வாழ்த்துக்கள், முனைவர் ஜெயமோகன்!
அன்புள்ள ஜெ, நவராத்ரிக்கு சொந்த ஊரான கொட்டாரத்திற்கு வந்திருந்தேன். தொடர்ந்த மழையால் பச்சை கொப்பளித்து கிடந்தது ஊர். புதுப்பச்சையின் ஒளி சூடியிருந்த காலையை மேலும் அழகாக்கியது உங்களுக்கு அளிக்கப்படவிருக்கும் “மதிப்புறு முனைவர்” பட்டத்திற்கான அறிவிப்பு. வயதும், அனுபவமும் தற்செயல் என்ற வார்த்தையை அபத்தமாகக் காணப் பழக்கியிருக்கிறது.
பொதுவாக நீங்கள் விருதுகளை ஏற்பவரில்லை. அதிலும் குறிப்பாக அரசு மற்றும் கல்வித்துறை சார்ந்த விருதுகளை புறக்கணிப்பவராகவே இருந்து வந்துள்ளீர்கள். இடையில் பத்மஶ்ரீ விருது வந்தது. அதை கவனமாக மறுத்தீர்கள். ஒரு வாசகனாக, என் எழுத்தாளருக்கு அளிக்கப்பட்ட கௌரவம் மறுக்கப்பட்டது எனக்கு வருத்தமே. ஆனால் அதன் பின்னிருந்த எழுத்தாளனின் சுயம் அந்த கௌரவத்தை விட பெரிதானது என்ற புரிதல் அவ்வருத்தத்தை சமன் செய்தது. அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் புக் பிரம்மாவின் வாழ்நாள் சாதனையாளர் விருது. இயல், புக் பிரம்மா இரண்டிற்கும் ஓர் ஒப்புமை உண்டு. இரண்டுமே இலக்கிய வாசிப்புடைய வாசகர்களின் தேர்வு.
நமது கல்வித்துறையின் வாசிப்புத் தரம் மிகப் பிரசித்தமானது. அவர்கள் “Post Modernism” என்பதை “Post Mortem” என்று புரிந்து கொண்டவர்கள். இலக்கணம், கொள்கைகள், அரசியல், பண்பாடு, சாதி, இனம் சார் பிடிப்புகள் எனப் பல வகையான ஆய்வுக் கூறுபாட்டு கருவிகள் கொண்டவர்கள். ஒருவகையில் கல்வித்துறை அப்படித்தான் செயல்பட்டாக வேண்டும். தனக்கான நெறிகளும், தரக் கட்டுப்பாடுகளும், வரையறுக்கப்பட்ட, மீள மீள நிகழ்த்த தக்க விளைவுகளும் கொண்டவை அவை. எனவே இயல்பாக ஒரு இயந்திர கதிக்குச் செல்ல விதிக்கப்பட்டவை. அதனுள் நுழையும் எவரையும் அந்த இயந்திர விதிகளுக்குள் இயல்பாகப் பொருந்திக் கொள்ளச் செய்யும் வல்லமை அதற்குண்டு. இவை இன்று நேற்று நடப்பவை அல்ல. தொன்று தொட்டே இது தான் நிலை. தண்டி தன் காவிய இலக்கண நூலான ‘காவ்யதர்ச’த்தை செய்தது காஞ்சி கடிகையில் தானே.
