Jeyamohan's Blog, page 703
October 6, 2022
இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் நூலின் அணிந்துரை
2003ல் வெளிவந்த இந்துஞான மரபில் ஆறுதரிசனங்கள் என்னும் எனது நூலுக்கு மார்க்சிய அறிஞர் சோதிப்பிரகாசம் எழுதிய முன்னுரை இது. அவர் எழுதிய வாழ்க்கையின் கேள்விகள் நூலுக்கு நான் அணிந்துரை எழுதினேன். அது வாழ்க்கையின் கேள்விகள் பதில்களுக்கு அப்பால் என்னும் தலைப்பில் வெளியாகியது.
ஒருவரை ஒருவர் முற்றாக மறுக்கும் இருவர் பகைமை இல்லாமல் பேசிக்கொண்ட பொற்காலம் அது. ஏனென்றால் அன்று இருவருக்கும் அவரவர் சிந்தனைகள் மேல் நம்பிக்கை இருந்தது. தங்கள் சிந்தனைகளின் மதிப்பு பற்றிய பதற்றம் இருக்கவில்லை.
இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் நூலின் அணிந்துரை
இந்த நூலுக்கு அணிந்துரை எழுதுகின்ற வாய்ப்பினை நண்பர் ஜெயமோகன் எனக்கு அளித்து இருக்கிறார். இதன் பின்னணியை வாசகர்களுடன் முதலில் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ஜெயமோகன் எழுதி இருக்கின்ற பல கதைகளில் நான் படித்த நெடுங்கதை, ‘பின்தொடரும் நிழலின் குரல் ‘ மார்க்ஸியத்திற்கு எதிராக அதில் நிகழ்த்தப்பட்டு இருக்கின்ற வாதங்களை மறுத்து, அதற்கு ஒரு விள்ளனத்தை நான் எழுத (பார்க்க: ‘வரலாற்றின் முரண் இயக்கம் ‘: பாகம் ஒன்று. பக். 197), பின்னர் எங்களுக்குள் நாங்கள் நடத்திக் கொண்டு வந்த வாதங்களின் விளைவாக, ‘வாழ்க்கையின் கேள்விகள் ‘ என்னும் எனது மார்க்ஸிய நூலின் இரண்டாம் பதிப்பிற்கு அணிந்துரை ஒன்றினை அவர் எழுத, இந்திய மெய்ப்பொருண்மை பற்றிய அவரது இந்த நூலுக்கு அணிந்துரை எழுதுகின்ற வாய்ப்பினை இப்பொழுது நான் பெற்றிட நேர்ந்து இருக்கிறது. சிறந்த ஒரு சிந்தனையாளராக நான் காண்கின்ற நண்பர் ஜெயமோகனின் நூலுக்கு அணிந்துரை எழுதுவது எனக்கு மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
இந்திய மெய்ப்பொருண்மை (தத்துவ)ச் சிந்தனைகளை யாவரும் புரிந்து கொள்ளுகின்ற வகையில் எளிமையாகவும், அதே நேரத்தில், மிகவும் ஆழமாகவும் இந்த நூலை அவர் எழுதி இருக்கிறார். எளிமை என்று இங்கே நான் குறிப்பிடுவது, எளிய நடையாக இன்று சித்தரிக்கப்பட்டு வருகின்ற நுனிப் புல்களை அல்ல; கருத்துத் தெளிவினை என்பதை ஈண்டு நான் சுட்டிக்காட்டிக் கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால், எளிய நடை என்று ஒன்று இல்லை; கருத்துகளின் தெளிவுதான் ஒரு நூலுக்கு எளிமையினை நல்குகிறது; என்பது தான் எனது கருத்து.
இப்படி, மிகவும் தெளிவான நடையில் மிகவும் தெளிவான கருத்துக் கோவைகளாக எழுதப்பட்டு இருக்கின்ற ஒரு நூல் இது. இந்திய மெய்ப் பொருண்மையின் ஆழங்களுக்குள் நுழைந்து பார்த்திட விருப்பம் உள்ளவர்களால் மட்டும்தான் இதன் எளிமையைப் புரிந்துகொள்ள முடியும். எந்த ஒரு நூலாக இருந்தாலும். அந்த நூல் நுதலுகின்ற பொருளின் ஆழங்களுக்குள் நுழைந்து பார்த்திடுகின்ற ஒரு தேடுதல் இல்லாதவர்களுக்கு, கடினமான ஒரு நூலாகத்தான் அந்த நூல் தெரிந்திடவும் முடியும்.
தமிழர் சிந்தனை மரபு பற்றிய ஒரு நூலை நான் எழுதிட வேண்டும் என்று 12 ஆண்டுகளாக என்னைக் கேட்டுக் கொண்டு வருபவர் எனது நண்பர் சீனி குலசேகரன். எனவே, வட இந்தியச் சிந்தனை மரபுகளைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு, ஒரு மார்க்ஸியவாதி என்கின்ற வகையில், தேவி பிரசாத் சட்டோபாத்யாயாவின் நூல்களை அவ்வப்போது நான் வாசித்துக் கொண்டு வரல் ஆனேன். மார்க்ஸிய மரபுகளாக ஸ்தாலினிச மரபுகளை ஏற்றுக்கொண்டு வந்து இருப்பவர்தாம் தேவி பிரசாத் சட்டோபாத்யாயா என்பதை எனக்கு எடுத்துக் காட்டிட அவரது நூல்கள் தவறவில்லை.
தமிழ் மொழி என்று ஒன்று இருப்பதும் திராவிடர் என்னும் ஒரு பந்தவம் இருந்து வந்து இருப்பதும் கூட அவருக்குத் தெரிியவில்லை; அல்லது தெரிந்துகொள்ள அவர் முயலவில்லை! தன்னுள்தான் அனைத்தும் அடக்கம் என்று ஸ்தாலினிசம் கருதுவது போல, சமஸ்கிருத இலக்கியங்களுக்குள்தான் இந்தியச் சிந்தனை அனைத்தும் அடக்கம் என்னும் கொள்கையை அவர் கொண்டு இருப்பது வேடிக்கையாகவும் எனக்குத் தெரிந்தது. ஸ்தாலினிச வகையைச் சேச்ந்தவராகத்தாம் டி.டி. கோஸாம்பி கூட எனக்குத் தெரிகிறார். ‘இந்தியா ‘ என்று குறிப்பிடுகின்ற பொழுது. 1947-க்கு முந்தைய இந்தியாவையும் ‘இந்திய ஒன்றியம் ‘ என்று குறிப்பிடுகின்ற பொழுது. 1947-க்குப் பிந்தைய இந்தியாவையும் தாம் சுட்டுவதாக இர்ஃபான் ஹ:பீ:ப் ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்ற வேறுபாடுகளைக் கூட இவர்களிடம் நம்மால் காணமுடியவில்லை.
திராவிட மொழிகளின் தாக்கங்களை வேத மொழியில் காணலாம் என்று பி:டி.சீனிவாச அய்யங்கார் கூறுகிறார் (Life in anciant India , Page ீ.6) என்றால், தேவி பிரசாத் சட்டோபாத்யாயாவோ, ‘லோகாயதா ‘ என்னும் சொல்லின் வேரைக் காண்பதற்குச் சம்ஸ்கிருத அகராதிக்குள் (Lokayata PP 1-3 ] நுழைந்து விடுகிறார். அதே நேரத்தில், இக உலக வாழக்கையைப் பற்றிய ஒரு பருமைவாத (Materialismீ) மெய்ப்பொருண்மைதான் லோகாயதம் என்றும் அவர் குறிப்பிடுகிறார். அப்படி என்றால். இந்தச் சொல்லின் வேரினைத் தமிழ் மொழியில்தான் அவர் தேடி இருக்க வேண்டும் என்பது வெளிப்படை. ஆனால் அவருக்கோ தமிழ் என்று ஒரு மொழி இருந்து வருவதே தெரியாது போலும்! எனினும், உலகு – உலகாயதம் – லோகாயதம் என்று திரிந்து வந்து இருக்கின்ற ஒரு தமிழ்ச் சொல்தான் இது!
இதுபோல. சிந்து வெளி நாகரிகத்தைத் தெரிந்து வைத்து இருக்கின்ற டி. டி. கோஸாம்பிக்கு, ஆதிச்ச நல்லூரின் பொருநை வெளி நாகரிகம் தெரியவில்லை. இந்திய வரலாற்றின் சிறப்புகள் அனைத்துக்கும் இந்தோ-ஆரியர்கள்தாம் காரணம் என்று கூறி விடுவது பெரும்பாலான எழுத்தாளர்கள் இடையே இன்று ஒரு பாணி ஆகிவிட்டது என்று: டி.ன்.சேஷ அய்யங்கார் குறிப்பிடுவது (Dravidian India P XI), டி.டி.கோஸாம்பி போன்றோரையும் சேர்த்துதான் என்று நமக்கு எண்ணத் தோன்றுகிறது. இவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்ற பொழுது. ‘ஆண் மந்தி ‘ என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபுதான் ஹனுமந்த் என்னும் ஹிந்திச் சொல் என்று கூறுகின்ற (Feeders of Indian Culture P12) : பி.எஸ்.உபாத்தியாயா நம்மிடையே எவ்வளவோ உயர்ந்து நிற்கிறார்.
சரி, இவர்களுக்கும் ஜெயமோகனுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன ? என்று வாசகர்களுக்கு இங்கே கேட்கத் தோன்றலாம். ஆனால், ஒரு வேறுபாடாக வெளிப்படுகின்ற ஒரு தொடர்புதான் இது! இந்த வேறுபாடோ, கருத்துத் தெளிவின் வேறுபாடு! இந்திய மெய்ப்பொருண்மையின் வளர்ச்சியையும் விளர்ச்சியினையும். கரணிய முறையாக (rationality ) நமக்குத் தொகுத்துத் தந்து இருக்கின்ற ஜெயமோகனின் கருத்துகள், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, டி.டி.கோஸாம்பி முதலியோர்தம் கருத்துகளை விட தெளிவில் தலைசிறந்து விளங்குகின்றன என்பது எனது கருத்து.இந்நூலில் ஜெயமோகன் தொகுத்து அளித்து இருப்பது, ‘இந்திய ‘ மெய்ஞான மரபா அல்லது ‘இந்து ‘ மெய்ஞான மரபா என்னும் முரணத்திற்கு(controversy) விடையாக, ஹிந்து என்னும் சொல் பற்றிய ஜவஹர்லால் நேருவின் கருத்துகளைச் சுட்டிக்காட்டி நான் அமைந்து விடுவதுதான் ஈண்டு பொருத்தம், அவர் கூறுவது இதுதான்:
‘நமது பழைய இலக்கியங்களில் ‘ஹிந்து ‘ என்னும் சொல் காணப்படவில்லை. கி.பி.8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு தந்திரிக நூலில்தான் முதன்முதலாக இந்தச் சொல் காணக்கிடைக்கிறது என்று தெரியவருகிறது. இந்த நூலில், ஒரு மதத்தினரை அல்லாமல், ஒரு மக்களைத்தான் ‘ஹிந்து ‘ என்னும் சொல் குறிக்கிறது. ஆனால், அவஸ்தாவிலும் பழைய பார்சிய மொழியிலும் காணப்படுகின்ற இந்தச் சொல். மிகவும் பழைமை னது என்பது தெளிவு. இந்தியாவைக் குறிப்பதற்கு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மேற்கு மற்றும் மத்திய ஆசிய மக்களால் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டு வந்து இருக்கிறது – அதாவது, இண்டஸ் ஆற்றிற்கு மறுகரையில் உள்ள மக்கள் என்னும் பொருளில்! இண்டஸ் ஆற்றைக் குறிக்கின்ற ‘சிந்து ‘ என்னும் சொல்லின் திரிபுதான் இது! இந்தச் சிந்து என்னும் சொல்லில் இந்துதான் ‘ஹிந்து ‘ மற்றும் ‘இந்தியா ‘ என்னும் சொற்கள் பிறந்தன. ‘ (The Discovery of India pp ீ.74)
இந்த நூலின் தலைப்பைப் பார்த்தவுடன் வாசகர்களிடம் எழுகின்ற முதல் கேள்வி, மெய்ஞான மரபு என்றால் என்ன ? என்பதாகத்தான் இருக்க முடியும். இந்தக் கேள்விக்கு விடை பகர்கின்ற வகையில், பின்வருமாறு ஜெயமோகன் எழுதுகிறார்:
‘மெய் ஞான மரபு என்பதை நம்பிக்கைகளின் தொகுப்பாகப் பலர் உருவகித்து வந்து உள்ளனர். ‘ (பக். 13)
ஆனால்,
‘மெய் ஞான மரபு என்பது தரிசனங்களின் வரிசையே ஆகும். ‘ (பக். 13)
அப்படி என்றால், தரிசனம் என்றால் என்ன ? என்னும் கேள்வி எழுவது இயல்பு.
‘தரிசனம் என்பது வாழ்க்கை மற்றும் பிரபஞ்சம் குறித்த ஒட்டு மொத்தமான பார்வை ஆகும். ‘ (பக். 16)
என்று இந்தக் கேள்விக்கு அவர் விடை பகர்கிறார். கூடவே,
‘தரிசனங்கள் என்பவை தத்துவ நிலைப்பாடுகளும் கூடத்தான், ஆகவே மெய் ஞான மரபு என்பது தத்துவ மரபும் கூடத்தான். ‘ (பக். 15)
என்று தரிசனங்கள் பற்றிய தமது வரையறையை விரிவுபடுத்திக் கொள்ளவும் அவர் தவறவில்லை. மேலும், தரிசனம் என்பதற்குச் சிறப்பான ஓர் எடுத்துக்காட்டினையும் அவர் தருகிறார்:
‘மார்க்ஸியம் என்பது ஒரு தரிசனம். காரணம், மார்க்ஸியமானது அரசியல், பொருளாதாரம், ஒழுக்கவியல், இலக்கியம் என்று எல்லாத் தளங்களுக்கும் பொருத்திப் பார்க்கப்படுகிறது, ‘ (பக், 17)
அப்படி என்றால். தத்துவம். அதாவது. மெய்ப்பொருண்மை என்றால் என்ன ? என்பது நம்முள் எழுந்து வருகின்ற அடுத்த கேள்வி ஆகிறது.
‘தத்துவம் என்பது அனைத்து அறிவுத் துறைகளிலும் உள்ள தருக்கங்களின் தொகுப்பு. ‘ (பக். 3)
என்று இந்தக் கேள்விக்கு அவர் விடை தருகிறார்.
ஆக, தருக்கங்களின் அடிப்படையில். மெய்ம்மையின் (reality) முழுமையினையும் காண்கின்ற மொத்தமான ஒரு பார்வைதான், தரிசனம் என்பதும், இதுபோன்ற தரிசனங்களின் தொகுப்புதான், மெய்ஞான மரபு என்பதும் ஜெயமோகனின் அறுதியான கருத்துகள் என்பது தெளிவு. ‘தத்துவம் ‘ என்னும் சொல்லைப் புறக்கணித்து. ‘மெய்ப்பொருண்மை ‘ என்னும் சொல்லை இங்கே நான் கையாள்வதற்கு, தத்துவம் என்னும் சொல் ஒரு தமிழ்ச்சொல் அல்ல என்று நான் கருதுவது அல்ல காரணம் மாறாக ‘உண்மை ‘ என்பதனை ‘மெய்ப்பொருள் ‘ என்று சுட்டுவதுதான் தமிழர்தம் சிந்தனை மரபாக இருந்து வந்து இருக்கிறது என்பதுதான் காரணம் ‘ ‘மெய் ‘ என்னும் தமிழ்ச் சொல்லுக்கு ‘உடல் ‘ என்று பொருள் என்பது அனைவரும் அறிந்தது. ‘மெய்ப்பொருள் காண்பது அறிவு ‘ என்று திருவள்ளுவர் கூறுகின்றபொழுது. பருப்பொருள்களின் அல்லது பருமை நிலவரங்களின் (material conditions) சாரமான உண்மையைக் காண்பதுதான் ஆழமான அறிவு என்றுதான் அவர் குறிப்பிடவும் செய்கிறார். ஆனால், சாங்கிய மரபும் இதுதான் என்று நான் கருதுகிறேன்.
‘மெய்பொருண்மை ‘ என்பது அனைத்து வகையான தருக்கங்களினதும் தொகுப்புதான் என்றால், அது அறிவியங்கியல் (epistemology] அல்லது அறிவின் தேற்றம் (theory of knowledge ீ) மட்டும்தானே! அப்படி என்றால், மெய்ப்பொருண்மை என்பது என்ன ஆயிற்று என்று இங்கே நமக்குக் கேட்கத் தோன்றலாம். எனினும், ஜெயமோகனின் வரையறைகளை நினைவில் நாம் கொள்வோம் என்றால், இந்தியத் தரிசனங்களைப் புரிந்து கொள்வது நமக்குக் கடினமாக இருந்திட முடியாது. தரிசனம் என்னும் சொல் ஒரு தமிழ்ச்சொல். ‘கண் தெரிகிறது ‘ என்னும் வாக்கியத்தில், ‘பார்வை ‘ என்னும் பொருளில்தான் ‘தெரிதல் ‘ என்னும் சொல் ளப்படுகிறது என்பது வெளிப்படை. இதனால்தான், கனவு காண்பதைத் தெரிசனம் காண்பதாகத் தென்பாண்டி மக்கள் இன்னமும் குறிப்பிட்டுக் கொண்டு வருகிறார்கள். இந்தத் தெரிசனம்தான், வடக்கு நோக்கிய அதன் பரவலில் ‘தர்ஷனா ‘ என்று திரிந்தது. னால் தேவி பிரசாத் சட்டோபாத்யாயாவோ ‘த்ருஷ் ‘ என்னும் சொல்லில் இருந்து வந்ததுதான் ‘தர்ஷனா ‘ என்று குறிப்பிடுகிறார். (Indian Philosophy pp 28.)
இங்கே, சொல் ஆய்வுகளை நான் நிகழ்த்திக் கொண்டு வருகிறேன் என்பதை விட, சாங்கியத் தரிசனத்தின் தோற்றுவாயைக் காண்பதற்கு நான் முயன்று கொண்டு இருக்கிறேன் என்பதுதான் முக்கியம். ஏனென்றால், சாங்கியம், அதன் புருசம் கியவை பற்றி ங்காங்கே நான் படிக்கின்ற பொழுதுகளில் எல்லாம், தமிழ் நாட்டில் தோன்றிய ஒரு தெரிசனமாகத்தான் அது இருந்திட வேண்டும் என்னும் எண்ணம் எனக்குள் எழுவது உண்டு. ‘சாங்கியத் தரிசனமானது எழுத்து வடிவில் பதிவு செய்யப்பட்ட தத்துவ வரலாற்றுக்கும் முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தது. திட்டவட்டமான தருக்கப் புத்தியை நம்பி இயற்கையை ஆராயப் புகுந்த பழங்குடி மரபில் இருந்து முளைத்தது என்கிறார் ரிச்சர்ட் கார்பே. ‘ (பக். 56)என்று ஜெயமோகன் கூறுகின்ற பொழுது, இதே கருத்தினைத்தான் அவரும் வெளிப்படுத்துகிறார் என்றுதான் நான் கருதுகிறேன்.
புடவியின் (பிரபஞ்சம்) அடிப்படைகளாக ஐம்பெரும் பூதங்களை வகைப்படுத்துகின்ற சாங்கிய மரபு. அறிவுப் புலன்களாக ஐந்து புலன்களையும் குறிப்பிடுகிறது. ஜெயமோகனின் வார்த்தைகளில் இதனைக் கூறுவது என்றால் –
‘. . .குண ரூபங்களே இல்லாத ஆதி இயற்கையில் முதல் விழிப்பு ஏற்படுவது அதில் பிரக்ஞையின் துளி உருவாகும் போதுதான். பிரக்ஞை உருவான உடனே அகங்காரம் உண்டாகிறது… அகங்காரம் என்றால் சுய பிரக்ஞை அல்லது தன்னுணர்வு.
தன்னுணர்வு உருவானதும் அதன் வெளிப்பாடுகளாகப் பிற தத்துவங்கள் பிறந்தன… முதலில் உருவாவது ஒலி, தொடுகை, நிறம், சுவை, மணம் எனும் ஐந்து குணங்கள். இவை ஐந்து தன்மாத்திரைகள் எனப்படுகின்றன. இந்த ஐந்து தன்மாத்திரைகளில் இருந்து ஐந்து புலன்கள் உருவாகி வந்தன. இவை ஞான இந்திரியங்கள் (அறிவுப் புலன்கள்) எனப்பட்டன. கண், காது, நாக்கு, மூக்கு, சருமம் என அவை ஐந்து. இவற்றைச் செயல்படுத்தும் பொருட்டு ஐந்து கர்ம இந்திரியங்கள் உருவாயின. அவை வார்த்தை, கை, கால் என்று கூறப்பட்டன. மொத்தம் பதினாறு.
இந்தப் பதினாறு அறிதல் மூலங்களின் விளைவாகவே ஐந்து பருப்பொருட்கள் அடையாளம் காணப்பட்டன, இந்த ஐந்துப் பருப்பொருட்களின் எல்லாத் தனித் தன்மைகளும். இவ்வாறு உணரப்படுவதன் மூலம் உருவாகி வருபவையே ஆகும். நிலம், நீர், வானம், நெருப்பு, காற்று என அவை ஐந்து. இவ்வாறு பஞ்சபூதங்கள் உருவான பிறகு அவற்றின் மூலம் பெறும் அனுபவங்களைக் கோர்த்து அறியவும் அவற்றை மதிப்பிடவும் கூடிய மனம் உருவாகிறது. இது இருபத்தி நான்காவது தத்துவம்.
இந்த இருபத்தி நான்கு தத்துவங்களின் செயல்பாடு மூலமே நாம் காணும் இயற்கையாக ஆதி இயற்கை மாறித் தெரிகிறது என்கிறது சாங்கியம். புல், புழு, சூரியன், காற்று, மனிதர்கள், காமம், குரோதம், மோகம் எல்லாமே இந்த இருபத்து நான்கு தத்துவங்களின் விளைவுதான். ‘ (பக். 62-63)
ஆனால், தொல்காப்பியரின் கருத்துகள் தாம் இவை என்பது சொல்லாமலே விளங்கும். மிகத் தெளிவாகப் பின்வருமாறு தமது கருத்துகளைத் தொல்காப்பியர் வரிசைப்படுத்துகிறார்:
‘நிலம், தீ, நீர், வளி, விசும்பு… ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம். ‘
(தொல்காப்பியம். பொருளதிகாரம். மரபியல்-91.)
இங்கே. வளி என்பது காற்றையும் விசும்பு என்பது விண்ணையும் குறிக்கும். இனி,
‘ஒன்றறிவு அதுவே உற்று அறிவு அதுவே
இரண்டறிவு அதுவே அதனொடு நாவே
மூன்றறிவு அதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவு அதுவே அவற்றொடு செவியே
ஆறறிவு அதுவே அவற்றொடு மனனே
நேரிதில் உணர்ந்தோர் நெறிப் படுத்தினரே ‘
(தொல்காப்பியம். பொருளதிகாரம். மரபியல்-27)
என்று, ஐம்புலன்களையும் அவற்றினால் ஆகின்ற அறிதல்களையும் அவர் வரையறுக்கிறார்.
இப்படி, ஐம்பூதங்களின் மயக்கமாக ஆதி இயற்கையையும் அறிவுப்புலன்களாக ஐந்து புலன்களையும் தொல்காப்பியர் குறிப்பிடுவதை நாம் காண்கிறோம். மேலும், ஐம்புலன்களினால் பெறப்படுகின்ற புலன் அறிவுகளின் தொகுப்பாகவும், அதே நேரத்தில், அவற்றில் இருந்து எழுகின்ற ஒரு தொகை-விளைவின் உச்சமாகவும், ஆறாவது அறிவாக மனத்தினை அவர் வரையறுக்கிறார். கூடவே, தமக்கு முன்னரே பல்வேறு சிந்தனையாளர்களால் இந்தத் தொகுப்பு நெறிப்படுத்தப்பட்டு விட்டது என்பதைச் சுட்டிக்காட்டவும் அவர் தவறவில்லை.
இனி, ஆதி இயற்கையில் இருந்து புடவியும் இப்புடவியின் உயிர் இனங்களும் கிளைத்து வந்து இருக்கின்ற விளர்ச்சியினைப் பின்வருமாறு அவர் சித்தரிக்கிறார் :
‘புல்லும் மரனும் ஓர் அறிவு இனவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே,
நந்தும் முரளும் ஈர் அறிவு இனவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே,
சிதலும் எறும்பும் மூவறிவு இனவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே,
நண்டும் தும்பியும் நான்கு அறிவு இனவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே,
மாவும் புள்ளும் ஐயறிவு இனவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே,
மக்கள் தாமே று அறிவு உயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே, ‘
(தொல்காப்பியம். பொருளதிகாரம். மரபியல்-28-33,)
ஆக, தொல்காப்பியர் தம் சிந்தனை மரபுதான் சாங்கியச் சிந்தனை மரபு என்பது தெளிவு, எழுத்தில் வடிக்கப்பட்ட உலக இலக்கியங்களுள் முதல் இலக்கியம், அதுவும், இலக்கண-இலக்கியம், தொல்காப்பியம்தான் என்பது எனது கருத்து,
‘மயங்குதல் ‘ என்னும் சொல்லிற்கு ‘கலத்தல் ‘, ‘நெருங்குதல் ‘ என்று பொருள். ‘சகடம் ‘ என்னும் சொல்லிற்கு ‘வண்டி ‘ என்று பொருள். ‘சாகாடு ‘ என்னும் சொல்லிற்கு ‘உருளை ‘ என்று பொருள். எனவே, ‘சாங்குதல் ‘ என்னும் சொல்லிற்கு ‘உருள்தல் ‘, ‘கலத்தல் ‘, ‘உருட்சியின் மயக்கம் ‘ என்று பொருள்.இப்பொழுது, ஜெயமோகனின் துணையுடன் தமிழ்ச் சாங்கியத்தைச் சற்று நாம் பார்ப்போம்.
ஒரு சுழற்சி இயக்கமாக ஆதி இயற்கை மயங்கிக் கிடந்தது; அதன் இயங்கு ஆற்றல்தான் ‘புருசம் ‘ இந்த இயக்கமோ மூன்று வகையானது, ஒன்று: நேர் நிலை இயக்கம் (சத்துவ குணம்). இரண்டு: எதிர்நிலை இயக்கம் (தமோ குணம்). மூன்று: நடுநிலை இயக்கம் (ரஜோ குணம்). இவற்றுள், நடுநிலை இயக்கத்தினை ஒரு முரண் இயக்கமாகவும் நாம் எடுத்துக் கொள்ளலாம்.
அதாவது, நேர்நிலை இயக்கமாகவும் எதிர்நிலை இயக்கமாகவும் தன்னுள்தானே சுழன்று கொண்டு இருந்த ஆதி இயற்கை அதனுள் எழுந்த முரணியக்கத்தின் விளைவாக வளர்ச்சி அடைந்து புடவியாக மாற்ரம் அடைந்தது.
புரிதல் என்ற சொல்லுக்கு முறுக்குதல் ஆக்குதல் பொருத்துதல் விரிதல் மேவி வருதல் என்று பொருள். புரிதிரிபு என்பதற்கு வேறுபடுதல் என்று பொருள். புரிதல் என்னும் இந்த சொல்லின் முந்தைய வடிவம்தான் புருதல் என்னும் சொல்.எனவே வேறுபட்டு மாறுபடக்கூடிய ஓர் இயக்கம் என இதனை நாம் புரிந்து கொள்ளலாம்.
ஆக, ஆதி இயற்கை மற்றும் புருசம் முதலிய கருத்தமைவுகளை (concepts) அடிப்படையாகக் கொண்ட சாங்கியத் தரிசனம், ஒரு தமிழ்த் தெரிசனம்தான் என்பது எனது கருத்து.
இங்கே, சாங்கியம் பற்றிய தேவி பிரசாத் சட்டோபாத்யாயாவின் விளக்கங்களுக்கும் ஜெயமோகனின் விளக்கங்களுக்கும் இடையே உள்ள ஒரு வேறுபாடு நமது கவனத்தைக் கவர்கிறது.
சத்துவ குணம், தமோ குணம், ரஜோ குணம் என்ற மூன்றினையும், வெறும் குணங்களாக மட்டும் ஜெயமோகன் பார்க்கவில்லை. நேர், எதிர், நடு என்னும் முரண்பட்ட இயக்கங்களாகவும் (பக்.65) அவற்றை அவர் காண்கிறார். இப்படி, ஒரு மூலமுதல் சிந்தனையாளராகத் தம்மை ஜெயமோகன் வெளிப்படுத்துகிறார் என்று நான் கருதுகிறேன். மற்றும் பிற இடங்களிலும் அவரது மூலமுதல் சிந்தனைகளை வாசகர்கள் காணலாம்.
ஜெயமோகன் இங்கே வழங்கி இருப்பது பழைய தெரிசனங்களின் ஒரு தொகுப்புதானே. மூலமுதல் சிந்தனை என்று நாம் எடுத்துக் கொள்வதற்கு இதில் என்ன இருக்கிறது ? என்று சிலருக்குக் கேட்கத் தோன்றலாம். ஆனால், ‘பழைய சிந்தனைகளின் புதியது ஒரு தொகுப்புதான் புதிய சிந்தனையே ஒழிய, முற்றிலும் புதிதாகத் தமது மண்டையில் இருந்து யாரோ ஒரு புதிய மேதாவி உதிர்த்துத் தள்ளி விடுகின்ற ஒரு தனிமைச் சிந்தனை அல்ல ‘ (வரலாற்றின் முரண் இயக்கம்: பாகம் இரண்டு. பக்.223) என்பதுதான் எனது பதில்.
‘அவ்வை ‘ என்று ஒரு நாடகத்தை எழுதி இருக்கின்ற கவிஞர் இன்குலாப், அதன் முன்னுரையில் குறிப்பிடுகிறார் – ‘அங்கும் தகர்க்கப்பட வேண்டிய மாயைகள் உண்டு ‘ என்று! இதைப் படித்ததும் நான் அதிர்ச்சி அடைந்தேன். ஏனென்றால், 2000 ண்டுகளுக்கு முற்பட்ட அவ்வையாரின் காலத்திலும் தகர்க்கப்பட வேண்டிய மாயைகள் ‘உண்டு ‘ என்று, அவருக்கு 2000 ண்டுகளுக்கும் பிற்பட்ட இன்குலாப் கூறுகிறார் என்றால், இவரது வரலாற்றுப் பார்வையை எப்படி நாம் புரிந்து கொள்வது ? அவ்வையார் காலத்துச் சமுதாய நிலவரங்களை அடிப்படையாகக் கொண்டுதான், அவர் காலத்து மனித வாழ்க்கையை நாம் ஆய்ந்திட வேண்டும் என்பது கூட இவருக்குப் புரியவில்லை. எனினும், முக்காலங்களையும் கடந்து சென்று, முக்காலங்களின் மாயைகளையும் தகர்த்து எறிந்திட முற்படுகின்ற ஒரு முக்காலப் புரட்சிக்காரராகத் தம்மைக் காட்டிக் கொள்வதில், இவருக்கு ஒரு மகிழ்ச்சி போலும்!
இது போல, ‘இந்திய மெய்ப்பொருண்மையில் இருப்பனவும் இறந்தனவும் ‘ என்னும் தேவி பிரசாத் சட்டோபாத்யாயாவின் நூலைத் திறந்த பொழுதும், இதே போன்ற ஓர் அதிர்ச்சிதான் எனக்கு ஏற்பட்டது. சிந்தனையின் வரலாற்றில், ‘இருப்பதும் இறந்ததும் ‘ என்னும் வகைப்பாட்டிற்கு இடம் ஏது ? இந்த வகையில், ‘முக்கியமான எந்தச் சிந்தனையும் காலாவதி ஆவது இல்லை. ‘ (பக். 7) என்று கூறுகின்ற ஜெயமோகனின் பார்வைதான் சரியான ஒரு வரலாற்றுப் பார்வையாக எனக்குத் தெரிகிறது.
‘மார்க்ஸியம் என்று ஒரு புதிய சிந்தனை தோன்றி வந்த உடன், அதற்கு முன்னர் விளங்கி வந்து இருந்த அனைத்துச் சிந்தனைகளும் வீழ்ந்துவிட்டன என்று நாம் சொல்லிவிட முடியுமா ? என்றால், அதுதான் முடியாது. ஏனென்றால், முந்திய சிந்தனைகளின் பிந்திய தொகுப்புதான் மார்க்ஸியம். இதில் புதுமை என்பது, முந்திய சிந்தனைகளை மார்க்ஸ் தொகுத்து இருக்கின்ற தொகுப்பு முறையும் அவற்றில் காணப்பட்ட இடைவெளிகளைத் தமது புதிய தொகுப்பின் விளக்கங்களினால் அவர் நிரவல் செய்து (complement) கொண்டதும் தாம் கும் ‘ (வரலாற்றின் முரண் இயக்கம்: பாகம் இரண்டு. பக், 215) என்று கார்ல் மார்க்ஸின் சிந்தனை வளர்ச்சியைப் பற்றி நான் குறிப்பிட்டு இருந்தேன். ஜெயமோகனின் வரலாற்றுப் பார்வைக்கும் எனது பார்வைக்கும் இடையே உள்ள ஒற்றுமையின் வெளிப்பாடாகவும் இதைநான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆனால் ஜெயமோகனோ வெறும் எதிர்நிலைகளாக மட்டுமே எங்கள் உறவைக் காண்கிறார். நானோ
எதிர் நிலைகளின் ஒற்றுமையாக எங்கள் தொடர்பினைக் காண்கிறேன். ஏனென்றால், எதிர் நிலைகளாக வெளிப்படுகின்ற கருத்துகள், வெறுமனே எதிர்க் கருத்துகள் மட்டும் அல்ல. ஒன்றை ஒன்று வளப்படுத்திச் செம்மைப்படுத்துகின்ற தருக்கக் கருத்துகளும் குஆம். ஜெயமோகனின் ‘பின்தொடரும் நிழலின் குரல்: ஓல் அலசல் ‘ என்னும் கட்டுரையில் தெளிவாக இதனை வாசகர்கள் காணமுடியும்.
ருஷ்யப் புரட்சிக்குப் பின்னர் ருஷ்யாவில் அமைக்கப்பட்டு இருந்த சமுதாயம். ஒரு சமுகாண்மைச் சமுதாயம் (socilalist society ] அல்ல; மாறாக. ஓர் அரசு-முதலாண்மைச் சமுதாயம் (state capitalist society ] என்பதை ‘வரலாற்றின் முரண் இயக்கம். ‘ பாகம் இரண்டில் நான் நிறுவி இருக்கிறேன் என்பது சரிதான். ஸ்தாலினைப் பற்றியும் அதில் நான் குறிப்பிட்டு இருக்கிறேன். எனினும் மார்க்ஸியம் என்பது மனித விடுதலை வாதம் என்றால், ஸ்தாலினிசம் என்பது அரசு-முதலாண்மை வாதம் என்று அதில் நான் ‘வரையறை ‘ எதையும் செய்திடவில்லை.
ஆனால், ஜெயமோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ பற்றிய எனது அலசலில் பின்வருமாறு அறுதியாக ஸ்தாலினிசத்தை நான் வரையறுத்து இருக்கிறேன்.
‘ஸ்தாலினிசம், ஸ்தாலினசம் என்று இன்று நாம் தாக்குதல் தொடுக்கிறோமே, அதுதான் என்ன ? ஸ்தாலினின் மீசையா ? அவரது உடலா ? அவரது மூளையா ? அவரது குணநலன்களா ? இப்படி எல்லாம் பாகுபடுத்திப் பார்த்து ஸ்தாலினிசத்தை நம்மால் புரிந்து கொள்ளத்தான் முடியுமா ?
… உழைப்பாளள் வருக்கத்தின் மறுநிகரியாக (prpresentativeீ) நின்று, மனித விடுதலைவாதத்தினை மார்க்ஸ் பேசினார் என்றால், ஸ்தாலினோ அதிகார வருக்கத்தின் மறுநிகரியாக நின்று, அரசு-முதலாண்மை வாதத்தைப் பேசினான்.
… ஸ்தாலினிசம் என்கின்ற பொழுது, அரசு-முதலாண்மை வாதத்தினை மட்டும்தான் நாம் குறிப்பிடுகிறோம். ஸ்தாலினிச அடக்குமுறை என்கின்ற பொழுது, அதிகார வருக்கத்தின் அடக்குமுறையை மட்டும்தான் நாம் குறிப்பிடுகிறோம்.
எனவே, ஸ்தாலினிசத்திற்கு எதிர்ப்பு என்பது அரசு-முதலாண்மைக்குத் தெரிவிக்கப்படுகின்ற எதிர்ப்பு; ஸ்தாலினிசத்தின் வீழ்ச்சி என்பது அரசு-முதலாண்மையின் வீழ்ச்சி, ‘ (வரலாற்றின் முரண் இயக்கம் : பக்கம் ஒன்று. பக்.229-30)
இப்படி, அறுதியாக ஸ்தாலினிசத்தை நான் வரையறுத்து இருப்பதற்குக் காரணம். ஜெயமோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரலல்தான் என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் ஈண்டு நான் பெருமை கொள்கிறேன். ஓர் எதிர் நிலையாக நின்று, எனது கருத்துகளை நான் செம்மைப்படுத்திக் கொள்வதற்கு எனக்கு அவர் உதவி இருக்கிறார்; அறுதியாக அவற்றை வரையறுக்குமாறு என்னை அவர் கட்டாயப்படுத்தி இருக்கிறார் என்பது தான் இதற்குப் பொருள்.
எனவேதான், வரவேற்கப்பட வேண்டிய கருத்துகளாக எதிர்க் கருத்துகளை நான் கருதுகிறேன். ஜெயமோகன் பெரியவரா அல்லது நான் பெரியவனா ? என்பது அல்ல இங்கே கேள்வி. (நிறைய பேருக்கு இதுதான் கேள்வி!) எங்களது கருத்து மோதல்களின் மூலம், வாசகர்கள் தெளிவு பெறுவதற்கு அவர்களுக்கு நாங்கள் உதவி இருக்கிறோமா என்பதுதான் கேள்வி. எனது நூல்களினால் ஜெயமோகனுக்கும் இப்படி ஏதேனும் நேர்ந்து இருக்கக் கூடுமா என்பதற்கு ஜெயமோகன்தான் விடை கூறிட வேண்டும்.
ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம் ‘ போல. ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ சிறப்பாகக் கருதப்படவில்லை என்று எனது நண்பர் சொ.கண்ணன் என்னிடம் ஒரு நாள் கூறினார். கலை-இலக்கியம் என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது என்று கூறுவதற்கு ஜெயமோகன் கொஞ்சம் தயங்கிடலாம் என்ற போதிலும், சொ.கண்ணனோ சற்றும் தயங்குவது இல்லை; மிகவும் வெளிப்படையாகவே என்னிடம் இதனை அவர் கூறிவிடுவார். எனினும். ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ பற்றிய எனது கருத்துகளை வாசகர்கள் முன் வைத்திட ஈண்டு நான் விரும்புகிறேன்.
காதல் பாசம் முதலிய இயற்கை உறவுகளும் காமம் பசி போன்ற இயற்கையான தேவைகளும் சமுதாய வாழ்க்கையிலே அடைகின்ற நிறைவேற்றங்களையும் ஏமாற்ரங்களையும் சித்தரித்துக்காட்டி இவற்றின் விளைவான உணர்ச்சிகளையும் (emotionss) உணர்மங்களையும் (sentiments) வாசகர்களின் உள்ளங்களில் படர விடுகின்ற கதைகளை, பொதுப்படையான கதைகளாக நான் கருதுகிறேன்.
கூடவே, அடுத்த கட்டமாக, சமுதாய வாழ்க்கையின் சிக்கல்களையும் அவற்றின் தன்மைகளையும் அவற்றின் தீர்வுகளைப் பற்றிய விவாதங்களையும் விரிவுபடுத்தி, சமுதாய வாழ்க்கையின் பிற கூறுகளையும் சித்தரிக்கின்ற கதைகளை, சிறப்பான கதைகளாக நான் கருதுகிறேன்.
இத்தகைய சிறப்பான கதைகளில், கொள்கைகளும் அவற்றின் பறைசாற்றல்களும் வலியுறுத்தப்படுவது, இக்கதைகளின் கலை-அழகினைச் சிதைத்து விடுகிறது என்று வாதிடுபவர்கள் இருக்கலாம். ஆனால், சமுதாயச் சிக்கல்களையும் தீர்வுகளையும் கதைப் பொருள்களாகக் கொண்டு இருக்கின்ற கதைகளில், கொள்கையின் மோதல்கள் இல்லாமல் இருப்பதுதான். அவற்றின் மெய்மைத் தன்மையினைச் சிதைத்து விடக் கூடியது என்பது எனது கருத்து,
இதுபோன்ற கதைகளின் சிறப்புகளாகப் பின் வருவனவற்றைக் குறிப்பிட நான் விரும்புகிறேன். (1) இவற்றில் வெளிப்படுத்தப்படுகின்ற சமுதாய அக்கறை; (2) உணர்ச்சிகளுக்கும் உணர்மங்களுக்கும் அப்பால் சிக்கல்களின் காரணங்களைக் காணத் தூண்டுகின்ற இவற்றின் தேடல்.கதைகளையும் கவிதைகளையும் தமது தொடக்க வாசிப்புகளாகக் கொண்டு வந்து இருக்கின்ற இளைஞர்கள். சமுதாய அக்கறையுடன் ய்வுகளுக்குள் நுழைவதற்கு அவர்களைத் தூண்டுகின்ற சிறப்புகள் இவை!
இந்த வகையில், ஸ்தாலினிசத்தின் கொடுமைகளைச் சமுதாய அக்கறையுடன் சித்தரித்து இருக்கின்ற ஒரு கதைதான் ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ என்பது எனது கருத்து, இதில் உள்ள ஒரே ஒரு குறைபாடு. மார்க்ஸியமும் ஸ்தாலினிசமும் இதில் வேறுபடுத்திப் பார்க்கப்படவில்லை என்பதுதான் ‘ எனினும், ‘விஷ்ணுபுரம் ‘ கதையில் சில பகுதிகள் பின்னர் சேர்க்கப்பட்டு இருப்பது போல, மார்க்ஸியத்தையும் ஸ்தாலினிசத்தையும் வேறுபடுத்திக் காட்டுகின்ற வகையில், ‘பின்தொடரும் நிழலின் குரலி ‘லும் சில பகுதிகள் சேர்க்கப்படும் என்றால், உலகத் தரத்தின் முன்னணியில் நிற்கின்ற ஒரு கதையாக அது மிளிரும் என்பதில் எனக்கு ஐயம் எதுவும் இல்லை.
‘… சங்கரரின் பெயரில் இயங்கும் சங்கர மடங்கள் இன்று அப்பட்டமான சாதி வெறி. அதி தீவிர புரோகித வழிபாட்டு முறைகள் முதலியவற்றில் மூழ்கியுள்ளன ‘ (பக். 117)
என்று கூறுகின்ற ஜெயமோகன்,
‘… தன் காலக் கட்டத்தில் எல்லா அதிகாரங்களையும் கையில் வைத்திருந்த புரோகிதர்களை அவர்களுடைய மூல நூல்களைக் கொண்டே சங்கரர் தோற்கடித்துத் தன் தரப்பை நிலைநாட்டினார், இது ஒரு சரியான முடிவு என வரலாறு நிரூபிக்கவில்லை ‘ (பக். 116)
என்று கூறி முடிக்கிறார். சாதி வேறுபாடுகளும் சுரண்டல்களும் ஒழிந்திடவில்லையே என்னும் கவலையையும் அவர் வெளிப்படுத்துகிறார். இங்கே,
‘கருத்து வாத (idealismீ) மாகப் பாப்ப்போம் என்றால், ஒரு குறிப்பிட்ட உணண்மையே (ஜெயமோகனின் சொல்லாட்சியில் ‘பிரக்ஞை ‘) ஓஞ் ஊழியினையும் அழிப்பதற்குப் போதுமானதாக இருந்தது… ‘ ( ‘அடிப்படைகள் ‘. பக். 540-41) ஆனால், ‘கருத்துகள், பழமையினைத் தாண்டிச் சென்றிட முடியாது; பழைமையினைப் பற்றிய கருத்துகளைத் தாம் தாண்டிச் சென்றிட முடியும். கருத்துகளினால் எதையும் தாண்டிச் சென்றிட முடியாது. கருத்துகளைச் செயல்படுத்துவதற்குச் செயல் திறம் வாய்ந்த மனிதர்கள் தேவை ‘ (புனிதக் குடும்பம், பக்.140) என்று கூறிய மார்க்ஸின் கருத்துகள். நாம் சிந்தித்து நோக்கிடத் தக்கவை.
புலனறிவு நிலையில் இருந்து காரண அறிவு நிலையினை எய்தி இருந்த ஆதிசங்கரர், காரண அறிவின் முழுவீச்சுடன் மீண்டும் புலனறிவினை வந்து அடைந்திடவில்லை என்பதுதான் அவரது சிந்தனையின் குறைபாடு என்று எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால், கருமஞானம் மட்டும
போதகர் சத்தியநாதன், ஒரு மகத்தான குடும்பம்
அன்புள்ள ஜெ
டேனியல் பூர், வில்லியம் மில்லர் போன்ற கட்டுரைகளின் வரிசையில் ஒரு மகத்தான விக்கி கட்டுரை கிருபா சத்தியநாதன். நான் அங்கிங்கே உதிரிச்செய்திகளாகவே வாசித்திருக்கிறேன். அந்தக்கட்டுரையில் இருந்து போதகர் சத்தியநாதன் குடும்பத்தின் வெவ்வேறு ஆளுமைகளை வாசித்தேன். சத்தியநாதன், அவர் மனைவி அன்னா சத்தியநாதன், அவர் மகன் சாமுவேல் சத்தியநாதன், அவருடைய இரு மனைவிகளான கிருபா சத்தியநாதன், கமலா சத்தியநாதன், அவர்கள் நடத்திய பத்திரிகை என்று தொட்டுத்தொட்டுச் செல்லும் ஆறு கட்டுரைகளையும் வாசித்து முடிக்க இரவு மூன்றுமணி ஆகியது. அவ்வளவு உசாத்துணைகளும் இருந்தன. கிருபை பெற்ற குடும்பம் என நினைத்துக்கொண்டேன்.
டேவிட் தேவாசீர்வாதம்
*
அன்புள்ள டேவிட்
தமிழகப் பண்பாட்டுக்குப் பெருங்கொடை ஆற்றிய இரண்டு கிறிஸ்தவக் குடும்பங்கள் உண்டு. அதிலொன்று போதகர் சத்தியநாதனின் குடும்பம். தமிழ்விக்கி போன்ற ஓர் அமைப்பு, அறிஞர்களின் மேற்பார்வையில் இப்படிப்பட்ட பதிவுகளை உருவாக்கினால் மட்டுமே அவர்கள் கவனம்பெறுவார்கள். இனிமேல் ஒருவேளை நிறையவே எழுதப்படலாம்.
ஜெ
ஆனந்தக் குமாரசாமியும் நிலவியலும் -கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
இன்று கல்லூரியில் கனிமங்களை ,அதிலும் REE எனப்படும் rare earth elements பற்றிய குறிப்புக்களுக்காக இலங்கையின் அரிய கனிமங்களை குறித்தான பழைய கட்டுரைகளை தேடி வாசித்துக்கொண்டிருந்தேன். ஒரு ஆய்வறிக்கையில் 1904ல் Ananda Coomaraswamy என்பவர் இலங்கையில் இருந்து சேகரித்த யுரேனினைட் என்னும் கனிமம் குறித்தும் பின்னர் அதில் இருநது ஏராளமான தோரியம் கண்டறியப்பட்டதையும் வாசித்தேன். அந்த ஆனந்த குமாரசுவாமி தமிழ் விக்கி மூலமாக நான் அறிந்துகொண்டிருக்கும் ஆனந்த குமாரசுவாமிதான்.
இலங்கையின் அரிய கனிம வளங்களை 1821ல் முதன் முதலில் ஆராய்ந்தவர் இங்கிலாந்தின் மின்னியலாளரும் வேதியியலாளரும் ஆன ஹம்ப்ரி டேவியின் சகோதரரான ஜான் டேவி. அவருக்கு பிறகுதான் இலங்கையின் அரிய கனிமங்களை குறித்து உலகம் அறிந்துகொண்டிருக்கிறது. ஆனாலும் 1903 வரை சொல்லிக்கொள்ளும் படியான கனிம ஆய்வுகள் ஏதும் இலங்கையில் நடைபெற்றிருக்கவில்லை.
1903ல் திரு Dunstan என்பவரின் மேற்பார்வையில் தொடங்கிய இலங்கையின் கனிம வளங்கள் குறித்த ஆய்வின் போதுதான் ஆனந்த குமார சுமாமியும் ,ஜேம்ஸ் பார்சன்ஸ் என்பவருமாக அவர்களுக்குக் கிடைத்த கரிய எடை மிகுந்த கனிமத்துண்டுகளை அவை யுரேனினைட் ஆக இருக்கலாம் என்று யூகித்து ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள் ஆனால் அதில் தோரியத்தின் அளவு 75 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்ததால் ஆய்வு முடிவுகளை குறிப்பிட்டு இதற்கு தோரியனைட் என பெயரிடலாமென்று நேச்சர் இதழில் ஆய்வுக்கட்டுரை வெளியிடப்பட்டிருக்கிறது. (Nature, march 30, 1904 p.510)
1904ல் இலங்கையின் கனிமவளத்துறையின் இயக்குநராக இருந்த ஆனந்த குமாரசுவாமி அவரது இந்த கண்டுபிடிப்பை குறித்தும் நேச்சர் இதழில் வெளியான கட்டுரையை தொடர்ந்து அதில் தோரியம் இருக்கின்றது, இல்லை என எழுந்த சர்ச்சைகளை குறித்தும் விரிவாக எழுதியிருக்கிறார்.பேட்டியளித்துமிருக்கிறார்
இலங்கையின் கனிம வளங்களுக்கான தேடலின் போது ’நம்பு’ nampu என அழைக்கப்பட்ட கனிமங்களை கொண்டு வந்து தரும் உள்ளுர்க்காரர்களுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டிருக்கிறது. இப்படி பல சுவாரஸ்யமான தகவல்களுடன் ஆனந்த குமாரசுவாமியின் கண்டுபிடிப்பை குறித்த பல கட்டுரைகள் இணையத்தில் இருக்கின்றன.
//Until 1903 there was no proper Geological Survey Unit in Sri Lanka and matters related to mineralogy was looked after by the Ceylon Survey Department. In 1903 Ceylon Mineralogical Survey was established under the directorship of Ananda Coomaraswamy, previously serving as the Mineralogical Surveyor of the Ceylon Survey Department . Ananda Coomaraswamy invigorated mineralogical studies in the country, making many original contributions, most notable being the discovery of a new mineral in collaboration with the amateur mineralogist W.D Holland in 1903-1904//
பல கட்டுரைகளில் அவர் “the groundbreaking theorist who was largely responsible for introducing ancient Indian art to the West”.என்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார்.
ஆனந்த குமாரசுவாமி நான்கு மனைவிக்காரர். தந்தை இலங்கைத்தமிழர், தாய் ஆங்கிலேயர், தாத்தா பிரிட்டிஷ் அரசாங்கத்தில் அரசியல்வாதி மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
தந்தை சர் பட்டம் பெற்றவர்,சைவச்சித்தாந்தத்தை ஆசியச்சங்கத்தின் இலங்கைக் கிளையில் 1857-ல் ஆங்கிலேயருக்கு வாசித்துக் காட்டி விளக்கியவர். அரிச்சந்திரன் கதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நாடகமாக்கியவர். பாலி நூலான ததவம்ஸாவை மொழிபெயர்த்தவர் இப்படி ஆனந்த குமாரசுவாமியை குறித்து தமிழ்விக்கியின் (ஆனந்த குமாரசுவாமி ) மூலம் அறிந்ததிலேயே அவர் மிக முக்கியமான, சுவாரஸ்யமான ஆளுமையாக மனதில் பதிந்திருந்தார். தோரியனைட் கண்டுபிடிப்பினால் மேலும் அணுக்கமாகிவிட்டார். தமிழ் விக்கி இப்படி பலரை தொடர்ந்து அறிமுகம் செய்துகொண்டேயிருக்கிறது. நன்றி
அன்புடன்
லோகமாதேவி
கோவை விழா, கடிதங்கள்
அன்புள்ள ஜெ ,
உங்கள் சியமந்தகத்தில் கலந்துகொள்ள வேண்டும் என, அறிவிப்பு வந்த அன்றே முடிவெடுத்து விட்டேன் .ஆனால் நான் என் வீட்டில் “சியமந்தகம்” என்றால் என்ன என்று விளக்க வேண்டியிருந்தது காரணம் அறுபதாம் திருமணம் என்ற பதம் மட்டுமே அவர்களுக்கு தெரியும் .நான் உங்கள் வாசகனாக மட்டுமல்ல என் சகோதரியின் (அருண்மொழிநங்கை) பிறந்த ஊர்க்காரன் என்ற முறையில் கலந்து கொள்வது அவசியம் என நினைத்தேன்.
பட்டுக்கோட்டையில் இருந்து கிளம்பும் போது நான் நினைத்தது ,நீங்கள் எழுத்தாளனாக எனக்கு தந்தது என்ன என்று? வாழ்க்கையில் நேர்மறை எண்ணங்களை வகுத்துக் கொள்வது எப்படி ? எப்படி சோர்விலிருந்து நம்மை மீட்டு லட்சியவாதம் நோக்கி செல்வது என்பதை உங்கள் எழுத்தின் வழியே நான் கண்டடைந்தேன் .எத்தனையோ படைப்பாளர்களின் படைப்புக்களை வாசித்திருந்தாலும் உங்கள் எழுத்தின் வழி மட்டுமே உங்களுடன் மிக அணுக்கமாக உணர்ந்தேன் .உங்களுடன் நேரில் சந்தித்து உரையாடியது கூட கிடையாது . அது தேவைகூட இல்லை .எழுத்தாளனின் படைப்பு போதும் அவனுடன் உரையாட . வள்ளுவனையும் ,கம்பனையும் இவ்வளவு ஏன் ஜெயகாந்தனையும் நேரில் பார்த்தா அவர்களுடன் ஒன்றினோம் ? அவர்கள் நம் ஆளுமை மீது ஆதிக்கம் செலுத்தவில்லை ? அப்படித்தான் இதுவும் . ஒரு வேளை நேரில் சந்தித்தால் சில குணங்கள் நமக்கு ஒத்து போகாமல் கூட இருக்கலாம் .யார் கண்டது ?.ஆதலால் நேரில் காணாமல் படைப்பின் வழி அனுக்கமாவது நல்லது. படைப்பை கொண்டாடும் நம் சமூகத்தில் நாம் பெரும்பாலும் படைப்பாளனை கொண்டாடியதில்லை .நாம் கொண்டாட தவறிய ஆளுமைகள் எத்தனையோ பேர் இங்குண்டு. அது பாரதியில் துவங்கி சுந்தர ராமசாமி வரை பெரும் பட்டியல் உண்டு .ஆனால் உங்களுக்கு அந்த நிலையை உங்கள் வாசகர்களாகிய நாங்கள் தரமாட்டோம் என்பதன் அறிகுறிதான் இது போன்ற விழாக்கள் .
விழா நடைபெறும் கிக்கானி பள்ளிக்கு நான் மாலை தான் வந்தேன் .அரங்கத்தில் வெண்முரசு ஆவணப்படம் ஓடிக்கொண்டிருந்தது .எனக்கு ஒரே ஆச்சர்யம் , அது ஆவணப்படம் குறித்தல்ல ,கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர் உள்ளே அமர்ந்திருந்தனர். தமிழ்நாட்டில் ஒரு நடிகருக்கு மட்டுமே இது போன்ற கூட்டம் சாத்தியம் .கேரளத்தில் தான் எழுத்தாளர்களுக்கு கூட்டம் கூடும் என படித்திருக்கிறேன் .ஒரே பிரமிப்பு .வெளியில் வந்து விஷ்ணுபுரம் ஸ்டாலில் சிறில் அலெக்ஸ் மற்றும் செந்தில் குமார் இருந்தனர் .அங்கே உங்களின் “தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்” அபி குறித்து விஷ்ணுபுரம் வெளியிட்டு ஆய்வு தொகுப்பு” “குமரித்துறைவி” என மூன்று புத்தகங்களை வாங்கினேன் .
அலை அலையாய் வாசகர்களை ஒரே நேரத்தில் கண்டது உண்மையில் பரவசம். பவா, பாரதி பாஸ்கர், யுவன் என எல்லா ஆளுமைகளும் என் அருகில் மற்றவர்களுடன் பேசி கொண்டிருக்க நான் ஒரு வார்த்தையும் பேசாது அவர்களை பார்த்து கொண்டிருந்தேன். யாரிடமும் பேசாது பாத்துக்கொண்டிருப்பது கூட சுகமே. எழுத்தாளர்கள் வண்ணதாசன், கீரனூர் ஜாகிர் ராஜா, முஜிபுர் ரகுமான், அகர முதல்வன், என எல்லா ஆளுமைகளும் ஒரே இடத்தில் இருப்பது உங்கள் மீது கொண்ட அன்பு தானன்றி வேறில்லை. உங்களை போல் பிற எழுத்தாளர்களை அறிமுகம் செய்தது தமிழகத்தில் வேறு எழுத்தாளர் யாருமில்லை என்றே நான் நினைக்கிறேன்.
விழாவில் கல்பற்றா நன்றாக பேசினார் ஆனால் சில பதங்கள் புரியவில்லை எனக்கு. ஆனால் கீரனூர் ஜாகிர்ராஜா என்னோடு பேசும் போது விழாவில் கல்பற்றாவின் பேச்சு தான் உச்சம் என்றார் .முத்தையா ,பாரதி பாஸ்கர் ,பவா என அவர் அவர்கள் உங்களை எப்படி உள்வாங்கி உள்ளனர் என்பதை அவர்கள் பேச்சின் வழி தெரிந்தது .ஊருக்கு செல்ல நேரமானதால் பவா பேசி முடித்ததும் கிளம்பிவிட்டேன். வீட்டிற்கு வந்து தான் உங்கள் உரை மற்றும் யுவன் உரைகளை ஸ்ருதி டிவி சேனல் வழி பார்த்தேன் .இதில் என்ன விசேஷம் என்றால் உங்களை நேரில் பார்க்கவே முடியவில்லை .பரவாயில்லை உங்கள் நிகழ்வில் கலந்துகொண்டதே போதும் .அதுவே நான் உங்களுக்கு செய்யும் மரியாதை.
அன்புடன்
செல்வா ,
பட்டுக்கோட்டை
மணிவிழா கொண்டாடிய பேரன்பும் பெரு மதிப்புக்கும் உரிய ஜெமோ அவர்களுக்கு..
எனது அன்பும் அகமும் பொங்கி பிரவகிக்கும் நல்வாழ்த்துக்கள். இலக்கியம் சோறு போடுமா? என்று கேட்டதற்கு குமுதத்தில் மாலன் அவர்கள் சொல்லிய பதில்..
‘பசியை கொடுக்கும்’. அப்போது அவர் குமுதத்தின் ஆசிரியராக இருந்தார். சோறு என்ன பிரியாணியே போடும் என்று சுஜாதா பாணியில் பதில் சொல்லி இருக்கலாம். அவ்வாறு அவர் பதில் அளிக்க மறுத்ததற்கு அன்றைய இலக்கிய சூழல் ஒரு காரணம். அதே இலக்கிய உலகின் விடிவெள்ளியாய் உருவெடுத்த தாங்கள் ‘எழுத்து எனக்கு தங்கத்தட்டில் சோறு போடுகிறது’ என்று பதில் அளித்தீர்கள். இரண்டுக்கும் சுமார் 20 ஆண்டுகள் இடைவெளி இருக்கலாம்.தன்னை அறிந்தவன் தரணியை வெல்வான் இது முதுமொழி. இது உங்களுக்கு முழுக்க முழுக்க பொருந்தும்.
ஒரு எழுத்தாளனாக பல ஆயிரம் நெஞ்சங்களை வசப்படுத்தியுள்ளீர்கள். விஷயத்துக்கு வருகிறேன். உங்கள் மணிவிழாவுக்கு வரவேண்டும் என்பது எனது பேரவா.ஆனால் பணிச்சூழடலால் விடுமுறை கிடைக்காத பரிதாபம் தொடர்ந்ததால் என்னால் வர இயலவில்லை.
ஆனால் விழா நடந்த நாள் அன்று என் மனது கிக்கானி அரங்குக்குள் தான் உலவி கொண்டிருந்தது. ஆனாலும் மனது திருப்தி கொள்ளவில்லை.நேற்று இரவு விழா தொடர்பான உங்கள் பேருரை வீடியோவை முழுவதும் கேட்ட பிறகுதான் மனம் ஆசிவாசம் கொண்டது..
மரபின் மைந்தன் முத்தையா, கல்பற்றா நாராயணன், பாரதி பாஸ்கர், பவா செல்லத்துரை இவர்களுக்குப் பிறகு நீங்கள் ஆற்றிய உரை உங்களை உங்கள் எழுத்தை, விழாவை பறைசாற்றியது.
கொஞ்சம் பெருமிதம் இருந்தாலும் எந்த புகழுரையும் உங்களுக்குள் ஏறவில்லை என்பதை திண்ணமாய் சொல்லியது. அன்பு நிறைந்த வாழ்த்துக்களுடன்.. நன்றி சார்.
இரா வேல்முருகன்,
மகுடஞ்சாவடி, சேலம்.
சிப்பியும் நீர்ப்பூச்சியும், கடிதம்
அன்புள்ள ஜெ,
சென்ற வாரம் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களை நேரில் சந்திக்க சென்றிருந்தேன். சினிமா பற்றியும் வாசிப்பு பற்றியும் சில கேள்விகளைக் கேட்டேன். நல்ல உதாரணங்களுடன் எளிமையாக விளக்கிக் கொண்டிருந்தார். வாசிப்பைப் பற்றி அவர் பேசுகையில் “அதிகமா வாசிப்பது முக்கியமல்ல.ஆழமாக வாசிப்பதே முக்கியமானது.” என்றார். அதிகமாக வாசிப்பது என்பது மேற்பரப்பில் நீந்துவது போன்றது என்றும் நாம் ஆழத்திற்குச் செல்ல வேண்டும் என்றும் சொன்னார்.
ஒரு வாரமாக அதைப்பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். இன்று உங்கள் தளத்தில் ‘நீர்ப்பூச்சியும் சிப்பியும்‘ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையை வாசித்தேன். இதுவரை என் வாசிப்பு நீர்ப்பூச்சி வாசிப்பாக மட்டுமே இருந்து இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.
அதை வாசிக்க வேண்டும் இதை வாசிக்க வேண்டும் என்ற வேகம் மட்டுமே என்னிடம் இருந்துள்ளது. இனி, ஆழமாக வாசிக்க முயற்சி செய்கிறேன்.
உங்களுக்கும் எஸ்.ரா அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
நிதீஷ் கிருஷ்ணா
*
அன்புள்ள ஜெ
நலம்தானே?
நீர்ப்பூச்சியும் சிப்பியும் ஓர் அழகான கட்டுரை. சிறிய கட்டுரை. ஆகவே நினைவில் நிற்பது. அத்துடன் அந்த படிமம் எப்போதுமே அந்தகருத்தை நினைவில் நிறுத்தி வைப்பது. இயல்பாக வரும் இந்த வகையான படிமங்கள்தான் சிந்தனைக்கு மிக அடிப்படையானவை என நான் நினைக்கிறேன். குரு நித்யாவின் சொற்கள் அல்லவா அவை?
ராஜேஷ்
October 5, 2022
வாணிஸ்ரீயின் நிலம்
வாணிஸ்ரீக்கு சொந்தமான நிலத்தை விற்க முயற்சி, ஒருவர் கைது
போலிப்பத்திரம் ரத்து செய்யும் அரசாணை செய்தி
நடிகை வாணிஸ்ரீயின் ரூ.20 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு
சினிமாத் துறையில் நாலைந்து மாதங்களுக்கு ஒருமுறை காதில் விழும் செய்தி நடிகை வாணிஸ்ரீக்குச் சொந்தமான பத்துகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து எப்படி ‘ஆட்டையை போடப்பட்டது’ என்பது. ஒரு திரைப்படமாக எடுக்கலாம் என்றுகூட ஒருமுறை ஒருவர் பேசினார்.
வாணிஸ்ரீக்கு சட்டப்படிச் சொந்தமான நிலம். அவர் பெயரில்தான் பட்டா உள்ளது. அதை வாடகைக்கு எடுத்தவரிடமிருந்து ஒரு கும்பல் வல்லடியாக அதைக் கைப்பற்றிக்கொண்டது. போலிப்பத்திரம் தயாரித்து அதை விற்றது. அந்தப் பத்திரம் முழுக்கமுழுக்க போலி என பத்திரப்பதிவுத் துறை சொல்லிவிட்டது. போலிப்பத்திரம் தயாரித்தவர்கள் கைதாயினர். உடனே ஜாமீனில் வந்து வழக்கை நடத்துகின்றனர்.
இதில் என்ன பிரச்சினை என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் வாணிஸ்ரீக்கு அந்நிலத்தை திரும்ப அளிக்கும் ஆணையை நீதிமன்றம்தான் போடமுடியும். தன் நிலம் போலிப்பத்திரம் வழியாக விற்கப்பட்டது, அதை கைவசம் வைத்திருப்பவர்களிடம் இருப்பது போலிப் பத்திரம், அவர்கள் சட்டப்படி குற்றவாளிகள் எனக் கருதப்பட்டு இன்னொரு நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு நடைபெறுகிறது என வாணிஸ்ரீ சிவில் நீதிமன்றத்தில் திரும்ப ‘நிரூபித்து’ அங்கிருந்து நீதிமன்ற ஆணை பெறவேண்டும்.
எளியவிஷயம். ஆனால் நம் சிவில்நீதிமன்றத்துக்கு அது ஒரு சிவில் வழக்கு. எந்த சிவில் வழக்கையும்போல அதற்கும் ஆண்டுகள் மேலும் ஆண்டுகள் ஆகியது. சாதாரண ஆண்டுகள் அல்ல. இருபதாண்டுகளுக்கும் மேல். போலிப்பத்திரம் வழியாக நிலத்தை கைப்பற்றியவர்கள் நீதிமன்றத்திற்கு வருவதற்கே பற்பல ஆண்டுகள் வாய்தா வாங்கினார்கள் எனப்படுகிறது. இன்னமும்கூட அந்த வழக்கு முடிவடையவில்லை எனப்படுகிறது.
(சரி, நீதிமன்ற ஆணை வந்துவிட்டால்? அந்த ஆணையை காவல்துறைக்கு அளிக்கவேண்டும். காவல்துறை அதை நிறைவேற்றவேண்டும். நிறைவேற்றாவிட்டால்? மீண்டும் சிவில்நீதிமன்றத்தையே நாடவேண்டும்.)
ஓர் இதழியல் பேட்டியில் வாணிஸ்ரீ மேலும் மேலும் பணத்தைச் செலவுசெய்ய மனமில்லாமல், பற்பல ஆண்டுகள் நீடிக்கும் வழக்கின் அலைச்சலால் மனம் உடைந்ததைச் சொல்கிறார். அந்த மனச்சோர்வே தன் மகன் தற்கொலை செய்துகொள்ளக் காரணம் என்கிறார். போலிப்பத்திரம் வழியாக நிலத்தை கைப்பற்றியவர்கள் மிகமிகக்குறைந்த விலைக்கு அதை தங்களிடம் விற்றுவிடும்படி கட்டாயப்படுத்தினார்கள் என்கிறார். உண்மையிலேயே ஒரு திகைப்பூட்டும் திரைக்கதைக்கான பின்னணி.
(இன்னொரு வேடிக்கையும் உண்டு. இவ்வளவு களேபேரங்களுக்கு நடுவே இன்னொரு புது ஆள் மீண்டும் ஒரு போலி பத்திரம் தயாரித்து வாணிஸ்ரீயின் நிலத்தை விற்றுவிட்டார். பிடிபட்டார், ஜாமீனில் வந்துவிட்டார். இன்னொரு வழக்கு நடக்கிறது)
சில ஆண்டுகளுக்கு முன் என் தயாரிப்பாளர் ஒருவர் சொன்னார், அவருக்கு அப்படி பெரிய ஒரு கட்டிடம் விலைக்கு வந்தது. விற்றவர் தெளிவாகவே தன்னிடம் இருப்பது தானே தயாரித்த போலிப்பத்திரம் என்றாராம். ஆனால் அக்கட்டிடம் அந்த போலிப்பத்திர ஆளின் கைவச உரிமையாக உள்ளது. உரிமையாளர் அதை ‘மீட்க’ இருபது முப்பது ஆண்டுகளாகும். மாதவாடகை ஐந்து லட்சம் என்றாலும் பன்னிரண்டுகோடி வாடகையாகவே மிஞ்சும். இவர் ஐந்துகோடிக்கு அதை வாங்கினால் போதும்.
வழக்கை இழுக்க இழுக்க லாபம் என்றார் விற்பனையாளர். தயாரிப்பாளர் அனைத்து ரதகஜதுரகபதாதிகளும் உள்ளவர். ஆனால் மறவர். அவருக்கு ஓர் அரசகுலப் பாரம்பரியம் உண்டு. அதன் காரணமாக ஓர் அடிப்படை அறத்தயக்கம். ஆகவே அவர் அதில் மேலே செல்லவில்லை.
இதுதான் சூழல். இந்நிலையில் ஒரு புதுக் கிளைமாக்ஸ். தமிழக அரசு ஒரு புதுச் சட்டம் கொண்டுவந்திருக்கிறது. அதாவது பத்திரப்பதிவுத் துறையால் ஒரு பத்திரம் போலியானது என்று கண்டுகொள்ளப்பட்டால் உடனே அந்தப் பத்திரத்தை தானே ரத்துசெய்துவிடலாம். போலிப்பத்திரம் வைத்திருப்பவரின் ‘கைவச உரிமை’ தானாகவே ரத்தாகிவிடும். போலிப் பத்திரம் பதிவுச்செய்யப்பட்டிருந்தது என்றால், அதைப் பதிவுசெய்த பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மிகமிக எளிமையான ஒரு சட்டம். மிக அடிப்படையான சட்டம். ஆனால் இன்றுவரை இது இல்லாமல் இருந்தது. போலிப் பத்திரம் என பத்திரப்பதிவுத் துறை சொன்னாலும்கூட நீதிமன்றம்தான் அதை ரத்துசெய்ய முடியும். அதை நீதிமன்றம் ரத்துசெய்ய ஒரு தலைமுறைக்காலம் ஆகும். சாமர்த்தியம் இருந்தால் வழக்கை நாலைந்து தலைமுறைக்காலம்கூட இழுக்கலாம்.
இந்தச் சட்டம் உண்மையில் தமிழகத்தில் ஒரு பெரிய புரட்சியைக் கொண்டுவரவிருக்கிறது. பல ஆண்டுகளாக சட்டப்போர் நடத்திவரும் வாணிஸ்ரீக்கு அவர் நிலம் முதல்வரால் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. அரசு நினைத்தால் அரைமணிநேரத்தில் தீரவேண்டிய பிரச்சினைதான் இது. வாணிஸ்ரீயின் கால்நூற்றாண்டை நரகமாக்கியிருக்கிறது.
இவ்வளவு அடிப்படையான ஒரு திருத்தம் ஏன் சுதந்திரம் அடைந்த முக்கால்நூற்றாண்டில் செய்யப்படவில்லை? ஏன் இன்னமும் இந்தியாவில் வேறெங்கும் இல்லை? அதைப் பேசிப்பயனில்லை. இப்போதாவது நடக்கிறதே என ஆறுதல்கொள்ள வேண்டியதுதான். இந்த அரசில் உண்மையிலேயே அக்கறைகொண்ட அதிகாரிகள் இருக்கிறார்கள், அவர்கள் சொல்வதைச் செவிசாய்க்க அரசில் ஆளிருக்கிறது.
தமிழக அரசின் இந்தச் சட்டம் பெரும் முன்னகர்வு. உடனடியாக கேரளம் போன்ற அரசுகளும் இதை நடைமுறைக்குக் கொண்டுவரவேண்டும். இந்தச் சட்டத்திருத்தத்தைக் கொண்டுவர முன்முயற்சி எடுத்த அதிகாரிகள் நன்றிக்கும் பாராட்டுகளுக்கும் உரியவர்கள்.
மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை ரத்து செய்ய பதிவுச்சட்டம், 1908-ல் பதிவு செய்த அலுவலருக்கோ அல்லது வேறு எந்த உயர் அலுவலருக்கோ இதுவரை அதிகாரம் அளிக்கப்படவில்லை. எனவே, அந்த ஆவணப் பதிவுகளை ரத்து செய்திட பாதிக்கப்பட்டோர் நீதிமன்றங்களை அணுகிட வேண்டிய நிலையே இருந்து வந்தது.
இதுதொடர்பாக சட்டத்திருத்தம் கொண்டு வர அரசு முடிவு செய்து, போலி, ஆள்மாறாட்டம் போன்ற காரணங்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை பதிவுத்துறையே ரத்து செய்ய அதிகாரம் அளிக்க சட்டப்பேரவையில், 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் 6.8.2022 அன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
திருத்தப்பட்ட இந்தப் பதிவுச் சட்டத்தில், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பிரிவு 22-பி ஆனது போலி ஆவணங்கள் மற்றும் சட்டத்தால் தடை செய்யப்பட்ட ஆவணங்களின் பதிவினை மறுக்க பதிவு அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. மேலும், பிரிவு 77-எ ஆனது நில அபகரிப்பு செய்து மோசடியாக ஆவணப்பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து மாவட்டப் பதிவாளர்களிடம் புகார் மனு பெறப்பட்டால், மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை விசாரித்து பதிவு செய்யப்பட்ட ஆவணம் போலியானது என்று கண்டறியப்பட்டால், அந்த ஆவணத்தினை ரத்து செய்து ஆணையிட மாவட்டப் பதிவாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த ஆணையின்மீது பதிவுத்துறை தலைவரிடம் ஒரு மாதத்திற்குள் மேல்முறையீடு செய்யலாம். மேலும், முறையாக பரிசீலிக்காமல் உள்நோக்கத்துடன் போலி ஆவணத்தைப் பதிவு செய்தால் சம்பந்தப்பட்ட ஆவணதாரர்கள் மற்றும் பதிவு அலுவலர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து சிறை தண்டனை வழங்கிடவும் சட்ட திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, நில அபகரிப்பு மோசடியாளர்களால் பாதிக்கப்பட்ட, சொத்தின் உண்மையான உரிமையாளர்களுக்கு அச்சொத்தினை மீட்டெடுத்துக் கொடுக்கும் வகையில், மோசடி ஆவணப்பதிவுகளை மாவட்டப் பதிவாளர் ரத்து செய்திட பதிவுச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், போலி ஆவணங்கள் பதிவினை அறவே ஒழிக்க சட்டத்தின் துணையோடு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சட்டத்தின் கீழ் போலி ஆவணப்பதிவினால் பாதிக்கப்பட்ட உண்மையான சொத்து உரிமையாளர்கள் ஐந்து நபர்களுக்கு அவர்களின் சொத்துகள் நில அபகரிப்பாளர்களால் மோசடியாக ஆவணப்பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்து அதற்கான ஆணைகளை இன்று முதல்–அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதில் நடிகை வாணிஸ்ரீயின் ரூ.20 கோடி நிலமும் மீட்கப்பட்டது. இதற்கான ஆணையையும் முதல்–அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
பொதுமக்கள் தங்களின் ஆவணங்களை நல்ல நாட்கள் எனக் கருதப்படும் சில குறிப்பிட்ட நாட்களில் பதிவு செய்ய விரும்புகின்றனர். இந்நாட்களில் அதிக ஆவணங்கள் பதிவாகும் அலுவலகங்களில் டோக்கன் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. அன்றே ஆவணம் பதியப்பட வேண்டும் என விரும்புபவர்கள் https://tnreginet.gov.in என்ற இணைய வழியாக ரூ.5 ஆயிரம் செலுத்தி உடனடி (தட்கல்) டோக்கன் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், அவசர ஆவணப் பதிவு தேவைப்படும் நிகழ்வுகளிலும் இவ்வசதியைப் பயன்படுத்தி உடன் டோக்கன் பெறலாம். இந்த உடனடி (தட்கல்) டோக்கன் வசதி, அதிக ஆவணங்கள் பதிவு செய்யப்படும் 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. திருமண பதிவிற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களில் கொடுக்கப்படும் விவரங்களின் அடிப்படையில் திருமண சான்று வழங்கப்படுகிறது. ஆனால் பின்னாளில் கடவுச்சீட்டு மற்றும் வெளிநாடு செல்ல விசா கோரி விண்ணப்பிக்கும்போது சில சமயங்களில் பெயர்களில் ஏற்படும் பிழைகள், முகவரி போன்றவற்றில் திருத்தம் தேவைப்படுகிறது. அவ்வாறு திருத்தம் செய்திட https://tnreginet.gov.in என்ற இணையவழி விண்ணப்பித்து திருத்தப்பட்ட திருமண பதிவுச் சான்றிதழ் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் பதிவு அலுவலகங்களுக்கு நேரில் வர வேண்டிய அவசியமில்லை. பொதுமக்கள் விரும்பிய நேரத்தில் எவ்விடத்திலும் இணையவழி விண்ணப்பம் செய்யலாம். உரிய திருத்தம் செய்யப்பட்ட திருமணச் சான்றிதழ் பதிவு அலுவலரின் மின்கையொப்பத்துடன் பயனாளிக்கு இணையவழி அனுப்பப்படும். பதிவு அலுவலரின் மின்கையொப்பத்துடன் கூடிய அச்சான்றிதழை விண்ணப்பதாரர் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கல்பற்றா நாராயணன் உரை – கடிதம்
ஜெ60 மனதுக்கு நிறைவான ஒரு நாள். காலையில் பச்சைநாயகி சன்னதியில் வைத்து அந்த பெண் திருமுறையை பாடியபோதே அந்த நாள் முழுதும் நிறைந்துவிட்டது. அகத்திற்குள் வெறெதுவும் செல்லவில்லை. அன்று முழுதும் மிதந்துகொண்டே இருந்தேன். அந்த நாளை இன்னும் இனிமையாக்கியது கல்பற்றாவின் பேச்சு. ஒரு கவிஞன் மட்டுமே ஆற்றக்கூடிய உரை.
ஆச்சரியமாக, கல்பற்றாவின் இந்த கவிதையை சுதா ஸ்ரீனிவாசன் அன்று அனுப்பித் தந்திருந்தார். அந்த உரையில் அறம் தொகுப்பு பற்றிய அவரது பேச்சுக்கு அணுக்கமான கவிதை. நாங்கள் சேர்ந்திருந்து அதை மொழிபெயர்த்தோம்.
மேலும் அன்றைய உரையையும் மொழிபெயர்க்க முயன்றோம். கல்பற்றாவின் பாடலை எங்களால் மொழிபெயர்க்க முடியவில்லை, அதிலுள்ள உரையை மட்டும் மொழிபெயர்த்தோம். அதை இத்துடன் இணைத்துள்ளேன்.
அன்புடன்
ஆனந்த் குமார்
புதிரின் நண்பன் நான் (கல்பற்றா நாராயணன் உரை தமிழில்)
நிர்வாண உண்மைஒரு ஊரில்
ஒரு அதிகாலையில்
உண்மையும் பொய்யும் குளிக்கக் கிளம்பினர்
கரையில் ஆடைகள்
அவிழ்த்து வைத்து
அவர்கள் ஆற்றில் இறங்கினர்.
பொய்க்கு எப்போதும் அவசரம்
அது எதையும்
உணர்ந்து அனுபவிப்பதில்லை
ஏற்கனவே சொன்னவை
மறந்துவிடுமென அது
தன்னை மறந்து
உறங்குவதுகூட இல்லை.
எத்தனை இடங்களில்
எத்தனை பாரங்கள்;
பொய் நொடியில் குளித்து கரையேறியது
பொய் அதே உடையை மீண்டும் அணிவதில்லை
இன்னொருவர் உடைமேல்தான்
அதற்கு எப்போதும் மோகம்
உண்மை கழட்டி வைத்த
ஆடையை அணிந்து
பொய் அவசரமாய் இறங்கிப்போயிற்று
உண்மைக்கு அவசரமில்லை
செல்லமுடியாத இடத்திற்கு
குறித்தநேரத்தில் வந்துவிடுவதாக
அது சொல்லியிருக்கவில்லை
உண்மை தன் நேரத்தை
மற்றொருவருடையதுடன் பிணைத்துக்கொள்வதில்லை
உண்மை நிதானமாக குளித்து ஏறியது
கரையில் தனது உடை இருந்த இடத்தில்
பொய்யின் உடை
உண்மை இன்னொருவர் உடையை அணிவதில்லை
அதற்கு காட்டுவதற்கு எதுவுமில்லை
தவறிழைக்காததனால் வெட்கமுமில்லை
உண்மை ஒன்றும் அணியாமல் புறப்பட்டது
உண்மையின் அணிகள் இல்லாமல்
உண்மையை காணாதவர்
ஒருபோதும் உண்மையை
காண்பதேயில்லை
கல்பற்றா நாராயணன்
யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை, மாடு!
மாடாகி வந்து மனிதனாகி தேவன் என்று தோன்றும் கிருஷ்ணன் சொல்லும் சம்ஸ்கிருதம். இத்தனை தெளிவாக சம்ஸ்கிருதம் பேசுபவர்கள் இப்போது மிக அரிது என்று நினைக்கிறேன். நகைச்சுவை அந்தக்காலத்தில் (1942, மனோன்மணி படம்) மிக இயல்பான நடிப்புடன் இருந்திருக்கிறது. அது செயற்கையான கோமாளித்தனத்துக்கு வந்ததெல்லாம் பிறகுதான் போல.
இதில் யதார்த்தம் என்னும் கதாபாத்திரமாக நடித்திருப்பவர் யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளை. அக்கால நாடகக்குழு அதிபர்
எதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளை விக்கி
எதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை – தமிழ் விக்கி
சடங்குகள் தேவையா? -கடிதம்
பேரன்புள்ள திரு.ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம். நலந்தானே? மிகச்சரியான நேரத்தில் உங்கள் சடங்குகள் தேவையா கட்டுரை என் கண்களில் அகப்பட்டது என் பாக்யமென கருதுகிறேன். அவ்வப்போது தங்களது தளத்தில் வாசிப்பவன்தான், அன்றாடம் முடியவில்லை. இருந்தாலும் வாசிக்கும் தருணங்களில் என்னை முழுமையாக கொடுத்துவிடுவேன்.
கடந்த “ஆவணி அவிட்டம்” தினத்தன்று நான் மிகமிக குழப்பமாக இருந்தேன். ஊரில் இருக்கும்போதூதான் இச்சடங்கைப் பின்பற்ற முடிந்தது. இம்முறை ஏனோ ஒரு சலிப்பு. கோயிலுக்குச் சென்றால் அர்த்தம் புரியாமல் இயந்திரதனமாக செய்யவேண்டுமே என்கிற அலுப்பு. மேலும் எனக்கும் கடவுளக்கும் உள்ள ஆத்மார்த்தமான பரிவர்த்தனைகளை இம்மாதிரி சடங்குக்குள் என்னை எப்படி ஒப்படைக்கும் முடியுமென ஆதங்கமாகவும், கவலையாகவும் சென்ற நேரத்தில், அலுவலகத்திற்கு ஆயுத்தமான சமயத்தில் எனது தாயார் பலகாரங்களையும் செய்துவிட்டு, பஞ்சபாத்திரங்களையும், பூணூலையும் தயாராக வைத்திருந்தது என்னை என்னவோ செய்துவிட்டது.
மிகமிக எளிமையாக எந்தவிதமான சடங்கு முறைகளை பின்பற்றாமல் அம்பாளிடம் வேண்டிக்கொண்டே செய்துக்கொண்டேன். ஆசுவாசமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. இறைவன் அளித்த வரம் என்று அன்றைய தினம் அனுகூலமானது. மனமும் சஞ்சலத்திலிருந்து விடுப்பட்டது. அப்பொழுதுதான் இக்கட்டுரை என் கண்களில் பட்டது.
குரு ஒருவர் வேண்டுமென்பார்களே, அத்தருணங்களை உணர்ந்தேன், தங்களது கருத்தால். தெளிவு பெற்றேன். வம்சாவழியாக வரும் எந்தவிதமான சடங்குகளுக்கும் முரணின்றி ஆட்பட முனைவேன், அதற்கான விளக்கங்களும், முறையான வழிமுறைகளையும் கண்டு, எளிமையாகவும் வழிநடத்தவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டேன். இதுதான் என் மூத்தோர்களுக்கு நான் செய்யும் பிரதியுபகாரம். அதுமட்டுமில்லாமல் அடுத்தடுத்த தலை
முறைகளுக்ககாகவும்.
என் மனமார்ந்த நன்றிகள் பல.
இப்படிக்கு என்றென்றும்
அன்புடனும், நட்புடனும்
கி.பா.நாகராஜன்
*
அன்புள்ள ஜெ
சடங்குகள் தேவையா ஓர் அரிய கட்டுரை. நம்மில் பலருக்கு சடங்குகள் செய்வதில் தயக்கம். காரணம்,தங்களை அறிவுஜீவிகள் என்னும் எண்ணம் கொண்டிருப்பது. ஆனால் கொஞ்சநாள் கழித்து குற்றவுணர்வு. காரணம் ஆழத்தில் எல்லா நம்பிக்கையும் இருப்பது. இரண்டுக்கும் நடுவே ஊடாடுபவர்களுக்கு ஒரு தெளிவான விளக்கத்தை அளித்த கட்டுரை இது. வாழ்த்துக்கள்
சங்கரநாராயணன்
தத்துவக்கல்வி, ஒரு கடிதம்
அன்புள்ள ஜெ,
நலமாகவே இருப்பீர்கள் (அருண்மொழி அக்கா இருக்கும்பொழுது கவலை என்ன?)
உங்கள் தத்துவ வகுப்பு தொடர்பாக ஒரு விண்ணப்பம். இதை virutal வகுப்பாக நடத்த இயலுமா அல்லது குறைந்தபட்சம் கட்டணத்துடன் கூடிய youtube access வழங்க முடியுமா? (இது வெளிநாடுகளில் வாழுபவர்களுக்கு உதவியாக இருக்குமே)
மேலும் ஒரு விடயம் மற்ற மதங்களை ஒப்புநோக்கில் நம் இந்து மதத்தில் அதிகப்படியான சடங்குகள் உள்ளன. உதாரணத்திற்கு கோவில் கருவறை சாத்தியபிறகு நடைபெறும் ஒரு சடங்கு.. (விளக்குடன் கோவிலை சுற்றி வருதல்)
இந்த காலத்திற்கு ஏற்றவாறு இதை மாற்றி அமைக்க ஏதேனும் செய்ய தாங்கள்எழுதுவீர்களா?இந்த கேள்வி சரியா என நான் அறியேன்..
தங்கள் நேரத்திற்கு நன்றி !!
அன்புடன்
ரமேஷ்
***
அன்புள்ள ரமேஷ்
தத்துவ முகாம்களை அப்படி இணைய ஊடகத்தில் நடத்த முடியாது. நான் உத்தேசிப்பது தத்துவ அறிமுகம் அல்ல. தத்துவப் பயிற்சி. அதற்கு நேருக்குநேர் சந்திப்பு, தெளிவான காலத்திட்டமிடல், திட்டவட்டமான பாடத்திட்டம் ஆகியவற்றுடன் அதற்கு மட்டுமே உரிய இடத்தில் தங்குவதும் அவசியம். கண்டிப்பான நேரடிக் கண்காணிப்பு இன்றி அது இயல்வதே அல்ல.
ஒன்று செய்யலாம், வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு அவர்களுக்காக தனியான நேரடி வகுப்புகளை அங்கே ஏற்பாடு செய்யலாம். ஒவ்வொரு சந்திப்பும் ஒரு வாரம் என்னும் கணக்கில். ஆனால் இப்போது அதற்கான நிதிவாய்ப்புகள் இல்லை என நினைக்கிறேன்
சடங்குகள் இல்லாமல் எந்த மதமும் இல்லை. தத்துவத்தை அன்றாட நடைமுறையாக ஆக்குவதற்குரிய குறியீட்டுச் செயல்களே சடங்குகள். நீண்ட வரலாறு கொண்ட, தொல்குடிப் பாரம்பரியம் கொண்ட மதங்களில் கூடுதலான சடங்குகள் இருக்கும்.
தத்துவம் ஏன் பயிலவேண்டும் என்றால் இதற்காகவே. நமக்கு தெரியாத ஒன்றை மாற்றியமைக்கவேண்டும் என்று பேசுகிறோம் இல்லையா? தெரிந்துகொள்ள முயல்வதன் பெயதான் தத்துவக்கல்வி
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


