Jeyamohan's Blog, page 709

September 29, 2022

விஷ்ணுபுரம் வெளியீடாக வந்துள்ள நூல்கள்

விஷ்ணுபுரம் பிரசுரம் வெளியீடாக வந்துள்ள நூல்கள். விஷ்ணுபுரம் பதிப்பகம் என் நூல்கள் அனைத்தையும் வெளியிட்டு வருகிறது.

விஷ்ணுபுரம் பதிப்பகம் நூல்கள் வாங்க

 

குமரித்துறைவி நூல் வாங்க

குமரித்துறைவி மின்னூல் வாங்க

வான் நெசவு நூல் வாங்க

வான் நெசவு மின்னூல் வாங்க

ஆயிரம் ஊற்றுகள் நூல் வாங்க

ஆயிரம் ஊற்றுகள் மின்னூல் வாங்க

பத்துலட்சம் காலடிகள் நூல் வாங்க

பத்துலட்சம் காலடிகள் மின்னூல் வாங்க

தங்கப்புத்தகம் நூல் வாங்க

தங்கப்புத்தகம் மின்னூல் வாங்க

வாசிப்பின் வழிகள் நூல் வாங்க

வாசிப்பின் வழிகள் மின்னூல் வாங்க

அந்த முகில் இந்த முகில் நூல் வாங்க

அந்த முகில் இந்த முகில் மின்னூல் வாங்க

ஆனையில்லா நூல் வாங்க

ஆனையில்லா மின்னூல் வாங்க

தேவி நூல் வாங்க

தேவி மின்னூல் வாங்க

ஐந்து நெருப்பு நூல் வாங்க

ஐந்து நெருப்பு மின்னூல் வாங்க

எழுகதிர் நூல் வாங்க

எழுகதிர் மின்னூல் வாங்க

முதுநாவல் ந்நுல் வாங்க

முதுநாவல் மின்னூல் வாங்க

பொலிவதும் கலைவதும் நூல் வாங்க

பொலிவதும் கலைவதும் மின்னூல் வாங்க

இரு கலைஞர்கள் நூல் வாங்க

இரு கலைஞர்கள் மின்னூல் வாங்க

பின்தொடரும் நிழலின் குரல் நூல் வாங்க

பின்தொடரும் நிழலின் குரல் மின்னூல் வாங்க

மலைபூத்தபோது நூல் வாங்க

மலைபூத்தபோது மின்னூல் வாங்க

இலக்கியத்தின் நுழைவாயிலில் நூல் வாங்க

இலக்கியத்தின் நுழைவாயிலில் மின்னூல் வாங்க

நத்தையின் பாதை நூல் வாங்க

நத்தையின் பாதை மின்னூல் வாங்க

மைத்ரி நூல் வாங்க

மைத்ரி மின்னூல் வாங்க

ஆலயம் எவருடையது நூல் வாங்க

ஆலயம் எவருடையது மின்னூல் வாங்க

இந்து மெய்மை நூல் வாங்க

இந்துமெய்மை மின்னூல் வாங்க

சாதி – ஓர் உரையாடல் நூல் வாங்க

சாதி – ஓர் உரையாடல் மின்னூல் வாங்க

வணிக இலக்கியம் நூல் வாங்க

வணிக இலக்கியம் மின்னூல் வாங்க

ஈராறுகால் கொண்டெழும் புரவி நூல் வாங்க

ஈராறுகால்கொண்டெழும் புரவி மின்னூல் வாங்க

கதாநாயகி நூல் வாங்க

கதாநாயகி மின்னூல் வாங்க

ஒருபாலுறவு நூல் வாங்க

ஒருபாலுறவு மின்னூல் வாங்க

அனல் காற்று நூல் வாங்க

அனல் காற்று மின்னூல் வாங்க

ஞானி நூல் வாங்க

ஞானி மின்னூல் வாங்க

நான்காவது கொலை நூல் வாங்க

நான்காவது கொலை மின்னூல் வாங்க

விசும்பு நூல் வாங்க

விசும்பு மின்னூல் வாங்க

துளிக்கனவு நூல் வாங்க

துளிக்கனவு மின்னூல் வாங்க

கூந்தல் நூல் வாங்க

கூந்தல் மின்னூல் வாங்க

அறம் நூல் வாங்க

அறம் மின்னூல் வாங்க

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 29, 2022 11:30

September 28, 2022

பொன்னியின் செல்வன், விடைகளின் தனிமை.

பொன்னியின் செல்வன் நாவல்  கல்கி சிவகாமியின் சபதம் மோகனாங்கி

அன்புள்ள ஜெ

பொன்னியின் செல்வன் பற்றி வந்துகொண்டிருக்கும் வசைகளை கவனிக்கிறீர்களா? எவ்வளவு வசைகள்! பெரும்பாலும் உங்களை மட்டுமே குறிவைத்துச் சொல்லப்படுபவை. மணிரத்னமோ, அதில் வேலைபார்ப்பவர்களோ நடிப்பவர்களோ யாருமே குறிவைக்கப்படவில்லை. அதில் எல்லாமே நீங்கள்தான் என்று இவர்களே சொல்லிச் சொல்லி நிலைநாட்டுகிறார்கள்.

சைவர்களை மணிரத்னம் அவமரியாதை செய்துவிட்டார், சரித்திரம் மன்னிக்காது என்று ஒருவர் பொங்கியிருந்தார். நான் பலபேரிடம் அது போருக்குப்போகும்போது வைக்கும் ரத்ததிலகம், சோழர்கள் போருக்குப் போகும்போது காளி , பிரத்யங்காரா போன்ற போர்த்தெய்வங்களைக் கும்பிட்டுவிட்டே சென்றார்கள், ஊர்த்துவமாக சிவப்புத்தீற்றல் என்பது காளிவழிபாட்டின் அடையாளம் என்றெல்லாம் பலவாறாக விளக்கினேன். இருந்தாலும் அதே வசை. வசைபாடிய பலரின் புரஃபைல் சென்று பார்த்தால் பெரியார் படம் வைத்து ‘இந்துமதம் அழியவேண்டும்’ என்று எழுதியிருந்தார்கள். சைவம் உட்பட எல்லா தெய்வங்களையும் வசைபாடியிருந்தனர். பலர் இந்துக்கள் அல்லாத மாற்றுமதத்தவர். இவர்களின் நோக்கம் என்ன?

இன்னொரு பக்கம் ஆழ்வார்க்கடியான் அய்யய்யோ சொல்லிவிட்டான், மற்றமொழிகளில் நாராயணா என்று இருக்கிறது என்று ஒரு பிராமணச்சாதி வெறியர் கிளப்பிவிட, அதை இந்துத்துவர்கள் பிடித்துக்கொண்டு வசைபாடுகிறார்கள். இலங்கை என்ற வார்த்தையே அன்று இல்லை, அன்று இருந்தது ஈழம் என்ற வார்த்தைதான் என்றும் அதை மாற்றியவர் நீங்கள் என்றும் ஒரு வசை. கொஞ்சநாள் முன்னாடி அருள்மொழித் தேவன்தான் சரி, அருண்மொழி என்பது சம்ஸ்கிருதம், அதை எழுதியது நீங்கள் என்று ஒருவசை. அருண்மொழி என்பதுதான் தமிழின் சரியான புணர்ச்சிவிதிப்படி அமைந்தது, எல்லா கல்வெட்டும் அப்படித்தான் உள்ளது என்று சொன்னால் புரிவதில்லை.

சோழர்களை அவமதித்தார் ஜெயமோகன், மணிரத்னம் என்று கூப்பாடு. சோழர்களை பிராமண அடிவருடிகள் என்று அரசியல்வாதிகள் அப்பட்டமாக வசைபாடினால் அதைப்பற்றி இவர்கள் வாயே திறப்பதில்லை. இந்த சூழலே பிரமிக்கவைக்கிறது. மனச்சிக்கல்கொண்டவர்கள் போல பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் அறிவுஜீவிகள். நீங்கள் பொசெ பழைய பதிவுகளை நீக்கிவிட்டீர்கள் என ஒரு பக்கம். பொசெவை சு.ரா மட்டம் தட்டியபோது கூட நின்ற நீங்கள் இப்போது அதற்கு வசனம் எழுதும் நிலை என இன்னொரு பக்கம். இந்த கிறுக்கு சமூகவலைத்தளங்களை ஆட்டிவைக்கிறது.

அர்விந்த்

(மலையாள மனோரமா தொலைக்காட்சி உரையாடல்.

சோழர்காலம் ஏன் பொற்காலம்? சோழர்கள் சைவர்களாக இருந்தாலும் ஏன் சமயசார்பற்றவர்கள்? பொன்னியின்செல்வன் ஏன் தேவை? அதன் அழகியல் என்ன? )

அன்புள்ள அர்விந்த்,

இங்கே எதுவுமே ‘தெரியாமல்’ பேசப்படுவன அல்ல. இன்று யூடியூப் ஒரு பெரிய வணிகப்பரப்பு. ஒரு பதிவுக்கு ஐம்பதாயிரம் ஹிட் வந்தால் ஏறத்தாழ எட்டாயிரம் ரூபாய் வரை உங்கள் கணக்குக்கு யூடியூப் பணம் கொடுக்கும். பல பதிவுகள் லட்சக்கணக்கான ஹிட் வருபவை. அது ஒரு பெருந்தொழில்.

இங்கே சினிமா பற்றிய பதிவுகளுக்கு மட்டுமே கூட்டம் வரும். வேறு எதை எழுதினாலும் எவரும் திரும்பிப் பார்க்கமாட்டார்கள். ஆகவே அத்தனைபேரும் சினிமாப்பக்கம் வந்து நின்றிருக்கிறார்கள். எல்லா அரசியலையும் சினிமா சார்ந்தே பேசுகிறார்கள்.

சினிமா பற்றியே ரசனையுடனும், அறிவுடனும் பதிவிட்டால் எவ்வளவு நல்ல பதிவானாலும் ஐம்பதாயிரம் தாண்டாது. வசைபாடினால் லட்சக்கணக்காக ஹிட் வரும். அபத்தமாக, மடத்தனமாக சொன்னால் மேலும் ஹிட் வரும்.

ஏனென்றால் வசைபாடினால் அதை ஏராளமானவர்கள் பகிர்வார்கள். அபத்தமானது என்றால் அதைச்சுட்டிக்காட்டுவதற்காக மேலும் பகிர்வார்கள். நீங்கள் ஒரு யூடியூபரை திட்டினால், கேலி செய்தால் அவர் மகிழ்வார். அவருக்கு பணம் கொட்டும். அவர் ஒரு நடிகரை அல்லது இயக்குநரை ஆபாசமாகத் திட்டினால் அந்நடிகருடைய எதிரிகள் அதை பகிர்ந்து பரப்புவார்கள். அந்நடிகரின் ஆதரவாளர்களும் அதை வந்து பார்ப்பார்கள். எல்லாமே பணம். இவ்வளவுதான்.

*

பொன்னியின்செல்வன் பற்றி சுந்தர ராமசாமி கருத்து அல்ல என் கருத்து. அதை 1991 முதல் தொடர்ச்சியாக, சீராகப் பதிவுசெய்து வருகிறேன். நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் முதலிய எல்லா நூல்களிலும் அக்கருத்து பேசப்பட்டுள்ளது. அது ஒரு பாப்புலர் கிளாஸிக். பொதுவாசிப்புக்கான எழுத்து. அந்த வகைமைக்குள் அதன் இடம் முக்கியமானது என்பதே என் எண்ணம். ஏன், இன்று எவரும் அதிகம் பேசாத கோபுரகலசம் (எஸ்.எஸ்.தென்னரசு) ஆலவாயழகன் (ஜெகசிற்பியன்) போன்றவற்றைக்கூட நான் முக்கியமாக கவனப்படுத்தியிருக்கிறேன்.

(ஆலவாய் அழகன், நாவல்  ஜெகசிற்பியன்.தமிழ் விக்கி)

நான் எழுதிய எந்தக் கட்டுரையும், இங்கே நீக்கப்படவில்லை. எல்லாமே நூல்களாகவும் வாசிக்கக் கிடைக்கின்றன. இதை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். எல்லாருக்கும் அது தெரியும். அவதூறு சொன்னால் அதை விரும்பி வாசிப்பவர்கள் உண்மையை நாடுவதில்லை என அறிந்து அதையே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

*

சினிமா பற்றிய அடிப்படை அறிவு கொண்டவர்களுக்காக சிலவற்றைச் சொல்லவேண்டும். ஒரு சினிமாவின் வசனம் வேறு, எஃபக்ட் என்பது வேறு. ஒருவர் தடுக்கிவிழும்போது சொல்லவேண்டியது வசனம் அல்ல, இயல்பாக வரவேண்டிய எஃபக்ட். அது அந்த நடிகரே அப்போது சொல்வது. சினிமாவில் மையமான வசனங்களையே அப்படியே பேசுவார்கள்.

அதிலும்கூட வசனம் பல இடங்களில் பலரால் மாறிக்கொண்டிருக்கும். சிலசமயம் அந்நடிகரால் அதை அப்படியே சொல்லமுடியாமலாகும். சிலசமயம் நீளம் காரணமாக வசனம் மாறுபடும். சிலசமயம் நடிப்புக்காக மாறும். அதன்பின் படத்தொகுப்புக்காக சில வசனங்களை சேர்ப்பார்கள், வெட்டுவார்கள். அறுதியாக டப்பிங்கில் அது மாறும். ஒரு சினிமா எத்தனை பேர் வழியாகச் செல்கிறது என்று நினைத்தே பார்க்கமுடியாது.

பொன்னியின்செல்வன் போன்ற ’பான் இந்தியன்’ படங்களில் டப்பிங் வசதிக்காக சொற்கள் மாறும். உதாரணமாக ஒரு வசனம் குளோஸப்பில் இருந்தால் இந்தியா முழுக்க அது எப்படி டப் செய்யப்படுமோ அந்த உச்சரிப்பும் உதட்டசைவும் அதற்கு அளிக்கப்படும். இப்படி எவ்வளவோ.

பொன்னியின் செல்வன் படம் முழுக்க அழ்வார்க்கடியான் நாராயணா என்றுதான் கூவுகிறார். ஒரு கிளிப்பிங்கில் பார்த்துவிட்டு இந்தப்படம் அய்யய்யோ வைணவத்துக்கு எதிரானது என்கிறார்கள். காளிகோயில் ரத்ததிலகத்தை பார்த்துவிட்டு ஐய்யய்யோ சைவத்துக்கு எதிரானது என்கிறார்கள். தமிழுக்கு எதிரானது என்கிறார்கள். சோழர்களை இழிவுசெய்கிறது என்கிறார்கள். சோழர்களை பொய்யாக புகழ்கிறது, சோழர்கள் இழிவானவர்கள் என்கிறார்கள் இன்னொரு சாரார். இற்கெல்லாம் எவர் பதில் சொல்லமுடியும்? சொல்லி மாளுமா?

பாட்டிலேயே புலிக்கொடி என்றும் ஈழம் என்றும் வருகிறது. அப்படி வைப்பவர்கள் படத்துக்குள் ஈழம் என்ற சொல்லை ஏன் தவிர்க்கவேண்டும்? அடிப்படைச் சிந்தனை உடையவர்களுக்கு இதுகூட தெரியாதா என்ன?

சோழர்காலத்திற்கு முன்பு, புறநாநூற்றுக் காலம் முதலே இலங்கை என்ற பெயர் உண்டு. ஈழம் என்ற பெயரும் உண்டு. இலங்கை என்ற சொல் சிங்களநிலத்தையும், ஈழம் என்ற சொல் சங்ககாலம் முதல் இருந்த பூர்விகத் தமிழ் நிலத்தையும் சுட்டுகிறது என ஒரு ஆய்வாளர் தரப்பு உண்டு. சோழர்கள் தமிழர்பகுதியை நேரடியாக ஆட்சி செய்தனர், சிங்களர் பகுதியை அவர்களே ஆளவிட்டு கப்பம் பெற்றனர் என்பார்கள். அது அக்கால ஆட்சிமுறை. எவரும் இன்னொரு நிலத்திற்குச் சென்று நேரடியாக அரசமைக்க முடியாது. அந்த உள்ளூர் ஆட்சியாளர்களை ஆளவிட்டு கப்பம் பெற மட்டுமே முடியும். இதெல்லாம் அடிப்படை வரலாறு.

இது ’பான் இந்தியன்’ படம். இளைய தலைமுறையினருக்கான படம். அவர்களுக்கான இசை, அவர்களுக்கான வசனம்தான் இருக்க முடியும். இது நவீனகால சினிமா. ஆகவே அனேகமாக வசனமே கிடையாது.

இந்தப் படத்தை இந்தியரசிகர்கள் முழுமையாகப் பார்த்தால்தான் இதன் முதலீடு திரும்பக் கிடைக்கும். அப்படி முதலீடு திரும்பவந்தால்தான் இதைப்போன்ற பெரிய படங்கள் வரமுடியும். இதைப்போன்ற பெரிய படங்கள் வந்தால் மட்டும்தான் தமிழர் வரலாறும், மரபும் உலகமெங்கும் செல்லமுடியும். குறுகியமனப்பான்மையால், சுயலாபவெறியால் இத்தகைய பெருமுயற்சிகளை அழிக்க முயல்பவர்கள் அனைவரும் அப்பட்டமாகவே தமிழ்வெறுப்பாளர்கள், தமிழ் எதிரிகள். சந்தேகமே வேண்டாம்.

இன்று ராஜராஜ சோழன் பெயர் இந்தியாவெங்கும் ஒலிக்கிறது. தமிழ்நாட்டில் இத்தனைபெரிய பேரரசுகள் இருந்ததே உலகுக்கு தெரிகிறது. பொன்னியின்செல்வன் நாவலே இந்தியாவின் அத்தனை மொழிகளிலும் இப்போதுதான் மொழியாக்கம் செய்யப்பட்டு வாசிக்கப்படுகிறது. ஞாபகம் வையுங்கள் இதேபோல குஜராத், வங்காளம், கர்நாடகம், ஆந்திரம் அனைத்துக்கும் பேரரசுகள் உண்டு. அவர்களைப் பற்றி நமக்கு ஒன்றுமே தெரியாது. அவர்களின் நிலத்துக்கு வெளியே எவருக்கும் இன்னும் தெரியாது. இதேபோன்ற மாபெரும் படங்களை அவர்கள் எடுத்தால் மட்டுமே தெரியவரும்.

இந்தப்படத்தை பார்ப்பவர்களில் 99 சதவீதத்தவர் கல்கி, சோழர், தமிழகம் பற்றி எந்த அறிமுகமும் இல்லாதவர்கள். மாபெரும் காட்சியமைப்பை ரசிக்க அரங்குக்கு வருபவர்கள். அவர்களிடம் உற்சாகமான, பிரம்மாண்டமான ஒரு சினிமாவை கொண்டு செல்கிறோம். அவர்கள் ரசிக்கையில் சோழர் வரலாறும், தமிழர் தொன்மையும் அவர்களிடம் சென்று சேர்கிறது.

இந்தப்படத்தைப் பற்றிப் பேசும்போது வடக்கே சோழப்பேரரசு இந்தியாவின் பேரரசுகளில் ஒன்று, கடல்கடந்து வென்ற புகழ்கொண்டது என்றே சொல்லமுடியும். கர்நாடகத்தில் சோழர்கள் கர்நாடக ஆலயங்களுக்கு அளித்த கொடைகளையே சொல்லமுடியும். கேரளத்தில் அவர்கள் வெட்டிய ஏரிகளைப் பற்றியே சொல்லமுடியும். ஏனென்றால் அனைவரும் இதைப் பார்த்தாகவேண்டும்.

இது சோழர்கள் பற்றிய ஆவணப்படம் அல்ல. கல்கியின் நாவலின் நேரடியான காட்சிவடிவம் அல்ல. அந்நாவலை உண்மையாகவே வாசித்தவர்கள் அதில் காட்சிப்பிரம்மாண்டம் இல்லை, அது கதைசொல்லிச் செல்லும் தன்மைகொண்டது என்பதை அறிவார்கள். இந்தப்படம் காட்சிப்பெருக்கை கற்பனையால் உருவாக்கியிருக்கிறது. அதற்குத்தான் சினிமா ரசிகர்கள் வருவார்கள். கதாபாத்திரங்கள் கதைசொல்லிக்கொண்டிருந்தால் வரமாட்டார்கள்.

*

ராஜராஜ சோழன் பற்றி இப்போது பேசிக்கொண்டிருக்கிறார்கள். கொஞ்சமாவது சினிமாவுக்கு வெளியே இவர்கள் படிப்பார்கள் என்றால் நல்லது (பார்க்க பெருவழிகள்இராஜகேசரிப் பெருவழிகோடிவனமுடையாள் பெருவழி )

இந்த சந்தர்ப்பத்தில் ஏராளமான வரலாற்றாசிரியர்களை பொதுவெளிக்கு அறிமுகம் செய்துகொண்டிருக்கிறோம் அவர்களைப் பற்றியும் இந்தக் கூட்டம் கவனம் கொண்டால் நல்லது. குடவாயில் பாலசுப்ரமணியன், கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, பர்ட்டன் ஸ்டெயின், சி.தேசிகாச்சாரியார். மா.இராசமாணிக்கனார்.

அப்பாடா, விளக்கமளித்தே வாய் ஓய்ந்துவிடுகிறது. வசைபாடுபவர்களுக்கு யூடியூப் பணம் வருகிறது. விளக்கங்களை எவரும் கண்டுகொள்வதே இல்லை. எல்லாருக்கும் ஏதோ ஒருவகை எதிர்ப்புப் பரபரப்பு. எதிர்ப்பும் குறையும் சொன்னால் தங்களை அறிவுஜீவிகள் என நாலுபேர் நினைப்பார்கள் என்னும் துடிப்பு. அதற்காக அலையலையாகக் கேள்விகள்.

விடைகள் மிக எளியவை, அப்பட்டமானவை. ஆனால் அவை மிகமிகத் தனிமையாக நின்றுள்ளன.

ஜெ

பொன்னியின் செல்வன் பதிவுகள் அழிப்பா? பொன்னியின் செல்வன் 3, பார்வையாளர்கள் எவர்? பொன்னியின் செல்வன்- 2, சினிமாவும் நாவலும் பொன்னியின் செல்வன், ஏன் சினிமா தேவை? பொன்னியின்செல்வனும், வரலாறும் அமலை அன்றாட வம்புகளும் அறிவுச்சூழலும் பொன்னியின் செல்வன், தமிழ் விக்கி பொன்னியின் செல்வன், ஒரு பேட்டி பொன்னியின் செல்வன், கடிதங்கள் பொன்னியின் செல்வன், சோழர்கள் பொன்னியின் செல்வன், கடிதங்கள் பொன்னியின் செல்வன் விழா உரை பொன்னியின் செல்வன், கடிதங்கள் பொன்னியின் செல்வன் – கடிதம் பொன்னியின் செல்வன் பற்றி… பொன்னியின் செல்வன், ஒரு கடிதம் ஆலவாய் அழகன் தமிழ் விக்கி யவனராணி தமிழ்விக்கி மன்னன் மகள் தமிழ் விக்கி கடல்புறா தமிழ்விக்கி kadalpuRaa Tamil Wiki ராஜதிலகம்  தமிழ் விக்கி ராஜமுத்திரை தமிழ் விக்கி பத்தினிக்கோட்டம் தமிழ் விக்கி நந்திவர்மன் காதலி  தமிழ் விக்கி மோகனாங்கி நாவல் சிவகாமியின் சபதம் நாவல்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 28, 2022 11:35

கிருபா சத்தியநாதன், வந்துசென்ற தேவதை

தமிழில் தொடக்ககால இலக்கிய வரலாறுகள் பலவற்றில் கிருபா சத்தியநாதன் தமிழின் தொடக்ககாலப் பெண் எழுத்தாளராகக் குறிப்பிடப்பட்டிருந்தார். அந்த அளவுக்கு அவருடைய இரு நாவல்களும் தமிழ்த்தன்மை கொண்டவை. ஆனால் அவை ஆங்கில நாவல்கள், தமிழில் சாமுவேல் பவுல் என்பவரால் மொழியாக்கம் செய்யப்பட்டவை.

அன்று அவை கிறிஸ்தவரால் மொழியாக்கம் செய்யப்பட்டன, இன்று எனில் நடந்திருக்காது. ஏனென்றால் அவை இலக்கியப்படைப்புகள். பிரச்சாரப்படைப்புகள் அல்ல. இந்துப்பெண்களின் அவலநிலையைச் சொல்லும்போதே மதம் மாறி கிறிஸ்தவர்களாகி வெள்ளையர்களுடன் பழகநேரும்போது அவர்களிடமிருந்து சந்திக்கநேரும் இனவெறியையும் விவரிப்பவை.

தேவதைபோல வந்து செல்லும் ஒருசில வாழ்க்கைகள் உண்டு. கிருபாவின் வாழ்க்கை அத்தகையது

கிருபா சத்தியநாதன் கிருபா சத்தியநாதன் கிருபா சத்தியநாதன் – தமிழ் விக்கி
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 28, 2022 11:34

அறுபது, கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

தங்களது அறுபதாவது அகவை நிறைவு விழா மிகச் சிறப்பாக நிறைவடைந்தது. விழா ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக நன்னெறிக் கழகத்தினரும் நண்பர்களும் செய்திருந்தார்கள். கல்பற்றா அவர்களுடையதும் உங்களுடையதும் யுவன் அவர்களது பேச்சும் ஆத்மார்த்தமாக இருந்தது. அரங்கம் நிறைந்த விழா நீங்கள் எங்களுக்கு யார் என்பதை உலகிற்கு சந்தேகமின்றி காட்டியது.

மதியமும் இரவும் உங்களது ‘ஜமா’வில் கலந்து கொண்டேன். வெவ்வேறு தளங்களில் தன்னியல்பாக சென்ற பேச்சு சுவாரஸ்யமாக இருந்தது ‌‌ குறிப்பாக – மாபெரும் சோவியத் யூனியனின் பரப்பியக்க முயற்சிகளை முறியடித்த மூவர் என மொழிபெயர்ப்பாளர்கள் மூவரை சொன்னது தான் உச்சம். வெகுநேரம் சிரித்துக் கொண்டிருந்தோம்.

எழுத்தாளர்கள் சுரேஷ் பிரதீப், சுசித்ரா, ராதாகிருஷ்ணன் ஆகியோரையும் சந்திக்க முடிந்தது. ஏற்கனவே முகநூல் வழியாக அறிமுகமாகியிருந்த ராதாகிருஷ்ணன் அவர்களுடன் இரவு வெகுநேரம் வரையிலும் காலையிலும் பேசிக்கொண்டிருந்தேன்.

உங்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றது  எனது நல்லூழ்.  வாழ்வின் ஒவ்வொரு கணமும் – இடரிலும் மகிழ்விலும் – எனக்கு கற்பித்து வழிகாட்டும் ஆசிரியரிடம் முழுதாக பணிந்து ஆசி பெற்றது நம்பிக்கையையும் மனவலிமையையும் தந்தது‌. நான் செய்யக் கூடுவது ஒரு லட்சிய மாணவனுக்கு தகுதியை மேலும் வளர்த்துக் கொள்வது மட்டுமே.

நன்றி

சங்கரன்

***

மிக்க மிக்க அன்புடன்  ஜெயமோகன் அவர்களுக்கு,

ஆயிரத்தொன்று வணக்கங்கள் இ-மெயில் மூலமாக அனுப்ப முடியும் என்றால், இதோ என்னிடமிருந்து அனுப்புகிறேன்.

மூன்று மாதங்களுக்கு முன் வெண்முரசு தொடங்கினேன். சுமார் 35% முடிந்தது. என் வாழ்க்கை முடியும் முன்பே முடிக்க வேண்டும் என்பது என் பிரார்த்தனை. வெண்முரசு முடிக்கும் வரை, அதையும், உங்கள் தினசரி கடிதங்களையும் தவிர வேறு எதுவும் படிப்பதில்லை என்று சபதம் எடுத்துள்ளேன்.

ஒரே ஒரு கேள்வி மட்டும் அய்யா.  சியாமந்தகத்தில் அருண்மொழி அம்மையார் உங்களுடைய காதல் கதையை பற்றி எழுதும் கட்டுரைகளில், உங்களுடைய இளைய கால புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டிருந்தார். மீசை வைத்து மிகவும் சொடியாக இருக்கிறீர்கள். அதை ஏன் எடுத்துவிட்டீர்கள்? மீசை திருப்பி வருவதற்கு சான்ஸ் உண்டா?

இப்படிக்கு, உங்கள் வாசகன், சீடன், பின்பற்றுபவனான

ராஜாமணி.

***

அன்புள்ள ராஜாமணி

நடுவே ஒருமுறை வைத்துப்பார்த்தேன். மீசையிலேயே கை இருந்தது. அதை தவிர்க்கமுடியவில்லை. எடுத்துவிட்டேன்

பார்ப்போம்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 28, 2022 11:31

திருமா 60, கடிதம்

திருமா 60

அன்புள்ள ஜெ,

நீங்கள் திருமாவளவன் அவர்களை வாழ்த்தி சொன்ன ஒரு கட்டுரைக்கு ஏகப்பட்ட வசைகள். அதை விரும்பியபடி திரிக்கிறார்கள். ஆனால் அனைத்திலும் உள்ளடக்கம் என்பது அவரை நீங்கள் தமிழகத் தலைவராக முன்வைப்பது. இவர்கள் அவருக்கு தலித் தலைவர் என்னும் இட ஒதுக்கீட்டை மட்டும் அளிக்க ரெடியாக இருக்கிறார்கள்.

நீங்கள் இடதுசாரிகளை கோத்துவிடுகிறீர்கள் என்று ஒரு தரப்பு. குஜராத்திலும் மற்ற இடங்களிலும் இஸ்லாமியர் மீது வன்முறையை நடத்தியவர்கள் தலித்துக்கள்தான் என யமுனா ராஜேந்திரன் என்பவர் எழுதியிருந்தார். அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்று கேட்டிருந்தார்.

இந்துத்துவ தரப்பு திருமாவளவன் வன்முறையாளர் என்று வசைபாடி உங்களையும் வசைபாடியது.

நீங்கள் சொன்னது ஓர் அகவை வாழ்த்து. அதற்கு இத்தனை கொந்தளிப்பா என ஆச்சரியமாக இருக்கிறது.

செ. ஸ்டாலின்

***

அன்புள்ள ஸ்டாலின்,

நான் வாழ்த்தியமையால் அவருக்கு ஒரு அரசியல் லாபமும் இல்லை. சிலசமயம் சங்கடங்களும் உருவாகலாம். வாழ்த்தவேண்டுமென தோன்றியது. நான் எப்போதுமே சரித்திர ஆளுமைகளை சொல்லில் நிறுத்துவது எழுத்தாளன் பணி என நினைப்பவன் என்பதனால்.

நான் சொன்னது திருமா உருவாகிவந்த பின்னணியை. எது அவருடைய உருவாக்கத்தின் தேவையாக இருந்தது என்பதை. இடதுசாரிகளும் திராவிட இயக்கமும் தலித்துக்களுக்குரியவையாக இருந்தன என்றால் அவருடைய தேவையே இல்லையே.

நடைமுறையில் இடதுசாரி அரசியல், திராவிட அரசியல் எப்போதும் இடைநிலைச் சாதியின் கையிலேயே இருந்தது. இது தெரியாத கைக்குழந்தைகள் அல்ல எவரும். கொள்கைக்குரல் எல்லாம் சரி, நடைமுறை என வரும்போது கணக்குகள் வேறு. ஒரு போலீஸ் ஸ்டேஷனிலேயே இடைநிலைச்சாதி எம்.எல். தோழர் வேறு தலித் எம்.எல்.தோழர் வேறு. அதை கண்கூடாகக் கண்டிருக்கிறேன். அந்த யதார்த்தத்தில் இருந்தே தலித்துக்களுக்கு தனித்தலைமை தேவை என்னும் நிலை உருவானது.

திருமா உருவாகி வந்த பின்னரே தர்மபுரியில் தலித்துக்களுக்கு உண்மையான பாதுகாப்பும் நம்பிக்கையும் உருவாகியது. இது உண்மை. சொல்லிச் சொல்லி எல்லாம் எவரும் அதை மாற்றிவிட முடியாது.

இஸ்லாமியர்களுக்கு எதிராக தலித்துக்கள் கலவரம் செய்தார்கள், இஸ்லாமியரைக் கூட்டக் கொலை செய்தார்கள் என்பது யமுனா ராஜேந்திரன் மட்டுமல்ல, ஏராளமான இடதுசாரிகள் தொடர்ச்சியாகச் சொல்லிவரும் அப்பட்டமான அவதூறு. அவர்களின் தலித் காழ்ப்பையே அது காட்டுகிறது. உண்மையில் அதுதான் பிளவுபடுத்தும் உத்தி. அவர்களின் அரசியல் கணக்குகள் வேறு. குறிப்பாக யமுனா ராஜேந்திரனின் அரசியலென்பது ஒரு தெலுங்கு ஆதிக்கவாதம் மட்டும்தான். மார்க்ஸியம் எல்லாம் அவருடைய பொதுவெளிப் பாவனை மட்டுமே.

இந்துத்துவர் மிக எளிதாக திருமாவளவனை பொருள் இழக்கச் செய்யலாம். ஒட்டுமொத்தமாக அவர்கள் தலித் மக்களுடன் நிற்கலாம். அத்தனை கிராமக்கோயில் விழாக்களிலும் தலித்துக்கள் பங்கெடுக்குமபடிச் செய்யலாம். எல்லா இடத்திலும் தலித்துக்களுடன் நிற்கலாம். திருமாவளவனின் தேவையே இல்லாமல் செய்துவிடலாம். அதன்பின் பேசலாம்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 28, 2022 11:31

நான் எனும் பாரதீயன்

இன்றைய காலகட்டத்தில் தொல்லியல் துறை பண்பாட்டையும் நாட்டின் தொன்மையையும் தனது குடிகளிடம் எடுத்துச் செல்ல வேண்டியதின் அவசியத்தையும் அதே நேரம் தொல்லியில் துறை லாபமீட்டும் வகையிலும் செயல்பட வேண்டியதின் தேவையையும் திரு. முகமது முன்வைக்கிறார்.

நான் எனும் பாரதீயன் தொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 28, 2022 11:31

கு.அழகிரிசாமி நூற்றாண்டு, ஒரு செயல்திட்டம்

[image error]

கு.அழகிரிசாமி, தமிழ் விக்கி

தமிழ்ச் சிறுகதையுலகின் யதார்த்தவாத இலக்கிய ஆளுமையான கு.அழகிரிசாமி அவர்களின் நூற்றாண்டு தொடங்குகிறது. புதுமைப்பித்தன், கு.ப.ரா உள்ளிட்ட சிறுகதையாளர்களின் நிறைவரிசையில் கு.அழகிரிசாமி அவர்களும் தன்னுடைய புனைவுப் படைப்புகளால் முன்னோடியாகக் கொள்ளத்தக்கவர். இலக்கியம், இதழியல், நாடகம், மொழிபெயர்ப்பு, இசையியல் என பன்முகப் பரிமாணம் கொண்டவர். மானுடம் கொண்ட தீராப்பசியையும், விளிம்புநிலை எளிய வாழ்வினையும் தன் படைப்புகளில் மூலக்கருவாக்கியவர் இவர்.

எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்கள் இவரைப் பற்றிய தனது நினைவோடையில் “மனித இயல்பை ஒரு சிடுக்காகக் காணாமல் அமைப்பின் மீது அதிகக் குறைகளைக் கண்டவர். ஆட்டிக் குலைக்கும் வாழ்விலும் மனித ஜீவன்கள் தக்கவைத்துக் கொண்டிருக்கும் மேன்மைகள் இவரைப் புல்லரிக்கச் செய்கின்றன. எளிமையான சாயல்களும் மென்மையான குரலும் மிகுந்த சிறுகதைப் பிரக்ஞையும் கொண்டவர்” என்றுரைக்கிறார்.

ஆகவே, தமிழின் தலைசிறந்த சிறுகதைப் படைப்பாளுமையான கு.அழகிரிசாமியின் நூற்றாண்டு தொடக்கத்தை மனமேந்திக் கொண்டாடும்விதமாக, ஒருவருட செயற்திட்டத்தை தன்னறம் நூல்வெளி முன்னெடுக்கிறது.

இச்செயற்திட்டத்தின் முக்கிய செயலசைவுகளாக,

1. கு.அழகிரிசாமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளைத் தொகுத்துப் புத்தகமாக்கி, அவைகளை விலையில்லாப் பிரதிகளாக 1000 வாசிப்புமனங்களுக்கு வழங்குதல்

2. நவீன ஒவியர்களைக் கொண்டு அவருடைய சிறுகதைகளின் சாராம்சங்களை ஓவியங்களாக வரைந்து காட்சிப்படுத்துதல்

3. ஆறு சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து அவைகளை நாடக வடிவில் நிகழ்த்துவது

4. கு.அழகிரிசாமியின் மார்பளவு உருவச்சிலையை நிறுவுதல்

ஆகியவைகளை கு.அழகிரிசாமி நூறாண்டு நிறைவடையும் இந்த ஒருவருடத்திற்குள் படிப்படியாக நிகழ்த்தி முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். நம் மொழியின் ஓர் முன்னோடிப் படைப்பாளியை சமகால இளம் மனங்களில் நிலைநிறுத்தும் பெருவிருப்பமே இத்திட்டத்தின் பிரதானக் காரணம்.

ஓர் தமிழெழுத்தாளராக தலைசிறந்த படைப்புகளைத் தந்து இம்மொழியின் இலக்கியச் சாத்தியங்களைப் பெருமளவு உயர்த்தியமைக்காக நன்றிசெலுத்தும் பொருட்டு இந்தச் செயற்திட்டத்தை மனதிலேற்று செயலாற்றத் துவங்குகிறோம். தோழமைகளின் கரமிணைவு இக்கனவினை இன்னும் உயிர்ப்போடு நிறைவேற்றும்.

நன்றியுடன்,
தன்னறம் நூல்வெளி
www.thannaram.in

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 28, 2022 11:30

September 27, 2022

புதிரின் நண்பன் நான் (கல்பற்றா நாராயணன் உரை)

யாருக்காவது ஒரு புதிரின் (enigma) நண்பனாக இருக்க முடியுமா? இமயம் ஒரு புதிர்,  கடல் ஒரு புதிர்.  கிறிஸ்து ஒரு புதிர் என்பதால்தான் அவர் ஒரு கன்னியின் வயிற்றில் பிறந்ததாக சொல்லப்படுகிறது.  அதேபோலத்தான் கண்ணன் ஒரு புதிர் என நடராஜகுரு சொல்கிறார், அச்சொற்களால் தூண்டப்பட்டு வெண்முரசு போன்ற பிரம்மாண்டமான ஒரு நாவலை ஜெயமோகன் எழுதுகிறார்.  அவ்வாறு தான் அணுகும் அனைத்திலும் உள்ள மிக நுட்பமான புதிரின் ஈர்ப்பை அவர் உருவாக்கிக்கொள்கிறார். அதனால் கவரப்படுகிறார், அவரால் எந்த புதிரையும் கண்டுகொள்ள முடிகிறது. இதுவே ஜெயமோகனின் முக்கியமான தனித்தன்மை என நான் நினைக்கிறேன்.

உண்மையில், எப்பேர்ப்பட்ட ஆற்றல். நான் முதன்முதலில் அவரைக் கண்ட அன்றிலிருந்து இன்றுவரை தடையற்ற மின்சாரமென அது அவரிடமிருந்து வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதைக்கொண்டு இந்தியாவிலுள்ள அத்தனை கிராமங்களையும் மின்மயமாக்கலாம் என்று நாம் எண்ணிவிடுகிறோம். ஆற்றலைத் தாண்டி ஆழ்ந்த புரிதல்களையும் தனது புத்தகங்களின் வழி அவர் நமக்கு அளிக்கிறார்!

அனைத்தையும் மிக நுண்மையாக கவனிப்பவர் ஜெயமோகன். அவர் எப்படி செவிகொடுப்பவர் என அவருடன் இருக்கும்   நண்பர்களுக்குத் தெரியும். குற்றாலம் கவிதை அரங்கில் அரை மணிநேர உரையாடலுக்குப் பிறகு, ஒரு வார்த்தைகூட விட்டுப்போகாமல் அவர் அதை மொழிபெயர்த்து திரும்பக் கூறிய அற்புதத்தை நான் கண்டிருக்கிறேன். அவருக்கு எப்போதும் இது சாத்தியமாயிருக்கிறது. அசாதாரணமான இந்த ஞாபகத்திறனால், அவர் எதிர்கொள்ளும் எந்த நிகழ்வும் பழகியதாகிப் போவதில்லை. அதுவே கூட அவரது இந்த ஆற்றலுக்கு அடிப்படையாக இருக்கலாம்.

அவர் எதைத்தான் எழுதவில்லை! முதலில் கவிதை, பிறகு கட்டுரை, சிறுகதைகள், நாவல்; ஒரு கட்டத்தில் எல்லாவற்றை அதே தரத்தில் தொடர்ந்து நிகழ்த்தும், காவியங்களென்று மட்டுமே கொள்ளத்தக்க நாவல்களை எழுதுகிறார், வெண்முரசு போன்ற செவ்விலக்கியங்களை படைக்கிறார். அவர் எதையும் ஒருபோதும் கையொழிவதில்லை, கவிதை எழுதிக்கொண்டிருந்த காலத்தின் கவித்துவத்தையோ, சிறுகதை எழுதும்போதும் கூடியிருந்த ஒருமையையோ அவர் இன்னும் தவறவிடவேயில்லை. இவ்வளவு எழுதிய பிறகும் உயிர்ப்பற்ற ஒரு வாக்கியத்தை கூட அவர் இதுவரை எழுதுவதில்லை என்பதுதான் அதன் சிறப்பு. எதிலும் ஆழ்ந்த ஈடுபாடில்லாமல் அவர் எழுதுவதேயில்லை.ஒரு வரியும் வீணாகாமல் இலட்சக்கணக்கான வாக்கியங்கள் கொண்ட நூல்களை அவர் எழுதியிருக்கிறார்.

இதெல்லாம் ஒரு மனிதனுக்கு சாத்தியமே இல்லை எனத் தோன்றும். அப்படி சாத்தியமாக வேண்டுமெனில் அவனுக்கு ஒன்று நிகழ்ந்திருக்க வேண்டும். அவன் தன் வாழ்வில் மிகக்கடினமான தனிமையை அனுபவித்திருக்க வேண்டும். நரகத்தில் பல தினங்கள் அவன் வாழ்ந்திருக்க வேண்டும். தனது வாழ்வின் ஒரு கட்டத்தில் அப்படி மரணம் முன்னால் வந்து நிற்கும் நரகத்தில் அவர் இருந்திருக்கிறார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

நரகத்தில் வாழ்வதன் வித்தியாசம் என்ன தெரியுமா?  நரகத்தின் ஒரு வருடம் சொர்கத்தின் நூறு வருடங்களுக்குச் சமம். ஒருவன் நரகத்தில் ஒன்றோ இரண்டோ ஆண்டுகள் கடந்து வந்தால் போதும், அந்த பிறப்பின் முழுமைக்குமான ஒளியை அது அவனுக்கு வழங்கிவிடுகிறது. அப்படி அந்த நரகத்திலிருந்து பெற்ற ஒளியைக் கொண்டு அவர், ‘தான் இனி ஒளிர மட்டுமே செய்வேன்’ என்ற முடிவோடு, ‘எவரையும் இருட்டிலிருக்க விடமாட்டேன்’ என்கிற பிடிவாதத்தோடு, இன்றுவரை தனக்கும் தன்னைச் சுற்றி உள்ளவர்களுக்கும் மட்டுமல்லாது எல்லோருக்கும் ஒளியை அளிக்கும் ஒரு எழுத்து முறையை அவர் உருவாக்கியுள்ளார்.

அவர் ஒரு மிகச்சிறந்த பயணி, நான் அவருடைய சில பயணங்களில் உடன் சென்றிருக்கிறேன். பாதையே இல்லாமல் பயணம் செல்லக்கூடியவர் அவர். எப்போதும் அவரது பயணத்திற்கு பின்னர்தான் அங்கு பாதை உருவாகிறது. அவருக்கு முன்னால் வழிகள் இல்லை, அவருக்கு பின்னால் வழிகள் உருவாகின்றன. பிறர் நடந்த வழியை ஜெயமோகன் பின்பற்றுவதேயில்லை. நடந்த வழிகள் பல, நடக்காத வழிகள் மிகச்சில. அப்படி எங்கும் யாரும் நடக்காத வழிகளில் தினமும் நடந்துகொண்டிருக்கிற ஒரு மனிதன் உருவாக்குகிற அதிசயக்கத்தக்க ஒளிதான் ஜெயமோகனின் தனித்துவம்.

அறம் கதைகளை வாசிக்கும் போது, நான் அதிசயித்துப் போயிருக்கிறேன். இது எவ்வாறு சாத்தியமாகிறது, இந்த கதைகளிலுள்ள சிறப்பு என்ன?  உயிரோடு இருப்பவர்களும் மறைந்தவர்களுமான உண்மை மனிதர்களைக் குறித்த கதைகள் கொண்ட தொகுதி அது.  அதன் ஆச்சரியப்படுத்தும் தன்மை என்னவெனில் அதில் அவர் புனைவைக் கையாளவேயில்லை. உண்மைதான் அங்கு பிரதானமாக இருக்கிறது. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பின் தலைப்பே கூட ‘உண்மையின் கதை’ என்பதுதான் (Stories of the true). உண்மை இப்படி ஆச்சரியப்படுத்துமா என்ன? சரிதான், உண்மையன்றி பொய் எப்படி அப்படி ஆச்சரியப்படுத்தும்?

‘இதில் (அறம் கதைகளில்) உண்மை மட்டுமே உள்ளதா’ என நான் அவரிடம் கேட்டிருக்கிறேன். ‘நிச்சயமாக, ஆனால் உண்மையை மேலும் நம்பத்தகுந்ததாக சொல்ல சிலநேரம் அதில் சில பொய்களை சேர்த்திருக்கிறேன்’ என அவர் சொன்னார். ஆம், அது அப்படித்தான். உண்மைக்கு நுண்விவரணைகள் இல்லை. பொய்க்கு நுண்விவரணைகள் உண்டு. நம்பகமான உண்மை என்பது கொஞ்சம்  பொய் கலந்ததுதான். ஆங்காங்கே பொய்யின் பொடி போட்டு உண்மையை விளக்கி அதை மேலும் உண்மையாக ஆக்கியிருக்கிறார்.  ‘உள்ளதைச் சொன்னால் உறியும் சிரிக்கும்’ என்று மலையாளப் பழமொழி ஒன்றுண்டு. உண்மைதான் நமக்கு பேரானந்தத்தை தருகிறது. ஜெயமோகனின் எழுத்துக்களில் உள்ள உண்மைதான் எப்போதும் நம்மை உவகைகொள்ளச் செய்கிறது.

அவர் எந்த குறிப்பிட்ட வகைமையிலும் எழுதுவதில்லை, அவர் எழுதிமுடிக்கும்போது புதியவொரு வகைமை உருவாகிறது. அவர் எழுதும்போது புதிய வடிவம் ஒன்று உருவாகிறது. இத்தனை முழு நம்பிக்கையுடன் எழுதுவதற்கான இந்த திறன் எங்கிருந்து அவருக்குக் கிடைத்தது என்பதைத்தான் முன்னர் நான் சுட்டிக்காட்டினேன். அந்த நரகத்தில் இருந்து கைகொண்ட ஒளியுடன் அவர் முன்னே செல்வதால் மட்டுமே இது அவருக்குச் சாத்தியமாகிறது.

அவர் யாரையும் நிராகரிப்பதில்லை. எல்லோரையும் கேட்டுக்கொண்டிருப்பவர். அவரைப் பார்த்தால் இவற்றையெல்லாம் எழுதிய ஜெயமோகன்தானா இது எனத் தோன்றும்.

ஒரு கதையில் ஞானி ஒருவர், ஒரு அரசனை காணச் சென்று அவர் முன் அரியணையில் அமர்ந்தார். சீண்டப்பட்ட அரசன்  ‘நீ யார்’ எனக் கேட்கிறான். ‘மந்திரியா, அரசனா?’ என ஒவ்வொன்றாக கேட்டுவிட்டு ‘எதுவாக இருந்தாலும் என்னை தாண்டி இங்கு எதுவுமில்லை” (Nothing is above me)என்கிறான்.  ஞானி, ‘நான்தான் அந்த எதுவுமில்லாதது’  (That nothing is me) என்கிறார். அப்படி தான் என்பது எதுவுமில்லாத ஒன்று என்ற விவேகத்தை ஜெயமோகன் எக்காலத்திலும் புரிந்துகொண்டு வந்துள்ளார். அதுதான் அவரின் இந்த ஞானத்தின் அடிநாதமாக விளங்குகிறது.

இனி வரும் காலங்களில் இந்த ஞானம் ஒருவேளை ஒரு அற்புதமாக காணப்படும். பிற்காலத்தில் ஜெயமோகன் என்ற ஒருவரை பிறருக்கு நம்பமுடியாமல் போகலாம், அப்படி ஒரு காலம் வரும் என்பதில் சந்தேகமே இல்லை. நிச்சயம் அப்படி நடக்கும். ஏனென்றால் அதி அற்புதங்களை நம்மால் வரலாற்றிற்குள் வைத்து சொல்ல முடியாது. அதற்க்கான ஐதீகங்களும் கட்டுக்கதைகளும்  உருவாகி வரும். ஒரு புதிர் கட்டுக்கதைகளால் மட்டுமே வாழும்.

ஜெயமோகனுக்கு அறுபது வயதாகிறது என்பது நமக்கு எந்த ஆச்சரியத்தையும் கொடுப்பதில்லை. ‘அறுபது வயதா? இவருக்கு ஒரு அறுநூறு வயதாவது இருக்காதா’ என அவரது படைப்புகளை வாசிப்பவர் கேட்பார். அவர் இனி எழுதப்போகும் படைப்புகளை பற்றி யோசித்தால் அவருக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை எனவும் தோன்றும். அப்படி ஒரே சமயத்தில் முடிவில்லாத இளமை அவருக்கு கிடைக்குமென்பதில் எனக்கு ஒரு சந்தேகமுமில்லை. ஏனென்றால் அத்தனை நீண்ட காலத்திற்கு அவர் அந்த நரகத்திலிருந்து தனக்கான ஆற்றலைப் பெற்றிருக்கிறார். அதன் பலனாக இன்னும் நீண்ட காலத்திற்கு அவரது படைப்புகளில் அதை இனிமையாக அவரால் வெளிப்படுத்த இயலும் என நான் நம்புகிறேன். மேலும் பிரகாசமான அனுபவங்களை, உரையாடல்களை, வாழ்வை தூரத்தில் விலகி நின்று ஒட்டுதல் இல்லாமல் உள்வாங்கும் மனதும், அதை வெளிப்படுத்தும் எழுத்தாற்றலும் அவருக்கு உண்டு.

புத்தனைப் போலவே ஞானத்தின் மீது தீராத ஆர்வம் கொண்டவர்தான் இந்த பயணி. ஆனால் புத்தனைபோல அவர் தன்னுடைய யசோதரையை துயரத்தில் தள்ளிவிட்டு போகவில்லை. அவரை உணர்ந்து ‘அரண்மனையை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என அவரை வழியனுப்பிக் கொண்டிருப்பவர் இந்த யசோதரை.  இன்று இந்த மேடையில் அவர்கள் மாலை மாற்றிக்கொண்டது  என்றும் மணமகளாக  இருக்கப்போகிறவர் அவரது துணைவி என்பதனால்தான்.

அவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். பொதுவாக திருமணத்திற்குப் பிறகு காதல் கொஞ்சம் குறையும். ஆனால் அவர் எழுதியதை வாசித்தப்பிறகு வந்த காதல் என்பதால் அது வளர்ந்துகொண்டே இருக்கிறது. அருண்மொழிக்கு மட்டுமல்ல, இங்கு எல்லோருக்கும் ஜெயமோகன் மீது காதல்தான். அது குறைவதேயில்லை, வளர்ந்துகொண்டேதான் செல்கிறது.

அவர் குடிலில் வாழாமலே குடிலில் வாழ்பவர். ஒரு பயணதிற்கு போவது போலவேதான் அவர் எழுதுகிறார். எங்கு செல்லப்போகிறோம் என்ற எந்த உத்தேசமுமற்று எழுதத் துவங்குவார். “ஒன்றும் தோன்றாத தினங்களில் கணினியில் ‘அருண்மொழி அருண்மொழி அருண்மொழி ..’ என மூன்று தடவை எழுதும்போது நான்காவதாக ஒரு சிறுகதைக்கோ, நாவலுக்கோ, கட்டுரைக்கோ, விமர்சனத்திற்கோவான முதல் வரி கிடைத்துவிடும்” என என்னிடம் கூறியிருக்கிறார். பின்னர் அதுவே அதன் வழியை கண்டடைந்துகொள்ளும். எழுதி முடியும்போது அதன் வடிவத்தை அது பெற்றுவிடவும் செய்யும்.

அப்படி அதிசயிக்கத்தக்க வகையில் படைக்கக் கூடியவர் அவர். நினைத்துப்பாருங்கள், கோவிட் போன்ற ஒரு பெருந்தொற்று காலத்தில், யாரும் யாரையும் நேரில் சந்திக்கக் கூடாது, பேசக்கூடாது என தடைவிதிக்கப்பட்ட காலங்களை ஜெயமோகன் எப்படி பழிவாங்கினார் என. தினம் ஒரு கதை என எழுதி அவர் எல்லோருக்கும் மிக அருகில் இருந்தார்.

தினம் தனது இதிகாசத்தில் ஒரு பாகத்தை அவர் எழுதி வந்துள்ளார், ஒரு மனிதன் இதிகாசம் எழுதுகிறான் என்பது எவ்வளவு பெரிய அற்புதம் இல்லையா. ஹோமர் எத்தனை பேர் என்ற சர்ச்சை இன்னும் இருக்கிறது, வேதவியாசன் உண்மையில் எத்தனை பேர் என இன்று சந்தேகமிருக்கிறது. ஆனால் இதோ இருபத்தையாயிரம் பக்கங்களை கொண்ட ஒரு புத்தகம். இது ஜெயமோகன் என்ற ஒற்றை மனிதன் எழுதியதல்ல என்ற சர்ச்சைகள் எதிர்காலத்தில் நிச்சயமாக உருவாகும். தனி ஒருவரால் இப்படி ஒரு காப்பியத்தை எழுதமுடியாதென பிறர் சொல்லக்கூடும்.  வரும்காலங்களில் ஜெயமோகனை நியாயப்படுத்தவோ, ஏற்றுக்கொள்ளவோ கட்டுக்கதைகள் உருவாக்கப்படும். அப்படிப்பட்ட அற்புதம் ஜெயமோகன். அப்படிப்பட்ட புதிர் ஜெயமோகன்.

நண்பர்களே, அப்படிப்பட்ட அந்த புதிரின் தோழன் நான் என்பதை தவிர எனக்கு வேறென்ன பெருமிதம் வேண்டும்?

(மலையாள ஒலிவடிவில் இருந்து தமிழில் ஆனந்த்குமார்)

(ஆனந்த்குமார் தமிழ் விக்கி  )

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 27, 2022 11:35

கோவி.மணிசேகரன் எனும் மர்மம்

1992ல் கோவி மணிசேகரனுக்கு லில்லி தேவசிகாமணி விருது வழங்கப்பட்டது. அன்று முப்பது வயதான இளம்படைப்பாளியாகிய எனக்கும் அவ்விருது வழங்கப்பட்டது. கோவி மணிசேகரனுடன் என்னை சமானமாக வைத்ததை ஏற்கமுடியாது என நான் அவ்விருதை மறுத்துவிட்டேன். அது அன்று ஒரு விவாதமாக ஆகியது. சுபமங்களா இதழில் குறிப்புகள் வெளிவந்தன.

1980ல் கோவி மணிசேகரன் தன் யாகசாலை என்னும் நாவலை சினிமாவாக எடுக்க முயன்றார். அம்முயற்சி பாதியிலேயே நின்றுவிட பெரும் பண இழப்புக்கு ஆளாகி எம்.ஜி.ஆரிடம் சென்று கண்ணீர்விட்டார். மனமிரங்கிய எம்ஜிஆர் அவருக்கு தமிழக அரசின் ஆகப்பெரிய இலக்கிய விருதான ராஜராஜன் விருதை 1984ல் வழங்கினார். எம்ஜிஆரின் இரக்கமனதுக்கு உதாரணமாக இது சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் விருதுகள் இப்படித்தானா அளிக்கப்படவேண்டும்?

ராஜராஜன் விருது கோவிக்கு சாகித்ய அக்காதமி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுத்தந்தது. 1992ல் அவருக்குச் சாகித்ய அக்காதமி விருது குற்றாலக் குறிஞ்சி என்னும் நாவலுக்காக கிடைத்தபோது இலக்கிய உலகில் கடுமையான கண்டனங்கள் உருவாயின.

வேடிக்கையான மனிதர். ஜெயகாந்தன் போலவே நடையுடை பாவனைகளை மேற்கொண்டவர். ஆனால் அவர் எழுதியவை பெரும்பாலும் பாலியல் கதைகள். பாலியல்கதைகளையே அடுக்குமொழியில் வரலாற்றுநாவல்களாகவும் எழுதினார். அன்றும் இன்றும் அவருக்கு அனேகமாக வாசகர்களே இல்லை. அவரை விரும்பிவாசித்த ஒருவரைக்கூட நான் கண்டதில்லை. ஆனால் எப்படி புகழ்பெற்ற வணிக எழுத்தாளராக இருந்தார்?

கோவி.மணிசேகரன் கோவி. மணிசேகரன் கோவி. மணிசேகரன் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 27, 2022 11:32

சி.மணி நினைவுக்குறிப்பு

சி.மணி

வனம் இதழில் சாகிப் கிரான் கவிஞர் சி.மணி பற்றி எழுதியிருக்கும் நினைவுக்குறிப்பு அழுத்தமான ஒரு வாழ்க்கைச் சித்திரம். மிகையற்ற, ஆனால் கூரிய விவரணைகள் வழியாக கவிதையை இழந்து இறுதி நோக்கிச் சென்றுகொண்டிருந்த கவிஞரை நமக்கு காட்டுகிறது

 சிதைவை நோக்கி- சி.மணியுடன் சில வருடங்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 27, 2022 11:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.