Jeyamohan's Blog, page 696

October 22, 2022

விஷ்ணுபுரம் விழா நிதியுதவி

Vishnupuram Ilakkiya Vattamநண்பர்களே,

2022 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது விழா வரும் டிசம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் நிகழ்கிறது. வருவதற்கு பயணமுன்பதிவு செய்பவர்கள் செய்துகொள்ளலாம். விருந்தினர்களின் பட்டியல் இன்னமும் அறுதி செய்யப்படவில்லை.

இவ்விழா இன்றைய சூழலில் மிகக்குறைந்த அளவில் நடத்தப்படவேண்டும் என்றாலும் ஓரளவு நிதி தேவை. இம்முறை தேவையான நிதியில் மூன்றிலொரு பங்கு மட்டுமே இதுவரை கிடைத்துள்ளது. நல்லெண்ணம் கொண்டவர்கள், வாசகர்கள் அளிக்கும் நிதிக்கொடைக்காக காத்திருக்கிறோம். (வழக்கமாக, இறுதியில் கூடுதலாக தேவையாகும் நிதியை நாங்களே சொந்தப்பணத்தில் ஒருந்து எடுப்போம். இம்முறையும் அதுவே நிகழும் என்றாலும் முக்கால்பங்காவது வசூலாகவேண்டும் என விரும்புகிறேன்)

ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்பாளர்களும் நிகழ்ச்சிகளும் பெருகிக்கொண்டே செல்கின்றன. இது இன்று தமிழகத்தின் மிகப்பெரிய இலக்கியவிழாவாக ஆகிவிட்டிருக்கிறது. மிகமிகக்குறைந்த செலவில் இதை நடத்துகிறோம் என்றாலும்கூட இதற்கான செலவுகள் மிகுதி. நாங்கள் தனிப்பட்ட முறையில் எவரிடம் சென்று , கோரி நிதிவசூல் செய்வதில்லை. கார்ப்பரேட் நிதியும் பெறுவதில்லை. நண்பர்களை நம்பியே இதுவரை இவ்விழா நிகழ்கிறது.

நிதியளிக்கவேண்டிய முகவரி

Bank Name & Branch:ICICI Bank, Ramnagar Branch, CoimbatoreAccount Name:VISHNUPURAM ILAKKIYA VATTAM TAMIL EZHUTHALARGAL ARAKKATTALAICurrent Account No:615205041358IFSC Code:ICIC0006152

 

வெளிநாட்டில் வாழும் நண்பர்கள் அளிக்க விரும்பினால் கீழ்கண்ட மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

jeyamohan.writerpoet@gmail.com

நன்கொடை அளித்தவர்கள் meetings.vishnupuram@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 22, 2022 11:30

பீட்டர் செல்லர்ஸ் – கடிதம்

எழுத்தாளர் அவர்களுக்கு

சாகான் பதிவு கண்டேன் முழு படமும்

https://archive.org/details/1968partythe

The Party – படம் நான் ஒரு எட்டாவது படிக்கும் போது பார்த்தது. பதிவில் வரும் சீன் படத்தின் முதல் சீன் – நாயகன் ஒரு junior artist. அவன் வேலை ஊதுவது மட்டும் தான். ஊதி தீர்ப்பான். ஊதிய பின் அவன் செய்யும் செயல்களால் producer மிக நஷ்ட படுவார்.. அவனை எங்குமே இனி நடிக்க விடாமல் செய்கிறேன் என்று பெயர் குறிப்பெடுத்து வைப்பார். குறிப்பு எழுதியது அவர் இல்ல பார்ட்டி விருந்தினர்கள் பட்டியலில். படம் அங்கு இருந்து வீனை வாசிக்கும் பீட்டர் செல்லர்ஸ்-சில் தொடங்கும்.

படம் Mr Bean போல ஒரு chaotic personality பற்றியது ( அப்படி சொல்வதே பெரும் தவறு Bean பார்ட்டி படத்தின் 100ல் ஒரு பங்கு கூட இல்லை எனலாம். அல்லது அவர் வேறு வகை ). சிரித்து சிரித்து வயரு அந்து போகும் படம். படம் எப்போது முடியும் என்று நோகும் அளவு சிரிக்க வைகும். உச்சமாக producer மகள் ஒரு ஹிப்பி கூட்டத்துடன் வீட்டுக்குள் நுழைவாள்.. கூடவே ஒரு paint அடித்த யானை குட்டி. நம்ம ஆள் “இது எங்க ஊரில் தெய்வம். இப்படி செய்ய கூடாது. இதை குளிப்பாட்டுவோம்” என்று சொல்லி வீடே சோப்பு நுரை ஆகும்..

ஒரு மாதிரி இந்தியர்களின் இயல்பும் innocenceசும் அல்பதனமும் நிறைந்த பாத்திர படைப்பு. முடியும் போது ஒரு அழகான கவித்துவமான படம் போல நாம் உணர வேண்டிய நிலைக்கு வந்து விடுவோம்.

பீட்டர் செல்லர்ஸ் தன் பிங்க் பெந்தர் படங்களுக்காக பிரபலமாக அறியப்படுகிறார். பல வேடங்கள் அதற்கான பிரத்யேக குரல்கள் – கிழவி, இந்தியன், ஃப்ரெஞ்ச் போலீஸ், அனு ஆயுத scientist என்று ஒரு தீவிர கலைஞர். கடைசியாக செய்தது Being There. அவர் 3 கதாபாத்திரங்கள் செய்த Dr Strangelove oru தேர்ந்த ரசிகணுகானது (எந்த referenceசும் இல்லாமல் பார்ப்பவர்களுக்கு சோர்வு அளிக்க கூடியது).  அவர் வாழ்கையை வைத்து எடுக்க பட்ட The Life and Death of Peter Sellers 2004 வருடம் வந்தது. அவர் படங்களை போலவே அவர் ரேடியோ நிகழ்ச்சிகள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளுக்காவும் மிக பிரபலம். உங்களுக்கு தெரிந்தே இருக்கும் என் ஆர்வத்தினால் இதை எல்லாம் சொன்னேன்.

அதே படத்தின் இன்னும் ஒரு சீன், மிக பிரபலமானது

நன்றி

ராகவ்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 22, 2022 11:30

October 21, 2022

மைத்ரி, இணைய விவாதம்

வணக்கம்

தகடூர் புத்தகப் பேரவை ஞாயிறுதோறும் இரவு 8 மணிக்கு இணைய வழியாக தொடர்ந்து நூல் அறிமுகம் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது

 இவ்வாரம் 

 நூல் : மைத்ரி

 அறிமுகம் : மு.தண்டபாணி

 ஏற்புரை: அஜிதன்

                       நூலாசிரியர்

 நிகழ்வில் நூலாசிரியரோடு வாசகர்கள் கலந்துரையாடலாம்.

 நண்பர்களை பங்கேற்க அன்போடு அழைக்கிறேன்.

  நன்றி.

நாள் : 23.10.22 ஞாயிறு இரவு 8 மணி

zoom ID : 9805204425

Password தேவையில்லை.

Link :

https://us02web.zoom.us/j/9805204425

YouTube Live : தகடூர் புத்தகப் பேரவை

–இ. தங்கமணி 

தகடூர் புத்தகப் பேரவை 

தருமபுரி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 21, 2022 22:36

இந்து மதம் என ஒன்று உண்டா?- 2

இந்து மதம் என ஒன்று உண்டா? ( தொடர்ச்சி)

மதங்கள் உருவாகி வரும் முறை

மதங்கள் உருவாகி வரும் வழிமுறை என்பது உலகமெங்குமிருந்து பொதுவாக தொகுத்து வரையறுக்கப்பட்டுள்ளது. அவற்றில் இயற்கை மதங்களின் உருவாக்கத்திற்கு என ஒரு பொதுவான போக்கு உலகமெங்கும் உள்ளது.

இயற்கை மதங்கள் மிகமிகத் தொல்பழங்காலத்தில், பழங்குடி வாழ்க்கையில் இருந்து உருவாகி வருபவை. உலகமெங்கும் பழங்குடிகளுக்கு தெய்வங்களும் வழிபாட்டு முறைகளும் உள்ளன. அவை பெரும்பாலும் மூன்று அடிப்படைகள் கொண்டவை என வகுக்கப்பட்டுள்ளன.

அ.நீத்தார் வழிபாடு, மூத்தார் வழிபாடு

ஆ.குலக்குறி வழிபாடு

இ.இயற்கை வழிபாடு.

இந்தப் பகுப்புகள் மானுடவியலாளர்களால் பொதுவாகச் செய்யப்பட்டவை. இவற்றைக்கொண்டு பழங்குடிகளின் ஆன்மிகத்தை புரிந்துகொள்ள முடியாது. உதாரணமாக, பழங்குடிகள் தங்கள் மறைந்த மூதாதையரை வணங்குகிறார்கள். அது ஓர் எளிய நம்பிக்கையாகவே மானுடவியலாளர் சொல்வார்கள். ஆனால் அது அத்தனை எளியது அல்ல.

பழங்குடிகளிடம் பேசி பதிவு செய்யப்பட்ட உரையாடல்களிலேயே அவர்கள் அதை எப்படி அணுகுகிறார்கள் என்பது கண்டடையப்பட்டுள்ளது. மனிதர்கள் இங்கே பிறந்து வருவதற்கு முன் எங்கோ இருக்கிறார்கள் என்றும் இறந்தபின் அங்கே மீள்கிறார்கள் என்றும் பொதுவான நம்பிக்கை உள்ளது. அதாவது மனிதன் ஒரு கருத்துரு (idea) வாக இருக்கிறான். அந்த கருத்துரு பின்னர் பருவுரு (Matter) ஆகிறது. மரணத்திற்குப்பின் மீண்டும் கருத்துருவாக ஆகிறது.

அப்படியென்றால் அவர்கள் வழிபடுபவது எதை? மனிதன் என்னும் கருத்துருவத்தைத் தான். அது சாவுபயம் அல்ல. சாவை புரிந்துகொள்ளமுடியாமல் செய்வதும் அல்ல. கண்ணால் கண்ட ஒன்றில் இருந்து அதன் சாராம்சமான கருத்தைச் சென்றடையும் மனித முயற்சி அது.

அவ்வாறுதான் மாண்டவர்களை வழிபட ஆரம்பித்தனர். பின்னர் மாண்ட அனைவரையும் ஒன்றாக இணைத்து ஒரே கருத்துருவமாக ஆக்கினர். அத்தனை மனிதர்களும் இணைந்த மிகப்பெரிய ஒற்றை மனிதன் என உருவகித்தனர். மிகப்பெரிய சிலைகளாக அந்த கருத்துருவத்தை நிறுவினர். அதுவே பெரும் ஆள் என்னும் பெருமாள். பரமபுருஷன். மானுடம் என்னும் கருத்துருவம். அதை நீங்கள் சாங்கியம் போன்ற மிகத்தொன்மையான மதங்களில் காணலாம்.

பழங்குடிகள் எங்கெல்லாம் இறைசக்தி ஒன்று வெளிப்படுவதாக உணர்ந்தனரோ அதையெல்லாம் வழிபட்டனர். அவற்றை தங்கள் குலங்களின் அடையாளமாகக் கொண்டனர். பாம்பு, யானை, புலி போன்ற மிருகங்கள். மலை, கடல், நதி போன்ற இயற்கையமைப்புகள். மின்னல், இடி, புயல் போன்ற இயற்கை நிகழ்வுகள். எங்குமே பழங்குடிகள் இயற்கையை வழிபடவில்லை – இயற்கையில் வெளிப்படும் தெய்வத்தையே வழிபட்டனர். இருட்டை, நோயைக்கூட தெய்வ வெளிப்பாடாக கருதினர்.

தெய்வம் என்ற ஒன்று உண்டு என்றால், அது இவ்வகையில் மனிதர்களுக்கு தங்களை வெளிப்படுத்திக் கொண்டது என்று கொள்வதே முறையான ஆன்மிகப்பார்வையாக இருக்க முடியும். உலகமெங்கும், அனைத்து மக்களுக்கும் அது அவ்வாறு வெளிப்பட்டது.

இந்த பழங்குடி வழிபாட்டுமுறைகள் (worships) என்றே அழைக்கப்பட்டன. அந்த வழிபாட்டுமுறைக்கு ஓர் அமைப்பும், கொள்கையும் உருவாகும்போது அவை மெல்ல மெல்ல குறுமதங்கள் (Cults)ஆகின்றன. இணையான இயல்பு கொண்ட குறுமதங்கள் இணைந்து கொண்டே இருக்கின்றன. இணைந்து இணைந்து இன்னும் பெரிய மரபுங்கள். அந்த பெரிய மரபுகளே முன்பு தர்மம் என்றோ, மார்க்கம் என்றோ, நெறி என்றோ அழைக்கப்பட்டன. இன்று நாம் அவற்றையே மதம் (Religion) என அழைக்கிறோம்.

ஒரு நதி உருவாகி வருவது போலத்தான் இது நிகழ்கிறது. ஒரு ஊற்று மெல்ல சிறு ஓடையாக உருவாகிறது. மேலும் மேலும் ஓடைகள் சேர்கின்றன. அதன்பின் துணையாறுகள் இணைந்துகொள்கின்றன. அது திரண்டு திரண்டு முன்னகர்ந்துகொண்டே இருக்கிறது. அந்த முதல் ஊற்று என ஒன்றை நாம் உருவகிக்கலாமே ஒழிய அது இதுதான் என சொல்லவே முடியாது. கங்கோத்ரிக்கு முன்னாலும் கங்கை உள்ளது. நதி பெரிதாகும்போது அதில் இருந்து கிளை ஆறுகள் பிரிகின்றன. அதுவும் மதங்களில் நிகழ்கிறது. பெரிய மதங்கள் பிரிந்துகொண்டே இருக்கின்றன.

உலகிலுள்ள இயற்கை மதங்களை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு நூறாண்டிலும் அதில் புதிய துணைமதங்கள் இணைந்திருப்பதையும் புதிய கிளைகள் பிரிந்திருப்பதையும் காணலாம். மதங்களின் பெயர்கள் காலந்தோறும் மாறுபடும். ஒட்டுமொத்த கட்டமைப்பே காலத்திற்கேற்ப மாறுபடும்.

ஶ்ரீரங்கத்தில் நின்றுகொண்டு இந்த நதி காவேரி அல்ல; கர்நாடகத்தில் காவேரியே கிடையாது; அங்கே ஹாரங்கி, கபினி, சுவர்ணா என்றெல்லாம்தான் இருந்தது என்று சொல்வதற்கு என்ன பொருள்? ஈரோட்டுக்குமேல் இது பவானி என தனி நதியாக இருந்தது என்று சொன்னால் அதை எப்படி புரிந்துகொள்வது? திருச்சியை பொறுத்தவரை நொய்யலும் அமராவதியுமெல்லாமே காவேரிதான். கீழத்தஞ்சையில் காவேரியில் இருந்து வெண்ணாறு பிரிகிறது. மேலும் பல கிளைநதிகளாகிறது. அவையும் காவேரி என்றே சொல்லப்படுகின்றன. காவேரிப்படுகை என்றே அழைக்கப்படுகின்றன.

மதங்களின் இந்த தொடர்ச்சியான இணைவுச்செயல்பாட்டுக்கு இரண்டு காரணங்கள் உண்டு. பழைய சமூகங்கள் கூடுமானவரை பிறரை இணைத்துக்கொண்டு பெரியதாக ஆக முயன்றுகொண்டே இருந்தன. அதுவே வலிமை என அவை அறிந்திருந்தன. இரு பழங்குடிகள் இணையும்போது இரு வழிபாட்டுமுறைகளும் இணைந்தன. இரு சமூகங்கள் இணையும்போது அவர்களின் தெய்வங்களும் ஒன்றாயின.

இது சுரண்டலோ, அடக்குமுறையோ அல்ல. இது எவருடைய சதியும் சூழ்ச்சியும் அல்ல. காழ்ப்பே உருவான உள்ளங்களுக்கு அப்படி தோன்றலாம். ஆனால் கொஞ்சம் வரலாறும் சமூகவியலும் வாசிப்பவர்களுக்குத் தெரியும், இது மானுடசமூகப் பரிணாமத்தின் இயல்பான வழிமுறை.

சுவீரா ஜெயஸ்வால் எழுதிய வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும் என்னும் நூல் மார்க்சிய ஆய்வுமுறைமை கொண்டது. அது விஷ்ணு, நாராயணன், திருமால், பிரத்யும்னன், அனிருத்தன், சங்கர்ஷணன், பலராமன், பரசுராமன், ராமன், கிருஷ்ணன் என வெவ்வேறு தெய்வங்களும் வழிபாட்டு முறைகளும் காலப்போக்கில் இணைந்து இணைந்து இன்றைய வைணவம் எப்படி உருவானது என விளக்குகிறது.

சைவமும் அப்படித்தான். வேதங்களில் பேசப்படும் ருத்ரன் போன்ற தெய்வங்களும்; தொல்குடிகளில் பசுபதியும்; லிங்க வழிபாடு, தூண்வழிபாடு, மலைவழிபாடு, அனல்வழிபாடு முதலிய வழிபாட்டு முறைகளும் இணைந்து இணைந்து சைவம் உருவானது.

இந்த இணைவுக்கான ஆன்மிகமான காரணம் ஒன்றையும் சொல்லலாம். இது மனிதன் பிரபஞ்சத்தின் சாராம்சத்தை வெவ்வேறு துளி அறிதல்களாக அறிவதன் விளைவுதான் தனி மதங்கள். அந்த அறிதல்கள் இணைந்து இணைந்து முழுமையறிதல் நோக்கிச் செல்கின்றன.

ஒவ்வொரு அறிதலும் அவ்வாறுதான் நிகழ்கிறது. இயற்பியல் பிரபஞ்சத்தை எப்படி புரிந்துகொள்கிறது? நியூட்டன், ஐன்ஸ்டீன், ஓபன்ஹீமர், ரிச்சர்ட் ஃபெயின்மான் என பலர் பல கோணங்களில், பல பகுதிகளாக அறிந்தவை இணைந்து இணைந்துதான் பிரபஞ்சம் பற்றிய அறிவு திரண்டுகொண்டிருக்கிறது. மெய்யியல் ஞானமும் அவ்வாறே பல ஞானிகளால், பல அறிஞர்களால் பல பகுதிகளாக உணரப்பட்டவை ஒன்றுடன் ஒன்று விவாதித்தும் இணைந்தும் ஒன்றாகி இறையறிவாக திரண்டுகொண்டிருக்கிறது.

நாம் அந்த இணைவின் பரிணாமத்தை தெய்வ உருவகங்கள் வழியாக காணலாம். பிரத்யும்னன், அனிருத்தன், சங்கர்ஷணன், பலராமன் எல்லாம் விஷ்ணுவின் வடிவங்களே என ஆயின. அது வெவ்வேறு வகை இறையறிதல்கள் இணைந்து ஒரே அறிதலாக ஆவதுதான். பின்னர் ராமனும் கிருஷ்ணனும் அதில் இணைந்தன. ஒரு கட்டத்தில் சிவனும் விஷ்ணுவும் ஒன்றே என ஆயின. ஹரிஹரன், சங்கரநாராயணன், சிவராமன், சங்கர ராமன் என்றெல்லாம் தெய்வ உருவகங்கள் அமைந்தன.

ஒருவர் அறிதலின் பொருட்டு காலத்தில் பின்னால் செல்லலாம்.சிவசங்கரன் என்னும் தெய்வ உருவகத்தை சிவன் விஷ்ணு என பிரிக்கலாம். விஷ்ணுவை பலவாக பிரிக்கலாம். அதில் ஒன்றான பலராமனின் மூலம் எது என தேடிச்செல்லலாம். ஏதோ ஒரு காலகட்டத்தில் வேளாண்மக்கள் வழிபட்ட ஒரு தெய்வம். தோளில் மேழியுடன் நின்றிருக்கும் பலராமன் உழவர்களின் அடையாளம். உழவர்கள் அனைவரையும் இணைத்து ஒரே மனித உருவமாக ஆக்கிய வடிவம். அதை மேலும் பின்னுக்கு கொண்டு சென்றால் அதேபோன்ற ஏராளமான உழுபடை தெய்வங்களை நாம் கண்டடையலாம்.

இது வரலாற்றுப்பார்வை. குறியீடுகளின் வரலாற்றைக்கொண்டு சமூக வரலாற்றை ஊகித்தறியலாம். ஆன்மிகப்பரிணாம வரலாற்றையும் ஊகிக்கலாம். மாறாக ‘அய்யய்யோ பலராமனை விஷ்ணுவாக ஆக்கிவிட்டார்களே, அது அடக்குமுறை’ என ஒருவன் கூவுவான் என்றால் அவன் யார்? விஷ்ணுவில் இருந்து பலராமனை பிரிக்கவேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்வான் என்றால் அவன் நோக்கம் என்ன?

ஒன்று அவன் மோசடியாளன். உள்நோக்கம் கொண்ட ஆதிக்கவாதி. பிரித்தாள நினைப்பவன், பிரித்தாளும் கலையில் வல்லுநர்களின் கையாள். அல்லது அவர்களால் ஏமாற்றப்படும் முழு அசடு.

தீர்க்கதரிசன மதங்களுக்கு ஒரு பரிணாமம் உள்ளது. ஒரு தீர்க்கதரிசி தனக்கு முன்னாலிருந்த ஆன்மிகப்பார்வைகளை தொகுத்து, அதற்கு தன் தரிசனத்தின் அடிப்படையில் மையம் ஒன்றை உருவாக்கி, அதை முன்வைக்கிறார். அதையொட்டி பிற்காலத்தில் அவருடைய மாணவர்களால், வழித்தோன்றல்களால் ஒரு மதம் மெல்லமெல்ல உருவாகிறது. அவர்கள் அந்த முதல் தீர்க்கதரிசியை தங்கள் நோக்கில் விளக்கிக்கொள்ளும்போது அந்த மதத்திற்குள் பிரிவுகள் உருவாகின்றன. மேலும் மேலும் ஞானிகள் அந்த மரபில் தோன்றும்போது கிளைகள் தோன்றுகின்றன.

சமணம் இந்தியாவில் ஸ்வேதாம்பரர், திகம்பரர் என்னும் இரு பிரிவாக உள்ளது. அதனுள் பல சம்பிரதாயங்கள் உள்ளன. பௌத்தம் புத்தருக்குப் பின் இருநூறாண்டுகளில் மகா காசியபர் காலத்தில் தேரவாதம் (ஸ்தவிரவாதம், நிலைமரபு) அல்லது ஹீனயானம் மற்றும் மகாயானம் (பெருமரபு) என பிரிந்தது. மேலும் மேலும் பிரிந்துகொண்டே இருந்தது. இறுதியாக இந்தியாவில் உருவான மரபு வஜ்ராயனம். அதுவே திபெத்தில் எஞ்சியிருக்கிறது. மிக அண்மையில் உருவான பௌத்த மரபு என்றால் அம்பேத்கர் உருவாக்கிய நவயான பௌத்த மரபைச் சொல்லலாம். இவ்வாறுதான் மதங்கள் பரிணாமம் அடைகின்றன.

இயற்கை மதங்களும் தீர்க்கதரிசன மதங்களும்

தீர்க்கதரிசன மதங்களின் தோற்றத்திற்கு அந்த தீர்க்கதரிசியை அடையாளப்படுத்தலாம். இயற்கை மதங்கள் எப்போது எப்படித் தோன்றின என்று கூறவே முடியாது. இயற்கைமதங்கள் மிகத்தொன்மையானவை என்பதனால் அவற்றில் தொன்மையான பழங்குடி வாழ்க்கையின் நம்பிக்கைகள், குறியீடுகள், சடங்குகள், வாழ்க்கை ஆசாரங்கள் ஆகியவை நிறைந்திருக்கும். காலந்தோறும் அவற்றை புதுப்பித்தபடியேதான் அவை முன்னகர முடியும். ஆனால் இயற்கை மதங்கள் நெகிழ்வானவையாகவும், உள்விரிவுகளை அனுமதிப்பவையாகவும், புதியவற்றை உள்ளிழுத்து வளர்பவையாகவும் இருக்கும்

இயற்கை மதம், தீர்க்கதரிசன மதம் ஆகியவற்றுக்கு அவற்றுக்கே உண்டான பிரச்சினைகள் மற்றும் எதிர்மறைக்கூறுகள் உண்டு. இயற்கை மதங்கள் தொன்மையான ஆசாரங்கள் நிறைந்தவையாக இருக்கும். உதாரணமாக இந்து மதத்தில் உள்ள நீத்தார்ச்சடங்குகள். சனிக்கிழமை ஒருவர் இறந்தால் ஒரு கோழியையும் கொன்று சிதையில் உடன் வைக்கவேண்டும் என்பது போன்ற நம்பிக்கைகள். இவற்றின் வேரைத்தேடிப்போனால் மனிதர்கள் சமைத்து உண்பதற்கு முந்தைய காலகட்டத்திற்கே சென்றுவிட வேண்டியிருக்கும்.

இவற்றில் எவை இன்று தீங்கானவை அல்லது காலத்துக்கு ஒவ்வாதவை என்றும் எவை தவிர்க்கமுடியாதவை என்றும் கண்டடைவது எளிதல்ல. ஞானிகளே அதைச் செய்ய முடியும். அவர்களும் கூட எளிதாக மாற்றங்களை கொண்டுவர முடியாது. அவற்றின் தொன்மையாலேயே அவை ஆழமாக வேரூன்றியவையாக இருக்கும். ஆகவே இம்மதங்களுக்குள் ஒரு தொடர் போராட்டம் நிகழ்ந்தபடி இருக்கவேண்டும். ராமானுஜர் முதல் வள்ளலார் வரை, கபீர் முதல் காந்தி வரை இந்து மதத்திற்குள் அது நிகழ்கிறது.

மறுபக்கம், தீர்க்கதரிசன மதங்கள் ஒப்புநோக்க தர்க்கபூர்வமானவையாகவும் கொஞ்சம் நவீனமானவையாகவும் இருக்கக்கூடும். ஆனால் அவற்றின் மையச்சிக்கல் ‘நாங்கள் சொல்வதே உண்மை. எங்களுடையது மட்டுமே கடவுள். மற்ற நம்பிக்கைகளும் மரபுகளும் எல்லாமே பிழையானவை, பொய்யானவை, அழிக்கப்படவேண்டியவை, அவற்றை நம்புகிறவர்கள் பாவிகள் அல்லது அறிவிலிகள், அவர்களை மீட்டாகவேண்டும்’ என்னும் அவர்களின் உறுதிப்பாடுதான். உலகில் மாபெரும் மதப்போர்களை உருவாக்கியவை தீர்க்கதரிசன மதங்களே. ஆப்ரிக்காவிலும், தென்னமேரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் மொத்த மக்களினங்களையே கொன்றழித்தவை அவை. மத்தியகால ஐரோப்பாவின் மதவிசாரணைகள் (Inquisition) போன்றவை ஹிட்லரின் யூதப்படுகொலைகள், ஸ்டாலினின் சைபீரிய வதைமுகாம்களை விடக் கொடூரமானவை, இந்தியாவிலும் அவை நிகழ்ந்துள்ளன (Goa Inquisition)

இயற்கை மதங்கள் அவற்றிலுள்ள ஆசாரவாதத்துடனும் தீர்க்கதரிசன மதங்கள் அவற்றின் ஒற்றைப்படையான மூர்க்கத்துடனும் போராடி முன்னகர்ந்துகொண்டே இருக்கவேண்டும். இயற்கை மதங்கள் நெகிழ்வானவை, அனைத்தையும் உள்ளடக்குபவை. அப்பண்பு பேணப்படவேண்டும். அவை இறுக்கமான அமைப்பாக ஆகிவிடக்கூடாது. அவ்வாறு ஆகுமென்றால் இயற்கைமதங்கள் பழமையான ஆசாரங்களின் தொகுப்பாக தேங்கிவிடும். தீர்க்கதரிசன மதங்கள் உறுதியான அமைப்பு கொண்டவை. அவை நெகிழ்வுத்தன்மையை அடையவில்லை என்றால் ஆதிக்க அமைப்பாக மாறி ஒடுக்குமுறையை ஆரம்பித்துவிடும். மதங்களுக்குள் ஞானிகள், சீர்திருத்தவாதிகள் தோன்றி இவற்றை நவீனப்படுத்திக்கொண்டும் விரிவாக்கிக்கொண்டும் இருக்கவேண்டும். அதைக்கொண்டே அந்த மதத்தின் மதிப்பு அளவிடப்படவேண்டும்.

இயற்கை மதங்களிலுள்ள தொன்மையான ஆசாரங்களையும் நம்பிக்கைகளையும் மட்டுமே அந்த மதங்களின் ஒட்டுமொத்தம் என எடுத்துக்கொண்டு, அவற்றை காட்டுமிராண்டி மரபுகள் என அடையாளப்படுத்தி அழிப்பது முந்நூறாண்டுகளாக உலகில் நடந்துகொண்டிருக்கிறது. அந்தத் தாக்குதல்களால் பெரும்பாலான தொன்மையான இயற்கைமதங்கள் அழிந்துவிட்டன. அந்த மதங்களில் சேமிக்கப்பட்டிருந்த தொன்மையான பண்பாடுகளின் குறியீடுகளும், படிமங்களும் மறைந்தன. குறியீடுகளாகவும் படிமங்களாகவும் மாற்றப்பட்டிருந்த பண்பாட்டு அறிவும் தத்துவ ஞானமும் அழிந்தன.

இந்து மதம் போன்ற இயற்கை மதத்தில் இரு எல்லைகள் உள்ளன. ஓர் எல்லையில் அது ஒரு தொன்மையான பழங்குடி மதம். பழமையான சடங்குகள், நம்பிக்கைகள், ஆசாரங்கள் கொண்டது. இன்னொரு எல்லையில் அது தூய தத்துவ மதம். ஒரு கிராமதேவதையின் பூசாரியை நாராயண குரு சந்தித்து வணங்கும் காட்சி பதிவாகியிருக்கிறது. ஒரு புகைப்படமும் உண்டு. இரு எல்லைகள். ஒருவர் பழங்குடிப் பண்பாட்டில் இருக்கிறார். இன்னொருவர் தூய வேதாந்தி. இருவருமே இந்துக்கள்தான்.

பழங்குடி மரபிலிருந்து வந்த நம்பிக்கைகளையும் சடங்குகளையும் ஆசாரங்களையும் தொடர்ச்சியாக தத்துவ அறிஞர்களும் ஞானிகளும் எதிர்கொண்டபடியே இருப்பதை இந்து மரபில் காணலாம். ஒருபக்கம் அவர்கள் அந்த நம்பிக்கைகளையும் ஆசாரங்களையும் சடங்குகளையும் காலத்திற்கு ஏற்ப புதுப்பித்து, காலத்திற்கு ஒவ்வாதனவற்றை களைந்துகொண்டே இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் அவற்றில் சிலவற்றை தத்துவத்திற்கும் மெய்ஞானத்திற்கும் குறியீடுகளாக ஆக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

சங்கரர் முதல் காந்தி வரை, திருமூலர் முதல் வள்ளலார் வரை அத்தனை ஞானிகளும் இந்த இரண்டு பணிகளையும் செய்துகொண்டே இருந்தார்கள். அந்த மரபு அழிவற்று தொடர்வது. இந்து மரபு தன்னைச் சீர்திருத்திக்கொண்டும் தத்துவார்த்தமாக ஆக்கிக்கொண்டும் செயலூக்கத்துடன் திகழ ஞானியரே காரணம். அவர்கள் நிகழாத காலகட்டமே இருந்ததில்லை. இன்னும் அவர்கள் வருவார்கள்.

ஆகவே, ஒருவர் இன்று நம்மிடம் வந்து இந்துமதம் என்பதே சில ஆசாரங்களும் நம்பிக்கைகளும் சடங்குகளும் மட்டுமே என சொல்கிறார் என்றால் அவர் உண்மையில் சங்கரர் முதல் காந்தி வரையிலான நம் ஞானியரை அவமதிக்கிறார். திருமூலர் முதல் வள்ளலார் வரையிலானவர்களைச் சிறுமை செய்கிறார். அதற்கு அவருடைய மறைக்கப்பட்ட மதவெறியோ, அரசியல் உள்நோக்கங்களோ காரணமாக இருக்கலாம். நாம் அச்சொற்களுக்குச் செவிகொடுத்தோம் எனில் நம்மையே கீழ்மைப்படுத்திக் கொள்கிறோம். அதைக்கூட செய்யலாம், நம் முன்னோரையும் ஞானியரையும் நாம் கீழ்மைப்படுத்திக் கொள்வோம் எனில் நம் தலைமுறைகளுக்குப் பெரும் பாவத்தைச் சேர்த்து வைக்கிறோம் என்றே பொருள்.

(மேலும்)

ஜெயமோகன் நூல்கள்

இந்து மெய்மை வாங்க

ஆலயம் எவருடையது? வாங்கஇந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் வாங்க
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 21, 2022 11:35

ஒரு நாளின் முகங்கள்

நேற்று ஒரே நாளில் பல சந்திப்புகள். தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ராமசுப்புயை அவர் அலுவலகத்தில் சந்தித்தேன். தினமலர் இதழில் நான் ஒரு தொடர் எழுதக்கூடும். அவருடைய தாத்தாவும் புகழ்பெற்ற நாணயவியலாளருமான கிருஷ்ணமூர்த்தியை 1996-ல் சந்தித்திருக்கிறேன். கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு உற்சாகமான, வரலாற்றார்வம் கொண்ட இளைஞராக இருந்தார். தினமலரில் பணிபுரிபவரும், பழைய நண்பருமான எழுத்தாளர் ஆர்.வெங்கடேஷை சந்தித்தேன்.

இன்னொரு சந்திப்பு ஐசரி கணேஷ். வேல்ஸ் பல்கலையின் தலைவர், வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின்  தயாரிப்பாளர். நான் எழுதி அவர் தயாரித்த வெந்து தணிந்தத்து காடு வரும் நவம்பர் 9 அன்று ஐம்பதாவது நாளை கொண்டாடவிருக்கிறது. ஐசரி கணேஷ் வீட்டில் அவருடைய உறவினரும் என் தர்மபுரி வாழ்க்கையில் இலக்கிய நண்பராகவும், இலக்கிய வழிகாட்டியாகவும் திகழ்ந்தவருமான ஆர்.சிவக்குமாரைச் சந்தித்தேன்.

[image error] ஐசரி கணேஷ்

ஆர்.சிவக்குமார் முதன்மையாக மொழிபெயர்ப்பாளராகவே அறியப்பட்டார். தர்மபுரி கல்லூரியில் ஆசிரியராக இருந்தார். அவருடைய இலக்கிய சகா அன்று தர்மபுரியில் கல்லூரிப்பேராசிரியராக பணியாற்றிய பிரம்மராஜன். மீட்சி இதழிலும் ஆர். சிவக்குமாரின் பங்களிப்பு உண்டு. அவர் அங்கே பணியாற்றுவதைச் சொல்லி என்னை அவரிடம் அறிமுகம் செய்தவர் தர்மபுரிக்கு வந்த கோணங்கி. ‘அழுத்தமான ஆளுடா. ஒண்ணும்தெரியாதவரு மாதிரி இருப்பார்’ என எச்சரித்து கூட்டிச்சென்றார்.

ஆர்.சிவக்குமார் எழுதிய நாவல்  தருநிழல் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.  நான் இனிமேல்தான் படிக்கவேண்டும். சிவக்குமார் தன் கல்லூரி ஆசிரியர் காலகட்டத்து வாழ்க்கையைப் பற்றி ஒரு நாவல் எழுதவிருக்கிறார். 

ஆர் சிவக்குமார்

இரண்டு சந்திப்புகள் தற்செயலானவை. ஒரு பெருந்தொழிலதிபரை நான் தங்கியிருந்த விடுதியின் மின்தூக்கியில் சந்தித்தேன். அவரே அறிமுகம்செய்துகொண்டார். கொஞ்சம் பேசினேன். அவர் பொன்னியின் செல்வன் பற்றி மிகுந்த உற்சாகத்துடன் பேசினார்.

இன்னொரு சந்திப்பு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர். நான் எண்ணியதைவிட மிக இளமையாக இருந்தார். அவரைப் பற்றி கொரோனா காலகட்டத்தில் நான் எழுதிய குறிப்பைப் பற்றிச் சொன்னேன். தமிழக பொதுச்சுகாதார அமைப்பின் வெற்றியை பற்றி இன்னமும் எனக்கு பெருமிதம்தான். விஜயபாஸ்கரும் பொன்னியின் செல்வன் பார்த்திருந்தார்.

பொன்னியின் செல்வன் அலை தொடர்கிறது, தீபாவளிப் படங்களுக்குப் பின்னரும். இப்போதுள்ள போக்கின்படி பார்த்தால் நவம்பர் பாதிவரைக்கும்கூட இதே அளவு தீவிரத்துடன் நீடிக்கவே வாய்ப்பு. மணி ரத்னம் பொன்னியின் செல்வன் 2 ஐ முடித்து அதன் காட்சிவிரிவாக்க பணிகளையும் முடித்துவிட்டார். படம் கிட்டத்தட்ட முடிந்து ஏப்ரல் 2023 இறுதிக்காக காத்திருக்கிறது.

மணி ரத்னம் அலுவலகத்திற்கு சென்றேன். அந்த அலுவலகத்திற்கு 2013 பிப்ரவரி பத்தாம்தேதி சென்றதை நினைவுகூர்கிறேன். கடல் தோல்வியடைந்திருந்தது. மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகம் காலியாக இருந்தது. வாசலில் இரு போலீஸ்காரர்கள் காவலிருந்தனர். படத்தை பல கைமாற்றங்களுக்கு பின் வாங்கி இழப்பு அடைந்த ஓர் விநியோகஸ்தர் இழப்பீடை மணி ரத்னம் தரவேண்டும் என பிரச்சினை செய்துகொண்டிருந்த காலகட்டம். அலுவலகத்தில் எவருமே இல்லை. எப்போதுமே இருபதுபேர் வேலைசெய்யும் அலுவலகம் அமைதியாக இருந்தது

[image error]

மாடி ஏற என்னால் முடியவில்லை. ஐம்பது கிலோ எடையை தூக்குவதுபோல் இருந்தது. ஒவ்வொரு படியிலும் நின்று நின்று சென்றேன். படத்தின் தோல்விச்செய்தி வரும்போது மலையாளப்படம் ஒன் பை டூ எழுதுவதற்காக திருவனந்தபுரத்தில் இருந்தேன். அங்கேதான் கடல் பார்த்தேன். இணையவெளியில் காழ்ப்பு கொண்ட கும்பல் நையாண்டி, எக்காளம் என அதை கொண்டாடிக்கொண்டிருந்தனர். அதை என் ‘நண்பரே போன்ற’வர்கள் எனக்கு நகலெடுத்து அனுப்பிக்கொண்டிருந்தனர். அதெல்லாம் என்னை பெரிதாகப் பாதிக்கவில்லை. ஏனென்றால் கடல் தோல்வி என்னை தனிப்பட்ட முறையில் பாதிக்காத நிலை அன்றிருந்தது. நான்கு மலையாளப்படங்களும் வசந்தபாலனின் ஒருபடமும் தொடங்கவிருந்தன. மணி ரத்னத்தைச் சந்திப்பதுதான் எனக்குப் பெருஞ்சுமையாக தோன்றியது.

மணி ரத்னத்தின் அறைக்குள் சென்றேன். தணிந்த குரலில் ‘ஹாய்’ என்றேன். அவர் சிரித்தபடி ‘ஹாய்’ என்று சொல்லி அமரும்படி கைகாட்டினார். கணிப்பொறியை மூடி வைத்தார். ‘வருத்தமா இருக்கு’ என நான் தொடங்கியதும் ‘அது முடிஞ்சுபோன கதை.நான் சினிமாவிலே அது மாதிரி நிறையவே பாத்தாச்சு….பழகியாச்சு. All in the game…இனி நாம அதைப்பத்திப் பேசவே வேண்டாம்’ என்றார். அதே சிரிப்பு. நான் “சரி” என்றேன். அடுத்த படம் பற்றி பேசலானோம்.

கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு

இம்முறை மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகமே விழாக்கோலமாக இருந்தது. மேலே சென்றபோது இறகுபோல் எடையின்மையை உணர்ந்தேன். உள்ளே சென்றதும் ‘இப்பதான் கடல் படம் முடிஞ்சு பாத்ததுபோல இருக்கு…vindicated” என்றேன். சிரித்தபடி “இப்பவும் அதையே சொல்றேன். இதுவும் முடிஞ்ச கதை. பொன்னியின் செல்வனிலே இருந்து வெளியே போவோம். இனி அதைப்பத்தி பேச்சு தேவையில்லை. அடுத்த படம் பத்தி யோசிப்போம்” என்றார். பேசி முடிவுசெய்து கரு, களம், ஒருவரிக் கதைக்கட்டமைப்பு ஆகியவற்றை முடிவுசெய்துவிட்டோம்.இனி மூளை முழுக்க அதுதான்.

கடந்துசெல்லுதல் என்பதே வாழ்தலுக்கான ரகசியம். தோல்விகளை எளிதாகக் கடந்துசெல்வோம். பலசமயம் வெற்றிகளில் தேங்கிவிடுவோம். மாபெரும் வெற்றியிலும் கடந்துசென்றுவிடுவதென்பது செயல்மேல் பெரும் பற்று கொண்டவர்களால் மட்டுமே இயல்வது.

ஆர்.விஜயபாஸ்கர்

இந்த உரையாடல்களில் நாலைந்து முறை எழுந்து வந்த ஒரு கேள்வி, ஏ.ஆர். ரஹ்மானின் இசை சோழர்காலத்துக்கு பொருந்துகிறதா என்பது. நான் ஏற்கனவே அதற்குப் பதில் எழுதியிருக்கிறேன். ‘இப்படத்தின் இசை எப்படி இருக்கவேண்டும்?’ என்று கேட்டபோது பலர் சொன்னது இதுதான், ‘கர்ணன் படத்தின் இசை அல்லது ராஜராஜசோழன் படத்தின் இசைபோல் இருக்கவேண்டும்’. 

ஆனால் அப்படங்கள் வெளிவந்த காலகட்டத்தில் அந்த இசைகள் அப்படங்களுக்கு பொருந்தவில்லை என்றே விமர்சனம் இருந்தது. குறிப்பாக கர்ணன் படத்தில் உள்ள ‘இரவும் நிலவும்’ என்னும் பாடல் மகாபாரத மனநிலைக்கே எதிரானது என்னும் கடும் கண்டனம் எழுந்தது.  அப்பாடலின் காட்சியமைப்பு, ஆடைகள், பேலூர் ஹளபீடு பின்னணி எல்லாமே எள்ளிநகையாடப்பட்டது. படம் அரங்கத்தோல்வி அடையவும் நேரிட்டது. 

அதேதான் ராஜராஜ சோழனுக்கும் நிகழ்ந்தது. அதிலுள்ள நாதனைக் கண்டேனடி பாட்டு கேலிக்குரியதாகியது. சோழத்து இளவரசி அரங்கில் நாட்டியம் ஆடியதும், அவள் அணிந்திருந்த தாசிகளுக்குரிய உடையும் கடுமையாக ஏளனம் செய்யப்பட்டது. அப்படமும் அரங்கத்தோல்வி. அதை அன்று சிறுவர்களாக இருந்து பார்த்தவர்கள், பின்னர் தொலைக்காட்சியில் ரசித்தவர்கள் சிலர் இன்று அதே இசையை இப்படத்தில் கோருகிறார்கள்.

அப்படி அன்று கர்ணன் படத்தைக் கண்டித்தவர்கள் அதன் இசை சம்பூர்ண ராமாயணம் படத்தின் இசை போல் இருந்திருக்கவேண்டும் என்றனர். ஆனால் அந்த இசையே புராண நாடகங்களின் இசை போல் இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டது. அதிலுள்ள சங்கீத சௌபாக்யமே என்னும் பாடல் ஏளனத்துக்கு ஆளாகியது.

காலந்தோறும் இசையில் இரு முனைகள் உள்ளன. மூத்தவர்கள் கடந்தகால ஏக்கத்துடன் இசை கேட்கிறார்கள். எல்லா இசையும் அவர்களின் இளமையில் கேட்ட இசைபோல இசை இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள். இசை அவர்களில் உருவாக்குவது இசையனுபவம் அல்ல, நினைவுகள் கிளரும் ஏக்கம் மட்டுமே. இன்னொரு பக்கம், இளைய தலைமுறை இசையில் புதியது என்ன என்று மட்டுமே பார்க்கிறது. மரபிலுள்ளவற்றை விரும்புவதில்லை. சினிமா இசையமைப்பாளர் இரு எல்லையையும் நிறைவுறச் செய்யவேண்டும். வெற்றிகரமான இசையமைப்பாளர்கள் எல்லாருமே அதைச் செய்தவர்கள். 

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை பொன்னியின் செல்வனில் அதைச் சாதித்துள்ளது. பொன்னியின் செல்வன் முதன்மையாக இன்றைய குழந்தைகளுக்கான படம். அவர்களுக்கு நம் மரபிசை, மெல்லிசை இரண்டுமே அன்னியமானவை. ஆனால் உலகளாவிய புதிய ‘பாப்’ இசைமரபுகள் அறிமுகமானவை. ஆகவே பொன்னியின் செல்வனின் இசை புதிய இசைமரபுக்குள், ஆனால் மரபிசை மற்றும் நாட்டார் இசையின் கூறுகளுடன் அமைந்துள்ளது.

அது ‘சரியா?’ என்பதற்கு ஒரே பதில்தான். ‘வெற்றியா?’ என்னும் பதில் வினா. மாபெரும் வெற்றி என்பது கண்கூடு. பொன்னியின் செல்வனை உலகமெங்குமுள்ள சிறுவர், இளைஞர்களிடம் கொண்டுசென்றது ஏ.ஆர்.ரஹ்மானின் இசைதான். அது மாபெரும் வெற்றி என்பதனால்தான் அது சரியா என்ற கேள்வியே எழுகிறது. அது இவர்கள் எண்ணியபடியே பழையமாதிரி அமைந்து, தோல்வியடைந்திருந்தால் ‘ஏன் மக்களைக் கவரவில்லை?’ என்னும் விவாதம் எழுந்திருக்கும்.

ஒரு திரையரங்கில் முழுக்கமுழுக்க சிறுவர்கள் பொன்னியின்செல்வன் பார்க்கும் காட்சியைக் கண்டேன். படம் ஓடும்போதே அவர்கள் தீயரி எசமாரி’ என பாடுகிறார்கள். அந்த தலைமுறைக்கான, அந்த கொண்டாட்டத்துக்கான இசை இது. 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 21, 2022 11:34

எம்.ஏ.இளஞ்செல்வன்

[image error]

எம்.ஏ.இளஞ்செல்வன் மலேசியாவின் தமிழ் முகங்களில் ஒன்று. அவருடைய பங்களிப்பை புரிந்துகொள்ள மலேசியாவில் தமிழ் அடையாளம் என்பது ஓரு போராட்டவடிவம் என்றும், அது தங்கிவாழ்தலுக்கான சமர் என்றும் புரிந்துகொள்ளவேண்டும்

ம்.ஏ.இளஞ்செல்வன் எம். ஏ. இளஞ்செல்வன் எம். ஏ. இளஞ்செல்வன் – தமிழ் விக்கி

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 21, 2022 11:34

ஜெ 60 – கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

ஜெ 60 நிகழ்ச்சியில் நானும் என் மனைவியும் கலந்துகொண்டது மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அளித்தது.  நிகழ்வு தொடங்குவதற்கு சற்று முன்னர்தான் அரங்கிற்கு வர முடிந்தது. அப்போதும் நீங்கள் வாழ்த்துகளை  ஏற்றும் புத்தகங்களில் கையெழுத்திட்டுக்கொண்டும் இருந்தீர்கள். இடையிடையே பொன்னாடைகள் வேறு. அரங்கம் ஏறக்குறைய நிறைந்திருந்ததால் கிடைத்த இடத்தில் அமர்ந்தோம். சுற்றிலும் பல தெரிந்த முகங்கள். அருகில் எழுத்தாளர் கே.ஜெ. அசோக்குமார் அமர்ந்திருந்தார். அஜிதனும் சைதன்யாவும் பக்கத்து வரிசைகளில். ஆசிரியர்கள் பலர் குறிப்பாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வந்திருந்தனர். பாடப்புத்தகத்தில் அவர்கள் படிக்கும் கதை தற்போது வாழும் ஒருவர் எழுதியது என்பதை மாணவர்களிடம் சொல்ல உங்களிடம் தேதியுடன் கையெழுத்துப் பெற்றதாக சிலர் கூறினார்கள். பல்வேறு அரசுத் துறைகளின் அலுவலர்கள் அதிகாரிகளைப் பார்த்தோம். கல்லூரி மாணவர்கள் நிறைய பேர் இருந்தனர். கருத்துத் தளத்தில் உங்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட நண்பர்கள் சிலரையும் சந்தித்தோம். எல்லோரும் தங்களுக்குள்ளும் உங்களுடனும் ஒரு உரையாடலில் இருந்தது போல் தோன்றிக்கொண்டே இருந்தது.

வாழ்த்திப் பேசியவர்கள் எல்லோருமே சிறப்பாக பேசினார்கள். கல்பற்றா அவர்களின் உரை எனக்குப் புரிந்த அளவிலேயே ஆத்மார்த்தமாக இருந்தது. ஓராண்டு நரகத்தில் வாழ்வது நூறாண்டுகள் சொர்க்கத்தில் இருப்பதற்கு சமம் என்ற அவரது வார்த்தைகள் பெருஞ்செயல்கள் செய்வதற்கு கொடுக்கவேண்டிய விலையை உணர்த்தின. இலக்கிய ஆளுமைகள் பலருக்கு நீங்கள் அகவை நிறைவு விழாக்கள் நடத்தியிருக்கிறீர்கள். உங்களுக்காக நடத்தின நிகழ்ச்சியும் நீங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளைப் போலவே குறித்த நேரத்தில் ஆரம்பித்து முடிந்தது. உங்கள் ஏற்புரையை அதற்கேற்ப சுருக்கமாக அமைத்துக்கொண்டீர்கள் என்று நினைக்கிறன்.  இந்த விழாவிற்கு நீங்கள் இசைவு தெரிவித்ததற்கு நன்றி. இல்லாவிட்டால் இப்படிப்பட்ட ஒரு கொண்டாட்டம் எங்களுக்குக் கிடைத்திருக்காது. பல்லாண்டுகள் நல்ல உடல் நலத்துடனும் இதே படைப்பு விசையுடனும் இருக்க வேண்டுதல்களும் வாழ்த்துகளும்.

அன்புடன்
நிக்கோடிமஸ்

*

பேரன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

ஒரு பெரும் மங்கல சடங்கு.  மிக நிறைவளித்தது.  பங்குகொண்ட அனைவரது நல்விருப்பங்களையும் (உலகியல், மெய்மை என)  நிறைவேற வரமளித்த ஒன்று. வெறும் கையுடன் திரும்பியவர்கள் ஒருவருமில்லை நான் அறிவேன் ஒருவேளை அவர்களே அறிந்திராவிட்டாலும்.  உண்மை அன்பு இறை நிகழ்த்துகிறது.  காலை நண்பர் நவீன் சங்குடன் அறைக்கு வந்தபோது அனைவரும் பெருமானைக் காணச் சென்று விட்டீர்கள்.  திரு.  யுவன் சந்திரசேகர் அவர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.  மாற்று மெய்மை குறித்த அவரது கருத்துக்களை கேட்டிருந்தோம்.  பின் அவரை அழைத்துக்கொண்டு சாய் நிவாஸ் வந்தபோது தமிழ் விக்கி வாசிப்பு ஒரு நாவலாசிரியனுக்கு எவ்வளவு பயன்மிக்கது என்பதை விளக்கிப் பேசிக்கொண்டிருந்தீர்கள்.  அருண்மொழி நங்கை அவர்களை நேரில் கண்டபோது என் வியப்பு என் தங்கை தோற்றத்தில் அருண்மொழி நங்கை அவர்களைப் போலவே இருப்பார்.  ஒரே வேறுபாடு என் தங்கைக்கு இப்படி பெரிய கண்கள் கிடையாது.

சிலநாட்கள் முன்பு மாலை மேற்கு வானின் புதிய ஒவியத்தைக் கண்டபோது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் எவ்வளவு அற்புத ஓவியங்கள் தந்து கொண்டு இருக்கிறான்.  எவ்வகையிலும் எதிலும் இறைவனுக்கு நிகரான கலைஞன் கிடையாது.  மண்ணிலும் – படைக்கும் கலைஞன் இறைவனின் செயலை செய்பவனே இறைவனே தானே? விஷ்ணு இங்கே வருவதாக இருந்தால் வியாசனாக அல்லாமல் வேறு எவ்வாறு வரமுடியும்? பிறகு கண்ணணாக சிவனாக பல விதவிதமான வேடங்கள் தனக்குத்தானே புனைந்து கொள்ள முடியும்?  ஜெயமோகன் குறித்த எண்ணங்களில் மூழ்கி இருந்தேன்.  அடுத்த நாள் சியமந்தகத்தில் ஆசிரியர் சுசித்ராவின் கட்டுரை காண நேர்ந்தது.

தமிழ் சொற்களை உச்சத் திறனுடன் பயன்படுத்தும் இந்த மலையாள மந்திரவாதியின் மணிவிழா சடங்கில் கலந்து கொண்டவர்கள் பாக்கியவான்கள்.  மிகவும் இனிதான வெண்முரசு காலத்திய நிகழ்வு.

உள்ளம் தூய்மையும் நிறைவும் கொள்ளச் செய்தது.  நற்செயல்களின் மீதான தீவிர செயல் மோகம் தந்தது.

கோவை பட்டீஸ்வரனும் செயல்மோகன் தான்.  தன்னுடைய ஆட்களையே எல்லாப் பக்கமிருந்தும் தருவிக்கிறான்.

அன்புடன்
வணக்கத்துடன்

விக்ரம்
கோவை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 21, 2022 11:31

True as false: The world of Jeyamohan

“Stories of the True” டிசம்பரில் அடுத்த அச்சு வெளியாகும் என பதிப்பகத்தார் தெரிவித்தனர். ஒரு தமிழ் மொழியாக்க நூலுக்கு, அதுவும் சிறுகதைகளுக்கு, இது அரிய நிகழ்வுதான். இந்தியாவெங்குமிருந்து வந்த மிகச்சிறந்த மதிப்புரைகளே அதற்குக் காரணம். ஆனால் நூல் வெளியாகும்போது அறம் தொகுதியை தமிழில் படிக்கமுடியாதவர்கள், தமிழர்கள், அதிகம் வாங்குவார்கள் என நினைத்தேன். அது பெரிதாக நிகழவில்லை. விற்பனை பெரும்பாலும் பெங்களூர் மும்பை டெல்லியில்தான் நிகழ்ந்துள்ளது.

தமிழகத்தில் சென்னைக்கு வெளியே ஆங்கில நூல்களை படிப்பவர்கள் மிகக்குறைவு, ஆங்கில நூல்கள் விற்கும் கடைகளும் இல்லை. சென்னையில்  ஆங்கிலம் வழியாகப் படிப்பவர்கள் பெரும்பாலும் தமிழ், தமிழ்நாட்டிலிருந்து உளம்சார்ந்து விலகி வாழ்பவர்கள் என்பது காரணமாக இருக்கலாம் என்றார்கள்.

True as false: The world of Jeyamohan.JINOY JOSE P – Frontline This is the first major translation of Tamil writer Jeyamohan’s work in English

To order the book:

https://www.amazon.in/dp/9393986177

Stories of the True – கடிதங்கள் Stories of the True- ஒரு பேட்டி ‘ரிவியூஸ்!!!’
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 21, 2022 11:30

October 20, 2022

அஞ்சலி, தெளிவத்தை ஜோசப்

ஈழத்தின் மூத்த எழுத்தாளரும், 2013 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெற்றவருமான தெளிவத்தை ஜோசப் சில ஆண்டுகளாக உடல்நிலை நலிந்திருந்தார். இன்று (21- 10-2022 ) காலமானார். ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முதன்மை முகங்களில் ஒன்று. மலையகத்தமிழ் வாழ்க்கையை இலக்கியமாக்கியவர்.

அஞ்சலி

தெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது.

விழா 2013

தெளிவத்தை ஜோசப்- இளவயதுப்படங்கள்

வாழ்வின் யதார்த்தம் சித்திரித்த தெளிவத்தை ஜோசப்- நோயல் நடேசன்

‘மழலை’ தெளிவத்தை ஜோசப்

தெளிவத்தை ஜோசப்பின் ‘மீன்கள் – பாவண்ணன்

தெளிவத்தை ஜோசப்- சுப்பையா கமலதாசன் (பொகவந்தலாவை)

‘பயணம்’ – தெளிவத்தை ஜோசப்

’மனிதர்கள் நல்லவர்கள்’ தெளிவத்தை ஜோசப்

உயிர் தெளிவத்தை ஜோசப்

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 20, 2022 22:45

இந்து மதம் என ஒன்று உண்டா?

அன்புள்ள ஜெ,

அண்மைக்கால விவாதங்களால் குழம்பிப்போயிருக்கிறேன். உங்களிடம் கேட்கலாம் என்று நினைத்தேன். ஆனால் உங்கள் மேல் ஒரு மனவேறுபாடு இருந்துகொண்டே இருந்தது. உங்கள் அரசியல் கருத்துக்கள் எனக்கு உடன்பாடானவை அல்ல. ஆனால் இந்தக்குழப்பம் தொடர்ச்சியாக நீடிப்பதனால் இதை எழுதுகிறேன். 

என் கேள்வி இதுதான்.  இந்து மதம் என ஒன்று உண்டா? இந்துமதம் என்ற பெயரை இஸ்லாமியர்கள் அளித்தனர், இந்துமதம் என்ற வரையறை பிரிட்டிஷாரால் அளிக்கப்பட்டது, ஆகவே இந்துமதமே இல்லை என்று சொல்கிறார்கள். உங்கள் விளக்கம் என்ன? 

நான் இந்து மத நம்பிக்கை உடையவன். நாத்திகனாக இருந்தேன். அப்பா மரணத்துக்குப்பின் பல நிகழ்ச்சிகள். அவற்றில் நான் தாக்குப்பிடித்தது மதநம்பிக்கையால்தான். முருகன் என்னை காப்பாற்றி உறுதுணையாக இருந்தார். நான் பெருமாளையும் வணங்குபவன். இந்து என்று நான் என்னைச் சொல்லிக்கொள்ள முடியுமா? 

ரவிக்குமார் பெருமாள்

அன்புள்ள ரவிக்குமார்,

இந்த விவாதம் ‘கொழுந்துவிட்டு’ எரிந்தபோது இதைப்போன்ற வினாக்கள் நூறு எனக்கு வந்தன. ஆனால் அப்போது பதில் சொல்வதை முழுமையாகவே தவிர்த்தேன். ஏனென்றால் அப்போது நடைபெற்றது மதம் சார்ந்த விவாதமோ, ஆன்மிக விவாதமோ அல்ல. அரசியல் விவாதம். கடுமையான முன்முடிவுகள், காழ்ப்புகள் கொண்ட விவாதம். எந்த ஒரு மறுதரப்பையும் வசைபாடி, ஏளனம் செய்து, இழிவுசெய்து கெக்கலிக்கும் மனநிலையே அதில் ஓங்கியிருந்தது. அதில் இறங்க எனக்கு ஆர்வமில்லை.

பாண்டிச்சேரியில் பேசும்போது ஒன்று சொன்னேன். உலகிலேயே இந்துக்களிடம் மட்டும் ஒரு விசேஷ மனநிலை காணப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் முதல் நம்மிடம் உருவாகி வந்த ஒன்று அது. தமிழகத்தில் இது உச்சத்திலுள்ளது. இந்துக்கள் மட்டும் இந்து மதம் பற்றிய அறிதல்களை இந்து விரோதிகள் என வெளிப்படையாகவே அறிவித்துக்கொண்டவர்களிடமிருந்தும், இந்துமதம் அழியவேண்டும் என்பதற்காகவே பாடுபடுவதாக கூறுபவர்களிடமிருந்தும் கற்றுக்கொள்கிறார்கள். இந்து மதம் பற்றி எழுதிய, பேசிய அறிஞர்களோ ஞானிகளோ அவர்களின் கண்களுக்குப் படுவதே இல்லை.

இந்துமதம் பற்றி அறிய தமிழில் அ.லெ.நடராஜன் முதல் கண்ணதாசன் வரை அறிஞர்கள் எழுதிய நூல்கள் உள்ளன. சுவாமி சித்பவானந்தர் முதல் சுவாமி அசுதோஷானந்தா வரை பல்வேறு ஞானியர் எழுதிய நூல்களும் உரைகளும் உள்ளன. என் நூல்களும் கிடைக்கின்றன. என் கட்டுரைகள் இணையத்திலேயே உள்ளன. இந்த விவாதங்களில் எவரும் அவற்றை மேற்கோளாக்கவில்லை. தாக்குதல்களுக்கும் திரிபுகளுக்கும் பதிலாக அவற்றைச் சுட்டிக்காட்டவில்லை. மாறாக பொதுவெளியில் அரசியல்வாதிகள் என்ன சொன்னார்கள் என்று மட்டுமே கவனித்தனர். இதுதான் உண்மையான பிரச்சினை. இது இந்துக்களிடமிருக்கும் அறியாமை, அக்கறையின்மை.

இந்தக் கட்டுரையே கூட பத்தாயிரம் பேரிடம் சென்று சேரும். என் தளத்துக்கு வருபவர்களிலேயே பலர் படிக்க மாட்டார்கள். ஆனால் அசட்டுத்தனமான ஒரு யூடியூப் வீடியோவை ஒருவன் போட்டால் ஐந்துலட்சம் பேர் அதை சென்று பார்ப்பார்கள். தங்கள் மதநம்பிக்கை மேல், தங்கள் முன்னோர் மேல் ஐயம்கொண்டு குழம்புவார்கள். ஆனால் பதில் தேடி அப்பதில்கள் இருக்குமிடத்துக்கே வரமாட்டார்கள்

அத்துடன் இத்தகைய கேள்விகளுக்கு ஆய்விலும் வாசிப்பிலும் ஆர்வம் கொண்ட என்னைப் போன்ற ஒருவர் அரசியல்வாதிகள் சொல்வதுபோல ‘அதிரிபுதிரி’யான பதிலைச் சொல்லிவிட முடியாது. நக்கல் நையாண்டி என கீழிறங்கி பேசமுடியாது. வரலாற்றுப் பார்வையுடன், மதங்களின் இயங்கியல் சார்ந்த பார்வையுடன் மட்டுமே பேச முடியும். அந்த பதிலை நம்மவர்களின் சிறிய மூளைகளால் புரிந்துகொள்ள முடியாது. 

அதாவது இந்து மதம் என்பதே இல்லை என்று கொக்கரிப்பவர், அதற்கு எதிராகச் சொல்லப்படும் விரிவான  வரலாற்று விளக்கத்தை புரிந்துகொள்ள மாட்டார். ‘வெளக்கெண்ணை மாதிரி வளவளன்னு நீளமா எழுதியிருக்கார்’ என்று சொல்லி கடந்து செல்வார். அவர் சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பார். 

ஆயினும், இளைய தலைமுறையினரிடமிருந்து என்றோ ஒருநாள் இவற்றுக்கெல்லாம் கவனம் கிடைக்கும் என்று நம்புகிறேன். ஏனென்றால் நான் என் குருவின் ஆணையை ஏற்று இதையெல்லாம் சொல்ல தொடங்கிய தொண்ணூறுகளில் இவற்றைச் சொன்னால் ஐந்தாறுபேர் கூட கவனிக்காத நிலை இருந்தது. இன்று அந்நிலை மாறிவிட்டிருக்கிறது.  கவனமே கிடைக்கவில்லை என்றாலும் சொல்லிக்கொண்டே இருப்பது நம் கடமை என நினைக்கிறேன். பதில் இங்கே இருக்கட்டும். தேவையானவர்களுக்கு அது இல்லை என ஆகவேண்டாம்.

மதம், அடிப்படைப் புரிதல்கள்.

மதங்கள் பற்றிய எந்த விவாதத்திலும் அடிப்படையான சிலவற்றை நினைவில் நிறுத்தவேண்டும். அந்த எளிய புரிதல்கூட இல்லாமல்தான் இங்கே இவை சார்ந்த பேச்சுகள் நிகழ்கின்றன.

அ . மதங்கள்  இன்று ஒரு நிறுவனம் தொடங்கப்படுவதுபோல ஒரு காலகட்டத்தில் பெயரிடப்பட்டு, நெறிகள் வகுக்கப்பட்டு உருவாக்கப்படுவன அல்ல. அவை ஏதோ ஒரு வகையில் தொடக்கம் கொண்டு ,மெல்லமெல்ல காலத்தில் திரண்டு வருபவை. காலந்தோறும் அவற்றின் பெயர், அடையாளம் ஆகியவை மாறுகின்றன. அவற்றின் வளர்ச்சிப் பரிணாமம் மிகச்சிக்கலான ஒரு வரலாற்று நிகழ்வு.

ஆ. மதம் என நாம் இன்று சொல்லும் இந்த கருத்துருவம், இப்போதள்ள இந்த அர்த்தத்தில் முன்பு இருந்ததில்லை. இன்று மதங்கள் என நாம் அழைப்பவை எவையும் தங்களை மதம் என சொல்லிக்கொண்டவை அல்ல. அவை வழிமுறை அல்லது மார்க்கம் என்றோ, அறம் அல்லது தர்மம் என்றோ, ஒழுங்கு அல்லது சம்பிரதாயம்  என்றோதான் தங்களை சொல்லிக்கொண்டன. இஸ்லாம் என்பது மார்க்கம். கிறிஸ்தவம் என்பது ஒழுங்கு (order) இந்து, பௌத்த, சமண மரபுகள் தங்களை தர்மம் என சொல்லிக்கொண்டன. இன்று நாம் பேசும் மதம் என்னும் இந்த கருத்துவடிவம் பதினாறாம் நூற்றாண்டு ஐரோப்பிய தத்துவ வாதிகளால் உருவாக்கப்பட்டது.

மதம் என்னும் சொல்

மதம் என்னும் சம்ஸ்கிருதச் சொல் ‘உறுதியான தரப்பு’ என்னும் பொருளிலேயே  புழங்கி வருகிறது. மலையாளத்திலும் கன்னடத்திலும் தெலுங்கிலும் இன்று ‘பரோட்டாதான் மிகச்சிறந்த உணவு என்பதே என் மதம்’ என்று சொல்லமுடியும். அரசியல் விவாதங்களில் சாதாரணமாக இதை கேட்கலாம். மதம் என்பதற்குச் சமானமான தமிழ்ச்சொல் சமயம். சமயம் என்பது உறுதியான தரப்பு என்பதையே குறிக்கிறது.

ஒரு சிந்தனைத் தரப்பு அல்லது சிந்தனைப் பிரிவு என்னும் பொருளில் இந்திய சிந்தனை மரபில் வெவ்வேறு மதங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், பூர்வமீமாம்சம், உத்தர மீமாம்சம் ஆகிய ஆறு தரிசனங்களும் ஆறு மதங்கள் என்றே பழைய நூல்களில் சொல்லப்படுகின்றன. இவை தவிர தார்க்கிக மதம், சார்வாக மதம், ஏகான்ம மதம் போன்ற பல மதங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை எவையும் இன்று நாம் மதம் என்னும் சொல்லில் பொருளில் செயல்பட்டவை அல்ல. அதாவது தங்களுக்கான தெய்வங்கள், தனித்த வழிபாட்டுமுறை, நிர்வாக அமைப்பு ஆகியவை கொண்டவை அல்ல. அவை கருத்துநிலைபாடுகள் மட்டுமே.

வேதத்தை முதல்நூலாகக் கொண்டவர்களின் தரப்பை வைதிக மதம் என்பார்கள். அவர்களிலேயே வேதங்களை சடங்குகளாக மட்டுமே கொள்பவர்கள் மீமாம்ச மதத்தவர். வேதங்களை அறிவிற்கான முதல்தொடக்கமாக கருதுபவர்கள் வேதாந்த மதத்தவர். 

மீமாம்ச மரபுக்குள்ளேயே வேதமரபு  பல மதங்களாக பகுக்கப்பட்டுள்ளது. இந்திரனை மையத்தெய்வமாகக் கொண்ட ஐந்திரம், வருணனை மையத்தெய்வமாகக் கொண்ட வாருணம், சூரியனை மையத்தெய்வமாகக் கொண்ட சௌரம், அக்னியை மையத்தெய்வமாக கொண்ட ஆக்னேயம் என வேதமதங்களே பல உள்ளன. (பாரதியின் ஒரு கட்டுரையில் இந்து மதப்பிரிவுகளான ஆறு சமயங்கள் என அவர் சுட்டுவது இவற்றையே)

தெளிவான வழிபாட்டு முறை கொண்டவை ஆறு மதங்கள். ஒரு பிரபஞ்ச தரிசனமும், அதையொட்டிய தெய்வமும், அதற்கான வழிபாட்டுமுறையும் கொண்டவை இவை. சிவனை மையத்தெய்வமாகக் கொண்ட சைவம். விஷ்ணுவை மையத்தெய்வமாகக் கொண்ட வைணவம். சக்தியை மையத்தெய்வமாகக் கொண்ட சாக்தம். முருகனை மையத்தெய்வமாகக் கொண்ட கௌமாரம். பிள்ளையாரை மையத்தெய்வமாகக் கொண்ட காணபத்யம். இவை ஒவ்வொன்றுக்குள்ளும் துணைமதங்கள் உள்ளன. 

சைவர்களுக்கு தெரியும், அகச்சமயம் புறச்சமயம் என அவர்கள் சைவத்துக்குள் பல பிரிவினைகளை கொண்டிருக்கிறார்கள். இப்பிரிவினைகள் தத்துவரீதியானவை. பாடாணவாத சைவம் , பேதவாத சைவம் , சிவசமவாத சைவம் , சிவசங்கிராந்தவாத சைவம் , ஈசுர அவிகாரவாத சைவம் , சிவாத்துவித சைவம் என சைவ அகச்சமயங்கள் ஆறு. காபாலிகம், பாசுபதம், மாவிரதம், காளாமுகம், வாமம், வைரவம் என சைவ புறச்சமயங்கள் ஆறு. இவற்றுக்கு வெளியே உள்ள சமணம், பௌத்தம், வேதாந்தம் போன்றவற்றை சைவம் புறப்புறச் சமயம் என்கிறது. (பல அண்மைக்கால நூல்களில் பலவகை பிழைகளுடன் இவை பட்டியலிடப்பட்டுள்ளன). இவை எல்லாமே மதம் என்றே சொல்லப்படுகின்றன.

சைவ வழிபாட்டு மரபிலேயே காஷ்மீர சைவம், வீரசைவம், சித்தாந்த சைவம் (அல்லது மெய்கண்டார் மரபு) ஆகியவை தனித்தனி மதங்களாகவே எண்ணப்பட்டன. இவை தவிர காணபத்யம், கௌமாரம், சாக்தம் ஆகியவையும் இன்று சைவத்துடன் இணைந்து அதன் பகுதிகளாகவே உள்ளன.

வைணவம் சென்ற அறுநூறாண்டுகளாக நான்கு பெருமரபுகளாகவே உள்ளது. இவை சம்பிரதாயம் (order) என அழைக்கப்படுகின்றன. ஆனால் சென்ற கால நூல்களில் வெவ்வேறு மதங்களாகவே இவை குறிப்பிடப்படுகின்றன. ஶ்ரீசம்பிரதாயம் (ராமானுஜர் மரபு) மாத்வ சம்பிரதாயம் (மத்வர் மரபு) ருத்ர சம்பிரதாயம் அல்லது புஷ்டிமார்க்கம் (வல்லபர் மரபு ) குமார சம்பிரதாயம் ( நிம்பார்க்கர் மரபு). இவையும் இன்று தனித்தனியாகவே செயல்படுகின்றன. ஆறுமதங்களில் சௌரம் வைணவத்துடன் இணைந்தது.

இந்து மரபு மட்டுமல்ல, பௌத்தம் சமணம் ஆகியவையும் பல்வேறு துணைமதங்களின் தொகுதிகளே. இந்து மரப்க்குள் வரும் சைவம் வைணவம் உள்ளிட்ட எல்லா மதங்களுமே பல்வேறு துணைமதங்களின் தொகுப்பாகவே உள்ளன. கொள்கைகள் மற்றும் வழிபாடுகளின் அடிப்படையில் அவை பிரிகின்றன. இணையான கொள்கைகள் மற்றும் வழிபாடுகளின் அடிப்படையில் அவை இணைகின்றன. பலசமயம் இவற்றை மதஞானிகள் நிகழ்த்துகிறார்கள். இந்த செயல்பாடு எல்லா மதங்களுக்குள்ளும் நிகழ்கிறது.

மதம் என நாம் இன்று பகுத்து அடையாளப்படுத்தி வைத்திருக்கும் முறையை இயந்திரத்தனமாக நேற்றைய வரலாற்றின்மேல் போட்டால் மிகமிக அபத்தமான புரிதலையே சென்றடைவோம். இந்துமதம் என ஒன்று இல்லை என்று சொல்லலாம் என்றால் சைவம் என ஒன்று இல்லை என்றும் அடுத்தபடியாகச் சொல்லிவிடலாம். அப்படியே மறுத்தபடியே செல்லலாம்.

நாம் முன்பு மதம் என சொல்லிவந்தது வேறு, ஐரோப்பியர் வருகைக்குப்பின் நவீன காலகட்டத்தில் மதம்  என சொல்லப்படுவது வேறு. ஐரோப்பியர் சொல்லும் religion என்பது நவீனக்கருத்து. நவீன காலகட்டத்தில் நாம் வழிவழியாக மதங்கள் என அழைத்துவந்த பல்வேறு தரப்புகளை இணைத்துக்கொண்டுள்ள பொதுமரபை மதம் என வரையறை செய்தனர். அதை இந்து மதம் என்றனர். 

இரண்டுவகை மதங்கள்

இந்து மதம் என்றல்ல எந்த மதமும் ஏதேனும் ஒரு வரலாற்றுப்புள்ளியில் ஒட்டுமொத்தமாகக் கட்டமைக்கப்பட்டது அல்ல. மதங்களின் பரிணாமம் மிக விரிவாக ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. 

முதலில் மதங்களை நாம் இரண்டாகப் பிரித்துக் கொள்ளவேண்டும். இயற்கையாக திரண்டு வந்த மதங்கள். ஏதேனும் தீர்க்கதரிசிகள் அல்லது ஞானிகளிடமிருந்து தோன்றிய மதங்கள்.   இயற்கைமதங்கள், தீர்க்கதரிசன மதங்கள் என பிரித்துக்கொள்ளலாம்.

தீர்க்கதரிசன மதங்கள் ஏராளமாக உள்ளன. சமணம்(வர்த்தமான மகாவீரர்), பௌத்தம் (கௌதம புத்தர்), ஆசீவகம் (மகதி கோசாலன்) சீக்கியம் (குருநானக்) ஆகியவை இந்திய தீர்க்கதரிசன மதங்கள். இஸ்லாம் (முகமது நபி) கிறிஸ்தவம் (ஏசு கிறிஸ்து) கன்பூசிய மதம் (கன்பூஷியஸ்) தாவோ (லவோட்சு) ஆகியவை புகழ்பெற்ற மதங்கள். 

சிலகாலம் இருந்து மறைந்த தீர்க்கதரிசன மதங்கள் ஏராளமாக உள்ளன. பெரிய அளவில் வளராமல் நின்றிருக்கும் மதங்களும் உள்ளன. பாரசீக இளவரசரான மாணி என்பவர் நிறுவிய மாணிகேய மதம் (Manichaeism) பொயு 3 ஆம் நூற்றாண்டு முதல் வலுவாக இருந்து பின்னர் இஸ்லாமிய ஆதிக்கத்தால் முற்றாக மறைந்தது. மத்திய ஆசிரியாவில் நூறுக்கும் மேற்பட்ட சிறிய தீர்க்கதரிசன மதங்கள் இருந்துள்ளன. 

அண்மைக்காலத்தில்கூட தீர்க்கதரிசன மதங்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றன.1863ல் ஈராக்கில் பகாவுல்லா என்னும் தீர்க்கதரிசியால் உருவாக்கப்பட்ட பகாயி மதம் உலகமெங்கும் உள்ளது. 1889ல் இந்தியாவில் மிர்ஸா குலாம் அகமத் என்னும் தீர்க்கதரிசி உருவாக்கிய அகமதியா மதம் உள்ளது. இவை இஸ்லாமில் இருந்து உருவானவை. கிறிஸ்தவ மரபுக்குள் இருந்து உருவான தீர்க்கதரிசிகளும் துணைமதங்களும் உலகமெங்கும் உள்ளன. 

இந்த தீர்க்கதரிசன மதங்கள் எல்லாமே ஒரு தீர்க்கதரிசியில் இருந்து தொடக்கம் கொண்டிருக்கும். ஆனால் அவர் தனக்கு முன்னால் இருந்த ஞானியரில் நீண்ட மரபில், அல்லது தீர்க்கதரிசிகளின் நீண்ட வரிசையில் தான் இறுதியாக வந்தவன் என்றே சொல்வார். வர்த்தமான மகாவீரர் தனக்கு முன் 23 தீர்த்தங்காரர்கள் இருந்ததாகச் சொன்னார். ஏசுவும், முகமது நபியும் அவ்வாறுதான் சொன்னார்கள்.

ஒரு குறிப்பிட்ட தீர்க்கதரிசியால் முன்வைக்கப்படாமல் , வரலாற்றின் பரிணாமத்தில் உருவாகி வந்த மதங்களை இயற்கை மதங்கள் என்கிறோம். இந்துமதம் அத்தகையது. பான் மதம் (திபெத்) யூதமதம், ஷிண்டோ மதம் (ஜப்பான்) என பல மதங்கள் உள்ளன  உலகில் இருந்த ஏராளமான இயற்கை மதங்கள் இன்று இல்லை. ஐரோப்பாவில் இருந்த கிரேக்கமதம் போன்ற இயற்கை மதங்கள்தான் உலகசிந்தனைக்கே அடித்தளம் அமைத்தவை. அவை மறைந்துவிட்டன.

உலகமெங்கும் இயற்கை மதங்கள் மிகமிகக் கடுமையாக தாக்கப்பட்டு  அழிக்கப்பட்டபடியே உள்ளன. பெரும்பாலானவை அழிந்துவிட்டன. மிகச்சிலவே எஞ்சியுள்ளன. பான் மதம், ஷிண்டோ மதம் எல்லாம் பெயரளவுக்கே உள்ளன. யூதமதம் வெறும் குறுங்குழுக்களாகவே நீடிக்கின்றது. இன்று உலகிலுள்ள மிகப்பெரிய இயற்கைமதம் இந்துமதம்தான்.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 20, 2022 11:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.