போகனின் செல்வன்
போகன், வீரவைஷ்ணவ அனீஷ்கிருஷ்ணன் நாயர், சேரநாட்டு வள்ளியாற்றங்கரையோரம். ஒரு மாலைநேரம்அந்தி மயங்கும் நேரத்தில் சந்தியா கிரியைகளை செய்வதற்காக நதிக்கரையில் தனது சகடவண்டியை நிறுத்திய சிவராமன் குங்குமன் அங்கு தென்பட்ட காட்சியைக் கண்டு வெலவெலத்துப்போனான். நதிக்கரை முழுவதும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பெண் எழுத்தாளர்கள் காணப்பட்டார்கள். மறுகரையிலோ இன்னும் விசித்திரமான காட்சி. கரையே தெரியாதபடிக்கும் சரித்திர நாவலாசிரியர்கள். அருகில் தனது ரதத்தை நிறுத்திய க்ருஷ்னன் குமுதனோ தன்னை மறந்த நிலையில் ”ஒரு கோடி டர்ன் ஓவர்” என்ற சொல்லையே மந்திரம் போல் உச்சரித்துக்கொண்டிருந்தான். அப்போது எங்கோ யாரோ மேலிருந்து பற்களை நற நறவென்று கடிக்கும் ஓசை கேட்டது. அவர்கள் மேலே பார்த்தார்கள். அய்யோ அங்கே அவர்கள் கண்ட காட்சிதான் என்ன? நதிக்கரையின் அருகிலிருந்த அம்பலத்தின் சுற்றுச் சுவர் மீதிருந்துதான் அந்த ஒலி கேட்டது. அங்கே அந்த மதிலின் மேலே வரிசையாக பல மண்டை ஓடுகள் அமர்ந்து பசி! பட்டினி! புறக்கணிப்பு! என்று முனகிக்கொண்டிருந்தன. அவர்கள் எல்லாம் தீவிர இலக்கியவாதிகள் என்று இருவரும் கண்டுகொண்டபோது அவர்கள் அச்சம் மேலும் பெருகியது. பயங்கரமான அந்தக் காட்சியிலிருந்து அவர்கள் விடுபடும்முன்பே அந்த சாலையில் யாரோ வரும் அரவம் கேட்டது. இருவரும் ஒரு ஆல மரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டார்கள். அந்தி ஒரு கெடுதியைப் போலத் திரண்டுவரும் அந்த நேரத்தில் ஒரு நடுத்தர உயரமுள்ள மனிதர் ஒரு குதிரையைப் பிடித்தவாறு நடந்துகொண்டிருந்தார். மயங்கிவரும் இருளில் அவர் முகம் தெரியவில்லை. அந்த மனிதர் யார்? அவர் குதிரையின் மீது ஏறிவராமல் ஏன் நடந்துவருகிறார்? என்று அவர்கள் குழம்பிக்கொண்டிருக்கும்போதே அவர்கள் ஐயத்துக்கு விடை பகிர்வதுபோல மார்கழி மாத ஐந்தாம் நிலவு சட்டென்று தன் திரையை விலக்கி வெளி வந்து அவர் முகத்தில் ஒளியைப் பாய்ச்சியது. கிருஷ்ணன் குமுதன் ஏறக்குறைய ”ஜெயமோகன் சேரன்!” என்று கத்தியேவிட்டான். “பொன்னியின் செல்வன் படத்துக்கு இவர்தான் வசனம் எழுதுகிறார். குதிரைகளைப் பற்றி பத்தாயிரம் பக்கம் இவரால் எழுத முடியும். ஆனால் குதிரையின் மீது நாம் ஏற்றிவைத்தால் கூட கீழே விழுந்துவிடுவார்” என்றான். அவர்கள் அவர் கடந்துபோகிற வரை அப்படியே இருந்தார்கள். ஆனால் அவர்கள் அன்று கண்ட அற்புதங்கள் இன்னும் முடிந்துவிடவில்லை என்று சொல்வது போல அடுத்து நடந்த காட்சி அவர்களைக் கடும் குழப்பத்திலும் பீதியிலும் ஆழ்த்தியது. ஜெயமோகன் சேரன் சென்ற சாலையில் இப்போது இன்னும் ஒருவர் வரும் ஒலி கேட்டது. அவர்கள் மறுபடியும் மறைந்துகொண்டார்கள். சற்று நேரத்தில் அந்த மனிதரும் வந்தார்.அதே போல் ஒரு குதிரையை இழுத்துக்கொண்டு. ஆனால்…! அது குழந்தைகள் விளையாடும் மரக்குதிரை. அதனைத் தோளில் கட்டி இழுத்தபடி ஒரு பாடலை முணுமுணுத்தபடியே வந்துகொண்டிருந்தார். அதைப் பாடும்போது அவர் முகத்தில் ஒரு பயங்கரச் சாயை தென்பட்டது. “தனிமையே என் பாதை! பகடியே என் போதை!” கிருஷ்ணன் குமுதனுக்கு அவர் யாரென்று தெரியவில்லை. ஆனால் சிவராமன் குங்குமனுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டு சற்றே முன்சென்று கூர்ந்து பார்த்தான். மறுகணம் அவன் முகம் பேய் அறைந்தது போல் வெளுத்தது. “நாசம்! இனி எல்லாம் சர்வ நாசம்!” என்று முணுமுணுத்தான். “கிருஷ்ணன் குமுதா! நாம் உடனே இங்கிருந்து கிளம்ப வேண்டும். நம்மைப் பெரும் ஆபத்து சூழ்ந்திருக்கிறது. இந்த மரக்குதிரையை இழுத்துக்கொண்டு போகும் விசித்திரச் சித்தனின் பெயர் போகன். அதி பயங்கரன்!” என்றான்.(போகன் சங்கரிஜ் முகநூலில் இருந்து -2019)போகன் சங்கர்
Published on September 30, 2022 11:31
No comments have been added yet.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers
Jeyamohan isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

