Jeyamohan's Blog, page 873

December 2, 2021

அழகென அமைவது – சுசித்ரா

அழகிலமைதல்

அன்புள்ள ஜெ,

ஒரு வினோத இணைவாக அமைந்த சம்பவத்தைப்பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது. நேற்று காலை வேறெதோ ஒரு நினைப்பில் புத்தக அலமாரியில் தோண்டி நடராஜ குருவின் சௌந்தரியலகரி உரையின் புத்தகத்தை எடுத்தேன். அந்த புத்தகம் என்னிடம் ஒரு பத்து வருட காலமாக இருக்கிறது. நான் பிட்ஸ்பர்கில் இருந்தபோது என்னுடைய அறைத்தோழி சாலினி எனக்கு பரிசாக அளித்தது.

சாலினி அப்போது என்னைப்போலவே ஆய்வுமாணவி. எனக்கு மிகமிக பிரியமான தோழியும் கூட. கேரளப்பெண். சகலவிதமான ஆன்மீக மார்கங்களிலும் மாற்று வாழ்க்கைமுறைகளிலும் அவளுக்கு ஆர்வம் இருந்தது. ரெய்கி, மாற்று உணவு, மாற்று மருந்து என்று எல்லாவற்றையும் செய்தும் பார்ப்பாள்.  எந்த புதிய விபாசன தியான ஜப முறையை பற்றி அறிந்துகொண்டாலும் போய் உடனே கற்றுக்கொண்டுவந்து காலை நான்குமணிக்கெல்லாம் எழுந்து விளக்கேற்றி ஊதுபத்தி கமழக்கமழ பயிற்சிக்கு உட்கார்ந்துவிடுவாள். ஆன்மீகப்புத்தகங்கள் மட்டும் தான் படிப்பாள், சகட்டுமேனிக்கு.  ஒரே சமயம் ஶ்ரீஶ்ரீரவிசங்கரையும் ஶ்ரீராமகிருஷ்ணரையும் அருணாசல ரமணரையும் அரவிந்தரையும் பின்தொடர்ந்தாள். நாராயண குருவின் பெயரை முதன்முதலாக அவள் வழியாகத்தான் கேள்விப்பட்டேன்.

அவள் மேல் எனக்கு அநேக பிரியம் என்றாலும் அவளுடைய நானாவித முயற்சிகளையும் உள்ளூர ஒரு சின்ன புன்னகையோடு தான் நான் பார்ப்பேன். ஏனென்றால் அப்போது எனக்கு நான் ஒரு தர்க்கபுத்திக்கொண்ட, அறிவியல் பிடிப்புக்கொண்ட, ரேஷனலான ஆள் என்ற நினைப்பு. கல்வி என்பது படிப்படியாக ஆராய்ந்து அடையவேண்டிய ஒன்று என்று நான் நினைத்தேன். அவளுக்கும் அதே போல் என் மீது ஒரு ஓரக்கண் விமர்சனம் உண்டு. எல்லாத்தையும் கேள்வி கேட்கும் என்னுடைய பண்பு, பொதுவான ஒழுங்கின்மை, இலக்கியம் படிப்பதன் தொற்றாக வரும் irreverence, எல்லாமே அவளுக்கு உவப்பில்லாததாக இருந்திருக்கலாம். இந்த வித்தியாசங்களையும் மீறி நாங்கள் பிரியமான நண்பர்களாக நீடிக்க எங்களுக்குள் ஏதோ இணைவு இருந்திருக்கவேண்டும்

அவளுடைய புத்தகக்கட்டில் தான் நடராஜ குருவின் சௌந்தர்யலகரியை பார்த்தேன். எடுத்து பக்கங்களை திருப்பினேன். முன்னுறையை படித்தேன். வியந்தேன். ஏதோ அரிதான நிலக்காட்சிக்குள் நுழைந்ததுபோல இருந்தது.

சாலினியிடம் “என்ன புத்தகம் இது” என்று கேட்டேன். “சும்மா வாங்கினேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நீ வேண்டுமென்றால் வைத்துக்கொள். என் பரிசு,” என்றாள். சரி, என்று கொண்டு போனேன்.

சௌந்தர்யலகரி எனக்கு பரிச்சயம் உண்டு. அது அம்மா தினமும் பாராயணம் செய்யும் நூல்களில் ஒன்று. அம்மாவின் பிரதியின் முதற்பக்கத்தில் தேவியின் மிக அழகான கருப்புவெள்ளை பென்சில் ஓவியம் ஒன்று இருக்கும். பார்த்துப்பார்த்து பழுப்பேறிப்போன தாளில் பெரிய கண்களுடன், பூரணமாக நிறைந்து வழிவது போல அழகுடன் இருப்பாள். கேட்டுக்கேட்டு அதில் பல சுலோகங்கள் எனக்கு மனனமாகத் தெரியும். அதன் அழகான சந்தம் எனக்கு எப்போதுமே பிடிக்கும். காலில் கொலுசு கட்டிய பெண்குழந்தை முதலில் சில அடிகளை மெல்லமாக எடுத்து வைத்து பிறகு கிணுகிணுவென்று வேகமாக ஓடுவது போன்ற வரிகள். பிறகு அர்த்தம் படித்து வாசித்தபோது நுணுக்கமான கவிதை என்று புரிந்தது.  ஶ்ரீசக்ரமும் தெரிந்த உருவம். அம்மா பூஜைக்கு முன்னால் கரைத்த அரிசிமாவில் கோலமாக ஒவ்வொருநாளும் வரைவது ஶ்ரீசக்ரத்தை தான். பிந்துவில் ஒரு அரளிப்பூவோ பாரிஜாதமோ வைப்பார். பதினைந்து பதினாறு வயதில் நானும் அதைப் போடக் கற்றுக்கொண்டேன். இப்போதும் கண்ணை மூடிக்கொண்டு வரைவேன்.

அம்மாவுடைய சௌந்தரியலகரி பிரதியில் யந்திரங்களின் சிறிய படங்களுடன் ‘பலன்களும்’ போட்டிருக்கும். சில பலன்கள் மிக சுவாரஸ்யமாக இருக்கும். ‘இந்த யந்திரத்தை வரைந்து இந்த சுலோகத்தை 45 நாட்களுக்கு 1008 உருப்படி போட்டு தயிரும் தேங்காயும் நைவேத்தியம் செய்தால் எதிரிகளை வெல்லலாம். பேய்களை ஓட்டலாம். குழந்தைகளுக்கு குடல்நோய் தீரும்’. இப்படி. முரட்டுத்தனமான பெண் அடங்கிப்போவதற்குக்கூட சுலோகம் உண்டு.  குப்புறப்படுத்துக்கொண்டு பல்லிவிழும் பலன் படிப்பதுபோல ஆர்வத்தோடு படிப்பேன்.

அப்படி இருக்க, நடராஜ குருவின் உரைநூலைக் கண்டபோது, அதன் முகப்பில் கூறப்பட்டவை நான் முற்றிலும் கேள்விப்படாத தளத்தில் இருந்தன. நான் படித்த எந்த ஆன்மீக புத்தகம் போலவும் அது இல்லை. தத்துவம் மாதிரி இருந்தது. ஆனால் வாசிக்கையில் ஒரு கட்டத்துக்கு மேல் ஒன்றுமே புரியவில்லை. Protolinguistic என்றால் என்ன, structural approach என்றால் எதைச் சொல்கிறார், யந்திரங்களைப்போல் அவர் புத்தகம் முழுவதும் வரைந்துவைத்திருந்த கட்டங்களுக்கு என்ன அர்த்தம், ஒன்றுமே புரியவில்லை. அந்த இடத்தில் கல் சுவரென நின்றுவிட்டேன். அந்த ஆசிரியர் கண்டுவிட்ட முக்கியமான எதையோ எனக்குக் கண்டுகொள்ள கண் இல்லாமல் குருடாக இருக்கிறேனே என்று மட்டும் புரிந்தது. அந்த இயலாமை உணர்வின் வெறுமை வந்து சூழ்ந்தது.  ரோஜர் பென்ரோசின் ‘The emperor’s new mind’ என்ற புத்தகத்தை கல்லூரியில் இருந்தபோது எங்கேயோ பார்த்து வாங்கி கொஞ்ச தூரம் படித்த்திருந்தேன். ஒரு கட்டத்துக்கு மேல் புரியவில்லை. ஆனால் புரிந்ததுவரை என்னை பயங்கரமாக தூண்டிவிட்டிருந்த நூல். எனக்கு நரம்பியலில் ஆர்வம் வர அந்த புத்தகம் ஒரு காரணம். இதை புரட்டியபோது அதே உணர்வு ஏற்பட்டது. அதே பரபரப்பு, அதே நிலைகொள்ளாமை, புரியவில்லையே என்று கைப்பிழியும் அதே இயலாமை.

அந்த நாட்களில் தான் எனக்கு அறிவியலின் எல்லைகள் கொஞ்சம் கொஞ்சமாக தெரியவர ஆரம்பித்திருந்தன. மனம் தத்துவத்தை நோக்கி திரும்பிக்கொண்டிருந்தது. மதமும் ஆன்மீகமும் கூட மனத்தோடும் தத்துவத்தோடும் எங்கோ சென்று இணைந்தாகவேண்டும் என்று புரியத் தொடங்கியிருந்தது. ஆனால் இதையெல்லாம் எப்படிப் புரிந்துகொள்வது, எங்கிருந்து தொடங்குவது, யாரிடம் கேட்பது என்று ஒன்றும் புரியாமல் இருந்த நாட்கள். இந்தப்புத்தகம் அந்த உலகத்துக்குள் இருந்ததாகத் தோன்றியது. ஆனால் கல்லால் வாயில் அடைத்த குகை மாதிரி இருந்தது.

சாலினியிடம் வாங்கிய பிறகு பல முறை அந்த புத்தகத்தை பிரித்துப் படிக்க முயற்சித்திருக்கிறேன். ஆனால் புரிதலில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

பிறகு காலம் கடந்தது. சாலினியின் தொடர்பு விட்டுப்போனது. அவள் இப்போது என்னென்ன பரிசோதனைகளில் இருக்கிறாள் என்று தெரியவில்லை. நான் இலக்கியம்  பழகிக்கொள்ள ஆரம்பித்தேன். என்னை  பழகிக்கொள்ள ஆரம்பித்தேன். உங்களை சந்தித்தேன். உங்கள் மூலம் இந்தப்பாடல்களை கவிதைகளாக எப்படி வாசித்து விரித்துக்கொள்ளலாம் என்று கற்றுக்கொண்டேன். அதன் வழியாக தொட்டுத்தொட்டு இந்த பாடல்களில் இருந்துகொண்டிருக்கிறேன். மேலும் என்னைச் சுற்றியுள்ள உலகைக்காண ஆரம்பித்தேன். என்னுள் சிறு வயது முதலாக உறங்கிக்கிடந்த சிவனும் சக்தியுமான வடிவங்கள் உருக்கொள்ளத்தொடங்கியது. முற்றிலும் உணர்வுரீதியான அனுபவங்கள். அந்த அனுபவங்களை என்னால் புரிந்து சொல்ல முடியவில்லை. எந்த ரேஷனலான பரிசீலனையாலும் விளக்கமுடியவில்லை. அதே நேரம் அதை மத உணர்வு என்று சொல்ல முடியவில்லை. விழிப்பு என்று வேண்டுமென்றால் சொல்லலாம். மேலும் கண் திறந்து பார்க்கிறேன். மேலும் ஒளி உள்ளே வருகிறது.

இப்போது நடராஜ குருவின் உரையில் அவர் உபயோகிக்கும் முறைமைகள் – முரணியக்க தர்க்கம், structuralism, முதலியவை அவர் எங்கிருந்து எதை உத்தேசித்து எப்படிக் கையாள்கிறார் என்று புரிகிறது. நித்ய சைதன்ய யதியின் சிந்தனைகளை உங்கள் வழியாக அறிந்ததன் விளைவான ஞானம் இது. அந்த சிந்தனை முறைக்குள் இப்போதுதான் வந்திருக்கிறேன்.

ஆனால் தர்க்கம் ஓரளவுக்கு பிடி கிடைத்தாலும் அவர் உணர்வுகள், அவர் நின்று பேசும் இடம், என்னால் அங்கே போக முடியவில்லை. அவர் சட்டகம் சட்டகமாக போடும் தர்க்க அமைப்புக்கும், அவர் பாடல் மொழியாக்கத்திலும் உரையிலும் காணக்கிடைக்கும் பரவசத்துக்கான உறவையும் என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

ஜன்னலுக்கு வெளியே பார்த்தால் தீப்பிடித்தது போல மரங்களெல்லாம் நின்றுகொண்டிருக்கின்றன. ஒளியில் பொன்னும் மாணிக்கமும் பூண்டு நிற்கின்றன. ஒவ்வொரு இலையும் ஒளிசூடி ஒளிசூடி பூமியில் சுழன்று வந்து விழுகிறது. கிழே சருகுக்குவியல். எனக்குள் அம்மா சொல்லிச்சொல்லிக் கேட்ட அந்த பழைய வரிகள் சந்தமாக ஓடுகின்றன. கிண்கிண்ணென்று மணிகளைப் போன்ற ஒலியுடைய சொற்கள். கோடு வரைந்து தர்க்கம் போட முடியுமா இந்த உலகத்தில்? போட்டாலும் எரிந்து உருகும் இந்த உலகத்தில் வைத்து அதை பார்க்கமுடியுமா? பார்த்துவிட்டால் உலகத்தில் பிறகு இருக்க முடியுமா? காட்சியையும் தர்க்கத்தையும் ஒருசேர மீற முடியுமா என்ன?

நேற்று காலை சாலினி எனக்கு அளித்த நடராஜ குருவின் சௌந்தரியலகரி உரையை எடுத்துப் பார்தேன். தற்செயல் தான். அப்போது, திறந்ததும், முதல் பக்கத்தில் அவள் பென்சிலில் எழுதிவைத்திருந்த மலையாள வரிகள் என் கண்ணில் பட்டன. பல முறை கண்டும் அதை குறித்து எனக்கு ஆர்வம் எழுந்ததில்லை. நேற்று அந்த வரிகள் என்ன என்று தோன்ற அதைத் தேடினேன்.

அவை நாராயண குருவின் வரிகள். ஜனனி நவரத்ன ஸ்தோத்ரம் என்ற பதிகத்திலிருந்து

மீனாயதும் பவதி மானாயதும் ஜனனி
நீ நாகவும் நகககம்
தானாயதும் தர நதீ நாரியும் நரனு
மா நாகவும் நரகவும்
நீ நாமரூபமதில் நானாவிதப்ரக்ருதி
மானாயி நின்னறியுமீ
ஞானாயதும் பவதி ஹே நாதரூபிணி-
அஹோ! நாடகம் நிகிலவும்.

இந்தப்பாடலை எனது எல்லைக்குட்பட்டு மொழியாக்கம் செய்திருக்கிறேன்.

மீனாகவும் மானாகவும் உள்ள தாயே
நீயே பாம்பாகவும் பருந்தாகவும்
நிலமாகவும் நதியாகவும்
பெண்ணாகவும் ஆணாகவும்
சுவர்க்கமாகவும் நரகமாகவும்

இருக்கின்றாய்
உன் பெயருருவத்தில் இங்குள்ள எல்லா படைப்புமாகிறாய்

ஹே நாதவடிவானவளே,
உன்னை அறியும் நானாவும் ஆகிறாய்… அகோ!

என்ன ஆச்சரியம்! எல்லாம் நாடகம்.

இந்தப்பாடலில் ‘அகோ’ என்ற சொல் நேற்று முழுவதும் என்னை பின்தொடர்ந்து வந்தது. இரவில் உங்கள் தளத்தில் ‘அழகிலமைதல்’ என்ற கட்டுரையை வாசித்தேன்.

 

அன்புடன்,

சுசித்ரா

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 02, 2021 10:33

அதிமதுரம்

அன்பு ஜெ,

இன்று வெண்முரசு நீர்ச்சுடரின் 31ம் அத்தியாயம் வாசித்துக் கொண்டிருக்கும்போது, அதிமதுரம் பற்றிய தங்களின் சித்தரிப்பு அபாரமாக இருந்தது. நான் அதுவரை அதிமதுரத்தைச் சுவைத்தது இல்லை. நீர்க்கடனில் அதிமதுரம் உண்ட யுதிஷ்டிரன், சகதேவன், மற்றவர்கள் பற்றிய தங்களின் வர்ணனை மிகவும் என்னை ஈர்த்துவிட்டது. அத்தியாயத்தை முழுமையாகக்கூட வாசிக்காமல் அந்தப் பகுதியை மட்டும் வாசித்து விட்டு உடனே அதைச் சுவைத்துப்பார்த்துவிட வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட, உடனே அதை செயல்படுத்தியும் விட்டேன்.

நல்லவேலையாக நாட்டுமருந்து கடை எங்கள் இல்லத்திற்கு மிக அருகில்தான் இருக்கிறது. இருபது ரூபாய்க்கு மூன்று சிறு துண்டுகள் மட்டுமே கொடுத்தார்கள். கிடைத்தவரை சந்தோஷம் என்று அதிமதுரத்தை வாங்கி சுவை பார்த்துவிட்டேன். ச்சே!  இத்தனை நாட்களாக இப்படி ஒரு சுவையை இழந்ததுவிட்டேன்!  என்ற வருத்தம்தான் முதலில் ஏற்பட்டது. என்ன ஒரு இனிப்பு, அப்படி ஒரு இனிப்பை உடலின் உள்ளிருந்து சுரக்கும் ஒரு இனிப்பை எந்த இனிப்பிலுமே நான் சுவைத்தது இல்லை. இனிப்புகள் பொதுவாகவே நாக்கிலேயே தங்கிவிடுபவை உள்ளிருந்து அதன் சுவையை நம்மால் அறியமுடிவதில்லை. மற்ற சுவைபொருட்களான காரம், கசப்பு, துவர்ப்பு ஆகியவை அவ்வாறில்லை. அதனால்தான் இனிப்பு எவ்வளவு உண்டாலும் நமக்குப் போதவில்லைபோலும்.

ஆனால் அதிமதுரமோ அவ்வாறில்லை சுவைக்கும்போது கொஞ்சம்போல துவர்ப்பு தெரிந்தது நன்றாக அந்த வேரை மென்று முழுங்கிய ஓரிரு நிமிடங்களில் உள்ளிருந்து நாக்கிற்கு வந்த இனிமையை நன்றாக உணர முடிந்தது. சற்று நேரத்திலேயே நாக்கிலிருந்து உதடுகளில் இனிப்பை உணர முடிந்தது. சுவைக்க சுவைக்க மீண்டும் மீண்டும் ஊறி வந்துக்கொண்டிருப்பது போன்று…. மிக மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் குழந்தையாக மாறி நன்றாக சப்புக்கொட்டினேன் எனலாம். பொதுவாகவே இனிப்பு மீது எனக்கு அவ்வளவு ஆர்வம் இருப்பதில்லை. மிகவும் தேர்ந்தெடுத்த இனிப்பு வகைகளை மட்டுமே சாப்பிடும் பழக்கம் கொண்டவன். எனக்கே அதிமதுரம் இவ்வளவு பிடித்திருக்கிறது என்றால் இனிப்புப் பிரியர்களுக்கு கேட்கவே வேண்டாம்.

இந்த இனிப்பு ஊற ஊற மீண்டும் நீங்கள் விவரித்த அதிமுதரத்தின் பகுதியை வாசிக்க ஆரம்பித்தேன். சுவை தெரியாமல் வாசிப்பதற்கும் சுவை தெரிந்து அந்தச் சுவையுடன் அதை வாசிப்பதற்கும் ஆஹா அப்படியே முக்தவனத்தில் இருப்பது போன்றே உணர்ந்தேன். நீங்கள் எழுத்தில்கொண்டுவந்த அதிமதுரத்தின் இனிப்பு என் உடலிலிருந்து ஊறி சுவைக்க சுவைக்க வாசித்துச் சுவைத்தேன் எனலாம். அதிமதுரத்துடன் இன்றைய நாள் மிக அருமையாக உள்ளது.

அன்புடன்

ரா. பாலசுந்தர்

 

நீர்ச்சுடர் வாசிப்பு முனைவர் ப சரவணன்

நீர்ச்சுடர் – அவல நகைச்சுவை

வகுத்துரைத்தல்

வெண்முரசு நிறைவில்

காகங்கள்

நீர்ச்சுடர் – இறந்தோரை இல்லாதாக்குவது.

நீர்ச்சுடர் – பாண்டவர்களை மீட்ட திருதராஷ்டிரர்

நீர்சுடர் ஒளியில்

நீர்ச்சுடர் – தாயின் வஞ்சினம்

உச்சம்

நீர்ச்சுடர்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 02, 2021 10:30

December 1, 2021

இலக்கியத்தை விலைபேசுதல்…

சென்ற சில நாட்களில் இந்த குறிப்பை பார்க்க நேர்ந்தது, கு.ப.ரா கதைகளை இணையத்தில் ஏற்றுவதைப்பற்றியது. பெருமாள் முருகன் இவ்வாறு எழுதுகிறார்.

எதற்கு எழுத வேண்டும்? (கு.ப.ரா. கதைகள் பதிப்பு குறித்து)

கு.ப.ராஜகோபாலன் (கு.ப.ரா.) சிறுகதைகள் தொகுப்பை 2012ஆம் ஆண்டு வெளியிட்டேன். அத்தொகுப்பை உருவாக்குவதற்குப் பத்தாண்டுகள் செலவழித்தேன். ரோஜா முத்தையா நூலகம், உ.வே.சா. நினைவு நூலகம், மறைமலையடிகள் நூலகம், ஞானாலயா நூலகம் எனப் பலவற்றுக்கும் சென்று பழைய இதழ்களைத் தேடிக் கண்டடைந்து அவற்றைப் பக்கம் பக்கமாகப் புரட்டி வாசித்துக் கு.ப.ரா.வின் கதைகளைத் திரட்டினேன். அவர் காலத்தில் வெளியான தொகுப்புகளையும் மறைவுக்குப் பிறகு வெளியிடப்பட்ட நூல்களையும் அரிதின் முயன்று சேகரித்து ஒப்பிட்டுப் பார்த்தேன்.

இடைப்பட்ட காலத்தில் அ.சதீஷ் ‘கு.ப.ரா. கதைகள்’ என்னும் தொகுப்பை வெளியிட்டார். அத்தொகுப்பிலும் பல குறைபாடுகள் இருந்தன. பத்திரிகைகளில் இருந்து சேகரித்த கதைகள், நூல்களின் முதல் பதிப்புகள், இறப்புக்குப் பிறகு வெளிவந்த நூல் பதிப்புகள், அ.சதீஷ் பதிப்பு ஆகிய அனைத்தையும் ஒப்பிட்டுக் கு.ப.ரா. கதைகளில் நேர்ந்திருந்த குழப்பங்களை எல்லாம் போக்கிக் கதைகளின் காலவரிசையை ஒருவாறாகத் தயாரித்தேன். நூலின் முன்பகுதி, பின்னிணைப்பு ஆகியவற்றை உருவாக்கப் பட்ட பாடு பெரிது. இவையெல்லாம் இன்று சொல்லும் போது சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் இந்த வேலைகளுக்குச் செலவளித்த காலம் என் ஆயுளில் கணிசமானது.

இன்று ஒருவர் என் பதிப்பை அடியொற்றிக் ‘கு.ப.ரா. கதைகள்’ என்னும் மின்னூலை உருவாக்கி இணையத்தில் இலவசமாக வழங்குகிறார். ஓரிரு நாளுக்குப் பிறகு விலை வைத்து விற்கக்கூடும். என் பதிப்புரை, முன்னுரைகளை நீக்கிவிட்டுக் க.நா.சு., ந.பிச்சமூர்த்தி ஆகியோர் கட்டுரைகளைச் சேர்த்திருக்கிறார். நூலின் அட்டையைப் போலி செய்திருக்கிறார். கதைகளின் மூலபாடமும் காலவரிசையும் என் பதிப்பில் உள்ளவையே. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நண்பர் கல்யாணராமன் வழியாகக் கண்டடைந்த கு.ப.ரா.வின் ‘வேறு நினைப்பு’ என்னும் புதிய கதை ஒன்றைக் காலச்சுவடு இதழில் வெளியிட்டேன். அக்கதையையும் எடுத்துச் சேர்த்துக் கொண்டார். என் பதிப்புக்கும் காலச்சுவடுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதை ‘அறிவுத் திருட்டு’ என்று நான் கருதுகிறேன். இல்லை, கு.ப.ரா.வின் கதைகளுக்கு நீங்கள் எப்படி உரிமை கொண்டாட முடியும் என்று அவர் கேட்கிறார்.

பிற நூல்களுக்கும் என் பதிப்புக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு கதைகளின் மூலபாடம். ‘கனகாம்பரம்’ தொகுப்பின் முதல் பதிப்பு என்னைத் தவிர வேறு யாருக்கும் இதுவரை கிடைக்கவில்லை. அத்தொகுப்பின் மூலபாடத்தை ஆதாரமாகக் கொண்டிருக்கிறேன். அதே போல நான் பார்த்துச் சேகரித்த புதிய கதைகள் நூலில் உள்ளன. என் பதிப்புக்கென உருவாக்கிய காலவரிசை பிற பதிப்புகளில் இல்லை. தலைப்பகராதியைப் பின்னிணைப்பில் கொண்டதும் என் பதிப்புத்தான். இவ்வளவையும் அப்படியே பயன் கொண்டிருக்கும் மின்னூல் பதிப்பாளர்  ‘எதற்கும் நீங்கள் உரிமை கொண்டாட முடியாது’ என்று சட்டம் பேசுகிறார். சட்டம் அவருக்குச் சாதகமாக இருக்கலாம். பதிப்பு அறம் என்று ஒன்று இருக்கிறதல்லவா? அதுவேனும் எனக்குச் சாதகமாக இருக்காதா?

பழைய எழுத்தாளர்களின் படைப்புகளைத் தேடித் தொகுத்துப் பிறருக்குத் தாரை வார்க்க வேண்டும் என்றால் எதற்குக் காலத்தையும் சிந்தனையையும் வீணாக்க வேண்டும்? சில நகாசு வேலைகள் செய்து ஒருவருடைய உழைப்பை இன்னொருவர் எளிதாகத் தமதாக்கிக் கொள்ள முடியுமானால் ஏன் உழைக்க வேண்டும்? இலவசமாகக் கிடைக்கிறதென்று புளகாங்கிதம் கொண்டு வாசகத் தரப்பு இதை ஆதரிக்குமானால் எதற்கு எழுத வேண்டும்? [பெருமாள் முருகன் கட்டுரை]

அதற்கு அந்நூலை பதிப்பித்த அழிசி சீனிவாசன் இவ்வாறு பதில் சொல்கிறார்.

மதிப்புக்குரிய பெருமாள்முருகன் அவர்களுக்கு,

வணக்கம். கு. ப. ராஜகோபாலன் படைப்புகள் நாட்டுடைமை ஆகிவிட்டவை. அவரது கதைகளை கிண்டிலில் பதிப்பித்து இலவமாக வழங்குவதை திருட்டு என்று சொல்வது ஏற்புடையதல்ல. நீங்களும் கு. ப. ரா. கதைகளைப் பதிப்பித்திருக்கிறீர்கள்.

அட்டைப்படம் உங்கள் பதிப்பினுடையதை நினைவூட்டும் வகையில் இருக்கிறதுதான். ஆனால், இந்தப் பதிப்பில் உள்ளது உங்கள் பதிப்பில் உள்ள அதே ஓவியத்தைத் திருடிக்கொண்டது அல்ல. முகப்பில் எழுத்துரு ஒற்றுமை உள்ளது. இப்படி ஒரே பாணியிலான எழுத்துரு கொண்ட முகப்புடன் வந்த வெவ்வேறு நூல்கள் ஏராளம். அது எப்படித் திருட்டாகும்? உங்கள் பதிப்பின் முகப்பைப்போல இருப்பதால் இந்தப் பதிப்பின் முகப்பு மாற்றப்படுவதை நீங்கள் விரும்பியிருந்தால் அதனைச் செய்திருக்கலாம். அட்டை ‘உட்பட’ என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். வேறு எதைச் சொல்லவருகிறீர்கள்?

உங்கள் பதிப்பில் உள்ள பதிப்புரையோ ஆய்வுரையோ இந்தப் பதிப்பில் இல்லை. கதை அமைப்பு காலவரிசையில் உங்கள் பதிப்பில் உள்ளதைப் போல இருக்கிறது. யார் காலவரிசைப்படுத்தினாலும் ஒரே வரிசை அமையக்கூடும். அது எப்படித் திருட்டாகிறது? இந்தப் பதிப்புக்கு வேறு சில நூல்களுடன் உங்கள் பதிப்பும் உதவியிருக்கிறது. அதற்காக நூலில் நன்றி தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உங்கள் பதிப்பில் நீங்கள் தவறவிட்டவை சிலவும் இந்தப் பதிப்பில் அடங்கியிருக்கின்றன. உங்கள் பதிப்பும் முந்தைய பதிப்பாசிரியர்களிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ளாமலே உருவான பதிப்பு அல்ல. அதனால் உங்கள் பதிப்பும் முந்திய பதிப்புகளிலிருந்து திருட்டப்பட்டது என்று சொல்லிவிடலாமா? உணர்ச்சிவயப்பட்டு ‘ஐயோ வென்று போக!’ என்கிறீர்கள்.

நாட்டுடைமையான கு. ப. ரா. சிறுகதைகளைப் பதிப்பித்தது ‘திருட்டு’ என்று அவதூறு பரப்பினார் ‘பதிப்புணர்வு மிக்க’ எழுத்தாளர் ஒருவர். இப்போது அமேசானுக்கு புகார் கொடுத்து கணக்கையும் முடக்கிவிட்டார்கள்.

ஏற்கெனவே நாட்டுடைமையான க. நா. சு. படைப்புகளுக்கு உரிமை கோரி கணக்கை முடக்கினார்கள். அதே கதை தொடர்கிறது. இந்த கு. ப. ரா. கதைகள் தொகுப்பு நண்பரின் கணக்கிலிருந்து பதிவேற்றப்பட்டது. பாவம், எனக்கு உதவப்போய் அவரது கணக்கில் இருந்த மற்ற நூல்களும் சேர்த்து அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டன. நாட்டுடைமையான எழுத்துகளை மின்னூலாக்கி இலவசமாக விநியோகித்ததெல்லாம் இப்படி திருட்டுப்பட்டம் கட்டிக்கொள்ளத்தான். [அழிசி ஸ்ரீனிவாசன் குறிப்பு]

*

 

இதிலுள்ள சங்கடமான சில விஷயங்களை முதலில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அழிசி ஸ்ரீனிவாசன் தமிழில் வழக்கொழிந்துபோன நூல்களை தேடித்தேடி இணையத்தில் பதிப்பிப்பவர். அது நிறுவனங்கள் செய்யவேண்டிய பெரும்பணி. அதை தனிமனிதனாகவே செய்கிறார். அந்நூல்கள் பெரும்பாலும் இலவசமாகவே வெளியிடப்படுகின்றன. அமேசான் நூல்களுக்கு இலவச விலையை ஒப்புவதில்லை. ஆகவே மிகக்குறைந்தபட்ச விலையாகிய ஐம்பது ரூபாய் பலசமயம் அந்நூல்களுக்கு வைக்கப்படுகிறது. அந்தத் தொகையும்கூட சம்பந்தப்பட்டவர்களின் வாரிசுகள் உயிருடனிருந்தால் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.இந்தப்பெரும்பணிக்காக அவருக்கு முகம் விருது வழங்கப்பட்டுள்ளது.

நாட்டுடைமையாக்கப்பட்ட படைப்பாளிகளின் படைப்புகளையும் அழிசி ஸ்ரீனிவாசன் வெளியிடுகிறார். நாட்டுடைமை என்றால் என்ன? ஓர் ஆசிரியரின் படைப்புக்கள் அவர்களின் வாரிசுகளுக்கு முழு உரிமைத்தொகையும் முன்னரே அளித்து அவர்களின் படைப்புகளை மக்களின் உரிமையாக ஆக்குவது. அவர்கள் அதை எவ்வகையிலும் வெளியிடலாம். வாரிசுகளோ பிறரோ அதற்கு உரிமை கொண்டாட முடியாது. அவ்வண்ணம் முன்னர் நாட்டுடைமை ஆக்கப்பட்ட க.நா.சுவின் படைப்புகளை அழிசி ஸ்ரீனிவாசன் வெளியிட்டபோது எவரோ ஒருவர் அமேசானுக்கு எழுதி அந்தக் கணக்கையே மூடிவிட்டார். அக்கணக்கில் அழிசி ஸ்ரீனிவாசன் வலையேற்றம் செய்திருந்த மொத்த நூல்களும் காணாமலாயின. நூல்வேட்டை

இப்போது நாட்டுடைமை ஆக்கப்பட்ட கு.ப.ராஜகோபாலனின் கதைகளை அழிசி ஸ்ரீனிவாசன் வலையேற்றம் செய்திருக்கிறார். இலவசநூலாக சிலநாட்களும் பின்னர் மிகக்குறைந்த விலையில் மீண்டும் அந்நூல் கிடைத்தது. அதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் பெருமாள் முருகன் அமேசானுக்கு எழுதி அக்கணக்கையும் முடக்கியிருக்கிறார். அக்கணக்கில் வலையேற்றம் செய்யப்பட்டிருந்த அத்தனை கிடைத்தற்கரிய நூல்களும் மறைந்துவிட்டன. சட்டப்பூசல்களை அமேசான் கண்காணிப்பதில்லை. ஆகவே அவை நாட்டுடைமையாக்கப்பட்டவை, எவருக்கும் சட்டபூர்வ உரிமை அற்றவை என்றெல்லாம் வாதிட வாய்ப்பே அளிப்பதில்லை.

பெருமாள் முருகன் செய்திருப்பது கீழ்த்தரமான செயல்பாடு. அறிவியக்கம் பற்றியோ, இலக்கியம் பற்றியோ எந்த ஆர்வமும் இல்லாத வெறும் எழுத்து வியாபாரியின் செயல். அக்கணக்கில் வந்திருந்த அரிய நூல்களை வெறுமே பார்த்திருந்தாலே அது எத்தனை பெரிய பணி என்பது புரிந்திருக்கும். ஆனால் அதற்கு இலக்கிய அறிவியக்கத்தில் அக்கறையோ பழக்கமோ வேண்டும். இங்கே, அழிசி ஸ்ரீனிவாசன் பெயரே பெருமாள் முருகனுக்கு தெரியவில்லை. அவரை திருட்டுப்பட்டம் கட்டி அவமதிக்கிறார்.

இலக்கியத்தை ஓர் அறிவுச்செயல்பாடாகப் பார்க்கும் தரப்புக்கும் இலக்கியத்தை விற்றுமுதல்- லாபம் மட்டுமாகப் பார்க்கும் பார்வைக்குமான முரண்பாடு இது. வாழ்க்கையை இலக்கியச்செயல்பாட்டுக்காக அளிக்க அழிசி ஸ்ரீனிவாசனுக்கு இருக்கும் தீவிரம் இலக்கியம் மீதான பற்று. பெருமாள் முருகனுக்கு அதன் ஒவ்வொரு சொல்லும் காசு. அது பேராசிரியர்களின் மனநிலை. சென்ற பல ஆண்டுகளாக பல்கலை மானியக்குழுவும் பிற அமைப்புகளும் கல்வித்துறை ஆய்வுகளுக்கு காசை அள்ளி வீசுகின்றன. அவற்றை பெறுவதற்காகப் பேராசிரியர்கள் போட்டியிடுகிறார்கள். அவற்றை பெற்று எழுதப்பட்ட நல்ல ஆய்வேடுகள் அரிதினும் அரிது. ஆனாலும் அவையெல்லாம் நூலாகிவிடுகின்றன. அந்த நூல்களை தவறாமல் அத்தனை கல்விநிலையங்களும் வாங்கும்படி அவர்களே செய்துகொள்கிறார்கள். நூலகங்களை நிரப்பி பதிப்புப்பணத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

இலக்கியத்தின்பொருட்டு மைய, மாநில அரசுகள் செலவிடும் மொத்தப்பணமும் பேராசிரியர்களுக்குச் சென்றுவிடுகிறது. இலக்கியம் முழுக்கமுழுக்க வாசகர்களின் நன்கொடையில், என்னைப்போன்றவர்களின் கைப்பணத்தில் நிகழும் செயல்பாடுதான் இங்கே. ஆனாலும் பேராசிரியர்களின் பணப்பித்து மேலும் மேலுமென வளர்கிறது. அது எப்போதும் அப்படித்தான். பணத்தை பார்த்துவிட்டால் அதன்பின் அது மட்டுமே கண்ணுக்குத்தெரிகிறது. பெருமாள் முருகனுடையது பணம் தின்று பசிகொண்ட பேராசிரியரின் பார்வை. அதற்கு இங்கே அறிவியக்கம் என ஒன்று உண்டு என்பதே கண்ணுக்குப் படாது.

