பனை,மித்ரன், குக்கூ…
மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு வணக்கம்,
அருட்தந்தை காட்சன் சாமுவேல் அவர்களை உங்களின் இணையதளம் வழியாகவே அறிந்து கொண்டேன். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பனை சார் வாழ்வினை தவம் போல கொண்டிருக்கும் அவருள் இருந்தும் நான் பெற்றது அதிகம்.குறிப்பாக அவரின் பனை எழுக புத்தகம் எனக்கு பைபிள் போல அத்தனை அணுக்கமானது.
அவரின் குடும்பத்தினருடன் மிக நெருங்கி இருக்க எனக்கு வாய்ப்பு அமைந்தது.அதில் மித்ரன் எனக்கு மிக பிரியமானவன் அவனின் ஒவ்வொரு செயலும் காட்சன் பாதர் போலவே இருக்கும். பனம்பழம் ஒன்றை கையில் வைத்து இருக்கும் அவனின் புகைப்படம் என் மனதில் அப்படியே உள்ளது.
மித்ரனின் இழப்பினை அந்த மொத்த குடும்பமும் இடைவிடாத தீவிர பிரார்த்தனையில் தங்களை ஆழ்த்தி கொள்வார்கள் என சிவராஜ் அண்ணா சொன்னார்கள்.
மித்ரனின் பிறந்தநாளினை(17.10.25) அவனுள் விருட்சமான பனை எழும் நாளாக கொண்டாடுவோம் இனி வரும் ஒவ்வொரு ஆண்டும்.
அன்று குக்கூ நிலத்தினை ஒட்டிய ஏரிக்கரையில் ஆயிரம் பனை விதைகளை பிள்ளைகளின் கரங்கள் கொண்டு விதைக்கிறோம்.மேலும் குக்கூ காட்டுப்பள்ளியில் பனை மரக்கன்றுகளுக்கான விதை நாற்று பண்ணை ஒன்றும் துவங்க இருக்கிறோம்.
நிச்சயம் வாய்ப்பு இருக்கும் ஒவ்வொருவரும் பனை விதை ஒன்றையாவது நட்டு விட வேண்டுகிறோம். ஏனெனில் மிக குறைந்த இடம் போதும் அது வளர்வதற்கு,அரை அடி குழி போதும் நடுவதற்கு, நட்டபின் எவ்வித பராமரிப்பும் தேவை இல்லை.அந்த துளிர்ப்பில் மித்ரன் எப்போதும் நம்முடன் இருப்பான்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

