Jeyamohan's Blog, page 706
October 1, 2022
அருண்மொழி உரை -கடிதம்
அன்புள்ள ஜெ
அருண்மொழி நங்கை அவர்களின் சினிமா பற்றிய உரை கேட்டேன். மிகச்சிறப்பான உரை. சினிமா பற்றி இவ்வளவு தெரிந்தவர் என நினைக்கவில்லை. சரியாக மூன்றாகப் பகுத்து அசோகமித்திரனின் அழகியல், அந்தச் சிறுகதை, அதை வசந்த் படமாக்கிய விதம் ஆகியவற்றை விளக்குகிறார். அருமையான ஸ்பாண்டேனிட்டி. கைகளையும் கண்களையும் அசைத்து, யோசித்து பேசுகிறார். தனக்குத்தானே யோசிக்கிறார். தன்னிச்சையான பேச்சு. ஆனால் மிகுந்த தயாரிப்புடன் பேசுவதுபோல ஒரு வார்த்தைகூட ஜாஸ்தியாக இல்லாமல் இருந்தது. வாழ்த்துக்கள்.
ஜெய்குமார்
அன்புள்ள ஜெய்குமார்
அருண்மொழிக்கு கலைப்பட இயக்கத்தில் இருபதாண்டுக்கால பழக்கம் உண்டு. திருவனந்தபுரம் படவிழாவில் பத்துநாளில் முப்பத்தைந்து படம் பார்ப்பவள். கல்லூரிநாட்களிலேயே சத்யஜித்ரே முதல் இந்தியாவின் கலைப்பட இயக்கத்தை கவனித்து வருபவள். அவள் பார்க்கும் மெல்லப்போ வகை படங்களை எல்லாம் என்னால் உட்கார்ந்து பார்க்கமுடியாது.
ஆனால் தனக்கு ஒன்றும் தெரியாது என ஒரு முன்ஜாமீன் எதற்கும் வாங்கிக்கொள்வாள். அது அவள் வழக்கம். அத்துடன் அவள் இருபதாண்டுக்காலம் தபால் அலுவலக வேலைச்சுமையால் விலகியிருந்துவிட மற்றவர்கள் மிகவும் முன்னால் சென்றுவிட்டார்கள் என்னும் எண்ணமும் உண்டு.
உண்மையிலேயே மிக நல்ல உரை. தேர்ந்த சொற்பொழிவாளர் ஆகிவிட்டாள். எனக்கு மேடையில் கொஞ்சம் நடுக்கம் இன்னமும் உண்டு, அவள் மேடையிலேயே இயல்பாக நிகழ்கிறாள். ஆச்சரியமாகவே உள்ளது
ஜெ
அன்புள்ள ஜெமோ
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் பெண்களைப் பற்றிய சினிமா. அதைப்பற்றிய விவாதக்கூட்டத்தில் ஆண்களே பெரும்பாலும் பேசியதுபோல் இருந்தது. பெண்கள் பெரும்பான்மையாக தங்கள் கருத்தைச் சொல்லியிருந்திருக்கலாம்.
கவிதா சம்பத்
அன்புள்ள கவிதா,
அதில் பேசிய ஒரு பெண்மணி நூறு பெண்களுக்குச் சமம். Believe me.
ஜெ
திருமா 60- கடிதங்கள்
திருமா 60
மணிவிழா வாழ்த்து தெரிவித்து கட்டுரை வெளியிட்டுள்ள எழுத்தாளர் தோழர் ஜெயமோகன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!
தொல்.திருமாவளவன் (டிவிட்டர் செய்தி)
அன்புள்ள ஜெ
எழுச்சித்தமிழர் திருமாவளவன் அவர்களுக்கு நீங்கள் அளித்த வாழ்த்து மிக முக்கியமானது. அவர் தலைமையில் ஓர் அரசியல் எழுச்சி உருவாகும்போது அந்த வாழ்த்து அர்த்தமுள்ளது. அரசியலுக்கு அப்பாற்பட்டு அதைச் சொன்னீர்கள். ஆனால் அதைவைத்தே அவரைச் சாதிய இழிவு செய்ய யமுனா ராஜேந்திரன் முதலியவர்கள் முயல்வதை மனவருத்ததுடன் எழுதியிருந்தீர்கள்.( திருமா, கடிதம் ). அவர்களின் நோக்கமே திருமாவுக்கு உருவாகும் அந்த பொதுவான ஏற்பு இல்லாமலாகவேண்டும் என்பதுதான். அதற்கு நீங்கள் பலியாகிவிடக்கூடாது.
ம.லெனின்
அன்புள்ள ஜெ
அவ்வப்போது நீங்கள் சொல்லும் அரசியல் சார்ந்த கருத்துக்கள் உருவாக்கும் ‘புயல்’ கண்ணுக்குப் படுகிறது. சிறப்பு. அண்மையில் திருமா பற்றிச் சொல்லியிருந்தீர்கள். திருமா பற்றிய உங்கள் பார்வையில் நேரடி அனுபவத்துக்குச் சமானமாகவே உங்கள் அருமைநண்பர் அலெக்ஸ் செல்வாக்கு செலுத்தியிருக்கிறார் என நம்புகிறேன். அவர் பெயரையும் அக்கட்டுரையில் சொல்லியிருக்கலாம். அவர் திருமாவின் இளமைக்காலம் முதல் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பில் இருந்தவர். விடுதலைச் சிறுத்தைகள் நிகழ்ச்சியில் நீங்கள் அலெக்ஸுடன் கலந்துகொண்டது நினைவுக்கு வருகிறது.
புவியரசன்
அன்புள்ள ஜெ,
திருமா பற்றி நீங்கள் சொன்னதை வாசித்தேன். என் ஆச்சரியம் என்னவென்றால் அதற்கு எங்கெல்லாம் எதிர்ப்பு என்றுதான். திமுகவினர் நீங்கள் நஞ்சு கக்குவதாக எழுதினார்கள். கம்யூனிஸ்டுகள் வசைபாடினர்கள். இந்துத்துவர் சொல்லவே வேண்டாம். சாக்கடை அது இதுவென ஒரே வசை. உங்கள் வாசகர் என்று சொல்லிக்கொள்ளும் ஒருவரே ஆசானுக்கு மண்டை கழண்டுபோச்சு என்று சொன்னார். பாவம்தான். ஆனால் யாருக்காக இதைச் சொல்கிறீர்கள்? இதனால் என்ன லாபம் உங்களுக்கு? இத்தனை பேரும் வசைபாட இதை ஏன் சொல்லவேண்டும்? புரியவில்லை. உங்களுக்கும் புரியாது என்று நினைக்கிறேன். நல்லது.
அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒருவர் அடையும் மதிப்புதான் அவருடைய தனிப்பட்ட பர்சனாலிட்டிக்கான மதிப்பு. அரசியல் கொள்கைகள், நிலைபாடுகள் சார்ந்து உருவாகும் ஆதரவும் மதிப்பும் அவருக்கானது இல்லை. நேருவுக்கோ அண்ணாவுக்கோ மதிப்பு அப்படி உருவானதுதான். எல்லா எதிர்க்கட்சியினரும் நேருவுக்கும் அண்ணாவுக்கும் நெருக்கமானவர்களாகவே இருந்தனர். வாஜ்பாய் கடைசிவரை அண்ணாவை புகழ்ந்துகொண்டுதான் இருந்தார். இங்கே வசைபாடுபவர்கள் தங்கள் தலைவர்கள் இதேபோல அரசியலுக்கு அப்பாற்பட்டு பாராட்டப்பட்டால் புளகாங்கிதம் அடைவார்கள்.
இதேபோல நீங்கள் அண்மையில் பிணராய் விஜயனை மலையாள டிவியில் புகழ்ந்து சொல்வதை கேட்டேன். ஆனால் அங்கே எவரும் வசைபாடவில்லை. சந்திரசேகர ராவையும் புகழ்ந்தீர்கள். அது அவர் காதுக்கே சென்றிருக்காது.
உங்கள் கருத்துக்கள் வசைபாடப்படுவதுகூட நல்லதுதான். ஓர் எழுத்தாளனின் வார்த்தைகளுக்கு அந்த அளவுக்கு மதிப்பு இருக்கிறதே. அதிலும் நேரடியாக அரசியலில் சம்பந்தப்படாத ஒருவரின் கருத்துக்கு. நீங்கள் பாராட்டியது திருமாவுக்கு பெருமைதான். அவருடைய அரசியல் எல்லாவற்றுக்கும் அப்பால் அவர் என்னும் தனிமனிதருக்கு கிடைக்கும் பாராட்டு இது.
ராம்குமார் மாணிக்கம்
*
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
ஒவ்வொரு நாளும் என்னை நானே மீட்டெடுக்க, என் முன்னோரின் இழிவுகள் பலவற்றில் இருந்து என்னை விடுவிக்க உதவும் குரல் அவருடையது என்பதனால் அவருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
தங்களது இந்த சிந்தனையுடன் நான் உடன் படுகிறேன். என்னைப்போலவே பிற பொது சமூகத்தை சேர்ந்த நண்பர்களும் உடன்படுவார்கள் என்று நம்புகிறேன். ஒரு எழுத்தாளர் பொது சமூகத்தின் மனசாட்சி என்பதை உங்கள் எழுத்து நிரூபிக்கிறது.
ஜனநாயக மைய நீரோட்டத்தில் அனைவரும் ஒன்றுபட்டு பயணிப்போம்.
வாழ்த்துக்களும் நன்றியும்
மிக்க நன்றி.
இப்படிக்கு
அன்புடன்
சந்தானம்
*
ஆசான் அவர்களுக்கு
உங்களுக்கு மிகப்பெரிய Good Bye. என்றும் எனக்கு நீங்கள் தலை சிறந்த குருநாதர் தான். நீங்கள் புகட்டிய ஞானத்திற்கு நன்றி. இனி உங்கள் பக்கத்தை பின் தொடர மாட்டேன். Very tough decision for me. Very Sorry. Once again Thank you.சாய் சரஸ்வதி
மொழி, ஒரு போட்டி
நேற்று, செப். 30 (சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்) அன்று ‘மொழி’ தளம் வெளியிடப்பட்டது.
எங்கள் செயல்பாடுகளின் தொடக்கமாக புதிய மொழிபெயர்ப்பாளர்களை கண்டடையும் நோக்குடன் தமிழ்-ஆங்கில சிறுகதை மொழியாக்கப் போட்டி ஒன்றை நடத்தவுள்ளோம். எழுத்தாளர் அ. முத்துலிங்கம், மொழிபெயர்ப்பாளர்கள் என். கல்யாண் ராமன் மற்றும் தீபா பஸ்தி ஆகியோர் நடுவர்கள். முதல் பரிசு ₹25,000. பரிசுகளை வழங்குவோர் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் மற்றும் விஷ்ணுபுரம் பதிப்பகம். அவர்களுக்கு எங்கள் நன்றி.
போட்டி விபரங்கள் – The Mozhi Prize
மிக்க நன்றி,
சுசித்ரா
ப்ரியம்வதா
‘ரிவியூஸ்!!!’
எல்லாமே ’சூப்பர் பாஸிட்டிவ்’ பாராட்டுக்கள். அதிலும் வடக்கிலிருந்து இதுவரை நான் கேள்வியே பட்டிருக்காத இளைய தலைமுறையினரிடமிருந்து வந்துகொண்டிருக்கும் சொற்கள் திகைக்கச் செய்கின்றன. காலம்.சூழல், பேசுபொருள் எல்லாமே அயலாக இருந்தாலும் உண்மையான படைப்பூக்கமும், கலையும் எங்கும் சென்று சேரும் என்பதை மீண்டும் எனக்கே நிரூபித்துக்கொள்கிறேன். தொடர்ச்சியாக வெவ்வேறு ஊர்களில் இருந்து அழைப்புகள். உணர்ச்சிப்பரவசம் கொண்ட உரையாடல்கள். கலை உருவாக்கும் மனிதர்கள் மெய்மனிதர்களை விடக் கூர்மைகொண்டவர்கள். மெய்மனிதர்களை கலையாக்கும்போது அந்த மாமனிதர்களே பெரிதாகிவிடுகிறார்கள்.
R eview: Stories of the True by Jeyamohan ‘Stories of the True’: This collection of Jeyamohan’s stories in translation is rooted in real life Stories of the True review: Jeyamohan now moves us in English
A Search for Moorings
Over 300 books, 2 rebirths later, iconic Tamil author Jeyamohan says translations are strange
Speaking to the truth: reviews of Jeyamohan’s ‘Stories of the True’
Buy Stories of the True : Translated from the Tamil by Priyamvada And PS1
Thank you for celebrating #PS1!
Catch the movie in theatres near you now!#PonniyinSelvan1 #ManiRatnam @arrahman @MadrasTalkies_ @LycaProductions @tipsofficial @tipsmusicsouth pic.twitter.com/fnUgBqRyJS
— Lyca Productions (@LycaProductions) October 1, 2022
September 30, 2022
உளத்திட்பம் என்பது…
அன்புள்ள ஜெ,
எனக்கு 24வயதாகிறது. மிகுந்த மனக்குழப்பத்தில் தவித்த நாட்களில் தான் உங்கள் வலைத்தளத்திற்கு வந்தடைந்தேன்.
அப்பொழுது என்மீதே எனக்குச் சுய காழ்ப்பு இருந்தது. ஏன் நான் கண்ட கனவுகள் ஒன்றையும் செயல்படுத்தவில்லை, ஏன் காதல் எனக்குச் சாத்தியப்படவில்லை? முக்கியமாக வேலையின்றி நகரத்தில் சுற்றிக்கொண்டிருந்த நாட்களில் இரண்டாவது கேள்வி என்னை வதைத்துக்கொண்டே இருந்தது.போதாக்குறைக்கு Political Correctness கும்பல்களில் சிக்கிக்கொண்டு, எல்லாவற்றையும் வெறுத்து ஒதுக்கும் Cancel Culture மனநிலையில் இருந்தேன்.
அப்பொழுது தான் சமூக வலைதள நண்பர் ஒருவர் உங்களின் “காதலைக் கடத்தல்” கட்டுரையை எனக்கு அனுப்பினார். அக்கட்டுரை அப்பொழுது இருந்த அனைத்து சந்தேகங்களையும் தீர்த்து என்னை ஆசுவாசப்படுத்தியது.
அவரின் பரிந்துரையின் பேரில் உங்கள் புனைவுலகத்தில் நுழைய அனல்காற்றை வாசித்தேன், பின்பு அறம்.துவங்கினால் முடிவு வரை பிசிரில்லாமல் ஓடைபோல் செல்லும் நடையைக் கொண்டு தற்கால எழுத்தில் உங்களைப் போன்று எழுதுபவர் அரிது என்று உணர்ந்தேன். முக்கியமாக இந்த வலைத்தளம்; தியானம், யோகம், இலக்கியம் என்று பல்வேறு விசயங்களில் எனக்கு அறிவைக்கொடுத்தது. தன்மீட்சி எனக்குப் புதிய திறப்புகளை அளித்தது.இப்பொழுது ஓரளவுக்கு வாழ்வு சீராகி, உயர்கல்வி பயின்று வருகிறேன்.
ஒரு சந்தேகம், பல ஆண்டுகளாகச் செயலின்மைக்குப் பழகிப்போன ஒருவர், திட்பமான செயலாற்றும் மனநிலைக்கு வருவது எப்படி? செயலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு இருந்தாலும், ”வாழ்க்கை அதுவாக மாறிவிடும், ஓடைபோல் வாழ்வின் போக்கில் செல்வோம்.” போன்ற எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் சாக்குகள் என்னை நத்தை வேகத்தில் நகர வைக்கின்றன.
இப்படிக்கு,
PK
அன்புள்ள பிகே
‘எண்ணிய எண்ணியாங்கெய்துவர் எண்ணியார் திண்ணியர் ஆகப்பெறின்’ என்று வள்ளுவர் கூற்று. பல தருணங்களில் நம்மை பொருள்குழப்பத்திற்கு தள்ளும் ஒரு வரியும் கூட. குறள் போன்ற நூல்களை ஆசிரியர் முன் நெடுவிவாதமின்றி பயிலக்கூடாது என்பதற்கான சான்றும் கூட.
பெரும்பாலானவர்கள் ‘எண்ணியவற்றை எண்ணியாங்கு எய்துபவர்’ எவரென்றால் அவ்வாறு எண்ணியவர்களில் எவர் உளத்திட்பமுடையவரோ அவர் மட்டும்தான்’ என்று பொருள் கொள்வார். அதாவது இயல்பிலேயே உளத்திட்பம் வாய்ந்தவர்கள் மட்டுமே எண்ணியதை எய்தமுடியும் என்று புரிந்து கொள்ளப்படுகிறது.
அவ்வாறு இளமையிலேயே உளத்திட்பம் ஒருவருக்கு வர முடியுமா என்ன? எவராயினும் தான் எவரென்றும், தன் ஆற்றல் என்னவென்றும், தன் இலக்கென்னவென்றும், செல்வழி என்னவென்றும் எண்ணி மயங்கிச்சுழலும் ஒருமுதிரா இளமைக்காலம் அவர்களுக்கு உண்டு அல்லவா? அப்போது உளத்திட்பம் இருக்க முடியுமா என்ன? அந்நிலையில் ஒருவர் தான் எண்ணியவற்றை எப்போதுமே எய்த இயலாது என்ற சலிப்பையும் சோர்வையும் தானே அடைவார்.
நம் வாழ்க்கையில் உளத்திட்பம் உடையவர்கள் என்று பலரைப்பார்க்கிறோம். எத்தகையவர் அவர்? முதலில் கண்ணுக்குப்படுபவர்கள் செல்வவளம் உடையவர்கள். செல்வம் அளிக்கும் தன்னம்பிக்கையும் துணிவும் என்னவென்று நான் தொடர்ந்து கண்டுகொண்டிருக்கிறேன்.
பலசமயம் பெருஞ்செயலாற்றியவர்கள் தந்தையர் ஈட்டிய பொருளை இளமையிலேயே பெற்றவர்கள். அதனால் உயர்கல்வியும் உயர்குடிச்சூழலின் பழக்கமும் அடைந்தவர்கள். தொடக்கத்திற்கான முதலீடு கையில் இருக்கும். தன் உயிர்வாழ்தலுக்காக மட்டும் எதையும் செய்யவேண்டியதில்லை என்னும் சூழல் இருக்கும். தன் ஆற்றலை தன் இலக்கற்ற வேறு விஷயங்களில் சிதறடிக்க தேவை இருக்காது. எதிர்காலம் குறித்த அச்சம், எதிர்பாராமை குறித்த பதற்றம் இருக்காது. உளத்திட்பம் என நாம் காணும் பெரும்பாலான ஆளுமைப்பண்பு, செல்வத்திலிருந்து வருவது.
அதற்கு அடுத்தபடியாக அறிவு அளிக்கும் உளத்திட்பம். அறிவு தெளிவென ஆகும்போதுதான் அந்த உளத்திட்பம் வருகிறதே ஒழிய அறிவு மட்டுமே ஒருவனை வந்தடைந்துகொண்டிருக்கையில் அத்திட்பம் வாய்ப்பதில்லை. பல தருணங்களில் பகுதியான அறிவு, ஒத்திசைவற்ற அறிவு ஒருவனுக்கு பதற்றத்தையும் மிகையார்வத்தையும், விளைவாக எதிர்நிலை பண்புகளையும், இறுதியாக கடும் உளச்சோர்வையும் அளிக்கும். அறிவுச்சூழலில் இருப்பவர்களில் இன்று பெரும்பாலானவர்கள் இந்தநிலையில் தான் இருக்கிறார்கள்.
ஏனெனில் இன்று அறிதல் பலமுனைப்பட்டு ஒருவனை வந்து தாக்குகிறது. தேடி, கற்று அடையும் அறிவல்ல இன்று ஒருவனிடம் இருப்பது. ஒவ்வொருவரையும் தேடிவந்து அருவியென அவர்கள் மேல் பொழியும் அறிவு அவர்களின் தெரிவுக்கு அப்பாற்பட்டது. அத்தனை அறிவையும் உள்வாங்கி அமைப்பென ஒருங்கிணைத்து கூர்கொள்ளச்செய்து தன் வினாக்களை அவற்றின்மேல் ஏவி, விடைகளை பெற்று தெளிவு கொள்பவர் மிக அரிதானவர்.
கல்வி தெளிவென ஆவதற்கு முறையான ஆசிரியர்கள் தேவை. அந்த ஆசிரியர் மாணவர்களிடம் தெளிவை உருவாக்கும் நோக்கம் கொண்டிருக்கவேண்டும். தனது அரசியல் அல்லது அதிகாரம் அல்லது பற்று சார்ந்த நோக்கங்களை மாணவர்களிடம் திணிக்கக்கூடாது. அத்தகையோர் இன்று மிக அரிதாகவே கிடைக்கிறார்கள். ஆகவே தெளிவு கொண்ட அறிவென்பது காணக்குறைவானது.
அத்தகைய அறிவுத்தெளிவு இருக்குமெனில் அது உளத்திட்பத்தை அளிக்கிறது. தன் இலக்கென்ன என்று, தன் பணி என்ன என்று, அதில் எஞ்சுவதென்ன என்று முன்னரே அறிந்தவற்றின் விளைவாக வரும் உளத்திட்பம் அது. அதுவே
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்
என்று கூறும் ஒருமை நிலைக்கு ஒருவரை இட்டுச் செல்கிறது.
நான் பார்த்த வரை கல்வியையும் அக்கல்வியைப் பயன்படுத்தும் களத்தையும் ஒருங்கே கண்டடைந்தவர்கள், கற்பவற்றை செயலென்று அக்கணமே ஆக்கிக்கொண்டிருப்பவர்கள், செயல் வழியாகக் கல்வியையும் கல்வி வழியாக செயலையும் முழுமை செய்து கொள்பவர்கள் மட்டுமே அந்த தெளிவுடன் உளத்திட்பத்துடன் இருக்கிறார்கள்.
நம் சூழலில் பெரும்பாலும் அத்தகையோர் மீதுதான் தெளிவிலாக் கல்வி கொண்டவர்களின் வஞ்சமும் காழ்ப்பும் வசையும் ஏளனமும் பெருகிக்கொண்டிருக்கும். ஏனெனில் தெளிவு பிறரை அச்சுறுத்துகிறது. அது ஓர் அறைகூவல் போன்றது. தெளிவற்றவர்கள் அத்தெளிவுடன் மோதியே தங்களை நிரூபிக்க முயல்வார்கள். தெளிவு கொண்டவர்களை சிதைத்து தன்பக்கம் இழுக்க இடைவிடாது எல்லாத்தரப்புகளும் முயலும். அதைக்கடந்து தெளிவு நின்றிருக்கும் என்பதனால் அம்முயற்சிகள் அனைத்தும் ஒவ்வொரு முறையும் தோல்வியில் முடியும். தோல்வியிலிருந்து மேலும் வஞ்சம் மேலும் சீற்றம் உருவாகிறது. ஆனால் அவ்வஞ்சங்களைக் கடக்க தெளிவால் இயலும்
செல்வமும் அறிவும் அளிக்கும் திட்பம் உலகியல் சார்ந்தது எனில் அதற்கப்பால் உள்ளது ஆன்மீகம் அளிக்கும் திட்பம். நான் இங்கு மதம் சார்ந்த பற்றை ஆன்மீகம் என்று சொல்லவரவில்லை. பக்தியையோ அல்லது வெவ்வேறு வகையான பயிற்சிகளையோ மதம் என்று கூறவில்லை. ஆன்மீகம் என்று நான் சொல்வது முழுதறிவை அடைந்தவனின் நிலைபேற்றை. தன் வாழ்விலிருந்து, இப்பிரபஞ்சத்திலிருந்து, தன் ஆசிரியர்களிடமிருந்து ஒருவர் அடையும் சமநிலை கொண்ட அறிவு ஆன்மீகம் எனப்படுகிறது.
அது அறிதலால் நிகழ்வதல்ல, உணர்ந்து ஆதலால் நிகழ்வது. அது ஒன்றைச்சார்ந்து நிலைகொள்ளாதது. ஒன்றில் மட்டும் குவியாமல் அனைத்தையும் ஒருங்கிணைத்த, தனக்கென ஒரு மையத்தை சமைத்துக்கொள்வது. கலை, இலக்கியம், தத்துவம் ஆகிய மூன்றும் அடிப்படையில் ஆன்மீகத்தை நோக்கிச் செல்பவை. ஆன்மீகத்தால் மட்டுமே ஆழமும் அழுத்தமும் பெறுபவை.
மீண்டும் முதல் வினா. இந்த உளத்திட்பத்தை அத்தனை பேரும் அடையமுடியுமா என்ன? செல்வம் மூதாதையரால் ஈட்டித்தரப்பட்டிருக்க வேண்டும். அறிவும் ஆன்மீகமும் ஒருவன் தன் பயணத்தில் காலப்போக்கில் எய்துவது அப்பயணத்தை நிகழ்த்துவதற்கே உளத்திட்பம் தேவைப்படுகிறது. எனில் உளத்திட்பம் ஓர் இளையோனுக்கு எவ்வாறு அமையமுடியும்?
உளத்திட்பமின்மை என்பது ஒரு குறைபாடோ ஆளுமைச்சிக்கலோ அல்ல. உளத்திட்பமில்லாத ஒரு காலகட்டத்தை கடந்து வராத எவரும் இருக்க இயலாது. அது ஓர் ஆளுமையின் வளர்ச்சிக்காலகட்டம் மட்டுமே. ஒரு மரம் செடியென்றாகி கிளை விரியும்போது எப்பக்கம் சூரிய ஒளி இருக்கிறது, எங்கே நீரிருக்கிறது என்று தன் வேர்களாலும் கிளைகளாலும் கண்டடையக்கூடிய காலகட்டம் அது. அது திட்பத்தை அது அடிமரம் பெருத்து வானில் கிளை விரித்த பின்னரே அடையமுடியும். அதுவரை காற்றிலாடி திசைகள் தோறும் நெளிந்து அது உருவம் கொள்கிறது.
காற்றில் பெருமரங்களைப் பார்க்கையில் அவை அனைத்துமே ஒரு நடனவடிவ உடல் கொண்டிருப்பதைப் போலிருக்கிறது. அந்த நடனம் அவற்றின் வளர்ச்சிப்போக்கில் நிகழ்ந்தது. அவை அடைந்த போராட்டத்தின் கண்கூடான வடிவம் இது. எந்த ஓர் ஆளுமையையும் எடுத்துப்பார்த்தாலும் அவருடைய போராட்டத்தின் வழியாகவே அவர் தன்னுடைய வடிவத்தை அடைந்திருப்பதை பார்க்க முடியும்.
அந்த தேடல்காலகட்டத்தில் முன்நகர்வதற்கான உளத்திட்பத்தை எப்படி அடைவது என்பது தான் நீங்கள் கேட்கும் வினா. அது எவரும் எங்கிருந்தும் கொண்டு வருவதல்ல. எங்கிருந்தும் அளிக்கப்படுவதல்ல. ஒருவர் தன்னால் ஈட்டிக்கொள்ளப்படுவதென்று உணர வேண்டும். ஈட்டிக்கொள்வதற்கான வழிகள் என்ன? உளத்திட்பம் என்பது இன்றைய சூழலில் மிக அரிதான ஒன்று.
சென்ற தலைமுறையில் இளமைப்பருவம் என்பது மிகக்குறுகியது. பதினெட்டு பத்தொன்பது வயதுக்குள் மரபு வகுத்து வைத்திருக்கும் வாழ்க்கை ஓடைக்குள் ஒருவன் வசதியாகச் சென்று சேர்ந்து விடுகிறான். எவரை மணப்பது, எத்தொழில் செய்வது, எங்கு வாழ்வது, என்னென்ன கடமைகளை ஆற்றுவது என்பது எல்லாமே அவனை மீறி முன்னரே தீர்மானிக்கப்பட்டு அவனுக்கு ஒரு பொட்டலமாகவே அளிக்கப்பட்டுவிடுகிறது. அவனுக்கு தெரிவுகளில்லை. ஆகவே அது சார்ந்த பதற்றங்களில்லை.
சுதந்திரமின்மை என்பது ஒரு வகையான சுதந்திரம். முடிவெடுக்கும் பொறுப்பிலிருந்து அது நம்மை விடுவிக்கிறது. சுதந்திரம் என்பது இருத்தலியல் பதற்றத்தை (பறதி, angst) அளிக்கக்கூடியது என்று மிக விரிவாக சார்த்தர் விளக்குகிறார்.
இருத்தலியல் பதற்றம், பறதி என்பது ஒருவனுக்கு சமூகம் அளிக்கும் சுதந்திரத்தால், அதை பயன்படுத்திக்கொள்ளும் அறிவோ ஆளுமையோ இல்லாத நிலையில் உருவாவது. சென்ற தலைமுறையில் இல்லாத பறதி இன்று உள்ளது. இன்று நம்முன் வாய்ப்புகள் திறந்து கிடக்கின்றன. முடிவற்ற வாய்ப்புகள். அவற்றில் எங்கு செல்லவும் முழு சுதந்திரம் நமக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நம்மால் தெரிவு செய்ய முடியவில்லை. நாம் யார் என்று நமக்கு தெரியவேண்டும் நம், திறனென்ன என்று நாம் புரிந்துகொண்டிருக்க வேண்டும். அவ்வாறில்லாத நிலையில் திறந்திருக்கும் ஆயிரம் வழிகளுக்கு முன் எங்கும் செல்லமுடியாமல் திகைத்து அங்கேயே நின்று நம் இளமைப்பருவத்தை முற்றிலும் இழக்கிறோம்.
இப்பறதி பற்றி எனக்கு வரும் கடிதங்கள் எல்லாமே இருபதிலிருந்து முப்பது வயதுகளுக்குள் இருப்பவர்களால் எழுதப்படுபவை. தங்கள் இளமைப்பருவத்தை கிட்டத்தட்ட அவர்கள் கடந்துவிட்டார்கள், கடந்துவிட்டோம் என்று உணர்கிறார்கள். அதிலிருந்து எழுகிறது இந்தப் பதற்றம்.
என் பதில் ஒன்றே. நீங்கள் யார் என்று நீங்கள் கற்பனை செய்து கொண்டிருக்க வேண்டாம். அந்தக்கற்பனை என்பது பெரும்பாலும் உங்களுடைய தன்விருப்பிலிருந்து உருவாவது. தன் விருப்பென்பது ஆணவத்தின் ஒரு இனிய வடிவம். அது உங்களை நீங்களே மதிப்பிட உதவாது.
தன்முன்னேற்ற நூல்கள் திரும்பத்திரும்ப இந்த ஆணவத்தை தன் விருப்பாக மாற்றிக்கொள்ள கற்பிப்பவை மட்டுமே. ‘நம்பு நீ ஆற்றல் மிக்கவன், அரியவன் என எண்ணு. உன்னால் முடியும்’ என்று அவை திரும்ப திரும்பச் சொல்கின்றன. அந்த மந்திரத்தை நீங்கள் திரும்பத்திரும்ப சொன்னால் விடுபட்டுவிடுவீர்கள் என்று அவை கற்பிக்கின்றன. உண்மையில் நம்பிக்கை இழந்து தன்முனைப்பிழந்து இருப்பவரிடம் அந்த தன்விருப்பு ஒருவகை ஆற்றலாக செயல்படும். அவர்களை அது முன்னகர்த்தும், சற்று விடுவிக்கவும் செய்யும். ஆகவே நான் ஒருபோதும் தன்முன்னேற்ற நூல்களை முற்றிலும் மறுத்துரைக்கமாட்டேன்.
ஆனால் தானாகவே சற்று சித்திக்கும் ஒருவருக்கு அந்நூல்கள் பயனற்றவை .ஏனெனில் அவற்றைப் படிக்கும்போது அவற்றுக்கு எதிரான தர்க்கங்களையும் சிந்திக்கும் இளைஞன் உருவாக்கிக்கொள்வான் அதன்பிறகு தன்முனைப்பு நூலுக்கும் அவனுக்குமான ஒரு உரையாடலும் அதன் விளைவான ஒரு குழப்பமும் மட்டுமே அவனுக்கு இருக்குமே ஒழிய அந்நூல்களின் வழியாக இம்மி கூட முன்னகர்ந்திருக்கமட்டான். அத்தகையோருக்காகவே இந்தக்கட்டுரையை எழுதுகிறேன். அத்தகையோர் ஆற்றவேண்டியது என்ன ?
அதையே மீண்டும் சொல்கிறேன், செயல். செயலெனில் என்றோ ஒருநாள் வென்றெடுக்கப்போகும் கோட்டை அல்ல. அதன் மேல் நீங்கள் பறக்கவிடப்போகும் அந்த வெற்றிக்கொடி அல்ல. அது வரட்டும் அதை சென்றடையலாம். ஆனால் இப்போது இங்கு என்ன செய்கிறீர்கள் என்பதை முக்கியமானது. செய்யத்தொடங்குவதே முக்கியமானது. முதற்செயல் அறுதி வெற்றியைவிட ஒருபடி மேலானது. மிகச்சிறிதாக இருக்கட்டும். மிக மிக எளியதாக இருக்கட்டும். ஒருவேளை முற்றிலும் பயனற்றதாகக்கூட இருக்கட்டும். ஆனால் செயலாற்றத்தொடங்கி செயலின் வழியாக நம் ஆற்றலை நாமே கண்டுகொள்வது தான் உளத்திட்பத்தை அடைவதற்கான முதல் வழி.
நீங்கள் ஒரு ஈருளியில் செல்கிறீர்கள் அது திடீரென்று நின்றுவிடுகிறது. முன்பொருமுறை அந்த ஈருளியை கழற்றிப் பார்த்திருந்தீர்கள் என்றால் நீங்கள் அடையும் பதற்றம் எந்த அளவுக்கு குறைந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். தன்னம்பிக்கையும் உளத்திட்பமும் கொண்டவர்கள் எல்லாருமே செயலாற்றி அதன்வழியாக பெற்ற அனுபவம் வழியாகவே அவற்றை அடைந்திருக்கிறார்கள். ஆகவே துளித்துளியாக செயலனுபவத்தை ஈட்டிக்கொள்ளுங்கள் என்றே சொல்வேன்.
இன்று உங்களால் இயன்ற மிக எளிதில் செய்யத்தக்க ஒரு செயலைச்செய்யுங்கள். அதன் வெற்றியைச்சுவையுங்கள். அது அளிக்கும் நம்பிக்கையை ஈட்டிக்கொள்ளுங்கள். அது ஒரு படி. இயல்பாகவே நீங்கள் அடுத்த படிக்கு தான் கால் வைப்பீர்கள். அது எச்செயலாகவும் இருக்கட்டும் கற்றல், சேவை செய்தல், உழைத்தல் எதுவாக இருப்பினும் அதில் உங்கள் ஆற்றல் செலவிடப்படவேண்டும். உங்கள் ஆளுமை அதில் முழுமையாக ஈடுபடவேண்டும். அதனூடாக நீங்கள் எதையோ கற்றுக்கொண்டிருக்க வேண்டும். அந்தக்கற்றல் அளிக்கும் இன்பம் உங்களை விடுதலை செய்வதை நீங்களே பார்ப்பீர்கள். அதனூடாக நீங்கள் முன்னகர்வதை உணர்வீர்கள்.
மனத்திட்பம் என்பது ஒட்டுமொத்தமாக ஒருவரிடம் வந்து சேரும் பெருஞ்செல்வம் அல்ல. அது ஒவ்வொரு ரூபாயாக ஈட்டிக்கொள்வது. ஒரு செயல் வழியாக ஒரு நாணயத்தை பெறுகிறீர்கள். உங்கள் களஞ்சியத்தில் செல்வம் நிறையத்தொடங்குகிறது. ஒருநாள் பெருஞ்செவ்லவந்தராக அதன்மேல் ஆம்ர்ந்திருப்பீர்கள். அதன் நிமிர்வுடன் நம்பிக்கையுடன். அந்த செயல் நோக்கிச் செல்லும் விசையை வேறெவரும் அளிக்க முடியாது. அதை நீங்களே உங்களிடமிருந்து பெறவேண்டும்.
ஒவ்வொருவரும் அவ்வண்ணம் செயல்நோக்கி செல்லமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. நான் ஏராளமானவர்களை பார்க்கிறேன். செயல் என எதிலுமே ஈடுபடாமல், செய்யநேர்ந்தவற்றை மட்டுமே செய்துகொண்டு, முழு வாழ்க்கையும் வாழ்ந்து முடிப்பவர்கள் பலகோடிபேர் இங்குள்ளனர். அவர்கள் வாழ்ந்து மடிவதும் இவ்வியற்கையின் ஒரு நிகழ்வே. சற்றேனும் அகவிசை கொண்டு தன்னைத்தானே செலுத்திக்கொள்ள முடியும் ஒருவரிடம் மட்டுமே நான் பேச விரும்புகிறேன்.
நான் அவர்களிடம் சொல்வது முதற்செயல் தொடங்குக என்றே.
ஜெ
பிகு :நான் சொல்வன எவையும் புதியவை அல்ல. இன்றைய தன்முன்னேற்ற நூலாசிரியர்கள் அனைவருக்கும் முன்னோடியான எமெர்ஸன் அவருடைய Self-Reliance என்ற புகழ்பெற்ற கட்டுரையில் கூறியவையே. நூறாண்டுகளுக்கும் மேலாக உலகமெங்கும் சென்று இளைஞர்களின் செவிகளில் ஒலிக்கும் பெருங்குரல் அவருடையது
ஜெ
ஆதவன், சிருங்கேரி
1987ல் நான் ஆதவனின் என் பெயர் ராமசேஷன் நாவலை நர்மதா பதிப்பக அலுவலகத்தில் இருந்து வாங்கி ரயிலில் படித்தபடி காசர்கோடு சென்றேன். இருபதுநாட்களுக்குள் அவர் சிருங்கேரியில் ஆற்றுவெள்ளத்தில் மறைந்ததை அறிந்தேன். அன்று அது ஒரு துணுக்குறல்.
பின்னர் சிருங்கேரி செல்லும்போதெல்லாம் அந்த சிறு துணுக்குறல் உருவாகும். அண்மையில் சிருங்கேரி சென்றபோதும் ஆதவனை நினைத்துக்கொண்டோம். ஆதவன் என் வாசிப்பில் முக்கியமான எழுத்தாளர் அல்ல. பொதுவாசிப்புத் தரத்துக்கு சற்று மேல் என்று சொல்லத்தக்க தரம் கொண்டவை அவர் ஆக்கங்கள். அன்றைய பொதுமோஸ்தரான சிந்தனைகளால் உருவாக்கப்பட்டவை. இன்று, அந்த காலகட்டம் பின்சென்ற பின் அவை மேலும் ஒளிமங்கியிருக்கின்றன. ஆனாலும் அந்த சாவினால் அவர் நினைவில் எப்போதுமிருக்கிறார்
ஆதவன்பெண் என்றும் இயற்கை என்றும் உள்ள பேராணவம்
“நான் அன்பைத் தேடவில்லை, எப்போதும் எனக்குச் சொந்தமாக, என் இச்சைக்கு வழங்கும் ஒருவள். அழகாக இருப்பது, என் நுண்ணுணர்வைக் கண்டுகொள்வது இவை தான் அவள் செய்ய வேண்டியது.” நாவலில் வரும் வரி. எல்லா ஆணுக்குள்ளும் இருக்கும் ஆணவம். அந்த ஆணவம் உடையும் கணத்திலேயே ஒரு வாலிபன் முழு ஆணாக மாறுகிறான். ஓர் ஆணால் அந்த ஆணவத்தை அத்தனை எளிதாக விட சாத்தியமில்லை. அதற்கு நிகரான எடை கொண்ட ஆணவம் அவனை வந்து மோத வேண்டும். எனவே அது சிலருக்கு உக்கிரமான வலியைத் தந்து நிகழ்கிறது. சிலருக்கு நிகழாமலே இருந்துவிடுகிறது. ஹரனுக்கு அந்தப் பயணத்தில் மைத்ரியின் மூலம் நிகழ்கிறது.
மைத்ரி நாவல் வாங்க குமரித்துறைவி வாங்கவான் நெசவு சிறூகதைத்தொகுப்பு வாங்கபத்துலட்சம் காலடிகள் சிறுகதைத்தொகுப்பு வாங்கதங்கப்புத்தகம் சிறுகதைத்தொகுப்பு வாங்கஆயிரம் ஊற்றுகள் சிறுகதைத்தொகுப்பு வாங்கவாசிப்பின் வழிகள் வாங்கஆனையில்லா சிறுகதைத்தொகுப்பு வாங்கஐந்து நெருப்பு சிறுகதைத்தொகுப்பு வாங்கதேவி சிறுகதைத்தொகுப்பு வாங்கஅந்த முகில் இந்த முகில் – நாவல் வாங்கஎழுகதிர் சிறுகதைத்தொகுப்பு வாங்கமுதுநாவல் சிறுகதைத்தொகுப்பு வாங்கபொலிவதும் கலைவதும் சிறுகதைத்தொகுப்பு வாங்கபின்தொடரும் நிழலின் குரல் அச்சுநூல் வாங்கஇருகலைஞர்கள் சிறுகதைத்தொகுப்பு வாங்கமலை பூத்தபோது சிறுகதைத்தொகுப்பு வாங்கஇலக்கியத்தின் நுழைவாயிலில் அச்சு நூல் வாங்கநத்தையின் பாதை அச்சு நூல் வாங்கமைத்ரி நாவல் வாங்கஆலயம் எவருடையது ஆன்லைனில் வாங்கஇந்துமெய்மை ஆன்லைனில் வாங்கசாதி – ஓர் உரையாடல் ஆன்லைனில் வாங்கவணிக இலக்கியம் ஆன்லைனில் வாங்கஈராறுகால் கொண்டெழும் புரவி ஆன்லைனில் வாங்ககதாநாயகி ஆன்லைனில் வாங்கஒருபாலுறவு ஆன்லைனில் வாங்கஅனல் காற்று ஆன்லைனில் வாங்கவெண்முரசு – நீர்ச்சுடர் (23) வாங்கஞானி ஆன்லைனில் வாங்கநான்காவது கொலை ஆன்லைனில் வாங்கவிசும்பு ஆன்லைனில் வாங்கவெண்முரசு – களிற்றியானை நிரை (24) வாங்க
போகனின் செல்வன்
போகன், வீரவைஷ்ணவ அனீஷ்கிருஷ்ணன் நாயர், சேரநாட்டு வள்ளியாற்றங்கரையோரம். ஒரு மாலைநேரம்அந்தி மயங்கும் நேரத்தில் சந்தியா கிரியைகளை செய்வதற்காக நதிக்கரையில் தனது சகடவண்டியை நிறுத்திய சிவராமன் குங்குமன் அங்கு தென்பட்ட காட்சியைக் கண்டு வெலவெலத்துப்போனான். நதிக்கரை முழுவதும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பெண் எழுத்தாளர்கள் காணப்பட்டார்கள். மறுகரையிலோ இன்னும் விசித்திரமான காட்சி. கரையே தெரியாதபடிக்கும் சரித்திர நாவலாசிரியர்கள். அருகில் தனது ரதத்தை நிறுத்திய க்ருஷ்னன் குமுதனோ தன்னை மறந்த நிலையில் ”ஒரு கோடி டர்ன் ஓவர்” என்ற சொல்லையே மந்திரம் போல் உச்சரித்துக்கொண்டிருந்தான். அப்போது எங்கோ யாரோ மேலிருந்து பற்களை நற நறவென்று கடிக்கும் ஓசை கேட்டது. அவர்கள் மேலே பார்த்தார்கள். அய்யோ அங்கே அவர்கள் கண்ட காட்சிதான் என்ன? நதிக்கரையின் அருகிலிருந்த அம்பலத்தின் சுற்றுச் சுவர் மீதிருந்துதான் அந்த ஒலி கேட்டது. அங்கே அந்த மதிலின் மேலே வரிசையாக பல மண்டை ஓடுகள் அமர்ந்து பசி! பட்டினி! புறக்கணிப்பு! என்று முனகிக்கொண்டிருந்தன. அவர்கள் எல்லாம் தீவிர இலக்கியவாதிகள் என்று இருவரும் கண்டுகொண்டபோது அவர்கள் அச்சம் மேலும் பெருகியது. பயங்கரமான அந்தக் காட்சியிலிருந்து அவர்கள் விடுபடும்முன்பே அந்த சாலையில் யாரோ வரும் அரவம் கேட்டது. இருவரும் ஒரு ஆல மரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டார்கள். அந்தி ஒரு கெடுதியைப் போலத் திரண்டுவரும் அந்த நேரத்தில் ஒரு நடுத்தர உயரமுள்ள மனிதர் ஒரு குதிரையைப் பிடித்தவாறு நடந்துகொண்டிருந்தார். மயங்கிவரும் இருளில் அவர் முகம் தெரியவில்லை. அந்த மனிதர் யார்? அவர் குதிரையின் மீது ஏறிவராமல் ஏன் நடந்துவருகிறார்? என்று அவர்கள் குழம்பிக்கொண்டிருக்கும்போதே அவர்கள் ஐயத்துக்கு விடை பகிர்வதுபோல மார்கழி மாத ஐந்தாம் நிலவு சட்டென்று தன் திரையை விலக்கி வெளி வந்து அவர் முகத்தில் ஒளியைப் பாய்ச்சியது. கிருஷ்ணன் குமுதன் ஏறக்குறைய ”ஜெயமோகன் சேரன்!” என்று கத்தியேவிட்டான். “பொன்னியின் செல்வன் படத்துக்கு இவர்தான் வசனம் எழுதுகிறார். குதிரைகளைப் பற்றி பத்தாயிரம் பக்கம் இவரால் எழுத முடியும். ஆனால் குதிரையின் மீது நாம் ஏற்றிவைத்தால் கூட கீழே விழுந்துவிடுவார்” என்றான். அவர்கள் அவர் கடந்துபோகிற வரை அப்படியே இருந்தார்கள். ஆனால் அவர்கள் அன்று கண்ட அற்புதங்கள் இன்னும் முடிந்துவிடவில்லை என்று சொல்வது போல அடுத்து நடந்த காட்சி அவர்களைக் கடும் குழப்பத்திலும் பீதியிலும் ஆழ்த்தியது. ஜெயமோகன் சேரன் சென்ற சாலையில் இப்போது இன்னும் ஒருவர் வரும் ஒலி கேட்டது. அவர்கள் மறுபடியும் மறைந்துகொண்டார்கள். சற்று நேரத்தில் அந்த மனிதரும் வந்தார்.அதே போல் ஒரு குதிரையை இழுத்துக்கொண்டு. ஆனால்…! அது குழந்தைகள் விளையாடும் மரக்குதிரை. அதனைத் தோளில் கட்டி இழுத்தபடி ஒரு பாடலை முணுமுணுத்தபடியே வந்துகொண்டிருந்தார். அதைப் பாடும்போது அவர் முகத்தில் ஒரு பயங்கரச் சாயை தென்பட்டது. “தனிமையே என் பாதை! பகடியே என் போதை!” கிருஷ்ணன் குமுதனுக்கு அவர் யாரென்று தெரியவில்லை. ஆனால் சிவராமன் குங்குமனுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டு சற்றே முன்சென்று கூர்ந்து பார்த்தான். மறுகணம் அவன் முகம் பேய் அறைந்தது போல் வெளுத்தது. “நாசம்! இனி எல்லாம் சர்வ நாசம்!” என்று முணுமுணுத்தான். “கிருஷ்ணன் குமுதா! நாம் உடனே இங்கிருந்து கிளம்ப வேண்டும். நம்மைப் பெரும் ஆபத்து சூழ்ந்திருக்கிறது. இந்த மரக்குதிரையை இழுத்துக்கொண்டு போகும் விசித்திரச் சித்தனின் பெயர் போகன். அதி பயங்கரன்!” என்றான்.(போகன் சங்கரிஜ் முகநூலில் இருந்து -2019)போகன் சங்கர்
வெண்முரசு வாசிப்பு-கடிதங்கள்
இணையத்தில் ஒரு மென்பொருள் நிறுவனத்தின் இயக்குநர் தன் அம்மாவுக்கு தினசரி வெண்முரசு வாசித்துக் காண்பிப்பதைக் கண்டேன். என்ன ஒரு அற்புதமான விஷயம் என்னும் எண்ணம் ஏற்பட்டது. ஒரு அம்மாவுக்கும் மகனுக்கும் இடையே ஆழமான உறவு உருவாக இதுபோல ஒரு விஷயம் வேறு கிடையாது.
நான் ஒவ்வொரு நாளும் என் பிள்ளைகளுக்கு வெண்முரசு கதையைச் சொல்லிவருகிறேன். பன்னிருபடைக்களம் வந்துவிட்டேன். ஒவ்வொரு நாளையும் சுவாரசியமாகக் குழந்தைகளுடன் கழிக்க இது மிகச்சிறந்த வழியாக இருக்கிறது. இல்லாவிட்டால் டிவி பார்க்கவேண்டும். ஆளுக்கொரு திசையில் இருந்து அதைப் பார்க்கவேண்டும். அல்லது படிப்பு பற்றி பேச்சு வரும். அது பிள்ளைகளுக்கு எல்லா மனநிலையையும் டல் ஆக்கிவிடும்.
இன்றைக்கு குழந்தைகள் டிவி, கம்ப்யூட்டர் கேம்ஸ் என்று போய்விடாமல் தடுப்பதுதான் மிகப்பெரிய விஷயமாக இருக்கிறது. அதற்கு இந்தமாதிரி கதையும் அதன் வழியாக உருவாகும் உறவும் மிக அவசியம் என்று எனக்கு தோன்றுகிறது.
ராமசுந்தரம்
***
அன்புள்ள ஜெ
வெண்முரசு முடிந்துவிட்டது, நீங்கள் சென்றுவிட்டீர்கள். நான் இன்னும் அதற்குள்தான் இருக்கிறேன். நாள்தோறும் வெண்முரசு படித்து 2021 ல் முடித்தேன். ஆனால் இப்போது மீண்டும் வெய்யோன் வரை புத்தகத்தில் படிக்கும்போதுதான் இது உண்மையில் எவ்வளவு பெரிய ஒரு சாதனை என்று புரிகிறது. அப்போது கதையோட்டமே முக்கியமாக இருந்தது. இப்போதுதான் டீடெயிலிங்குக்குள் செல்கிறேன். எவ்வளவு தகவல்கள். தசபுஷ்பம் என்றால் என்ன, அஷ்டமங்கலம் என்றால் என்ன. எவ்வளவு நுணுக்கமான செய்திகள். அதேபோல பேச்சில் எவ்வளவு அற்புதமான மன அவதானிப்புகள். மனுஷமனம் எப்படியெல்லாம் ஓடும் என்பதை இதைப்போல இவ்வளவு நுட்பமாகச் சொன்ன ஒரு தமிழ்ப்படைப்பும் இல்லை. இதை வாசித்தபின் எல்லாமே சின்னப்பிள்ளை விளையாட்டாகத் தோன்றுகிறது.
ஆர். கே.உமாபதி
வெண்முரசு – கல்பொருசிறுநுரை (25) வாங்க
September 29, 2022
பொன்னியின் செல்வன் – ஒரு பெருங்கனவின் நனவுரு
பொன்னியின் செல்வன் இன்று வெளியாகிறது. உலகமெங்கும். உலகமெங்கும் என்பது வெறும் சொல் அல்ல. உலகமெங்கும் என பல தமிழ் சினிமாக்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவை உலகமெங்குமுள்ள தமிழ் ரசிகர்களுக்காக வெளியானவை. பொன்னியின் செல்வன் மெய்யாகவே உலக சினிமாப்பார்வையாளர்களைச் சென்றடைகிறது. அவ்வாறு சென்றடையும் முதல் தமிழ் சினிமா இது.
பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏராளமான உலகமொழிகளில் வசன எழுத்துக்கள் சேர்க்கப்பட்டு வெளியாகிறது. இதுவரை தமிழ் சினிமா வெளியாகியிருக்காத நாடுகளில் வெளியாகிறது. இதுவரை மையத்திரையரங்குகளில் தமிழ் சினிமா வெளியாகியிருக்காத நாடுகளில் முதன்மை திரைப்படவெளியீடாகவே நிகழவிருக்கிறது.
இப்படிச் சுருக்கலாம். இன்று இப்படத்தைப் பார்க்கப் போகிறவர்களில் கால்வாசிப்பேர் தமிழ், தமிழகம் என்னும் சொல்லையே முதன்முறையாகக் கேள்விப்படுபவர்களாக இருப்பார்கள். நேர்பாதிப் பேர் சோழர் என்னும் சொல்லை முதல் முறையாகக் கேள்விப்படுபவர்களாக இருப்பார்கள்.
இது ஒரு பெருங்கனவு. தமிழரின் கூட்டுக்கனவாகவே ஆகிவிட்ட ஒன்று. அதை இளைய தலைமுறைக்கு முன் வைக்கிறோம். உலகின் முன் வைக்கிறோம். அதற்கு ஈழத்தமிழர்களுக்கு முதன்மை நன்றிகூறவேண்டும். அவர்கள் சந்தித்த மிகப்பெரிய வரலாற்று அவலத்தில் இருந்து பீனிக்ஸ் போல மீண்டெழுந்தனர். உழைப்பால், அறிவால் உலகை வென்றனர். அவ்வெற்றியே பொன்னியின்செல்வன் போன்ற ஒரு படத்தை உருவாக்குவதற்கான அடித்தளமாக அமைந்துள்ளது. அவர்களின் தமிழ்ப்பற்றுக்கு, அவர்கள் பகிர்ந்துகொண்ட கனவுக்கு வணக்கம்.
உலகமெங்கும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. இப்படத்தை அவ்வண்ணம் கொண்டுசென்றபோது கண்ட வியப்புக்குரிய விஷயம், எங்குமே ஒரு துளி எதிர்மறை எண்ணம்கூட இல்லை என்பது. தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அத்தனை பகுதிகளிலும் வரவேற்புதான் உள்ளது. கேரளத்தில் சோழர்களின் பாசனப் பணிகளைப் பற்றிச் சொன்னபோது அதுதான் ‘வைரல்’ ஆகியது. தெலுங்கு மக்கள், ராஜமௌலி உட்பட, பாகுபலியை விஞ்சட்டும் என்றே வாழ்த்துகின்றனர். தமிழகத்தில் இயல்பாகவே எதிர்மறையானவர்களாகிய மிகச்சிலர் தவிர ஒட்டுமொத்தச் சூழலே எதிர்பார்த்திருக்கிறது இக்கனவை.
ஓர் உதாரணம், ஆனந்த் மகிந்திரா தனக்கு இதுவரை சோழர்களைப் பற்றித் தெரியாது, இப்படமே தொடக்கம் என்று ஒரு டிவிட் செய்திருக்கிறார். அதுதான் இந்தப்படத்தின் நோக்கமே. எங்கும் கொண்டுசெல்வது. இது உலகளாவிய படம். இன்றைய சினிமா ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட இன்றைய சினிமா.
(பொன்னியின்செல்வன் பற்றி நிறையவே பேசவேண்டியிருந்தது. இன்றுடன் நிறைவு. இனி அடுத்தது. வெந்து தணிந்தது காடு-2 எழுத்துக்குள் சென்றுவிட்டேன். நன்றி)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers



