Jeyamohan's Blog, page 870

December 7, 2021

ஃபேஸ்புக் எப்படி நம்மை வெறுப்பில் அமிழ்த்துகிறது?

இப்படி மூன்று மிக முக்கிய பத்திரிக்கைகள் இந்தியாவை மையமாக வைத்து ஃபேஸ்புக்கின் செயல்பாட்டினை அம்பலப்படுத்தியது மெதுவாகவே இந்திய ஆங்கில ஊடகங்களில் பேசப்பட்டன, அதுவும் மேம்போக்காக! தமிழ் ஊடகங்களில் இவ்விஷயம் பெரும் கவனத்தைப் பெறவில்லை. இந்திய அரசியலை உற்றுக் கவனிப்போர் விவாதிக்க வேண்டிய விஷயம் இது என்பதாலேயே இக்கட்டுரை அவசியமாகிறது.

ஃபேஸ்புக் எப்படி நம்மை வெறுப்பில் அமிழ்த்துகிறது? அரவிந்தன் கண்ணையன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 07, 2021 10:31

கதைகள் மொழியாக்கம்- கடிதங்கள்

அ.முத்துலிங்கம்

நூல்கள் வாங்க

https://www.vishnupurampublications.com/

அன்புள்ள ஜெயமோகனுக்கு

வணக்கம். இப்பொழுதுதான் ரெமிதாவின் மொழிபெயர்ப்பில் தேவி படித்தேன். மிகச் சிறப்பாக செய்திருந்தார். கதையின் உயிர் அப்படியே ஆங்கிலத்திலும் வந்திருந்தது. தமிழ் நகைச்சுவைகள் சாதாரணமாக ஆங்கிலத்தில் எடுபடுவதில்லை. அவை சரியாக வந்திருந்தன. சுசித்திரா, ரெமிதா, பிரியம்வதா ஆகியோர் தமிழுக்கு கிடைத்த கொடை. இன்னும் நிறைய வரவேண்டும். என் கண்ணால் நான் பார்க்கவேண்டும். திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கஞ் செய்தல்வேண்டும். அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்.

நலமாக இருங்கள்.

அன்புடன்
அ. முத்துலிங்கம்

 

அன்புள்ள ஜெ

சமீபத்தில் ஆங்கிலத்தில் அழகான சமகால ஆங்கிலப்புனைவுமொழியில் தமிழ்ச்சிறுகதைகள் வருகின்றன. அ.முத்துலிங்கம் அவர்களின் ஆட்டுப்பால் புட்டு சுசித்ரா மொழியாக்கத்தில் வெளிவந்துள்ளது. ரெமிதா மொழியாக்கத்தில் உங்களுடைய தேவி கதை வெளியாகியிருக்கிறது. இவை சர்வதேச அளவில் கவனிக்கப்படும் இலக்கிய இதழ்கள். தமிழிலக்கியம் இப்படி உலகளாவிய கவனம் பெறுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆங்கிலத்தை அறிந்த, தமிழிலக்கியம் சார்ந்த வாசிப்பும் நுண்ணுணர்வும் கொண்ட ஒரு புதிய தலைமுறை உருவாகி வருகிறது. தமிழிலக்கியம் உலகளாவ வாசிக்கப்படும் நாள் அணுகிக்கொண்டிருக்கிறது என நினைக்கிறேன்

ஆர்.ஸ்ரீனிவாஸன்

ஆட்டுக்கால் புட்டு- மொழியாக்கம்

https://www.narrativemagazine.com/issues/stories-week-2021-2022/story-week/goat-milk-puttu-appadurai-muttulingam

தேவி மொழியாக்கம்

https://www.usawa.in/issue-6/translation/remitha-satheesh.html

சவக்கோட்டை மர்மம்

The Mystery of The Fort of Corpses

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 07, 2021 10:31

இணைய மொண்ணைகள் -மேலும் கடிதங்கள்

இணைய மொண்ணைகள் – கடிதங்கள்

நூல்கள் வாங்க

https://www.vishnupurampublications.com/

அன்புள்ள ஜெ,

நீங்கள் இணைய மொண்ணைகள் பற்றி எழுதிய குறிப்பை இணைய மொண்ணைகள் – கடிதங்கள் வாசித்தேன். நானே அந்த வேடிக்கையை இரண்டு நாட்கள் முன் வாசித்தேன். அதைப்போய் ஏன் உங்களுக்கு எழுதவேண்டும் என நினைத்தேன். அந்த பகடிக் குறிப்பை எழுதியவர் போப்பு. அவர் ஒரு கைமருத்துவர். அதாவது குவாக். முற்போக்கு குவாக். முகநூல் வாழ்க்கை.

ஒருவரை பகடி செய்யவேண்டுமென்றால் அவரை ஆழ்ந்து படித்திருக்கவேண்டும். அவருடைய க்ளீஷேக்களை பகடிசெய்வது வழக்கம். ஆனால் அதுகூட ஒரு படி கீழ்தான். அவருடைய சிறந்த மொழிப்பிரயோகங்களை புத்திசாலித்தனமாக பகடி செய்யவேண்டும். அதுதான் கிளாஸ். இவர்களுக்கு அந்த சூட்டிகை எல்லாம் பத்தாது. இவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்களோ அதை எழுதுகிறார்கள். உங்களை போல எழுத முயல்கிறார்கள். ஆனால் எழுதவேண்டுமென்றால் வாசிக்கவேண்டும், மொழி வேண்டும். இணைய மொண்ணைகளுக்கு அதற்கு எங்கே வக்கு?

ஆனால் அந்த மொக்கைப் பகடியை பகடி என்றுகூட தெரிந்துகொள்ளாமல் நீங்கள் எழுதியதாக நம்பி அப்படியே பகிர்ந்து அதன்மேல் கோபாக்கினிகளை கக்குவது, ஹிஹி விடுவது  என்று ஒரு கும்பலே இரண்டுநாட்களாக கோலாட்டம் போட்டது. அதை தொடங்கிய அதிபுத்திசாலி மதி கந்தசாமி என்ற அம்மையார். விஷயம் தெரிந்தவர்போல அசட்டுத்தனங்களை எழுதுபவர். அவ்வப்போது உங்களை வசைபாடி கவனம் பெறுபவர். அதன் பின் லட்சுமி சரவணக்குமார் என்பவர். அங்கிருந்து ஆரம்பித்து ஒரே வசை, இளிப்பு.

வினாயக முருகன் கடுமையாக ஒரு கண்டனம் எழுதினார். அதாவது, கை தானாக எழுதுமென்றால் புத்தகம் தானாக அச்சிட்டுக்கொள்ளாதா என்று. என்ன அறிவுக்கூர்மை. என்ன ஒரு சூட்டிகை. அந்த பதிவில் நறுமுகைதேவி, ராஜ் சிவா , சென் பாலன், ராஜராஜேந்திரன், உமாமகேஸ்வரன் பன்னீர்செல்வம், சுதீர் செந்தில் என ஒருவர் பாக்கியில்லாமல் இணையக்கும்மியில் உயிர் வாழும் அத்தனை மொண்ணைகளும் போய் கொதித்தனர், வசை எழுதினர்.

இவர்கள் எவருக்குமே உங்களுடைய மொழிநடையோ நீங்கள் எழுதும் பாணியோ அறிமுகம் இல்லை. அதற்கு தொடர்ச்சியாக ஒருசில பக்கங்களாவது படிக்கும் வழக்கம் இருந்தால்தானே வாய்ப்பு. இவர்களில் எவரையாவது பார்த்தால் “ஏண்டா, இரவுபகலாக ஒருவரை திட்டிக்கொண்டே இருக்கிறீர்களே, அவர் எழுதிய பத்து பக்கத்தையாவது படித்துப்பார்த்தால்தான் என்ன கேடு உங்களுக்கு?” என்று கேட்டிருப்பேன்.

என்னென்ன கொதிப்புகள். ‘இப்படியெல்லாம் ஜெயமோகன் வாசகர்களை மடையர்களாக ஆக்குகிறார், ஜெயமோகன் வாசகர்கள் எல்லாம் ஏன் எங்களைப்போல அதிபுத்திசாலிகளாக இருக்கக்கூடாது’ என்று எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அசட்டுத்தனம் அம்பலமானதும் அப்படியே அழித்துவிட்டனர் என நினைக்கிறேன். எதுவரை போகுமென்று பார்க்கலாம் என்று நானும் காத்திருந்தேன். உங்கள் இணையதளத்தில் குறிப்பு வெளியானதும் முகநூல்பதிவை நீக்கிவிட்டார்காள். முந்தையநாள் இரவு வரை சுட்டி வேலை செய்தது. காலையில் நீக்கியிருப்பார்கள் என நினைக்கிறேன். ஆனால் ஒரு மாதம் கழித்து இதையே இன்னொருவர் ஆரம்பிப்பார்.

இவர்கள் என்ன சொன்னால் நமக்கென்ன என்று இருக்கலாம். ஆனால் நாம் பார்க்கத் தவறுவது ஒன்று உண்டு. இந்த அசட்டுக்கும்பல் உண்மையிலே மிகப்பெரிய சுமை. இணைய வெளி என்பது நம்மைப்பற்றி நாம் சுதந்திரமாகப் பேசி விவாதிப்பதற்காக இன்றைய தொழில்நுட்பத்தால் அளிக்கப்படுவது. மிகப்பெரிய வாய்ப்பு. இவர்கள் இரவுபகலாக அங்கேயே கிடந்து, எல்லா இடத்திலும் போய் இதைப்போல அசட்டுப்பகடிகள், வெற்றுக்கோபங்கள், காழ்ப்புகளாக கக்கி எதையும் எவரும் பேசமுடியாமல் ஆக்குகிறார்கள்.

அதைவிட யார் எதைச் சொன்னாலும் உடனடியாக சம்பந்தமே இல்லாமல் திரித்து, போலி உணர்ச்சிகளைக் கிளறிவிட்டு சிக்கலாக்கிவிடுகிறார்கள். இடைநிலைச் சாதிவெறி, கட்சிவெறி இரண்டும்தான் இவர்களை ஆட்டிப்படைக்கும் சக்திகள். இந்தக் கும்பலால் நாம் நவீன தொழில்நுட்பம் நமக்களித்த மிகப்பெரிய வாய்ப்புகளை இழந்து நின்றிருக்கிறோம். இணையவெளியை மனநோய்ப்பரப்பாக ஆக்கியிருக்கிறார்கள்

ராஜ்

 

அன்புள்ள ஜெ

இணையமொண்ணைகள் பற்றிய குறிப்பை வாசித்தேன். திரும்பத் திரும்ப இந்தக் கும்பல் உண்டுபண்ணும் கடும் சலிப்பு பெரிய சிக்கலாக இருக்கிறது. இன்றைக்கு எழுதுபவர்கள் வாசிப்பவர்களுக்கு அவர்களின் சூழலில் பேச ஆளில்லை. ஆகவே பொதுவான இணையவெளிக்கு வருகிறோம். அங்கே வந்து இவர்கள் அறிவே இல்லாமல் சலம்பிக்கொண்டே இருக்கிறார்கள். உண்மையான பிரச்சினை காழ்ப்போ, வெறுப்போ அல்ல. அறிவில்லாமைதான். இவர்களால் படிக்க முடியாது, படித்தால் புரியாது, அவ்வளவுதான்.

முன்பு ஒரு மொண்ணை ஏதோ டிவிட்டர் வரிகளை வாசித்துவிட்டு ‘கண்மணி குணசேகரனின் சாதிசார் அழகியலை ஜெமோ ஆதரிக்கிறார். அவர் கண்மணி குணசேகரனின் வன்னியர்சங்க அரசியலை ஆதரிக்கிறார்’ என்று சவுண்ட் விட்டுக்கொண்டிருந்தது. நான் ‘கண்மணி குணசேகரன் சாதிச்சங்க மேடையில் தோன்றியதை கண்டித்து எழுதப்பட்ட முதல் கட்டுரை, அனேகமாக ஒரே ஒரு கட்டுரை ஜெமோ எழுதியதுதான். தெரியுமா?”என்றேன். விழித்தது. நிழல்நாடுவதில்லை நெடுமரம் கட்டுரையை அளித்தேன்.

ஆனால் நாலைந்து பத்திக்குமேல் அந்த மொண்ணையால் படிக்க முடியவில்லை. “என்ன சொல்ல வரார்னு தெரியலை. குழப்புறார்” என்றது. “அதாவது ஒற்றை வரி வேணும் இல்ல? அப்ப கடைசி வரிய படி” என்றேன். ”அப்ப ஏன் இப்ப இப்டி சொல்றார்? அரசியல் பண்றார்” என்றது. “இப்பவும் அதையே சொல்லி லிங்கும் குடுத்திருக்கார்” என்றேன். அதன்பிறகும் கட்டுரையை படிக்க முடியவில்லை. அதன்பின் “இதில ஒரு அரசியல் இருக்கு” என்றது. அவ்வளவுதான்.

உண்மையில் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒன்றின் இரண்டு பக்கங்கள் என்பதெல்லாம் அந்தச் சின்ன மூளைக்கு ஏறவில்லை. ஆனால் இரண்டு நாளைக்கு பிறகு “ஜெமோ கட்டுரையை நுட்பாகப் பார்க்கவேண்டும். அதன் அரசியல்…” என்று பெனாத்தி ஏதோ எழுதியிருந்தது. உண்மையில் சூழலில் உலவும் இந்த மடையர்கள் மிகப்பெரிய சுற்றுச்சூழல் மாசுபாடாக மாறியிருக்கிறார்கள்.

பாஸ்கர் எம்

அன்புள்ள ஜெ

இணைய மொண்ணைகள் கட்டுரையை வாசித்துவிட்டு சம்பந்தப்பட்டவர்களின் முகநூல்களை எட்டிப்பார்த்தேன். எவராவது கொஞ்சமாவது கூச்சப்படுகிறார்களா என்று. இணையமொண்ணைகளின் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா என்னும் பாவனைதான். வினாயக முருகன் உங்கள் தளத்தில் பெயர் வந்ததில் மகிழ்ச்சி கொண்டாடிக்கொண்டிருக்கிறார். இப்படியே போனால் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டால் “இணைய மொண்ணையா இருக்கோம்” என்று இவர்களே அறிமுகம் செய்துகொள்வார்கள் போல

அர்விந்த்

அன்புள்ள அர்விந்த்

ஆமாம், இவர்கள் முயல்வது இந்தச் சின்ன கவனிப்புக்காகத்தான். மொண்ணை என்னும் கவனிப்பு கிடைத்தாலும் மகிழ்ச்சிதான் அடைவார்கள்.

ஜெ

சாத்தானைச் சந்திக்க வந்தவர்

ஒரு விமர்சனம்

வசைபாடிகளின் உலகம்- எதிர்வினையும் பதிலும்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 07, 2021 10:30

December 6, 2021

விஷ்ணுபுரம் விருது விழா, வருக!

விஷ்ணுபுரம் விருது விழா வரும் டிசம்பர் 25 மற்றும் 26 தேதிகளில் கோவையில் நிகழவிருக்கிறது.

முதல்நாள் வழக்கம்போல எழுத்தாளர் வாசகர் சந்திப்புகள். கோகுல்பிரசாத், காளிப்பிரசாத், எம்.கோபாலகிருஷ்ணன், பா.திருச்செந்தாழை சுஷீல்குமார், செந்தில் ஜெகன்னாதன், ஜா.தீபா ஆகியோருடன் சிறப்பு விருந்தினரான சோ.தர்மனும் கலந்துகொள்கிறார். பார்க்க விஷ்ணுபுரம் விருந்தினர்கள்,2021

இந்த உரையாடல் அரங்கில் கலந்துகொள்பவர்கள் இப்படைப்பாளிகளை படித்துவிட்டு வரவேண்டும் என்பது எங்கள் விருப்பம். எங்கள் அரங்குகளில் இலக்கியங்களை படித்துவிட்டு வந்து, அப்படைப்பாளியின் கருத்தை அறியும் நோக்குடன் கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டுமே இடம்.

மறுநாள் விருது வழங்கும் விழா. இரு சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்கிறார்கள். பகலில் அவர்களுடனான சந்திப்பு. விக்ரமாதித்யனுடன் உரையாடல். மாலையில் விருது விழா.

விழா வழக்கம்போல ஒரு சிறு புத்தகக் கண்காட்சியும்கூட. தன்னறம், தமிழினி, யாவரும் பதிப்பகங்களுடன் விஷ்ணுபுரம் பதிப்பக நூல்களும் வாங்கக்கிடைக்கும். வாசகர்கள் அனைவரும் கலந்துகொள்ளவேண்டுமென விரும்புகிறேன்.

இம்முறை நாங்கள் எதிர்பார்த்ததை விட மிக அதிகமானவர்கள் முன்பதிவு செய்துவிட்டனர். ஆகவே தங்குமிடத்திற்கான முன்பதிவு முடிந்துவிட்டது. முன்பதிவு செய்யாதவர்கள் வெளியே தங்களுக்கான தங்குமிடத்தை ஏற்பாடு செய்துகொள்ளவேண்டும். முன்பதிவு செய்தவர்களில் எவரேனும் வராமலானால் மட்டுமே பிறருக்கு இடமிருக்கும்.

நிகழ்வுகளில் கலந்துகொள்ள முன்பதிவு தேவையில்லை. இருநாட்களிலும் பங்கேற்பாளர் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்

https://vishnupuramvattam.in/

விஷ்ணுபுரம் விருதுவிழா பங்களிப்பு

விக்ரமாதித்யன் நூல்கள் வாங்க

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 06, 2021 17:58

நமது விமர்சன மரபு

வ வெ சு அய்யர் தமிழில் இலக்கிய விமர்சனம் இலக்கிய விமர்சனம் என்பது…

அன்புள்ள ஜெ

வணக்கம்!

(உங்களுக்கு கடிதம் எழுதாமல் இருக்க முடிவதில்லை.
ஒவ்வொரு முறையும் என் கடிதம் உங்களின் விலைமதிப்பற்ற நேரத்தை பாழக்குமோ என்ற எண்ணம்.அப்படி ஒன்றும் நான் ஓய்வாகவும் இல்லை காலையில் 3:30 எழுகிறேன் நாள் முழுவதும் பணி இரவு 7:30 க்கு வீடு, 8:30 க்கு உறக்கம். ஆனால் இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் தான் நான் அதிகமாக வாசிக்கிறேன்.உங்களுக்கு எழுதவும் செய்கிறேன்.இவ்வளவு நாளாக இருந்த தயக்கம் எங்கே போனது என தெரியவில்லை. )

இலக்கிய விமர்சனம் பற்றிய சிறு அபிப்பிராயங்கள். தற்காலத்தில் இலக்கிய விமர்சகர் எனயாராவது இருக்கிறார்களா,வாசகன் அந்த விமர்சகரை பின்தொடர்ந்து இலக்கிய படைப்புகளை கைகொள்ள?ஏனென்றால் விமர்சனம் என நான் படித்தது எல்லாம் பழையவைதான்.

சுந்தர ராம சாமி எழுதிய ந. பிச்சமூர்த்தியின் கலை இலக்கிய திறன் ஆய்வு நூலை ஒரு முன்னோடி என சொல்வேன். அதாவது இலக்கியத்திறனை ஆராய்வது.அதற்கு பிறகு நீங்கள் தான் தெரிகிறீர்கள்.எனக்கு நன்றாக நினைவிருக்கிறது சந்திராவின் “அறைக்குள் இருக்கும் தனிமை “என்ற சிறுகதையை நீங்கள் பகுப்பாய்வு செய்தது , உங்களின் சொற்களாலே அந்த கதை என்னுள் ஆழ இறங்கியது.இப்படி எண்ணற்றதிறன் ஆய்வுகளை உங்கள் தளத்தில் காணலாம் .

க.நா,.சு

அப்படியிருக்க தமிழின் தற்காலத்தில் உள்ள குறிப்பிடதகுந்த eழுத்தாளர்களில் யார்யாரெல்லாம் வெண்முரசை பற்றி எழுதியிருக்கிறார்கள்.

நான் உங்கள் தளத்தில் காண்பதெல்லாம் வெண்முரசின் வாசகர்களால் எழுதப்படும் விவாதங்கள் தான்.ப. சரவணனை தவிர்த்து. தங்களின் ஆசிரியர்களானநாஞ்சில் நாடனையும் அ.முத்துலிங்கத்தையும் நாங்கள் (வாசகர்கள்) கணக்கில் வைப்பதில்லை.

ஒருவேளை டி.தருமராஜ் சொல்வது போல தமிழ் எழுத்தாளர்களுக்கும்,
ஆய்வாளர்களுக்கும்.வெண்முரசை எப்படி எதிர்கொள்வது என தெரியவில்லையா ?இப்பொடி ஒரு நிகழ்வு தமிழிலோஇந்தியாவிலோ ஏன் உலகலவிலோ கூட நடந்திருக்காது தானே .

எட்டாண்டுகள் ஒரு படைப்பு தொடர்ந்து எழுதப்படுவதென்பது.
முந்நூறு பக்க நாவலொன்றை பத்தாண்டுகளாக எழுதிகொண்டிருந்தேன் என்பதல்ல இது.

ரகுபதி கத்தார்

செல்லப்பா

அன்புள்ள ரகுபதி,

இலக்கிய விமர்சனம் பலவகைப்படும். அழகியல் விமர்சனம். கல்வித்துறை விமர்சனம், கோட்பாட்டு விமர்சனம் என பொதுவாக ஒரு பகுப்பை நிகழ்த்திக்கொள்ளலாம்.

இது ஓர் அறுதியான பகுப்பு அல்ல. புரிந்துகொள்ளும் வசதிக்காக நாம் செய்துகொள்வது. அடிப்படை அணுகுமுறைகளைக்கொண்டு நாம் உருவாக்கிக்கொள்வது என்னும் தெளிவு நமக்கு தேவை.

சுந்தர ராமசாமி

அழகியல் விமர்சனம் என்பது படைப்பை ஒரு முன்னுதாரணமான வாசகராக நின்று வாசிப்பது. விமர்சகன் தன் வாழ்க்கையையும் அதுவரை வாசித்த நூல்களையும் கொண்டு அவற்றை புரிந்துகொள்வது. அதுவரையிலான இலக்கிய மரபின் பின்னணியை படைப்புக்கு அளிப்பது. இலக்கியப்படைப்பின் அடிப்படைத் தரிசனம், உணர்வுநிலைகள் ஆகியவற்றையும் அவற்றை வெளிப்படுத்தும் மொழி, வடிவம் ஆகியவற்றையும் கருத்தில்கொண்டு மதிப்பிடுவது.

அழகியல் விமர்சனம் அகவயமானது. அதை முன்வைக்கும் விமர்சகனின் ரசனையே அதில் முதன்மையானது. அவனுடைய ஒட்டுமொத்தப்பார்வையே அந்த விமர்சனத்தின் அளவுகோல். கல்வித்துறை விமர்சனம்  கோட்பாட்டு விமர்சனம் ஆகியவை விமர்சனத்தை புறவயமாக ஆக்க முயல்கின்றன. அழகியல் விமர்சனத்தை தனிநபர் விமர்சனம் என நிராகரிக்கின்றன. பொதுவான புறவயமான அளவுகோல்களை கண்டடைய முயல்கின்றன.

பிரமிள்

கல்வித்துறை விமர்சனம் எப்போதுமே முறைமையை முன்வைக்கிறது. ஆய்வுக்கான புறவயமான நெறிமுறைகள் அவை. அதுவரையிலான கல்வித்துறை ஆய்வுகளின் நீட்சியாக அது அமைகிறது. படைப்பின் வடிவம், மொழி, காலம், உள்ளடக்கம் சார்ந்து பகுப்பாய்வுசெய்து தொகுத்து அட்டவணைப்படுத்துவதே அதன் வழிமுறை.

அதற்கு காலந்தோறும் பல வழிகள் உள்ளன. இலக்கியத்திற்குள் இலக்கண அணுகுமுறை, ஒப்பாய்வு  அணுகுமுறைகள் இருந்தன. அவை நுண்மொழியியல் [ microlinguistics ] என அழைக்கப்படுகின்றன

சென்ற முப்பபதாண்டுகளில் நவீன மொழியியல் ஆய்வுமுறைகள் வந்துள்ளன.இவை பொதுமொழியியல்  [Macrolinguistics] என்று அழைக்கப்படுகின்றன. இவை மொழி எப்படி பொருளை உருவாக்குகிறது எப்படி தொடர்புறுத்துகிறது என்று ஆராய்பவை. அவற்றின் அடிப்படையில் இலக்கியப்படைப்பு எப்படி பண்பாட்டுக்கூறுகளை உருவாக்குகிறது, அவற்றை அலகுகளாகக் கொண்டு தன் வடிவை அமைக்கிறது, எப்படி தொடர்புறுத்துகிறது, அதன் அர்த்த உருவாக்கம் எப்படி நிகழ்கிறது என்றெல்லாம் ஆராய்கின்றன.

வெங்கட் சாமிநாதன்

கல்வித்துறைக்குள்ளேயே நாட்டாரியல், மானுடவியல், சமூகவியல் போன்ற வெவ்வேறு தனி அறிவுத்துறைகள் உள்ளன. அவற்றின் கொள்கைகளை அளவீடுகளாகக் கொண்டு இலக்கியத்தை ஆராயும் போக்குகளும் கல்வித்துறை விமர்சனங்களாக உள்ளன

கல்வித்துறையின் முறைமையை கைக்கொள்ளாமல், நவீனக் கோட்பாடுகளின் அடிப்படையில் தர்க்கபூர்வமாக இலக்கியத்தை ஆராய்பவர்களையே கோட்பாட்டு விமர்சகர்கள் என்கிறோம். இவர்கள் அரசியல்கோட்பாடு, சமூகவியல்கோட்பாடு, மொழிக்கோட்பாடு என சிலவற்றை கற்று தங்களுடைய பார்வையை அவற்றின் அடிப்படையில் உருவாக்கிக் கொண்டவர்கள். அவற்றைக்கொண்டு இலக்கிய ஆக்கங்களை ஆராய்ந்து மதிப்பிடுபவர்கள். இவர்களின் ஒட்டுமொத்தமான பார்வையும் நிலைபாடுமே இவர்களின் விமர்சனங்களை உருவாக்குகின்றன.

டி.தர்மராஜ் அ.ராமசாமி

இந்த ஒவ்வொரு தளத்திலும் முக்கியமான ஆய்வாளர்கள் உள்ளனர். கல்வித்துறை ஆய்வாளர்களில் க.பூரணசந்திரன், க.பஞ்சாங்கம், அ.ராமசாமி, டி.தருமராஜ் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். கோட்பாட்டு விமர்சகர்களில் இன்று செயல்படுபவர்களில் தமிழவன், எஸ்.வி.ராஜதுரை, ராஜ்கௌதமன் ஆகியோர் முதன்மையானவர்கள்.

க.பூர்ணசந்திரன் எஸ்.வி,.ராஜதுரை

அழகியல் விமர்சனத்தை அழகியலுணர்வுள்ளவர்களே செய்ய முடியும். ஆகவே மிக அரிதாகவே படைப்பிலக்கியவாதிகள் அல்லாதவர்கள் அழகியல் விமர்சகர்களாக வருகிறார்கள். தன்னளவில் ஒரு நல்ல படைப்பை எழுதாதவரின் அழகியல் விமர்சனத்தை கவனிக்கவேண்டியதில்லை என்றே எஸ்ரா பவுண்ட் குறிப்பிடுகிறார்.

தமிழின் அழகியல்விமர்சனம் என்பது வ.வே.சு.அய்யர், ஏ.வி.சுப்ரமணிய அய்யர், ரா.சி.தேசிகன் போன்றவர்களால் தொடங்கப்பட்டது. ஆனால் க.நா.சுப்ரமணியம், சி.சு.செல்லப்பா போன்ற படைப்பிலக்கியவாதிகளால் முன்னெடுக்கப்பட்டது. சுந்தர ராமசாமி, பிரமிள் போன்ற படைப்பிலக்கியவாதிகளால் வளர்க்கப்பட்டது. நானும் அவ்வரிசையில் வருபவனே. தமிழ்ப்படைப்பாளிகளில் பெரும்பாலானவர்கள் ஏதேனும் வகையில் கொஞ்சம் இலக்கியவிமர்சனமும் எழுதியிருப்பார்கள்.

ராஜ் கௌதமன் தமிழவன்

படைப்பிலக்கியவாதி அல்லாத அழகியல்விமர்சகர் என்றால் வெங்கட் சாமிநாதன். ராஜமார்த்தாண்டன், வேதசகாயகுமார் ஆகியோரையே சொல்லவேண்டும். அவர்களையே நாம் விமர்சகர் என அறிந்திருக்கிறோம்.

ஆனால் தமிழில் விமர்சனம் என்பது ஒரு செயலூக்கம் கொண்ட களம் அல்ல. வெங்கட் சாமிநாதன் ஒருவரே நம்பிக்கையுடன் தொடர்ந்து அதில் ஈடுபட்டவர். தமிழ் விமர்சகர்களிலேயே ஏறத்தாழ முழுமையாக அனைவரைப்பற்றியும் எழுதிய விமர்சகன் நான் மட்டுமே. அது எவரும் வாசிக்கவில்லை என்றாலும் எழுதிவைப்போம் என்னும் உளநிலையின் விளைவு.

வேதசகாயகுமார் ராஜமார்த்தாண்டன்

உண்மையில் ஓர் இலக்கிய வாசகன் அழகியல் விமர்சனத்தை மட்டும் கருத்தில்கொண்டால் போதும்.அவனுக்கு வாசிப்பதற்கான பயிற்சியை, ஒட்டுமொத்தப் பார்வையை அவையே அளிக்கும். அழகியல் விமர்சனத்தை அறிந்து, முழுமையான வாசிப்புக்குத் தேறியபின் தேவைப்பட்டால் பிற விமர்சனங்களுக்குள் செல்லலாம்.

ஏனென்றாஅல் எளிய இலக்கிய வாசகன் கல்வித்துறை, கோட்பாட்டு விமர்சனங்களுக்குள் சென்றால் அவன் இலக்கியப்படைப்பை வாழ்க்கையின் ஒரு வடிவமாகப் பார்க்கும் நோக்கை இழப்பான். ஆய்வுப்பொருளாக காண ஆரம்பிப்பான். அது பெரும் வீழ்ச்சி. மீள்வது மிகக்கடினம்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 06, 2021 10:35

கவிப்பெரும்பழம்- கா.சிவா

கவிஞர் விக்ரமாதித்யன் கவிதைகளிலிருந்து ஷங்கர் ராமசுப்ரமணியன் அவர்களால் தேர்ந்தெடுத்து தொகுக்கப்பட்ட “சிறு கோட்டுப் பெரும்பழம்”  என்ற நூலின் பெயரைக் கண்டவுடன் கவிஞரின் நிறைந்திருக்கும் கவிதைகளில் சிலவற்றை மட்டும் தாங்கியுள்ள நூல் என்பதை குறிப்பதற்காகவே இந்தப் பெயர் என்றே எண்ணினேன்.

அந்நூலை வாசிக்க தொடங்கிய பிறகு தோன்றியது, தன் மனதில் பெருத்து கனிந்திருக்கும் பிரமாண்ட கவிதைவெளியை மெல்லிய தேகத்தில் சுமந்திருக்கும் கவிஞர் விக்ரமாதித்யன்தான் அந்த சிறு கோடு என்று.

வாழ்க்கை

பறத்தல்

சந்தோசமானது

ஆனால்

பட்டுப் பூச்சிகள்

மல்பரி இலைகளில் தூங்கும்

வாழ்க்கை எத்தனையெத்தனை விதமானது. ஒருவருக்கான வரையறை மற்றொருவருக்கு எப்போதும் பொருந்தாது என்பதை எத்தனை எளிதாக கூறுகிறார். நீந்துவது ஒருவனுக்கு மகிழ்ச்சியளிக்கும் மற்றவனுக்கோ நீர் என்றாலே அனல் போலவும் தோன்றக் கூடும். பட்டுப் பூச்சிகள் பறத்தல் என்பதையே அறியாது தூங்குவதிலேயே மகிழ்ந்து மரிக்கிறது. அதற்கு வாய்த்தது அதுதான்.

சோட்டாணிக்கரை

தேவிபகவதி திருமுன்

ஆடுகின்றன அநேகம் பேய்கள்

அடக்கியொடுக்கும் சமயம் வரும்வரை

ஆடவிட்டுப் பார்த்துக்கொண்டிருக்கிறாள்

அமைதியாய் கீழ்க் காலில்

 

அதே தாய்தான்

மேலக் காவில்

உக்ரமாயிருந்து

ஓட்டிப் பத்துகிறாள்

உரிய பொழுதில்

காலம் நேரம் வருமென்று

காத்திருக்கிறேன் நாளும்

தெய்வ அன்னையரின் சித்திரம் இவரது கவிதைகளில் தொடர்ந்து வருகின்றன. அவற்றை தெய்வங்களாகவும் அன்னையாகவும் மனைவியாகவும் கவிதையாகவும் கூட எடுத்துக் கொள்ள வாய்ப்பளிக்கும் விதத்தில் அமைந்திருக்கும். மேற்காணும் கவிதையும் அப்படித்தான். எல்லாவித பெண் படிமங்களுக்கும் பொருத்தி வாசிக்கலாம். கவிஞன் தன் மனக் கொந்தளிப்பினால் ஆற்றுவனவற்றைக் கண்டு அமைதியாக இருக்கும் அதே மனைவிதான் சில நேரங்களில் ஆவேசமும் அடைந்து வெளியேற்றுகிறாள். அவளை சாந்தப் படுத்துவதற்கான சூழல் வருமென காத்திருப்பதைத் தவிர கவிஞருக்கு வேறென்ன வழி.

எனக்கு மட்டுமேன்

ஏன் இப்படியாக வேண்டும்

இந்த வாழ்க்கை

 

அடுத்த வேளை

எப்படிச் சாப்பிடுவோமென்று நிச்சயமில்லை

…..

இரவு

எங்கே தங்குவதெனத் தெரியவில்லை

……

வேட்டைக்காரன் போல

காசு பணத்துக்கு அலைவதே விதிக்கப்பட்டுவிட்டது

 

மனசில் கூத்தாடுகிறது

சதா ஒரு கலவரம்

….

அற்புதங்களென்று

எதுவும் நிகழவேயில்லை வாழ்க்கையில்

 

மரம் போல

வாழும்படியான துரதிர்ஷ்டம்

 

மண்போல

இருக்கும்படியான துர்பாக்யம்

 

இந்த வாழ்க்கை எனக்கு மட்டுமேன்

இப்படியாக வேண்டும்

அனைத்துக் கவிஞர்களுமே இப்படியொரு கவிதையை எழுதிவிடுவார்கள்.  தன்னை மட்டும் துயரத்தில் ஆழ்த்திவிட்டு  இந்த பிரபஞ்சமே மகிழ்வாக இருக்கிறதே எனும் ஆற்றாமையுடன் எழுதப்பட்ட கவிதை. ஆனால், மரம்போல மண்போல இதே துர்பாக்கியங்களுடன் எப்போதும் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பேன் என்னும் இறுமாப்பும் உள்ளதென தோன்றவைப்பதில் தனித்துவம் கொண்டுள்ளது இக்கவிதை. கவிஞரின் தனித்துவத்தையும்.

21 ஆம் நூற்றாண்டுக் கவிதை

அமர்ந்து

படிக்க ஒரு நாற்காலியில்லை

 

இருந்து

எழுத ஒரு மேஜையில்லை

 

ஒரு நல்ல புஸ்தகம் வாங்க

ஒரு நாளும் வக்கு இருந்ததில்லை

…..

பின்னிரவில் மின்விளக்கெரியவிட்டால்

தூக்கம்பிடிக்காது இவளுக்கு

 

பிள்ளைகள் படிப்புக்காய்

பணம் சேகரிக்க அலைந்து திரிவது வேறு

 

21ஆம் நூற்றாண்டு கவிதையை

எப்படி எழுத நண்பா

கவிதை எழுதுவதற்கான குறைத்தபட்ச வசதிகள் கூட இல்லை. ஆனாலும் 21-ம் நூற்றாண்டுக்கான கவிதையை தன்னால்தான் எழுத முடியும். எத்தனை இடர் இருந்தபோதும் அதை எழுதியே தீர்வேன் எனக் கவிஞர் கூறுவதாகவே எனக்குத் தோன்றுகிறது.

புரிதல்

 

ஒரு பாம்பை

எப்படிப் புரிந்துகொள்கிறீர்கள்

 

ஒரு பெண்ணை

எப்படிப் புரிந்துகொள்கிறீர்கள்

 

ஒரு கவிதையை

எப்படிப் புரிந்துகொள்கிறீர்கள்

 

என்னை

எப்படி

 

ஆனந்த தாண்டவமும்

காளியின் ஆங்காரமும்

புரிந்துகொள்ளக் கூடியவையா

ஈசனனின் ஆனந்த தாண்டவமும் காளியின் ஆங்காரமும் எண்ணிலா பரிமானங்களும் பொருள்கோளும் சாத்தியங்களும் கொண்டவை. அதைப் போலவேதான் பெண்ணும் பாம்பும் கவிதையும். ஒற்றை அர்த்தத்திற்குள் அடக்கிவிட முடியாதவை. இவற்றிற்கு சற்றும் குறைவானதில்லை தன் பாத்திரமும். யாராலும் புரிந்துகொள்ள இயலாதது, தன்னாலும்தான் என்று கவிஞர் தனக்குள்ளும் கூறிக் கொள்வார் என்றே உணர்த்துகிறது இக்கவிதை.

ஸர்ப்பக்காவு

குன்றுகள் மீது

அலைவுறுகிறது கருநாகம்

 

புற்றில்

மறைந்திருக்கிறது செந்நாகம்

 

கண்ணில்

படாது வாழும் ராஜநாகம்

 

கழுத்தில்

சுற்றிக்கிடக்கும் நல்லபாம்பு

 

பார்க்கவேண்டும்

பாம்புகள்

படமெடுத்து ஆடும்பொழுது

 

மண்டலமிட்டுக்

கிடக்கும் சமயம்

காணக்கிடைக்கவில்லை

கவிதைகள்,  சில நேரங்களில் விதிர்க்க வைக்கும். சில சமயங்களில் தவிக்க வைக்கும். எப்போதாவது துடிக்கவும் வைக்கும். அரிதான பொழுதில் கொல்லவுங்கூடும். நாகங்களின் பல வகைமை போலவேதான் கவிதைகளும் என்று நான் புரிந்து கொள்கிறேன். நாகங்களை ஆளும் நாகராஜனாக கவிஞர் தோன்றுகிறார்.

சமூகம் என்பது

நான்

கனவு காணும்போது மட்டுமே

சுதந்திரமாக இருக்கிறேன்

 

நீ

கவிதையெழுதும்போது மட்டுமே

சுதந்திரமாக இருக்கிறாய்

 

அவன்

காய்கறி வாங்கும்போது மட்டுமே

சுதந்திரமாக இருக்கிறான்

 

அவள்

கடுகு தாளிக்கும்போது மட்டுமே

சுதந்திரமாக இருக்கிறாள்

 

அவர்கள் காற்றுவாங்கும்போது மட்டுமே

சுதந்திரமாக இருக்கிறார்கள்

 

சமூகம் என்பது

தனிமனிதக் கூட்டம்

மனிதர்கள் எத்தனை நெருக்கமாக இருந்தாலும் அவர்களின் மனவெளிக்கிடையேயான தூரம் அளவிடமுடியாத அரூபமானதாகும். இவரின் கவிதைகளை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அனுபவங்களை தருகின்றதே. நண்பர்களின் கட்டுரைகளை வாசிக்கும் போது பெரும் திகைப்பு தோன்றுகிறது. சமூகம் என்பது தனிமனிதக் கூட்டம்தான். எந்த மனிதரும் பிறரைப்போல எப்போதும் இருக்க முடியாது.

நீலகண்டம்

அவனுக்குத் தெரியாதா

ஆலகால விஷம்

 

அவளேன் அலறிப்புடைத்து ஓடிவந்து

அவன் சங்கைப் பிடித்தாள்

 

கறுத்த கழுத்து

காமத் தழும்பு

 

*****

 

அவளும்தான்

ஆடிப்பார்த்தாள்

 

அகம்பாவமாய்

எதிர்த்துநின்றாள்

 

ஊர்த்தாண்டவமும் சின்முத்திரையும்

ஒன்றெனத்தேர்ந்தவன் அவன்

இதுபோன்ற ஈசனைப் பற்றிய கவிதைகளை அதிகமாகவே இவர் எழுதியுள்ளார். இவ்வகைமையிலான கவிதைகளை, நண்பர்கள் சங்கரரின் தத்துவங்களைக் கொண்டுள்ளதாக சிலாகிக்கிறார்கள். ஆனால், என்னைப் போன்ற, பெரிதாக தத்துவப் பரிச்சயம் இல்லாதவர்களுக்கு வேறு எளிய பொருள் கண்ணில் பட்டு ரசிக்க வைக்கிறது. காதல் கவிதைகளாகவோ, வாழ்வின் நிலையில்லாமையையோ கூறுவதாக வாசிக்கும் அதே கவிதையை தத்துவம் மிளிர்வதாகவும் வாசிக்கும் சாத்தியத்தையும் கொண்டுள்ளது இவரது கவிதைகளின் சிறப்பாக நான் கருதுகிறேன்.

மேலோட்டமான வாசிப்பில்  வாழ்வின் நிலையாமையை கூறுவதாக எண்ண வைக்கும் சித்தர் பாடல்களுக்கு உரையளிப்பவர்கள், அவை மருத்துவத்தைப் பற்றி கூறுவதாகவோ தத்துவத்தைப் பற்றி உரைப்பதாகவோ பொருள் தருகிறார்கள். தமிழ் நவீன கவிதையில் இதைப்போலவே பல பொருள் கொள்வதற்கான சாத்தியங்கள் கொண்ட கவிதைகளைப் படைத்துள்ள விக்கிரமாதித்யனை “நவீனச் சித்தர்” என்றே அழைக்கலாம். அவரது தோற்றமும் அதற்கு மிகப் பொருத்தமாகவே  உள்ளது.

செவ்விலக்கியம் என்பதின் முக்கிய கூறுகளில் முதன்மையானதாக, பல வகையாக பொருள் கொள்ளும் சாத்தியங்களுடன் அமைந்திருப்பது என்று கொள்ளலாம். இதன்படி பார்த்தால் கவிஞர் விக்ரமாதித்தியனின் கவிதைகளும் செவ்விலக்கியம்தான் என்று உறுதியாகக் கூறலாம்.

இந்நூலை வாசித்து உள்ளே மூழ்கியபின் கவிதைகள் காட்டும் பலவித உணர்வுகளுக்குள் சிக்கிக் கொண்டு வெளிவர முடியாத நிலைமையில் தோன்றுகிறது, நூலின் பெயராகவுள்ள அந்த சிறு கோடு வாசகன்தான் என. அந்தக் கவிதைகளின் பெரும் பொருண்மையை தாங்குமளவிற்கு மனதிடம் அமையப் பெறாது அல்லாடும் சிறு காம்பு போன்றவன் அவனென்று.

2021-ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது பெறும் கவிஞர் விக்ரமாதித்யனுக்கு என்  வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கா.சிவா

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 06, 2021 10:34

நுண்வினை ஆபரணம் – ரா.செந்தில்குமார்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை

திருச்செந்தாழையின் சிறுகதைகளை அவரெழுதிய காலக்கட்டத்தை கொண்டு  பிரித்துக்கொள்ள முடிகிறது. 2006 முதல் 2012 போன்ற காலக்கட்டங்களில் அவரெழுதிய தேவைகள், ஆண்கள் விடுதி : அறை எண் 12 போன்ற கதைகள் நேரடியான கதை சொல்லல் பாணியில் அமைந்திருக்கிறது.

ஆண்கள் விடுதி : அறை எண் 12 மேன்ஷன் வாழ்க்கையின் பாலியல் வறட்சியை மையமென கொண்டிருக்கிறது. பாலியல் தொழிலாளியிடம் தங்கிவிட்டு வெளியே வருகையில் அவளது  மகள் வண்ணத்துப்பூச்சியுடன் விளையாடுவதை காணும் காட்சி உருவாக்கும் வேதனை இந்த கதையை மறக்கமுடியாத ஒன்றாக்குகிறது.

தேவைகள் சிறுகதையில், மகனை இழந்துவிட்ட தந்தை மருமகளின் ஒழுக்கத்துக்கு காவலாகிவிடும் சூழலைச் சொல்கிறது. வீட்டில் வாசனை மாறுபடுவதின் வழியே நிகழ்ந்தவற்றை ஊகித்துவிடும் சிவசு, ஒரு மனம் நெகிழ்ந்த தருணத்தில் ”தின்னுட்டு போ கழுதை” என்று நாய்க்கு சோறிடுவது, ஆண்டு அனுபவித்தவனின் மனது வந்தடையும் தரிசனம். கதையின் தலைப்பை நேரடியாக வைத்தது பிரசுரமானது வெகுஜன பத்திரிக்கை என்பதால் இருக்கலாம்.

2020க்கு பிறகு எழுதிய அவர் சிறுகதைகள் சட்டென்று வேறு வகையான பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது. வணிகர்களை, “நெடுநுகத்துப் பகல் போல் நடுவு நின்ற நன்னெஞ்சினோர்” என்கிறது சங்கபாடல்.   பெரும்பாலான திருச்செந்தாழை சிறுகதைகளின் களம் வியாபார உலகம். ஆனால், எந்திரத்தில் அமர்ந்து பேலன்ஸ் சீட்டை ஆராய்ந்து செய்யப்படும் பங்கு வணிகம் அல்ல அது. மண்ணுடனும், மழையுடனும் உறவாடி, போராடி தானியங்களை விளைவிக்கும் விவசாயிகளிடம் செய்யும் வணிகம். குரூரத்தின் எல்லைக்கும், கனிவின் உச்சத்துக்கும் ஒரு நொடியில் சென்றடைந்து விடும் குணத்தை சம்சாரி அவனுடைய மண்ணிலிருந்தே பெற்றிருக்க முடியும். அப்பாவித்தனமும், தந்திரமும் குதர்க்கமுமாய் விதவிதமான மனிதர்கள். அவர்களுடன் வியாபாரம் செய்யும் கமிஷன் மண்டி மனிதர்கள் கூற எத்தனை ஆயிரம் கதைகள் மீதமிருக்கும்? இப்படி ஒரு களம் தமிழ் சிறுகதையுலகிற்க்கு புதியதுதான். ஆ.மாதவனின் சாலை தெரு கதைகள் வேறு விதமானவை.

வாசகனை நின்று நிதானிக்க வைத்து தனது மாயச் சூழலுக்குள் இழுத்துக்கொள்வது திருச்செந்தாழையின் மொழி. அவர் கவிஞனாகவும் இருப்பதின் வழியே இந்த மொழிநடைக்கு வந்தடைந்திருக்ககூடும்.

”தென்னம்தோப்பிற்க்குள் சிறியதொரு கோவிலில் மாடவிளக்கு பொருத்தப்பட்டிருக்க, சாம்பலான இருளுக்குள், அது அம்மாவின் நெற்றியைப் போல் இளவெளிச்சம் கொண்டிருந்தது” என்கிற விவரிப்பை எப்படி ஒரு வாசகன் சட்டென்று கடந்து கதைக்குள் புகுவது?

விலாஸம் கதையில் தன்ராஜிடம் முதலில் வெளிபடுவது, மானின் கழுத்தை கவ்வி சென்று நிதானமாக உயிர் அடங்குவதை ரசிக்கும் சிங்கத்தின் வன்மம். தன்ராஜ் தனது பழைய முதலாளியை பார்க்க வருவது, அந்த வீழ்ச்சியை உள்ளூர ரசிப்பதற்க்கு. கூடவே மென்மேலும் வெற்றிகளை குவிக்க, மனிதர்களுக்கு கொஞ்சம் சீண்டலும், சிறிய அவமானங்களும் கூட வேண்டியதாக இருக்கிறது.  புது பணக்காரரான தன்ராஜின் புதிய கார், அதன் ஓட்டுனர், இவர்களை எதிர்க்கொள்ளும் பழைய முதலாளியின் ஓட்டுனரிடம் தெரியும் அலட்சியம், முதலாளி வந்தவுடன் உடனடியாக அவரிடம் தெரியும் உடல்மொழி மாற்றம், முதலாளியின் பியட் கார் இவற்றை கொண்டே அந்த காட்சியை கச்சிதமாக வாசகனுக்கு கடத்திவிடுகிறார் ஆசிரியர். மிக சிக்கனமான வரிகளில் பாத்திரங்களை நம்பகமாகவும் லாவகமாகவும் படைத்துவிட திருச்செந்தாழையால் முடிகிறது.

புகழேந்தி அண்ணனின் கிண்டலை அமைதியாக வாங்கிக்கொண்டு அவரை திருப்திபடுத்துவதின் வழியே அவரை போன்றவர்களை காலம் முழுவதும் அப்படியே விட்டுவிடுவதில் அடங்கியிருக்கிறது தன்ராஜின் வன்மம்.

அப்பா இப்படிதானென்று தன்ராஜின் மகன் முடிவுகட்டியபின்பு, இவை மட்டுமல்ல அவர் என்பது தெரியவருகிறது. வேட்டையின் வெற்றி இரையில் மட்டுமல்ல.  வேட்டையாடுதலின் ருசி, அந்த ஆட்டத்தின் களிப்பிலிருக்கிறது என்பதை உணரும் மகன் மெளனமாக அமர்ந்திருக்கிறான்.

துலாத்தன் சிறுகதையில் ஏறக்குறைய அய்யாவுவை ஓடவைப்பதும் இந்த ஆட்டத்தின் ருசிதான். தரகுக்கும் மிஞ்சாது என்று தெரிந்தபின்பும், அய்யாவு, யூரியா சாக்குகளை கொண்டு, விவசாயிகளிடம் தானியங்களை கொள்முதல் செய்வது, வியாபாரம் என்பது வெறும் லாப நட்ட கணக்கல்ல என்பதால் தான். ஒவ்வொரு கணத்திலும் அங்கு எடை வைக்கப்படுவது அவருடைய இத்தனை நாள் வாழ்வின் அனுபவமும் அதன் பெறுமதியும் தான். அந்த ஊசலாட்டத்தை அப்படியே எழுத்தில் கொண்டு வருவதில்தான் திருச்செந்தாழையின் நுட்பம் அடங்கி உள்ளது.  இருபது ரூபாய் கூட்டி கொடுப்பதால் வேறு வியாபாரியிடம் தமது தானியங்களை கொடுக்க ஒத்துக்கொள்ளும் சம்சாரிகள், இத்தனை நாள் பழகிய அய்யாவுவை நிராகரிக்கிறார்கள். இனி தோல்விதான் என்கிற நிலையிலிருந்து துவளாதவனாக போராடி ஒரே ஒரு காட்டில் தனது கொள்முதலை நிகழ்த்திகாட்டிவிடும் அய்யாவுவை, அதே சம்சாரிகள் மதிப்புடன் பார்த்து நகருமிடத்தில் அய்யாவு கொள்ளும் பெருமிதத்தை வாசகனும் உணர்கிறான். அய்யாவு அந்த வெற்றியின் ருசியை சப்புக்கொட்டி அமர்ந்திருக்கையில் உதிர்ந்த சோளத்தட்டையாக மகள் பரமு நினைவில் எழுந்து சுருள வைக்கிறாள்.

இரு மணம் இணைந்து, உயிரில் கலந்த அற்புதமான உறவிலும்,  ஏதோ ஒரு மூலையில், கொஞ்சமாய் துரோகத்தின் சுவடு வெளிபட தருணம் வேண்டி காத்துக்கொண்டுதான் இருக்கிறது. அற்புதமான இணை என்று உள்ளும் புறமும் நெகிழ்கையில், தெய்வம் கள்ளசிரிப்பு கொள்ளுமோ? தன்னுடைய வாழ்வை கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றியவள் திடீரென்று வேறொருவனுடன் சென்று விடும் மர்மத்தை புரிந்துக்கொள்ளவே அவளை தேடி ஜே.பி செல்கிறான். அந்த கொலுசின் சிரிப்பில் அதை கண்டுக்கொண்டு திரும்பி நடக்கிறான் டிஷர்ட் சிறுகதையில்.

காப்பு சிறுகதை முழுக்க முழுக்க தாழம்பூவின் வாசம் கொண்ட மயக்க நிலையிலே நிகழ்கிறது. சிறு பிள்ளை பருவத்தில், தாத்தா ”தாழம்பூவின் வாசம் நினைவழிக்கும்”, என்கிறார். அவர் காசுகொடுத்து அனுப்பிய பெண்ணை பார்த்தோமா, இல்லையா என்கிற மயக்கமே தீர்ந்தபாடில்லை.  கதையின் இறுதி வரிகளில் சட்டென்று கதை திருப்பமெடுத்து, அந்த தாழம்பூவின் வாசம் தான் நாயகனுக்கு காப்பாக அமைந்து அவனை நிலையழிதலிருந்து காத்து நிற்கிறது. அழகான படிமமாக தாழம்பூவின் மணம், உத்தரகோசமங்கையின் சந்தனக்காப்பு, கதையின் இறுதி திருப்பம் என சிறுகதையின் அத்தனை இலக்கணங்களும் பொருந்திய கதையாக இந்த கதை திகழ்கிறது.

த்வந்தம் சிறுகதை திருச்செந்தாழையின் இரு முக்கிய கதை கருக்களான வணிகத்தின் சூது மற்றும் ஆண் பெண் உறவில், காலங்காலமாக தொடரும் பகடையாட்டம் இவற்றை மையமாக்கி நிகழ்கிறது. அப்பாவி கணவனை கொண்டுள்ள பெண் அடைவதற்கு எளிதானவளாக தோன்றுகிறாள். ஒவ்வொரு சிப்பாயாக வெட்டி ராணியை நெருங்குகையில் சட்டென்று ராணி அந்த ஆட்டத்தின் சூதில் கைதேர்ந்து ராஜாவை வெற்றிக்கொள்கிறாள்.  கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஆட்டத்தை புரிந்துக்கொள்கிறாள் லீலா, அவளிடம் தடுமாறுவதில் ஆட்டத்தின் நுணுக்கத்தை தவறவிடுகிறான் கதைச்சொல்லி. வியாபாரத்தில் இயல்பாக வந்து விழுவது போல் சொல்லப்படும் கூர்மையான அம்புகள், இருவருக்குமிடையேயான உரையாடல்கள் என இந்த பகடையாட்டம் தொடர்கிறது. ”கரிசனத்தின் முதலீடு” என்கிற வார்த்தையில் அவனை சரியான இடத்தில் நிறுத்துகிறாள் லீலா. இனி, அவன் எந்த பக்கம் அடியெடுத்து வைத்தாலும் மென்மேலும் சிறியவனாவான். அவனுடைய கூர்மையும், தன்மதிப்பும் அப்படி அவனை கீழிறங்க வைக்காது என்று கணிப்பதில் அடங்கியிருக்கிறது லீலாவின் நுட்பம். மற்றொரு புறம் அவன் விரும்பியது இந்த வணிகத்தின் குரூர ருசியை கண்ட லீலாவை அல்ல. இப்போது அவன் லீலாவின் ஆகிருதி முன் போரிட முடியாதவனாய், அவளை அஞ்சுகிறவனாய், அவளிடம் தோல்வியடைய விரும்பதாவனாய், ஏதோ ஒரு நிறுத்தத்தில் ரயிலிலிருந்து மெளனமாக வெளியேறி மறைகிறான்.

இந்த வரிசையில் ஆபரணம்  மற்றொரு அற்புதமான சிறுகதை. காட்டுச்செடியாய் வளர்ந்த அண்ணன், போன்சாய் மரமாக இருக்கும் தம்பியை கொஞ்சம்கொஞ்சமாக மென்றுவிழுங்கும் பங்காளி துரோகம்தான் களம். ஆனால், இங்கு போர் நிகழ்வது சித்திரைக்கும், மரியத்துக்குமிடையில். ஒன்றில் தோற்பதை மற்றொன்றில் வெல்வதின் மூலம் நிகர் செய்துக்கொண்டு கணக்கு வழக்கை நேர் செய்துக்கொள்கிறார்கள். ”அழுக்கடைந்த மெழுகுவர்த்தி போல்” என்று சித்திரையை வர்ணிக்கையில் வேறு எதைக்கொண்டும் அவளை இவ்வளவு பொருத்தமாக வர்ணித்துவிடமுடியாது என்று தோன்றுகிறது. குழந்தைகள் சூழ அவள் அமர்ந்திருக்கும் சித்திரம், ”மெழுகுவர்த்தியை சுற்றிலுமுள்ள ஸ்படிக துளிகள்” என்கிற உவமை அழகு.

த்வந்தம், ஆபரணம் போன்று பலமான கதைகரு இல்லாது ஒரு சம்பவத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மொழியின் துணையோடு அவர் எழுதி பார்க்கும் துடி போன்ற சிறுகதைகள் அவருடைய மாற்று முயற்சிகளாக இருக்கலாம்.

சாணை தீட்டிய கத்தி போல் உரையாடல்கள், ”இரண்டு மூணு லைன் எச்சு போறான்” போன்ற இயல்பான வட்டார வழக்குகள், துல்லியமான காட்சி விவரிப்பு, உடல்மொழியை சொல்லி உணர்வை கடத்திவிடுவது, புத்தம்புதிய களம் இவையெல்லாம் திருச்செந்தாழையின் பலம். அது அப்படியே இந்த கதைகளில் நிகழ்ந்திருக்கிறது.

தொடர்ந்து இப்படி நல்ல கதைகள் ஒரு எழுத்தாளனிடமிருந்து வருவது திருச்செந்தாழை இப்போதிருக்கும் அற்புதமான படைப்பூக்கத்து காலக்கட்டத்தை காட்டுகிறது. விஷ்ணுபுர விருதுவிழாவின் விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கும் திருசெந்தாழை அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.

ரா.செந்தில்குமார்

 

 

விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத்

விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்

விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை

விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன்

விஷ்ணுபுரம் விருந்தினர் -7, ஜா தீபா

விஷ்ணுபுரம் விருந்தினர்-8, சோ.தர்மன்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 06, 2021 10:33

குதுப் -கடிதங்கள்

குதுப் (முழுதமைந்த குரு) பால் ஸ்மித்

அன்புள்ள ஜெ

குதுப்- முழுதமைந்த குரு ஓர் அற்புதமான கட்டுரை. சுபஸ்ரீ அருமையாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார். அதன் சில சொற்களை அகற்றிவிட்டால் அதை ஒரு வேதாந்தக் கட்டுரை அல்லது பௌத்தக் கட்டுரை அல்லது ஒரு மேலைநாட்டு ஐடியலிஸ்ட் கட்டுரை என்று வாதிடமுடியும். எல்லா ஞானங்களும் சென்றடையும் ஓர் உச்சநிலையில் இயல்பாகவே அக்கட்டுரை அமைந்துள்ளது.

எந்த ஞானத்தையும் அதன் உச்சியிலிருந்து அறியமுடியும். அதன் வேரிலிருந்தும் அறியமுடியும். சிந்தனையை உச்சியிலிருந்து அறிவதே நல்லது. வேர் என்பது வரலாறு. அதன்வழியாகச் சிந்தனையை அறிவது தவறான வழிமுறை. இந்தக்கட்டுரை சூஃபி ஞானத்தை அதன் உச்சியிலிருந்து நமக்கு அறிமுகம் செய்கிறது.

சுவாமி

 

அன்புள்ள ஜெ

குதுப் கட்டுரையில் இந்த வரிகளை வாசித்தேன்

மனம் மறைந்து போக வேண்டும், நனவை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்… தனிப்பட்ட மனதுடன் இணைந்திருந்த நனவு இப்போது விடுவிக்கப்பட்டு, தடைகள் இன்றி இறுதி மெய்மையுடன்(Ultimate Reality) நேரடியாக ஒன்று சேர்கிறது. இப்போது நனவுக்கும் இறுதிமெய்மைக்கும் இடையே திரைகள் ஏதும் இல்லாதிருப்பதால் நனவு பூரணத்துடன்(Absolute) இணைந்திருக்கிறது.

முழுமை என்று வேதாந்தம் சொல்லும் அதே தன்னுணர்வு அதே சொற்களில் அப்படியே வெளிப்பட்டிருக்கிறது இக்கட்டுரையில். இது சூஃபி மெய்ஞானத்தின் அழகான தொகுப்பு. மிகச்சரியாக சொல்லப்பட்டு மிகச்சிறப்பாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது

ஆர்.ராஜாராம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 06, 2021 10:31

இணைய மொண்ணைகள் – கடிதங்கள்

 அன்புள்ள ஜெ,

இணைய உலகில் மொண்ணைகள் உங்களைப் பற்றி எழுதுவதை வாசித்துக்கொண்டே இருக்கிறேன். இந்த இணைய மொண்ணை என்னும் சொல்தான் எவ்வளவு அற்புதமானது என்று நினைத்து சிரிக்கவைக்கும் தருணங்கள் வந்துகொண்டே இருக்கும். இந்த இணைப்பைப் பாருங்கள்.

http://ramaniecuvellore.blogspot.com/2021/12/blog-post_52.html

எவனோ உங்களைப் பற்றி பகடியாக எழுதியதை அப்படியே நம்பி இந்த தோழர் கொதித்திருக்கிறார். படித்தால் எந்த அசடுக்கும் இது பகடி என தெரியும். இவர்களுக்கு புரிவதில்லை.

இவ்வளவுதான் அறிவுத்திறன். எல்லா விஷயத்திலும் இப்படித்தான் புரிந்துகொள்கிறார்கள். கொந்தளிக்கிறார்கள். எதையுமே வாசிப்பதில்லை. கொஞ்சம்கூட புரிந்துகொள்வதில்லை. இதுகூட வாட்ஸப்பில் எனக்கு இன்னொரு தோழரால் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.

ஆர்.ரவிக்குமார்

அன்புள்ள ஜெ,

இணையத்தில் போப்பு என்பவர் அரைவேக்காட்டுத்தனமாக உங்களைப் பற்றிய ஸ்பூஃப் ஒன்றை எழுதியிருந்தார். அதை அப்படியே நீங்கள் உண்மையாகவே எழுதியதாக எடுத்துக்கொண்டு பகிர்ந்து பலர் கொந்தளிக்கிறார்கள். அந்த பதிவுகளுக்கு பலர் கடுமையான எதிர்வினைகளைப் போடுகிறார்கள். அதில் பலபேர் எழுத்தாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள். புத்தகங்கள் வெளியிட்டவர்களும் உண்டு. [வினாயக முருகன் : https://www.facebook.com/photo/?fbid=4530217287013862&set=a.146914078677560

அந்த வரிகளைப் படித்தாலே அது வேண்டுமென்றே அபத்தமாக தோன்றும்படி  எவராலோ எழுதப்பட்டது என்று தெரியும். இவர்களுக்கு அதுகூட புரியவில்லை இவர்களின் அறிவுத்தரம்தான் என்ன? இவர்கள்தான் இங்கே கருத்துக்களத்தில் நிறைந்திருப்பவர்கள் என்றால் இங்கே அடிப்படை அறிவுள்ளவர்களுக்கு என்னதான் இடம்?

அர்விந்த்

அன்புள்ள ரவி ,அர்விந்த்,

இது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. ஓர் எழுத்தாளரை கொஞ்சம் வாசிப்பவர்களுக்கே அவர் என்ன எழுதுவார், எப்படி எழுதுவார் என தெரிந்திருக்கும். இவர்கள் ஒற்றைவரிகளை மட்டுமே வாசிப்பவர்கள். ஆகவே எதுவுமே தெரியாது. விளைவாக தங்களைப் போன்ற மொண்ணைகள்தான் பிறரும் என ஆத்மார்த்தமாக நம்புகிறார்கள். என் வரி என இதைப்போல எதையாவது எவராவது எடுத்துப்போட, எழுத்தாளர்கள் என்னும் பாவலா கொண்டவர்கள்கூட பாய்ந்து குமுறுவதை முன்னரும் கண்டிருக்கிறேன். பரிதாபம்தான்.

ஜெ

அன்புள்ள ஜெ

இணையத்தில் உங்களைப்பற்றிய வம்புகளை எழுதுபவர்களைப் பார்க்கிறேன். பெரும்பாலானவர்களுக்கு எதையும் மிகமிக எளிமையாகக்கூட புரிந்துகொள்ளும் திறன் இல்லை. நான் ஆரம்பத்தில் விஷமத்தனமாகப் பேசுகிறார்கள் என நினைத்தேன். ஆனால் சமீபத்தில் ஒருவர் யானை டாக்டர் கதையில் அந்த காட்டிலாகா அதிகாரி நீங்கள்தான் என எடுத்துக்கொண்டு பேசித்தள்ளினார். காட்டிலாகா ஊழல்களை பற்றி நீங்கள் ஏன் எழுதவில்லை என்பது கேள்வி. அப்போதுதான் புரிந்தது, அவ்வளவுதான் மண்டை என்று.

இவர்கள் ஒரு முற்போக்குப் பாவனையை கொள்கிறார்கள். சாதி ஒழிப்பு, மத எதிர்ப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற சிலவற்றை பேசுகிறார்கள். எல்லாவற்றையும் அந்த ஒன்றாம்பாடத்திற்குள் கொண்டுவந்து பேசுகிறார்கள். அவர்கள் வரை உங்கள் உதிரிவரிகள் சென்று சேரநேர்ந்ததுதான் இணையம் நமக்கு உருவாக்கிய மிகப்பெரிய தீங்கு

பரிதி

அன்புள்ள பரிதி,

இன்றைய சூழல் இதற்கு முன் இல்லாத ஒன்று. ஒரு கருத்தை புரிந்துகொள்ளும் திறனோ ஆர்வமோ இல்லாதவர்களிடம் அக்கருத்து சென்று சேர்கிறது. அது திரிபடைகிறது. அந்த திரிபைக் கண்டு அரைவேக்காடுகள் கொந்தளிக்கின்றன. ஆனால் அசல் கருத்தைச் சொன்னவன் அந்த திரிபுக்கான பொறுப்பை ஏற்கவேண்டும் என்கின்றன. இச்சூழல் ஒரு தலைமுறைக்காலம் நீடிக்கும். அதன்பின் இயல்பாக மானுடம் வழி கண்டுகொள்ளும்.

ஜெ

வசைபாடிகள் நடுவே – ஒரு கடிதம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 06, 2021 10:31

December 5, 2021

இருளர்களுக்காக…

ஆசிரியருக்கு வணக்கம்,

கடந்த மூன்று மாதங்களாக தமிழகம் முழுவதும் தொடர் மழை பெரும்பாலான இடங்களில் வெள்ள பெருக்கும் மழையால் சேதமும் . சிதம்பரம் கிள்ளை அருகே மானம்பாடி யில்  26 இருளர் குடும்பங்கள் உள்ளனர். அவர்களின் வாழ்வை மேம்படுத்த  பூராசாமி என்பவர் தன்னை அர்பணித்து கொண்டார்.

அவர் மூலமாக எங்கள் கிளப் டென் அறக்கட்டளை சார்பாக சில உதவிகள் செய்யும் வாய்ப்பு கிட்டியது.

அந்த இருளர் மக்கள் வயிற்று பசிக்காக அங்குள்ள ஏரியில் தூண்டில் மூலம் மீன்பிடித்து விற்க முயன்றபோது  அவர்களின் கை பட்ட மீனை யாரும் வாங்க வில்லை.இரு ஆண்டுகளுக்கு முன் கிளப்டென் நிர்வாகி தாமரை செல்வி அங்கு நேரில் சென்று அம்மக்களுக்கு மீன் பிடி வலைகள் வாங்கி கொடுத்தார்.

அதன் பின் அந்த குடும்பங்கள் கொஞ்சம் பசியின்றி வாழ்ந்து வந்த நிலையில் தற்போது பெய்யும் பெருமழையில்  தார்பாய் கூரையாகவும், சுற்று சுவராகவும் உள்ள சிறு குடிசைகளில் வெள்ளம் புகுந்தால் அமரவோ,படுக்கவோ முடியாமல் நீரில் ஈர உடைகளுடன்  பிஞ்சு குழந்தைகள் உட்பட மூன்று நாட்கள் உணவில்லாமல் இருந்ததை கண்டு அவர்களின் பசியை போக்க உடனடியாக  அந்த இருபத்தியாரு குடும்பங்களுக்கும் 500₹ மதிப்பில் மளிகை பொருட்கள் வழங்கினோம்.

இரு ஆண்டுகளுக்கு முன் அவர்களுக்கு  கொடுத்த மீன் பிடி வலைகள் சேதமடைந்து உபயோகபடுத்த முடியாமல் போயிற்று. நன்கொடைகளை பெற்று மூன்று கட்டங்களாக புதிதாய் 15 மீன் பிடி வலைகள் வாங்கி கொடுத்தோம்.

இதற்கு  என்னை நன்கறிந்த நமது விஷ்ணுபுர  நண்பர்களே  பொருளுதவி செய்தனர்.

மேலும் அவர்களுக்கு சொந்தமாக நிலம் இருந்தால் அரசு மூலம் வீடுகள் கட்டி கொடுக்க முடியும் என நண்பர் பூராசாமி சொல்கிறார்.

2 சென்ட் நிலம் 50000₹(ஐம்தாயிரம்) தில் கிடைக்கும். பூராசாமியும், கிளப் டென் அறக்கட்டளையும்  அந்த இருளர் குடும்பங் களுக்கு கான்கிரீட் வீடுகள்  கட்டி கொடுக்க பெருமுயற்சி செய்து ஒரு வீடு கட்ட தேவைப்படும் இரண்டு சென்ட் நிலத்திற்கான  50000 ₹ கொடுத்து உதவும் பயனாளர்களை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் .

(கிளப் டென்க்காக)

ஷாகுல் ஹமீது

தொடர்புக்கு – பூராசாமி 95669 74061

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 05, 2021 18:37

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.