Jeyamohan's Blog, page 867
December 13, 2021
பிழைத்தலும் வாழ்தலும்!
விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்
[விஷ்ணுபுரம் விருந்தினர் படைப்புகளை படிக்க https://vishnupuramguests2021.wordpress.com/]
என் தம்பி மகள் சாம்பவி என் இரு மகன்களுடனே தான் வளர்ந்தாள்; மூவருக்கும் அடிக்கடி வாய்ச்சண்டை, கைச்சண்டை, கால் சண்டையெல்லாம் நடக்கும். அப்போதுதான் பேச கற்றுக் கொண்டிருந்த சாமபவி, கோபம் எல்லை மீறி போகும் போது முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு அவளுக்கு தெரிந்த கிண்ணம், வெள்ளைப்பூண்டு, சாதம் போன்ற வார்த்தைகளை ’’போடா கிண்ணம், போடா பருப்பு சாதம்’’ என்று பல்லை கடித்துக்கொண்டு வசவைப்போல சொல்லுவாள். வார்த்தைகளின் அர்த்தம் தெரியாவிட்டாலும் சொல்லும் விதத்தில் அவற்றை கெட்ட வார்த்தை ஆக்கிவிடுவாள் காளியின் திருவண்ணாமலை கதை இப்படி பழசை நினைவுபடுத்தி வாசிக்கையில் புன்னகைக்க வைத்துக் கொண்டே இருந்தது.
வசவை சர்வசாதாரணமாக புழங்கும்,தெலுங்கு பேட் வேர்ட்ஸ் இணையத்தில் தேடும் ரஙகன் ’’டேய் தோத்ரம்’’ என்று நிலைக்கண்ணாடி முன் நின்று நாலு முறை சொல்லிப்பார்த்து அது மோசமான வார்த்தை தான் என்று உறுதி செய்து கொண்டு அத்தனை நாட்கள் புத்தரால் கொடுக்க முடியாத நிம்மதியுடன் உறங்கச்செல்கிறான்
இந்த கதையில் மட்டுமல்ல பழனியிலிருந்து பராசக்தி வரை பத்துக்கதைகளிலும் நமக்கு தெரிந்தவர்களும் நம்மை தெரிந்தவர்களும் நாமும்தான் இருக்கிறோம். கதைமாந்தர்களின் அவஸ்தைகள், தடுமாற்றங்கள், குடும்ப சிக்கல்கள், பணியிட பிரச்சனைகள் வழியே காளி பிரசாத் காண்பிப்பது நம் அனைவரின் வாழ்வைத்தான். வாசிப்போர் கடந்து வந்திருக்கும் பாதைகளில்தான் கதைகள் அவர்களை அழைத்துச் செல்கின்றன.
பழனியிலிருந்து பராசக்தி வரை கதைமாந்தர்கள் வேறு வேறு பெயர்களில் இருக்கும் நாமறிந்தவர்கள் என்பதாலேயே கதைகள் மனதிற்கு அணுக்கமாக விடுகிறது.. நாம் சந்தித்தவர்களும் கடந்துவந்தவர்களும் இனி சந்திக்க விரும்பாதவர்களுமாக கதைகள் நமக்கு பலரை நினைவுக்கு கொண்டு வருகிறது.
அத்தனை அடாவடி செய்த பழனி, 50 ரூபாய் பெறுமானமுள்ள ஸ்பேர் காயிலை திருடி மாட்டிக்கொண்டதை, அவன் குடும்பம் சிதைந்ததையெல்லாம் கேட்கையில் ஃபேக்டரி இயந்திரங்களின் சத்தத்தில் மண்டை கனக்கும் கதை சொல்லி, பழனி நல்ல நிலைமையில் வீடும் காரும் குடும்பமுமாக இருப்பதை கேட்டபின்பு இரைச்சல் உண்டாக்கிய தலைவலிக்கென போட்டிருந்த தொப்பியை கழட்டிவிட்டு பறவகள் கூடடடையும் சத்தங்களை கேட்டபடி, தூரத்தில் சிறு வெளிச்சம் தெரியும் கோவில் வரை நடக்கும் கதை முடிவு பெரும் ஆசுவாசத்தையும் நிறைவையும் கொடுக்கிறது
எல்லாக்கதைகளிலும் மனிதர்களின் இயல்புகளை அப்படியப்படியே ஏற்றங்களும் இறக்கங்களும் அல்லாடல்களுமாக இயல்பாக காட்டுகிறார் காளி. எதையும் உன்னதப்படுத்தாமல், எதையும் உச்சத்துக்குகொண்டு செல்லாமல் சொல்லப்பட்டிருக்கும் கூறுமொழி நம்மையும் இயல்பாக கதையோட்டத்துடன் கொண்டுபோய், நம்மையறியாமலே கதைகளுடன் நம் வாழ்வை தொடர்புபடுத்தி பார்க்க வைத்துவிடுகிறது
. பகடிகள் வாய்விட்டு சிரிக்கும் படி இல்லாமல், முகம் மலரும்படி இருக்கிறது, ஆட்டோ இடித்த தகராறு, ரின்ஸ் ஸ்பெனரரால் பழனி அடித்ததும் முடிவுக்கு வருவதும், ஆட்டோக்காரர் தலையை மூடி, அவரே ஆட்டோவை ஓட்டிபோய் அட்மிட் ஆவதும் அப்படியானவற்றில் ஒன்று.
அதைப்போலவே திருவண்ணாமலையின் ’’திருச்சி டம்ப்ளரு’’ ஆர்வலர் கதையில் சம்பத் சொல்லும் குறள், ஷாக் அடிக்கும் போதும் பியூஸ் போகும் சிரித்துக் கொண்டிருக்கும் புத்தர், ’அன்னிக்கு அம்மா நாப்பதுன்னு சொல்லும்பொது ஒன்னும் பேசாம பெண்ணின் இடுப்பை பார்த்துட்டு இருந்தீங்க ’என்று மாப்பிள்ளையிடம் மனசுக்குள் கேட்கும் நீலகண்டன் என்று இயல்பான சின்ன சின்ன பகடிகள் கதை வாசிப்பை கூடுதல் சுவாரஸ்யமாக்குகின்றன
கதைகளில் சொல்லப்படும் சிக்கல்கள், பரிதவிப்புகள், மீள முடியாத பிரச்சினைகளுக்கு மத்தியிலும், கதை மாந்தர்கள் அவர்களுக்கான் அறத்தை மீறாமல் அல்லது மீற முடியாமலிருப்பதையும் காளி காட்டுகிறார். அடுத்தவருக்கு கெடுதல் நினைக்காத பழனியின் கதை சொல்லி, ஐந்து வேளை தொழுவதை கடைப்பிடிக்க முடியாவிட்டாலும், அன்னைபன்றிக்கு கேரட் போடும், பாம்புக்கு பாவம் பார்க்கும் குத்தூஸ்,, ’’அநாதைபொணமா ரோட்டில் கிடக்காம என்புள்ளைய வீட்டில் கொண்டு வந்து சேத்திட்டியெப்பா’’ என்று ரவியிடம் கதறும் ராஜாவின் அம்மா, எத்தனையோ அலைச்சலுக்கு பிறகு,அசட்டு நம்பிக்கையில் தேடிப்போன ஒருவரிடம் வேண்டியது கிடைக்காமல், அந்த கிஃப்ட் பாக்ஸில் என்ன இருக்கிறதென்றும் தெரியாமல் வீடு வந்து, கற்கள் பதிக்கப்பட்ட வெள்ளி மரக்காலை கன்னத்தில் பளீர் பளீரென அடி வாங்கிய பெண்ணுக்கு சிரித்தபடி கொடுக்கும் கதை சொல்லி, வண்டியிலிருந்து இறக்கி விடுகையில் தனியாக இன்னும் ஒரு ஐநூறு கொடுக்கும் இருதயம் அண்ணன், என்று நெஞ்சில் ஒளி கொண்டவர்கள் கதை முழுக்க வருகிறார்கள்.
இருப்பை தக்க வைத்துக்கொள்ள இடுப்பை நெளித்து ஆடும் அழகு ராணியும், கான்கிரீட் மூடியை மாற்றிய ஸ்ரீஜியும் ஒரே திரையில் தெரிவது, ஸ்கூட்டர் கேவலை சொல்லியிருக்கும் இடம், கேபிள் சுருளையும், கருமையான மலைப்பாம்பில் படுத்திருந்த அழகனையும் கதைசொல்லி பார்க்கும் கணங்கள் என காளி ஒரு கதாசிரியராக செல்லப்போகும் தூரங்களை காட்டும் இடங்களும் உண்டு.
20 வருடங்களுக்கு முன் இருந்த, கோவிலின் பெயரும், கோபுரங்களும், புதிய டைல்ஸும், கடைகளும் எல்லாம் மதிப்பு கூடி மாறிவிட்டிருக்கையில், ரோஜாவையும் தாமரையையும் கொடுத்துவிட்டு பஞ்சாமிர்தத்தை வாங்கி வாயில் இட்டுக்கொள்ளும் குருக்களும், நாப்பது பவுன் நகையை வாங்கிக்கொண்டு வீட்டை சகோதரனுக்கு கொடுத்துவிட்ட நீலகண்டனுமாக சன்னதியில் உமையுடனும் ஈஸ்வரனுடன் நிற்பதில் முடியும் கதையான பூதம் இந்த தொகுப்பில் எனக்கு மிகப் பிடித்தமான கதை
கழுத்தில் சங்குபுஷ்ப சரமும் உதட்டில் ஒரு சொட்டு தேனுமாக ஈசனை நீலகண்டன் பார்க்கும் காட்சிச் சித்தரிப்பு மனதுக்கு அளித்த சித்திரம் அற்புதமாக இருந்தது.
ஸ்பேனரும் நட்டும், போல்ட்டும், ஸ்பேர் காயிலுமாக கதைக்களம் காளியின் அனுபவக்கதைகள் இவை என எண்ண வைக்கிறது. கதைமாந்தர்களின் இயல்பை விரிவாக சொல்லுவதிலேயே கதையையும் கொண்டு போவதும் சிறப்பு. மொழிநடையும் சரளம்.
புதிய இடங்களில் தங்களை பொருத்திக்கொள்ள முடியாமல் தடுமாறுகிறவர்கள், நிலுவைத்தொகை வாங்கமுடியாமல் அல்லாடுபவர்கள். இளைய தலைமுறையினரிடம், இழந்த தன் இருப்பை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள போராடுபவர்கள், தேடியவை கிடைக்காமல் ஏமாறுபவர்கள். ஜான் ஏறினால் முழம் சறுக்கி விழுபவர்கள், குற்ற உணர்வு கொண்டவர்கள், சிற்றின்பத்திலிருந்து பேரின்பத்தை நோக்கி செல்பவர்கள், குடிகாரர்கள். திருடர்கள். அடிப்பவர்கள், அடிவாங்குபவர்கள் என கதைகளில் வரும் மாந்தர்களின் பிழைத்தலுக்கான போராட்டங்களையும், அவற்றிற்கிடையிலும் அவர்களுக்கு ஆத்மார்த்தமாக வாழக்கிடைக்கும் அரிய கணங்களுமாக கதைகள் மிக சிறந்த நிறைவான வாசிப்பனுபவத்தை அளிக்கின்றன.
பிழைத்தலும் வாழ்தலும்!
லோகமாதேவி
விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத்
விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்
விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன்
விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை
விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார்
விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன்
சூல்-கதைகளால் தொடுக்கப்பட்ட கதை
அன்புள்ள ஆசிரியருக்கு,
எழுத்தாளர் சோ.தர்மனின் தூர்வை நூலை வாசித்திருந்ததால், சாகித்ய அகாடமி விருது பெற்ற அவரது மற்றொரு நாவலான “சூல்” நூலை தயக்கமின்றி இரண்டு வருடங்களுக்கு முன்பே வாங்கிவிட்டேன். விருது பெற்றதைப் பற்றிய செய்திகளின் போது சூல் கொண்ட தாய்போல இருந்த கண்மாய் எப்படி வரண்டுபோனது என்பதைப் பற்றிப் பேசும் நாவல் என திரும்பத் திரும்ப கூறப்பட்டதில் அதன் பேசுபொருளில் சிறிய அலுப்பு ஏற்பட்டு வாசிக்காமலேயே இருந்தது. வேறு நூல்களை எடுக்கும் ஒவ்வொரு முறையும் என்னை எப்போது வாசிப்பாய் என இந்நூல் ஏக்கமாய் கேட்பதுபோலவே இருக்கும். தயக்கத்தை உடைத்து நூலை வாசிக்க ஆரம்பித்தபின்தான் தள்ளிப்போட்டது தவறென்று புரிந்தது.
“சூல்’ என்ற இந்நூல் நிறை கண்மாயைப் பற்றிக் கூறுவதென்பது அந்தக் கண்மாயை மட்டுமல்ல அதை அண்டியிருக்கும் இருளக்குடி என்ற ஊரையும். ஊரைப் பற்றி என்றால் ஊரில் வாழும் மக்களையும். மக்களின் வாழ்வை பலப்பல கதைகளின் வழியே கூறுகிறார் சோ.தர்மன்.
கி.ராவின் கோபல்ல கிராமம் போல, ஒரு ஊரில் வாழும் மக்களின் வாழ்வைக் கூறும் நாவல்கள் பல உண்டு. ஆனால் அவற்றிலிருந்து இந்நூல் மாறுபடுவது அதன் கூறு முறையினால். ஒன்றுடன் ஒன்று இணைந்தும் விலகியும் நிற்கும் வெவ்வேறு வகையான கதைகளின் வாயிலாக இருளக்குடி மக்களின் வாழ்வைக் காட்டுகிறார் ஆசிரியர். இன்றும் நம் கிராமங்களில் புழங்கும் கதைகளை வெறும் கதைகள்தானே என எளிமையாகக் கடப்பதை தவறென சுட்டிக்காட்டி, இம்மாதியான கதைளின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார்.
இயல்பாக நடந்தது, புனைவுடன் கூடியது, புராணக் கதை, தொன்மக் கதை, வரலாற்றுக் கதை என எத்தனை விதக் கதைகளுண்டோ அத்தனை வகைக் கதைகளையும் கூறுகிறார். அய்யனாரப்பன் தன்னால் தனியாக காவல் காக்க முடியாததால் கண்மாயின் மடைக்குடும்பனை தன்னிடம் அழைத்துக் கொண்டு அவனை கருப்பன் என்ற சாமியாக தன்னருகிலேயே அமர்த்திக் கொள்கிறான். சற்று யோசித்தால் அய்யனாரப்பனே முன்பு காவல்காரனாக இருந்தவன்தான் என்பது புரியும். இதேபோல கள்ளன் சாமி, குரவன் சாமி என மக்களால் வணங்கப்படுபவர்களின் கதைகளையும் கூறுகிறார். இந்த ஒவ்வொரு கதையுமே அவ்வூரில் வாழ்ந்தவரின் வாழ்க்கை.
வெற்றிலை கொடிக்கால் போட்டு விளைவித்த மகாலிங்கம் பிள்ளை பொய் சொல்லி தொழில் ரகசியம் அறிந்து வந்ததால் அகால மரணமடைகிறார். பின்பு அமைக்கப்படும் கொடிக்காப்பிள்ளை கோவிலில் சாமியாக இருந்து வயல்களை நாசமாக்கும் எலிகளையும் பூச்சிகளையும் அழித்து மக்களுக்கு அருள் பாலிக்கிறார்.
மனிதர்களின் சூல்களுக்கு மட்டுமில்லாமல் கால்நடைகளின் சூல்களையும் காத்து ரட்சிக்கும் மாதாயி மற்றும் உளிக் கருப்பனின் கதை, குமரிகளை ஏமாற்ற எண்ணும் குமாரர்களை நல்வழிப்படுத்த ஊருக்குள் நிலைத்துள்ள கதையாகும்.
எருமைகளையும் மரங்களையும் வளர்த்து, இருளக்குடி மக்களுக்கு மட்டுமில்லாமல் அந்த ஊரைக் கடந்து செல்பவர்களுக்கும் மோரும் நிழலும் தந்து குளிர்விக்கிறாள், அவ்வூர் மக்களுக்கு வாழும் தெய்வம் போல் விளங்கும் பிள்ளைப் பேறில்லாத சித்தம்மாள் என்கிற கொப்புளாயி.
மண் கலயங்களை உருவாக்கித் தரும் செண்பக வேளாளர், தனது தச்சு வேலை மூலம் விவசாய ஆயதங்களை செம்மை செய்து தரும் தங்கையா ஆசாரி போன்றவர்களின் கதைகளைக் கூறுவதன் வழியே இருளக்குடியின் வாழ்க்கை முறையை துலங்கச் செய்கிறார் ஆசிரியர்.
அரண்மனையில் பணியாற்றிய நங்கிரியானின் கதை, இக்காலத்திலும், கடமை தவறும் அரசு ஊழியர்கள் எண்ணிக் கலங்கும் வண்ணம் உரைக்கப்பட்டுள்ளது. குற்றம் எது பாவம் எது என்பதைப் பற்றிய விளக்கமும், எதற்கு எது மாதிரியான தண்டனைகள் போன்ற விவரங்களும் ஆசிரியரின் வாழ்வனுபவத்தை உணர்த்துகிறது. பாவத்தைப் போக்க வாழ்த்துகளைப் பெற்றாக வேண்டுமென்ற பாடம் நிறைவளிக்கும் வண்ணம் உள்ளது. பாவத்தினால் நங்கிரியானுக்கும் அவன் பிள்ளைக்கும் பாதகம் விளைகிறது. பாவத்திலிருந்து விடுபட நங்கிரியான் இயற்றும் பணி அவனுக்கு மட்டுமில்லாது இந்தப் பூமிக்கே பலன் தருவதாக அமைவது சிறப்பு.
பங்காளியின் மேல் உண்டான காழ்ப்பில் ஊருக்கும் ஊரிலிருக்கும் அத்தனை உயிர்களுக்கும் கேடு செய்யும் சித்தாண்டி மற்றும் அவன் மனைவி மயிலின் கதை மனதை கரைய வைக்கிறது. கோபத்தில் செய்யும் காரியம் எப்படி சரி செய்யமுடியாத பாவமாக உருமாறுகிறது என்பதை இந்தக் கதை காட்டுகிறது.
பட்டாளத்திலிருந்து விடுமுறைக்கு வந்த பயனார்ரெட்டியார் தன் வேட்டைத் துப்பாக்கியால் பயிரை மேய்ந்த ஆட்டைச் சுட்டுக் கொள்வதையும், அதனால் இரண்டு ஊர்களுக்குள் நடக்கும் பிரச்சனைகளையும் அதன் முடிவையும் விவரிக்கும் கதை மிக சுவாரசியமாக விவரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கதையிலும் முன்னிறுத்தப்படும் பாவம் புண்ணியம் மற்றும் அறம் பற்றிய கருத்துகள் ஆசிரியர் சமூகத்திற்கு சொல்ல விரும்பியவை என்று தெளிவாகவே புரிகிறது. இதில் தவறேதும் இல்லை. ஆயினும், பண்டாரத்தான் பாத்திரம் கூறும் எதிர்கால நிகழ்வுகள் குறித்த அனுமானங்கள் துருத்திக் கொண்டு தெரிவதையும் குறிப்பிட வேண்டும்.
காக்கை ஏன் தலையைச் சாய்த்துப் பார்க்கிறது என்பதற்கு புராணக்கதை போன்று உலவும் கதையொன்றைக் கூறுகிறார். மிக நீண்ட, அனுமன் முனிக் கதை ஒன்றும் உள்ளது. முனியை சங்கில் அடைத்து, கொண்டு செல்லும் மாந்திரீகன் குஞ்ஞான் சந்திக்கும் பிரச்சனைகள் மிக விரிவாகக் கூறப்படுகிறது.
இந்நாவலில் தொடர்ச்சியாக வரும் கதை, கட்டபொம்முவுக்கு உதவி செய்ததால் பரிசாக பொன்னாபரணங்களைப் பெறும் பனையேறி எலியன் மற்றும் லாடம் கட்டும் ஆசாரி பிச்சையின் வாழ்க்கைதான். பொன் நகைகளை புதைத்து வைத்து காவல் காப்பதும் அதை அவர்களின் வாரிசுகளும் தொடர்வதும் நாவலின் பெரும் பகுதியாக வருகிறது. இவர்களின் வாரிசுகள் சுதந்திர இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தின் மூலம் கிராமத்தை கட்டுப்படுத்துவதையும் அதன் மூலம் கிராமத்தில் ஏற்படும் விளைவுகளையும் கூறுவதோடு நாவல் முடிவடைகிறது.
இந்தக் கதைகள் எல்லாமே தனித்தனியாக இருந்தாலும் இருளக்குடி என்ற ஒரு சரத்தால் பிணைக்கப்பட்டுள்ளது. ஒரு கதையில் ஆரம்பித்து அந்தக் கதைக்குள் மற்றொரு கதை திறப்பதும், உள்ளேயுள்ள கதை முடிந்தபின் முதல் கதை தொடர்ந்து, பின் முடிவதும் நல்ல வாசிப்பின்பத்தைத் தருகிறது.
கட்டப்பொம்முவின் கதை, ரெயில் வருவது போன்ற வரலாற்றுத் தகவல்களில் காலக் குழப்பம் தெரிந்தாலும், ஊரில் உள்ள பெரியவர் தன் நினைவில் இருந்து கூறும் கதையில் காலம் முன் பின் மாறி வருவதுபோல என்று எடுத்துக் கொள்ளலாம் என்றே எண்ணுகிறேன்.
மாந்திரீகன் குஞ்ஞானின் கதைதான், நீண்டு ஊருக்கு வெளியியேயும் சென்று நிகழ்வது சற்று விலக்கத்தை அளிக்கிறது. நாவலின் தொடக்கத்தில் இருந்து வரும் நிதானம் மாறி, நாவலின் கடைசிப் பகுதியின் கதையோட்டம் மிக வேகமானதாக தோன்றுகிறது. ஆனாலும் இத்தனை நூற்றாண்டுகள் கால்நடையாகவும் மாட்டு வண்டியாகவும் இருந்த மக்களின் வாழ்க்கைப் பயணம் கடந்த ஐம்பதாண்டுகளில் மிக வேகமானதாக மாறியுள்ளதைப் போல கதாசிரியரும் கதையை விரைவு படுத்தியிருப்பதாகக் கொள்ளலாம். ஆனாலும் கிராமங்களில் நடந்த அந்தச் சிதைவு குறுகிய காலத்தில் நிகழ்ந்துவிட்டது என்பதும் யாராலும் மறுக்கமுடியாத உண்மைதானே.
விதவிதமான கதைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து ஊர் என்ற பொதுமைக்குள் தொடுக்கப்பட்ட பூமாலை போல அமைந்துள்ள சூல் நாவலை வாசித்து முடிக்கும்போது அது கூறும் அழிவின் தோற்றத்தை முழுமையான உணர முடிகிறது. கி.ராவைப் போன்ற நல்ல கதை சொல்லி என சோ.தர்மனை தயங்காமல் கூறலாம்.
கா. சிவா
சூல் -ஒரு கடிதம்விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத்
விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்
விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன்
விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை
விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார்
விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன்
விஷ்ணுபுரம் விருந்தினர் -7, ஜா தீபா
விஷ்ணுபுரம் விருந்தினர்-8, சோ.தர்மன்
December 12, 2021
மரக்கார் – இன்றைய வரலாற்றுப்பார்வை.
மரக்கார்- அரபிக்கடலின் சிம்ஹம் படம் நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒன்று. ஏனென்றால் இதன் ஒரு வடிவை நான் எழுதியிருக்கிறேன். இன்னொரு தயாரிப்பாளர் மம்மூட்டியை வைத்து இதை எடுப்பதற்காக என்னை அணுகினார். ஒரு பொது வரைவை உருவாக்கினோம். அப்போது நிறைய யோசித்தோம். அதன் பின் அப்படம் கைவிடப்பட்டது.
பிரியதர்ஷன் இயக்கிய இப்படம் ஒரு காட்சிவிருந்து என்பதை மறுப்பதற்கில்லை. ஒரு கடல் கொந்தளிப்புக் காட்சி பிரமிப்பூட்டும்படி எடுக்கப்பட்டுள்ளது. அன்றைய கோழிக்கோட்டின் [அல்லது பேப்பூர்] நகரச் சித்தரிப்பு, கடைசிப் போர்க்காட்சி எல்லாமே மிகச்சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் படம் பொதுவாக எதிர்மறை விமர்சனங்களையே பெற்றுவருகிறது. கேரளத்தில் வெற்றிப்படம்தான். வெளியே பெரிய கவனத்தை பெறவில்லை
பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டின் இந்திய வரலாறு மிகச்சிக்கலானது. பேரரசுகள் அழிந்து, சிறுசிறு ஆட்சியாளர்கள் அவர்களுக்குள் போரிட்டுக் கொண்டிருந்த காலம். அதற்குள் மதப்பிரச்சினைகள், குலப்பிரச்சினைகள். ஐரோப்பியர் உள்நுழைந்தது அந்த அராஜகச் சூழலைப் பயன்படுத்தித்தான். அது ஓர் வரலாற்று விரிசல். அதை அவர்கள் பிளந்து நுழைந்தனர். அக்காலச் சிக்கல்களை ஆய்வாளர்களே எளிதில் புரிந்துகொள்ள முடியாது.
அன்றைய சிற்றரசர்களுக்கு ஐரோப்பியரின் ஆற்றல், பின்னணி பற்றிய புரிதல் இல்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை. ஏனென்றால் அப்போது ஐரோப்பியருக்கே நாடுபிடிக்கும் எண்ணம் இல்லை.வாய்ப்புகளைக் கண்டபிறகே அவர்கள் அதில் ஈடுபட்டனர்.
உள்ளூர் ஆட்சியாளர்கள் ஒவ்வொருவருக்கும் உடனடி எதிரிகள் இருந்தனர். உதாரணமாக தென்னகத்தை ஆட்சி செய்த விஜயநகரம் தக்காண சுல்தான்களால் அழிக்கப்பட்டது. அழிந்துபட்ட விஜயநகரத்தின் தளபதிகள் தனித்தனி நாயக்கர் ஆட்சிகளாக நீடித்தனர். தக்காண சுல்தான்களின் தளபதிகளும் குட்டிக்குட்டி நவாபுகளாகவும் சுல்தான்களாகவும் தொடர்ந்தனர். அவர்களுக்குள் கடும் போர் நிகழ்ந்துகொண்டிருந்தது. வரலாற்றுரீதியான அவநம்பிக்கையும் கசப்புகளும் இருந்தன. அவர்கள் ஐரோப்பியரை பொது எதிரியாகக் காண எந்த வாய்ப்பும் இருக்கவில்லை.
விஜயநகரத்தின் மிச்சங்களாக எஞ்சிய நாயக்கர் அரசுகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குலம். அவர்களில் எவர் பிறரை வென்றனரோ அவர்களே அரசர்களாயினர். ஆகவே அவர்களிடையே கடும் சண்டைகள் நடந்தன. குலங்களே அழிக்கப்பட்டன. மதுரை நாயக்கர்கள் தஞ்சை நாயக்கர்களையும் செஞ்சி நாயக்கர்களையும் அழித்தனர். சித்ரதுர்க்கா, அனந்தபூர் ,காளஹஸ்தி, பேலூர் எல்லாம் தனித்தனியான நாயக்கச் சிற்றரசர்களால் ஆளப்பட்டன. அவர்கள் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டே இருந்தனர்.
தெற்கே விஜயநகரம் இஸ்லாமிய ஆதிக்கத்தை எதிர்த்து நின்றதுபோல வடக்கே மராட்டிய பேரரசு முகலாயர்களை எதிர்த்து நின்றது. ஆனால் மராட்டியர் படைகொண்டு வந்து தெற்கே இருந்த நாயக்கர்களின் அரசுகளை சூறையாடி கப்பம் பெற்றனர். நாயக்கர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையே ஓயாத போர் நிகழ்ந்தது. மராட்டியர் தஞ்சையையும் வடதமிழகத்தையும் கைப்பற்றிக் கொண்டனர்.
இதைப்போலவே இஸ்லாமிய ஆட்சியாளர்களும் ஒருவரோடொருவர் போரிட்டனர். முகலாயர்களுக்கும் தக்காணத்துச் சுல்தான்களுக்கும் தொடர் போர்கள் நிகழ்ந்து பாமினி சுல்தான்கள் அழிந்தனர். தக்காணச் சுல்தான்களில் இருந்து சிதறி உருவானவர்களான ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் ஹைதராபாத் நவாபுகளுடன் போரிட்டனர். ஆற்காடு நவாப்களை தோற்கடித்தனர். தக்காணத்தின் பாமினி சுல்தால்களின் எச்சமாக மிஞ்சிய இஸ்லாமிய குட்டி நவாபுகள் ஒவ்வொருவரும் அவ்வாறு தங்களுக்குள் போரிட்டனர்.
இச்சூழலில் ஒரு தரப்பாக உள்ளே வந்தவர்கள்தான் ஐரோப்பியர். அவர்களின் அக்கால நோக்கம் முதன்மையாக வணிக ஆதிக்கம் மட்டுமே. குறிப்பாக கடல் ஆதிக்கம். இந்திய சிறிய அரசர்களுக்கு கடலாதிக்கம் பெரிதாகப் படவும் இல்லை, அவர்கள் துறைமுகத்திற்குச் செல்லும் பாதைகளில் சுங்கம் வசூலிப்பதே போதும் என்றிருந்தனர். ஐரோப்பிய வணிகர்கள் அவர்களின் நாட்டுக்கு வணிகச்செல்வத்தை கொண்டுவந்தனர். அவர்களுக்கு நவீன ஆயுதங்களை விற்றனர்.
ஆகவே இந்தியாவின் சிறிய அரசர்கள் ஐரோப்பியர்களை பயன்படுத்திக்கொண்டு தங்கள் ஆயிரமாண்டுக்கால எதிரிகளை தோற்கடிக்கவே முயன்றனர். அதுவே இயல்பானது. அவர்களில் சிலர் போர்ச்சுக்கல் காரர்களுடன் சேர்ந்துகொண்டனர். சிலர் பிரெஞ்சுக்காரர்களுடனும் ஆங்கிலேயர்களுடனும் சேர்ந்துகொண்டனர். அந்தந்த நேரத்து அரசியல் கணக்கு, அவ்வளவுதான்.
அன்று எந்தச் சிற்றரசருக்கும் எந்த நிலத்தின்மேலும் முழுமையான ஆதரவு இருக்கவில்லை. ஏனென்றால் எவரும் தொன்மையான குல அடையாளம் வழியாகவோ அல்லது ஐதீகநம்பிக்கைகள் வழியாகவோ அரசுரிமை கொண்டவர்கள் அல்ல. அவர்கள் அனைவருமே முந்தைய பேரரசுகளுக்கு கீழே ஒரு சிறிய ஆட்சியாளராக இருந்தவர்கள்தான். ஆகவே எந்த நிலப்பிரபுவும் அரசரை தங்களுக்கு மேல் என முழுமையாக ஏற்கவில்லை. ஒவ்வொரு நிலப்பிரபுவும் வாய்ப்பு கிடைத்தால் தனியாக பிரிந்துபோக நினைத்தனர். தங்களைப்போன்ற மற்ற நிலப்பிரபுக்களுடன் பூசலிட்டனர்.
கோழிக்கோடு சாமூதிரியும் திருவிதாங்கூர் அரசரும் சேரன் செங்குட்டுவனின் வம்சத்தவர்கள் என தங்களை நிறுவிக்கொள்ள முயன்றனர். திப்பு சுல்தான் மணவுறவுகள் வழியாக தன்னை பாமினி சுல்தான்களின் ரத்தம் என நிறுவ பாடுபட்டார். ஆனால் எவரும் அவர்களை அவ்வாறு முழுமையாக ஏற்கவில்லை. தங்களுக்கு வாய்ப்பு வருமென காத்திருந்தனர்.
இந்த குழம்பிய குட்டையில் மெல்லமெல்ல மேலெழுந்தவர்கள் ஐரோப்பியர். பிரெஞ்சுக்காரர்களும் பிரிட்டிஷாரும் அதில் முதன்மைகொண்டனர். வெள்ளையர்களுக்கு அணுக்கமாக இருந்த அரசர்களே அதிகாரத்தில் நீடித்தனர். பிரிட்டிஷாரை ஆதரித்தவர்கள் கடைசிவரை ஆட்சியாளர்களாக இருந்தனர். இதுதான் வரலாறு.
இதில் வெள்ளையர்களுடன் நின்றவர்கள் அனைவரும் துரோகிகள், வெள்ளையர்களிடம் வீழ்ந்தவர்கள் அனைவரும் தேசத்தியாகிகள் என்னும் ஒற்றைவரியாக வரலாற்றை எழுதிவிட முடியாது. வெள்ளையர்களை எதிர்த்தவர்கள் எல்லாம் சுதந்திரப்போராட்ட வீரர்கள் என வரலாறு எழுதுவது அபத்தம். இந்தியச் சுதந்திரப்போர் காலத்தில் நமக்கு ‘தேசிய வீரநாயகர்கள்’ தேவைப்பட்டனர். அவர்களை வரலாற்றில் இருந்து புனைந்துகொண்டோம். அப்புனைவுக்கும் யதார்த்தத்திற்கும் பெரும் வேறுபாடு உண்டு.
வெள்ளையர் இந்தியாவிற்கு வந்த காலகட்டத்தின் குழம்பிய சூழலில் கடற்பிரபுக்கள் அரசர்களின் ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரம்பெற்று தனியாட்சி நடத்தினர். அவர்கள் ஐரோப்பிய, அரேபிய கப்பல்களைக் கொள்ளையிட்டனர். அவர்களை ஐரோப்பிய கடற்கொள்ளையர் என அழைத்தனர். சிலசமயம் அவர்களின் ஆதரவை அரசர்கள் பெற்றுக்கொண்டனர். ஆனால் அவர்கள் பொதுவாக அரசர்களின் ஆதரவுடன் வெள்ளையர்களால் அழிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் குஞ்ஞாலி மரக்கார்
குஞ்ஞாலி மரக்கார்,குஞ்ஞாலி என்றால் குஞ்ஞு அலி. குஞ்சு அலி என தமிழில் சொல்லலாம். அவருடைய தாத்தாக்வும் குஞ்ஞாலி என்ற பெயர் கொண்டவர்தான். அவருடைய பின்னணியை சுருக்கமாக இப்படிச் சொல்லலாம்.
இந்தியாவெங்கும் பலநூற்றாண்டுகளாக அரபுக் கடல்வணிகத் தொடர்பு இருந்தாலும் கி.பி பத்தாம் நூற்றாண்டுக்குப்பின் அது வலுப்பெற ஆரம்பித்தது. இந்திய அரசர்கள் கடலை ஆதிக்கம் செலுத்த முயலவில்லை. இந்திய அரசர்கள் எவருக்கும் நேரடியாகக் கடற்படை இல்லை. முகலாயர்கள், மராட்டியர்கள், நாயக்கர்கள் எவரும் கடலை ஆளவில்லை.
கேரளம் பதினான்காம் நூற்றாண்டு முதல் வெவ்வேறு நாயக்கர்களின் மறைமுகமான மேலாதிக்கத்தின் கீழ் இருந்தது. மதுரை நாயக்கர்ளுக்கும் வடக்கே இக்கேரி நாயக்கர்களுக்கும் கப்பம் கட்டிய சிற்றரசர்கள் கேரளத்தை ஆட்சி செய்தனர். தெற்கே திருவிதாங்கூரும் கொச்சியும் கொடுங்கல்லூரும் மதுரை ஆதிக்கத்தில் இருந்தன. வடக்கே கோழிக்கோடும் கண்ணனூரும் இக்கேரி நாயக்கர்களால் ஆளப்பட்டன.
கோழிக்கோட்டை ஆட்சிசெய்த அரசர் சாமூதிரி எனப்பட்டார்.. எரநாடு என அழைக்கப்பட்ட கோழிக்கோடு பகுதியில் இருந்த எராடிகள் என்னும் ஒரு நாயர் குழுதான் கோழிக்கோட்டை கைப்பற்றிக்கொண்டு தங்களை சாமூதிரிகள் என்று சொல்லிக்கொண்டு அரசர்களாக ஆயினர். அன்று அது கோழிக்கோடு அருகே உள்ள போப்பூர்தான் முதன்மைத்துறைமுகமாக இருந்தது.
உண்மையில் சாமூதிரிகள் என்னும் பொதுவான தலைமைக் குலத்திற்குள் மேலும் பல குலங்கள் உண்டு. அவர்கள் நம்பியாத்திரிகள் எனப்படுவார்கள். பாலக்காடு அரசர் போன்றவர்கள் அதற்குள் வருவார்கள். இவர்கள் தொன்மையான அரசகுலம் அல்ல. ஆகவே எல்லாரும் இணையானவர்கள். எனவே ஒருவர் இன்னொருவரை ஏற்காமல் எப்போதுமே குடிப்பூசல்தான்.சாமூதிரி கோலத்திரி நம்பியாத்திரி குடிப்பூசல்களை எழுத பல ஆயிரம் பக்கங்கள் தேவைப்படும்.
கண்ணனூர் பகுதி கோலத்துநாடு எனப்பட்டது. அதை ஆட்சி செய்தவர் கோலத்திரி எனப்பட்டார். கோலத்துநாட்டு அரசகுலம் ஒப்புநோக்க தொன்மையானது. இவர்கள் வடகேரளத்தில், மங்களூர் முதலான நிலத்தை ஆண்டவர்கள். அவர்கள் கன்னடநாட்டு ஆட்சியாளர்களால் துரத்தப்பட்டு கடைசியில் கண்ணனூரை தலைமையாக கொண்டு ஆட்சி செலுத்தினர். அவர்களும் ஏராளமான உட்குலங்களாக இருந்தார்கள். அவர்களுக்கு கன்னட நாட்டு அரசகுடியினரிடம், குறிப்பாக துவாரசமுத்திரத்தை ஆட்சி செய்த பழங்கால கங்கர்குடியினரிடம் குருதியுறவு உண்டு.
கோழிக்கோடு சாமூதிரி அரசர் தொன்மையான அரசகுடி அல்ல எனினும் அரேபியர்களின் தொடர்பால் பணமும் ராணுவபலமும் வாய்ந்தவரானார். ஆகவே அவர் கொச்சியை வென்றார். கொச்சியின் அரசர் தொன்மையான சேரர்குலம். செங்குட்டுவனின் நாடான கொடுங்கோளூர் கொச்சி அரசரின் ஆட்சியில் இருந்தது. ஆகவே 12 ஆண்டுக்கு ஒருமுறை கொச்சிமேல் படையெடுத்து வந்து திருநாவாய என்னும் ஊரில் ஆற்றின் கரையில் அமர்ந்து பழைய சேர அரசர்களுக்கு வாரிசாக அமைந்து சில சடங்குகள் செய்வார். அதன்வழியாக கொச்சிமேல் தன் சடங்குசார் அதிகாரத்தை நிலைநாட்டிக்கொள்வார்.
இதை கொச்சி அரசரின் படைகள் எதிர்த்து போரிடும். அது ஒரு போர்க்களமாக நிகழும். இதுவே மாமாங்கம் எனப்பட்டது. சோழர்கள் ஒவ்வொரு அரசர் மணிமுடி சூட்டிக்கொள்ளும்போதும் படையுடன் வந்து பாண்டியர்களை வென்று மதுரையின் மணிமுடியைச் சூட்டிக்கொள்வதுபோலத்தான் இது. மாமாங்கம் என்னும் சினிமா இதை ஒட்டி எடுக்கப்பட்டது.
பதினேழாம் நூற்றாண்டு வாக்கில் அரேபியர்கள் தங்களுக்காக கடலோரக் காவல்படைகளை உருவாக்கிக் கொண்டனர். அவர்கள் அரேபிய ரத்தத் தொடர்புள்ள இஸ்லாமியர்கள். காலப்போக்கில் அவர்கள் கடலாதிக்கச் சக்திகளாக உருவாயினர். அந்தக் குடிகளில் ஒன்றில் வந்தவர் குஞ்ஞாலி மரக்கார். அவர்கள் தங்களின் முன்னோர் அரேபியாவிலிருந்து வந்தவர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். அவர்கள் அரபு குருதிமரபினர் என்பது உண்மை. எகிப்தியர் என்னும் பேசும் உண்டு.
1520 முதல் நான்கு குஞ்ஞாலி மரக்கார்கள் இருந்துள்ளனர். குட்டி அகமது அலி, குட்டி போக்கர் [அபுபக்கர்[ ,பட்டு மரக்கார், முகம்மது அலி. பட்டு மரக்காரின் பேரன் கடைசி குஞ்ஞாலி மரக்கார். பட்டு மரக்காரின் காலத்தில் அராபியர்கள் போர்ச்சுகீசியர்களுடன் போரிட்டபோது அவர் அராபியர்களுக்கு உதவினார். அராபியர் போர்ச்சுக்கீசியர்களின் பீரங்கிகளால் தோற்கடிக்கப்பட்டனர். பட்டு மரக்காரின் சிறிய கடற்படை அழிந்தது. அவர் ஒரு சிறுவணிகராக கொச்சியில் குடியேறினார்.
கொச்சியை போர்ச்சுக்கீசியர்கள் கைப்பற்றியபோது பட்டு மரக்காரின் குலம் மீண்டும் கோழிக்கோடு அரசுக்கு உட்பட்ட பொன்னானிக்குச் சென்றது. அங்கே அவர்கள் ஒரு சுதந்திரமான சிற்றரசர் போல ஆட்சி செய்தார்கள். குஞ்ஞாலி அவருடைய வாரிசானார். அவர்கள் ஒரு சிறு கடற்பிரபுக்குடி. அவர்கள் ஐரோப்பியர்களின் கப்பல்களையும் சாமூதிரியின் படகுகளையும் கொள்ளையிட்டார்கள்.
கொச்சியின் அரசர் கோழிக்கோடு அரசரிடமிருந்து பாதுகாப்பு கோரி போர்ச்சுகீசியர்களிடம் சரண் அடைந்தார். போர்ச்சுகீசியர் தங்களை தாக்கக்கூடும் என எண்ணிய கோழிக்கோட்டின் சாமூதிரி அரசர் குஞ்ஞ்சாலி மரக்காரிடம் உதவி கோரினார். அவ்வாறு குஞ்ஞாலி மரக்கார் கோழிக்கோடு சாமூதிரியின் கடற்படைத் தலைவராக ஆனார். அவர்கள் சில கடற்போர்களில் போர்ச்சுகீசியரை வென்றனர்.
குஞ்ஞாலி மரக்கார் வடகரை அருகே தனி கோட்டை கட்டிக்கொண்டார். சாமூதிரி அரசரின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட தனி ஆட்சியாளராகவே நீடித்தார். அவருடைய அந்த தனியாதிக்கம் கோழிக்கோட்டின் பிற அரசகுலங்களுக்கு ஒவ்வாமையை உருவாக்கியது. குறிப்பாக கோலத்திரிகள் குஞ்ஞாலி மரக்கார் அவர்களுடைய படகுகளை கொள்ளையடித்ததை மறக்கவில்லை. குஞ்ஞாலி மரக்கார் அரேபியர்களின் ஆதரவுடன் கோழிக்கோட்டை கைப்பற்றக்கூடும் என்றும் அஞ்சினர்.
விளைவாகச் சாமூதிரி அரசர் குஞ்ஞாலியிடமிருந்து விலகி போர்ச்சுகீசியர்களிடம் ஒப்பந்தம் போட்டுக்கொண்டார். குஞ்ஞாலி மரக்காரை போர்ச்சுகீசியர் சாமூதிரியின் உதவியுடன் தாக்கினர். குஞ்ஞாலி சரண் அடைந்தார். அவரை கோவாவுக்கு கொண்டு சென்றனர். அங்கே மதவிசாரணை செய்தனர். அவர் கொல்லப்பட்டார். இதுவே மிகச்சுருக்கமான வரலாறு.
தமிழகத்திலும் அவ்வண்ணம் கடல்பிரபுக்கள் உருவாயினர். தமிழக மரைக்காயர்களில் எகிப்து, அரேபிய குருதிவழியினராகிய பல புகழ்பெற்ற குடிகள் உண்டு. அவர்களில் முக்கியமானவர் சீதக்காதி என்னும் சையத் அப்துல் காதர் அவர்கள்.ராமேஸ்வரம் ஆலயத்தின் பிராகாரத்தை ராமநாதபுரம் சேதுபதிக்காக அவர்தான் பொறுப்பேற்று கட்டினார். ராமநாதபுரம் கல்மசூதியையும் கட்டியவர். மாபெரும் வள்ளல். ’செத்தும் கொடுத்தான் சீதக்காதி’ என அவரை படிக்காசுப்புலவர் போன்றவர்கள் பாடியிருக்கிறார்கள்.அவரைத் தன் கடற்படைத் தளபதியாக ராமநாதபுரம் சேதுபதி நியமித்தார். அவர் சேதுபதிக்கு ஆதரவாக நின்று போரிட்டார். சேதுபதி மதுரை நாயக்கர் ஆட்சிக்கு ஆதரவாக நின்றவர்.
மராட்டியத்தில் பேஷ்வாக்களே கடற்பிரபுக்களை உருவாக்கினர். அவர்களில் முக்கியமானவர் கன்னோஜி ஆங்கரே. அவரை வெல்ல வெள்ளையர் மிகவும் போராடவேண்டியிருந்தது. காரணம், அவர் ஆட்சி செய்த ஜல்ஜீரா என்னும் ஜஞ்சீரா. அங்கே நானும் வசந்தகுமாரும் நாஞ்சில்நாடனும் சண்முகமும் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு சிவாஜியின் நிலம் வழியாக ஒரு பயணத்தைச் செய்தபோது சென்றிருக்கிறோம். கடலுக்குள் நின்றிருக்கும் ஒரு சின்னஞ்சிறு பாறைத்தீவு அது. நான்குபக்கமும் அலைகள் வந்து அறையும் நிலம். அங்குள்ள இனிய ஊற்று ஒன்றினால் அப்பெயர் வந்தது. ஜீரா ஜல். இனிய நீர்.சாண்டில்யனின் ஜலதீபத்தில் கன்னோஜி ஆங்கரே ஒரு கதைநாயகர்.
இந்தக்கதையை ஒரு வாழ்க்கை வரலாறாக எடுப்பதாக இருந்தால் அது மிகமிகப் பொதுவான,ஒரு கோட்டுச்சித்திரமாகவே எடுக்க முடியும். அவ்வளவு சிக்கல் அக்காலகட்டத்தின் வரலாற்றில் உள்ளது. அதுதான் இந்தப்படத்தின் முதல் பிரச்சினை. மிக எளிமையான ‘கரண்டி ஊட்டல்’ முறையில் அந்தச் சூழலையும் வரலாற்றையும் விளக்கியிருக்கவேண்டும். குறிப்பாக மலையாளிகள் அல்லாதவர்களுக்கு. ஒவ்வொரு கதாபாத்திரமும் திரைக்கதை வழியாக தெளிவான குணச்சித்திரத்துடன் அடையாளப்படுத்தப் பட்டிருக்கவேண்டும்.
அப்படித்தான் அசல் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் கடைசிப் படத்தொகுப்பில் காட்சிகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து வெட்டியிருக்கிறார்கள். ஆகவே முதல் ஒருமணிநேரம் என்னவென்றே தெரியவில்லை. வெறும் முகங்களாகவே கதாபாத்திரங்கள் அறிமுகமாகிக் கொண்டிருக்கிறார்கள். பெயர்கள் மட்டும் ஒலிக்கின்றன. படம் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது முதன்மையாக இதனால்தான்.
இந்த படம் நேர்மையான, நேரடியான வரலாறாக எடுக்கப்பட்டிருந்தால்கூட ஒரு மதிப்பு இருந்திருக்கும். ஆனால் இத்தனைபெரிய படத்தை, இவ்வளவு உழைப்பு செலுத்தப்பட்ட படத்தை பிரேவ் ஹார்ட், டிராய் போன்ற படங்களின் காட்சிகளை அப்படியே சுட்டு எடுத்து வைத்திருக்கிறார்கள். அந்தப்படங்கள் இத்தகைய படங்களை பார்ப்பவர்களுக்கு நன்று அறிமுகமானவையும்கூட. அது நம்பகத்தன்மையை வீழ்த்திவிடுகிறது. வரலாறாக ஆகாமல் படத்தை நிறுத்திவிடுகிறது.
அத்துடன் படத்தொகுப்பில் இன்று அடிக்கடி நிகழும் ஒரு பெரும் குளறுபடி இதிலும் உள்ளது. ஆங்கிலப்படப் பாணியில் சரசரவென காட்சிகள் ஓடவேண்டும் என நினைக்கும் படத்தொகுப்பாளர்கள் சிலர் இன்று உள்ளனர். அவர்கள் காட்சிகளை மிகச்சுருக்கமாக வெட்டிவிடுகிறார்கள். ‘ரசிகனுக்கு என்ன விஷயம் என்று தெரிந்துவிடும், அதுபோதும்’ என வாதிடுவார்கள்.
ஆனால் அந்த அதிசுருக்கம் காரணமாக காட்சிகள் தொடங்கி -நிகழ்ந்து- முதிர்ந்து ரசிகனிடம் உணர்ச்சிகரமான பாதிப்பு உருவாவதில்லை. என்ன ஏது என தெரியாமலேயே காட்சிகள் மின்னி மின்னி ஓடிக்கொண்டிருக்கும். இப்படத்தில் இறுதித் திருப்பமாக குஞ்ஞாலி மரைக்காயரை வீழ்த்தும் துரோகத்தின் தொடக்கக் கதை படத்தில் வெறும் இரண்டே நிமிடங்களில் ஒற்றை வசனங்களுடன் ஓடிச்செல்கிறது. மஞ்சுவாரியர் நடித்திருந்தும்கூட அவர் யார், அவருடைய குணாதிசயம் என்ன எதுவுமே பதிவாவதில்லை. இந்த படத்தொகுப்புதான் இந்தப்படத்துடன் உணர்வுரீதியாக ஒன்றாமல் வாசகன் வெறுமே வாய்பிளந்து அமரச்செய்கிறது.
வேற்றுமொழிப் படங்களில் இருந்து பெறும் ‘தூண்டுதல்’ காரணமாக மிக அபத்தமான பல விஷயங்கள் உருவாகிவிடுகின்றன. உதாரணமாக குஞ்ஞாலி மரக்காருக்கு பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் படத்தில் உள்ள கடற்கொள்ளையரின் தலைமுடிப் பாணியை அளித்திருக்கிறார்கள். மரக்கார் இஸ்லாமியர், அரபுப்பின்னணி கொண்டவர். அவர் அவ்வண்ணம் நீண்ட தலைமுடியுடன் இருந்திருக்க மாட்டார். இளம் மரக்கார் நீண்ட தலைமுடியுடன் இருப்பதும் பிழையே. தலையை மழிப்பதே அவர்களின் வழக்கம். அவருடைய ஆடைகள் எல்லாமே ஸ்பானிஷ் கடற்கொள்ளையர் பாணியில் உள்ளன.
உண்மையில் குஞ்ஞாலி மரக்காரின் வாழ்க்கையின் ஓர் உச்சகட்டத் தருணத்தை, சிலநாட்களுக்குள் நீளும் நிகழ்ச்சிகள் வழியாகச் சொல்லியிருந்தால் அடர்த்தியான ஒரு கதை அமைந்திருக்கும். வாழ்க்கை வரலாறுகளை அப்படித்தான் எடுக்கவேண்டும். வாழ்க்கையின் ஒரு துண்டு போதும் சினிமாவுக்கு. முழு வாழ்க்கையும் தேவையில்லை. இப்போது மிகத்தளர்வான ஒரு திரைக்கதையுடன் வரலாற்றை ஆங்காங்கே தொட்டுக்கொண்டு செல்லும் ஒரு தழுவல்கதையாக உள்ளது மரக்கார். இவ்வளவு பெரிய உழைப்பு இப்படி ஆனது வருத்தமளிக்கிறது.
அத்துடன் ஒன்று உண்டு. நாம் நம் வீரநாயகர்களை கற்பனைசெய்யும்போது அவர்கள் எல்லாருமே வஞ்சத்தால் வீழ்த்தப்பட்டவர்களாக சித்தரிக்கிறோம். அது நம் வாய்மொழிக் கதைமரபின் வழக்கம். தொன்மையான எல்லா கதைகளிலுமே வீரர்கள் துரோகத்தால்தான் வீழ்வார்கள். கட்டபொம்மன் ஆனாலும் சரி, தச்சோளி உதயணன் ஆனாலும் சரி. அத்துடன் நம் தேசிய இயக்கத்தில் நாம் தேசபக்தர்- தேசத்துரோகி என்னும் இருமையை கட்டமைக்கவும் விரும்பினோம். ஆகவே நாட்டார் மரபை ஒட்டி அவ்வாறு புனைந்துகொண்டோம்.
ஆனால் இன்றும் சலிக்காமல் அதே கதையை அப்படியே சொல்லும்போது இந்தியர்கள் என்றாலே ஒரு மாவீரனும் அவனைச்சுற்றி நூறு துரோகிகளும்தான் என்னும் சித்திரம் உருவாகிறது. இப்படங்களைப் பார்க்கையில் இந்தியர்களில் இத்தனை துரோகிகள் இருந்தார்கள், ஆனால் ஐரோப்பியரில் ஒரு துரோகிகூட இல்லை என்ற எண்ணமே ஓங்குகிறது. ஏன் போர்ச்சுகீசிய காப்டனை ஒரு போர்ச்சுக்கீசிய படைவீரன்கூட காட்டிக்கொடுக்கவில்லை? ஏன் குஞ்ஞாலியை அத்தனைபேரும் காட்டிக் கொடுக்கிறார்கள்? அப்படியென்றால் இயல்பாகவே ஐரோப்பியர் நம்மைவிட மாண்பு மிக்கவர்கள்தானே? அவர்கள் நம்மை ஜெயித்ததில் என்ன பிழை? அவ்வாறு ஓர் இளைஞன் இயல்பாகவே கேட்கலாம்.
அத்துடன் அந்த தேசிய வரலாற்று ’டெம்ப்ளேட்’டை அப்படியே இன்று எடுக்கும்போது இன்றைய அரசியல் ஊடே நுழைகிறது. குஞ்ஞாலி மரக்கார் இந்துக்களை கொன்றழித்தவர், அவரைப் பற்றி படம் எடுக்கக் கூடாது என்று கேரளத்தில் இந்துத்துவர் குரலெழுப்பினர். திப்புசுல்தான் பற்றியும் இதே குரல் எழுகிறது. அவர்களை தேசியநாயகர்களாக ஆக்குவதன் எதிர்ப்பக்கம் அது. அவர்களை மதச்சார்பற்றவர்களாக, ஜனநாயகவாதிகளாக, இந்திய தேசத்தின் பக்தர்களாக எல்லாம் கட்டமைக்க வேண்டியிருக்கிறது.
குஞ்ஞாலி மரக்கார் இந்திய கடற்படையின் நாயகபிம்பங்களில் ஒருவர் இன்று. அவர் பெயரில் கடற்படைநிலையம் உள்ளது. ஆனால் அதெல்லாம் சினிமாவைக் கட்டுப்படுத்தவேண்டுமா என்ன? அந்த நாயக பிம்பம் ஓர் அதிகாரபூர்வச் சித்தரிப்பு. அதை அப்படியே எடுத்தால் அதில் என்ன புதிதாக இருக்கப்போகிறது? சினிமா அடுத்தகட்ட வரலாற்றுச் சித்தரிப்பை நோக்கிச் செல்லவேண்டும். இதையே திப்பு சுல்தான், பாலாஜி பாஜிராவ், கன்னோஜி ஆங்கரே, வீரபாண்டிய கட்டபொம்மன் என எவருக்கும் சொல்வேன்.
குஞ்ஞாலி மரக்கார் இந்துக்களை கொன்ற இஸ்லாமிய மதவெறியரா? அல்லது மதச்சார்பற்ற ஜனநாயக வாதியா? இரண்டும் இல்லை, அவர் அக்காலத்தைய எல்லா அரசர்கள், சிற்றரசர்கள், கடற்தலைவர்கள் போன்ற ஒருவர். தன் ஆட்சிக்குள் வந்த இடங்களில் அவர் சட்டம் ஒழுங்கை உருவாக்கினார். அங்கே அவர் இந்துக்களுக்கும் இனிய ஆட்சியாளராகவே இருந்தார். கேரளத்தின் வாய்மொழிக் கதைகளில் அவர் இந்துக்களாலும் போற்றப்படுகிறார். ஆனால் படையெடுத்து சென்ற இடங்களைச் சூறையாடினார். அங்குள்ள இஸ்லாமியர்களையும் கொள்ளையடிக்க தயங்கவில்லை.
தென்னக வரலாற்றை தோராயமாக வாசிப்பவர்கள்கூட தமிழகம், கர்நாடகம், ஆந்திர நிலப்பகுதிகளில் மராட்டியப் படைகள் உருவாக்கிய சூறையாடலை, அழிவை காணாமலிருக்க முடியாது. மராட்டியர் இந்துக்கள், இஸ்லாமிய அரசின் எதிரிகள், ஆகவே இந்துக்களின் காவலர் என்பதெல்லாம் நாம் பின்னர் உருவாக்கிக் கொண்ட கற்பிதங்கள். வரலாற்றின் அக்கால இயக்கம் வேறுவகையானது. அதை இனியாவது நாம் கொஞ்சம் புரிந்துகொள்ளவேண்டும்.
சென்ற சில ஆண்டுகளில் வெளிவந்த மாபெரும் சரித்திரப்படங்களின் பொதுவான உணர்வுத்தளம் என்பது நம் தேசிய வரலாற்று இயக்கம் உருவாக்கிய ‘தேசபக்தி’ சார்ந்ததுதான். அந்த உணர்ச்சி நம் வாழ்க்கையின் அன்றாடத்துடன் இணைந்தது அல்ல. அது ஓர் அரசியல் கட்டமைப்பு. ஆகவே அதை மிகைப்படுத்த வேண்டியிருக்கிறது. அதனால் இப்படங்கள் எல்லாமே மிகையான உணர்ச்சிகளுடன் உள்ளன. அந்த உணர்ச்சிகள் இன்றைய பார்வையாளனால் பகிரப்படுவதுமில்லை
அந்த வழக்கமான பார்வையுடன் வரலாற்றை அணுகும்போது திரும்பத்திரும்ப ஒரே ஒரே உணர்வுநிலைகள்தான் கிடைக்கின்றன. பத்மாவதி, பாஜிராவ் மஸ்தானி, சைரா நரசிம்மலு ரெட்டி ஆகிய எல்லா படங்களும் ஏறத்தாழ ஒரே உணர்ச்சிக் கட்டமைப்பு, நாடகீய அமைப்பு கொண்டவை. வழக்கமான பார்வை காரணமாக சலிப்பூட்டும் பாடப்புத்தகத்தன்மை அவற்றில் அமைந்துவிடுகிறது. மரக்காரில் குஞ்ஞாலி மரக்கார் கொலைக்களத்துக்கு கொண்டுசெல்லப்படும்போது எதிர்பார்த்த முடிவை பார்க்கும் சலிப்பை ரசிகன் அடைவதை அரங்கில் காணமுடிகிறது. அத்துடன் அக்காட்சி அப்படியே பிரேவ்ஹார்ட்டின் நகலும்கூட.
நாம் நம்முடைய தேசியவரலாற்றின் ‘டெம்ப்ளேட்டுகளை’ விட்டு வெளியே வந்து வரலாற்றின் உண்மையை துணிந்து பேச ஆரம்பிக்கலாம். உண்மையிலேயே நமக்கு நாடகீயமான, மானுட உச்சங்கள் மண்டிய, தத்துவார்த்தமான ஆழம்கொண்ட வரலாற்றுப்படங்களை உருவாக்க ஏராளமான வாய்ப்புகள் நம் வரலாற்றில் உள்ளன. ஓர் உதாரணம் சொல்லலாம், பழசிராஜா அவர் மனைவியால் காட்டிக்கொடுக்கப்பட்டார் என்று ஒரு பதிவு உண்டு. அந்த மனைவியை அதைச்செய்யவைத்தது என்ன என்ற கேள்வி நம்மை கொண்டுசெல்லும் தொலைவு மிக அதிகம்.
எல்லாமே மிகையுணர்ச்சிகளும் வழிபாட்டுணர்ச்சிகளுமாக கொந்தளிக்கும் தமிழகத்தில் அண்மைக்காலத்தில் ஒரு நவீன வரலாற்று சினிமாவை எடுக்க முடியாது. ஆனால் மலையாளத்தில் முடியும். பழசி ராஜா, மாமாங்கம், மரக்கார் ஆகிய மூன்று சினிமாக்களிலும் அந்த வாய்ப்பை தவறவிட்டுவிட்டனர் மலையாளிகள். ஆனால் எனக்கு கேரளத் திரைக்கதையாசிரியர்கள் மேல் எப்போதுமே நம்பிக்கை உண்டு. இந்தியாவுக்கு அவர்கள் புதியவழி காட்டக்கூடும்.
விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்: ஜெய்ராம் ரமேஷ்
விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர் ஜெய்ராம் ரமேஷ் முன்னாள் மத்திய அமைச்சர், சூழியல் ஆர்வலர், பாராளுமன்ற உறுப்பினர், இந்திய தேசியக் காங்கிரஸ் பேச்சாளர் ஆகிய நிலைகளில் பரவலாக அறியப்பட்டவர். இந்திய அரசியலில் சிறப்புக்கல்வித் தகுதி படைத்த பொருளியல் -நிர்வாகவியல் நிபுணராக நுழைந்தவர். இந்திய பொருளியல் தாராளமயமாக்கத்தில் முக்கியமான பங்களிப்பை ஆற்றியவர்.
ஜெய்ராம் ரமேஷ் இந்திராகாந்தியின் சூழியல் ஆர்வம் பற்றி எழுதிய நூல் தமிழில் வெளிவந்துள்ளது. இந்திரா காந்தி: இயற்கையோடு இயைந்த வாழ்வு. அந்நூல் ஆங்கிலத்தில் வெளிவந்தபோதே விஷ்ணுபுரம் நண்பரான பாலசுப்ரமணியம் முத்துசாமி அருண் மதுரா என்ற பெயரில் அந்நூலை அறிமுகம் செய்து நீண்ட கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். இந்தியப் பொருளியல் சீர்திருத்தங்கள் பற்றி அவர் எழுதிய “To the Brink and Back” என்னும் நூலும் குறிப்பிடத்தக்கது. பாலசுப்ரமணியம் முத்துசாமி அந்நூல் பற்றியும் எழுதியிருக்கிறார்
ஜெய்ராம் ரமேஷ் ஓர் இலக்கிய ஆய்வாளரும் கூட. இந்தியாவின் இலக்கிய இயக்கத்தை நன்கறிந்தவர். எட்வின் ஆர்னால்டின் லைட் ஆஃப் ஆசியா என்ற நூலின் வரலாற்றை The Light of Asia; The Poem That Defined Buddha என்ற பேரில் நூலாக்கியிருக்கிறார்.அண்மையில் அதிகம் பேசப்படும் நூல் இது.
ஏற்கனவே பதஞ்சலி யோகம் போன்ற நூல்களுக்கு வரலாற்றுநூல்கள் வெளிவந்துள்ளன என்றாலும் ஒரு அண்மைக்கால நூலுக்கு வரலாறு வெளிவருவது அரிதான நிகழ்வு. புத்தர் என்னும் அடையாளத்தை மேலைநாடுகளிலும், மேலைக்கல்விப்புலம் வழியாக உலகம் முழுக்கவும் ஆசிய ஜோதி என்னும் நூல் எப்படி கட்டமைத்தது, அதன் உருவாக்கம் எப்படி நிகழ்ந்தது என ஆராயும் ஒரு நூல் இது.
இந்திரா காந்தி – இயற்கையோடு இயைந்த வாழ்வு வாங்க
இந்திரா காந்தி இயற்கையோடு இயைந்த வாழ்க்கை – தமிழ் ஹிந்து கட்டுரை
இந்திரா காந்தி இயற்கையோடு இயைந்த வாழ்க்கை – அருண் மதுரா அறிமுகம்
அந்த மூன்று மாதங்கள் ஜெய்ராம் ரமேஷ். அறிமுகம் அருண்மதுரா
விஷ்ணுபுரம் விருதுகள் முழுப்பதிவுகள்
[image error]
விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம் விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021விஷ்ணுபுரம் விருதுகள் அளிக்கத்தொடங்கி எட்டு ஆண்டுகளாகின்றன. 2010ல் ஒரு சிறுநட்புக்கூட்டமாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் தொடங்கப்பட்டது. நட்புக்கூட்டத்தை ஓர் அமைப்பென்று ஆக்கி தொடர் சந்திப்புகளை நிகழ்த்துவதும், இலக்கிய விழாக்களை ஒருங்கிணைப்பதும் எங்கள் நோக்கமாக இருந்தது. தொடக்கத்திலேயே ஓர் உறுதியை மேற்கொண்டோம். எந்நிலையிலும் இது உளக்கசப்புகளுக்கான வெளியாக அமையக்கூடாது. இலக்கியம் முக்கியம்தான், நட்பு அதைவிட முக்கியம். கொள்கைகள் கோட்பாடுகள் என்று பேசுபவர்கள் இறுதியில் காழ்ப்புநிறைந்தவர்களாக, தனியர்களாக மாறிவிடுகிறார்கள். அது நிகழக்கூடாது
விஷ்ணுபுரம் அமைப்பின் உறுதியான நடத்தை நெறிகளைப் பற்றிய ஒர் ஐயம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. அனைத்து கூடுதல்களையும் கசப்பும் காழ்பும் நிறைந்தவர்களாக ஆக்கியவர்கள், எதிர்மறை இயல்பையே ஆளுமையாகக் கொண்டவர்கள், சொல்லும்படி எதையுமே எழுதாதவர்கள் மட்டுமே அக்கேள்வியை எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். எங்கள் நோக்கம் கருத்துமோதல்கள் நிகழும் அதே சமயம் தனிநபர் காழ்ப்புகள் எழாத ஒரு வெளியை உருவாக்குவதே. சென்ற எட்டாண்டுகளின் வரலாறு அதில் பெருவெற்றிபெற்றிருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. இது உளநிறைவூட்டும் தருணம்
விஷ்ணுபுரம் விருது மூத்த படைப்பாளிகளுக்கு வழங்கப்படுவது. இதன் அளவுகோல்கள் இரண்டுதான். படைப்பிலும் சிந்தனையிலும் முன்னோடியான பங்களிப்பாற்றியவர்களாக இருக்கவேண்டும். வேறு பெரிய பரிசுகளைப் பெறாதவர்களாக இருக்கவேண்டும். மற்றபடி கருத்தியல் அளவுகோல்கள் என ஏதுமில்லை. இலக்கியம் எல்லாவகையான கருத்துநிலைகளுக்கும் இடமளிக்கும் அறிவுப்பரப்பு என்பதே எங்கள் எண்ணம். இவ்விருதுகளை நோக்குபவர்கள் முற்றிலும் மாறுபட்ட கொள்கைகளும் கருத்தியல்சார்புகளும் கொண்டவர்கள் விருதுபெற்றிருப்பதை காணமுடியும்
முடிந்தவரை விருதுபெறுபவர்களை தமிழ்ச்சூழல் முன் விரிவாக முன்னிறுத்துவது எங்கள் வழக்கம். அவர்களின் நூல்கள் வாசிக்கப்படவேண்டும். அவர்கள்மேல் விவாதம் உருவாகவேண்டும். அவர்களின் ஆளுமை வாசகனுக்கு அணுக்கமாகவேண்டும். ஆகவே படைப்பாளிகளைப் பற்றி விரிவாக எழுதப்படும். அவர்கள ஆளுமைகுறித்த நூல் ஒன்று விழாவில் வெளியாகும். ஆவணப்படமும் எடுக்கப்பட்டு வெளியாகும்
ஆ.மாதவன். பூமணி, தேவதேவன், தெளிவத்தை ஜோசப், ஞானக்கூத்தன், தேவதச்சன், வண்ணதாசன், சீ.முத்துசாமி, ராஜ் கௌதமன், அபி, சுரேஷ்குமார இந்திரஜித் ஆகியோர் இதுவரை விருதுபெற்றுள்ளனர். பன்னிரண்டாவது விருதை விக்ரமாதித்யன் பெறுகிறார்
ஆ.மாதவன் விஷ்ணுபுரம் விருது 2010- நினைவுகள்
விஷ்ணுபுரம் விருது ஆ மாதவன் 2010 பதிவு
விஷ்ணுபுரம் விழா கோபிராமமூர்த்தி பதிவு
விஷ்ணுபுரம் விருது விழாவில் பூமணி உரை
அன்பின் வழியே இரண்டுநாட்கள் சுரேஷ்பாபு பூமணிவிழா பற்றி
விஷ்ணுபுரம் விருது 2012 நினைவுகள் தேவதேவன்
தேவதேவன் விருது உரை ராஜகோபாலன்
தெளிவத்தை ஜோசப்புக்கு விருது 2013 பதிவுகள்
செலேவ்ந்திரன் பதிவு 2013 தெளிவத்தை ஜோசப்
விருதுவிழா புகைப்படக்குறும்புகள்
ஞானக்கூத்தன் விழா பற்றி அழகியசிங்கர்
உவக்கூடி உள்ள ப்பிரிதல் சுனீல் கிருஷ்ணன்
தேவதச்சன் விருதுவிழா 105 பதிவுகள்
தேவதச்சன் விழா பதிவு சுநீல் கிருஷ்ணன்
விஷ்ணுபுரம் விருதுவிழா 2016 உரைகள்
[image error]
சீ.முத்துசாமிக்கு விஷ்ணுபுரம் விருது
விஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 12
ஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 17
விஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 18
விஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 15
விஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 13
விஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 12
விஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 11
விஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -6
விஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -3
விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 21 -ராஜா
விஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 9

விஷ்ணுபுரம் விழா: இலக்கியமெனும் களிப்பு
விஷ்ணுபுரம் அமைப்பின் கருத்தியல் என்ன?
விஷ்ணுபுரம் விழா விருந்தினர்கள்
விஷ்ணுபுரம் விழா எதிர்பார்ப்புகள்
விஷ்ணுபுரம் விழா – இரு பதிவுகள்
விஷ்ணுபுரம் விருதுவிழா உரைகள்- கடிதங்கள்-15
விஷ்ணுபுரம் விழா – இரு பதிவுகள்
விஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகள்
விஷ்ணுபுரம் விருதுவிழா சிறப்பு விருந்தினர்கள் இதுவரை
விஷ்ணுபுரம் விருது விழா- வரலாறு உருவாவது…
விஷ்ணுபுரம் விருதுவிழா:வாழ்த்துக்கள்
விஷ்ணுபுரம் விருது விழா புகைப்படங்கள் – 27.12.2019
விஷ்ணுபுரம் முதல்நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி
விஷ்ணுபுரம் 2-ம் நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி
விஷ்ணுபுரம் விருது விழா முதல் நாள் புகைப்படங்கள் – ஸ்ரீனிவாசன்
விஷ்ணுபுரம் விருது விழா 2-ம் நாள் புகைப்படங்கள் – ஸ்ரீனிவாசன்
விஷ்ணுபுரம் விருதுவிழா 2019 புகைப்படங்கள் – செந்தில்
முகங்களின் புகைப்படங்கள் – ஆனந்தகுமார்
விஷ்ணுபுரம் விருதுவிழா நாள்-2 புகைப்படங்கள் – ஷிவாத்மா
விஷ்ணுபுரம் விருதுவிழா உரைகள்- கடிதங்கள்-15
விழா கடிதங்கள் -ராகவேந்திரன், சுரேஷ்குமார்
விழா கடிதங்கள் – சங்கர், சிவராஜ்
விழா கடிதங்கள்- நாராயணசாமி,மதி
விழா கடிதங்கள்- அருள், சரவணக்குமார்
விழா கடிதங்கள்- விஜயபாரதி, அன்பரசன்
விழா கடிதங்கள், சிவகுருநாதன், கண்ணன்
விழா கடிதங்கள், ரங்கராஜன்,செல்வக்குமார்
விழா- கடிதங்கள்- விக்ரம், சந்திரசேகரன்
விஷ்ணுபுரம் விருதுவிழா- கடிதங்கள்
விக்ரமாதித்யனின் வண்ணங்கள்- ஜெயராம்
அன்புள்ள ஆசிரியருக்கு,
கவிஞர் விக்ரமாதித்யனின் அறிமுகம் சந்திப்புகளில் நீங்கள் அவரைப் பற்றி கூறிய செய்திகளிலிருந்து, குறிப்பாக ‘நான் கடவுள்’ படப்பிடிப்பு சமயத்தில் அவருடனான உங்கள் அனுபவ பகிர்தல்களிலிருந்து ஏற்பட்டது. பெரும்பாலும் நகைச்சுவைகள். அப்போது அவரது கவிதைகள் எதுவும் வாசித்திருக்கவில்லை. இவ்வருட விஷ்ணுபுர விருது விக்ரமாதித்தனுக்கு அறிவிக்கப்பட்டவுடன் தான் அவரது புகைப்படங்களை தொடர்ந்து பார்க்கவும் நண்பர்கள் பகிர்ந்த அவரது சில கவிதைகளை வாசிக்கவும் வாய்த்தது.
நீங்கள் அவரைப் பற்றி எழுதிய குறிப்பு, அவர் 2021-ன் விஷ்ணுபுரம் விருது பெறுவதைப் பற்றி The wanderer poet என்று குறிப்பிட்டு ஆங்கில நாளிதழில் அவரைப் பற்றி வந்திருந்த செய்திகள் எல்லாம் அவரை உற்று நோக்க வைத்தன. அவரது நீண்ட அடங்காத தலைமுடிக்கற்றைகள் கூர்ந்து கவனிக்கும் கண்களில் எல்லாம் ஒருவித நாடோடித்தனமும் அமானுஷ்யமும் இருப்பதாகத் தோன்றின. என் கிறுக்கல் வரைகளுக்கு ஏற்ற அவருடைய தோற்றம் வரையத் தூண்டிக் கொண்டே இருந்தது. அதனால் வரைந்து விட்டேன்.
வரைவதற்காக அவரது புகைப்படங்களை துழாவிக் கொண்டிருந்த போது வேறு வேறு விதமாகத் தெரிந்து கொண்டிருந்தார். ஒன்றில் வாழ்க்கையை அனுபவித்து அறிந்த தாத்தாவாக உணர வைக்கும் தோற்றத்தில், மற்றொன்றில் அலைந்து நலிந்த நாடோடித் தோற்றத்தில், இன்னொன்றில் தவத்துறவி போல, வேறு சிலதில் கூர்விழிகளுடன் நோக்கிக் கொண்டு ஒருவித நிமிர்வுடன். அவர் உட்கார்ந்து கொண்டே நிமிர்வுடன் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்த ஒரு புகைப்படம் கவர்ந்தது. கலைஞன் கவிஞன் சாதுவாக தெரிவதை விட கொஞ்சம் கம்பீரமாகத் தெரிவது நல்லது என்று தோன்றியதால் அதையே என் வரைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டேன். வரையும் போது எனக்கு அவர் ஒரு ஊழ்கத்தில் அமர்ந்த சாமியாராகவும் சித்தராகவும் அவரது பாய்ந்து கொண்டிருக்கும் பறட்டை முடித்தலை மற்றும் தாடியால் எங்கேயும் கட்டுக்குள் நிற்காமல் அலைந்து திரிபவராகவும் தெரிந்தார். அதே நேரத்தில் எனக்கு அணுக்கமாக இருந்த மறைந்த கலையியக்குநர் கிருஷ்ணமூர்த்தி மட்டுமல்லாமல் பெரியார் ஈ. வே.ரா போன்றவர்களையும் ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தார். தாடியுடன் கூடிய அவரது தோற்றம் தான் காரணம். அதாவது மரபின் வழி வந்தவராகவும் எங்கேயோ மரபை மீறிச்செல்பவராகவும் ஒரே நேரத்தில் தெரியலானார்.
எனக்கு கவிதை வாசிப்பில் நேரடியான தொடர்ந்த பழக்கம் இல்லாததால் விக்ரமாதித்யனின் கவிதைகளில் ஆரம்பித்து அப்பழக்கத்தை கொஞ்சம் ஆரம்பிக்கலாம் என்று நினைத்தேன். நண்பர்களும் அவரது கவிதைகளை வாசிக்க ஆர்வமாக இருந்ததால் நாங்கள் வார இறுதி நாட்களில் நடத்தும் சிறுகதை விவாதத்துடன் ஒன்றிரண்டு விக்ரமாதித்யன் கவிதைகளும் சேர்த்து வாசிக்க ஆரம்பித்தோம். பிறகு தொகுப்பாகவும் வாசித்து விவாதித்தோம். விக்ரமாதித்யன் பற்றிய குறிப்புகளிலூடாகவும் வரையும் போது என்னிடம் உருவான அவரைப் பற்றிய சித்திரங்களையும் எந்தளவிற்கு அவரது கவிதைகள் நிலைநிறுத்துகின்றன மாற்றியமைக்கின்றன என்று பார்க்க ஆர்வமானேன். ஓரளவிற்கு அவரது கவிதைகளை வாசித்தவுடன் அதிலிருந்து கிடைக்கும் சித்திரத்துடன் மறுபடியும் அவரது ஓவியத்தை வரைந்து பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ஒரு கவிஞனை அவரது கவிதையை இப்படி அணுகுவது சரியா என்பது தெரியவில்லை. ஆனால் மனதில் தோன்றிய யோசனையை செயல்படுத்தி அதை ஒரு அகப்பயிற்சியாகவும் மேற்கொள்ளலாம் என்ற தீர்மானத்துடன் கவிதைகளை வாசித்தேன். இது ஒரு தவறான வழிமுறை என்று புரிய வந்தால் அத்துடன் கைவிட்டுவிடலாம் அல்லவா?
தொகுப்பாக வாசிக்கலாம் என்று முடிவான போது நண்பர் பாலா, அண்ணாச்சியின் 1980-கள் முதல் இன்று வரை வெளிவந்த மூன்று தொகுப்புகளையாவது வாசித்தால் அவரது கவிதைகளின் போக்குகளைப் புரிந்து வாசிக்கலாம் என்று பரிந்துரைத்தார். அனைவருக்கும் அது ஏற்பாக இருந்தது. அதன்படி ஏற்கனவே வாசித்து முடித்திருந்த ‘ஆகாசம் நீலநிறம்’ தொகுப்புடன் ‘ஊரும் காலம்’, ‘கிரகயுத்தம்’ மற்றும் ‘மாடசாமி வரை’ ஆகிய தொகுப்புக்களை தேர்ந்தெடுத்து வாசித்து விவாதித்தோம். எனக்கு அவரைப்பற்றிய சித்திரத்தை உருவாக்கிக் கொள்வதற்கு இது மேலும் வாய்ப்பாக அமைந்தது. ஆனால் சில கவிதைகளை வாசித்தவுடன் புரிந்து விட்டது விக்ரமாதித்யனுக்கு நாம் எந்த பிம்பத்தை, வரையறையை அளித்தாலும் அதற்கேற்ற ஒரு கவிதை அவரது தொகுப்பிலிருந்து நமக்குக் கிடைத்துவிடும் என்று. இருந்தும் தொடர்ந்து வாசித்தேன்…..
விக்ரமாதித்யனின் கவிதைகளில ‘சாதாரண’ என்று அடைமொழி வரக்கூடிய பலவற்றை பிரதிநிதித்துவம் செய்யும் நிறைய கவிதைப் புலம்பல்களை வாசிக்க முடிந்தது. ‘சாதாரண’ மக்களின் அன்றாட அங்கலாய்ப்புகள், ஒரு ‘சாதாரண’ ஆணின் குடும்பஸ்தனின் உணர்வுகள், ‘சாதாரண’ நிலையில் இருக்க நேர்ந்த ஒரு கவிஞனின் விருப்பு-வெறுப்புகள்…..
ஒரு சாதாரண பாமரன் டீக்கடையில் பேசிக் கொள்ளும் தொனியில் இருந்தது “எல்லாமே” என்ற கவிதை…
“எல்லாமே
விதி போல அமைந்துவிட்டது
சர்வாதிகாரிகளுக்கு
அடிமைகளும் ராஜ்யமும்
சந்நியாசிகளுக்கு
பாமர ஜனங்களும் கோவணத்துணியும்
ஓர்மையில்லாத ஜனங்களுக்கு மட்டும்
உருப்படாத தலைவர்களும் தரித்திரமும்.”
சில இடங்களில் மேலே சென்று அப்பாமர்களுக்காக பேசுகிறார் விக்ரமாதித்யன். ‘ஊரும் காலம்’ என்ற கவிதையின் முடிவில்..
“நமது
ஜனங்களுக்கு மட்டும்
மேயக் கனவுகளும்
கழிக்கப் பொழுதுகளும்
மிச்சமிருக்கட்டும் குறையாமல்“
என்கிறார்.
சாதாரணமாக விடலைப் பையன்கள் பலரும் தன் இழந்த காதலைப் பற்றி தான் பின்தொடரும் பெண்ணைப் பற்றி நீள்மூச்சுவிடும் போது சொல்லும் வரிகள் அடுத்த கவிதை…
“ துஷ்யந்தன்தான் …
துஷ்யந்தன்தான்
சகுந்தலையை மறந்தானா
நிச்சயமாகச் சொல்வதற்கில்லை
எனக்குத் தெரிந்தவரை
இப்பொழுதெல்லாம்
சகுந்தலைகள்தாம்
துஷ்யந்தன்களை மறந்துபோகிறார்கள்
மோதிரங்களைத் தேடுங்கள்
மோதிரங்களைத் தேடுங்கள்“
ஒரு கவிஞனின் பிரச்சினைகளைப் பல கவிதைகளின் வரிகள் சொல்லிச் சொல்கிறது…
“பிராந்திக்கடை உரிமத்தைப்
பாவப்பட்ட தமிழ்க்கவிஞர்களுக்கே தருவோம்” என்கிறது ஒரு கவிதை வரி.
மற்றொரு கவிதை வரி…
“பூமியில்
பூக்கட்டி
பீடிசுற்றிச்
சுண்டல்–வடை விற்று
சுக்குகாபி விற்று
எப்படியும் பிழைக்கலாம்
மண் மாதிரி இருந்தால் போதும்
தமிழில்
எழுதி
இலக்கியம் படைத்துப்
பிழைக்க முடியுமா“
என்று கேள்வி எழுப்புகிறது.
“ஆத்ம ஸமர்ப்பணம்” என்ற மற்றொரு கவிதை ஒரு கலைஞனின் அடிவயிற்றுக்குரல்…
“இந்தக் கவிதை
இப்படிச் சொல்வதில்
மறுப்பொன்றும் இல்லை என்றால்
பொதுச் சொத்து
பொதுச் சொத்து எல்லாம்
பொதுஜன
உபயோகத்துக்குத்தான்
பொது ஜனம்
எல்லாக் காலமும்
பாமர ஜனம் தான்
பொது ஜனத்துக்கு
எந்த வகையில் பிரயோஜனம்
இந்தக் கவிதை
பாலம் என்றால்
கடந்துபோக உதவும்
பஸ் என்றால்
பிரயாணம் செய்யலாம்
பூங்கா
கதைபேச இடம் தரும்
கடற்கரை
காற்றுவாங்க, காதலிக்க வாகாகும்
இவன் கவிதை
எதுக்கு ஆகும்
பாமர ஜனத்துக்கு
சினிமாப்பாட்டுக்கூட
முணுமுணுக்க வாகாகும்
இவன் கவிதை
என்னத்துக்கு உதவும்
பொது ஜனத்துக்கு
விளங்கவும் செய்யாது
விருத்திக்கும் உதவாது
என்ன செய்வார் பொது ஜனம்
மன்னிக்க வேணும்
துரதிர்ஷ்டவசமாக
கொடுப்பதற்கு
வேறொன்றுமில்லை இவனுக்கு
குற்றமில்லை
அடுப்பெரிக்க
பல்பொடி மடக்க
எப்படியும் உபயோகிக்கலாம்
தப்பில்லை பாவமில்லை
சமூகத்துக்கு
எப்படித்தான் உதவுவான்
அப்பாவிக் கவிஞன்“
இந்த ‘சாதாரண’ அடையாளங்களில் இருக்கும் இக்கட்டுகளுக்கும் மேல் அற்புதங்களை எதிர்நோக்குகிறார் கவிஞர்….
“……
வெட்கத்தை விட்டுவிடு
விவஸ்தையை விட்டுவிடு
நாணத்தைக் கூச்சத்தை
விட்டுவிடு விட்டுவிடு
இவை போதும்
அற்புதங்கள்
சுயமாக சுதந்திரமாக
சுந்தரமாக
ஒரு பூவைப் போல்
உதயகாலத்தில் பூக்குதா பார்க்கலாம்“
கடைசியில் ஒரு முடிவுக்கு வருகிறார் இக்கவிதை வரிகளில்…
“……………………………
செயல் திறமற்ற நாம்
செய்வதற்கும் ஒரு காரியம் உண்டு
புலன்களைத் துருப்பிடிக்க விடாமல்
முடிந்தவரை எழுதி வைக்கலாம்
சரித்திரப் பதிவுகளாவது மிஞ்சும்
சந்ததிகளுக்கேனும் உதவும்“
தன் கவிதையைப் பற்றி கர்வமும் கொள்கிறார்…
“கடைசிப் பார்வைக்குக் கணக்கெல்லாம் ஒன்றுதான்
கவிஞனின் வார்த்தைகள் மட்டும் எஞ்சிநிற்கும்“
குடியை தன் துக்கங்களை மறக்கப் பயன்படுத்தும் அதேவேளையில் கொண்டாடவும் செய்கிறார் கவிஞர். ரசனைமிக்கவர்…
“நாடார் சமூகத்து
நண்பன் உபசரிக்கும்
பனங்கள்ளு
சோதனைப் படமெடுத்த
சினிமா டைரக்டர் தரும்
ஐஸ் பீர்
பட்டாளத்துத் தம்பி
கொண்டுவரும் பயங்கரமான
ரம்
எல்லாம் ஒன்று தானா
இல்லவே இல்லை நண்பா
Quality-ல் வித்யாசம்
So
Quantity-யில் வித்யாசம்
என்றாலும்
எல்லாமே
உணர்வலைகளை மீட்டுவது
ஒன்றுதான் உன்னதம் தான்
சந்தேகம் இருந்தால்
பௌர்ணமி நிலவில்
பனங்கள்ளையும்
நிசப்த ராத்திரியில்
ஐஸ் பீரையும்
மொட்டைமாடிச் செவ்வகத்தில்
மிலிட்டரி ரம்மையும்
குடித்துப் பாரு
பிறகு
நட்சத்திரங்கள் ரத்தினமாகும்
நிலவு வைடூரியமாகும்
வானம் அற்புதப்படும்
இந்தநேரம் மட்டிலுமே
உன் சிநேகமும் என் சிநேகமும்
உண்மைபோல் படும்“
வாழ்க்கைக்காகச் செய்யப்படும் சமரசங்களை சொல்லும் கவிதை…
“ரத்தத்தில்
கைநனைத்ததில்லை நான்
எனினும்
ரத்தம் சிந்தவைப்பவர்களின் நிழலில்
தங்க நேர்கிறது எனக்கு
சோரம்
தொழிலாகக் கொண்டதில்லை நான்
எனினும்
சோரம் போகிறவர்களிடம்
சோறு வாங்கித் தின்ன நேர்கிறது எனக்கு
திருடிப்
பிழைத்ததில்லை நான்
எனினும்
திருடிப் பிழைப்பவர்களிடம்
யாசகம் வாங்கி வாழ நேர்கிறது எனக்கு
கூட்டிக்
கொடுத்ததில்லை நான்
எனினும்
கூட்டிக் கொடுப்பவர்களின்
கூடத் திரிய நேர்கிறது எனக்கு
காட்டிக்
கொடுத்ததில்லை நான்
எனினும்
காட்டிக் கொடுப்பவர்களின்
கருணையில் காலங்கழிக்க நேர்கிறது எனக்கு
பாவத்தில் வந்த பலனைக் கையாடினால்
பாவம் படியாதோ சாபம் கவியாதோ
முதலில்
என்னை
காப்பாற்றிக்கொள்ள வேண்டும்
என்னை
நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்
இல்லெங்கில்
எச்சில் பிழைப்புத்தான்
இரண்டும் கெட்டான் வாழ்க்கை தான்“
‘குற்றாலக்குடியிருப்பில்‘ என்ற கவிதையில் வரும் வரி என்னை மிகவும் கவர்ந்தது…
“எப்பவும்
பசிக்கிற வயிற்றுக்கு
வஞ்சகம் தெரியாது“
கொடும் பசியில் இருக்கும் வயிற்றை சாபமிடும் பாடல்களுக்கு மாற்றாக பசி வயிற்றின் இயல்பு என்ற புரிதலுடன் வாஞ்சையுடன் அதை தடவி விடுகிறார். இந்த வரியால் இவ்வுலகத்திலும் மனிதர்களிடமும் நம்மிடமும் இயல்பாகவே வெளிப்படும் அத்தனை நல்ல-தீய தருணங்களையும் ஒரேபோல எந்த உறுத்தலும் இல்லாமல் கனிவுடன் புரிந்து கொள்ள முடியும்…
தடையைத் தாண்டிப் புன்னகைக்கும் இடங்கள் கொண்ட கவிதை வரிகள் மேலும்…
“…..
கண்ணாடிச் சில்லுகள் பதித்த
கல் மதில்கள் தாண்டி
காற்றும் நிழலுமாக
விரிந்து படர்ந்து நிற்கிறது
ஒரு வேப்ப மரம்“
வாழ்க்கையில் வெறுமையை உணரும் நாட்களைப் பற்றி பேசும் ‘இன்று’ கவிதை…
“இன்று
எப்படிக் கழிந்ததென்று
எனக்குத் தெரியாது
உனக்கென்ன தெரியும்
யோசித்துப் பார்த்தால்
யாருக்கும் தெரியாது.
விடிந்ததும் அடைந்ததும்
வித்தியாசமின்றிப் போயிற்று.
வாழ்வு இதுவெனச் சொன்னால்
வதைப்படுத்தும் அபத்தம்
சாராம்சம் இதுதானென்றால்
செத்துப் போகலாம்.
சொல்லிக் கொள்ளலாம்
பேய்களல்ல மனிதர்கள்
பூத பைசாசங்களும் அல்ல
தேவர்களும் அல்ல அல்ல
எதையோ தேடி
எதையோ அடைந்து
தேடியும் அடைந்ததும்
வேறு வேறு என்றுணர்ந்து
விளங்கிக் குழம்பும்
அல்ப உயிர்கள்“
கீதையின் சாராம்சமான தத்துவ-மெய்யியல் உபதேசம் போல இருக்கிறது ‘தன்னை அறிந்தால்‘ அறிந்தால்’ கவிதை…
“தன்னை அறிந்தால்
தலைவனும் ஆகலாம்
ஞானியும் ஆகலாம்
யோகியும் ஆகலாம்
முண்டியடித்து
முன்னுக்கு வருவது தலைமை
ஒதுங்கியிருந்து
உயர்வடையப் பார்ப்பது ஞானம்
சுயம் கடந்து
சும்மா இருப்பது யோகம்
தன்மை பெறவே
தம்மை அறிவீர்“
அதே நேரத்தில் இது போன்ற இடங்களில் காணப்படும் இரட்டை-நிலையை விமர்சிக்கவும் செய்கிறார்…
“அவர்கள்
பேசுவது பகவத்கீதை
பின்னால் இருக்கிறது
பாதுகாப்பான வாழ்க்கை“
கற்றலின் தருணங்களில் நம்மிடம் கடுமையாக நடந்து கொள்ளும் ஆசிரியர்களை ஞாபகப்படுத்தியது இந்த வரிகள்…
“சூரியன்
காய்வதாக முணுமுணுக்கிறார்கள் சில பலர்
உண்மை
இல்லாமல் இல்லை
சூரியன்
இல்லாமல் வாழமுடியுமென்றும் தோன்றவில்லை“
சந்தர்பங்களில் நாம் கொள்ளும் இரு வேறு அணுகுமுறைகளைச் சொல்லும் ‘கூடவே வரும் நிழல்கள்’ கவிதை:
“விஷயங்களை
லகுவாக எடுத்துக்கொள்கிறீர்கள்
அல்லது குழப்பிக்கொள்கிறீர்கள்
வாழ்க்கையை
இயல்பாக நடத்துகிறீர்கள்
அல்லது சிக்கலாக்கிக்கொள்கிறீர்கள்
உறவுகளை
அப்படியே ஏற்றுக்கொள்கிறீர்கள்
அல்லது மோதிக் கொண்டிருக்கிறீர்கள்
உலகத்தை
உள்ளது உள்ளபடி பார்க்கிறீர்கள்
அல்லது புரிந்துகொள்ளமுடியாமல் தவிக்கிறீர்கள்
தெய்வத்தை
சொல்லிக்கொடுத்தது போலவே நம்புகிறீர்கள்
அல்லது கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்
வழிகள்
பிரிகின்றன
வழிகள்
பிரிகின்றன
காட்சிகள்
மாறுகின்றன
நிழல்கள்(மட்டும்)
கூடவே வருகின்றன “
நேரடிப்பார்வைக்கு சுவாரஸ்யமளிக்கும் பயன்பாடு சார்ந்த ஒன்றிற்கு நம்மால் நேரில் உணர முடியாத சுவாரிஸ்யமற்ற ஒன்று அடிப்படையாக இருக்கிறது…..
“பூ விட்டு
காய் காய்த்து
கனிந்து உதிர
வேர்கள்
வெகு ஆழமாக
மண்ணுக்குள்
…………”
காமத்தை பூசி மெழுகாமல் விவரிக்கும் வரிகள் பல…
“அதில்
பெரிதாக ஒன்றுமில்லை
அது
இல்லாமலும் முடிவதில்லை“
“சிவப்புப்பட்டுக்கு
மஞ்சள்கரை ஜோர்
மஞ்சள்பட்டுக்கு
கறுப்புக்கரை பிரமாதம்
பட்டோடு படுத்து
புரளுவார்களா யாரும்“
இந்த அளவிற்கு நேரடியாக ‘எதிர்கவிதை’ எழுதுவதற்கான காரணத்தையும் சொல்லிச் செல்கிறார்…
“……………..
நெருப்பை
நெருப்பென்று
கூறமாட்டாதவன் நவநீதம்
இயற்கையின் எரிகொழுந்து
என்று தான் எடுத்துரைப்பான் சுதாவின்
காற்றை
காற்றென்று
சொல்லியறியாதவன் கைலாசம்
அலைவுறும்
ஆதி உயிர்மூச்சு என்பான் சகஜமாக
புணர்ச்சி
போகமென்று
பேசவேமாட்டான் சேது
இந்திரனின் சிந்தை
என்றே பேசுவான் இயல்பாக
சொக்கன்
நொந்து போய்த்தான்
எழுத ஆரம்பித்தது
எதிர்கவிதை“
விக்ரமாதித்யன் கவிதைகளில் பல இடங்களில் பெருதெய்வங்கள் நாட்டார் தெய்வங்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். அதனாலேயே அவ்வரிகளை வாசிக்கும் போது நமக்கு நன்கு தெரிந்த தாத்தாவின் கதை கூறலை அணுக்கமாகக் கேட்கும் உணர்வு ஏற்படுகிறது…
“கருப்பசாமிபற்றி
கவிதையெழுதி இருக்கிறாயா
ஐயனார் குறித்து எழுதாதவன்
ஐயோன்னு போகட்டும்
மாடசாமியைத் தெரியாதவன்
மடையனாகவே இருப்பான்
இசக்கியை அறியாதவன்
என்ன இலக்கியம் செய்வான்
மாடத்தியைக் கண்டுணராதவன்
மக்களுக்குச் சொல்ல என்ன வைத்திருப்பான்
எல்லாக் காலத்திலும்
இருப்பான் கண்ணதாசன்“
மற்றொரு கவிதை:
“செண்பகக்காட்டில்
செம்பாதேவி
குற்றால அருவிப்பக்கம்
குழலி
உலகம்மை
ஒய்யாரமாக ஆற்றங்கரையில்
வேணுவனத்தில்
விநயமாக காந்திமதித்தாய்
அம்மா இருக்கும் தைரியத்தில்
அழும்பனாக நான்“
இன்னொரு உயிரை அணுக்கமாக உணரும் ஒரு உயிருக்கு தனக்கு நெருக்கமான அந்த உயிரின் பிரச்சினையும் தன் பிரச்சினை ஆகத் தெரிகிறது. தாய்-சேய் உறவு, நட்பு, காதல் எல்லாம் அப்படித்தான். தேசத்தின் எல்லா தரப்பு மக்களையும் தன் மக்களாகக் கருதிய காந்திக்கு பிரச்சினைகள் பிரம்மாண்டமானதாக இருந்திருக்கும். அவர் பேருயிர்.
“ஓருயிர்
ஆருயிரென உணர்வது
பேருயிர்
பேருயிரின்
பிரச்சனைகள் பெரியவை“
அவருக்கு அவரது நெல்லை மண் மேல் இருக்கும் பற்று வெளிப்படும் கவிதை:
“மாதவிடாயை
தீண்டலென்பது வழக்கு
காய்விழுதலென்றால்
கருச்சிதைவு
மனநோய்க்கு
கோட்டி
சொல்லே கவிதைதான்
சொல்லித்தந்தது தாம்ரவருணிக்கரை“
நாம் ஒன்றை மற்றவர்களுக்கு அளிப்பதற்கு அவ்வொரு கணமேனும் தாய்மையின் உள்ளத்தை கைகொள்ளாமல் முடியாது. அத்தாய்மையின் கணத்தைக் கூறும் வரிகள் இவை…
“பொழிவதற்குமுன்
சூல்கொள்ள வேண்டியிருக்கிறது
மேகங்கள்“
கவிதை உருவாகும் தருணத்தை பற்றிய வியப்பை வெளிப்படுத்தும் ‘மலை வளரும் என்கிறார்கள்’ என்ற கவிதையில் வரும் வரிகள்…
“…….
பூமி தருகிறது
தெரியும்
வானம் பொழிகிறது
தெரியும்
தெரியவேயில்லை
தெரியவேயில்லை
எளிய தமிழ்
எப்படிக் கைகூடிவருகிறது
கவிதை
எப்படித் தோன்றுகிறது
……. “
இவர் சரியான நாடோடிக் கலகக்காரன் என்று நினைக்க வைக்கும் கவிதை…
“எங்கு போவாய்
என்ன செய்வாய்
இதை யோசிக்கவில்லையா
கால்போகும் போக்கில்
நான் போவேன்
கலகமும் செய்வேன்
சும்மாவும் இருப்பேன்
யோசனையில்
இல்லை தீர்வு
வருகிறது
நேர்கிறது
நடக்கிறது
இருப்பு
சரிதானே
இதற்குமேல்
என்ன கேள்வி
இன்னும் கேட்டால்
தொலைத்தது தேடி அடிப்பேன்“
விக்கி அண்ணாச்சியின் நக்கலும் எள்ளலும் அப்பட்டமாகத் தெரியும் கவிதைகள் பல…
“உங்கள் கவிதையில்
படிமங்கள் இல்லையே.”
“இரா(து) வலிந்துகட்டவேண்டாம்
என்றுதான் விட்டுவிட்டது.”
“
உருவகங்கள்கூட
காணோமே
.”
“அவசியமில்லை
காலத்துக்குப் பொருந்தா(து).”
“
அலங்காரம்
உத்திவிசேஷம்
?”
“
எதற்கு
?
உதிர்த்தாயிற்று
(
ஓர்மையாக
).”
“பிறகு என்ன
கவிதை இது.”
“இன்றைய கவிதை
எதிர்கவிதை.”
மற்றொரு கவிதை:
“நன்னிலம்
நடராஜன் பேச்சு
ராஜேஷ்
குமார் எழுத்து
தினத்
தந்தி பேப்பர்
ரஜினி
படம்
கங்கை
அமரன் பாட்டு
குமுதம் குஷ்பு
தமிழ் திராவிட வாழ்வு“
நம்மால் ஊகித்திருக்க முடியாத வண்ணங்களால் நிரம்பி வழிகிறது விக்ரமாதித்யன் கவிதைகள். இன்னும் இன்னும் அற்புதமான கவிதை வரிகள் நிறைய இருக்கிறது. வண்ணத்துப்பூச்சியைப் பிடித்தால் அதன் இறக்கைகளின் வண்ணங்கள் நம் கைகளில் படிந்து கொள்வது போல விக்கி அண்ணாச்சியின் கவிதைகளில் வண்ணங்களைத் தேடிச்சென்ற என் மனதில் பல வரிகள் ஆழமாகப் பதிந்து விட்டன. தீ அழகுதான் தூரத்தில் இருந்தால், தண்ணீர்ருசி அறிந்து தாகம் வளர்ந்தது, சிவனுக்கென்ன சொல்லிவிட்டான் சிரமம் நந்திக்கல்லவோ, ‘பொழிவதற்குமுன்
சூல்கொள்ள வேண்டியிருக்கிறது
மேகங்கள்‘, ‘ஓடையில் உருண்டோடி ஓடி கல்லே பூவாகிவிட்டது‘, “எல்லோருக்குமாக
பெய்கிறது மழை
எல்லோருக்குமாக விளையவில்லை
ஏழிலைக் கிழங்கு“, போன்றவை. இவ்வரிகள் வேறு வேறு வண்ணங்களில் மின்னிக் கொண்டு வேறு வேறு அர்த்தங்களை கொடுத்துக் கொண்டேயிருக்கிறது!
அண்ணாச்சியின் ‘நிறமற்றவன்’ என்ற கவிதை:
“நிலத்தை
சூடிக்கொண்டது வானம்
பச்சையை
ஏந்திக்கொண்டது வயல்
கறுப்பை
வாங்கிக்கொண்டது கொண்டல்
வெண்மையைப்
பூசிக்கொண்டது பருத்தி
மஞ்சளை
அப்பிக்கொண்டது சந்தனம்
பழுப்பை
அணிந்துகொண்டது மரம்
சிவப்பை
வரித்துக்கொண்டது ரத்தம்
ஏழுவண்ணங்களிலும் கொஞ்சம் திருடி
எடுத்துக்கொண்டது இந்திர தனுசு
இவனுக்கென்று இல்லாமல்போயிற்று
தனி ஒரு நிறம்“
ஏழ நிறங்களுக்கும் மேல் பல நுண்ணிய வேறுபாடுகளுடன் பல நூறு நிறங்களும் இந்த இந்திர தனுசில் இருக்கிறது. விக்கி அண்ணாச்சியின் கவிதைகளை வாசிக்கும் முன் அவரை வரைந்த போது ஏற்பட்ட பிம்பங்கள் அவரது கவிதைத் தொகுப்புகளை வாசித்த பிறகு மேலும் பலமடங்கானது. ஏற்கனவே இருந்த அவரது பிம்மங்களுடன் அவர் ஒரு கோபக்காரனாக, சாதுவாக, தோல்வியுற்றவனாக, பல இடங்களில் ஜெயித்தவனாக, நீதிமானாக, சுயநலமுள்ள சாதாரண மனிதனாக, ஞானியாக, யோகியாக, போகியாக, சன்னியாசியாக, ரசனையுள்ளவனாக, கையாலாகாதவனாக, துடிப்பானவனாக, சோம்பேறியாக அவரது சிடுக்குகளும், நெகிழ்ச்சிகளும், இயலாமையும், அன்பும், வெறுப்பும், கொண்டாட்டமும், அப்பாவித்தனம் அடாவடித்தனம் என்று எல்லாம் புலப்படுகிறது. ஒரு கவிஞனாக அவரின் உணர்வுகளின் ஏற்றவும் இறக்கவும் உணரமுடிகிறது.
இதற்கெல்லாம் மேலாக இப்போது என் மனதிற்கும் பல வண்ணங்களின் தீற்றல்கள் நிரம்பி இருக்கும் என் ஓவிய வடிவிற்கும் மேலும் அணுக்கமானவராகத் தெரிந்தார். அதனால் அவரது ஓவியத்தை உருவாக்கிக் கொள்வதற்கான வண்ணங்களை வாசிக்கும் கணங்களில் அவரது வரிகளிலிருந்தே தொட்டெடுத்து எனக்கான ஒரு விக்ரமாதித்யனை மறுபடியும் உருவாக்கிக் கொண்டேன். அக்கண நொடிகளில் உருவாகிவந்த பல வண்ணக்கலவைகளால் நிறைந்த விக்ரமாதித்யன்….
வேதமந்திரம் போல் ஒலிக்கும் விக்ரமாதித்யன் கவிதை வரி ஒன்று உள்ளது…
“ஓம்
அது நிறைந்திருக்கிறது
இது நிறைந்திருக்கிறது
நிறைவு நிறைவினின்றும் எழுகிறது
நிறைவினின்றும் நிறைவு எடுத்து
நிறைவே எஞ்சுகிறது
ஓம் சாந்தி சாந்தி சாந்தி…”
அன்புடன்,
ஜெயராம்
கதைகள், கடிதங்கள்
நூல்கள் வாங்க
https://www.vishnupurampublications.com/அன்புள்ள ஜெயமோகன்
நலமாக இருப்பீர்கள் என நினைக்கிறேன். பேசாதவர்கள் படித்தேன்.
‘ஜெயிலர்களுக்கே அரசியல் கைதிகள் மேல் மரியாதை வர ஆரம்பித்தது. ’ஒருவேளை சுயராஜ்யம் கிடைத்தால் இவர்கள் நம் எஜமானர்களாக வந்தாலும் வருவார்கள்’ என்று ஜெயிலர் குட்டப்பன் பிள்ளை சொன்னதும் நாங்களெல்லாம் சிரித்தோம். ஆனால் அது எல்லாருக்கும் உள்ளூர நடுக்கத்தை உருவாக்கியது.’
இந்த வரிகளைப் படித்தபோது ராஜ்மோகன் காந்தியின் Modern South India: A History from the 17th Century to Our times நூலில் படித்த திவான் சிபி ராமஸ்வாமி ஐயரின் ராஜினாமா கடித வரிகள் ஏனோ நினைவு வந்தது:
“On 14 August, he resigned as dewan. Five days later he left the state.
On 28 July 1947, in a letter contemplating resignation, Iyer had written to the ruler:
‘By temperament and training, I am unfit for compromises, being autocratic and over decisive. I don’t fit into the present environment.’”
இந்த கடித வரிகளை out of context ஆக குறிப்பிடும் நோக்கமில்லை. இந்த பத்திக்கு முந்தைய பக்கங்களில், ராஜ்மோகன் காந்தி, அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தான-ஆங்கிலேய உறவுகளையும் சி.பி.ரா அன்னி பெசன்ட்டின் காலத்தில் காங்கிரஸில் இருந்ததையும் காந்தியின் தலைமையேற்பிற்கு பின் காங்கிரசிலிருந்து விலகியதையும் இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக ஆலய நுழைவில் ஐயருக்கு இருந்த பங்கையும், அதனால் கேரள பழமைவாதிகளின் வெறுப்புக்கு ஆளானதையும், அதே சமயம் அன்று கேரளாவில் நடந்து கொண்டிருந்த அரசியல் இயக்கங்கள் அவை நிகழ்த்திய மாறுதல்கள் அவற்றின் வீச்சு பற்றி கொஞ்சம் அறியாமையுடன் இருந்ததையும் பதிவு செய்கிறார் தான். கருப்பும் வெளுப்புமாய் தானே மனிதர்கள்.
அன்புடன்
மங்கை
திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். நலமறிய ஆவல்.( நல்லதொரு பாட்டின் முதல் வரிகள்)எனது 72 வயதில் தமிழில் பண்பட்டபுத்தகங்களை நூலகத்திலிருந்து எடுத்து வந்து படித்து இன்புற்றிருக்கிறேன். தற்போது தங்களின் விசும்பு படித்துக்கொண்டுஇருக்கிறேன்.
அதில் ‘ உற்று நொக்கும் பறவை’ படித்தபின்னர் எனதுள் எழுந்த எண்ணங்களை தங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி.இக்கதையில் பகிரப்பட்ட செய்திகள் தங்களின் கற்பனையா? ஆச்சரியம் அடைகிறேன். தற்பொழுது உள்ளமத சம்பத்தப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் தங்களின் கற்பனைக்குஉண்மை சேர்க்கும் விதமாக உள்ளது என்று தோன்றுகிறது.
ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தங்களை சந்தித்து அளவளாவ வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன்.
நலத்துடன் இருக்கவும்.
ராமதாஸ்.
ஜெயமோகன் மின்நூல்கள் வாங்க அமேசான்
ஜெயமோகன் நூல்கள் வாங்க
December 11, 2021
ஒழுகிச்சென்ற ஒரு வாரம்
சென்ற சில மாதங்களாகவே நான் வீட்டில் மிகக்குறைவான நாட்களே இருந்தேன். மாதத்திற்கு ஐந்து நாட்கள் இருந்தால் அதிகம். நவம்பரில் பதினொரு நாட்கள் டெக்கான் டிராப் என்னும் இந்திய மையமேற்கு நிலப்பகுதியில் பயணம் செய்தோம். ஒன்பதுபேர் இரண்டு கார்களில். திரும்பி வந்தது நவம்பர் 27 ஆம் தேதி காலையில். அன்றே மாலையில் கிளம்பி சென்னை சென்றேன். திரும்பி ஊருக்கு வந்தது டிசம்பர் ஐந்தாம் தேதி.
ஆறாம் தேதி அருண்மொழியும் சைதன்யாவும் சுபஸ்ரீயும் அஜ்மீர் கிளம்பிச் சென்றனர். நான் சென்ற அதே பாதையில் செல்லவேண்டும், அதேபோல தர்காவில் வழிபாடு செய்யவேண்டும் என்று விரும்பினர். ஆகவே வீட்டில் தனியாக ஒரு வாரம். பயணக்கட்டுரைகள் எழுதலாமென நினைத்தேன். ஆனால் விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கான ஏற்பாடுகள். அதன் இலக்கிய உள்ளடக்கம் சார்ந்த வேலைகள்தான் என்னுடைய பொறுப்பு. சிறப்பு விருந்தினர்களுக்கான தேடல். அதன்பின் அவர்களை அறிமுகம் செய்யும் எழுத்துக்களை உருவாக்குதல். ஆனாலும் நேரம் இழுத்தது. கூடவே பலவகையான திரைக்கதை வேலைகள்.
ஒருவாரம் கிட்டத்தட்ட வீட்டுக்குள்ளேயே இருந்தேன். தம்பி ஷாகுல் ஹமீது இருமுறை வந்து பார்த்து பேசிக்கொண்டிருந்தார். இருளர்களுக்காக என ஒரு பதிவு அவர் எழுதி என் தளத்தில் வந்தது. அரசில் இருந்து தலைமை ஆட்சிப்பணி அதிகாரி அழைத்து அதை கவனித்ததாகவும், ஆவன செய்வதாகவும் சொல்லி எண்களைப் பெற்றுக்கொண்டார். ஷாகுலுக்கு அதில் பெரிய நிறைவு. இப்படி ஓர் இணையதளச் செய்தியை கவனிக்கும்படி அரசு இருப்பது வியப்புக்குரியதுதான்
ஒரே ஒருமுறை காலைநடை சென்றேன். ஆனால் செல்லும் வழிமுழுக்க குப்பைக்கூளங்கள். இரும்புக் கம்பிச்சுருள்கள். சேறு. இப்பகுதியில் மாபெரும் ஆறுவழிச்சாலை கட்டுமானம் நிகழ்கிறது. அவர்கள் தடம்போட்டதுமே குப்பைலாரிகள் வர ஆரம்பித்துவிட்டன. குப்பையாலேயே மேடாக்கிச் சாலைபோடுகிறார்கள். இனி இயற்கையெழில் நிறைந்த பாறையடி கணியாபுரம் சாலை இல்லை. இந்நிலம் இனி என் பதிவுகளில், புகைப்படங்களில் மட்டும்தான் எஞ்சும்.
வீட்டிலேயே நடை செல்லலாம் என எண்ணினேன். ஆனால் அதற்கும் வழியில்லை. மொட்டைமாடி நன்றாகவே வழுக்குகிறது. நீண்டநாள் மழையின் விளைவான பாசி. எப்படியும் கொஞ்சம் உடற் பயிற்சி தேவை. இப்போதெல்லாம் நான் ஒருமணிநேரத்துக்கு ஒருமுறை எழுந்து ஏதாவது செய்யவேண்டுமென்பதை நெறியாகக் கொண்டிருக்கிறேன். வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தேன். அது கொஞ்சம் வியர்க்க வைத்தது.
எப்படியும் அருண்மொழி வீட்டுக்கு வந்ததும் “வீடு கிடக்குற கிடை” என்று ஒரு சில சொற்றொடர்கள் சொல்வாள். அதற்குமுன் வீட்டை சுத்தம் செய்து வைத்தாலும் அந்தச் சொற்றொடர் தவறாது. இதெல்லாம் என் கடமை. வீட்டைச்சுற்றி தூய்மை செய்யக்கூடாது என அருண்மொழி ஆணை. வீட்டுவேலையை ஆண்கள் செய்வது பக்கத்துவீட்டுக்காரர்களுக்கு தெரிந்துவிடக்கூடாது. இணையம் வழி உலகம் முழுக்க தெரியலாம்.
ஒரு ‘பேச்சுலர்’ வாழ்க்கை. அனீஷ் கிருஷ்ணன் நாயர் வந்து அவருடைய நண்பரும் நிலவியல் -தொல்லியல் ஆய்வாளருமான ராம்குமார் தமிழகத்தில் செய்த அகழ்வாய்வுகள் பற்றிய ஒரு கட்டுரையை அளித்தார். புகழ்பெற்ற ஆய்வேட்டில் வெளிவந்த கட்டுரை. அதை படித்து சுருக்கிக்கொண்டு புரிந்துகொள்ள ஒருநாள் ஆகியது. இதுவரையிலான பல அகழ்வாய்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்ய கோரும் ஆய்வேடு அது.
பேச்சுலர் வாழ்க்கையின் அம்சமாக ஒரு சினிமா பார்க்கலாமென முடிவுசெய்தோம். நானும் அனீஷும் போகனுமாக மரக்கார் அரபிக்கடலின் சிங்கம் படம் பார்த்தோம். மிகப் பெரிய பணச்செலவில், மிகப்பெரிய உழைப்பில் எடுக்கப்பட்ட படம். கடற்போர் இந்திய சினிமாவிலேயே இதுவரை இல்லாதவகையில் எடுக்கப்பட்டுள்ளது. உச்சகட்டப் போரும் சிறப்பு.
பத்தாம் தேதி பொன்னீலனின் பேத்தி [மகளுடைய மகள்] பிரியதர்சினியின் திருமணம். நாகர்கோயில் கங்கா கிராண்ட்யூர். நான் சுத்தமாக மறந்தேபோனேன். அருண்மொழி இருந்தால் நினைவூட்டியிருப்பாள். ராம் தங்கம் அழைத்ததனால் அடித்துப்புரண்டு ஆட்டோவில் கிளம்பிச் சென்றேன்.
பொன்னீலனையும் பல நாகர்கோயில் இலக்கிய நண்பர்களையும் சந்தித்தேன். பொன்னீலன் வழக்கம் போல அழகாக இருந்தார். சமீபத்தில் கொஞ்சம் நோயுற்றபின் ஒரு சின்ன நடுக்கம் இருக்கிறது. மற்றபடி உற்சாகமாக இருந்தார். ராம் தங்கம், ராகுல், இளையராஜா போன்ற நண்பர்களுடன் உணவருந்தினேன்மிகச்சிறப்பான கேரள பாணி உணவு. பிரதமன்கள் அற்புதமாக இருந்தன.
பொன்னீலனின் அம்மா அழகியநாயகி அம்மாள் ஓர் எழுத்தாளர். அவருடைய கவலை என்னும் தன்வரலாற்றுநூல் முக்கியமான ஓர் இலக்கிய ஆவணம். பொன்னீலன் சாகித்ய அக்காதமி விருது பெற்ற படைப்பாளி. அவர் மகள் நூல்கள் எழுதியிருக்கிறார். திருமணமாகும் இந்த பேத்தி பிரியதர்சினி பொன்னீலனின் கரிசல் நாவலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து அது பெங்குவின் வெளியீடாக வரவிருக்கிறது. நான்கு தலைமுறையாக ஒரு குடும்பத்தில் இலக்கியம் திகழ்வது அரிதான விஷயம்தான்.
மறுநாள் காலையிலேயே போனை மூடிவைக்கவேண்டியிருந்தது. வெந்து தணிந்தது காடு டீசர் வெளிவந்திருந்தது. ஒரு டிரெயிலர் பெறும் வரவேற்பு அரைமணிநேரத்திலேயே தெரிந்துவிடும். படம் மீது பயங்கரமான எதிர்பார்ப்பு இருப்பது தெரிந்தது. எப்படி எண்ணை கண்டுபிடிக்கிறார்கள் என்று தெரியவில்லை
‘அந்தக்கதை வெளியான தொகுப்புதானே சார் ஐந்து நெருப்பு?” என்றார் நண்பர். ”அத ஏகப்பட்ட பேர் வாங்கிருவானுகளே?”.
நான் “ஆமா, ஒரு அம்பது காப்பி விக்க வாய்ப்பிருக்கு” என்றேன்.
அவர் என்னை குழப்பமாகப் பார்த்தார். “நான் கடவுள் வந்த பிறகு ஏழாம் உலகம் நூறு காப்பி கூடுதலா வித்தது…” என்று நான் சொன்னேன். “அது வேற இது வேற”
மொத்தத்தில் பயணக்கட்டுரை எழுதாமல் ஒருவாரம் கடந்து சென்றது. மாலையில் கிளம்பி ஈரோடு செல்கிறேன். அங்கே மருத்துவர் ஜீவா அவர்களுக்காக நினைவுக்கூட்டமும் அரங்கும். ஜீவா குறித்த நினைவுகள் எழுகின்றன. தளராத நன்னம்பிக்கையுடன் பணியாற்றிய ஒரு போராளி. காந்தியின் பெயர் சொல்லத் தகுதியான சிலரில் ஒருவர். என்னுடைய இன்றைய காந்தியை அவருக்குத்தான் சமர்ப்பணம் செய்திருந்தேன்.
விக்ரமாதித்யனின் ஆன்மிகம் – போகன்
விக்கிரமாதித்தியன் கவிதைகள் பற்றி ஜெயமோகன் எழுதிக்கொண்டிருக்கும் கட்டுரைகளைப் படித்தேன்.முதலிரண்டு பகுதிகளும் கூர்மையானவை.மூன்றாவது பகுதியில் எனக்குச் சில கருத்து வேறுபாடுகள் உண்டு.இதில் அவர் விக்கிரமாதித்தியன் கவிதைகள் ஆன்மீகமற்ற தூய அழகியலைக் கொண்டவை என்கிறார்.அதே கட்டுரையிலேயே பின்பகுதியில் அவர் எழுதியிருப்பதுடன் முரண்படும் அவதானம் இது.ஒப்பிட வண்ணதாசனின் கவிதைகளே ஆன்மீகமற்ற தூய அழகியலைக் கொண்டவை.தற்காலத்தில் இது திருச்செந்தாழை.
விக்கிரமாதித்தியன் கவிதைகளில் அவர் பிறந்த சைவ வேளாள சமூகத்தின் அத்தனை தொன்மங்களும் மனச் சுழல்களும் உள்ளன.கோவில் கோவிலாகச் சுற்றுவது,ஜோதிட ஆர்வம்,சக்தி வழிபாடு,சித்தர் வழிபாடு,திராவிடம் பற்றிய இருதலையான நோக்கு,மெலிதான வைஷ்ணவ வெறுப்பு,காசியின் மீதான பிரமிப்பு எல்லாமே அவரது சைவ வெள்ளாள ஆன்மீகத்திலிருந்து வருகிறவையே.அவர் கவிதைகளிலும் இது தொட்டுத் தொட்டு வந்துகொண்டே இருக்கிறது.உலகம் எப்போதும் எரிந்துகொண்டே இருக்கும் மிகப்பெரிய சுடலைமயானம் என்பது அவர் கவிதைகளிலிருந்து நமக்கு கிடைக்கும் சித்திரம்.இந்த தொனியை ஒட்டிய நிறைய கவிதைகளைத் திரு மந்திரத்தில் காணலாம்.
அவரது தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள் அவரது சைவ சித்தாந்த பின்புலம் தரும் இந்த ஆன்மீக தத்துவ தரிசனத்தை இன்னும் கெட்டிப்படுத்தின என்றே தோன்றுகிறது.ஒரு வீழ்ந்துபட்ட வீட்டின் சமூகத்தின் விட்டேற்றியான பார்வையும் பரிகாரங்கள் மூலம் கண்ணுக்குத் தெரியாத பெரிய சக்திகளைப் ப்ரீதிப்படுத்திக் கொண்டே இருக்கும் வாழ்வு குறித்து மிகப்பெரிய அச்ச நோக்கும் அவர் கவிதைகளில் மாறி மாறி வந்துகொண்டே இருக்கின்றன.இந்த இரட்டை நிலையை தமிழில் இப்போது லட்சுமி மணிவண்ணன் மட்டும் அவ்வப்போது எடுத்தாள்வதுண்டு.
விக்கிரமாதித்யன் menial jobs எனப்படும் வேலைகள் நிறைய செய்திருக்கிறார்.ஹோட்டல்களில் சர்வராக வேலை பார்த்திருக்கிறார்.நிரந்தரமான வேலை ஒன்று இல்லை.எப்போதும் பணத்துக்காக இன்னொருவரை எதிர்பார்க்கவேண்டிய நிலையில் இருந்திருக்கிறார்.இது பற்றிய நன்றி,கசப்பு இரண்டுமே அவர் கவிதைகளில் உண்டு. உணவு,குடி பற்றியே அவர் அதிகம் எழுதியிருப்பதற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் இது நிச்சயமாக உண்டு குடி களி கொண்டாடு என்று சாரு நிவேதிதா போன்றவர்கள் சொல்லும் epicureanism அல்ல.’சோற்றைப் பழிக்காதே.அது அடுத்தவேளை வருமா தெரியாது’என்கிற மன நிலையிலிருந்து வருவது.
விக்கிரமாதித்யனால் புதுமைப்பித்தன் போல முற்றிலும் புத்திக்கூர்மையால் தனது கலாச்சார வேர்களிலிருந்து அதன் முட்டுச் சந்துகளிலிருந்து விலக முடியவில்லை. அதற்கு அவர் முயலவும் இல்லை.அதுக்கென்ன செய்றது அது அப்படித்தான் இருக்கிறது என்பது போன்ற தொனி இதுகுறித்து அவர் கவிதைகளில் உண்டு.இதிலிருந்து தப்பிக்க அவர் வண்ண தாசன் போல அழகியலுக்குள் செல்லவில்லை. கலாப்ரியா போல திராவிடத்துக்குள் ஒதுங்கவில்லை.தனக்கு மிக அருகே இருந்த வாழ்க்கையை மட்டுமே எழுதியவர் அவர்.அவர் இன்னமும் ஒரு ஜோதிடராக சித்தராக முயன்றுகொண்டே இருக்கிறார்.பெரும்பாலான சைவ வேளாள ஆண்கள் பிறவி ஈடேற்றம் என்று நினைப்பது இது.இந்தப் பிரயாணத்தை ஒளிவு மறைவின்றி விக்கிரமாதித்யன் தன் கவிதைகளில் பதிவு செய்திருக்கிறார்.
ஒரு குமாஸ்தாவால் கவிஞனாக முடியாது என்பது விக்கிரமாதித்தியனின் புகழ்பெற்ற வாக்கியம்.குமாஸ்தாவால் ஒரு ஆன்மீகவாதியாக சாதுவாக பண்டாரமாகவும் ஆகமுடியாது.ஆகவே கவிஞனும் சன்னியாசியும் ஒருவரே என்று விக்கிரமாதியன் கருதுவது அவர் கவிதைகளில் தென்படுகிறது.
அதே நேரம் அன்றாடத்தால் சதா நைந்துகொண்டே இருக்கும் கவி மனதிலிருந்து தப்பிக்கவே அவர் குடியையும் ஆன்மீகத்தையும் மாறி மாறித் தேடிப்போகிறார் என்பதை உணரலாம்.ஒருவேளை இதையே ஜெயமோகன் ஆன்மீகமற்ற அழகியல் என்று சொல்கிறாரா தெரியவில்லை.விக்கிரமாதித்தியன் கவிதைகளில் தத்துவத் தேட்டம் பற்றிய பாசாங்குகள் இல்லை.அவருடைய ஆன்மீகம் சங்கரரின் ஆன்மீகமோ புத்தனின் ஆன்மீகமோ அல்ல.மனதில் எப்போதும் ஏதோ ஒரு வேண்டுதலோடு பழனிக்குப் பாத யாத்திரை செய்கிறவர்களின் ஆன்மீகம்.
ஆனால் ஒரு கவிஞன் வணிகம் செய்யலாம்.ஆன்மீகத்துக்குள் போகலாம்.ஜோதிடம் கற்கலாம்.அரசியலுக்குள் போகலாம்.ஒன்றுக்கு மூன்று கட்டி குடும்ப சாகரத்தில் குதிக்கலாம்.ஆனால் ஒருபோதும் அவனால் ஒரு முழுமையான குடும்பியாகவோ வியாபாரியாகவோ அரசியல்வாதியாகவோ ஜோதிடனாகவோ ஆன்மீகவாதியாகவோ மாறமுடியாது.அவன் எங்கும் தனது poetic sensibility எனப்படும் கவி நுண்ணுணர்வு முள் படுக்கையில் குத்திக்கொண்டே இருக்கும் அன்னியனாய்த் தான் இருப்பான் ஒரு கவிஞனாய்த்தான் எஞ்சுவான் என்பதே விக்கிரமாதியன் கவிதைகளிலிருந்து வாழ்விலிருந்து நாம் பெற்றுக்கொள்கிற பார்வை.
ஒருவகையில் கவிஞனின் துறவும் ஞானமும் ஆன்மீகமும் அவன் பெறக்கூடிய பெறவேண்டிய இறுதித் தரிசனமும் அதுவே.
போகன் சங்கர்
போகனின் மேற்குறிப்பிட்ட பகுதியை ஒட்டி என் தரப்பை விளக்க விரும்புகிறேன். நான் ஆன்மிகம் என்பது முழுமைநோக்கு. இவ்வுலக வாழ்க்கையை பிரபஞ்சதரினம் ஒன்றின் பகுதியாக ஆக்கும் பார்வை. உலகியல் கடந்த ஒரு நகர்வு. அதை அக்கட்டுரைக்குள் வரையறை செய்திருக்கிறேன்.
விக்ரமாதித்யனின் பக்தி- சோதிடம் போன்றவை முழுக்க முழுக்க உலகியல் சார்ந்தவை. உலகியல் வாழ்க்கையின் சிடுக்குகளுக்கான தீர்வு அல்லத்து பதில் என அவர் கண்டடைபவை அவை. அக்கட்டுரையிலேயே குறிப்பிட்டபடி அவர் தேடுவது ஓர் தெய்வீகக் குடும்பத்தை மட்டுமே.
எப்படியென்றாலும் கவிதைபற்றிய எல்லா பார்வைகளும் சரியானவையே. இப்படி அவர் கவிதைகளை இருகோணத்திலும் பார்ப்பதும் நன்றே
ஜெ
விஷ்ணுபுரம் விழா உரைகள்
விஷ்ணுபுரம் விழா 2010 முதல் நிகழ்கிறதென்றாலும் சுருதிடிவி வந்தபின்னர்தான் முறையாக அனைத்து உரைகளும் ஆவணப்படுத்தப்படுகின்றன. நவீன தொழில்நுட்பத்தின் ஒரு சாதனை. கூடுதலாக சுருதி டிவி கபிலன் அவர்களின் ஆர்வம்.
2020 விஷ்ணுபுரம் விழா பெரிதாக ஆவணப்படுத்தப்படவில்லை. ஏனென்றால் அது உள்ளறை நிகழ்வு. அபி அவர்களுக்கு விருது அளித்த 2019 விழாதான் நினைவில் பெரிதாக நின்றிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் விஷ்ணுபுரம் விழாக்கள் தொடங்கும்போது ஏற்படும் முதன்மையான கிளர்ச்சி என்பது பழைய நினைவுகள் பெருகி எழுவதுதான்
விஷ்ணுபுரம் விருது விழா 2020 உரைகள்விஷ்ணுபுரம் விழா 2019 உரைகள் அனைத்தும் விஷ்ணுபுரம் விழா 2018 உரைகள் அனைத்தும் விஷ்ணுபுரம் விருது 2017 உரைகள் அனைத்தும் விஷ்ணுபுரம் விருது விழா 2016 உரைகள் அனைத்தும்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

