Jeyamohan's Blog, page 869
December 9, 2021
தேவி மொழியாக்கம்
நூல்கள் வாங்க
https://www.vishnupurampublications.com/அன்புள்ள ஜெயமோகனுக்கு,
‘தேவி’ கதை வாசித்து எத்தனை மாதங்கள், வருடங்களானாலும் மறக்கமுடியாத கதை. நம் அன்றாடத்தை நிகழ்த்துவிப்பவளின் கதையை எப்படி மறக்க முடியும்? அவள், ஆயிரம் முகங்கள் எடுக்கக்கூடியவள். அவள் நினைத்தால் எதுவும் முடியுமெனச் சொல்லும் கதை. அவளாகப் பொறுமையாக இருந்தால் இருக்கலாம். அம்மா சரஸ்வதியாக இருப்பவள் , வட்டி ராஜம்மாவாக உருவெடுக்க அதிக நேரம் பிடிக்காது.
எழுத்தாளர் வண்ணதாசன் அவர்கள் தனித்துப் பாராட்டிய கதை. ‘மொழி’ கடந்து புரிந்துகொள்ளக்கூடிய கதை. ரெமிதா சதீஸ் அவர்கள், அந்தக் கதையை மொழி பெயர்க்க எடுத்துக்கொண்டதில் ஆச்சரியமில்லை. இந்தக் கதையில், ஒரு ஓட்டம் இருக்கும். வெண்முரசு-வில் அபிமன்யு வரும் ஒவ்வொரு அத்தியாயத்திலும், அவனது நிற்கமுடியாத பதட்டத்தையும், சுறுசுறுப்பையும் வேகத்தையும் வாசகனால் உணரமுடியும். ஆயர்குலப் பெண்களை, ‘ராதை’ என்று அவன் அழைத்துப்பேசும் குறும்பு தெரியும். அதைப் போலத்தான் இந்தக் கதை முழுதும் ஒரு ஓட்டம் இருக்கும். அனந்தன், லாரென்ஸ் இளைஞர் கூட்டம், அவர்களின் நாடகம் போடும் ஆர்வம், நடிகையைத் தேர்வு செய்யும் வேகம் எல்லாமும்.
உங்கள் எழுத்தில். இருந்த ஓட்டத்தையும் வேகத்தையும் ரெமிதா , ஆங்கில மொழிபெயர்ப்பில் அப்படியே கொண்டு வந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். ‘Devi’ Usawa இலக்கியப் பத்திரிகையில் வெளியான டிசம்பர் 1 அன்று, காலை நேரத்தில் அலுவலகம் கிளம்பும் நேரத்தில் முதல் நான்கு வரிகள் வாசிக்கலாம், மீதியை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தேன். தமிழில் வாசிக்கும்பொழுது உள்ளிழுத்ததுபோல் ஆங்கிலமும் அப்படியே உள்ளிழுத்துக்கொண்டது. ரெமிதாவின் தேர்ந்தெடுத்த சொற்களும், உட்பொருளை மட்டும் உணர்த்தும்படியாக வாக்கியங்களை அமைத்த விதமும், ஆங்கிலம் மட்டும் தெரிந்த வாசகனுக்கு உறுத்தாமல் இருக்குமென தோன்றியது
சில உதாரணங்கள். அனந்தன் பெருமூச்சுவிட்டான் என்பதை, Ananthan heaved a sigh என மாற்றியுள்ளார். அவனது அதீத பதட்டத்தை anxiety grew into abject terror என்கிறார். உனக்காக ராத்திரி பகலா புல்லுபறிச்சு சாணிவழிச்சு வாழ்ந்தவ… என்பதை I toiled day and night for you and worked my fingers to a bone என மாற்றி ஈஸ்வரியம்மா மகனை படிக்கவைக்கப்பட்ட கஷ்டத்தை சிறிதும் வீர்யம் குறையாமல் ஆங்கில வாசகனுக்கு கடத்துகிறார். .
வட்டி ராஜம்மா உரக்க சிரித்தாள். “தம்பி, நம்ம பேரு வட்டி ராஜம்மை. வட்டின்னா என்ன? பணத்துக்கு குடுக்கிற லாபம்- என்பதை Listen kid, my name is Vatti Rajammai. What do you think Vatti means? The interest on money என மொழிபெயர்த்து வட்டி என்ற தமிழ்ச் சொல்லுக்கு interest என்று கற்பித்துவிடுகிறார்.
மற்ற கதைகள் வாசித்து நமக்கு எப்படி கிரேக்க கடவுள்கள், யார் யாருக்கு என்ன தொழில் என்று தெரியுமோ, அதைப் போலத்தான, நல்ல ஆங்கில வாசகனுக்கு, பிரம்மனின், விஷ்ணுவின், சிவனின் கடமைகள் என்ன என்று தெரியும். ஒருவளே எப்படி மூன்று வேடங்களில் நடிக்கப்போகிறாள், என்று அனந்தன் கவலைப்படும்பொழுது, “Narayanan Potti says that she can play thousand roles. parasakthi – Shiva, Vishnu , pramm are all her “ புரிந்துகொள்வான்.
மூலக்கதையை போலவே இதையும் வாய்விட்டுச் சிரித்துக்கொண்டேதான் வாசித்தேன். உங்களின் எழுத்துக்களை, உலகளாவிய வாசகர்களுக்கு, எடுத்துச்செல்லும் ரெமிதாவை பாராட்டுகிறேன்.
அன்புடன்,
ஆஸ்டின் சௌந்தர்.
தேவி மொழியாக்கம்
https://www.usawa.in/issue-6/translation/remitha-satheesh.html
சவக்கோட்டை மர்மம்
ஜா.தீபா கடிதங்கள்
விஷ்ணுபுரம் விருந்தினர்-7, ஜா.தீபா
விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021
நூல்கள் வாங்க
https://www.vishnupurampublications.com/
அன்புள்ள ஜெ
ஜா தீபாவின் ஒற்றைச்சம்பவம் கதை வாசித்தேன். இன்றைய சூழலில் தொடர்ச்சியாக எழுதப்படும் இத்தகைய கதைகளை வாசிக்கிறேன். இவை எழுதப்படவேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவற்றிலுள்ள ஒற்றைப்படைத்தன்மை என்னை கொஞ்சம் சலிப்படையச் செய்கிறது.
அதாவது இவை பெண்களின் தரப்பை மட்டுமே பேசுகின்றன. வாதாடுகின்றன. [நானும் பெண் என்பதனால் இதைச் சொல்லாமலிருக்க முடியாது] அந்தப்பெண்களை பல்வேறுவகையில் பாதிக்கப்பட்டவர்களாகச் சித்தரிக்கின்றன. கலை என்பது எல்லாவற்றையும் சொல்வது. எலியின் உயிர்வதையையும் பூனையின் பசியையும் சேர்த்தே சொல்வது என்பார்கள். அப்படி வேண்டாம். ஆனால் இன்னொரு எலியின் தரப்பையாவது சொல்லலாம் அல்லவா?
எனக்கு இந்தக்கதையை வாசிக்கையில் ஒருவகை ஒவ்வாமைதான் உருவாகியது. மனித இயல்பு என்பது என்ன? அது எம்பதியும் ஈகோவும் பிரிக்கமுடியாதபடிக் கலந்தது. எல்லா உறவுகளும் அப்படித்தான். நம் பிள்ளைகளுக்காக உயிர் வாழ்கிறோம். கடைசிப்பைசா வரைச் சேர்க்கிறோம். ஆனால் அவர்கள் வெற்றிபெற்று நம்மை கௌரவப்படுத்தவேண்டும் என்றும் நினைக்கிறோம். அவர்கள் நம் பெயரைச் சொல்லவேண்டும் என நினைக்கிறோம். எங்கே எம்பதி முடிகிறது, எங்கே அது தொடங்குகிறது? அந்த எட்ஜ் சொல்லப்படும்போதுதான் அது கலை. இது பிரச்சாரம். அரசியல்பிரச்சாரம் கலையாகாது என்கிறீர்கள். பெண்ணியப்பிரச்சாரம் மட்டும் கலையாக ஆகுமா என்ன?
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இன்னொருவரின் கொடை இருக்கும். கொடையே இல்லாமல் சுயம்புவாக எவரும் உருவாகிவிட முடியாது. அந்தக் கொடையை அளிப்பவர்களுக்கு கிளெயிமும் இருக்கும். அதுவும் மனித இயல்பு. அப்படி ஒரு சிக்கலை எப்படி நூலிழைபிரித்துச் சொல்வது என்பதுதான் கலை. இந்தக்கதையில் உயிரைவிடும் அளவுக்கு அந்தக் கணவனுக்கு எம்பதியும் கிளெயுமும் இருக்கிறது என்பதே அந்தப்பெண்ணின் தரப்பை குரூரமான ஈகோவாக காட்டிவிடுகிறது. இன்னொருத்தரின் எம்பதியை பெற்றுக்கொண்டு அவர்களின் கிளெயிமை மறுப்பது இவளுடைய ஈகோ மட்டும்தான்.
இப்படித்தான் டீனேஜ் பெண்கள் இருப்பார்கள். அவர்களின் பார்வை அப்படி. ஆனால் அதை முதிர்ந்த பார்வையில்தான் கலை பார்க்கவேண்டும். டீனேஜ் பார்வை ஆசிரியருக்கு இருக்கக்கூடாது.அதற்கு பெண்ணியமுலாம் பூசி வைத்தால் அது புரட்சிப்பார்வையோ அல்லது புதியபார்வையோ ஆகிவிடாது. அல்லது அந்த எம்பதியும் கிளெயுமும் ஓர் ஆணிடமிருந்து வந்தால் அது அடக்குமுறையும் ஆகிவிடாது. ஒரு தொழிலில் நுழைந்தால் அந்த தொழில்கற்றுத்தருபவரிடமே அந்த எம்பதி – கிளெயிம் இரண்டும் இருப்பதைக் காணலாம். ஆணானாலும் பெண்ணானாலும். நான் உருவாக்கினேன் என்று சொல்லாத ஆசிரியரே இல்லை. அது அடக்குமுறையா? அது மனித உறவின் ஒரு முகம். அப்படித்தான் உலகம் இயங்கமுடியும்.
அதில் ஒரு மூச்சுத்திணறல் இருக்கலாம். அதை எழுதுவது வேறு. ஆனால் இந்தக்கதை அதை வெறுப்போடு சொல்கிறது. பெரிய அடக்குமுறை, சுரண்டல் என்கிறது. அது முதிர்ச்சி இல்லாத பார்வை. அதோடு இந்தக்கதை கதையில் உள்ளுறைந்த ஒரு நுட்பமாக இதையெல்லாம் சொல்லவில்லை. கதையில் கதாபாத்திரமே இதையெல்லாம் பேசுவதுபோல எழுதுகிறார் ஆசிரியர். அங்கேதான் அது பிரச்சாரமாகிறது. கதையின் கட்டமைப்பில் இருந்து வாசகர்களே இதையெல்லாம் ஊகிக்கவிட்டிருந்தால் வேறுவகை வாசிப்புகளுக்கும் இடமிருந்திருக்கும்.
எஸ்
அன்புள்ள ஜெ
ஜா தீபாவின் மறைமுகம். ஒரு முக்கியமான கதை. ஒவ்வொரு வரலாறும் சொல்லப்படாத இன்னொரு வரலாற்றுடன் சம்பந்தப்பட்டது. ஒரு வரலாறு நமக்கு ஏற்புடையது. இன்னொன்று நம்மை சங்கடப்படுத்துவது. 1920களில் இந்தியா அடிமைப்பட்டிருந்தது. ஆனால் அதில் பாதி பெண்கள் மிச்ச பாதி ஆண்களுக்கு அடிமைகளாக இருந்தனர். அடிமைகளுக்கு அடிமைகள். அவர்களுக்கு வெள்ளையர்களின் அடிமைத்தனம் என்னவென்றே தெரிந்திருக்காது. ஏன் வாழ்கிஓம் என்றே தெரியாமல் வாழ்ந்தே அழிந்தவர்கள் பலகோடிப் பெண்கள். அவர்களின் கதையைச் சொல்லியிருக்கிறார். ஆனால் பிரசங்கம் இல்லாமல், நுட்மபாக நிகழ்வாக சொல்லியிருக்கிறார். கலையமைதி கூடிய அழகான கதை.
எம்.பிரபாகர்
மறைமுகம் ஜா தீபா
விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத்
விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்
விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன்
விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை
விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார்
விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன்
விஷ்ணுபுரம் விருந்தினர் -7, ஜா தீபா
விஷ்ணுபுரம் விருந்தினர்-8, சோ.தர்மன்
மருத்துவர் ஜீவா நினைவேந்தல், ஈரோடு
தனது சேவையாலும் அர்ப்பணிப்பாலும் பொதுச்சமூகத்தின் ஆன்மாவோடு இறுதிவரையில் உரையாடியவர் ஈரோடு மருத்துவர் ஜீவானந்தம். காந்திய-கம்யூனிச கூட்டுறவுச் சிந்தனைகளின் மூலம் இவர் உருவாக்கிய பல முன்னெடுப்புகள் இன்று பல்வேறு துறைகளில், பலவிதக் களங்களில் அசாத்தியமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. சேவை மருத்துவத்தைப் பரவலாக்குதல், கூட்டுறவு மருத்துவமனைகளை பொதுமக்கள் பங்களிப்போடு நிர்மாணித்தல், சூழலியல் மீட்சிக்கான திட்டங்களை இடைவிடாது வகுத்தல், கல்விக்கூடங்களைத் துவக்குதல், செயலாற்றும் அமைப்புகளை உருவாக்குதல், எழுத்து மற்றும் மொழிபெயர்ப்பு வாயிலாக தொடர்ந்து படைப்புகளை வெளியிடுதல் என மருத்துவர் ஜீவா தமிழ்ச்சூழலில் பங்களித்திருக்கும் ஒவ்வொரு செயலும் தேசிய அளவில் இன்றியமையாதவை.
மருத்துவர் ஜீவா அவர்களின் மறைவுக்குப் பிறகு, அவர் விட்டுச்சென்ற செயல்களைத் தொடர்வதற்காக அவரது பெயரிலேயே அறக்கட்டளை ஒன்று துவங்கப்பட்டுள்ளது. மருத்துவர் ஜீவா நினைவைப் போற்றும் வகையிலும், அவருடைய அக்கறைக்கு உரிய பணிகளை ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு அறப்பணிகளை முன்னெடுக்க மருத்துவர் ஜீவா அறக்கட்டளை முடிவெடுத்திருக்கிறது. ஜீவா அவர்களின் தங்கையான ஜெயபாரதி அம்மாவும், அவருடைய குடும்பத்தாரும், இன்னும்சில நட்புத்தோழமைகளும் இணைந்து அறக்கட்டளையின் செயற்திட்டங்களுக்குப் பொறுப்பேற்று மிகுதீவிரத்துடன் செயலாற்றவுள்ளனர். ஜீவாவின் நல்லான்மா எல்லா செயற்கனவையும் நிறைவேற்ற அகத்துணிவு அளிக்கட்டும்.
அவ்வகையில், அறக்கட்டளையின் முதற்கட்டப் பணிகளாக ஈரோடு நகரில் மருத்துவர் இதுவரை சேவையாற்றிய மருத்துவமனை வளாகத்தை ‘கட்டணமற்ற மருத்துவ ஆலோசனை மையம்’ ஆகப் பொதுச்சமூகத்துக்கு அர்ப்பணித்தல், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட ‘ஜீவா நூலகம்’ அமைத்தல், ஆய்வறிஞர்களுக்கு உதவிடும் வகையில் ஒரு தங்குமிடம் அமைத்தல், ஜீவா நினைவாக அவர் பெயரில் ‘பசுமை விருதுகள்’ வழங்குதல், மருத்துவர் ஜீவா அவர்களின் உருவச்சிலை திறப்பு மற்றும் உரையாடல்வெளி துவக்கம், நூல்வெளியீடு உள்ளிட்ட முன்னெடுப்புகள் துவக்கமடைகிறது.
மருத்துவர் ஜீவா அவர்களின் நினைவை மனமேந்தும்விதமாக, வருகிற டிசம்பர் 12ம் தேதி ஈரோட்டில் ஜீவாவுக்கான நினைவேந்தல் நிகழ்வு நிகழ்கிறது. இந்நிகழ்வில் பேரன்னை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், சமூகப்போராளி மேதா பட்கர், எழுத்தாளர் ஜெயமோகன், நீதியரசர் சந்துரு, தோழர் வி.பி.குணசேகரன் உள்ளிட்ட ஆளுமைகள் பங்கேற்று கூடுகையை மேலும் சிறப்பிக்க உள்ளனர். மேலும், ஜீவாவுக்கு நெருக்கமான பல முக்கிய ஆளுமைகளும் இதில் கலந்துகொள்கிறார்கள். இவ்வாண்டிற்கான பசுமைவிருதுகள் பத்திரிகையாளர் சமஸ், இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, இளம் செயற்பாட்டாளர் விஷ்ணுப்ரியா ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
நம் சமகாலத்தில் தோன்றிய முக்கியமானதொரு செயல்விசை மருத்துவர் ஜீவா. செயலூக்கியாக நிறைய இளையவர்களை அறம் நோக்கி வழிப்படுத்திய அவருடைய பெருவாழ்வு என்றுமே வணக்கத்திற்குரியது. எல்லா நிலையிலும் எளியவர்களுக்காகவே சிந்தித்த அவருக்கு நாம் அனைவரும் இணைந்து செலுத்தும் இந்த நினைவேந்தல் கூடுகை நம் நன்றிப்பெருக்கின் சிறுதுளி என்றே அர்த்தப்படட்டும். தோழமைகள் அனைவரும் நிச்சயம் இந்நிகழ்வில் இணைந்துகொள்ளுங்கள். நம் எல்லோரின் மனங்களிலும் ஜீவாவின் தாக்கம் பெருந்துணையாக நிறைந்திருக்கிறது. களமியங்கிச் செயலாற்றும் ஒவ்வொரு மனிதருக்கும் ஜீவா ஒரு மிக முக்கியமான முன்தடம்.
~
நன்றியுடன்,
குக்கூ காட்டுப்பள்ளி
தன்னறம் நூல்வெளி
December 8, 2021
காலடிவடுக்கள்:விக்ரமாதித்யனின் கவிதைகள்-2, ஜெயமோகன்
விக்ரமாதித்யனை கவிதை எப்போது கண்டடைந்தது? அவர் ஓர் உரையாடலில் சொல்வதுபோல மிக இளம்வயதிலேயே சொற்களைச் சேர்ப்பதில் இன்பம் கண்டடைபவராக இருந்திருக்கிறார். அதன்பின் சினிமாப்பாடல்கள் வழியாக கண்ணதாசனைக் கண்டடைந்தார். இன்றும் கண்ணதாசன் மேல் தீராப்பற்று கொண்டவராகவே விக்ரமாதித்யன் இருக்கிறார். குற்றாலத்தில் ஒரு கவிதைப்பட்டறையில் நிறைபோதையில் “கண்ணதாசனப்பத்தி பேசுங்கடா” என்று அவர் பின்நவீனத்துவ – பின்அமைப்பியல் சண்டியர்களிடம் ‘சவுண்டு’ விட்டுக்கொண்டே இருந்ததை நினைவுகூர்கிறேன்.கண்ணதாசனின் பாடல்களிலும் கவிதைகளிலும் உள்ள இசைத்தன்மையும், மரபின் தொடர்ச்சியும் அவரை ஈர்த்திருக்கின்றன. அதன்பின் அன்றைய திராவிட இயக்கக் கவிஞர்களின் செல்வாக்கு அவரிடம் உருவாகியது. தமிழ்ஒளியின் மாதவி என்னும் காவியத்தைப் பற்றி ஒருமுறை சொன்னார்.
தி.க.சிவசங்கரன், வண்ணதாசன் வழியாக நவீன இலக்கியம் விக்ரமாதித்யனுக்கு அறிமுகமாகியது. திகசி ஆசிரியராக இருந்த தாமரை இதழ்களை விரும்பி வாசித்திருக்கிறார்.அன்றைய புகழ்பெற்ற வானம்பாடி மரபின் கவிஞர்களை வாசித்தாலும் அவர்கள்மேல் அவருக்கு ஈடுபாடு வரவில்லை. விக்ரமாதித்யனை அவர்களிடமிருந்து விலக்கியது இரண்டு கூறுகள். ஒன்று அவர்களிடமில்லாத மரபின் தொடர்ச்சியும் இசையமைவும். இரண்டு, அவர்களிடமிருந்த அரசியல். அன்றைய இளைஞர்கள் அனைவரையும் கவர்ந்த அந்த திராவிட இயக்க பாணிகொண்ட இடதுசாரி அரசியல் [அல்லது போலிப்புரட்சி அரசியல்] மேல் ஏன் விக்ரமாதித்யனுக்கு விலக்கம் ஏற்பட்டது? எப்போதுமே அவர் அதில் எந்த ஈடுபாடும் காட்டியதில்லை. அவர் அரசியல்கொள்கைகளையோ அரசியல்வாதிகளையோ நம்பியதே இல்லை.
விக்ரமாதித்யனின் அந்த அவநம்பிக்கையை புரிந்துகொள்ள நடைமுறையை நோக்கினால் போதுமானது. வண்ணதாசன், வண்ணநிலவன், விக்ரமாதித்யன், கலாப்ரியா என்னும் நால்வரையும் ஒருவரோடொருவர் ஒப்பிட்டு புரிந்துகொள்வது பலவகையிலும் தெளிவு அளிப்பது. நால்வரும் ஒரே நிலத்தைச் சேர்ந்தவர்கள். ஏறத்தாழ ஒரே சாதியப்பின்புலம் கொண்டவர்கள். ஒரே காலத்தவர். நண்பர்களும் கூட. அந்நால்வரில் வண்ணநிலவன் குறுகிய காலத்திற்கேனும் இடதுசாரி ஆர்வங்கள் கொண்டிருந்தவர். வண்ணதாசன் இடதுசாரி, திராவிட இயக்க ஆதரவு உளநிலை கொண்டவர். கலாப்ரியா திராவிட இயக்க ஆதரவாளர். விக்ரமாதித்யனே அரசியல்மேல் அவநம்பிக்கை கொண்டவர்
ஏனென்று உசாவினால் இப்படிச் சொல்லத்தோன்றுகிறது. நால்வரில் விக்ரமாதித்யனே வறுமையை அறிந்தவர், அடித்தள வாழ்கையை அடைந்தவர். நடைமுறையில் ஒவ்வொன்றும் எவ்வண்ணம் உள்ளன என்பதை தெருவிலிருந்து கற்றவர். ஆகவே அவருக்கு அரசியல் சார்ந்த கற்பனாவாத உளஎழுச்சிகள் ஏதுமில்லை. அரசியல்பற்று கொள்வதற்கு அவசியமான உணர்வுகளில் ஒன்று தன்முனைப்பு. தான் ஒரு தகுதியான ஆள் என்றும், தன்னால் சூழலை மாற்றிவிடமுடியும் என்றும் ஓர் இளைஞன் நம்பத்தொடங்கும்போதே அவனுக்குள் அரசியல்சார்ந்த கிளுகிளுப்புகள் தோன்றுகின்றன. அத்துடன் அந்த தன்முனைப்பு வெளிப்பாடு கொள்வதற்கு வேறு களங்கள் இல்லாத ஒருவகையான சிறிய வாழ்க்கையும் அவனுக்கு அமையவேண்டும்.
கவனித்து நோக்கினால் உயர்வர்க்கத்து இளைஞர்களிடம் அரசியல் ஆர்வம் மிகமிக அரிது. அவர்களின் ஆணவம் பெருக உகந்த களங்கள் பல உள்ளன. அடித்தள இளைஞர்களிடமும் அரசியலார்வம் மிக அரிது. ஏனென்றால் அவர்களிடம் சமூகத்தை தான் மாற்றிவிடமுடியும் என்னும் எளிமையான தன்முனைப்பு இருப்பதில்லை. அரசியலார்வம் என்பது நடுத்தர வர்க்கத்து இளைஞர்கள் ஒரு வயதில் அடையும் ஒருவகை கிளர்ச்சிதான். விக்ரமாதித்யன் அவர் இறக்கிவிடப்பட்ட தெருவில் இருந்து வாழ்க்கையை உணர்ந்தவர். அங்கே அரசியல் என்பது கொள்கைகள் அல்ல, கனவுகளும் இலட்சியங்களும் அல்ல, நடைமுறை அதிகாரமும் அதற்கான போராட்டமும்தான். விக்ரமாதித்யன் அதை பொருட்படுத்தவில்லை. நடுத்தரவர்க்கத்துக் கவிஞர்களின் இளமைக்கால உபாதையான நாக்குப்புரட்சிகளில் அவர் ஆர்வம் காட்டவே இல்லை.
ஏதோ ஒரு கட்டத்தில் விக்ரமாதித்யன் நவீனக்கவிதைக்குள் நுழைந்தார். தமிழ் நவீனக் கவிதையில் அவருடைய முன்னுதாரணம் எவராக இருக்கக்கூடும்? தமிழ்க்கவிதையில் எந்தக் கவிஞனுக்கும் அவனுடைய அகத்தில் திகழும் கவித்தொடர்ச்சி என்ன என்று நல்ல வாசகனால் சொல்லிவிடமுடியும். அது உண்மையில் அக்கவிஞனைப் புரிந்துகொள்ள ஒரு சிறந்த வழி. விக்ரமாதித்யனின் முன்னோடியாக நகுலனைச் சொல்லும் வழக்கம் உண்டு. ஆனால் அது பின்னாளில் விக்ரமாதித்யன் நகர்ந்து நகர்ந்து வந்தடைந்த தொடர்ச்சி. அவர் தொடங்கியது நகுலனில் இருந்து அல்ல. அவரிடம் இருந்த தொடக்ககாலச் செல்வாக்கு ந.பிச்சமூர்த்தியின் கவிதைகள்தான்.
ஆகாயம்நீலநிறம் தொகுதியின் பலகவிதைகள் நேரடியாகவே பிச்சமூர்த்தியின் நடைக்கு அணுக்கமானவை. ஓர் உதாரணத்துக்காக விக்ரமாதித்யனின் தட்சிணாமூர்த்தியான என்னும் கவிதையையும் ந.பிச்சமூர்த்தியின் சாகுருவி என்னும் கவிதையையும் ஒப்பிட்டுப்பார்க்கலாம். செய்யுளுக்கு அணுக்கமான இசையொழுக்குள்ள அந்த நடை இருவருக்கும் பொதுவானது என்று அறியமுடியும். ந.பிச்சமூர்த்தியை நெருக்கமாக அடியொற்றி அன்று புதுக்கவிதைகளை எழுதிக்கொண்டிருந்தவர் வல்லிக்கண்ணன். வல்லிக்கண்ணனிடமிருந்து ந.பிச்சமூர்த்தி விக்ரமாதித்யனுக்கு கையளிக்கப்பட்டிருக்கலாம்.
மொழியில் மட்டுமல்ல படிமங்களின் அமைப்பிலும் விக்ரமாதித்யனின் ஆரம்பகட்டக் கவிதைகளில் பிச்சமூர்த்தியின் செல்வாக்கு தென்படுகிறது. கோணல்தென்னை போன்ற ஒரு படிமம் விக்ரமாதித்யனுக்கும் தோன்றக்கூடுவதே. ஆனால் மெல்லமெல்ல தீர்மானமாக அவர் ந.பிச்சமூர்த்தியிடமிருந்து விலகிச்செல்கிறார். நடையில் மட்டுமல்ல உளநிலையிலும் நகுலனை அணுகுகிறார். அந்த விலக்கம் அவரை வண்ணதாசன், வண்ண நிலவன், கலாப்ரியா ஆகியோரிடமிருந்தும் அகற்றியது. அவர்கள் எழுதிவந்த இதழ்களில் இருந்தும் அவர்கள் பேசிய சூழலில் இருந்தும் விலக்கிக் கொண்டுசென்றது. ந.பிச்சமூர்த்தி மரபார்ந்த, ஒழுக்கவாத நோக்கு கொண்ட, நவீனக் கவிஞர். அவருடையது நவீனஅத்வைத நோக்கு. விக்ரமாதித்யன் அவற்றுக்கு எதிரானவர்.
நகுலனுக்கும் விக்ரமாதித்யனுக்கும் இடையேயான வேறுபாடு என்ன? விக்ரமாதித்யனை வரையறை செய்துகொள்ள அது மிகவும் இன்றியமையாதது. நகுலனிடம் இருக்கும் நேரடியான மொழி, முறிந்து மடியும் சொற்றொடர்கள், நேரடிக்கூற்றுத் தன்மை ஆகியவற்றாலான கவிமொழி விக்ரமாதித்யனிலும் உள்ளது. ஆனால் நகுலனில் இருக்கும் வேதாந்தச் சாய்வும் இருத்தலியல் சாய்வும் கொண்ட தத்துவப்பார்வை விக்ரமாதித்யனில் இல்லை. விக்ரமாதித்யன் தத்துவ நோக்குக்கே எதிரானவர். நகுலனில் நூல்குறிப்புகள், ஆசிரியர்குறிப்புகள் வழியாக உருவாகும் ஊடுபிரதித்தன்மை விக்ரமாதித்யனில் இல்லை.
நகுலன் கவிதைகள் ஓர் அறிஞனால் எழுதப்பட்டவை. விக்ரமாதித்யனின் கவிதைகள் தன்னை பாமரனாக நிறுத்திக்கொண்ட கவிஞனால் எழுதப்பட்டவை. வீடுவிட்டிறங்காதவை நகுலன் கவிதைகள். வீடில்லாதவனால் எழுதப்பட்டவை விக்ரமாதியனின் கவிதைகள். உலகியல் அம்சமே இல்லாதவை நகுலனின் கவிதைகள். இங்கெங்கும் இல்லாத ஓர் அந்தர வெளியில், அறிவாந்த சிதைவு நிலையின் அகப்பரப்பில் நிகழ்பவை அவை. மாறாக, முற்றிலும் உலகியல் சார்ந்தவை விக்ரமாதித்யனின் கவிதைகள். கவிதையில் எப்போதும் தொடர்ச்சிகள் இவ்வண்ணமே அமைகின்றன. ஒருவேளை தன்னில் இல்லாத கூறுகளை நகுலனில் கண்டமையே விக்ரமாதித்யனை அவரை நோக்கி ஈர்த்திருக்கலாம்.
மது அருந்துவதிலும் இருவருக்குமிடையே வேறுபாடுண்டு. விக்ரமாதித்யன் மது அருந்தும்போது இன்னொருவராக வெளிப்படுகிறார். முற்றிலும் மாறுபட்ட ஒருவராக. வெடித்துச் சிதறிக்கொண்டே இருக்கும் ஓர் ஆளுமையாக. நகுலன் மது அருந்தாதபோதுதான் சிதறியவராக இருப்பார். நிலைகொள்ளாதவராக, நடுக்கம் கொண்டவராக. மது அவரை குவிக்கும், கூர்மையாக்கும், அவரிடமிருந்து நாம் முன்பு அறிந்திராத ஓர் எதிர்மறை அம்சம் வெளிவரும். நையாண்டியும் கசப்புமாக. காழ்ப்பும் தீமையுமாகக்கூட நகுலன் வெளிப்படுவதுண்டு. மது அவரை இறுக்கி இறுக்கி துயர்நோக்கி கொண்டுசெல்கிறது. எடைமிக்கவராக மண்ணுடன் அழுந்த வைக்கிறது. துயர்நிறைந்த நகுலன் போதையில் அழுவதைக் கண்டிருக்கிறேன். அவர் குடிப்பதே பெருந்தாகம் கொண்டவன் உயிர்காக்க நீரை குடிப்பதுபோலிருக்கும். மடக் மடக் என ஓசைகேட்க ஒருவர் மது அருந்துவதை நகுலனிடம் மட்டுமே கண்டிருக்கிறேன்.
நேர் மாறாக மது அருந்திய விக்ரமாதித்யன் விசித்திரமான களியாட்டுநிலை கொண்டவர். ஆங்கிலத்தில் dance macabre என சொல்லப்படும் ஒரு தாண்டவத்தையே அவரிடம் நான் கண்டிருக்கிறேன். அவரை சகக்கவிஞர்களும் பொதுமக்களும் தாக்கிய சந்தர்ப்பங்களும் உண்டு. குடித்தபின் எழும் விக்ரமாதித்யன் தன் வளர்ப்பும், சூழலும் ,அடிப்படை இயல்பும் அளிக்கும் எல்லா வரையறைகளையும் மீறிச்செல்பவர். நல்லியல்பென்றோ தீமையென்றோ வரையறை செய்யமுடியாத ஒரு சிதறல். அதை அஞ்சியே அவரிடமிருந்து திட்டவட்டமான விலகலை நான் எப்போதும் கடைப்பிடித்துவந்தேன்.
விக்ரமாதித்யனின் ஆளுமையைத் தீர்மானிக்கும் அந்த மீறல், அவரிடம் குடிக்காதபோது ஒரு போதும் இல்லை என்பது அணுக்கமானவர்களுக்குத் தெரியும். குடிக்காத விக்ரமாதித்யன் மிகப் பணிவான, மிக மிகப் பண்பான, இனிய மனிதர். முற்றிலும் மரபார்ந்தவர். எங்கே அவர் குடிக்க ஆரம்பித்திருப்பார்? நான் கற்பனை செய்து பார்க்கிறேன். முதல் முறை ஒரு மதுக்கடைக்குள் அவர் எவ்வாறு நுழைந்திருப்பார்? எப்படி முதல் மதுக் கோப்பைக்கு ஆணையிட்டிருப்பார்? கண்டிப்பாக அவர் தனியாகச் சென்றிருக்க வாய்ப்பில்லை. எவரோ அழைத்துச் சென்றிருக்கக்கூடும். அவர் பொருட்டு அந்நண்பர் ஆணையிட்டிருக்கக்கூடும்.
பணிந்த, மரபார்ந்த, சைவப் பிள்ளையான அண்ணாச்சி மதுக்கடைக்குள் காலெடுத்து வைக்கும்போது மண்ணிலிருந்து நிலாவில் காலெடுத்து வைத்த ஆர்ம்ஸட்ராங்குக்கு இணையான தாவலை நிகழ்த்தி இருக்கிறார். எத்தனை எடை கொண்டதாக இருக்கும் அக்காலடி என்று எண்ணிப் பார்க்கிறேன். அவரது உள்ளம் திகைத்ததா? அல்லது மரத்து சொல்லிழந்து நின்றதா? அவர் உடல் நடுங்கியதா? அந்நடுக்கத்தை மறைப்பதற்காக மிகையான உற்சாகத்தை பாவனை செய்தாரா? அல்லது கடுந்துயருடன் அங்கு சென்றாரா? தாளமுடியாத சலிப்பையும் வெறுமையையும் வெல்வதற்கு சென்றாரா? அதை அவர்தான் சொல்ல வேண்டும். இதுவரை அத்தருணங்களை அவர் எவரிடமும் சொன்னதில்லை. கவிதையிலோ கதையிலோ எழுதியது கூடக் கிடையாது.
ஒருமுறை பேசும்போது சொன்னதை வைத்துப் பார்த்தால், எண்பதுகளின் தொடக்கத்தில் ,தனது முப்பதாவது அகவையில், சென்னையில் ஒரு கிசுகிசு இதழின் துணையாசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அவர் முதன் முறையாக மது அருந்தினார். அப்போது அவருடைய ‘ஆகாயம் நீல நிறம்’ என்ற தொகுதி வெளிவந்திருக்கவில்லை. அதன் பின்னட்டையில் ’வேலை தேடும் வேலையில் இருப்பவர்’ என்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார். அப்போது அவர் பத்திரிகை ஆசிரியர் வேலையை உதறிவிட்டு, பிறிதொரு வேலைக்காகத் தேடிக் கொண்டிருந்த தருணம். அந்நாட்களில் எப்போதோ அவர் தொடர்ச்சியாக மது அருந்தத் தொடங்கியிருக்கலாம்.
தெளிந்த உரைநடைத்திறன் கொண்டவரான அண்ணாச்சி இதழாளராக வெற்றிகரமாக இருந்திருக்க முடியும். ஆனால் அவருடைய இயல்புக்கு அவ்விதழ்களில் இருக்கும் எதிர்மறைத்தன்மையை தாங்கிக் கொள்ள முடிந்திருக்காது. எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. ஒரு நாலாந்தர வம்பிதழில் அரசியல் பாலியல் வம்புகளுக்கும், கிசுகிசுக்களுக்கும், ஆளுமைக் கொலைகளுக்கும், ஊழல்களுக்கும் களமான ஓர் அமைப்பின் ஒரு பகுதியாக எப்படி அண்ணாச்சி இருந்திருக்க முடியும்? அந்த இதழ்களின் வழியாகத்தான் அவர் புறவுலகின் ஈடிணையற்ற குரூரத்தை உணர்ந்திருக்க முடியும்.
பிறந்த சில நாட்களிலேயே துரத்தப்பட்டு, முள் நிறைந்த வறண்ட காட்டுக்குள் ஓடிக் கொண்டிருக்கும் பன்றிக் குட்டி ஒன்றை இளமையில் பார்த்திருக்கிறேன். அது சோர்ந்து கீழே விழுந்தபோது துரத்திச் சென்ற நாய்கள் அதைக் கவ்விக்கொண்டன. ஏற்கனவே அதன் உடல் முழுக்க முட்கள் கிழித்து, குருதிக்கோடுகளை உருவாக்கி இருந்தன. இதழியலின் முட்கள் நிறைந்த வெளியில் ஓடும் அண்ணாச்சியின் தோற்றத்தைக் கற்பனை செய்து பார்க்கிறேன். அவர் மதுவை நாடியது அந்தக் காலகட்டத்தில்தான். மதுவினூடாக அவர் அடைந்த விடுதலை என்ன? அதை விடுதலை என்று சொல்ல முடியுமா?
மது என்னும் சொல் கவிதையில் எத்தனை வகையாகப் பொருள் கொள்கிறதென்று எண்ணிப் பார்க்கிறேன். சமீபத்தில் க்வாஜா மொய்னுதீன் சிஷ்டி அவர்களின் கவிதைகளை படித்துக் கொண்டிருக்கும் போது மதுவும், மது பரிமாறுபவனும் வந்து கொண்டே இருக்கிறார்கள் என்பதைக் கண்டேன். ரூமியில், உமர் கய்யாமில் மது தொடர்ந்து பேசப்படுகிறது. “மது நமக்கு மது நமக்கு” என்று பாரதியின் கவிதை கூத்தாடுகிறது. அந்த மது இங்குள்ள உலகியல் அனைத்தையும் உதறிச் சென்று மேலெழுந்து அடையும் களிப்பின் அடையாளம். வானம் கனிந்து சொட்டும் ஒரு பித்துத் துளி.
அது ஞானியை, காதலனை, கவிஞனை, கனவு நிறைந்தவனாக்குவது. இங்கு தன்னைப் பற்றியிருக்கும் பல்லாயிரம் கைகளை ஒரே உதறலில் உதறி அகற்றிவிட்டு அவன் மேலெழுகிறான், எடையற்றவனாகிறான், தடைகளற்றவனாகிறான். கூத்தாடவும், களியாடவும், கூச்சலிடவும், உருகவும், விழிநீர் உதிர்த்து ஒடுங்கவும் ஒன்றுமில்லை என்றுணர்ந்து ஒழியவும் அவனுக்கு அது இடம் கொடுக்கிறது. வேதகாலத்தில் சோமமும் சுராபானமும் நேரடி மதுவாகவே அருந்தப்பட்டன. ஆனால் ரிக் வேதம் முதிரும்போதே அவை குறியீடாக மாறிவிட்டதைக் காண முடிகிறது. சோமம் தெய்வீகமான இசையின் துளியென்றும், சுரா ஆட்டிப் படைக்கும் நடனத்தின் அமுதென்றும் உணரப்படுகிறது. யோகியரின் மது வெறுமைக்களி. தெய்வங்களின் மது காதலென இனிமை கொண்டது. பாட்டுப்பாடல் சிவக்களி எய்தல்.
சூஃபிக்கள் அருந்திய மது, சாலமனும் புனித ஜானும் (St. John of Cross) அருந்திய மது.
விக்கி அண்ணாச்சி அருந்துவது அந்த மது அல்ல. அவர் அடைந்ததும் விடுதலைதான். ஆனால் அது திரிபின் ஊடாக அடைந்த விடுதலை. சிறகு பெற்று மேலெழும் அனுபவத்தை அவர் மது வழியாக அடைந்தாரா? மதுவை அவர் அருந்தினார், விரும்பினாரா? மதுவை இனிய அனுபவமாக அவர் அடைந்திருக்கிறாரா? லட்சுமி மணிவண்ணன் ஒருமுறை சொன்னார், மதுவை இன்னொருவருக்குப் பரிந்துரைக்காத பெருங்குடிகாரர் விக்ரமாதித்யன் என. அவரிடமிருந்து கற்றதனால் தானும் எவருக்கும் மதுவை அளித்ததில்லை என. விக்ரமாதித்யன் தனது கவிதையில் எங்காவது மதுவைப் பற்றி ஏதாவது சிறப்பாக சொல்லி இருக்கிறாரா?
அவருடைய கவிதைகளையும் நினைத்து நினைத்து, அகத்தே புரட்டிப் புரட்டி அவர் மதுவைப் பற்றி எழுதிய வரிகளைத் தேடுகிறேன். மது தன்னைத் தட்டழியச் செய்கிறது, நிலைகுலையச் செய்கிறது, பெரும் வதையெனத் தொடர்கிறது, வேதாளமெனத் தோளில் அமர்ந்திருக்கிறது என்றே அவர் கவிதைகள் சொல்கின்றன.
“போதையில்
தலைசுற்றித் திரியும்போது தெரிகிறது
ஓர் உண்மை
உழைத்துக் குடிப்பதே
உத்தமம் ”
என்று தன்னைத்தானே கேலி செய்து கொள்கிறார்.
’மதுபரியாறுபவனே, போதும் அகன்றுவிடு, மொய்ன் மேலும் பெரிய மதுவை அருந்தி போதையில் இருக்கிறார்’ என்பது போன்ற வரியை விக்ரமாதித்யன் எழுதுவதே இல்லை. அந்த பிறிதொரு மது ஒரு துளி கூட அவரால் அருந்தப் படவில்லை. அவர் அருந்திய மது வெறுமே கட்டுகளை அவிழ்த்து களியாடச்செய்யும் ஒரு மந்திரம் மட்டுமே. பிறிதொருவராக அவரை ஆக்கும் வேடமாற்றம் மட்டுமே. விக்ரமாதித்யன் ஒரு முறை பேசும்போது கண்ணதாசன் போதையில் ஒருவரிகூட எழுதியதில்லை, தானும் போதையில் கவிதை எழுதியதில்லை என்றார். எனில் போதை எதற்கு என்றேன். ”கவிதைக்காக என்று நான் சொன்னேனா? அது வேறு” என்றார்.
எனில் மதுக்கடையின் ஊடாக அவர் சென்றதெங்கே? அந்த மதுக்கடை ஒரு வாசல், அதற்கு வெளியே எடை மிக்க காலடிகளுடன் தயங்கி வந்து நின்ற விக்ரமாதித்யன் சைவத்தை, வேளாளப் பிள்ளை எனும் அடையாளத்தை, தாயை தந்தையை, வேலை செய்ய வற்புறுத்தும் சமூகத்தை, உழைத்து வாழ் என்று அறிவுரை சொல்லும் சான்றோரை, உன் குடும்பம் இப்போது என்ன செய்கிறதென்று உசாவும் அறிமுக முகங்களை, அனைத்தையும் கழற்றி வீசிவிட்டு உள்ளே செல்கிறார். அங்கு அமர்ந்து ஒரு கோப்பை மதுவுக்கு ஆணையிடும்போது, அவர் தன்னை அவ்வாறு துரத்தி வரும் அனைத்து பேய்களுக்கும் எதிர்முகம் கொடுக்கும் ஆற்றல் கொண்டவனாக ஆக்கும் விசை ஒன்றை அளிக்கும்படி கோருகிறார். மதுவிலிருந்து அவர் பெறுவது அது மட்டுமே.
பழைய கேரளக் கதை ஒன்று உண்டு. தெரியாமல் பிராமணன் ஒருவனைக் கொன்று விடும் கரைநாயர் ஒருவர் பிரம்மஹத்தியில் இருந்து தப்பும்பொருட்டு ஓடுகிறார். பிரம்மஹத்தி ஒரு போதும் விட்டுவிடாது. ஆகவே அவர் ஆற்றிங்கல் பகவதி ஆலயத்துக்குள் நுழைந்து விடுகிறார். பகவதியின் தட்டகத்திற்குள் பிரம்மஹத்தி நுழைய முடியாதென்பதனால் ஆலயத்திற்கு வெளியே பிரம்மஹத்தி ஒரு கூழாங்கல் வடிவில் காத்திருக்கிறது. கூழாங்கல்லுக்குக் காலமில்லை. முடிவிலி வரை அதனால் காத்திருக்க முடியும். ஆகவே தன்னை பிரம்மஹத்தியிடம் இருந்து காப்பாற்றும்படி கரைநாயர் பகவதியிடம் மன்றாடுகிறார். தன் பக்தனுக்கு இரங்கி பகவதி தோன்றுகிறாள்.
பிரம்மஹத்திக்குத் தெய்வங்களும் அஞ்சியாக வேண்டும். தெய்வகணங்களும் அஞ்சியாக வேண்டும். சிவனே பிரம்மஹத்தியால் இரவலாக ஆனார்.அஞ்சத் தேவையற்றது ஒன்றே. பேய்கள் அஞ்ச வேண்டியதில்லை. பூதங்கள் அஞ்ச வேண்டியதில்லை. பகவதி கரை நாயரை சங்கறுத்து அங்கே விழுந்து ஒரு பூதமென ஆகும்படி சொல்கிறாள். தன் இடைவாளை எடுத்து கழுத்தில் வைத்து அறுத்து விழுந்து பூதமென்றாகி வெளியே வரும் கரைநாயரைக் கண்டு பிரம்மஹத்தி திகைக்கிறது. பிரம்மஹத்தி ஓடத்தொடங்க, பூதம் அதைத் துரத்திச் செல்கிறது. பிரம்மஹத்தியும் பூதமும் முடிவில்லாத துரத்தலில் உள்ளன. பகவதியின் தட்டகம் அந்த மதுக்கடை. அங்கு நுழைந்து அந்தக் காளிமுன் சங்கறுத்து விழுந்து பூதமென்றாகித் திரும்பி வரும் அண்ணாச்சி தன்னைத் தொடர்ந்து அதுவரை வந்த அத்தனை பிரம்மஹத்திகளையும் துரத்தத் தொடங்குகிறார்.
காடாறு மாதம் நாடாறு மாதம் என்பதற்காகவே தனக்கு விக்ரமாதித்யன் என்று பெயர் போட்டுக் கொண்டதாக ஒருமுறை அவர் சொன்னார். காடு பதினொரு மாதம், வீடு ஒரு மாதம் என்பதுதான் இந்த விக்ரமாதித்யனின் ஊழாக இருக்கிறது. திரிபு கொண்டு, குடிகாரனும் கலகக்காரனும் தனியனும் கசந்தவனும் ஆக மாறி அதுவரை தன்னை ஆயிரம் கைவிரித்து துரத்தும் அனைத்துக்கும் எதிர் விசை கொடுத்து நின்றிருந்து, தருக்கி கவிஞனென்று அறைகூவி முடித்ததுமே சலித்து தன் இல்லம் திரும்ப விழைபவர் விக்ரமாதித்யன்.
விக்ரமாதித்யனை இறக்கிவிட்டு நம்பிராஜன் என்றாகி இல்லம் மீள்கிறார். இக்கவிதைகளினூடாக கடந்துசெல்கையில் எத்தனை இல்லம் மீளும் கவிதைகள் உள்ளன, எத்தனை இல்லத்தில் தங்கும் சலிப்பு பற்றிச் சொல்லும் கவிதைகள் உள்ளன, இல்லத்தை விட்டுக் கிளம்பும் துயரைக் கூறும் கவிதைகள் எத்தனை உள்ளன என்று பார்க்கையில் வியப்பு மேலிடுகிறது. அனைத்து வசதிகளுடனும் இல்லத்தில் அமைந்த பின்னர் ’ஆனாலும் கொடுமை மக்கள் ஆயிரமாண்டு கால வாழ்க்கை’ என்று சலிப்பு கொள்கிறது கவிஞனின் உள்ளம்.
“ஆதியில்
ஒரு நாள்
அடர்ந்த பசிய காட்டில்
திரிந்து கொண்டிருந்தனவாம்
இந்தக் கூண்டுப் புலிகள்”
என்று தன்னை உணர்கிறது. பரிசில் வாழ்க்கைக்குக் கிளம்பும்போது கிளம்பும் பேருந்தில் தன்னந்தனியாக அமர்ந்து தன் ஊழ் நினைத்து ஏங்குகிறது. பொருள்வயின் பிரிவு. மீண்டும் எங்கோ அத்திரிபை அடைந்து பூதமென்றாகித் தருக்கி நின்று
“சென்றான்
புதுமைப்பித்தன்
வந்து நிற்கிறான்
விக்ரமாதித்யன்”
என்று அறைகூவுகிறது. அவ்வண்ணம் சில உச்சங்கள், மீண்டும் அதே இல்லம் திரும்பும் வேட்கை. வெளியே இருக்கையில் அழைக்கும் , உள்நுழைந்த கணமே துரத்தும் வீடு. ஒற்றைக்கால் மட்டும் ஊன்ற இடமிருக்கும் தவப்பீடம் என்னும் ஓர் அழகிய படிமம் நம் மரபில் உண்டு. விக்ரமாதியனுக்கு வீடு அத்தகையது.
மது விக்ரமாதித்யனை விடுதலை கொள்ள வைக்கிறதா? எனில் ஆமென்றும் இல்லையென்றும் சொல்லலாம். இங்கிருக்கும் எதிலிருந்தும் அவரை அது விடுவிக்கவில்லை. இங்கிருக்கும் அனைத்தையும் மிதித்து மேலேறிச் செல்ல வைக்கிறது. மீண்டும் அதிலேயே விழச் செய்கிறது. அவர் எதையும் அவர் கடந்துசெல்லவில்லை, எதிர்த்து நிற்கிறார். அது மேலும் தீவிரமாக இவையனைத்திலும் ஈடுபடுவதேதான்.
உலகக் கவிதை வரலாற்றிலிருந்து அலைந்து திரிந்த கவிஞர்களின் பட்டியலை ஒவ்வொரு முறை விக்ரமாதித்யன் கவிதைகளைப் படிக்கும்போதும் நான் எண்ணிக்கொள்வதுண்டு. விக்ரமாதித்யனைப் போலவே அலைந்து திரியும் குடிகாரக் கவிஞராக இருந்தவர் மலையாளக் கவிஞர் ஏ.அய்யப்பன். காசர்கோட்டில் என்னை விக்ரமாதித்யன் பார்க்க வந்த சில மாதங்களுக்குப் பிறகு ஏ.அய்யப்பன் என்னைப் பார்க்க வந்தார். அங்கு காசர்கோடு திரைப்பட இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்த முரளீதரன் மாஸ்டரைப் பார்க்க வந்தவர், அங்கு அவர் இல்லையெனத் தெரிந்தபின் என்னைத் தேடி வந்தார். “உன்னைப் பற்றி ஜான் ஆபிரகாம் சொன்னார்” என்று என்னிடம் சொன்னார்.
இன்று எண்ணும்போது அந்தப் பொருத்தங்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன. கோணங்கி விக்ரமாதித்யனுக்கு சொன்னது போல. கோணங்கிக்கும் ஜானுக்கும் பொருத்தங்கள் பல நூறு. ஜான் ஒரு கள்ளமற்ற தெய்வப்பிறவியும் கூட; கோணங்கியும் அவ்வாறுதான். கோணங்கியிலிருக்கும் அந்தக் கள்ளமின்மை, அவரைக் கலைஞராக்குகிறது, கூடவே பெரும்படைப்புகளைப் படைக்க முடியாமல் தடுக்கவும் செய்கிறது என்று எனக்கு எப்போதும் தோன்றுவதுண்டு. பெரும்படைப்புகள் அறிவாந்தவை, ஒருவகை மொழிசார்ந்த பொறியியல் கொண்டவை. ஜான் அவ்வாறே. மாபெரும் படைப்பாளிகள் ஆவதற்கான அனைத்துத் தகுதிகளுடனும் ஆகாமபோன இருவர் என்றே அவர்கள் இருவரையும் நான் இதுவரைக்கும் மதிப்பிட்டு வைத்திருக்கிறேன்.
ஏ. அய்யப்பனும் என்னைப் பார்க்க வந்தபோது கிழிந்த சட்டை அணிந்திருந்தார். ரயிலில் இன்னொரு குடிகாரன் தன் சட்டையைக் கிழித்து விட்டதாக சொன்னார். அன்று அவரை என் அறைக்கு அழைத்துச் செல்ல நான் துணியவில்லை. ஓட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்று உணவு வாங்கிக் கொடுத்து, பணம் கொடுத்து பிறிதொரு நண்பரின் விலாசத்தைக் கொடுத்து அனுப்பி வைத்தேன். பலமுறை அவரை நான் சந்தித்திருக்கிறேன். அவர் மறைவதற்கு சிலகாலம் முன்பு வரை கூட.
விக்ரமாதித்யனிடம் இருக்கும் பண்பட்ட குடிக்காத மனிதர் ஏ.ஐயப்பனில் இல்லை. குடிக்காத போது அவர் ஓர் அடித்தள மனிதர். எல்லாவகையான தாழ்வுணர்சிகளும் கொண்டவர்.
எதற்காகக் குடிக்கிறீர்கள் என்று ஏ.ஐயப்பனிடம் நான் கேட்டேன். “குடிக்காமல் இருந்தால் நான் நல்லவனாக இருக்கிறேன். அதைத் தாங்க முடியவில்லை” என்று அவர் சொன்னார். அந்த வேடிக்கைப் பேச்சுக்கு அடியில் இருப்பது ஒரு வகையான உண்மை. நல்லவன் என இங்கு மரபு வரையறுத்திருக்கும் கோடுகளுக்குள் நின்றிருக்க முடியாமைதான் அவரைக் குடிகாரனாக்குகிறது. குடித்த பின் அவர் எதுவும் செய்யலாம். முச்சந்தியில் ஆடையைத் தூக்கிக் காட்டலாம். போலீஸ்காரனிடம் சென்று கெட்ட வார்த்தை சொல்லலாம். கோவில் திண்ணையில் படுத்துத் தூங்கலாம். இலக்கியக் கூட்டத்தில் உள்ளே வந்து வாந்தி எடுக்கலாம். அந்த சுதந்திரம் அவருக்கு அவருடைய ஆளுமை அளிக்கும் தளைகளை எளிதில் களைய உதவுகிறது. ஏ.ஐயப்பன் அதை முழுமையாகவே கொண்டாடினார்
அவ்வாறுதான் அதைக் களைய முடியுமா எனில் அல்ல. அதற்கு வேறு வழியுண்டு. அத்தளைகள் அனைத்தையும் மிகச் சிறிதென்றாக்கும் ஒரு எழுச்சி. வெளியே செல்வதற்கான வழி திரிபு என இருக்க வேண்டியதில்லை. திரிபு என்பது ஒரு எதிர்வினை மட்டுமே. எதிர்வினையானது எதிர்வினை ஆற்றப் படும் எதிலிருந்தும் விடுவிப்பதில்லை. முற்றிலும் வெளியே செல்லும் வழி என இங்கு பல்லாயிரம் ஆண்டுகளாக உள்ளது. துறத்தல், உன்னதமாக்கல், உச்சிமுனை நோக்கிச் சென்று அங்கு மட்டுமென அமர்தல். சைவ மரபிலிருந்து வந்த விக்ரமாதித்யனுக்கு அது தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. இங்கு ஒவ்வொரு இல்லத்திலும் ஒருவர் அவ்வண்ணம் தன்னை விடுதலை செய்து கொண்டிருப்பார். துறந்து செல்லுதலின் விடுதலை ஒன்றுண்டு. உன்னதமாக்கலின் விடுதலை பிறிதொன்று. இங்கு இவ்வண்ணம் என இருப்பனவற்றை எங்கும் எவ்வண்ணமும் என அறிந்து , அவ்வாறே ஆக்கிக்கொள்ளுதல். தனது என ,தன் சூழல் என இருப்பனவற்றை பிரபஞ்சமாக விரித்துக்கொள்ளுதல். அதுவே கலையின் இலக்கியத்தின் வழி.
இங்கிருக்கும் ஒவ்வொன்றையும் தொட்டுத் தொட்டு பிறிதொன்றாக்கி ஒளி கொள்ளச் செய்து, ஒவ்வொரு எடையையும் பனியென்றும் முகிலென்றும் ஆக்கி பறந்தெழுந்து, ஒவ்வொரு இடைவெளியையும் நிரப்பும் நீரெனத் தன்னை நெகிழ வைத்து நிறைத்துக் கொண்டு, ஒவ்வொரு இடத்திலும் திகழ்கையிலும் எங்குமிலாது ஆகும் விரிநிலையை அடைந்து முழுமை கொள்ளும் ஒரு வழி. கலையின் வழி அது என்றே நான் நினைக்கிறேன். அதைவிடப் பெரியது துறவின் வழி என்று அறிந்திருக்கிறேன். துறவின் வழியை உணர்ந்து அடிபணிந்த கலையின் வழியே கலைஞன் தேர்வதற்கு உகந்தது என்று பாரதி வரைக்குமான மரபில் இருந்து கற்றிருக்கிறேன்.
ஒன்றொன்றாய்த் தொட்டெண்ணி எண்ணும் பொருள் ஒடுங்கும் ஒரு பெருநிலை கலையிலும் கூடும். பெருநாவல்களை எழுதியவர்களும், காப்பியங்களில் சென்று கடந்தவர்களும் அவ்வழியைத் தேர்வு செய்தவர்கள். அது அரிய வழி. அணு அணுவாகத் தன்னை உடைத்தறிந்து ஆராய்ந்து முன் செல்லும் வழி. அடைந்து அடைந்து உதிர்த்து செல்லும் வழி. அறிந்தறிந்து மறுத்து செல்லும் வழி.
விக்ரமாதித்யன் வழி என்பது துறவு அல்ல திரிபே. இன்று திரும்பிப் பார்க்கையில் அவருடைய மொத்தக் கவிவாழ்க்கையும் தொடர்ந்து திரிபுகளின் பயணம் என்று சொல்லத் தோன்றுகிறது. முதற் திரிபென்பது மதுக்கடைக்குள் அவர் நுழைந்த தருணம். அங்கிருந்து வெளிவந்து, இங்கு அனைத்தை நோக்கியும் திரும்பி நின்றிருக்கும் விக்ரமாதித்யன் தன் ஒவ்வொரு வரியிலும் இங்குள்ளவற்றுக்கு எதிர்வினை ஆற்றுகிறார். ஆகவேதான் தமிழில் உலகியலைத் தொடர்ந்து எழுதி வந்த கவிஞனென்று சொல்லத்தக்கவர், உலகியலால் அடித்து வெளித்தள்ளப்பட்டவர் என்றும் சொல்லத்தகுந்தவர், முற்றிலும் உலகியல் கவிஞராக நமக்குத் தென்படுகிறார்.
[மேலும்]
பதக்கம் பாலாஜி பிருத்விராஜ்
கண்முன்னே மேலதிகாரி சிக்கலில் மாட்டித் தவிக்கும் தருணம் அவரின் நாற்பதாண்டு கால அனுபவத்தில் அதிகம் வாய்த்திருக்காது. வெறும் ஆறு மாத காலப் பணியிலேயே அதன் அருமை எனக்குப் புரிந்தது. உள்ளூர நானும் அந்த நிலைமையை அனுபவித்துக்கொண்டிருந்தேன்.
விஷ்ணுபுரம் விருது விழா, நினைவுகளில்…
விஷ்ணுபுரம் விருது 2010 முதல் அளிக்கப்பட்டுவருகிறது. இது பன்னிரண்டாவது விருது. ஒவ்வொரு ஆண்டும் இவ்விருதின் கொண்டாட்டமும் மதிப்பும் ஏறிக்கொண்டே செல்கிறது. மூத்தபடைப்பாளிகள் இங்கே கௌரவிக்கப்படுவதில்லை, அமைப்புக்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்னும் ஆதங்கத்தில் இருந்து வாசகர்களால் உருவாக்கப்பட்டு அளிக்கும் விருது இது.
விஷ்ணுபுரம் விருது இலக்கிய விருதுகளை அளிப்பது எப்படி என தமிழ்ச்சமூகத்திற்குக் காட்டியது என்று துணிந்து சொல்லமுடியும். முன்பெல்லாம் இலக்கியவிருது வழங்கும் நிகழ்ச்சியை வேறு நிகழ்ச்சிகளுடன் கலந்துவிடுவது பொதுவாக நிகழ்வது. விழாவின் ஒரு பகுதியாக இலக்கியவாதியை அழைத்து விருதை ஒரு ‘விஐபி’ கையால் வழங்கச்செய்வார்கள். விருது பெறுபவர் அவ்விழாவில் பொருந்தா விருந்தாளியாக அமர்ந்திருப்பார். அவரைப்பற்றி அங்கே ஒரு சொல் பேசப்படாது.
விருதுகளை பல படைப்பாளிகளுக்கு சேர்ந்து அளித்து அவர்களை மேடையருகே வரிசையாக நிற்கச்செய்து விருதுபெறச் செய்வது இன்னொரு வழக்கம்.விருது வழங்கும் விழாவில் முக்கியப்பிரமுகர்கள் வந்தால் அவர்களுக்கு போஸ்டர்கள், விளம்பரங்கள் வைப்பதும் அவர்களை கொண்டாடி வரவேற்பதும் படைப்பாளிகளை பொருட்படுத்தாமலிருப்பதும் சாதாரணமான நிகழ்வுகள். சில நிகழ்வுகளில் பரிசு வாங்கும் படைப்பாளிகளையே முக்கியப்பிரமுகர்களை வரவேற்று அழைத்துவர கூட்டிச்செல்வதும் உண்டு.
மேடையில் அந்த முக்கியப்பிரமுகர்களை மட்டுமே அத்தனை பேரும் போற்றிப்பேசுவார்கள். பரிசுவாங்கும் படைப்பாளியைப் பற்றி பேசமாட்டார்கள். பரிசு கொடுக்கும் அமைப்பு அல்லது நபர் பற்றி போற்றிப்பேசுவார்க்ள். பரிசுவழங்க வந்தவர் பரிசுபெறுபவர்களைப் பற்றி ஒரு சொல்கூட பேசாமல் சென்ற நிகழ்வுகளும் இங்கே நடந்ததுண்டு. தங்கள் பிறந்தநாளை பரிசுநாளாக அறிவித்து ‘கொண்டாடும்’ பெரும்புள்ளிகள் பரிசுபெறுபவரை பாடிப்பரிசுபெறும் பாணனாக மாற்றிவிட்டிருந்தனர்
விருதுக்கு ஆவணங்களுடனும் நூல்களுடனும் உறுதிமொழியுடனும் முறையாக விண்ணப்பிக்கவேண்டும் என நிபந்தனை உடைய விருதுகள் இங்கே உண்டு. விருதுபெறுபவர் கொடுப்பவரை புகழ்ந்துபேசவேண்டும் என முன்னரே அழைத்து நிபந்தனை அளிக்கும் வழக்கமும் இருந்தது. ஆகவே இலக்கிய விருது பெறுவதே ஓர் அவமதிப்பு என்னும் எண்ணம் இலக்கியவாதிகள் நடுவே உருவாகியது.
விஷ்ணுபுரம் விருது சில முன்னுதாரணங்களை அளித்தது. இது விருதுபெறும் படைப்பாளியை உரிய மரியாதையுடன் தேடிச்செல்கிறது. அவரைப்பற்றிய ஆவணப்படம், அவரைப்பற்றிய விமர்சன நூல் வெளியிடப்படுகிறது. அவரை முன்வைத்து இரண்டுநாள் இலக்கியவிழா நிகழ்கிறது. அவர் வாசகர்களுடன் உரையாடுகிறார். மொத்த விழாவும் அவரைச்சுற்றியே நிகழும். எந்த பெரும்புள்ளி விழாவுக்கு வந்தாலும் சரி அழைப்பிதழிலும் சரி, விளம்பரங்களிலும் சரி விருதுபெறும் படைப்பாளியே முதன்மையாக இடம்பெறுவார். படைப்பாளிக்கு பேனர்கள் வைக்கப்படும்.
இன்று, பிற விருதுவிழாக்கள் பலவும் இந்த முன்னுதாரணத்தைப் பின்பற்றுகின்றன என அறியமுடிகிறது. மிகச்சிறந்த உதாரணம் சென்னை மையமாக்கி வழங்கப்படும் ஆத்மாநாம் விருது. இளம்படைப்பாளிக்கு வழங்கப்படும் இவ்விருது அவரைப்பற்றிய ஒரு விமர்சனநூலையும் வெளியிடுகிறது.
இன்று சிறுகச்சிறுக விஷ்ணுபுரம் விருது உருவாக்கியிருக்கும் மனநிலையை, முன்நெறிகளை பெருமிதத்துடன் நினைத்துக்கொள்கிறோம். இதன்பொருட்டு உழைத்த அத்தனை நண்பர்களையும் நன்றியுடன் எண்ணிக்கொள்கிறோம்.
விஷ்ணுபுரம் விருது 2010 ஆ.மாதவனுக்கு வழங்கப்பட்டது. தமிழில் ஒரு தனியார் விருது அத்தகைய கவனத்தைப் பெறுவது அதுவே முதல்முறை. அதற்கு அவ்விருதுக்கு தன் செலவில் வந்து சிறப்பித்த மணி ரத்னம் ஒரு காரணம். விழாவை அனைத்து ஊடகங்களுக்கும் கொண்டுசென்ற நணபர்கள், விழா குறித்த செய்திகளையும் பேட்டிகளையும் வெளியிட்ட நண்பர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். குறிப்பாக இந்து கோலப்பன், குங்குமம் நா.கதிர்வேலன் மற்றும் சிவராமன், டைம்ஸ் ஆஃப் இந்தியா எம்.டி.சாஜு.
ஆ.மாதவன் இன்றில்லை. விழாவில் கலந்துகொண்டவர்களில் புனத்தில் குஞ்ஞப்துல்லாவும் வேதசகாயகுமாரும் மறைந்துவிட்டனர். காலம் வெகுவாக முன்னால் வந்துவிட்டிருக்கிறது.
இரண்டாம் விருது எழுத்தாளர் பூமணிக்கு வழங்கப்பட்டது. பூமணி நரம்பு நோயால் அவதிப்பட்டுவந்த காலம். நெடுங்கால உழைப்பால் அவருடைய பெருநாவலான அஞ்ஞாடியை எழுதி முடித்திருந்தார். பணி ஓய்வுபெற்று கோயில்பட்டிக்கே குடிவந்திருந்தார். இலக்கியம் சார்ந்த பொதுச்செயல்பாடுகளில் இருந்து அவர் ஒதுங்கி, அடுத்த தலைமுறையினரின் கவனங்களில் இருந்தும் அகன்றிருந்தார். கோயில்பட்டிக்குச் சென்று அவ்விருதுச்செய்தியை அவருக்கு அறிவித்தேன். பூமணி தொடர்ந்து சாகித்ய அக்காதமி உள்ளிட்ட விருதுகள் பெற்றார்.
2012 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது தேவதேவனுக்கு வழங்கப்பட்டது. பலவகையிலும் மறக்கமுடியாத விழா இது. இளையராஜா விழாவில் பங்கெடுத்தார். முழுக்கமுழுக்க அவருடைய சொந்தச்செலவில். கட்டுக்கடங்காத கூட்டம் வந்து அரங்கை திணறச்செய்தது.

தெளிவத்தை ஜோசப்புக்கு 2013 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் இலக்கியவிருதுகளுக்கு ஈழப்படைப்பாளிகள் கருத்தில் கொள்ளப்படாத நிலையே அதற்குமுன்பு இருந்தது. அதை மாற்றியது அவ்விருது. தெளிவத்தை ஜோசப் குடும்பத்துடன் வந்திருந்தார். அவருடைய பூர்விக கிராமம் தஞ்சாவூரில் இருந்தது, அங்கே சென்றுவந்தார். விஷ்ணுபுரம் விருதை ஒட்டி இலங்கை தமிழ் இதழ்கள் தெளிவத்தை ஜோசப்புக்குச் சிறப்பு மலர்கள் வெளியிட்டன
ஞானக்கூத்தனுக்கு 2014ல் விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டபோது அவர் சற்று சோர்ந்த நிலையில் இருந்தார். அவருடைய மனைவியின் உடல்நிலைச்சிக்கலும் சிகிழ்ச்சைகளும் அவரை துயருறச் செய்திருந்தன. விழாவுக்கு தன் நண்பர் சா.கந்தசாமியுடன் வந்தார். விழாவில் அவர் நீண்ட கருத்துப்போர் நடத்திய புவியரசுவை அவருடன் மேடையேற்றினோம். அவர்களின் உரையாடல் உற்சாகமூட்டுவதாக இருந்தது. முதல்முறையாக விஷ்ணுபுரம் விருதுடன் ஓர் ஆவணப்படமும் எடுக்கப்பட்டது. ஞானக்கூத்தனின் ஆவணப்படம் அசோகமித்திரனால் ஆவணப்படங்களில் ஒரு கிளாஸிக் என்று சொல்லப்பட்டது. ஞானக்கூத்தன் இன்றில்லை
பூமணிக்கு விருதுவழங்கும் அறிவிப்பை அவரிடம் சொல்ல என்னை அழைத்துச் சென்றவர் தேவதச்சன். நான் என்றும் என் ஆசிரியர்களில் ஒருவராக எண்ணுபவர். கோயில்பட்டியின் இலக்கிய மையம். எப்போதும் குன்றாத உற்சாகம் கொண்ட மனிதர்.
விஷ்ணுபுரம் விருது விழா ஒருநாள் நிகழ்வாக தொடங்கியது. ஆனால் முந்தையநாளே நண்பர்கள் வந்து கூட ஆரம்பித்தோம். ஆகவே மெல்ல முந்தையநாள் சந்திப்பும் உரையாடலும் குறிப்பிடத்தக்க நிகழ்வாக ஆயின. அவற்றை தன்னிச்சையான உரையாடலாக நிகழ விட்டுவிட்டிருந்தோம்.
தேவதச்சன் வாசகர்களுடன் உரையாடியது மறக்கமுடியாத நிகழ்வு. ஒரு நாற்காலியை சட்டென்று எடுத்து கவிழ்த்தார். ”இந்த நாற்காலி இப்ப இன்னொரு பொருளா ஆயிடுச்சுல்ல? இதான் பன்முக வாசிப்பு. ஒரு பொருள் ஒரு பயன்பாட்டாலே ஒரு வகையா பார்க்கப்படுது. ஆனா அந்தப்பொருள் அந்தப்பயன்பாடு மட்டும் இல்ல. அது முடிவில்லாதது. அந்த முடிவின்மையைத்தான் கவிதை காட்டுது அதுக்காக நாம பழகியிருக்கிற வழக்கமான அர்த்தத்தை ரத்து பண்ணிடுது” என்றார்.
வண்ணதாசன்வண்ணதாசன் நிகழ்வு விஷ்ணுபுரம் விருதுகளில் ஒரு பாய்ச்சல். முந்தைய ஆண்டு விழாநிகழ்வுகளில் ஒரு சிறு சோர்வு இருந்தது என எண்ணினேன். பழகிய முகங்களாக வந்துகொண்டிருந்தனர். ஆகவே புதிய வாசகர் சந்திப்புகளை அவ்வாண்டுமுதல் தொடங்கினேன். 2016ல் மட்டும் நான்கு புதுவாசகர் சந்திப்புகள் நிகழ்ந்தன. நூற்றியிருபது இளைஞர்கள் கலந்துகொண்டனர். அவர்களின் பங்கேற்பு விழாவை பொலிவுற்றதாக்கியது.
இவ்வாண்டு முதல் விஷ்ணுபுரம் விருதுவிழாவின் முதல்நாள் நிகழ்ச்சிகள் முறையான எழுத்தாளர் சந்திப்பு அரங்குகளாக ஒருங்கிணைக்கப்பட்டன. வசதியான பெரிய அரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டது முதன்மைக்காரணம். வாசகர் பங்கேற்பும் பலமடங்காக ஆகிவிட்டிருந்தது
சுருதி டிவி விஷ்ணுபுரம் விழாக்களை ஆவணப்படுத்தத் தொடங்கியதும் இவ்விழாவை ஒட்டியே. ஆகவே விழாவை திரும்ப அப்படியே பார்க்கும் உணர்வை காணொளிகள் வழியாக அடைய முடிகிறது.
தெளிவத்தை ஜோசப் விருது பெற்ற பின் அயலக எழுத்தாளர் ஒருவர் விருது பெறுவது 2017ல்தான். மலேசிய எழுத்தாளர் சீ.முத்துசாமி அங்கே தீவிரமான இலக்கிய நம்பிக்கையுடன் எழுதியவர். பெரிதும் கௌரவங்களை அடையாதவர். அங்குள்ள பொதுவான சூழல் வணிக இலக்கிய முன்மாதிரிகளை, பிரச்சார இலக்கிய முன்மாதிரிகளைக் கொண்டது. விஷ்ணுபுரம் விருது தகுதியானவரை அடையாளம் கண்டுகொள்வதுடன், எது மெய்யான இலக்கியம் என அடையாளம் காட்டுவதாகவும் அமைந்தது.
விழாவில் கலந்துகொள்ள சுவாமி பிரம்மானந்தா தலைமையில் ஒரு மலேசிய குழுவினர் வந்திருந்தனர். மலேசிய இலக்கியம் பற்றிய ஒரு மிகச்சிறந்த இலக்கிய அமர்வும் நிகழ்ந்தது. அரங்கில் ம.நவீன் மலேசிய இலக்கியத்தின் குறுக்குவெட்டு பற்றி அளித்த உரை ஒரு முக்கியமான பதிவு.
2018 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது நாவலாசிரியரும் இலக்கிய விமர்சகருமான ராஜ் கௌதமன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. ராஜ் கௌதமன், ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோர் தலித் அரசியல் மற்றும் இலக்கியம் பற்றி உரையாடியமை நிறைவடையச்செய்தது. மேகாலய எழுத்தாளர் ஜேனிஸ் பரியத்தின் பங்களிப்பு உற்சாகமூட்டியது.
பின்னர் ஆங்கில இதழ்களில் இவ்விழா பற்றி எழுதிய ஜேனிஸ் இதற்கிணையான ஓர் இலக்கிய விழா இந்தியாவில் வேறில்லை என்றும், இத்தனை வாசகர்களும் இவ்வளவு ஊக்கமும் எங்குமே தென்பட்டதில்லை என்றும் பலமுறை குறிப்பிட்டிருக்கிறார்.
2019 ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர் அபிக்கு வழங்கப்பட்டது. விஷ்ணுபுரம் விழாக்களிலேயே அளவில், பங்கேற்பில் மிகப்பெரிய விழா இதுதான். உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதும் அபி விழாவுக்கு வந்திருந்தார். வாசகர்களுடன் ஆழ்ந்து உரையாடினார்.
2020 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதுவிழா கோவிட் தொற்றுக்காலம் காரணமாகக் கொண்டாடப்படவில்லை. சிறுகதை ஆசிரியர் சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. மதுரையில் ஒரு தனியார் விடுதியறைக்குள்ளே நிகழ்வு நடைபெற்றது. சிறப்பு விருந்தினர் என எவருமில்லை. விஷ்ணுபுரம் நண்பர்களே உரையாற்றினர்.நண்பர் ராம்குமார் ஐ.ஏ.எஸ் விருதளித்தார்.
விஷ்ணுபுரம் விருது நினைவுகள்
சுஷில்குமாரின் கதைகள்- இரம்யா
விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார்
[விஷ்ணுபுரம் விருந்தினர் படைப்புகளை படிக்க https://vishnupuramguests2021.wordpress.com/]
சுஷிலின் இந்தத் தொகுப்பில் “அப்பா” எனும் பிம்பம் முக்கியமான இடத்தை வகிக்கிறது. எந்தவொரு ஆண் கதாப்பாத்திரத்திலும் அந்த அப்பாவின் தன்மை ஓங்கியிருக்கிறது. அதைக் கண்ணுறும் ஓர் சிறுவனாக இளைஞனாக, சில சமயம் அந்த அப்பாவாகவே என அப்பா கதைகளில் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்.
மூங்கில் காடுகளின் இளம்பசுமை ரம்மியமானவை. புல் வகையைச் சேர்ந்தவை எனினும் எந்தப் புல்லை விடவும் உயரமானவை. கலைஞர்களும் மூங்கில் போன்றவர்கள் தான். எல்லா வகையிலும் அன்றாட மனிதர்களை விட ஒரு படி மேல் எனலாம். வயிற்றுப்பாட்டுக்கும் சேர்த்தே கலைஞனாக அல்லாத அப்பாவினுடைய கதை. கலையின் உச்ச சாத்தியத்தில் அவர் அடையும் மகிழ்வும் நிறைவும் அதைக் கண்ணுறும் மகனுமென உணர்ச்சிகரமான கதையாக அமையப்பெறுகிறது “மூங்கில்“.
“கெவுரவும்” சிறுகதையில் நாராஜாவின் அப்பா அவனிடம், “மனுசங்க தான் மொக்கா முக்கியம்… பணம் காசு மயிரெல்லாம் தானா வரும். நம்மளுக்கு நாலு பேரு செஞ்சாம்ல மொக்கா?.. ” … “எனக்குப் பொறவு ஒனக்கு நாலு பேரு வேணும்லா டே? ” என்கிறார். தன் அப்பாவின் வார்த்தைகளால், அவர் வாழ்ந்த வாழ்க்கையால் வளர்ந்த கள்ளங்கபடமற்ற நாராஜா வள்ளிநாயகம் போன்றோரை எதிர்கொள்ளும் கதையாக விரிகிறது. கெவுரவம் பார்க்கும் சாதியவாதிகள், சந்தர்ப்பவாதிகள், ஏமாற்றுப் பேர்வழிகளையும் எதிர் கொள்ளும் மீறல் கதையிது. ஆனால் அவர்களையும கனிவோடு எதிர் கொள்ளும் பக்குவம் அந்தத் தந்தையிடமிருந்து தான் அவனுக்கு வருகிறது. நாராஜாவின் கனிவின் வழி தெரிவது அவனின் அப்பாவின் சித்திரம் தான்.
பெற்றோர்கள், குலம், அவர்களின் தொழில், முன்வினைகள் என எதனையும் தேர்ந்தெடுக்கும்/ கட்டுப்படுத்தும் உரிமை நம்மிடம் இல்லை. தன் தந்தை செய்த வினைகளின் எதிர்மறைக் குறியீடாக “சுருக்குக்கம்பி“ சங்கிலி என்ற மகனின் முன் நிற்கிறது. தந்தை சுமந்த வினையை அதன் விளைவாக வந்த ஏளனத்தை அவமானத்தை தன் அம்மாவின் சிதையில் கரைக்கும் அந்தப் புள்ளி வரை கதை நகரும விதத்தை ரசித்திருந்தேன்.
குழந்தைப்பேற்றுக்காக ஏங்கி நிற்கும் பாண்டா சுப்ரமணியத்தின் கதையாக “பிறப்பொக்கும்” அமைகிறது. எதிர்பாராது இறப்பின் தருவாயின் விளிம்பிலிருக்கும் நான்கு வயதுக் குழந்தையைக் காப்பாற்றி பின் அதை பறிகொடுத்து தவிப்பவனாகவும், அதன் இறப்பிற்காக வருந்தும் தந்தைமை உணர்வு கொள்பவனாகவும் சுப்ரமணி இருக்கிறான். கிறுக்கியான பௌதியம்மையின் பிரசவத்தைப் பார்த்து அதைத் தானே வளர்க்க ஆசைப்படும் தருவாயில் தன் மனைவியால் வசைபாடப்படுகிறான். இறுதியில் குழந்தைக்காக அவளைப் பிரிந்து செல்லும் தந்தைமையை உணர்ச்சிகரமாகவும் அவளுக்கும் பௌத்தியம்மைக்கும் இடையேயான ஓர் உறவை விரித்துக் கொள்ள ஏதுவான வாசக இடமும் அடங்கிய கதை.
தாத்தாவுக்கும் பேரனுக்குமான கதையுமே அப்பா எனும் பிம்பத்தை முன்னிறுத்தக்கூடியதாகவே அமைந்திருந்தது. விவசாயத்தின் மீது தீராத நம்பிக்கை கொண்ட தாத்தா தான் ஊன்றி வைத்த விதையாக, தன்னுடைய விதையாக பேரனை வளர்க்கும் கதையாக “விதை“ அமைகிறது. அவன் வாழ்க்கைக்கு உரமாக விவசாய நிலத்தை உயில் எழுதி வைத்துச் செல்லும் கதையிது. தாத்தாவின் ஆளுமையாக கதை நிரம்பி வழிகிறது.
தனக்கும் தாத்தாவின் வயிற்றிலுள்ள கோட்டைப்போலவே இரு கோடுகள் வேண்டுமெனக் கேட்கும் சூர்யாவுக்கும் தாத்தாவுக்குமான அன்பின் கதையாக “இரு கோடுகள்“ அமையப் பெருகிறது. அந்த இருகோடுகளுக்குப் பின்னாலிருக்கும் கதை வலி மிகுந்ததாக மனதை நிறைக்கிறது. அதை சூர்யாவின் பொய்க் கோடுகள் இலகுவாக்குகிறது. வீட்டின் பெரியவர்கள் தங்கள் கடந்த காலத்தை அசைபோடுவது அனைத்தையும் உற்று நோக்கும் சிறுவர்களால் மட்டுமே நிகழக்கூடியது. எங்கள் வீட்டிலும் இத்தகைய கேள்விகளைக் கேட்டு பல கதைகளை நான் வாங்கியிருக்கிறேன். அவைகளை அசைபோட்டிருந்தேன்.
அம்மாக்களை பிராதனமாகக் கொண்ட இரு கதைகள் இருக்கின்றன. இரண்டுமே வீட்டிலேயே முடங்கி குடும்பத்தைச் சுற்றிச் சுழலும் பிரச்சனைகளால் முற்றிலுமே வலியாலும் புலம்பலாலும் நிறைந்துகிடக்கிறது. “அக்னி“ சிறுகதையில் அது அம்மாவின் வழி பொங்கி வருகிறது. வெண்முரசின் சுனந்தையின் காமத்தின் அக்னியை நினைவுகூறக்கூடிய அக்னியாக இந்த அம்மையின் தீ அமையப் பெறுகிறது. இருபத்திமூன்று வயதில் கணவனைக் கைவிட்டு எந்தத் தவறும் செய்யாமல் சதா “தேவடியாள்” என்ற வார்த்தையைக் கேட்டு மனங்குமைந்தவளின் அக்னியை இந்தச் சிறுகதையில் தவழவிட்டிருந்தார். “இன்னைக்கு ஒனக்கு நாலுவேரு இல்லாம ஆயிட்டுல்லா? ” என்று கவலைப்படும் அம்மையைப் பிடித்திருந்தது. அம்மையின் கர்பப்பையைக் கண்டு “… அப்படி நீந்திப் பிழைத்த சிறு மீன்குட்டி தானே நானும்” என்று அதன் வெதுவெதுப்பில் உருகும் மகனையும் பிடித்திருந்தது. அம்மை தன் அக்னிக்கான மீட்பை ‘அக்னி ரொசாரியோவில்’ கண்டடைந்ததில் மகிழ்வெனக்கு. அக்னியால் தகிக்கும் அத்தனை அம்மாக்களையும் வீட்டுப் பெண்களையும் இங்கு கண்டேன். அந்த நெருப்பை எந்த நீர்மையாலும் குளிர்மையாலும் அணைக்க முடியாதுதான். நெருப்பால் மட்டுமே அணையக்கூடியது. அதைக் கண்டேன்.
“சாபம்“ சிறுகதையின் அம்மா முற்றிலும் எதிர்மறை சித்திரமாக இருப்பவர். அவருடைய நாவைக் கண்டும் அதிலிருந்து பிறப்பெடுக்கும் காட்டமான சாபத்தைக் கண்டும் பயப்படும் கதையாக ஆரம்பித்து நகைச்சுவையான கதையாக நிறைவுற்றது.
பாலுணர்ச்சிகள் மிக எளிதாக நம்மோடு தொடர்பு படுத்திக் கொள்ளக்கூடியவை. அதைப் பற்றிய அப்பட்டமான விவரணையில்லாமல் மனித அகத்தின் வழி உள் நுழைந்து அதன் பலவீனத்தின் நுண்மைகளை விரித்து விசாரணை செய்யும் சிறுகதை “புத்துயிர்ப்பு“. உண்மையில் வாசிப்பவர்களுக்கு புத்துயிர்ப்பு அளிக்கக்கூடியது தான். ரோமன் கத்தோலிக்க கிறுத்தவ ஆலயங்களில் வெள்ளிக்கிழமை தோறும் பாவமன்னிப்பு வழங்குவார்கள். உண்மையில் அது மன்னிக்கபடுகிறதா என்பது தெரியவிலாலை. ஆனால் பிரகடனப்படுத்திக் கொள்வதாலேயே அது மனதிலிருந்து விடுதலை கொள்கிறது. சுஷில் இந்தக்கதையின் வழி முப்பரிமாண பாவ அறிக்கையை விரித்துக் கொண்டே சொல்கிறார். இறுதியில் யாரும் சரி என்றோதவறென்றோ மதிப்பிட்டுக் கொள்ளவியலாத அளவு என் சலனங்களெல்லாம் என் முன் வந்து நின்றன. இடையிடையே வரும் கிறுத்துவ வரிகள் ஆற்றுப்படுத்தின. ஒட்டுமொத்தமாக இந்தக் கதை என்னை அணைத்து புத்துயிர்ப்பு அளித்தது. மேலும் விரித்துச் சொல்லவியலாது மனமென்னும் கள்ள மிருகத்திற்கு அணுக்கமான கதை.
தான் சார்ந்திருக்கும்/ தன்னைச் சூழ்ந்திருக்கும் மரபையும் தொன்மத்தையும் அதன் கடவுள்களையும் சடங்குகளையும் அதன் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் மனிதர்களையும் தன் புனைவின் வழி சுஷில் காணிக்கிறார். அப்படியான கதைகளாக “சுவர்மாடன்”, “பச்சைப்பட்டு”, “பட்டுப்பாவாடை” ஆகியவற்றைக் காண்கிறேன்.
விடியவிடிய நடக்கும் வில்லுப்பாட்டு கதை சொல்லலை எங்கள் ஊரில் பார்த்திருக்கிறேன். சிறுவயதில் கிடைத்த உக்கிரமான புனைவுக்கதைகள் வில்லுப்பாட்டின் வழி தான். பாய்விரித்து அங்கேயே படுத்துத் தூங்கினாலும் கனவிலும் அதன் சன்னதம் கேட்டுக் கொண்டே இருக்கும். பெரும்புலையன் காளிப்புலையன், மகள் மாவிசக்கி மற்றும் மாயாண்டி சுடலை மாடனுக்கிடையே நிகழும் ஆடலின் வில்லுப்பாட்டு உக்கிரமானது. வில்லுப்பாட்டின் வரிகள் மட்டும் சன்னதம் வந்து அவர் எழுதியது போல இருந்தது.
“… மாவிசக்கி எப்படிப் புலம்புகிறாள் ?
எப்டி , எப்டியம்மா புலம்புகிறாள் ? .. எந்தகப்பா பெரும்புலையா ..
என்ன மோசம் வந்ததடா ? ..
எந்தகப்பா பெரும்புலையா ..
என்ன மோசம் வந்ததடா ? ..
சண்டாளப் பண்டாரம் சொன்ன வார்த்தை பலித்திட்டதே …
சண்டாளப் பண்டாரம் சொன்ன வார்த்தை பலித்திட்டதே .. ”
எனும்போது சுஷில் வில்லுப்பாட்டுக்காரராக போட்ட வேடம் நினைவிற்கு வந்தது. அது ஒரு உக்கிரமான வேடம். இந்த வில்லுப்பாட்டின் உச்சியில் அப்பா சுவர் எழுப்ப ஒத்துக் கொண்டதும் சுவர் எழுப்பிய பின்னும் ஹோஸ் பைப்பின் வழி வெறித்துப் பார்க்கும் சுடலை என புனைவுக் காட்சிகள் அருமையாக இருந்தது. கன்னிக்கு வைத்து கொடுக்கும் நாளில் மகன்மினிப்பூச்சி வந்து அமரும் என்ற குடும்பத்தார்களின் நம்பிக்கை இனியான ஒன்றாக இருந்தது. சிறுவனான கதைசொல்லியின் வழி வில்லுப்பாட்டின் கதைக்கு இணையாகவே ஓர் நிதர்சன வாழ்க்கையில் பயணம் செய்யும் கதையாக “சுவர்மாடன்” அமைந்தது.
குல தெய்வத்திற்கு பலி கொடுத்தல், முன்னோர் சாபத்திற்கு பரிகாரம் செய்தல், நேர்ச்சை செய்தல் என்பவை எல்லாம் நாட்டாரியல் நம்பிக்கைகளில் உள்ளடங்கியது. ஒரு குடும்பத்தில் நிகழும் தொடர் மரணமும் அதன் வேரைச் சொல்லும் ஒரு வரலாற்றுக் கதையும் இணையாகப் பயணித்து வாசகனைப் போல அனைத்தையும் வெறுமே பார்த்துக் கொண்டிருக்கும் கதைசொல்லி தெய்வம் ஏறப்பெற்று படையலைத் திண்ணச் செய்து உச்சத்திற்கு கொணாடு செல்கிறார். செண்பகராமன்புதூரத்துக் கொட்டாரமும் சித்திரை முழுநிலவில் இளவரசியும் மாந்த்ரீகமறிந்த காதல் தூதுவனும் அவர்களின் நிறைவேறாத காதலும் சாபமும் அதன் நிகழ் தொடர்ச்சியுமென மிகப்பிடித்த கதை.
” மண்ணாக நிக்கீறோ மரமாக நிக்கீறோ
எண்ணாம செஞ்சோமோ ஏலாம செஞ்சோமோ
பச்சச் சீலக்காரி பாலரிசிப் பல்லுக்காரி
சுட்ட சொல்லு வெலக்கு தாயி
சுட்ட சொல்லு வெலக்கு தாயி
புத்தி கெட்டுப் போனோமே தடம் மாறிப் போனோமே
நல்ல கோழி நாலு தாறேன் , உச்சிக்கு செங்கிடா தாறேன்
பச்சமுட்ட வெட்டித் தாறேன் , தடியங்கா கீறித் தாறேன்
கல்லாக நிக்கீறோ காத்தாக நிக்கீறோ
குழி நெறைய வள தாறேன் , பிச்சிமால கெட்டித் தாறேன்
பச்சச் சீலக்காரி பாலரிசிப் பல்லுக்காரி
கருமாரி முத்தாரம்மா
பத்ரகாளி காட்டாளம்மா
கொலச்சாமி வந்து நில்லு குடி கொலத்தக் காத்து நில்லு
கொலச்சாமி வந்து நில்லு குடி கொலத்தக் காத்து நில்லு”
…
“ஏய் ஏய் பண்டாரக் கொடலுருவி… பண்டாரக் கொடலுருவி… ”
என்ற நாட்டார் வழக்காற்றியல் பாடல் தெய்வம் ஏறப்பெற்று பாடப்பட்டதான உணர்வைத் தந்தது “பச்சைப்பட்டு“ எங்கோ ஒற்றைப் பனைமரத்தின் அடியில் நின்று பலி கேட்கும் எங்கள் குலதெய்வத்தின் கதை தான் என்று கண்டேன்.
கொரனா ஊரடங்கு காலத்தில் எத்தனையோ விதமான மனிதர்களின் துயரத்தைப் பார்த்திருக்கிறோம். பெரும்பாலும் அது உணவு, பொருளாதாரம் மற்றும் வாழ்வியல் சார்ந்தது. ஆனால் நீலகண்ட போத்தி எனும் பித்தைப் போன்ற ஒரு பிரச்சனையை நான் யோசித்தது கூட இல்லை. ஒரு எழுத்தாளன் தான் இந்த நுண்மையான பித்தைக் கண்டடைய முடியும் என்று நினைத்தேன். பகவதிக்கு நித்தமும் புத்தாடை உடுத்தி அலங்காரம் செய்யும் போத்தி கொரனா காலத்தில் அது இல்லாது தவிப்பதுமென அவரின் கையறுநிலையைக் கடத்தியிருந்தார். ஒரு தொழிலை கடமையாகச் செய்பவனுக்கும் பித்தின் உச்சியில் மிக விரும்பிச் செய்பவனுக்குமான வித்தியாசத்தின் நுண்மையது.
முதன் முறையாக பள்ளி சுற்றுலாவின் போது கன்னியாகுமரி பகவதியைக் கண்டேன். ஏதோவொன்று என்னை அவளின் தரிசனம் ஈர்க்கச் செய்தது. அது அவளது மூக்குத்தியின் சுடரொளி தான் என்பதை சமீபத்தில் இரண்டாவது முறையாக சென்ற போது தான் கண்டடைந்தேன். அவளின் தரிசனத்தோடு மங்களமாக முடியும் கதையாக “பட்டுப்பாவாடை” சிறுகதை நிறைவக அமைந்தது.
கதைசொல்லியாக அமைந்த குட்டி சுஷிலும், இளைஞனாகிய சுஷிலும் கூட்டிச் செல்லும் நாஞ்சில் நிலமும், அவனைச் சூழ்ந்திருக்கும் அம்மைகளும், அப்பன்களும், மனிதர்களும், கடவுள்களும் நம்பிக்கைகளும், உணர்வுகளும் மனதிற்கு அணுக்கமாகியிருக்கிறது இந்த “மூங்கில்”. இனிமையான அனுபவமாக அமைந்தது.
-இரம்யா
விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத்
விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்
விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன்
விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை
விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார்
விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன்
விஷ்ணுபுரம் விருந்தினர் -7, ஜா தீபா
விஷ்ணுபுரம் விருந்தினர்-8, சோ.தர்மன்
செல்வேந்திரன் – ஒரு கடிதம்
அன்பு ஜெ,
எழுத்தாளர் செல்வேந்திரன் அவர்களின் பாலைநிலப் பயணம் படித்தேன். இத்துனை இனிமையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் பாலைநிலப்பயணத்தை எழுத முடியுமா என்று நினைத்தேன். நீங்கள் ஆஜ்மீர் பயணத்தில் சொன்ன வரிகள் நினைவிற்கு வந்தது. சென்றமுறை பாலைநிலப் பயணம் சென்றபோது செல்வேந்திரன் கேட்டார் “ராஜஸ்தான் பாலைன்னு சொன்னாங்க ஜெ, பசுமையாத்தானே இருக்கு?” நான் சொன்னேன். “பாலைவனம்தான். ஆனா நீ சாத்தான்குளம் உவரி அளவுக்கு எதிர்பாக்கக்கூடாது” புன்னகைத்துக் கொண்டேன்.
சென்ற வாரம் வேலைநிமித்தமாக பயிற்சிக்கு சென்னை வந்திருந்தபோது அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கள்ளமில்லாத சிரிப்பும், வெடிப்பேச்சுகளும் என உற்சாகமான மனிதர் என்று நினைத்தேன். ஆழத்தில் பாலைவன மணல் போன்ற விரிவும் உணர்வும் தகிக்கும் ஒன்றையும் கண்டேன்.
பேச்சினூடாக எத்தனை புத்தகப் பரிந்துரைகள்… எத்துனை பிடித்த வரிகள்… கவிதைகள் என பகிர்ந்து கொண்டே இருந்தார். ஒரு தீவிர இலக்கிய வாசகருடன் செலவிடும் நேரம் வாழ்வில் இத்துனை நினைவுப்புதையலாக தங்கக்கூடியது என நான் நினைத்திருக்கவில்லை.
முதல் நாள் சந்திப்பிற்கு பிறகு தளத்தில் அவர் எழுதிய, அவரைப்பற்றி நீங்கள் எழுதிய, பிறர் எழுதிய கட்டுரை கடிதங்களையும் வாசித்தேன். அவருடைய உரைகளைக் கேட்டேன். அவர் கடந்து வந்த பாதை வலி மிகுந்தது. இத்துனை மூர்க்கமாக வாழ்வை நோக்கி செயல் ஒன்றால் பொங்கிக் கொண்டே இருக்க முடியுமா என்று ஆச்சரியமளித்தது. மிகுந்த மரியாதை வந்தது. அவர் எனக்கு பல புத்தகங்களைப் பரிசளித்தார். நான் தான் புத்தகங்களை நண்பர்களுக்கு பரிசளித்திருக்கிறேன். புத்தகம் வாசிக்கும் நண்பர்களுக்கு அவர்களின் சுவைக்கேற்ற புத்தகங்கள்..வாசிக்காத நண்பர்களுக்கு அவரின் “வாசிப்பது எப்படி? ” புத்தகம் என வாங்கித் தந்திருக்கிறேன். ஆனால் எனக்கு ஒருவர் பரிசளிப்பது இதுவே முதல் முறை. அந்த புத்தகங்களில் இருந்த “பாலைநிலப்பயணம்” மிகப்பிடித்திருந்தது.
உங்களுடைய பயணக்கட்டுரைகள் எப்போதும் எனக்கு அணுக்கமானவை. பயணப்பாதையைத்தாண்டி அதில் நீங்கள் கடத்தும் ஆழம், தத்துவம், நண்பர்களைப்பற்றி கடத்தும் சித்திரம் என மிகவும் பிடிக்கும். ஆனால் இந்தப்பயணத்தில் உங்களுடன் வந்த நண்பர்கள் வழியாக உங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்று எப்போதும் தோன்றுமொனக்கு. அந்த ஒரு சித்திரத்தை தரப்போகும் புத்தகமென அதை ஆரம்பித்தேன். ஆனால் செல்வேந்திரன் எனும் குதூகலமான ஒரு மனிதன் வழியே பாலையை துள்ளிக் கொண்டே ரசித்தது போன்ற உணர்வை அது தந்தது.
அவர் எழுதிக்கொண்டே செல்லும்போது தன்னையறியாமால் தன்னுள் ஆழ்கிறார்… அவர் அகத்தினின்று கள்ளமில்லாத உள்ளமொன்று வெளிப்படுகிறது. அதில் ஆழமும் அழகும் ஒருசேர இருக்கிறது… வலிந்து தன்னை மறைத்துக்கொள்ள முற்படுபவர் போல நகைச்சுவையை அதில் இட்டு நிரப்பி கடந்து நம்மை இலகுவாக்குகிறார்…
இந்தப்புத்தகத்தில் “தங்க உப்பளம்” பகுதியும் “துயரப் பெருவெளி” பகுதியும் மனதிற்கு நெருக்கமாக அமைந்தது.
இரவின் பாலை அனுபவத்தை அவர் எதிர்கொண்ட விதத்தை சொல்லிக்கொண்டே தன்னுள் அகழ்ந்து சென்று விட்டதான ஒரு உணர்வைத் தந்தது “தங்க உப்பளம்”
“ஒவ்வொருவரும் ஏதேதோ பேசினார்கள் . அனைத்தும் அனிச்சை . ஒவ்வொருவர் மனமும் கடத்தகாலத்தின் ஏதோ ஒரு தெருமுனையில் இறக்கி வைத்த துக்கமூட்டையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததை உணரமுடிகிறது . கடந்து சென்ற காதல்கள் , நிறைவேறாத ஏக்கங்கள் , எதிர்பாராத துரோகங்கள் , சிதைந்து போன உறவுகள், இழந்து இளமை எண்ணியெண்ணி ஏங்கத்தான் எத்தனையை கொடுத்திருக்கிறது வாழ்க்கை ? நான் என் கடந்த காலத்தின் உக்கிரமான தருணங்களுக்குள் சென்று துயரத்தை மென்று கொண்டிருந்தேன் . ஜெயமோகன் சில புகழ்மிக்க காதல் சோகப்பாடல்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். இந்தத் தருணமும் நிலக்காட்சியும் இந்நேரத்தைய சிந்தனைகளும் வாழ்நாள் முழுக்க உடன் வரப்போகிறவை என உறுதியாகத் தெரிந்தது . தலையை உதறி உதறி நினைவுகளைக் கட்டுப்படுத்த முயன்றேன். சிறிய பிழைகளின் வழியாக பெரும்பிழைகளை வந்தடைந்து சுற்றியுள்ளோருக்கெல்லாம் ஏமாற்றத்தையே அளித்த கடந்த காலத்தின் நினைவலைகள். இருளுக்குள் தலைகுனிந்து கண்களின் ஈரத்தை மறைத்துக்கொண்டேன். விதம் விதமான பெரிய கரிய வண்டுகள் மணல் வளைவுகளின் வழியே ஊர்ந்து கொண்டிருந்தன. பகலில் இவை எங்கிருந்தன? எங்கு செல்கின்றன? எதைத் தேடுகின்றன. பார்க்கும் யாவும் குறியீடுகளாகிக் கொண்டிருந்தன. அபாயம். எண்ணங்களை எண்டர் தட்டி எவளுக்காவது அனுப்பி வைத்துவிடுவாய் . ஜாக்கிரதை மேன். போனை எடுத்து ஜெ எடுத்த சில்அவுட் படங்களை விரலால் நகட்டி நகட்டி பார்த்தேன். நான் ஓடிக்கொண்டிருந்த போது எடுத்த படம் ஒன்று கவனம் ஈர்த்தது .
“பார்த்த இடமெங்கும்
கண்குளிரும்
பொன் மணல்
என் பாதம் பதித்து
நடக்கும்
இடத்தில் மட்டும்
நிழல் தேடி
என்னோடு அலைந்து
எரிகிறது
ஒரு பிடி நிலம்”
பிரமிளின் வரிகள் துலக்கமாக நினைவில் எழுந்தன. ”
இத்துனை நுணுக்கமாக ஒரு ஆணின் உள்நுழைந்து அந்த இரவின் பாலையை தரிசித்து விட முடியுமா என்றிருந்தது. தனியனும், தவிப்புமான ஒரு ஆண் எழுப்பிவிடும் தாய்மையின் உணர்வை என்னில் அது கடத்தியிருந்தது.
“துயரப் பெருவெளி” பகுதியில் ரான் ஆஃப் கட்சில் அஸ்தமனங்களையும் பார்க்கும் காட்சி கோபுரம் பற்றிய அவரின் சித்தரிப்பில் சிந்தனையில் அவர் ஆழும் தருணம் பிடித்திருந்தது.
“சிகரங்களுக்கு முன் நிற்கையில் இப்பேருருவிற்கு முன் என் எளிய ஆணவத்தின் பொருளென்ன என மனமடங்கும். இங்கோ வாழ்வின் அனைத்து அபத்தங்களையும் வெண்மணல் பரப்பு ஒன்று ரப்பரைப்போல் அழிக்கிறது. சிந்தை உப்புக்காற்றில் ஓடியோடி கரைந்தழிந்து போகிறது.” என்ற வரிகளுக்குப் பின் ரான் ஆஃப் கட்சின் காட்சியை, அங்குள்ள மனிதர்களை அங்கிருந்து விரிந்து செல்லும் அவரின் நினைவுகள், மனைவி, பிள்ளைகள், அம்மா, அப்பா, கடந்த காலங்கள் அவற்றையெல்லாம் இட்டு நிரப்பும் என் மனதிற்கும் அணுக்கமான பிரமிளின் வரிகள் என உணர்வு பொங்கி எழுதியிருக்கிறார். இலக்கிய வாசகனின் பித்தின் உச்சித்தருணமது. நேரில் காணவே முடியாத செல்வா வெளிப்படும் தருணமாக இந்தப் பகுதி அமைந்தது.
அவருடன் பேசும் யாரும் “திரு” “இளவெயினி” “ஜெயமோகன்” என்ற பெயர்களைக் கடக்காமல் சென்றுவிட முடியாது என்று தோன்றும். புத்தகத்தில் பயணத்தில் அவர்களுக்கு வாங்கிக் குவித்த பயணப்பையில் அன்பும் நிரம்பியிருந்தது. அப்பாவாக கணவனாக நண்பனாக அவர் செய்யும் யாவும் அவர்கள் உள்ளத்தினின்று பிறப்பெடுக்கும் மகிழ்வை எண்ணி எண்ணி செய்வது போல் இருக்கிறது.
செல்வாவுடன் பேசிக்கொண்டிருக்கும் கொஞ்ச நேரத்திலேயே அவர் தகவல்களின் களஞ்சியம் என்று தோன்றுமளவு நம்மை அவற்றால் நிறைத்துவிடுவார். எதைப்பற்றிப் பேசினாலும் அதைப் பற்றி விளக்கம் கொடுத்துவிட முடியும் என்று தோன்றுமளவு. இந்த புத்தகத்தில் ஜெய்பூரிலிருந்து அகமதாபாத் வரை கண்ட அனைத்து முக்கிய இடங்களையும் தகவல்களோடு பகிர்ந்துள்ளார். அது வெறும் விக்கிபீடியா தகவல்கள் இல்லை. தன் சிந்தனையால், அனுபவத்தால், புத்தக அறிவால் கண்டடைந்த யாவையும் பகிர்ந்துள்ளார். மேலும் இந்தத் தகவல்களிலெல்லாம் மேதைமையைக் காட்டிக் கொள்ளும் பகட்டு தென்படவில்லை. உடன்வந்திருந்த அனைவரின் காட்சியாக, சொல்லாக, எண்ணமாக, தகவலாக, உரையாடலாக, விவாதமாக, அவற்றை நோக்கும் ஒரு குழந்தை உள்ளமாக பதிவு செய்திருப்பது அழகாகவும் சுவாரசியமாகவும் இருக்கிறது. அறிவார்ந்த கலைரசனை கொண்ட அதே சமயம் இலக்கிய பித்து கொண்ட நண்பர்கள் என்றைக்கும் பத்திரப்படுத்தும் இனிய நினைவின் பயணத்தைக் கடத்திவிட்டிருந்தார்.
நீங்கள் உட்பட உடன் வந்தவர்களைப்பற்றி அவர் விவரித்த விதம் சுவாரசியமாக இருந்தது. குறிப்பாக கிருஷ்ணன் சார் மற்றும் சக்தி கிருஷ்ணன் பற்றிய விவரணை அபாரம். ஒவ்வொருவரும் ஒரு புனைவுக் கதாப்பாத்திரம் போல பயணம் முழுவதுமாக திகழ்நது கொண்டே இருந்தார்கள். சிரித்துக் கொண்டே இருந்தேன். ஒருமுறையாவது உங்கள் எல்லோருடனும் ஒரு பயணம் போக வேண்டுமென்ற உணர்வைக் கடத்தியிருந்தார்.
சென்னையில் அவருடனான இறுதி சந்திப்பில் பிரியும் ஒரு தருவாயில் கேட்டேன்… “இவ்வளவு வேலைப்பளு… இத்துனை பொறுப்புகள்… புகழோ பணமோ வெற்றியோ ஒரு பொருட்டாக இல்லாத நிலையில் அமைந்திருக்கிறீர்கள். ஆனாலும் அடியாழத்தில் உங்களில் ஓர் வெறுமையைக் காணமுடிகிறது. நீங்கள் என்னவாக வரலாற்றில் நினைவுகூறப்பட ஆசைப்படுகிறீர்கள்… ” என்று கேட்டேன். கிட்டத்தட்ட இலக்கியம், வாழ்க்கை, வம்புகள் என குழந்தை ஒன்று தான் காணும் புது உலகைச் சார்ந்து கேள்விகளைப் பெருக்கி அறிந்து கொள்வது போல அறிந்த பல பதில்களில் ஒன்று இது. இந்தக் கேள்வியில் மட்டும் ஆழ்ந்த மௌனத்திற்குச் சென்றுவிட்டார். கண்கள் சிறிது நனைந்திருந்தது. என் உளமயக்காகவும் இருக்கலாம். “ஒரு நாவலாசிரியனாக… பா. சிங்காரத்தைப்போல…” என்றார்.
“எழுதலாமே… ஆனால் இத்தனைக்கும் அடியில் ஒரு பதட்டமும் அச்சமும் உங்களில் காணமுடிகிறது” என்றேன்.
“என்னைச் சுற்றி பெரிய எதிர்பார்ப்புகளோடான ஒரு கூட்டத்தை உருவாக்கிவைத்து விட்டேன்…”
“அதிலிருந்து விடுவித்துக் கொள்ள நினைக்கிறீர்களா… ” என்று கேட்டேன்.
“இல்லை. அதை உளமார செய்கிறேன்.. ” என்றார்.
“அந்த அழுத்தத்தோடும் எழுத முடியுமென்று தானே ஜெ சொல்கிறார்… ”
“கண்டிப்பாக எழுதுவேன் ரம்யா.. ” என்று முகம் மலர்ந்தார்.
அவருடைய நாவலுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் ஜெ.
உங்கள் எழுத்துக்களின் வழி என் வாழ்வில் அற்புதமான மனிதர்களை சந்திக்கிறேன். பொதுவாக இந்த சந்திப்புகளில் உங்கள் எழுத்துக்களை நாங்கள் வந்து அடைந்த புள்ளியிலிருந்து நீண்டு நீண்டு இணைமனமாக பயணிக்கும் தருணத்தை சந்தித்து சிலாகிப்போம். இந்த உலகில் இணை மனங்களை காணுந்தோறும் ஏற்படும் மகிழ்வோடு அவரிடம் பிரியாவிடை பெற்றதை மனதில் பதித்திருக்கிறேன். என்றென்றைக்குமாக நிலைத்திருக்கப்போகும் நட்புகளை, என் மனதிற்கு அணுக்கமானவர்களையும் உங்கள் எழுத்துக்களின் வழி தான் கண்டடைகிறேன். நன்றி ஜெ.
பேருந்துப்பயணத்தில் தான் இந்த புத்தகத்தை படித்து முடித்தேன். அருகில் வேறொரு புத்தகத்தைப் படித்திருந்த நபர் என் புத்தகத்தைக் கேட்டார். ஆசிரியர் யாருங்க? என்றார்.
“எழுத்தாளர் செல்வேந்திரன்” என்றேன். அட்டையை மட்டும் புகைப்படம் எடுத்துக்கலாமா! என்றார்.
“நான் படிச்சு முடிச்சுட்டேன். நீங்க வேணா படிங்க” என்று அவரிடமே கொடுத்துவிட்டேன்.
“நிஜமாவா” என்று பெருமகிழ்வுக்கு ஆளானார்.
“நிஜமா தாங்க” என்று புன்னகைத்தேன். “பாலைநிலப்பயணம்” மேலுமொரு பயணத்தைத் துவங்கியது என்றெண்ணினேன். பேருந்தை விட்டு இறங்கும்போது செல்வாவை நினைத்துக் கொண்டேன். தன் அருகமைந்தவர்களுக்கு அத்தகைய பேரானாந்ததைக் கொடுக்கக்கூடியவர்!
பிரேமையுடன்
இரம்யா
அன்புள்ள இரம்யா,
சென்ற சில நாட்களுக்கு முன் சென்னையில் இளங்கோ கிருஷ்ணனின் நூல்வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது. இளங்கோ அதை தன் பெற்றோர் உட்பட பலருக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக ஆக்கிக்கொண்டார். அவ்வுரையில் அவர் முக்கியமாகக் குறிப்பிட்டது செல்வேந்திரனை. வாழ்க்கையின் இக்கட்டான ஒரு சூழலில் அவரை அழைத்தது, அவர் செய்த உதவி வழியாக அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது பற்றிச் சொன்னார்.
அத்தகைய பல உதவிகளை செல்வேந்திரன் செய்திருக்கிறார். எழுத்தாளர், இலக்கியவாசகர் என்றாலே பிறிதொன்று எண்ணாமல் உதவிசெய்பவர். காரணம் இலக்கியம் மீதான நம்பிக்கை. நான் என் நண்பர்களில் சிலரிடம் மட்டுமே பிறர் பொருட்டு முழுநம்பிக்கையுடன் உதவிகோர முடியும். அவர்களில் ஒருவர் செல்வா. அதில் கசப்புகளும் ஏமாற்றங்களும் அவருக்கு உண்டு, மானுட இயல்பு அத்தகையது. ஆனால் அவை அவருடைய நன்னம்பிக்கையை அசைப்பதில்லை.
செல்வா உலகியலில் ரொம்ப உழன்று எழுதாமலாகிவிட்டார் என்னும் எண்ணம் எனக்கிருந்தது. கொஞ்சம் மிகையாகவே அவரை கடிந்துகொண்டிருக்கிறேன். ஆனால் பாலைநிலப்பயணம் ஒரு முக்கியமான நூல். பயணநூல் மட்டும் அல்ல, பண்பாட்டுநூலும்கூட. அவர் மேலும் எழுதுவார் என்னும் நம்பிக்கையை உருவாக்கும் நூல் அது
ஜெ
December 7, 2021
காலடிவடுக்கள்:விக்ரமாதித்யனின் கவிதைகள் – ஜெயமோகன்
நூல்கள் வாங்க
https://www.vishnupurampublications.com/ [ 1 ]சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புத்தாண்டு காலையில், கவிஞர் விக்ரமாதித்யன் என்னைப் பார்க்க வீட்டுக்கு வந்திருந்தார். அதிகாலை, வரவேற்பறையில் அவர் குரல் கேட்டு நான் மேலிருந்து கீழிறங்கி வந்தேன். அருண்மொழி அவரை உபசரித்து அமரவைத்து உற்சாகத்துடன் பேசிக்கொண்டிருந்தாள். விக்ரமாதித்யனும் வழக்கம்போல அருண்மொழியின் அம்மா அப்பா பற்றியெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார். நான் வணக்கம் சொல்லி அருகே அமர்ந்தேன். அவரிடம் பொதுவாக அவருடைய பயணங்கள், அப்போது எழுதிக் கொண்டிருக்கும் கவிதை, கடைசியாக வெளிவந்த தொகுப்பு எனப் பலவற்றைப் பேசினேன். அவர் லக்ஷ்மி மணிவண்ணனைப் பார்ப்பதற்காக பறக்கைக்கு சென்று கொண்டிருப்பதாகச் சொன்னார். அவர் காலையில் டீ காபி எதுவும் சாப்பிடும் வழக்கம் இல்லை.
கிளம்புவதற்கு முன்பு நான் வழக்கம்போல அவரை அணுக, அவர் என் கைகளைப் பற்றிக் கொண்டு, “இன்றைக்கு நான் வந்ததே, புத்தாண்டு அதுவுமாக உன்னை வந்து பார்க்க வேண்டும், வழக்கம்போல நீ தரும் பணத்தை இந்தமுறை வாங்காமல் போக வேண்டும் என்பதற்காகத்தான். என்னிடம் பணம் இருக்கிறது” என்று சட்டைப்பையைத் தொட்டுக்காட்டினார். “பன்னிரண்டு மணிக்கு டாஸ்மாக் திறந்தவுடனே குடிக்க ஆரம்பித்துவிடுவேன். வேண்டிய பணம் இருக்கிறது. இன்றைக்கு இங்கே வரவேண்டும், உன்னிடம் பணம் வாங்காமல் வாழ்த்திவிட்டுப் போக வேண்டும் என்பதற்காகத்தான் வந்தேன்.” என்றார்.
அவர் சென்ற பிறகு அருண்மொழி, “என்ன இது புதுப் பழக்கம்?” என்றாள். நான் சொன்னேன், “எது ஒன்று முறையாக, மரபாக ஆகிவிடுகிறதோ அதை மீறிச் செல்லாவிட்டால் அவர் என்ன விக்ரமாதித்யன்!”. தமிழ்க் கவிஞர்கள் அத்தனை பேரும் குடிப்பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்றால், விக்ரமாதித்யன் குடிக்காத ஆசாரவாதியாக இருப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் உண்டு. அவர் எப்போதும் தன்னைச்சுற்றிய கோட்டுக்கு அப்பால் இருப்பவற்றைப் பார்க்கக் கூடியவர். அக்கரைப்பச்சை கண்டு மேயாது சுற்றிவரும் கன்று அவர். அவரைக் கவிஞராக்குவது அந்த மீறிச் செல்லும் இயல்பு. அவரை அலைக்கழிய வைப்பது அதுதான். தனியராக, புறக்கணிக்கப்பட்டவராக, வீழ்த்தப்பட்டவராக, அவரை நிலைகொள்ளச் செய்வது எப்போதும் எல்லாவற்றுக்கும் வெளியே நின்றிருக்கும் அவர் இயல்புதான்.
விக்ரமாதித்யனுடைய கவிதைகளையும், கவிஞராக அவருடைய ஆளுமையையும் தொடர்ந்து நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர் எனக்கு அறிமுகமானது நான் காசர்கோட்டில் இருக்கும்போது. 1987-ல் இருபத்தைந்து வயது இளைஞனாகிய நான் பல்வேறு அலைக்கழிப்புகளுக்குப் பிறகு , வெவ்வேறு ஊர்களில் அலைந்து சலித்தபின்னர் , என் உறவில் ஓர் அண்ணனின் வீட்டை வந்தடைந்து, அவருடைய முயற்சியால் தபால்தந்தித்துறையில் வேலைகிடைத்து ஒரு நிலையான இடத்தில் தங்க ஆரம்பித்திருந்தேன். அப்போது பல ஊழியர்கள் சேர்ந்து எடுத்த ஒரு வாடகை வீட்டில் அவர்களுடன் தங்கியிருந்தேன். என்னுடைய இயல்புகள் அவர்களுக்கு ஒவ்வாமையை அளித்துக் கொண்டிருந்தன. எவருடனும் நல்லுறவு இல்லாமல் அங்கிருந்து கிளம்பிவிடவேண்டும் என நான் கனவுகண்டுகொண்டிருந்த காலம் அது
நான் இரவெல்லாம் விளக்குப் போட்டுப் படிக்கிறேன் என்பது அவர்களுடைய மிகப் பெரிய குற்றச்சாட்டாக இருந்தது. ஆகவே மிகச் சிறிய ஒரு ஸீரோ வாட் பல்பு வாங்கி வைத்திருந்தேன். ஒரு கைவிளக்கு அளவுக்குக் கூட அதில் வெளிச்சம் வராது. அதை என் தோளுக்கு மேல் ஒரு சிறிய கொக்கியில் பொருத்தி, புத்தகத்தின் தாள்களில் மட்டும் வெளிச்சம் விழும்படி வைத்துக்கொண்டு படித்துக் கொண்டிருப்பேன். விடியற்காலையில் அவர்கள் அனைவரும் எழுந்து வேலைக்குத் தயாராகும்போது நான் தூங்கிக் கொண்டிருப்பது அவர்களுக்கு சங்கடத்தை அளித்தது. எனக்காக எடுத்து வைத்த உணவை நான் நேரம் பிந்தி உண்கிறேன் என்றார்கள். எனது உடைகளை சரியாகத் துவைக்கவில்லை, அவர்களின் உடைகளுடன் அது கிடக்கும்போது ஒவ்வாமையை உருவாக்குகிறது என்றார்கள். நான் பெரியாளாகக் காட்டிக்கொள்ள புத்தகம் படிக்கிறேன் என்றார்கள்.
அனைத்திற்கும் மேலாக, நான் அன்றெல்லாம் பெரும்பாலும் பேசுவதே இல்லை. எனது அப்பாவும் அம்மாவும் தற்கொலை செய்துகொள்ள நான் ஆழ்ந்த மன அழுத்தத்தில் இருந்த காலம். அலைச்சலில் என்னை இழந்து, எங்கோ சென்று, நினைவு மீண்டு, திரும்ப வந்து வேலைக்குச் சேர்பவனாகஇருந்தேன். செல்லும் வேலைக்கு ஏற்ப அன்றன்று சம்பளம் போடப்படும் தற்காலிக ஊழியன் என்பதனால், விடுமுறையோ விடுப்போ எனக்குப் பிரச்சனை இல்லை. உயிர் வாழ்வதற்குத் தேவையான அளவுக்கு சம்பாதிப்பது மட்டுமே என் வேலையின் நோக்கமாக இருந்தது. ஆகவே மாதம் ஒரு பத்துப் பதினைந்து நாட்களே நான் வேலைக்குச் சென்று கொண்டிருந்தேன்.
அன்றெல்லாம் வேலைக்குக் கிளம்பிச் செல்பவன், எதிரில் வரும் பேருந்தின் ஊர்ப்பெயரைக் கண்டு, அப்படியே அதிலேறி அது செல்லும் ஊருக்குச் சென்றிறங்கி, அங்கே இலக்கில்லாமல் சுற்றி, இன்னொரு பேருந்தில் ஏறி, இன்னொரு ஊருக்கு சென்று, அப்படியே பலநாட்களுக்குப் பிறகு காசர்கோடுக்குத் திரும்பி வருவேன். செறிந்த தாடியும், கலைந்த தலைமயிரும், ஒல்லியான உடல் மேல் பெரிய தலையுமாக பைத்தியக்காரன் போல இருந்தேன். ஒரு நாளைக்கு மூன்றரை மணிநேரம் தூங்கினால் அரிது.
தூக்கம்தான் அன்று நான் ஏங்கும் ஒன்றாக இருந்தது. மதுக்கடைகளின் முன் சென்று, உள்ளே சென்று அமர்ந்து மதுவுக்கு ஆணையிடுவதாய் கற்பனை செய்தபடி, ஆனால் என் தந்தை அளித்த ஆணையை மீற முடியாதவனாக, இரவெல்லாம் வெளியே நின்றிருப்பவன் நான். நின்று சலித்து கிளகோடின் வாங்கிக்கொண்டு வந்து குடித்து சில மணிநேரம் தூங்கி விசைகொண்ட உள்ளத்துடன் எழுந்து மீண்டும் வாசிப்பேன்.
மனநோயாளிக்குள்ள தீவிரத்துடன் ரஷ்ய இலக்கியங்களை, ஜெர்மானிய இலக்கியங்களை படித்துக் கொண்டிருந்தேன். படித்த வற்றை பல பக்கங்கலாக நீண்ட குறிப்புகளாக எழுதி சுந்தர ராமசாமிக்கு கட்டுக்கட்டாக அனுப்பிக் கொண்டிருந்தேன். கதைகள் ஒன்றிரண்டு எழுத முயன்று கொண்டிருந்தேன். கல்லூரி மாணவனாக உற்சாகமான இளைஞனாக இருந்த காலங்கள் என் நினைவில் இருந்து மறைந்துவிட்டிருந்தன. அன்றெழுதிய கதைகளையும் நினைவிலிருந்தே தூக்கி வீசியிருந்தேன்.
அப்போதுதான் ஒருநாள் என்னைப் பார்க்க எவரோ வந்திருக்கிறார்கள் என்று என்னுடன் பணியாற்றுபவர் வந்து சொன்னார். நான் எழுந்து சென்று, எங்கள் கேன்டீனில் எனக்காகக் காத்துக்கொண்டிருந்த மனிதரைப் பார்த்தேன். அவர் வரும் வழியில் ரயிலில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டு, தன்னுடைய பையை இழந்து, எஞ்சிய பொருட்களை சட்டையில் போட்டு, அதை ஒரு மூட்டையாகக் கட்டிக் கையில் வைத்துக் கொண்டு, வேட்டி மட்டும் கட்டியவராக அங்கு நின்றிருந்தார். கலைந்த தலை, சிக்குப் பிடித்த சிறிய தாடி, மதுப்பழக்கத்தின் நடுக்கம் கொண்ட மெலிந்த உடல், கலங்கி செவ்வரியோடிய கண்கள். அன்றே முன்பற்கள் சில இல்லாமலாகி இருந்தன. ஆகவே பேச்சு சீறலாகவும் குழறலாகவும் வெளிவந்தது. என்னிடம் “நான் கவிஞர் விக்ரமாதித்யன்” என்றார்.
நான் திகைத்து, “என்னை எப்படித் தெரியும்?” என்று கேட்டேன். “உன்னைப் பற்றி கோணங்கி சொன்னான்” என்றார். ஓரிரு மாதங்களுக்கு முன்பு கோணங்கி என்னைப் பார்க்க வந்திருந்தார். அப்போது காஸர்கோட்டுக்கு அப்பால் கும்பளா செல்லும் வழியில், ஒரு தன்னந்தனியான இஸ்லாமிய இல்லத்தை வாடகைக்கு எடுத்து அங்கே தனியாகத் தங்கியிருந்தேன். தென்னந்தோப்புக்குள் அமைந்திருந்த அந்த இல்லம், திண்ணையில் இருந்து பார்த்தாலே கடல் தெரியும்படி இருந்தது. கடல் அலையின் ஒளி தென்னைமரங்களை நடனமாடச் செய்யும். என் அறைக்குள் நிழல்கள் நெளிந்து கொண்டிருக்கும்.
அங்கிருந்து ஒரு நாள் கிளம்பி தற்கொலை செய்யும் நோக்குடன் கும்பளா வரை நடந்து சென்று, இப்பிரபஞ்சத்தின் ஒரு துளி நான் என உணர்ந்து, திரும்பி வந்திருந்தேன். அந்த வீட்டை உடனடியாக காலி செய்துவிட்டு நண்பர்கள் சேர்ந்து தங்கியிருந்த இந்த இல்லத்துக்கு வந்திருந்தேன். அதற்கு முன் நான் இருந்தது இடதுசாரிகளின் கம்யூன். அங்கே நான் இலக்கியம், அரசியல் என கொண்டாடிக்கொண்டிருந்தேன். அப்பா அம்மா மறைந்தபின் அந்த தனித்த இல்லத்துக்கு வந்திருந்தேன். அங்கே என்னைச்சூழ்ந்திருந்த இருள் சாவின் நெடிகொண்டது என நினைத்து அந்த புதிய வீட்டுக்கு சக ஊழியர்களுடன் வந்தேன். அவர்கள் ஆசிரியர்களும் மின்துறை ஊழியர்களும் அடங்கிய சிறு குழு. இடதுசாரிகள் அல்ல. லௌகீகவாதிகள், அதற்குரிய எல்லா குறுகல்களும் கொண்டவர்கள்.
“உன்னுடைய ரூம் ரொம்ப நல்லா இருந்தது என்று கோணங்கி சொன்னான். மழையும் பெஞ்சுகிட்டே இருந்ததுன்னு சொன்னான், அதனால் வந்தேன். ” என்றார். எனக்கு அவரை என்ன செய்வதென்றே தெரியவில்லை. “சட்டை இல்லையா?” என்று கேட்டேன். “வழியிலே வித்துட்டேன்”‘ என்றார். “உள்ளே ஒரு வேட்டி மட்டும்தான் வச்சிருக்கேன்”.
நாங்கள் பேசிக் கொண்டிருப்பதை என் அலுவலக ஊழியர்கள் சூழ்ந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் திரும்பியபோது என் கண்களைச் சந்திப்பதை தவிர்த்தனர். ஆனால் அன்று என்னைச் சந்திக்க விக்ரமாதித்யனைப் போன்றவர்கள் பலர் வந்துகொண்டிருந்தனர். முக்கியமாக ஜான் ஆபிரகாம். அவர் ஒருமுறை படிகளில் கைகளை ஊன்றி தவழ்ந்து ஏறிவந்தார்.
சில வாரங்களுக்கு முன்பு நான் அப்போது கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்த ‘விஜயபாரதம்’ என்னும் இதழில், ‘இலக்கிய மூலை’ என்னும் பக்கத்தில் விக்ரமாதித்யனைப் பற்றி ஒரு குறிப்பு எழுதியிருந்தேன். அவருடைய நிலைகொள்ளாமை, தேடல், தனிமை ஆகியவை எவ்வண்ணம் கவிதையில் வெளிப்படுகின்றன என்று. உலகில் எங்கும் பொருந்தாமல் அலைப்புறும் கலைஞன் என அவரை மதிப்பிட்டு அவர் கவிதைகளை அறிமுகம் செய்திருந்தேன். அது ஒரு அரசியல் இதழ். அதில் எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஒரு பக்கத்தில் தொடர்ச்சியாக நவீனத் தமிழிலக்கியத்தைப் பற்றி நான் எழுதிக் கொண்டிருந்தேன். பின்னாளில் நான் அறிமுகம் செய்துகொண்ட பல இலக்கியவாசகர்கள் அந்த ‘இலக்கிய மூலை’ என்னும் பகுதி வழியாகவே நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்து கொண்டதாக சொல்லியதுண்டு. ராஜன் என்ற பெயரில் அக்கட்டுரையை எழுதியிருந்தேன். ராஜன் எனது அண்ணனுடைய விளிப்பெயர்.
அந்தப்பக்கத்தின் முக்கியத்துவம் அன்று தெரியவில்லை, இன்று புரிகிறது. அன்று சிற்றிதழ்கள் மட்டுமே இலக்கியத்தை வெளியிட்டுக் கொண்டிருந்தன. ‘யாத்ரா’ வெங்கட் சாமிநாதனுக்குரிய இதழ். ‘நிகழ்’ கோவை ஞானிக்குரிய இதழ். பிரமிளுக்கு ‘லயம்’ இருந்தது. சென்னை கசடதபற குழுவினர் ஒன்று நிற்க இன்னொன்று என வெவ்வேறு இதழ்களைத் தொடங்கி நடத்திக் கொண்டிருந்தனர். இவை அனைத்தும் மாதம் ஒரு முறை அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வருபவை. மொத்தமாகத் தமிழில் அச்சிடப்படும் இலக்கியப் பக்கங்களே ஒரு ஆண்டுக்கு ஆயிரத்துக்குள்தான் வரும் என்று சுந்தர ராமசாமி சொல்வார். ஆகவே வாரம்தோறும் வெளிவந்து கொண்டிருந்த ‘இலக்கிய மூலை’ என்பது அன்றைய இலக்கிய வாசகர்கள் நடுவே மிகப் பரவலாகப் படிக்கப்பட்டது. விக்ரமாதித்யனைப் பற்றி எழுதப்பட்ட முதல் விமர்சனம் என்பது நான் எழுதிய அந்தக் குறிப்புதான். அதுதான் அவரை என்னைத் தேட வைத்தது.
நான் எங்கள் தங்குமிடத்துக்குச் செல்லும் வழியிலேயே விக்ரமாதித்யனுக்கு ஒரு சட்டை ஒன்றை வாங்கிக் கொடுத்தேன். அவருடைய அளவுக்கு மிகப்பெரிய சட்டை. அதைப் போட்டுக்கொண்டு எனது அறைக்கு அவர் வந்தார். வழியில் ஓர் உணவகத்தில் உணவருந்தினோம். வந்ததுமே எனது வீட்டில் இருந்த பொதுவான ஒவ்வாமையை அவர் உணர்ந்து கொண்டார். அவர் எண்ணி வந்த காசர்கோடு இல்லம் அல்ல அது என்று அவருக்குத் தெரிந்தது. என் அறைத் தோழர்கள் அவரை முகம் கொடுத்தே சந்திக்க மறுத்துவிட்டார்கள். அறையில் எனக்குப் படுக்கவே ஒரு பாய்தான் இருந்தது. அவருக்கு படுக்க ஒரு பாய் கொடுத்தேன். ஆனால் அது மழைக்காலம். தரையிலிருந்து சில்லிப்பு வருகிறதென்று சொன்னார். ஆகவே இரவில் செய்தித்தாள்களை எடுத்துக் கொடுத்து அதைப் பரப்பி அதன் மேல் பாய் போட்டு படுக்க சொன்னேன்.
மறுநாள் காலை அவர் சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்கும்போது, அந்த அறைக்குப் பொறுப்பாக இருந்த மூத்தவர் ஒருவர் என்னை அழைத்து, “இன்றே இவர் காலி செய்து செல்ல வேண்டும், இல்லையென்றால் நீயும் செல்ல வேண்டியிருக்கும்” என்றார். நான் விக்ரமாதித்யனிடம் “அண்ணாச்சி, நீங்கள் கிளம்பிச் செல்லுங்கள், இங்கு தங்க முடியாது” என்று சொன்னேன். “புரியுது” என்று அவர் சொன்னார், “ஆனால் என்னிடம் செல்வதற்குப் பணம் இல்லை.” நான் அவருக்குப் பேருந்துக்கான கட்டணமும் செல்வதற்கான செலவும் கொடுத்து வழியனுப்பி வைத்தேன். அன்று முதல் இன்று வரை என் ஆசிரியரின் இடத்தில் இருக்கும் ஒரு கவிஞருடன் என்னுடைய உறவென்பது இவ்வாறு அமைந்தது.
விக்ரமாதித்யனைப் பற்றி நான் எழுதிய அந்தக்குறிப்பை பின்பொருமுறை சுந்தர ராமசாமிக்கு காட்டினேன். அவருடைய இல்லத்திற்கும் விஜயபாரதம் வந்துகொண்டிருந்தது என அப்போதுதான் கண்டேன். அவர் அதை வாசித்துமிருந்தார். “நீங்கதானா அது?” என்றார். பின்னர் “நாடோடி வாழ்க்கையைப் பற்றியும் அலையறதைப் பற்றியும் எழுத்தாளர்கள் கிட்ட ஒரு ரொமாண்டிஸிசம் உண்டு…” என்றார். “சார், நான் அந்த அலைச்சலை வேண்டிய அளவுக்கு செஞ்சாச்சு….” என்றேன்.
“விக்ரமாதித்யனை அவரோட அலைச்சல், குடி எதோடயும் இணைக்காம கவிதைகளை மட்டுமே வைச்சு பாருங்க…அப்ப என்ன தோணுது?” என்றார். “அப்பவும் அவர் பெரிய கவிஞர்தான்” என்றேன். சுந்தர ராமசாமிக்கு விக்ரமாதித்யன் கவிதைகள் ஏற்புடையனவாகவே இல்லை. அவர் “சரி, அவரோட கவிதைகளிலே உங்களுக்குப் பிடிச்ச ஒண்ணைச் சொல்லுங்க” என்றார்.
நான் இரண்டு கவிதைகளை சொன்னேன். ஒன்று “திசைமுடிவுக்கு தெரிவதெல்லாம் ஆகாயம் நீலநிறம்” என்ற கவிதை. இன்னொன்று “தட்சிணாமூர்த்தியான” என்னும் கவிதை. பீடம் விட்டிறங்கி ஊர்சுற்றி திரும்பி வந்து தட்சிணாமூர்த்தியாக அமரும் துடியான கருப்பசாமி பற்றிய கவிதை. இரண்டாவது கவிதை சுந்தர ராமசாமிக்கு ஏற்புடையதாக இல்லை. அது சொல்வதென்ன என்றே அவருக்கு பிடிகிடைக்கவில்லை. ஆகாசம் நீலநிறம் கவிதை வானம்பாடி கவிதைகளோட மெட்டிலே இருந்தாலும் நல்ல கவிதை” என்று சொன்னார்.
நான் எனக்கு ஏன் விக்ரமாதித்யன் முக்கியமானவர் என்று சொன்னேன். அன்று நான் தமிழ் நவீனக்கவிதைகளிலுள்ள அன்னியத்தன்மை பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். நவீனத்தமிழ்க்கவிதையை கேரட் பீட்ரூட் போன்ற ஓர் அயலகப்பொருள் என்பேன். அவற்றை குமரிமாவட்டத்தில் இங்கிலீஷ் காய்கறி என்பார்கள்.
“சார், இது பீர்க்கங்காய் வழுதுணங்காய் மாதிரி. இங்கயே உருவான காய்கறி. வயலிலே விளைஞ்சு நாம சாப்பிடுறோம். காட்டுக்குப்போனா இதோட காட்டுவகை இஷ்டத்துக்கு வளந்து கிடக்கும். விக்ரமாதித்யன் எழுதுறது நவீனக் கவிதை. ஆனா ஒரு சுத்து சுத்திவந்தா இங்கேயே யாராவது நாட்டுப்புற கவிஞன் இதோட ’வைல்ட் வெரைட்டியை’ பாடுறதை கேக்க முடியும்” என்றேன்.
கவிதை என்பது ஒரு refinement என்றார் சுந்தர ராமசாமி. கலை என்பதே ஒரு நுண்மையாக்கம்தான். அவற்றில் உச்சகட்டக் கலை கவிதையும் இசையும். நான் “ஆமாம், ஆனால் எதன் நுண்மையாக்கம்?” என்றேன். “பனையின் சாரமான சாறுதான் பதநீர். ஆனால் நமது மண்ணின் பதநீருக்கும் வேறொரு அன்னிய நிலத்தின் பதநீருக்கும் வேறுபாடுண்டு…ஆப்ரிக்காவில் வெவ்வேறு மரங்களில் இருந்து கள் எடுக்கிறார்கள். அது வேறு” எங்களுக்குள் அந்த விவாதம் அப்படியே நீடித்தது.
சுந்தர ராமசாமி அவருடைய கருத்துக்களை உறுதிசெய்துகொள்ளவே என்னை பயன்படுத்திவந்தார். எனக்கும் அன்று இன்று எழுதுவதுபோல சரியான வார்த்தைகளில் சொல்ல தெரிந்திருக்கவில்லை. எனக்கு அன்றெல்லாம் முதலில் எழுவது உருவகங்களும் உவமைகளும்தான். இன்றுவரை என் இலக்கியவிமர்சனத்தின் அடிப்படையாக இருப்பவையும் அவைதான்.
சுந்தர ராமசாமி “நீங்க அந்த உவமைகளை வீணடிக்காம கவிதைகளா எழுதலாம், நல்லா இருக்கு” என்பார். ஒருமுறை அரசியல் கவிதைகளைப் பற்றிச் சொல்லும்போது “பறக்கிறப்ப பறவைகள் கால்களை மடிச்சு வைச்சுக்கிடறது மாதிரி அரசியல்கவிதைகளிலே அரசியல் இருக்கணும்…” என்றேன். சுந்தர ராமசாமி வாய்விட்டுச் சிரித்தது நினைவுள்ளது.
விக்ரமாதித்யனைப் பற்றி அவருடைய ‘ஆகாசம் நீல நிறம்’ என்ற முதல் தொகுதியை முன்வைத்து 1987-ல் நான் உருவாக்கிக் கொண்ட அந்த மதிப்பீடு, அடிப்படையில் பெரிய மாறுதல்கள் ஏதுமின்றி முப்பத்து நான்கு ஆண்டுகளாக அவ்வாறே நீடிப்பது வியப்புக்குரியது. அவர் மேல் நான் கொண்டுள்ள மதிப்பு இன்று பலமடங்கு பெருகியிருக்கிறது. இந்த முப்பத்துநான்கு ஆண்டுகளில் தொடர்ந்து அவரைப் பற்றி விடாமல் எழுதிக் கொண்டிருப்பவனாக, அவருடைய அனைத்துத் தொகுதிகளுக்கும் எதிர்வினையாற்றுபவனாக, எங்கு கண்டாலும் அவர் கால்தொட்டு வணங்குபவனாக இருந்து கொண்டிருக்கிறேன்.
அவருடைய வாழ்க்கைப் போக்கும் என்னுடைய போக்கும் முற்றிலும் வேறுவேறு திசைகளைச் சார்ந்தவை. ஒரு பொது இடத்தில் நாங்கள் சந்தித்துக் கொண்டால், எங்களுக்கிடையே பொதுவான எதுவுமே இல்லை என்ற உணர்வே ஏற்படும். என்னை கசப்படையச் செய்யும்படி அவர் பலமுறை நடந்துகொண்டிருக்கிறார். கவிதையன்றி நானும் அவரும் சந்தித்துக் கொள்ளும் களங்களே கிடையாது. அவரை நேரில் சந்திக்கும் போதெல்லாம் மிஞ்சிப் போனால் பதினைந்து நிமிடங்கள் உரையாடி, மது அருந்துவதற்கான பணத்தைக் கொடுத்து அனுப்புவதே வழக்கம். அதைப் பலர் கொடை என்பார், கப்பம் என்பவர்கள் உண்டு. நான் காணிக்கை என்றே எப்போதும் சொல்லி வருவேன்.
ஆனால் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஜெயமோகன் விக்ரமாதித்யனை சந்தித்த காலப்புள்ளி முக்கியமானது. அன்று ஒருவர் மதுக்கடைக்குள் நுழைந்து விட்டிருந்தார். இன்னொருவர் நுழைய முடியாமல் வெளியே நின்றிருந்தார். அந்தச் சிறு வேறுபாடுதான் இரு வேறு திசைகளில் வளர்ந்து, முற்றிலும் வேறுபட்ட இரு ஆளுமைகளாக மாறி இருக்கிறது. வெளியே நின்றவர் தன் தந்தையாருக்குக் கட்டுப்பட்டிருந்தார். முன்னோர் சொல் எனும் ஆணை அவருக்கு இருந்தது. அதுவே அவரை சுந்தர ராமசாமிக்குக் கொண்டு சென்றது, ஆற்றூர் ரவிவர்மாவை நோக்கிக் கொண்டு சென்றது. நித்ய சைதன்ய யதியின் பாதங்களில் அமர வைத்தது. இன்று இவ்வண்ணம் ஆக்கியிருக்கிறது.
மதுக்கடைக்குள் சென்றவர் அவ்வாறு யாராலும் தடுக்கப்படாதவர். சொல் என ஒன்று அளிக்கப்படாதவர். விக்ரமாதித்யனின் தந்தையை இன்று அவர் கதைகளின் ஊடாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது. மிகமுக்கியமாக திரிபு என்னும் சிறுகதை ஒரு தன் வரலாற்று ஆவணம்.மிக இளமையிலேயே, ஓர் உயர் நடுத்தர வர்க்க வாழ்க்கையிலிருந்த தன் மனைவியையும் குழந்தைகளையும் கைவிட்டுவிட்டு , திரைப்பட ஆர்வத்தால் சென்னைக்குச் சென்றவர் விக்ரமாதித்யனின் தந்தை. தாயும் குழந்தைகளும் கடும் வறுமைக்குள் விழுந்து ,தன்மானம் இழந்து உதவிகளுக்காக அலைந்து,பசித்து, பரிதவித்து, தங்கள் வாழ்க்கையைக் கடந்தனர்.
விக்ரமாதித்யன் பல கவிதைகளில் தன் இளம்பருவ வாழ்க்கையைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். நான் இளமையிலேயே நொம்பலப்பட்ட ஆன்மா, மாயக்கவிதை எழுத மற்ற ஆளைப்பாரு என கொந்தளிக்கிறது ஒரு கவிதை. திரையரங்குகளில் முறுக்கு விற்றவர், தொண்டர்கடைகளில் பொட்டலம் மடித்தவர், தூக்குவாளியில் சுக்குகாப்பி விற்றவர், ஈரம் உலராத கிழிந்த ஆடையை ஆண்டு முழுக்க அணிந்தவர்.
விக்ரமாதித்யன் அவர் தந்தை அவ்வாறு உதறிச் செல்லாமல் இருந்திருந்தால் முறையான சிறந்த கல்வியை அடைந்திருக்கக் கூடும். நான் சந்தித்தவர்களிலேயே மிகக் கூரிய அறிவும், திகைக்க வைக்கும் நினைவுத் திறனும் கொண்டவர் அவர். அவர் கற்ற எதையுமே மறந்தவர் அல்ல, மூளைக்குமேல் இத்தனை லிட்டர் மது பெய்யப்பட்டபோதும்கூட. ஒருவேளை நாம் அனைவரும் அண்ணாந்து பார்க்கும் சமூகப் பதவியில் சென்று அமர்ந்திருக்கக் கூடும். அவர் தந்தை அவரைக் கைவிட்டார். அது சமூகம் கைவிடுவதுதான், மரபு கைவிடுவதுதான், முன்னோர்களின் நீண்ட நிரை அவரைக் கைவிடுவதுதான்.
அவருடைய கையறுநிலை அங்கேயே தொடங்கிவிட்டது. அவரை அலையச் செய்வதற்கான தெய்வஆணை அவருடைய தந்தை ஊரை விட்டுச் செல்லும் அந்த கணத்திலேயே விழுந்து விட்டது. குலேபகாவலியிலோ எதிலோ அவருடைய தந்தை ஒருகணம் சிறு வேடத்தில் வருவார், அதை பலமுறை திரையரங்குகளில் பார்த்ததுண்டு என ஒரு முறை சொன்னார். தந்தைக்கும் அவருக்குமான உறவு எந்த வகையானது? இன்று அவர் எவ்வண்ணம் உணர்கிறார்?
தான் தந்தையாகும்போது எவருக்கும் தந்தையுடனான உறவு மாறுபடுகிறது என்பார்கள். மகன் என்ற கோணத்தில் இருந்து நோக்குகையில் வந்த கசப்புகளும் விமர்சனங்களும் மறைகின்றன. தந்தையைப்பற்றி பல கவிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். விக்ரமாதித்யனின் கவிதைகளில் அப்பா வருகிறாரா? நான் அவர் கவிதைகளை புரட்டியே பார்க்காமல் இக்கட்டுரையை எழுதவேண்டுமென நினைக்கிறேன். என் நினைவில் தொகுதிகளை புரட்டிக்கொண்டே இருக்கிறேன். இல்லை என்றே தோன்றுகிறது.
திரும்பி வந்த தந்தையைப் பற்றி ‘திரிபு’ என்னும் கதையில் விக்ரமாதித்யன் எழுதுகிறார். நோயுற்று, சலித்து, கருணை கோரி வந்து, திண்ணையில் அமர்ந்திருக்கும் ஒரு முதியவர். ஆனால் ஒரு காலத்தில் அவருடைய இனிய துணைவியாகவும் பணிவான மனைவியாகவும் இருந்த அவர் அன்னை, நால்வகை நிலமும் வயின் வயின் திரிந்து பாலை என்றாவது போல் மாறிவிட்டிருந்தார். கடுமையும், கசப்பும், கொடுமையும் அதற்குத் தேவையான கூர்மையும் கொண்டவராக. குளவி போலக் கொட்டிக்கொண்டே இருக்கிறார். தன்னையும் வதைக்கிறார். வலியால் தானே உளநோயாளிக்கு நிகராக ஆகும்வரை.
தந்தையை அன்னை பழிவாங்குவதைப் பார்த்து மகன் வளர்கிறார். உண்மையில் அதுவும் ஒருவகை கைவிடப்படுல்தான். ஒருவேளை அந்த அன்னை உளம் விரிந்து திரும்பிவந்த கணவரை ஏற்றுக் கொண்டிருந்தால், அன்னையென அணைத்துக்கொண்டிருந்தால், மரபிலிருந்து பிறிதொரு பெரும்படிமம் வந்து விக்ரமாதித்யனைத் தொட்டிருக்கும். தந்தையை அகத்தே இழந்தவருக்கு, தாய் எனும் பேருருவம் கிடைத்திருக்கும்.ஆனால் அந்தக் கதை காட்டுவது, அவர் தன் தாயையும் அகத்தே இழந்தார் என்பதே.
எளிய மனிதர்களாக, சிறிய உணர்வுகளால் தூக்கிச் சுழற்றப் படுபவர்களாக, தாயையும் தந்தையையும் அவர் அறிகிறார். உண்மையில் நமது அனைவருடைய தாயும் தந்தையும் எளிய மனிதர்கள்தான். அன்றாடத்தால், ஆணவத்தால் அலைக்கழிக்கப் படுபவர்கள்தான். ஆனால் தந்தைமை என்றும் தாய்மை என்றும், பல்லாயிரம் ஆண்டுகளாக மரபும் இயற்கையும் உருவாக்கி வைத்திருக்கும் சில விழுமியங்கள் அவர்களிடம் வெளிப்படும் தருணங்கள் உண்டு. அவற்றினூடாகவே நாம் அவர்களை நினைவில் நிறுத்திக் கொள்கிறோம். அத்தருணங்களைக் கோர்த்துக் கோர்த்து அவர்களை ஒரு ஆளுமையென உருவாக்கிக் கொள்கிறோம்.
இளமையின் அன்றாடச்சூழலில், பின் உருவாகும் தலைமுறை மோதலில் நாமறியும் தாயும் தந்தையும் இருவேறு ஆளுமைகள் கலந்த வடிவங்கள். ஒருபக்கம் அவர்கள் எளிய மனிதர்கள். மறுபக்கம் அரிதாக வெளிப்படும் உயிரியல்ரீதியான பாசம், அதன் விளைவான தியாகம் ஆகியவற்றின் உருவங்கள். மூதாதையர்களின் நீட்சியென நின்றிருப்பவர்கள். நம் பெருமரபு தலைமுறை தலைமுறையென தொகுத்து அளித்த தொல்படிமம் அவர்கள் மேல் கவிகிறது. தாய் என்று ஒரு பெண்ணை அறிகிறோம். கூடவே தாய்மை என்று எழுந்தருளும் ஒரு தெய்வத்தையும் அறிகிறோம்.
மனிதர்களாகத் திகழ்ந்த தாயும் தந்தையரும் மறைந்த பிறகு, அவர்களின் மனிதத்தன்மை அனைத்தும் மெல்ல மெல்ல நம் நினைவுகளில் இருந்து விலகிச் சென்று விடுகிறது.அவர்களில் எழுந்த தந்தைமையும், தாய்மையும் மட்டுமே ஆளுமையென உருக்கொண்டு நிலைகொள்கிறது. படிமங்களென உருமாறுகிறது. நம் இல்லங்களில் படங்களாக நாம் வைத்திருக்கும் தாயும் தந்தையரும் அந்தப் படிமங்களே. அவற்றுக்கே நாம் மாலையிட்டு ஊதுவத்தி ஏற்றி வணங்குகிறோம், தெய்வங்களாக்கி வழிபடுகிறோம்.
அவ்வாறு தந்தைமையும் தாய்மையும் எழுந்த தருணங்களை நினைவில் கொள்வதற்கு இலாது, தன் பெற்றோரை மானுடர்களாக மட்டுமே உணரக்கூடிய தீயூழ் கொண்டவர்கள் சிலரே. அவர்கள் அத்தெய்வங்களால் கைவிடப்பட்ட மனிதர்கள். அத்தெய்வங்களின் இடத்தில் அவர்கள் பிறிதொன்றை வைத்தாக வேண்டும். அதற்கெனத் தேடித் தேடி புதிய தெய்வங்களைக் கண்டு கொள்கிறார்கள். அவற்றுள் சில அருளும் தெய்வங்கள், சில மருட்டி ஆட்படுத்தும் கொடிய தெய்வங்கள். விக்ரமாதித்யன் கவிதையைக் கண்டு கொண்டார்.
[மேலும்]
எல்லாமுமான கவிஞன் – காளிப்பிரசாத்
நிறையாக் கலத்துடன் அலையும் கபாலபைரவன்-அந்தியூர் மணி
ஆழித்தேர் சென்ற தடம்- விக்ரமாதித்யனின் கவி முகம்- இராயகிரி சங்கர்
மாயச்சூதின் ஒற்றைப் பகடை- நரேன்
இன்றிருக்கும் நேற்று – நவீன்.ஜி.எஸ்.எஸ்.வி.
நந்தனாரின் நந்தியும் சுடுகாட்டுச் சேவலும் -இரம்யா
கவிச்சித்தனின் அகவெளிக் குரல்-சுபஸ்ரீ
கிறங்கித் திரியுமொரு தமிழ்ப் பாணன் – ரவிசுப்பிரமணியன்.
செருக்கும் கலைஞன் – பாலாஜி ராஜு
விஷ்ணுபுரம் பதிப்பகம் அச்சுநூல்கள்
விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் அச்சுநூல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. கொரோனா சூழலால் கொஞ்சம் மெதுவாகத்தான் நூல்கள் வெளிவருகின்றன. முதலில் வெளிவந்த நூல் குமரித்துறைவி. அடுத்தது வான்நெசவு. இப்போது மேலும் நான்கு நூல்கள். வாசிப்பின் வழிகள், ஆயிரம் ஊற்றுக்கள், பத்துலட்சம் காலடிகள், தங்கப்புத்தகம்.
நூல்களின் விற்பனை ஓர் அதிசயம்தான். நான் குமரித்துறைவி வேகமாக விற்குமென நினைத்தேன். ஆனால் அதைவிட வான்நெசவு விற்று முடிந்து அடுத்த பதிப்பு வந்து அதுவும் முடியப்போகிறது. குமரித்துறைவி இப்போதுதான் இரண்டாம் பதிப்பு நோக்கிச் செல்கிறது. இணையத்தின் வழியாக நூல்களை வாங்கிக்கொள்ளலாம். வரும் விஷ்ணுபுரம் விழாவிலும் நூல்கள் கிடைக்கும்.
நூல்கள் வாங்க
https://www.vishnupurampublications.com/
நவீனத் தமிழிலக்கியக் களத்திற்குள் ஒருவர் தற்செயலாகவே நுழைகிறார். பெரும்பாலும் எங்காவது எவராவது அளிக்கும் ஒரு நூலை புரட்டிப்பார்த்து, ஆர்வம் கொண்டு படிக்க ஆரம்பித்து இலக்கிய உலகுக்குள் நுழைகிறார். இங்கே அவர் ஏராளமான கேள்விகளையும் சிக்கல்களையும் சந்திக்க நேர்கிறது. பல குழப்பங்கள் அவருக்கே உருவாகின்றன. அவற்றை அவர் தொடர்ந்த விவாதம் வழியாகவே தீர்த்துக்கொள்ள முடியும்.
வாசிப்பின் வழிகள்
தென்திருவிதாங்கூர் மண்ணில் நான் பிறந்தேன். திருவிதாங்கூரின் வரலாற்றில் முக்கியமான இடம் உள்ள திருவட்டாறு என் தந்தையின் தாய்வீடு. பழைய வேணாடு இது. அதன் வரலாற்று மையங்களில்தான் என் உறவினர்கள் அனைவரும் பரவியிருந்தனர்.
ஆயிரம் ஊற்றுகள்
ஔசேப்பச்சனை எங்கே சந்தித்திருக்கிறேன்? பலமுறை சந்தித்திருக்கிறேன் என்றே சொல்லவேண்டும். நான் நன்கறிந்த மூவரின் கலவை. அவர்களில் ஒருவர் மெய்யாகவே போலீஸ் உயரதிகாரி. துப்பறிவாளர். அந்தக் கதாபாத்திரத்தில் கேரள சிரியன் கிறிஸ்தவர்களுக்குரிய அலட்சியமான உலகப்பார்வை, இயல்பான கிண்டல், ஆண்மை மிக்க நல்லுணர்வு ஆகிய பண்புகள் உள்ளன.அந்தக் கதாபாத்திரம் இத்தனை புகழ்பெற்றது இயல்பானதுதான்.
பத்துலட்சம் காலடிகள்
திபெத் ஒரு தங்கப்புத்தகம். வாசிக்க வாசிக்க விரிவது, வாசிப்பவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருள் அளிப்பது. மானுடத்தில் இருந்து தனித்து ஒதுங்கி நின்றிருந்த ஒரு பண்பாடு அது. நித்ய சைதன்ய யதி ஒருமுறை சொன்னதுபோல ‘கெட்டுப்போகாமலிருக்க குளிர்சாதனப்பெட்டிக்குள் வைத்து பாதுகாக்கப்பட்ட பண்பாடு’.
தங்கப்புத்தகம்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

