Jeyamohan's Blog, page 866
December 15, 2021
சின்ன வீரபத்ருடு கவிதைகள்- 2
சாதாரண வீதியில் சாதாரண பகல்காலை பத்து மணி, வீதியில் –
முரட்டு கம்பளியில் சுருண்டு கிடக்கும் மரங்கள்.
வெளியில் தெரியும் லோலாக்குகள் போல
எட்டி பார்க்கும் தளிர் இலைகள்.
ஆட்டோக்கள், பெருகும் இரைச்சல்கள்,
பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள்.
கச்சேரிக்கு சுருதி சேர்த்துக்கொள்வதுப்போல்
அன்றாட வாழ்க்கையின் முதல் அலைவு.
எப்போதும்போலவே இருக்கும் வீதியில்
எப்போதும்போலவே காலடி வைக்கையில் நினைத்துக்கொண்டேன்.
இப்பொழுது நான் இங்கு நடந்துக்கொண்டு இருந்தாலும்
நான் நடப்பது இங்கல்ல என்று.
கடந்து வந்த எத்தனையோ பழைய வழிகளையே
மீண்டும் மீண்டும் கடக்கிறேன் என்று.
எந்த தொன்ம நிலங்களுக்கோ திரும்ப திரும்ப
செல்கிறேன், மீள்கிறேன் என்று
ஒரு சாதாரண வீதியில் ஒரு சாதாரண பகல்,
என் பார்வையை உள்ளுக்கு செலுத்தினேனோ இல்லையோ
எங்கெங்கோ உள்ள வீதிகளில் இருந்து ஏதேதோ காலத்தவர்கள்,
எனக்காக ஓர் உலகை மண்ணுக்கு இழுத்துவிட்டார்கள்.
2. வாழ்க்கை ஒரு பச்சிளம் குழந்தை
இந்த வேளையில் என்னை பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள்
எதற்க்காக இத்தனை சுற்றுகள் சுற்றி வருகிறேன் என்பீர்கள்
கரு தரிக்கும் வேண்டுதலோடு புது மணப்பெண்கள்
அரச மரத்தை நூற்றோரு முறை சுற்றிவருவதுப்போல
வாழ்க்கை பலிக்க வேண்டும் என்று இந்த போதி மரத்தை
ஆயிரத்தொருமுறை சுற்றிக்கொண்டு இருக்கிறேன்.
என்னை சுற்றீ காலம் சுழல்கிறது
சுழலும் காலத்தை சுற்றீ
காலாதீதமான ரகசியம் ஒன்றை உள்ளங்கை நெல்லிக்கனியாக்க
நானும் சுழல்கிறேன்
சுற்றுக்கள் நிறைவடைகையில் விதை ஒன்று முளைவிடும்.
என் முனைப்புக்கு ஒரு உருவத்தை அருள்வித்து
அதிகாலை கதிரொளி ஒன்று உயிர் தெளிக்கும்.
மாமரங்கள் சாட்சியாக என் வாழ்க்கை அப்போதோரு
பச்சிளம் குழந்தையாக மாறும்.
பிள்ளையை தொட்டிலில் போடும் நாளில்
அனைவருக்கும் சொல்லி அனுப்புகிறேன்
3 மண்ணுக்கும், சூரியனுக்கும் இடையில்
பனிப் பிரளயத்திற்கு பின் வெளிப்பட்ட பவளப்பாறைபோல்
கண்டிப்பேட்டை ஏரி கரையில் ஒரு குண்டுமணிக் கொடி. பாடகன்
குரல் எழுப்பிய கணமே ஸ்வரங்கள் தெறிப்பது போல, பழுத்து வெடித்த
ஒவ்வொரு காயும் ஒரு ராக கொத்து, இரத்தின பேழை.வருஷமெல்லாம் நான் கடந்து வந்தவை எத்தனையோ, வெயில்,
மழை, பணி, பிணி, இனிமை, தனிமை… ஆனாலும்
நான் இப்படி செம்மையாக வில்லை. என் இதயமும்
வெடித்திருக்கலாம்… ஆனால் பழுக்கவே இல்லை என்று தெரிந்துக்கொண்டேன்.
இப்படி ஒரு சீர் மலர்ச்சி நகரத்தில் வேறெங்கும் என் கண்ணில் படவில்லை.
மண்ணுக்கும், சூரியனுக்கும் இடையில் நடந்த உரையாடலெல்லாம்
இந்த கல்வியற்ற கொடி சிறப்பாக எழுதிவிட்டது. ஒருவேளை, சின்ன வீரபத்ருடு சின்ன வீரபத்ருடு-வாகவே வளர்ந்து இருந்தால் இப்படி ஒன்றை எழுதி இருப்பான்.
(* கண்டிப்பேட்டை ஏரி ஐதராபாதுக்கு நீர் அனுப்பும் ஏரிகளில் ஒன்று)
மொழியாக்கம் :ராஜூ
[மொழிபெயர்ப்பாளர் குறிப்பு] குண்டுமணியை தெலுங்கில் ‘குருவிந்த’ என்போம். மேலெல்லாம் செக்க செவேல் என்று இருந்தாலும்… கீழே மட்டும் சிறு கருமை இருக்கும் இந்த மணியை ஒரு எதிர்மறை உருவகமாகவே பயன்படுத்துவோம். தன்னில் உள்ள தீமைகளை மறைத்துக்கொண்டு எதிராளியை விரமர்சிப்பவர்களை இப்படி குருவிந்த என்போம். ‘குண்டுமணிக்கு தன் குண்டியின் கருப்பு தெரியாதாம்…!’ என்ற அர்த்தத்தில் தெலுங்கல் சொலவடை உண்டு. அந்த எதிர்மறை பிம்பமான மணியை… முழுக்கவே வேறொரு தளத்துக்கு கொண்டு செல்வது மட்டுமல்ல சட்டென்று அதன் படிம மொழியையே மாற்றும் கவிதை இது.
தெலுங்குக் கவிதையின் அறுபதாண்டுகள்-இஸ்மாயில் விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்:சின்ன வீரபத்ருடுDecember 14, 2021
நூறு கடிதங்களில் ஓர் உரையாடல்
Dalogue– Ofra Moran.அன்புள்ள ஜெயமோகன்,
நான் என்னை இப்படி வரையறை செய்துகொள்வேன். தனியன், கூச்சம்கொண்டவன், கனவு காண்பவன், உலகை வெல்ல விழைபவன். தவளையும் இளவரசனும் கதையை படிக்கப்படிக்க கூகிள் மேப்பில் ஐராவத்தைப் பார்த்தேன். அதன் அடர்ந்தகாட்டைப் பார்த்தேன். அவர்கள் மொழியை யூடியூபில் கேட்டேன். திபெத்திய புத்தம், அந்த நிலம் மேலும் ஒரு மயக்கமுண்டு.Seven years in Tibet என்ற படத்தைப் பார்த்தபின் உணர்ந்த ஈர்ப்பு .
இந்தோனேஷியா மேலும் அந்த ஈர்ப்புண்டு. மொத்த கிழக்காசியா நாடுகள் மேல் ஒரு நாட்டமிருக்கிறது. அது ஒரு வாயில் போல தோன்றும். அதற்குள் நுழைந்தால் நம்மை இன்னும் நன்றாக அறிந்துகொள்ள முடியுமென்று தோன்றும்.பாங்காக் விமானநிலையத்தில் பாற்கடலை கடையும் சிற்பத்தை கண்டபின், பிலிப்பைன்ஸ் நாட்டில் நான் வேலை செய்த வங்கியின் மென்பொருள் அலுவலகத்தில் இந்தோனேசியா பரிசாக கொடுத்த ஜடாயு சிலையை பார்த்தபின்னும் நான் அடைந்த உணர்வு.
இந்தியப்பண்பாடு கிழக்காசியாவில் பரவி வேறு பரிணாமமடைந்துள்ளது. கம்போடியா அங்கோர்வாட் கோவில்மீதும் ஒரு கனவுள்ளது. நம் சிந்தனையின் மாற்றம் , புதுக் கோணம் அவர்களிடம் பார்க்க முடியும். அது ஒரு கிளர்ச்சி.
எங்கோ ஆரம்பித்து தாய்லாந்து வரை வந்துவிட்டேன். கொஞ்ச நாளாக இரவில் நட்சத்திரங்களை பார்க்கிறேன். இன்று ஒரு நட்சத்திரத்திடம் பேசினேன். உனக்கும் எனக்கும் இடையே எத்தனையோ ஒளியாண்டுகள். பின்னாளில் மனிதன் ஒளியைவிடவும் வேகாமச் செல்லும் ஊர்த்தியை கண்டு பிடிப்பான். உன்னை விரைவாக வந்து பார்ப்பனென அதனிடம் உறுதி கூறினேன். இப்படி ஒரு அறிவியல் புனைகதை எழுதத்தோன்றியது. பல வருடம் முன் ஒரு காதல் கடிதம் எழுதினேன்.மீதியெல்லாம் மனதிற்குள்தான். உங்களுக்குக்கூட பல கடிதங்கள் மனதில் எழுதிவிட்டேன். உங்களுக்கு விக்கலே இல்லை கனவோ வந்திருக்கலாம்.
போன வருடம் நான் எடுக்க நினைத்த சவால் உங்களுக்கு நூறு கடிதம் எழுதுவது. ஏன் உங்களோடு உரையாட வேண்டும்? எனக்கே பதில் சொல்லாமல் கடிதம் எழுத முடியாது. என்னால் உங்கள் எழுத்திடம் பேச முடிகிறது. என் மனதால் உங்கள் மனதை அறிய முடிகிறது. இந்த உலகில் எனக்கு நீங்கள் நெருங்கியவரல்லவா? ஒரு மகனாய் , அண்ணனாய், நண்பனாய் என்னால் அவர்களோடு உரையாட முடிகிறது. ஆனால் எனக்குள் இருக்கும் இன்னொருவன் உங்களிடம் மட்டும்தான் உரையாட முடியுமென்று நினைக்கிறேன்.
இத்தனை நாள் உங்களோடு உரையாட தொடங்காதது என் கூச்சத்தால். என் கூச்சம் அவனின் உரையாடலுக்கு தடையாய் இருக்கக்கூடாது. 2018 ஊட்டி காவிய முகாமில் புதியவர்கள் பேச வரலாமென நீங்கள் சொன்னபோது எழுந்து பேச முயன்றேன். அது இன்றுதான் சாத்தியமானது.இன்று இந்த கூச்சத்தை ஒரு சோம்பலாக பார்க்கிறேன். சோம்பலைப் போக்கி உங்களோடு உரையாடலை தொடங்க நூறு கடிதம் எழுதும் சவாலை கர்மயோகி காந்தியின் பிறந்தநாளில் ஏற்கிறேன்.
பி .கு 1: எந்த காலவரையறைக்குள் நூறு கடிதமென்ற இலக்கு இல்லை. காலத்தை முடிவு செய்தால் ஓட்டப்பந்தய இலக்காகி வெல்ல மட்டுமே நினைப்பேன்.இப்போதைக்கு தீர்மானமான காலவரையறையில்லை .
பி .கு 2: இந்த கடிதத்தை கைப்பிரதியில் முன்னரே எழுதிவிட்டேன் ஆனால் அனுப்பத் தோன்றவில்லை. அம்மா நாட்காட்டியில் ஒவ்வொரு நாளும் என்ன நாளென சொல்லிவர காந்தி ஜெயந்தியென சொன்ன கணமே முடிவு செய்துவிட்டேன். அன்புள்ள, மோகன் நடராஜ்
DIALOGUE – PAINTING BY EMANUIL POPGENCHEVஅன்புள்ள மோகன்
நீங்கள் எழுதாவிட்டாலும் எழுதினாலும் ஓர் உரையாடல் நடந்துகொண்டிருப்பதே முதன்மையானது. உரையாடிக்கொள்வதென்பது சிந்திப்பதற்கான ஒரு வழி. சிந்தனை என்பது அப்படிச் சில மனநாடகங்கள் வழியாகவே நிகழ முடியும். நான் இன்றும் சுந்தர ராமசாமி, ஆற்றூர் ரவிவர்மா, ஞானி, நித்ய சைதன்ய யதி ஆகியோரின் அவைகளில் அமர்ந்து மானசீகமாக விவாதித்துக் கொண்டேதான் இருக்கிறேன். அவர்களுக்குக் கடிதங்கள் எழுதி அழித்துவிடுவதுகூட உண்டு.
நாம் நம் உரையாடலை நாமே திட்டமிட்டு அமைத்துக்கொள்வது அவசியம். நமக்கு உகந்தவர்கள், நம்மை தீவிரமாக்குபவர்களை நாம் தெரிவுசெய்யவேண்டும். இல்லையேல் நாம் இயல்பாக நமக்கு எரிச்சல்மூட்டுபவர்கள், நம்மை எதிர்ப்பவர்களை நோக்கி உரையாட ஆரம்பித்துவிடுவோம். இன்றைய வலைத்தளச் சூழல் அதை ஊக்கப்படுத்துகிறது. அது நம்மை கசப்பு கொண்டவர்களாக்கும். எதிர்நிலைச் சிந்தனைகள் மட்டுமே நம்மில் உருவாகும். அசல் சிந்தனைகள், ஆக்கபூர்வ சிந்தனைகள் உருவாகாது. படைப்பெழுச்சி வற்றிவிடும்.
இதை நான் அனுபவத்தில் இருந்து கற்றுக்கொண்டேன். அதன்பின் இப்போது நான் என்னுடன் உரையாடுபவர்களை நானே தெரிவுசெய்கிறேன். என்னை வசைபாடுபவர்கள் உண்டு. கேலிசெய்பவர்கள் உண்டு. ஆண்டுக்கணக்காக சலிக்காமல் சீண்டிக்கொண்டே இருப்பவர்கள் உண்டு. அவர்களுடன் உரையாடுவதில்லை. ஆனால் நம் உள்ளம் நம் ஆள்கையில் இல்லை. அவர்களை நாம் வாசித்தால் நம்மையறியாமலேயே உரையாட ஆரம்பித்துவிடுவோம். ஆகவே வாசிப்பதே இல்லை. ஒருவர் நம்மை வசைபாடி எழுதுகிறார், நாம் அவரை வாசிக்க மறுத்துவிடுவதென்பது அவரை செயலற்றவராக்கிவிடுகிறது. வீண் ஓசை எழுப்புபவராக ஆக்கிவிடுகிறது.
நான் எவருடன் உரையாடுகிறேன் என்பதை என் தளத்தை வாசிப்பவர்களே தெரிந்துகொள்ள முடியும். என் வாசகர்களுடன் ஒருபக்கம், என் ஆசிரியர்களுடன் மறுபக்கம். நான் அடைந்துள்ள தெளிவெல்லாம் அவ்வண்ணம் உரையாடி உரையாடி அடைந்தவையே. உரையாடும்போது நம் மொழி துல்லியமாவதைக் காண்கிறோம். துல்லியமான மொழி துல்லியமான சிந்தனையை உருவாக்குகிறது. துல்லியமான சிந்தனை துல்லியமான மொழியையும் உருவாக்குகிறது.
உங்களைப்போலவே பலர் எனக்கு எழுதுவதுண்டு. நான் அவற்றில் எவற்றுக்கேனும் பதில் தேவையென்றால் மட்டுமே திரும்ப எழுதுகிறேன். மற்றபடி அவை ஒருவகை தன்னுரையாடல்களும்கூட என அறிந்திருக்கிறேன். ராதாகிருஷ்ணன் என்னும் நண்பர் எனக்கு முன்பு கைப்பிரதியாக மிகமிக நீண்ட கடிதங்கள் எழுதுவார். முறையான கல்வி அற்றவர். ஆகவே மொழிநடை குழப்பமாக, தாவிச்செல்வதாக இருக்கும். நான் எவற்றுக்கும் பதில் சொல்வதில்லை. இன்று அவருடைய நடை தெளிவாகியிருக்கிறது. சிறுகதைகள் எழுதுகிறார். அவ்வாறு கடிதம் எழுதிக்கொண்டிருக்கும் நூறுபேராவது இருக்கிறார்கள்.
உரையாடல் என்பதே அறிவுச்செயல்பாட்டின் ஒரே வடிவம். வெளியே சமூகத்தில் மட்டும் அல்ல, உள்ளே மூளையிலும் அது உரையாடலாகவே நிகழ்கிறது
ஜெ
விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்:வசந்த் சாய்
இயக்குநர் வசந்த் சாய் இவ்வாண்டு விஷ்ணுபுரம் விருதுவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக எனக்கு அணுக்கமானவர் வசந்த். எண்பதுகளில் தமிழ் இதழியலிலும் இலக்கியத்திலும் ஓர் அலையென நுழைந்த இளைஞர்களில் ஒருவர். சிறுகதையாசிரியர். பின்னர் பாலசந்தரிடம் உதவியாளர். முதல்திரைப்படம் கேளடி கண்மணி. அதன்பின் பல வெற்றிப்படங்கள். சமீபத்தில் வசந்த் இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்னும் திரைப்படம் சர்வதேச அளவில் கவனம்பெற்றுள்ளது
சின்ன வீரபத்ருடு கவிதைகள்
[விஷ்ணுபுரம் விருந்தினர் படைப்புகளை படிக்க https://vishnupuramguests2021.wordpress.com/]
தெலுங்கில் சற்று இசைத்தன்மை கொண்ட கவிதைகள் இவை. அவற்றின் ஆங்கில வடிவில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டவை.
கவிஞர் அஜந்தா என் கவிதையை வாசித்தபோது…
எரிமலையொன்றின் கைகளில்
என் கவிதையை அளித்துவிட்டு
ஒருகணம்
தயங்கி நின்றேன்
புல்லின் இதழொன்று
இளவேனில் தன்னை
சிலிர்க்கச் செய்ததெப்படி என்பதை
பகிர்ந்துகொள்வது போன்றது அது
கிழக்கு மலைத்தொடரின்
காடுகளன்றி
யாரால் அதை புரிந்துகொள்ள முடியும்
உனது கவிதையை வாசித்துக்காட்ட
விரிமனம் கொண்டவரை கண்டடை
இல்லையெனில்
அதை தீயிலிடு
உனைச் சூழ்ந்த உலகு
கனியாத வரை
அனலெழும் உயிரொலிகளே
உனக்கு ஆறுதல்
என் வாழ்நாளில்
நான் கண்டடைந்த ஒன்றுண்டு
எழில்கொண்ட சிறு பொருளையும்
எதிரொளிப்பதற்கு
எதிரே
ஒளிகடத்தும் இதயமொன்று அவசியம்
வாசித்துவிட்டு
தலையசைத்தார்
அப்படியே சாய்ந்தேன்
அவர்முன்
மூன்றாம் உலகக் கவிகள்
குண்டுகளாலும், போர்களாலும்,
நாடுகடத்தல்களாலும்
அடக்குமுறையாலும்
உள்நாட்டுக் கலகங்களாலும்
பூசல்களாலும்
கொடுங்கோன்மையாலும்
எரிக்கப்பட்ட உலகை
இவ்வாறாகத்தான் மீட்டெடுத்தார்கள்
மூன்றாம் உலகக் கவிகள்
நைந்துபோன தேய்வழக்குகளையும்
வெற்று அணிச்சொற்களையும்
பொய்யான வாக்குறுதிகளையும்
பொருளில்லாப் பேச்சுகளையும்
கொண்டல்ல
தெருவில்
மயங்கிவிழுந்தவர்மீது
நீர் தெளிப்பதுபோல
உயிரிழந்துகொண்டிருந்த உலகிற்குள்
உயிர்மூச்சை செலுத்தினார்கள்
வீட்டில் நோயாளியைப் பேணுவதுபோல
தங்கள் நாடுகளை
தங்கள் உடன்பிறப்புகளை
பாதுகாத்தார்கள்
தோட்டத்திலிருந்து பழங்களும் பூக்களும்
கீரையும் கொணர்ந்தார்கள்
கோப்பையில் பழச்சாறை நிறைத்தார்கள்
ஒவ்வொரு காலையிலும் வாழ்த்தினார்கள்
இரவில் செருகும் கண்களில் முத்தமிட்டு
இனிய கனவுகள் காண்க என்றார்கள்
அவர்கள் அருகிருந்து பொறுமையுடன்
கவனித்துக் கொண்டார்கள்
டெட்டால் வாசமும்,
மருந்துகளின் நோய்மணமும்
சூழ்ந்த அறையில்
சாய்வு நாற்காலியிலோ
இரும்புக் கட்டிலிலோ
கண்ணயர்ந்தார்கள்
நடுவில் திடீரென விழித்தெழுந்து
சிறைச்சாலைகளை நினைவுறுத்தும்
மருத்துவமனை அறைகள் வழியே
நேரத்தையும் தெர்மாமீட்டரையும்
பார்த்தார்கள்
விடியும் என்ற மெல்லிய நம்பிக்கையோடு
அடர் இரவுகளை கழித்தார்கள்
பழைய ஏற்பாட்டின் ஒரு டேனியலைப் போல
ஜெரிமியாவைப் போல
ஜோஷுவாவைப் போல
ஜாபைப் போல
அசையா நம்பிக்கை கொண்டிருந்தார்கள்
அவர்கள் செய்ததை தியாகம் என்று சொல்ல மாட்டேன்
மிக எளிய சொல் அது
அவர்கள் வாழ்வை முழுமையாக வாழ்ந்தவர்கள்
அவர்களது இருப்பு காலந்தவறாத பிரார்த்தனை போல
எப்போதும் இருந்தது
வண்ணத்துப்பூச்சியின் சிறகுடன்
வீழ்ந்த உலகை சுமந்தார்கள்
ஐந்து ரொட்டித்துண்டுகளையும்
இரண்டு மீன்களையும் பகிர்ந்தளித்து
பசியைப் போக்கி
வாழ்வை சிறக்கச் செய்தார்கள்
சூரியன் உதித்து வெயில் பரவத்தொடங்குகையில்
திரைகளை விலக்கி, ஜன்னல்களைத் திறந்து
ஆறுதல் தரும் புன்னகையுடன்
தம் மக்களிடம் சொல்கிறார்கள்:
‘பாருங்கள், எல்லாம் சரியாகும் என்று சொன்னோமல்லவா?’
குழந்தைகளுக்கு உணவில்லா கிராமங்களில்
குழந்தைகளுக்கு உணவில்லா கிராமங்களில்
பூக்கள் இருள்கின்றன
குழந்தைகள் பசித்திருக்கும் கிராமங்களில்
மரங்கள் கல்லாகின்றன
குழந்தைகளுக்கு உணவில்லா நாடுகளில்
பால் கருமைகொள்கிறது
குழந்தைகள் பசித்திருக்கும் நாடுகளில்
ரொட்டி கல்லாகிறது
குழந்தைகளுக்கு உணவில்லா உலகில்
பாடல்கள் இருண்டு ஒலிக்கின்றன
குழந்தைகள் பசித்திருக்கும் உலகில்
கவிதைகள் கல்லாகின்றன.
இஸ்மாயில் எனும் கவிஞன் (மனிதன்)
கரும்பச்சையும் எலுமிச்சை மஞ்சளும்
தீட்டப்பட்ட
பழைய சீன மூங்கில் சுவடி போலிருக்கிறான் அவன்
பிப்ரவரிக் குதிரைகள் மிதித்துச் செல்லும்
உதிர்ந்து சிதறிய மாம்பூக்கள்
சாயும் அந்தியொளியில்
கொக்குகளின் மாலையொன்று
நீர் நிறைந்த ஜாடியின் புனித மௌனம்
விடாது எழுந்தமைகின்றன அலைகள்
வரவேற்பறையில் ஓய்வாக அமர்ந்து
மாலைத் தேநீர் அருந்துகிறான்.
சாத்தியமில்லை என்றாலும்
வலிமையை ஒன்று திரட்டி
தலை நிமிர்த்தி
அவன் நோக்கிக்கொண்டிருக்கும் திசையில் பார்க்கிறோம்:
அங்கே நாம் காண்பதென்ன?
ஒரு குருவி
ஒரு மலர்
ஒரு ஹைக்கூ
என்றென்றைக்குமாக நறுமணம் நம்மை காயப்படுத்தியபோது
[பிரபஞ்சத்திலிருந்து பாலைத் திருடிப் பிழைத்தோம்
தோமஸ் டிரான்ஸ்டிரோமர்]
வெள்ளம் விட்டுச்சென்ற நீர்த்தடம் போல்
வேம்பின் மணம் இன்னும் தெருவில் மிதக்கிறது
அத்தகைய பருவமொன்றில்
முதன்முதலாக உன் கைபற்றினேன்
அந்நினைவு நம் எலும்புகளுக்குள் இறங்கியது
மணமோ
என்றென்றைக்குமென நம்மை காயப்படுத்தியது
இப்போது
இன்னொரு இளவேனில் கழிந்துவிட்டது.
இடையே
உன் உடலின் ஒவ்வொரு வளைவையும்
நீந்திக் கடந்தேன்
ஒருவரிடமிருந்தொருவர்
பெறக்கூடியதையெல்லாம் ஈர்த்துக்கொண்டு
எஞ்சியவற்றை
மொய்க்கும் வண்டுகளுக்கும்
தென்றலுக்கும்
தேவதூதனுக்கும் விட்டுச்சென்றோம்
மறைவிடத்திற்குள் இழுத்துச்சென்று
உன் முலைகளை ரகசியமாக
நீ எனக்குத் தரும்போது
தரையிறங்கும் விமானத்தின் சக்கரம்
பூமியை பற்றிக்கொள்ளும் தீவிரத்தோடு
என் ஆற்றலனைத்தையும்
என் உதடுகளுக்குக் கொணர்வேன்
[ஆங்கிலம் வழி தமிழில் ஆனந்த் ஸ்ரீனிவாசன் ]
தெலுங்குக் கவிதையின் அறுபதாண்டுகள்-இஸ்மாயில்
விஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்
விஷ்ணுபுரம் விருதை ஒட்டி விருதுபெறும் எழுத்தாளர்களைப் பற்றிய நூல்கள் வெளியிடப்பட்டன. முதலில் ஆசிரியர் குறித்த ஒரு வரலாற்றுநூல் எழுதப்படவேண்டும் என்பதே இலக்காக இருந்தது. ஆனால் ஆசிரியர்கள் பெரும்பாலும் அதை விரும்பவில்லை. குறிப்பாக முதலில் விருதுபெற்ற ஆ. மாதவன். ஆகவே அது விமர்சனநூலாக வெளியிடப்பட்டது. ஆரம்பத்தில் மூன்றுநூல்கள் முழுமையாகவே என்னால் எழுதப்பட்டன. அதற்குள் விமர்சனப்பார்வை கொண்ட நண்பர்களின் கூட்டு ஒன்று உருவாகியது. ஆகவே நூல்கள் விமர்சனத் தொகைநூல்களாக வெளிவந்தன.
நடுவே ஞானக்கூத்தன் விருதுபெற்றபோது ஆவணப்படம் எடுத்தமையால் விமர்சனநூல் வெளியிடப்படவில்லை. பின்னர் விமர்சனநூலும் ஆவணப்படமும் இருக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. தெளிவத்தை ஜோசப், சீ.முத்துசாமி ஆகியோர் அயல்நிலத்துப் படைப்பாளிகள் என்பதனால் அவர்களின் புனைவுநூல் ஒன்று இங்கே விமர்சனநூலுக்கு பதிலாக வெளியிடப்பட்டது.
கடைத்தெருவின் கலைஞன் – ஆ.மாதவன் விமர்சனநூல்ஆ.மாதவனின் சிறுகதைகளின் முழுத்தொகுதியை தமிழினி வெளியிட்டபோது நான் ஒரு விரிவான விமர்சனக் கட்டுரையை அதன் பின்னிணைப்பாக எழுதினேன். அக்கட்டுரையின் விரிவாக்கமே இந்நூல். ஆ.மாதவனின் படைப்புகள் நெடுநாட்களாக முறையாக நூல்வடிவம் பெறாதிருந்தன. கடைத்தெருக் கதைகள் என்னும் தொகுதி அவர் கடையின் மச்சில் நெடுங்காலம் கட்டுக்கட்டாகக் கிடந்தது. தமிழினி வெளியிட்ட அழகான நூல் ஆ.மாதவனை மீண்டும் தமிழ் இலக்கியச்சூழலுக்குக் கொண்டுவந்தது. என் கட்டுரை அதன் ஒரு பகுதியாக அமைந்தது
பூக்கும் கருவேலம் – பூமணியின் படைப்புலகம்பூமணியைப்பற்றி நான் ஏழுதிய விரிவான கட்டுரைகளின் தொகுதி இது. இக்கட்டுரைகளில் பூமணி உருவாக்கும் கதைப்புலத்தின் வரலாற்று பின்புலமும் கதைமாந்தரின் சமூகப் பின்னணியும் எல்லாம் விளக்கப்பட்டிருந்தன. பத்தாண்டுகளுக்குப்பின் அசுரன் வெளிவந்தபோது அதையொட்டி இங்குள்ள அறிவுஜீவிகள் எழுதிய கட்டுரைகளை வாசிக்கையில்தான் அவர்களுக்கு இந்த அடிப்படைகளில் எந்த அறிவுமில்லை என்பதைக் காணமுடிந்தது. அவர்கள் இந்நூலை வாசிக்கவில்லை. ஆனால் வாசகர்களுக்கு பூமணியை புரிந்துகொள்ள, அசுரனில் இருந்து அவர் உலகை வேறுபடுத்திக்கொள்ள இக்கட்டுரைகள் உதவின.
ஒளியாலானது தேவதேவன் படைப்புலகம்
1999 ல் தேவதேவனைப்பற்றி ஒரு கருத்தரங்கை நான் தனிப்பட்டமுறையில் நெல்லையில் ஒருங்கிணைத்தேன். அப்போது தேவதேவனைப்பற்றிய நூல் ஒன்று வெளியிடப்பட்டது. நவீனத்துவத்திற்குப்பின் தமிழ்க்கவிதை -தேவதேவனை முன்வைத்து. அக்கட்டுரைநூலின் மறுவடிவம் இந்த நூல்
‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றிதேவதச்சனைப்பற்றி வெவ்வேறு படைப்பாளிகள், விமர்சகர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுதி இந்நூல். இக்கட்டுரைகளினூடாக அவரை பல்வேறு கோணங்களில் அணுகமுடியும்
தமிழில் மிக அதிகமாக எழுதப்பட்டது வண்ணதாசனைப்பற்றித்தான். ஆகவே புதிதாக என்ன சொல்லமுடியும் என்பது ஒரு வினா. இந்நூலில் பாதிப்பங்கு அடுத்த தலைமுறைப்படைப்பாளிகள் அவரைப்பற்றி என்ன சொல்கிறார்கள் என்பது அடங்கியிருக்கிறது. முற்றிலும் வேறுபட்ட பார்வைகள் பதிவாகியிருக்கின்றன
ராஜ்கௌதமன் -பண்பாட்டு ஆய்வாளரை மதிப்பிடுதல்ராஜ்கௌதமன் பண்பாட்டு ஆய்வாளர். படைப்பாளிகளைப் பற்றிபேச இலக்கியவாதிகள் முன்வருவார்கள். இலக்கியத்திறனாய்வுக்குக்கூட வாசகர்களும் விமர்சகர்களும் அமையலாம். பண்பாட்டு ஆய்வுக்கு எவர் முன்வருவார்கள் என்றஎண்ணம் இருந்தது. வழக்கமான பண்பாட்டு ஆய்வாளர்களை தவிர்த்துவிட்டு இலக்கியவாசகர்களின் பண்பாடு சார்ந்த பார்வையையே இந்நூலில் தொகுத்திருக்கிறோம்
2019 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர் அபி அவர்களுக்கு வழங்கப்பட்டதை ஒட்டி வெளியிடப்பட்ட விமர்சன நூல் இது. பலதளங்களில் அபியின் கவிதைகளை அடுத்த தலைமுறை வாசகர்கள் எதிர்கொண்டதன் பதிவுகள் இவை
சுரேஷ்குமார இந்திரஜித் படைப்புக்களைப் பற்றி ’சுரேஷ்குமார இந்திரஜித் வளரும் வாசிப்பு’ என்னும் நூல் 2020ல் வெளியிடப்பட்டது. இளம்படைப்பாளிகள் உட்பட பலர் சுரேஷ்குமார இந்திரஜித் பற்றி எழுதிய வாசிப்புகளின் தொகை இது.
சுஷீல்குமார் பற்றி…
விஷ்ணுபுரம் விருந்தினர்-7, ஜா.தீபா
விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம் [விஷ்ணுபுரம் விருந்தினர் படைப்புகளை படிக்க https://vishnupuramguests2021.wordpress.com/]1
ஒழுகினசேரி பாலர் பள்ளியைத் தொட்டுள்ள வீட்டில் என் சித்தி ஒரு இரண்டு மாதம் வாடகைக்கு இருந்தார். பாலர் பள்ளியினுள் மேலாங்கோட்டு நீலி, வங்காரமாடன், ஈனாப்பேச்சி யின் புடைப்புகள் வழிபாட்டிற்குண்டு. பாலர் பள்ளி பொழிந்து அவர்களின் வழிபாடும் முற்றிலுமாக நின்று விட்டிருந்த சமயம். அங்கு சிதல் வளர்ந்து இடிபாடுகளுக்கிடையில் அத்தெய்வங்கள் அமைதியற்றுக் கிடந்திருக்கக் கூடும்.
வீடு மாறியதிலிருந்தே சித்திக்கு உறக்கமில்லை. சித்தப்பா கட்டிங் விட்டுக் கொண்டு மூர்ச்சையாகியிருப்பார். எப்பொழுதும் கூந்தல் கருகும் நெடி, ஆள் அணக்கம் சலசலக்கும் காலடி சப்தங்கள். பூனை ஒன்று சித்தியின் கை விரலைக் கடித்தது. இரவில் பெருச்சாளி கால் பெருவிரலைப் பறண்டியது. அவள் ஒன்றும் புரியாமல் வெறிக்க வெறிக்க இரவைக் கடப்பாள். ஒரு மாதம் இப்படியே சென்றது. வள்ளியமாடத்து இசக்கியின் தாயத்தைக் கட்டினாள். விடுமாடனுக்கு சிறப்பு செய்தாள். எதுவும் மாறாது தினமும் நடந்து கொண்டிருந்தது. அங்கிருந்து மாறுவது வரை அவளால் உறங்கியிருக்க முடியவில்லை. ஏன்? எதற்காக இத்தெய்வங்கள் இவ்வளவு வன்மத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றன. இந்த உக்கிரத்தின் அருளையே அவை நமக்கு வழங்குகின்றனவா எனும் கேள்வி அப்படியே தொக்கி நின்றது.
சுசீலின் மரம்போல்வர், சுவர்மாடன், பச்சைப்பட்டு கதைகளின் வழியே அவர் அத்தெய்வங்களிடம் மல்லுக்கு நிற்கும் இல்லையேல் மண்டியிடும் தருணங்களைக் காண்கிறேன். அருள் தரும் தெய்வங்களே சமருக்கும் நிற்கிறது. அங்கே உருவாகும் பதைபதைப்பை கதையாக்குகிறார். அதற்கான தீர்வுகளை சடங்குகள் மூலம் சரி செய்ய முயல்கையில் அது அதற்கப்பால் வெறித்து நிற்கிறது. எளிய உயிர்கள் மறுதலிக்கவே முடியாத அதன் எல்லைக்குள் விட்டில்கள் போல துடிதுடிக்கின்றன.
2
படைப்பு மனம் அதன் பிளற்வு அது சந்துக்கும் புள்ளிகள், பிரியும் புள்ளிகளை மையமாகக் கொண்ட கதைகள் மூங்கில், நங்கையின் நாராயணன், சிலை கதைகளை சொல்லலாம்.
பித்தின் உக்கிரத்தில் நாம் உருவாக்கிய படைப்புடன் நாம் பிணைந்து கொள்வது. அதிலிருந்து வெளி வர வழி தெரியாமை, வெளி வர விரும்பாமை மூலமாய் அதை தன்னுடைய சந்ததிக்கும் பரப்புதல். ஒரு புறம் அதன் வன்மம் மறுபுறம் அதன் தீர்க்கமும் சாந்தமும். அதே நேரம் அது பிரியும் தளங்கள், அது கை வரப்பெறாமையின் ஆற்றாமை. அதைப் பிடித்து வைக்க முடியாத ஏக்கத்தின் கோபம் நம்மைப் பிறழ்க்கிறது நம்மை சார்ந்தவர்களை முற்றிலுமாக மறுதலிக்கிறது சபிக்கிறது விரட்டுகிறது. அதிலிருந்து மீள விரும்பாமையும் தான். அது மேலும் மேலும் ஒரு சுழல் போல ஆகிறது. அது தன் மேலான படைப்புகளின் வழி, இல்லையேல் நமக்கு கிட்டாத இன்னும் முழுமையடையாத, முழுமையடைய முடியாத ஒன்றிடம் முற்றிலுமாக தாழிட்டுக் கொள்கிறது. அதிலிருந்து வெளி வர முயலும் அனைத்தையும் அடைக்கிறது. சொந்த உடலை அரிந்து திங்கும் மிருகம் போல அதை உணர்கிறேன். சிலை கதையிலும் மாதவன்குட்டி தன் அப்பாவை உணரும் தருணம் அதுதான் என்று நினைக்கிறேன்.
3
ஸ்ரீஇந்திரம் எனும் கோவிலும் அதன் தொன்மமும் அதை சுற்றி நிகழும் கதைகளும். முழுக்க முழுக்க கோவிலின் கதை மாந்தர்கள், திருவிழாக்கள் வழி உருவாகும் புனைவும் அவதானிப்பும். தோடுடையாள் தேவதாசிகளின் கதை மூலம் உமையம்மை தன் சந்ததிக்கு கடத்த முயலும் அதே கலை வேறுவிதமாய். கலை, படைப்பு, படைப்பு மனம், அது நழுவும் காலம், அதன் கைவரப்பெறாமை அங்கிருந்து காலம் நகர்ந்து தன் பிள்ளையிடம் அதைக் கடத்தி விட முயலும் திண்மம் என்பதே அடிப்படை உசாவல்களாக இருக்கிறது.
4
லட்சிய ஆசிரியரை உருவாக்கும் ஏக்கம். அந்த தேடலில் காமம் எனும் அடிப்படை உணர்வின் அலைக்கழிதல் ஒருபுறம் மறுபுறம் சிறார்களின் மீதான பாலியல் வன்முறை. ஒரு ஆசிரியன் அங்கு எந்த இடத்தில் வைக்கப்படுகிறான். அந்த லட்சிய ஆசிரியனின் பிறழ்வும், அங்கிருந்து மேலெழும்ப முடியாத அந்த தடைப்பட்ட மனமும் அதன் சமூகக் கேள்விகள். சமூகப் பார்வையிலிருந்து தனிமனிதனிற்குள்ளும், தனிமனிதனிலிருந்து சமூகத்திற்குள்ளும் என்று அலையாடுகிறது. இதெற்கெல்லாம் அப்பால் குழந்தைமையின் கண்களில் எல்லாம் தலைகீழாக்கப்படுவதையும் காண்கிறேன்.
முக்கியமாக நாஞ்சில் எழுத்தாளர்களுக்கு இரு பண்பாட்டுத்தன்மையின் அனுகூலம். ஏற்கனவே நம்முடைய முன்னோடிகளால் ஸ்திரமாக்கப்பட்ட வட்டார வழக்கும், அதன் மாந்தர்களும். அபரிவிதமான மொழியாடலும் கிடைக்கிறது. ஆனால் அதிலிருந்து மேலெழும், கடக்கும் இல்லையேல் அதனினுள் கரையும் வாய்ப்புகள் உள்ளன.
விதை கதையில் வரும் தாத்தாவை நான் நிஜமாகவே பார்த்திருக்கிறேன். ஆனால் நாஞ்சிலில் இல்லை. கொள்ளிடத்தில். அதில் இருக்கும் பொதுத்தன்மையின் மூலம் நாம் இணைகிறோம். புனைவு ஒரு சொந்த அனுபவமாகிறது. எங்கெல்லாம் புனைவின் வழி நம் வாழ்க்கையின் கதையாடல்கள் நம்முடையதாகிறது எனும் புள்ளிகளையே தேடினேன்.
முக்கியமாக அப்பா கதாபாத்திரங்கள் ஒரே நேரம் கனிவும் குழைவும் பின் கோபமும் வன்மமும் பிறழ்வும் கொண்டு நிற்பதை. அவர்கள் வேறு யாருமல்ல சுவர் ஓட்டை வழி நம்மை சதா வெறித்துக் கொண்டே இருக்கும் அதே சுவர்மாடன்கள் தான் போல.
நன்றி.
தங்கள் உண்மையுள்ள,
நந்தகுமார்
விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத்
விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்
விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன்
விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை
விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார்
விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன்
விஷ்ணுபுரம் விருந்தினர் -7, ஜா தீபா
விஷ்ணுபுரம் விருந்தினர்-8, சோ.தர்மன்
புதுவை வெண்முரசு கூடுகை 45
அன்புள்ள நண்பர்களே ,
வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின் மாதாந்திர கலந்துரையாடலின் 45 வது கூடுகை 18.12.2021 சனிக்கிழமை அன்று மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது . அதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின் சார்பாக அன்புடன் அழைக்கிறோம்
கூடுகையின் பேசு பகுதி
வெண்முரசு நூல் வரிசை 5 “பிரயாகை” ,
பகுதி ஒன்பது : உருகும் இல்லம் . 1 முதல் 3 வரை பகுதி பத்து : மீள்பிறப்பு 1 முதல் 4 வரையிலான பதிவுகள் குறித்து
நண்பர் சிவாத்மா உரையாடுவார்
இடம்: கிருபாநிதி அரிகிருஷ்ணன்
“ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி,
# 27, வெள்ளாழர் வீதி ,
புதுவை -605 001
தொடர்பிற்கு:- 9943951908 ; 9843010306
December 13, 2021
தெலுங்குக் கவிதையின் அறுபதாண்டுகள்-இஸ்மாயில்
பொதுவாக நம்பப்படுவது போல் ஆங்கிலேயர்களின் காலனித்துவ ஆக்கிரமிப்பானது இந்தியாவுக்கு தணிக்கவியலாத பேரழிவு என்று சொல்லிவிட முடியாது. உலகின் சாளரத்தை நோக்கி இந்தியாவை அது முடுக்கிவிட்டது எனலாம். ஐரோப்பிய நிலத்தினின்று உதிர்த்த சிந்தனைகளும், படைப்பாக்கமும் புத்தம்புது தென்றலாய் இந்திய நிலத்தை கமழச்செய்தது. அது இந்தியாவில் ஒட்டடையாகப் படிந்திருந்த மரபையும் பழமையான சிந்தனை முறைகளையும் துடைத்தெடுத்தது.
ஆங்கில இலக்கியத்தின் அறிமுகம், குறிப்பாக ஷேக்ஸ்பியர் மற்றும் கற்பனாவாதக் கவிஞர்களின் அறிமுகமானது சமூகத்தில் தனிமனிதனின் முதன்மைத்துவம், சுதந்திரம் போன்ற கருத்துருக்களை நம் இள உள்ளங்களில் விதைத்தது. இது இந்திய அறிவியக்கச் சிந்தனையில் புரட்சியை ஏற்படுத்தியது. சமயம் மற்றும் சமூக சீர்திருத்தத் துறையிலும், கற்பனாவாதக் கவிதை மற்றும் நாவலின் மலர்ச்சியிலும் ஒரே நேரத்தில் அது வெளிப்பட்டது. வங்கம் புனைவியக்கத்தின் முன்னோடியாக அமைந்தது. அதன் முதன்மை வழிகாட்டிகளாக ராஜா ராம் மோகன் ராய், பங்கிம் சந்திர சட்டர்ஜி மற்றும் ரவீந்திர நாத் தாகூர் அமைந்து முன்னெடுத்துச் சென்றனர்.
கிருஷ்ண சாஸ்திரிஆந்திராவில் இந்திய புனைவியக்கத்தின் சீர்திருத்த அம்சம் வீரேசலிங்கம் பந்துலுவால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. அதே சமயம் படைப்பாற்றல் அம்சம் குரசாடா அப்பாராவால் அற்புதமாக வார்த்தெடுக்கப்பட்டது. அவர் தெலுங்கு கவிதையின் செவ்வியல் வடிவத்திற்கு எதிராக வினையாற்றினார். கவிதையின் அடிப்படைக் கருப்பொருள் மற்றும் மொழி நடைகளில் மாற்றங்களைக் கொணர்ந்தார்.
தெலுங்கு செவ்வியல் கிரந்த அகராதியானது, அன்றாட புழக்க மொழிக்கு ஏற்றாற் போல இலகுவாக்கப்பட்டது. இறுக்கமான செவ்வியல் அளவைகள் மெல்லிய புழக்கத்திற்கேற்ற நாட்டுப்புற ஒலியியலாக/ரிதம்களாக மாற்றப்பட்டன. அதிகாலையின் புதுப்பனியைப்போல அவர் தேர்ந்தெடுத்த மொழியின் அடிப்படைக் கருப்பொருள் புதுமையாக அமைந்தது. இவ்வாறு தெலுங்கின் அடுத்தடுத்த தலைமுறை கவிஞர்களுக்கு அவர் வழிகாட்டினார்.
குரஜாடா அப்பாராவ்
தெலுங்கு ரொமாண்டிசஸித்தில் தன் உட்பொதிந்த நுண்மையாலும் மெய்யான வேட்கையாலும் கிருஷ்ண சாஸ்திரி (கிருஷ்ண பக்ஷம்) தனித்து நிற்கிறார். அவருடைய அந்த நுண்மை கலையிலும் வாழ்க்கையிலும் ஊடுருவி அவை இரண்டிற்குமிடையேயுள்ள எல்லையை அழித்து நெருங்கச் செய்கிறது. அவருக்கு கவிதை என்பது வாழ்வின் ஒரு முக்கிய அனுபவமாக இருந்தது. அது மேலும் அவரின் வாழ்க்கையை தீவிரமாக்கியது.
அவரது ஊர்வசி (1928) என்பது இலட்சிய காதலிக்கான தேடலாகும். கடைசியாக அவர் தனது படைப்பாற்றலில் அவளைக் கண்டு கொண்டார். காதல் மற்றும் வேட்கை, பிரிவாற்றல் மற்றும் ஒன்றுதல், வலி மற்றும் இன்பம் போன்ற வாழ்க்கையின் முரண்பாடுகளை அவள் அவருக்காக இணங்கச் செய்தாள்.
ராயப்ரோலு சுப்பாராவ்தெலுங்கு கற்பனாவாதம் ‘பெட்ராச்சன் சொனெட்’ (Petrarchan kind) வகையிலான எய்தாக் காதலைக் கொண்டாடியது. அவர்களைப் பொறுத்தவரை அன்புக்குரிய காதலி என்பவள் என்றென்றும் அடைய முடியாத ஒரு கனவு-உருவம். தூரத்திலிருந்து மட்டுமே வணங்கப்பட வேண்டியவள். குறிப்பிடத்தக்க தெலுங்கு காதல் கவிஞர்களில் ராயப்ரோலு சுப்பாராவ், அப்பூரி ராமகிருஷ்ணராவ், நந்தூரி சுப்பாராவ், வெதுலா சத்தியநாராயண சாஸ்திரி மற்றும் நயனி சுப்பாராவ் ஆகியோர் அடங்குவர்.
நயனி சுப்பாராவ்1930களில் காதல் கவிதைகளுக்கு எதிராக தவிர்க்க முடியாத எதிர்வினை ஏற்பட்டது. அதன் முன்னணித் தலைமையாக ஸ்ரீரங்கம் ஸ்ரீனிவாசராவ் (ஸ்ரீ ஸ்ரீ) என்ற ஆளுமை இருந்தார். ஒரு கலை அதன் உச்சத்தை எட்டியவுடன், அது நலிவடைந்து, படைப்பாற்றலுக்கு இடையூறு விளைவிக்கும். ஸ்ரீ ஸ்ரீ கற்பனாவாதப் பாணியில் முதலில் எழுதத் தொடங்கினார். ஆனால் இந்த முன்னைய முறையைப் பின்பற்றுவது இப்போது அவர் சொல்ல வேண்டியதற்குப் போதுமானதாக இல்லை என்பதை விரைவில் உணர்ந்தார். ஏனெனில் முன்னையவர்களின் படைப்பாக்க அனுபங்களும், லட்சியங்களும் தன்னுடைய அனுபவங்களினின்று வேறொன்றாய் இருந்தது. எனவே அவருடைய கவிதையின் ஒட்டுமொத்த வரையறை/இலக்கணத்தை மாற்றினால் தான் தன் உள மற்றும் சமூக அனுபவத்தை கவிதைகளில் கொணர முடியும் என நினைத்தார்.
ஸ்ரீஸ்ரீ,அவர் மீமெய்யியல் மற்றும் பொதுவுடைமை ஆகிய இரண்டாலும் அதிகம் ஈர்க்கப்பட்டார். மீமெய்யியல் முறையில் சில சோதனைகளைச் செய்து பார்த்த பிறகு, அதைக் அப்படியே கைவிட்டு, கம்யூனிச இயக்கத்தின் சேவையில் தனது படைப்புத் திறனை அர்ப்பணித்தார். அவரது சிறந்த படைப்புகள் 30 கள் மற்றும் 40 களில் எழுதப்பட்டவை. அதன் பிறகு அவரது அரசியல் பிரவேசம் கவிதை புனையும் திறனை மழுங்காகவைத்தது. அவரது சிறந்த கவிதைகளைக் கொண்ட அவரது மகா பிரஸ்தானம் 1948 இல் வெளியிடப்பட்டது.அதே காலகட்டத்தைச் சேர்ந்த மற்றொரு கவிஞரான நாராயண பாபு.மீமெய்யியலால் திறந்துவிடப்பட்ட கட்டற்ற கற்பனையை அற்புதமாகப் பயன்படுத்தினார்.
1950கள் ஆந்திராவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் உச்ச அலையைக் கண்டது. கம்யூனிச சித்தாந்தத்தை மொழியும் கவிஞர்களை அது உருவாக்கியது. அவர்கள் ‘முற்போக்கு எழுத்தாளர்கள்’ என்ற பெயரிலும் பாணியிலும் ஒன்றிணைந்து, ஸ்ரீஸ்ரீ பயன்படுத்திய சாயல்களைக் கொண்டு நீர்த்துப்போன, சலித்துப்போன கவிதைகளை எழுதினர். இந்த கவிதைக் கொள்கைகளை வெற்றிகரமாக இந்த மண்ணின் அறிவுஜீவிகளால் ஏற்றுக்கொள்ள வைத்தனர். அது இரண்டு தசாப்தங்களாக, 50 மற்றும் 60 களில், ஆந்திர மண்ணில் மதிக்கத்தக்க எந்த கவிதையும் முளைக்காத நிலைக்கு ஆளாக்கியது.
நக்னமுனிஇவற்றை எதிர்ப்பதற்கான நேரம் கனிந்தது. இருப்பினும் வன்முறையும் வெறித்தனமுமே அதைத் தொடர்ந்து எழுந்து கவிதையை முடக்கியது. அவர்கள் தங்களை திகம்பர கவிகள் என அழைத்தனர். அது ஓர் இயக்கமாக இருந்தது. திகம்பரக் கவிஞர்களின் நோக்கம், தங்கள் வாசகர்களை அவர்களின் சமூக அக்கறையின்மை மற்றும் தனிப்பட்ட சீரழிவு பற்றிய விழிப்புணர்வை ஊட்டும்பொருட்டு அவர்களை தாக்கி அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதாகும். இதற்காக மிகவும் வன்மமான மற்றும் பழிக்கும் மொழியை அவர்கள் பயன்படுத்தினார்கள். இதன் மூலம் தங்கள் நோக்கத்தில் ஓரளவு வெற்றி அடைந்தார்கள் என்றும் கூறலாம்.
மஹாஸ்வப்னாஅவர்களின் கவிதை என்பது ஒரு விரிவான மேடைநிகழ்ச்சியின் ஒரு பகுதி அல்லது நிகழ்வுகளின் பகுதியாக அமைந்தது. எல்லாவிதமான விளம்பர உத்திகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களையும் பயன்படுத்தினர். உதாரணமாக ரிக்ஷா இழுப்பவரைக்கொண்டு தங்கள் கவிதைப் புத்தகத்தை வெளியிடுவது போன்ற நாடகீயத்தனங்கள். ஆறு திகம்பர கவிஞர்களில் மஹாஸ்வப்னா மற்றும் நக்னமுனி ஆகிய இருவர் மட்டுமே அவர்களின் படைப்பு பங்களிப்புக்காக தனித்து நிற்கிறார்கள்.
விஸ்வநாத சத்யநாராயணாமுக்கிய நீரோட்டத்தில் இல்லாத சில கவிஞர்களை இங்கே குறிப்பிட வேண்டும். “விஸ்வநாத சத்யநாராயணா”, தனது ஆரம்ப காலத்தில் ரொமான்டிக் பாதையில் பயணித்தாலும், சுபாவத்தால் அப்படிப்பட்டவர் அல்ல. அவர் ஒரு செவ்வியல்வாதி. அவரின் புலமை மற்றும் கலைத்திறன் மூலம் ஒரு பெரிய வாசகர்வட்டத்தை ஈர்த்தார்.
“ஆருத்ரா” தனது முந்தைய கவிதைகளில் (“பைலா பச்சிசு”) ஒரு பெரிய நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தார். ஆனால் பின்னர் அவரது திறமைகள் வரலாற்று புலமையின் மந்தமான மணலில் திசைதிருப்பப்பட்டன. மற்றொரு குறிப்பிடத்தக்க கவிஞர் பைராகி, அவரது கவிதைகள் இருத்தலியல் சார்ந்த மன உலைச்சலை வெளிப்படுத்தின.
இலக்கியத் துறையில் முத்திரை பதித்த இரு சிறந்த கவிஞர்களை இங்கு குறிப்பிட வேண்டும். “பாலகங்காதர திலகர்” ரொமான்டிக் மற்றும் சமூக அக்கறைக்கான மனப்பான்மை இரண்டையும் தன்னுள் பொதிந்து இலகுவான மற்றும் கட்டற்ற ஒழுக்கு கொண்ட வசனங்களை உருவாக்கினார். அது அவருக்கு பரந்துபட்ட வாசகப்பரப்பை உருவாக்கித் தந்தது. மற்றொரு கவிஞர் “அஜந்தா”. அவரின் கவிதைகள் இருத்தலியல் அபத்தத்தின் அயன்மையின் கோர முகத்தை வெளிச்சமிட்டு காட்டுகின்றன.
நாராயண ரெட்டியும், தாசரதியும் கல்வித்துறை வட்டாரங்களில் புகழ்மிக்கவர்கள். செவ்வியலின் எளிமையையும், காதலுடன் அதன் நல்லிணக்கத்தையும் இணைத்த பெருமை அவர்களையே சாரும். இங்கே குந்துருட்டி மற்றும் பாபு ரெட்டி ஆகியோரையும் குறிப்பிட வேண்டும், அவர்கள் இருவருமே திறமையான கவிஞர்கள். கட்டற்ற வசன இலக்கியத்தின் (verse libre) வெற்றி கண்டவர்கள் எனலாம்.
சிவசாகர்
60 களில் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டது. அது அரசியல் எழுத்தாளர்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தியது. ஆழமான சாயல் கொண்டவர்கள் ஸ்ரீ ஸ்ரீ தலைமையில் இணைந்து ‘புரட்சிகர எழுத்தாளர்கள் சங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கினர். இருப்பினும், இது அவர்களின் வசனத்தின் தரத்தை மேம்படுத்தவில்லை, முற்போக்கு எழுத்தாளர்களிடமிருந்து அவர்களை வேறுபடுத்தியது அவர்களிடமிருந்தது கடுமையான தொனி மற்றும் வன்முறையை ஆதரிப்பது மட்டுமே.
இவர்களில் தனிச்சிறப்பு வாய்ந்த கவிஞர்கள் சிவா ரெட்டி மற்றும் சிவசாகர் மட்டுமே. சிவாரெட்டி பாப்லோ நெருடாவால் பாதிக்கப்பட்டவர். அவரது கொதித்தெரியும் உணர்வுகளை வெளிப்படுத்த உயிர்ப்புள்ள கற்பனைகளைப் பயன்படுத்தினார். சிவசாகர் பிரபலமான நாட்டுப்புற முறைகளைப் பயன்படுத்தி மலைவாழ் மக்களைப் பற்றிய பாடல்களை இயற்றினர்.
