Jeyamohan's Blog, page 699
October 14, 2022
சிப்பியும் நீர்ப்பூச்சியும் – கடிதம்
அன்புள்ள ஜெ,
நண்பர்களோடு பேசும்போது அல்லது வாட்ஸாப் விவாதங்களின்போதும் இப்போது வாசிக்கும் அல்லது முன்பு வாசித்த சில புத்தகங்களின் ரெபெரென்ஸ் கொடுக்கும்போது நண்பர்களிடம் கிண்டல்கள் வருவதுண்டு. புத்தகம் படித்தால் நீங்கள் அதையே சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள் என்பது போல. ஆனால் நமது சிந்தனையில் ஒரு சின்ன மாற்றமும் கொண்டுவராத புத்தகங்களை ஏன் நேரம் செல்வளித்து வாசிக்கவேண்டும் அவர்களைப் பார்த்து நான் ஆச்சர்யமடைவதுண்டு.
வருடம்தோரும் பெருமளவில் புத்தகம் வாசிக்கும் சில நண்பர்கள், பல வருடங்கள் ஒரே நிலைப்பாட்டில் அப்படியே இருப்பது மட்டுமல்லாமல் ஜோக் கூட பத்து வருடமாக ஒரே இடத்தில் இருப்பதை பார்க்கமுடியும். வாசிப்பு எனும் குளத்தில் மூழ்கினாலும் ஒரு துளி சிந்தனை கூட தன்மீது படமால் இருக்கும் கொக்கு போல என நினைப்பேன், ஆனால் நீங்கள் சொன்ன நீர்பூச்சி மிக பொருத்தமாக இருந்தது.
இந்தக் கட்டுரை படித்ததும் மிக பொருத்தமாகவும் உவப்பாகவும் இருந்தது.
நானும் நண்பர் ரவிகுமார்பாண்டியனும் நாங்கள் வாசிக்கும் தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் குறித்துப்பேசும்போது ஒரு கருத்தில் வந்தடைந்தோம்
பல புத்தகங்களைஒரு சிந்தனைச் தொடர்ச்சியாக வைக்கமுடியும். அவை தனித்தனி புத்தகங்களாக இருந்தாலும் ஒரே சிந்தனையில் தொடர்ச்சி அல்லது அதன் பல்வேறு பரிணாமங்கள் என. (ஒருTree போல) அப்படி தொகுத்துக்கொள்ளும்போது நம் புரிதல் ஆழமாவதோடு நிறைய படிக்கிறோம் என ஆயாசமும் வருவதில்லை.வாசிக்கத்தொடங்கும் எல்லாப் புத்தகங்களையும் முடிக்கவேண்டும் என்பது தேவையில்லை. வாசிப்பது எவ்வளவு முக்கியமாதோ, அதே அளவு முக்கியம் நமக்குத் தேவையில்லாத/நேரத்தை வீணடிக்கும் வாசிப்பை முடிந்த அளவு குறைப்பது.நீர்ப்பூச்சியும் சிப்பியும் என்ற படிமம் உடனடியாக மனத்துக்குள் சென்றுவிட்டது
இந்தக் கட்டுரை மிக முக்கியமானது. வாசகர்கள் அனைவரும் வைத்துக்கொள்ளவேண்டிய ரெபரென்ஸ் இது. நன்றி ஜெ
அன்புடன்
சுரேஷ் பாபு
Blog: வேழவனம்
Youtube: https://www.youtube.com/channel/UCFiYtSqF4NvmnSjRCSf5XbQ
October 13, 2022
சோழர், ஓர் உரை
அன்புள்ள ஜெ
என்னிடம் நாலைந்துபேர் நீங்கள் ராஜராஜ சோழனின் அரண்மனை நம் வீடுகளை விட சிறியது, அப்படித்தான் சினிமாவிலே காட்டப்போகிறீர்கள் என்று சொன்னதாகவும் தமிழர் வரலாற்றை இழிவுசெய்வதாகவும் சொல்லி கொதித்தார்கள். மலையாளி நாய் என்றெல்லாம் பயங்கரமான வசைகள். எங்கே சொன்னார் என்றால் யூடியூபிலே பார்த்தோம் என்றார்கள். லிங்க் கேட்டால் அப்படி வெவ்வேறு வாயர்கள் உளறியிருப்பதன் வீடியோக்களை அனுப்பினார்கள். ஜெயமோகன் சொன்ன வீடியோ எங்கே என்று கேட்டால் தெரியவில்லை. சோழர்களை இழிவு செய்கிறார் ஜெமோ என்று வசை.
சரி, ஜெயமோகன் சொன்னதைவிடக் கடுமையாக ஆ.ராசா சொன்னாரே என்று நான் கேட்டேன். அதற்கு ‘அது வேற விஷயம்’ என்றார்கள். அதன்மேல் ஒரு கண்டனமும் கிடையாது. ஆ.ராசா சொன்னால் அது தப்பு என்றுகூட சொல்லமாட்டார்கள். ஏனென்றால் ஆ.ராசா தமிழக ஆளும்கட்சி. ஆ.ராசாவிடம் ‘அப்படிப்பட்ட கேடுகெட்ட ராஜராஜ சோழனுக்குத்தானே உங்கள் தலைவர் கலைஞர் விழா எடுத்தார்’ என்று கேட்கலாமே. ராஜராஜசோழன் புகழ் பாடியவரே அவர்தானே. ராஜராஜசோழனுக்கு சிலைவைத்தார். அவரையே ராஜராஜசோழன் என்றும் அவர் மகனை ராஜேந்திர சோழன் என்றும் கட்டவுட் வைத்தார்கள். அவர்களை ஆ.ராசா கண்டிக்கிறாரா? மாட்டார். பிரச்சினை எல்லாம் நீங்கள் சொன்னதுபோல சினிமாவுடன்தான்.
உங்கள் வீடியோவை நானே கண்டெடுத்தேன். மிகமிக முக்கியமான உரை. வரலாற்றுவாதம் (Historicism ) தேவையில்லை, வரலாற்றுணர்வு (Historicity)தேவை என்று சொல்லி இரண்டையும் விளக்குகிறீர்கள். வரலாற்றுவாதம் வீண் வெறியை உருவாக்கும். வரலாற்றுணர்வு கலாச்சாரத்தை புரிந்துகொள்ள உதவும். வரலாற்றுவாதம்தான் வெறும் பற்றாக வெளிப்படுகிறது. வரலாற்றுணர்வு கொண்டவர்களுக்கு எதிலும் தவறும் சரியும் கண்டுசொல்லும் தெளிவு இருக்குமே ஒழிய மிகையான உணர்ச்சிகள் இருக்காது.