இதன் சட்ட, நியாய விஷயங்களுக்கு வருகிறேன். பெருமாள் முருகன் கு.ப.ராவின் சில பழைய கதைகளை கண்டுபிடித்திருக்கிறார் என்று கொள்வோம். அது எப்படி பெருமாள் முருகனின் சொத்து ஆகும்? இனி எஞ்சிய காலமெல்லாம் அந்தக் கதைகளை பெருமாள் முருகனும் அவருடைய வாரிசுகளும் உரிமை கொண்டாடுவார்களா என்ன? என்ன அபத்தம் இது. அத்தனை படைப்பாளிகளுக்கும் அவ்வாறு புதிய கதைகள் கண்டடையப்படுகின்றன. அவையெல்லாம் கண்டடைந்தவர்களின் சொத்தா என்ன? நாளைக்கு என் கதையை எவரேனும் விகடனில் கண்டுபிடித்து என்னிடமே அவற்றுக்கு உரிமைகொண்டாட ஆரம்பிப்பார்களா?

புதுமைப்பித்தனின் அறியப்படாத கதைகளை வெவ்வேறு இதழ்களில் தேடி கண்டடைந்து அட்டவணையிட்டவர் வேத.சகாயகுமார். புதுமைப்பித்தன் புனைபெயர்களில் எழுதிய கதைகளை கண்டடைந்து அவை அவரால் எழுதப்பட்டவை என ஆதாரபூர்வமாக நிறுவியவர். ஆனால் அக்கதைகளை அப்படியே காலச்சுவடு செம்பதிப்பு நூலாக வெளியிட்டது. அக்கதைகளை தாங்களும் சொந்தமாக மீண்டும் ‘கண்டுபிடித்ததாக’ அதன் தொகுப்பாளர் சொன்னார். அதை ஆதரித்து நின்றவர் பெருமாள் முருகன். அன்று அந்த அநீதிக்கு எதிராகச் சொல்புதிது இதழ் கட்டுரைகள் வெளியிட்டது.

கு.பரா கதைகளை இன்று ஓர் ஆய்வாளர் பிழைநோக்கி, மூலத்துடன் ஒப்பிட்டு, செம்மை செய்து ஒரு பதிப்பு கொண்டுவருகிறார் என்று கொள்வோம். பிற பதிப்பாளர்கள் அந்த பதிப்புக்கு முந்தைய செம்மைசெய்யப்படாத பதிப்பையே வெளியிடவேண்டுமா என்ன? அதைப்போல அசட்டுத்தனமான அறிவியக்க எதிர்ப்புச் செயல்பாடு உண்டா என்ன? அடுத்த பதிப்புகள் அதுவரை செய்யப்பட்ட செம்மையாக்கத்தை உள்வாங்கி, மேலும் செம்மை செய்யப்பட்டே வெளிவரும். அடுத்தடுத்து செம்மையாக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.

இன்றைக்கு குறுந்தொகையை பதிப்பிப்பவர் உ.வெ.சாவை ஆதாரமாகக்கொண்டு மேலும் செம்மைசெய்து வெளியிடலாமே ஒழிய  அந்த பதிப்பு உவெசாவின் சொத்து என்று எடுத்துக் கொண்டு, அவருடைய பதிப்புக்கு முந்தைய  ஏட்டுச்சுவடியில் இருந்து தொடங்க முடியாது. உவேசாவின் வாரிசுகள் வந்து உவேசா செய்த பிழைதிருத்தங்கள் காரணமாக அந்தப்பதிப்பு அவர்களின் சொத்து என்றும் சொல்லமுடியாது. இங்குள்ள அத்தனை நூல்களும் மேலும் மேலும் முழுமை செய்யப்பட்டவையே. உலகம் முழுக்க அதுவே நடைமுறை. அதுதான் பதிப்பக அறம். அறிவியக்கத்தை தொடர்ந்து மேம்படுத்துவதே அதன் இலக்கு. அன்றி, சிலர் சில்லறை தேற்றுவதன் அடிப்படையில் அந்த அறம் அமைந்திருக்கவில்லை.மேற்கொண்டு ஆய்வுசெய்பவர்கள் தன் ஆய்வை பயன்படுத்திக்கொள்ளக்கூடாது, அது தன் சொத்து, தனக்கு முன்பிருந்த ஆய்வுகளையே ஒருவர் எடுத்துக்கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்று சொல்பவர் ஒரு கல்வியாளர் என்பதைப்போல வெட்கச்செய்வது வேறில்லை.

அவ்வண்ணம் மேலும் பதிப்புகள் வரும்போது அந்நூலின் பதிப்புவரலாற்றில் செம்மையாக்கம் செய்தவரின் பெயர் விடுபட்டிருக்கும் என்றால் அது பெரும்பிழை. அவருடைய உழைப்பு மறுக்கப்படுகிறது.ஆனால் புதுமைப்பித்தன் கதைகளுக்குச் செம்பதிப்பு வந்தபோது வேத சகாய குமாரின் பெயர் குதற்கமாகச் சொல்லப்பட்டதே ஒழிய அவருடைய பங்களிப்பு பதிவுசெய்யப்படவில்லை. [அவர் சில பிழைகள் செய்தவர் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டார்.] புதுமைப்பித்தன் கதைகளின் ஆய்வு வரலாற்றைச் சொல்லும்போது வேதசகாயகுமார் பெயர் விடப்படலாகாது. ஆனால் அக்கதைகள் மேல் வேதசகாயகுமாருக்கோ அவருடைய வாரிசுகளுக்கோ எந்த உரிமையும் இல்லை.

கு.ப.ரா கதைகள் பற்றி பெருமாள் முருகன் ஆய்வுக்குறிப்புகள் எழுதியிருந்தால், பதிப்புரை எழுதியிருந்தால் அது அவருடைய சொத்து. அதை அவரை குறிப்பிடாமல் இன்னொருவர் எடுத்தாண்டிருந்தால் அது பிழையானது. ஆனால் கு.ப.ரா பற்றிய தரவுகள் பெருமாள் முருகனால்  கண்டடையப்பட்டிருந்தால் அவற்றை பொதுவான அறிவுத்தளத்திற்கு உரியவையாகவே கருதவேண்டும். அவற்றை பெருமாள் முருகனின் சொத்துக்களாக கருதமுடியாது. அவற்றைப் பயன்படுத்தும்போது ஒவ்வொரு முறையும் அவர் பெயரைச் சொல்லவும் தேவையில்லை.

கு.ப.ரா பற்றிய பெருமாள் முருகனின் நூலே அறுதியாக வெளிவந்த பிழைநீக்கம் செய்யப்பட்ட படைப்பு என்றால் அதிலுள்ள அத்தனை கதைகளையும் மேலும் செம்மை செய்து பதிப்பிக்க அனைவருக்கும் சட்டரீதியான உரிமை உண்டு. எந்த வகையிலும் அதை பெருமாள் முருகன் உரிமைகோரவோ தடைசெய்யவோ முடியாது. அமேசானின் கவனமின்மையை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு இங்கே ஒட்டுமொத்த இலக்கிய இயக்கம் மீதும் தாக்குதல் தொடுத்திருக்கிறார் பெருமாள் முருகன்.

கு.ப.ரா மேல் குறைந்த பட்ச ஈடுபாடு கொண்டிருக்கும் ஒருவர் என்றால் இவ்வண்ணம் அவர் ஆக்கங்கள் பரவலாகச் சென்று சேர்வது பற்றி மகிழ்வே அடைந்திருப்பார். நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படுவதே இதற்காகத்தான். தன் பதிப்பை உள்வாங்கி மேலும் செம்மையான பதிப்புகள் வரவேண்டியதுண்டு என்றே எண்ணியிருப்பார். அதுவே இங்கே இலக்கிய இயக்கம் ஒன்று நிகழவேண்டும் என்று எண்ணுபவர்களின் இயல்பு.

பெருமாள் முருகனின் அறச்சீற்றம் எல்லாம் இத்தகைய சிற்றிதழாளர்களிடையே  மட்டுமே. காலச்சுவடு போன்ற நிறுவனங்கள் எழுத்தாளர்கள் மேல் போடும் பதிப்புரிமை ஒப்பந்தங்களை அவர் நன்கறிவார். அனைத்துக்கும் தலைவணங்கி நிற்பவர் அவர். காலச்சுவடு ஓர் ஆசிரியரின் நூல்களை வெளியிட்டால் அந்நூலின் எந்த மொழியாக்கத்திலும் பாதிப்பங்கு பதிப்புரிமையை தான் எடுத்துக்கொள்கிறது. எவர் மொழியாக்கம் செய்து செய்து எங்கு எவர் வெளியிட்டாலும். அந்த ஆசிரியரே ஏற்பாடு செய்து வெளியிட்டாலும் விசாரித்து, அந்த மாற்று மொழி பதிப்பகத்துக்கு எழுதி, பதிப்புரிமையை தான் வாங்கி பாதியை ஆசிரியருக்கு அளிக்கிறது. சொ.தர்மன் நூல் சார்ந்து உருவான சர்ச்சையை பதிவுசெய்திருக்கிறேன். அங்கெல்லாம் எந்த அறச்சோர்வும் இவருக்கு இல்லை.எழுத்தாளனின் ரயிலடி

ஒருவகையில் விந்தையாகவே இருக்கிறது. தமிழில் சொந்தப்பணத்தைப் போட்டு சிற்றிதழ் நடத்துகிறார்கள், இலக்கியக்கூடுகைகள் நடத்துகிறார்கள். அழிசி ஸ்ரீனிவாசனே அவ்வண்ணம் தேவதேவனுக்காகவும் பிறருக்காகவும் பல நிகழ்வுகளை நடத்தியிருக்கிறார். எவருக்கும் இது ஒரு வருமானம் வரும் தொழில் மட்டுமே என்று தோன்றவில்லை. மறுபக்கம் இவரைப்போன்ற பேராசிரியர்கள் ஒவ்வொரு பைசாவையும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். சிந்திய பருக்கைகளைக்கூட ஊசியால் குத்தி எடுத்து கழுவி சாப்பிடும் கருமிகளைப்போல இருக்கிறார்கள்.

இருவகையிலும் இங்கே இலக்கியம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. வருந்தலைமுறையினர் இதை உணர இந்தக்கட்டுரை ஆவணமாக இங்கே இருக்கவேண்டும்

நூல்வேட்டை

முகம் விருது விழா

ஸ்ரீனிவாச கோபாலன் – கடிதங்கள்

ஸ்ரீநிவாச கோபாலன் – பேட்டி

அழிசியின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா

முகம் விருது,ஸ்ரீனிவாச கோபாலனுக்கு

சோ.தர்மன், காலச்சுவடு

எழுத்தாளனின் ரயிலடி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 01, 2021 10:35

எத்திசை செலினும்- சாம்ராஜ்

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம் விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021

”காடாறு மாதம் நாடாறு மாதம்” கவிஞர் விக்கிரமாதித்தியனின் அனுபவத் தொடரின் பெயர் இந்தத் தலைப்பு அவர் கவிதைக்கும் பொருந்தும். காடாறு  மாதமாக நாடாறு மாதமாக, இம்மைக்கும் உண்மைக்கும் இடையே பகுத்தறிவுக்கும் அதற்கு அப்பாற்பட்டவைக்கும் இடையே, சிறிது வெளிச்சத்துக்கும் பெரிய வெளிச்சத்துக்கும் இடையே லெளகீகத்துக்கும் லட்சியத்திற்க்கும் இடையே சோற்றுக்கும் சொர்க்கத்துக்கும் இடையே நன்மைக்கும் நரகத்திற்கும் இடையே அலைகின்றன அவரது கவிதைகள்.                                           

விக்ரமாதித்தியனின் கவிதையை புரிந்து கொள்ள அல்லது மேலும் அண்மிக்க அவை அப்படியொன்றும் பூடகமானது இல்லைதான். ஆனால் அவர் வரிகளிலே சொன்னால் ஏமாற்றும் எளிமை கொண்டவை.

இந்தக் கவிதை அவரை நெருங்குவதற்கு உதவலாம்.

 

“எப்போதும்

இவனைக் கூப்பிடுகிறது

நீலக் கடல்

முக்கியமாக

நட்சத்திரங்களும் நிலவும்

சுடர்விடும்

ராத்திரி நேரங்களில்தாம்

நீல நிறத்தைக் கண்டு

பயப்பட வேண்டாம்

கட்டு மரமேறி

வா

பிடித்தமில்லையென்றால்

திரும்பிவிடலாம்

வீடு

ரொம்ப தூரமென்று

யோசிக்காதே

வா”

 

விக்கிரமாதித்தியன் கவிதைகளின் சாரத்தை புரிந்து கொள்ள இந்த கவிதை உதவலாம்.

எப்போதும் தூரத்திலிருந்து அழைக்கும் கவிதை அல்லது லட்சியம், அலைகழிக்கும் வீடு திரும்பல், முதுகில் இறக்க முடியாத சுமையாய் அறம். கனவில் வரும் சிறகுகள். தெய்வங்கள், நம்பிக்கைகள், ஐதீகங்கள், தொன்மங்கள் அவரின் கவிதை பாதையில் சுதை சிற்பங்களாய் நிற்க விக்கிரமாதித்தியன் ஐம்பது வருடமாய் தனித்து நடந்து செல்கிறார்.

விக்ரமாதித்தனுக்குள் ஒரு திராவிடன் உண்டு தமிழ் தேசியனும் உண்டு. (தமிழ்தேசியன் என்ற சொல் சமகாலத்தின் பொருளில் அல்ல) தெய்வத்தை புறந்தள்ளாத தமிழ்தேசியன் கோவிலை ரசிக்கும் தமிழ் தேசியன் கோவில் வழிபட மாத்திரம் அல்ல என்று புரிந்து கொண்ட தமிழ் தேசியன். சிறு தெய்வமும் தானும் வேறு வேறு அல்ல என்று புரிந்து கொண்ட தமிழ் தேசியன் அல்லது கவிஞன். சிறு தெய்வங்களின் வாழ்வுதான் இங்கு சாமனியர்களின் வாழ்வு. சிறு தெய்வத்தை உணர்ந்து கொண்ட கவிஞனெனில் கூடுதல் துயரம். அவன் ஓடும்பொழுது அவைகளும் கூட வருகின்றன. சமயங்களில் அவன் தூக்கிக் கொண்டு ஓடுகிறான். விக்கிரமாதித்தியன் கவிதைகளில் அப்படி சிறு தெய்வங்கள் கூடவே வருகின்றன. சமயங்களில் பெருந்தெய்வங்களும். சமயங்களில் சிறு தெய்வங்கள் அவர் மீதே சாய்ந்து உறங்குகின்றன.

70களில் எழுதத் தொடங்கிய விக்கிரமாதித்தியனின் பிரத்யேகமான, பிரதியெடுக்க முடியாத தன்மை என்பது வானம்பாடிகளின் பிரகடனக் கவிதைகள் தமிழ் கவிதை பரப்பில் உரத்து ஒலித்து காலத்தில் அழகியலையும், கவித்துவத்தையும் வறுமையையும் சிறு தெய்வங்களையும் பெருந் தெய்வங்களையும், தொன்ம நம்பிக்கைகளையும் ஒருங்கே தன் கவிதைகளில் முன்வைக்கிறார் விக்கிரமாதித்தியன்.

“குரு மகராஜ்

ஜோதி வளர்க்க

குடும்பம்

பட்டினி கிடக்க”

 

”பூமியில் கால் பாவாமல்

மஹாகவியென இறுமாந்திருக்குமவன்

உச்சிவெயில் உறைக்கும் நேரம்

மனிதனாவான் சமயத்துக்கு”

 

தக்‌ஷணாமூர்த்தியான…

மாமிசம் தின்னாமல்

சுருட்டுப் பிடிக்காமல்

பட்டை யடிக்காமல்

படையல் கேட்காமல்

உக்ரம் கொண்டு

சன்னதம் வந்தாடும்

துடியான கருப்பசாமி

இடையில் நெடுங்காலம்

கொடைவராதது பொறாமல்

பதினெட்டாம்படி விட்டிறங்கி

ஊர் ஊராகச் சுற்றியலைந்து

மனிதரும் வாழ்க்கையும்

உலகமும் கண்டு தேறி

அமைதி கவிய

திரும்பி வந்தமரும்

கடந்தகால கைத்த நினைவுகள் வருந்தவும்

எதிர்கால நிச்சயமின்மை உறுத்தவும்

 

 

வீடு பத்திரமான இடம்

”புலிப்பால் கொண்டு வர

போனான் ஐயப்பன்”

புத்தி வளர

பேச்சு குறைய

அத்தம் கண்டது மெளனம்

 

காய்த்து வெடித்ததும்

அனாதையாக

காற்றில் அலைக்கழியும்

இலவம் பஞ்சு

 

ஊருக்கும் வெளியே

தாமரைக் குளம் தனியே

பூத்துக் கிடக்கும்

வெறிச்சோடி

 

எனக்கில்லை

என் சந்ததிக்கேனும்

தப்பித்தல் அல்லாமல்

விடுதலை எப்போது பூக்கும்

 

நிலை

மலையேறும் வாழ்க்கையில்

மஹா உன்னதம் தேடியென்ன லாபம்

கடல்

உளுந்தங்களி

கிண்டிப் போட

அரிசிப்புட்டு

அவித்துத் தட்ட

ஆண் மனத்தில்

ஆசை எரிய

சமைந்த பெண்

உள்வீட்டில் உட்கார்வார்வாள்

பிரச்னையாக

 

ஒளவைக்கும் காரைக்காலம்மையார்க்கும்

கழறாத

கொலுசு உண்டா

 

அல்லாத

சங்கிலி இல்லை

 

தொலையாத

மோதிரம் ஏது

 

எதில் செய்தால்

கெட்டித் தாலி

 

ஒளவைக்கும் காரைக்காலம்மையாருக்கும்

அத்தனையும் தெரியும்

 

அழகியலும் வறுமையும் லட்சியமும் தொன்மமும் சந்திக்கும் அல்லது மோதும் புள்ளிகளில் விக்கிரமாதித்தியன் கவிதைகள் பிறக்கின்றன.

