Jeyamohan's Blog, page 708
September 28, 2022
கு.அழகிரிசாமி நூற்றாண்டு, ஒரு செயல்திட்டம்
தமிழ்ச் சிறுகதையுலகின் யதார்த்தவாத இலக்கிய ஆளுமையான கு.அழகிரிசாமி அவர்களின் நூற்றாண்டு தொடங்குகிறது. புதுமைப்பித்தன், கு.ப.ரா உள்ளிட்ட சிறுகதையாளர்களின் நிறைவரிசையில் கு.அழகிரிசாமி அவர்களும் தன்னுடைய புனைவுப் படைப்புகளால் முன்னோடியாகக் கொள்ளத்தக்கவர். இலக்கியம், இதழியல், நாடகம், மொழிபெயர்ப்பு, இசையியல் என பன்முகப் பரிமாணம் கொண்டவர். மானுடம் கொண்ட தீராப்பசியையும், விளிம்புநிலை எளிய வாழ்வினையும் தன் படைப்புகளில் மூலக்கருவாக்கியவர் இவர்.
எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்கள் இவரைப் பற்றிய தனது நினைவோடையில் “மனித இயல்பை ஒரு சிடுக்காகக் காணாமல் அமைப்பின் மீது அதிகக் குறைகளைக் கண்டவர். ஆட்டிக் குலைக்கும் வாழ்விலும் மனித ஜீவன்கள் தக்கவைத்துக் கொண்டிருக்கும் மேன்மைகள் இவரைப் புல்லரிக்கச் செய்கின்றன. எளிமையான சாயல்களும் மென்மையான குரலும் மிகுந்த சிறுகதைப் பிரக்ஞையும் கொண்டவர்” என்றுரைக்கிறார்.
ஆகவே, தமிழின் தலைசிறந்த சிறுகதைப் படைப்பாளுமையான கு.அழகிரிசாமியின் நூற்றாண்டு தொடக்கத்தை மனமேந்திக் கொண்டாடும்விதமாக, ஒருவருட செயற்திட்டத்தை தன்னறம் நூல்வெளி முன்னெடுக்கிறது.
இச்செயற்திட்டத்தின் முக்கிய செயலசைவுகளாக,
1. கு.அழகிரிசாமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளைத் தொகுத்துப் புத்தகமாக்கி, அவைகளை விலையில்லாப் பிரதிகளாக 1000 வாசிப்புமனங்களுக்கு வழங்குதல்
2. நவீன ஒவியர்களைக் கொண்டு அவருடைய சிறுகதைகளின் சாராம்சங்களை ஓவியங்களாக வரைந்து காட்சிப்படுத்துதல்
3. ஆறு சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து அவைகளை நாடக வடிவில் நிகழ்த்துவது
4. கு.அழகிரிசாமியின் மார்பளவு உருவச்சிலையை நிறுவுதல்
ஆகியவைகளை கு.அழகிரிசாமி நூறாண்டு நிறைவடையும் இந்த ஒருவருடத்திற்குள் படிப்படியாக நிகழ்த்தி முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். நம் மொழியின் ஓர் முன்னோடிப் படைப்பாளியை சமகால இளம் மனங்களில் நிலைநிறுத்தும் பெருவிருப்பமே இத்திட்டத்தின் பிரதானக் காரணம்.
ஓர் தமிழெழுத்தாளராக தலைசிறந்த படைப்புகளைத் தந்து இம்மொழியின் இலக்கியச் சாத்தியங்களைப் பெருமளவு உயர்த்தியமைக்காக நன்றிசெலுத்தும் பொருட்டு இந்தச் செயற்திட்டத்தை மனதிலேற்று செயலாற்றத் துவங்குகிறோம். தோழமைகளின் கரமிணைவு இக்கனவினை இன்னும் உயிர்ப்போடு நிறைவேற்றும்.
நன்றியுடன்,
தன்னறம் நூல்வெளி
www.thannaram.in
September 27, 2022
புதிரின் நண்பன் நான் (கல்பற்றா நாராயணன் உரை)
யாருக்காவது ஒரு புதிரின் (enigma) நண்பனாக இருக்க முடியுமா? இமயம் ஒரு புதிர், கடல் ஒரு புதிர். கிறிஸ்து ஒரு புதிர் என்பதால்தான் அவர் ஒரு கன்னியின் வயிற்றில் பிறந்ததாக சொல்லப்படுகிறது. அதேபோலத்தான் கண்ணன் ஒரு புதிர் என நடராஜகுரு சொல்கிறார், அச்சொற்களால் தூண்டப்பட்டு வெண்முரசு போன்ற பிரம்மாண்டமான ஒரு நாவலை ஜெயமோகன் எழுதுகிறார். அவ்வாறு தான் அணுகும் அனைத்திலும் உள்ள மிக நுட்பமான புதிரின் ஈர்ப்பை அவர் உருவாக்கிக்கொள்கிறார். அதனால் கவரப்படுகிறார், அவரால் எந்த புதிரையும் கண்டுகொள்ள முடிகிறது. இதுவே ஜெயமோகனின் முக்கியமான தனித்தன்மை என நான் நினைக்கிறேன்.
உண்மையில், எப்பேர்ப்பட்ட ஆற்றல். நான் முதன்முதலில் அவரைக் கண்ட அன்றிலிருந்து இன்றுவரை தடையற்ற மின்சாரமென அது அவரிடமிருந்து வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதைக்கொண்டு இந்தியாவிலுள்ள அத்தனை கிராமங்களையும் மின்மயமாக்கலாம் என்று நாம் எண்ணிவிடுகிறோம். ஆற்றலைத் தாண்டி ஆழ்ந்த புரிதல்களையும் தனது புத்தகங்களின் வழி அவர் நமக்கு அளிக்கிறார்!
அனைத்தையும் மிக நுண்மையாக கவனிப்பவர் ஜெயமோகன். அவர் எப்படி செவிகொடுப்பவர் என அவருடன் இருக்கும் நண்பர்களுக்குத் தெரியும். குற்றாலம் கவிதை அரங்கில் அரை மணிநேர உரையாடலுக்குப் பிறகு, ஒரு வார்த்தைகூட விட்டுப்போகாமல் அவர் அதை மொழிபெயர்த்து திரும்பக் கூறிய அற்புதத்தை நான் கண்டிருக்கிறேன். அவருக்கு எப்போதும் இது சாத்தியமாயிருக்கிறது. அசாதாரணமான இந்த ஞாபகத்திறனால், அவர் எதிர்கொள்ளும் எந்த நிகழ்வும் பழகியதாகிப் போவதில்லை. அதுவே கூட அவரது இந்த ஆற்றலுக்கு அடிப்படையாக இருக்கலாம்.
அவர் எதைத்தான் எழுதவில்லை! முதலில் கவிதை, பிறகு கட்டுரை, சிறுகதைகள், நாவல்; ஒரு கட்டத்தில் எல்லாவற்றை அதே தரத்தில் தொடர்ந்து நிகழ்த்தும், காவியங்களென்று மட்டுமே கொள்ளத்தக்க நாவல்களை எழுதுகிறார், வெண்முரசு போன்ற செவ்விலக்கியங்களை படைக்கிறார். அவர் எதையும் ஒருபோதும் கையொழிவதில்லை, கவிதை எழுதிக்கொண்டிருந்த காலத்தின் கவித்துவத்தையோ, சிறுகதை எழுதும்போதும் கூடியிருந்த ஒருமையையோ அவர் இன்னும் தவறவிடவேயில்லை. இவ்வளவு எழுதிய பிறகும் உயிர்ப்பற்ற ஒரு வாக்கியத்தை கூட அவர் இதுவரை எழுதுவதில்லை என்பதுதான் அதன் சிறப்பு. எதிலும் ஆழ்ந்த ஈடுபாடில்லாமல் அவர் எழுதுவதேயில்லை.ஒரு வரியும் வீணாகாமல் இலட்சக்கணக்கான வாக்கியங்கள் கொண்ட நூல்களை அவர் எழுதியிருக்கிறார்.
இதெல்லாம் ஒரு மனிதனுக்கு சாத்தியமே இல்லை எனத் தோன்றும். அப்படி சாத்தியமாக வேண்டுமெனில் அவனுக்கு ஒன்று நிகழ்ந்திருக்க வேண்டும். அவன் தன் வாழ்வில் மிகக்கடினமான தனிமையை அனுபவித்திருக்க வேண்டும். நரகத்தில் பல தினங்கள் அவன் வாழ்ந்திருக்க வேண்டும். தனது வாழ்வின் ஒரு கட்டத்தில் அப்படி மரணம் முன்னால் வந்து நிற்கும் நரகத்தில் அவர் இருந்திருக்கிறார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.
நரகத்தில் வாழ்வதன் வித்தியாசம் என்ன தெரியுமா? நரகத்தின் ஒரு வருடம் சொர்கத்தின் நூறு வருடங்களுக்குச் சமம். ஒருவன் நரகத்தில் ஒன்றோ இரண்டோ ஆண்டுகள் கடந்து வந்தால் போதும், அந்த பிறப்பின் முழுமைக்குமான ஒளியை அது அவனுக்கு வழங்கிவிடுகிறது. அப்படி அந்த நரகத்திலிருந்து பெற்ற ஒளியைக் கொண்டு அவர், ‘தான் இனி ஒளிர மட்டுமே செய்வேன்’ என்ற முடிவோடு, ‘எவரையும் இருட்டிலிருக்க விடமாட்டேன்’ என்கிற பிடிவாதத்தோடு, இன்றுவரை தனக்கும் தன்னைச் சுற்றி உள்ளவர்களுக்கும் மட்டுமல்லாது எல்லோருக்கும் ஒளியை அளிக்கும் ஒரு எழுத்து முறையை அவர் உருவாக்கியுள்ளார்.
அவர் ஒரு மிகச்சிறந்த பயணி, நான் அவருடைய சில பயணங்களில் உடன் சென்றிருக்கிறேன். பாதையே இல்லாமல் பயணம் செல்லக்கூடியவர் அவர். எப்போதும் அவரது பயணத்திற்கு பின்னர்தான் அங்கு பாதை உருவாகிறது. அவருக்கு முன்னால் வழிகள் இல்லை, அவருக்கு பின்னால் வழிகள் உருவாகின்றன. பிறர் நடந்த வழியை ஜெயமோகன் பின்பற்றுவதேயில்லை. நடந்த வழிகள் பல, நடக்காத வழிகள் மிகச்சில. அப்படி எங்கும் யாரும் நடக்காத வழிகளில் தினமும் நடந்துகொண்டிருக்கிற ஒரு மனிதன் உருவாக்குகிற அதிசயக்கத்தக்க ஒளிதான் ஜெயமோகனின் தனித்துவம்.
அறம் கதைகளை வாசிக்கும் போது, நான் அதிசயித்துப் போயிருக்கிறேன். இது எவ்வாறு சாத்தியமாகிறது, இந்த கதைகளிலுள்ள சிறப்பு என்ன? உயிரோடு இருப்பவர்களும் மறைந்தவர்களுமான உண்மை மனிதர்களைக் குறித்த கதைகள் கொண்ட தொகுதி அது. அதன் ஆச்சரியப்படுத்தும் தன்மை என்னவெனில் அதில் அவர் புனைவைக் கையாளவேயில்லை. உண்மைதான் அங்கு பிரதானமாக இருக்கிறது. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பின் தலைப்பே கூட ‘உண்மையின் கதை’ என்பதுதான் (Stories of the true). உண்மை இப்படி ஆச்சரியப்படுத்துமா என்ன? சரிதான், உண்மையன்றி பொய் எப்படி அப்படி ஆச்சரியப்படுத்தும்?
‘இதில் (அறம் கதைகளில்) உண்மை மட்டுமே உள்ளதா’ என நான் அவரிடம் கேட்டிருக்கிறேன். ‘நிச்சயமாக, ஆனால் உண்மையை மேலும் நம்பத்தகுந்ததாக சொல்ல சிலநேரம் அதில் சில பொய்களை சேர்த்திருக்கிறேன்’ என அவர் சொன்னார். ஆம், அது அப்படித்தான். உண்மைக்கு நுண்விவரணைகள் இல்லை. பொய்க்கு நுண்விவரணைகள் உண்டு. நம்பகமான உண்மை என்பது கொஞ்சம் பொய் கலந்ததுதான். ஆங்காங்கே பொய்யின் பொடி போட்டு உண்மையை விளக்கி அதை மேலும் உண்மையாக ஆக்கியிருக்கிறார். ‘உள்ளதைச் சொன்னால் உறியும் சிரிக்கும்’ என்று மலையாளப் பழமொழி ஒன்றுண்டு. உண்மைதான் நமக்கு பேரானந்தத்தை தருகிறது. ஜெயமோகனின் எழுத்துக்களில் உள்ள உண்மைதான் எப்போதும் நம்மை உவகைகொள்ளச் செய்கிறது.
அவர் எந்த குறிப்பிட்ட வகைமையிலும் எழுதுவதில்லை, அவர் எழுதிமுடிக்கும்போது புதியவொரு வகைமை உருவாகிறது. அவர் எழுதும்போது புதிய வடிவம் ஒன்று உருவாகிறது. இத்தனை முழு நம்பிக்கையுடன் எழுதுவதற்கான இந்த திறன் எங்கிருந்து அவருக்குக் கிடைத்தது என்பதைத்தான் முன்னர் நான் சுட்டிக்காட்டினேன். அந்த நரகத்தில் இருந்து கைகொண்ட ஒளியுடன் அவர் முன்னே செல்வதால் மட்டுமே இது அவருக்குச் சாத்தியமாகிறது.
அவர் யாரையும் நிராகரிப்பதில்லை. எல்லோரையும் கேட்டுக்கொண்டிருப்பவர். அவரைப் பார்த்தால் இவற்றையெல்லாம் எழுதிய ஜெயமோகன்தானா இது எனத் தோன்றும்.
ஒரு கதையில் ஞானி ஒருவர், ஒரு அரசனை காணச் சென்று அவர் முன் அரியணையில் அமர்ந்தார். சீண்டப்பட்ட அரசன் ‘நீ யார்’ எனக் கேட்கிறான். ‘மந்திரியா, அரசனா?’ என ஒவ்வொன்றாக கேட்டுவிட்டு ‘எதுவாக இருந்தாலும் என்னை தாண்டி இங்கு எதுவுமில்லை” (Nothing is above me)என்கிறான். ஞானி, ‘நான்தான் அந்த எதுவுமில்லாதது’ (That nothing is me) என்கிறார். அப்படி தான் என்பது எதுவுமில்லாத ஒன்று என்ற விவேகத்தை ஜெயமோகன் எக்காலத்திலும் புரிந்துகொண்டு வந்துள்ளார். அதுதான் அவரின் இந்த ஞானத்தின் அடிநாதமாக விளங்குகிறது.
இனி வரும் காலங்களில் இந்த ஞானம் ஒருவேளை ஒரு அற்புதமாக காணப்படும். பிற்காலத்தில் ஜெயமோகன் என்ற ஒருவரை பிறருக்கு நம்பமுடியாமல் போகலாம், அப்படி ஒரு காலம் வரும் என்பதில் சந்தேகமே இல்லை. நிச்சயம் அப்படி நடக்கும். ஏனென்றால் அதி அற்புதங்களை நம்மால் வரலாற்றிற்குள் வைத்து சொல்ல முடியாது. அதற்க்கான ஐதீகங்களும் கட்டுக்கதைகளும் உருவாகி வரும். ஒரு புதிர் கட்டுக்கதைகளால் மட்டுமே வாழும்.
ஜெயமோகனுக்கு அறுபது வயதாகிறது என்பது நமக்கு எந்த ஆச்சரியத்தையும் கொடுப்பதில்லை. ‘அறுபது வயதா? இவருக்கு ஒரு அறுநூறு வயதாவது இருக்காதா’ என அவரது படைப்புகளை வாசிப்பவர் கேட்பார். அவர் இனி எழுதப்போகும் படைப்புகளை பற்றி யோசித்தால் அவருக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை எனவும் தோன்றும். அப்படி ஒரே சமயத்தில் முடிவில்லாத இளமை அவருக்கு கிடைக்குமென்பதில் எனக்கு ஒரு சந்தேகமுமில்லை. ஏனென்றால் அத்தனை நீண்ட காலத்திற்கு அவர் அந்த நரகத்திலிருந்து தனக்கான ஆற்றலைப் பெற்றிருக்கிறார். அதன் பலனாக இன்னும் நீண்ட காலத்திற்கு அவரது படைப்புகளில் அதை இனிமையாக அவரால் வெளிப்படுத்த இயலும் என நான் நம்புகிறேன். மேலும் பிரகாசமான அனுபவங்களை, உரையாடல்களை, வாழ்வை தூரத்தில் விலகி நின்று ஒட்டுதல் இல்லாமல் உள்வாங்கும் மனதும், அதை வெளிப்படுத்தும் எழுத்தாற்றலும் அவருக்கு உண்டு.
புத்தனைப் போலவே ஞானத்தின் மீது தீராத ஆர்வம் கொண்டவர்தான் இந்த பயணி. ஆனால் புத்தனைபோல அவர் தன்னுடைய யசோதரையை துயரத்தில் தள்ளிவிட்டு போகவில்லை. அவரை உணர்ந்து ‘அரண்மனையை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என அவரை வழியனுப்பிக் கொண்டிருப்பவர் இந்த யசோதரை. இன்று இந்த மேடையில் அவர்கள் மாலை மாற்றிக்கொண்டது என்றும் மணமகளாக இருக்கப்போகிறவர் அவரது துணைவி என்பதனால்தான்.
அவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். பொதுவாக திருமணத்திற்குப் பிறகு காதல் கொஞ்சம் குறையும். ஆனால் அவர் எழுதியதை வாசித்தப்பிறகு வந்த காதல் என்பதால் அது வளர்ந்துகொண்டே இருக்கிறது. அருண்மொழிக்கு மட்டுமல்ல, இங்கு எல்லோருக்கும் ஜெயமோகன் மீது காதல்தான். அது குறைவதேயில்லை, வளர்ந்துகொண்டேதான் செல்கிறது.
அவர் குடிலில் வாழாமலே குடிலில் வாழ்பவர். ஒரு பயணதிற்கு போவது போலவேதான் அவர் எழுதுகிறார். எங்கு செல்லப்போகிறோம் என்ற எந்த உத்தேசமுமற்று எழுதத் துவங்குவார். “ஒன்றும் தோன்றாத தினங்களில் கணினியில் ‘அருண்மொழி அருண்மொழி அருண்மொழி ..’ என மூன்று தடவை எழுதும்போது நான்காவதாக ஒரு சிறுகதைக்கோ, நாவலுக்கோ, கட்டுரைக்கோ, விமர்சனத்திற்கோவான முதல் வரி கிடைத்துவிடும்” என என்னிடம் கூறியிருக்கிறார். பின்னர் அதுவே அதன் வழியை கண்டடைந்துகொள்ளும். எழுதி முடியும்போது அதன் வடிவத்தை அது பெற்றுவிடவும் செய்யும்.
அப்படி அதிசயிக்கத்தக்க வகையில் படைக்கக் கூடியவர் அவர். நினைத்துப்பாருங்கள், கோவிட் போன்ற ஒரு பெருந்தொற்று காலத்தில், யாரும் யாரையும் நேரில் சந்திக்கக் கூடாது, பேசக்கூடாது என தடைவிதிக்கப்பட்ட காலங்களை ஜெயமோகன் எப்படி பழிவாங்கினார் என. தினம் ஒரு கதை என எழுதி அவர் எல்லோருக்கும் மிக அருகில் இருந்தார்.
தினம் தனது இதிகாசத்தில் ஒரு பாகத்தை அவர் எழுதி வந்துள்ளார், ஒரு மனிதன் இதிகாசம் எழுதுகிறான் என்பது எவ்வளவு பெரிய அற்புதம் இல்லையா. ஹோமர் எத்தனை பேர் என்ற சர்ச்சை இன்னும் இருக்கிறது, வேதவியாசன் உண்மையில் எத்தனை பேர் என இன்று சந்தேகமிருக்கிறது. ஆனால் இதோ இருபத்தையாயிரம் பக்கங்களை கொண்ட ஒரு புத்தகம். இது ஜெயமோகன் என்ற ஒற்றை மனிதன் எழுதியதல்ல என்ற சர்ச்சைகள் எதிர்காலத்தில் நிச்சயமாக உருவாகும். தனி ஒருவரால் இப்படி ஒரு காப்பியத்தை எழுதமுடியாதென பிறர் சொல்லக்கூடும். வரும்காலங்களில் ஜெயமோகனை நியாயப்படுத்தவோ, ஏற்றுக்கொள்ளவோ கட்டுக்கதைகள் உருவாக்கப்படும். அப்படிப்பட்ட அற்புதம் ஜெயமோகன். அப்படிப்பட்ட புதிர் ஜெயமோகன்.
நண்பர்களே, அப்படிப்பட்ட அந்த புதிரின் தோழன் நான் என்பதை தவிர எனக்கு வேறென்ன பெருமிதம் வேண்டும்?
(மலையாள ஒலிவடிவில் இருந்து தமிழில் ஆனந்த்குமார்)
கோவி.மணிசேகரன் எனும் மர்மம்
1992ல் கோவி மணிசேகரனுக்கு லில்லி தேவசிகாமணி விருது வழங்கப்பட்டது. அன்று முப்பது வயதான இளம்படைப்பாளியாகிய எனக்கும் அவ்விருது வழங்கப்பட்டது. கோவி மணிசேகரனுடன் என்னை சமானமாக வைத்ததை ஏற்கமுடியாது என நான் அவ்விருதை மறுத்துவிட்டேன். அது அன்று ஒரு விவாதமாக ஆகியது. சுபமங்களா இதழில் குறிப்புகள் வெளிவந்தன.
1980ல் கோவி மணிசேகரன் தன் யாகசாலை என்னும் நாவலை சினிமாவாக எடுக்க முயன்றார். அம்முயற்சி பாதியிலேயே நின்றுவிட பெரும் பண இழப்புக்கு ஆளாகி எம்.ஜி.ஆரிடம் சென்று கண்ணீர்விட்டார். மனமிரங்கிய எம்ஜிஆர் அவருக்கு தமிழக அரசின் ஆகப்பெரிய இலக்கிய விருதான ராஜராஜன் விருதை 1984ல் வழங்கினார். எம்ஜிஆரின் இரக்கமனதுக்கு உதாரணமாக இது சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் விருதுகள் இப்படித்தானா அளிக்கப்படவேண்டும்?
ராஜராஜன் விருது கோவிக்கு சாகித்ய அக்காதமி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுத்தந்தது. 1992ல் அவருக்குச் சாகித்ய அக்காதமி விருது குற்றாலக் குறிஞ்சி என்னும் நாவலுக்காக கிடைத்தபோது இலக்கிய உலகில் கடுமையான கண்டனங்கள் உருவாயின.
வேடிக்கையான மனிதர். ஜெயகாந்தன் போலவே நடையுடை பாவனைகளை மேற்கொண்டவர். ஆனால் அவர் எழுதியவை பெரும்பாலும் பாலியல் கதைகள். பாலியல்கதைகளையே அடுக்குமொழியில் வரலாற்றுநாவல்களாகவும் எழுதினார். அன்றும் இன்றும் அவருக்கு அனேகமாக வாசகர்களே இல்லை. அவரை விரும்பிவாசித்த ஒருவரைக்கூட நான் கண்டதில்லை. ஆனால் எப்படி புகழ்பெற்ற வணிக எழுத்தாளராக இருந்தார்?
கோவி.மணிசேகரன்
கோவி. மணிசேகரன் – தமிழ் விக்கி
சி.மணி நினைவுக்குறிப்பு
வனம் இதழில் சாகிப் கிரான் கவிஞர் சி.மணி பற்றி எழுதியிருக்கும் நினைவுக்குறிப்பு அழுத்தமான ஒரு வாழ்க்கைச் சித்திரம். மிகையற்ற, ஆனால் கூரிய விவரணைகள் வழியாக கவிதையை இழந்து இறுதி நோக்கிச் சென்றுகொண்டிருந்த கவிஞரை நமக்கு காட்டுகிறது
சிதைவை நோக்கி- சி.மணியுடன் சில வருடங்கள்அறுபது, இரு கடிதங்கள்
அன்புள்ள ஆசிரியருக்கு ,
உங்களை நான் நேரில் சந்தித்தது ஒரே ஒரு முறைதான் ஆனால் மனத்திற்குள்ளாக அந்தச் சந்திப்பு பல நூறு முறை நடந்து முடிந்து விட்டிருந்தது. அல்லிமலர் விரி சிறு குளத்தைத் தாண்டி, சாரதா நகர் வீட்டில் தங்களைச் சந்தித்த அந்தத் தருணம் என்றும் எனக்குள்ளாக பூரித்து நிறைந்திருக்கும். வாஞ்சையுடன் என் மகளை தழுவிக்கொண்டதை கண்டபோது தங்கள் மகனும் மகளும் எவ்வளவு பாசமிகு ஒரு தந்தையின் குழந்தைகள் என உணர முடிந்தது.
ஆகப்பெரும் இலக்கிய ஆளுமை , மிகச்சிறந்த பயணி , தேர்ந்த விவாதி ,நேர ஆளுமையின் உச்சம் மற்றும் தற்போதைய தமிழ் சினிமா உலகின் உதடுகள் உச்சரிக்கும் திரைக்கதையாளர் இன்னும் பல,.. எனும் உச்சங்களை தொட்டிருக்கும் ஒருவரை சந்திக்கும் சிறு உதறுதலுடன்தான் தங்களை ஆகஸ்ட் 2022 ,16 ம் தேதி அன்று காண வந்திருந்தேன் .
ஆனால் எந்த ஒரு கிரீடத்தையும் தன் தலையில் சூடாத,எவர் ஒருவரையும் இயல்பாய் உணர வைக்கிற ஒரு அற்புத மனிதரைத்தான் அன்று சந்தித்தேன். நேரம் கருதியும் முதல் சந்திப்பின் பதட்டத்திலும் என்னால் கோர்வையாய் பேச முடியவில்லை. அந்தச் சிறு சந்திப்பிலும், பெருகி வரும் எதிர்மறை எண்ணங்கள் குறித்த தங்களது ஆதங்கத்தையும் சிறிதும் அவற்றை பொருட்படுத்தாது பெருகிவரும் ஓரு சிறு இளைஞர் கூட்டத்தையும் பற்றி பகிர்ந்து கொண்டீர்கள்.
ஏன் இத்தனை எழுத்தாளர்கள் இருக்கையில் ஆசிரியர் ஜெயமோகனை எனக்கு அணுக்கமாக உணர்கிறேன் , நிச்சயம் அது அறம் சிறுகதைகள் தொகுப்பிலிருந்துதான். முன்பே தங்களது பல படைப்புக்களை அணுகியிருந்தபோதும், (பின்குறிப்பு இன்னும் விஸ்ணுபுரம் ,வெண்முரசு நாவல்களை துவங்க முடியாத அடிப்படை வாசகன்தான் நான்) எந்த ஒரு சாமானியனுக்கு புரியும் வகையில் தத்துவ விளக்கங்கள் இல்லாத அதே சமயம் தத்துவ விலக்கங்களும் இல்லாத சிறுகதைகளின் தொகுப்பு அது.
அதேபோல் தங்கள் படைப்புகளில் வரும் நீலியும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கே என்றான இயற்கை வர்ணனைகளும் மனதிற்கு நெருக்கமாக உணரவைக்கின்ற கிரியா ஊக்கிகள். படைப்புகளில் மட்டுமல்லாது அன்றாட வாசகர் உரையாடல்களில் தாங்கள் வலியுறுத்தும் நெறிகள், நேர்மறை கருத்துக்கள்,சலிப்பே இல்லாது இலக்கிய முன்னோடிகளை முன் நிறுத்தும் அந்த மாறா விசை இவை போதாதா எந்த ஒரு வாசகனுக்கும் தங்களை அணுக்கமாக உணர வைக்க?
மனதில் கட்டுக்கடங்காத வரிகள் ததும்பி நிறைகின்றன, இருந்தும் அடுத்த முறை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அமையும் போது அவற்றை மடை திருத்தி கோர்வையாய் முன்வைக்க முனைகிறேன்.
ஜெயமோகன் 60 விழா நடைபெற்ற இந்த நன்னாளில், எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு பூரண ஆரோக்கியத்தையும், இன்று போல் என்றும் மாறாத அன்பை பொழியும் மனதையும், எழுத்து வல்லமையையும் தந்து, தமிழ் வாசகர்களுக்கு கருணை பொழிய வேண்டிக்கொள்கிறேன்.
அன்புடன்
ஜெயக்குமார்
அன்புள்ள ஜெ,
நலமாக இருக்க வேண்டிக்கொண்டு, தங்களுடைய மூன்று சிறுகதைகள் படமாக்கப்படுகின்றன என்பதை இணையவழி அறிந்து கொண்டேன். துணைவன், ஐந்து நெருப்பு, கைதிகள். இந்த முன்று கதைகளையும் சென்ற வருடம் வாசித்து இருந்தேன். எனினும் மீளவும் இவற்றை அண்மையில் வாசித்த போது மனதில் திரைப்படத்துக்கான சித்திரத்துடன் வாசித்த போது மனதுக்குள் கிளர்ச்சியடையவே முடிந்தது. துணைவன் கதையில் தாங்கள் குறித்த நிலச்சூழலை நன்றாக விபரணமாக்கியதை அறியமுடிந்தது. வாத்தியாரான கோனாரின் கதாபாத்திரம் நமக்கு ஒருக்களிப்பது என்ன என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டேன். வீரம் என்பது பயம் இல்லாதது போல நடிப்பது என்று கமல் ஹாஸன் குருதிப்புனலில் கூறிய வாசகங்கள் ஞாபகம் வந்தது. கிட்டத்தட்ட கைதிகள் கதையும் அதிகாரத்தின் வன்முறையை நுணுக்கமாகக் காட்டியதை உணரமுடிந்தது. ஐந்து நெருப்பு கதையில் முத்துவுக்கு துப்பாக்கி கிடைத்ததும் என்ன ஆகும் என்று பல யோசனைகள் மனதில் உருண்டோடி இருந்தன. வெந்து தணிந்தது காடு திரைப்படத்தைப் பார்த்த பின்பு மனதில் இருந்த கற்பனை ஓரளவுக்குச் சமன் செய்யப்பட்டது.
அண்மையில்தான் தங்களுடைய புனைவுக் களியாட்டு தொகுப்புக்களுடன் இணைத்து இன்னும் சில புதிய நூல்களை வாங்கியிருந்தேன். இதில் உள்ள கதைகள் தொகுப்புக்கள் ஆக முன்பே இவற்றை தங்களுடைய இணையத்தில் படித்திருந்தேன். மிக நீண்ட இடைவேளைக்குப் பின்பு இந்தக் கடிதத்தைத் தங்களுக்கு எழுதுகின்றேன். இந்த இடைவேளையில் தங்களுடைய வெண்முரசு நூல்களை வாசித்துக்கொண்டு இருந்தேன். அலாதியான பயணத்துக்கு ஒப்பாக வெண்முரசினை நான் அணுகுகின்றேன்.
இ.சுயாந்தன்
இலங்கை.
இசைரசனை முகாம், கடிதம்
நலம். மேற்கத்திய இசை பயிற்சி முகாம் ஏற்பாடு செய்தமைக்கு நன்றி. அது ஒரு நல்ல அனுபவம். இசையை வெறும் இசையாக கேட்டு இரசித்துள்ளேன், பெரும்பாலும் நம் நாட்டு இசையை மட்டுமே அதிகம் கேட்பேன்.
ஆனால் இசையின் சாராம்சத்தை இப்போது தான் புரிந்து கொள்ள முயல்கிறேன். இசையிலும் கதை நடை உண்டு, இசையும் கதை சொல்லும் என்பதை அழகாக விளக்கினீர்கள்.
முதல் நாள் காலை
மேற்கத்திய இசைக்கலைஞர்கள் பற்றிய ஓர் அறிமுகம், மிக அழகாக விவரிக்கப்பட்டது. பின்னர் பீத்தோவனின் புகழ்பெற்ற 5 வது சிம்பொனி. அதில் உள்ள ஒவ்வொரு மூவ்மெண்ட்டும் மிக அருமையாக விவரிக்கபட்டு பின் அது ஒலிக்கப்பட்டது.முன்னரே அதை கேட்டு இருந்தாலும் இந்த ஒரு கோணத்தில் அதை கண்டதில்லை.
பின்னர் மாலை பீத்தோவனின் 6வது சிம்பொனி, முதல் மூவ்மெண்ட் மெலடியில் தொடங்கி பின் கடைசி மூவ்மெண்ட் ஓர் இயற்கை புயல் கொந்தளிப்பு அதன் பின் வரக்கூடிய அமைதி , நன்றி அனைத்தையும் கண் முன் கற்பனை செய்ய முடிந்தது.
3 ஆம் சிம்பொனியில் தொடங்கியது.ஒவ்வொரு இசை வாத்தியமும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தை விவரித்தது. அவ்வளவு துல்லியமாக இசையை அணுகி அதன் சாராம்சத்தை உணர்ந்தோம்.
மாலை: 7வது சிம்பொனியுடன் நிறைவு பெற்றது. கிரேக்கிய கடவுளாக உருபெற்று எழுந்த இசை மிக அற்புதம்.
3வது நாள் :
9ஆம் சிம்பொனி, ஒரு மிக பெரிய தரிசனம். முதல் மூவ்மெண்டில் குழப்பமும் நிலை கொள்ளாமையும், அடுத்த மூவ்மெண்களில் ஓர் அழகிய அனுபவமும், கடைசி மூவ்மெண்டில் சந்தோஷமும் கொண்டாட்டமும் நம்மை இன்னும் அதிக உற்சாகம் கொள்ளும் அளவிற்கு கொண்டு சென்றது.
இசை என்பது எப்படி கேட்க வேண்டும், அதை எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்று மிக அழகாக கூறப்பட்டு இருந்தது.
மூன்று நாட்கள் சென்றதே தெரியாமல் நம்மை இசையின் உள்ளேயே வைத்து ஓர் மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்தது.
இதே போல மேலும் அடுத்தக்கட்ட முகாம் நடத்துவதற்கு வாழ்த்துக்கள். உங்களின் இந்த முகாமினால் மேற்கத்திய இசையில் நாட்டம் கொள்ள விரும்பும் என்னை போன்றவர்களுக்கு இது ஓர் சிறந்த அனுபவமாக அமையும். அடுத்த முகாமை இன்னும் ஆர்வமுடன் எதிர்பார்கிறோம்.
நன்றி,
ஷர்மிளா.
எழுத்தறிவித்தல் நிறைவு
September 26, 2022
திருமா 60
இன்று (26 செப்டெம்பர் 2022) திருமாவளவன் அவர்களின் மணிவிழா கொண்டாட்டம் சென்னையில் நிகழ்கிறது. நான் அதில் கலந்துகொண்டாகவேண்டும். அண்மையில் நான் பெருவிருப்புடன் கலந்துகொள்ள நினைத்த நிகழ்வுகளில் ஒன்று. நான் பலமுறை திரும்பத் திரும்பச் சொல்லிவருவதுபோல திருமாவளவன் நம் காலகட்டத்தின் பேராளுமைகளில் ஒருவர் என நினைக்கிறேன். இக்காலகட்டத்தின் வரலாற்று நாயகன். அவரை வாழ்த்துவது எனக்கு பெருமை, எதிர்காலத்தில் என் வரலாற்றிலும் முதன்மை நிகழ்வுகளில் ஒன்றாக அது குறிக்கப்படும்.
ஆனால் திருவனந்தபுரத்தில் நான் திரைப்படவேலைகளில் சிக்கிக் கொண்டேன். ஊடகங்களிடம் சிக்குவதென்பது நம்மை ஒப்படைப்பதுதான். அவர்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்ட பெரிய வலை. விமானத்தை தவறவிட்டுவிட்டேன், ஆகவே விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை. பெரிதும் வருத்தம் அளிக்கும் ஒரு பிழை இது. அதன்பொருட்டு திருமாவளவன் மற்றும் கலாட்டா மீடியாவிடம் என் மன்னிப்புகளை கோருகிறேன்.
திருமாவளவனை ஏன் ஒரு அரசியல்பெருநிகழ்வு என நினைக்கிறேன்? முதன்மையாக இதுதான். பொருளுள்ள எதிர்ப்பு என்பது ஒரு புனிதமான செயல்பாடு. புரட்சி என சொல்லப்படுவது அதையே. ஆயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட, தன்னம்பிக்கை இழந்து சுருண்டிருந்த ஒரு சமூகத்தின் எதிர்ப்பின் முகம் திருமாவளவன். ஒரு பெரும் படிமம். எதிர்ப்பினூடாகவே அச்சமூகம் தன்னுடைய அடையாளத்தை திரட்டிக்கொள்கிறது, தன்னை தீவிரப்படுத்திக்கொள்கிறது, சமூகவாழ்க்கையில் வெற்றிநோக்கிச் செல்கிறது.
தர்மபுரி மாவட்டத்தில் பணிபுரிகையில் அங்கே சாதிய அடக்குமுறை அரசாலும் பொதுச்சமூகத்தாலும் எப்படி நிகழ்த்தப்பட்டது என்பதை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். இங்குள்ள எந்த அரசியலியக்கமும் அம்மக்களுக்கு துணைநிற்கவில்லை. அவர்களை ஒருங்கிணைத்த இடதுசாரித் தீவிர இயக்கங்கள் தங்கள் தேவைகளுக்கு அவர்களை கருவிகளாக்கிக் கொண்டார்களே ஒழிய அவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. அவர்களை சிறைக்கனுப்பி தங்களை காத்துக்கொண்டனர்.
திருமாவளவன் எழுந்து வந்தபின்னரே அவர்களின் தரப்பு ஒலிக்கலாயிற்று. அவர்களின் அரசியல் துலக்கம் அடைந்தது. அவர்களின் எதிர்ப்பு கூர்கொண்டது. அவர்களின் அதிகாரம் உருவானது. அதை நான் கண்கூடாக கண்டேன். ஆகவே ஏந்த ஏட்டுக்கொள்கையாளரும் எனக்கு மறுவிளக்கங்கள் அளிக்க ஒப்பமாட்டேன்.
அவர் ஒரு மாபெரும் அரசியல் தலைவர் என நான் சொல்வது என் கள அனுபவங்களில் இருந்து. செயலற்றவனாக, அறச்சீற்றமும் கண்ணீரும் கொண்டு நான் பார்த்துநின்ற பல அநீதிகள் உண்டு. அரசூழியனாக, சிறுகுடும்பத்தின் தலைவனாக, அனைத்துக்கும் மேலாக தர்மபுரி மாவட்டத்திற்கு அன்னியனாக இருந்தமையால் நான் வீணே சாட்சியாகவே நின்றிருந்தேன்.
என் இயல்பான கோழைத்தனமும் காரணமாக இருக்கலாம். நான் வீரன் அல்ல. தியாகியும் அல்ல. ஆனால் இன்றும் நான் எண்ணிக்கொதிக்கும், கூசும் நிகழ்வுகள் பல உண்டு. அந்த மலினங்களை எரித்தழிக்கும் கதிரவன் போல அவர் உருவாகி வருவதைக் கண்டு ஓர் எளிய எழுத்தாளனாக ’வாழ்க நீ எம்மான்!’ என வணங்கியிருக்கிறேன். நேரில் பார்த்தும் வணங்கியிருக்கிறேன். அவ்வளவுதான் என் அரசியல்.
அவர் ஓர் எதிர்ப்பியக்கம். அந்த எதிர்ப்புக்கு உதவுபவர்களை ஆதரவாளர்களாகக் கொள்கிறார். அதற்கான அரசியலை பேசுகிறார். அதில் அரசியல் ஒவ்வாமை கொண்டவர்கள் இருக்கலாம். நாளும் ஒரு கடிதம் எனக்கு வருகிறது, திருமாவளவன் இப்படிச் சொல்கிறாரே நீ என்ன சொல்கிறாய் என்று. அதை அவரிடம் கேளுங்கள், நான் அன்றாட அரசியலில் இல்லை என்பதே என் பதில்.
அரசியல் எனக்கு தெரியாமலிருக்கலாம். நான் உணர்வுச்சமநிலை இல்லாதவனாகவும் இருக்கலாம். ஆனால் அறம் பற்றி எனக்கு கற்பிக்கும் நிலையில் இங்கே எவருமில்லை. என் ஆசிரியர்களை நான் முன்னரே அடைந்துவிட்டேன். என் ஆன்மிகநிலையை ஒவ்வொரு கணமும் கண்காணிப்பவன் என்பதனால் எனக்கு உங்கள் ஆலோசனைகளை எவரும் அளிக்கவேண்டியதில்லை.கண்முன் சகமானுடர் மேல் சாதியக்கொடுமைகள் நிகழ்கையில் காணாமல் அரசியல் செய்தவர்கள், அறம்பேசியவர்கள் எவருக்கும் அவரை விமர்சிக்கும் உரிமை இல்லை.
இன்று நட்புக்கட்சியாக இருப்பதனால் போற்றுபவர்கள் ஒருவேளை கட்சியரசியலில் அவர் மறுதரப்புக்குச் சென்றால் வசைபாடுவார்கள், அவர் முன்வைக்கும் ஒரு சிறு விமர்சனத்துக்கே அந்த வசை எழுந்து வருவதை காண்கிறோம். இன்று வசைபாடுபவர்கள் அரசியல்கூட்டணி அமைந்தால் போற்றவும்கூடும். நான் எழுத்தாளனின் தரப்பை பேசுகிறேன், எந்நிலையிலும் அவர் ஓர் அறவிசை என்றே சொல்வேன். அவர் நம் மரபின் மிகமிகக் கீழான ஒரு முகத்தை நமக்குச் சுட்டிக்காட்டும் வெளிச்சம் என்பதனால். நம் அறவுணர்வுடன் ஓயாமல் பேசும் ஒரு குரல் என்பதனால்.
நூற்றாண்டுகளுக்குப் பின் பெருங்கருணையால் சீற்றம்கொண்டு களம் நின்ற தலைவன் என்று அவர் அடையாளப்படுத்தப்படுவார். நூற்றாண்டுகளைக் கடந்துசெல்லும் விசைகொண்ட சொல் கொண்டவனாக, இக்காலகட்டத்தின் ஒவ்வொன்றும் அழிந்தபின்னரும் எஞ்சும் தமிழின் பெருங்கலைஞனாக நின்று இதைச் சொல்கிறேன்.ஆம், அவ்வாறே ஆகுக!
அனைத்துக்கும் அப்பால் அவர் ஒரு பொதுத்தலைவர்.தன்னுடைய சூழல் உருவாக்கும் விசைகளால் ஆளுமைகள் உருவாகி வருகின்றன. பின்னர் அச்சூழலை கடந்து அவை பேராளுமைகளாக விரிகின்றன. அத்தகையவர் அவர். அவர் இன்று தலித் தலைவர் அல்ல, தமிழ்த்தலைவர். தமிழகத்தின் பொருளியலுரிமை, சூழல்பாதுகாப்பு என அனைத்துக்கும் முன்நிற்பவர்.
இன்று தமிழகத்தில் தன் சமூகம் மீது ஒரு வன்முறை நிகழும்போதுகூட தற்கட்டுப்பாட்டுடன் பேசும் எதிர்ப்பின் குரல் அவர். சீற்றம்கொண்ட குரலாக எழுந்து வந்தவர் இன்று மெல்லமெல்லக் கனிந்து நம் மனசாட்சியுடன் உரையாடுபவராக ஆகியிருக்கிறார். அவருடைய சமநிலையை, ஆழ்ந்த அறிவை, அறிஞர்கள் மீதான பெருமதிப்பை காண்கிறேன். சமகால அரசியல்வாதிகள் எவரிடமும் இல்லாத பண்புகள அவை.
என்றேனும் தமிழகத்தின் முதல்வர் என அவர் ஆகக்கூடும் என்றால் அது நம் வரலாற்றின் பொன்னாள் என்றே சொல்வேன். அதற்கான வாய்ப்புகள் உள்ளனவா, அதற்கு நம் சாதிய உள்ளம் அனுமதிக்குமா என்பது ஐயமே. ஆனால் அது நம் அறவுணர்வுக்கு முன் நின்றிருக்கும் ஒரு வரலாற்றுவினா.
நான் என் முழு எழுத்தாற்றலாலும் இன்று எவருடைய வாழ்க்கை வரலாற்றையேனும் எழுத விழைகிறேன் என்றால் அது தலைவர் திருமாவளவன் பற்றித்தான். ஒவ்வொரு நாளும் என்னை நானே மீட்டெடுக்க, என் முன்னோரின் இழிவுகள் பலவற்றில் இருந்து என்னை விடுவிக்க உதவும் குரல் அவருடையது என்பதனால் அவருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். அவருடன் என் அணுக்கம் தமிழகக்குடிமகன், எழுத்தாளன் என்ற நிலையில் மட்டுமே.
அவருக்கு அறுபதாம் அகவை வாழ்த்துக்கள். வரலாறு உங்களுடன் உள்ளது.
குன்றக்குடி அடிகளார்
தமிழ் விக்கிக்கு பதிவுகள் போடும்போது ஒன்றைக் கவனித்தேன். சலிக்காமல் செயலாற்றி, மாபெரும் பணிகளைச் செய்தவர்களில் முதலிடம் எப்போதுமே துறவிகளுக்குத்தான். பெருஞ்செயலாற்றிய பலர் குடும்பச்சிக்கல்கள், நிதிச்சிக்கல்கள், முதுமையின் தனிமை என செயலிழந்துபோகிறார்கள். துறவிகள் எய்யப்பட்ட அம்புபோல சென்றுகொண்டே இருக்கிறார்கள்.
ஞானியார் அடிகள் சுவாமி இராமதாசர் விபுலானந்தர் பிரம்மானந்த சரஸ்வதி சுவாமி கமலாத்மானந்தர்என அவர்களின் பட்டியல் மிக நீளமானது. அவர்களில் ஒருவர் குன்றக்குடி அடிகளார். செயலூக்கம் மிக்க கணங்களால் ஆன முழு வாழ்க்கை அவருடையது
குன்றக்குடி அடிகளார்
குன்றக்குடி அடிகளார் – தமிழ் விக்கி
இரண்டு மொழிக்கட்டுமானங்கள்.
இனிய ஜெயம்
நண்பர்கள் அவ்வப்போது என்னுடன் விளையாடும் நோக்கில் ஏதேனும் செய்வார்கள். அந்த வகையில் நேற்று ஒரு நண்பர், பெயர் நீக்கப்பட்ட இரண்டு கவிதைகளை வாட்ஸாப்பில் அனுப்பி எனது மதிப்பீட்டில் இரண்டில் முதல் தர கவிதை எது அடுத்த தர கவிதை எது என்று வினவி இருந்தார்.
அந்த கவிதைகள் கீழே
ஞாபகத் தைலக்காடுகளின்
சேமிப்பு அடுக்குகளில்
ஒற்றை நாணயத்தைப்போல் இருக்கிறேன்.
யாதுமற்று சிதறிக்கிடக்கிறது.
அடுக்கில் இருந்தபோது
மியூசியம் போல் இருந்தவை
இப்போது இடுகாட்டு என்புகளைப்போல்
பேகொள்ளச் செய்கிறது.
இதமான ரகசிய நாணயங்கள் கூட
அழிந்து கிடக்கிறது.
எனக்கு ஒன்றுதான் தேவை.
கடலைப்பூட்டி எங்கே வைத்தேன் சாவியை என்று ஞாபகமில்லை.
உங்களுக்குத் தெரிந்தால் கொஞ்சம் நினைவூட்டுங்கள்
அல்லது எடுத்துத்தாருங்கள்.
எல்லோரும் காத்திருக்கிறார்கள்.
இன்னொன்று
வரைபடத்திலிருந்து
தன் பெற்றோர்களை அறிமுகப்படுத்துகையில்
கையிலிருக்கும் பிடித்தமான பூவொன்றைப் பற்றி யாரிடமும் கூறுவதேயில்லை அவ்வரைபடத்திலிடம்பெறாத ஓரு தம்பியுமுண்டு
தன் கால்கொலுசுகளின் மீது கொள்ளைப்
பிரியமவளுக்கு
பள்ளியில் கடிந்துகொண்ட ஆசிரியர் பற்றி
பாட்டியிடம் ஆறேழுமுறை உரைத்தாயிற்று
பெற்றோர்களைச் சந்திப்பதற்கு வாரவிடுமுறைகள்
போதுமானதாயில்லை
பாட புத்தகங்களின் இடையிடையே
வெட்டப்பட்ட படங்களுக்கு அவள்மீது குற்றங்களேதுமில்லை
தன் பேரவாவாக இருந்தவொன்றை எவரிடமேயும்
சொல்ல வேண்டுமென்றிருந்தாள்
ஆழ புதைத்த சில்லரைக்காசுகள் ஏதாயிற்றோ?
அப்பொழுது அவள் வயது 8
அதன்பின்னான அவளை
யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
சரி கவிதைகள் எங்கே அய்யா என்று பதில் போட்டேன்.
(முதல் கவிதை ஸ்ரீகாந்த் என்பவர் எழுதியதாம் அவருக்குத்தான் அடுத்த யுவா)
மாட்டுநீங்களா… இரண்டாம் கவிதை காளிமுத்து எழுதியது. தொகுப்புக்கு உங்கள் நண்பர் அமிர்தம் சூர்யா தான் முன்னுரை எழுதி இருக்கிறார். மேற்கண்ட கவிதையை காட்டி காளி முத்து அந்த விருதுக்கு தகுதியானவர்தான் என்று அபிலாஷ் சந்திரன் சொல்லி இருக்கிறார். இப்போ என்ன சொல்றீங்க என்று கேட்டிருந்தார்.
அமிர்தம் சூர்யா எவரையும் நேர்நிலை வார்த்தைகள் சொல்லி அரவணைத்துக் கொள்ளக் கூடியவர். தன் இயல்பில் அத்தகு மனம் கொண்டவர். முதலில் பாராட்டுவோம் அதற்குத்தான் இங்கே யாரும் இல்லை. விமர்சனம் செய்யத்தான் நிறைய பேர் உண்டே என்னும் நிலைப்பாடு கொண்டவர். புதிய படைப்பாளியை வரவேற்கும் அவர் பண்பும் அவரது பாராட்டும் முன்னுரையும் எந்த இளம் படைப்பாளிக்கும் முக்கியமானது. அது ஒரு ஆசி. வாழ்த்து. அது விவாதப்பொருள் அல்ல.
அபிலாஷ் சந்திரன் அவர்களை எடுத்துக்கொண்டால், இலக்கிய விமர்சனத்தில் அவர் அடி முடி காண இயலா அண்ணல். அவர் புகழ் பாட ஆயிரம் நாவுகள் கொண்ட அந்த ஆதிஷேஷனாலும் இயலாது. எளியவன் நான் எம்மாத்திரம்.
இருப்பினும் ஒன்றை சொல்ல முடியும். கடந்த பத்து வருடத்தில் நவீன தமிழ் கவிதைகளில் மலட்டுக் கவிதைகளின் பெருக்கத்துக்கு பின்னான காரணங்கள் பலவற்றில் முக்கியமானது
“அடடே புக்கோவ்ஸ்கியே சொல்லிட்டாரே”
“நிக்கோனார் பார்ரா வந்த பிறகு தமிழ்க் கவிதை எங்கயோ போய்க்கிட்டு இருக்கு. அது எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் எனும் நீர்ம நிலைக்கு வந்து நெடுங் காலம் ஆகிறது.” (பார்ரா!)
“இலக்கியத்தில் ஏது மேல் கீழ்”
போன்ற உரையாடல்கள்.
இத்தகு உரையாடல்கள் மலட்டுச் சொற் குப்பை எதுவெனினும் அதற்கு துணை நின்று ஆமாஞ்சாமி போடுவதால், இதுதான் இன்றைய கவிதை என்று அந்த வெளி ஆசாமிகள் வடிவமைத்த மாதிரியை முதன்மையாக கொண்டு பெருகுவதே இன்றைய பல மலட்டுக் கவிதைகள். அவற்றைப் பெயர் தனை நீக்கி, குப்பை என்று பெயரிட்டு,தெருவிடை காணும் பச்சை டப்பாவில் எறிந்து, அங்கேயே அவற்றை விட்டு நினைப்பொழிய வேண்டியதற்கு மேல் அவற்றால் ஆவதொன்றும் இல்லை.
மேற்கண்ட இரண்டும் ‘வெறும்’ மொழிக்கட்டுமானம். அவை கவிதைகள் அல்ல.
எதைக் கவிதை என்று சொல்கிறோம். உணர்வுக் கட்டுமானம் எதுவோ அதையே கவிதை என்று சொல்கிறோம். அடிப்படை உணர்வுக் கட்டுமானம் ஒன்றினை அந்தரங்கமாக தொடற்புறுத்தும் வகையிலான, அதனுடைய வெளிப்பாடே மொழிக்கட்டுமானம். இந்த மொழிக்கட்டுமானம் வழியே வெளிப்பட ஒரு உணர்வு தளம் வேண்டும். அந்த உணர்வு உண்மையும் அதன் நீட்சியான தீவிரமும் கொண்டதாக இருக்க வேண்டும். மொழியால் வெளிப்பாட்டு முறையால் படிமங்களால் புத்துணர்வு அளிக்கவேண்டும். மீண்டும் மீண்டும் அதில் சென்று தோயும் வண்ணம் உணர்வுப் பொதிவும் அர்த்த சாத்தியங்களையும் கொண்டிருக்க வேண்டும். அதன் கால் ‘இன்றின்’ நிலத்தில் நின்றிருந்தாலும் அதன் சிறகுகள் ‘என்றுமுள்ள’ வானில் திகழ வேண்டும் அனைத்துக்கும் மேலாக ‘இதை’ இவ்விதமன்றி வேறு எவ்விதத்திலும் கைப்பற்றிவிட முடியாது எனும்படியிலான ‘பிரிதொன்றில்லாத’ தன்மை வேண்டும்.
மேற்கண்ட காளி முத்து கவிதையில் இருப்பது என்ன?
அவளுக்கு 8 வயது.
நாணயங்களை புதைத்து வைத்து விட்டு மறந்து போகும் பால்யம். அவளுக்கு பூ பிடிக்கும். அவளுக்கு கொலுசு பிடிக்கும். அது யாருக்கும் தெரியாது. உடன் பிறந்த தம்பி, பெற்றோர்கள் அவள் உடன் இல்லை. பள்ளி ஆசிரியர்கள் மீதான அவள் பிராதுகளை பாட்டி செவி கொள்வதில்லை.
இப்படிப்பட்ட சூழலில் வளரும் ஒருவளுக்கு ஏதேனும் (பாலியல் அத்துமீறல் போல) நிகழ்ந்தால். அது யாருக்கும் தெரியப் போவதில்லை. இவள் ஏன் இப்படி இருக்கிறாள் என்று யாருக்கும் புரியப்போவதும் இல்லை.
’அதன் பின்னான அவளை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.’
எனும் இறுதி வரி வழியே அதிக பட்சம் சென்று சேரும் ஊகம் இது மட்டுமே. இந்த ஊகம் பிசினஸ் எல்லாம் ஒளிஞ்சான் கண்டான் விளையாட்டுக்கு மட்டுமே ஆகும். கவிதைக்கு ஆகாது. கற்பனைச் சாத்தியம் என்பதுதான் கவிதைக்கானது.
இந்த பதிலை நண்பருக்கு அனுப்பி விட்டு யுவ புரஸ்கார் அடிதடியில் இதுவரை என்னதான் நிகழ்ந்திருக்கிறது என்று பார்க்க சற்றே வலையுலாவினேன். தண்டனைகளிலேயே மிக மிக கடுமையான தண்டனை ஒன்றை காளிமுத்து அடைந்திருக்கிறார்.
ஜெயமோகன் கண்டித்தால் நிச்சயம் நாம் அந்த ‘படைப்பாளியை’ பாராட்டி கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் ஒரு தோழர், வாசிச்சி நல்லா பெரிய தோழரா வாங்க தோழர் என்று காளிமுத்து அவர்களை வாழ்த்தி அவருக்கு ஒரு பத்து பதினைந்து நூல்களை பரிசளித்திருக்கிறார். அதன் தலைப்புகள் பட்டியலைக் கண்டேன். நாஞ்சில்நாடன் மொழியில் சொல்லவேண்டும் என்றால் “வாங்குன அடில ஆத்தா வீட்ல வெச்ச சேணத்தண்ணி வெளிய சாடிரிச்சி”. பாவம்தான் கவி காளிமுத்து இன்னும் என்னவெல்லாம் அனுபவிக்க போகிராரோ :).
கடலூர் சீனு
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers



