Jeyamohan's Blog, page 705
October 3, 2022
மணிவிழா கடிதங்கள்
ஆசிரியருக்கு வணக்கம்,
ஜெ 60 மணிவிழா மிக சிறப்பாக நடந்தது.வெள்ளிக்கிழமை முத்துலிங்கம் ஐயாவுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் உங்களை பார்த்தேன். பின்பு சனிக்கிழமை காலை நீங்கள் கோவை வந்தது முதல் திங்கள் மாலை ரயிலில் ஏறி அமர்ந்து வண்ணதாசன் ஐயாவின் கைகளை பிடித்து கொண்டது வரை புகைப்படங்களை நண்பர்கள் அனுப்பிக்கொண்டே இருந்ததால். மானசீகமாக நானும் மூன்று தினங்கள் அங்குதானிருந்தேன்.
விழாவில் கலந்துகொண்ட நண்பர்கள் பலரிடமும் விழா குறித்து போனில் கேட்டறிந்தேன். பின்னர் உரைகள் அனைத்தையும் கேட்டேன். கவிதை மொழியில் கல்பற்றா அவர்களின் உரை உச்சம். உங்களது எனெர்ஜியை உங்களை சுற்றியிருப்பவர்களுக்கு கடத்துபவர் நீங்கள். பாதை இல்லாத இடத்தில் ஜெயமோகன் பயணம் செய்ய ஆரம்பிக்கும் முன் அங்கே தானே பாதை உருவாகிக்கொள்கிறது. ஜெயமோகனுக்கு நண்பனாக இருப்பது பாக்கியம் என்றார்.
பாரதி பாஸ்கர் அவர்கள் உங்களின் ஆயிரக்கணக்கான வாசகிகளின் குரலாக நான் இந்த மேடையில் உங்களுக்கு நன்றி சொல்லும் பொருட்டு நிற்கிறேன் என்றார். சனிக்கிழமை அலுவலகம் முடிந்து நள்ளிரவு எழுந்து தயாராகி அதிகாலை நான்கு மணிக்கு தனியாக பேருந்தில் ஐந்து மணிநேரத்திற்கு மேல் பயணித்து கோவைக்கு வந்து விழாவில் கலந்து கொண்டு இரவில் பதினோரு மணி பேருந்து பிடித்து அதிகாலை இல்லம் சென்று சேர்ந்து கணவருக்கும், பிள்ளைகளுக்கும் வேண்டியவற்றை செய்து கொடுத்துவிட்டு திங்கள்கிழமை காலை அலுவலகம் சென்றார். உங்கள் வாசகி ஒருவர்.
சென்னையில் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக இருக்கும் உங்கள் வாசகி ஒருவர் பள்ளியில் இருந்து மாணவர்கள் மற்றும் பிற ஆசிரியர்களுடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்புகையில். ஞாயிறு மாலை கோவை ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருக்கும் மூன்று மணிநேரத்தில் சக ஆசிரியர்களிடம் மாணவர்களை ஒப்படைத்துவிட்டு டாக்ஸியில் விழா அரங்குக்கு வந்து விழாவில் கலந்துகொண்டு சென்றுள்ளார்.
நண்பர்கள் பெரும்பாலானோர் சொந்த செலவில் விடுதிகளில் தங்கி விழாவில் கலந்துள்ளனர். நீங்கள் அளித்தது இலக்கியம் மட்டுமல்ல. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் நீங்கள் வழிகாட்டியுள்ளீர்கள். யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத சொந்த வாழ்க்கை சிக்கல்கள், தொழில், பொருளாதார சிக்கல்களுக்கு நண்பனாக, சகோதரனாக, ஆசிரியராக ஆலோசனை வழங்கி வாழ்வு மேம்பட உதவியுள்ளீர்கள். கல்பற்றா அவர்கள் சொன்னது போல் நீங்கள் இருக்கும் இடத்தையும், உங்களை சுற்றியிருப்பவர்களையும் பிரகாசிக்க செய்பவர்.
அந்த நன்றி உணர்வால்தான் இளையவர்கள் வணங்கி, உங்களிடம் ஆசி பெறவும், மூத்தோர்கள் பயணம் செய்ய இயலா உடல் சிக்கல் இருந்தபோதும் வெகு தூரத்திலிருந்து வந்து உங்களை வாழ்த்துவதற்கும் வந்தார்கள்.
யுவன் அவர்களை இந்த ஆண்டு துவக்கத்தில் அவரது இல்லம் சென்று சந்தித்தபோது அவர் மேடையில் சொன்ன அதே வரிகளை நானும் கூறியிருக்கிறேன். ஜெயமோகனின் தளம் மூலம் உங்களை நன்கு அறிவேன் உங்கள் கதைகளை வாசித்துள்ளேன் என.
சில தினங்களுக்கு முன் பவா அவர்கள் சொல்லும் மாயப்பொன் கதையை கேட்டபின் மீண்டும் அந்த கதையை வாசித்துவிட்டு என்னை நான் நேசையனாக உணர்ந்த தருணத்தில் உங்களுக்கு எழுதிய கடிதத்தை பவாவிடம் பகிர்ந்துகொண்டேன். அவரது உரையிலும் மாயப்பொன் குறித்து பேசியது மகிழ்ச்சியை தந்தது.
மணிவிழாவிற்கு வந்த கூட்டம் குறைவுதான் (1200 பேர்) தவிர்க்கவே முடியாத காரணங்களினால் விழாவுக்கு வர முடியாமல் போன எண்ணிக்கையே அதிகம். மேகாலயாவில் பணிபுரியும் நமது விஷ்ணுபுர தூண்களில் ஒருவரான கலெக்டர் ராமின் புகைப்படத்தை பார்த்துவிட்டு அவரிடம் கேட்டபோது “தற்செயலாக கோவை வந்தேன். விழாவில் கலந்துகொள்ளாவிட்டால் வருந்தியிருப்பேன்” என்றார்.
நரேன் “ஷாகுல் செம கூட்டம் சார்ட்ட யாருக்கும் பேசவே முடியல, சும்ம ஒரு ஹாய் சொல்லி கை குலுக்க தான் முடிஞ்சுது” என்றார்.
விழாவில் வெகு தூரத்திலிருந்து சொந்த செலவில் வந்தவர்கள் எல்லாம் உங்கள் மீதுள்ள தூய அன்பினால் மட்டுமே. என்னை போன்ற இளையவர்களுக்கு உங்கள் ஆசியும் மூத்தோர்களின் வாழ்த்துக்கள் உங்களுக்கு என்றுமிருக்கட்டும். மேலும், மேலும் பெருவிசையுடன், பெருஞ்செயல்கள் நீங்கள் புரிவதை நாங்கள் பார்க்கத்தான் போகிறோம்.
உலக உருண்டையில் இந்தியாவின் மறுபுறத்தில் ஜமைக்கா நாட்டு கடல் பகுதியில் இருந்து இதை எழுதுகிறேன். மறக்காமல் டைனமிக் நடராஜன் அண்ணாவை அழைத்து பார்ட்டினேன். “ஷாகுல் இது டீம் வொர்க், உங்களை ரொம்ப மிஸ் பண்ணினோம்” என்றார்.
மூன்று தினங்கள் மிக நிறைவாக, மகிழ்வாக நீங்கள் இருந்ததை கண்டு பெரு மகிழ்ச்சி.
ஷாகுல் ஹமீது .
அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,
மிக நீண்ட நாட்கள் பிறகு உங்களுக்கு ஈமெயில் அனுப்புகிறேன். கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி, உங்களை நாகர்கோவில் இல்லத்தில் சந்தித்ததில் மற்றும் உங்கள் நேரத்தை என்னோடசெலவிட்டதில் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.
முன்னறிவிப்பு இல்லாமல் வந்ததற்கு மன்னிக்கவும். ஒவ்வொரு முறையும் நான் நாகர்கோவில் வழியாக கேரளா போகும் பொழுது, நான் உங்களை காண வேண்டும் என்று நினைப்பேன், ஒரு சிறு தயக்கம், நீங்கள் வீட்டில் இல்லாமல் வெளி வூரிலிருந்தால் என்றும் மற்றும் என்னுடன் வரும் என் கன்னட மனஜேர்க்கு உங்களை அறியாது என்பதால் நான் தவிர்த்துவிட்டேன். இம்முறை பெங்களூருவிலிருந்து தனியாக பயணம் ,பார்வதிபுரம் கடக்கும் போது தான் நினைத்தேன் முயன்று பார்ப்போம் என்று திடீர் திட்டம், உங்கள் வீடும் தெரியாது 30 நிமிட விசாரிப்பில் வந்துவிட்டேன். உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி.
திருவனந்தபுரம் சென்ற பிறகுதான் நினைத்தேன், உங்களை சந்தித்த போது நான் உங்களுக்கு எதுவும் வாங்கி வரவில்லையே என்று எண்ணி மிகவும் வருந்தினேன். என்னை மன்னிக்கவும். உங்கள் சந்தித்த மகிழிச்சில் மற்றும் என் பயண அவசரத்தில், உங்களோடு ஒரு புகைப்படம் கூட எடுக்க மறந்துவிட்டேன். அந்த தருணத்தை தவறவிட்டேன்.
உங்கள் 60 வது மணிவிழா நிகழ்ச்சிகளின் முழு தொகுப்பை இன்று “ஸ்ருதி டிவி” யில் கண்டேன் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.
உங்கள் அடுத்த பெங்களூரு பயண திட்டம் எப்போது இருந்தாலும் தெரிவிக்கவும்.
நன்றி
R .A.பாலாஜி
பெங்களுரு
சியமந்தகம் தொகைநூல் வாங்க*
கோவையில் ஜெ 60 விழா- ஒரு நிறைவான நாள் நன்றிகளும் வணக்கங்களும்October 2, 2022
தனிமையும் இருட்டும்
ப்ரகிருதிஸ்-த்வம் ச சர்வஸ்ய குணத்ரய விஃபாவினி
காளராத்ரி மகாராத்ரி மோகராத்ரிஷ் ச தாருணா
மூவியல்பால் முதல்பேரியற்கையைப் படைத்தவள் நீ
கரிய இரவு, பேரிரவு, பெருவிழைவின் இரவு
நீ முடிவிலா ஆழம்.
(தாந்த்ரோக்த ராத்ரி சூக்தம், தேவிபாகவதம்)
https://www.saatchiart.com/art/Painti...புதிரின் நண்பன் நான் (கல்பற்றா நாராயணன் உரை தமிழில்)
நண்பர் ஒருவர் கேட்டார், கல்பற்றா நாராயணன் அவருடைய உரையில் குறிப்பிட்ட அந்த ‘நரகத்’தைப்பற்றி. ’அது என்ன? அது இப்போது எஞ்சியிருக்கிறதா ?சற்றேனும்?’ என்றார்.
எண்ணிப்பார்க்கிறேன். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அதை முழுமையாகக் கடந்து வந்துவிட்டேன் என்று எண்ணியிருக்கிறேன். ஆனால் சாதாரணமாக நினைவுகூர்கையிலேயே ஒவ்வொரு துளியுமென அது நினைவில் மீண்டெழுவது விந்தையாக இருக்கிறது. அதன் ஒரு துளிகூட ஒளி மங்கவில்லை.
இருளுக்கும் ஒளி உண்டு மிகக் கூரியது. அதன் பல்லாயிர்ம் முட்களில் ஒரு முனை கூட மழுங்கவில்லை. இன்று எண்ணுகையில் அந்த நாட்களை கணம் கணமென திரும்ப வாழ முடியுமென்றே தோன்றுகிறது. இவ்வண்ணமே என் இறுதிக்கணம் வரை எஞ்சும் என்று படுகிறது.
இப்போது இப்படி சொல்லிப்பார்க்கிறேன். அது ஒரு செல்வம். ஒரு சேமிப்பு. அங்கிருந்து தான் எடுத்துக்கொண்டே இருக்கிறேன். அது பல்லாயிரம் டன் எடையுள்ள அழுத்தத்தால் செறிவாகி, கல்லாகிக் குளிர்ந்து, மேலும் குளிர்ந்து, மேலும் செறிந்து, வைரம் என்றாகி, ஒளிகொண்டு அங்கிருக்கிறது. செறிவானவை விரிகையில் அவை வெடிக்கின்றன. இன்று புனைவுக் களியாட்டுக்கதைகளை பார்க்கையில் அதிலுள்ள கொண்டாட்டமும் சிரிப்பும் கூட ஒருவகையில் அதன் வெடிப்புதானோ என்று தோன்றுகிறது.
அது என்ன? அதை எப்படி நேரடியாக சொல்லி விளக்கவைக்க முடியும். முடியுமெனில் இத்தனை கதைகள் எழுதியிருக்கமாட்டேன். இத்தனை ஆயிரம் பக்கங்கள், இத்தனை லட்சம் சொற்கள் அள்ளி வைத்திருக்கமாட்டேன். அது வெடித்து, பெருகி, கொழுந்துவிட்டு, புகை மலைகளாகி, ஒளிப்பெருக்காகி, பேரழிவாகி, பெருங்கனலென்றாகி மட்டுமே தன்னை வெளிக்காட்டக்கூடிய ஒன்று.
சாவு எங்கும் உள்ளது. கொடிய சாவுகளை இளமையில் சந்திப்பவர்களும் பலர் உள்ளனர். என்னைவிட தீவிரமான வாழ்வனுபவங்களினூடாக கடந்து சென்ற பலரை இப்போதும் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறேன். சுமையேற்றும் வாழ்க்கையை ஒவ்வொரு கணமும் தோளில் வைத்துக்கொண்டிருப்பவர்களை ப்பார்க்கிறேன். அவர்களைவிட என்னுடையது பெருந்துயரம் என்று ஒருபோதும் கூறமாட்டேன். அவர்கள் மேல் ஒவ்வொரு கணமும் பரிவும் அணுக்கமும் கொள்கிறேன். ஒப்பு நோக்குகையில் என் துயர் பொருட்படுத்தக்கூடியது அல்ல என்று தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை.
