவது நிகழ்வு அன்று மாலை 4 மணிக்கு கால்ட்டன் மெமோரியல் நூலகத்தில் நடைபெறுகிறது. இந்தக் கவுண்டியைச் சேர்ந்த எழுத்தாளர்களின் அமைப்பு “Writers Who Write” என்பது. இதில் உறுப்பினராக உள்ள அனைவருமே குறைந்தது ஒரு நூலாவது எழுதி வெளியிட்டவர்கள். நாவலாசிரியர் பிகே பாட்ஸ் இதன் தலைவர். இவர்கள் மத்தியில் Unsung India என்ற தலைப்பில் மேற்குலகம் அறியாத இந்தியாவின் இலக்கிய, ஆன்மிகப் பக்கங்களை அறிமுகப்படுத்தி உரையாற்ற இருக்கிறீர்கள். இங்கும் கேள்வி நேரம் உண்டு.
அன்புடன்
ஜெகதீஷ் குமார்
Regards
Jegadeesh Kumar
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

