Jeyamohan's Blog, page 935
August 13, 2021
பிறந்த இடம், கறந்த இடம்
காமாக்யா ஆலயம் மூலச்சிலைஅன்புள்ள ஜெ
பின்வரும் பட்டினத்தார் பாடலின் சரியான பொருள் என்ன?
சிற்றம் பலமும் சிவனும் அருகிருக்க
வெற்றம் பலம் தேடி விட்டோமே – நித்தம்
பிறந்த இடத்தைத் தேடுதே பேதை மட நெஞ்சம்
கறந்த இடத்தை நாடுதே கண்
இதில் ”பிறந்த இடம்” என்பது மனித உயிர் பிறக்கும் இடமான பெண்குறியையும், ”கறந்த இடம்” என்பது குழந்தை பால் அருந்தும் தாயின் மடியையும் குறிக்கிறது. ஆனால் இணையத்தில் உலவும் போது பல்வேறு விளக்கங்கள் பக்திமார்க்கமாக இருந்து இவைகளெல்லாம் தவறான பொருள் என்று கூறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. எனக்கு அதில் உடன்பாடில்லை, இதில் மறைப்பதற்கென்று எதுவுமில்லை. இயற்கையான ஒன்றை மறைப்பதில் அவசியமென்னா?
பாடலின் பொருள் என்னவாக இருக்கும்? ஆனால் ஒரு விளக்கம் பார்த்தேன்.
”நித்தம் பிறந்த இடத்தை தேடுகிறது. நாம் பிறந்த இடம் எது? நாம் ஜீவாத்மாக்கள் அல்லவா? நாம் பரமாத்மாவிலிருந்துதானே பிறந்தோம்! நமது பேதை மனம் தினமும் நாம் பிறந்த இடமாகிய பரமாத்மாவையே தேடுகிறது எனக்கூறுகிறார்! கீழான இடத்தை நினைக்காதீர்கள்.கறந்திடத்தை நாடுதே கண்- நமது சூரியனும் சந்திரனும் ஆகும் அல்லவே? இந்த இரு ஒளிக்களைகளும் அகமுகமாக அக்னி கலையோடு கூடும் போது நாம் நம் ஜீவனை ஒளியாக நம் முன்னே காணாலாம்! நாதத்தொனி கேட்கலாம்! பின்னர் நமக்கு இறைவன் பிரசாதமாக சகஸ்ராரத்திலிருந்து அமுதம் சொட்டும். அந்த மங்காத பால் கறக்கும் இடத்தையே நம் கண் நாடுதே என பட்டினத்தார் கூறுகிறார். எவ்வளவு உயர்ந்த ஞானம்! தவறாக பொருள் கொண்டு மோசம் போகாதீர். எல்லா ஞானவான்களும் மிக உயர்ந்த பொருளையே – இறைவனையே – அடையும் வழியை கூறுகின்றனர”
இந்த விளக்கம் சரிதானா?
அருண்மொழிவர்மன்
அன்புள்ள அருண்,
சித்தர்பாடல்களில் காமத்தை, பெண்களை இழிவுசெய்து எழுதப்பட்ட வரிகள் உண்டு. நாராயணகுரு கூட அத்தகைய பாடல்களை இயற்றியிருக்கிறார். அவை இல்லறத்தாருக்கு உரியவை அல்ல. அவை துறவுவழி கொண்டவர்களுக்கு உரியவை. இல்லறத்தார் அவற்றை கருத்தில் கொள்ளலாகாது. அவற்றை இல்லறத்தோர் வாசிக்கும் வழக்கமே இருந்ததில்லை. அவை அச்சில் புழக்கத்திற்கு வந்தபோதுதான் அவற்றை அனைவரும் வாசிக்கநேர்கிறது
துறவு என்பது யோகத்தின் பொருட்டு. யோகம் குறியீட்டு ரீதியாக பல சக்திநிலைகளாக விளக்கப்படுகிறது. அதன் முதல் சக்திமையம் மூலாதாரம். அதுவே காமத்தின் உறைவிடம். படைப்பாற்றல், விழைவாற்றல், தன்முனைப்பு ஆகிய மூன்றும் அங்கே உறைகின்றன. அதை எழுப்பி, அதை கடந்து அடுத்தடுத்த ஆற்றல்நிலைகளுக்குச் செல்வதே யோகம். ஆகவே பறந்தெழும் பறவை கிளையை உதைத்துச் செல்வதுபோல மூலாதாரவிசையை, காமத்தை யோகிகள் நிராகரிக்கிறார்கள்.
காமம் ஆணுக்கு பெண்ணுடல் வடிவிலேயே வருகிறது. ஆகவே காமத்தை நிராகரிக்கும்பொருட்டு பெண்ணுடலை நிராகரிக்கிறார்கள். பெண் யோகிகள் எழுதினால் ஆணுடலை இதேபோல எழுதியிருப்பார்கள். உடல்மேல் விலக்கத்தை உருவாக்கும்பொருட்டு தன் நெஞ்சோடு கிளத்தலாக யோகியர் எழுதும் வரிகள் இவை. அவர்கள் நமக்குச் சொல்பவை அல்ல. அவர்களின் மெய்ஞான வெளிப்பாடுகளும் அல்ல. யோகப்பயிற்சியில் ஒரு கட்டத்தில் தேவையான ஒரு தன்னுறுதி மட்டுமே.
ஆணின் காமம் பெண்ணின் இரண்டு உறுப்புகளையே மையமாக கொண்டது. பிறப்புறுப்பு, முலைகள். அவையிரண்டும் தாய்மையின் இடங்களும்கூட. ஆகவே காமம் என்பது தாய்மையுடன் ஆழமாக பிணைந்தது. அது அத்தனை ஆற்றல்மிக்கதாக இருப்பது இதனால்தான்.
ஒருபக்கம் அது உடலின்பம் என்னும் எளிய செயல். மறுபக்கம் தாயை நாடுதல் என்னும் நுண்ணிய, உயரிய செயல். ஒருபக்கம் அது உடல், மறுபக்கம் அது ஆழுள்ளம். ஒருபக்கம் அது ஒரு தனிமனிதனின் விழைவு. மறுபக்கம் அது உயிர்க்குலங்கள் தங்களை தாங்களே உருவாக்கிக்கொள்ளும் அடிப்படை விசை. ஒருபக்கம் ஓர் ஆணுடல் ஒரு பெண்ணுடலை அறிவது. மறுபக்கம் அது அன்னையின் உடலில் இருந்த குழந்தையின் உடல் அன்னையுடலுடன் இணைவது.
மனிதனின் உள்ளம் காமத்திலாடுவது இவ்விரண்டின் நடுவில் ஒருவகை ஊசலாட்டமாகத்தான். இதை எந்த ஆணும் அந்தரங்கமாக அறிவான். இப்பாடல் தாய்மையை காமமெனவும் சித்தரிப்பதே முக்கியமாகக் கவனிக்கவேண்டியது.
யோகமுறை சார்ந்த பாடல் இது.ஆகவே இதற்கு யோகம்சார்ந்த பொருளே உள்ளது. இதிலுள்ள வைப்புமுறை முக்கியமானது. பிறந்த இடம் என்பதற்குச் சமானமாக சிற்றம்பலம் சொல்லப்படுகிறது. [நிராகரிக்கும்பொருட்டு அது வெற்றம்பலம் என்று சொல்லப்படுகிறது] கறந்த இடத்திற்கு நிகராக சிவம் சொல்லப்படுகிறது.
சிற்றம்பலம் என்பது இந்த பருவடிவப் பிரபஞ்சம். சிவம் அதிலாடும் கருத்துவடிவம் என்பது சைவமரபு. பருவடிவப் பிரபஞ்சம் பற்றிய ஓர் அழகான உருவகம் உண்டு. அது கருவறையாகவும் குழந்தையாகவும் ஒரே சமயம் இருந்துகொண்டிருக்கிறது. அதாவது அது தன்னைத்தானே பிறப்பித்துக் கொண்டிருக்கிறது. ஒன்று இன்னொன்றை உருவாக்குகிறது. பிறந்தபடி, பிறப்பித்தபடி இருக்கின்றன பருப்பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவும். ஆகவே அதை பிறந்த இடத்துக்கு நிகர்வைப்பது யோக மரபு.
ஆவுடை என்பது மாபெரும் யோனிதான். அதுவே சக்திவடிவம். அதில் எழுந்தது சிவம். சிவமென்பது பருவடிவப் பிரபஞ்சத்தை உயிர்கொள்ளச்செய்யும், வடிவுகொள்ளச்செய்யும், செயல்வடிவமாக்கும் முழுமுதற் கருத்து. இப்பாடலில் கறந்த இடம் என்னும் சொல் அதைச் சுட்டுகிறது. அது முலைப்பால். அருள், கனிவு, உயிரூட்டுவது.
நீங்கள் அளித்திருக்கும் விளக்கம் பக்திமரபில் நின்று சொல்லப்பட்டது. இந்நூற்றாண்டில் சித்தர்பாடல்கள் பரவலாக வாசிக்கப்பட்டபோது எளிய பக்தர்கள் அவற்றைக் கண்டு குழம்பினர், திகைத்தனர். அவற்றிலுள்ள காமவெறுப்பும் பெண்ணுடல் மறுப்பும் கண்டு ஒவ்வாமை கொண்டனர். அவர்களுக்காக இந்தவகையான சுற்றிவளைத்த பக்தி விளக்கங்கள் அளிப்பட்டன. இவற்றுக்கு எளிமையான பக்தர்களிடம் ஒரு தேவை இருக்கலாம்.
ஜெ
சூடாமணி, கடிதங்கள்
அன்புள்ள ஜெ
ஆர்.சூடாமணி பற்றி வேணுகோபால் எழுதிய கட்டுரையை வாசித்தேன். நான் பள்ளியில் படிக்கும்போது சூடாமணியை வாசித்தேன். அவருக்கு ஒரு வாசகர் கடிதமும் எழுதினேன். பிறகு அவர் வீட்டருகே தங்கியிருந்தேன். அப்போது அவரைச் சென்று பார்த்திருக்கிறேன். அவர் என்னிடம் அன்பாக இருப்பார். அவருக்கு தான் பெரிதாகக் கொண்டாடப்படவில்லை என்ற எண்ணம் இருந்தது. எனக்கும் அந்தக்குறை இருந்தது.
இப்போது அவருடைய கதைகளை படித்துப் பார்க்கிறேன். அவர் பெரும்பாலும் உங்கள் பட்டியலில் மட்டும்தான் இருக்கிறார். அவருடைய எழுத்திலுள்ள சிக்கல்கள் என்ன? இப்படி தொகுத்துச் சொல்கிறேன். அவற்றிலுள்ளது ஒரு காமன் விஸ்டம் மட்டும் தான். அன்காமன் விஸ்டம்தான் இலக்கியத்தில் வெளிப்படவேண்டும். அன்பு காதல் பாசம் தியாகம் போன்றவை அப்படியே வழக்கமான நம்பிக்கையின்படி வெளிப்படும் கதைகள் ஆர்.சூடாமணி எழுதியவை.
அத்துடன் அவருடைய கதைகளில் அந்த மையக்கருத்து ஒரு கதாபாத்திரத்தின் பேச்சில் நேரடியாக வெளிப்படுவதாகவே வருகிறது. ஓரிரு கதைகளைத்தான் விதிவிலக்காகக் கொள்ளமுடியும். ஏனென்றால் அவர் எழுதியதெல்லாம் கலைமகளுக்காக. அதை வாசிப்பவர்களுக்கு கதை புரியவேண்டும், அப்பீல் ஆகவேண்டும் என நினைத்தார். அவருக்கு அவர்கள் நடுவே ஒரு முக்கியத்துவம் இருந்தது. ஆனால் கதைகளின் வடிவநுட்பம் பற்றி அவர் கடைசிவரை எதையுமே கற்றுக்கொள்ளவில்லை.
ஆகவே அவருக்கு இலக்கியத்தில் பெரிய இடமிருக்க முடியாது என்றுதான் நினைக்கிறேன். கலைமகள் பெண் எழுத்தாளர்கள் அனைவரைப்பற்றியும் அதைத்தான் சொல்லவேண்டும்.
என்.ஆர்.சுவாமிநாதன்.