உண்மையில் நான் கூறும் அந்த நரகம் என்பது சாவு அளிப்பதல்ல. இழப்பு அல்ல. சாவிலிருந்து நான் அடைந்த தத்துவவெறுமைதான். நின்றிருக்கும் மண் இல்லாமல் ஆகும் இடம். நம்ப ஒன்றும் இல்லாமல் ஆகும் தருணம். ஒவ்வொன்றையும் வகுத்து அடுக்கி அதன்மேல் நின்றுகொண்டுதான் இவ்வாழ்வை சந்தித்துக்கொண்டு தான் இருக்கிறோம். வகுபட்டவை அனைத்துமே இன்மை என்றாகும் கணம். இருட்டு, முற்றிலும் தனிமை.
முன்பொரு கதை எழுதினேன். தனிமையும் இருட்டும். அந்த வரி பல நாட்கள் என்னுள் சுழன்றுகொண்டிருந்தது. அத்தலைப்புக்கு நான் எழுதிய கதையை எந்த தொகுப்பிலும் நான் சேர்த்ததில்லை. மிக சாதாரணமான ஒன்று அது. ஆனால் தலைப்பு இன்றும் கவித்துவமாக இருக்கிறது. தனிமையும் இருட்டும். ஒன்றையொன்று வளர்ப்பவை அவை.
இப்போது அதை இப்படிச் சொல்கிறேன். அது ஈடு இணையற்ற தனிமை. கல்பற்றா அதை தன் உரையில் சொல்கிறார். அத்தகைய ஒரு தனிமையிலிருந்து அன்றி இத்தகைய ஒரு செயலூக்கம் வர இயலாது என்று கூறுகிறார். அது உண்மை. வெற்றிடத்தை உருவாக்குகையிலேயே பெருவிசை எழுகிறது. அல்லது பெருவிசை வெற்றிடத்தை உருவாக்குகிறது.
அந்த தனிமை இன்று உள்ளதா? உள்ளது. அத்தனிமையை செயல்களால் நிறைத்துக்கொண்டேன். இப்புவியின் இனிமைகளால் நிறைத்துக்கொண்டேன். உறவு, நண்பர்கள், பயணங்கள், வாசிப்பு கனவு என. அதற்கப்பாலும் எஞ்சும் ஒரு துளி உள்ளது. புட்டியில் எவ்வளவு விட்டாலும் நிரம்பாமல் ஒரு துளி அளவுக்கு எஞ்சும் வெற்றிடம் அது. இங்கு நிரப்பப்படுபவை அனைத்தும் பெருகிப்பெருகி அந்த சிறு வெற்றிடத்தை செறிவுள்ளதாக்குகின்றன.
அத்தனிமை என்றும் உள்ளது. அத்தனிமை மட்டுமே கொண்டவர்களை யோகி என்கிறோம். யோகத்தனிமை என்றும் யோகஇருள் என்றும் நூல்கள் அதைக் குறிப்பிடுகின்றன. காளராத்திரி மகாராத்திரி மோகராத்திரி. அதில் அமர்கையில் நானும் யோகி என்றாகிறேன். பலநாட்களுக்கு ஒருமுறை, பல தருணங்களுக்கு ஒருமுறை இயல்பாக அனைத்துக்கும் அப்பால் எஞ்சி நிற்கும் அந்த தனிமையை சென்றடைந்து திகைக்கிறேன்.
அது என் உடல் பல ஆயிரம் டன் எடைகொண்டதாக ஆகும் தருணம். செயல்களின் அப்பாலுள்ள செயலின்மை. பொருள்களின் அப்பாலுள்ள பொருளின்மை. அத்தனை ஒளிகளையும் மின்மினிகளாக்கும் பேரிருள். அது ஒரு பக்கம் மூளை ஒரு மகத்தான இருநிலை. அந்த தீ எரிந்தணைந்தால், சில சமயம் மட்டும் எஞ்சும் இருளும் குளிரும் இன்மையும் அற்புதமானது.
அதைத்தான் இனிமை என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அது இனிமை அல்ல, இனிமைக்கு மறுபுறமென கசப்பு உண்டு. அதை சோதி என்றிருக்கிறார்கள். சோதி அல்ல அது. சோதி எனில் இருளும் உண்டு. அது பிறிதொன்றிலாமை. அச்சொல்லால் அன்றிச் சொல்லமுடியாதது.
அப்போதுதான் உண்மையில் நித்ய சைதன்ய யதிக்கு மிக அண்மையில் இருக்கிறேன். தெய்வங்கள் சூழ அமர்ந்திருக்கிறேன். அக்கணத்தில் என்னை ‘நீ யார்?’ என்று கேட்டால் யோகி என்று தயங்காமல் சொல்வேன். அங்கிருந்து தான் இத்தனை செயல் பெருக்குக்கு திரும்பி வருகிறேன். செய்து செய்து பெருக்கி நிரப்பி எனக்குச் சுற்றும் ஒரு உலகை உருவாக்கிக்கொண்டிருக்கிறேன்.
வெறுமையில் இருந்து செயலுக்குச் சென்று மீளும் வெறுமை இன்னொரு வெறுமை. பெருவெறுமை. முதல்வெறுமை எதிர்நிலை கொண்டது. இறுதி வெறுமை முக்குணங்களையும் முதல்பேரியற்கையையும் படைத்தது.
ஒருநாள் இவற்றைக் கைவிடுவேன்.இந்த மண் என்னை ஏற்கனவே விட்டுவிட்டது. நான்தான் இதை பற்றிக்கொண்டிருக்கிறேன். தெள்ளுப்பூச்சிபோல எட்டுக்கைகளாலும் மண்ணை கவ்வியிருக்கிறேன். ஒருநாள் ஒவ்வொரு கையாக விடுவேன். நான் ஆயிரம் கைகள் கொண்ட கார்த்தவீரியன். பல்லாயிரம் செயலாற்றுபவன். ஒவ்வொரு கைகளையும் உதிர்த்து மீண்டும் அந்த தனிமைக்கு சென்று அமரும்போது அது ஏதோ ஒரு புள்ளியில் தித்திக்கத் தொடங்கும் என்று நினைக்கிறேன். இப்போது இனிப்பவை எல்லாம் அப்போது கசக்கலாம்.
கடும் கசப்பிலிருந்து தித்திப்பு உருவாகும் என்று அதிமதுரம் தின்றவர்களுக்கு தெரியும். உக்கிரமான தண்மை சுடும் என்றும் உறைகார்பன்-டை-ஆக்சைடை தொட்டவர்களுக்குத் தெரியும். முரண்களால் இவற்றைப் புரிந்துகொள்ள இயலாது. தித்திப்புக்கும் கசப்புக்கும் அப்பாற்பட்ட ஒன்று, அந்தப்புள்ளியில் திரண்டிருக்கும். அங்கு சென்றமர்வேன். ஒரு மாபெரும் ஊசியினூடாக செல்லும் எறும்பு கூரிய, மிகக் கூரிய முனை ஒன்றை சென்று தொடும். அதற்கப்பால் இருப்பது பெருவெளி.
செய்குத்தம்பி பாவலர் எனும் வியப்புநிகழ்வு
சென்ற நூற்றாண்டில் ஓர் இஸ்லாமிய அறிஞர் சைவசித்தாந்த அரங்குகளில் பேருரைகள் ஆற்றினார் என்றும், சைவசித்தாந்த மரபைச் சேர்ந்த அறிஞர்களும் மடாதிபதிகளும் அவரை போற்றினர் என்பதும் இன்று அரிய செய்திகளாக இருக்கக்கூடும். இனி ஒருபோதும் அது நிகழ வாய்ப்பில்லை என்றுகூட தோன்றுகிறது.
நாகர்கோயில் செய்குத்தம்பி பாவலர் தமிழில் அவ்வகையில் ஓர் அற்புதம் என்றே சொல்லவேண்டும்
செய்குத்தம்பி பாவலர்
செய்குத்தம்பி பாவலர் – தமிழ் விக்கி
ஒரு விமர்சகனுக்காகக் காத்திருத்தல்
ஒரு கதையை எழுதியதுமே அதை எவர் மதிப்பிட்டுச் சொல்லமுடியும் என்றும் நமக்குத் தோன்றிவிடும். மற்றக் கருத்துக்களை தனித்தனியாக நாம் பொருட்படுத்துவதில்லை. ஒட்டுமொத்தமாக என்ன என்பதே நம் எண்ணமாக இருக்கும். அப்படி நான் எதிர்பார்த்திருந்த கருத்துக்களில் ஒன்று இது. மலையாள மனோரமாவில் திரை விமர்சகர் சி.பி.சுதாகரன் எழுதியது.
கேரளம் சினிமாவின் நிலம். நூற்றுக்கணக்கான சினிமா ரசனைப்பட்டறைகள். ஆண்டுதோறும் பதி னைந்துக்கும் மேல் சினிமாவிழாக்கள். அரசே நடத்தும் மாபெரும் திரைப்பெருவிழா. ஆண்டுக்கு நூறுக்குமேல் சினிமாநூல்கள்.வலுவான கலைப்பட இயக்கம், இடைநிலைப்பட இயக்கம், வணிகப்பட இயக்கம் என மூன்று அடுக்குகள். உலகைத் திரும்பிப்பார்க்க வைத்த சினிமாச்சாதனைகள். மிகமிக விரிவான திரைப்பட விமர்சன மரபு அங்குள்ளது.
இவர் எழுதியதுமே எனக்கு அனுப்பி வைக்கும்படிச் சொல்லியிருந்தேன். குறையாக இருக்காது என தெரியும். இருந்தாலும் சிறு பதற்றம். வாசித்ததும் ஒரு மெல்லிய தளர்வுடன் அந்த இனிய உணர்வை அனுபவித்தேன்.
மிகக்கறாரான விமர்சனம். பொன்னியின் செல்வனை கிளாஸிக் என்றெல்லாம் சொல்லவில்லை. ஒரு பாப்புலர் கிளாஸிக் என வரையறை செய்து, அந்த வகைமைக்குள் இதன் இடமென்ன என ஆராய்கிறார். அதற்குமுன் பொன்னியின் செல்வன் நாவலின் மொழியாக்கத்தை படித்து முழுமையாக தன்னை தயாரித்துக் கொண்டிருக்கிறார்.
வழக்கமான ஒற்றைவரி அபிப்பிராயங்கள், எல்லா படத்துக்கும் சொல்லப்படும் தேய்வழக்குச் சொற்கள் ஏதும் இல்லை. முக்கியமாக, ‘நான் யார் தெரியுமா? எனக்கெல்லாம் ரொம்ப சினிமா தெரியும்’ என்னும் பாவனையே இல்லை. சினிமாவை சினிமாவாகப் பார்ப்பதில் இருந்து எந்த வட்டார உணர்வும் விமர்சகரை தடுக்கவில்லை. அவருக்கு தமிழ் சினிமாவும் கொரியன் சினிமாவும் எல்லாம் சினிமா மட்டுமே. சினிமாவைப் பற்றிய மொத்தையான கருத்து அல்ல அவர் முன்வைப்பது. இந்தச் சினிமாவை சரியான வகைமைக்குள் கொண்டுவந்து இதேபோன்ற உலகப்படைப்புகளுடன் ஒப்பிட்டு விவாதிக்கும் இந்த தெளிவுதான் விமர்சனம் செய்வதற்கான தகுதி.
’PS1 shows in tribe and clan, caste and gender that everybody is potentially both a victor and a victim’ என ஒற்றைவரியில் முழுநாவலின், சினிமாவின் சாரத்தையும் வரையறுத்துக்கொண்டு பேசமுற்படுபவனே உண்மையில் விமர்சகன். ஏன் ஆதித்த கரிகாலன் பழுவேட்டரையர் மேல் படைகொண்டுவரவில்லை? ஏன் சுந்தர சோழர் சிற்றரசர்களை ஒன்றும் செய்யவில்லை? எல்லா கேள்விக்கும் அந்த ஒற்றைவரியே பதில்.
சில விமர்சனங்களும் மறுப்புகளும் இதிலுள்ளன. ஆனாலும் Ponniyin Selvan 1 is a singularly heroic achievement for Mani Ratnam. He makes a nearly exhausted formula of the epic action movie come alive not just because of special effects, but also because there is a great story, good storytelling, and actors who perform as characters, not as themselves. என்னும் வரிகளில் மிகச்சரியாக பொன்னியின் செல்வனை வரையறை செய்திருக்கிறார்.
பொன்னியின் செல்வன் திட்டமிடப்படும்போதே ஒரு செயற்கையான தொழில்நுட்பப் படமாக அமையக்கூடாது, முழுக்க முழுக்க யதார்த்தமாகவே இருந்தாகவேண்டும் என வரையறை செய்யப்பட்டு எடுக்கப்பட்டது. வரைகலைத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் படங்கள் முதல்பார்வைக்கு ஒரு பிரமிப்பை உருவாக்கினாலும் ஓராண்டிலேயே கேலிப்பொருளாக ஆகிவிடும். இது வரலாறு, இது அப்படி ஆவது என்பது நமக்கே நாம் இழிவு தேடிக்கொள்வது.
வரைகலை நுட்பம் (special effects) சில ஆண்டுகளில் பழையதாகிவிடும். மிகையாக இருந்தால் வேடிக்கையாக மாறிவிடும். இந்தப்படம் இருபதாண்டுகளாவது outdate ஆகக்கூடாது, அடுத்த தலைமுறை பார்க்கவேண்டும் என்றார் மணி ரத்னம். ஆகவே யதார்த்தத்தை உருவாக்குவதற்காக மட்டுமே வரைகலை பயன்படுத்தப்பட்டுள்ளதே ஒழிய மிகையாக காட்டுவதற்காக அல்ல. போர் உட்பட எதுவுமே மிகையாக்கப்படவில்லை.
காட்சிகளில் மிகைநாடகத் தன்மை, மிகைசாகசத் தன்மை வந்துவிடவே கூடாது என உறுதியாக இருந்தார். நான் எழுதியதிலேயே இருந்த சற்று மிகையான ‘ஹீரோயிசக்’ காட்சிகள் ஒவ்வொன்றாக தேடித்தேடி அகற்றினார். இதில் கூஸ்பம்ப்ஸ் எல்லாம் இருக்காது. இது ஒரு சீரான ஒழுக்கு மட்டுமே.
இது மணி ரத்னத்தின் கனவு. அது காலத்தில் நீடித்து நிற்கவேண்டும் என்றார்.இன்று பார்ப்பவர்களில் எளிமையான ஒரு சாரார் வழக்கமான வரைகலை உத்திகளில் செய்யப்படும் நம்பமுடியாத சாகசங்களை எதிர்பார்த்து ஏமாற்றமடையலாம். ஆனால் மறுபடியும் பார்ப்பவர்களால் படம் காலத்தை கடக்கவேண்டும் என்று எண்ணினார். அது நிகழ்கிறது. குறிப்பாக பெண்களின் திரளால்.
அந்த புள்ளியில் பொன்னியின் செல்வனின் தனித்துவத்தை அடையாளப்படுத்தி, அதனாலேயே இது இந்திய சினிமாக்களில் முதற்பெரும் வெற்றி என மதிப்பிடும் இந்த விமர்சனக் கட்டுரை மலையாளத் திரைவிமர்சன மரபு பற்றி நான் என்றும் கொண்டிருக்கும் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
Ponniyin Selvan: The arrival of the Indian epic on the screen (Malayala Manorama)வெ.த.கா – இன்னும்
அன்புள்ள ஜெ,
தனிப்பட்ட வன்மங்களால் மிகமோசமாக விமர்சிக்கப்பட்ட படம் வெந்து தணிந்தது காடு. வன்மம் கண்களை மறைத்ததனால் அந்தப்படத்தின் நுட்பங்கள் நிறைந்த பல தருணங்கள் (”என்னை சுட்டிருவியா?” “தெரியலை”. “தெரியலையா?” “நான் இங்க இப்டி ஆவேன்னு எனக்கு முன்னாடி தெரியுமா?” போன்ற பல இடங்கள்) இங்குள்ள ‘விமர்சகர்கள்’ பலர் கண்களுக்குப் படவே இல்லை.
அது முத்து டான் ஆவதன் கதை என பலர் போகிறபோக்கில் ‘புரிந்துகொண்டு’ எழுதியிருந்தார்கள். அது வன்முறை உருவாக்கும் மனநெருக்கடிகள் பற்றிய சினிமா. வன்முறையின் அர்த்தமின்மையைச் சொல்லும் கதை. பலர் வன்முறையை நியாயப்படுத்தும் கதை என்று நினைத்தார்கள். அதன்பின் அந்த வன்முறை போதிய அளவு நியாயப்படுத்தப்படவில்லை என எழுதினார்கள். இப்போது வாசிக்கும்போது விமர்சனங்கள் ஆச்சரியம் அளிக்கின்றன. அந்த சினிமாவின் கிளைமாக்ஸ் முத்துவும் ஸ்ரீதரனும் சந்திக்கும் சைலண்ட் மொமெண்ட் என்று எழுதிய விமர்சகர்களே நாலைந்துபேர்தான்.
ஆனால் ஃபேஸ்புக்கில் சாமானிய ரசிகர்கள் எழுதிய பல விமர்சனங்கள் அருமையானவை. ஆழமானவையும்கூட. அவர்களால்தான் படம் ஓடியது. இன்னும் அதிகம்பேர் பார்ப்பார்கள். இன்று, சற்றுமுன் இப்போது எழுதப்பட்ட ஒரு விமர்சனத்தை பார்த்தேன். அனுப்பியிருக்கிறேன்.
திவாகர்
வெந்து தணிந்தது காடு (முகநூல் விமர்சனம். 1-10-2022)
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “ஐந்து நெருப்பு” குறுநாவல் வெந்து தணிந்தது காடு என்ற பெரும் திரைப்படமாக விரிவடைந்துள்ளது.
ஐந்து நெருப்பு நாவல் முத்து முள் காட்டை வெள்ளாமையாக காவல் காப்பதில் துவங்கி மாமாவின் தற்கொலைக்கு பின் முத்து மும்பை செல்வதை உறுதி செய்வதுடன் முற்று பெறுகிறது. அவன் மும்பைக்கு போனானா? போய் யாரை பார்த்தான்? மேலும் அவன் வாழ்க்கை எப்படி தொடர்ந்தது? என்ற பல கேள்விகளை ஐந்து நெருப்பு குறுநாவலை வாசிக்கும் வாசகன் தன்னுள் எழுப்பிக் கொண்டு தனது சுய அனுபவத்தின் அடிப்படையில் கற்பனை மூலம் மேலும் அனுபவத்தை சென்றடைகிறான்.
வெந்து தணிந்தது காடு திரைப்படம் முத்து (சிம்பு) முள் காட்டை காவல் காப்பதில் துவங்கி மும்பை சென்றடைதல் அங்கு அவன் வாழ்கையின் திடீர் திருப்பங்கள், சம்பவங்கள் உள்ளிட்டவை காட்சி படுத்தப்பட்டதன் வழியே ஐந்து நெருப்பு குறுநாவல் பெரும் திரைப்படமாக உருமாற்றம் பெற்றுள்ளது.
ஒருவன் பொருளாதார ரீதியாக உறு பெற்று சமூகத்தில் தன்னை சரியாக பொருத்திக்கொள்ள நினைக்கிறான் ஆனால் சூழல் பொருத்தமாக அமையாதபோது சமூகத்தில் தன்னை சராசரியாக பொருத்திக்கொள்ள முடியாத நிலைக்கு செல்கிறான்.
முத்து படத்தின் துவக்க காட்சியில் நெருப்பிலிருந்து தன்னை காத்துக்கொள்ள தன் உடம்பை அனிச்சையாக எப்படி செயல்பட வைக்கிறானோ அதேபோல் மேன்ஷனில் தன்னை தாக்க வரும் மனிதர்கள் மீதும் இயந்திர கதியில் எதிர் தாக்குதல் நடத்தி தன்னை காத்துக் கொள்கிறான். நெருப்பாக இருந்தாலும் மனிதனாக இருந்தாலும் தன்னை தாக்க வருமாயின் அனிச்சையாக ஒருவன் வன்முறையை கையிலெடுக்க வேண்டிய சூழலின் நிர்பந்தம் சரியாக திரைக்கதையாக்கப்பட்டுள்ளது.
முத்து தனக்கு விருப்பமில்லாத சூழலை கடந்து செல்ல முயற்சி எடுக்கும் பொழுது மேலும் இறுக்கமாக அந்த சூழலில் சிக்கிக் கொள்கிறான்.
துப்பாக்கி ஒரு இயந்திரம் அதை கையிலெடுக்கும் ஒரு மனிதனை அந்த துப்பாக்கி இயந்திரமாக மாற்றிவிடும் என்பதை காட்சி வழியே மிக சரியாக காட்டப்பட்டுள்ளது.
படம் பார்க்கும் பொழுது பல நேரங்களில் “கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான், துப்பாக்கி எடுத்தவன் துப்பாக்கியால் சாவான்” என்ற வழக்கமான சொல்லாடல் அனுபவமிக்க பார்வையாளனுக்கு வந்து செல்லும்.
அனுபவமிக்க பார்வையாளனின் சிந்தனையை நுட்பமாக உணர்ந்த தீர்க்கதரிசி எழுத்தாளர் ஜெயமோகன் முத்துவின் மூலம் அதற்கான பதிலை அளிக்கிறார் “ஆயுதம் எடுத்தவன் ஆயுதத்தால் சாவான் இருக்கட்டும் இந்த ஆயுதம் என்கிட்ட இருப்பதால்தான் என்னை எவனும் அவமானப்படுத்தாம இருக்கிறான் இது இருப்பதால் சாகும்வரை நிமிர்ந்து இருக்க முடியும்” என்று முத்து கதாநாயகியிடம் சொல்கிறான் இந்த இடத்தில் ஜெயமோகன் வன்முறையை நியாயப்படுத்த வில்லை மாறாக வன்முறைக்கு அழைத்து செல்லும் சூழலை சாடுகிறார்.
வன்முறையை கையிலெடுக்கும் எந்த அமைப்பும் துரோகத்தை தன் கூடவே சுமந்து வரும். மேன்ஷனில் முத்துவுடன் முதலில் நட்பாகும் சரவணன் இறுதியில் துரோகியாக மாறி வன்முறைக்கும் துரோகத்திற்கும் உலக நியதிப்படியான உறவை தக்கவைகிறான்.
கர்ஜி, குட்டிபாய் இந்த இரண்டு டான்களும் பெண்கள் விசயத்தில் மிக பலவீனமானவர்களாக காட்டப்பட்டு அதே பெண்கள் பலவீனத்தால் நேரடியாக ஒருவரும் மறைமுகமாக ஒருவரும் கொலை செய்யப்படுவது மிக சுவாரசியமான திரைக்கதை தொடர்ச்சியாக பின்னப்பட்டுள்ளது.
ஒரு தரமான கவிதை திரைப்படப் பாடலாக வடிவெடுக்கும் பொழுது அது வெகுஜனத்தை எளிதில் சென்றடைகிறது.
“மல்லி பூ வச்சி வச்சி வாடுது, அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுது, மச்சான் எப்போ வர போற”.
கவிஞர் தாமரை எழுதிய இந்த பாடலின் சரணத்தில் உள்ள வரிகள் கவிதைக்கு நிகரான அனுபவத்திற்கு அழைத்து செல்கிறது.
துவக்கத்தில் மிக மென்மையாக துவங்கும் பாடல் படிப்படியாக கொண்டாட்ட நிலைக்கு வேகமெடுக்கிறது.
ஏ. ஆர். ரகுமான் இந்த பாடலை மென்மையான சோகமும், அதிரடியான கொண்டாட்டமும் கலந்த கலவையாக அமைத்து ரசிக்க வைத்துள்ளார்.
பாடல் காட்சியமைப்பு கட் செய்யாமல் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருப்பது மிக அருமை. பாடலின் இடையில் முத்து (சிம்பு) குத்தாட்டம் போடுவது வழக்கமான சிம்புவை நினைவுபடுத்தினாலும் கதையுடன் பொருந்தி வருகிறது. பாடலில் ஒரு பெரிய குறை தமிழ் உச்சரிப்பு சரியாக இல்லை.
சமீபத்தில் பூமணியின் வெக்கை நாவல் அசுரன் என்ற பெயரில் படமாக வெளிவந்தது. தற்போது ஐந்து நெருப்பு நாவல் வெந்து தணிந்தது காடாக வெளிவந்துள்ளது. தமிழ் சினிமா ஜெயகாந்தன் காலத்திற்கு பின் தற்போது தொடர்சியாக இலக்கிய ஆளுமைகளின் கீழ் உட்படுவது மிக ஆரோக்கியமான போக்கை காட்டுகிறது.
Lakshmana Samyஅன்புள்ள திவாகர்,
வன்மம் நிறைந்த விமர்சனங்கள் ஒரு பகுதி. இன்னொரு பகுதி அவசர அவசரமாக எதையாவது பார்த்து எதையாவது எழுதுவது. முந்திக்கொண்டு எழுதவேண்டும் என்னும் வெறி. பொறுமையில்லாமல் பார்ப்பதனால் எந்தப் படத்தைப் பார்த்தாலும் ’கொஞ்சம் ஸ்லோ’ ‘கத்திரி போட்டிருக்கலாம்’ என்றே எழுதுகிறார்கள். விளைவாக தமிழ் சினிமா ரசனையையே அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
’நானே வருவேன்’ படத்தைப் பற்றியும் அப்படி எழுதியிருந்தனர். ஒரு கச்சிதமான அழகான படம் அது. உளவியல் சார்ந்து கொஞ்சம் கவனித்திருந்தாலே அந்தப்படத்தை புரிந்துகொண்டிருக்கலாம். ’தனுஷ் இரட்டைவேடம்’ என்றதுமே ஒரே டெம்ப்ளேட்டில் படம் பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.
ஏன் இரட்டைவேடம்? அது வெறுமே ஸ்டார் படம் என்பதனால் அல்ல. அவர்கள் சகோதரர்கள் என்பதனால். ஒருவருக்குள் இருப்பது இன்னொருவருக்குள்ளும் இருக்கிறது என்பதுதான் படம். சாந்தமான கதாபாத்திரத்தின் ஏதோ ஓர் ஆழம்தான் அந்த சகோதரன்.
இந்த பொன்னியின் செல்வன் பேரலையில்கூட குறிப்பிடத்தக்க அளவு திரையரங்குகளில் வெந்து தணிந்தது காடு நீடிக்கிறது. நாம் சாமானிய ரசிகர்களை நம்பலாம், அவர்கள் கைவிடவே மாட்டார்கள் என்பதையே வெந்து தணிந்தது காடு எனக்குக் கற்பித்தது. அந்த வெற்றி அளித்த நம்பிக்கை ஒரு பரிசு. (பணமும்தான்)
ஜெ
இசைரசனை வகுப்பு – கடிதம்
நீங்கள் நலம் என நம்புகிறேன்.
கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு நடநத பீத்தோவன் இசை ரசனை முகாமிற்கு பின்பு உற்சாகமாக உணர்கிறேன். உள்ளம் இசையை முணுமுணுத்துக்கொண்டே, ததும்பிக்கொண்டே இருக்கிறது. வெளி உலகில் என்ன நடந்தாலும் எனக்கான அந்தரங்க உலகத்தில் இசையில் திளைத்துக்கொண்டிருக்கும் அனுபவம் புதுமையாக இருக்கிறது. இசை இதற்கு முன்பும் என்னை ஆட்கொண்டது உண்டு. ஆனால் மூன்று நாட்கள் பீத்தோவனின் சிம்பொனி இசை கேட்பதற்காகவே கூடி, அதன் வரலாற்று பின்புலத்தை, காலகட்டங்களை, இசை உருமாறி வந்த நுணுக்கங்களை, வெவ்வேறு ஒளி அடையாளத்தை, வாத்தியங்களின் வித்தியாசத்தை, அர்த்த சாத்தியக்கூறுகளை அஜிதன் கூறிய பின்பு, பீத்தோவன் இசைக்குள் மூழ்கிப்போனேன். அறிய பொக்கிஷம் ஒன்று கிடைத்தது போலவும், அதை என்னிடம் இருந்து இனி ஒரு போதும் யாரும் பிரிக்க முடியாதென்றும், எனக்கு கிடைத்தது போல என் நண்பர்களுக்கும் கிடைத்து, நாங்கள் அனைவரும் அந்த ஆனந்தத்தில் ஒன்றாக உள்ளோம் என்ற எண்ணம் சிலிர்க்க வைக்கிறது. உண்மையாகவே இத்தனை ஆனந்தமானதா இசை என்பது? எனக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.
சில நாட்களாக நீடித்து வந்திருந்த ஜலதோஷம், வெள்ளி மாலை முதல் காய்ச்சலாக ஆனது. காய்ச்சலில் ஏற்படும் குளிர் தரும் நடுக்கமும், இசையின் பரவசமும் கலந்து புதுவித அனுபவத்தை அளித்தது. அன்றைய நாளின் கடைசி பகுதியான ஆறாவது சிம்பொனியை நான் ஷால்வையை தலையில் சுற்றிக்கொண்டு கேட்டு முடித்து, உறங்கும் போது, இசையும் கனவினுள் ஊடு பாவாக அலைந்து கொண்டிருப்பதை எண்ணி மகிழ்ந்தேன்.
சனி அன்று எழுந்த போதே தலைவலியும், காய்ச்சலும் கூடியிருந்தது, சால்வையை மீண்டும் சுற்றி கொண்டு அமர்ந்து விட்டேன். மூன்றாவது சிம்பொனி இரோய்க்கா அல்லது ஹீரோயிக் சிம்பொனி. அதில் உள்ள பியூனெரல் மார்ச் பகுதி வீரனின் மறைவு, மக்களின் துக்கம், என மனதை உருக்கக்கூடியதாக இருந்தது. அதன் பின் வந்த உற்சாகமான பகுதிகளில் பறவைகளும், இயற்கையும் அம்மக்களை ஆற்றுப்படுத்தியது வெடித்துக்கொண்டிருந்த தலைவலிக்கு இதமாக இருந்தது. ஆனாலும் இன்னர் டர்மொய்ல் கூடியிருந்தது. மதிய இடைவேளையில் மனிதனை ஆற்றுப்படுத்தும் இயற்கையின் இசையை வருடியபடியே தூங்கச்சென்றேன். காய்ச்சலுக்கே உரிய கொடுங் கனவு. நினைவில் இருப்பது இது தான், ஏதோ ஓர் அறையில் ஒரு பாதிரியார் தலைகீழாக விழுந்து கிடக்கிறார், அவரது வாய்க்கு அடியில் ரத்தம் தேங்கி இருந்தது. என் மொத்த ஆற்றலையும் கொண்டு Father என அலறுகிறேன். எங்கள் இருவருக்கும் உள்ள இடைவெளியில் சிம்பொனியில் கேட்ட குருவியின் இசை பறந்து சென்றது. நான் அந்த ஓசையுடன் சென்று மீண்டும் வந்து அவரை பார்க்கையில் அவர் அப்படி உறங்கி கொண்டிருந்தார் என்று உணர்ந்தேன், ரத்தம் கழுத்தில் கட்டும் ஸ்கார்ப் ஆக உருமாறியிருந்தது. நான் முழித்துக்கொண்டேன். கனவுகளிலும் உடன் நிற்கும் துணையாக, இனிமையாகும் மாயமாக இசையை உணர்ந்தேன்.
சனி மாலை ஏழாம் சிம்பொனியை தவறவிட்ட வருத்தம் இருந்தாலும், அந்த பறவையின் இசையை மீட்டிக்கொண்டே இருந்தேன். இரவு, உணவு அளிக்கும் அம்மா கஞ்சி வைத்து தந்தார்கள், ஆவி பிடிக்க வெந்நீரும், அதில் மஞ்சளும் கற்பூர துளசி இலையும் போட்டு கொடுத்து, பக்கத்திலே அமர்ந்து கவனித்தார்கள். இயற்கையின் கருணை, இவர்கள் வடிவில் என்னை நலமடைய செய்தாக உணர்ந்தேன். அப்பாவின் கதகதப்பும் என்னை ஆற்று படுத்தி அடுத்த நாள் ஒன்பதாவது சிம்பொனி கேட்பதற்கு முழுமையாக தயார் ஆனேன்.
ஞாயிறு காலை குஷியாக தயார் ஆனேன். ஒன்பதாவது சிம்பொனி எங்கள் அனைவரையும் ஆட்கொண்டது. இசையில் இறையை கண்டுகொண்ட பரவசம். நாங்கள் பார்த்த காணொளி, பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டதன் பொருட்டு ஒருங்கமைக்கப்பட்ட கொண்டாட்ட நிகழ்ச்சி. அந்த ஒற்றுமையின், விடுதலையின், தூய ஆனந்தத்தின், அனைவரும் கேளிர் என்ற மனநிலை ஒன்பதாவது சிம்பொனிக்கு கூடுதல் அர்த்தமும் உணர்ச்சியும் சேர்ப்பதாக இருந்தது. முடிந்து வெளிவந்த பொது, எங்கள் அனைவரின் முகங்களிலும் joy குடியேறியிருந்தது. மனத்திலும், உதடுகளிலும், முணுமுணுத்துக்கொண்டே இருந்தோம்.
பிறகு நண்பர்கள் சேர்ந்து மடம் சென்று வந்தோம், ஓடையின் ஓசையை கேட்டு சில நேரம் அமர்ந்திருந்து கிளம்பினோம். வரும் வழியில் ஜெயண்ட் மலபார் ஸ்குரிலை பார்த்தோம். வழி முழுக்க நாங்கள் சுவாசிக்கும் காற்றாக அதே கோர்வை ஊடுருவிக்கொண்டே இருந்தது. இரவு 11.50க்கு தான் ரயில் எனக்கு. 10.30 மணிக்கு நண்பர்களை தழுவி விடை பெற்று, ப்ளெட்போர்மில் இசையுடன் கை கோர்த்து அமர்ந்திருந்தேன்.
12 மணிக்கு ரயில் ஏறி, கண் மூடியதிலிருந்து, என் கனவுக்குள் வண்ணங்கள் நிரம்பியிருந்தது. தூரத்தில் தெரிந்த மயில் மேக்ரோ ஜூம் லென்ஸில் பார்ப்பது போல், மிக அருகில் காண முடிந்தது. அதன் பீலியின் பல வண்ணங்கள் தத்ரூபமாக தெரிந்தது. பார்க்க பார்க்கவே அது பல நூறாக பெருகி, ஒரு மாபெரும் பூவாக மாறியது. பின்பு அந்த பூ, பல பூக்களாக சிதறி, ஒவ்வொன்றும் ஜூம் செய்யப்பட்டு, அதன் இதழ்கள், மகரந்தம் அருகில் தெரிந்தது. என் உள்ளம் அத்தனை அழகை, அத்தனை வண்ணங்களை கண்டு பூரித்து போய் இருந்தது. ஒரு போதும் என் கனவில் இத்தனை துல்லியமான இயற்கை காட்சிகள் வந்ததில்லை என்று சொல்லும் மனம். ode to joy யின் இசையின் தாலாட்டாலும். மீண்டும் காட்சிகள், புள் வெளிகள், வயல் வரப்புகள் வெவ்வேறு பச்சைகளாக, நியான் பச்சையாக கூட. அதிலிருந்து, ஒரு மலர் இளஞ்சிவப்பு நிறத்தில் தோன்றி, சிவப்பும் ஊதாவும் கலந்ததாக வளர்ந்து வானை சென்று தொட்டது. அங்கிருந்து வாணவேடிக்கைகள் போல் மலர்கள் பொங்கி வழிந்தன. அதிகாலை மூன்று மணிக்கு முழித்துக்கொண்டேன், அத்தனை புத்துணர்ச்சியுடன் பிரகாசத்துடன் இருப்பதாக உணர்ந்தேன். என்ன நடந்ததென்று தெரியவில்லை. அது ஒரு தரிசனம் தான். எனக்குள் எங்கோயிருந்த ஊற்று திறந்ததுபோல். அந்த சின்ன திறப்பிலிருந்து ஒளி என்னை ஆட்கொண்டது போல். மனம் ஆனந்தத்தில் பொங்கி வழிகிறது. இசையின் கருணைக்கு முன்பு தலை வணங்குகிறேன்.
அஜிதனுக்கு நன்றி, அஜிதனை விட சிறப்பாக இசையை இன்னொருவர் அறிமுகப்படுத்த முடியாதென்றே தோன்றுகிறது. அஜிதன் ஆழ்ந்து சென்று தொட்ட உச்சங்களை பிறர்க்கு சேர்க்கவேண்டும் என்ற தீவிர விழைவும் ஆசையும், அஜிதனும் சைதன்யாவும் எடுத்துக்கொண்ட மெனக்கெடல்கள் மூலம் தெரிந்தது. ப்ரோச்சுரில் துவங்கி, பிபிடி, காணொளிகள் அனைத்தும் தரமாக இருந்தது. இந்த இசையை ஏன் பிறர்க்கும் அறிமுகப்படுத்த எண்ணுகிறான் என்றும் உணர முடிந்தது. அஜிதன் மேலும் வெவ்வேறு இசை ரசனை முகாம்கள் நடத்த வெண்டும் என்று விரும்புகிறேன்.
நன்றி,
நிக்கிதா
வெண்முரசு, கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
வெண்முரசு அனைத்து நூல்களும் ஒரே லைப்ரரியாக கிடைக்க வாய்ப்புண்டா? இப்போது தனித்தனியாகத் தேடித்தேடி வாங்கவேண்டியிருக்கிறது. பலநூல்கள் கிடைக்கவில்லை. நீண்டநாட்கள் தேடி முதற்கனல் இப்போதுதான் வாங்கினேன். சீரான ஒரே தொகுப்பாக எல்லா நூல்களும் வெளிவராமல் போனால் நூல்கள் கிடைக்காமலாக வாய்ப்புள்ளது.
ஆனந்தி சங்கர்
அன்புள்ள ஆனந்தி,
இன்னும் பத்து அல்லது இருபதாண்டுகள் அச்சுநூல் இருக்கும். அதுவரைக்கும் இவற்றை புத்தகவடிவில் கொண்டுவரலாமென்பது எண்ணம். அதற்காகவே விஷ்ணுபுரம் பதிப்பகம் தொடங்கியிருக்கிறோம். மின்னூலாக எல்லாமே இப்போதும் கிடைக்கின்றன.
கிழக்கு வெளியிட்ட நூல்கள் சில உள்ளன. விஷ்ணுபுரம் பதிப்பகம் இப்போதுதான் வெண்முரசின் கடைசிநூலை வெளியிட்டு முடித்துள்ளது. இனி என்னென்ன கிடைக்கவில்லையோ அவற்றை அச்சிட்டுச் சேர்த்து எல்லாவற்றையும் ஒரே வரிசையாகச் சந்தைக்குக் கொண்டுவர முயல்வோம். அனேகமாக சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.
ஜெ
***
அன்புள்ள ஜெ,
வெண்முரசு நூல்களை முழுமையாக நான் இன்னும் வாங்கவில்லை 12 நாவல்கள் கைவசம் உள்ளன. அவற்றை நூலகத்தில் பார்ப்பது ஓர் அழகு. அத்துடன் கைபோன போக்கில் எடுத்து ஏதேனும் ஒரு பக்கத்தை வாசிப்பதும் அப்படியே மூழ்கிப்போய் அமர்ந்திருப்பதும் மகத்தான அனுபவம்.
ஆனால் இன்னொன்றும் சொல்லவேண்டும். எப்போதெல்லாம் மனம் கலங்கியிருக்கிறேனோ அல்லது சோர்வாக இருக்கிறேனோ அப்போதெல்லாம் வெண்முரசை எடுத்து படிப்பேன். கைபோன ஒரு பக்கத்தைப்பிரித்து நாலைந்து பக்கம் செல்வதற்குள் எனக்காகவே சொல்லப்பட்டதுபோல கனகச்சிதமான ஒரு வரியில் பதில் இருக்கும். ஐம்பது முறையாவது இது நடந்துள்ளது.
செல்வி முருகேஷ்
***
அன்புள்ள செல்வி
கிளாஸிக் என அடையாளப்படுத்தப்படும் நூலின் முதன்மை இயல்பே அதுதான். அதன் எல்லா பக்கங்களிலும் எல்லாமே இருக்கும்
ஜெ
October 1, 2022
தர்ஷன் தர்மராஜ்- அஞ்சலி
இலங்கையின் பிரபல தமிழ் நடிகரும், ஓவியரும், நண்பருமான தர்ஷன் தர்மராஜ் திடீர் மாரடைப்பினால் தனது 41 ஆவது வயதில் காலமாகியிருக்கும் தகவலோடு மிகுந்த கவலையைத் தோற்றுவிக்கும்விதமாக இன்றைய காலை விடிந்திருக்கிறது. பல சர்வதேச திரைப்பட விருதுகளை வென்று, இலங்கைத் திரைப்படத் துறையில் மிக முக்கியமான தடத்தினைப் பதித்திருக்கும் தர்ஷனின் கலைத்துறைப் பயணம் பலருக்கும் மிகவும் முன்மாதிரியாக அமையக் கூடியது.
நீங்கள் முன்னுரை எழுதிய எனது ‘ஆழங்களினூடு…’ நூலில் அவருடனான விரிவான நேர்காணல் இடம்பெற்றிருந்தது. அந்த நேர்காணலை இத்துடன் பகிர்ந்து கொள்கிறேன். இதை விடவும் சிறந்த அஞ்சலிப் பதிவொன்றை என்னால் இன்று எழுத முடியுமென்று நினைக்கவில்லை. அன்னாரது ஆத்மா சாந்தியடையட்டும்.
என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
Font – Unicode
சர்வதேச திரைவானில் பிரகாசிக்கும்இலங்கை நட்சத்திரம்
எம்.ரிஷான் ஷெரீப்
சர்வதேச திரைப்பட விழாக்களில் இலங்கையிலிருந்து வெளியாகும் சிங்கள மொழித் திரைப்படங்களுக்கென தனித்துவமான ஒரு இடம் உருவாகியிருக்கிறது. எந்தவொரு நாட்டுத் திரைப்படத்தினதும் சாயலில்லாது, திரைப்பட இயக்குனர்கள் தாம் வாழும் பிராந்தியத்தினையும், தம்மைச் சுற்றி வாழும் மனிதர்களது வாழ்வியலையும் அசலான தோற்றத்தோடு படம் பிடித்துக் காட்டும்போது, உலக சினிமா ரசிகர்கள் அவற்றைக் காண பெரிதும் ஆர்வம் கொள்கிறார்கள். சம்பந்தப்பட்ட திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள திரைக்கதையிலும், ஒளிப்பதிவிலும், தொழில்நுட்பத்திலும், இசையிலும், நடிகர்களது நடிப்பிலும் பூரணத்துவத்தைக் காணும்போது அத் திரைப்படமானது சர்வதேச விருதுகளுக்காக முன்வைக்கப்படுகின்றன. விருதுகளையும் வென்று விடுகின்றன.
இன்றைய காலகட்டத்தில் உலக சினிமா ரசிகர்களிடத்தில், இலங்கை சினிமாவைக் குறித்து உரையாடும்போது அனைவர் மனதிலும் நினைவுக்கு வரும் ஒரு முகமும், உருவமும் இருக்கிறது. அந்த நடிகரைப் பற்றி, அவரது சிறப்பான நடிப்பைப் பற்றி தவறாது குறிப்பிடுகிறார்கள். இலங்கையிலிருந்து வெளியாகும் அநேகமான சிங்கள மொழித் திரைப்படங்களிலும் பிரதான கதாபாத்திரத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் அந்த முகம் ஒரு தமிழ் முகம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
ஒரு திரையரங்கோ, நாடகப் பயிலரங்கோ, நடிப்பின் வாசனையோ சிறிதுமற்ற மலையகத் தேயிலைத் தோட்டக் கிராமமொன்றில் பிறந்து வளர்ந்த ஒரு தமிழ்ச் சிறுவன், பிழைப்பு தேடி கொழும்புக்கு வந்து, சிங்கள மொழியறியாமல் தடுமாறி, தெருவில் படுத்துறங்கி, சுமை தூக்கும் கூலித் தொழிலாளியாக இருந்து போராடி இன்று சர்வதேசமே அறிந்த ஒரு நடிகனாக தலைநிமிர்ந்து நிற்பது அவரது தன்னம்பிக்கையையும், ‘திறமையிருந்தால் எவரும் சாதிக்கலாம்’ என்பதையுமே சமூகத்துக்கு பலமாக எடுத்துச் சொல்கிறது.
சிங்கள மொழிக் கலைஞர்களே அதிகமாக பணிபுரிந்து வந்த சிங்கள மொழித் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நாடகங்களிலும் தமிழ்மொழிக் கலைஞர்களுக்கான கதாபாத்திரங்களைக் கூட சிங்கள மொழிக் கலைஞர்களே ஏற்று நடித்த காலமொன்று இருந்தது. அவை கூட உதிரிக் கதாபாத்திரங்களாக, திரைப்படத்துக்கோ, நாடகத்துக்கோ முக்கியமற்ற தோட்டக்காரனாகவோ, வீட்டு வேலைக்காரியாகவோதான் இருந்தன. அந்த நிலைமை மாறி, ஒரு தமிழ் நடிகனுக்காகவே பிரதான கதாபாத்திரம் அமைத்து திரைக்கதை எழுதி, திரைப்படம் எடுத்து சர்வதேச விழாக்களுக்கு அனுப்பும் நிலைமைதான் இன்று காணப்படுகிறது. அந்த நிலைமையை தனது நடிப்புத் திறமையின் மூலம் இன்றைய சிங்களத் திரையுலகில் உருவாக்கியிருப்பவர் நடிகர் தர்ஷன் தர்மராஜ்.
இலங்கையில் திரைப்பட விருது விழாக்களில் அனுபவமும், திறமையும் வாய்ந்த சிங்கள நடிகர்களைப் புறந்தள்ளி, ‘சிறந்த நடிகருக்கான விருதை’ அடுத்தடுத்த வருடங்களில் தொடர்ந்து வென்றுள்ள ஒரே தமிழ் நடிகர் இவர்தான். திரைத்துறையில் நேர்மையான விருதுகளை வென்றெடுக்க செல்வாக்கோ, பணமோ, பாரம்பரியப் புகழோ, இனமோ, சாதியோ முக்கியமானதல்ல, திறமையே பிரதானமானது என்பதையே இது நிரூபிக்கிறது.
உலக சினிமாக்களைப் பார்க்கும் திரைப்பட ரசிகர்கள் பலரும் திரையினூடு இன்று தர்ஷன் எனும் நடிகரைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். உண்மையிலேயே தர்ஷன் என்பவர் யார்? பல வித கஷ்டங்களையும் தாங்கி, போராட்டங்களையும் தாக்குதல்களையும் எதிர்கொண்டு இன்று இலங்கை திரைத்துறையினை வென்று நிற்கும் இந்த நடிகனைக் குறித்து அவருடனான கீழ் வரும் நேர்காணல் பல விடயங்களைத் தெளிவுபடுத்தும். தனது நடிப்புத் திறமை மூலம் திரையில் சாதிக்கக் காத்துக் கொண்டிருக்கும் பலருக்கும் இந்த நேர்காணல் நிச்சயமாக தன்னம்பிக்கையையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தும்.
ஒரு நடிகனாக ஆக வேண்டுமென்ற ஆசை தர்ஷனிடம் சிறுபராயத்திலும் இருந்ததா ?
சிறுபராயத்திலிருந்தே அந்த ஆசை உள்ளுக்குள் இருந்து வந்திருக்கிறது. சிறு வயதில் நான் கண்ணாடி முன்பிருந்து அகலாமல் வித விதமான கதாபாத்திரங்களை நடித்துப் பார்த்த காலம் நினைவுக்கு வருகிறது. அக் காலகட்டத்தில் ஒரு தபாலக ஊழியர் எனது வீட்டில் தங்கியிருந்தார். நான் செய்வதையெல்லாம் பார்த்து ‘நீ எப்போதாவது ஒரு நாள் பெரிய நடிகனாக ஆகப் போகிறாய்’ என என்னிடம் கிண்டலாகச் சொல்வார். அவர் என்னிடம் கிண்டலாகக் கூறிய போதும், எனது பெற்றோரிடம் ‘மகனுக்கு நல்ல நடிப்புத் திறமை இருக்கிறது. ஊக்குவித்தால் முன்னுக்கு வந்துவிடுவான்’ எனக் கூறியிருந்தார்.
அன்று அந்த வார்த்தைகள் தந்த ஊக்கம் நெஞ்சில் நிறைந்து ஒரு நடிகனாகவே என்னை எண்ணிக் கொண்டு வாழ்ந்த காலங்கள் இப்போது நினைவுக்கு வருகின்றன. இறக்குவானை அரசாங்கப் பாடசாலையான சென்ட்.ஜோன் தமிழ் வித்தியாலத்திலேயே நான் கல்வி கற்றேன். பாடசாலைக் காலங்களில் மேடை நாடகங்களில் நடித்திருக்கிறேன். அவை அக் காலத்தில் மிகவும் பிரபலமாக விளங்கின. எனவே நானும் ஊரில் ஒரு பிரபலமாகத் திகழ்ந்தேன்.
சிறு வயதிலிருந்தே தொலைக்காட்சியில் போடப்படும் தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களை ஒரு படம் விடாமல் பார்ப்பேன். சிவாஜி கணேசன், கமல்ஹாசன் ஆகிய நடிகர்கள் மீது பைத்தியமாக இருந்த காலகட்டம் அது. அவர்களது திரைப்படங்களைப் பார்க்கும்போது அவர்களைப் போல என்னாலும் நடிக்க முடியுமென உணர்ந்தேன். உசுப்பேற்றி விட நண்பர்களும் கூடவே இருந்தார்கள். நடிப்பைத் தவிர எனக்கு வேறெந்தத் தொழிலும் சரியாக வராது என்று அன்றே தோன்றியது. நான் ஒரு நல்ல ஓவியன். என்றபோதும் நடிப்பின் மீதே பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தேன்.
திரைப்படங்கள் மீதும் , நடிப்பின் மீதும் பெருமளவு ஈடுபாடு காட்டுவதை இலங்கையிலுள்ள அநேகமான குடும்பத்தினர்கள் ஏற்றுக் கொள்வதில்லை . தம் பிள்ளைகளுக்கு அவற்றின் மீது ஈர்ப்பு உண்டு என்பதை அறிந்தாலே கண்டிக்க முற்படுவார்கள் . உங்களுக்கு அவ்வாறு நேரவில்லை எனில் , உங்கள் குடும்பத்தினரும் கலையோடு சம்பந்தப்பட்டவர்களா ?
எனது தந்தை ஒரு சிறந்த ஓவியக் கலைஞர். அக் காலத்தில் ஊரிலும், அயல்கிராமங்களிலும் திருமண மேடைகளை அமைப்பதில் திறமைகளைக் காட்டியவர். நானும் சிறுவயதிலிருந்தே அவற்றுக்கு உதவியிருக்கிறேன். அவர் பயிற்சியளித்தே நானும் ஓவியங்களை வரையக் கற்றுக் கொண்டேன். இன்று சிறந்த ஓவியனாக நான் அறியப்பட்டிருப்பதற்கு அவரே காரணம். திருமண மேடைகளை அமைத்துக் கொடுப்பதோடு மேலதிகமாக இறக்குவானை கோயில் கலாசார நிகழ்ச்சிகளையும் எனது தந்தை நடத்திக் கொடுத்தார். அக் காலகட்டத்தில் நாம் மிகவும் வறிய குடும்பத்தவர்களாக இருந்தபோதும் கலை சம்பந்தப்பட்ட விடயங்களில் செல்வந்தர்களாகவே இருந்தோம்.
அப்பாவும், அம்மாவும் எம்மை வளர்த்தெடுக்க மிகவும் பாடுபட்டார்கள். அக் காலத்தில் என்னிடம் ஒரே ஒரு மேற்சட்டை மாத்திரமே இருந்தது. கழுவித் தோய்த்தெடுத்துக் காயவைத்து எங்கு போனாலும் அதையே அணிந்து சென்றேன். அப்பா காலமானதற்குப் பிறகு நிலைமை இன்னும் மோசமானது. எம்மை வளர்த்தெடுக்க அம்மா மிகவும் கஷ்டப்பட்டார். பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு தயாரித்து விற்றார். அந்தக் கஷ்டமான காலகட்டத்தை என்னால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது.
இறக்குவானை எனும் மலையகப் பிரதேசத்திலிருந்து இளம் வயதிலேயே கொழும்பு நகரத்துக்கு ஏன் வந்தீர்கள் ? ஒரு நடிகனாக ஆக வேண்டும் என்றேதான் தலைநகரத்துக்கு வந்தீர்களா ?
நடிகனாக ஆகும் ஆசை உள்ளுக்குள் இருந்தபோதிலும் அதை விடவும் உயிர் வாழும் ஆசைதான் அக் காலத்தில் மிகைத்திருந்தது. எனது தந்தை மரணித்ததும் நாங்கள் இருந்ததை விடவும் கஷ்டமான நிலைமைக்குத் தள்ளப்பட்டோம். குடும்பத்தில் மூத்தவன் என்பதால் நிறைய பொறுப்புக்கள் என் மீது வீழ்ந்தன. தங்கையை வலிப்பு நோய் தாக்கி மருத்துவம் செய்து கொண்டிருந்தோம். அக்காலத்தில் அதற்கான மருந்துச் செலவுக்கு மாத்திரம் மாதாந்தம் மூவாயிரத்து ஐநூறு ரூபாய் தேவையாக இருந்தது. அவளைக் குணப்படுத்துவதற்காகவாவது கொழும்புக்குச் சென்று ஏதாவது தொழிலொன்றைத் தேடிக் கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தேன். அதற்காகத்தான் கொழும்புக்கு வந்தேன். அந்தப் பயணம் மிகுந்த இடர் நிறைந்த பயணமாக அமைந்தது.
அந்தக் காலகட்டத்தில் இலங்கையில் நிறையப் பிரச்சினைகள் இருந்தன. சிங்கள மொழி தெரியாத என்னைப் போன்ற தமிழ் இளைஞனுடைய ஜீவிதம் மிகுந்த அபாயத்துக்குள்ளாகும் சாத்தியம் ஒவ்வொரு கணத்திலும் இருந்தது. நாட்டில் எங்கு பார்த்தாலும் குண்டுகள் வெடித்துக் கொண்டிருந்தன. முக்கியமாக கொழும்பில் அந் நிலைமை பரவலாக இருந்தது. அன்று இறக்குவானையிலிருந்து கொழும்புக்கு வரும் வழியில் பன்னிரண்டு இராணுவக் காவலரண்களைக் கடந்து வர வேண்டும். அந்த ஒவ்வொரு காவலரணிலும் மிகவும் தீவிரமாகப் பரிசோதிக்கப்பட்டேன். காரணம் நான் ஒரு தமிழன்.
அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது. நாட்டில் அவ்வாறான நிலைமைதான் அன்று காணப்பட்டது. எவ்வாறோ அத் தடைகளைத் தாண்டி கொழும்பு நகரத்துக்கு வந்து சேர்ந்த பிறகு பார்த்தால் எனது பணப்பை காணாமல் போயிருந்தது. தொலைத்து விட்டோமே என்று கவலைப்படும் அளவுக்கு அந்தப் பணப்பையில் பணமிருக்கவில்லை. எனினும் அன்று கொழும்பில் வசிக்கத் தேவையான முக்கியமான ஆவணமும் அதனோடு தொலைந்து போயிருந்தது. அது எனது ஆள் அடையாள அட்டை. அது இல்லாததால் எக் கணமும் காவல்துறையால் கைது செய்யப்படக் கூடிய நிலைமையில் நான் இருந்தேன்.
நான் எந்தளவு கையறு நிலைக்கு ஆளானேன்றால் மொழி தெரியாத ஊரில் என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. ஆள் அடையாள அட்டையைத் தொலைத்து விட்டேனென போலிஸில் முறைப்பாடு செய்யப் போனால் எனக்கு மீட்சியில்லை எனத் தோன்றியது. அக் காலத்தில் நிலைமை மோசமாக இருந்ததால் அடையாள அட்டையில்லாமல் எவரிடமும் வேலை கேட்டுப் போகவும் முடியாது. அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு யாரும் தொழிலொன்றைக் கொடுக்கவும் மாட்டார்கள்.
நான் கொழும்பு மாநகரத்தில் தனித்துப் போனேன். கதியற்று நின்றேன். எனினும் என்னிடம் எப்படியாவது வாழ்ந்து விட வேண்டும் என்ற ஆசையும், நம்பிக்கையும், உத்வேகமும் இருந்தது. தங்கைக்கு மருத்துவம் பார்க்கத் தேவையான பணத்தைத் தேட வேண்டும். அடையாள அட்டையில்லாது செய்ய முடிந்த ஒரேயொரு தொழில் கொழும்பில் இருந்தது. யாரிடமும் அடிமைப்படவும் தேவையில்லை. மிகவும் சுதந்திரமான தொழில் அது. நான் அதைச் செய்தேன்.
மூடை சுமக்கும் கூலித் தொழிலாளி என்பவன் வெறுமனே ஒரு சுமை தூக்கி மாத்திரமல்ல, வாழ்க்கையையே சுமப்பவன் என்றே இன்று எனக்குத் தோன்றுகிறது. அன்றைய அந்த அனுபவத்தைக் கொண்டு நான் வாழ்க்கையைப் பற்றிப் பிடித்துக் கொண்டேன். அதுதான் எனது நடிப்பின் பள்ளிக்கூடம். கோபமும், சந்தோஷமும், நெருக்குதல்களும், இழப்புக்களும் மிக்க மனித உடல்களின் நிஜ வாடையை அங்கு நான் அறிந்தேன். நெருக்கடி மிக்க வாழ்க்கை அங்குமிங்குமாக அசைவதையும், அந்த வாழ்க்கை எம்மை விடவும் அதிக பாரத்தைத் தனது தலையில் சுமந்துகொண்டு செல்வதையும் நான் அவதானித்தேன்.
நாள் முழுவதும் எவ்வளவுதான் சுமை தூக்கிச் சோர்ந்திருந்தாலும், மாலையாகி தெருவோரத்தில் படுத்துக் கிடக்கும்போது எம்மை விடவும் நிம்மதியாக இருப்பவர்கள் வேறெவருமில்லை என்பதை நான் உணர்ந்தேன். ஆறு ரூபாய்க்கு காகித அட்டைப் பெட்டி வாங்கி தெருவோரத்தில் தரையில் விரித்துப் படுத்துக் கொள்வேன். ஒரு சிறிய பிஸ்கெட் பாக்கெட் வாங்கி ஒரு நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு பசியாறி, தங்கையின் மருத்துவத்துக்காக பணத்தினை சேமித்தேன்.
அன்று வாழ்க்கை எனக்குக் கற்றுத் தந்த பாடம் இன்றும் எனக்கு முக்கியமானதாக இருக்கிறது. வாழ்க்கையை வாழத் தேவையான அதிகபட்ச ஊக்கம் எனக்கு அதன் மூலம் இன்றும் கிடைக்கிறது. நான் இறந்த காலத்தை நேசிக்கும், அதைக் குறித்து பெருமைப்படும் ஒருவன். காரணம் இன்றைய நான், அவை அனைத்தும் ஒன்று சேர்ந்ததன் தொகுப்புதான்.
பரம்பரையாக வந்தவர்களாகவோ , நடிப்பு பயிற்சிக் கல்லூரிகளில் பயிற்சி பெற்று வந்தவர்களாகவோ , விளம்பரத் துறையிலிருந்து வந்தவர்களாகவோதான் அநேகமான சிங்கள நடிகர்கள் இருக்கிறார்கள் . அந்த எல்லைகளைக் கடந்து , அவர்களுக்கு மத்தியில் , சுமை தூக்கி ஜீவிக்கும் ஒரு கூலித் தொழிலாளி , ஒரு நடிகனாக ஆகியது எப்போது ?
கொழும்பு நகரத்தில் தினந்தோறும் வாழ்க்கை ஓரோர் வடிவங்களில் மிதந்து சென்று கொண்டிருக்கும்போது ஒரு நாள், தெருவோரக் கடையொன்றில் காட்சிக்கு வைத்திருந்த தொலைக்காட்சியொன்றில் ஒரு விளம்பரத்தை தற்செயலாக காணக் கிடைத்தது. தொலைக்காட்சி நாடகமொன்றில் நடிக்க புதுமுகங்கள் தேவை என்ற விளம்பரம் அது. பிரபல இயக்குனர் Sydney Chandrasekara வின் நாடகம் அது. நாடகத்தின் பெயர் A9.
நடிப்பின் மீதுள்ள ஆசையில் விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த முகவரியைக் குறித்துக் கொண்டு, அந்த நாடகத்தின் நேர்முகத் தேர்வுக்காகச் சென்றேன். மூடை சுமந்துவிட்டு அழுக்கான உடையுடன், காலில் போட்டிருந்த இறப்பர் செருப்போடுதான் நேர்முகத் தேர்வுக்குப் போயிருந்தேன். என்னுடன் சேர்த்து நூற்றியெட்டுப் பேர் நேர்முகத் தேர்வுக்காக வந்திருந்தார்கள். அன்று, கூட வந்திருந்த நூற்றியெட்டுப் பேரிலிருந்தும் நான் மாத்திரமே தேர்வு செய்யப்பட்டேன். அந்த நேர்காணலின் போது, நான் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணத்தை பின்னொரு நாளில் இயக்குனர் சிட்னி சந்திரசேகரவே என்னிடம் கூறினார்.
வந்திருந்த அனைவரிடமும் ‘இருபது அடி உயரமான இடத்திலிருந்து குதிக்க முடியுமா?’ என்ற ஒரே கேள்வியைத்தான் கேட்டாராம். ஒவ்வொருவரும் ‘கீழே மெத்தை வைப்பீர்களா?’, ‘இருபது அடி உயரத்துக்கு எப்படி ஏறுவது?’, ‘காயப்பட்டால் அருகிலேயே ஆம்ப்யூலன்ஸ் வைத்திருப்பீர்களா?’ போன்ற கேள்விகளை பதிலுக்குக் கேட்டார்களாம். நான் மாத்திரம்தான் ‘இடத்தைக் காட்டுங்கள், குதிக்கிறேன்’ என்றேனாம். அந்த தைரியத்துக்காகவே என்னைத் தெரிவு செய்ததாகச் சொன்னார். அந்தக் காலகட்டத்தில் எனது தோற்றம் கூட மிகவும் மோசமாக இருந்தது. தாடி வளர்ந்து, ஒல்லியாக, அழகற்ற தோற்றத்திலிருந்தேன். எனினும் என்னை அன்று அவர் தேர்ந்தெடுத்தார். அவரது தொலைக்காட்சி தொடர் நாடகத்தில் நடிக்க வாய்ப்பளித்தார்.
அந்தக் காலத்தில் எனக்கு கொழும்பில் தங்கியிருக்க ஒரு பாதுகாப்பான இடம் இருக்கவில்லை. இஷான் எனும் சக நடிகனின் அழைப்பின் பேரில் அவரது வீட்டில் சென்று தங்கியிருந்தேன். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிந்து நேராகச் செல்வது அவரது வீட்டுக்குத்தான். அவரது அம்மா சமைத்து பரிமாறும் உணவுகளைக் கொண்டு எத்தனையோ நாட்கள் பசியாறியிருக்கிறேன். படப்பிடிப்புக் களத்தில் சாப்பிடவும் சோற்றுப் பார்சல்களை அவர் எனக்குக் கட்டித் தருவார். தனது மகனைப் போலவே என்னையும் கவனித்துக் கொண்டார்.
அந்த நாடகத்தின் படப்பிடிப்பு முடிந்து, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகக் காத்திருந்த காலகட்டத்தில் வேறு வாய்ப்புகள் எவையும் கிடைக்காத காரணத்தால் துணிக்கடையொன்றுக்கு வேலைக்குச் சென்றேன். பிறகு பத்திக் ஆடையலங்கார வடிவமைப்பாளராக வேலை செய்தேன். அங்கிருக்கும்போது நடிப்பு நேர்முகத் தேர்வுகளுக்குச் செல்ல நான் அழைக்கப்பட்டதால் அந்த வேலையையும் நான் இழக்க நேரிட்டது.
அந்த தொலைக்காட்சி நாடகம் உங்கள் வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிட்டது இல்லையா ? அக் காலத்தில் நாடு முழுவதும் பிரபலமாக இருந்த நாடகம் அது . அதன்பிறகு சிறந்த புதுமுக நடிகர் விருது உங்களுக்குக் கிடைத்தது . பின்னர் இலங்கையின் சிறந்த நடிகர் விருது பல தடவைகள் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது , இல்லையா ?
முதல் நாடகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகத் தொடங்கியதும் Prasanna Vithanage, Ashoka Handagama, Boodi Keerthisena, Jackson Anthony, Uberto Pasolini போன்ற சர்வதேச புகழ்பெற்ற சிறந்த இயக்குனர்களின் நாடகங்களிலும், திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்புக்கள் எனக்குக் கிடைத்தன. அவர்கள் எனக்குத் தந்த கதாபாத்திரங்களினூடாகவே இன்று சிறந்த நடிகனாக ஆகியிருக்கிறேன்.
‘மச்சான்’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ‘தர்ஷன் இந்தக் கதாபாத்திரம் உனக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய வாய்ப்பு. உனது நடிப்புப் பயணத்துக்கு இது மிகவும் பயனளிக்கும்’ என இயக்குனர் பிரசன்ன விதானகே கூறினார். ‘கதாபாத்திரத்தை நன்றாக உணர்ந்து நடிப்பை வெளிப்படுத்தினால் விருதுகளும் உனக்குக் கிடைக்கக் கூடும்’ என்றும் கூறி ஊக்கமளித்தார். எனவே திரைப்படத்தில் நடித்த அனைவருமே போட்டி போட்டுக் கொண்டு நடித்தோம்.
இலங்கையின் சிறந்த இயக்குனர்கள், சர்வதேச திரைப்பட இயக்குனர், சர்வதேச திரைப்பட ஒளிப்பதிவாளர்கள், சர்வதேசக் கலைஞர்கள் ஆகியோர் திரையுலகில் மிகுந்த அனுபவங்களைக் கொண்டவர்கள். இவர்களுடன் பணியாற்றும்போது நடிப்பு மாத்திரமல்ல, சினிமாவைக் குறித்து கற்றுக் கொள்ளக் கூட புதிதாக ஒரு கல்லூரிக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்ற பாடத்தை அந்த அனுபவங்கள் எனக்குக் கற்றுத் தந்தன.
சிறந்த நடிகருக்கான விருதுகள் என்பவை நடிப்புத் திறமைக்காக ஒரு நடிகருக்குக் கிடைக்கக் கூடிய உயரிய விருதுகள். எனது நடிப்பாற்றலுக்கு நான் பெற்றுக் கொண்ட மிகப் பெரிய வெற்றிகளாக எப்போதும் அவற்றைக் கருதுகிறேன்.
நடிப்புக்காக உங்கள் முதல் விருதினைப் பெற்றுக் கொண்ட போது அந்தத் தருணத்தை எவ்வாறு உணர்ந்தீர்கள் ?
திரைப்பட விழாவில் விருதுக்காக எனது பெயர் அறிவிக்கப்பட்டபோது ‘இன்று வாழ்க்கையில் ஒரு நிலைக்கு வந்துவிட்டேன் அல்லவா?’ என்று மனதில் தோன்றியது. சிறு வயதில் ஓடையில் குளிக்கும்போதும், பாடசாலைக்குச் செல்லும்போதும், வரும்போதும், விளையாடும்போதும் நான் எப்போதும் கேமராவின் முன்புதான் நின்று கொண்டிருக்கிறேன் என எண்ணிக் கொள்வேன். சிறு வயது முதல் கண்டு வந்த கனவு அன்று நனவானது. வருடக்கணக்காகத் தொடர்ந்த கனவொன்று அம் மேடை மீது நனவானது. அந்த விருது எனது தொடர்ச்சியான பயணத்துக்கு பெரும் பக்கபலமாக அமைந்தது.
2008 முதல் 2010 வரை சர்வதேச திரைப்பட விழாக்கள் அனைத்திலும் திரையிடப்பட்ட ஒரு திரைப்படம் ‘ மச்சான் ’. Venice, São Paulo, Kerala, Transilvania, Palm Beach, Durban, Brussels, Tren č ín, Sarasaviya போன்ற சர்வதேசமே கொண்டாடும் முக்கியமான திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்ற திரைப்படம் அது . இத்தாலியின் சிறந்த தயாரிப்பாளரும் , இயக்குனருமான Uberto Pasolini யின் அத் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு உங்களுக்கு எப்படிக் கிடைத்தது ?
நேர்முகத் தேர்வுக்குப் பிறகே எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. திரு.ராஜா கணேசன் மற்றும் சில நண்பர்கள், இப்படி ஒரு திரைப்படம் இலங்கையில் எடுக்கப்படப் போவதையும் அதற்கு நடிகர் தேர்வு நடைபெறுவதையும் பற்றிக் கூறி என்னிடம் அதில் கலந்து கொள்ளும்படி கூறினார்கள்.
நான் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டேன். நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக பயிற்சி வகுப்புக்களை நடத்தினார்கள். படிமுறை படிமுறையாக பல வகுப்புக்கள் நடத்தப்பட்டன. வகுப்புக்கள் அனைத்திலும் கலந்து கொண்டு விட்டு, இறுதி நேர்முகத் தேர்வுக்காக உள்ளே நுழையும்போதே ‘நீ ஏற்கெனவே தேர்வாகி விட்டாய்’ என அங்கிருந்த இயக்குனர் பெஸோலினி கூறினார். இனி அதற்கு மேல் வேறேதாவது இருக்கிறதா என்ன?
‘நீ சற்று பருமனாக இருக்கிறாய். கதாபாத்திரத்துக்காக உன்னால் ஒல்லியாக முடியுமா?’ எனக் கேட்டார். பிறகு எனது கதாபாத்திரத்தைக் குறித்து விவரித்தார். ‘வெளிநாட்டுக்குப் போன அனுபவம் ஏதாவது இருக்கிறதா?’ எனக் கேட்டார். அப்போது எனக்கு அந்த அனுபவம் இருக்கவில்லை. எனினும் நண்பர்களது அனுபவங்களைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன் என்று கூறினேன். ‘இந்தத் திரைப்படத்தின் கதை, இலங்கையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம். அதைப் பற்றி ஏதாவது தெரியுமா?’ எனக் கேட்டார். அதைக் குறித்தும் நான் அறிந்திருக்கவில்லை. உடனே அவர் அந்தக் கதையையும் என்னிடம் விவரித்தார்.
அந்தக் காலத்தில் நான் தங்கியிருந்த இடத்துடன் ஒப்பிடும்போது திரைப்படத்தில் எனக்குத் தரப்பட்ட சுரேஷின் கதாபாத்திரம் எனக்கு புதிதாக இருக்கவில்லை. காரணம், கிராமத்திலிருந்து கொழும்புக்கு வந்து பல கஷ்டங்களை அனுபவித்த நான் சேரிப்புற வாழ்க்கை எவ்வாறிருக்கும் என்பதை நன்கு அறிந்திருந்தேன். எனவே ‘மச்சான்’ திரைப்படத்தில் நடிக்கும்போது எவ்வித சிக்கலும் எனக்கிருக்கவில்லை.
இலங்கைத் திரைப்படங்களில் விடுதலைப் புலிகள் இயக்க போராளியின் கதாபாத்திரம் என்றால் அதை உங்களுக்குத்தான் தந்திருக்கிறார்கள் . அந்தக் கதாபாத்திரங்களுக்குள்ளேயே நீங்கள் சிக்கிக் கொண்டு விட்டீர்களா ?
அதற்குக் காரணம் நான் ஒரு தமிழன் என்பதனாலாக இருக்கும் என நான் நினைக்கிறேன். எனக்கும் வித விதமான கதாபாத்திரங்களில் நடிக்கும் ஆசை உள்ளூர இருக்கிறது. சிலர் எனது முகத்தில் விடுதலைப் புலி உறுப்பினரைக் காணக் கூடும். அனைத்து தமிழர்களினது முகத்திலும் சிங்களவர்கள் விடுதலைப் புலி உறுப்பினர்களின் முகங்களை பொருத்திப் பார்க்கிறார்கள். அதனாலேயே அவ்வாறான கதாபாத்திரங்கள் எனக்குக் கிடைத்திருக்கக் கூடும்.
அவ்வாறான கதாபாத்திரங்களில் நடிக்க நடிகனைத் தேடும்போது எனது பெயர் மாத்திரம்தான் பலராலும் தொடர்ந்து சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது. அத்தோடு போராளி கதாபாத்திரத்தில் நடிக்க அடர்த்தியாக மீசை வைத்திருக்கும், கருமையான தோல் நிறம் கொண்ட, தமிழ் மொழியை நன்றாகப் பேசக் கூடிய வேறு நடிகர்கள் அக் காலத்தில் இருக்கவில்லை. எனக்கும் திரைப்படத் துறையில் நீண்ட பயணம் செல்லும் தேவையிருந்தது. அதனால் அந்தக் கதாபாத்திரங்களில் நடித்தேன்.
நான் ஒரு நடிகன். அதைத் தாண்டி வேறேதும் என்னிடம் இல்லை. எனது நடிகன் ஆகும் ஆசை, நான் தமிழனாக இருந்திருக்காவிட்டால் நிறைவேறியிருக்காது என இன்று எனக்குத் தோன்றுகிறது. நான் ஒரு தமிழன் என்பதால், எனக்குக் கிடைத்த கதாபாத்திரங்களை என்னால் சிறப்பாகச் செய்ய முடிந்திருக்கிறது.
இதனை விடுதலைப் புலிகள் இயக்கம் எவ்வாறு எடுத்துக் கொண்டது ? சிங்களத் திரைப்படத்தில் நடிக்கும் ஒரு தமிழன் எனும்போது உங்களையும் அவர்கள் ஒரு எதிரியாகப் பார்க்கும் அபாயம் உருவாகும் அல்லவா ?
‘பிரபாகரன்’ எனும் நான் நடித்த சிங்களத் திரைப்படம் திரையரங்குகளில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும்போது ஒரு நாள் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ‘நாடகம் ஒன்றை எடுக்கவிருக்கிறோம். உங்களால் நடிக்க முடியுமா தர்ஷன்?’ என என்னிடம் கேட்கப்பட்டது. வழமை போல நான் ‘முடியும், எனக்கு இவ்வளவு சம்பளம் தர வேண்டும்’ என ஒரு தொகையைக் கூறியதும், அவர்கள் ‘நாங்கள் இந்த இடத்திலிருந்து கதைக்கிறோம், எம்மிடமே பணம் கேட்கிறாயா? இனி நீ எப்படி நடிக்கப் போகிறாய் எனப் பார்’ என மிரட்டினார்கள். பின்னர் ‘சிங்களப் படங்களில் நீ ஏன் போராளியாக நடிக்கிறாய்?’ எனக் கேட்டார்கள். ‘ஒரு கலைஞனாக எனக்கு தரப்படும் கதாபாத்திரங்களை, இயக்குனர் கூறும் விதத்தில் நடித்துக் கொடுப்பதே எனது வேலை’ என்றேன். பிறகு அவர்கள் ‘இனி அவ்வாறு நடக்கக் கூடாது’ என எனக்கு கடைசி உத்தரவினை (Final Warning) இட்டார்கள்.
அது விடுதலைப் புலிகள் இயக்கத்தால் எனக்குத் தரப்படும் இறுதிக் கட்டளை என்பதனை நான் உணர்ந்ததால் நிஜமாகவே பயந்துபோனேன். அவ்வாறு மிரட்டப்பட்டு இரண்டு மாதங்களின் பின்னர் ஒரு நாள் கொழும்பு, கிரான்ட்பாஸ் சந்தியில், நடுத்தெருவில் வைத்து ஒரு குழுவினர் என்னைச் சுற்றிவளைத்து மிகவும் மோசமாகத் தாக்கினார்கள். கொலை முயற்சி தாக்குதலாக அது இருந்தது. அவர்கள் யாரென்று எனக்குத் தெரியவில்லை. முகங்களை மறைத்திருந்தார்கள். அன்று காயங்களோடு தப்பித்த நான் அந்த நிகழ்வின் பின்னர் இலங்கையிலிருக்காது சில காலம் இந்தியாவுக்கு சென்றிருந்தேன்.
இன்று விடுதலைப் புலிகள் இயக்கத்தினரைக் குறித்து எவ்வாறு பார்க்கிறீர்கள் ?
அவர்களும் மனிதர்கள்தான். அவ்வாறுதான் நான் எண்ணுகிறேன். இராணுவத்தில் ஒருவர் போரின் போது மரணித்து விட்டால் ஏற்படும் இழப்பையும், கவலையையும், போராளிகள் மரணிக்கும்போது அவர்களுக்கு நெருங்கியவர்களும் உணர்கிறார்கள். அந்த மரணம் அநியாயமானது, இந்த மரணம் கொண்டாடத்தக்கது என்று எதையும் பிரித்துக் கூற முடியாது. மரணம், மரணம்தான். வாழ்க்கையும் அவ்வாறுதான். அனைவருமே மனிதர்கள்.
இன்று வரை நிறைய திரைப்படங்களில் நடித்து விட்டீர்கள் . எப்போதாவது , ஒரு கதாபாத்திரத்தில் மனம் ஒன்றி நடிக்க மிகவும் சிரமப்பட்டிருக்கிறீர்களா ?
இலங்கையில் யுத்தம் முடிவுற்ற உடனேயே யாழ்ப்பாணத்தில் புதுமாத்தளன், புதுக்குடியிருப்பு, நந்திக்கடல் போன்ற பிரதேசங்களில் நான் நடித்த ‘மாதா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அந்தப் பிரதேசங்களில் பரவலாகப் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் எவையும் அப்போது அகற்றப்பட்டிருக்கவில்லை. எனவே கால் வைக்கும் இடத்தில் எப்போது எங்கு மிதிவெடி வெடிக்குமோ என்ற மிகுந்த அச்சத்துடனேயே நானும் திரைப்படக் குழுவினர் அனைவருமே அக் காடுகளில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தோம்.
பெரும்பாலும் நீங்கள் சிங்கள மொழித் திரைப்படங்கள் , நாடகங்களில் நடிப்பதால் நாடு முழுவதும் நிறைய சிங்கள ரசிகர்களை கொண்டிருக்கிறீர்கள் . தமிழர்களிடையே குறிப்பாக யாழ்ப்பாணத்துக்கு படப்பிடிப்புக்காகச் செல்லும்போது அங்கு உங்களுக்கான வரவேற்பு எவ்வாறிருக்கிறது ? யுத்தமற்ற யாழ்ப்பாணம் எப்படியிருக்கிறது ? இலங்கை சினிமாவை அவர்கள் எப்படி நோக்குகிறார்கள் ?
தற்போது சிங்களத் திரைப்படங்கள் யாழ்ப்பாணத்திலும் பரவலாகத் திரையிடப்படுவதால் யாழ்ப்பாணத்திலும் எனக்கு நல்ல வரவேற்பு இருப்பதனை உணர்கிறேன். எங்கு கண்டாலும் மிகுந்த மகிழ்ச்சியோடு என்னை அம் மக்கள் வரவேற்கிறார்கள். தெருவில் நடக்கும்போது சிலர் தூர இருந்து ‘இது அந்த நடிகன்தானே?’ என நின்று உற்று நோக்குகிறார்கள். சிலர் கையெழுத்து வாங்கிக் கொள்கிறார்கள். தமிழ் மக்கள் அனைவருக்கும் என்னைத் தெரிந்திருக்கிறது.
இந்தக் காலத்தில் யுத்தமற்ற யாழ்ப்பாணத்தைக் காண வரும் சிங்களவர்களையும் யாழ்ப்பாண மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள். கடைகளுக்குச் சென்றால், ‘இருபது, முப்பது வருடங்களுக்குப் பிறகு இன்று ஒரு சிங்களவர் எனது கடைக்கு வந்து தேநீர் குடித்து விட்டுச் சென்றார்’ என மகிழ்ச்சியோடு அவர்கள் கதைத்துக் கொள்வதைக் கேட்க முடிகிறது.
அவ்வாறே தற்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து இலங்கையின் தமிழ் சினிமா துளிர்த்து சிறப்பாக வளர்ந்து வரும் அடையாளங்களையும் நான் காண்கிறேன். இலங்கையின் சிறந்த தமிழ் சினிமாவை யாழ்ப்பாண மக்கள் உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. காரணம் வடக்கின் மக்கள் அந்தளவு தைரியத்தைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் நிச்சயமாக எழுந்து நிற்பார்கள். சாதிப்பார்கள்.
யுத்த காலத்தில் யாழ்ப்பாணத்துக்கு நான் ஒரு படப்பிடிப்புக்காகப் போயிருந்த போது, ஒரு தந்தை தனது சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு, அதில் அமர்ந்து வேகமாக மிதித்துக் கொண்டிருந்ததைக் கண்டேன். கூர்ந்து கவனித்த போதுதான் தெரிந்தது. அப்பா சைக்கிளை மிதிக்கும்போது டைனமோ வேலை செய்து சைக்கிளின் மின்குமிழ் ஒளிர, அந்த வெளிச்சத்தில் ஒரு பிள்ளை படித்துக் கொண்டிருந்தது. யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த போதும், இந்த மக்கள் மிகுந்த மன திடமும் தன்னம்பிக்கையும் உடையவர்கள் என்று அன்று எனக்குத் தோன்றியது.
உங்கள் நிஜப் பெயரே தர்ஷன் தர்மராஜ் தானா ?
இல்லை. எனது நிஜப் பெயர் லிங்கநாதன் தர்மராஜ். அந்தப் பெயருடன்தான் நடிக்க வந்தேன். இயக்குனர் சிட்னி சந்திரசேகர எனக்கு தர்ஷன் தர்மராஜ் எனப் பெயர் சூட்டினார். அந்தப் பெயரே நிலைத்து இன்று நான் தர்ஷன் தர்மராஜாக உங்கள் முன் நிற்கிறேன்.
கொழும்புக்கு வேலை தேடி வந்த நீங்கள் , ஒரு புகழ்பெற்ற நடிகனாகப் போய் நின்றபோது ஊரில் , வீட்டில் அதனை எப்படி எடுத்
காழ்ப்புகளுக்கு முன் செயலுடன் நிற்றல்
உங்கள் அறுபது மணிவிழா பற்றிய செய்திகள் வந்தபோது ஒரு so called மார்க்சியர் ‘ஜெயமோகன் எல்லாம் உயிரோடு இருக்கும்போது பிரான்சிஸ் கிருபா செத்திருக்கவேண்டாம்’ என எழுதினார். யூடியூபில் உங்கள் மணிவிழா உரைக்கு கீழேயே ‘தமிழ்த்தேசியர்கள் எல்லாம் அற்பாயுசில் சாகும்போது இவன் எல்லாம் அறுபது வயதுவரை சாகாமலிருக்கிறான்’ என்று கமெண்ட் இருக்கிறது. முகநூலில் பல அறியப்பட்ட இடதுசாரிகள், திராவிடத்தரப்புகள் எல்லாம் ‘இவன் எல்லாம் ஏன் சாகவில்லை’ என்று எழுதியிருந்தனர். எந்த so called வலதுசாரியும் எந்த இடதுசாரியின் அறுபது, எண்பது, நூறு விழாக் கொண்டாட்டங்களில் இப்படி எழுதி நான் பார்த்ததில்லை. மாறாக மனமார்ந்த வாழ்த்துக்களைத்தான் தெரிவித்திருக்கிறார்கள். இடதுசாரியாக இருப்பதென்றால் நாகரீகமில்லாமல் இருப்பதுதானா? இந்த கமெண்டுகளை மூடிவைத்தாலென்ன என்றும் தோன்றியது. என் மனவருத்ததைச் சொல்கிறேன்.
ஸ்ரீனிவாசன் ராமானுஜன்
*
அன்புள்ள ஸ்ரீனிவாசன்,
நீங்கள் சொல்லும் தரப்புக்குச் சமானமாகவே எனக்கு இந்துத்துவ தரப்பில் இருந்தும் செத்துத் தொலை என்னும் வாழ்த்துக்கள் வந்தன. எல்லா அரசியல் தரப்பும் ஒரே மனநிலை கொண்டவைதான். ஆகவேதான் அவர்கள் ஓர் எல்லையில் இருந்து மறு எல்லைக்கு எளிதில் செல்லமுடியும்.
கமெண்டுகளில் அவை இருக்கட்டும், அவையும் எதிர்வினைகளே. என் நிலைபாடும் என் ஆளுமையும் எத்தகையது என்பதை ஐயமறக் காட்டும் சான்றுகள் அவை. அவற்றைக் கண்டே என்னிடம் இளைஞர் வருகிறார்கள். ஏனென்றால் கசப்பும் காழ்ப்பும் கொண்டவர்களிடம் உளச்சிக்கல் கொண்டவர்களே செல்வார்கள். கலையை, சேவையை, செயலை நாடுவோர் நேர் எதிராக என்னை நோக்கித் திரும்புவார்கள்.
அக்காழ்ப்பை கொட்டுவர்களிடம் பகைமையோ கசப்போ இல்லை. அவர்களை நேரில் சந்தித்தால் மகிழ்ச்சியுடன் பேசவும் எனக்கு விருப்பமே. (நம் நண்பர்கள் பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதுண்டு. ஆனால் அது என் கொள்கை)
இவர்கள் கொட்டும் இந்த வசைபாடல்கள், காழ்ப்புகள், வெறுப்புகள் எல்லாமே ஒருவகை பாவனைகள் மட்டும்தான். பொதுவெளிக் காட்சிப்படுத்தல்கள், தனக்குத்தானே செய்துகொள்ளும் நடிப்புகள். இவை ஒரு வகை உளப்போதாமை காரணமாகவே இவர்களுக்குத் தேவைப்படுகின்றன. இவற்றுக்கு எந்த கொள்கையோ, அரசியலோ காரணம் அல்ல. உண்மையிலேயே இத்தனை கொள்கைப்பற்றும், தீவிரமும் இருக்குமென்றால் இங்கே எத்தனை பெரும்பணிகள் நிகழ்ந்திருக்கும். எத்தனை களச்செயல்பாடுகள் நடைபெற்றிருக்கும். எதுவுமே நிகழ்வதில்லை.
இங்கே இடதுசாரி அரசியலென்பது இன்று அதிகார அரசியலின் ஒத்து ஊதுவதும், பொது ஊடகங்களில் பேசிக்கொண்டிருப்பதும் மட்டுமே. உண்மையிலேயே பணியாற்றும் இடதுசாரிகள், திராவிட இயக்கத்தவர் பலரை எனக்குத் தெரியும். அவர்களிடம் இந்தக் காழ்ப்பும் கசப்பும் இருப்பதில்லை. அவர்களிடம் ஒருவகையான கள்ளமின்மையும் எளிமையும் இருக்கும். அது அளிக்கும் நம்பிக்கையே அவர்களைச் செயல்படச் செய்கிறது. காழ்ப்பும் கசப்பும் கக்கிக்கொண்டிருக்கும் ஒருவர் அதைத்தவிர செயல் என வேறு எதையும் செய்ய முடியாது. அது அடிப்படை மானுட இயல்பு.
இந்த அரசியல் காழ்ப்புகள் பலவற்றில் உள்ளுறைந்து மதக்காழ்ப்பு இருப்பதைக் காணலாம். குறிப்பாக திமுக, திராவிட இயக்கச் சார்பை நடித்து காழ்ப்பை கக்குபவர்கள் பலர் தங்களை அப்போர்வையில் மறைத்துக்கொண்ட மதவெறியர்கள். இந்த மதவெறியர் உருவாக்கும் கறை திமுகவுக்கு மிகப்பெரிய எதிர்விசையாக ஆகும். அதை அவர்கள் உணர்ந்தால் நன்று. இந்த மதவெறியர்கள் பிறிதொரு தரப்பை கவனிக்கக்கூட முடியாதவர்கள், ஆனால் வெறுப்பு மட்டும் நிறைந்திருப்பவர்கள்.
அரசியல் என்பதுகூட பெரும்பாலும் சாதி, மத உள்ளடக்கம் கொண்டது. இங்கே சொந்தச்சாதி மீதான இயல்பான பற்றையே கட்சிப்பற்றாக ஆக்கிக்கொள்கிறார்கள். இந்தச் சார்புநிலையில் எந்த அறமும், முறைமையும் இவர்களிடம் இருப்பதில்லை.
இவர்கள் கண்மூடித்தனமான கொள்கைச்சார்புநிலையால் காழ்ப்பு கொண்டு நம்மை திட்டுகிறார்கள் என நினைக்கிறீர்கள், ஆனால் அவர்கள் ஆதரிக்கும் தரப்பு செய்யும் எல்லா தலைகீழ் மாற்றங்களையும் அவர்கள் அப்படியே ஏற்றுக்கொள்வதைக் காணலாம். திமுக பாரதிய ஜனதாவை ஆதரித்தால், இடதுசாரிகள் சசிகலாவின் காலடியில் அமர்ந்தால் அக்கட்சி ஆதரவாளர்களுக்கு ஒரு பிரச்சினையும் இருப்பதில்லை என்பதை கண்டிருக்கிறோம்.
ஏன் இந்த காழ்ப்புகள் இவர்களுக்கு தேவைப்படுகின்றன? வேறொன்றுமில்லை, அன்றாடத்தை சற்றேனும் விசைகொண்டதாக்கிக் கொள்ளத்தான். எளிய நிகழ்வாழ்க்கையின் சலிப்பை வெல்லத்தான். அதற்காகத்தான் சிலர் ஒரு நடிகரின் ரசிகர்களாகி இன்னொரு நடிகரை வசைபாடுகிறார்கள். மதவெறியும் சாதிவெறியும் கொண்டு பூசலிடுகிறார்கள். அதேதான் இங்கும், எந்த வேறுபாடுமில்லை.
ஆனால் இவர்கள் சலிப்பை கடக்க காழ்ப்பைச் சூடிக்கொள்ளும்போது வாழ்க்கையை துன்பமயமாக்கிக் கொள்கிறார்கள். இந்த வன்மத்தில் வாழ்பவர்கள் பல ஆண்டுகளாக ஒரே மனநிலையில், மாறாநோயால் பீடிக்கப்பட்டவர்கள் போல, வேறெதையுமே செய்ய முடியாதவர்களாக, வாழ்க்கையில் எதிலுமே மகிழாதவர்களாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் இருபத்துநாலு மணிநேரமும் என்னை வெறுத்து, நாள்தோறும் வசைபாடும் ஒருவரைக் கண்டால் பரிதாபமாக இருக்கிறது. எவ்வளவு கொதிப்பு, எவ்வளவு துன்பம். ஒவ்வொரு நாளும் அவர்கள் எரிவதற்காக ஏதேனும் ஒன்று கிடைக்கிறது. ‘எதற்காக இந்த வலியை நீயே இழுத்து வைத்துக்கொள்கிறாய் நண்பா, இதைக் கொஞ்சம் இறக்கிவைத்துவிட்டு சிறிதுநேரம் மகிழ்ச்சியாகத்தான் இரேன். வாழ்க்கை எவ்வளவு இனியது’ என்று கேட்கவேண்டும் போலிருக்கிறது.
வாழ்க்கையை நேர்நிலையாகத் தீவிரப்படுத்திக் கொள்ளாதவரை இன்பம் இல்லை. கல்வியும் செயலாற்றலுமே அதற்கு முதன்மையான தேவைகள். கலைகள், கலாச்சாரச் செயல்பாடுகள் எல்லாமே அதற்கு உதவியானவை. பயணங்கள், நட்புக்கூடல்கள் அடுத்தபடியாக இன்றியமையாதவை. அவற்றைக்கொண்டு வாழ்க்கையை விசைகொள்ளச்செய்யலாம், காலத்தை நிறைக்கலாம்.
நம் ஆற்றலில் ஒருதுளியும் எஞ்சாமல் செலவழிப்பதே இன்பம், விடுதலை. ஆனால் அது பயனுள்ள செயலாக இருக்கவேண்டும். அச்செயல் நம்மை மகிழ்விக்கவேண்டும். செயலுக்குப்பின் நாம் சற்றேனும் வளர்ந்திருக்க வேண்டும்.
தீவிரமான, கண்மண் தெரியாத செயல்விசையே நேர்நிலைப் பேரின்பம் என்பது என் சொந்த அனுபவம். அது ஒரு தியானம். இன்று, பொன்னியின் செல்வன் வெளியீட்டுநாள் (30-9-2022) செல்பேசியை அணைத்துவிட்டு ஒன்பது மணிநேரம் தமிழ் விக்கியில் உழைத்தபின் நிமிர்கையில் உலகம் ஒருங்கிணைவும் ஒளியும் கொண்டதாக இருக்கிறது எனக்கு. என்னைச் சுற்றி நூல்கள் குவிந்து கிடக்கின்றன. ஒரு பெருங்கொண்டாட்டத்தின் மிச்சங்கள். என் உலகம் செயலால் ஆனது. ஆகவே தொடர்வெற்றிகளும் சாதனைகளும் மட்டுமே கொண்டது. வெற்றியில் உள்ள களிப்பை விட செயலாற்றுவதிலுள்ள களிப்பு பலமடங்கு.
இன்று காந்தியின் நாள். காந்தி போராடியது அவரைச் சூழ்ந்திருந்த கடும் காழ்ப்புகளுடன். அவரிடம் ’நீங்கள் ஏன் இன்னும் சாகவில்லை?’ என்றுதான் அவருடைய முதிய வயதில் கேட்டுக்கொண்டிருந்தனர். அவர் பலமுறை அதற்குச் சிரித்தபடி பதிலும் சொல்லியிருக்கிறார். அக்காழ்ப்புகள் இன்றும் நீடிக்கின்றன.
காந்தி செயலாற்றிய பெரும்பரப்பு திகைப்பூட்டுகிறது. எத்தனை ஆயிரம் பக்கங்கள். எத்தனை சந்திப்புகள். எத்தனை பயணங்கள். அவர் செய்த பயணங்களை சேர்த்து நீட்டினால் எத்தனை முறை உலகைச் சுற்றிவந்திருப்பார். காந்தி அளிக்கும் செய்தி அதுதான். செயலே விடுதலை.
ஜெ
மோகனாங்கி, பொன்னியின் செல்வன் யுகத்தில்…
முதல் தமிழ் வரலாற்று நாவலான மோகனாங்கியை தமிழ் வரலாற்றுநாவல் பொன்னியின் செல்வன் இந்தியா முழுக்க லட்சக்கணக்கான பிரதிகள் விற்கப்படும் இச்சூழலில் நினைவூட்டவேண்டியிருக்கிறது. ஈழத்தமிழரான இதன் ஆசிரியர் தி. த. சரவணமுத்துப் பிள்ளை மிக இளமையிலேயே (37 வயதில்) மறைந்துவிட்டார். தமிழறிஞர், பதிப்பாசிரியர் தி. த. கனகசுந்தரம் பிள்ளையின் தம்பி இவர். கனகசுந்தரம் பிள்ளை உ.வே.சாமிநாதையருக்கு தொல்காப்பியம் உள்ளிட்ட நூல்களின் ஏடுகளை அளித்தவர்.
ஏறத்தாழ நூறாண்டுகள் பதிப்பில் இல்லாமலிருந்த படைப்பு. பொன்னியின் செல்வன் போல வரலாற்றுக் கற்பனாவாத நாவல் (Historical Romance ) அல்ல ,வரலாற்று நாவலேதான் (Historical Novel) . நூற்றிமுப்பது ஆண்டுகளானாலும் இன்றும் சரளமாக வாசிக்கும் நடை கொண்டது. பொன்னியின் செல்வனுக்கு பின் உடனடியாக சினிமாவாக எடுக்கத்தக்க சரித்திர நாவல் எது என்றுகேட்டால் தயங்காமல் மோகனாங்கி என்றுதான் சொல்வேன்.
மோகனாங்கி
மோகனாங்கி – தமிழ் விக்கி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers



