Jeyamohan's Blog, page 868
December 11, 2021
தன்னைக் கடத்தல்
நூல்கள் வாங்க
https://www.vishnupurampublications.com/“காதில் தீராத ஒலி கேட்டுக்கொண்டிருக்கும் டின்னிடஸ் என்னும் நோய்கொண்ட ஒருவர், தூக்கத்திற்கான நேரம் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கும் நோய் கொண்ட ஒருவர் என இருவர். அவர்களின் வெற்றியின் கதையை அவர்கள் சொல்கிறார்கள். தங்கள் சிக்கலை தீர்த்துக்கொண்டதுடன் மற்றவர்களுக்கு உதவுபவர்களாகவும் அவர்கள் ஆகிறார்கள்.
தங்கள் தனிவாழ்க்கைச் சிக்கல்களால் தங்களை முற்றாகவே சமூகத்தில் இருந்து ஒளித்துக்கொள்ள விரும்பும் மூவரின் குறிப்புகள் இதிலுள்ளன. அவர்களைப் போன்ற பல்லாயிரவர் நம் சமூகத்தில் உண்டு. அவர்களின் உளவியலும் சிக்கல்களும் அவர்களின் சொற்கள் வழியாகவே இதில் பதிவாகியிருக்கின்றன.
இந்நூல் வெவ்வேறு வகையில் வெளியே தயங்கி நின்றிருப்பவர்களுக்கு தன்னம்பிக்கையை, ஊக்கத்தை அளிப்பதாக அமையும். ஏனென்றால் இது, தன் எல்லைகளைக் கடந்தவர்கள் மற்றும் கடக்க முற்படுபவர்களின் கதை.”
~ எழுத்தாளர் ஜெயமோகன்
‘விழிப்புணர்தலே குணமாகுதலின் முதற்படி’ என்ற கூற்று வாழ்வின் அனைத்து அகக்கேள்விகளுக்கும் பொருந்தக்கூடிய ஒரு பொதுப்பதில். மீளவே முடியாது என நாம் நம்பிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தடைகளையும், எங்கோ யாரோ ஒருவர் மீண்டெழுந்து வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். அதேபோல, நமக்கு மட்டுமே உண்டான தனிச்சிக்கல் என யூகித்திருந்த ஒரு விசயத்திற்கு, இன்னொரு மனிதன் தன் வாழ்விலிருந்து தீர்வுரைக்கும் போது நம் மனம் மறுபரிசீலனைக்கு உள்ளாகிறது.
அவ்வகையில் இன்றைய நவீன சமூகத்தின் உளநிலையில் மெல்லமெல்ல ஆதிக்கம் செலுத்திவரும் டின்னிடஸ் எனும் காதிரைச்சல், உறக்கமின்மை, உளச்சோர்வு ஆகிய பிறழ்வுகளால் பாதிப்படைந்தவர்கள், அதிலிருந்து தங்களை எவ்வாறு மீட்டுக் கொண்டார்கள் என்பதை அவர்களின் கடித மொழியிலேயே பதிவுசெய்த நூலாக ‘தன்னைக் கடத்தல்’ புத்தகமடைந்துள்ளது. நிச்சயம் இந்தச் சிக்கல்கள் பொதுச்சமூத்தில் உரையாடப்படுவதைக் காட்டிலும், சிக்கலுக்குள்ளானோரின் அகத்தில் ஓர் தீர்வுரையாடலாகத் துவங்கப்பட வேண்டுமென ஜெயமோகன் விழைகிறார்.
தன்னைக் கடத்தல் புத்தகம், வருகிற டிசம்பர் 25, 26 தேதிகளில் கோவையில் நிகழவுள்ள விஷ்ணுபுரம் இலக்கியவட்ட விருதளிப்பு நிகழ்வில் வெளியீடு கொள்கிறது. தேர்ந்த அச்சுத்தரத்தில் இதை ஒரு நற்புத்தகமாக வாசகமனங்களின் கைகளில் சேர்ப்பிக்கும் கனவோடு காத்திருக்கிறோம். தன்னறம் வாயிலாக இதற்கு முன்பு வெளியாகிப் பரவலடைந்து ‘தன்மீட்சி’ நூலின் இன்னொரு நீட்சிப்பரிமாணம் என்றும் இந்நூலைக் கருதலாம்.
நன்றியுடன்,
தன்னறம் நூல்வெளி
www.thannaram.in
கிசுகிசுப்பின் இனிமை- கடலூர் சீனு
இனிய ஜெயம்
மின்சாரம் அற்ற இரவில் ,மொட்டை மாடியில் நின்று , கீழே எதையோ செய்து கொண்டிருக்கும் ,எளிய மானுடரை குனிந்து நோக்கும் தேவ தேவனின் கவிதை ஒன்றுண்டு . அங்கிருந்து குனித்து பார்க்கப்படும் இந்த எளிய மானுடன் யார் ? அவனால் ஏன் மொட்டை மாடிக்கு வரவே இயல வில்லை ? அப்படியே வந்தாலும் அவன் என்ன செய்வான் ? மொட்டை மாடி எளியவனுக்கு அளிப்பது என்ன ?.
நண்பர் ஒருவர் இரண்டு முறை கூடுகைக்கு வந்தவர் ,மூன்றாம் முறை தனது மனைவியையும் அழைத்து வந்தார் . மிக்க மகிழ்ச்சியாக இருந்தது . அவரது மனைவி கூடலின் ஒவ்வொரு நண்பர்களையும் தனித்தனியாக அறிமுகம் செய்து கொண்டார் .கூடல் நிறைகையில் அனைவரையும் வாய்ப்பு கிடைக்கும் போது தமது இல்லம் வருமாறு உபசார சொல்லும் சொல்லிவிட்டு போனார் . அடுத்த கூடலில் நண்பரை பிடித்து வைத்து, குடும்ப சகிதமாக இலக்கிய கூடலுக்கு வர எண்ணும் அவரது மனநிலையை மெச்சினேன் .அவர் உச்சு கொட்டி விட்டு . ” சீனு நீ கல்யாணம் ஆகாத ஆளு உனக்கு இதெல்லாம் புரியாது . மாசா மாசம் ரெண்டு நாள் பய நாலு மணி நேரம் கண்ல படாம எங்கயோ காணாம போறானே ,அப்டி பய எங்கதான் போறான் அப்டின்னு அவளுக்கு உள்ளுக்குள்ள உதைப்பு .இப்போ கூட்டிட்டு வந்து எல்லோரையும் காட்டிட்டேனா , கொஞ்ச மாசம் பதட்டடம் இல்லாம ,எப்போ கிளம்ப ,அப்படிங்கற பயம் இல்லாம இங்க வரலாம் ”என்றார் . ஒரு கணம் உள்ளே உச் கொட்டினாலும் ,வெளியே வெடித்து சிரித்து விட்டேன் .
மற்றொரு நண்பர் கவிதை ஓவியம் இவற்றின் மீது ஈடுபாடு கொண்டவர் .மணம் புரிந்தார் . பணி நிமித்தம் வெளிநாடு போனார் .வந்து பார்த்தால் அவரது நூலக சேகரம் மொத்தத்தையும் மாமியார் எடுத்து பழைய பேப்பர் கடைக்கு போட்டு விட்டிருந்தார் . சிரித்து கொண்டே சொன்னார் நண்பர் ”பிடில வெச்சுருக்க வேணாமா புருஷன …”. அவர் சிரித்துக்கொண்டே இதை சொன்னதால் ,நானும் இதை சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டேன் .
அறிவச்சம்
மனையாட்டி ஊருக்குப் போயிருந்த நாளில்
தன்னிச்சையாக மொட்டைமாடிக்குப் போனான்
கருநீல வானத்தில் கரைந்து நின்றான்
குறைமதிக்கும் நெஞ்சழிந்தான்
நட்சத்தரங்களில் மினுமினுத்தான்
அவள் வீட்டில் இருக்கையில்
இவ்வளவு பெரிய வானம்
இத்தனை கோடி விண்மீன்கள்
இப்படி ஜொலிக்கும் நிலவு
இவையெல்லாம் எங்கே ஒளிந்து கொள்கின்றன ?
என்று ஒரே ஒரு கணம் யோசித்தான்
மறுகணம்
அஞ்சிநடுங்கி
missyou என்றொரு குறுஞ்செய்தி அனுப்பினான் .
வாசித்த முதல் கணம் சட்டென சிரித்து விட்டாலும் ,இசையின் இந்த கவிதையில் உறைவது எத்தகையதொரு மன்றாட்டு . எதை இழந்து இதை சுமந்து கொண்டிருக்கிறோமோ , சுமந்துகொண்டிருக்கும் அதன் முன் சிறிது கருணை கேட்டு வைக்கப்படும் மன்றாட்டு .
எளியவன் .அந்த எளியவன் ,அவனுக்கும் மொட்டை மாடி பிடிக்கும் ,அவனால் அங்கே செல்ல முடியாது ,ஆகவே அந்த மொட்டை மாடியில் நிற்பவனை இந்த எளியவனுக்கு நிரம்ப பிடிக்கும் .
ஒரு செய்தியும் இல்லாதவன்
செயற்கரிய செய்யாதவன்
வெற்றிகளின் கழுத்து ரத்தம் காணாதவன்
பொந்தில் கிடக்க வேண்டும்
ஆனால்
அவன் ஒரு செயல்வீரனை அழைத்துவிட்டான்
”என்ன விசேஷம் ….?” என்ற கம்பீரத்துக்கு
என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை .
”சும்மா ..ஒரு பிரியம்..”என்று சொல்லலாம்
ஆனால்
பிரியம் விசேஷத்தில் சேருமா என்பது
சந்தேகம்தான் .
பிரியம் கொண்ட எளியவர்களை , அதுவன்றி வேறெதுமற்ற எளியவர்களை ,அதை விடுத்து வெறும் எளிய மனிதர்களாக நோக்கும் இரும்பு விழி முன் ,அந்த பிரியம் மௌனமாக அமர்ந்து இருக்கிறது . நான் இருக்கிறேன் ,நான் இருக்கிறேன் என்ற அதன் அந்தரங்க கிசுகிசுப்பின் குரல் ,இசையின் இந்த இரண்டு கவிதைகளும் .
கடலூர் சீனு
December 10, 2021
காலடிவடுக்கள்:விக்ரமாதித்யனின் கவிதைகள்-4, ஜெயமோகன்
[ 7 ]
தங்கள் வாழ்க்கையை ஒரு வெளிப்பாடாக, ஒரு வகையில் சொல்லப்போனால் ஒரு நிகழ்த்துகலையாக ஆக்கிக்கொண்ட கவிஞர்கள் உலகமெங்கும் உண்டு. அவர்களில் விக்ரமாதித்யன் ஒருவர். ஏ.அய்யப்பன் பற்றிச் சொல்லும்போது கல்பற்றா நாராயணன் குறிப்பிட்டார்.”அவருடைய கவிதைகள் ஒரு நாடகத்தில் உரைக்கப்படும் வசனங்களைப் போன்றவை. அவற்றைச் சொல்லும் கதாபாத்திரம் அவர்தான். அவர் அந்த நாடகத்தில் நின்றுதான் அந்த வசனத்தை சொல்ல முடியும். அந்த நாடகத்துக்கு வெளியே வந்து அந்த வசனத்தை சொல்லியிருந்தால் அவை புரிந்திருக்காது, அவ்வளவு உணர்ச்சிகள் ஏற்றப்பட்டிருக்காது. ஆகவே தன் வாழ்நாள் முழுக்க ஒரு நீண்ட நாடகமாக மாற்றிக்கொண்டார்”. விக்ரமாதித்யனுக்கு அது பொருந்தும்.
நினைத்துப் பார்க்கையில் முன்னால் சென்று மலையாளப் பெருங்கவிஞர் பி.குஞ்ஞிராமன் நாயர் அவர்களை நினைவு கூர்கிறேன். “ஏதோ வளை கிலுக்கம் கேட்டு அலையும் பிரஷ்ட காமுகன்” என்று அவரை ஆற்றூர் ரவிவர்மா சொல்கிறார். காதலியின் வளையலோசையை நினைவில் மீட்டுக்கொண்டு எல்ல ஓசைகளிலும் அதையே கேட்டு கலங்கி அலைந்து கொண்டிருக்கும் கைவிடப்பட்ட காதலன். பி.குஞ்ஞிராமன் நாயரின் அவருடைய வாழ்க்கைக் குறிப்புக்கு முன்னுரை எழுதிய எம்.டி. வாசுதேவன் நாயர், “இந்த வாழ்க்கை வரலாற்றைப் பற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. இந்த வாழ்க்கைக் குறிப்புகள் கவிஞரின் வாழ்க்கையைப் போலவே கட்டவிழ்ந்தவை” என்கிறார். குத்தழிஞ்ஞவ என்ற சொல். குத்து அழிஞ்ஞ என்றால் சுவடிகளை சேர்த்துக் கட்டும் நூல் அறுபட்டுவிட்டது என்று பொருள். கட்டற்ற வாழ்க்கைக்கும் அச்சொல்லை பயன்படுத்துவதுண்டு.
தமிழில் ஒருவகையில் நகுலனையும் இவ்வாறு கூற முடியும். நகுலனின் வாழ்க்கை அருகே இல்லை எனில் அந்தக் கவிதைகளுக்கு எந்தப் பொருளும் இல்லை. புகைப்படங்கள், வாழ்க்கைக் குறிப்புகள் வழியாக நாமறியும் ஒரு நகுலன் நம்மிடம் நேரடியாக அவ்வரிகளை சொல்லிக் கொண்டிருக்கிறார். அதன் பொருட்டுத் தன் வாழ்க்கையையே ஒரு முழு நாடகமாக அவர் நடிக்க வேண்டியிருந்தது. தன்னையறியாமலேயெ அவர் அதைச் செய்துகொண்டிருந்தார். சிமிட்டா பொடி, சற்றே சாய்ந்த சாய்வுநாற்காலி, செம்பில் நீர், வெற்றிலைபாக்கு, மது… நன்கு செதுக்கப்பட்ட ஒரு குணச்சித்திரம். ந.பிச்சமூர்த்திக்கோ பிரமிளுக்கோ தேவதேவனுக்கோ அப்படி ஒன்று இல்லை, அவர்கள் அந்தக் குணச்சித்திரத்தின் வல்லமையில் நிலைகொள்ளவில்லை. அவர்களின் தனிப்பட்ட குணச்சித்திரம் பற்றி மிகக்குறைவாகவே எழுதப்பட்டுள்ளது.
பின்னால் சென்று நோக்கினால், பாரதிக்கும் இதை ஒரு வகையில் சொல்ல முடியும். பாரதி வாழ்வின் . பெரும்பகுதியை அபின் மயக்கத்தில் செலவழித்திருக்கிறார். பாரதியைப் பற்றிய வ.உ.சிதம்பரம் பிள்ளையின் குறிப்பு அவரை விக்ரமாதித்யனைப் போன்ற ஒரு ஆளுமையாகவே காட்டுகிறது. தனது கவிதைகளை உரக்கச் சொல்லி நடனமிடக் கூடியவர். கடற்கரையில் போதையில் கவிதைகளை உளறியபடி அலையக்கூடியவரை யதுகிரி அம்மாளின் இளமைக்காலக் குறிப்புகளில் அதைப் பார்க்கிறோம்.
ஞானப்பித்தர் என்றுதான் பாரதி பின்னாளில் கருதப்பட்டடார் ஆனால் அக்காலத்தில் வெறும் போதை அடிமையென்றே கருதப்பட்டிருக்கு வாய்ப்பிருக்கிறது. பாரதி புகழ்பெற்றது எல்லாம் அவர் மறைந்து மேலும் பதினைந்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகுதான். பாரதியின் புகழ்பெற்ற வாழ்க்கை வரலாறுகள் எல்லாமே அவர் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான் எழுதப்பட்டன என்று சுந்தர ராமசாமி ஒரு முறை குறிப்பிட்டார். செல்லம்மாள் பாரதியின் வானொலி உரை ஒன்றில் வாழ்ந்தபோது அவரை தானும் புரிந்துகொள்ளவில்லை என்று சொல்கிறார்.
இந்த வாழ்க்கைப்புலம் கற்பனைவாதக் கவிஞர்களுக்குத் தேவைப்படுகிறது. உலகம் முழுக்க அவ்வாறுதான். மகாகவி குமாரன் ஆசான் நீரில் மறைந்தார். ஷெல்லி கடலில் மாய்ந்தார். அவர்களின் மறைவுக்கும் நாடகத்தனம் தேவைப்படுகிறது. ஆகவேதான் அபின் தின்று ஈரல் கெட்டு, வயிற்று உபாதைகளால் உயிர்விட்ட பாரதி, யானையால் தூக்கிப் போடப்பட்டதால் நோயுற்று உயிர் துறந்தார் என்ற கதையை அவர் மாணவர்கள் உருவாக்க வேண்டியிருக்கிறது. ஷெல்லி தன் கதையைத் தானே உருவாக்கிக் கொண்டார். கொந்தளிக்கும் கடலில் அவர் இறங்கிச் சென்றது ஒரு வகைத் தற்கொலைதான்.
தொட்டுத் தொட்டு செல்லும்போது இங்ஙனம் தன் வரிகளுக்குப் பின் வாழ்க்கையைக் கொண்டு வைத்த அத்தனை பேருமே கற்பனாவாதக் கவிஞர்கள் என்ற எண்ணம் உறுதிப்படுகிறது. செவ்வியல் பெரும்படைப்பாளிகளுக்கு அது தேவை இல்லை. ஏனெனில் செவ்வியல் படைப்பு என்பது தன்னளவிலேயே ஒரு முழுமையான கட்டமைப்பு. அதற்கொரு ஆசிரியன் கூடத் தேவையில்லை. அந்த நூலுக்கு ஆசிரியன் என ஒரு பெயர் அடையாளம், ஒலி அடையாளம் இருந்தாலே போதுமானது. அவன் வாழ்க்கை எவ்வகையிலும் அப்படைப்பிற்கு மேலதிகப் பொருளையோ அழுத்தத்தையோ அளிப்பதில்லை. இப்படி வரையறுத்துக் கொள்ளலாம். ஆசிரியனை முற்றிலும் வெளியே தள்ளி தன் கட்டமைப்பாலேயே தானியங்கித் தன்மையுடன் காலத்தைக் கடந்து செல்லும் ஒன்றுதான் செவ்வியல் படைப்பு.
நவீனத்துவப் படைப்புகளுக்கு ஒரு ஆசிரியன் தேவைப்படுகிறான். காப்கா, காம்யூ போன்றவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் இல்லையென்றால், அவர்கள் எவ்வண்ணம் வாசிக்கப் பட்டிருப்பார்கள் என்பதை எண்ணிப் பார்த்தால் தெரியும். ஆத்மாநாம் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றால் அவர் கவிதைகள் எவ்வாறு பொருள் கொள்ளப் பட்டிருக்கும்! அந்த வரிசைக் கவிஞர்களிலேயே விக்ரமாதித்யன் வேறொருவராகத் திகழ்கிறார் என்பதை சொல்லத் தோன்றுகிறது.
ஆனால் தமிழில் கற்பனாவாத அம்சமே இல்லாத கவிஞர்களில் ஒருவர் விக்ரமாதித்யன். தமிழ் நவீனக் கவிஞர்கள் கற்பனாவாதத்துக்கு எதிரான நவீனத்துவ அலையால் உருவாக்கப்பட்டவர்கள். சுந்தர ராமசாமி, சி.மணி, ஞானக்கூத்தன் போன்றவர்கள் பிரக்ஞைபூர்வமாகவே கற்பனாவாதத்துக்கு எதிரான ஒரு கவிதை முறையை உருவாக்க முயன்றவர்கள். சுந்தர ராமசாயின் ‘நகத்தை வெட்டு உன் நகத்தை வெட்டு’ போன்ற கவிதைகள் கற்பனாவாதத்துக்கு எதிரான சீண்டல்கள். ‘மூடுபல்லக்கில் இல்லை மங்கை’ என்ற அறிவிப்பு கற்பனாவாதத்துக்கு எதிரான ஒரு கவிஞனின் நேரடிக்கூற்று.
ஆனால் அந்நவீனத்துவத்துக்குள் இருந்து பிரமிள் எழுந்து வந்தார். கற்பனாவாதத்தின் முழு வீச்சும் வெளிப்பட்டது நவீனக் கவிதையில் பிரமிளில்தான். பிரமிளுடைய உணர்ச்சிக் கொந்தளிப்புகள் பித்தின் கற்பனாவாதம் எனலாம். லட்சியவாதத்தின், முழுமை நோக்கி செல்லுதலின் பரவசங்களால் ஆன கற்பனாவாதம் என்று தேவதேவனைச் சொல்லலாம். இயற்கையின் முன் நின்றிருக்கும் வர்டஸ்வொர்த்துக்கும் தேவதேவனுக்கும் வேறுபாடு இல்லை. பிறிதொரு நோக்கில் தேவதச்சனிடமும் இந்த கற்பனாவாதம் உண்டு. காலத்தை, வெளியை தத்துவ வெளியாக சென்று தொடும் அவருடைய உள எழுச்சிகள், அதன் வழியாக அவர் அடையும் நுண்தருணங்கள் எல்லாமே கற்பனாவாத அளவுகோல்களால் மட்டுமே புரிந்து கொள்ளத்தக்கவை.
கற்பனாவாதக் கூறுகள் இல்லாதவர் என்று ஞானக்கூத்தனைக் கூறலாம். அவருடைய பகடி கற்பனாவாதத்தில் இருந்து அவரை விலக்கி நிறுத்துகிறது. ஆனால் அவருடைய கவி உலகை ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் கற்பனாவாத வெளிப்பாடு கொண்ட கவிதைகளைத் தேர்ந்தெடுக்க முடியும். சி.மணியின் ‘நரகம்’ போன்ற கவிதைகள் நவீனத்துவத்தின் உள்ளிருந்து எழுந்தவை எனினும், அவையும் ஒரு கற்பனாவாத [எதிர்] லட்சியவாதத் தன்மை கொண்டவைதான்.
இவ்வாறு தொட்டுத் தொட்டு விக்ரமாதித்யனிடம் வரும்போது அவருடைய முழுமையான உலகியல்தன்மை, கற்பனாவாதத்தில் இருந்து அவரை விலக்கி நிறுத்தியிருப்பதைக் காண முடிகிறது. புகழ்பெற்ற அவருடைய கவிதையான குற்றாலத்துக்குப் போய் கல்வெள்ளிக் கொலுசைக் கண்டெடுக்கும் கவிதை, கற்பனாவாதத் தன்மை கொண்டதுதான். ஆனால் அவருடைய கவி உலகில் அப்படி ஓரிரு கவிதைகளைக் கூடத் தெரிவு செய்ய முடியவில்லை. பெரும்பாலானவை கறாரான உலகியல்தன்மையுடன் ‘இங்கு’, ‘இவ்வாறு’ எனச் சுட்டி நிற்பவை.
கற்பனாவாதத்திற்குரிய மொழிக்கட்டமைப்பு என்பது இசைத்தன்மையும் உணர்வெழுச்சியும் கொண்டது. அத்தகைய வரிகள் விக்ரமாதித்யனில் எவை உள்ளன என்று நினைவைத் துழாவிக்கொண்டிருந்தேன். ”கண்துயில் கெடுக்கும் கனவே என்ன செய்யப்போகிறாய் இன்றிரவு நீ?” போன்ற வரிகள் சிலவே. “தீவுகளால் நிரம்பியிருக்கிறது ஒரு மகாசமுத்ரம்” போன்ற வரிகள் கூட அரிதானவையே. விக்ரமாதித்யனின் கவிதையுலகு யதார்த்தத்தில் அன்றாடத்தில் ஆழமாக வேரூன்றியது.
அன்றாடத்தில் நிலைகொள்ளும் விக்ரமாதித்யனின் கவிதைவரிகளின் பின்புலமாக நிலைகொள்ளும் அவருடைய வாழ்க்கை பிற கற்பனாவாதக் கவிஞர்களின் கவிதைகள் வழியாக பொருள் கொள்ளும் அவர்களின் வாழ்க்கையில் இருந்து பெரிதும் வேறுபடுகிறது. இது தன்னை இங்கிருக்கும் அனைத்தில் இருந்தும் விலக்கி மேலெழுந்த கவிஞனின் குரல் அல்ல. இங்கேயே உடைந்து சிதறிக்கிடக்கும் கவிஞனின் குரல். கற்பனாவாதக் கவிஞன் புறவுலகில் எப்படியென்றாலும் அகத்தே வென்று தருக்கி நிலைகொள்பவன். தோல்வியே அற்றவன். விக்ரமாதித்யன் தன்னை தோல்வியுற்றவனாகவே அறிவித்துக்கொண்டவர். சிதைவை, வீழ்ச்சியை, பின்வாங்குதலை முன்வைப்பவர். அதன் ஏக்கத்தை, தவிப்பை எழுதுபவர்.
ஆகவேதான் எளிய வாசகர்கள் இயல்பாக அவருடன் இணைந்துகொள்கிறார்கள். அவருடைய தோல்விகள் அவர்களுக்கும் தெரிந்தவையே. ஒரு கற்பனாவாதக் கவிஞனின் மென்மையும் உன்னதநிலைகளும் அவர்களால் புரிந்துகொள்ளத் தக்கவை அல்ல. அவை வாசகனும் தன் வாழ்க்கையை நுண்மையாக்கி, அகவயமாக்கிச் சென்றடையத் தக்கவை. இவை வாழ்க்கையின் நேரடி யதார்த்தங்கள். விக்ரமாதித்யன் முன்வைப்பது ஒரு ஞானத்தேடியின், ஒரு பித்தனின், கவியோகியின் ஆளுமை அல்ல. இரக்கமற்ற விதிகளாலான யதார்த்த உலகத்தால் வீழ்த்தப்பட்ட எளிய மனிதனின் ஆளுமையை.
வாடகை பாக்கிக்காய்
ஒரு பூகம்பம்
மளிகைக்கடைப்பற்றுக்காய்
ஒரு பிரளயம்
பாலுக்குக் கொடுக்கப்பட வேண்டி
ஒரு போராட்டம்
பிள்ளைகள் படிப்புச் செலவையிட்டு
ஒரு சண்டை
தீபாவளி பொங்கல் விசேஷமென்றால்
ஒரு கொந்தளிப்பு
கல்யாணம் காட்சிக்குப் போவதென்றால்
ஒரு கலாட்டா
விருந்தாளிகள் வந்தால்
ஒரு விவகாரம்
என வாழும் ஒரு வாழ்க்கையையே அவர் திரும்பத்திரும்ப எழுதுகிறார். “நான் கவிஞன்” என்று தருக்குவதில்லை. “கலங்கித்தவிக்கிறான் கவிஞன்” என்று சொல்கிறது அவர் கவிதை. “கவிமனசு யாருக்குத் தெரியும்?” என்கிறது. அவர் உருவாக்கும் உலகம் யதார்த்தத்தின் மாறாநெறிகளாலானது. அதில் கையறுநிலையில் நின்றிருக்கும் ஓர் ஆளுமையே கவிஞன். அவனுடைய புலம்பலும் தெளிவும் விலக்கமும் கவிதைகளாகின்றன
[ 8 ]
விக்ரமாதித்யனின் கவிதையை தொடர்ந்து முதலில் இருந்து இறுதிவரை, மீண்டும் இறுதியில் இருந்து தொடக்கம் வரை தொட்டுத் தொட்டுப் புரட்டிக்கொண்டே செல்லும்போது என்னுடைய முப்பதாண்டுகால கவிதை வாசிப்பும் உடன் நிகழ்வது போல இருக்கிறது. இக்கவிதைகளை வெவ்வேறு தருணங்களில் படித்திருக்கிறேன். வெவ்வேறு வாழ்க்கைச் சந்தர்ப்பத்தில் நினைத்திருக்கிறேன். நானே அகவை முதிர்ந்து இங்கு வந்து சேர்ந்திருக்கிறேன். இவ்வாசிப்புகளினூடாக அக்கவிதைகளும் நானும் வளர்ந்திருக்கிறோம். இந்த வினா அன்றும் இன்றும் என்னிடம் இருக்கிறது. முற்றிலும் உலகியல் சார்ந்ததும், அதைக் கடந்தெழும் ஆன்மீகத்தை மறுப்பதும், அதில் உணர்ச்சிப்பெருக்கை ஊட்டும் கற்பனாவாதத்திற்கு எதிரானதுமான ஒரு கவிதை, எவ்வண்ணம் கவிதையெனத் தன்னை ஆக்குகிறது?
உண்மையில் விக்ரமாதித்யனின் வாசகர்களில் மிகப் பெரும்பாலானவர்களுக்கு இந்த வினா எழுந்திருக்கும், ஆனால் விடை தெரிந்திருக்காது. அவருடைய ஒரு கவிதையை எடுத்து வைத்துக் கொண்டு ஒரு எளிய வாசகன் இது எவ்வண்ணம் கவிதையாகிறது என்று கேட்டால், முதற்பார்வைக்கு அது அன்றாட உலக வாழ்க்கையை சார்ந்த ஒரு அறிக்கையாக இருக்கும். ‘எப்படியும் இருந்து கொண்டிரு’ என்ற ஒரு வரி கவிதை அல்ல, அது ஓர் அனுபவ கூற்று மட்டும்தான் என்று என்னிடம் வாதிட்ட ஓர் இளைஞனை நான் நினைவு கூர்கிறேன். அவர் இன்று கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்.
விக்ரமாதித்யன் கவிதைகளுக்கு முன்னுதாரணமாகக் கொள்ளத்தக்க கவிதைகள் உலகமொழிகளில் எல்லாம் உள்ளன. உடனே நினைவுக்கு வருபவை சீனக்கவிஞர் பை ஜூயி எழுதிய கவிதைகள்.
புதிய கவிதைகள் எதையும்
அவன் தூரிகை தீட்டவில்லைதான்
அவனது புகழும் கூட மங்கிப்போனது
அவனது பழைய கவிதைகள்
பெட்டிகளில்
அலமாரிகளின் அடியில் தூசித்தும்புகளில் கிடக்கின்றன
ஒரு சமயம் எவனோ ஒருவன்
பாடிக்கொண்டிருந்த பொழுது
அவனது அக்கவிதையை தற்செயலாகக் கேட்டேன்
ஒரு பெரும் வலி
எனது இதயத்தை துளைத்துச் சென்றது
முன்னமே அதனை கவனம்
செய்ய நேரமிருந்தும்
சும்மா இருந்ததால்
[தமிழில் பினாகினி]
தமிழ் மரபில் அத்தகைய கவிதைகள் புறநாநூறில் பல உள்ளன. மிகச்சிறந்த உதாரணம் பிசிராந்தையார்.
யாண்டு பல ஆக நரை இல ஆகுதல்
யாங்கு ஆகியர்?’ என வினவுதிர் ஆயின்
மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்,
யான் கண்டு அனையர் என் இளையரும், வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும், அதன் தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே.
அலுங்காமல் செல்லும் பயணத்தால் கவிதையாகின்றவை. அந்தரங்கத்தால் கவிதையாகின்றவை. சிறகுமுழுக்க வண்ணங்கள் கொண்ட பறவைகள், ஆற்றல் கொண்ட வல்லூறுகள் நடுவே எளிய சாம்பல்நிற சிட்டுக்குருவி அழகுகொள்வது போல. இவை தங்கள் எளிமையான இருப்பாலேயே கவிதையாகின்றன.
விக்ரமாதித்யனின் கவிதைகள் மீதான மிக முக்கியமான விமர்சனமாக இன்றும் இருப்பது, அவை முழுக்க முழுக்க அன்றாடம் சார்ந்தவை, உலகியல் சார்ந்தவை; அதற்கப்பால் எழும் கவித்துவம் இல்லாதவை என்பதுதான். அதையே வேறு வார்த்தைகளில் ‘இதை எவரும் சொல்லலாமே!’ என்பார்கள். எவரும் சொல்லலாம், ஆனால் விக்ரமாதித்யன் அதை சொல்லியிருக்கிறார் என்று அதற்கு நாம் பதில் சொல்லலாம். விக்ரமாதித்யனுடைய வாழ்க்கையால்தான் அவற்றை கவிதையாக நினைக்கிறோம்.
அதை இவ்வண்ணம் விளக்குவேன். வாழ்க்கையைப் பற்றி அத்தனை அரிதொன்றும் இல்லாத ஒரு புரிதலை ஒருவர் முன் கூறுகிறார். ஆனால் தூக்குமேடைக்கு இட்டு செல்வதற்கு முன்பு அவர் இறுதியாக அதைச் சொல்லியிருக்கிறார் எனில் அதை நம்மால் எளிதாகத் தள்ளிவிட முடியுமா? நம் உள்ளம் அதற்கேற்றும் உணர்ச்சிகளையும் அர்த்தங்களையும் பொய்யானவை என்று கூறிவிட முடியுமா?
விக்ரமாதித்யன் உலகியலால் புறக்கணிக்கப்பட்ட ஒருவர். தன்னைத் திரிபடையச் செய்து வெளியேற்றிக் கொண்டு அங்கிருந்து உலகியலை நோக்கிப் பேசியவர். நேரடியாக சொல்வதென்றால் உலகியலால் கழுவேற்றப்பட்டவர். கழுவில் அமர்ந்த ஒருவனின் கூக்குரலும் மெல்ல அவன் கனிந்து செல்லும் உச்சமும் என இக்கவிதைகளை சொல்லலாம்.
கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமத்தில் ஒருவன் கழுவில் ஏற்றி ஊர் நடுவே அமர வைத்திருப்பார்கள். கொடியவனும் கொலைகாரனுமாகிய அவன், கழுவில் உயிர்விடுகையில் தன்னைச் சுற்றி இளம்பெண்கள் கை கொட்டி நடனமாட வேண்டுமென்று கோரும் ஓர் இடம் அதில் வரும். அவனில் வேறொன்று நிகழ்ந்து அவன் கனிந்திருப்பதை அது காட்டுகிறது. கழுவேறியவன் தெய்வமுமாக ஆகிறான். பெருந்துன்பம் தெய்வமாக்குகிறது மனிதனை. உலகியலின் ஊடாக துயருற்று குருதிவார்ந்து உடலொழிந்து அழிந்து கொண்டிருக்கும் ஒருவனின் வரிகள் எனத் தென்படுவதனால்தான் இவை கவிதை ஆகின்றன.
விக்ரமாதித்யனின் சில வரிகள் ‘இதென்ன கவிதையா’ என்று தோன்றும் ஆனால், எங்கோ ஒரு கோவிலின் முன் கல் மண்டபத்தில் அரை வெளிச்சத்தில் பென்சிலால் இதை அண்ணாச்சி எழுதியிருக்கக் கூடும், ஒரு மதுக்கடையில் உட்கார்ந்து முழுப்போதையில் இதை எழுதியிருக்கக்கூடும் என்ற சாத்தியம்தான் அதைக் கவிதையாக்குகிறது. இக்கவிதைகளின் தன்னியலபான ஒழுக்கு இவற்றை ஒருவகையான சாமிகொண்டாடியின் வாக்குகள் போல, ஆசி உரைகள் போல மாற்றுகின்றன.
விக்ரமாதித்யன் அவர்களின் கவிதைகளைப் பற்றி எனக்கு வந்த கடிதங்களில் ஒரு கடிதத்தின் வரி, ஒரு தொடுகை போல என்னை உலுக்கியது. இதுவும் எனது முப்பத்தைந்து ஆண்டு காலக் கவிதை வாசிப்பில் மிக ஆச்சரியமான ஒன்று. கவிதை என்றால் என்னவென்று அறியாத பாமரர் ஒருவர், ஒரு கவிஞனின் ஆத்மாவுக்குள் செல்லும் மிக முக்கியமான பாதை ஒன்றைத் திறப்பது. தமிழில் மிகத் துயருற்றவர், மிகப் புறக்கணிக்கப்பட்டவர் எனச் சொல்லத்தக்க இக்கவிஞனின் வரிகளில் சாபமில்லை, இருளில்லை, நெஞ்சம் கனிந்த வாழ்த்துதான் உள்ளது என்று அந்த வாசகர் சொன்னார். அவ்வரியை வாசித்து நான் கண்ணீர்மல்கினேன்.
ஊருக்கு வெளியே சுடுகாட்டில் மரநிழலில் அமர்ந்து திரும்பி நோக்கி, பெற்றும் பெருகியும் புணர்ந்தும் ஊடியும் கூடியும் வாழும் மக்களைப் பார்த்துக் கனிந்து புன்னகைத்து வாழ்த்தும் சித்தன் ஒருவனின் வரிகளென அமைந்த பல கவிதை வரிகளை விக்ரமாதித்யன் உலகில் இருந்து நம்மால் அடைய முடியும். திரும்பத் திரும்ப ‘வாழுங்கள் உலகீரே’ என்று அவர் கூறுகிறார்.
தமிழின் நவீன கவிதைப் பிண்ணனியில் இது எளிய விஷயமல்ல. நவீனக் கவிதை இருண்மையானது, எதிர்மறைப் பண்பு கொண்டது. உயர் விழுமியமாகத் தற்கொலையை முன்வைத்த கவிதைகளை தமிழ்க் கவிஞர்கள் எழுதிக் குவித்திருக்கிறார்கள். உலகெங்கும் நவீனக் கவிதையில் தற்கொலை, தன்னழிப்பு இரண்டுமே கொண்டாடப்பட்டிருக்கிறது. உளம் நிறைந்து எதையும் நம்பாதவனாக, எவரையும் வணங்காதவனாக, எவ்விழுமியத்தையும் முன்வைக்காதவனாக நவீன கவிஞன் திகழ்கிறான். அவநம்பிக்கையும் எள்ளலும் அவனது மொழியாக அமைந்திருக்கிறது. ஆனால் விக்ரமாதித்யனின் உலகிலிருந்து மீள மீள வாழ்த்தொலிகளே எழுந்து கொண்டிருக்கின்றன. தமிழின் முதன்மைக் கவிஞராக அவரை ஆக்கும் கூறு இது என நான் நினைக்கிறேன். அண்ணாச்சிக்கு மீண்டும் பாதம் தொட்ட வணக்கம்.
[நிறைவு]
விஷ்ணுபுரம் விழா, ஒரு கடிதம்
விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021
அன்புள்ள ஜெ
விக்ரமாதித்யன் பற்றிய கட்டுரைகள், விஷ்ணுபுரம் விருது பற்றிய நினைவுகள் எல்லாமே சேர்ந்து ஒரு விழா மனநிலையை உருவாக்கிவிட்டன. நான் விஷ்ணுபுரம் விருதுவிழாவைப்பற்றி கேள்விப்பட்டது 2010ல் .அதுதான் முதல் விழா என நினைக்கிறேன். அப்போது வெளிநாட்டில் இருந்தேன். அந்த விழாவைப் பற்றிய நையாண்டிகள், பழிப்புக் காட்டல்கள் இணையத்தில் நிறைந்திருந்தன. அதை நீங்கள் உங்களை முன்னிறுத்தும் பொருட்டு செய்கிறீர்கள் என்று சீனியர் எழுத்தாளர்களே எழுதினார்கள். பல சிறு எழுத்தாளர்கள் வசைகளை எழுதியிருந்தார்கள்.
அதையெல்லாம் வாசித்துவிட்டு 2010ல் நானே உங்களுக்கு ஒரு மோசமான கடிதம் எழுதியிருந்தேன். எனக்கே அன்று இலக்கியம் ஒன்றும் பெரிதாகத் தெரியாது. ஆனாலும் சீரிய இலக்கியம் மீது பெரிய ஆர்வம் கொண்டவனைப்போல எழுதியிருந்தேன். இலக்கியத்தை அழிக்கவேண்டாம் என்றெல்லாம் உங்களிடம் மன்றாடி அதை எழுதினேன். நீங்கள் ஒரு புன்னகை அடையாளம் மட்டும் பதிலுக்கு அனுப்பினீர்கள். எனக்கு அன்றைக்கு எரிச்சல். ஆனால் நான் ஒன்றும் பதில் சொல்லாமல் இருந்தேன். ஆனால் அன்றைக்கு இணையத்தில் நானும் நாலைந்து பதிவு எழுதினேன். இந்த விருதை தடுக்கவேண்டும் என்றெல்லாம் எழுதினேன்.
அதன்பிறகு இன்றைக்கு நான் நிறையவே வாசித்துவிட்டேன். வெண்முரசு முடிக்கும் நிலையில் இருக்கிறேன். இன்றைக்கு வாசிக்கும்போது ஒரு பெரிய வருத்தம் ஏற்படுகிறது. விஷ்ணுபுரம் விருது பற்றிய குறிப்புகளுடன் வரும் சுட்டிகளைப் பார்க்கும்போது எவ்வளவு பெரிய நிகழ்வு என்ற வியப்பு ஏற்படுகிறது. நான் இதைப்பற்றி ஒரு அமெரிக்க நண்பரிடம் பேசியபோது இப்படி ஓர் எழுத்தாளரே ஒருங்கமைக்கும் இலக்கியவிழா, அதுவும் பிற எழுத்தாளர்களுக்காக, உலகிலேயே இருப்பதாகத் தெரியவில்லை என்று சொன்னார். டெல்லியில் ஓர் எழுத்தாளரிடம் சொன்னபோது அவரும் அப்படி ஒன்றை கேள்விப்பட்டதே இல்லை என்றார்.
எத்தனை நிகழ்வுகள், எத்தனை எழுத்தாளர்கள். தொடர்ச்சியாகப் பன்னிரண்டு ஆண்டுகளாக இது நடைபெறுகிறது. எவ்வளவு பேசப்பட்டிருக்கிறது. எவ்வளவு புதிய எழுத்தாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவும் நீங்கள் எங்கும் உங்களை முன்னிறுத்தாமலேயே செய்தவை. வாசகர்களாக வந்தவர்களெல்லாம் எழுத்தாளர்களாக ஆகியிருக்கிறார்கள்.முழுக்க முழுக்க வாசகர்களின் கொடையாலும் உங்கள் சொந்தப்பணத்தாலும் நடைபெறுகிறது. இந்த நிகழ்வைப் பற்றி நான் எழுதியது எனக்கே அருவருப்பாக இருக்கிறது. ஆகவேதான் இதை எழுதுகிறேன்.
ஆனால் அன்றைக்கு நக்கலும் நையாண்டியும் செய்தவர்கள் எவரும் இன்றைக்கும்கூட அதற்காக வெட்கப்படவில்லை. ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை. அதை நினைக்கும்போதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. பொதுவெளியில் தொடர்ச்சியாக தெரிந்துகொண்டே இருப்பதனால் நாம் சிலரை பெரியமனிதர்கள், முக்கியமானவர்கள் என நினைக்கிறோம். அவர்களுக்கு அவர்களின் மதிப்பு தெரியும். அது அவர்களை கஷ்டப்படுத்துகிறது. ஆகவேதான் அந்தச் சில்லறைப்புத்தியை காட்டிக்கொள்கிறார்கள். அந்தச் சிறுமையில் இருந்து அவர்களால் வெளிவரவும் முடிவதில்லை.
இந்த விழா பற்றி நான் இலக்கியம் வாசிக்கும் சிலருடன் பேசினேன். அவர்களில் நாலைந்துபேர் இந்த விழாவுக்கு வருவதற்கு தயங்கினார்கள். என்ன என்று கேட்டேன். அரசியல்ரீதியாக இந்த விழாவை முத்திரைகுத்துபவர்களைக் கண்டு பயம். அரசியல் முத்திரை விழுந்துவிடும் என்றார்கள். சிலர் இலக்கியக் குழு முத்திரை விழுந்துவிடும் என்றார்கள்.
நான் சொன்னேன், ‘உங்களைவிட தெளிவான முற்போக்கு அரசியல் பேசிவருபவர்கள் எல்லாம் அதில் கலந்துகொண்டிருக்கிறார்கள். எல்லா முக்கியமான இலக்கியத்தரப்புகளும் கலந்துகொள்கின்றனர். வம்புபேசிக்கொண்டிருப்பவர்கள் ஒன்றும் சாதிக்காத வெறும் முகநூல் வம்புக்கும்பல்கள். அவர்களை பொருட்டாக நினைத்து நீங்கள் இந்தவகையான ஒரு முக்கியமான நிகழ்வை தவிர்த்தால் நஷ்டம் உங்களுக்குத்தான்’.
இன்றைக்கும் இணையத்தில் அதே பழிப்புக்காட்டல்கள் உள்ளன. அவர்களுக்கு ஒன்றும் புரியாது. அவர்கள் அறிந்ததெல்லாம் கட்சிகட்டும் அரசியலும் கூச்சலும்தான். ஆனால் இன்றைக்கு பழைய பதிவுகளைப் பார்க்கும்போது முக்கியமான எழுத்தாளர்கள் அத்தனைபேரும் தவறாமல் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருப்பதை காண்கிறேன். முக்கியமானவர்கள் அவர்கள் மட்டும்தான். சத்தம்போடுபவர்கள் அதற்கு மட்டும்தான் லாயக்குப்படுவார்கள்.
இந்த விழா எனக்கெல்லாம் முக்கியமான பாடம். நீங்கள் அனுப்பிய அந்தப் புன்னகைக்குறி எனக்கு ஒரு சூட்டுத்தழும்பு மாதிரி மனதில் இருக்கிறது. சத்தம்போடும் அற்பர்கள் எப்போதும் இருப்பார்கள். சாதனை செய்பவர்களுக்கு அவர்கள் செய்யவேண்டியவை என்ன என்று தெரியும். எப்படிச் செய்வதென்றும் தெரியும். அதைச் செய்துகொண்டு கடந்துசென்றபடியே இருப்பார்கள். அந்தப் புன்னகையை நான் மற்றவர்களுக்கு இன்றைக்கு அளிக்கிறேன். நான் என் துறையில் சொல்லும்படி சிலவற்றை இன்று செய்திருக்கிறேன்.
இந்த விழாவும் இதையொட்டி வெளியிடப்படும் நூல்களும் பேசப்படும் பேச்சுக்களும் எல்லாமே மிகமிக முக்கியமான இலக்கியநிகழ்வுகள். இந்த விழாவில் பங்கெடுக்கும் அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.
எஸ்.சந்திரமௌலி
அன்புள்ள சந்திரமௌலி,
அன்றைக்கு விஷ்ணுபுரம் விருது பற்றி ஏராளமான கிண்டல்கள், நக்கல்கள், வசைகள், அவதூறுகள் வந்தன. பொதுவாக அரசியல் – சாதியக் காழ்ப்பு கொண்டவர்கள் அவற்றை எழுதினர். இலக்கியச்சிறுமதியாளர்களும் அற்ப எழுத்தாளர்களும் இணைந்துகொண்டனர். நான் எவருக்கும் பதில் சொல்லவில்லை. முழுமையாகவே உதாசீனம் செய்தேன். அவர்கள் இன்றும் அப்படியே எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அது அவர்களின் ஊழ்.
அவற்றை வாசித்து எனக்கு எழுதிய அனைவருக்கும் உங்களுக்கு அனுப்பிய அதே :)) அடையாளத்தையே அனுப்பியிருக்கிறேன். அதன்பொருள் இன்று உங்களுக்குப் புரிந்திருப்பதில் மகிழ்ச்சி. ஒருவன் அடையும் நிமிர்வென்பது எதிர்ப்பவர் அளவுக்கு இறங்குவதில் இல்லை, அவர்களை சிறிதாக்கி மேலெழுவதில் உள்ளது. தன் இலக்கை அறிந்து செய்யப்படும் செயலே அதற்கான வழி.
ஜெ
விஷ்ணுபுரம் விருது, விழா 2010 கடிதங்கள்
விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா -2010 கோவையில்
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பு
விஷ்ணுபுரம் இலக்கிய விருது கடிதங்கள்
கருமையின் அழகு-அருண்மொழி நங்கை
பண்டிட் வெங்கடேஷ் குமார் பாடப் பாட பார்த்துக் கொண்டிருக்கும்போதே பேரழகனாகி விடுவார். அந்தப் புன்னகையும் கையசைவும் அவர் சக மேடை பக்கவாத்திய கலைஞர்களுடன் நிகழ்த்தும் அந்த உடல்மொழியிலான ஒத்திசைவுடன் கூடிய உரையாடலும் காணத் திகட்டாதவை. மேடையில் அவர்கள் அனைவரும் தங்களுக்கான உலகில் ஒன்றி இருப்பார்கள்.
காலைத்தொடுவேன் – அ.முத்துலிங்கம்
ஹார்வர்ட் தொடக்கம்
அமெரிக்காவில் இரண்டு மருத்துவப் பெருந்தகைகள் தமிழ் இருக்கை தொடர்பாக ஆர்வத்தோடு ஹார்வர்டு அதிகாரிகளைச் சந்தித்தபோது நானும் கூட இருந்தேன். ஆளுக்கு அரை மில்லியன் டொலர்கள் நன்கொடை வழங்கி நிதி திரட்டலை ஆரம்பித்து வைத்தார்கள். தேவையான இலக்கு 6 மில்லியன் டொலர்கள். அதைத் தொடர்ந்து ரொறொன்ரோ பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கைக்கான நிதி சேகரிப்பு தொடங்கியது. அவர்கள் இலக்கு 3 மில்லியன் டொலர்கள். 2016ல் தொடங்கி 2020 வரைக்கும் நிதி திரட்டல் தொடர்ந்து முடிவை எட்டியது. இந்த நாலு வருடங்களும் நான் எழுத்து வேலையை தள்ளிவைத்துவிட்டு இரண்டு பல்கலைக்கழகங்களின் தமிழ் இருக்கைகளுக்கும் முழுநேரமாக நிதி சேகரிப்பதில் மும்முரமாகினேன். உலகமெங்கும் பல நூறு பேர்களுடன் தொடர்புகள் கிடைத்தன. சில அனுபவங்கள் நெகிழ வைத்தன; சில அதிர்ச்சி அளித்தன; சில அவமானத்தால் என்னை நிலைகுலையச் செய்தன; சில சிரிப்பு மூட்டின. எல்லாவற்றையும் இங்கே சொல்ல முடியாது. பத்து வருடம் கழிந்தாலும் நினைவில் நிற்கக்கூடிய சில சம்பவங்களை மாத்திரம் கீழே பகிர்ந்திருக்கிறேன்.
சிறைக்கைதி
தமிழ்நாட்டில் ஒரு சின்னக் கிராமத்தில் இளைஞன் ஒருவன் ஏதோ குற்றம் செய்து நாலு வருடம் சிறையில் இருந்தான். அவன் வெளியேறியபோது அவனுடைய உழைப்பு கூலியை சிறை அதிகாரிகள் அவனிடம் கொடுத்தார்கள். அவன் செய்த முதல் வேலை அந்தப் பணத்தை அப்படியே ஹார்வர்டுக்கு அனுப்பியதுதான். எப்படியோ, யாரையோ பிடித்து பணத்தை செலுத்திவிட்டான். அவனுக்கு ஹார்வர்ட் எங்கே இருக்கிறது, அந்தப் பெயரை எப்படி எழுத்துக்கூட்டுவது என்பதெல்லாம் தெரியாது. பிழையான எழுத்துகளுடன் பணம் வந்து சேர்ந்துவிட்டது. தமிழ்நாட்டில் ஒரு பத்திரிகை அவனிடம் எதற்காக பணம் அனுப்பினான் என்று கேட்டது. அவன் ‘ஹார்வர்ட் உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் என்று சொல்கிறார்கள். தமிழ் நாட்டில் தமிழ் வளராது; வெளிநாட்டில் இப்படியான பல்கலைக்கழகத்தில்தான் தமிழ் வளரும். அதுதான் பணம் அனுப்பினேன்’ என்றான். என்னை நெகிழவைத்த முதல் சம்பவம் இது.
50,000 டொலர்
ரொறொன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டுவதற்காக நான் ஒரு சமயம் பொஸ்டன் சென்றிருந்தேன். அவசரமாக ஒரு டெலிபோன் அழைப்பு கனடாவிலிருந்து வந்தது. முன்பின் தெரியாத ஒருவர் சொன்னார், ’தமிழ் இருக்கை முக்கியமானது. நான் இந்த முயற்சியில் உங்களுடன் பங்காற்றுவேன். உங்கள் குழு தாமதமாகவும், அவசரமின்றியும் செயல்படுகிறது. எனக்கு விஜய் டிவியை தெரியும். சன் டிவியை தெரியும். ஓர் இரவுக்குள் என்னால் 50,000 டொலர்கள் திரட்டமுடியும். உடனே வாருங்கள்.’
எனக்கு மகிழ்ச்சி சொல்லமுடியாது. பல தொலைபேசி அழைப்புகள்; பல மின்னஞ்சல்கள். கடைசியில் ஒருநாள் ரொறொன்ரோ உணவகம் ஒன்றில் அவரை சந்திப்பதற்காக நான் காத்திருந்தேன். முதலில் அவர் வந்தார். தொடர்ந்து அதே உயரமான மனைவி; அதே பருமன். பின்னால் நாலு குழந்தைகள். பெரும் ஆரவாரமாகவும், கூச்சலாகவும் இருந்தது. 50,000 டொலர் திரட்டி வைப்பதாக சொல்லியிருந்தாலும் அது பற்றிய பேச்சே இல்லை. சந்திப்பு முடிந்ததும் கார் கண்ணாடி துடைப்பான்போல இரண்டு பேரும் ஒரே நேரத்தில் சாய்ந்து, ஒரே நேரத்தில் எழும்பி, ஒரே நேரத்தில் நடந்தனர். இப்படியே பல வாரங்கள் ஓடின; ஒன்றுமே பெயரவில்லை.
மதிய உணவுக்கு வழக்கம்போல சந்தித்தோம். அவர் கழுத்திலே தடித்த சங்கிலி. என்னுடன் பேசுவதும், கையிலே கட்டியிருந்த அப்பிள் கடிகாரத்தில் செய்திகள் பார்ப்பதுமாக நேரம் ஓடியது. இது எங்கே போகிறது என்றே எனக்கு தெரியவில்லை. துணிந்து அவரிடம் கேட்டேன். ’உங்கள் நண்பர்களும், டிவி காரர்களும் பணம் தரும்போது தரட்டும். நீங்கள் ஒரு நன்கொடை கொடுத்து தொடக்கலாமே. எவ்வளவு எழுதலாம் என்று நன்கொடை பத்திரத்தை வெளியே எடுத்தேன். அவர் மிரண்டுவிட்டார். இதை எதிர்பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். பெரும் யோசனைக்கு பின்னர் சொன்னார், ‘என்னால் 100 டொலர் கொடுக்கமுடியும். இந்த மாதம் 50 டொலர்; அடுத்த மாதம் 50 டொலர்.’
நான் அன்றைய 7 பேரின் உணவுக்கான தொகை $162 ஐக் கட்டிவிட்டு வெளியேறினேன்.
துப்புரவுத் தொழிலாளி
அவருடைய பெயர் தேசோமயானந்தன். பாரிஸிலிருந்து எப்படியோ என் நம்பரை தேடிப்பிடித்து அழைத்திருந்தார். ரொறொன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு எப்படி பணம் அனுப்புவது என்று கேட்டார். நான் சொன்னேன். அவர் வயது 77. நாற்பது வருடங்களாக துப்புரவுத்தொழில் செய்கிறார். திடீரென்று $500 வந்து சேர்ந்தது. ’எதற்காக இத்தனை பெரிய தொகை?” என்றேன். அவர் சொன்னார் ‘ஐயா, என் அம்மா இப்ப இல்லை. தமிழுக்கு கொடுப்பது என் அம்மாவுக்கு கொடுப்பது போலத்தானே’ என்றார். பின்னர் விம்மி விம்மி அழத் தொடங்கினார்.
சுந்தர் பிச்சையை தெரியும்
சுந்தர் பிச்சையை எனக்குத் தெரியும்.
யார் அது?
இது என்ன? கூகிள் நிறுவனத்தின் தலைவர்.
ஓ, அவரா? எப்படித் தெரியும்?
என் பக்கத்து வீட்டுக்காரரின் மாமனாரும், சுந்தர் பிச்சையின் பெற்றோரும் சிநேகிதர்கள்.
எப்படி?
அவர்கள் பஜனைக்கு ஒன்றாகப் போவார்கள், வருவார்கள்.
அப்படியா?
என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள். சுந்தர் பிச்சையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வருடத்திற்கு 2 மில்லியன் டொலர்கள்.
அதனால் எனக்கு என்ன?
அவர் நினைத்தால் ரொறொன்ரோ தமிழ் இருக்கைக்கு ஒரு மில்லியன் டொலர் கொடுப்பார். அது அவருக்கு காசே அல்ல.
அவருக்கு எத்தனையோ வேலை. இன்னும் எவ்வளவோ பணம் சேர்க்கவேண்டும். இதற்கெல்லாம் கொடுப்பாரா?
அப்படிவிட முடியாது. நான் இப்பவே எழுதுகிறேன். ஒரு மில்லியன் டொலர் காசோலை வரும். அதற்கு நான் உத்தரவாதம்.
எப்படி வரும்?
கூரியரில்தான். நேராக ரொறொன்ரோ பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்பிவிடுவார்.
எப்படி முகவரி கிடைக்கும்?
உலகத்துக்கே தேடுதலை சொல்லிக் கொடுத்தவர். அவருக்கு ஒரு முகவரி தேடுவதா பிரச்சினை?
நண்பர் சொன்னபடியே பக்கத்து வீட்டுக்காரரின் மாமாவுக்கு எழுதிப்போட்டார். அவரும் இதோ, அதோ என்று சொன்னார். நினைவூட்டல்களும் அனுப்பினார். இப்பொழுதெல்லாம் நண்பர் கண்ணில் படுவதே இல்லை. நானோ நம்பிக்கை இழக்கவில்லை. யார் கண்டது? நான் எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரம் கலிஃபோர்னியாவிலிருந்து காசோலை கிளம்பியிருக்கும்.
பிரபமல்லாத கல்லூரி
தொலைபேசியில் ஒருவரை அழைத்தேன். அவர் அழைப்பை துண்டிக்காமல் உடனேயே பேசினார். ஆச்சரியமாக இருந்தது. என்னுடைய பெயர் டெலிபோனில் விழுந்தால் ஒருவரும் எடுப்பதில்லை. ’வில்லங்கம் பிடித்தவர் வருகிறார். தமிழ் இருக்கைக்கு நிதி கேட்டு தொல்லைப்படுத்துவார்’ என்ற செய்தி எப்படியோ பரவிவிட்டது. ஈழத்துக் கல்லூரிகளின் பழைய மாணவ மாணவியர் சங்கங்கள் நூற்றுக்கு மேலே கனடாவில் இருந்தன. பிரபலமில்லாத கல்லூரிகளில் இருந்து மாணவ மாணவியர் தகுதிக்கு மீறி அள்ளி அள்ளிக் கொடுத்தனர். ஒருநாள் ஓர் அழைப்பு வந்தது. அவரை எனக்கு தெரியாது. நான் சந்தை அழைப்பு என்று நினைத்து டெலிபோனை துண்டித்துவிட்டேன். பத்து நிமிடம் கழித்து டெலிபோனை எடுத்தபோது அவர் இன்னும் எனக்காக காத்து நின்றார். ‘ஐயா, போன வருடம் 1000 டொலர் அனுப்பினேன். மேலும் 1000 டொலர் அனுப்பவேணும். எப்படி அனுப்புவது’ என்றார். எனக்கு சங்கடமாய்ப் போய்விட்டது.
பிரபலமான கல்லூரி
மெய்நிகர் கூட்டம் ஒன்றுக்கு அழைத்திருந்தார்கள். தமிழ் இருக்கைக்கு நிதி சேர்த்து தருவதாக ஒப்பந்தம். குறித்த நேரத்துக்கு அழைத்தேன். என்னால் உள்ளே நுழைய முடியவில்லை, ஆனால் பார்க்கக்கூடியதாக இருந்தது. ஒரு பெண் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். நான் கத்தினேன். அவருக்கு கேட்கவில்லை. என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. வாசலிலே நின்றேன். என்னை அழைத்ததை அவர்கள் மறந்துவிட்டார்கள்.
ஈழத்தில் அதிபிரபலமான கல்லூரி ஒன்றின் பழைய மாணவர் சங்கத்துக்கு தமிழ் இருக்கைக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்தேன். இது பணக்காரக் கல்லூரி, 150 வருடங்களாக இயங்குவது. இங்கே படித்தவர்கள் பலர் மருத்துவர்களாகவும், எஞ்சினியர்களாகவும், தொழில் அதிபர்களாகவும் கனடாவில் சம்பாதிக்கிறார்கள். பதில் இல்லை. மின்னஞ்சலில் மன்றாடினேன். தொலைபேசியில் நினைவூட்டினேன். மின்னஞ்சல்களை தலைவர் செவ்வாய்க் கிழமைகளில் மட்டும் பார்ப்பார் என்று சொன்னார்கள். இது என்ன சட்டம்? புதனும், திங்களும் என்ன பாவம் செய்தன? ஆனாலும் காத்திருப்பதில் பிழையில்லை. நிதி சேர்ப்பதில் முக்கியமான விதி, பொறுமை .
பழைய காலப் புலவர்கள் அரசனின் வாசலில் பரிசுக்கு காத்து நிற்பதுபோல நான் நின்றேன். பல மணி நேரங்கள்; பல நாட்கள். ஒரு புலவர் பலநாள் நின்று அலுத்து ’வாயிலோயே, வாயிலோயே’ என்று கூவி அழைத்து வெறுத்துப்போய் ’எத்திசை செல்லினும், அத்திசை சோறே’ என்று திரும்பியதுபோல நான் திரும்பப் போவதில்லை. காத்திருக்கிறேன். ஒரு நாள் சூம் வாசல் கதவு திறக்கும். பெரிய பள்ளிக்கூடத்து தலைவர் செவ்வாய்க் கிழமை மின்னஞ்சலை திறப்பார். அவர் இருதயமும் திறக்கக்கூடும். வேறு என்ன வேலை எனக்கு? கதவுகள் திறக்குமட்டும் பொறுமையாக நிற்கவேண்டும்.
மகன் பெயர்
முன்பின் தெரியாத ஒருவரிடமிருந்து சமீபத்தில் கம்புயூட்டரில் ஒரு தகவல் வந்தது. என்னுடைய தொழில்நுட்ப அறிவு மிகவும் குறைச்சலானதால் நான் இப்படி வரும் செய்திகளுக்கு பதில் அனுப்புவது கிடையாது. வந்த தகவல் இதுதான். ’நான் உங்கள் புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன்.’ இதற்கு என்ன பதில் எழுதுவது? அடுத்த நாள் இப்படி வந்தது. ’ரொறொன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு எப்படி பணம் அனுப்புவது?’ நான் சும்மா பதில் எழுதி வைத்தேன். என்ன ஆச்சரியம், அன்று மாலையே ரொறொன்ரோ பல்கலைக்கழகம் 50 டொலர் வந்ததாக அறிவித்தார்கள்.
ஒருநாள் இந்த மர்மமான மனிதர் தொலைபேசியில் பேசினார். இவர் 17 வயதில் ஈழத்திலிருந்து அகதியாக பாரிசுக்கு வந்து 18 வருடமாக அங்கே வாழ்கிறார். ஈழத்தில் வாழ்ந்த நாட்களிலும் பார்க்க அதிக நாட்களை பாரிசில் கழித்துவிட்டார். ஆனாலும் அவருக்கு பிரெஞ்சு மொழி கொஞ்சம்தான் தெரியும். ஆங்கிலமும் அப்படியே. நல்ல தமிழில் பேசுகிறார். டாக்சி ஓட்டி சம்பாதிக்கிறார். ’உங்களுக்கு பெரிதாக பிரெஞ்ச் மொழி தெரியாது, எப்படி சமாளிக்கிறீர்கள்?’ ’ இதிலே என்ன பிரச்சினை? எங்கே போகிறீர்கள்? காசா கிரெடிட் கார்டா? என்று கேட்கத் தெரியவேண்டும். தமிழ்தானே என் மொழி. பிழைப்புக்காக இரண்டு பிரெஞ்சு வார்த்தைகளை பாடமாக்கி வைத்திருக்கிறேன்.’
’டாக்சி ஓட்டுவதற்கு உரிமம் பெறுவது கடினம் என்று சொல்கிறார்களே?’ ’உண்மைதான். ஒருவருடமாக 2000 யூரோ கட்டிப் படித்த பின்னர் நடந்த பரீட்சையில் பெயிலாகிவிட்டேன்.’ ’எப்படி?’ ’டாக்சி ஓட்டுநருக்கு எல்லா ரோட்டுப் பெயரும் தெரிந்திருக்கவேண்டும். அதிலே சின்னப் பிழை விட்டுவிட்டேன்.’ ’அடுத்த தடவை சித்தியடைந்தீர்களா?’ ’இல்லை, வருமான வரி கேள்வியில் பெயிலாகிவிட்டேன்.’ ’வருமான வரியா? டாக்சி ஓட்டுவதற்கும் வருமான வரிக்கும் என்ன சம்பந்தம்?’ ’டாக்சி ஓட்டினால் என் தொழிலுக்கு நானே முதலாளி. ஒரு முதலாளிக்கு எவ்வளவு வருமானத்துக்கு எத்தனை வரி என்ற கணக்கு தெரிந்திருக்க வேண்டும். அடுத்த தடவை வெற்றி பெற்றுவிட்டேன்.’
’கொரோனா நாட்களை எப்படி சமாளிக்கிறீர்கள்?’ ’மிகவும் மோசம், வாடிக்கையாளர்கள் பாதியாக குறைந்துவிட்டார்கள். ஆனால் செலவு அதிகம். சிரமம்தான்.’ ’உங்கள் மனைவி வேலை செய்கிறாரா?’ ’அதிலே ஒரு பிரச்சினை. என் மகனுக்கு அபூர்வமான வியாதி. அவனுக்கு உணவை விழுங்கத் தெரியாது. நானும் மனைவியும் மாறி மாறி அவனை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று தினமும் பயிற்சியளிக்கவேணும்.’
’ஓ, அப்படியா? மன்னியுங்கள். கொரோனா சமயம் உங்களுக்கு வருமானம் இல்லை. செலவும் அதிகம். மகனுடன் மருத்துவ மனையில் நேரம் செலவழிக்கவேணும். இந்த சமயத்தில் நீங்கள் தமிழ் இருக்கைக்கு நிதி கொடுக்கவேண்டிய அவசியம் என்ன?’ ’அது முக்கியம் ஐயா. தமிழ் இருக்கை அமைவது பெரிய விசயம். மொழிக்காகத்தானே நான் நாட்டைவிட்டு துரத்தப்பட்டேன். எங்கள் மொழிக்கு கிடைக்கும் கௌரவம் எனக்கு கிடைத்தது மாதிரித்தான். கொடையாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கவேணும்.’
தொலைபேசியை வைத்தபின்னர் யோசித்தேன். இந்த அருமையான மனிதருடைய மகன் பெயரை கேட்க மறந்துவிட்டேன். உடனேயே குறுஞ்செய்தி அனுப்பி அவருடைய மகன் பெயர் என்னவென்று கேட்டேன். அது நேற்று. அதிகாலை ஐந்து மணிக்கே கணினியை திறந்து வைத்து அவருடைய பதிலுக்காக காத்திருக்கிறேன். சிலவேளை நாளை வரலாம்.
பத்து ஏக்கர் செல்வந்தர்
பொது வாழ்க்கையில் நிதி சேகரிப்பவர்களுக்கு பல அவமானங்கள் நேர்ந்திருக்கின்றன. ஒரு நகரத்து மக்கள் பொது நீச்சல் குளம் கட்ட தீர்மானித்தார்கள். வீடு வீடாகப் போய் அதற்காக பணம் சேர்த்தார்கள். ஒரு வீட்டில் போய் கதவைத்தட்டி பொது நீச்சல் குளம் கட்ட உதவி தேவை என்று யாசித்தபோது வீட்டுக்காரர் உள்ளே சென்று ஒரு வாளி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். இது மிகையல்ல, அடிக்கடி நடப்பதுதான்.
கனடாவின் அதிசெல்வந்தர்களில் ஒருவரிடம் அவரை சந்திப்பதற்கு நேரம் வாங்கிவிட்டேன். இவர் சிறுவயதில் அகதியாக பெற்றோருடன் கனடாவுக்கு வந்தவர். அந்த வயதில் அவருக்கு தமிழ் அன்றி வேறு ஒரு மொழியும் தெரியாது. அவரை வகுப்பில் சேர்த்தபோது ஆங்கிலம் தெரியாததால் அவராகவே ஆசிரியரிடம் வேண்டி ஒரு வகுப்பு கீழே இறங்கி படிப்பை தொடங்கியவர். ஆரம்ப தடங்கலைத் தாண்டி இங்கேயே படித்து முன்னேறி சொந்தமாக கம்பனி தொடங்கி மிகப் பெரிய செல்வந்தராக குறுகிய காலத்தில் உச்சத்தை அடைந்துவிட்டார்.
அவருடைய வீடு பத்து ஏக்கர் நிலத்தில் அமைந்திருந்தது. கேட்டுக்கு வெளியே நின்று செல்பேசியில் அழைக்க அவர் அங்கிருந்தபடியே கேட்டைத் திறந்துவிட்டார். வாசலிலே உள்ள காலநிலை வேறு, வீட்டின் எல்லையில் உள்ள கால நிலை வேறு. அத்தனை பெரிய வீடு. நாலு பிள்ளைகள். ஒவ்வொருவரும் வீட்டிலே ஒவ்வொரு திசையில் இருந்தபடியால் ஒலிபெருக்கி மூலம் அவர்களுக்கிடையில் உரையாடல்கள் நடந்தன. அவருடைய மனைவி விருந்துக்கு புறப்பட்டவர்போல நீண்ட ஆடையணிந்திருந்தார். தேநீர் கொண்டுவந்தபோது பறவை சிறகடிப்பதுபோல அவருடைய ஆடை மடிந்து மடிந்து விலகியது.
தேநீரை அருந்தியபடியே நான் விசயத்தை சொன்னேன். அவர் அமைதியாக கேட்டார். இடைக்கிடை செல்பெசி அழைப்பு வந்தபோது அதை எடுக்காமல் எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டபின்னர் ஒரேயொரு கேள்வி கேட்டார். ’என்னுடைய பிள்ளைகளுக்கு தமிழ் பேசவோ, எழுதவோ தெரியாது. அவர்கள் ஆங்கிலமும், பிரெஞ்சும் படிக்கிறார்கள். ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதால் எனக்கோ என் பிள்ளைகளுக்கோ என்ன பிரயோசனம்?’ எனக்கு வாய் அடைத்துவிட்டது. ’உங்களுடைய அம்மா உங்களை குழந்தையாக மடியில் கிடத்தி என்ன மொழியில் பேசினார்?’ என்று கேட்டேன். அவர் தமிழ் என்றார். நான் வேறு ஒன்றுமே பேசவில்லை. விடைபெற்றுக்கொண்டு வெளியேறினேன்.
தாம்பூலப் பை
எனக்கு சாக்குத் துணியில் செய்த தாம்பூலப் பை ஒன்று கும்பகோணத்திலுள்ள சின்னக் கிராமம் ஒன்றிலிருந்து வந்தது. பிரித்துப் பார்த்த நான் ஆச்சரியப்பட்டேன். அதில் இப்படி அச்சடித்திருந்தது. ’தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத் தூறும் அறிவு. Tamil Chair Inc. University of Toronto, Canada.
ரொறொன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கும், தாம்பூலப் பையுக்கும் என்ன சம்பந்தம்? அதை அனுப்பியவரையே அழைத்துக் கேட்டேன். அவர் சொன்னார் ‘வேறு ஒன்றுமில்லை, விளம்பரம்தான். கல்யாண வீட்டுக்கு வந்த ஒவ்வொருவருக்கும் பை வழங்கப்பட்டது. அவர் வாசகத்தை பார்ப்பார். அந்தப் பை வேறு ஒருவர் கையுக்கு போகும். அவரும் வாசகத்தை பார்ப்பார். இப்படி இந்தச் செய்தியை பத்தாயிரம் பேராவது படிப்பார்கள்’ என்றார். அத்துடன் அந்த அன்பர் நிற்கவில்லை. ஒருவாரம் கழித்து மிகப் பெரிய தொகை ஒன்றை தமிழ் இருக்கைக்கு நன்கொடையாக அனுப்பினார்.
அன்பரின் வீடு ரொறொன்ரோவிலிருந்து 13,000 கி.மீட்டர் தூரத்தில் ஒரு சின்னக் கிராமத்தில் இருந்தது. இவர்கள் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தை பார்த்ததில்லை. அங்கே இவருடைய சொந்தக்காரர் யாராவது படித்ததும் கிடையாது. இந்த நன்கொடையால் பெரிய புகழ் ஒன்றும் இவருக்கு கிடைக்கப் போவதில்லை. இவருக்கும் ரொறொன்ரோ தமிழ் இருக்கைக்கும் என்ன தொடர்பு? ஒன்றுமே இல்லை, தமிழ் என்னும் மொழி தான். இந்த நன்கொடையால் அவருக்கு என்ன பிரயோசனம்? பத்து ஏக்கர் வீட்டுக்காரருக்கு இதுதான் பதில் என்று தோன்றியது.
இளம் எழுத்தாளர்
நிதி சேகரிப்பு, வெற்றி தோல்விகள் நிறைந்தது. முன்பின் தெரியாத ஓர் இளம் எழுத்தாளர் தன்னுடைய புத்தகம் ஒன்றுக்கு முன்னுரை கேட்டிருந்தார். முன்னுரை எழுதச் சொல்லி யார் கேட்டாலும் எனக்கு நடுக்கம் பிடித்துவிடும். ஏன் என்றால் ஒரு முன்னுரை எழுதும் நேரத்தில் நான் மூன்று கட்டுரைகள் எழுதிவிடுவேன். அத்துடன் ரொறொன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு நிது சேர்ப்பதில் நான் ஒவ்வொரு நிமிடத்தையும் செலவழித்தேன். ஆகவே சில மணி நேரத்தை திருடித்தான் முன்னுரை எழுதவேண்டும். நான் எழுத்தாளரிடம் இப்படிச் சொன்னேன். ‘எப்படியும் நேரம் சம்பாதித்து முன்னுரை எழுதிவிடுகிறேன். நீங்கள் ஓர் உதவி செய்ய முடியுமா?’ ‘சொல்லுங்கள், ஐயா காத்திருக்கிறேன்.’ ‘ உங்கள் எழுத்திலிருந்து நீங்கள் தமிழ் பற்றாளர் என்பது தெரிகிறது. ரொறொன்ரோ தமிழ் இருக்கைக்கு உங்கள் உறவினர்களிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் ஆதரவு திரட்டமுடியுமா? எத்தனை சிறு நன்கொடை என்றாலும் பரவாயில்லை. அதை நேரே பல்கலைக்கழக வங்கிக் கணக்குக்கு அனுப்பிவிடுங்கள்’ என்றேன். மிக்க மகிழ்ச்சியுடன் ’செய்கிறேன், செய்கிறேன்’ என்று உறுதியளித்தார்.
வாக்குக் கொடுத்தபடியே எழுத்தாளரின் புத்தகத்தை இருதரம் வாசித்து குறிப்புகள் எடுத்து முன்னுரை எழுதினேன். நாலு தடவை திருத்தங்கள் செய்தேன். முன்னுரை திருப்தியாக அமைந்ததும் எழுத்தாளருக்கு அனுப்பிவைத்தேன். அவரும் நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார். அது மூன்று மாதங்களுக்கு முன்பு. பின்னர் புத்தகம் வெளிவந்துவிட்டதாக கேள்விப்பட்டேன். என்னுடைய முன்னுரையினால் ஒரு பிரதிகூட அதிகமாக விற்காது என்பது எனக்குத் தெரியும்; ஒன்றிரண்டு குறைவாகக்கூட விற்றிருக்கலாம். எனக்கு ஒரு பிரதி அனுப்புவார் என எதிர்பார்த்தேன். கிடைக்கவில்லை. ஒவ்வொரு வாரமும் பல்கலைக்கழகத்தை அழைத்து இன்னார் பணம் அனுப்பினாரா என்று கேட்பேன். அவர்கள் இல்லை என்பார்கள். அது ஆறுமாதம் முன்னர். இப்பொழுது கேட்பதை நிறுத்திவிட்டேன்.
சந்தைப்படுத்தல்
ஒருநாள் தமிழ் இருக்கைக்கான telemarketing ரொறொன்ரோ பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. 25 பல்கலைக்கழக மாணவ மாணவிகள் தொலைபேசி முன் அமர்ந்து ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே படித்த பழைய மாணவ மாணவியரை அழைத்து தமிழ் இருக்கைக்கு நன்கொடை யாசித்தனர். பணியில் அமர்ந்த எல்லோருமே வேறு வேறு மொழி பேசும் தன்னார்வத் தொண்டர்கள். தமிழ் இருக்கை பற்றி அவர்களுக்கு அறிமுகம் செய்வதற்காக நான் அங்கே சென்றிருந்தேன். அவர்கள் பேசாத ஒரு மொழிக்காக அவர்கள் அப்படி உளமார உழைத்தது என்னை நெகிழவைத்தது. அன்று அவர்கள் 53 பழைய மாணவ மாணவியரிடம் உரையாடி ஏறக்குறைய 3000 டொலர்கள் திரட்டியிருந்தனர். ‘ஒரு யப்பானிய மாணவியிடம் ஏன் இந்த தொண்டு வேலையை செய்கிறீர்?’ என்று கேட்டேன். அவர் சொன்னார், ‘2500 வருடங்களாக வாழும் ஒரு மொழிக்கு இருக்கை அமைந்தால் அது பல்கலைக்கழகத்துக்கு பெருமையல்லவா?’ அந்த நொடியில் என் கண்களை அவர் திறந்துவிட்டார். அதுவரைக்கும் நான் தமிழ் இருக்கை அமைவதால் தமிழுக்குத்தான் பெருமை என நினைத்திருந்தேன்.
காலைத் தொடுவேன்
தமிழ் இருக்கைக்கு இணையம் வழியாக பணம் அனுப்புபவர்களின் எண்ணிக்கை சிறிது சிறிதாக அதிகரித்தது. ஒரு முறை பணம் அனுப்பியவர்களின் பட்டியலைப் பார்த்தபோது முன்பின் தெரியாத ஒருவர் 50 டொலர் அனுப்பியிருந்தார். ஏதோ உந்துதலில் அவரை தொலைபேசியில் அழைத்து பேச்சுக்கொடுத்தபோது அவர் தன் அனுபவத்தை சொன்னார். தொழில்நுட்பக் கோளாறினால் பலதடவை முயற்சி செய்தும் பணம் அனுப்ப முடியவில்லை. இறுதியில் விரக்தி மேலிட ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தை நேரிலே அழைத்து பிரச்சினையை சொன்னார். அவர்கள் வழிகாட்ட, இவர் ஒருவாறு 50 டொலர் காசை கடனட்டை மூலம் செலுத்திவிட்டார்.
இத்தனைக்கும் எங்கள் உரையாடல் ஆங்கிலத்திலேயே நடந்தது. அவருடைய பெயர் ஆனந்த் மன்னா என்று இருந்ததால் என் சந்தேகத்தை கேட்டேன். ’நீங்கள் தமிழரா?’ அவர் ’இல்லை, நான் தெலுங்கு மொழி பேசுபவன்’ என்றார். ’நீங்கள் தமிழ் பேசுவீர்களா?’ அவர் தனக்கு தமிழ் பேசவோ, எழுதவோ, படிக்கவோ தெரியாது என்றார். ஆச்சரியமாயிருந்தது. ’எதற்காக தமிழ் இருக்கைக்கு இரண்டு நாட்கள் விடாப்பிடியாக முயன்று பணம் கட்டினீர்கள்?’ அவர் சொன்னார், ’தமிழ் மிகப் பழமையானது. இந்திய மொழிகளில் அரிய இலக்கியங்களைக் கொண்டது. தமிழுக்கு ஓர் இருக்கை அமைந்தால் அது எங்கள் எல்லோருக்கும் பெருமைதானே.’ என்னால் நம்ப முடியவில்லை. உணர்ச்சி பெருகி என் குரல் தழுதழுத்தது. நான், ’அன்பரே, உங்களை எங்காவது வழியில் சந்தித்தால் நான் உங்கள் காலைத் தொடுவேன்’ என்றேன். அவர் பதில் பேசாது அமைதியாக டெலிபோனை வைத்தார்.
வோல்வோ கார்
இவர் கனடாவில் மிகவும் பிரபலமான வீடு விற்பனை முகவர் ஒருவரை அணுகினேன். மாதம் தோறும் அவர் பல மில்லியன்கள் பெறுமதியான வீடுகளை விற்றுக்கொடுப்பார்; அல்லது வாங்கிக் கொடுப்பார். ரொறொன்ரோ தமிழ் இருக்கைக்கு நன்கொடை என்று சொன்னவுடன் அவர் ஆரம்பித்தார். ’என்னுடைய மகனுக்கு மேற்படிப்புக்கு இடம் கிடைத்திருக்கிறது. அதற்கு 10,000 டொலர் தேவைப்படுகிறது. வன்னியில் என் அம்மாவுக்கு முதுகில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பணம் அனுப்பவேண்டும். நேற்று எங்கள் ஊர் கோயில் கும்பாபிசேகத்தை முன்னின்று நடத்தியதில் எனக்கு பெரும் செலவு’ என்றார். போன மாதம் வாங்கிய வொல்வோ C 90 கார் பற்றி அவர் மூச்சு விடவே இல்லை.
நான் கற்றுக்கொண்டது இதுதான். ஒருவருடைய நிதி நிலைமை பற்றி தெரிய வேண்டுமானால் அவரிடம் ரொறொன்ரோ தமிழ் இருக்கைக்கு நன்கொடை கேட்கவேண்டும்.
விசுவாசமான வாசகர்
எனக்கு ஒரு விசுவாசமான வாசகர் இருந்தார். ஒரு மாதத்தில் ஒரு முறையாவது அழைப்பார். என்னுடைய தீவிரமான வாசகர். நான் எழுதிய எல்லா புத்தகங்களையும் படித்திருக்கிறார். பேசும்போது என்னுடைய சிறுகதையிலிருந்து ஒரு வசனத்தை எடுத்து அப்படியே போகிறபோக்கில் வீசிவிடுவார். அவர் எப்ப அழைத்தாலும் உரையாடல் ஒரு மணி நேரம் நீளும். கடைசியில் நான்தான் ஏதாவது சாட்டுச் சொல்லி உரையாடலை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் அடுத்த தடவை அழைக்கும்போது ஏதாவது புது விசயத்தை எடுத்து வருவார். ஒருமுறை பேசியதை மீண்டும் பேசுவதே கிடையாது. இத்தனைக்கும் அவருடைய முகத்தை நான் பார்த்ததில்லை.
ஒருநாள் ஓர் அதிசயம் நடந்தது. நான் ஒரு பல்கடை அங்காடியில் நின்றபோது ஒருவர் வந்து கைகொடுத்து என்னை தெரிந்தது போலப் பேசினார். பார்த்தால் அவர்தான் அந்த வாசகர். தோளிலே மாட்டியிருந்த பையை எடுத்து காட்டினார். அதற்குள்ளே நான் எழுதியக கதைகள் பல ஒளிநகல்களாக காட்சியளித்தன. ’இதை ஏன் இப்படி காவித் திரிகிறீர்கள்’ எனக் கேட்டேன். அவர் அப்போது சொன்ன பதில்தான் என் வாழ்நாளில் நான் என்றுமே மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. ’எப்பவாவது உங்களைச் சந்திக்கலாம் என்று இவற்றை சுமந்து திரிவேன்’ என்றார். ’ஒவ்வொரு நாளுமா?’ ’ஆமாம், எங்கே புறப்பட்டாலும் பையை எடுத்துத்தான் செல்வேன்.’
அந்த சந்திப்புக்கு பின்னரும் அவருடைய அழைப்பு தொடர்ந்தது. நீண்ட நேர உரையாடலுக்குப் பின்னர் நான் பேச்சை ஒரு முடிவுக்கு கொண்டு வருவேன். அவர் ஒரு தொழில்சாலையில் வேலை செய்தார். மணித்தியாலத்துக்கு இவ்வளவு என்ற சம்பளத்தில் ரொட்டியை பிளாஸ்டிக் உறையில் அடைக்கும் வேலை. நாளுக்கு ஒன்பது, பத்து மணித்தியாலம் வேலை செய்வார். வாரத்துக்கு ஆறு நாட்கள். சிலவேளை ஏழாவது நாளும் வேலை செய்வதுண்டு. அன்று மணித்தியாலத்துக்கு அதிகமான தொகை கிடைக்கும்.
ஒருநாள் இவர் என்னை வழக்கம்போல அழைத்தபோது நான் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் ஓர் இருக்கை அமைய இருப்பதைப் பற்றி சொன்னேன். ’உங்களால் முடிந்ததை, 25 டொலரோ அல்லது 50 டொலரோ நன்கொடை வழங்கினால் பெரிய உதவியாயிருக்கும். உங்கள் பெயர் கொடையாளர்களின் பட்டியலில் நிரந்தரமாக பதிவாகிவிடும்’ என்று கூறினேன். ’ஐயா, லைன் ஒன்று வருகுது’ என்றுவிட்டு அவசரமாக டெலிபோனை துண்டித்தார். இது நடந்து ஆறு மாதம் ஆகிறது. அதன் பின்னர் அவர் என்னை அழைக்கவே இல்லை.
அவசர டொக்ரர்
டொக்ரர் முத்துலிங்கத்துடன் பேசமுடியுமா?
அப்படி ஒருவரும் இல்லையே.
கலாநிதி முத்துலிங்கம்?
அவரும் இல்லை.
முனைவர் முத்துலிங்கம்
இல்லையே.
இந்த நம்பரில் அவர் இருக்கிறார் என்று சொன்னார்கள். நான் அவருடன்தான் பேசவேண்டும். அவர் ஒரு பேராசிரியராகக் கூட இருக்கலாம். அவசரமான விசயம்.
அப்படியா? என்ன விசயம் என்று சொல்ல முடியுமா?
அது ஒன்றும் ரகஸ்யமில்லை. ரொறொன்ரோ தமிழ் இருக்கைக்கு நன்கொடை வழங்கவேண்டும் என்று என்னுடைய husband சொன்னார். டொக்ரர் இதற்கான ஏற்பாடு செயவார் என்றார். அதுதான் அவரை தேடிக் கண்டுபிடிக்கவேண்டும்.
நான் உசாரானேன்.
நீங்கள் எவ்வளவு நன்கொடை கொடுக்க திட்டம் போட்டிருக்கிறீர்கள்?
என்னுடைய husband 50,000 டொலர் என்று சொன்னார்.
நான் நிலத்திலே விழுந்து புரளத் தயாரானேன்.
எனக்கு எல்லா விவரங்களும் தெரியும். நானே அவற்றை தருகிறேன்.
அது கூடாது. என் husband டின் கட்டளை டொக்ரர் முத்துலிங்கத்துடன் பேசவேண்டும் என்பதுதான்.
பட்டத்தில் என்ன இருக்கிறது? நானே இந்த நன்கொடையை ஏற்று முறையாகப் பதிவு செய்வேன். பல்கலைக் கழத்திலிருந்து உடனேயே உங்கள் கைக்கு ரசீது வந்து சேரும்.
அது ஏலாது. டொக்ரர் பட்டம் உள்ளவரிடம் பேசவேண்டும் என்பதுதான் கடுமையான கட்டளை.
’இது என்ன கட்டளை? ‘காரைக்கால் அம்மையார் வியக்கும் வண்ணம் நாலு கட்டளைக் கலித்துறை பாடல்களை இடது கையால் எழுதினாலும் எழுதலாம். இந்த அம்மையாரை தகர்க்க முடியாது போலிருக்கிறதே.’
டொக்ரர் பட்டம் எடுப்பது சாமான்ய காரியம் இல்லை. இனி ஒருவர் படித்து எடுப்பதும் முடியாது. அம்மையே, டொக்ரர் பட்டத்துக்கு எவ்வளவு கழிக்க வேண்டுமோ அதைக் கழித்துக்கொண்டு மீதியை தாருங்கள். உடனேயே ரசீது அனுப்ப ஏற்பாடு செய்வேன்.
நோ நோ, அப்படி எல்லாம் செய்யமுடியாது.
ஏதோ என்னால் முடிந்ததை செய்யலாம் என்று நினைக்கிறேன்.
இது என்ன? விடாப்பிடியாக இருக்கிறீர்கள். நீங்கள் யார்?
சும்மா முத்துலிங்கம்.
ஜா.தீபா கடிதங்கள்-2
விஷ்ணுபுரம் விருந்தினர்-7, ஜா.தீபா
[விஷ்ணுபுரம் விருந்தினர் படைப்புகளை படிக்க https://vishnupuramguests2021.wordpress.com/]இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.
-குறள் 1062
அளிப்பவன் ஆணவம் கொண்டால் பெறுவது பொற்குவையே ஆனாலும் இரவலன் சீற்றமே கொள்கிறான். பொன்னுக்கும் பொருளுக்கும் அப்பால் நின்றிருக்கும் தெய்வமொன்று ஒவ்வொரு மானுடனுக்கும் உள்ளே உறைகிறது. அது வணங்கி படைப்பனவற்றை மட்டுமே ஏற்றுகொள்கிறது.
-இருட்கனி
இவ்வாண்டு விஷ்ணுபுரம் விருந்தினரான ஜா.தீபா அவர்களின் ஒற்றை சம்பவம் கதையை இன்று தளத்தில் தாங்கள் பரிந்துரைத்த பின் சென்று படித்தேன். கதை வாசித்து முடித்து அசைபோடுகையில் மேலுள்ள குறளும் தற்போது படிக்கும் இருட்கனி வரிகளும் தான் நினைவுக்கு வந்தன.
ஆணும் பெணும் கொள்ளும் ஆடலின் சித்திரம் மாற்றுதிறனாளி பெண்ணான மணிமாலாவின் தன்மதிப்பில் முனைகொள்கிறது. அது தான் இந்த கதையை தனித்துவமாக்குகிறது என நினைக்கிறேன். ஒருவகையில் என் நேர்வாழ்க்கையில் நானும் அவளை போன்றவன் என்பதால் எனக்கு அணுக்கமானவளும் கூட.
மணிமாலாவின் இயலாமை என்னும் விரிசலில் நாதனின் ஆணவம் என்னும் ஆப்பு இறங்கியதன் முறிவே அவனது தற்கொலை என கூறலாம். அண்மையில் எஸ்ரா உடன் ஒருநாள் நிகழ்விற்கு சென்றிருந்த போது ஒருவர் வந்து பக்கத்தில் அமர்ந்திருந்த அப்பாவிடம், “நடக்க மட்டுந்தானா ? இல்லை மூளை வளர்ச்சியுமா ?” என கேட்டார். எனக்கு சுருக்கென்று பற்றி கொண்டு வந்தது. அப்பா வாய்த்திறப்பதற்குள், “இல்லை, நடக்க மட்டுந்தான் முடியாது.” என்று அழுத்தமாக கூறினேன்.
மணிமாலாவை போன்ற ஒருவரின் சீற்றம் என்பது அங்கிருந்து தான் தொடங்குகிறது. அவள் வார்த்தையில்,”விருதுகள் எனக்கல்ல… இழந்த என் கண்களுக்கானவை.”,”இழந்த என் கண்கள் அச்சமயத்தில் எனக்கு அவமானத்தை தருகின்றன” அவள் தன்னை பற்றி கூறி கொள்ளும் போது தான் மனிதர்களின் மனோ மர்மங்களை அறிந்து கொள்ளும் திறனும் ஆவலும் கொண்டவள் என்கிறாள். அந்த போலிஸ் சப் இன்ஸ்பெக்டர் அதிலென்ன தப்பு என கேட்டவுடன் அவள் கொள்ளும் மௌனமே அவளது நுண்ணுணர்வை நமக்கு காட்டிவிடுகிறது.
அவள் கேட்பது உங்களில் ஒருவருக்கு காலோ கையோ உடைந்திருந்தால் செய்யும் உதவியை போல ஏன் எனக்கு செய்வதை எடுத்து கொள்ள மறுக்கிறீர்கள். எத்தனை தூரம் திறன் கொண்டிருந்தாலும் நீ உன்னுடைய இழப்பு மட்டுந்தான். அந்த இழப்பினால் மட்டுந்தான் நீ இத்திறனை பெற்றிருக்கிறாய் என கூறுவது அந்நபரின் தன்மதிப்பை அவமானப்படுத்தும் செயலே தான். இவர்கள் இப்படி செய்வது பெரிய ஆளுமைகளை கேலி செய்து தங்களை ஆசுவாசப்படுத்தி கொள்ளும் செயலை போன்றது தான். இம்மாதிரி இழப்புள்ளவர்கள் எழுந்து வருகையில் மிகச் சிறிய அளவிலேனும் சுற்றியுள்ளவர்களை தங்கள் திறனால் தாழ்மையுணர்ச்சி கொள்ள செய்கிறார்கள்.
அதன் பொருட்டு மணிமாலா மேடையேறி கூவ வேண்டும். கண்ணில்லாத நானே செய்கிறேன், உங்களுக்கென்ன என்று. இந்த சொற்கள் அவளை போல நுண்ணுணர்வுள்ள பெண்ணுக்கு, உங்களிலும் தாழ்ந்த நானே என்ற பொருளை தான் அளிக்கின்றன. அவளுக்கும் ஒருவகையில் அம்மேடையில் நிற்பது ஊர் நடுவே உள்ள மாமரம் கல்லடிப்படுவதற்கு ஒப்பானது.
அது எங்கிருந்து தொடங்குகிறது என்றால் வீட்டிலிருந்து குறிப்பாக நாதனிடமிருந்து. அவனை பொருத்தவரை தான் வலிய சென்று திருமணம் செய்து கொண்டதாலேயே அவள் தனக்கு முழு உரிமையானவள். என் நோக்கில் அந்த முதலிரவில் அவள் சொல்லும் இந்த வார்த்தைகள் தான் ஒற்றை சம்பவம்,”உணர்வுகளுக்கு நிறமிருக்கு… அது எனக்கு புரியும்னு சொன்னேன்… அவரு எனக்கு புரியாதுன்னு முடிவு பண்ணிட்டாரு.. நான் அதுக்கப்புறம் கேக்குறதே இல்லை.” கணவன்-மனைவி உறவில் ஆணுக்கும் பெண்ணுக்குமான ஊடல் இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் ஒருவர் இன்னொருவரை பார்த்து உனக்கு ஆளுமையே இல்லை என்று சொல்கையில் தான் மெய்யான விரிசல் தொடங்குகிறது என நினைக்கிறேன். அந்த முதலிரவின் ஒற்றை சம்பவம் தான் வெவ்வேறு வகையில் நிகழ்ந்து கொண்டே வருகிறது. இறுதியில் அவளுக்கு மூச்சு மூட்டி ஓடிவிடுகையில் உறவு நீர்க்குமிழியாகி விடுகிறது.
ஆனால் அவளது இந்த தன்மதிப்பின் வெளிப்பாட்டை ஏற்றுகொள்ள இங்கு வெளியில் ஆட்களே இல்லை. அவளை போன்ற ஒருவர் எங்கோ ஓரிடத்தில் தன் தரப்பை சொல்ல துடித்து கொண்டிருப்பது வெளிப்பாட்டு வடிவமே சப் இன்ஸ்பெக்டரிடரிடம் சொல்வது. எனினும் சப் இன்ஸ்பெக்டர் கேட்க தொடங்குவதோ ஓர் பரிதாப உணர்ச்சியினால் தான். ஆனாலும் அவளும் அறியாது தலையாட்டுவது அந்த தெய்வம் கேட்டது என்பதால் தான்.
அன்புடன்
சக்திவேல்
விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத்
விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்
விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன்
விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை
விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார்
விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன்
விஷ்ணுபுரம் விருந்தினர் -7, ஜா தீபா
விஷ்ணுபுரம் விருந்தினர்-8, சோ.தர்மன்
December 9, 2021
காலடிவடுக்கள்:விக்ரமாதித்யனின் கவிதைகள்-3, ஜெயமோகன்
விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021
[விஷ்ணுபுரம் விருந்தினர் படைப்புகளை படிக்க https://vishnupuramguests2021.wordpress.com/]
[ 5 ]
[தொடர்ச்சி ]விக்ரமாதித்யனின் கவிதைகள் வழியாகச் செல்லும்போது அதிலிருக்கும் விந்தையானதோர் ஆன்மீக மறுப்பு வாசகர்களின் கவனத்துக்கு வந்திருக்கலாம். ஒரு நல்ல வாசகர் ஏராளமான கவிதைகளை நினைவில் கொள்வார். உலகுகடந்த அனைத்தையும், உன்னதமெனக் கூறப்பட்ட அனைத்தையும் மறுப்பவை என பல வரிகள் அவர் கவிதைகளில் உள்ளன. மெய்மையை, சாராம்சமான உண்மையை, அன்றாடம் கடந்த நிலையைக் கூட எள்ளி நகையாடி மறுக்கும் வரிகள் உள்ளன. ’முந்நூறு வார்த்தைகள் போதும் முழுதாய் வாழ்ந்து முடிக்க’ என்னும் பிரக்ஞையே அவருடைய உலகப் புரிதல். தன்னை வார்த்தைகளின் காட்டில் வழிதவறியவன் என்று உணர்வது அவருடைய தன்னிலையறிதல்.
தமிழ்க்கவிதையுலகில் மிக அரிதானது இந்த தூய உலகியல். ஏனென்றால் தன்னளவில் கவிதை என்பதே உலகியலுக்கு அப்பாற்பட்டது. தமிழ்க்கவிஞனோ முற்றிலும் உலகியலில் ஆழ்ந்துகிடக்கும் தமிழ்ச்சூழலில் இருந்து கசந்து வெளியேறியவன். தமிழின் இளங்கவிஞர்கள் அனைவரிடமும் ஒருவகை ‘போடாங்’ மனநிலை இருக்கும். நான் – நீங்கள் என்னும் இருமை இருக்கும். தன்னை ஒரு தூய நிலையில், விலகியநிலையில், அசாதாரணமான நிலையில் வைத்துக்கொள்வது கவிஞர்களின் இயல்பு. அங்கிருந்துகொண்டே அவர்கள் உறவுகளை, அரசியலை, அன்றாட உணர்வுகளை பார்க்கிறார்கள். மதத்தை, இயற்கையை, தத்துவத்தை அணுகுகிறார்கள்.
இந்தப் புள்ளியில் நின்றுகொண்டு தமிழ் நவீனக்கவிஞர்கள் ‘நான்’ ‘என்’ என எழுதிய வரிகளை நினைவுகூருங்கள். அவர்களின் அதீதநிலைகளை கணக்கிலெடுங்கள். தற்கொலை பற்றி எழுதும்போதும், சாவு பற்றி எழுதும்போதும்கூட தனது அசாதாரணநிலையையே கவிஞர்கள் முன்வைக்கிறார்கள். இந்தச் சூழலில் போலியாக அன்றி, பணிவின் வெளிப்பாடாக அன்றி, இயல்பாகவே சாமானியனின் குரலாக, முற்றிலும் உலகியலின் குரலாக, அன்றாடத்தில் இருந்து ஒலிப்பதாக எழும் விக்ரமாதித்யனின் வரிகள் மிகமிக அரிதானவை. அவை அன்றாடம் கடந்த அனைத்தையும் மறுக்கின்றன. ஐயம்கொள்கின்றன. அரிதான, உன்னதமான எதையும் அவை ஏற்பதில்லை.
”உண்ணுங்கள், குடியுங்கள், கூடுங்கள், செத்து மறையுங்கள், இங்கு தேடவோ எய்தவோ பிறிதொன்றுமில்லை” என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்ளும் வரிகள் விக்ரமாதித்யன் எழுதுபவை. அவர் கவிதைகளில் இருந்து அத்தகைய வரிகள் இக்கணம் எண்ணும்போது எழுந்து எழுந்து வருகின்றன. ”வானமென்றால்
நட்சத்திரங்கள் உண்டு,பூமியெனில் புல்பூண்டுகள்” என்று ஒலிக்கும் இன்றைய சார்வாகனின் அறைகூவல். “நாமெல்லாம் முதலாளி மனசுக்கு பிடித்ததைப் பேசும் மத்தியவர்க்க ஜாலக்காரர்கள்” என்ற தன்பழிப்பு. அல்லது ”வெட்டவெளி பொட்டல் நிஜமில்லையோ” என்னும் அகத்தயக்கம். முச்சந்தியில் சவுக்கால் தன்னைத் தானே அறைந்து கொள்ளும் வித்தைக்காரனின் வீம்புடன் விக்ரமாதித்யன் தனக்குத்தானே நான் சாமானியன், உலகியலில் உழல்பவன் என்று சொல்லிக் கொள்கிறார்.
அவருடைய கவிதையுலகில் இருந்து நாம் தொட்டெடுப்பது எப்போதும் உலகியலை நோக்கிப் பேசும் ஒரு கவிஞனை. இக்கவிதைகளின் உலகிலிருந்து நாம் தேர்வு செய்யக்கூடும் கவிதைகள் எல்லாமே உலகியலைக் கொண்டாடும் வரிகள் கொண்டவை. நல்ல தோசையை, கர்லான் மெத்தையை, துவைத்து அழுக்கு நீக்கப்பட்ட வேட்டியைக் கொண்டாடுபவை. எளிய குடும்பத்தை ,அல்லலற்ற அன்றாட வாழ்க்கையை வியந்தோதுபவை. சரிதான், மனிதனுக்கு வேறென்ன வேண்டும் என்று ஆதுரத்துடன் சொல்லிக் கொள்ளும் வரிகள். ”வெயில் காயும்,மழை புரட்டிப் போடும்
அல்பப்புழுக்களும் வாழ்ந்து கொண்டிருக்காமல் இல்லை” என்று தன் வாழ்க்கையை நிறுத்து நோக்கும் வரிகள்.
அதே விக்ரமாதித்யன் கவிதைகளில், “இதுவா வாழ்க்கை? இதன் பொருட்டா மானுடன் படைக்கப்பட்டிருக்கிறான்?” என்று பதைப்பனவற்றையும் பார்க்கலாம். அனைத்து அன்றாட இன்பங்களையும் பட்டியலிட்டுக் கொண்டு சென்று “ஆனாலும் கொடுமை ஆயிரங்கால வாழ்க்கை” என்று அலுத்துக் கொள்ளும் விக்ரமாதித்யன் “ஜீவராசிகள் ரத்தம்சிந்தக்கூடாது. தாமிரபரணி வற்றினால் தீ” என்று கண்டடைகிறது.
ஏற்கனவே சொன்னது போல, இல்லம் திரும்புதலும், இல்லம் துறத்தலுமாக ஊசலாடும் இந்தக் கவிதை உலகில் இரண்டுமே இயல்பாக இருக்கிறது. “கவிஞர்கள் ஆவதில்லை குமாஸ்தாக்கள்” என்று சொல்லும் விக்ரமாதித்யன், இனிய வாழ்வு என்று காட்டும் அனைத்தும் குமாஸ்தா வாழ்க்கை என்பது எவ்வளவு பெரிய முரண் என்பதை உணர்பவர்கள், இக்கவிஞன் உலகில் ஓயாது ஆடும் அந்த ஊசலை உணர்ந்து கொண்டவர்கள். விட்டுவிலகிப்போன கசப்பு,விடவே முடியாத விருப்பு என அலைபாயும் வாழ்க்கை அவர் காட்டுவது
வலை
பின்னுகின்றன சிலந்திகள்
இரை
சேகரிக்கின்றன எறும்புகள்
வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள் ஜனங்கள்
பெய்யும் மழைக்கேற்ப
விளையும் நிலம்
கவிஞன் சாம்பல் கரைக்க
கங்கையும் காணாது குமரியும் போதாது !
ஆனால் விக்ரமாதித்யனின் கவிதைகளில் வெளிப்படும் ஆன்மிகமான ஒரு தளம் அதை மேலும் ஆழம் கொண்டதாக ஆக்குகிறது. ஆனால் அதுவும் உலகியலுக்குள் அமைந்த ஆன்மிகமே. மெய்த்தேடல் என்பது ஒருவர் தன் இருப்பை உசாவி, அதைப் பொருள்கொள்ளும்படியாகப் பிரபஞ்சத்துடன் பொருத்திக் கொள்வது. இப்பிரபஞ்சத்திற்கு இருக்கும் மாபெரும் இருத்தல் பொருளுடன் தன் இருத்தலின் பொருளும் இணையும் ஓர் இசைவை அவன் கண்டடைவது. தான் என்று உணர்கையிலேயே அனைத்தும் என்று உணர்வது. அது என உணர்வதையே தான் என அறிவது. அதையே தரிசனம் என சொல்கிறோம். அதை கலையென்றும் கவிதையென்றும் அழகுறச் செய்யவும் ஆகும்.
அம்முயற்சிகள் அனைத்தையுமே மிக எளிதாக இடக்கையால் தட்டி அகற்றும் விக்ரமாதித்யனை நாம் அவர் கவிதைகளில் காண்கிறோம். அவை அனைத்தும் இங்குள்ள அன்றாடத்தின் மேல் போடப்படும் பாவனைகள் மட்டுமே என கவிஞர் எண்ணுகிறார். வெவ்வேறு கவிதைகளில் பிரபஞ்சப்பொருளை, இயற்கையின் அருளை நாடும் உள எழுச்சிகளை விக்ரமாதித்யன் கேலி செய்வதை, மறுப்பதைக் காண்கிறோம். அவற்றுக்கு நான் வாழும் இந்த தெருவில், இந்த ஒண்டுக்குடித்தன வாழ்வில் என்ன பொருள் என்கிறார். “மாயக்கவிதை எழுத மற்ற ஆளைப்பார். நான் நொம்பலப்பட்ட ஆத்மா” என்கிறார்.
தமிழ் புதுக்கவிதையில் நவீன ஆன்மீக விளக்க உரையாளர்களின் நேரடியான வரிகளையோ அவ்வரிகளின் பிறிதாக்கங்களையோ, நிழல் வடிவங்களையோ தொடர்ந்து காண முடியும். ஓஷோ தமிழ்க் கவிதைகளில் எங்குமென நிறைந்திருக்கும் ஒருவர். அடுத்தபடியாக ஜெ.கிருஷ்ணமூர்த்தி. ஜென் கவிதைகள் வழியாக பௌத்தம். ஜரோப்பிய மாற்று ஆன்மீக சிந்தனையாளர்கள் குர்ஜீஃப், கலீல் கிப்ரான். அத்தகைய எவருடைய ஒரு வரி கூட நேரடியாகவோ, மறைமுகமாகவோ, பிண்ணனி விசையாகவோ நிலை கொள்ளும் கவிதை இவர் படைப்புலகில் இல்லை. ஒரு வேளை தமிழில் அவ்வாறு முற்றிலும் அவ்வாறு எடுத்து அகற்றி வைக்கப்பட வேண்டிய கவிதைகள் விக்ரமாதித்யனுடையவை.
முற்றிலும் உலகியல் சார்ந்த பிறிதொரு கவிஞன் தமிழில் உண்டா என்று எண்ணி எண்ணிப் பார்க்கிறேன். விக்ரமாதித்யன் உலகுடன் அவருக்கு இணையாக ஒப்பிடத்தக்க தகுதி கொண்ட தமிழ்ப் பெருங்கவிஞர்களை நினைத்துப் பார்க்கிறேன் – தேவதேவன், தேவதச்சன், அபி. எவரும் இல்லையென்றே தோன்றுகிறது. ஒருவேளை விக்ரமாதித்யனைத் தனித்துக் காட்டுவதும் தமிழ்க்கவிகளில் அவருடைய இடத்தை திரும்பத் திரும்ப அடிக்கோடிடுவதும் இந்த சமரசமற்ற உலகியல் தன்மைதான். இந்த ஆன்மீக மறுப்பு எனச் சொல்லத்தக்க உலகியல் தன்மை விக்ரமாதித்யனை கவிதை வாசகர்களிடையே ஏற்பும் மறுப்பும் கொண்டவராக ஆக்குகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு விக்ரமாதித்யனைப் பற்றி சாரு நிவேதிதா எழுதிய போது ’திரும்பத் திரும்ப சோறும் வேட்டியும் வேண்டும் என்பற்கு அப்பால் வேறு எதுவும் சொல்வதற்கு இல்லாதவர்” என்றார். அது ஒரு இழித்துரைத்தல் என்றாலும் கூட விக்ரமாதித்யனை வேறொரு கோணத்தில் அடையாளம் காண்பதற்கு உதவும். ”தாமிரபரணிப் பக்கத்தில் இருந்தால் சரி.தாய் அண்டையிலிருந்தால்
போதும். துணைவி கூட இருந்தால் நல்லது.பிளைகளோடு வாழ்ந்தால் சந்தோஷம்
கோயிலுக்குக் கிட்டத்தில் மொழிக்கு நெருக்கத்தில் இருப்பின் விசேஷம்” என்றே அவர் கவிதை ஏங்குகிறது. அங்கிருந்து எழுந்து “நெல்லையப்பருக்கு இல்லையென்றாலும் காந்திமதி தாய்க்குப் புரியாதா கவிமனசு” என தன்னை அடையாளம் காண்கிறது. அவருடைய ஆன்மிகம் அதுவே. சோறென்றும் துணியென்றும் வந்து நின்றிருக்கும் ஆன்மிகம் அவருடையது. உலகியல் என உருமறைத்து வந்து நிற்கும் ஆன்மீகம்.
இந்த உருமாற்றம் நிகழ்ந்தது சோழர் காலத்தில் என்று சொல்வார்கள். எளிய மார்க்சிய விமர்சகர்கள் சோமாஸ்கந்தர் என்னும் சிலையின் உருவகம் தோன்றியது சோழர் காலத்தில் என்றும், அதற்கு அரசியல் பொருளியல் காரணங்கள் உள்ளன என்றும் சொல்வார்கள். உமையுடன் அமர்ந்திருக்கும் சிவன், முருகனும் கணபதியும் அமர்ந்திருக்க குடும்பத்துடன் அமர்ந்திருக்கும் அம்மையப்பர். சிலை வடிவில் தமிழகம் முழுக்க செல்வாக்கு செலுத்தும் கருதுகோள் அது. சைவ மரபில் காணபத்யம், கௌமாரம், சாக்தம் ஆகியவை இணைந்ததைக் காட்டுகின்றன அச்சிலைகள். அவை ஓர் இலட்சிய குடும்ப உருவகத்தை தமிழகத்துக்கு அளிக்கின்றன. “மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்” என மதத்தை மறு சமையல் செய்து அளிக்கின்றன. அவ்வண்ணம் மறு அமைப்பு செய்யப்பட்ட பிறகே சைவம் பெருமதமாகியது என்பது இயந்திரவாத மார்க்சியத்தின் கொள்கைகளில் ஒன்று.
விக்ரமாதித்யனின் சைவம் என்பது சோமாஸ்கந்தரின் சைவம் என்று சொல்லலாம். அவர் உலகில் அம்மையும் அப்பனும் வீற்றிருக்கிறார்கள். அவர்களுக்கிடையே ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கும் உலகியல் சண்டைகளும் சச்சரவுகளும் இருக்கின்றன. அம்மைக்கு அப்பன் ஆடிக் காட்டுகிறான். அம்மை அரவணைத்து வைத்திருக்கிறாள். கடலைக் கரை தழுவி நிறுத்தியிருப்பது போல. திரும்பத் திரும்ப இந்த தெய்வக் குடும்பத்திற்கு விக்ரமாதித்யன் வந்து சேர்கிறார். அவனுடைய அலகிலா விளையாட்டோ, அவளுடைய சக்திப்பெருக்கோ அவர் கவிதைகளில் இல்லை. ‘எங்கெங்கு காணிணும் சக்தியடா’ என்றும் ‘நோக்க நோக்கக் களியாட்டம்’ என்றும் அவர் கவிதை பரவசம் கொள்வதில்லை.
இன்னொரு வாசிப்பில், இல்லாமலாகிப்போன தன் குடும்பத்திற்கு நிகராக ஒரு தெய்வ குடும்பத்தைக் கொண்டு வந்து வைக்கிறாரோ என்று கூடத் தோன்றும். திரிந்து கசந்து போன அன்னைக்குப் பதிலாக ஒருபோதும் திரியாத பாற்கடலாகிய உமையை எண்ணிக் கொள்கிறாரோ என்று தோன்றுகிறது. கைவிட்ட தந்தைக்கு பதிலாக அம்மைக்கு அடங்கி அவள் சொல்லில் அமைந்த தந்தையை கண்டடைகிறாரா? மைந்தன் என சென்று நிற்கும் ஒரு மகத்தான இல்லம் மட்டுமே அவருடைய கோயில். அம்மையும் அப்பனும் அங்கே என்றும் வற்றாத அன்புடன் அமர்ந்திருக்கிறார்கள். எத்தனை கவிதைகள் நினைவில் எழுகின்றன. அங்கே இருப்பவர்கள் உலகுபுரக்கும் சிவசக்தியர் அல்ல. நெல்லையை ஆளும் நெல்லையப்பனும் காந்திமதியும்தான்.
விக்ரமாதித்யன் ஆலயங்கள் தோறும் சென்று கொண்டிருக்கிறார். சித்தர் போல பல ஆலயங்களின் வாசல்களில் அவர் நின்றிருக்கிறார். நள்ளிரவில் அழைத்து அவரிடம் ஆலயங்கள் பற்றிய ஐயங்களை நான் கேட்டிருக்கிறேன். முழுப்போதையிலும் கூட எந்த ஆலயத்தில் எந்தப் பூசை, எந்த ஆகமம், என்ன சிறப்பென்று அவரால் சொல்ல முடியும். பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை நவபாஷாணம் பற்றி ஒரு ஐயத்தை அவரிடம் கேட்டது நினைவிருக்கிறது. அப்போது அவருடைய நா குழறிக் கொண்டிருந்தது. ஆயினும் அவர் சொன்னது எந்த மத அறிஞனும் சொல்லும் அளவிற்கு கூரிய சரியான விளக்கம்.
சடங்குகள், நேரங்கள் ஆகியவை அவருடைய மதத்தின் அடிப்படை. இன்று அவர் தேர்ந்த சோதிடர் என்கிறார்கள். ஆனால் ஓதுவார் மரபிருந்த போதிலும் கூட மிகக் குறைவாகவே நேரடியாக தேவார திருவாசகங்களை அவர் எகவிதையில் டுத்தாண்டிருக்கிறார். அவற்றின் சாயல் உள்ள வரிகளை எங்கேனும் தேடிப் பிடிக்க முடியுமோ என்னவோ! ஆனால் பகடியாகவோ மறுப்பாகவோ சைவக் குரவர்களைக் குறிப்பிட்டிருக்கிறாரே ஒழிய போற்றிச் சொன்னதில்லை. சைவராக இருப்பினும் ஆண்டாள் மேல் அவருக்கு அணுக்கமும் பிரியமும் இருக்கிறது. அவருடைய மதம் என்பது மண்ணில் எழும் வானம்தான். இரு துகள்களுக்கு இடையே வானம்தான் இருக்கிறது என்று நவீன கவிஞன் கண்டடைந்த விவேகம் அவரை ஆள்கிறது.
[ 6 ]
விக்ரமாதித்யன் கவிதைகள் அவற்றின் நேரடி எளிமையினாலேயே அடித்தள மக்களிடம் சென்று சேர்ந்திருப்பதைக் காண்கிறேன். அவருக்கு விருது கொடுத்த அறிவிப்பு வந்த பிறகு வந்த கடிதங்கள் பெரும்பாலானவற்றை நான் திரும்பி எழுதித்தான் பிரசுரிக்க முடிந்தது. அந்த அளவுக்கு பண்படாத உரைநடையில் எழுதப்பட்டவை. பல கடிதங்கள் பேசி பதிவுசெய்து அனுப்பப்பட்டவை. அவற்றின் வாசகர்கள் எளிய பாத்திர வியாபாரிகள், கமிஷன் மண்டியில் இருப்பவர்கள். தன் கவிதையை அவர் கிட்டதட்ட விசிறியடித்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.
“உப்புக்கும் பாடி புளிக்கும் ஒரு கவிதை ஒப்பிக்கும் எந்தன் உளம்” என்று சொன்ன தமிழ்ப் பாணினி மரபு அது.
விக்ரமாதித்யன் ஐம்பது பிரதிகள் மட்டுமே அச்சிடபடக்கூடிய சிறிய இதழ்களில் எழுதியிருக்கிறார். மரபுக் கவிதை இதழ்களில் எழுதியிருக்கிறார். துப்பறியும் கதைகளை வெளியிடும் பதிப்பகங்களில் கவிதைகளைக் கொண்டு சென்று கொடுத்திருக்கிறார். நாலாந்தர கிசுகிசு பத்திரிக்கைகளின் பின்னட்டையில் அவர் கவிதைகள் பிரசுரமாகி இருக்கின்றன. ஒரு வகையில் கவிதைக்கு சிறுமை சேர்க்கிறார் என்று சொல்லலாம். தகுதியற்ற இடத்தில் கவிதைகளைக் கொண்டு கொடுக்கிறார் எனலாம். ஆனால் அவர் கவிதைகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருந்திருக்கின்றன.
கவிதைகளைத் திரும்ப எழுதியுள்ளீர்களா என்ற கேள்விக்கு, அந்த நேரத்தில் இன்னொரு கவிதை எழுதலாமே என்று அவர் பதில் சொன்னார். திரும்பத் திரும்ப செம்மைநோக்கி எழுதுவதல்ல அவருடைய வழி. அவர் எழுதுவது ஒரு வெளிப்பாடு மட்டும்தான். மொழியை வைத்துக்கொண்டு தனக்குள் நுண்ணிய ஒன்றைத் தேடிச் செல்பவர் அல்ல அவர். தனக்குள் ஒன்று தோன்றினால் அது அக்கணமே மொழியென வெளியேறிவிட வேண்டுமென எண்ணுபவர். வெளியேறிவிட்டவற்றில் இருந்து தான் வெளியேறி செல்பவர். ஆகவே விக்ரமாதித்யன் எழுதிக் குவித்திருக்கிறார்.
பெருமழை பெய்தால் மட்டுமே ஊறும் கிணறுகள் போன்றவர்கள் நமது பாமர வாசகர்கள். ஆகவே தமிழ்க் கவிஞர்களில் அவர்களையும் சென்றடைந்தவர் அவர் ஒருவரே. அவர்களில் பலர் அவருடைய கவிதைகளை அருள்மொழிகளாகவே படித்திருக்கிறார்கள். மறைபொருளோ பண்பாட்டு நுண்பொருளோ அவர்களிடம் செல்வதில்லை. நேரடியாகவே வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும் வரிகள் என வாசித்திருக்கிறார்கள்.
“என் அடுப்பில் நெருப்பில்லை எனினும் எங்கெங்கோ அடுப்புகளில் நெருப்பு எரியத்தான் செய்கிறது” என்னும் வரி தன்னை வாழ்நாளின் மிகப் பெரிய நம்பிக்கையாளனாகவும் நேர்நிலைப் பண்பு கொண்டவனாகவும் எவ்வண்ணம் மாற்றியது என்றும் ஒருவர் எழுதியிருந்தார். மேலும் மேலும் அவர் அதை சொல்லி அனுப்பியிருந்தார். அச்சொற்களைக் கேட்கும் போது முதல்முறையாக ஒரு தமிழ் நவீனக் கவிஞன் அந்த ஆழம் வரை சென்று சேர்ந்திருக்கிறான் என்ற எண்ணம் வந்தது. எவனோ ஒரு எளியவன் தன் வாழ்நாளுக்கு உரிய ஒரு வரியாக அவருடைய ஒன்றிரண்டு சொற்களைக் கொண்டு செல்ல முடிகிறது. சிறு வட்டத்துக்குள் தனக்குத்தானே படித்துக்கொண்டு தேங்கியிருக்கும் புதுக்கவிதையின் சுவர்களை உடைத்துக் கொண்டு அவர் வெளியேறி இருக்கிறார். அது தமிழில் எளிய நிகழ்வு அல்ல.
எந்த அணியும் இல்லாத அவருடைய வரிகள் கவிதையென எளியோருக்குத் தோன்றியிருக்கிறது என்பது அதைவிடப் பெரிய வியப்பு. அவற்றின் கூறுமுறையாலேயே அவை கவிதை என்று அவனுக்குத் தெரிகிறது. கவிஞன் என்று அவரை எண்ணித் தொடர்ந்து படித்துக் கொண்டிருந்திருக்கிறவர்களுக்கே அவை கவிதையாகின்றன. ’சிறு தெய்வங்களை சுலபத்தில் வசியப்படுத்தி விடலாம்
பெருந்தெய்வம்தான் பிடிகொடுத்துத் தொலைக்காது’ என்னும் வரியை கவிதை என ஓர் எளிய வாசகன் எண்ணுவதும் அரிதான ஒரு நிகழ்வு.விக்ரமாதித்யன் தமிழில் நவீனக்கவிதையுலகு என திரண்டுள்ள மொழிச்சூழலை [ஒரு சிறு குமிழிதான் அது] கடந்து தமிழில் அடிப்படை அறிவும் வாழ்க்கையனுபவமும் கொண்ட எவரும் வாசிக்கத்தக்க, உள்வாங்கக்கூடிய ஒருவராக இருக்கிறார். தமிழ் நவீனக் கவிஞர்களிடையே விக்ரமாதித்யனிடம் மட்டுமே இப்பண்பு இருக்கிறது.
அவருடைய கவிதைகள் ஒழுக்கானவை, செறிவற்றவை என்னும் எண்ணம் நவீனக் கவிச்சூழலில் உள்ளது. செறிவு என்பதைக் கூறும்முறையில் மட்டுமல்ல உறுபொருளிலும் நாம் தேட இயலும். விக்ரமாதித்யனின் கவிதையில் செறிவு என்பது அவருடைய உளநிலையில் மட்டுமே உள்ளது. அவருடைய கூறுபொருள் எப்பொழுதுமே உலகியல் சார்ந்தது, நேரடியானது. அவருடைய மொழியோ பேச்சுவழக்குக்கு அருகே நிற்பது, வெளிப்படையானது. அக்கவிதைகள் வழியாக அவர் சுட்டும் பொருள் மட்டுமே செறிவானது. அவருடைய சொந்த வாழ்வனுபவங்களால் அடிக்கோடிடப்பட்டது அது. அவற்றை செறிவாக்கி, கவிதையாக்குவது அவருடைய ஆளுமை மட்டுமே.
லக்ஷ்மி மணிவண்ணன் ஒருமுறை உரையாடும் போது சொன்னார். அவருடைய கவிதைகளைப் பிறிதொருவர் எழுதியிருந்தால் அவை கவிதைகள் ஆகாது என்று. கவிதையை எழுதிவிட்டு அதனருகே நின்றிருக்கிறார் அவர். கவிதையைத் தன் வாழ்க்கையால் சூழ வளைத்து ஒரு பின்புல உலகை உருவாக்குகிறார். கவிதைக்கு விரிந்த அனுபவப் புலத்தை தன் வாழ்க்கையால் அவர் அளிக்கிறார். ஆகவே அவருடைய கவிதை என்பதனால் மட்டுமே அவை கவிதைகள்.
[மேலும்]
விஷ்ணுபுரம் விருது, கடந்த ஆண்டு…
சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்கு சென்ற 2020க்க்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது. விஷ்ணுபுரம் விருதுகளிலேயே கொண்டாட்டம் இல்லாமல் நிகழ்ந்தது இதுதான். கோவிட் கட்டுப்பாடுகள் முழுமையாகவே கடைப்பிடிக்கப்பட்டன. மதுரையில் ஒரு ஓட்டல் அறையிலேயே விருதுவிழா. ஆனால் அறைகொள்ளாமல் நண்பர்கள் வந்திருந்தனர். அவர்களை இன்னொரு அறையில் நிற்கவைத்தோம். சுரேஷ்குமார இந்திரஜித் சுவாசநோய் கொண்டவர். ஆகவே கோவிட் பற்றி மிக எச்சரிக்கையாக இருந்தோம். அறை அவர் வருவதற்கு முன்பு முற்றாக தூய்மை செயப்பட்டது
விஷ்ணுபுரம் நண்பர் ராம்குமார் ஐ.ஏ.எஸ் [மேகாலயா ] விருதை வழங்கினார். மற்றபடி ஆவணப்படம், கட்டுரைகள் நூல்வெளியீடு எல்லாமே முறையாக நிகழ்ந்தன. சொல்லப்போனால் அறைக்குள் நல்ல ஒரு கருத்தரங்கமும் நடைபெற்றது.
விஷ்ணுபுரம் விழா 2020- கடிதங்கள்
நுண்கதைசொல்லியும் தொடர்பவர்களும்
சுரேஷ்குமார இந்திரஜித் ஆவணப்படம்
குறைவாகச் சொல்லும் கதைசொல்லிக்கு வாழ்த்து
சுரேஷ்குமார இந்திரஜித்- அகதைசொல்லியின் பாதை-1 சுரேஷ்குமார இந்திரஜித்- அகதைசொல்லியின் பாதை 2எழுதுக!
“எல்லா தலைமுறையிலும் இளம் வாசகர்களும் எழுத்தாளர்களும் அடிப்படையான ஐயங்களை அடைந்துகொண்டே இருக்கிறார்கள். வாசிப்பின் தடைகளைப்பற்றி, வாசிப்பில் இருக்கும் வழிச்சிக்கல்கள் பற்றி அவர்கள் உசாவுகிறர்கள். இளம் எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தின் இயல்புகள் குறித்தும் எழுத்தாளனாக வாழ்வதைப்பற்றியும் குழப்பம் கொண்டிருக்கிறார்கள். எழுத்து ஓர் இலட்சியவாதம், எந்த இலட்சியவாதமும் அதற்குரிய ஐயங்களும் தயக்கங்களும் கொண்டது.
எனக்கு அவ்வண்ணம் எழுதப்பட்ட கடிதங்களுக்கு நான் அளித்த பதில்கள், அவற்றினூடாக நிகழ்ந்த விவாதங்களின் தொகுதியே இக்கட்டுரைகள். இவற்றில் எழுத்திலும் வாசிப்பிலும் நுழைபவர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பேசப்பட்டுள்ளன.”
~ எழுத்தாளர் ஜெயமோகன்
இளம் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களுக்கும், எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கும் இடையே நிகழ்ந்த கடிதவழி உரையாடல்களின் சிறுதொகுதியே ‘எழுதுக’ என்னும் இப்புத்தகம். இத்தனை ஆண்டுக்காலம் எழுத்துலகிலும் விமர்சனவுலகிலும் தன் பார்வையைத் தொடர்ந்து பதிவுசெய்தும், இலக்கியவோட்டத்தை பொறுமையுற அவதானித்தும் வருகிற ஓர் மூத்த எழுத்தாளர், தன் சமகால இளைய மனங்கள் எழுத்தின் மீது கொண்டுள்ள படைப்புத்தயக்கங்களை நீங்கியெழ இந்நூலின் கட்டுரைகள் நிச்சயம் உதவக்கூடும்.
வருகிற டிசம்பர் 25, 26 தேதிகளில் கோவையில் நிகழவுள்ள விஷ்ணுபுரம் இலக்கியவட்ட விருதளிப்பு நிகழ்வில் இப்புத்தகம் வெளியீடு கொள்கிறது. தன்னறம் நூல்வெளியின் ஒவ்வொரு புத்தகத்திற்கும் அகமார்ந்த துணையிருப்பை நல்கும் அத்தனை மனங்களையும் ஒருசேர இக்கணம் வணங்கிக் கொள்கிறோம். எழுதத் துவங்கிற, எழுத்தின்வழி துலங்க விரும்புகிற எல்லோருக்குமான திசைச்சொற்களை தன்னகத்தே கொண்டுள்ளது இந்நூல்.
~
கரங்குவிந்த நன்றியுடன்,
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