ஸ்ரீகாந்த் சர்மாமூன்று தசாப்தகாலமாக மீண்டும் மீண்டும் வரும் மூர்க்கமான மற்றும் அரசியல் கவிதைகளுக்கு ஒரு ஆரோக்கியமான எதிர்வினை நிறைவாக 60 களின் இறுதியில் வந்தது. அது அனுபூதி கவித்வம் அல்லது அனுபவக் கவிதை என்று முதலில் அழைக்கப்பட்டது. ஸ்ரீகாந்த சர்மா, மோகன் பிரசாத் மற்றும் இஸ்மாயில் இந்த இயக்கத்தின் முன்னெடுப்பாளர்களாக இருந்தனர். இது ஒரு இயக்கம் அல்ல. மாறாக பலதரப்பட்ட வழிகளினின்று திரண்டெழுந்த இணையான முன்னேற்றம் எனலாம். அவர்களைப் பொறுத்தவரை, வார்த்தைகளுக்கும் அனுபவத்திற்கும் இடையேயான வெற்றிடத்தை இட்டு நிரப்பும் உணர்வும் அறிவுமே கவிதை என்பது.
மோகன் பிரசாத்ஸ்ரீகாந்த சர்மா, சமஸ்கிருத மாணவர். அவர் நவீன உணர்வை கிளாசிக்கல் சமநிலையுடன் இணைத்தார். மோகன் பிரசாத் உலகின் பல வகையான தோற்றப் பதிவுகளுக்கு இலகுவான உணர்வுகளுடன் எழுதினார். இருத்தலியல் மனச்சோர்வின் சாயல் அவரது கவிதைகளில் பரவுகிறது. அவரது பிற்காலக் கவிதைகள் சுயத்தை முன்னிலைப்படுத்தும் தன்மை கொண்டவையாகவும், ஆழ்மனதின் ஆழத்தில் பயணிப்பவையாகவும் அமைந்தன.
இஸ்மாயில் மிகவும் தனிப்பட்ட அனுபவத்தை வெளிப்படுத்துபவராக இருக்கிறார். அவர் தனிப்பட்ட முறையில் பார்க்கும் விடயங்கள் மற்றும் அதன் அறிதல்கள், துன்பங்கள் மற்றும் பிரியங்கள், அதற்கான அவருடைய எதிர்வினைகள், உறவு சார்ந்த விடயங்கள், வாழ்வின் உச்சமான தருணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது அவரின் எழுத்துலகம். மனித அனுபவத்தின் சில உண்மைகளை விளக்குவதற்காக ஒரு கவிதையின் மையச் சித்திரமாக – ஒரு மரம், ஒரு பறவை அல்லது ஒரு மலர் – என அன்றாட இயற்கையின் சில பொருட்களை அவர் கையாள்கிறார்.
சேஷேந்திர சர்மா
70 களில் ஒரு முத்திரையை பதித்த மற்றொரு கவிஞர் சேஷேந்திர சர்மா. தான் கற்ற செவ்வியலில் நுண் திறன்களை உட்புகுத்தி அதில் புதிய குறியீடுகளைக் கண்டடைந்தார். அதன் மூலம் தான் கூற விரும்பிய சமூக உணர்வுகளைக் கடத்தினார்.
நவீன தெலுங்குக் கவிதை இலக்கியத்தில் இன்னொரு இழையைப் பற்றி இங்கு குறிப்பிட வேண்டும். 20 மற்றும் 30 களில் விஸ்வநாத சத்தியநாராயணனால் இந்து உணர்வு மற்றும் பாரம்பரியம் ஆகியவை வெற்றிகரமாக முன்வைக்கப்பட்டது. இது 70 மற்றும் 80 களில் இரண்டு திறமையான கவிஞர்களான சுப்ரசன்னசாய்ரா மற்றும் ஜனகநாதம் ஆகியோரால் தொடர்ந்து முன்னெடுத்துவரப் பெற்றது.
அஜந்தா1980 களில் புது வெளிச்சம் கொண்டு மின்னலென கவிதையின் ஒரு புதிய வெள்ளம் வந்தது. அதன் அடிநாதமாக மூன்று விடயங்கள் திகழ்ந்தன. ஒன்று ‘அஜந்தா’ வெளிப்படுத்தும் விரக்தி மற்றும் ஒழுங்கின்மை. இரண்டாவது மோகன் பிரசாத்தின் உள்ளியல்புத்தன்மை மற்றும் மனச்சோர்வு. மூன்றாவது உணர்வும் படிமமும் இணைந்து வார்த்தைகளுக்கும் அனுபவத்திற்கும் இடையிலான இடைவெளியை இலகுவாக்கும் இஸ்மாயிலின் கவிதை. ஒவ்வொரு கவிஞரின் படைப்பிலும் இந்த மூன்று இழைகள் வெவ்வேறு அளவுகளிலும் படலங்களிலும் பின்னிப்பிணைந்திருப்பதைக் காணலாம்.
பதஞ்சலி சாஸ்திரிசில திறமையான இளம் கவிஞர்களை இங்கே பட்டியலிடலாம். ‘புன்னகை’ நம்மில் மெல்லுணர்வுகளையும் ஆச்சரியத்தையும் கலக்கவிடுகிறது. கோதாவரி சர்மா எழுச்சிமிகு வாழ்வைக் கொண்ட ஒரு திறமையான கலைஞர் ஆவார். ரவூப் மற்றும் சிகாமணி ஆகியோர் நேர்த்தியான புலனுணர்வு கொண்ட இரண்டு நம்பிக்கைக்குரிய கவிஞர்கள். வசிரா மற்றும் நசரா ரெட்டியும் அப்படித்தான். சின்ன வீரபத்ருதுவின் கவிதைகள் இருத்தலியல் மனஉளைச்சலை வெளிப்படுத்துகின்றன.
அஃப்சர், ஸ்ரீனிவாஸ், யாகூப் மற்றும் பென்னா ஆகியோர் ஏற்கனவே ஒரு முத்திரை பதித்துள்ளனர். இரண்டு நிர்மலாக்கள், கொண்டேபுடி மற்றும் கன்டாசாலா ஆகியோர் பெண்ணிய உணர்வைக் கொண்ட இரண்டு துடிப்பான கவிஞர்கள். நன்றாக வார்க்கப்பட்ட மற்றொரு கவிஞர் பதஞ்சலி சாஸ்திரி. சந்தன் ராவ், கந்தலை, உதய் பாஸ்கர் மற்றும் குடிஹாலம் ஆகியோரிடம் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்மாயில்
கம்யூனிசப் பிரச்சாரவாதிகளின் வலையத்திலிருந்து தப்பித்து கட்டற்ற சிந்தனைகள் மற்றும் கற்பனையின் புதிய வெளியை தெலுங்குக் கவிதைகள் வந்தடைந்திருப்பது உண்மையில் மகிழ்வளிக்கும் விடயம் ஆகும்.
நவம்பர் 1990
மொழியாக்கம் இரம்யா
Sixty Years of Telugu Poetry : A telugu retrospective
https://telugudiaries.blogspot.com/2012/04/great-telugu-poets-and-literature.html
விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்:சின்ன வீரபத்ருடு
அன்புள்ள ஜெ,
தற்போதய தெலுங்கு கவிதைகள் என்றாலே ஓங்கி ஒலிக்கும் பெயர்கள் இரண்டு… ஆந்திரத்தில் பாப்பினேனி சிவசங்கர், தெலுங்கானாவில் சிவாரெட்டி. இருவரும் கவிதைத் தொகுப்புகளுக்காக சாகித்ய அகாடமி விருதை வென்றவர்கள்… பேராசியர்களாக ஒய்வு பெற்றவர்கள். கவிஞர்களாகவும் பெரும் புகழ்வாய்ந்தர்வர்கள்.
இருவரையும் ஆழமாக படித்தவன் அல்ல நான். ஆனால், படித்த சிலவற்றில் சிவசங்கரில் எனக்கு மூளை விளையாட்டுதான் மேலோங்கி தெரிந்தது… ஒரு மேதா விலாசம் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. சிவாரெட்டி தெலுங்கானா முற்போக்கு கவிஞர்களில் ஒருவர். இப்பொழுது அந்த பிரச்சார நெடி இல்லைதான்… என்றாலும் அவரின் புகழுக்கு தக்கவாறு எனக்கு அவைகள் படவில்லை. சரி… இவர்களின் கவிதைகள் எல்லாமே மேற்படி நான் முத்திரையிட்ட படிதான் இருக்குமா என்றால்… இல்லைதான். அவைகளையும் தாண்டி, எனக்கு சின்ன வீரபத்ருடு கவிதைகள்தான் நெருக்கமாக இருக்கின்றன.
என்னால் அதை சரியாக விளக்கமுடியுமா என்று தெரியவில்லை. கவிதையாக்கம் மிக மென்மையாக இருக்கும். அதில் சொல்லும் சந்தர்பங்களும் மிகவும் சாதாரணமானவை தான். ஞாபகம் வைத்துக்கொள்ளும் அளவிற்கும் சந்தம் இருக்காது.ஆனாள், கவிதயினுள் ஒரு அடர்த்தி, செறிவு, ஆழம் நம்மை படித்த பிறகு பின் தொடர்ந்துக்கொண்டே இருக்கும். தமிழில் பிரமிள், தேவதச்சன், ஞானக்கூத்தனின் வரிசையில் வைக்கலாம என்று படுகிறது.
தெலுங்கில் 1980 களின் நடுவில் இயக்கம் அல்லாத இயக்கம் ஒன்று தொடங்கியது. ஓங்கி சொல்லாதே, குறைவாக பேசி நிறைய அர்த்தம் பதிய வை, வாசகர்களுக்கு ஒரு தேடுதலை அளி… இதுதான் அவர்களின் அறிவிக்காத பிரகடனம். 1940-களில் ஸ்ரீ ஸ்ரீ தொடங்கிவைத்த புரட்சி கவிதைகளுக்கும், கிருஷ்ண சாஸ்திரியின் ‘ஃபாவ’ கவிதைகளுக்கும், 1980ல் ஒரு பெரும் வெடிப்பாக வந்த ‘திகம்பர’ கவிதைகளுக்கும் மாற்றாக தங்களை இவர்கள் முன்வைத்தார்கள். இஸ்மாயில் இதனுடைய தொடக்கம். அஜந்தா, எல்லோரா அவர்களை தொடர்ந்தவர்கள். பைராகி… இவர்களில் உச்சம்.
பைராகி மீது பெரும் பித்துக்கொண்டவர் சின்ன வீரபத்ரூடு. அவரின் கவிதைகளும் அந்த வரிசையை சார்ந்தவையே. இது என்னுடைய ஊகமாகவும் இருக்கலாம். முழக்க என்னுடைய ரசனை சார்ந்தது என்பதால்… ஒரு குறையாகவும் கருதலாம். ஆனால், இந்த ரசனை உங்களுடனான இந்த பத்து வருடகால பயணத்தில் உருவானது. உங்களின் கருத்துக்களால் செறிவூட்டப்பட்டது. அதனின் தெரிவு அவ்வளவு மேம்போக்காக இருக்காது என்றே நினைக்கிறேன்.
கவிதைகள்போக, வீரபத்ருடு மிகச்சிறந்த விமர்சகர். மேற்கு, கிழக்கு நாடுகளின் தத்துவங்கள், இலக்கியங்களில் ரசனை அடிப்படையில் ஆழ்ந்த அறிவுக்கொண்டவர். அதுதான், சங்கத் தமிழ் இலக்கியத்துக்கு அவரை இழுத்து வந்ததென்று சொல்லலாம். ஒரு விமர்சகராக உங்களுக்கு பக்கத்தில் வைப்பேன் அவரை நான். இருவரின் கருத்துக்களும் ஒன்று கலந்த சந்தர்பன்களை பார்த்து ஒரு வாசகனாக எத்தனையோ முறை வியந்துள்ளேன். முக்கியமாக ‘எது நாவல்?’ என்ற கருதுகோள் இருவருக்கும் ஒன்றுதான். அதன் அடிப்படையில் 1986ல் வந்த ‘அனுக்ஷணிகம்'(vaddera chandidoss எழுதியது) தான் தெலுங்கில் வந்த கடைசி நாவல் என்று பத்ருடு சொல்வார். அதற்க்கு பிறகு நாவலே வரவில்லையாம்!
இரண்டு வருடங்களுக்கு முன்பு ‘நீலா’ என்ற பெரிய நாவலுக்கு இவர் முன்னுரை எழுதுகையில்… ‘ஒரு நல்ல நாவலுக்கான பாதையில் ஒரு சிறந்த முயற்சி என்றுதான் சொல்லவேண்டும்’ என்றார். இத்தனைக்கும் அது அவார்டெல்லாம் வாங்கிய நாவல்!
சரி… நீங்கள் ஒரு ‘விஷ்ணுபுரம்’ அளித்து ‘நாவல் என்றால் என்ன?’ என்று நிரூபித்த மாதிரி இவரும் ஒன்று எழுதலாமே என்றுதான் எனக்கு கேள்வி எழும். பத்ருடுவின் பிரச்சினையே இதுதான்…
அவரின் பணி ஒரு நல்ல நாவலுக்கான உழைப்பை கொடுக்க வாய்ப்பு அளிக்காது என்றே சொல்லவேண்டும். தற்போது அவர் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி. ஆந்திர மாநிலத்தின் கல்வி துறை கமிஷனர். இதுவரையில், விசாகப்பட்டினம் மலைக்காடுகளில் உள்ள மக்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்கு இயற்றியவர். ஸ்ரீ சைலம் நல்லமலை பகுதிகளில் ஆட்சிசெய்யும் ITDA யின் பிரதான அதிகாரியாக தன் பணிகளுக்காக புகழ் பெற்றவர். தன் களப்பணிகளை பற்றி அவர் எழுதிய ‘கொன்னி கலலு… கொன்னி மெலக்குவலு'(சில கனவுகளும்… சில மெய்ப்புகளும்) என்ற புத்தகம் பிரபலமானது. இத்தனை இருந்தும், இந்த பணிகள் எல்லாம்… தன்னுடைய பிழைப்புக்காக மட்டும்தான் என்பார். தன் ஆன்மா இலக்கியத்துக்காக ஏங்கி கொண்டு இருக்கிறது என்பார். இலக்கியத்தில் தனது அதிகாரத்தை நுழையவிடாத மிகச்சிலரில் ஒருவர்.
அதுமட்டுமல்ல, அவரும் காந்தியத்தின் மேல்… லட்சியவாதத்தின் மேல் பெரும் பற்று உள்ளவர். இன்றைய காந்தி போல் தலை சிறந்த புத்தகத்தை எழுதவில்லை என்றாலும்… தன் கண்ணில் பட்ட காந்தியர்களை கட்டுரைகளில் எழுதிக்கொண்டே இருப்பார். ‘காந்தி இல்லை, இனி யார் நமக்கு’ என்ற புகழ் பெற்ற ஹிந்தி புத்தகத்தை மொழிபெயர்த்தார். காந்தியின் மகன் ஹரிலால் பற்றிய சந்துலால் பாகுபாயின் மராத்திய புத்தகமும் கொண்டு வந்தார். கலாம் அவர்களின் அக்னி சிறகுகள் மொழிபெயர்ப்பு தான் பத்ருடுவை மாணவர்களின் மத்தியில் அறியவைத்தது. இந்த மொழியாக்கத்திற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்.
அவரை பற்றி மேலும் எழுதுகிறேன்
ராஜு
விஷ்ணுபுரம் விருதுவிழா சிறப்பு விருந்தினர்கள் இதுவரை
அன்புள்ள ஜெ
கோவையில் நிகழும் விஷ்ணுபுரம் விருதுவிழா பற்றிய செய்திகளை வாசிக்கையில் எல்லாம் நினைத்துக்கொள்வேன், அப்படியொரு இலக்கிய விழா சென்னையில் இல்லையே என்று. இத்தனை எழுத்தாளர்கள் ஓரிடத்தில் கூடி இடைவிடாமல் இலக்கிய விவாதம் நிகழ்வதும் இளம்படைப்பாளிகளும் வாசகர்களும் கூடுவதும் மிகமிக அரிதான நிகழ்ச்சிகள். நான் 2013 ஆம் வருடம் மட்டும் வந்து கலந்துகொண்டேன். டிசம்பர் முடிவில் லீவு எடுத்துக் கிளம்புவது மிகவும் கடினமானது. ஒருநாள் என்றால்கூட வந்துசெல்லலாம். கோவையில் இது ஒரு அருமையான நிகழ்ச்சி என நினைக்கிறேன்
அதிலும் விழா விருந்தினர்களுக்கு கூடுதலாக அழைக்கப்படும் விருந்தினர்களும் அவர்களை நீங்கள் முறையாக அறிமுகம் செய்வதும் ஒரு முக்கியமான இலக்கியச் செயல்பாடு. அதில் பலவகையான எழுத்தாளர்களை அறிமுகம் செய்கிறீர்கள். இளம் எழுத்தாளர்கள் முதல்முறையாக மேடையேறுகிறார்கள். ஆரம்பநிலை எழுத்தாளராக மேடைக்குவந்த சுரேஷ்பிரதீப், சுனீல்கிருஷ்ணன், விஷால்ராஜா போன்றவர்களெல்லாம் இன்று அறியப்படும் எழுத்தாளர்களாக ஆகிவிட்டார்கள்.
வாழ்த்துக்கள்
எஸ்.ஜெயக்குமார்
விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்கள்
2010 விருதுபெற்றவர் ஆ.மாதவன்மணிரத்னம்
வேதசகாயகுமார்
புனத்தில் குஞ்ஞப்துல்லா
2011 விருதுபெற்றவர் பூமணிபிரதீபா நந்தகுமார்
பாரதிராஜா
எஸ்.ராமகிருஷ்ணன்
2012 விருதுபெற்றவர் தேவதேவன்இளையராஜா
நாஞ்சில்நாடன்
கல்பற்றா நாராயணன்
2013 விருதுபெற்றவர் தெளிவத்தை ஜோசப்
பாலா
இந்திரா பார்த்தசாரதி2014 விருதுபெற்றவர் ஞானக்கூத்தன்புவியரசு
வசந்தபாலன்
சா.கந்தசாமி
2015 விருதுபெற்றவர் தேவதச்சன்வெற்றிமாறன்
யுவன் சந்திரசேகர்
ஜோ டி குரூஸ்
2016விருதுபெற்றவர் வண்ணதாசன்எச்.எஸ்.சிவப்பிரகாஷ்
நாசர்
இரா முருகன்
கு சிவராமன்
பவா செல்லத்துரை
2017 விருதுபெற்றவர் சீ முத்துசாமி
ஜனிஸ் பரியத்
பி.ஏ.கிருஷ்ணன்ம.நவீன்
2018 விருதுபெற்றவர் ராஜ் கௌதமன்அனிதா அக்னிஹோத்ரி
தேவிபாரதி
ஸ்டாலின் ராஜாங்கம்
மதுபால்
2019ல் விருது பெற்றவர் கவிஞர் அபிசிறப்பு விருந்தினர்கள்
ரவி சுப்ரமணியம்
பெருந்தேவி
ஜான்னவி பரூவா
கே.ஜி.சங்கரப்பிள்ளை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