நீங்கள் அந்த உரையில் சொன்ன வரலாற்றுவாத வெறி என்றால் என்ன என்றுதான் அந்த வீடியோவைவைத்தே நம்மாட்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். யாருமே அந்த வீடியோவை பார்க்கவில்லை. அந்த தலைப்பை மட்டும்தான் பார்த்திருக்கிறார்கள். வசைபாட ஆரம்பித்துவிட்டார்கள். அந்த வசையை கேட்டு அடுத்த கூட்டம் வசைபாடுகிறது. அப்படியே ஒரு சங்கிலித் தொடர். எவருக்கும் நீங்கள் என்ன சொன்னீர்கள் என அக்கறை இல்லை. நீங்கள் இன்னார் என அவர்களே ஒரு கணிப்பு வைத்திருக்கிறார்கள். அவர்கள் சாதிவெறியர்கள், ஆகவே உலகிலுள்ள அத்தனைபேரும் சாதிவெறியை கொண்டுதான் பேசுவார்கள் என நம்புகிறார்கள்.
அந்த வீடியோவில் பொன்னியின்செல்வனில் ராஜராஜசோழனின் அரண்மனையை பெரிதாகக் காட்டுவதாகச் சொல்கிறீர்கள். தமிழகத்தில் நாயக்கர் காலகட்டத்துக்கு முந்தைய எந்த அரண்மனையும் கிடைக்கவில்லை. கிடைத்த அடித்தளங்கள் சிறியவை. மன்னர்கள் ஆலயங்களை பெரிதாக கட்டினாலும் அரண்மனைகளையும் கோட்டைகளையும் கல்லால் பெரிதாக கட்டிக்கொள்ளவில்லை.
நீங்கள் சொல்வது ராஜராஜசோழன் அரண்மனை பற்றி அல்ல. கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேட்டில் நடைபெற்ற அகழ்வாய்வுகளைப் பற்றி. அங்கே ஆய்வுசெய்த அகழ்வாய்வுத்துறை துணை இயக்குனர் சிவானந்தம் விரிவாக எழுதியதுதான். தமிழகத்தில் 16 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய அரண்மனைகள் இல்லை. சோழர்கால அரண்மனைகளுக்கு பெரிய அடித்தளங்கள் இல்லை என்றும் அகழாய்வில் கிடைத்த தகவல்களின்படி அரண்மனைகள் மரத்தாலானவையாகத்தான் இருக்க கூடும் என்றும் சொல்கிறார். அதைத்தான் நீங்கள் சுட்டிக்காட்டுகிறீர்கள். ஆனால் அப்படி சினிமாவில் காட்டமுடியாது, பிரம்மாண்டமாகவே காட்டமுடியும் என்கிறீர்கள். ஆகவே சினிமா வரலாறு அல்ல, அது புனைவு, ஆனால் அந்த புனைவு வரலாற்றை உள்ளத்தில் நிறுத்த தேவையானது என்கிறீர்கள்.
அந்த உரையில் ராஜராஜன் காலகட்டத்தில் இருந்த நில அடிமை முறை, சாதிமுறை, குறுநிலமன்னர்கள் மீதான அடக்குமுறை அனைத்தையும் அக்கால வரலாற்றில் வைத்து பார்க்கவேண்டும் என்கிறீர்கள். அவ்வாறு பார்த்தால் அன்றைய காலகட்டத்தில் உலக வரலாற்றிலேயே மிகமிகப் பெருந்தன்மையான, சமயப்பொறைகொண்ட, நலம்நாடும் அரசு சோழர் அரசுதான் என்கிறீர்கள். சோழர்கள் உங்கள் நாடான சேரநாட்டுக்கு ஆக்ரமிப்பாளர்கள். ஆனால் அவர்கள்தான் அங்கே நிலவளம் பெருக காரணம் என்கிறீர்கள். தவறுகளையும் குறைபாடுகளையும் கருத்தில்கொண்டு கூட்டிக்கழித்துப் பார்த்தால் சோழர் காலம் பொற்காலம் என்கிறீர்கள். அதுவே வரலாற்றுணர்வு என்பது.
எதையுமே புரிந்துகொள்ளாமல் வெறும் சாதிவெறியாலேயே பேசிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வெறியைத்தான் அந்த உரையிலேயே சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். இத்தனை வெறுப்பையும் அறியாமையையும் வெறியையும் எதிர்கொண்டு இதையெல்லாம் பேசமுடிவது பெருந்துணிவும் பொறுமையும் தேவையான ஒன்று
ஆர்.ராகவ்
பொன்னியின் செல்வன் நாவல் கல்கி சிவகாமியின் சபதம் மோகனாங்கிஅன்புள்ள ராகவ்
இந்த வம்புகளுக்குப் பதில் சொல்வதிலுள்ள பெரிய சிக்கல் இதுதான். இந்த வம்புகளைக் கிளப்புபவர்கள் இருக்கும் தளம் ஒன்று. அவர்களுக்கும் எழுத்து, வாசிப்புக்கும் சம்பந்தம் கிடையாது. அவர்களைப்போன்ற அறிவுநிலை கொண்டவர்கள் போடும் யூடியூப் காணொளிகள், வாட்ஸப் வரிகளை மட்டுமே அவர்கள் அறிவார்கள். பிறவற்றை அந்த தலைப்பை மட்டுமே பார்ப்பார்கள். உள்ளே சென்று உரைகளை கேட்க பொறுமை இல்லை. கேட்டாலும் ஒன்றும் பிடிபடுவதில்லை. ஆகவே அவர்களுக்கு அவர்களைப் போன்றவர்கள் சொல்வதை திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பார்கள். நாம் என்னதான் சொன்னாலும், மறுத்தாலும், விளக்கினாலும் அவர்களைச் சென்றடையாது. நாமிருக்கும் அறிவுத்தளம் வேறு. மிகமிகச் சலிப்பூட்டும் ஒரு சூழல் இது.
ஜெ
சோழர்கள் பற்றி… ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா? ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா? ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?–2 ராஜராஜனின் பள்ளிப்படைக்கோயில் உண்மையா? சோழர்கலை விராலூர் சோழர் கல்வெட்டு சோழர்காலச் செப்பேடுகள்- தினமலர் விருது சோழர்களும் மாமாங்கமும் பொன்னியின் செல்வன், சோழர்கள் சோழர்களும் பிராமணர்களும் அன்றாட வம்புகளும் அறிவுச்சூழலும் பெருவழிகள் இராஜகேசரிப் பெருவழி கோடிவனமுடையாள் பெருவழிசி.சு.செல்லப்பா
தமிழின் நவீனத்துவத்தை உருவாக்கியவர்களில் ஒருவர் சி.சு.செல்லப்பா. நான் 1992 வாக்கில் சுபமங்களாவில் சி.சு.செல்லப்பா எழுதிக்கொண்டிருந்தபோது அவரை (கோமல் சுவாமிநாதன் சிபாரிசில்) சென்னையில் சந்தித்திருக்கிறேன். நான் அவரைச் சந்தித்தபோது அவர் அமர்ந்திருந்த அதே திண்ணையில் அப்படியே அவர் அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படம் உள்ளது.
அன்று செல்லப்பாவைச் சந்தித்தது எனக்கு இனிய அனுபவமாக இருக்கவில்லை. அவர் க.நா.சுவை வசைபாடித் தள்ளினார். நான் இலக்கியம் எழுதக்கூடும் என்றே எண்ணவில்லை. நவீனத் தமிழிலக்கியம் முடிந்துவிட்டது என்ற உறுதியுடன் இருந்தார். எதையும் செவிகொள்ளவில்லை.
நவீன இலக்கியம் என்பது எவரையும் மீட்காது என நான் உணர்ந்த தருணம் அது. ஒருவகையில் என்னை நித்ய சைதன்ய யதி நோக்கி கொண்டுசென்றது அந்த நாள்தான்.
சி.சு.செல்லப்பாகுமுதம் பேட்டி
இப்போது கிடைக்கும் குமுதம் 12-10-2022 – 19-10-2022 இதழில் என் பேட்டி ஒன்று வெளியாகியிருக்கிறது. பேட்டிகள் திரும்பத் திரும்ப எழுத்தாளனை நினைவில் நிறுத்துகின்றன. எங்கோ அரசுநூலகத்தில் ஓர் இளைஞன் படிப்பான் என்று கற்பனை செய்துகொள்கிறேன். மணா குமுதம் இதழில் பணியாற்றிய காலத்தில், முப்பதாண்டுகளுக்கு முன்பு, வெளியான பேட்டி ஒன்று எனக்கு பெருவாரியாக வாசகர்களைப் பெற்றுத்தந்ததை நினைவுகூர்கிறேன்.
இதழியலின் வழக்கமே கவனம்கோருவதுதான். ஆகவே அவர்கள் பேட்டிகளை விவாதங்கள் நோக்கி செலுத்துவார்கள். வழக்கம்போல ஒற்றைவரிகளில் இருந்து எவராவது விவாதங்களைக் கிளப்புவார்கள். அதை மட்டுமே கவனிக்கும் நூறுபேர் முகநூலில் சலம்புவார்கள். நூறுபேர் டிவிட்டரில் புலம்புவார்கள். வாசிப்பவர்களில் ஒரு ஆயிரம்பேர் என் எழுத்துக்களை கவனிப்பார்கள். அவர்களில் நூறுபேருக்கு என் எழுத்துக்களுக்குள் நுழைய வாசல் திறக்கும். வாழ்நாள் முழுக்க நீடிக்கும் ஓர் உரையாடல் எங்களுக்குள் தொடங்கும்.
செய்குத்தம்பிப் பாவலர் – மேலும் ஆளுமைகள்
அன்பின் ஜெ!
தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதியுள்ளவற்றுக்கு மறுப்பு, திருத்தம் எதையும் நான் முன்வைக்கவில்லை, அந்த நிரை வரிசையில் குறிப்புகள் சிலவற்றைத் தரலாம் என்று கருதியே இதை எழுதுகிறேன்.
நாகர்கோவில் கோட்டாறைச் சேர்ந்த . வெற்றிச் செல்வன் (எ) பசுலு முகைதீன் எங்கள் ஊரிலுள்ள கல்லூரியில் (1990 வரை) தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தார். மகாமதிப் பாவலர் என்றொரு நூலை உலகத் தமிழராய்ச்சிக் கழகத்துக்காக எழுதியவர். சதாவதினியை நேரில் பார்த்க்கும் வாய்ப்பைப் பெற்றவர் என்பதால் முதல்நிலைத்தரவுகளைக் கொண்ட நம்பகத்தன்மையுள்ள எழுத்து அவருடையது. (மகாமதிப் பாவலர் இணையநூலகம் )
”சென்ற நூற்றாண்டில் ஓர் இஸ்லாமிய அறிஞர் சைவசித்தாந்த அரங்குகளில் பேருரைகள் ஆற்றினார் என்றும், சைவசித்தாந்த மரபைச் சேர்ந்த அறிஞர்களும் மடாதிபதிகளும் அவரை போற்றினர் என்பதும் இன்று அரிய செய்திகளாக இருக்கக்கூடும். இனி ஒருபோதும் அது நிகழ வாய்ப்பில்லை என்றுகூட தோன்றுகிறது.
தமிழில் அவ்வகையில் நாகர்கோயில் செய்குத்தம்பி பாவலர் (1874 – 1950) ஓர் அற்புதம் என்றே சொல்லவேண்டும்” என்று எழுதியிருந்தீர்கள். (செய்குத்தம்பி பாவலர் என்னும் வியப்பு நிகழ்வு)
ராமாயண சாயபு என்று முதலில் அழைக்கப்பட்டவர் தாருல் இஸ்லாம் பத்திரிகையின் தாவூத்ஷா (1889 – 1961) இந்தியக் குடியரசுத் தலைவராக (பிற்காலங்களில் வந்த) டாக்டர் ராதாகிருஷ்ணன், உ.வே.சா. ஆகியோரின் மாணவர். கும்பகோணத்தில் கணிதமேதை என்று அழைக்கப்பட்ட ராமானுஜமும், தாவூத்ஷாவும் ஒன்றாக ஒரே வகுப்பில் படித்த சகமாணவர்கள். ஆங்கிலேயர் ஆட்சியின்போது மாவட்ட துணை ஆட்சியராக இருந்தபோது குதிரை வண்டியில் பயணித்தவர் பிற்காலங்களில் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து தினமும் நடந்தே திருவல்லிக்கேணி அச்சகத்துக்கு வந்து செல்வாராம். விடுதலைப் போராட்டத்தில் கலந்துக் கொள்ள அரசுப் பணியிலிருந்து வெளியேறி இருக்கிறார். திருக்குர்ஆனை தமிழில் மொழிபெயர்த்த முன்னோடிகளில் முதன்மையானவர். (இராமாயண சாகிபு தினகணி கட்டுரை)
அடுத்துவந்த மு. மு. இஸ்மாயில் (1921 – 2005) நீதிபதி, நாகூர்காரர். இவர் இந்த ஊரில் பேசினார், அந்த பத்திரிகையில் எழுதினார் என்று (அனேகமாக 1990-களின் இறுதிவரை) நாளேடுகளில் வந்துக் கொண்டிருந்த செய்திகளை என் வளரிளம் பருவத்தில் படித்த நினைவு இன்னுமுள்ளது. ஒரு சில சொற்பொழிவுகளை கேட்கும் வாய்ப்பும் கிடைத்தது. சென்னைக் கம்பன் கழகத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவர் என்கிற செய்தி அப்பொழுது எனக்குத் தெரியாது. இவரும் “கம்பராமாயண சாயபு” என அன்போடு அழைக்கப்பட்டார்.
அதனுடன் கவி கா.மு.ஷரீப்பும் முக்கியமானவர். பழங்கதைகளுடன் புதிதாக நம் சமகாலத்தில் சென்னை பெருங்களத்தூரிலிருந்து பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக “சன்மார்க்க நேசன்” என்கிற மாத இதழை வெளியிட்டுக் கொண்டிருக்கும் எம்.ஏ. ஹுஸைன் அவ்வாறு வகைப்படுத்தலின் கீழ் கொண்டுவரப்படக் வேண்டியவர். வள்ளலார் மீது அளப்பரிய அன்பைக் கொண்டிருக்கும் ஹுஸைன் அத்துறையில் இன்று உயிருடன் உள்ள அறிஞர்களில் முதன்மையானவர்.
தங்களுக்கு இருக்கும் வருத்தம் போலவே எனக்கும் எதிர்காலம் குறித்து யோசிக்கும்போது இந்த பிளவு எண்ணங்கள் இன்னும் கூர்மையடையவே வாய்ப்புள்ளது என்று தோன்றுகிறது.இன்றைய சமூக, அரசியல் நிலவரங்கள் நாளொரு கவலையும், பொழுதொரு பிரச்சனையுமாக விடிகின்றன.
எங்கள் ஊர் நாகநாத சுவாமி ஆலய வளாகத்தில் குன்றக்குடி அடிகளார், கிருபானந்த வாரியார் போன்றோரின் ஆன்மிக சொற்பொழிவுகளை என் இளமைக் காலங்களில் கேட்டது நினைவுக்கு வருகிறது. இந்திய மெய்யியலை பேசிக் கொண்டிருந்தபோது மைதானத்தில் அமர்ந்தோ, நின்றுகொண்டோ கேட்க எந்தத் தடையும் அன்று இருந்தது இல்லை. ஆலயங்களை அறநிலையத் துறை நிர்வகித்தாலும், வளாகங்களில் குறிப்பிட்ட பெரும்பான்மை அரசியல், சமூக இயக்கங்களின் கட்டுப்பாட்டுக்குச் சென்றுவிட்டன. அவை ஒருவரை எப்படியெல்லாம் மற்றமையாக்கி புறமொதுக்கலாம் என்றே செயல்படுகின்றன. ஆகவே இன்று நான் நினைத்தாலும் பழையபடி ஒரு சிவாலய வளாகத்தில், பிள்ளையார் கோவில் அரச மரத்தடியில் சாதாரணமாக அமர்ந்துவிடமுடியாது.
துருவமயமாக்கல் நிகழ்ந்துகொண்டிருக்கும் சபிக்கப்பட்ட இந்த காலத்தில் சதாவதானி பாவலர் போன்றவர்களின் இயல்பு வாழ்க்கை இனி என்றேனும் திரும்ப நிகழ வாய்க்குமா என ஏங்க வைக்கிறது. Optimistic-க்காக வாழ கொஞ்சமிருக்கும் நம்பிக்கையை பிள்ளைகளுக்கு அளித்துவிட்டு செல்வோம், வேறென்ன…
நன்றி!
கொள்ளு நதீம், ஆம்பூர்
தமிழ் விக்கி, ஒரு கடிதம்
சுமார் ஆறுமாதங்களுக்கு முன்பு, அதாவது மே மாதம் தமிழ் விக்கி பற்றி எழுதப்பட்ட பல பதிவுகளை என் முகநூல் காட்டியது. ஒரு சுற்று பார்த்துவந்தேன். என்னென்ன எக்காளங்கள், என்னென்ன அவதூறுகள், எவ்வளவு திரிப்புகள், குற்றச்சாட்டுகள். தமிழ்விக்கி என்பது வெறும் காப்பி பேஸ்ட் மட்டுமே என ஒருவர் எழுதியிருக்கிறார். தமிழ் விக்கிக்கு கோடிக்கணக்கில் பணம் வருவதாக எழுதியிருக்கிறார். தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஒரு நகல் இது என்று எழுதியிருக்கிறார். உச்சகட்ட நகைச்சுவை ‘தலைமறைவாக’ அரசாங்கத்துடன் போரில் இருக்கும் தமிழ் எழுத்தாளர்களை அரசாங்கத்துக்கு காட்டிக்கொடுக்க இந்த தமிழ் விக்கி என ஒருவர் எழுதியிருக்கிறார். (தமிழ் விக்கிபீடியாவில் அந்த தகவல்கள் இருந்தால் அரசாங்கம் ஒன்றும் செய்யாதாம். காப்பி பேஸ்ட் செய்தால்தான் கண்டுகொள்ளுமாம்) எவ்வளவு பெரிய அறிவுத்திருக்கூட்டம்! இந்த லட்சணத்தில் உங்கள் வாசகர்களை மந்தைகள் என்று வசை.
இப்போது தமிழ் விக்கியின் தரம் என்ன, அதன் தேவை என்ன என்று அதில் வரும் பதிவுகளை கொஞ்சம் ஓட்டிப்பார்ப்பவர்களுக்கே சந்தேகமிருக்காது. எவ்வளவு நீண்ட பதிவுகள். குன்றக்குடி அடிகளார் பற்றிய பதிவையோ மலேயா கணபதி பற்றிய பதிவையோ வேறு எங்கே தேடமுடியும்? இதெல்லாமே இங்கே நூல்களில் உள்ளன. எடுத்து எழுதத்தான் ஆளில்லை. எழுதினாலும் இவ்வளவு சரியான ஒரு ஃபார்மேட்டில் எழுத ஆளில்லை. மேலே நக்கல் நையாண்டி செய்யும் கும்பலுக்கு அதைப்பற்றியெல்லாம் ஒரு புரிதலும் கிடையாது. தமிழ்விக்கி வரும்வரை தமிழ் விக்கிப்பீடியாவில் தகவல்கள் இல்லை, ஃபார்மாட் இல்லை என்றே தெரியாது அந்தக்கும்பலுக்கு. இன்று தமிழ்விக்கி வந்தாலும் அதை தெரிந்துகொள்ளும் அடிப்படை அறிவுத்திறன் இருக்குமா என்பதும் சந்தேகமே.
நானும் நண்பர்களும் பேசிக்கொண்டோம். இந்த நக்கல் நையாண்டி அவதூறுக் கூட்டத்துக்கு இப்போதாவது கொஞ்சமாவது மனசாட்சி உறுத்துமா, கொஞ்சமாவது வெட்கம் வருமா என்று. வரவே வராது, இன்னும் கொஞ்சம் மூர்க்கம்தான் வரும் என்று நான் சொன்னேன். ஏனென்றால் அந்த அவதூறையும் நையாண்டியையும் அவர்கள் தெரியாமல் செய்யவில்லை. தமிழ்விக்கி என்ன தரத்தில் வெளிவரும் என அவர்களுக்கு நன்றாகவே தெரியும். தெரிந்துதான், அந்தப் பயத்தில்தான் அதை சொல்லிவந்தார்கள். அவர்களைச் சூழ்ந்துள்ள கூட்டத்துக்கும் தெரியும். அவர்களும் ஒரு வார்த்தை ‘இப்ப சொல்லுங்க, தமிழ் விக்கி எப்படி இருக்கு?” என்று இவர்களிடம் கேட்கமாட்டார்கள்.
தமிழ்விக்கியில் வரும் பதிவுகள் ஒவ்வொன்றையும் திகைப்புடன் பார்க்கிறேன். வட்டுக்கோட்டை குருமடம், டேனியல் பூர் (நானும் அமெரிக்கன் கல்லூரி மாணவன் தான்) போன்ற பதிவுகள் எல்லாமே மலைப்பளிப்பவை. எவ்வளவு பெரிய ஆளுமைகள். இவர்களைப் பற்றி ஒரு நாலைந்து வரிகூட இங்கே எழுதப்படவில்லையே. இவர்கள் இல்லாமல் தமிழ் வரலாறு உண்டா? ஆனால் தமிழ் தமிழ் என பிலாக்காணம் வைப்பவர்களுக்கு அவர்கள் அறிமுகம்கூட இல்லை. வள்ளலார் பற்றிய பதிவும் சரி, ஞானியார் அடிகள் பற்றிய பதிவும் சரி எவ்வளவு பெரிய வரலாற்றுச் சித்திரத்தை அளிக்கின்றன. கே.என்.சிவராஜ பிள்ளை, மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை போன்ற அறியப்பட்ட ஆளுமைகள் ஒருபக்கம் என்றால் சுவாமி ராமதாசர் போன்றவர்கள் பற்றி கேள்விப்பட்டதே இல்லை.
வாழ்க தமிழ்ப்பணி. இப்படித்தான் எல்லா காலத்திலும் வசைகளை மட்டுமே வாங்கிக்கொண்டு நம் முன்னோர் தமிழ்ப்பணி செய்திருக்கிறார்கள். வசைபாடும் கும்பலுக்கு வேறேதும் தெரியாது. அவர்கள் அன்றும் இருப்பார்கள், என்றும் இருப்பார்கள்.
இல.திருக்குமரன்
யோகப் பயிற்சி முகாம்
வரும் அக்டோபர் 28, 29 மற்றும் 30 (வெள்ளி, சனி, ஞாயிறு) நாட்களில் ஒரு யோகப்பயிற்சி முகாம் ஒருங்கிணைக்கப்படுகிறது. கட்டணம் உண்டு
பங்கெடுக்க விரும்புபவர்கள் jeyamohan.writerpoet@gmail.com என்னும் முகவரிக்கு எழுதலாம். பெயர், தொலைபேசி எண், ஊர், வயது, நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்கிறீர்களா? ஆகிய தகவல்களுடன் எழுதலாம்
*
யோகப்பயிற்சிகள் சார்ந்த எண்ணற்ற பள்ளிகள் இன்று உலகம் முழுவதும் இருந்தாலும், வெகு சில மரபார்ந்த கல்விநிலைகள் மட்டுமே, இந்த துறையில் நீண்ட ஆய்வுகளை செய்து அவற்றை தொடர்ந்து மேம்படுத்தி இன்று வரை சரியான பாடத்திட்டம் ஒன்றை ஏற்படுத்தி வைத்துள்ளனர்.
இந்த துறையில் உலகளவில் இரண்டு விதமான பாடத்திட்டங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. ஒன்று உடலியல், மற்றும் நோய்க்கூறு சார்ந்த பாடம், { NON TRADITIONAL YOGA}மற்றொன்று மரபார்ந்த பார்வையும், நவீன அறிவியலுக்கு அணுக்கமான ஆய்வுகளையும் உள்ளடக்கிய பாடத்திட்டம் { TRADITIONAL YOGA }
இந்த முகாமில் மேலே சொல்லப்படட இரண்டு பாடத்திட்டங்களளின் அடிப்படைகள் அவற்றை ஒட்டிய பயிற்சிகள், அதன் சாதக பாதகங்கள், அதில் நமக்கு தேவையான பயிற்சிகள் என ஒரு விரிவான பார்வையை முன்வைத்து சிலவற்றை கற்றுக்கொள்ளலாம்
இந்த வகை பயிற்சிகள் எந்த வித பக்கவிளைவுகளுமின்றி , பெரியவர்கள் அனைவருக்குமாக வடிவமைக்கப்பட்டவை. ஆகவே யோகப்பயிற்சியில் இருப்பவர்கள், குறிப்பிட்ட நோய்க்கூறு இருப்பவர்கள் அல்லது மருந்து எடுத்துக்கொள்பவர்கள் மற்றும் அடிப்படையான மனம் சார்ந்த பிரச்சனை இருப்பவர்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம் .
இந்த மூன்று நாள் முகாமில்
அடிப்படையான 10 ஆசனப்பயிற்சிகள்
3 விதமான பிராணாயாம பயிற்சிகள்
பிரத்யாஹார / தியான அடிப்படைகள்
என மொத்தம் ஆறு அமர்வுகள் / வகுப்புகள் நடத்தப்படும். பங்குபெறும் ஒருவர் அனைத்திலும் கலந்துகொள்ள வேண்டும்.
முகாமில் யோக பயிற்சியுடன் பரிந்துரைக்கப்படும் உணவுத்திட்டம் பின்பற்றப்படும்.
நடத்துபவர்
சௌந்தர் ராஜன்
17 வருடங்களாக யோக வகுப்புகள் நடத்தி வருகிறார் .சுவாமி சிவானந்தர் {ரிஷிகேஷ்} மரபில் குருகுல கல்வி முறையில் கற்றவர் .மற்றும் பிஹார் யோக பள்ளியிலும் பயின்றவர்.
பொதிகை தொலைக்காட்சியில் கடந்த இரண்டு வருடங்களாக யோகம் சார்ந்த தொடர் நிகழ்ச்சிளை நடத்தி வருகிறார்.
October 12, 2022
அரசியலடிமைகள்
தமிழ்ச் சூழலில் வாசகர்களில் ஒரு சாரார் வாசிப்பின் தொடக்கக் காலத்திலேயே அரசியல் சார்ந்த பார்வைக்குள் சென்றுவிடுகிறார்கள். இங்கே வாசிப்புக்குள் நுழைய வகுக்கப்பட்ட வாசல் ஏதுமில்லை. நம் கல்விமுறை வாசிப்புக்கு எதிரானது. நம் குடும்பச்சூழல் வாசிப்பையே அறியாதது. ஆகவே தற்செயலாகவே வாசிப்பு நமக்கு அறிமுகமாகிறது. வாசிப்புக்குள் நம்மை இழுக்கும் மிகப்பெரிய வலை என்பது அரசியல்தான்.
ஏனென்றால் அரசியல் பூஞ்சைக்காளான் விதைகள் போல எங்கும் நிரம்பியிருப்பது. நம் மூச்சுக்காற்றே அதுதான். அரசியல் நேரடியாக பொருளியல்சார் அதிகாரம், மற்றும் சமூகம்சார் அதிகாரம் சார்ந்தது. அதன்மூலம் மிகப்பெரிய அதிகாரத்தையும் செல்வத்தையும் பெறும் பல்லாயிரம் பேர் உள்ளனர். ஆகவே அவர்கள் தங்கள் லாபத்துக்காக அரசியலை மாபெரும் வலையாக மாற்றி நம்மைச்சுற்றி பரப்பி வைத்திருக்கிறார்கள். அனைத்து ஊடகங்களும் அரசியல்தரப்பினருக்கு உரிமையானவையே. அனைத்துச் சமூக ஊடகங்களிலும் அவர்கள்தான் பெருந்திரளாக நிறைந்துள்ளனர். நாள்தோறும் கோடிக்கணக்கான எளிய பூச்சிகள் அதில் சிக்கிக்கொள்கின்றன.
வணிக விளம்பரங்களை விட அரசியல் விளம்பரங்கள் பலமடங்கு பெரியவை. பல மடங்கு ஆவேசமானவை. ஏனென்றால் பல்லாயிரம்பேரால் ஒரு கருத்து நம்பப்படுமென்றால் அதற்கு மிகப்பெரிய ஆற்றல் அமைகிறது. அந்த கூட்டு ஆற்றல் தனிமனிதர்களை மலைவெள்ளம் போல அடித்துச் செல்லும் தன்மை கொண்டது. அதற்கு எதிராக நின்றிருக்க மிகுந்த அறிவாற்றலும், ஆன்மிகத்திடமும் தேவை. இளமையில் அவை இருப்பதில்லை.
அரசியல் சார்பு இளம்வாசகனுக்கு ஒருவகை தன்னம்பிக்கையை அளிக்கிறது. ‘உலகை’ அவன் புரிந்துகொண்டுவிட்டதாக நம்ப ஆரம்பிக்கிறான். ‘சரியான’ தரப்பில் இருப்பதாக உறுதிகொள்கிறான். விளைவாக ‘அறியாத‘ பெருவாரியானவர்களை அறிவுறுத்தி, திருத்தி, தன் வழிக்கு கொண்டுவருவதற்கு முயல்கிறான். அது அளிக்கும் நம்பிக்கையில் திளைக்கிறான். ‘மாற்று’த்தரப்புடன் ஓயாத விவாதத்தில் ஈடுபடுகிறான். ‘எதிர்’தரப்பை வசைபாடவும், எள்ளிநகையாடவும் தனக்கு தகுதி இருப்பதாக எண்ணிக்கொள்கிறான். தான் தனியனல்ல, ஓர் இயக்கம் என கனவு காண்கிறான். இந்த மாயை அவனை முழுமையாக மூழ்கடித்து வைத்துக்கொள்கிறது.
அரசியல்சார் வாசிப்புக்குள் நுழையும் வாசகர்களில் ஒரு சிறுசாரார் மட்டுமே உள்ளே நுழைந்ததுமே அது உள்ளீடற்றது, வாழ்க்கையின் ஒரு சிறுபகுதியை மட்டுமே கருத்தில்கொள்வது என்று கண்டுகொள்கிறார்கள். இன்னொரு சாரார் அதில் ஈடுபட்டு சற்று காலம் கடந்ததும் அரசியலில் பேசப்படும் கொள்கைகள், இலட்சியங்கள், தத்துவங்கள் எல்லாமே எளிய அதிகார நோக்கம் கொண்டவை என்றும்; தங்களை கருவியாக்கி வேறுசிலர் லாபம் அடைகிறார்கள் என்றும் கண்டடைகிறார்கள். அவ்விரு சாரார் மட்டுமே விடுபட வாய்ப்புள்ளவர்கள்.
அரசியல் சார்ந்து வாசிப்பவர்களில் அதிகபட்சம் ஒரு சதவீதம் பேர் அரசியலென்பது அதை ஆடுகளமாகக் கொண்ட சிலரால் சமூக ஆதிக்கத்தையும் பொருளியல் ஆதிக்கத்தையும் அடையும்பொருட்டு உருவாக்கி நிலைநிறுத்தப்படுவது என அறிகிறார்கள். அந்த அதிகார விளையாட்டின் வெறும் கருவிகளாக தாங்கள் ஆக்கப்பட்டுவிட்டதை உணர்கிறார்கள். அவ்வாறு உணர்பவர்களில் ஆயிரத்தில் ஒருவர் அவ்விளையாட்டை தாங்களும் ஆடி அதிகாரம் நோக்கிச் செல்கிறார்கள். எஞ்சியோர் சலித்து விலகிக்கொள்கிறார்கள்.
எம்.கோவிந்தன்ஆனால் அரசியல் வழியாக வாசிப்புக்குள் நுழைபவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் அதிலிருந்து கடைசிவரை மீள்வதில்லை என்பதே நடைமுறை உண்மை. மிக இளமையில் அதில் நுழைவதனால் அவர்களின் சிந்தனைகளின் அடிப்படைக் கட்டமைப்பே அரசியல் தரப்புகள் சார்ந்ததாக ஆகிவிடுகிறது. அதன் காழ்ப்புகளும் சார்புகளும் ஆழமாக ஆளுமையில் பதிந்துவிடுகின்றன. சிந்தனையின் ‘டெம்ப்ளேட்’ உருவாகிவிடுகிறது. அதை பின்னர் கடக்கமுடிவதில்லை. அவர்களுக்கு அழகியல், ஆன்மிகம் சார்ந்த நுண்தளங்கள் கடைசிவரை பிடிபடுவதில்லை. அவர்கள் அவ்வகையில் ஊனமுற்றவர்கள். ஆனால் அவர்கள் தாங்கள் ஏதோ பிறர் உணர முடியா அரசியல் நுட்பங்களை அறிபவர்கள் என்று நம்பி, அப்படியே வாழ்ந்து மடிகிறார்கள்
அவ்வாறு சிந்தனையின் அரசியல் டெம்ப்ளேட்டை கடக்கவேண்டுமென்றால் மிகப்பெரிய அடிகள் தனிவாழ்க்கையின் அனுபவ மண்டலத்தில் இருந்து விழவேண்டும். பொறிகலங்கும்படி வாழ்க்கை சுழற்றி அடிக்கவேண்டும். சுய அனுபவங்கள் வழியாக அறிந்து, தெளிந்து, அதுவரை தான் பேசிக்கொண்டிருந்த எளிய அரசியல் தரப்பு என்பது எவ்வளவு மேலோட்டமானது என அறிந்து, விடுபட்டவர்கள் சிலரை நான் கண்டதுண்டு. ஆனால் அவர்கள் மிகமிகச்சிலரே.
எஞ்சியோர் அதிலேயே உழன்று, திளைத்து வாழ்கிறார்கள். அது அவர்களுக்கு அளிக்கும் அபாரமான தன்னம்பிக்கையே அவர்களை அங்கே மகிழ்ந்து இருக்கச் செய்கிறது. ஓர் அரசியல்நிலைபாட்டை எடுத்துவிட்டால் மேற்கொண்டு எதையும் தெரிந்துகொள்ளவேண்டியதில்லை. தன் தரப்பு தெளிவானது. மாற்றுத்தரப்பு எல்லாமே எதிர்த்தரப்புதான், அது எள்ளி நகையாடுவதற்கும் வசைபாடுவதற்கும் உரியது. அவ்வளவுதான் அதன்பின் கற்பதற்கு ஏதுமில்லை அவர்களுக்கு.
அரசியல்தரப்புகள் மிகமிகப் பிரம்மாண்டமானவை. ஏனென்றால் அவற்றின் உள்ளடக்கமாக அதிகாரம் உள்ளது. ஆகவே அந்த அதிகாரத்தைக் கையாள்பவர்கள் பெரும்பணத்தை செலவிட்டு, அதிகாரத்தைச் செலவிட்டு அந்த அரசியல்தரப்பை திரும்பத் திரும்ப நிலைநாட்டிக்கொண்டிருப்பார்கள். அதன்பொருட்டு அறிஞர்களையும், ஓயாது பேசும் ஊடகவாயாடிகளையும், தொழில்முறைப் பிரச்சார நிபுணர்களையும் நியமித்திருப்பார்கள். அவர்கள் அத்தரப்பைச் சேர்ந்தவர்களை சிந்திக்கவே விடுவதில்லை. எல்லா கேள்விகளுக்கும் உறுதியான முன்பதில்கள் அங்கே சமைக்கப்பட்டு காத்திருக்கும். தேவையானவற்றை எடுத்துக்கொள்ளவேண்டியதுதான். சிந்திப்பதே அங்கே குற்றம். கொஞ்சம் தனிச்சிந்தனை தென்படுவதும் மீறல். அதன் விளைவு கடுமையானது.
இளமையில் இந்த அரசியல்சார்ந்த வாசிப்புக்குள் சென்றவர்கள் அது அளிக்கும் எளிய விடைகள், மிகமிக எளிமையான சிந்தனை ’டெம்ப்ளேட்டுகள்’ ஆகியவற்றுக்குள் சிக்கிவிடுவதனால் அவர்கள் சிக்கலான, ஊடும்பாவுமான, நுட்பமான, அருவமான எதையுமே அறியமுடியாதவர்கள் ஆகிவிடுகிறார்கள். எந்த நூலில் இருந்தும் அவர்கள் தங்களுக்கு தேவையானவற்றை மட்டுமே எடுப்பார்கள். எந்த ஆளுமையையும் தங்களுக்கு தோதான படி சித்தரித்துக் கொள்வார்கள். எவரையும் நட்பு அல்லது பகை என இரண்டு வகைமைக்குள் அடக்கிவிடுவார்கள். எந்தச் சிந்தனையையும் தாங்கள் ஏற்கனவே அறிந்தவற்றின் ஒரு பகுதியாக திரித்துக்கொள்வார்கள், அவற்றில் உடன்பாடானவை மறுக்கவேண்டியவை என இரண்டே வகைமைதான் அவர்களுக்கு.
உண்மையில் அவர்கள் அங்கிருந்து விடுவித்துக்கொண்டாலொழிய அவர்களுக்கு இலக்கியம், தத்துவம் இரண்டும் கிடைக்கப்போவதில்லை. அவ்வாறு விடுவித்துக் கொள்வது எளிதல்ல. ரத்தம் கசிய தன்னை துண்டித்துக்கொள்ள வேண்டும். நண்பர்களை இழக்கவேண்டும். அணுக்கமானவர்கள் பகைவர்களாக ஆவதை தாங்கிக் கொள்ள வேண்டும். அந்த அனுபவம் என்னவென்று எல்லா அரசியல்தரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் தெரியும். ஏனென்றால் ஏற்கனவே விலகிச்சென்ற சிலரை அவர்களே அவ்வாறு வசைபாடி, அவதூறுசெய்து, அவமதித்திருப்பார்கள். அரசியலமைப்பு முதலில் அளிக்கும் எச்சரிக்கையே அதுதான் ‘துரோகிகளுக்கு என்ன ஆகும் தெரியுமல்லவா?’
அரசியல் தரப்புகள் எல்லாமே அவற்றை ஏற்பவர்களிடம் தங்கள் விசுவாசத்தை உரக்க அறிக்கையிடும்படிச் கோருகின்றன. அந்த தரப்பு சுட்டிக்காட்டும் எதிரிகள்மேல் கல்வீசும்படி ஆணையிடுகின்றன. அதைச்செய்யாவிட்டால் அங்கே நீடிக்க முடியாது. அதை கொஞ்சநாள் செய்தவர்கள் அச்செயல்களால் பொதுவெளியில் ஓர் அடையாளம் அடைந்திருப்பார்கள். மனம் மாறிவிட்டாலும்கூட பொதுவெளியிலுள்ள அந்த அடையாளத்தைத் துறப்பது எளிதல்ல. அதன் வலியும் கசப்பும் ஒரு தனிநபருக்கு மிகமிக கொடிய அனுபவங்கள். அதற்குத் துணிந்தவர்களுக்கே விடுதலை கிடைக்கிறது.
பி.கே.பாலகிருஷ்ணன்உண்மையில் அது விடுதலையா என்றும் யோசிக்கவேண்டியிருக்கிறது. அரசியல்தரப்புகளின் எளிய உறுப்பாக, வெற்றுக்கோஷங்களை எழுப்பும் இயந்திரமாக ஒருவன் இருக்கையில் அவன் சிந்தனையும், உணர்ச்சிகளும் எவருக்கோ அடிமையாக உள்ளன. ஆனால் அவனுக்கு சிந்திக்கும் பொறுப்பில்லை, முடிவெடுக்கும் சுமை இல்லை. அவனைப்போன்ற பல நண்பர்கள் உடனுள்ளனர். ஆகவே அவன் மகிழ்ச்சியாக இருக்கிறான். அத்தரப்பில் இருந்து விலகியதுமே அவன் தனித்தவன் ஆகிவிடுகிறான். அவனே சிந்திக்கவும் முடிவெடுக்கவும் வேண்டியிருக்கிறது. அது பெரும் சுமை.
ஆனாலும் அச்சுமையை ஏற்பவர்கள் சிலர் உள்ளனர். ’எனக்காகச் சிந்திப்பது என் பொறுப்பு மட்டுமே’ என உணர்பவர்கள். மூளையை, உணர்வுகளை, ஆன்மாவை வாடகைக்குவிட பிடிவாதமாக மறுப்பவர்கள். அவர்களுக்குரியதே கலையும் இலக்கியமும். மிகமிகக்குறைவானவர்கள் அவர்கள். தமிழ்ச்சூழலில் சில ஆயிரம் பேரைக்கூட அவ்வாறு கணக்கிட்டு எடுக்கமுடியாது.
ஆனால் அந்தச் சிறுபான்மையினரே கலையை, இலக்கியத்தை, தத்துவத்தை முன்னெடுப்பவர்கள். அவர்களின் செவிகள் நம் கண்முன் உள்ள பெருந்திரளில் எங்கோ மறைந்துள்ளன. அவற்றை நோக்கியே பேசிக்கொண்டிருக்கிறோம். புதுமைப்பித்தனும், க.நா.சுப்ரமணியமும், சுந்தர ராமசாமியும், ஜெயகாந்தனும், எல்லாம் பேசியது அவர்களுடன்தான். எம்.கோவிந்தனும், பி.கே.பாலகிருஷ்ணனும். ஆற்றூர் ரவிவர்மாவும், ஓ.வி.விஜயனும் பேசியது அவர்களுடன்தான்.
அதன் பொருட்டே அந்த முன்னோடிகள் நச்சிலக்கியவாதிகள் என்றும், சி.ஐ.ஏ கூலிகள் என்றும், சாதியவாதிகள் என்றும், மதவெறியர்கள் என்றும் அரசியல் தரப்பினரால் வசைபாடப்பட்டனர். வலதோ இடதோ, எல்லா அரசியல் தரப்பும் அவர்களை வசைபாடின, இன்றும் வசைபாடுகின்றன. ஆனால் அக்குரல் இங்கே என்றுமிருக்கும். அவர்களை நோக்கிச் செலுத்தப்படும் வசைகளும் அவதூறுகளும் என்றுமிருக்கும். சொல்லப்போனால் அரசியல்தரப்பினரின் கூட்டான வசையே அவர்களை அடையாளம் காண்பதற்குச் சிறந்த வழி.
விளாத்திக்குளம் சுவாமிகள்
கர்நாடக இசையில் ஆழ்ந்த ஞானம்கொண்டவரான கி.ராஜநாராயணன் தன் காலகட்டத்தின் பெரும்பாலான இசைக்கலைஞர்களைக் கேட்டவர். ஆனால் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, விளாத்திக்குளம் சுவாமிகள் இருவரை மட்டுமே அவர் மேதைகள் என்பார்.
விளாத்திக்குளம் சுவாமிகள் மேடைகளில் குறைவாகவே பாடியிருக்கிறார். மிக அரிதாகச் சில ஒலிப்பதிவுகள் உள்ளன. நாதயோகி என கி.ராஜநாராயணன் அவரைப்பற்றிச் சொல்கிறார். மூச்சுக்குள் முனகுவது, சீட்டியடிப்பது எல்லாமே ராகங்களாக அமைந்திருக்குமாம்.
விளாத்திக்குளம் சுவாமிகள்அருண்மொழி பேட்டி -அவள் விகடன்
அருண்மொழியை 1997 வாக்கில், அவள் சின்னப்பெண்ணாக இருந்தபோது சினேகிதன் என்னும் புகைப்பட நிபுணர் படம் எடுத்தார். பெரும்பாலான புகைப்படங்களில் பெப்பெரெப்பே என்றுதான் இருப்பாள். போஸ் கொடுக்க முடியாது. இயல்பாக இருக்கும்போது எடுத்தால்தான் உண்டு.
இந்த அவள் விகடன் பேட்டிக்காக எடுக்கப்பட்ட படங்களில் தோரணையாக போஸ் கொடுத்திருக்கிறாள். ‘செலிபிரிட்டி’ ஆகிவிட்டால் எல்லாமே தானாக வந்துவிடும்போல. நமக்குத்தான் இன்னும் அதெல்லாம் பிடிகிடைக்கவில்லை.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers



