Jeyamohan's Blog, page 5
October 16, 2025
பனை,மித்ரன், குக்கூ…
மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு வணக்கம்,
அருட்தந்தை காட்சன் சாமுவேல் அவர்களை உங்களின் இணையதளம் வழியாகவே அறிந்து கொண்டேன். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பனை சார் வாழ்வினை தவம் போல கொண்டிருக்கும் அவருள் இருந்தும் நான் பெற்றது அதிகம்.குறிப்பாக அவரின் பனை எழுக புத்தகம் எனக்கு பைபிள் போல அத்தனை அணுக்கமானது.
அவரின் குடும்பத்தினருடன் மிக நெருங்கி இருக்க எனக்கு வாய்ப்பு அமைந்தது.அதில் மித்ரன் எனக்கு மிக பிரியமானவன் அவனின் ஒவ்வொரு செயலும் காட்சன் பாதர் போலவே இருக்கும். பனம்பழம் ஒன்றை கையில் வைத்து இருக்கும் அவனின் புகைப்படம் என் மனதில் அப்படியே உள்ளது.
மித்ரனின் இழப்பினை அந்த மொத்த குடும்பமும் இடைவிடாத தீவிர பிரார்த்தனையில் தங்களை ஆழ்த்தி கொள்வார்கள் என சிவராஜ் அண்ணா சொன்னார்கள்.
மித்ரனின் பிறந்தநாளினை(17.10.25) அவனுள் விருட்சமான பனை எழும் நாளாக கொண்டாடுவோம் இனி வரும் ஒவ்வொரு ஆண்டும்.
அன்று குக்கூ நிலத்தினை ஒட்டிய ஏரிக்கரையில் ஆயிரம் பனை விதைகளை பிள்ளைகளின் கரங்கள் கொண்டு விதைக்கிறோம்.மேலும் குக்கூ காட்டுப்பள்ளியில் பனை மரக்கன்றுகளுக்கான விதை நாற்று பண்ணை ஒன்றும் துவங்க இருக்கிறோம்.
நிச்சயம் வாய்ப்பு இருக்கும் ஒவ்வொருவரும் பனை விதை ஒன்றையாவது நட்டு விட வேண்டுகிறோம். ஏனெனில் மிக குறைந்த இடம் போதும் அது வளர்வதற்கு,அரை அடி குழி போதும் நடுவதற்கு, நட்டபின் எவ்வித பராமரிப்பும் தேவை இல்லை.அந்த துளிர்ப்பில் மித்ரன் எப்போதும் நம்முடன் இருப்பான்.
புதிய நிலங்களைத் தேடிச்செல்லுங்கள்!
அண்மையில் ஒரு 106 வயது பெரியவரின் வாழ்க்கை உபதேசம் ஒன்றை இணையத்தில் கண்டேன். அவரிடம் சொல்வதற்கு ஒரே ஆலோசனைதான் உள்ளது. ‘பயணம் செய்யுங்கள். வாழ்க்கை மிகச்சிறியது. பயணம் செய்வதற்கான காலமும் மிகக்குறுகியது’. பயணத்தில் புதிய நிலக்காட்சிகளைக் காண்கிறோம். அவை வெறும் வேடிக்கைபார்த்தல் அல்ல. அவை ஆன்மிகமான அகப்பயணங்கள். ஏன்?
ரமேஷ் நினைவும் விருதுகளும்
அன்பு மிகு ஜெமோ அவர்களுக்கு வணக்கம்.
நலந்தானே..?
ரமேஷ் பிரேதனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்ட நிலையில் அவர் இறந்துவிட்டார்.வருத்தமானது.இந்த நிலையில் எனக்குள் சில சந்தேகங்கள் அல்லது கேள்விகள்.பொதுவாகவே இதுபோன்ற இலக்கிய விருதுகள் வழங்கப்படும் முன்பு படைப்பாளி இறந்துவிட்டால் அவரின் வாரிசுக்கு அந்தப் பரிசை விருதை வழங்குவதுதானே முறை. மரபும் கூட. அவருக்கு ஒரு பொண்ணு இருக்கும்போது அந்த விருது தோகை ஏன் அவருக்கு நீங்கள் வழங்கவில்லை?
அடுத்து, இலக்கியப் பரிசு விருது என்பதே நிறைய நல்ல படைப்புகள் எழுதியவர்கள் அல்லது நிறைய எழுதியும் கவனிக்கப்படாமல் இருப்பவர்களுக்கு வழங்குவது தானே முறை. இப்படி தகுதியான எவ்வளவு எழுத்தாளர்கள் இளம் படைப்பாளிகள் உட்பட தமிழகத்தில் இருக்கிறார்கள்.
அவர்களையெல்லாம் பரிசீலிக்காமல் ஒன்றிரண்டு படைப்புகள் எழுதிய யாருக்கும் தெரியாத ஐவருக்கு ரமேஷ் பிரேதனின் ஐந்து இலட்சம் ரூபாயை ஆளுக்கு ஒரு இலட்சம் என எதன் அடிப்படையில் தேர்ந்தெடுத்தீர்கள்? என்ன அளவுகோல் அல்லது தகுதியின் அடிப்படையில் இவர்களை வி.பு. வாசகர் வட்டம் அல்லது நீங்கள் தேர்வு செய்தீர்கள்? இவர்கள் ஆரம்பகட்ட எழுத்தாளர்கள். இன்னும் ஆகச் சிறந்த படைப்புகளை அவர்கள் இன்னும் எழுதவுமில்லை.
விளக்கம் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றியுடன்
தங்கள் அன்புமிக்க
ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்.
அன்புள்ள ஃபிர்தௌஸ்
மிகத்தொலைவில், வேறொரு சூழலில், வேறொரு பெருஞ்செயலில் இருக்கிறேன். ஆனாலும் முகநூல் சர்ச்சைகளை எவரோ சொல்லிக்கொண்டேதான் இருக்கிறார்கள். ரமேஷ் 12 ஆண்டுகள் படுக்கையில் இருந்தபோது, மூன்றுமுறை சாவின் விளிம்பை தொட்டபோது உருவாகாத அக்கறை இப்போது எழுத்தாளர்களுக்கு உருவாகியிருப்பதுகூட நல்லதுதான் என நினைக்கிறேன்.
அனைத்தும் ரமேஷின் விருப்பத்தை ஒட்டியே நிகழ்கிறது. ஆகவே அதில் மாற்றுக்கருத்து தெரிவிக்க எவருக்கும் உரிமை இல்லை. ரமேஷ் தொடர்ச்சியாக அவருடைய சாவு குறித்து சொல்லிவந்தார், நான் அவரிடம் அதைப்பேச தயங்கினேன் என்றாலும் அவர் தன் விருப்பத்தை அனைவரிடமும் தெளிவாகத் தெரிவித்திருந்தார். அதன்படியே அனைத்தும் செய்யப்படுகின்றன. அவருடைய இறுதிச்சடங்கு உட்பட.
அவர் மறைந்தால் விருதுத்தொகை மற்றும் அவருடைய வீடு ஒத்திக்கு எடுக்கப்பட்டதற்கு அளிக்கப்பட்ட தொகை உட்பட அனைத்தையும் கொண்டு பல்கலை ஒன்றில் ஓர் அறக்கட்டளை உருவாக்கப்பட்டு மொழியியல், சமூகவியல் மற்றும் இலக்கியத்தில் ஆய்வுசெய்யும் மாணவர் ஒருவருக்கான உதவித்தொகை வழங்கப்படவேண்டும் என்பதே அவருடைய முதல் கோரிக்கை. அல்லது விருதுத்தொகை இளம் படைப்பாளிகளுக்கு வழங்கப்படவேண்டும் என்று சொல்லியிருந்தார்.
குறிப்பாக எழுதத் தொடங்கும் படைப்பாளிகளுக்கு விருது அளிக்கப்படவேண்டும் என்பது ரமேஷின் எண்ணம். ‘விருது வழியாக எழுத்தாளர் கவனிக்கப்படவேண்டும், கவனிக்கப்பட்ட பின் விருது எதற்கு?’ என்பது ரமேஷின் கருத்து. ‘எனக்கு 30 வயதில் விருது அளிக்கப்பட்டிருந்தால் உண்மையில் மகிழ்ந்திருப்பேன், மற்ற விருதுகள் எல்லாம் பணம் மட்டுமே’ என்று பிரபஞ்சன் விருது பெற்றதை ஒட்டி நான் வாழ்த்தியபோது குறிப்பிட்டார்.
உடனடியாக பல்கலைக்கழக அறக்கட்டளை அமைப்பது இயலாதென்பதனால் இளம்படைப்பாளிகளுக்கு விருது அளிக்கப்படுகிறது. ஆனால் அடுத்த ஆண்டு புதிய நிதி கண்டடையப்பட்டு அந்த அறக்கட்டளையும் அமைக்கப்படும். அவருடைய இறுதிநாட்களில் அவருடைய சகோதரிகள் உடனிருந்தனர். அவர் தங்கியிருந்த இல்லம் அவருக்காக அவர் சகோதரியிடமிருந்து ஒத்திக்கு எடுக்கப்பட்டது. அந்த தொகை அவர்களிடமே இருக்கட்டும் என முடிவெடுக்கப்பட்டது.
தன் படைப்புகள் எல்லாமே அச்சில் வரவேண்டும், எழுதி முடிக்கப்படாதவைகூட வெளியாகவேண்டும் என்பது அவருடைய இன்னொரு விருப்பம். (எந்தப் படைப்பையும் எழுதி முடிக்க முடியாது, ஆகவே முடிவடையாத படைப்பு என்பதும் இல்லை என்பது அவருடைய கருத்து)
*
விஷ்ணுபுரம் அமைப்பு சார்பாக நாங்கள் தொடர்ச்சியாக விருதுகள் வழங்கி வருகிறோம், படைப்பாளிகளுக்கு மேடை அமைத்து அளிக்கிறோம். முக்கியமான அனைவருக்கும் இடமளிப்போம், விருதுகளும் அளிப்போம். அவர்களில் சாதனை செய்த படைப்பாளிகள் உண்டு, சாதனை செய்யப்போகும் இளம் படைப்பாளிகளும் எப்போதும் உண்டு.
‘நிறைய நல்ல படைப்புகள் எழுதியவர்கள்’ அல்லது ‘நிறைய எழுதியும் கவனிக்கப்படாமல் இருப்பவர்கள்’ ‘தகுதியான எழுத்தாளர்கள்’, ‘இளம் படைப்பாளிகள்’ என பலரைச் சொன்னீர்கள். கண்டிப்பாக இருப்பார்கள். நாங்கள் கவனித்தவர்களில் எங்களுக்கு முக்கியமானவர்கள் என பட்டவர்களில் சிலருக்கு இப்போது விருது வழங்குகிறோம். இன்னும் பலருக்கு எதிர்காலத்தில் மேடை அமைத்து அளிப்போம், விருதுகளும் அளிப்போம். ஏனென்றால் நாங்கள் இலக்கியவாசகர்களின் பெருங்குழுமம்.
இதேபோல நீங்களும் நீங்கள் தகுதியானவர்கள் என கருதுபவர்களைப் பற்றி தொடர்ச்சியாக எழுதி முன்னிறுத்தலாமே. அனைவரும் இதைச் செய்யலாமே. எவ்வளவு நல்ல விஷயம் அது!
விஷ்ணுபுரம் விருதுகளில் விஷ்ணுபுரம் விருது, தமிழ்விக்கி– தூரன் விருது இரண்டும் சாதனை செய்த மூத்தவர்களுக்கானவை. ஆனால் குமரகுருபரன் விருது சாதனை செய்யவிருக்கும் இளம் படைப்பாளிகளுக்கானது. குமரகுருபரன் விருதுபெற்ற பலர் ஒரு நூல் மட்டுமே எழுதியவர்கள்.
இளம்படைப்பாளிகளுக்கான அத்தகைய பரிசுகள் உலகமெங்கும் உள்ளன. அவ்வகையிலேயே இந்த விருதுக்கும் படைப்பாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஒரு படைப்பாளியை அவர்களின் தொடக்கத்திலேயே அடையாளம் கண்டு, பிறருக்குச் சுட்டிக் காட்டுவதே இவ்விருதுகளின் நோக்கம். அவர்கள் தொடர்ச்சியாக எழுத அது ஊக்கமாக அமையும். அவர்களை பிறர் கவனித்து, தொடர்வதற்கும் அது வழிவகுக்கும். முதல்படைப்பிலேயே அகிலன் விருது பெற்று, அவ்விருது வழியாக அறியப்பட்டவன் நான். அதன்பின் எல்லா ஆண்டுகளிலும் தேசியவிருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றிருக்கிறேன். இளம்படைப்பாளிகளுக்கான சம்ஸ்கிருதி சம்மான் விருது உட்பட.
விஷ்ணுபுரம் இலக்கியமேடையிலேயே எப்போதும் மிக இளம்படைப்பாளிகள் மேடையேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் எழுத வரும்போதே கவனிக்கப்படவேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.இளம்படைப்பாளிகளை முன்னிறுத்தும் அத்தகைய விருதுகள், மேடைகள் ஏன் அவசியம் என சென்ற குமரகுருபரன் விருது விழாவிலேயே விளக்கியிருந்தேன். இதெல்லாம் இலக்கியவாசகர்களுக்கு தெரிந்தவை.
அழகியமணவாளன்இத்தகைய விருதுகளை அளிக்கும் தகுதி கொண்ட இன்னொரு அமைப்பு இன்று தமிழ்ச்சூழலில் இல்லை. எங்களுடன் விவாதிக்கும் அளவுக்கு இலக்கியத்தில் தொடர்கவனம் கொண்ட பிறரையும் நான் கண்டதில்லை. ஒருவர் இந்த விருது விஷயத்தில் கருத்து சொல்வாரென்றால் ‘நீங்கள் ஏற்கனவே படித்து விவாதித்து முன்வத்த படைப்பாளிகள் எவர்? என்பதே என் கேள்வியாக இருக்கும்.
அனைத்தையும் வாசிப்பவர்கள் அடங்கிய அமைப்பு விஷ்ணுபுரம் இலக்கியவட்டம். கிட்டத்தட்ட உலகம் எங்கும் ஒரேசமயம் 30 க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் இணைய அரங்குகளில் ஆண்டு முழுக்க அனைத்து இலக்கிய நூல்களையும் விவாதிப்பவர்கள் நாங்கள். அந்த கவனம் மற்றும் உரையாடலின் விளைவாகவே எழுத்தாளர்கள் விருதுகளுக்குத் தெரிவாகிறார்கள். ஆகவேதான் இந்த விருதுகள் மதிப்புள்ளவை ஆகின்றன.
எங்கள் அரங்குகளுக்கு அழைக்கப்படுபவர்களில் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள், இலக்கியச் செயல்பாட்டாளர்கள் என மூன்றுவகையினர் உண்டு. இந்த விருதுகளிலும் அந்த விகிதம் பேணப்பட்டுள்ளது.எங்கள் விருதுகள் பெறுபவர்களை பற்றிய கச்சிதமான அறிமுகம் தமிழ்விக்கியில் உள்ளது. அவற்றை வாசிப்பவர்கள் மட்டுமே இலக்கியம்பேசும் தகுதி கொண்டவர்கள்.
மொழியாக்கம் மற்றும் ஆய்வுத் துறைகளில் மிகமுக்கியமான தொடக்கத்தை நிகழ்த்திய இருவருக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.அவர்களின் நூல்களை வாசகர் எவரும் வாசித்துப் பார்க்கலாம். அவை நீண்டகால உழைப்பின் விளைவுகள், அர்ப்பணிப்புடன் உருவாக்கப்பட்ட மிகமுக்கியமான தொடக்கங்கள் என்பதை அறிவுத்தகுதி கொண்டவர்கள் மறுக்கமாட்டார்கள். முகநூலில் சதா அரசியலும் சினிமாவுமாகச் சலம்பும் கூட்டம் நடுவே இத்தகைய அர்ப்பணிப்புள்ள ஆய்வுச்செயல்பாடு என்பது மிகமிக அரிதான ஒன்று.
சஜுசஜு அ.கா.பெருமாள் அவர்களால் கண்டடையப்பட்டவர். ஆற்றுமாடன் தம்புரான் என்னும் அவருடைய நூல் இளையதலைமுறையினரால் செய்யப்பட்ட நாட்டாரியலாய்வுகளில் முதன்மையானது. கள ஆய்வின் வழியாக அசல் தரவுகளை சேகரித்து நேர்த்தியாக எழுதப்பட்ட ஆக்கம். கொட்டடிக்காரன் என்னும் அவருடைய நூல் நாட்டுப்புற தாளவாத்தியக்காரராக அவருடைய வாழ்க்கை பற்றிய சித்திரம். நாட்டாரியல் பதிவு என்னும் வகையிலும் முக்கியமானது.
அழகிய மணவாளன் இன்று கேரளத்திலும் கதகளிச் சூழலில் அறியப்பட்டவர். அவர் எழுதிய கதகளி பற்றிய கட்டுரைகள், மலையாள அழகியல் கோட்பாட்டு மொழியாக்கங்கள் மிகமுக்கியமான பங்களிப்புகள், அகழ் இதழில் அவற்றைப் பார்க்கலாம். அவருடைய நாவல் என்னும் கலைநிகழ்வு என்னும் நூல் வெளிவந்துள்ளது. கல்பற்றா நாராயணன் கட்டுரைகளின் தொகுப்பு வெளிவரவுள்ளது. கலை சார்ந்த அவருடைய பார்வையை அறிய அவருடைய பேட்டியை பார்க்க “I unconsciously longed for an alternative cultural space”
செல்வக்குமார்புனைவிலக்கியத்துறையில் ஒரு முக்கியமான படைப்பையேனும் எழுதியவர்களை தேர்வுசெய்து, அவர்களில் இருந்தே பரிசுக்குரியவர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். அனேகமாக வெளியாகும் படைப்புகள் அனைத்தையும் வாசிக்கும் விஷ்ணுபுரம் நண்பர்களின் பரிந்துரையில் இருந்தே இத்தேர்வு நிகழ்ந்தது. புனைவிலக்கியம் சார்ந்த எல்லா வகைமைகளிலும் ஒவ்வொருவர் என தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
செல்வகுமார் பேச்சிமுத்துவின் கௌளிமதம் அண்மையில் கவனிக்கப்பட்ட நாவல். வட்டாரவழக்கு சார்ந்த யதார்த்தச் சித்திரங்கள் தமிழிலக்கியத்தின் முக்கியமான புனைவு வகை. அதில் பூமணி, சோ.தர்மன், கண்மணி குணசேகரன், இமையம் வகையிலான எழுத்து இது. ராக்கம்மா என்னும் ஒரு கிராமப்பெண்ணின் தவிர்க்கமுடியாத வீழ்ச்சியைச் சித்தரிக்கும் படைப்பு அது. செல்வகுமார் முக்கியமான படைப்பாளி என்பதற்கான சான்று.
அசோக் ராம்ராஜ்தேவி லிங்கம் எழுதிய நெருப்புஓடு பொற்கொல்லர்களின் வாழ்க்கையை சித்தரிப்பது. சிறிய உலைக்கலம் நெருப்போடு எனப்படுகிறது. அங்கே உருகும் வாழ்க்கை என அம்மக்களின் இன்றைய நிலையைச் சித்தரிக்கும் முக்கியமான ஆக்கம் இது. பெண்களின் படைப்புகளில் வழக்கமாக உள்ள குடும்பச் சிக்கல், தன் வரலாற்றுத்தன்மை ஆகியவற்றுக்கு பதிலாக ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைக் களத்தின் நுணுக்கமான சித்திரங்களை அளிக்கும் இந்நாவல், அந்த தகவல்களை கவித்துவக் குறியீடுகளாக விரித்தெடுப்பதும்கூட.
தமிழில் எழுதப்படாத சமூகங்களின் வாழ்க்கை புனைவுக்குள் வருவதென்பது சென்ற கால்நூற்றாண்டாக நிகழும் குறிப்பிடத்தக்க இலக்கியப்போக்கு. ஜோ.டி.குரூஸ் போன்று அதற்கான முன்னுதாரணங்கள் பல. இன்னும் பல களங்கள் இதில் திறந்துகொள்ளவேண்டும். தேவிலிங்கத்தின் நாவல் அவ்வகையில் மிகக்குறிப்பிடத்தக்கது.
தேவி லிங்கம்தமிழில் எப்போதுமே மொழியிலும் வடிவிலும் சோதனைகள் செய்யும் எழுத்துமுறை இருந்துவந்துள்ளது. அதில் வெற்றிகளும் தோல்விகளும் உண்டு என்றாலும் அவ்வகை எழுத்து தமிழின் முக்கியமான கூறு. அதைச் சார்ந்தவை அசோக் ராம்ராஜின் ரித்னாபூரின் மழை, கடைசி அர்மீனியன் என்னும் இரு தொகுதிகளும்.
இலக்கிய வாசகர்கள் இந்நூல்களை வாசித்துப்பார்க்கலாம்.
ஜெ
விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 1 – தேவி லிங்கம்
விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 2 – சஜு விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 3 – செல்வகுமார் பேச்சிமுத்து விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 4 – அசோக் ராம்ராஜ் விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 5 – அழகிய மணவாளன்இன்மையின் இருப்பு, கடிதம்
சங்கச் சித்திரங்கள் மறுவாசிப்பில் இருக்கிறேன். “சூனியத்தில் ஒரு இடம்” எனது நேரிடையான அனுபவமாக உள்ளது.
எனது அம்மாவின் ஊரும் மனைவியின் ஊரும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆதலால் அடிக்கடி பயணம் அமையும். ஆண்டாள் கோயிலின் மேலரத வீதியில் இல்லம். அங்கு இருக்கும் போதெல்லாம் தின்தோறும் கோயிலுக்கு செல்வது வழக்கம். கோயிலுக்கு செல்லும் வழியில் மடத்துத் தெருவில் யானை கொட்டில் உண்டு. இங்கு தான் கோயில் யானை பல வருடங்களாக பராமரிக்கப்பட்டது.
சென்ற வருடம் யானை பாகன் யானைக்கு செய்த சித்திரவதைகள் படம் பிடிக்கப்பட்டதால், யானை இப்பொழுது தொலைவான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
மடத்து தெருவின் காலியான கொட்டில் கண்டு கண்கள் கலங்குவதை தவிர்க்க முடிவதில்லை.
தங்களது யானை கதைகளின் தாக்கமும், என்னுடைய சொந்த ஊரான கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் கோயிலின் என்னைவிட 5 வயது மூத்த யானையுடன் 20 வருடங்கள் சேர்ந்து வளர்ந்த ஞாபகமும், இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் காலியான கொட்டிலை நினைவுபடுத்துகிறது.
கண்கள் பனிக்க
வெங்கட்ராமன், பெங்களூரு
அன்புள்ள வெங்கட்,
அந்த இல்லாத இருப்பை உணர்தல் என்னும் அனுபவம் பெரும்பாலும் அனைவருக்கும் இருக்கும். தமிழகத்தில் பலருக்கும் கட்டிடங்கள் சார்ந்தே அந்த அனுபவம். அதிலும் இடிக்கப்பட்ட திரையரங்குகள் சார்ந்து அந்த இன்மையின் இருப்பை உணர்பவர்கள் மிகுதி. யானைகள் சார்ந்து அந்த அனுபவம் இருப்பது ஒரு நல்லூழ்தான். வாழ்த்துக்கள்.
ஜெ
சங்கசித்திரங்கள் வாங்க சங்கசித்திரங்கள் -கடிதம் சங்கசித்திரங்கள் சங்கசித்திரங்கள்-விமர்சனம் சங்கசித்திரங்கள், மீண்டும்ரிஷிகள் எதையும் உருவாக்கவில்லையா?
அது உண்மை என்றால் நம்முடைய ரிஷிகள் எதையுமே புதிதாக கண்டடையவில்லை என்றுதானே அர்த்தம் ?அவர்கள் உடைய ஞானத்திற்கு எந்த மதிப்பும் இல்லை என்றுதானே சொல்ல வேண்டும்? சித்தர்களும் முனிவர்களும் அப்படியானால் செய்த பங்களிப்புதான் என்ன?
ரிஷிகள் எதையும் உருவாக்கவில்லையா?
I watched your video on the book Nyayakusumanjali, which is a brief yet profound text. In it, I encountered logical arguments for the existence of Brahman (God). As an atheist, I found these arguments surprising.
The logic of GodOctober 15, 2025
வெளியேறும் வழி – 3
(தொடர்ச்சி)
அருஞ்செயல்கள் எனும் போது நான் மிகப்பெரும் செயல்களை குறிப்பிடவில்லை. வரலாற்றில் என்றும் நின்றிருக்கும் பெருஞ்செயலை தான் ஒருவராக செய்து முடிக்க வேண்டும் என்ற கனவு இளமையில் எவருக்கும் எழுவதுதான். அத்தகைய பெருஞ்செயலாற்றியவர்கள் எல்லா யுகத்திலும் உள்ளனர் என்பதும் உண்மையே. ஆனால் அது அனைவருக்கும் இயல்வது அல்ல. நம் எல்லைகள் பலவும் நம்மை மீறியவை. நம் உடலின் எல்லைகள், அறிவின் எல்லைகள், நம் சூழலின் எல்லைகள். எல்லா எல்லைகளையும் மீறமுடியும் என்பது இளமைக்குரிய நம்பிக்கை. அவ்வாறல்ல என்பது அனுபவம் அளிக்கும் தெளிவு.
செயலாற்றுவது மட்டுமே நம் கையில் உள்ளது. செயலின் விளைவு என்பது காலத்தில், சூழலில், இன்னும் எத்தனையோ இணைவுகளில் உள்ளது. அதையே ‘விளைவை இயற்றுபவன் நான்’ என்று ஊழின் முகமாக வந்து நின்று கீதையில் கிருஷ்ணன் சொல்கிறார். செயலாற்றுவது என்பது நம் பொருட்டே. அதன் விளைவுகள் என்ன ஆகும் என்பதை எண்ணிச்செய்யும் செயல் நமக்கு நிறைவை அளிப்பதில்லை. அதன் விளைவென்ன என்று நாம் அறியக்கூடுவதுமில்லை.
இங்கு நாம் எதுவும் செய்யாமல் இருந்தாலும் ஒன்று ஆகப்போவதில்லை என்ற உணர்வை ஓர் அகவைக்கு பிறகு நாம் இயல்பாகவே வந்தடைகிறோம். பல ஆண்டுகளுக்கு முன் என் ஆசிரியரான துறவியிடம் வெண்முரசு எழுதும் பெருங்கனவைப் பகிர்ந்தேன். ‘நல்ல காரியம். செய். ஆனால் எழுதாமலிருந்தாலும் ஒன்றும் ஆகாது என்பதையும் உணர்ந்துகொள்’ என்றார். எழுதி முடித்ததும் அதை உணர்ந்தேன்.
ஆகவே பெருஞ்செயலாற்றுக எனும்போது மாபெரும் செயல்களுடன் இருத்தல் என்பதையே குறிப்பிடுகிறேன். பெருங்கனவுகள் மற்றும் பெரும் இலக்குகள் நோக்கிச் செல்லும் செயல்களையே பெருஞ்செயல் என்று சொல்கிறோம். அவற்றில் நமது தனிப் பங்களிப்புண்டு என்றாலும் அவை கூட்டான செயல்களே. அவற்றில் ஒரு துளியே நம்முடையது. நான் ஒரு நாவல் ஆசிரியர். என் நாவல் என் ஆக்கம். ஆனால் அதை எனக்குரியது என்று நான் எண்ணவில்லை. இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் இலக்கியச்செயல்பாடு என்னும் கூட்டியக்கத்தின் ஒரு பகுதியாகவே என்னுடைய படைப்பிலக்கியங்களும் இருக்கின்றன. ஆகவே அவை என்னுடையவை அல்ல. இங்கிருக்கும் ஒரு பெரும் செயலின் ஒரு பகுதி மட்டுமே. அப்படியே சேவைகளை, பிற செயல்பாடுகளையும் ஒருவன் கொள்ள முடியும் என்றால் அவன் பெருஞ்செயல் ஆற்றுபவன்தான்.
இங்கு ஒவ்வொரு உயிரும் அத்தகைய பெருஞ்செயலில்தான் இருக்கிறது என்று ஒரு வகையில் சொல்லலாம். இங்கே என்ன நிகழ்கிறது என்று நமக்கு தெரியாது. இங்கு மானுடஉயிர் திரளெனன நிகழ்ந்து கொண்டிருப்பதற்கு என்ன காரணம்? இங்கு உயிர் என்று ஒன்று நிகழ்வதற்கு என்ன காரணம்? இயற்கை என்று ஒன்று திகழ்வதற்கு என்ன காரணம் ? எதன் நோக்கத்தை இவை நிறைவேற்றுகின்றன? எதையுமே நாம் அறிந்து விட முடியாது. இப்பெருஞ்செயலில் ஒரு பகுதியாகவே நம்மை உணர்கிறோம்.
அதற்கப்பால் நமது அகம் தேடும் ஒரு செயல் உள்ளது. எதைச் செய்தால் நாம் நம்மை நாமே முழுமைப்படுத்திக் கொள்கிறோமோ, எதன் மூலமாக நாம் நம்மை விடுதலை செய்துகொள்கிறோமோ, எதைச் செய்கையில் நாம் முழுமையான இன்பத்தை அடைகிறோமோ அதுவே நம் செயல். அச்செயலைச் செய்யும்போது நாம் நம்முடன் தனித்திருக்கிறோம். அச்செயல் ஒரு தியானம். ஆனால் அதைச் செய்யும்போது நாம் மாபெரும் கூட்டுச்செயல்பாட்டின் ஒரு பகுதியாகவும் இருக்கிறோம்.
இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்த காந்தி ஆற்றியது பெருஞ்செயல். ஆனால் காந்தி ஆற்றிய அப்பெருஞ்செயல் அவருடன் நின்ற பல்லாயிரம் கோடி மக்களால் ஆனது. அதேபோன்று அதில் ஈடுபட்ட ஒவ்வொருவரும் காந்தி ஆற்றிய பெருஞ்செயலில் ஈடுபட்டவர்களே. இன்று திரும்பிப் பார்க்கையில் அத்தகைய பெரும் லட்சியவாதச் செயல்பாடுகளில் ஈடுபட்ட ஒவ்வொருவரும் மகிழ்ச்சியும் நிறைவும் கொண்டவர்களாக இருப்பதைக் காண்கிறோம். எத்தனை பணமும் புகழும் ஈட்டினாலும் தன்னலச் செயல்பாடுகளில் ஈடுபட்டவர்கள் நிறைவற்றவர்களாக, கைவிடப்பட்டவர்களாக உணர்வதையும் காண்கிறோம்.
நான் இன்று இந்த அகவையில் எண்ணிப் பார்க்கையில் எவர் நல்ல நினைவுகளை ஈட்டிக் கொண்டிருக்கிறாரோ அவர்தான் வாழ்ந்தார் என்று சொல்ல முடியும் என்று தோன்றுகிறது. நான் என் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கையில் படைப்புகளை எழுதிய காலகட்டம், என் நண்பர்களுடன் சேர்ந்து செய்த பயணங்கள், வாசிப்புகள் ஆகியவற்றின் ஊடாக எனக்குரிய செயலைச் செய்து நிறைவடைந்து கொண்டிருந்தேன் என்று உணர்கிறேன். அதுவே எனது வாழ்க்கையின் இலக்கென்றும் தோன்றுகிறது.
கீதை ‘வேள்வி என செய்யப்படாத உணவை உண்ண வேண்டாம்’ என்கிறது. வேள்வி என்றால் என்ன என்பதற்கான கீதையின் வரையறை இது. ‘விளைவை எண்ணி கணக்கிடாமல், தன்னலமின்றி, உலகநலனுக்காக செய்யப்படும் செயல்’. செய்பவன் நிறைவையும் விடுதலையும் அடையும் செயல் எதுவோ அதுவே வேள்வி என்பது. “செயலை வேல்வியாக்குக!” என்பதுதான் கீதை சொல்லும் செய்தி.
ஒவ்வொரு முறையும் நான் சொல்லிக் கொண்டிருப்பது ‘செயல்புரிக’ என்றே. நமக்கான செயல், வேள்வியென ஆகும் பெருஞ்செயல். அது ஒன்றே இங்கே நம்மை விடுதலை அடையச்செய்யும், சேவையோ, கலையோ, இலக்கியமோ எதுவாயினும். இதை நம்பமுடியாதவர்கள் உண்டு. இயல்பிலேயே அவநம்பிக்கைவாதிகளாக ஆகிவிட்டவர்கள் அவர்கள். கசப்பை, எதிர்நிலையை இயல்பென திரட்டிக்கொண்டவர்கள். அது ஓர் உளக்குறைபாடு, அதை அவர்கள் கடக்கமுடியாது. அவர்கள் அவநம்பிக்கையை பரப்புவார்கள், எட்டுத்திசையில் இருந்தும் அதுவே எதிரொலித்து அவர்களிடம் திரும்பி வரும். அவர்கள் மேல் எனக்கு என்றும் அனுதாபம்தான். அவர்களிடம் நான் விவாதிப்பதில்லை. நான் பேசுவது நம்பிக்கை கொஞ்சமேனும் எஞ்சியுள்ளோரிடம் மட்டுமே.
செயலை இரு திசைகளிலும் சென்று அடையலாம். துறந்து வெளியே நோக்கிச் சென்று தன் செயலை கண்டடைந்து அதற்கு தன்னைக் கொடுப்பதே வேள்விப்பெருஞ்செயல். அதை எய்துவோர் சிலர். குறைந்தபட்சம் அந்த வேள்வியின் அவியன்னத்தில் ஒரு சிட்டிகையையாவது பங்கிட்டுக்கொள்வதையே பிறருக்குச் சொல்கிறேன்.
(நிறைவு)
ம.சுசித்ரா
தமிழ், ஆங்கிலத்தில் எழுதிவரும் இதழாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், உரையாளர், இசைஞர், தத்துவப்புலத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். ‘தி இந்து’ (ஆங்கிலம்), ‘புதிய தலைமுறை’ குழுமத்தின் ‘புதுயுகம்’ ஆகிய ஊடகங்களில் பணியாற்றியவர். ‘இந்து தமிழ்’ நாளிதழ் இதழாளர்.
ம.சுசித்ரா – தமிழ் விக்கி
புதிய ஒயின்
பழையகால பாடல் என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். பதினேழின்றே பூங்கரளின் என்னும் மலையாளப்பாடல் எப்படி எழுபதுகளின் அதே மெட்டில், அதே ஒலியமைப்புடன் அமைந்திருந்தது என்பதைப்பற்றி. கப்பா என்னும் மலையாள தொலைக்காட்சியில் மகாஹால் சஹஸ்ரா என்னும் இசைக்குழு அதே பாடலை, அதே மெட்டில் முற்றிலும் நவீன மேலைநாட்டு பின்னணி இசையுடன் பாடியிருப்பதைக் கண்டேன். நன்றாக இருந்தது. (பதினேழின்றே பூங்கரளில் மகால் சாஸ்த்ரா)
நான் ஆச்சரியப்படுவது ஒன்று உண்டு. மலையாளத்தில் நவீன மேலையிசை (பாப் இசை) குழுக்கள் பல உள்ளன. தைக்குடம் பிரிட்ஜ், அஹம் போன்றவை அவற்றில் முக்கியமானவை. அவை மிக வெற்றிகரமானவையும்கூட. அவர்கள் சினிமாப்பாடல்களையும் மறு ஆக்கம் செய்கிறார்கள். அப்படி ஏன் நமக்கு நவீன இசைக்குழுக்களே இல்லை? ஏன் அவற்றுக்கு ரசிகர்களே இல்லை? இங்கே சினிமாப்பாடல்களை அப்படியே பாடும் இசைக்குழுக்கள் இருந்தன, ஆனால் அவையும் இன்று வெற்றிகரமாக இல்லையே.
ரமேஷ், கடலூர் சீனு
இனிய ஜெயம்
ரமேஷ் பிரேதன் அவர்களுக்கு நீங்கள் எழுதிய அஞ்சலி குறிப்பில், அவரை, செய்த உதவிகளை சொல்லிக்காட்டியும், உடல் ரீதியாகவும் நீங்கள் அவமதித்துவிட்டதாக சொல்லி சக எழுத்தாளர்கள் பொங்கிய நிலை கண்டு உண்மையாகவே மகிழ்ந்தேன். தமிழில் ஒரு எழுத்தாளர் இன்னொரு எழுத்தாளரால் அவமதிக்கப்பட்டால் சக எழுத்தாளர்கள் பொங்கி எழுந்துவிடுவார்கள் எனும் நிலை ஒரு நல்ல விஷயம்தானே.
ஆனால் அந்த பொங்கல்களில் அவர்கள் செத்துப்போனதால் தன்னை அவமதிக்கும் கூற்றுக்களுக்கு எதிராக தன்னால் தற்காத்துக்கொள்ள முடியாது என்ற நிலையில் இருக்கும் ரமேஷ்க்கு உடுக்கை இழந்தவன் கை போல் அங்கே இடுக்கண் களைய ஓடிவந்து அவருக்கு ஆதரவாக குரல் கொடுப்பதாக நினைத்து தங்களது மிடில் க்ளாஸ் அம்மாஞ்சிதனத்தைதான் கடைவிரித்திருக்கிறார்கள். ரமேஷ் பிரேதன் அவர்களை, அவரும் தங்களை போல மிடில் கிளாஸ் அம்மாஞ்சி என்று நம்பியதால்தான் “அய்யோ அவருக்கு எப்புடி வலிக்கும்… எவ்ளோ கசக்கும்” என்றெல்லாம் சக எழுத்தாளர்கள் சிணுங்கி வைத்திருக்கிறார்கள். காரணம் இப்போது குலுங்கி குமுறிக்கொண்டு இருக்கும் “எழுத்தாளுமைகள்” யாரும் சமீப காலங்களில் ரமேஷ் உடன் நெருங்கி பழகியதோ, அவரது அடுத்தகட்ட நேர்காணல்கள் ஆக்கங்கள் எதையும் வாசித்து இல்லை என்பதுதான்.
ரமேஷ் அவர்களின் அம்மா இறந்தபோது அவர் கேட்ட தொகையை திரட்டி அவர் வசம் அளிக்க போயிருந்தேன். பேருந்து நிலையம் வந்திருந்தார். அவரை அழைத்து செல்ல ஒரு நண்பர் வருவதாக சொல்ல, அந்த நண்பர் வரும் வரை பேசிக்கொண்டு இருந்தோம்.
அப்போது அவர் எங்கெங்கோ சுற்றி சென்று பேசிய பலவற்றில் இருந்து கீழ் கண்டவற்றை தொகுத்து சொல்கிறேன்.
பாசிசம் இல்லாமல் இங்கே உயிர் வாழ்க்கை இல்லை. பாசிசம் இல்லாவிட்டால் பிறக்கவே முடியாது. (கொட்டின மொத்த விந்தும் பொறக்கணும் அதுதான் ஜனநாயகம் அப்டின்னு இயற்கை விதிச்சிருந்தா என்னாகும்? கிளிஞ்சிறாது… என்றுவிட்டு வெடித்து சிரித்தார்) பிறந்த குழந்தை உடல் முதல் முதிய உடல் வரை அதை நீங்காது உடன் இருப்பது பாசிசம். பொருளாதார சமத்துவம் என்ற கனவை வீழ்த்தியது இந்த பாசிசம்தான். முதலீட்டியம் இந்த பாசிசத்துக்கு சேவை செய்வது. ஆகவே அதுவே வெல்லும். அதில் அறம் என்பதெல்லாம் கிடையாது. அறம் ஒரு சமூக உடன்படிக்கைதானே அன்றி மனித உடலின் இயல்பில் பாசிசம் அன்றி எந்த அறமும் கிடையாது. இனி இந்த பொருளாதார நிலைதான் ஒரே ஒரு இருப்பு. இதில் ஒரு எழுத்தாளனாக கலைஞனாக உணரும் ஒருவன் பிச்சை எடுத்து வாழ்வது மட்டுமே இந்த நிலைக்கு எதிராக வாழ்வை கொண்டு செல்லும் கலக செயல்பாடாக இருக்க முடியும்.
ரமேஷ் எப்போதுமே எதை சொல்கிறாரோ அதை ஏற்று வரம்புகளை மீறிய வாழ்வை வாழ்ந்தவர் என்பதை எல்லோரும் அறிவோம். பிற்கால ரமேஷ் என்று நாம் காண்பது மேலே சொன்ன அவரது சொற்களின் படி வாழ முயன்ற ரமேஷ் அவர்களைதான். (நான் சொன்னவற்றை தேடி பார்த்தால் ரமேஷ் அவர்களின் எழுதிலேயே வாசிக்க கிடைக்கும்) அதிலும் அவர் வரம்புகளை மீறிய கலகக்காரனாகவே வாழ்ந்தார். அந்த வாழ்வை அவர் வாழ எத்தனை பேர் துணை நின்றார்கள் என்பது வெளியே தெரிவது எவரது அவமானதுக்குக்கும் உரிய விஷயம் இல்லை. அவர் யாசகனாக இல்லை எழுத்தாளனாக வாழ்ந்தார், பிரேமா கையில் குழந்தையாக வாழ்ந்தார். போகும்போது பேரரசனாக போனார். அது ஒரு ஆவணம். அது போக இந்த வகை வாழ்கையில் ரமேஷ் மானம் அவமானம் என்ற மிடில் கிளாஸ் விழுமியங்களுக்கு அப்பால் இருந்தார். (இதன் பொருள் ரமேஷ் மானம் கெட்டவர் என்பதல்ல என்பதையும் இந்த மிடில் கிளாஸ் அம்மாஞ்சிகளுக்கு சேர்த்தே சொல்லிவிட வேண்டும்)
ரமேஷ் நோயுற்ற பிறகு ஒரு சராசரி மனிதன் கண்டால் நம்பவே இயலாத அளவுக்கு உடல் மையம் கொண்டவராக ஆனார். (ஒரு சராசரி மனிதனால் ஒரு மணி நேரம் அவர் அருகே அமர்ந்திருக்க முடியாது. அவர் என்னிடம் அவரது மற்றும் பிற உடல் குறித்து பேசிய எதையும் இங்கே எழுதினால் இந்த மிடில் கிளாஸ் அமாஞ்சிகளால் அதை ஜீரணிக்கவே முடியாது.) அந்த உடலுக்கு ஆண் பெண் என்ற மையம் கிடையாது. சாரம் என்று ஒன்று கிடையாது. ஆன்மா கிடையாது. மொழி சமூகத்தால் உற்பத்தி செய்யப்பட்டு இந்த உடலுக்கு அளிக்கப்பட்டது… இப்படி இன்னும் இன்னும் நிறைய கண்டடைதல்கள். அவரை இருள் அன்றி எங்கும் கொண்டு சேர்க்காத கண்டடைதல்கள். அவரை உடைத்து முன்னே நகர்த்த எந்த சொல்லை சொல்ல வேண்டுமோ அது அவருக்கு சொல்லப்பட்டது அவர் எழுத்தாளனாக முன்னே சென்றார். இதுவும் சொல்லப்பட வேண்டிய ஆவணம்.
இதையெல்லாம் இந்த மிடில் கிளாஸ் அம்மாஞ்சி எழுத்தாளர்கள் இன்று இல்லாவிட்டாலும் என்றேனும் புரிந்து கொள்வார்கள் என்று விதியை நம்புவோம்:).
கடலூர் சீனு
ரமேஷ், கடிதங்கள் ரமேஷ் பிரேதன் விருது, ஒரு கேள்வி ரமேஷ், தனிவாழ்க்கை, இன்னொரு கடிதம் ரமேஷ் பிரேதன், கடிதங்கள் ரமேஷ், ஒழுக்கவியல் – கடிதம் ரமேஷ் பிரேதன், வாழ்த்துக்கள் விஷ்ணுபுரம் விருது, கடிதம். ரமேஷ் வாழ்த்துக்கள் ரமேஷ், கடிதங்கள்ரமேஷ் பிரேதன், தனிவாழ்க்கை- கடிதம்
ரமேஷ் பிரேதனுக்கு விருது, வாழ்த்துக்கள்
ரமேஷ் பிரேதனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள்.
ரமேஷ் பிரேதன்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers




