Jeyamohan's Blog, page 704

October 4, 2022

கணக்கும் காதலும்

அன்புள்ள ஜெ

ஒரு கேள்வி. இதற்கு கோபப்படாமல் பதில் சொல்லவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மணிவிழா கொண்டாட்டச் செய்திகளைப் பார்த்தேன். அதென்ன, ஆண்களுக்கு மட்டும் மணிவிழா? பெண்களுக்கு மணிவிழா நடத்துவதில்லை? அந்த வழக்கமே கேடுகெட்ட ஆணாதிக்க வழக்கம் தானே? ஆண்களுக்கு அறுபது வயதானால் பெண்கள் எதற்கு அதை கொண்டாடவேண்டும்? அவர்களே கொண்டாடட்டும் என்று விட்டுத்தொலையவேண்டியதுதானே?

நீங்கள் உங்கள் மனைவியை அவள் இவள் என மரியாதையில்லாமல் எழுதுவதையும் பார்க்கிறேன். அதுவும் ஒரு கீழ்மையான வழக்கம்தான். இந்தக் குடும்பம் என்ற அமைப்பே ஆணாதிக்கச் சிந்தனை. ஆண்கள் பெண்களுக்கு உருவாக்கிய ஜெயில்.

எஸ்.

*

அன்புள்ள எஸ்,

மணிவிழா எனக்கு உவப்பானது அல்ல. அதை கொண்டாடவேண்டாம் என்பதே என் எண்ணம். என்னுடைய எந்தப் பிறந்தநாளையும் கொண்டாடியதில்லை. பிறந்தநாளில் ஊரிலிருப்பதே அரிது. பிறந்தநாள் ஞாபகமும் இருக்காது. கூப்பிட்டுச் சொன்னால் சரி என ஒரு வார்த்தையுடன் நின்றுவிடுவேன். வயதை கொண்டாடுவது எனக்கு உவப்பல்ல. நான் பொதுவாக பிறந்தநாள் வாழ்த்துக்களும் சொல்வதில்லை.

இந்தவிழா நண்பர்கள் மிகமிக விரும்பியமையால். அவர்கள் அதை பின்னாளில் வருத்தமாக உணரக்கூடும் என்று சொன்னார்கள். ஆகவே ஒப்புக்கொண்டேன். விழாவில் அதை அருண்மொழி எத்தனை மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறாள் என்று பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. அதை தவிர்க்கப்பார்த்தோமே என்று எண்ணினேன்.

மணிவிழா ஒருவருக்கு அறுபது ஆனதனால் எடுக்கப்படுவது அல்ல. அது ஒருவர் ஏதேனும் துறையில் சாதனை செய்தவர் என்று எவருக்கேனும் தோன்றுவதனாலும் அது எடுக்கப்படுகிறது. சாதனை புரிந்தவர் என கருதப்பட்ட பெண்களுக்கு அப்படி அகவைநிறைவு விழாக்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஹெப்சிபா ஜேசுதாசன், சுகதகுமாரி போன்றவர்களின் விழாக்களில் நானும் கலந்துகொண்டதுண்டு.

குடும்பத்தைப் பொறுத்தவரை முதலில் அறுபது ஆவது கணவனுக்குத்தான். ஆகவே அதையொட்டி விழா நடைபெறுகிறது. அதன்பின் மனைவிக்கு அறுபதாகும்போது விழா எடுப்பதென்றால் எடுக்கலாம். சென்றகாலங்களில் இந்த அறுபது, எண்பது விழாக்கள் பெற்றோருக்குப் பிள்ளைகளால் நடத்தப்படுவனவாக இருந்தன. உறவினர்கள் கூடும் ஒரு நிகழ்வு. அன்று ஆணைச் சார்ந்து பெண் இருந்தமையால் ஆணின் வயது கருத்தில்கொள்ளப்பட்டது என்பது ஓர் உண்மை. இனி மாற்றிக்கொள்ளலாம். பிழையில்லை.

ஆனால் வீட்டில் நிகழும் பெரும்பாலான விழாக்கள் பெண்கள் மட்டுமே சம்பந்தப்பட்டவை. திருமணத்துக்குப் பிந்தைய சடங்குகள், கர்ப்பம். பிரசவம், குழந்தைகளின் விழாக்கள் எல்லாமே. ஆண்களுக்கு திருமணத்திற்குப் பிறகு அடுத்த விழா அறுபதில்தான். (பெண்களுக்கு மட்டும் வயசுக்குவரும் கொண்டாட்டம் கூடாது, ஆண்களுக்கும் வேண்டும் என எவராவது ஆரம்பிப்பார்களா என்ன என்று தெரியவில்லை).

தமிழகத்தில் இன்று புதிதாகச் செய்யவேண்டியது, அன்னையரின் அகவைநிறைவை கொண்டாடுவது. அவர்கள் கணவரை இழந்து இருந்தாலும் அதை வேறுவகையில் கொண்டாடலாம். ஆலயங்களுக்குச் செல்லலாம். சேவை நிறுவனங்களுக்குச் செல்லலாம். குடும்பச் சந்திப்புக்கூடுகைகளாகக் கொண்டாடலாம். கேரளத்தில் தொன்றுதொட்டே நிகழ்வதுதான்.

ஆனால் ஒன்று உண்டு. உறவு எதுவானாலும் கொடுக்கும் மனநிலை, தன்னை பொருட்டாக்காமல் பிறரை கவனிக்கும் மனநிலையில் இருந்தே அது இனிதாக நீடிக்கமுடியும். எனக்கென்ன கிடைக்கிறது என கணக்கிடத் தொடங்கினால், சரிசமம் என்றெல்லாம் விவாதிக்கத் தொடங்கினால் அங்கே உறவு கசக்கத் தொடங்கும். நட்புகள்கூட.

இங்கே பொதுவாக பெண்களின் உரிமை என்னும் கணக்கு இன்று நிறையவே பேசப்படுகிறது. பேசவே படாத ஒன்று தந்தை எனும் ஆணின் உரிமை. தன் வாழ்க்கை முழுக்க அவன் கொடுப்பவன் மட்டுமே. உழைப்பை முழுக்க, சேமிப்பை முழுக்க. அவனுக்கு தன்னலக் கணக்கு சிறிது வந்தாலும் குடும்பம் என்னும் அமைப்பு சிதையத் தொடங்கும். அதன் முதற்பலி பிள்ளைகள்தான்.

என் தந்தை அவருக்காக எதையாவது எண்ணினாரா, கணக்குபோட்டுப் பார்த்தாரா என எண்ணிப்பார்க்கிறேன். நான் என் பிள்ளைகளிடம் ஏதேனும் கணக்கு பார்க்கிறேனா? கொடுப்பது மட்டுமாகவே நீடிக்கும் உறவு இது. இதில் இருக்கும் நிகரற்ற இன்பம் ஒரு இம்மைப்பேறு.

தாய்க்கு குழந்தையுடனான உறவென்பது உயிரியல் சார்ந்தது. எல்லா உயிர்களிலும் உள்ளது. மனிதனைப் பொறுத்தவரை தந்தை எனும் உறவு ஒரு கலாச்சாரக் கட்டுமானம். உருவாக்கி உருவாக்கி நிலைநிறுத்திக்கொள்ளும் ஓர் உணர்வு நிலை.

விந்தையான ஒன்று இது. ஒரு மனிதன் தன் மொத்தவாழ்நாளையும் வேறுசில மனிதர்களுக்காகச் செலவிடுகிறான், எதையும் பெற்றுக்கொள்வதில்லை. அதை தன் கடமை என்றும், அதில் தன் வாழ்க்கையின் அர்த்தமே இருக்கிறது என்றும் நம்புகிறான் அதில் இன்பம் கொள்கிறான்.

அதை சுரண்டல் எனக் கொண்டால், இந்த மொத்த உலகமானுட நாகரீகமே கட்டி எழுப்பப்பட்டுள்ளது தந்தை என்பவனைச் சுரண்டுவதன் வழியாகவே. இந்த மானுடகுலத்துக்கான பலிவிலங்கு தந்தைதான். அடுத்தடுத்த தலைமுறைகள் அவனை தின்றுதான் உருவாகி வருகின்றன.

பி.கே.பாலகிருஷ்ணன் ஒருமுறை அவருக்கே உரிய குரூரவேடிக்கையுடன் சொன்னார், ”வரலாற்றில் ஏதோ ஒரு கட்டத்தில் பெண் அவள் பெறும் குழந்தைகளின் பொறுப்பை முழுக்க ஆணுக்கு அளித்தாள். குரங்கில் அவ்வழக்கம் இல்லை. ஆகவே தொல்மனிதர்களிடம் இருக்க நியாயமில்லை. தொல்குடிகள் பெண்வழிச் சமூகக்குழுக்கள்.

அன்று ஆற்றல்கொண்டவளாக இருந்த அன்னை அவளுக்குச் சாதகமான ஒரு சமூகத்தை உருவாக்கினாள். அதுவே குடும்பம். ஆண் அதன் அடிமை. ஆனால் அவன் அரசன் என நம்பச்செய்யப்படுகிறான். அவன் அத்தனை பொறுப்புகளையும் சுமக்கச்செய்யப்படுகிறான். ஆனால் அதை அவன் ஆட்சிசெய்வதாக எண்ணிக்கொள்கிறான். அவன் சுரண்டப்படுகிறான், அவன் அதை தியாகம் என எண்ணிக்கொள்கிறான்.

குடும்பம் என்பது ஆணுக்கு பெண் உருவாக்கிய மாபெரும் பொறி. பெண்ணியம்பேசும் பெண்கள் அவசரப்பட்டு ஐரோப்பாவில் அவனை திறந்துவிட்டுவிட்டார்கள். சுவை கண்டுவிட்டால் அவனை பின்னர் அச்சிறைக்குள் கொண்டுவரவே முடியாது. இன்று ஐரோப்பாவில் குடும்பம் தேவை என உணர்பவர்கள் அன்னையர். குழந்தைகளின் பொறுப்பை தனியாகச் சுமக்கிறார்கள். குறைந்தது பத்தாயிரமாண்டுகளாக உழைத்த அடிமை நழுவிச்சென்றுவிட்டான்.” பி.கே.பாலகிருஷ்ணன் சொன்னது இது.

இது உண்மையா என்று நான் விவாதிக்க வரவில்லை. இப்படியும் வரலாற்றைப் பார்க்கலாம். நம் வசதிக்காக, நம் உணர்ச்சிகளின்பொருட்டு நாம் மானுட வரலாற்றையும் பரிணாமத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

என் இல்லத்தில் ‘ஆணாதிக்கவாதி’யாக இருக்கிறேனா? தெரியவில்லை. ஆனால் என் மனைவியின் ஒவ்வொரு சிறுவசதியையும் கவனித்துக் கொள்கிறேன். இப்புறவுலகின் ஒரு சிக்கலும் சீண்டலும் அவளை அணுகாமல் கவனிக்கிறேன். அவளுடைய ஒரு சிறு உளக்கோணலைக்கூட உடனே கவனித்து சரிசெய்கிறேன்.

என் வாழ்க்கையின் எல்லாவற்றையும் அவள் கட்டுப்படுத்த அனுமதிக்கிறேன். என் முழுவாழ்க்கையிலும் ஈட்டும் பொருளில் என் அடிப்படைத்தேவை தவிர அனைத்தையும் அவள் குழந்தைகளுக்காக அளிக்கிறேன். அப்படியே ஆணாதிக்கவெறியன் என்னும் முத்திரையையும் சூடிக்கொள்ளவேண்டும் என்றால் அதையும் செய்யவேண்டியதுதான்.

என் வீட்டில் என் மனைவி என்னை ஒருமையில்தான் அழைக்கிறாள். என் மகனும் மகளும் ஒருமையில்தான் அழைக்கிறார்கள். மரியாதை என்பது விலக்கம். வீட்டுக்குள் அதை நான் விரும்புவதில்லை.

கடைசியாக மீண்டும் சொல்கிறேன். கணக்கு பார்க்குமிடத்தில் உறவுகள் அமைவதில்லை. உறவுகள் என்பவை எச்சமில்லாமல் அளிப்பதனூடாக உருவாக்கிப் பேணப்படவேண்டியவை. எல்லா உறவுகளையும் காதல் என்றே பழைய நூல்கள் சொல்கின்றன. இறைவனுடனான உறவைக்கூட. காதல் என்பது கணக்குகள் இல்லா இடத்திலேயே உள்ளது.

ஜெ

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 04, 2022 11:35

உ.வே.சாமிநாதையர்

கொஞ்சம் வாசிப்பவர்களுக்கே உ.வே.சாமிநாதையர் பற்றித் தெரிந்திருக்கும். ஆனால் இந்தப் பதிவும், இதிலிருந்து திறக்கும் சுட்டிகளும் ஒரு முழுமையான வரலாற்றுச் சித்திரத்தை அளிப்பவை

உ.வே.சாமிநாதையர் உ.வே.சாமிநாதையர் உ.வே.சாமிநாதையர் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 04, 2022 11:34

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் – கடிதங்கள்

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், உரைகள்

அன்புள்ள ஜெ

தமிழ்ச்சூழலில் ஒரு வழக்கம் உண்டு. பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு பெரிய அளவில் பேசப்படும் பெரிய சினிமாக்களை வைத்துக்கொண்டு கலை, அரசியல் எல்லாம் பேசிக்கொண்டிருப்பார்கள். கலையும் அரசியலும் முன்வைக்கப்படும் தரமான சினிமாக்கள் பற்றி பேச்சே இருக்காது. அதையெல்லாம் பார்க்கமாட்டார்கள். பார்த்தாலும் புரியாது. சினிமா பற்றிய பேச்சு என்பது இவர்களுக்கு சினிமாவின் வெளிச்சத்தை நாடி செல்வது மட்டும்தான்.

இச்சூழலில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பணியாற்றிய நீங்கள் ’சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ நாவலுக்கான விழா பற்றி எழுதியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் நண்பர்கள் ஒருங்கிணைத்த விழா அது என்று அறிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

சந்தானகிருஷ்ணன்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

விமோசனம் கதையின் வாசிப்பனுபவம் எனக்கு அந்தரங்கமாக வெகு பிரியத்துக்குரியது என்பதால் சிவரஞ்சனியும் சில பெண்களும் நிகழ்வில்  கலந்து கொள்ள முடியாத வருத்தத்தில் இருந்தேன். எனவே விழாவின் அனைத்து உரைகளையும் வரிசையாக  கேட்டேன். உரைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக அந்த கதைகளையும் திரையனுபவத்தையும் இதுவரை வாசித்திருக்காதவர்களுக்கும் திரைப்படத்தை பார்த்திருக்காதவர்களுக்குமாக  நிச்சயம் நிறைவை அளித்திருக்கும். .அருணாவின் உரை பிரமாதம்.

’பேய்ச்சி’ அருணாவிற்கும் ’சிவரஞ்சனி’ அருணாவுக்கும் வேறுபாடு என்றால் அருணாவின் நிமிர்வுதான் முன்பை விட இயல்பாக, இன்னும் நிமிர்வுடன் கூடுதல் ஆரவமுடன் பேசுகிறார்கள்.

வழக்கம் போல கண்களின்  பங்களிப்பும் கையசைவுகளும்  உரைக்கு நிகராக இதிலும் இருந்தது. முதலில் கதை வாசிப்பனுபவத்தை அழகாக முன்வைக்கும் அருணா பின்னர் அந்த திரைக்காட்சியனுபவத்தை,  காமிராக்கோணங்களைக்கூட கைகளாலேயே காண்பித்து ஒவ்வொரு அறையாக ஒவ்வொரு கதாபாத்திரங்களாக, ஒவ்வொரு முக்கிய தருணங்களாக காட்டிக்கொண்டே செல்லுகிறார்கள். இடையிடையே அந்த கதைவாசிப்பும் காட்சியனுபவமும் அருணாவுக்கு என்னவாக இருக்கிறது  என்பதை அவரது மனவெளியில் இருந்து ஒவ்வொன்றாக யோசித்து யோசித்து எடுத்து நம் முன் வைத்து குதூகலத்துடன் சொல்கிறார்கள்.

அருணா பேராசிரியர் ஆகி இருந்தால் உற்காகம் கொஞ்சமும் குறைந்துவிடாமல் மணிக்கணக்காக கற்றுக்கொடுத்து, அவரின் உற்சாகம் மாணவர்களுக்கும் தொற்றிக்கொண்டிருக்கும் வகையில் தான் வகுப்புக்கள் இருந்திருக்கும்.

அந்த தொண்டு நிறுவனம் கிணற்றை தூர்வார முன்வந்த அனுபவத்தையும் கதையுடன் இணைத்து சொல்லுகையில் கதை இன்னும் கேட்பவர்களுக்கு நெருக்கமாகிவிட்டது.

விமோசனம் கதையை அத்தனை அசலாக  விவரித்தார். கதைநாயகி கணவனை எதிர்க்கும் அந்த தருணத்தை உள்ளார்ந்த மகிழ்வுடனே அருணா சொன்னார். ஒரு பெண்ணாக அந்த நாயகியின் துயரில் அருணா பங்குகொண்டிருந்தை அப்போது  கேட்பவர்களும் உணரமுடியும். இறுதியாக அந்த பீங்கான் கோப்பையில் அவளது வாழ்வின் ஒவ்வொரு இனிய நொடியையும் துளித்துளியாக உறிஞ்சிக்குடிப்பதாக சொன்னதும் மானசீகமாக அருணாவை அணைத்துக்கொண்டேன்.

வழக்கம்போல அருணாவின் நினைவாற்றலை வியந்தேன் அடுக்கிக்கொண்டே போகிறார் சம்பவங்களையும். பெயர்களையும். காட்சிகளையும். பேச்சோடு பேச்சாக ’இசை யாரு இளையராஜாவா?’ என மேடையில் இருப்பவர்களிடன் கேட்டுவிட்டு ’நல்லா இருக்கு’ என்று இளையராஜவுக்கும் ஒரு மனமார்ந்த பாராட்டை அளிக்கிறார்.   மேடைப்பேச்சுக்களை வீட்டு கூடத்தில் அமர்ந்து நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்பதை போலவே அவ்வப்போது திரும்பி திரும்பி பேசி கலந்துரையாடல் போல கொண்டுசெல்வது அருணாவின்  தனி பாணியாகவே ஆகிவிட்டிருக்கிறது..

இனிமேல்தான் திரைப்படத்தை பார்க்கவிருக்கிறேன். இத்தனை அழகிய உரைக்கு பின்னர்  திரைக்காட்சிகளை  பார்க்கையில்  சொல் சொல்லாக அருணாவின் உரை பின்னணியில்  வந்து கொண்டிருக்கும்.

அன்புடன்

லோகமாதேவி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 04, 2022 11:31

ஆனந்த குமாரசாமி, வள்ளலார் -கடிதங்கள்

அன்புள்ள ஜெ

தமிழ் விக்கி ஏன் தேவை என்பதற்கான சான்று ஒவ்வொரு கட்டுரையிலும் உள்ளது. தமிழின் தலைசிறந்த பண்பாட்டுநாயகர்கள் பற்றி மிக மேம்போக்கான குறிப்புகளே வாசிக்கக் கிடைக்கின்றன. தமிழ் விக்கி கட்டுரைகளை படிக்கும்போதுதான் எவ்வளவு மகத்தான ஆளுமைகள் என்ற பிரமிப்பு உருவாகிறது.

சுவாமி விபுலானந்தர், சி.வை.தாமோதரம் பிள்ளை போன்றவர்களைப் பற்றிய செய்திகள் தெரியும் என்றாலும் இத்தனை முழுமையான ஒரு கட்டுரை தமிழில் படிக்கக்கிடைக்கவில்லை. டேனியல் பூர், பட்டுக்கோட்டை குருமடம் பற்றிய கட்டுரைகள் எல்லாமே புத்தம் புதியவை.

நேற்று ஆனந்த குமாரசாமி பற்றி தேடப்போய் தமிழ் விக்கியை படித்தேன். பிரமிப்பு. எவ்வளவு விரிவான கட்டுரை. எவ்வளவு கூரிய செய்திகள். புதுமைப்பித்தனில் ஆனந்த குமாரசாமியின் தாக்கம், ஆனந்த குமாரசாமி இந்து துறவியாக என்ணியிருந்தார் என்ற செய்தி எல்லாமே ஆச்சரியமானவை.

தமிழில் ஓர் அறிவியக்கமாகவே தமிழ் விக்கி ஆகியிருக்கிறது. வாழ்த்துக்கள்

ராமசுப்ரமணியம் எஸ்

ஆனந்த குமாரசாமி தமிழ் விக்கி

அன்புள்ள ஜெ,

தமிழ் விக்கியில் வந்த பல கட்டுரைகளை பெரும் ஆச்சரியத்துடன் வாசித்தேன். வள்ளலார் பற்றி வந்த கட்டுரை ஓர் அற்புதம். தமிழில் இவ்வளவு வள்ளலார் நூல்கள் வந்துள்ளன. அனைத்திலுமுள்ள எல்லாச் செய்திகளும் இந்த ஒரே கட்டுரையில் சீரான பகுப்புகளுடன் சொல்லப்பட்டுள்ளன. அச்சில் இருபத்தைந்து பக்கம் வரும் இணைப்புக் கட்டுரைகளான தொழுவூர் வேலாயுத முதலியார், அருட்பா மருட்பா விவாதம் கதிரைவேற்பிள்ளை எல்லாவற்றையும் சேர்த்தால் இருநூறு பக்க புத்தகம். செறிவான செய்திகள் மட்டுமே கொண்ட புத்தகம்.

தமிழில் இவ்வளவு செய்திகள் இவ்வளவு முழுமையாக பொதுவெளியில் கிடைப்பதென்பது ஓர் அற்புதம். கலைக்களஞ்சியம் என்றால் என்ன என்று தமிழ்விக்கி காட்டுகிறது. அதை அவதூறு கேலி அபத்தமான குறைநோண்டுதல் எல்லாம் செய்தவர்கள் மனசாட்சி என ஒன்று இருந்தால் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். இங்கே எவரும் எதுவும் செய்வதில்லை. செய்பவர்கள் மேல் நக்கல் நையாண்டி காழ்ப்பு என ஆயிரம்பேர் கிளம்பிவிடுகிறார்கள். உவேசா முதல் நீங்கள் வரை அனைவருக்கும் இதே தலையெழுத்துதான் இங்கே

சண்முகசுந்தரம் நாகமணி

இராமலிங்க வள்ளலார்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 04, 2022 11:31

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்- கடிதங்கள்

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், உரைகள்

அன்புள்ள ஜெ

தமிழ்ச்சூழலில் ஒரு வழக்கம் உண்டு. பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு பெரிய அளவில் பேசப்படும் பெரிய சினிமாக்களை வைத்துக்கொண்டு கலை, அரசியல் எல்லாம் பேசிக்கொண்டிருப்பார்கள். கலையும் அரசியலும் முன்வைக்கப்படும் தரமான சினிமாக்கள் பற்றி பேச்சே இருக்காது. அதையெல்லாம் பார்க்கமாட்டார்கள். பார்த்தாலும் புரியாது. சினிமா பற்றிய பேச்சு என்பது இவர்களுக்கு சினிமாவின் வெளிச்சத்தை நாடி செல்வது மட்டும்தான்.

இச்சூழலில் பொன்னியின் செல்வன் நாவலில் பணியாற்றிய நீங்கள் ’சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ நாவலுக்கான விழா பற்றி எழுதியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் நண்பர்கள் ஒருங்கிணைத்த விழா அது என்று அறிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

சந்தானகிருஷ்ணன்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

விமோசனம் கதையின் வாசிப்பனுபவம் எனக்கு அந்தரங்கமாக வெகு பிரியத்துக்குரியது என்பதால் சிவரஞ்சனியும் சில பெண்களும் நிகழ்வில்  கலந்து கொள்ள முடியாத வருத்தத்தில் இருந்தேன். எனவே விழாவின் அனைத்து உரைகளையும் வரிசையாக  கேட்டேன். உரைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக அந்த கதைகளையும் திரையனுபவத்தையும் இதுவரை வாசித்திருக்காதவர்களுக்கும் திரைப்படத்தை பார்த்திருக்காதவர்களுக்குமாக  நிச்சயம் நிறைவை அளித்திருக்கும். .அருணாவின் உரை பிரமாதம்.

’பேய்ச்சி’ அருணாவிற்கும் ’சிவரஞ்சனி’ அருணாவுக்கும் வேறுபாடு என்றால் அருணாவின் நிமிர்வுதான் முன்பை விட இயல்பாக, இன்னும் நிமிர்வுடன் கூடுதல் ஆரவமுடன் பேசுகிறார்கள்.

வழக்கம் போல கண்களின்  பங்களிப்பும் கையசைவுகளும்  உரைக்கு நிகராக இதிலும் இருந்தது. முதலில் கதை வாசிப்பனுபவத்தை அழகாக முன்வைக்கும் அருணா பின்னர் அந்த திரைக்காட்சியனுபவத்தை,  காமிராக்கோணங்களைக்கூட கைகளாலேயே காண்பித்து ஒவ்வொரு அறையாக ஒவ்வொரு கதாபாத்திரங்களாக, ஒவ்வொரு முக்கிய தருணங்களாக காட்டிக்கொண்டே செல்லுகிறார்கள். இடையிடையே அந்த கதைவாசிப்பும் காட்சியனுபவமும் அருணாவுக்கு என்னவாக இருக்கிறது  என்பதை அவரது மனவெளியில் இருந்து ஒவ்வொன்றாக யோசித்து யோசித்து எடுத்து நம் முன் வைத்து குதூகலத்துடன் சொல்கிறார்கள்.

அருணா பேராசிரியர் ஆகி இருந்தால் உற்காகம் கொஞ்சமும் குறைந்துவிடாமல் மணிக்கணக்காக கற்றுக்கொடுத்து, அவரின் உற்சாகம் மாணவர்களுக்கும் தொற்றிக்கொண்டிருக்கும் வகையில் தான் வகுப்புக்கள் இருந்திருக்கும்.

அந்த தொண்டு நிறுவனம் கிணற்றை தூர்வார முன்வந்த அனுபவத்தையும் கதையுடன் இணைத்து சொல்லுகையில் கதை இன்னும் கேட்பவர்களுக்கு நெருக்கமாகிவிட்டது.

விமோசனம் கதையை அத்தனை அசலாக  விவரித்தார். கதைநாயகி கணவனை எதிர்க்கும் அந்த தருணத்தை உள்ளார்ந்த மகிழ்வுடனே அருணா சொன்னார். ஒரு பெண்ணாக அந்த நாயகியின் துயரில் அருணா பங்குகொண்டிருந்தை அப்போது  கேட்பவர்களும் உணரமுடியும். இறுதியாக அந்த பீங்கான் கோப்பையில் அவளது வாழ்வின் ஒவ்வொரு இனிய நொடியையும் துளித்துளியாக உறிஞ்சிக்குடிப்பதாக சொன்னதும் மானசீகமாக அருணாவை அணைத்துக்கொண்டேன்.

வழக்கம்போல அருணாவின் நினைவாற்றலை வியந்தேன் அடுக்கிக்கொண்டே போகிறார் சம்பவங்களையும். பெயர்களையும். காட்சிகளையும். பேச்சோடு பேச்சாக ’இசை யாரு இளையராஜாவா?’ என மேடையில் இருப்பவர்களிடன் கேட்டுவிட்டு ’நல்லா இருக்கு’ என்று இளையராஜவுக்கும் ஒரு மனமார்ந்த பாராட்டை அளிக்கிறார்.   மேடைப்பேச்சுக்களை வீட்டு கூடத்தில் அமர்ந்து நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்பதை போலவே அவ்வப்போது திரும்பி திரும்பி பேசி கலந்துரையாடல் போல கொண்டுசெல்வது அருணாவின்  தனி பாணியாகவே ஆகிவிட்டிருக்கிறது..

இனிமேல்தான் திரைப்படத்தை பார்க்கவிருக்கிறேன். இத்தனை அழகிய உரைக்கு பின்னர்  திரைக்காட்சிகளை  பார்க்கையில்  சொல் சொல்லாக அருணாவின் உரை பின்னணியில்  வந்து கொண்டிருக்கும்.

அன்புடன்

லோகமாதேவி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 04, 2022 11:31

மணிவிழா -ரம்யா கடிதம்

அன்பு ஜெ,

சனிக்கிழமை காலை கோவை வந்து இறங்கியதிலிருந்தே எனக்கு விழா ஆரம்பித்துவிட்டது. கவிஞர் ஆனந்த் அண்ணா அழைக்க வந்திருந்தார். காலை ஐந்து மணிக்கு ஆளில்லாத கோவை சாலையில் “வெண்ணிலா சந்தன கிண்ணம். புன்னமடக் காயலில் வீணே. குஞ்சிளம் கையில் மெல்ல.. கோரியெடுக்கான் வா…” என்ற வரிகளின் வழியாக அந்தப் பாடலை சிலாகித்துக் கொண்டே வந்தார். முழுவதுமாக அறிந்துவிடாத ஒரு மொழி தானே திறந்து கொள்ளும்போது கிடைக்கும் அறிதலைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். உண்மையில் மலையாளக்காரர்களை விட அது தமிழ் ஆட்களுக்கு தான் அதிகம் திறப்பைக் கொடுக்கும் என்றார். குறிப்பாக தமிழும் அரைகுறையாக தெரியும் ஆளுக்கு என்று சொல்லி சிரித்தார். அந்தப் பாடலில் “காணாத்த கதைகளில் வந்த ராஜாவும், ராணியும்” என்ற வரி வந்தபோது ”எப்டி பாத்தியா ராஜா, ராணியே கதை தான், அதிலும் காணாத கதைகளில் உள்ள ராஜா, ராணியாம்” என்று சொல்லிக் கொண்டே மேலும் சிரித்தார். ”உண்மையில் காதல் கொண்ட ஆணும் பெண்ணும் தன்னை யார் கண்களிலும் படாமல் ஒளித்துக் கொள்ளவே விருப்பப்படுவாங்க. ராஜா ராணி என்று சொல்லிவிட்டால் கூட ஏதோ ஒரு காலம் வந்துடுது. காணாத்த கதைகளிலுள்ள ராஜா ராணி எனும்போது இங்க காலமே இல்லாம ஆகிடுது. காலமின்மையின்மைல எங்கையோ கொண்டு போய் அந்த காதலை ஒளிச்சு வைக்கறதுல உள்ள இன்பம் இல்லயா” என்றேன். “எக்ஸாக்ட்லி” என்றார். பின் ஜி. குமாரப்பிள்ளை எழுதி ஆனந்த் மொழிபெயர்த்திருந்த ஒரு மலையாளக்கவிதையை மிகவும் ரசித்ததை சொல்லிக் கொண்டிருந்தேன்.

“பூவின்
பூவிலே தாமரைப்பூவின்
தாமரைப்பூவிலே நீலப்பூவின்
நீலத்தாமரைப்பூவிலே
நீ சூடும் பூவின்
நீ இன்று சூடும்
இந்தப் பூவின்
நீ மட்டும்
நீ இன்றைக்கு மட்டும்
சூடும் இந்த
நீலப்பூவின்
பெயர் என்ன தோழி ?”

”நீ இன்றைக்கு மட்டும்.. சூடும் இந்த நீலப்பூ” என்பதை அழுத்திச் சொல்லி சிரித்துக் கொண்டோம்.  “என்ன பத்தரமா மாமி வீட்ல சேத்துடுவீங்கள்ல” என்று கேட்டேன். “ஏன் அதுல என்ன ஒனக்கு சந்தேகம்” என்றார். இல்ல போன வாரம் இப்டி தான் மாமிய பைக்ல இருந்து விழுகடிச்சுட்டீங்க. இன்னைக்கு வேற புன்னமரக்காயல், சந்தனக்கிண்ணம்னு காரை கரப்பான்பூச்சி மாதிரி கவுத்திவிட்டீங்கண்ணா” என்று சொன்னேன். “வாய்ப்பிருக்கு.” என்று சொல்லிக் கொண்டே ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தோம். கோவையில் மாமா, மாமி இருப்பது திருக்குறுங்குடிக்கு நேர் மாறான வீடு. ஆனாலும் வீட்டைச் சுற்றி மரங்களும், பட்டாம்பூச்சிகளும் நிறைந்திருந்தது. வீடு வந்து சேர்ந்தபின் நான்கு பேரும் சேர்ந்து நட்சத்திரம் பார்த்துக் கொண்டிருந்தோம். என் வாழ்க்கையிலேயே எனக்கு நன்கு தெரிந்த மூன்று நடசத்திரத்தை தேடி அதைக் கண்டேன். அதை தொட்டு மாமி கோலம் போட்டு ஒவ்வொரு கான்ஸ்டலேஷனாக விளக்கிக் கொண்டிருந்தார். விடிவெள்ளியைக் கண்டோம். விடிந்த பின் மாமா தோட்டத்தில் பூத்திருந்த ரோஜாவையும், பிற மலர்களையும் ஒரு சுற்று சுற்றி வந்து காண்பித்துக் கொண்டிருந்தார். இரண்டு நாள் காலையும் அவரின் மெல்லிய கீதம் ஒலித்துக் கொண்டிருக்கும் இனிமையான வீட்டில் இருந்தது மகிழ்வாக இருந்தது.

ஆனந்த வரும் வழியில் சிலாகித்த இன்னொரு வார்த்தை “கண்ணு முட்டாம்” என்பது. இரு கண்கள் சந்தித்துக் கொள்ளுதல் என்ற பொருளில் வரும் இந்த வார்த்தை மலையாளிகள் சாதாரணமாகப் பயன்படுத்தும் வார்த்தை. அது எவ்வாறு நமக்கு ஒரு காட்சியைத்தருகிறது என்று கூறிக் கொண்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக அன்று மாலை நீங்கள் எப்படி ஒரு மொழியைப் பயின்ற ஒரு தமிழ் ஆசிரியருக்கு கவிதையாக மொழி திறக்காதிருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தீர்கள். அதனால் தான் ஒரு பேராசிரியர் எழுதும் கவிதையோ மொழியோ நம்மை கிளர்ச்சியடையச் செய்வதில்லை. மாறாக கவிஞன் மொழியை குழந்தை கண்டடைவது போல கண்டடைகிறான் என்றீர்கள். மேலும் மேலும் பல தமிழ்ச் சொற்களை எங்களுக்கு திறந்து காண்பித்தீர்கள். குற்றாலம் எஃபக்ட் என்று சொல்லக்கூடிய மலையாளக்கவிதையிலுள்ள மரபார்ந்த ஒரு வகை பாட்டுத்தன்மைக்கு எதிராக நீங்கள் எழுதிய கட்டுரையை நினைவு கூர்ந்தீர்கள். ஆனாலும் மலையாளக்கவிஞர்கள் ஏன் மரபுக்கவிதையை இன்னும் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதற்கு பி. ராமன் கொடுத்த விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படியானது என்று கூறியது அறிதலாக இருந்தது. மலையாளத்தில் சமஸ்கிருதத்தின் தாக்கம் அதிகம் உள்ளது. இன்றைக்கு இருக்கக் கூடிய மலையாளத்தில் கவிதையை எழுதும் போது அது கவிதையாக இயலாத தன்மை இருப்பதால் மரபார்ந்த கவிதைகளையே தக்க வைத்துக் கொள்ள வேண்டிய தேவை உள்ளதாகச பி.ராமன் சொன்னதாகச் சொன்னீர்கள். தமிழில் அந்த வகையில் இயல்பு வழக்கிலுள்ள மொழியே நவீனக் கவிதைகளில் கவிதைத் தன்மையோடிருப்பதற்கு மொழியின் தன்மை காரணமாகிறது என்பது புரிந்தது.

கம்பராமாயணம் வாசிக்கையில் நிலாவை “இந்து” என்று சொல்வது என்னை சற்றே பிரமிக்கவைத்ததைப் பகிர்ந்தேன். இந்து என்ற சொல் எனக்கு ”சொட்டு” என்ற சொல்லை அருகில் வைத்தது என்று சொன்னபோது அதை மேலும் விரித்தீர்கள். வானில் நிலவை ஒரு சொட்டு என்று சொல்லும் போது கிடைக்கும் சித்திரம் அளப்பறியது. முழு நிலவை பார்க்கும் நாட்களிலெல்லாம் இவ்விரு சொற்களும் என்னை எப்போதும் வந்து முட்டிவிடுகின்றன.  அதை உங்களிடம் சொன்னபோது “சந்திரகலா” என்ற வார்த்தையையும், மலையாளத்தில் ஒரு சொல்லுக்கு உபயோகிக்கும் வார்த்தைகள் கூட நாம் கவிதையாக உணர முடியும்., ஆனால் அவர்கள் அதை எளிதாகக் கடந்து விடுவார்கள் தமிழிலும் இது நடக்கும் என்றீர்கள். இரு மொழிக்கு இடைப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு இரு மொழியும் திறந்து கொள்வது இத்தன்மையால் தான் என்றீர்கள். நீங்கள் எழுதும் மலையாளம் அங்கே தமிழர்கள் எழுதும் மலையாளமான நாட்டான் மலையாளம் என்ற வகைமையைச் சார்ந்தது என்பதும் அறிதல்.

சனிக்கிழமை மதியம் விஷ்ணுபுரம் பதிப்பகத்தில் நண்பர்களுடன் உங்களை சந்தித்தததிலிருந்து மணிவிழா எங்கள் அனைவருக்கும் ஆரம்பித்திருந்தது. இம்முறை பொன்னியின் செல்வன், வி.டி.கே பற்றிய பேச்சு அதிகமிருந்தது. பேச்சின் நடு நாயகமாக அருணாம்மா நீங்கள் “ச்சிம்பு” என்று சொல்வதை கலாய்த்துக் கொண்டிருந்தார். நீங்கள் அதை “ச்சிலம்பு”, “ச்சிலம்பரசன்”, “ச்சிம்பு” என்று நிறுவியபோது சரியெனவே பட்டது எனக்கு. ஆனால் ஒருபடி மேலே போய் தமிழில் ”ச்ச” மட்டுமே உள்ளது என்று கூறி பல விளக்கங்களை, எடுத்துக்காட்டுக்களை கூறினீர்கள். செந்தில் அண்ணா “ஆசான் சொன்னா சரியாகத்தான் இருக்கும்” என்று முடித்துவிட்டார். அஜிதனும், அருணாம்மாவும் “இருக்கவே இருக்காது” என்று கடந்து விட்டார்கள். சைதன்யா நீங்கள் சொன்ன சிவாஜி டயலாக்கை யூட்டியூபில் தேடி அவர் “ச” வை எவ்வாறு உச்சரிக்கிறார் என்று கேட்டுக் கொண்டிருந்தார். நானும் நண்பர்களும் ”ச” வரும் ஆனைத்துச் சொல்லிலும் “ச்ச” எப்படி வருகிறது என்று போட்டு பார்த்து உச்சரித்துக் கொண்டிருந்தோம். இப்போதெல்லாம் நாங்கள் “ச்சோறு” என்றே சொல்ல ஆரம்பித்துவிட்டோம் ஜெ. தமிழில் ஒருவேளை ஸ/ஷ வரும் சொற்கள் அனைத்தும் வடமொழி கலப்பு என்று ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம். அப்படியல்லாத சொல்லைக்(ச்சொல்லைக்) கண்டையும்போது சொற்போர் புரியலாம் என்று திட்டம். மிக மகிழ்ச்சியான நாளாக இனிமையாகத் துவங்கியது. உங்கள் திரைக்கதை அனுபவங்கள், மனிதர்கள், பகடிகள் என பேசிக் கொண்டே இருந்தீர்கள். மிகப்பெரும் நாவலான பொன்னியின் செல்வன் நாவலை சுருக்கி எவ்வாறு ஒருவரியாக ஆக்குகிறீர்கள் என்பதையும். ஐந்து நெருப்பு என்ற சிறுகதையை எவ்வாறு இரண்டு மணி நேர திரைக்கதையாக மாற்றுகிறீர்கள் என்பதுமே ஒரு கிரியேட்டிவ் ப்ராஸஸ் தான்.

இரவு ஸ்ரீநி மாமா, சுதா மாமியின் வீட்டில் தங்கியிருந்தேன். கோவை வருகிறேன் என்றதும் இங்கு தங்க வேண்டும் என்ற அன்புக்கட்டளையின் நிமித்தம். பின்னும் அவர்களுடன் நாளைக் கழிப்பதன் மகிழ்வுக்காகவும். இரவு முழுவதும் கம்பராமாயணம், தத்துவம், கீதை, வெண்முரசு என பலதும் பேசிக்கொண்டிருந்தோம். மாமாவும், மாமியும் படைப்பின் வழி மட்டுமே உங்களை ஆசிரியராக அணுகும் விதம் எனக்கு எப்போதுமே உவப்பது. தொடர்ந்து எனக்கான தமிழ்விக்கிபணி, புனைவுஎழுத்துக்கான அறிவுரை, வாழ்க்கைக்கான அறிவுரை என பலதும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். என் வாழ்க்கையில் அப்படி சொல்ல எனக்கு தாத்தா ஒருவர் இருந்தார். இன்று அவர் இல்லை. அவருக்குப் பின் ஆசிரியராக நீங்கள். இன்று உங்கள் வழி ஸ்ரீநி மாமாவும், சுதா மாமியும். பின் எப்போதும் என் நலனையே விரும்பும் ஆனந்த அண்ணா, சுஷில். யாவருக்காகவும் உங்களுக்கு நன்றி.

காலை பட்டீஷ்வரம் கோவிலில் நிறைவாக லிங்க ரூப சிவனை தரிசித்தோம். சிவனின் லிங்க வடிவம் எப்போதும் என்னை ஆட்கொள்ளும் ஒன்று. மனக்கவலைகளும், கஷ்டங்களும் இருக்கிறது தான். ஆனால் சரியாக வேண்டும் என்ற பிரார்த்தனை இல்லை. “இன்னும் என்ன காட்டனுமோ காட்டு” என்று சொல்லிக் கொண்டேன். இந்த வருட ஆரம்பத்திலிருந்தே தமிழ்விக்கிப்பணியும், அதன் வழியாக நீங்களும் அவ்வளவு அறிதலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். ”இன்னும் முழுமையாக… எதுவும் எஞ்ச வேண்டாம்” என்று வேண்டிக் கொண்டேன். ஒரு துளியும் எஞ்சாமல் முழுமையாக தீர்ந்து எரிந்து கரைவது மட்டுமே நிறைவையளிக்கும் என்று நம்புகிறேன்.

ஞாயிறு அன்று நீங்களும் அருணாம்மாவும் மாலை மாற்றிக் கொண்டதை பல முறை பார்த்தேன். ரத்தச் சிவப்பான ரோஜா மாலை இருவரும் அணிந்திருந்தது அவ்வளவு அழகாக இருந்தது. கருமையான அந்த கல் கருவறைக்கும் அவற்றை மாற்றிக் கொண்டபோதும், உங்கள் இருவர் முன் அந்த ஆரத்தி விளக்குகளும் என அந்தச் சித்திரத்தை மனதில் பதித்துக் கொண்டேன். அருணாம்மா உங்களுக்கு ஒரு அம்மாவைபோல உங்களுக்கு “இப்படிச் செய்..” என்று வழிகாட்டிக் கொண்டே இருந்தார்கள். வெட்கமும், ஒன்றும் புரியாத திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல நீங்கள் முழித்துக் கொண்டிருந்தது சிரிப்பாக இருந்தது. நண்பர்களை சந்தித்தது மிக மகிழ்ச்சி. அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். கருவறையில் அம்மன் சன்னிதிக்குள் சிவப்பு பட்டுடுத்தி அவள் அமர்ந்திருந்தபோது தான் சிவப்பு மாலை கொடுத்த அந்த உணர்வை ஊகிக்க முடிந்தது.

அதன்பின் அரட்டைகள், வெடிப்பேச்சுகள் என சாய் வில்லாவில் நூற்றுக்கணக்கான நண்பர்களுக்கு மத்தியில் பேசிக் கொண்டே இருந்தீர்கள். தேவதேவனும் அதே மகிழ்வான மன நிலையில் இருந்தார். முகத்தை சீரியஸாக வைத்து அவர் சொன்ன இரு ஜோக்குகளை நானும் ஜாஜாவும் மட்டுமே கண்டறிந்து சிரித்தோம். உங்கள் எழுத்துக்கள் வழி மட்டுமே நான் அறிந்த கல்பற்றா நாராயணனை மிக அருகில் சந்தித்தேன். அங்கு வசந்தகுமார் ஐயாவைப் பார்த்ததில் மகிழ்ச்சி எனக்கு. இதற்கு முன் புத்தகத்திருவிழாவில் அவரைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர் தான் வசந்தகுமார் என்று தெரியாது. ஒரு மாதகாலமாக தொண்ணூறுகளில் வந்த எழுத்தாளர்கள் சார்ந்து நண்பர்கள் பதிவுகள் போட்டுக் கொண்டிருக்கிறோம். மிக முக்கியமான ஆளுமைகள், எழுத்தாளர்கள், கவிஞர்களைப் பற்றிய தகவல் தேடலின் போது மறக்காமல் அவர்கள் குறிப்பிடுவது வசந்தகுமார் ஐயாவைத்தான். யாவரின் தொடக்க காலத்திலும் அவர் தான் துணையாக இருந்திருக்கிறார். பலரும் எழுதுவற்கான ஊக்கியாக இருந்து அவர்களின் புத்தகங்களைப் பதிப்பிக்க உதவியிருக்கிறார். ஆனால் அவரின் புகைப்படங்களோ அவரைப்பற்றிய தனியான தகவல்களோ எங்கும்  கிடைக்கவில்லை. அவரைப் பற்றி எப்படியாவது ஒரு தமிழ்விக்கி பக்கம் உருவாக்க வேண்டும் என்று சொன்னபோது நண்பர்கள் ”வாய்ப்பில்லை” என்று பகடி செய்தனர்.

ஞாயிற்றுக்கிழமை உங்கள் பேச்சுகளில் முழுவதுமாக தமிழ்விக்கியே ஆக்கிரமித்திருந்தது. தமிழ்விக்கி ஜோக்குகள் என ஒன்று தனியாக இந்த ஆறுமாத காலங்களில் உருவாகியிருப்பது புரிந்தது. பின்னும் அதிலிருந்து கொட்டிக் கிடக்கும் புனைவுகளைப் பற்றி விரித்துக் கொண்டிருந்தீர்கள். ஒவ்வோர் ஆளுமைகளுக்கிடையே இருக்கும் ஒரு சரடின் வழி எழும் கேள்விகள் வழியான புனைவு, ஒரு ஆளுமையின் வாழ்க்கையில் ஒரு தருணத்தில் கிடைக்கும் புனைவு. ஒரு பதிவின் ஒரு முடிச்சிலுள்ள புனைவு, ஒரு முடிச்சிலிருந்து சென்று தொடும் இன்னொரு முடிச்சிலுள்ள புனைவு என பலவற்றை சொல்லிக் கொண்டிருந்தீர்கள். “ஒரு எழுத்தாளன் தன் வாழ்க்கையை, அதிலிருந்து கிடைத்த அனுபவத்தின் வழி, தன் நிலத்தில், தான் சந்தித்த மனிதர்களைப் பற்றிய புனைவுகளை சிறப்பாக எழுதிய பின் நின்று விடும் தருணத்தைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தீர்கள். நான் தமிழ் விக்கி பதிவு இடும்போது குறித்து வைத்துக் கொண்ட பல புனைவுத் தருணங்களை மீட்டிக் கொண்டிருந்தேன். சொல்லப்படாதவைகள் எத்தனை மிச்சமுள்ளன. ஆனால் இங்குள்ள கவிஞர்களும், எழுத்தாளர்களும் ஐரோப்பிய எழுத்துக்களை வாசிக்கிறார்கள். அதைப் போலச் செய்யவே முயற்சிக்கிறார்கள். ஆனால் இங்கு நம்மிடம் புனைவுகள் கொட்டிக் கிடக்கின்றன என்றீர்கள். இதையே திரைத்துறையில் டைரக்டர்களுக்கும் ஒப்பிட்டீர்கள். தான் வாழ்ந்த சூழ் நிலை, தன் சார்ந்த விஷயங்களை படமாக எடுத்து தீர்ந்துவிட்டபின் நல்ல இயக்குனர்கள் பலர் கதையில்லாமல் தவிக்கிறார்கள். அங்கு தான் இலக்கியம் முக்கியத்துவம் பெருகிறது என்றீர்கள். தெரியாத நிலத்தை நோக்கி எழுதும்போது தன்னை திறந்து கொள்ளும் புனைவு தரும் அனுபவம் அலாதியாக உள்ளது ஜெ. சமீபத்தில் வஞ்சி என்ற சிறுகதை எழுதினேன். சூர்ப்பனகை வதை என்ற கூத்தை உள் நுழைத்து எழுதிய கதை. அதற்கு ஒரு வார காலத்திற்குப்பின் தான் மெளனகுரு ஐயாவின் “பழையதும் புதியதும்” புத்தகம் கையில் கிடைத்தது. அங்கு நான் கண்ட அண்ணாவியார்களின் வாழ்க்கையும் புனைவில் நான் உருவாக்கிக் கொண்ட அண்ணாவியாரின் பிம்பமும் ஒன்றாகவே இருந்தது. அதன் பின தமிழச்சி தங்கபாண்டியனின் பதிவிடும் போது கு.ப.ரா எழுதி அரங்காற்றுகை செய்த சூர்ப்பனகை நாடகத்தில் அவர் சூர்ப்பனகையாக நடித்தார் என்ற செய்தி ஆச்சரியமாக இருந்தது. ஏதோவொரு சரடு எழுதும்போது தன்னை நெய்துகொள்ளும் அனுபவம் நாம் தெரியாத ஒரு களத்தை எழுதும் போது கிடைக்கிறது.

பின் மதியத்திற்குமேல் நண்பர்கள் சகிதம் பேசிக் கொண்டிருந்தோம்.  சாருவுக்கு விஷ்ணுபுரம் விருது என்ற தலைப்பில் பேசிக் கொண்டிருந்த கூட்டத்திற்கு நடுவில் உட்கார்ந்திருந்தேன். கிருஷ்ணன் அனல் பறக்க பல கேள்விகளை அடுக்கிக் கொண்டிருந்தார். நண்பர்கள் ஏற்பும், மறுப்புமென விவாதம் செய்து கொண்டிருந்தார்கள். சாருவின் ஆக்கங்கள் வழி அதற்கான பதிலைக் கண்டடைய வேண்டுமென இறுதியாகச் சொல்லி முடிக்கும் வரை உட்கார்ந்திருந்தேன்.

மாலை கவிஞர் போகன் அவர்களுடன் நடந்து ஆடிட்டோரியம் வந்தடைந்தேன். வரும் வழியில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் எப்படி குழுவாகச் செயல்பட்டார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார். முன் தினம் இரவு அப்படியான பல குழுக்களைப் பற்றி நீங்கள் சொல்லியது நினைவிற்கு வந்தது. நாகர்கோவில், கோவை, சென்னை என எழுத்தாளர்கள் சந்திக்கும் ஸ்பாட்டுகளைப் பற்றிச் சொன்னீர்கள். ஒரு பேசுவதற்கான இடம் ஒன்று இலக்கியச் செயல்பாட்டுக்கு எவ்வளவு முக்கியம் என்று சொல்லிக் கொண்டிருந்தீர்கள். இதழ் ஆரம்பிப்பது, இலக்கியச் செயல்பாடு, ஆசிரியரிடம் கற்றுக் கொள்ளல் என பலவற்றுக்கும் இக்குழுக்கள் உதவியிருக்கின்றன. தமிழ்விக்கி பதிவுகளின் வழி அவ்வாறான குழுக்களை கண்டறிந்து அவர்களின் வாழ்க்கையை ஒரு புனைவாக ஓட்டிப்பார்த்திருக்கிறேன்.

தொடர்ந்து போகனிடம் நவீன பெண் கவிஞர்கள் பற்றி ஒரு கட்டுரை நீலிக்காக கேட்டேன். அவர் கலா சுப்ரம்ணியம் அவர்களை அறிமுகப்படுத்தி அவரிடமிருந்து பெற்றுத் தருவதாகச் சொன்னார். அவருக்குப் பிடித்த பெண் கவிஞர்களைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்.

மாலை வெண்முரசு ஆவணப்படம் உணர்வுப்பெருக்கு நிலையில் பார்த்துக் கொண்டிருந்தேன். ஏதேதோ நினைவுகள். வெண்முரசு ஆரம்பித்து ஒரு வருடத்திற்குமேலாகிறது. அதன் பயணம் அதை முடித்தவர்கள் பார்வையிலிருந்து நெகிழ்ச்சியாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். ”கண்ணானாய் பாடல்” மிகப்பெரிய திரையில் அத்தனை பேர்களுக்கு நடுவில் நின்று பார்த்தது மேலும் நெகிழ்ச்சியைக் கூட்டியது. ஷண்முகவேலின் படங்கள் வழி உருவாகும் ஒரு வெண்முரசு சித்திரம் ஒன்றுள்ளது. அதை இசையின் வழி பட ஓட்டமாகக் காண்பித்தது அருமையாக இருந்தது. வரும் காலங்களில் மேலும் படங்கள் வரையப்பட்டு தொடர் கதையோட்டமாக ஆக்கினால் இன்னும் செறிவாக அமையும். வின்செண்ட் வான்காவின் ஓவியங்களை வைத்து அதில் விடுபட்டவைகளை வரைந்து அதைக் கொண்டே அவரின் வாழ்க்கை சித்திரத்தை உருவாக்கி 2017-ல் ஒரு படம் வெளியானது ஞாபகம் வந்தது.

தேனீர் இடை வேளையில் கோபாலகிருஷ்ணன், சு. வேணுகோபால் ஐயாவின் புத்தகங்கள் வாங்கி “இதை இப்பொழுது தான் வாங்குகிறாயா?” என்ற செல்லமான திட்டோடு அவர்களிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டேன். நண்பர்களை முடிந்த மட்டிலும் சந்தித்து அலவளாவ முடிந்தது.

விழாவில் நீங்களும் அருணாம்மாவும் மீண்டும் பெருந்திரளின் மத்தியில் மாலை மாற்றிக் கொண்டது மகிழ்வாக இருந்தது. கல்பற்றா நாராயணின் உரை கவிதையாக அமைந்தது. அணுக்கமான, வேற்று மொழி என்று சொல்லிவிட முடியாத மொழியின் நேர்த்தி கவிதைத் தருணம் போலவே அமைந்தது. ஒரு இலக்கியவாதி இன்னொரு இலக்கியவாதியை பெருமிதப்படுத்தியது போன்ற கச்சிதமான உரை கல்பற்றா நாராயணனுடையது. யுவன் எழுத்தாளராக அல்லாமல் முழுக்கவே நண்பனாகப் பேசினார். சியமந்தகக் கட்டுரையில் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடிய கட்டுரையை எழுதியிருந்தார். நேரில் அவ்வாறு அவர் உணர்ச்சிவசப்பட்டு இன்னும் அணுக்கமாகிவிட்டார். அன்பு, உணர்வுகள், சிறு கேவல்கள், ஏக்கங்கள், சிறு அணைப்புகள், ஆறுதல்கள் இவை தானே நம்மை பிணைக்கின்றன. இறுதியாக உங்களின் உரை உணர்வுப்பூர்வமாகவும், மயிற்கூச்செரியும்படியும் இருந்தது. உரையாகப் பேசிய ஒவ்வொருவரும் உங்கள் ஆசிரியர் நிரையில் எங்ஙகனம் பொருள்படுகிறார்கள் என்று சொன்ன போது தான் அவர்களின் உரை எனக்கு மேலும் பொருள் பொதிந்ததாகியது. நீங்கள் இறுதிச் சொல்லை உதிர்த்துவிட்டு அமர்ந்தபோது “செயல்தீவிரம்” என்பது மட்டுமே என் எண்ணத்தில் நிறைந்தது. அதற்குப்பின் ஒரு கணம் கூட தாமதிக்காமல் அங்கிருந்து பேருந்துக்காக நகர்ந்துவிட்டேன். நிறைவாக இருந்தது ஜெ. என் வாழ் நாளில் நான் தவறவிடக்கூடாத ஒன்றை அமைத்துத்தந்த இயற்கைக்கு நன்றி. வர இயலாத வாசகர்கள், மாணவர்களின் தவிப்பு விழா முடிந்த இரவன்று “முடிந்ததா? என்ன ஆயிற்று? என்ன நடந்தது?” என்று சிறு துளி தகவலுக்காக காத்திருந்ததிலிருந்ததை உணர முடிந்தது. இது மாதிரியான விழாக்களின் நினைவுகளை எழுதுவதன் முக்கியத்துவத்தை அவை உணர்த்தின. அந்த வகையில் உரையை உடனயே பதிவிடும் ஸ்ருதி டி.வி யுடியூப் சேனலுக்கு நன்றி. மிக நேர்த்தியாக விழாவை ஒருங்கிணைத்த நன்னெறிக்குழுமம், டைனமிக் நடராஜன் அண்ணாவுக்கு நன்றியும் அன்பும்.

ஜெ.. உங்கள் செயல்கள் வழியாக, பேச்சுக்கள் வழியாக என ஒவ்வொரு கணமும் எங்களுக்கு தீவிர செயலையே வலியுறுத்துகிறீர்கள். உங்களை நோக்கி ஆவலுடன் வந்த எங்களுக்கு அதற்கு மேலாக இலக்கியத்தை முன் நிறுத்தி மடை மாற்றிவிடுகிறீர்கள். தமிழ்விக்கி பணியின் வழி மிகப்பரந்த இலக்கியத்தின் பெருவெளியைக் காண்பித்து வருகிறீர்கள். சாருவுக்கு விருது பற்றிய எதிர்வினைகளை வாசித்தேன். தூரன் விழாவில் நண்பர்கள் அனைவரும் குழுமியிருக்கும் போது அதைச் சொன்னீர்கள். நான் அப்போது சாருவை வாசித்தது கிடையாது. முயற்சித்திருக்கிறேன். எனக்கான எழுத்தல்லாததை நான் வலிந்து வாசிக்க வேண்டியதில்லை என்பதால் முயற்சியை கைவிட்டிருந்தேன். இன்று தமிழ்விக்கி பணிக்குப்பின் இந்த விருதுத்தேர்வின் மீதான கண்ணோட்டம் மாறியிருக்கிறது. தொண்ணூறுகளுக்குப் பின் எழுத வந்த நவீன எழுத்தாளர்கள் நிரையை எழுதும்போது ஒன்று விளங்கியது. பல தனித்தனி தீவுகள் இலக்கியத்தில் உள்ளன. ஒன்று இன்னொன்றை மறுதளிக்கிறது. இலக்கியம் என்பது தன் சொந்த நிலத்தை, தான் பார்த்த வாழ்க்கையை மட்டுமே எழுதுவது எனும் ஒரு தரப்பு, இலக்கியம் என்பது ஆவணப்படுத்தல் தான், புனைவு என்பது ஒரு குப்பை எனும் தரப்பு, அன்றைய காலகட்டத்தை எழுத வேண்டுமென்ற தரப்பு, பெண்ணியம், தலித்தியம், உடலரசியல், முற்போக்குவாதம், சிறுபான்மை என ஒரு தரப்பு, தீவிர இலக்கியம் என்ற வரையறைக்குள் செயல்படும் க.நா.சு. மரபு ஒரு தரப்பு. அந்த மரபை மீறக்கூடாதா என கேள்வி கேட்கும் இன்னொரு தரப்பு, கலை அதுவாக நிகழ வேண்டுமென்ற தரப்பு, பின்னவீனத்துவம் என்ற பெயரில் அந்த நேரத்தைய மன்வோட்டத்தை எழுதும் தரப்பு. ஒரு தரப்பு இன்னொன்றை மறுதலிப்பதிலிருந்து எழுந்து வருகிறது. ஒன்று சில சமயம் இன்னொன்றுடன் முயங்குகிறது. ஒட்டுமொத்தமாக ஆவணப்படுத்தலை மட்டுமே இலக்கியம் என்றும், புனைவுகளை மறுதளிக்கும் ஒரு தரப்பை தெரிந்து கொண்ட போது மிக வியப்பாக இருந்தது. சிறுகதைகளுக்கான வரையறைகளை விமர்சனங்களைப் பற்றி பேசும்போது அதன் மீறலை ஒரு தரப்பு பேசிக் கொண்டிருந்தது.

எனக்கு வெண்முரசின் சொல்வளர்காடு பகுதி நினைவுக்கு வந்தது. எத்தனை தரப்புகள், எத்தனை கல்விக் கூடங்கள், மாணவ நிரைகள். ஒரு இலக்கிய வாசகனும் கூட சொல்வளர்காட்டில் பயணம் செய்பவன் தான். ஒவ்வொருவரும் தனக்கானதைத் தேர்வு செய்கிறார்கள். மறுத்து முன் செல்கிறார்கள். அதற்காக ஒருவன் மறுத்துச் சென்ற குருகுல மரபு அழிந்து விடுவதில்லை. பின் வருபவர்களுக்காக அது தொடர்ந்து இருக்கிறது. என் கல்லூரி காலத்தில் புனைவுகள் மீது வெறுப்போடு இருந்திருக்கிறேன். நிஜ மனிதர்களின் வாழ்க்கையை எழுதும் எழுத்தாளர்களே என் ஆதர்சங்கள். எங்கும் தகவலையே சேகரித்திருப்பேன். உணர்வுகளை விட அறிவுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்திருந்தேன். பல வகை இஸங்களுக்குள் மூழ்கியிருந்தேன். நான் இந்த உலகத்தை மீட்டுவிடுவேன் என்றும் ஒவ்வொரு நாளும் எனக்காகவே இந்த உலகம் காத்திருக்கிறது என்ற நம்பிக்கையுடனும் படித்துக் கொண்டிருப்பேன். ஜெயமோகன் என்ற சொல்லைக் காதில் கேட்பது கூட வெறுப்பாயிருந்த ஒரு காலகட்டத்திலிருந்து ”என் ஆசிரியர்” என உங்கள் படைப்புகள் முன், செயல்களின் முன் அமர்ந்திருக்கிறேன். பலதரப்பட்ட இத்தகைய ஆசிரிய நிரைகளில் சாருவும் ஒரு மரபென்றே பார்க்கிறேன். அவரின் படைப்புகள் வழி அவற்றை விளங்கிக் கொள்ளும் பயணத்தில் இருக்கிறேன். விஷ்ணுபுரம் விருதுக்காக சாரு நிவேதாவிற்கு வாழ்த்துக்கள்.

இந்த மணிவிழா ஆண்டில் ஒரு மாணவனாக நின்று உங்களை வணங்குகிறேன் ஜெ. வாழ்த்துக்களும், நன்றியும், பிரேமையும்.

ரம்யா.

 

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 04, 2022 11:30

October 3, 2022

வரலாற்றுப் படங்களின் வடிவம்

அன்புள்ள ஜெ

நலம்தானே

இந்த டிவீட் வைரலாகிறது. ஆதித்தகரிகாலனின் இந்த படத்தோடு.

பிறர் அறியாத ஆண்மகனின் துயர் தன்னந்தனி மதவேழத்தின் நோய் போன்றது. தெய்வங்கள் அன்றி பிறர் அதை அறியப்போவதில்லை. தெய்வங்களிடமும் அது முறையிடப்போவதில்லை.

இந்த வசனத்தை பொன்னியின் செல்வனில் பயன்படுத்தியிருக்கலாமோ?

செல்வக்குமார்

அன்புள்ள செல்வக்குமார்,

அது வெண்முரசில் கர்ணன் பற்றி வரும் வரி என நினைக்கிறேன். வெண்முரசை படித்தவர்தான் மணி. குறிப்பாக நீலம்.

ஆனால் இத்தகைய வசனங்களை இன்று திரைப்படத்தில் பயன்படுத்த முடியாது. சினிமாவில் வசனங்களின் காலம் முடிந்துவிட்டது.

(பொன்னியின் செல்வனிலும் இத்தகைய வசனங்கள் உள்ளன. “மனிதர்கள் பல முறை சாவதுண்டு, அது என் முதல் சாவு” ஆனால் காட்சிகளின் பிரம்மாண்டத்தால் அவை கவனிக்கப்படாமல் போகும் என அறிந்திருந்தேன். இன்னும் சில மாதங்களுக்குப் பின்னரே அவை கவனிக்கப்படும். உடனடியாக படத்தின் வெற்றிக்கு உதவாது)

வசனம் நீளமாக இருந்தால் அதில் செயற்கையான, உணர்ச்சிகரமான ஏற்ற இறக்கங்கள் தேவைப்படும். அது நாடகத்தன்மையை கொண்டுவரும். இன்றைய சினிமாவில் அது இயலாது. அப்படி இல்லாமல் நேராக நீண்ட வசனம் வந்தால் ஒப்பிப்பதுபோல் இருக்கும்.

நீண்டவசனம் சொல்லும்போது நடிக்கமுடியாது. ஷாட்களை ஃப்ரீஸ் செய்து பார்த்தால் கண்கள் உணர்ச்சியில்லாமல் வெற்றுப்பார்வையாக இருப்பதைக் காணலாம்.

மேலைநாட்டிலும் சாதாரணமாக நீளநீளமாகவே பேசுவார்கள். ஏன் சினிமாக்களில் ஒற்றைவரி வசனம்? ஏனென்றால் முகத்திலும் கண்களிலும் உணர்ச்சிகள் தெரியவேண்டும் என்றால் வசனம் நிறைய இருக்கலாகாது.

ஆனால் நாவலில் நீண்ட வசனங்கள் வரலாம். அவை வாசகனின் உள்ளத்தில் நிகழ்கின்றன. அவன் மனச்சொல்லோட்டத்துடன் கலந்துவிடுகின்றன. செவ்வியல் நாவலில் வசனம் என்பது கவிதைக்கு நிகராக வரலாம். ஏனென்றால் அது ஒரு இணைகாவியம்.

பொன்னியின் செல்வனின் வசனங்கள் மிகத்திட்டமிடப்பட்டு எழுதப்பட்டவை. ஏனென்றால் தமிழ் சினிமாவுக்கு அதற்கான ஒரு வரலாறு உண்டு.

தமிழில் தெருக்கூத்தில் இருந்து இசைநாடகம் வந்தது. அதிலிருந்து நாடகம். நாடகத்தில் இருந்து சினிமா. தெருக்கூத்தின் பெரும்பாலான கதைகள் புராணங்கள். ஆகவே தொடக்ககால நாடகங்களும் சினிமாக்களும் புராணங்களே.

புராணங்களையே அப்படியே நீட்டி வரலாற்றுப்படமாக ஆக்கினார்கள். (பழைய மன்னர் படங்களில் எப்போதுமே ஏராளமான நகைகளும்,  அடுகுக்குக்கிரீடமும் புஜகீர்த்திகளும் அணிந்தே அரசர்கள் வருவார்கள். தெருக்கூத்தின் காத்தவராயனின் அதே தோற்றம்.) ஆகவே அக்கால அரசப்படங்கள் எல்லாமே வசனநாடகங்கள்தான். அவை அன்று பெருவெற்றிபெற்றன.

ஆனால் சினிமா மாறிக்கொண்டிருந்தது. அச்சுமொழி வசனம் காலாவதியானது. காட்சிமொழி படங்களில் வலுப்பெற்றது. அதன்பின் நாடகப்படங்கள் தோல்வியடைய ஆரம்பித்தன. சரித்திரப்படங்களில் ராஜராஜசோழன் (1973) மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1978) இரண்டும் தோல்வி அடைந்தபின் எவரும் சரித்திரப்படம் எடுக்க முனையவில்லை.

ஏனென்றால் சரித்திரப்படத்துக்கான ‘திரைமொழி’ என்ன என்பதை வகுக்க முடியவில்லை. நாடகப்பாங்கை தவிர்க்கலாம். வசனத்தை என்ன செய்வது? இது தமிழில் மட்டும் மிகப்பெரிய பிரச்சினை. ஆங்கிலத்தில் பேச்சுமொழியும் அச்சுமொழியும் ஏறத்தாழ ஒன்றே. மலையாளம், தெலுங்கு, இந்தி எல்லாவற்றிலும் அந்த வேறுபாடு மிகமிகக்குறைவானது.

ஆனால் தமிழ் மிகத்தொன்மையான மொழி. பல அடுக்குகள் கொண்ட மொழி. (சங்ககாலத் தமிழ், காப்பியகாலத் தமிழ், சிற்றிலக்கியகாலத் தமிழ், நவீனத்தமிழ்) இங்கே பேச்சுமொழியை கதாபாத்திரங்களுக்கு அளிக்கவே முடியாது. கேலிக்கூத்தாகிவிடும். அச்சுமொழி மிகப்பழையது, மேடைப்பேச்சில் மட்டுமே எஞ்சுவது. நாடகத்தன்மை கொண்டது. அதை நாம் பேசுவதே இல்லை.

இந்த ஒரு சிக்கலால்தான் தமிழில் சரித்திரப்படங்கள் வரவில்லை. தெலுங்கில் வெளிவந்து வெற்றிபெற்ற இரு சரித்திரப்படங்கள் மகாதீரா, பாகுபலி. இரண்டுமே சரித்திரப்படங்கள் அல்ல, ஃபேண்டஸி படங்கள் மட்டுமே. அம்புலிமாமா கதைகள்போல. அவற்றில் வசனம், காட்சியமைப்புகள் எல்லாம் எப்படி இருந்தாலும் பெரிய சிக்கல் இல்லை. ஏனென்றால் ‘இது உண்மை’ என அந்தப்படம் ரசிகர்களிடம் சொல்லவில்லை. ரசிகர்களும் ஒரு வேடிக்கையாகவே அவற்றை ரசிக்கிறார்கள். வரலாறாக எண்ணுவதில்லை. மேலும் தெலுங்கில் பேச்சுமொழியும் அச்சுமொழியும் ஏறத்தாழ ஒன்றே.

தெலுங்கிலேயேகூட சரித்திரப் படம் என்றால் ருத்ரமா தேவி. அது தோல்வி அடைந்தது. அதன் வசனங்களை எப்படி அமைப்பது என்று தெரியவில்லை.  வடக்கே எடுக்கப்பட்ட படங்களிலேயே பெரும்பாலான வரலாற்றுப் படங்கள் தோல்வியடைந்தன. மெல்லிய வெற்றியை அடைந்தவை, சஞ்சய்லீலா பன்சாலி எடுத்தவை. அவை வடக்கே புகழ்பெற்ற ஜாத்ரா போன்ற புராணநாடகங்களின் தன்மை கொண்டவை. மிகையான இசை, மிகையுணர்ச்சி, செயற்கையான காட்சியமைப்புகள். அவை சினிமாத்தன்மை குறைந்தவை. இன்னொரு வகை, நாடகத்தன்மை கொண்ட படங்கள். உதாரணம் பிருத்விராஜ்.

இந்தப்படத்தின் திரைக்கதையை ஒட்டியும் எனக்கும் மணிக்கும் நடுவே விவாதங்கள் இருந்தன. பொன்னியின் செல்வன் நாடகத்தில் உச்சகட்டங்கள் முழுக்க கதாபாத்திரங்களின் நேரடி உரையாடல்கள். அவை நாடகமாகச் சரிவரும். சினிமாவுக்கு அல்ல. அவ்வாறு பேசப்பட்ட பல செய்திகள் திரைக்கதையில்  காட்சிகளாக்கப்பட்டன. சாதாரணமாக வந்துசெல்லும் சில எளிய விவரணைகள் முழுமையான காட்சிகளாக ஆயின. என்ன என்று பொன்னியின் செல்வன் பார்த்துக் கண்டுபிடிக்கலாம்.

அத்துடன் நாவலில் இருந்து நுட்பமான சில மாற்றங்கள் தேவைப்பட்டன. பொன்னியின்செல்வனில் வந்தியத்தேவன் முதிராச்சிறுவன். அருண்மொழியும் அப்படித்தான். ஆனால் இங்கே கார்த்தியும் ஜெயம்ரவியும் நடிக்கிறார்கள். ஆகவே அக்கதாபாத்திரங்களின் இயல்புகள் கல்கி எழுதிய அதே குணச்சித்திரத்தை ஒட்டி மேலும் சில ஆண்டுகள் மூத்தவர்களின் இயல்புகளாக மாற்றப்பட்டன. அதையும் திட்டமிட்டே செய்யவேண்டியிருந்தது.

பொன்னியின்செல்வன் நாவலில் ராஷ்ட்ரகூடர்களுடனான போர்கள் இல்லை. ஆனால் சினிமாவுக்குத் தேவையாயின. அவ்வாறு சிலவற்றை மேலதிகமாகக் கூட்டியபோது சிலவற்றை வெட்டித் தள்ளினேன். மணி ரத்னம் அந்த நாவலின் விசிறி. அதில் வருத்தங்கள் இருந்தன அவருக்கு. ‘நான் வெட்டும் ஒவ்வொரு காட்சிக்கும் உங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாயை மிச்சப்படுத்துகிறேன்’ என ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன்.

நாடகத்தனமாக மாறிமாறிப் பேசிக்கொள்ளும் காட்சிகள் வழியாக எல்லாவற்றையும் இன்னமும் தெளிவாக விளக்கியிருக்கலாம். உதாரணமாக, ‘பெரிய பழுவேட்டரையர் சோழநாட்டுக்கே அடித்தளமான சிற்றரசர்களின் தலைவர். சோழராணுவமே அவருக்கு கட்டுப்பட்டது. அவர் என்னை தூக்கி வளர்த்த தாத்தா’ என குந்தவை ஒரு ஆவேசமான வசனம் பேசியிருக்கலாம். பலருக்கு எல்லாம் மட்டைக்கிரண்டாக புரிந்திருக்கும். ஆனால் நாடகம் வந்துவிட்டிருக்கும்.

இந்தப்படத்தில் எல்லாமே காட்சிகள்தான். காட்சிகளில் ஒன்றை உணர்த்தியதுமே அந்த சந்தர்ப்பம் முடிந்து அடுத்த சந்தர்ப்பம் வந்துவிடுகிறது. வசனம் வழியாகச் சொல்லப்படும் வரலாறோ செய்தியோ இல்லை. இதுதான் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற வரலாற்றுத் திரைப்படங்களின் பாணி. ஜப்பானிய, சீன திரைப்படங்களின் பாணியும்கூட. அதன் முழுமையான இந்திய வடிவம், முதன்முதலாக, பொன்னியின் செல்வன்தான்.

ஆக, மணிரத்னம் செய்திருப்பது ஒரு புதிய வழிதிறப்பு. முழுக்க முழுக்க ஒரு சோதனை முயற்சி. சரித்திர சினிமாவை இந்திய பாணியில் எடுப்பதற்கான மாதிரிவடிவம். அதற்கான வசனம் நவீன சினிமாவுக்கு உகந்த முறையில் ‘சாதாரண உரையாடலாக’ இருக்கவேண்டும் என முடிவுசெய்தேன். ஆனால் அது அச்சுமொழியாக இருக்கவேண்டும். இன்றைய பேச்சுமொழி வரக்கூடாது. அதேசமயம் படம் தொடங்கி ஐந்து நிமிடத்திற்குள் சாதாரணமாக நாம் பேசுவதுபோல ரசிகர்களுக்குத் தோன்றவும் வேண்டும்.

சொல்லிச்சொல்லி எழுதிய வசனங்கள் அவை. ஒவ்வொரு வசனத்திலும் எத்தனை சொற்கள் என விரல்விட்டு எண்ணி எழுதியவை. எல்லா வசனத்தையும் நானே உரக்கச் சொல்லி நடித்துப் பார்த்திருக்கிறேன். அவற்றை பதிவுசெய்து ஓடவிட்டு மீண்டும் கேட்டேன். அதிரடி வசனம், அழகான வசனம் அல்ல என் நோக்கம். அச்சுமொழி பேச்சுமொழியாக காதில் ஒலிப்பது மட்டுமே. ஒற்றைவரியில் வேடிக்கையும், கூர்மையும் வெளிப்படுவது மட்டுமே.

பல கூர்வரிகள் உள்ளன. அவை ரசிக்கப்படுகின்றன. சில வரிகள் சாதாரணமாக பொதுரசிகர்களுக்கு பிடிகிடைக்காது. உதாரணமாக, ‘அடிபட்ட புலிதான் யானைக்கு எதிரி’ என்ற வரி. யானை ராஷ்ட்ரகூடர்களின் இலச்சினைகளிலொன்று. ஆனால் அவை காலப்போக்கில் புரிந்துகொள்ளப்படும்.

அதை நிகழ்த்தி, அதை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு, கண்முன் மாபெரும் வெற்றியைக் கண்டபின்னரே இதைச் சொல்கிறேன். இன்று எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க விமர்சனங்கள் அனைத்திலும் வசனம் பாராட்டப்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க திரையரங்குகளில் வசனத்திற்கு பெரும் கைதட்டலையும் ஆரவாரத்தையும் பார்க்கமுடிகிறது.

(இந்த ஒரு காரணத்தாலேயே பொன்னியின் செல்வனை கொஞ்சம் கழித்தே நான் பார்க்க முடியும். நான் நடித்து உச்சரித்தபடி வசனங்கள் என் மனதில் பதிந்துள்ளன. இன்னொருவர் அதை சொல்லக்கேட்க ஒரு விலக்கம் இருக்கிறது)

சரித்திரப்படங்களை இனி நம்பி எடுக்கலாம். இதுதான் இனி வசனத்தின், திரைமொழியின் முன்னோடி வடிவம். தமிழுக்கு மட்டுமல்ல, இந்திய திரையுலகுக்கே. அதைத்தான் இக்கணம் வரை இந்தியத் திரையுலகின் முதன்மை இயக்குநர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அழைத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

நமக்கு ஏராளமான சரித்திரம் உள்ளது. கடந்த ஐம்பதாண்டுகளாக நாம் சரித்திரத்தை திரையில் இருந்து விலக்கியே வைத்திருக்கிறோம். அந்த தடையை இனி கடக்கலாம்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 03, 2022 11:35

வல்லிக்கண்ணன்

[image error]

இருபதாண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்வு. ஓர் எழுத்தாளர் எல்லா எழுத்தாளரையும் அவருக்கு நன்றாக தெரியும் என்பதுபோல எழுதுவார் (இன்று அவர் இல்லை) அவருடைய தோளில் தலைசாய்த்து நான் கதறி அழுததாக ஒருமுறை எழுதினார். வல்லிக்கண்ணன் பாராட்டுவிழாவில் நான் ”டேய் போலி எழுத்தாளர்களே!” என ஆணவமாகப் பேசியதாக எழுதினார்.

நான் வல்லிக்கண்ணனை நேரில் பார்த்ததே இல்லை. அதை நான் அவருக்கு எழுதினேன். அவர் தன்னிடம் ஆதாரம் உள்ளது என்றார். நாலைந்து பேர் உடனே ”அதானே, ஆதாரம் இல்லாமல் எழுதுவாரா?” என்றனர். ஆனால் ஆதாரங்களை கேட்கவில்லை.

கொஞ்சநாள் கழித்து இன்னொரு இடத்தில் நான் வல்லிக்கண்ணனை மேடையில் அவமதித்தேன், அவர் தலையில் அடித்துக்கொண்டார் என அவரே மீண்டும் எழுதினார். மீண்டும் நான் வல்லிக்கண்ணனை சந்தித்ததே இல்லை என எழுதினேன். ஆதாரம் இருக்கிறது என்று அவர் சொன்னார். அதானே, ஆதாரம் இல்லாம இருக்குமா என்றனர் சிலர்.

வல்லிக்கண்ணனை நினைக்கும்போதெல்லாம் புன்னகை வருவது இந்த நிகழ்வால்தான்.

வல்லிக்கண்ணன் வல்லிக்கண்ணன் வல்லிக்கண்ணன் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 03, 2022 11:34

கல்பற்றா உரை, மேடையில் உருக்கொண்ட அற்புதம்

புதிரின் நண்பன் நான் (கல்பற்றா நாராயணன் உரை தமிழில்)

அன்பின் ஜெ,

எனக்கெல்லாம் மலையாளிகள் சாதரணமாக பேசுவதே ஒரு performance போல இருக்கும். குரலின் ஏற்ற இரக்கங்கள், எதையும் ஆத்மார்த்தமாக சொல்வதான பாவம் எல்லாம் சேர்ந்து அவர்களை கவனிக்க வைக்கும். அதில் கல்பற்றாவின் கவித்துவமும் இணையும்போது அவர் கோவையில் நிகழ்த்திய உரை ஓர் அற்புதம் என்றே சொல்வேன்.பொதுவாக கோவை ஜெ-60 விழா உரைகளைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். பாரதி பாஸ்கர், பவா, மரபின் மைந்தன் முத்தையா மூவரின்  உரைகளும் அவர்கள் தங்கள் களங்களில்  செயலாற்றுவதற்குரிய தார்மீக விசையை எப்படி தங்கள் எழுத்திலிருந்து அடைகிறார்கள் என்பதாக அமைந்தது. யுவனின் உரை ஒரு ப்ரியத்துக்குரிய நண்பனை அடையாளம் காட்டுவதாக இருந்தது. வாசகப் பரப்பிலும் விமர்சன உலகிலும் தாங்கள் உருவாக்கியுள்ள செல்வாக்கையும் அதை உள்வாங்கி கடந்து செல்லவேண்டிய எதிர்பார்ப்பையும் கூட முன்வைத்தார். உங்கள் உரையை நீங்கள் ஆசிரியர்களை நினைவுகூரவும் அவர்களின் தாள்பணியவும் அமைந்த வாய்ப்பாகவே பயன்படுத்திக் கொண்டீர்கள். இது உங்களுக்கான விழா என்பதால் ஆசிரியர்களை நினைவுகூர்தல், நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தல், மேலும் செயலூக்கத்தை முன்வைத்தல் என்பதற்கப்பால் மேடையை அதிகம் கைப்பற்றக்கூடாது என்ற கவனத்துடன் பேசியதாகத் தோன்றியது.முதன்முறையாக நீங்கள் பங்குபெறும் மேடையில் உங்கள் உரையைவிடவும் முதன்மையான உரையாக அமைந்த உரையை கல்பற்றாவின் பேச்சில் கண்டேன். விழா நேரத்தில் ஒருவித பரவசத்தில் புரிந்தும் புரியாமலும் கேட்ட கல்பற்றாவின் உரையை மீண்டும் யூடியூபில் கேட்டேன். துவக்கத்திலேயே enigma என்றொரு ஆழமான சொல்லுடன் தொடங்குகிறார். தொடர்ந்து அவர் பேசிய பன்னிரெண்டு நிமிட உரையில் பல்வேறு கவித்துவ உருவகங்கள், சொல்லாட்சிகள் வழியாக ஜெயமோகன் எனும் எழுத்தாளர் எவ்வாறு ஒரு enigma என்று நிறுவி செல்லும் உரை. ஜெயமோகன் எனும் எழுத்தாளர் ஒட்டுமொத்தமாக தமிழ் வாசகர்களுக்கு, நண்பர்களுக்கு, இலக்கிய மரபிற்கு, இந்திய மரபிற்கு என்னவாக இருக்கிறார் இருக்கப்போகிறார் என்பதை சொல்லிப் பார்க்கும் உரை. இதில் பல வரிகள் தனியாக கவனித்தால்கூட கவித்துவமானவை. அறம் கதைகள் பற்றி பேசும்போது சத்யம் தன்னளவிளேயே கொண்டுள்ள அழகு, முழுமை பற்றி சொன்னது. சத்யத்தை பூரணமாக்கும் பொருட்டு தூவப்படும் பொய்கள் எப்படி சத்யத்தின் பகுதியாகவே ஆகிவிடுகின்றன என்பதாக நான் புரிந்து கொண்டேன். நரகத்தின் இருள் அதிலிருந்து மீள்கையில் பன்மடங்கு ஒளியாக சகலருக்கும் பரப்பும் இடத்தில் ‘தான் இனி ப்ராகிசிக்கயே உள்ளூ..’ என்று அவர் பேசிய இடம் ஓர் உச்சம். முன்பு தனிப்பேச்சில் ஒருமுறை மலையாள மேடைப்பேச்சு என்பது எப்படி தமிழ் மேடை மரபைக் காட்டிலும் பலபடிகள் முன்நகர்ந்த ஒன்று என்பதை சொல்லியிருக்கிறீர்கள். அதை இன்று அனுபவபூர்வமாக உணர்ந்தோம். ‘எழுதிக் கழியும்போ மாத்ரம் ரூபம் கொள்ளுன்ன ஒன்னு’ என்று அவர் தங்கள் எழுத்தைப் பற்றி ஓரிடத்தில் குறிப்பிட்டார். கல்பற்றாவின் உரையும் அந்த மேடையில் ரூபம் கொண்ட அற்புதம்.அன்புடன்,பாரி ஜெயமோகனம் – கல்பற்றா நாராயணன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 03, 2022 11:31

வல்லுறவை வெல்ல!

தமிழ் சினிமாவின் உச்சகட்ட நகைச்சுவைக் காட்சி எது என்ற விவாதம் ஓடிக்கொண்டிருந்தபோது ஒரு சினிமா விவிஐபி இதைச் சொன்னார். அவர் கண்ணிமைக்காமல், சீரியஸாகச் சொன்னதனால் நானும் அப்படியே நம்பிவிட்டேன். பார்த்தபோது ஐந்து நிமிடம் திக்பிரமை பிடித்து நின்றுவிட்டேன். பாலியல்பலாத்காரத்தை தடுக்க என்ன ஒரு கலைநயமிக்க வழி!

ஆனால் பிலஹரி அல்லது ஹர்காம்போஜியில் ஒரு கீர்த்தனை பாடியிருந்தால் இந்த அளவுக்குக் கூட சிரமப்பட்டிருக்க வேண்டாமோ?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 03, 2022 11:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.