மற்றொரு உதாரணம், உங்களின் சமீபத்திய ‘காவியம்’ நாவலில் வரும் சாதவாகனப் பேரரசின் ‘காவியபிரதிஷ்டான’ சபை. குணாட்யரையே மொழி என்பது ஆழுள்ளத்தின் வாகனம் தான் என்ற அடிப்படையையே மறக்கடித்த பெருமை அச்சபைக்குண்டு. அவரை வெற்றி கொண்ட சர்வவர்மரையும் அப்படி ஒரு சராசரியாக்கி ‘ப்ருஹத் கதை’ எனும் காவியத்தை உதாசீனப்படுத்த வைத்தது. எனவே கல்வித்துறையின் ஏற்பு, அது அளிக்கும் விருதுகள் போன்றவற்றிலும் மேற்கூறிய சார்புகள், சாய்வுகள் இருப்பதை தவிர்க்க இயலாது. எனவே ஒரு சுயாதினமான ஒரு எழுத்தாளர் இந்த அமைப்புகளின் மீது ஒவ்வாமையோடு இருப்பது இயல்பானதே. அது தான் முறையும் கூட. ஏனெனில் அத்தகைய ஓர் எழுத்தாளரின் படைப்பு தான் கல்வி நிறுவனங்களை தமது அடுத்த கட்ட பரிணாமத்திற்கு கடத்தும். அன்றும், இன்றும், என்றும் இலக்கியம் கண்டதற்குத் தான் இலக்கணம்.
இந்நிலையில் ஒரு மாற்றம், தங்களின் உலகியல் சார்ந்த தேவைகளை போதிய அளவிற்கு நிறைவேற்றிய, அதற்கும் மேலாக இலக்கிய வாசிப்பில் ஆர்வம் கொண்ட, இணைய கால புது வாசகர்களின் அலையால் நிகழத்துவங்கியது. முதலில் உலகியல் வெற்றிகளை உறுதிப்படுத்தும் துறைகளில் துவங்கிய இந்த வாசகர் அலை மெல்ல மெல்ல இலக்கியம் என்ற இயக்கத்தை அனைத்துத் துறைகளிலும் ஊடுருவச் செய்தது. இதன் நீட்சி கல்வித் துறையிலும் நிகழ்ந்தது. அரங்கசாமி, முனைவர். சக்தி கிருஷ்ணன் போன்றவர்கள் கல்வித்துறையில் ஈடுபடுவது ஒரு நல்ல தொடக்கம்.
தமிழகத்தில், அதிலும் குறிப்பாக கல்வித்துறையில் கவனம் பெற வேண்டுமெனில் முற்போக்கு என்ற பெயரில் மரபை மொத்தமாக துறந்தாக வேண்டும் என்பது எழுதப்படாத விதி. எந்தவொரு வகையிலும் தமிழர் பண்பாடு, வரலாறு, கலை, இலக்கியம், தத்துவம் என எந்த ஒன்றும் நம் பாரத மரபோடு தொடர்புறுத்தப் பட்டு விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தாக வேண்டும். எனவே நிறுவனத்தின் பெயர் துவங்கி கருத்தியல் வரை மிகக் கவனமாக பாரத மரபு தவிர்க்கப்பட்டாக வேண்டும். இந்த பின்னணியில் வைத்துப் பார்க்கையில் பொயு ஆறாம் நூற்றாண்டில் நிகழ்ந்த தக்ஷஷிலா பல்கலைக்கழகத்தின் பெயரில் தமிழ்நாட்டில் ஒரு பல்கலைக்கழகம் துவங்கப்பட்டிருப்பதே பெரும் சாதனை தான். அதன் தாளாளர் திரு தனசேகரன் அவர்கள் தங்கள் வாசகர் என்பது இன்னும் கூடுதலான மகிழ்ச்சி.
ஒரு வகையில் இலக்கிய வாசிப்பு உடையவர்கள் கல்வித்துறையில் நுழைவது காலத்தின் கட்டாயமும் கூட. இன்று செயற்கை நுண்ணறிவு பொதுப் பயன்பாட்டிற்கு வந்துவிட்டிருக்கிறது. இந்த செயற்கை நுண்ணறிவு மானுடம் கண்டடைந்த தொழில்நுட்பங்களை தானும் மானுடர் போல இயல்பாக கையாண்டு மானுடர் தரும் செயல்விளைவுகளை உருவாக்கக் கூடிய சாத்தியத்தை தன்னுள் கொண்டிருக்கிறது. எனவே பல துறைகளிலும், குறிப்பாக நான் பணியாற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் நிதர்சனம் வேறு. செயற்கை நுண்ணறிவு என்பதன் செயல்விளைவு தேவையான அளவு, திருப்திகரமாக இருக்க வேண்டுமெனில், அது என்ன செய்ய வேண்டும், அது செயல்பட வேண்டிய தளம் பற்றிய முழுமையான தகவல்கள் போன்றவற்றை முறையாக அதற்குத் தெரிவிக்க வேண்டும். எளிய, அன்றாட ஆங்கிலம் தான் அதன் மொழி. இதை “அறிவிப்பு தொழில்நுட்பம்” என்று அழைப்பர். செயற்கை நுண்ணறிவுக்குத் தரப்படும் “அறிவிப்பின்” தரத்தைப் பொறுத்து அதன் முடிவுகள் வேறுபடும். இதன் பொருள், மொழியாளுமை மிகுந்த ஒருவருக்கு அது தரும் முடிவுகளுக்கும், ஒரு சராசரி மொழித்திறன் உள்ள ஒருவருக்கு அது தரும் முடிவுகளுக்கும் பாரதூர வேறுபாடுகள் இருக்கும்.
செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டின் ஆகப் பெரிய சிக்கலே இந்த இடம் தான். காலங்காலமாக நம் கல்வித்துறையும், பொது சமூகமும் மொழி என்பதை முற்றிலுமாக புறக்கணித்தே வந்துள்ளன. இன்றிருக்கும் உலகளாவிய தொழில்நுட்ப வல்லுனர்களில் தனக்கென மொழியாளுமை உள்ளவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்பது தான் யதார்த்தம். இந்தியா மட்டுமல்ல, அமெரிக்கா, ஐரோப்பாவிற்கும் இது தான் நிலை. மிகச் சில நாடுகளே “பகுத்தாய்வை” முன்னிறுத்தும் கல்வி முறைகளில் இருந்து “படைப்பாக்கத்தை” முன்னிறுத்தும் கல்வி முறைகளுக்கு நகரத் துவங்கியுள்ளன. சிங்கப்பூர் சிறந்த உதாரணம்.இந்நிலையில் மொழியாளுமை உருவாகி வர மிகச்சிறந்த வழி என்பது இலக்கிய வாசிப்பு மட்டுமே. அதை கல்வித்துறை நிறுவனங்கள் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். இப்போது பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் புகைப்பட குழுமங்கள், இயற்கை ஆராய்ச்சி, பறவை பார்த்தல் போன்ற ஆர்வம்சார் குழுக்கள் செயல்படத் துவங்கியுள்ளன. இதன் தொடர்ச்சியாக வாசிப்புக் குழுமங்களும் உருவாகும். மெல்ல மெல்ல இலக்கிய வாசிப்பு ஒரு துணையறிவுச் செயல்பாடாக கல்வித்திட்டத்தின் ஒரு பகுதியாக மாறத் துவங்கும். அதற்கு முதலில் மொழி, இலக்கியம் பற்றிய ஒரு புறவயமான பார்வை அந்த கல்வி நிறுவனங்களுக்கு வர வேண்டும். அதற்கு அது அந்த துறையின் முதன்மை பங்களிப்பாளர்களை அது அடையாளம் கண்டு மாணவர்கள் முன் வைக்க வேண்டும்.
தங்களுக்கு அளிக்கப்படவிருக்கும் இந்த பட்டம் குறைந்தபட்சம் தக்ஷஷிலா பல்கலைக்கழகத்தில் மேற்கூறிய இவை நடக்கக் கூடும் என்ற நம்பிக்கையைத் தருகிறது. எனவே தான் அந்த பல்கலையின் முதல் மதிப்புறு முனைவர் பட்டம் தங்களுக்கு வழங்கப்படுவதும், அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள முன்வந்திருப்பதும் நிச்சயம் தற்செயல் அல்ல என நினைக்கிறேன். மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜெ.
அன்புடன்,
அருணாச்சலம் மகாராஜன்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