***
அன்புள்ள ஜெ,
ஆர்.சூடாமணி அவர்களைப் பற்றி நான் இப்போதுதான் தெரிந்துகொண்டேன். உங்கள் தளம் வழியாக. பழைய எழுத்தாளர்களை ஒட்டுமொத்தமாக மறந்துகொண்டிருக்கிறார்கள். இப்படி முக்கியமான எழுத்தாளர்களை நினைவூட்டுவது முக்கியமான பணி. வாழ்க
ஜெ.ஆர்
வரவிருக்கும் எழுத்து- கடிதங்கள்
வரவிருக்கும் எழுத்து
அன்புள்ள ஜெ
வரவிருக்கும் எழுத்து பற்றிய கட்டுரையைக் கண்டேன். மிக முக்கியமான ஒன்றைச் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். தமிழில் உருவாகவேண்டிய எழுத்து என்றால் அது இத்தகையதுதான். அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் வணிகத்தையும் பற்றி கலைநுட்பத்துடன் எழுதப்படும் எழுத்து. அவற்றை அந்தந்த துறைகளின் தகவல்களை மட்டுமே முவைத்து எழுதுவதுதான் இங்கே அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் நம் கல்வி முறை அப்படி. நாம் தகவல்களையே அறிவு என நினைப்பவர்கள். தகவல்கள் வழியாக கொள்கைகளையும் பார்வைகளையும் அறிந்தவர்கள் அல்ல. அதையெல்லாம் முன்வைக்கும் எழுத்து இங்கே ஏராளமாக வரவேண்டும்
தகவல்களை முன்வைத்து அதன்வழியாக கொள்கைகளை எளிமையாக சொன்னாலே அதற்கு இலக்கியமதிப்பு உருவாகிவிடுகிறது. அதை பிரபஞ்ச்நாடகமாக ஆக்கிக் காட்டினால் அது இலக்கியமேதான். லோகமாதேவி எழுதிய கட்டுரைகள் சில அப்படிப்பட்டவை. சீமைக்கருவேலம் பற்றிய கட்டுரை என் பார்வையையே மாற்றியது. அவர் ஓர் உரையாடலில் தேசியக் களைக்கொள்கை பற்றிச் சொல்கிறார். களைகளும் பாதுகாக்கப்படவேண்டிய தேசியச்செல்வங்களே என்கிறார். அதெல்லாம் பெரிய திறப்பு.
தமிழில் இத்தகைய அறிவியலெழுத்து என்.ராமதுரை, தியடோர் பாஸ்கரன் போன்றவர்களால் எழுதப்பட்டது. அது முக்கியமான ஒரு கிளையாக வளரவேண்டும்.
சி.எஸ்.ராஜேந்திரன்
***
அன்புள்ள ஜெ
உருவாகவேண்டிய எழுத்தைப் பற்றிய கடிதம் கண்டேன். மிகத்தெளிவாக எழுதியிருந்தீர்கள். இங்கே உருவாகவேண்டிய எழுத்து அதுதான். இலக்கியத்திலேயே ஒரு மாறுதல் வந்திருப்பதைக் காணலாம். ந.பிச்சமூர்த்தி தலைமுறை எழுத்தாளர்கள் பறவைகள், மரங்களின் பெயர்களைச் சொல்லி எழுதுவார்கள். சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் எழுத்தில் பறவை, மரங்கள் எதையும் பெயர் சொல்லமாட்டார்கள். ஒரு பறவை என்றுதான் சொல்வார்கள். அல்லது பச்சையாக தழைத்த மரம் என்பார்கள். அடுத்து உருவான இன்றைய தலைமுறை பறவைகளின் பெயர்களை தெரிந்து வைத்திருக்கிறது. நான் என் மாணவர்களுடன் டூர் செல்லும்போது பிள்ளைகள் டிராங்கோ, ராபின் என இயல்பாக அடையாளம் சொல்வார்கள். அந்த தலைமுறைக்கான எழுத்து இங்கே உருவாகியாகவேண்டும்
ராஜி பார்த்தசாரதி
***
வாசகனிடம் அணுக்கம்
இளம் எழுத்தாளன் மொழியாக்கம் செய்யலாமா?
அன்புள்ள ஜெ
சென்ற வாரம் முன்பதிவு செய்திருந்த இருட்கனியின் செம்பதிப்பை என் பெயரெழுதி உங்கள் கையெழுத்திட்டு கிடைக்க பெற்றேன். நிறைவான தருணம்.
இப்போது இன்று தீயின் எடை முன்பதிவு செய்துள்ளேன். வெண்முரசு நாவல் வரிசையில் முதற்கனல், திசைதேர்வெள்ளம், கார்க்கடல், இருட்கனி ஆகியவை மட்டுமே புத்தகங்களாக என் கையில் உள்ளவை. இவற்றில் நான் வாங்கியவை முதற்கனலும் திசைதேர் வெள்ளமும் மட்டும் தான். கார்கடலை செந்தில் குமார் அவர்கள் வாங்கி தந்தார். இருட்கனி, இப்போது முன்பதிவு செய்த தீயின் எடை ஆகியவை இந்த ஆண்டு தமிழ் வருடப்பிறப்பின் போது செல்வா அண்ணா பரிசளித்த தொகையில் வாங்குபவை. இதற்காக நண்பர்களுக்கு தான் நன்றி கூற வேண்டும்.
நேற்று காளி அண்ணாவிடமிருந்து வாங்கிய குருதிச்சாரலில் நீங்கள் அவரது பெயரை காளிக்கு என்று எழுதி கையெழுத்திட்டிருந்தீர்கள். எனது நூலில் சக்திவேல் அவர்களுக்கு என்று எழுதி இருந்தீர்கள். எனக்கு ஒரு ஆசை அடுத்த முறை தீயின் எடையில் சக்திவேலுக்கு என்று அழைக்க முடியுமா என ஒரு ஆசை.
நீங்கள் அறிந்தது தான், ஆசிரியரை நேசிக்கும் மாணவர்கள் அனைவருக்குமே தன்னை பெயர் சொல்லி அழைப்பதும் குறிப்பிடுவதும் மேலும் டேய், வாடா, போடா என்பதெல்லாம் பெரும் உவகை தரும் விஷயங்கள். என் உளம் நின்ற நேசத்திற்குரிய முதன்மை ஆசிரியர் நீங்கள்.
அன்புடன்
சக்திவேல்
***
அன்புள்ள சக்திவேல்,
நலம்தானே?
முன்பதிவு நூல்களில் கையெழுத்திடும்போது உடனே அவர் எவர் என நினைவு வரவேண்டும். தவறுதலாக இன்னொரு சக்திவேலுக்கு கையெழுத்திட்டு அவர் கோபிசெட்டிப்பாளையத்தில் இருந்து சீறி எழுந்தால் சிக்கலாகிவிடும்.
பொதுவாக எவரை ஒருமையில், அண்மையில் அழைப்பதென்பது சிக்கல்தான். நான் அரங்காவையோ சென்னை வழக்கறிஞர் செந்திலையோ மனதில் ஒருமையில்தான் நினைப்பது. பெரும்பாலானவர்களை மகன் இடத்தில்தான் வைத்திருக்கிறேன். ஆனால் அரங்கா தொழிலதிபர். செந்தில் உயரீதிமன்ற வழக்கறிஞர். ஒருமையில் அழைப்பது சரியல்ல. இங்குள்ள மரியாதை வரிசைகள் மிகக்குழப்பமானவை
ஜெ
பெண்களின் பயணம்,கடிதம்
பெண்கள் இந்தியாவில் தனியாகப் பயணம் செய்யலாமா?
அன்புள்ள ஜெ
பெண்கள் பயணம் செய்வது பற்றி நீங்கள் எழுதியிருந்த கட்டுரைகளை படித்தேன். தொடர்ச்சியாக அதை பல ஆண்டுகளாகச் செய்துவருகிறீர்கள். அதை உங்கள் நட்புக்குழுவிலிருக்கும் பெண்களும் ஓரளவு செய்துவருவதாகக் கடிதங்களில் இருந்து அறிந்தேன். மகிழ்ச்சியான விஷயம்.
பெண்கள் இன்றைக்கு தனியாகப் பயணம் செய்வது மிகக்கடினம். குடும்பத்துடன் பயணம் செய்தால் அது பயணமே அல்ல. குடும்ப வேலையும் பொறுப்பும் போகும் இடங்களிலும் அப்படியே நீடிக்கும். எதையுமே அறியமுடியாது. அவை நினைவிலும் நிற்காது.
அதற்காக பெண்கள் ஒத்த உள்ளம் கொண்ட பெண்களுடன் இணைந்து பயணக்குழுக்களை உருவாக்கலாம் என்கிறீர்கள். ஆனால் அதிலுள்ள உண்மையான சிக்கல் என்னவென்றால் பெண்களால் அப்படி எளிதாக வேறு பெண்களுடன் இணைய முடியாது என்பதுதான். ஆண்கள் எந்த வயதானாலும் கோஷ்டி சேர முடிகிறது. ஆண்களுக்கு உயிர்நண்பர்களும் உண்டு. பெண்களுக்கு கல்யாணமாகிவிட்டால் அனேகமாக தோழிகளே இல்லை. வெளியே சென்று ஒன்றுசேரவும் முடியாது. இன்னொரு பெண்ணுடன் ஒத்துப்போவதும் கஷ்டம். இதுதான் உண்மையான பிரச்சினை.
பெண்கள் பயணம் செய்வதிலுள்ள இன்னொரு சிக்கல் உண்மையிலேயே அவர்களுக்கு குடும்பத்தை விட்டு வர மனமில்லை என்பதுதான். குடும்பம் தானில்லாமல் இருக்கும் என கற்பனை செய்யவே பயப்படுகிறார்கள். என் குடும்பம் நானில்லாவிட்டால் தவித்துப்போய்விடும் என்றுதான் சொல்வார்கள். அவர்களை விட்டுவிட்டு வந்தால் அவர்கள் கஷ்டப்படுவார்கள் என்று சொல்வார்கள். ஆனால் உண்மை அது அல்ல. இவர்கள்தான் கஷ்டப்படுவார்கள்.
ஏனென்றால் இந்தப்பெண்கள் ஒரு சித்திரத்தை உண்டாக்கி வைத்திருக்கிறார்கள். தாங்கள் குடும்பத்திற்காக தங்கள் மொத்த வாழ்க்கையையுமே தியாகம் செய்வதாகவும் அந்த தியாகம் எவரும் மதிக்காமல் போவதாகவும் காட்டிக்கொள்வார்கள். உண்மையில் அந்த இமோஷனல் பிளாக்மெயில்தான் இவர்களின் அடிப்படை ஆயுதம். குடும்பத்தை விட்டு வெளியே கிளம்பினால் அந்த ஆயுதம் பொய் என்று தெரியவரும். ஆகவே கிளம்ப முடிந்தாலும்கூட கிளம்ப முடியாத சூழல் என காட்டி, தாங்கள் தியாகம் செய்வதாக ஒரு பாவலா காட்டி, குடும்பத்தினரிடம் குற்றவுணர்ச்சியை உண்டுபண்ணுவார்கள்.
இதையெல்லாம் திட்டமிட்டு அவர்கள் செய்வதில்லை. இயல்பாகவே இந்த நடிப்பு அவர்களுக்கு வந்துவிடுகிறது. ஆகவே இதையெல்லாம் விட்டுவிட்டு எங்க போக முடியுது என்று அவர்கள் கண்ணீர் வடிக்கும்போது உண்மையாகவேதான் அப்படிச் சொல்கிறார்கள்.
மிகச்சில பெண்களுக்கு ஒரு அதாரிட்டேரியன் குணமும் பெர்ஃபெக்க்ஷன் பார்க்கும் குணமும் இருக்கும். அதையெல்லாம் குடும்பத்தில் ஒரு அதிகாரமாக செயல்படுத்திக் கொண்டிருப்பார்கள். அவர்களால் குடும்பத்தை இஷ்டப்படி விட்டு வரமுடியாது. ஆனால் குடும்பம் பெரிய சுமையாக அழுத்துவதாகச் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
அதோடு இப்படியெல்லாம் பயணம் செய்வதற்கு அதற்கான ஒரு தேடல் வேண்டும். அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்க்கப்படவேண்டும். நீங்கள் சிற்பங்கள், கோயில்கள் பற்றியெல்லாம் எழுதுகிறீர்கள். எத்தனை பெண்கள் அவற்றையெல்லாம் வாசிக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? மிகமிகக்குறைவு. பெண்கள் விரும்புவது ஓய்வான மனமகிழ்ச்சிப் பயணங்களைத்தான். அதற்கு அவர்கள் தனியாகவோ இன்னொரு பெண்ணுடனோ போகமுடியாது. கூடவே ஆண்கள் வந்து பாதுகாப்பு அளிக்கவேண்டும். ஆட்களிடம் பேசுவது வண்டி ஏற்பாடு செய்வது போன்றவற்றை எல்லாம் செய்துகொடுக்கவேண்டும். அதன்பிறகும் இவர்கள் சலித்துக்கொள்வதை கேட்டுக்கொண்டிருக்கவேண்டும். இதெல்லாம்தான் உண்மையான சூழல்.
நீங்கள் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பது இதற்கு அப்பால் உண்மையாகவே பயணம் செய்ய விரும்பும் பெண்களிடம் என்று எடுத்துக்கொள்கிறேன். அவர்கள் ஆயிரத்தில் ஒருசிலர்தான்
தேவிப்பிரியா
August 12, 2021
பாலியலின் ஆன்மிகம்
அன்புள்ள ஜெ.விற்கு வணக்கம்,
தமிழ் மொழி மற்றும் சங்க இலக்கியங்களைப் பற்றிய எனது சந்தேகங்களையும் புரிதலையும் நண்பர்களுடன் விவாதிப்பது வழக்கம். ஆனபோதும் தெளிவான விடையும் ஆக்கப்பூர்வமான புரிதலும் கிட்டியதில்லை, பெரும்பாலான நேரங்களில் ஏமாற்றமே மிச்சம். அவர்களின் கருத்துக்கள் ஒருதலைப்பட்சமாகவோ அல்லது தன்னியல்பைச் சார்ந்ததாகவோ உள்ளது, அதனால் மனம் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை.
இதற்கு முன் தங்களுடன் இராஜராஜ சோழன் பற்றி மின்னஞ்சல் வழியாக கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம்.
சில காலமாக என்னுள் தொடர்ந்து எழுந்து நிற்கும் வினாக்களைப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளேன். அதற்குத் தகுந்த விளக்கங்களைத் தங்களால் நிச்சயம் தர முடியும் என்று நம்புகிறேன். தயைகூர்ந்து நேரம் கிடைக்கும்போது இதற்கான விளக்கத்தைத் தெளிவுபடுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கஜுராகோ என்றாலே காமத்தை சித்தரிக்கும் சிற்பங்கள் என்ற தவறுதலான கண்ணோட்டம் பலரிடம் உள்ளது. உண்மையில் அங்குள்ள 10% அளவான சிற்பங்கள் மட்டுமே காமத்தை பற்றியது, மீதமுள்ளவை அக்கால மக்களின் வாழ்க்கை முறையைப் பிரதிபலிப்பது போல வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. அழகிய பாவங்களை வெளிப்படுத்தும் நடனமணிகள், பரவசம் பொங்கும் பாடகர்/பாடகிகள், ஒப்பனையில் ஈடுபட்டுள்ள கன்னிப்பெண்கள், குழந்தையைச் சீராட்டும் பெண்கள் என்று எல்லாவகைப் பெண்களும், ஆண்களும் இங்கு சிற்பங்களாக உறைந்திருக்கின்றனர். சில சிற்பங்கள் `நிஜத்தை’ விடவும் செக்சில் கிளர்ச்சிïட்டுவதாக இருப்பதும் உண்மை.நான் இதுவரை அறிந்திருந்தது – கோயில் சிற்பங்களும் கல்வெட்டுகளும் அன்றைய வாழ்வியலை ஒட்டியே அமைந்திருந்தன என்பது தான்.
அப்படிப் பார்க்கையில் எதற்காக ”ஆழ்ந்த” காமத்தை விளக்கும் இத்தகு சிற்பங்களை வடிவமைத்தனர்? ஆண்-பெண் புணர்தல் என்பது இயல்பான ஒன்று. நமது சங்க இலக்கியப் பாடல்கள் காதல், களவு, காமம் ஆகியவற்றைப் பற்றி சிறப்பாகக் கூறுகின்றன. இதில் தவறேதும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.. ஆனாலும் காமசூத்திராவில் வருவதுபோல பல்வேறு வகையான புணர்தல் முறைகளை கோபுரங்களிலும், கோயில் சுவர்களிலும் வடித்திருப்பதின் பயனும் பொருளும் என்னவாக இருந்திருக்கும் என்பது என் அறிவுக்கு எட்டவில்லை.
குறிப்பாக – threesome, sex in a group, sex with animal என்பனவற்றை உணர்த்துவதன் நோக்கம் என்னவாக இருக்கும்? நான் இவைகளை தீயவை அல்லது பாவம் என்று கூறவில்லை, அது போல இந்த சமசாரங்களை மறைக்க வேண்டும் என்றும் வாதிடவில்லை; ஆனாலும் இப்படி அனைவரும் வந்து போகும் (சிறுவர்கள்) இடத்தில் இவவளவு detailed சிற்பங்கள் அவசியம்தானா? சிறு குழந்தைகள் இவற்றில் இருப்பது என்னவென்று கேட்டால், அதற்கு எப்படி விளக்கமளிப்பது என்ற கோணத்தில் பார்க்கிறேன்.
அருள்மொழிவர்மன்
அன்புள்ள அருள்மொழிவர்மன்
இந்த வினாவுக்கு விரிவாக முன்னரும் பதில்சொல்லிவிட்டேன்.[ஆலயங்களில் காமம்] நீங்கள் தேடினாலே கண்டைந்திருக்கமுடியும். ஆனால் இங்கே சிலவற்றை மீண்டும் மீண்டும் சொல்லவேண்டியிருக்கிறது. ஆகவே மீண்டும்.
கஜுராகோ பற்றிய கேள்வி எங்கிருந்து எழுகிறது? கோயில் என்பது ஒரு தொடர்புறுத்தல், ஒரு செய்திவெளிப்பாடு என்னும் புரிதலில் இருந்து. அச்செய்தி ஏன் வெளிப்படுத்தப்படுகிறது என்று கேட்கிறீர்கள். எவரிடம் என்று யோசிக்கிறீர்கள்.
முதலில் கோயில் என்பது ஒரு display அல்ல என்ற தெளிவு நமக்கு வேண்டும். அது மனிதர்கள் மனிதர்களிடம் தொடர்புறுத்தும் பொருட்டு உருவாக்கப்படவில்லை. அது தெய்வத்தின்முன் வைக்கப்பட்ட ஒன்று. அவ்வண்ணம்தான் அதை உருவகிக்கிறார்கள்.
ஒரு தெய்வத்தின் முன் பூசைப்பொருட்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் அழகும் ஒத்திசைவும் உள்ளன. ஆனால் அவை பார்ப்பவருக்காகவா அவ்வாறு படைக்கப்பட்டிருக்கின்றன? அவை தெய்வத்தின் முன் படைக்கப்பட்டிருக்கின்றன, தெய்வத்தையே உத்தேசிக்கின்றன.
பூசைப்பொருட்களில் ஒருவகை முழுமையும் ஒத்திசைவும் உண்டு. ஒளி, மலர்கள், கனிகள், நறுமணப்பொருட்கள்… அவை ஒரு வகை அர்த்தத்தை நமக்கு அளிக்கின்றன. ஏனென்றால் அதில் ஒரு மெய்மை உள்ளடங்கியுள்ளது. அதை நாம் அவற்றைப் பார்க்கையிலேயே இயல்பாக உணர்கிறோம். நம் ஆழம் உணர்கிறது. ஆனால் பூசைப்பொருட்கள் வெறும் காட்சிப்பொருட்கள் அல்ல.
நவீனப்பார்வையில் வேண்டுமென்றால் அவற்றை குறியீடுகள் என்று சொல்லலாம். அச்செயல் வழியாக அவை தெய்வத்துடன் உரையாட முயல்கின்றன. ஆலயமும் அவ்வாறே. அது பக்தர்களோ பிறரோ பார்ப்பதற்காக அமைக்கப்பட்டதல்ல. மூதாதையர் நோக்கில் அது ஒரு முழுமையான அமைப்பு.
ஓர் உயருளம் அடைந்த இறைத்தரிசனம் மந்திரமாக ஆகிறது. மந்திரம் கோயிலாக ஆகிறது. மந்திரம் முழுமையானது. அதன் எல்லா உச்சரிப்புகளும் இன்றியமையாதவை. ஆகவே அதன் எல்லா அம்சங்களும் சிற்பமாகவும் ஆகவேண்டும். அதில் ஒரு பகுதியை விட்டுவிடமுடியாது. கோயில்களிலுள்ள சிற்பங்கள், கட்டிட அமைப்பு அவ்வாறுதான் இலக்கணப்படுத்தப்படுகிறது.
கஜுராகோவில் அல்ல, இந்தியாவெங்கும், தமிழகம் முழுக்க கோயில் சிற்பங்களில் கேளிசிற்பங்கள் எனப்படும் இந்த பாலுறவுச் சித்தரிப்புகள் உண்டு. அவை அந்த ஆலயத்தின் சிற்பவியல் முழுமைக்கு தேவைப்படுகின்றன. அந்த ஆலயம் ஒரு பிரபஞ்ச தரிசனத்தின், ஓர் இறைத்தரிசனத்தின் கல்வடிவம். அதில் அந்த தரிசனம் முழுமையாகவே இருக்கும்.
இப்படி விளக்குகிறேன். அந்த தரிசனம் ஒரு முழுமையான பிரபஞ்சத்தை குறியீடாக உருவாக்கி ஆலயவடிவில் நிலைநிறுத்த முயல்கிறதென கொள்வோம். அதில் என்னென்ன இருக்கும்? பாதாளதெய்வங்கள், கொடிய தெய்வங்கள், நோய்கள், பீடைகள் இருக்கும். விலங்குகள் பாம்புகள் பறவைகள் இருக்கும். மனிதர்களின் வாழ்க்கை முழுமையாக இருக்கும். அதில் போர்கள், காதல், காமம் எல்லாமே இருக்கும். கந்தர்வர்கள், தேவர்கள் இருப்பார்கள். தெய்வங்கள் இருக்கும். இல்லையா? அதில் ஒரு பகுதி உங்களுக்கு இன்று சங்கடமாக இருக்கிறதென்பதனால் வெட்டிவிடப்பட வேண்டுமா என்ன?
காமம் ஏன் இருக்கிறது என்று கேட்கிறீர்கள். பெரும்பாலான கோயில்களில் நோய்கள் தெய்வங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. அழுக்குக்கும் இருட்டுக்கும் உரிய தெய்வங்கள்கூட உள்ளன. கொலைத் தெய்வங்கள் உள்ளன. எல்லா எதிர்மறை அம்சங்களும் ஆலயங்களில் எங்கேனும் இருக்கும். ஏனென்றால் இப்பிரபஞ்சம் அவற்றாலும் ஆனது.
பாலுறவுச்சிற்பங்கள் இருவகை. அ.மனித இயல்பின் இயல்புகளையும் விசித்திரங்களையும் காட்டுபவை. ஆ.தேவர்களின் லீலைகளைக் காட்டுபவை. அவற்றை கண்டாலே உணரமுடியும்.
மனித இயல்பைக் காட்டும் சிற்பங்கள் மானுடனின் அகத்தை முழுமையாக சித்தரித்துவிடும் நோக்கம் கொண்டவை. காமகுரோதமோகம் எல்லாமே மானுடத்தன்மைதான். நன்றும் தீதும். முனிவரும் கொலைகாரரும். அனைத்தையும் ஒரே அமைப்பின் பகுதியாக ஒட்டுமொத்தமாகக் காட்டுகின்றன ஆலயங்கள்.
தெய்வங்களின் பாலுறவுக்காட்சிகள் அவை பிரபஞ்சலீலையின் வெளிப்பாடுகள் என்பதனால் காட்டப்பட்டுள்ளன. காமம் என்பது உயிரின் ஆதிவிசை. இங்கே இயற்கையில் நிகழும் பெரும் களியாட்டு. புல்,புழு முதல் அனைத்திலும் திகழ்வது. இங்கே மலர்களை மலரச்செய்வதும் காய்கனிகளை உருவாக்குவதும் அதுவே. அந்த மாபெரும் ஆடலை பிரபஞ்ச ஒருமையின் ஒரு பகுதியாக ஆலயம் தன் வடிவத்தில் கொண்டிருக்கின்றனது.
மீண்டும் கவனியுங்கள், நீங்கள் ‘பார்ப்பதற்காக’ அல்ல. ஒட்டுமொத்தமாக ஒரு மெய்மையைச் சிற்பமாக்கும் பொருட்டு அவை அங்கே செதுக்கப்பட்டுள்ளன. எவருமே பார்க்கவில்லை என்றாலும் ஆலயம் குறைவுபடுவதில்லை. பாருங்கள், எவருமே பார்க்கமுடியாத இடங்களிலெல்லாம்கூட சிற்பங்கள் நிறைந்திருக்கும். சில ஆலயங்களில் மண்ணுக்கு அடியில்கூட சிற்பங்கள் புதைக்கப்பட்டிருக்கும். அவை அந்த ஆலயத்தின் இயல்பான நுண்கூறுகள், அவ்வளவுதான்.
அங்கே அவை இருப்பது மனிதனின் தேர்வு அல்ல. மனிதன் விலக்கக்கூடுவதும் அல்ல. அது படைப்பின் பகுதி. இயற்கையின் பகுதி. நன்று தீது என்பதற்கு அப்பாலுள்ளது அது. அந்த முழுமையையே ஆலயம் காட்டுகிறது. அத்தனை சிற்பங்களும் இணைந்த ஆலயமென்பது ஓர் ஒற்றைச் சிற்பம் என்று கொள்க. அது ஒரு மந்திரம். ஒரு மந்திரமென வெளிப்பட்ட ஒற்றைத் தத்துவம். ஒரு தெய்வத்தரிசனம்.
அதை தனித்தனியாக பார்ப்பதும், ஆராய்ந்து புரிந்துகொள்ள முயல்வதும், மதிப்பிடுவதும் ஆன்மிகவழி அல்ல. ஒற்றைப்பெருக்காக, ஒரே சிற்பமாக, கல்வடிவ மந்திரமாக, பிரபஞ்சசாரத்தின் கண்கூடான வெளிப்பாடாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஆழுள்ளத்தில் அது சென்று அமையவேண்டும். அங்கே மெய்மையென நிறையவேண்டும். ஆலயவழிபாடு அதற்காகவே.
ஜெ
தேவியர் உடல்கள்ஒரு குடும்பம் சிதைகிறது – சுரேஷ் பிரதீப்
பைரப்பாமகாபாரதத்தில் மிகப்பெரிய மதியூகியான கிருஷ்ணனால் எப்படி போரைத் தடுக்க முடியாமல் போகிறதோ அதுதான் நஞ்சம்மாவுக்கு நடக்கிறது. எத்தகைய மாமனிதரும் காலத்தின் முன் சிறுத்துப் போகும் சித்திரத்தை வழங்குவதால் இந்நாவலை மகாபாரத்துடன் ஒப்பிடலாம். இந்நாவலின் செவ்வியல் தன்மைக்கும் அதுதான் காரணம். காலத்தின் பெருந்திட்டத்தின் (அல்லது திட்டமின்மை) முன் மனித எத்தனங்கள் ஒன்றுமில்லாமல் போவதே சித்தரித்து இருப்பதால் ஒரு குடும்பம் சிதைகிறது எக்காலத்துக்குமான ஆக்கமாக மாறிவிடுகிறது.
காலத்தின் பெருந்திட்டம்- ஒரு குடும்பம் சிதைகிறது நாவலை முன்வைத்து: சுரேஷ் பிரதீப்எழுத்தாளன் என்னும் நிமிர்வு- கடிதங்கள்
எழுத்தாளன் என்னும் நிமிர்வு
அன்புள்ள ஜெயமோகன்
இன்றைய உங்கள் எழுத்தாளன் கட்டுரை படித்த உடன் இதை எழுதுகிறேன். நீங்கள் கூறியிருப்பதை முழுக்க உங்கள் வாசகர்களால் புரிந்து கொள்ள முடியும். உங்களிடம் உள்ள அந்த தன் அறிதல் தான் மிக முக்கியமான பிரத்யேகமான பெருமையாகவே என்னைப் போன்ற உங்கள் வாசகர்கள் எண்ணுவார்கள் என்றே கருதுகிறேன்.
நல்ல உணர்வுகளை பகிர்ந்து கொள்ள விரும்பினேன். அவ்வளவே.
நன்றி
சுஜா.
***
அன்புள்ள ஜெ
இன்றைய உங்கள் கட்டுரை என்னை என்னவென்று தெரியாத உணர்வுகளுக்குள்ளாக்கியது. நான் என்றும் உங்கள் அணுக்கமான வாசகியாகவே நினைத்துக்கொண்டிருக்கிறேன். வெண்முரசு எழுதும் நாட்களில் உங்களுக்கு மிகமிக அருகே இருந்துகொண்டிருப்பவளாகவே நினைத்தேன். உண்மையில் நீங்கள் அடைந்த எல்லா கொந்தளிப்புகளையும் நான் உணர்ந்திருந்தேன். அதெல்லாம் ஒரு தவம் போல. வெண்முரசிலேயே வருவதுபோல ஐந்து நெருப்பு நடுவே தவம் செய்து உருகி பொன்னாகி மீண்டு வருவது. யுதிஷ்டிரர் அவ்வாறு கந்தமாதன மலையில் உருகி மீள்வதை வாசித்தபோது அது உங்கள் அனுபவம் என்றுதான் நானும் உணர்ந்தேன். நான் எத்தனையோ நாட்கள் வெண்முரசின் வரிகளை வாசித்து கண்ணீர் சிந்தியிருக்கிறேன்.
உங்கள் வாசகர்கள்தான் உங்களுக்கு நெருக்கமானவர்கள். அவர்கள் மட்டும்தான் உங்களை அறிந்திருக்கிறார்கள். மற்றவர்களுக்கு இலக்கிய வம்பும் அரசியல்வம்பும் மட்டும்தான் தெரியும். பெரும்பாலானவர்களுக்கு இங்கே காமமும் சண்டைசச்சரவும் மட்டும்தான் தெரியும். அவர்களிடம் வெண்முரசின் ஆசிரியன் என்று சொல்லி நிற்கமுடியாது. உடனே அவமானப்படுத்தவே அவர்களுக்குத் தோன்றும். நீங்கள் பேசிக்கொண்டிருப்பது வெண்முரசின் இந்நாள் வாசகர்களிடமும் நாளைய வாசகர்களிடமும். அந்த நிமிர்வே உங்கள் குரலில் வெளிப்படுகிறது.
ஆர்.ராஜலக்ஷ்மி
***
அன்புள்ள ஜெ
உங்கள் குறிப்பைப் பார்த்தபோது சட்டென்று ஒரு அழுகைதான் வந்தது. ஏன் என்று தெரியவில்லை. உங்களை நான் மிக நெருக்கமான ஓர் ஆசிரியராகவே நினைத்து கொண்டிருக்கிறேன். முன்பு நீங்கள் ஜெயகாந்தனைப் பற்றிப் பேசும்போது ‘கருத்துக்களின் ஆண்மை’ என்று சொன்னீர்கள். அதை உங்களிடம் நான் பார்க்கிறேன். சிறுமைகள் உங்களில் அமையாது. அதெல்லாம் எரிந்து எரிந்து போய்விடும். நிமிர்வு என்பது தன் எல்லைகளை எல்லாம் தெரிந்தவர்களுக்கே வருவது.
இங்கே சிறுமைகளைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆண்கள் என்பவர்கள் அலைந்துகொண்டே இருக்கிறார்கள். எழுத்தாளர்கள் என்பவர்களும் அலைகிறார்கள். கெஞ்சிக்கொண்டும் மன்றாடிக்கொண்டும் இருக்கிறார்கள். அந்தவகையான கெஞ்சல்களும் குரல்களும் பிடிக்கும் பெண்களும் உண்டுதான். ஆனால் சிந்தனையின் ஆழத்தை அறிந்தவர்களுக்கு நிமிர்வுதான் பிடிக்கும். நான் உங்களை வாசிக்க வந்ததே கோவையில் ஓர் உரையில் நீங்கள் உங்களைப் பற்றிச் சொன்ன வரியில் இருந்த நிமிர்வைக்கண்டுதான். பெரும்பணக்காரர்களும் பெரிய படிப்பாளிகளும் பெரிய நிறுவனங்களை நடத்துபவர்களும் அமர்ந்த அவையில் தலைதூக்கி நின்று அப்படி நிமிர்வுடன் பேச ஒரு தகுதி வேண்டும். அந்த தகுதி கொண்டவர்கள் அதை உணர்ந்தும் இருப்பார்கள்.
அந்தத் தகுதி வருவது ஆழ்ந்து உங்களுக்குள் செல்வதன் வழியாகத்தான். எதையெல்லாம் எரித்துக்கொண்டு மேலே வந்தீர்கள் என்று நீங்கள் சொல்லும்போது ஒரு விம்மல்தான் வருகிறது. வேறெப்படி அவ்வளவு மேலே செல்லமுடியும் என்றும் தோன்றுகிறது
எம்
கவிஞர் இசை, பேட்டி
விறைத்த, சிடுமுஞ்சி அரசியல்குருமார்களுக்கு ஒரு அரசியல் கவிதை என்பது அவர்களைப் போலவே விறைத்த சிடுமுஞ்சியோடு இருக்க வேண்டும் போல. அவர்களுக்கு என் கவிதைகளை, அவற்றின் பகடி மொழியின் பொருட்டு வெறும் நகைச்சுவையாக மட்டுமே படிக்க முடிந்தால், நான் கலைவாணியிடம் அவர்களுக்காக வேண்டிக் கொள்கிறேன்.
வெண்முரசுநாள் உரை- கடிதங்கள்
வணக்கம் ஜெ
குரு பூர்ணிமை அன்று மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி.
யங்கின் ரெட் புக் படிக்க போவதாக சொல்லியிருந்தேன், தொடங்கிவிட்டேன். அத்துடன் சேர்த்தே உபநிஷத்துகளை படிக்கிறேன்(யங் உபநிஷத்திலிருந்து பல மேற்கோள்களை உபயோக்கிறார்). முன்னர் ஏக்நாத் ஈஸ்வரனின் உபநிஷத்துகள் நூலை வாசித்திருந்தேன். குரு நித்யா அவர்களின் உரைநூல்களுக்கு செல்லும் முன் ஒரு ஒட்டுமொத்த முன்னுரையாக எஸ்.ராதாகிருஷ்ணனின் நூலை மெல்ல மெல்ல படித்துவருகிறேன். சொல்வளர்காடினை கதைஒழுக்குடன் வாசித்ததால் அதன் தத்துவ கூர்மையை இந்நூல் வழியே நினைவில் மீட்டிவருகிறேன்.
ரெட் புக்கில் யங்கின் ஒரு வரி, “Every path you take, every step you make, is to the one point, that is, the center.” இதை மேற்கோளாக கொண்டு இவ்வோவியத்தை வரைந்தேன். இன்று உங்கள் உரையிலும் ஒன்றாகுதல், மைத்ரேயம் பற்றி பேசினீர்கள்.
முன்பு ஹெர்மீஸ் டிரிஸ்மெகிஸ்டஸின் தத்துவத்தை படிக்க துவங்குகையில் அது வேதாந்தத்துடன் ஒத்துப்போகும் இடங்கள் பல என உணர்ந்து அதை மேற்கொண்டு படிக்கவில்லை. இன்று உங்கள் உரைக்கு பின் அனைத்து தேடல்களும் தத்துவ பாதைகளும் சமன்வயப்பட்டு ஒரு புள்ளியிலேயே சென்றடையும் என உணர்ந்தேன், அது என்னுள் நிறைந்துவிட்டது; மனதினுள் ஒரு வரி மட்டும் மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டேயிருந்தது: ஃபாஸ்டில் வரும் வரி- Eternal mind’s eternal recreation.
மிக்க நன்றி ஜெ.
ஸ்ரீராம்
அன்புள்ள ஜெ
குருபூர்ணிமை அன்று நிலவில் உங்கள் உரையை கேட்டது நிறைவூட்டுவதாக இருந்தது. எனக்கு சடங்குகளில் நம்பிக்கை இருந்ததில்லை. ஆனால் இன்றைக்கு நாற்பது வயதில் எனக்கு நினைவிலிருப்பவை எல்லாமே சடங்குகளாக நடந்தவைதான். சடங்கு என்ன செய்கிறதென்றால் ஒரு நிகழ்ச்சியை அன்றாடவாழ்க்கையில் இருந்து பிரித்துவிடுகிறது. சாதாரண சம்பவம் அல்ல என்று காட்டிவிடுகிறது. ஆகவே உடனே அதற்கு ஒரு முக்கியத்துவமும் குறியீட்டு அர்த்தமும் வந்துவிடுகிறது. அந்த பேச்சை சாதாரணமாகக்கூட நிகழ்த்திவிட முடியும். ஆனால் மேலே இருந்த நிலவு எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. காலம்கடந்து நிற்கும் ஒரு நிகழ்வில் இருக்கிறோம் என்று தோன்றச்செய்துவிட்டது.
ஜெயராமன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