 

விக்கிரமாதித்தியனுக்கு பிரகடனங்கள் மீதும் பொய்யான மக்கள் கவிதைகள் மீதும் பெரும் கோபம் உண்டு.

 

யதார்த்தம்

தத்துவம் பேசும் கிளிகள்

சிவந்த மூக்கின் நுனியில்

கவிழ்ந்து கிடக்கும் பூமியை

புரட்டிப் போட ஆசைப்படும்

 

மரப்பொந்துகள் மறந்து

தத்துவ தாக விடாயில்

வயிறு வீங்கிச் சாகும்

 

பழங்களைத் தேடியலையாமல்

பட்டினி கிடக்கப்

பழகிக் கொள்ளும்

 

பருவகால ஓர்மை கெட்டு

துணை ஞாபகமற்று

குஞ்சு முகம் பாராமல்

 

சில கிளிகளைச் சேர்த்துக் கொண்டு

திகம்பரனைப் போலத் திரியும்

 

ஆலோலம் பாடி

கவன் எறிந்து

விரட்டியடிக்கும்

யதார்த்தம் தெரியாது

மறுபடியும் மறுபடியும்

சிவந்த மூக்கின் நுனியில்

புரட்டி போடும் கனவு காணும்.

 

மக்கள் கவிதை

மக்கள் பழம் சாப்பிடுவதை எழுதினால்

மக்களைப் பற்றி எழுதியதாகுமென்று நம்புகிறான் கவிஞன்

மக்கள் பால்குடிப்பதை எழுதினாற்கால்

முற்போக்குக் கவிதை ஆகிவிடும்தானே

மக்கள் பாலும்பழமும் சாப்பிடுவதை விவரித்தால்

புரட்சிக்கவிதை பூத்துவிடாதா பின்னே

 

விக்கிரமாதித்தியனும் ’மக்கள் கவிதை’ எழுதுகிறார்.

 

பீடி சுற்றும் இயந்திரங்கள்

 

பீடி சுற்றும் இயந்திரங்கள்

எங்கள் பக்கம் அதிகம்

விடிந்ததும் அவை

ஓட ஆரம்பிக்கும்

இரவு வரை இயந்திரங்கள்

இடைவிடாது சுற்றிக் கொண்டிருக்கும்

நடுநடுவே எழுந்துபோய்

நல்ல தண்ணீர் பிடிக்கும்

ஏனம் கழுவும்

பல் தேய்க்கும்

குளிக்கும்

துணி துவைக்கும்

சாப்பிடும்

மதியத்தூக்கம் தூங்கும்

வீட்டு வேலைகள் எல்லாம்

செய்து  முடிக்கும்

கடைக்குப் போய்

காய்கறி உப்பு புளி மிளகாய் வாங்கிவரும்

சமையல் பண்ணும் நிற்காமல்

சூர்யன் எஃப்.எம் கேட்கும்

சன் டிவி

பார்க்கும்

சிரித்து

பேசிக்கொள்ளும்

தலைவாரி

பூச் சூடும்

பவுடர் போடும் பொட்டு வைத்துக் கொள்ளும்

புருஷனுக்கு பிள்ளைகளுக்கு

சோறெடுத்து வைக்கும்

விருந்தின வந்தால்

உபசரிக்கும்

வெள்ளிக்கிழமை

பூஜை செய்யும்

திருவிளக்கு ஏற்றும்

கோயிலுக்குச் செல்லும்

தேர்த்திருவிழாவுக்குப் போவதுபோல

அலங்கரித்துக்கொண்டு பீடிக்கடைக்குப் போய்வரும்

வாரச்சம்பளம் வாங்கும் நாளில்

வெகுவாக சந்தோஷப்படும்

போனஸ் போடும் காலம்

பூரித்துப் போகும்

பிள்ளைகள் படிப்புக்கு

பணம் தருகிறார்களென்று பெருமை பேசும்

லோன் பென்ஷன் பேங்க் என்றெல்லாம்

கதைத்துக் கொண்டிருக்கும்

பாளம்பாளமான பீடி இலைகளை

காலையில் ’டப்’பில் போட்டு ஊறவைக்கும்

பிறகு காயப்போட்டு சீராக வெட்டியெடுத்து

சேர்த்து  வைத்துக் கொள்ளும்

வராண்டா திண்ணை மரநிழல்

இப்படி இடங்களில் அமர்ந்து கொள்ளும்

அப்புறம் காலை நீட்டி

சுவரில் சாய்ந்து கொண்டு சுற்றத்தொடங்கும்

அனேகமாக கூட்டுச் சேர்ந்துதான் அமர்ந்திருக்கும்

ஒன்றிரண்டு கொறிக்க

ஏதாவது வைத்திருக்கும்

காண்பதற்கே அதிசயமான இயந்திரங்கள்

இவையல்லாமல் லேபிள் ஒட்டும்

இயந்திரங்கள் சிலவும் உண்டு

பண்டல்போடும் இயந்திரங்களோ விசேஷமானவை

 

தமிழில் அரிதினும் அரிதான சேர்மானம் விக்கிரமாதித்யன் வள்ளுவர் கோட்டம் தேர் எழுதும் விக்கிரமாதித்யன்தான் இந்தக்கவிதையும் எழுதுகிறார்.

 

”நன்னிலம்

நடராஜன் பேச்சு

 

ராஜேஷ்

குமார் எழுத்து

 

தினத்
தந்தி பேப்பர்

 

ரஜினி

படம்

 

கங்கை

அமரன் பாட்டு

 

குமுதம் குஷ்பு

தமிழ்த் திராவிட வாழ்வு”

 

இதே விக்கிரமாதித்தியன்தான்

 

”பதினெட்டு கிராமம்

பாங்குடன் இருந்த ஊர்

 

வாய்க்கால் தாண்டி

ஊர்

 

பச்சைவயல் மனசு படைத்த

ஜனங்கள்

 

அக்ரஹாரம் எடுபட்டதும் ஊர்

அம்சமே அழிந்து போயிற்று

 

பஞ்சம் பிழைக்கப் பட்டணக்கரைகளுக்கு

போய்ச்சேர்ந்தன பிராமணக்குடிகள்

 

வரலாற்றுச் சக்கரச் சுழற்சியில்

வந்தது வேதியர்களுக்குப் பின்னடைவு

 

ராஜரிகம் நசிந்ததுபோல

நசிந்துபோயிற்று பிராமணியமும்”

 

கடந்தகாலம்

 

பொதிகைமலை உச்சியிலிருந்து

புறப்பட்டுவரும் ஆறு

 

மலையில் சமைந்தகுமரி

சமவெளியில் புதுப்பெண்

 

எங்கள் தாமிரவருணிக்கு

எத்தனை சாயல்கள்

 

காட்டுக்குள் தனியே

குடிகொண்டிருக்கிறான் சொரிமுத்தையன்

 

ஆடி அமாவாசை நாளில்

ஆடுவெட்டிக் கும்பிடுவார் வீர மறக்குடிமக்கள்

 

நதியின் செம்மண்நீரோடு சேர்ந்து

ரத்தநதியும் கலந்து ஓடும் புதுவர்ணத்தில்

 

தர்பார் உடையுடன் வந்து

காட்சி தருவார் சிங்கம்பட்டி மகாராஜா

 

இந்தக் கவிதைகளையும் எழுதுகிறார்.

 

கவிதையில் எதைவேண்டுமானாலும் அவரால் எழுத முடிகிறது.

”சுடலையாண்டி சரக்கு

ஜோதிமணி விளக்கு

சுலோசனமுதலியார் பாலம்

சுந்தரிமார் நடமாட்டம்”

 

”நேத்து ராத்திரி

பார்த்த கும்பக்காரி

உதயத்துக்கு முன்ஜாமம்

படுக்கையில் சர்ப்பம்”

 

“அம்மாவைப் போல

வாழும் மனசு அமைந்துவிட்டால்

ஏதாவது சாதிக்க முடியுமெனத் தோன்றும்

 

அம்மாவின் பிம்பம்தான்

’சக்தி’யென்றாகியிருக்கும் போல

 

ஆனாலும்

வருஷத்துக்கொரு தரம் கைத்தறிப்புடவை

வாங்கிக்கொடுக்கத்தான் இவனுக்கு வக்கில்லை

 

கற்றுக்கொண்டுவிட்ட தமிழ்

கவிதையெழுத மட்டும் உதவும்”

 

”வெயில் தாளாமல் நிழல் தேடும்

வெற்றுப் பாதங்கள்

எரிச்சலில் சாபமிட

எங்கே போய்க் கவியும் கதிர்வானம்”

 

“வார்த்தைகள்

புழங்கித் தேய்ந்த

ஏனங்கள் போல”

 

“தருமன் சூதாட

தாயும் பத்தினியும் சேர

தட்டழிந்தது ஆறுபேர்”

 

நவபாஷாணம்

குற்றாலநாதருக்கு

ஓயாத மண்டையிடி

 

சுக்குவென்னீர் குடித்தால்

சொஸ்தப்படுமா

 

அருவிக்கரையிலிருந்து

அவன் காலி பண்ணினாலென்ன

 

தலைவலிக்காரனோடு எப்படித்தான் காலம்

தள்ளுகிறாளோ குழல்வாய்மொழி”

 

“கனிகளும்

கிளிகளும்

வேறுவேறு திசையில்”

 

”கவிதைக்குள் படியுமா

காதோரச் சுருள்முடி

 

வார்த்தைக்குள் வருவாளா

வாயாடிச் சுந்தரி”

 

துரித உணவுக் கடைகளில் எதையெதையோ வாணலியில் இட்டு குபீரென நெருப்பு எழ வாணலியை கையில் தூக்குவார்கள். விக்கிரமாதித்தியனும் எதையெதையோ கவிதையில் இடுகிறார். குபீரென எழுகிறது கவிதை

 

அவரது கவிதை ஊஞ்சல் நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் கடந்த காலத்திற்கும் இடையே ஆடிக்கொண்டிருக்கிறது.

நவபாஷாணம், கடல், போன்ற நெடுங்கவிதைகள் தமிழ்க்கவிதை சேர்த்துக் கொண்ட செல்வம்.

அவருடைய மொத்தக் கவிதையும் வாசிக்கும்போது அவருடைய உச்சபட்ச வெளிபாடுகள், சாதனைகள், அவருடைய தொடக்க கால கவிதைகளிலே நிகழ்ந்து விட்டதாக தோன்றுகிறது. பின்வரும் காலங்களில் தொடர்ந்து அதை எட்ட முயல்கிறார். கமலஹாசன் ஒரு நேர்காணலில் சொல்வார். “பராசக்திக்கு பிறகு சிவாஜி கணேசன் நடிக்கவே இல்லை. அதை தக்க வைத்தார்.” அது அண்ணாச்சிக்கும் பொருந்தும்.

 

ஆகாசம்

நீலநிறம்

கிழக்கு வந்து

கூப்பிட்டுப் போகும்

சிந்திச் சீரழித்ததை

சேர்த்து விடலாமென்று

நம்பிக்கை தரும்

நல்லபுத்தி சொல்லும்

 

மேற்கு

கொஞ்சம் ஆறுதலாக

காத்திருக்கச் சொல்லும்

“முடியாதென்றால்

போய்த் தொலை”யென்று கோபிக்கும்

தெற்கு

மனத்துக்குள் நினைக்கும்

”வர வேண்டிய இடம்  தப்பி

போவதுதான் முடியுமோ இனி’ யென்று

நிச்சயத்துடன் எதிர்பார்த்திருக்கும்

 

வடக்கு

திரும்பத்திரும்ப அழைத்து தொந்தரவு செய்யும்

”இப்போதைக்கு

என்னிடம் வந்து இரு”வென்று

கட்டாயப் படுத்தும்

 

திசைமுடிவுக்குத் தெரிவதெல்லாம்

ஆகாசம்

நீல நிறம்

 

”எத்திசை செலினும் அத்திசைச் சோறே” என்பாள் அவ்வை

கவிஞர் விக்கிரமாதித்தியனுக்கு எல்லாத் திசையும் கவிதையே.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 01, 2021 10:34

என் வாழ்வில் இன்றைய காந்தி – சிவகுருநாதன்

இன்றைய காந்தி மின்நூல் வாங்க

அன்பிற்கு இனிய ஜெயமோகன் அய்யாவுக்கு,

வணக்கம். விஷ்ணுபுரம் இலக்கிய விழாவில் நண்பர்களை சந்திக்க ஆவலாக இருக்கும் நேரத்தில் சமீபத்தில் நடைபெற்ற மகிழ்ச்சியான மனநிறைவான செய்தியை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.edfz

தொடர்ச்சியான செயல்பாட்டினூடே ஒரு பெரும் காத்திருப்புக்கு பிறகு காத்திருந்த விடயம் செயல்பட தொடங்கும்போது அதனால் உண்டாகும் மகிழ்ச்சி எல்லையற்றது. அதனை உணரும்போது இந்த வாழ்விற்கான ஒட்டுமொத்த நிறைவை அது கொடுத்துவிடுகிறது. அப்படி என்னுள் நானே என் வேலைகளை பரிசீலனை செய்து மகிழ்ச்சியாய் உணர்ந்த தருணம்தான் இது.

நூற்பு ஆரம்பிக்கும்போது குக்கூ காட்டுப்பள்ளி நிலத்தில் சிவராஜ் அண்ணனுடன், வெரும் பொருள் தயாரிப்பது மட்டுமில்லாமல் இந்த நுட்பத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்திவிட வேண்டும், நெசவு சொல்லிகொடுக்கும் ஆசிரியராக மாறிவிடவேண்டும் என்று  பேசிய வார்த்தைகளில் இருந்த கனவு மெல்ல மெல்ல மெய்ப்பட ஆரம்பித்திருக்கிறது.

மூன்றாம் ஆண்டு தொடக்கமான சென்ற மாதத்தில் பெங்களூரிலும், அஸ்ஸாமிலும் இருந்து குடும்பமாக வந்திருந்த மூன்று பேருக்கு கைநூற்பு மற்றும் கைநெசவு சொல்லிக்கொடுத்து அவர்கள் தாகம் தீர்ந்து சென்றது பெரும் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.

நிசா வடிவமைப்பாளராக பெங்களூரில் பணிபுரிகிறார், நிரு மற்றும் நிக்கில் கணவன் மனைவி இருவரும் கோல் இந்தியாவில் பணிபுரிகின்றனர். நிசாவும் நிரும் இருவரும் உடன் பிறந்த சகோதரிகள்.இருவருக்கும் சிறுவயதில் இருந்து நெசவு செய்வதில் பெரும் விருப்பமாய் இருந்திருக்கிறது. அதன் பிறகு அவர்களது படிப்பு மற்றும் வாழ்க்கைச் சூழல் வேறொரு இடத்திற்கு செல்லவைத்திருக்கிறது. ஆனாலும் இருவருக்குள்ளும் நெசவு என்ற தீரா தாகம் அவர்களை ஞாபகப்படுத்தி கொண்டே இருக்க, பெங்களூரில் தன்னுடன் பணிபுரியும் தோழர் இராமிடம் ஒரு உரையாடலில் சொல்லியிருக்கிறார்கள்.

இராம் என்னுடன் தொடர்புகொண்டு , சிவகுரு நூற்பில் நெசவு பயிற்சி கொடுக்க முடியுமா என்று கேட்டார். என்னால் உடனே பதில்தர இயல்வில்லை.  வெகு தொலைவில் இருந்து நெசவு கற்றுக்கொள்ள வருகிறார்கள் என்ற பதற்றமான மனநிலையே காரணமாக இருந்தது.  அதுமட்டுமில்லாமல் தீபாவளிக்கான தயாரிப்பு வேலைகள் சரியாக நிறைவுபெறாத நிலை எல்லாம் ஓர் ஆழ்ந்த மன அழுத்தத்திற்குள் அழைத்துச் சென்றுவிட்டது.எல்லாவற்றையும் தாண்டி தொடர்ச்சியான செயல்பாட்டின் பலன் நிதர்சனத்தை நோக்கி நகர ஆரம்பிக்கிறது, எதற்காக இந்த பாதையில் பயணிக்கிறோமோ அதன் முழுநோக்கமும் செயல்பட ஆரம்பிக்கபோகிறது என்ற ஒரு வித மன உந்துதல் தொடர்சிந்தனையை ஏற்படுத்திகொண்டே இருந்தது.

சில நாட்கள் கழித்து இராமிடம், எங்களுக்கு தெரிந்தவற்றை பகிர்ந்துகொள்கிறோம் என்று சொல்லி, இரண்டு வாரங்கள் கழித்து மூன்று பேரும் தொழிற்கூடத்திற்கு வந்து அங்கேயே தங்கி உள்வாங்கிக்கொண்டு சென்றனர். மூன்று பேரும் கற்றுக்கொள்வதற்கு அவ்வளவு தயாராக இருந்தனர். விடியற்காலையிலேயே எழுந்து யோகா மற்றும் தியானம்,  இயற்கை உணவு, இருவேலை உணவு என அவர்களின் தினசரி வாழ்வு முறை என்னுள் இருக்கும்  மனசாட்சியை கேள்விகேட்டு அதன் தீவிரத்தை அதிகரித்தது. முதல் நாள் நூலின் வகைகளையும் துணியின் தன்மையையும் பகிர்ந்துகொண்ட பிறகு கைத்தறியின் பாகங்களை பற்றி விவரித்தேன். பிறகு கைராட்டையால் ஊடைக்கு நூல் சுற்றுவதையும் அதில் சந்திக்க நேரும் சவால்களை, தான் படித்த டிப்ளமோ ஆட்டோமொபைல் துறை சார்ந்த வேலைக்குச் செல்லாமல் சிறு வயதில் இருந்தே கைநெசவை நேசத்தோடு  செய்து வரும் பாலுவும் பகிர்ந்துகொண்டார்.

இரண்டாம் நாள், முதல் நாள் பகிர்ந்துகொண்டவைகளை அவர்கள் மூவரும் செய்துபார்த்தனர். அதற்கு பிறகு அச்சு பற்றியும், பாவு சுற்றுவதை பற்றியும், நாடாவின் பயன்குறித்தும், எப்படி பாவு புணைப்பது பற்றிய விவரங்களை  இருவரும் பகிர்ந்துகொண்டோம். நாளின் பாதிக்கு பிறகு கைத்தறியில் ஏறி உட்கார்ந்து நெய்துபார்க்க தொடங்கினர். இரவுவரை நேரம் பார்க்காமல் நெய்துபார்த்தனர்.

இரவு உறங்குவதற்கு முன் அவர்களின் சிறுவயது வாழ்க்கை சூழல் அவர்கள் கடந்துவந்த பாதை என உரையாடல் போய்க்கொண்டிருந்தபோது  காந்தி மற்றும் காந்தியம் நோக்கி உரையாடல் சென்றது.  இங்கு மட்டுமில்லை நாடு முழுவதும் வெறுப்பின் மொழி மட்டுமே கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர முடிந்தது. அந்த தருணத்தில் இன்றைய காந்தியில் படித்த உங்களின் வரிகள்தான் அவர்களை கண்விரித்துப்பார்க்க வைத்தது. உறையாடல் முடியும் சமயம் மெல்லிய நூல் கட்டுரையை வாசித்து என்னால் இயன்ற வகையில் மொழிபெயர்த்து அவர்களிடம் விவரித்துச்சொன்னேன். நான் படித்த வரிகளில் உட்பொதிந்திருக்கும் உண்மை காந்தி குறித்தும் காந்தியம் குறித்தும் கட்டாயம் அவர்களின் மனதில் வேறொரு பரிமாணத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று நம்புகிறேன்.

உங்களின் காந்தியம் குறித்த சில கட்டுரைகள் மொழிபெயர்த்தால் வேற்றுமொழியில் இருப்பவர்களுக்கும் வேறொரு பரிமாணம் கிடைக்கும் என்று அந்த கணத்தில் தோன்றியது.

மூன்றாம் நாள் விடியற்காலையிலேயே எழுந்து நெய்து பார்க்க தொடங்கிவிட்டனர். ஓரளவிற்கு மூவருக்கும் வாட்டுபிடிப்பதற்கு கைவந்துவிட்டது. இதற்கு பிறகு தொடர்ச்சியாக நெய்துபார்த்தார்கள் என்றால் நெசவு கைவந்துவிடும்.

மூன்றுநாட்களில் நெசவு முழுமைபெற்றுவிடுமா என்றால் முழுமைபெறாது. உடல் மனம் என யாவும் இலயித்துப்போய் அதில் மூழ்க கட்டாயம் நாள்பிடிக்கும். அது அவரவர் அகவிருப்பத்தையும் உள்தீவிரத்தையும் பொறுத்தது. அறுபதுவயது கடந்தவ்ர்கள்கூட வேற எதாவது வடிவம் இதில் நெய்யனும்பா என்று ஏக்கப்படும் நெசவாளிகளும் இருக்கிறார்கள். மூன்று மாதம் காலம் இதில் இருந்தார்கள் என்றால் கட்டாயம் ஓரளவிற்கு கைதேர்ந்துவிடுவார்கள்.

எங்கள் இருவருக்கும் தெரிந்தவற்றை முதன் முறையாக நூற்பில் நடந்த பயிற்சியில் கைமாற்றியிருக்கிறோம். நாற்பது ஆண்டுகாலத்திற்கு மேல் உழைத்துக்கொண்டிருக்கிற எத்தனையோ மனிதர்கள் அமர்ந்து கைகால்களை அசைத்து துணிகளை உருவாக்கிய கைத்தறியில்  முதன் முதலாக தாகம் தீர்ந்து சென்றிருக்கிறார்கள் என்பது புதிய சக்தியை என்னுள் பிறப்பித்திருக்கிறது. இத்தருணத்தில், ஒரு பெரிய வெறுப்புக்கு இடையில்  அன்பை விதைக்க முடிந்திருக்கிறதென்றால் உங்கள் வார்த்தையில் இருக்கும் சத்தியத்தின் வலிமையை அகம் வழுவாக இறுகபற்றிக்கொள்ள வேண்டும் என்றும் தோன்றுகிறது.

என்றென்றைக்குமான நன்றியும்… இறைவேண்டலும்…

சிவகுருநாதன் சி,

நூற்பு கைத்தறி ஆடைகள்,

+919578620207.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 01, 2021 10:31

கொரியமொழி கற்றல் – கடிதம்

கொரியா ஒரு கடிதம்

பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவரக்ளுக்கு

என்னுடைய கடிதத்தை கொரியா ஒரு கடிதம் உங்கள் தளத்தில் கண்டேன். ராஜன் சோமசுந்தரம் எழுதிய குறிப்பை, தளத்தில் வெளியான அன்றே படித்திருந்தேன். அந்த குறிப்பு முழுதும் உண்மையே. கொரியா எழுத்துக்கள் “ஹங்குல் 한글” என்று அழைக்கப்படுகிறது.

பழைய சீன மொழியே கொரியா முழுதும் பதினைந்தாம் நூற்றாண்டு முதல் பயன்படுத்த பட்டுள்ளது. அம்மொழியை கற்றுக்கொள்வதில் மக்களுக்கு இருந்த சிரமத்தை கருத்தில் கொண்டு 세종대왕 Sejong King (1397 – 1450) கொரியாவின் தற்போதய மொழியின் “ஹங்குகொ – 한국어” வை உருவாக்கி இருக்கிறார். இன்றைய கொரியாவின் 10,000 원- ஓன் நோட்டில் அவ்வரசரின் படம் அச்சிடப்பட்டு உள்ளது.

கொரியாவின் எழுத்துக்களை வெறும் ஒரு மணி நேரம் செலவிட்டால் தெரிந்து கொள்ள முடியும். உயிர் எழுத்துக்கள் (ㅏ ㅑ ㅓ ㅕ ㅗ ㅛ ㅜ ㅠ ㅡ ㅣ)  பத்தும், மெய்யெழுத்துக்கள் (ㄱ ㄴ ㄷ ㄹ ㅁ ㅂ ㅅ  ㅋ ㅌ ㅍ ㅈ ㅊ  ㅇ ㅎ) பதினான்கும் தான் மொத்த எழுத்துக்கள். இந்த இரண்டு எழுத்துருக்களை பயன்படுத்தி அணைத்து சொற்றடர்களையும் உருவாக்க முடியும். இதன் ஒலி வடிவம் கிட்டத்தட்ட நம் தமிழ் மற்றும் சமசுகிருத மொழிக்கு பக்கத்தில் தான் உள்ளது ஆனால் முற்றிலும் ஒன்றல்ல.

உதாரணமாக ( ㅏ அ, ㅑ யா,   ㅗ ஓ,  ㅛ யோ, ㅜ உ , ㅠ யு ㅣஇ)  (ㄱ க், ㄴ ன், ㄷத், ㄹ ர் / ல் ,ㅁ ம், ㅂ ப், ㅅ ஷ்,  ㅋ க்க், ㅌத்த், ㅍ ப்ப் ,ㅈ ஜ், ㅊ ஜ்ஜ்  ㅇங் , ㅎ ஹ). மற்ற மூன்று  எழுத்துக்களின் (ㅓ, ㅕ மற்றும் ㅡ),  உச்சரிப்பு முறையே வேறு அது முற்றிலும் நம் நாக்குக்கு பழக்கப்பட்ட தள்ள. இவை மூன்றும் தான் அதிக சொற்களில்  பயன்படுத்த படுகிறது.

முக்கியமான விஷயம் என்னவென்றால் , கொரியா எழுத்துக்களை அறிந்து கொள்வது என்பது மிக எளிது அனால் கொரியா மொழியை கற்றுக்கொள்வது என்பது மிகவும் கடினமான பணியாகவே உள்ளது. ஒரு வருடம் வெறும் கொரியா மொழியை மட்டுமே முழு நேரமாக கல்லூரி சென்று படிப்பவர்களால் கூட வெறும் 10 சதவீதத்தினரே சரளமாக பேசவும் வாசிக்கவும் முடிகிறது. கொரியாவில் KGSP என்ற ஸ்கேலர்ஷிப் இல் வருடத்திற்கு 15 இந்தியர்களை மேற்படிப்பிற்க்காக தேர்வு செய்கிறார்கள் ( உலகம் முழுதும் 400 நபர்கள் ), அவர்கள் முதல் ஒரு வருடம்  வெறும் மொழியை மட்டுமே கற்று மொழித்தேர்வில் லெவல் 6 இல் குறைந்தது  லெவல் 3 தேர்வாக வேண்டும்.  பிறகு மேற்படிப்பு விரும்பிய கல்லூரியில் படிப்பை தொடரலாம் . 5 வருடம் இந்த ஸ்காலர்ஷிப் இம்மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

இம்மாணவர்களில் பெரும்பாலானவர்கள் வேறு வழி இல்லை என்பதனாலேயே மொழியை ஒரு குறிப்பிட்ட அளவு கற்கிறார்கள், மற்றவர்கள் எட்டு பத்து வருடம் இருந்தாலும் சிறுதும் கற்றுக்கொள்ளாமல் செல்கிறார்கள்.

நான் KGSP மாணவன் அல்ல,  தனியாகவே முயற்சி செய்து கற்று கொண்டிருப்பவன், பெரும் நேரத்தையும் உழைப்பையும் இம்மொழியை கற்பதற்காகவே கொடுத்திருக்கிறேன். அனைத்தும், எனக்கு இலக்கியத்தின் மீது இருக்கும் காதலாலே. உங்கள் பெரும் உழைப்பை பார்த்து வியந்து நிற்பவன் நான். என்னால் முடிந்ததை செய்து கொண்டிருப்பவன். பாதி தாண்டிவிட்டேன், இன்னும் கொஞ்சம் தான், இரண்டு மொழியின் இலக்கியத்தையும் நேரடியாகவே மொழியாக்கம் செய்வேன் என்று உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். இது என் ஆணவத்தால் செய்யப்படுவது அல்ல  என்பதை உணர்கிறேன், “காலடிப்புழுதி  நான்” என்று தெளிந்து சொல்லப்பட்டதாகவே  உணர்கிறேன் .

தங்கள்

பாண்டியன் சதீஷ்குமார்

புதிய வாசிப்புகளின் வாசலில்…

பின் தொடரும் நிழலின் குரல் -கடிதம்

சுபிட்ச முருகன், மின்னூல், கடிதம்

இந்நாட்களில்…கடிதங்கள்

ஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 01, 2021 10:31

வெண்முரசின் துரியோதனன்

பன்னிரு படைக்களம் வாசித்து இன்று முடித்தேன் .ஆசிரியரே பிழை செய்தேன் நான் முழு மகாபாரதம் அறிந்தவன் அல்ல நான் இந்நாவல் தொடர் வழியாக இதுவரை அறிந்து வந்த துரியோதனன் முற்றிலும் வேறானவன் . அணையா சினமும் பெரும் விழைவும் பெரும் தோள்களும் கொண்ட எளிய அரசன். அவரின் ஊழ் அவரை சிறுமை அடைய செய்தது பெண் என்று அவர் நெஞ்சில் சூடிய அத்தனை இடத்திலும் பார்த்தன் வந்து நின்றான் அவர் நெஞ்சில் அணையா வஞ்சத்தை ஏற்றினான் அவனின் வில்திறன் அவனுக்கு அளித்த செருக்கு. பாண்டவர்களை தொழும்பர்கள் என்று துரியோதனன் அழைத்த அந்த இடத்தில் என் நெஞ்சில் இருந்த துரியோதனன் இறந்தான்… அன்று ( நதிக்கரையில் சிறுகதை) பீமனின் உளகொதிப்பை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை ஆனால் இன்று பீமனின் அகம் அறிகிறேன்.

” என் குலமகள் ஒற்றை ஆடையுடன் சபை முன்னே நின்றாள் அந்த ஒற்றை பழிக்காக அந்த அகமன் தலையை இன்னும் ஏழு ஏழு ஜென்மத்துக்கு எட்டி உதைப்பேன் . காலம் உள்ளவரை என் தலையை மணிமுடி அணி செய்ய வேண்டியதில்லை இப்பழிழே என் அணியாகும்.”

பெண் என்னும் வெல்ல முடியாமைக்கு அப்பால் சிறுமை கொண்டு கீழ்மை சூடிக்கொண்டான் துரியோதனன் . வெறும் நெறிகள் பேனும் மூடர் கூட்டம் அஸ்தினபுரி ஆண்கள். இனி காலம் உள்ளவரை அவன் மூதாதையரும் அவன் குளமும் கீழ்மை சூடி நிற்க போகிறது..

 

ஏழுமலை.

 

அன்புள்ள ஜெ

வெண்முரசின் துரியோதனன் பற்றி எழுதப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. நான் இப்போதுதான் அவன் இறக்கும் இடம் வரை வந்து சிலநாட்களாகவே அந்தச் சந்தர்ப்பத்தில் இருந்து விடுபடவே முடியாமல் இருக்கிறேன். தமிழகத்துக்கு துரியோதனன் பெரிய கதாபாத்திரம். இங்கே தெருக்கூத்தில் நிறைந்து நிற்கும் ஆளுமை. துரியோதனனுக்குத்தான் தமிழ்நாட்டில் மிகப்பெரிய சிலைகள் வடிக்கப்படுகின்றன. படுகளம் கொண்டாடப்படுகிறது.

நாட்டுப்புற மகாபாரதத்தில் துரியோதனன் எளிமையான கதாபாத்திரம். ஆணவம் கொண்டு பெண்ணை அவமதித்து அழிந்தவன். அப்படி ஆணவத்தால் பெண்பழி கொள்ளும் ஏராளமான அரசர்கள் இங்கே இருந்திருக்கிறார்கள். சங்க கால நன்னன் முதல் உள்ளூர் ஜமீன்தார்கள் வரை. அவர்களின் தோற்றத்துடன் இணைவதனால்தான் துரியோதனன் இங்கே இவ்வளவு பெரிதாக வளர்ந்தான்

பௌராணிக மரபிலும் துரியோதனன் ஒற்றைப்படையான துஷ்ட கதாபாத்திரம். அசல் மகாபாரதத்தை வாசித்தால் அவனுடைய மாண்பும் பெருமையும் வெளிப்படும் பல இடங்கள் உள்ளன. ஆனால் அவை மறைந்துகிடக்கின்றன. வெண்முரசின் துரியோதனன் மிகச்சிக்கலான கதாபாத்திரம். மகாபாரதத்தில் உள்ள சிறு சிறு குறிப்புகளை எல்லாம் எடுத்து விரிவாக்கி அந்தக் கதாபாத்திரத்தைச் சிக்கலானதாக ஆக்கிக்கொண்டே செல்கிறீர்கள்.

அவன் ஆண்மையும் பெருந்தன்மையும் மிக்கவன். பெருந்தந்தை. தன் சகோதரர்களுக்கும் தந்தையானவன். அவனுடன் அத்தனை அரசர்கள் ஏன் இணைந்து நின்றார்கள் என்பதற்கான விடை அது. அவனுடைய ஒரே பலவீனம் மண்ணாசை. அதுகூட தவறான ஆசை அல்ல. எந்த அரசனுக்கும் தேவையான உணர்வுதான். அந்த மண்ணாசையால்தான் அவன் அஸ்தினபுரியின் மக்களுக்கு தாய்வடிவமான ஆட்சியாளனாக இருந்தான்.

அப்படியென்றால் என்ன தவறு செய்தான்? அந்த மண்ணாசை ஒரு டிகிரி கூடிவிட்டது. அதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற எண்ணம் உருவாகி அறத்தை கடந்து போகச் செய்துவிட்டது. எல்லாவற்றிலும் மேலானது அறம். அரசனுக்கு அதுவே ஆதாரம். எதன்பொருட்டு அறம் மீறினாலும் அழிவுதான்.

இத்தனைக்கும் துரியோதனன் போரில் அறத்தை மீறவில்லை. எந்த மைந்தரையும் கொல்லவில்லை. பாண்டவர்களின் மைந்தர்களேகூட அவன் மைந்தர்களாகவே இருக்கிறார்கள். ஆனாலும் அறம்பிழைத்தான். ஒரு சின்ன பிழை. ஆனால் மிகப்பெரிய ஆளுமை அதை செய்தமையால் அது மிகப்பெரிய பிழையாக ஆகிவிட்டது. நினைக்க நினைக்க விரிந்துகொண்டே செல்லும் ஆளுமை துரியோதனன் [தமிழில் இத்தனை பக்கம் படித்தும் தமிழில் எழுத முடியாமைக்கு மன்னிக்கவும்]

கிருஷ்ணகுமார் பரத்வாஜ்

பெருந்தந்தை-2

பெருந்தந்தை-3

கேரளத்தின் துரியோதனன் கோயில்

விளிம்புகள்

துரியோதனன் மனம்

துரியோதனி

துரியோதனன் படுகளம்

மறுவருகை

மண்வடிவன்

துரியோதனன் வஞ்சினம்

துரியோதனன் காதல்

துரியோதனனின் இரட்டை ஆளுமை

சாவு

துரியோதனன் வருகை

எதிர்த்து நின்று முக்தி பெறுவது

துரியோதனனின் மாற்றம்

பிரஜாபதி

அழியாதவன்

சொற்கள்

வஜ்ரம்

துரியோதனர்கள்

வீரனின் முழுமை

முகம்

அண்ணன்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 01, 2021 10:30

November 30, 2021

தெய்வச்சொல்

அன்புள்ள ஜெ

வணக்கம் !

இரு கேள்விகள்.

நான் இமயத்தின் இரண்டு நாவல்களை வாசித்திருக்கிறேன்.
கோவேறு கழுதைகளும் ஆறுமுகமும். அவரை தொடர்ந்து வாசிக்காமல் போனதற்கு காரணம் 2 ஜி ஊழல் வெளிவந்தபோது அப்படி ஒரு ஊழல் நடக்கவே இல்லை, நடக்க வாய்ப்பே இல்லை என துண்டு பிரசுரங்களை சென்னை தியாகராய நகரில் அவர் வினியோகித்துகொண்டிருந்தது.ஒரு எழுத்தாளன் இப்படி சரிவதை என் மனம் ஏற்றுகொள்ளவில்லை.மிகுந்த மனகசப்புக்கும் ஒருவிதமான கைவிடப்பட்ட நிலமைக்கும் ஆளேன்.

அப்போது அவருடய சிறு துண்டு பேட்டியும் கேட்டேன். போராளிகளுக்கே உண்டான ஆவேச தொணியில் பேசினார்.அது மேலும் அவரிடமிருந்தும் அவர் படைப்புகளிடமிருந்தும் என்னை விலக்கியது.ஒரு எழுத்தாளன் இப்படி ஆவேசமாக கத்தி நெஞ்சுபுடைக்க பேசுவதை ஒரு வாசக மனம் ஏற்குமா ?அப்பொழுது அந்த ஊழலைப்பற்றி ( கனிமொழி)நீங்களும் எழுதியிருந்தீர்கள் இரண்டையும் காணும் வாசகன் என்ன முடிவெடுப்பான்?யாரை பின்தொடர்வான் ?

என்னுடய கேள்வி இதுதான்,என்னதான் பாமரனுக்கு கலை இலக்கியம் பரிச்சியம் இல்லையென்றாலும் எழுத்தாளன் என்பவனை, ஒரு ஆசான்.அறம் கொண்டவன் என்று தானே புத்தியில் ஏற்றிவைத்திருப்பான்.அத்தகைய பாமரரர்கள் இந்த மாதிரி கரை வேட்டி கட்டிய எழுத்தாளர்களை எவ்வாறு பார்ப்பார்கள் ? என்னவாக நினைப்பார்கள்?கண்மனிகுணசேகரன் இதை மிகமிக வெளிப்படையாகவே செய்கிறார்?

நீங்கள் திருமாவளவோனோடு மேடையை பகிர்ந்துகொண்டபோது அதற்கு ஒரு விளக்கத்தை அளித்திருந்திர்கள். அந்த மாதிரியில்லை இவர்கள். இவர்கள் வெளிப்படையாக கட்சிகாரர்களாகவும் அதே சமயத்தில் எழுத்தாளர்களாகவும் இருக்கிறார்கள்.உண்டாட்டுவில் அவருக்கு கரைவேட்டி பரிசளித்ததை திமுக தொண்டர்கள் வரவேற்று மகிழலாம்.ஆனால் இலக்கிய வாசகன் ?

இலக்கியத்தில் ஆழம் கண்ட எழுத்தாளர்களும் கவிகளும் இப்படி கட்சியின் உறுப்பினராக கட்சிக்கார்களா இருப்பது பெரிய சோர்வை வாசகனுக்கு உண்டாக்காதா? அந்த எழுத்தாளர்கள் வாசகனை இழப்பது வாசகர்களின் குற்றமா ?அல்லது எழுத்தாளர்களின் குற்றமா ?

ஒரு நல்ல வாசகன் நிச்சயம் எந்த கட்சியும் சாராதவனாக எந்த கட்சிமீதும் கடும் சினம் கொள்ளாதவனாக இருக்கத்தானா வாய்ப்புகள் உண்டு.எப்படி இலக்கியம் வேறு கட்சி வேறு என ஒரு இலக்கியவாதியால் இயங்க முடிகிறது ?நான் இலக்கியவாதி என்றால் தூயவன் என்ற பாங்கில் கூற வில்லை இது எப்படி சாத்தியமாகிறது ?

ஒருபுறம் தங்களை அறிவு ஜீவிகளாக புனைத்துகொள்பவர்கள் இலக்கிய கருத்தரங்கில் எழுத்தாளர்களையும் அவர்களின் படைப்புகளையும் பற்றி பேசுவது, மறுபுறம் கட்சி நடத்தும் தொலைக்காட்சியில் கட்சியின் தலைவரே மகத்தான எழுத்தாளர் படைப்பாளி விடிவெள்ளி என பேசுவது ஒருபக்கம் தங்களின் அறம் சிறுகதைகளை விதந்தோதுவதும் மறுபக்கம் அதற்கு எந்தவிதத்திலும் பொருத்தமில்லாமல் தொலைக்காட்சிகளில் பேசுவது .

ரகுபதி கத்தார்

அன்புள்ள ரகுபதி

எழுத்து எழுத்தாளன் இரண்டு புள்ளிகளையும் பிரித்துப்பார்க்கவேண்டும். அதெப்படி என்று கேட்கலாம். மிக எளிமையான பதில் இதுதான். கனவு ,கனவு காண்பவன் ஆகிய இரண்டு புள்ளிகளையும் வேறுபடுத்திப் பார்க்கவில்லை என்றால் உங்களால் அவற்றை புரிந்துகொள்ள முடியாது.

இலக்கியம் ஒரு படைப்பாளியின் ஒருவகை விழிப்புநிலை கனவு. மொழியினூடாக அவன் உருவாக்கிக்கொள்ளும் கனவு அது. மொழிக்கு ஒரு தன்னிச்சையான பெருக்கு உண்டு. மொழிக்குள் உள்ள கதை போன்ற வடிவங்களுக்கும் தன்னியல்பான ஒரு கட்டமைப்பு உண்டு. தன்னை மொழிக்கு ஒப்புக்கொடுத்து, ஒரு கதைவடிவுக்குள் எழுத்தாளன் அமையும்போது அவனுடைய நனவிலியில் சேர்ந்திருக்கும் அகஅனுபவங்கள் திரண்டு இலக்கியப் படைப்பாக ஆகின்றன.

அது கிட்டத்தட்ட கனவு நிகழ்வதற்குச் சமானமான ஒரு செயல்பாடுதான். கனவு அக்கனவைக் காண்பவனின் வெளிப்பாடுதான். ஆனால் துயிலில் அவனுடைய விழிப்புநிலை மறையும்போது நனவிலியில் இருந்து அக அனுபவங்கள் ஒரு வடிவ ஒழுங்கு கொண்டு கனவாக வெளிப்படுகின்றன.

ஏன் இலக்கியப் படைப்புக்கள் முக்கியம் என்றால் அவை எழுதுபவனின் ‘அபிப்பிராயங்கள்’ அல்ல. எழுதுபவனின் ’எண்ணங்களை’ அவை முன்வைப்பதில்லை. அவனுடைய ‘நிலைபாடுக’ளின் தொகுப்பு அல்ல அவை. அவை அவனுடைய ஆழுள்ளத்தின் வெளிப்பாடு. ஒரு மனிதனின் ஆழுள்ளம் அச்சமூகத்தின் கூட்டு ஆழுள்ளத்தின் வெளிப்பாடே. ஆகவே ஒரு சமூகத்தின் ஆழுள்ளம்தான் ஒரு படைப்பாளி வழியாக வெளிப்பாடு கொள்கிறது.

ஆகவே அச்சமூகம் தன்னைத்தானே அறிய இலக்கியப்படைப்புக்கள் உதவுகின்றன. தன்னையே மதிப்பிட அவை வழியமைக்கின்றன. ஆகவேதான் உலகம் முழுக்க இலக்கியப்படைப்புக்கள் அவை உருவான சமூகம் மீதான மனசாட்சியின் அறைகூவலாக உள்ளன. மறைந்துள்ள வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டுவருவனவாக உள்ளன. அச்சமூகத்தின் நம்பிக்கைகளையும் சிந்தனைகளையும் மாற்றியமைப்பவையாக உள்ளன. அழகியல் கட்டுமானங்களை மாற்றியமைப்பவையாக நிகழ்கின்றன.

இக்காரணத்தால்தான் ஓர் எழுத்து ஜோடிக்கப்பட்டது என்றால் அதை வாசகர் நிராகரிக்கின்றனர். எழுத்தாளனின் தரப்பை பேசிக்கொண்டிருக்கிறது என்றால் அது எவ்வளவு நேர்மையானது என்றாலும் அதை கலைப்படைப்பு என ஏற்றுக்கொள்வதில்லை. எழுத்தாளனின் தரப்பை எழுத்துக்களில் விமர்சகர் தேடுவதில்லை. அந்த படைப்பு ஒரு முழுமையான கட்டமைப்பு, கனவு போல. ஒரு சமூகம் கூட்டாகக் கண்ட கனவு. அக்கனவை வைத்து அச்சமூகத்தையும் அச்சமூகத்தை வைத்து அக்கனவையும் புரிந்துகொள்ள முயல்கின்றனர்

ஓர் எழுத்து இலக்கியமாக அமைந்துள்ளதா என எப்படி மதிப்பிடுகிறோம்? அது ஆசிரியனின் நனவிலியின் வெளிப்பாடாக இருக்கவேண்டும். அவ்வாறு இருந்தால் அது நமது நனவிலியின் வெளிப்பாடும்கூட. நம் ஆழுள்ளத்தால் நாம் அந்தப்படைப்பை அறியமுடியும். நம் கனவை அப்படைப்பு தொட்டு எழுப்பும். வாசிப்பு என்பது நமது ஆழுள்ளத்தால் புனைவில் வெளிப்படும் ஆழுள்ளத்தை சந்திப்பதுதான்.

ஆகவேதான் புனைவில் வெளிப்படும் உண்மைகளை அது நிரூபிக்க முற்படுவதில்லை. அது வெறுமே உண்மைகளைச் சித்தரித்துக் காட்டுகிறது. நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஏனென்றால் நாமே அதை ஏற்கனவே அறிந்திருப்போம். ஒரு படைப்பை வாசிக்கையில் உங்களையே நீங்கள் அதில் பார்த்தால், உங்கள் சொற்களாகவே அந்தப்படைப்பின் சொற்கள் மாறிவிட்டால், நீங்கள் மங்கலாக, தெளிவில்லாததாக அறிந்தவற்றையே அந்தப்படைப்பு கூர்மையாக உக்கிரமாகச் சொல்லியிருந்தால் அது கலைப்படைப்பு.

கலைப்படைப்ப் உங்களுக்கு எதையும் கற்பிப்பதில்லை. அது உங்களுள் ஒரு கனவென நுழைந்து நிகழ்கிறது. உங்களை ஒரு கனவுக்குள் வாழச்செய்கிறது. உண்மையான வாழ்வுக்குச் சமானமான வாழ்க்கை அது. அந்த வாழ்க்கையில் நீங்கள் அறிவன எல்லாமே நீங்களே உங்களில் இருந்து அடைவனதான். ஆசிரியன் உங்களுக்கு அளிப்பன அல்ல.

அந்தக் கனவை தன்னுள் இருந்து எடுக்கும் ஆசிரியன் அக்கனவை எழுதியபின் அதே உச்சநிலையில் இருப்பதில்லை. அவன் அன்றாடத்துக்குத் திரும்புவான். சாமானியனாக ஆவான். பெரும்பாலான எழுத்தாளர்கள் எழுதாதபோது சாமானியர்களாகவே இருப்பார்கள். பெரும் அறிவுஜீவிகளாகவோ தத்துவவாதிகளாகவோ இருக்கமாட்டார்கள். களச்செயல்பாட்டாளர்களாகவோ சேவை செய்பவர்களாகவோ இருக்க மாட்டார்கள்.

சொல்லப்போனால் அவர்கள் சர்வசாதாரணமாக இருப்பார்கள். அப்போதுதான் சாதாரண மனிதர்களில் ஒருவராக அவர்களால் திகழமுடியும். பெருந்திரளில் கரைந்து இருக்க முடியும். அவ்வாறு இருந்தால்தான் பெருந்திரளாக உள்ள சமூகத்தின் ஆழுள்ளம் அவர்கள் வழியாக வெளிப்பட முடியும்.

ஆகவே சாதாரணமாக இங்கிருக்கும் பல குறைபாடுகளும் எழுத்தாளர்களுக்கு இருக்கும். பிறரைப்போலவே அவர்களுக்கும் அரசியல் சார்புகள் இருக்கும். குடும்பப்பிரச்சினைகள் இருக்கும். தனிப்பட்ட பலவீனங்களும் தீய பழக்கங்களும் இருக்கும். தன் சொந்தச்சிக்கல்களை அவர்களால் தீர்க்கமுடியால் இருக்கும்.

கூடுதலாகவும் அவர்களுக்குச் சிக்கல் இருக்கும். அவர்கள் சாதாரண மனிதர்களைப்போல சாதாரணமாக வாழ்பவர்கள். சாதாரண மனிதனின் உள்ளமும் அறிவும் கொண்டவர்கள். ஆனால் இலக்கியம் வாசிப்பவர்கள், ஓயாது இலக்கியம் படைக்க முற்படுபவர்கள். ஆகவே தொழில், வணிகம் போன்றவற்றில் அவர்களின் கவனம் நிலைகொள்ளாமல் போகலாம். அந்நிலையில் சாதாரண மனிதனை விட ஒரு படி கீழே அவர்கள் இருக்கலாம். திறமையற்ற, கவனமற்ற, அப்பாவியான மனிதர்களாகவும் அவர்கள் தென்படலாம்.

ஓர் எழுத்தாளனை எழுதாதபோது மிகச்சரியான சாமானியன் என்று புரிந்துகொள்ளுங்கள். அவன் எழுத்தின்பொருட்டு அவனை மதியுங்கள். அவன் எழுத்தை ஒரு கனவு என எடுத்துக்கொண்டு அதில் உங்கள் கனவை உருவாக்கிக்கொள்ள முடியுமா என்று பாருங்கள். முடியும் எனில் அதுவே உங்களுக்குரியது. அந்த எழுத்தாளன் எப்படி இருந்தாலும் அது உங்கள் பிரச்சினை அல்ல. அவ்வெழுத்தாளன் உங்களுக்கு பிடிக்காதவனாக இருப்பதனால் படைப்பை நிராகரித்தால் அது உங்களுக்கே இழப்பு

இதை ஏன் வலியுறுத்திச் சொல்லவேண்டியிருக்கிறது? ஏனென்றால் இலக்கியம் எப்போதுமே சங்கடமான உண்மைகளைச் சொல்கிறது. அரசு, அரசியல்வாதிகள் உருவாக்கியிருக்கும் ஒருவகையான ஒட்டுமொத்தச் சித்திரத்தை அது ஊடுருவி உடைக்கிறது. கனவுகள் நாம் நம்மைப்பற்றி நம்பியிருப்பவற்றை உடைக்கின்றன அல்லவா அதைப்போல. ஆகவே எப்போதுமே அரசும் அரசியல்வாதிகளும் இலக்கியவாதிகளை எதிர்ப்பார்கள். அவதூறுசெய்வார்கள். அவர்களுக்குப் புரிந்த எளிய முத்திரைகளை குத்துவார்கள். இழிவு செய்வார்கள். அவமதிப்பார்கள். ஆதிக்க அரசு என்றால் சிறையிலடைப்பார்கள்.

நீங்கள் முகநூலிலேயே பார்க்கலாம். முகநூலில் பெரும்பாலானவர்கள் சாதி மத அடிப்படையில் ஏதேனும் அரசியலை ஏற்றுக்கொண்டு கூச்சலிடும் அரசியலாளர்கள்தான். எங்கேனும் எவரேனும் ஏதேனும் எழுத்தாளரைக் கொண்டாடிப் பார்த்திருக்கிறீர்களா? ஏதேனும் ஒரு காரணத்தைப் பிடித்துக்கொண்டு எழுத்தாளர்களை வசைபாடிக்கொண்டே இருப்பார்கள். பத்துநாளுக்கு ஒருமுறை ஓர் எழுத்தாளர் அவர்களின் வசைகளுக்கு இரையாவார். இதுவே அரசியலாதிக்கத்தின் இயங்குமுறை. இவர்கள் எழுத்தாளர்கள் மீதான காழ்ப்பை மக்களிடம் உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். ஓர் இலக்கியவாசகன் இவர்களைக் கடந்தே இலக்கியவாதியிடம் வரமுடியும். இலக்கியத்தை வாசிக்கமுடியும். அது ஜெயமோகனை அணுகுவதாக இருந்தாலும் இமையத்தை வாசிப்பதாக இருந்தாலும்.

இந்தக் காழ்ப்பை உருவாக்குவதற்கு இந்த அரசியலாளர்கள் செய்யும் வழிமுறை இலக்கியவாதியின் ஆளுமையை கீழ்மைப்படுத்துவது. அவனை நேர்மையற்றவன் என்பார்கள். முன்னுக்குப்பின் பேசுபவன் என்பார்கள். [எழுத்தாளன் மாற்றமில்லாமல் ஒன்றையே சொல்பவன் அல்ல. அந்தந்த படைப்பில் தன்னிச்சையாக வெளிப்படுபவன் அவன்] அவனுடைய தனிப்பட்ட பேச்சுக்களை எடுத்துக்கொண்டு அவதூறும் திரிபும் செய்வார்கள். அவனுடைய சாதாரணத்தன்மையையே அவனை இழிவுபடுத்தும் காரணமாக காட்டுவார்கள். நாம் அந்த வலைக்குள் விழுந்துவிடலாகாது. எந்நிலையிலும் எதன்பொருட்டும் எந்த எழுத்தாளர் மீதும் காழ்ப்புகளை கசப்புகளை விலக்கத்தை உருவாக்கிக் கொள்ளக்கூடாது.

இமையம், கண்மணி குணசேகரன் பற்றிச் சொன்னீர்கள். சி.சு.செல்லப்பா பிராமணர் சங்க ஊர்வலத்தில் முன்னணியில் நடனமாடியபடிச் சென்றவர். அதனால் வாடிவாசல் மோசமான நாவல் ஆகிவிடுமா? அவர் தமிழ்ச்சிற்றிதழ் முன்னோடி அல்ல என்றாகிவிடுவாரா? அப்படி ஓர் அறிவுஜீவி சென்றால் அவனை நிராகரிப்பேன். புனைவெழுத்தாளன் சென்றால் அவனுடைய ’தரைதொட்ட’ நிலை என்று மட்டுமே புரிந்துகொள்வேன்.

யோசித்துப் பாருங்கள். இமையம் தன்னை திமுக ஆதரவாளர் என்று சொல்கிறார். கட்சியில் செயல்படுகிறார். ஆனால் தன் எழுத்து முழுக்கமுழுக்க வேறு என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார். தான் எழுத்தாளன் மட்டுமே என்றும் அது எந்த அரசியல்பதவியை விடவும் மேல் என உணர்வதாகவும் எல்லா அரசியல்மேடையிலும் நிமிர்ந்து நின்று சொல்கிறார். தன் எழுத்து தனக்கு அப்பாற்பட்ட ஒன்று, எழுதும்போது தான் கட்சிக்காரனோ அரசியல்வாதியோ அல்ல என்றும், அதுவே தான் என்றும் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார். அந்தத் தெளிவை தன் எழுத்துவழியாகவே அடைந்தவன் கலைஞன்.

கம்பன் எப்படி இருந்தான் என உங்களுக்கு தெரியுமா? கம்பராமாயணம்தானே இன்றும் நிலைகொள்கிறது? கம்பன் தாசித்தெருவில் அலைந்தான் என்று கதை உண்டு. ஆகவே கம்பராமாயணத்தை வாசிக்கமாட்டேன் என்று சொன்னால் அது எவருக்கு இழப்பு? எழுத்தாளன் ஒரு அம்மன்கொண்டாடி போல. அவனும் சாமானியன். உள்ளூர் டீக்கடையில் அமர்ந்து உள்ளூர் அரசியல் பேசுபவன். ஆனால் திருவிழாவில் சன்னதம் கொண்டால் அவனிடம் வெளிப்படுவது தெய்வம். அந்த தெய்வம்தான் உங்களிடம் பேசுகிறது. அது பூசாரியின் சொல் அல்ல.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 30, 2021 10:35

மாயச்சூதின் ஒற்றைப் பகடை- நரேன்

         

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம் விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021

கவிஞர் விக்ரமாதித்யனின் நிழற்படங்களை விடவும் அவரது முகம் கோட்டோவியங்களில் அதிக உயிர்ப்புடனும் உள்ளெழுச்சியின் ததும்பலுடன் இருப்பதாகத் தோன்றும். சொற்களின் சப்தமற்ற இடைவெளிகளில் கவிதை முகிழ்த்தெழுவதைப் போல. விக்ரமாதித்யனின் கவிதை வரிகளை ஏதோவொரு கோணத்தில் விதவிதமாக அடுக்கி வைத்தாலும் இறுதியில் அவர் முகமே வெள்ளந்திச் சிரிப்புடன் வெளிப்படவும் கூடும். கவிதைகளை நூல் பிடித்து மேலேறி நேரே கவிஞனைச் சென்றடையும் சாத்தியத்தை வார்த்திருப்பவர்கள் தேவதேவனும் விக்ரமாதித்யனும். இருவருமே குழந்தைமையின் அகக் குரல் கொண்டவர்கள்தான் எனினும் முதலாமவர் மோன நிலையில் ஆன்மிக அமைதியைத் தேடித் திரிபவர் பின்னவர் இயல்பெழுச்சியின் காத்திரமான வெளிப்பாடு கொண்டவர். கவி பாடுபவர்களாக மட்டுமே நின்றுவிடாமல் கவிஞனாகவே தன் வாழ்வைத் தரித்துக்கொண்டவர்களின் கவிதைகள் அத்தனையும் நம்மை கை பிடித்து கவிஞனிடமே மீண்டும் மீண்டும் கொண்டு சேர்க்கின்றன. கவிஞனின் முகம் சற்றேனும் நம் மனதில் எழாமல் அக்கவிதைகள் சில நேரங்களில் முழுமை கொள்வதில்லையோ என எண்ணச் செய்கிறது.

 

‘…சாக்லட்டே சாக்லட்டே

குழந்தைகள் விரும்பும் சாக்லட்டே

சிகரெட்டே சிகரெட்டே

நேரங்கெட்ட நேரத்தில் தீர்ந்து போகும் சிகரெட்டே’

எனும் வரிகளில் உள்ளது ஒரு கவிஞனின் தவிப்பு எனும்போது அது தீவிரம் கொள்கிறது. கள்ளமற்ற, காரணங்களுமற்ற ஒரு குழந்தைத் தவிப்பைப் போன்றதுதான் ஒரு சிகரெட் கையில் இல்லாமல் போகும் கவிஞனின் தவிப்பும். அதுவும் அது அண்ணாச்சியின் கையில் அப்போது இல்லாமல் போவது பதற்றம் கொள்ளச் செய்வதும்கூட. துழாவிய கையில் ஒரு சிகரெட் அகப்படாமல் போன அந்நேரம் ஒரு கவிதை முளைக்கும் நேரமாக இருந்திருக்கலாம் அல்லது அக்கவிதை முழுமையடையும் கணமாகவும் இருந்திருக்கலாம்.

நவீனத் தமிழிலக்கிய வாசகனிடம் பல்வேறு சுவாரசியமான கதைகள் மூலம் கவிஞர் விக்ரமாதித்யன் புலப்பட்டுக்கொண்டேயிருக்கிறார். இலக்கிய முகாம்களிலும் தனிச் சந்திப்புகளிலும் அண்ணாச்சியின் குறும்புத்தனமான சொல்லாடல்களைப் பற்றியும் முகம் நோக்கி அவர் எழுப்பும் கேள்விகளைப் பற்றியுமான கதைகள் இலக்கியச் சூழலில் எப்போதும் பேசப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன.  அண்ணாச்சியை நேரில் சந்தித்திராதவர்கள் கூட அவரை வெகு அணுக்கமாக உணரச் செய்துவிடுகிறது அக்கதைகள்.

அண்ணாச்சி தன்னையே வரித்து கவிதைகளில் முன்வைப்பதின் நீட்சியாகத்தான் அவரது சிறுகதைகளும் அமைந்திருக்கின்றன. அவர் செல்லுமிடமெல்லாம் கையில் காகிதம் வைத்திருப்பார். எச்சூழலிலும் அதில் கவிதைகள் எழுதுவார். அடைமழையில் நனைந்தாலும் அக்கவிதைத் தாளை மட்டும் பத்திரமாகக் கரை சேர்த்துவிடுவார் என்று அவரைப் பற்றிச் சொல்லப்படுவதுண்டு. பலநேரங்களில் அவர் சொல்லச் சொல்ல உடனிருப்பவர்கள் எழுதி கவிதைகள் கொண்டு சேர்த்ததும் உண்டு. எந்நேரமும் கவிதையில் உழல்பவர், மிக அரிதாகத்தான் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். ‘அவன்-அவள்’ என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ள அவரது கதைகள் அத்தனையும் தன்வெளிப்பாட்டின் நேரடி முகம் என்றே கொள்ளத்தக்கவை. சிறுகதைத் தொகுப்பின் இத்தலைப்பே கதைகளின் உள்ளியல்பை தெளிவாகச் சொல்லிவிடுகிறது. ‘அவனுக்கும்-அவளுக்கும்’ இடையில் சதா எழும்பி அமைந்து அலையடித்தபடி இருக்கும் உளக் கொந்தளிப்புகளின் ஊசலாட்டம்தான் இக்கதைகளின் மையம். அண்ணாச்சியை நெருங்கி அறிந்தவர்களால் இந்தக் கதைகளுக்கும் அவர் வாழ்விற்குமான நெருக்கத்தைப் புரிந்துகொள்ள இயலும். ‘இவன்’,’பூர்ணன்’,’கருப்பையா’, ‘நம்பி’ என்றெல்லாம் இக்கதைகளில் விளிக்கப்படும் பாத்திரங்களுக்கு நேரடியாகவே அண்ணாச்சியின் முகம்தான். ஆனால், கவிதைகளுக்கு இல்லாத ஒரு சுதந்திரம் சிறுகதைகளுக்குண்டு. படைப்பாளியின் முகமறியாதவன் கூட கதைகளுக்குள் வாழ்ந்து வெளிவரமுடியும். கவிதை கிளர்ந்தெழும் மெளனவெளி இக்கதைகளில் இல்லை. பின்னிப்பிணைந்திருக்கும் உறவுகளுக்கு இடையில் ஊசலாடும் மனங்களின் பதிவுகள்தான் இவை. பெரும்பாலும் ஒரே கதை மாந்தர்களே அத்தனை கதைகளிலும் வருகிறார்கள். சற்று அசந்து கதைகளை வேறு ஏதேனும் வரிசையில் மொத்தமாக வாசித்தால் சுயசரிதத்தன்மையிலான ஒரு நாவல் வாசிப்பனுபவத்தைப் பெறவும் வாய்ப்புண்டு. ஒரு குடும்பத்தின் வெவ்வேறு காலங்களைப் புகைப்படங்களாகப் பதிந்து சட்டகம் போட்டு வரிசையாகத் தொங்கவிட்டதைப் போன்றது இச்சிறுகதைகள். காந்திமதி, சிதம்பரம், சேகர் தம்பி, கமலா சித்தி, பெரியம்மைகள், மதினிகள், ஒன்றுவிட்ட அண்ணன்கள் அக்காக்கள் என உறவுகளால் நிறைந்து ததும்புகிறது இக்கதைகள்.

ஒரு சீட்டுக்கட்டை எவ்வளவு நேர்த்தியாகக் கலைத்து வெவ்வேறு விசை கொண்டு அடுக்கிச் சேர்த்து பின் விரித்துப் பார்க்கும்போது அது மீண்டும் எண் வரிசை பிசகாமல் வந்து நிற்கும் மாயம் போன்றது இக்கதைகள் சென்று முடியும் இடங்கள். எவ்வளவு வறுமையும், உறவு விரிசல்களும், மெல்லிய வன்முறைகளும், சாபங்களும் நிறைந்த இவ்வாழ்க்கை இறுதியில் ஒரு பெருமூச்சுடனோ அல்லது ஒரு புன்னகையுடனோ மீண்டும் அதே நேர்க்கோட்டுக்கு வந்துவிடுகிறது.

அடிப்படையான இரு உணர்வுத் தளங்களில் இக்கதைகளைப் பிரித்து வைத்துவிட முடியும். சிறுவனாக, குட்டி கருப்பையாவாக தக்கவைக்கும் கள்ளமின்மையும் ‘பூர்ணனாக’ வளர்ந்து கணவனாக அடையும் கையறுநிலையும் இச்சிறுகதைகளில் வெளிப்படும் ஆதார உணர்வுகள். நிலை தடுமாறும் உறவுகளை ஒரு குழந்தைமையின் கள்ளமற்றதனத்துடன் சாட்சியாகச் சொல்லப்படும் கதைகள் ஒருபுறமும் அலைபாயும் தெருக் கவிஞனின், போதை உடுத்தி தன்னை இவ்வுலகிலிருந்து வெளியேற்றி பொத்தி வைக்கும் முயலும் கையறுநிலையின் கதைகள் மறுபுறமும் என பிரபஞ்சத்தின் முன் சடை விரித்து, கை விரித்து நிற்கின்றன இக்கதைகள்.

‘அவன் அவள்’ எனும் சிறுகதை ஒரு நீள்கவிதை. அண்ணாச்சியின் கவிதைகளிலிருந்து அவரின் சிறுகதை உலகிற்குள் நுழைவதற்கான பிடி கயிறு என்றே இதைக் கொள்ளாலாம். நீண்ட வசன கவிதை மொழியில் ‘அவன்’ பார்வையில் அவனும் அவளும் நிகழ்த்தும் இந்த நீடித்த யுத்தம் விவரிக்கப்படுகிறது. அவன் மீது அவள் வாசிக்கும் குற்றப்பத்திரிக்கையை அவனால் தாளமுடியவில்லை, அவளது புகார்கள் அவனைச் சுட்டெரிக்கின்றன. பெண்தெய்வங்களிடம் மன்றாடுகிறான். ஆண்களின் மீது கோபமெழுகிறது. அத்தனை ஆண்களையும் நிற்கவைத்துச் சுடவேண்டும் எனக் கொதிக்கிறான். ‘என்னை விட்டுவிடு’ என்கிறாள். அவள் கன்யாகுமரி அம்மன் போலத் தனித்திருக்கக்கூடியவள் ஆனால் அவனால் அது முடியாது. சினிமாவிற்கு கூட ஒற்றையாய் போக முடியாதவன். தனித்துப் படுத்து பழக்கமில்லை. ஒரு அடிமையைப் போல இப்போது மண்டியிடுகிறான். ஆனால் திருமணமான முதல் நாளிலேயே அவனுக்குத் தெரிந்துவிட்டது. இவள் ராணி. இவள்தான் ஆளப்போகிறாள். தன்முனைப்பு கொண்ட ஈருயிர்கள் கட்டித் தழுவுதல் கூட போர்முனை விசையில்தானே அமையும். ஆணுக்கேயான அகம்பாவம் ஆளுகையை ஏற்க மறுத்தது. அவள் மனசை மாற்ற முடியவில்லை, எல்லாவற்றிலும் விட்டுக்கொடுத்துப் போக வேண்டியிருந்தது. குடித்துவிட்டு வெளியே வந்தவன் ‘அன்புக் கழிவில்லை காண்’ என்று உரக்கப் பாடுகிறான். நடை தூரத்திலிருக்கும் வீட்டிற்கு நிலாவின் துணை கொண்டு மீண்டும் நடந்து செல்கிறான். அவனால் அக்கதவுகளைத் தட்டாமல் இருக்க முடியாது, அவனை உள்ளே சேர்க்கவும் வெளியே தள்ளி அல்லாடவிடவும் அவளால் கதவுகளைத் திறக்காமல் இருக்க முடியாது.

“…

கோயிலுக்கென்று புறப்பட்டு ஒயின்ஷாப்புக்குப் போகிறவனிடம்

ஒரு

ஒழுங்கை

எதிர்பார்த்தால்

ஏமாந்துதான் போவாய்

எனில்

கிளம்பிவிட்டிருந்த உறுத்தலில்

ஒருநாள்

போய்

வந்து

பிரசாதத்துடன் நிற்கும் பொழுதும் ஏமாந்துதான்

போவாய்

நதியின் போக்கு

நற்போக்கா முற்போக்கா பாப்பா”

என்று குறும்புத்தனத்துடன் கேட்கும் கவிஞன் ஒரு நதியைப் போன்றவன். தன் திசை எதுவென்று அறிந்தவனில்லை. தன் போக்கைக் குறித்து அவனுக்கு ஒரு புகாரும் இல்லை, அதை நியாயப்படுத்துவதற்குப் பெரிய காரணமும் கைவசம் இல்லை. ஆனால் அவள் அருவி. ‘பாலருவி’ சிறுகதையில் சங்கரியைப் பேரருவி என்கிறான் அவன். எப்படி எப்படியெல்லாம் காதல் செய்து இரண்டு பிள்ளைகள் பெற்ற பின் இப்போது விவாகரத்து கேட்டிருக்கிறாள். மீண்டும் அவள் கதவைத் தட்டுகிறான். தோடு தெறித்து விழ அவளை அவன் அடித்த காலங்கள் உண்டுதான். ஆனால் அதையெல்லாம் அவன் விட்டு எத்தனை வருஷமாச்சு. அவளின் முன் கோபமும், பதிலுக்குப் பதில் பேசும் வாய் தானே அதற்குக் காரணம். சென்னையில் பத்திரிக்கையில் வேலை பார்த்து மிச்சம் பிடித்து அனுப்புவது வெகு சிரமம். சமாதானம் செய்துவிடலாம், பார்த்துப் பேசினால் சரியாகிவிடுமென்றுதான் சாத்திய கதவை மீண்டும் தட்டுகிறான். ஆனால் இந்த முறை அக்கதவு திறக்கவில்லை. “எல்லாம் முடிஞ்சு போச்சு” என்ற சொல்லுக்கு மறித்துப் பேச இவனிடம் வார்த்தை ஏதுமில்லை. தோல்வியுற்றுத் திரும்பி பேருந்திலேறி ஊரின் எல்லையைத் தாண்டியதுமே நினைவுகள் வந்து மோதுகின்றன. நிச்சயம் இன்றைக்கும் இவனால் குடிக்காமல் இருக்கமுடியாது. இவனைக் கடவுள்தான் காப்பாற்ற முடியும். காற்றின் வீச்சில் கலைந்து பறக்கும் சிகையைப் போலவே விதியின் போக்கிற்கு ஒப்புக்கொடுத்தவனாய் முடிகிறது இக்கதை. ஆனால் இவையெல்லாவற்றையும் விடுத்து மீண்டும் தன்னைக் கேலி செய்த கதவின் முன்னே இவன் போய் நிற்பதற்கு வெகு காலமாகாது என்பதும் உண்மையே.

‘இன்னொரு நாள்’, ‘மனசு’ சிறுகதைகள் கணவன் மனைவியிடையே உருவாகும் மெல்லிய விரிசலைச் சத்தமின்றி சுட்டிக்காட்டும் கதைகள். பூர்ணன் வருவதற்குள் சங்கரி தூங்கிவிட்டாள். அவன் இன்னும் சாப்பிடவில்லை, தானே எடுத்துப் போட்டுச் சாப்பிடுவது கொடுமை. ஆனால் அவளை எந்த ஓசையும் எழுப்பிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறான். திருமணத்திற்குப் பிறகு எழுதுவது படிப்பதெல்லாம் அரிதாகிப் போனது. அடுக்களை விளக்கில் ஒதுங்கியமர்ந்து படித்து என்ன ஆகப் போகிறது என்றுகூட நினைக்கத் தொடங்கிவிட்டான். ஓசை படாமல் இரவில் ஒழுகிச் செல்லும் இவன் வாழ்வில் ஒரு சலனத்தை ஏற்படுத்துகிறது பக்கத்து வீட்டு தாடி அண்ணாச்சியின் குரல். வடிவு மதினியை வசவுச் சொற்களால் ஏசுகிறான். தான் ஒருவனே எத்தனை விவகாரங்களைப் பார்ப்பது, பிள்ளைகளையும் வீட்டையும் ஒழுங்காக பார்த்துக்கொள்ள முடியாது என்று சத்தம் போடுகிறார். பூரணனுக்கு தன் மீதே கோபம் வருகிறது. தன் குரலுக்கான சுதந்திரத்தை ஒரு வேலைதான் பெற்றுத்தர முடியுமென்று யோசிக்கிறான். பெண்டாட்டி உழைப்பில் சாப்பிடுவது ஒரு பிழைப்பா என்று சிந்தித்தபடியே தூங்கிப்போகிறான். ஒரு கவிஞனாக தினம் தினம் விழிப்பவனுக்கு இரவுகள் கொடுமையானவைதான். ஒரு வியாபாரியின் சப்தம் இவன் சிந்தையின் ஓசையைச் சமன் செய்யுமா என்ன? இன்னொருநாளை எதிர்பார்த்து இவன் உறங்கிப்போகிறான்.

இந்த கையறுநிலையை வெகு நுணுக்கமாக வெளிப்படுத்தும் சிறுகதை ‘மனசு’. இச்சிறுகதையில் பெயர்கள் புதியவை. ஆனால் இச்சிறுகதைத் தொடரை வாசிக்கும் வாசகனுக்கு ராஜுவும் பூர்ணனும் ஒருவரே என்று தெரியும். தன் மனைவி அலமேலுவை சதா வந்து சந்தித்துக்கொண்டிருக்கும் அவளின் அலுவலகத் தோழன் தினகரனை இவனால் தடுக்க முடியவில்லை. வீட்டிற்கே வந்துவிடுகிறான். கணவனும் மனைவியுமாக வெளியே சென்றாலும் அங்கே எதேச்சையாக வந்து சந்தித்துப் பேசுகிறான். நிரந்தரமான வேலையில்லை இவனுக்கு. இவளின் சம்பாத்தியத்தில்தான் குடும்பம் நடக்கிறது. அலுவலக விவகாரங்களைக் காரணம் காட்டி தினகரன் அலமேலுவை இவன் கண் எதிரிலேயே இத்தனை முறை சந்தித்துப் பேசி வழிகிறான். தன் சங்கிலியை விற்று இவர்களுக்கு உதவக்கூட தயாராக இருக்கிறான். இவன் எரிச்சலைடையும்போதெல்லாம் மனைவியின் பாவமான முகம்தான் இவனை ஆசுவாசப்படுத்துகிறது. இவனுக்கான அவில் மாத்திரை அவளின் இந்த முகம்தான். சமாதானமடைந்து உறங்கப் போகும் இவன் தன் மனைவியின் மீதான பிடியை ஒரு மெல்லிய நூலிழையாகத்தான் பிடித்திருக்கிறான். எதையும் இறுகப் பிடித்து முறித்துவிடும் நிலையில் அவன் வாழ்வு இல்லை.

அண்ணாச்சியின் கவிதைகளைப் போலவே அவரின் சிறுகதைகளிலும் உள்ளார்ந்து எழும் குறியீடுகளோ, பெரும் படிமங்களோ, உருவகங்களோ இல்லை. நேரடியான உணர்ச்சி சித்தரிப்புகள்தான். எந்தப் பூச்சுமற்ற கதைகள். மெய்யான வாழ்வுத் தருணங்களாலேயே அவை உச்சம் பெறுகின்றன. உறவுகளின் விதி மீறல்களுக்கும் அதைச் சமன் செய்யும் மன்றாடல்களுக்கும் சாட்சியாக நிற்கும் இளவயது பூர்ணனின் கதைகள் பெரும்பாலும் கொதிநிலையில் சொல்லப்பட்டவை. வீட்டிற்கு வராமல் நின்றுவிட்ட அப்பாவுடனான அம்மாவின் போராட்டங்களும், உடன் பிறந்தவர்களின் மரணங்களும், திரிபடையும் மனங்களும், இரண்டாம் தாரமாகி வேரோர் வீட்டில் பிடிப்பின்றி தங்கியிருப்பவளின் விழியோர கண்ணீருமென ஒழிவின்றி ஊசலாடும் கணங்களே கதைகளாகியிருக்கின்றன. ஆனால் அத்தனை உச்ச தருணங்களையும் சிறுவயது பூர்ணன் தன் குழந்தைமை மாறாமல்தான் காண்கிறான். அப்பாவுடன் தனி வீடு புகுந்த கமலா சித்தி இவன் கண்களுக்குக் காவிய நாயகி. அவளின் குடும்பக் கஷ்டம்தான் இவர்களுக்கு வில்லியாகிவிட்டாள் என்று எண்ணுகிறான்.

இந்தக் கதை வரிசையில் பூர்ணனின் சிறுவயது கதைகளையும் நாடோடியாய் வளர்ந்து கையறுநிலையில் தவிக்கும் கதைகளையும் இணைப்பது ‘சாபம்’ எனும் சிறுகதை. அப்பா கமலா சித்தியுடனே வீடெடுத்து தங்கிவிடுகிறார். அம்மாவும் போராடிப் பார்த்து ஓய்ந்துவிட்டாள். தன் பிள்ளைகளை ஆளாக்கினால் போதுமென்று அமைந்துவிட்டாள் அவள். அப்பாவிடம் ஒத்தாசையாக வேலை பார்க்கும் அழகப்பனின் அம்மைதான் இவன் அம்மா தேடிச் சென்று மனம் பகிரும் இடம். இதற்கு வினை வைத்தது போல் அழகப்பன், சித்தியின் அக்காவுடன் பழக்கமாகி தனி வீடெடுத்து தங்க ஆரம்பித்தான். அப்பாவை நம்பி தன் பையனை அனுப்பி ஏமாந்துபோனதாய் ஆச்சி முறையிட்டு அழுதாள். அம்மாவும் அப்பாவிடம் சண்டையிட்டாள். ஆனால், அழகப்பன் வீடு திரும்புவதாக இல்லை. இதன் பிறகு, ஆச்சி வீட்டிற்கு அம்மா பழையபடி போகும்போதெல்லாம் ஆச்சி கரிசனமாய் நடந்துகொண்டாலும் இடையில் ‘அவன் பிள்ளகொள்ளி விளங்குமா’ என்று சாபமிடுவாள். அம்மாவிற்கு மனம் கொள்ளாது. “அவரை என்ன வேணாலும் சொல்லுங்க… பிள்ளையள் என்ன செஞ்சாங்க” என்று கெஞ்சுவாள். அம்மா போவதற்கு எத்தனையோ உறவினர்களின் வீடு இருந்தும் அம்மா ஏன் ஒவ்வொருமுறையும் இந்த ஆச்சியின் வீட்டிற்குச் சென்று சாபத்தை வாங்கிக்கொள்கிறார்கள் என்று இவனுக்கு விளங்குவதில்லை. அந்த சாபச் சொற்களில் முங்கித்தான் அம்மா தன்னை மீட்டுக்கொள்கிறாளாக இருக்கும். ஆனால் அத்தனை சாபமும் இவன் தலை மீது கவிந்து பலிக்கத்தான் செய்தது. குடிகாரனாக, குடும்பத்தைக் காக்கத் தெரியாதவனாக, பிழைக்கத் தெரியாதவனாக நாற்பத்தைந்து வயதில் வளர்ந்து நிற்கிறான். தன் வாழ்வு இப்படித் தறிகெட்டு ஓடும் நிலைக்குப் பால்ய வயதில் அழகப்பன் ஆச்சி விடுத்த சாபம்தான் காரணம் என்று தன் மனைவியின் மடியில் விழுந்து கலங்கி அழுகிறான் இவன்.

“…

சந்திரனுக்கே தெரியும்தானே

சூரியனுக்கு அப்புறம்தான் தானென்று

சந்திரன் பக்கம்தானேயிருப்பான்

கவிஞன்

சூரியனுக்கே இந்த

சூட்சுமம் புரியும்…”

சூரியசந்திரர்கள் எனும் இக்கவிதையின் தலைப்பிலேயே உள்ள சிறுகதையில் பூர்ணனுக்கு தான் யார் பக்கம் என்பதில் குழப்பம் வந்துவிடுகிறது. அம்மா ஏசும் ‘தே..டியாளைப்’ முதன்முறையாகப் பார்க்கிறான். அப்பா இவனைத் தனிமையில் அழைத்து அறிமுகப்படுத்துகிறார். இவன் கிளம்புகையில் சட்டென்று அணைத்துக் கன்னத்தில் முத்தமிடுகிறாள், நிமிர்ந்து பார்த்தால் அவள் கண்ணோரம் நீர் திரண்டிருக்கிறது. அவளின் கலக்கம் இவனுக்கு விளங்கவில்லை. வீட்டிற்கு வந்து அம்மாவிடம் நடந்ததைச் சொன்னால் அம்மா கொள்ளும் கோபம் இவனை மேலும் குழப்புகிறது.

சிறுவனின் பார்வையில் சொல்லப்படும் கதைகளில் வெளிப்படும் கள்ளமின்மை உணர்ச்சி மேலிடும் கதைகளுக்கு ஒரு தனிச்சுவையைக் கூட்டிவிடுகிறது. ‘கடன்’ சிறுகதையில் அப்பாவிடம் வாங்கிய சைக்கிளுக்கான காசு கடனாக நின்றுவிட அதை மீட்டு வருமாறு சிறுவனை அனுப்பி வைக்கிறாள் அம்மா. பெரியவனின் தோரணையில் பெரியம்மையின் வீட்டு வாசலில் நின்று காசு இல்லாமல் திரும்புவதில்லை என்று அடம் பிடிக்கிறான். வழக்கமாக வந்து போகும் பெரியம்மை வீடு இன்று அவனுக்கு வென்று எடுக்க வேண்டிய போர்க்களம் போலாகிவிடுகிறது. பாதி காசாவது கொடுத்து விடுகிறேன் நீ வந்து சாப்பிடு என்று அண்ணன் அதட்டி அழைத்த பின்னரே அவன் இலையில் கை வைக்கிறான். விருந்தைப் போன்ற ஒரு நல் உணவை உண்டு முடித்தபின்தான் கவனிக்கிறான், இதுநாள் வரை அங்கிருந்த ஒரு செப்பானை காணாமல் போயிருப்பதை. அப்பாவின் கடையில் ஒவ்வொரு சைக்கிளாய் காணாமல் போனதிற்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை.

இவனை அழைத்துக்கொண்டு அப்பாவைத் தேடிப் போய் பார்க்கிறாள் அம்மா, ‘கொதி’ சிறுகதையில். கண்களில் நீர் ததும்ப தன் வாழ்விற்கும் பிள்ளைகளுக்கும் ஒரு முடிவு தெரியாமல் இங்கிருந்து நகருவதில்லை என்று அடம் பிடிக்கிறாள். அப்பா அவளை மிகப் பொறுமையாக சமாதானப்படுத்த முயல்கிறார். அம்மாவின் ஆங்காரமும் அப்பாவின் நிதானமும் இவனுக்குப் பதற்றத்தைக் கொடுக்கிறது. அப்பாவின் தோளைப் பற்றிய அம்மாவை ஏதோவொரு வேகத்தில் நெட்டித் தள்ளியதில் சுவரில் முட்டி அவள் தலையிலிருந்து இரத்தம் வழிகிறது. அம்மா கண் விழித்து எழுந்து நின்று நேரமாச்சு போகலாம் என்று சொன்னதும் இவனுக்கு நிம்மதியாக இருக்கிறது.

ஆங்காரப் பேச்சுகளுக்கும் திரிபடைந்த மன வெளிப்பாடுகளுக்கும் அஞ்சி வளரும் கள்ளமற்ற சிறுவனாகத்தான் பூர்ணன் வெளிப்படுகிறான். தக்க வைத்துக்கொண்ட கவிமனம்தான் பிற்காலத்தில் அவனை பகவதி அம்மையிடம், குழல்வாய்மொழி அன்னையிடம், கன்னியாகுமரி தேவியிடம் வெற்று கைகளை ஏந்தி கவிபாடித் திரியும் நாடோடி பாணனாக உருமாற்றியிருக்கிறது.

“இன்றைய கவிதை – எதிர் கவிதை” என்று எந்த கட்டுக்குள்ளும் அடங்காத கவிதைகளை எழுதிக் குவித்தவர்தான் என்றாலும் அண்ணாச்சிக்கு சிறுகதைகள் சற்று அதிகமான சுதந்திரத்தைக் கொடுத்தது என்றே எண்ணத் தோன்றுகிறது. 90களின் தொடக்கம் முதல் 2019 வரை வெவ்வேறு காலகட்டங்களில் அவர் எழுதிய சிறுகதைகள் அத்தனையிலும் ஒற்றை வாழ்வின் பல்வேறு பக்கங்களைத் தொட்டுத் திறந்து காட்டியபடியே இருக்கிறார். பெரும் எண்ணிக்கையிலான பல்வேறு கதை மாந்தர்கள் இச்சிறுகதைகளில் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்குத் தாவி வந்து நிற்கிறார்கள், பாத்திரங்களின் ஒருமை குலையாமல். தன் நீண்ட நெடிய வாழ்வில் கடந்து வந்த வினோதமான மனிதர்களும் திரும்பத் திரும்பச் சொல்லப்படும் கதையில் ஒரு புதிய வண்ணத்தைப் பாய்ச்சிவிட்டுப் போய்விடுகிறார்கள். உதாரணமாக, ‘எலிஸபெத்ராணி’ சிறுகதையில் பழைய இறும்புக் கடையில் பணிபுரியும் வண்டிக்காரர்கள்.

இன்று கிட்டத்தட்டத் தொன்மக் கதைகளாகவே மாறிவிட்டன அண்ணாச்சி பற்றிய பேச்சுகள். கவிதைகளிலும் கதைகளிலும் அவர் தன்னையே முன்வைக்கும் தோறும் அவர் மீது மர்மங்கள் வந்து கவிந்தபடியே இருக்கின்றன. திறக்கத் திறக்க உள்ளே ஒரு புலப்படாத மர்மம் தன்னை மூடிக்கொள்வதைப் போல. குழந்தை மனமே நேரெதிரான மாயக் குணங்களைக் கொண்டதாகவும் இருக்கிறது. நேரடித்தன்மையும் எளிமையும் கொண்டே அம்மாயத் தருணங்களை மீட்டெடுக்கிறார் கவிஞர் விக்ரமாதித்யன். ‘பிழை’ சிறுகதையில் அம்மாவும் ‘இவனும்’ சாலையில் நீர் அரித்து வெங்காயம் முளை தெரிய இரைந்து கிடப்பதைக் கண்டு, துண்டு நிறையச் சேகரித்துக் கட்டி வைத்துக்கொள்கிறார்கள். வழியில் ஆட்டிடையர்களிடம்  ‘வெங்காயம் இப்படி வெள்ளையாக இருக்கிறதே’ என்று விசாரிக்க, அவர்கள் ‘விஷப் பூண்டை ஏன் கட்டி வெச்சிருக்கீங்க, யாரும் தின்னுடலையே’ என்று கேட்பார்கள். இவர்கள் பதைத்து அவற்றைக் கொட்டிவிட்டுப் போவார்கள். வெங்காயமும் விஷப்பூண்டும் கண நேரத்தில் இடம் மாறுவதைப் போன்ற மாயத் தாண்டவம்தான் இவ்வாழ்க்கை. ஊழுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தவன், மாய வசீகரத்தில் சிக்குண்டு தன்னையே பணயம் வைத்துச் சூதாடும் குழந்தைக் குறும்புடையவனை அந்தப் பூண்டும்தான் என்ன செய்துவிடும்?

நரேன்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 30, 2021 10:34

திருவெள்ளறை – கடிதங்கள்

திருவெள்ளறை – கிருஷ்ணன் சங்கரன்

அன்புள்ள ஜெயமோகன்,

கிருஷ்ணன் சங்கரன் அவர்களின் “திருவெள்ளறை “கட்டுரை எனக்குள் பல நினைவுகளைக் கிளறிவிட்டது. துறையூருக்கு அருகில் இருக்கும் ஜெயராம் பொறியியல் கல்லூரியில்தான் நான் படித்தேன். திருவெள்ளறையும் அருகில் இருப்பதால், சனிக்கிழமைகளில் நானும் என் நண்பன் வள்ளியப்பனும் அக்கோயிலுக்குச் செல்வது வழக்கம். ஆளோய்ந்த பிரம்மாண்டத்தில் துளியாக கரையும் அந்த அனுபவம் தரும் கிறக்கம் காரணமாகவே அடிக்கடி அங்கு செல்வோம். பிரம்மாண்டமான அந்த மொட்டைக் கோபுரம் அதற்கு மேலே விரிந்திருக்கும் தூய வானம், காற்றில் சொட்டிக்கொட்டிருக்கும் அமைதி, கூடவே பாறைகளைத் தீட்டிக்கொண்டிருக்கும் வெயில்,

அங்கே அமர்ந்து இலக்கியம் குறித்தும் வாசித்த நூல்கள் குறித்தும் பேசிக்கொண்டிருப்போம். 2003 ஆம் ஆண்டு கடைசியாக அங்கு சென்றோம். அதன் பின் இன்றுவரை செல்லவில்லை. பெருமாளின் பெயர் புண்டரீகாக்‌ஷன், செந்தாமரைக் கண்களைக் கொண்டவர். ராமானுஜர் அக்கோயிலில் சில காலம் தங்கியிருந்தார் என்கிறார்கள். அந்தக் கோயிலில் ஒரு சாளரத்தின் வழியே நோக்கினால் தூரத்தில் திருவரங்கக் கோயிலின் கோபுரம் தெரியும். கிருஷ்ணன் சங்கரன் அதைப் பார்த்தாரா எனத் தெரியவில்லை. இடைப்பட்ட இந்த நீண்ட காலத்தில் சினிமாப் பாட்டுகளை அலறவிடும் திருச்சி தனியார் பேருந்துகள் மட்டும் இன்னும் மாறவில்லை எனத் தெரிகிறது. கிருஷ்ணன் சங்கரன் அவர்களுக்கு நன்றி.

மிக்க அன்புடன்

கணேஷ்பாபு

சிங்கப்பூர்

அன்புள்ள ஜெ

கிருஷ்ணன் சங்கரன் எழுதிய திருவெள்ளறை ஒரு முக்கியமான கட்டுரை. இங்கே ஒருபக்கம் கோயில் அழிக்கப்படுகிறது. தமிழ்ச்சமூகம் வேடிக்கை பார்க்கிறது. மறுபக்கம் சிலர் கோயில்களை காக்க முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு செயல்படுகிறார்கள். அவர்கள் அடையாளம் காட்டப்படவேண்டும். அவர்களின் பணி சமூகத்துக்கு முன்னுதாரணமாக அமையவேண்டும். ஆணவத்துக்காக புதிய கான்கிரீட் கோயில்களை கட்டி அவை நாற்பது ஐம்பது ஆண்டுகளில் சிதிலமாகி அழியவிடுவதை விட இது காலத்துக்கும் பெயர் சொல்லும் பணி. அதை நாம் சொல்லியாகவேண்டும்

 

செல்வக்குமரவேல்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 30, 2021 10:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.