Jeyamohan's Blog, page 698
October 16, 2022
மனநோய்களும் திருமணங்களும்- நோயல் நடேசன்
ஒரு வாரத்தின் பின்பு, ஷரன் – சிறிய நாய்க்குட்டியைக் கொண்டுவந்து கருணைக் கொலை செய்யுமாறு கேட்டாள். அதற்கு ஒரு கால் இல்லை. அதனால் அப்படி ஒரு வேண்டுகோள்.
மனநோய்களும் திருமணங்களும்.October 15, 2022
தற்கல்வியும் தத்துவமும்-2
பதினைந்தாம் நூற்றாண்டு ஐரோப்பிய தத்துவஞானிகள் தங்கள் தத்துவ தரிசனங்களுடன் அந்த தத்துவதரிசனங்களை ஒட்டிய வாழ்வுமுறையையும் முன்வைத்தவர்கள். ஒரு கொள்கையுடன் அக்கொள்கைக்கு சென்று சேர்ந்த உசாவல் முறையையும் முன்வைத்தவர்கள். செயிண்ட் அகஸ்டின் அந்தப் போக்கின் இறுதிப்புள்ளி என்று சொல்லப்படுவதுண்டு.
அதன் பின்னர் தத்துவம் ஒரு வகையான மாபெரும் அறிவுப்பயிற்சி ஆயிற்று. தத்துவ ஞானி என்பவர் தன்னுள் உசாவி தன் அகப்பயிற்சிகளினூடாக வாழ்வு குறித்தும் பிரபஞ்சம் குறித்தும் அப்பால் உள்ளவை குறித்தும் ஓர் மெய்யுணர்வை அடைந்தவர் என்பதற்கு மாறாக, முன்பும் சமகாலத்திலுள்ள அறிவுத்தரப்புகள் அனைத்தையும் ஐயமறக் கற்ற மாபெரும் கல்வியாளர் எனும் சித்திரம் உருவாகியது. அவர் தனக்கிணையான பிற தத்துவ ஞானிகளுடன் விவாதத்தில் இருப்பவர் என்றும், அதன் விளைவாக தனக்கான ஒரு பார்வையை முன்வைப்பவர் என்றும் ஆகியது.
இன்று பார்க்கையில் ஹெகல் முதலிய ஐரோப்பிய தத்துவ ஞானிகள் எழுதிக்குவித்த பக்கங்கள் திகைப்பூட்டுகின்றன. இத்தனை பக்கங்களில் பெரும்பாலானவை பிற தத்துவ அறிஞர்களுக்கு அவர்கள் அளித்த மறுப்பும் அவர்களுடனான கருத்துப்பூசல்களும்தான். சாராம்சமாகத் திரட்டுகையில் இருநூறு பக்கங்களுக்குள் நிற்கும் அளவுக்குத்தான் அவர்களுடைய தத்துவ தரிசனம் அமைந்துள்ளது. எஞ்சியவை அக்காலகட்டத்தில் திகழ்ந்த அறிவுச்சூழலில் அவர்கள் தீவிரமாக செயல்பட்டதனால் உருவான வெளிப்பாடுகள்தான்.
எப்போது தத்துவம் என்பது ஒரு வகையான மொழிவெளிப்பாடு என்று ஆகிறதோ அந்த தத்துவம் தன் சாராம்சமான ஒன்றை இழந்துவிடுகிறது என்றே எனக்குத் தோன்றுகிறது. தத்துவத்தை மொழியில் இருந்து பிரிக்கமுடியாதென்றும், தத்துவம் என்பதும் தன்னை மொழியினூடாக வெளிப்படுத்தியாகவேண்டிய நிலையில் உள்ள ஒன்று என்றும் நான் அறிவேன். எனினும் தத்துவம் ஒருபோதும் ஒரு மொழி வெளிப்பாடு அல்ல. தத்துவம் மொழியைக் கொண்டு மொழியைக்கடந்து செல்வதற்குரிய ஒரு செயல்முறையை எப்போதும் கொண்டிருக்கும் என்று தோன்றுகிறது.
பதினேழாம் நூற்றாண்டுமுதல் தத்துவக் கல்வி ஐரோப்பாவில் ஒரு விவாதக்கல்வியாக ஆகியது. தத்துவ நூல்கள் அவற்றின் உரையாடல் தன்மையை ( dialogic) இழந்து ஆசிரியரின் பேருரைகள் ஆக மாறின. இன்று ஹெகல் முதல் இப்போது எழுதும் தத்துவ ஞானிகள் எழுத்துகள் வரைக்கும் பார்த்தால் அவை அனைத்துமே ஒரு தனி ஊசல் ஆடுவது போன்ற சித்திரத்தை அளிக்கின்றன. முன்னும் பின்னும் அசைந்தாடி, தன் தரப்பை முன்வைத்து, மறுதரப்பை மறுத்து ஆசிரியர் களமாடிக்கொண்டிருப்பதை அந்நூல்களில் காணமுடிகிறது. நம்மிடம் சீரான தீவிரமான குரலில் ஓயாது பேசிக்கொண்டிருக்கும் ஒருவராகவே அத்தத்துவவாதிகளை நம்மால் அறிய முடிகிறது.
இந்தத் தத்துவவாதிகளினால் எந்த களத்திலாவது தத்துவத்தெளிவை உருவாக்க இயன்றதா எனில் அதில் ஓர் ஐயத்தை எஞ்சவிடுவேன். ஆனால் அவர்கள் இலக்கியத்துக்கு அளித்த பங்களிப்பு மிகப்பெரிது. ஐரோப்பிய மாபெரும் தத்துவஞானிகளாகிய ஷோப்பனோவர், ஹெகல், மார்க்ஸ், நீட்சே ஆகியோர் இல்லை எனில் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பிய இலக்கியம் இந்த தீவிரத்தை அடைந்திருக்காது. மொழியால் மட்டுமல்ல வாழ்க்கைப்பார்வையாலும் பெருநாவல்கள் அனைத்துக்கும் அடிப்படையாக இருந்தவை இந்தத் தத்துவ ஞானிகள் உருவாக்கிய பார்வைக்கட்டுமானமும் மொழிக்கட்டுமானமுமே. அவர்களின் கொடை முதன்மையாக மொழிக்குத்தானே ஒழிய சிந்தனைக்கு அல்ல.
தத்துவம் ஒருவகையான மொழிவெளிப்பாடு அல்லது மொழியணி (Figurative Speech) என்னும் கருத்தை ரஸ்சல் வந்தடைந்தார். ஆச்சரியமான ஒரு சுருக்கிப்பார்த்தல் இது. திகைப்படைந்தாலும் அது உண்மை. குறிப்பாக ஐரோப்பிய தத்துவம் சார்ந்தவரை. ரஸ்ஸல் அதை விமர்சனமாக முன்வைக்கவில்லை, ஒரு சிறப்பாகத்தான் முன்வைக்கிறார்.
தத்துவம் அவ்வாறு ஒருவகை மொழிவெளிப்பாடாயாக மட்டும் மாறிய அப்பயணத்தின் அடுத்தகட்டத்தில் வரலாற்றுக்காலம் முதல் இன்றுவரை தத்துவம் தனது இலக்காகக் கொண்டிருந்த அனைத்தையும் அது கைவிட்டது. உயர் அறங்கள், அவ்வறங்களின் சிக்கல்கள், அவற்றின் அடிப்படையில் உருவாக்கப்படவேண்டிய அரசியல்-சமூக- ஆன்மிக அமைப்புகள், அவற்றுக்கும் தனிமனிதனுக்குமான உறவுகள் ஆகியவற்றைப் பற்றி பேசிவந்த தத்துவம் முற்றாக அக்கேள்விகளை கைவிட்டது.
எப்போது மேலைத்தத்துவம் தன் அறவியல் கேள்விகளைக் கைவிட்டதோ அப்போதே அதன் சாவு நிகழ்ந்துவிட்டது என்று ஹெரால்ட் ப்ளூம் ஒருகட்டுரையில் குறிப்பிடுகிறார். அத்துடன் தத்துவத்தில் இருந்து இலக்கியம் தன்னை விலக்கிக் கொண்டது. இலக்கியம் தன் அழுத்தத்தை இழந்தது. தத்துவம் அதன்பின் ஒரு பிரம்மாண்டமான மொழிவிளையாட்டாக மாறியது.
விளைவாக, பின்னாளைய தத்துவவாதிகள் வேண்டுமென்றே மொழிச் சிக்கல்களை உருவாக்கினார்கள். வேண்டுமென்றே மொழித் திரிபுகளினூடாக வெளிப்பட்டார்கள். மிகச்சிறந்த உதாரணம் விட்கென்ஸ்டைன். அதன் உச்சமே, சாரமே இல்லாமல் வெறும் மொழிவிளையாட்டுகளை மட்டுமே முன்வைத்த பின்நவீனத்துவ (எதிர்) தத்துவவாதிகள்.
நமக்கு இன்று வாசிக்கக்கிடைக்கும் புகழ்பெற்ற பல சமகாலத் தத்துவஞானிகள் அல்லது மெய்யியலாளர்கள் பதினெட்டு, பத்தொன்பது,இருபதாம் நூற்றாண்டுகளில் உருவான ஐரோப்பிய தத்துவவிவாதச் சூழலில் இருந்து பயிற்சி பெற்றவர்கள், அக்களத்திற்குள் நின்று பேசுபவர்கள் என்பதை சற்று கூர்ந்து நோக்கினால் அறியலாம். அந்த தத்துவக்களத்தில் இருந்து அவர்கள் முதன்மையாகப் பெற்றுக்கொண்டிருப்பது அது உருவாக்கியிருக்கும் தத்துவத்திற்கான தனிமொழியைத்தான்.
உதாரணமாக ஜே.கிருஷ்ணமூர்த்தி. ஜே.கிருஷ்ணமூர்த்தியை பயில்பவர்கள், பெரும்பாலும் அவரை மட்டுமே படிப்பவர்கள் , அவர் மேல் தீவிர ஈடுபாடு கொண்டவர்கள் கூறும் ஒன்று அவர் தனக்கு முன்னிருந்த எத்தொடர்ச்சியையும் மேற்கொள்ளாத ஒருவர், அவ்வகையில் தனித்துவமானவர் என்று. அவர்கள் ஒருபடி மேலே சென்று ஜே.கிருஷ்ணமூர்த்தி தனக்குப்பின்னரும் எத்தொடர்ச்சியும் இல்லாத தனி நிகழ்வு என்பார்கள்.
தத்துவத்தில் அப்படி ஒரு தனி நிகழ்வு இயல்வதல்ல என்றும்; ஒருவேளை அப்படி ஒரு தனிநிகழ்வு நிகழும் எனில், அதற்கும் மானுட சிந்தனைக்கும் எத்தொடர்பும் இல்லை எனில், அதனால் எந்தப்பயனும் இல்லை என்றும் சொல்லவேண்டியிருக்கிறது.
ஆனால் உண்மையில் ஜே.கிருஷ்ணமூர்த்தி நின்றிருக்கும் தளம் ஷோப்பனோவரிலிருந்து நீட்சே வரைக்குமான ஐரோப்பிய சிந்தனையாளர்கள் உருவாக்கிய ஒரு விவாதப்பரப்புதான். அதனுடன் உரையாடிய நவீன வேதாந்த மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்கள் உருவாக்கிய இன்னொரு விவாதப்பரப்பு. அத்துடன் பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து தொடர்ச்சியாக உலகெங்கும் அறியப்பட்ட மாற்று மறைஞான இயலை முன்வைத்த குர்ஜீஃப் போன்றவர்களுடைய விவாதத்தரப்பு. இவற்றில் இருந்து பெற்றுக்கொண்டவற்றை தனக்குரிய மொழியில் மறு உருவாக்கம் செய்து முன்வைத்தவர்தான் ஜே.கிருஷ்ணமூர்த்தி. ஜே.கிருஷ்ணமூர்த்திக்கும் ஐரோப்பிய இயற்கைவாதிகளுக்குமான ஒற்றுமைகளெல்லாம் இன்னமும் கூட பேசப்படவே இல்லை.
ஜே. கிருஷ்ணமூர்த்தி அடிப்படையில் ஓர் ஆன்மீக தத்துவ சொற்பொழிவாளரே ஒழிய மெய்ஞானி அல்ல என்றுதான் நான் நினைக்கிறேன். இந்த தத்துவ ஞானிகளை பயிலும் ஒருவர் தன்னியல்பாகவே அவர்கள் எதை தங்களுடைய பின்புலமாகக் கொண்டிருக்கிறார்களோ அந்த சிந்தனைகளின் களத்திற்குள் சென்று சேர்கிறார்கள். அந்த களம் உருவாக்கிய பொதுவான நம்பிக்கைகள் பொதுவான கொள்கைகள் ஆகியவற்றை தானும் ஏற்றுக்கொள்கிறார்கள்.
ஜே.கிருஷ்ணமூர்த்தியின் அசலான அரிய வரிகளென அவருடைய தீவிர ஆதரவாளர்கள் சொல்லும் ஒவ்வொரு வரிக்கும் இணையான பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பிய தத்துவ சிந்தனையாளர்களால் முன்னரே சொல்லப்பட்ட வரிகளை சுட்டிக்காட்ட முடியும். விடுதலையை முற்றிலும் அகம் சார்ந்ததாக்குவது, விடுதலையை ஒரு மனிதன் தன்னுள்ளேயே கண்டடையவேண்டும் என்பது, தனிமனிதனை அலகாக்கி ஆன்மீகத்தை மெய்யியலை மதிப்பிட முயல்வது, விடுதலை என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று- தீர்வுகளும் வழிகளும் ஒவ்வொருவருக்கும் உரியது என்பது, காலத்தொடர்ச்சி மரபுத்தொடர்ச்சி என்பதை மறுத்து அந்தந்த கணங்களில் அறிதலையும் அறியப்படுபவனவற்றையும் வகுப்பது என்று ஜே கிருஷ்ணமூர்த்தி கூறும் ஏறத்தாழ எல்லா கருத்துகளுமே இருபதாம் நூற்றாண்டில் படிப்படியாக தத்துவ ஞானிகளினூடாக உருவாகி வந்து அவருக்கு முன்னரே ஏறத்தாழ ஐரோப்பியச் சூழலில் நிலைபெற்றுவிட்டவை. அதனால் தான் அவை உடனடியாக ஐரோப்பாவில் ஏற்பு பெற்றன. இந்தியாவிலும் ஐரோப்பிய கல்வி கொண்டவர்களுக்கு சரியானவையாகவும் உவப்பானவையாகவு தோன்றின.
இவற்றை வாசிக்கும் ஒரு வாசகன் இன்று அடைவதென்ன என்பது தான் நான் விவாதிக்கத் தொடங்கிய புள்ளி. இன்று அவன் ஒரு இலக்கியவாதியாக இருப்பானெனில் ஜே.கிருஷ்ணமூர்த்தியினூடாக தன்னை அறியாமலேயே அவன் ஐரோப்பிய தத்துவ சிந்தனையின் பொற்காலத்தை நோக்கிச் செல்வான். அப்பொற்காலத்திலிருந்து எழுந்து வந்த மாபெரும் நாவலாசிரியர்களாகிய டால்ஸ்டாய், தஸ்தாவெஸ்கி, தாமஸ் மன், ஹெர்மன் ஹெஸ்ஸே, நிகாஸ் கசந்த்சகீஸ் போன்றவர்களின் வேர்ப்பரப்பை சென்றடைவான். அது இலக்கியவாதியாக அவனுக்குச் சிறப்பு. அவனது மொழி கூர்மை பெறும். அது மேலும் அவனுக்கு நலம் பயக்கும். ஆனால் மெய்யியல் விடுதலையின் பொருட்டு, ஆன்மீக விடுதலையின் பொருட்டு ஒருவன் இக்கல்வியைப்பெறுவான் எனில் அதனால் என்ன லாபம், உண்மையில் அது இயலுமா என்பது தான் விவாதிக்கத்தக்க கேள்வி.
இத்தகைய நூல்களை தொடர்ந்து ஆண்டுக்கணக்கில் பயில்பவர்களை எனக்குத் தெரியும். நான் தத்துவ அறிமுக வகுப்புகளை தொடங்கும்போது இத்தகைய நூல்களை பல ஆண்டுகளாகப் பயில்பவர்கள் அதற்கு எவ்வகையிலும் பயனற்றவர்கள் என்ற எண்ணமே எனக்கு ஏற்பட்டது. ஏனெனில் ஒரு மாபெரும் கல்வி அழிப்பு நிகழாமல் அவர்களால் எதையும் கற்றுக்கொள்ள முடியாது. அவர்களது உள்ளம் சொற்களால் நிரம்பியிருக்கும். எந்த ஒரு கருத்தையும் அவர்கள் ஏற்கனவே கற்ற ஒரு கருத்தாகவே கூறுவார்கள். ஒரு கருத்து உண்மை எனில் ஏற்கனவே அவர்கள் கற்ற நூலில் அது எங்கோ இருக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கும். அதுவே அவர்கள் உழலும் மாயை. அதனுடன் அவர்கள் தங்களை கூரியவாசகர் என எண்ணும் ஆணவமும் கலந்துள்ளமையால் அவர்கள் வெளிவருவது அனேகமாக இயலாது.
அவர்கள் ஒரு கருத்தைக்கூறிய உடனே அதற்கு இணையான ஒரு தத்துவ ஞானி அதற்கு நேர்மாறான ஒரு கருத்தை கூறியிருப்பதை சுட்டிக்காட்டலாம். உதாரணமாக ஓர் உரையாடலில் ‘துக்கங்கள் என்பவை முற்றிலும் தனித்தனியானவை ஒரு துக்கம் இன்னொரு துக்கம் என்று அல்ல’ என்று ஜே.கிருஷ்ணமூர்த்தி சொல்லியிருப்பதை ஒரு நண்பர் சுட்டிக்காட்டியபோது ‘துக்கமென்பது ஒன்றுதான் தனித்தனி துயரங்கள் என்று ஒன்றில்லை’ என்று குர்ஜீஃப் சொல்லியிருப்பதை நான் சுட்டிக்காட்டினேன். இந்த முடிவில்லா விவாதங்களுக்கு தான் ஒருவர் சென்று சேர முடியும். இது எவ்வகையிலேனும் ஆன்மிகமாக பயனளிக்குமா? பயனளிக்காதெனில் எவ்வகையில் ஒருவர் தத்துவத்தைக் கற்றுக்கொள்ள முடியும்?
இன்று நமக்கு சந்தையில் சுவாரஸ்யமான, அழகிய, கூரிய மொழியில் எழுதப்பட்ட ஆன்மிக தத்துவ நூல்களின் பெரும் வரிசை உள்ளது. பெரும்பாலான விமான நிலையங்களில் ’பெஸ்ட் செல்லர்’ என்ற பட்டியலுக்குள் இருக்கும் நூல்களை நான் பார்க்கும்போது பொதுவாசிப்புக்கான பரபரப்புப் புனைவுகள், கற்பனாவாதப் புனைவுகள், நடைமுறை வாழ்க்கைச் சிக்கல்களுக்கு தீர்வு சொல்லும் பயனுறு நூல்கள், புகழ்பெற்றவர்களின் வாழ்க்கை வரலாறுகள் ஆகியவற்றுக்கு நிகராகவே இத்தகைய ஆன்மீக தத்துவ நூல்கள் இருப்பதைப் பார்க்கிறேன். விமானங்களில் பலர் இவற்றை ஆழ்ந்து படித்துக்கொண்டிருப்பதையும் பார்த்திருக்கிறேன்.
ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கு இந்த நூல்கள் மிகவும் தேவையாக இருக்கின்றன, அல்லது அவர்களால் விரும்பப்படுகின்றன என்பதை விமான நிலையங்கள் காட்டுகின்றன. ஆங்கிலக்கல்வி கற்றவர்கள், பொருளியல் சிக்கல் இல்லாதவர்கள், தங்களைப் பண்பட்டவர்கள் என்றும் நுண்மையானவர்கள் என்றும் எண்ணிக்கொள்பவர்கள், எளிமையான மதநம்பிக்கை மற்றும் ஆசாரங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக தங்களை உருவகித்துக்கொள்பவர்கள், இயல்பிலேயே அறிவு ஜீவிகளாக தங்களை மதிப்பிட்டுக்கொள்பவர்கள், இவற்றின் வாசகர்களாக இருக்கிறார்கள். ஜே.கிருஷ்ணமூர்த்தி ஒரு தொடக்கமெனில் அவரைப்போன்றே எழுதக்கூடிய யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் இன்று இருக்கிறார்கள்.
இவர்களின் அடுத்த கட்டத்தில் இன்னும் எளிமையான முறையில் அவற்றை சொல்லும் சுகபோதானந்தா போன்றவர்கள் இருக்கிறார்கள். இந்த நூல்களில் ஒன்றை பயில்பவர்கள் உடனடியாக அடுத்த இன்னொரு நூலுக்கு செல்வதென்பதே அந்த நூலின் மறுப்புதான். ஐநூறு பக்க அளவுள்ள ஒரு ஆன்மீக மெய்யியல் நூல் ஒருவருக்கு சில வரிகளாக எஞ்சுகிறது எனில் அந்நூலின் மதிப்பென்ன? ஐநூறு பக்கம் அளவுக்கு எழுதிய பின்னரும் கூட ஒரு மெய்ஞ்ஞானி அந்த வாசகனுக்கு அளிப்பதென எதுவுமில்லை எனில் மேற்கொண்டு அவரிடம் எதை எதிர்பார்ப்பது?. ஆயிரம் இரண்டாயிரம் பக்கங்களுக்கு ஒரு மெய்ஞானி எழுதவேண்டியிருக்குமெனில் அவ்வளவையும் படித்தபிறகு ஒருவர் இன்னொன்றுக்கு செல்வாரெனில் உண்மையிலேயே அவர் மெய்ஞான விவாதத்தை நிகழ்த்துகிறாரா?
இவற்றை வாசிப்பவர் ஜே.கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ, யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி, குர்ஜீஃப், கார்லோஸ் கஸ்டநாடா என்று என்று அனைவரையும் தான் படித்திருக்கிறோம் என்ற தன்னுணர்வை அடைகிறாரே ஒழிய சாராம்சமாக அவர் எதை கற்றுக்கொண்டிருக்கிறார்? இந்த நூல்கள் இலக்கிய படைப்புகள் என்னும் தகுதிக்கு அப்பால் மெய்யியல் வழிகாட்டிகளாகத் திகழ முடியுமா?
பொதுவாக நான் இவற்றை படிப்பவர்களிடம் விவாதிப்பதில்லை. ஒருமுறை நான் விவாதித்த நண்பர் அணுக்கமானவர் என்பதனால், எதிலும் பிடிப்பற்றவர் என்பதனால் அந்த விவாதத்தில் அவர் புண்படமாட்டார் என்று எனக்கு உறுதியாகத்தெரிந்த ஒரே காரணத்தினால் அந்த விவாதம் நிகழ்ந்தது. அதில் என் கருத்துக்களைச் சொன்னேன். என் ஐயங்களுக்கு என்ன பதில்கள் இருக்கும் என்னும் ஆவலினால். எனக்குக் கிடைத்த பதில் இந்த ஆன்மிகதத்துவ சிந்தனையாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வரையில் தனித்தன்மை கொண்ட பார்வையை முன்வைப்பவர்கள், அவற்றை தெரிந்துகொள்ளலாம் என்பது மட்டுமே.
மாறாக பெரும்பற்றுடன் அவற்றை படிப்பவர்கள் விவாதங்களால் திசை திருப்பக்கூடியவர்கள் அல்ல. ஏனெனில் இந்த நூல்கள் அனைத்துமே விவாதத்தன்மை கொண்டவை. பல ஆண்டுகளாக இவற்றை பயின்று பயின்று அவர்கள் விவாதிக்கும் திறனை மேம்படுத்திக்கொண்டிருப்பார்கள். எவரிடமும் ஓர் அடிப்படையான கருத்துமாற்றத்தை விவாதத்தால் உருவாக்கிவிட முடியாதென்பது என்னுடைய எண்ணம். விவாதம் அதற்கிணையான மறுதரப்பைத்தான் உருவாக்கும். விவாதிப்பவர்கள் இருவர் தங்கள் தரப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்ளவே செய்வார்கள்.
மேலும் இந்த நூல்களைப் படிப்பவர்கள் தங்களை நுண்ணுணர்வுள்ளவர்கள், அறிவுத்திறன் கொண்டவர்கள், ஆன்மீகமாகச் சிலவற்றை அறிந்துகொண்டவர்கள் என்று நம்புவதனால் அவற்றை அவர்கள் கற்ற எதையும் கைவிடுவதில்லை. அவர்களால் நீண்ட நீண்ட பதில்களை சொல்லமுடியும். அப்பதில்களுக்கு நாமும் மறுபடியும் பதில்களைச் சொல்லத்தொடங்கினால் நாம் இன்னொரு ’விவாதிப்பவர்’ ஆகிவிடுவோம்.
நான் உறுதியாகத் தெரிந்திருக்கும் ஓர் உண்மை, தத்துவத்தின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் மட்டுமே விவாதத்திற்கு இடம் உள்ளது என்பதுதான். அது தத்துவக் கல்வியின் நடுப்பகுதியில் என்று சொல்லலாம். தொடக்க நிலையில் விவாதம் என்பது வெறும் குழப்பங்களை மட்டுமே உருவாக்கும். நாம் அறியாத ஒன்றைப்பற்றி ஆணித்தரமான நிலைபாடுகளை எடுத்து, நாம் அவற்றை எடுத்ததனாலேயே அவற்றை நாமே நிறுவியாகவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி ,நிறுவிக்கொண்டமையினாலேயே அவற்றை சுமந்தலைய வேண்டியவர்களாகவும் ஆகிவிட்வோம்.
ஆன்மிகத்தின் இறுதி நிலையில் விவாதங்கள் அற்ற தெளிவு இருக்கும். தொடக்க நிலையில் முழுத்தெளிவின்மை இருக்கும். கற்று தெளிந்தவற்றை அவற்றின் மறுதரப்புகளின் வழியாக மேலும் தெளிவுபடுத்திக்கொள்ளும் இரண்டாம் நிலையில் மட்டுமே விவாதத்திற்கு இடமுள்ளது. அதுவும் சரியான ஆசிரியர்கள் முன்னிலையில், சரியான நபர்களுடன் ,சரியான முறையில் நிகழ்த்தப்படும் விவாதங்கள் மட்டுமே பயனுள்ளவை. பொதுப்போக்கு விவாதங்கள், அரட்டைத் தளத்தில் நிகழக்கூடிய விவாதங்கள், உணர்ச்சிகலந்த விவாதங்களால் பயனை விட பயனின்மையே அதிகம். அல்லது தீங்கு கூட நிகழலாம்.
ஆகவே இத்தரப்பை நான் விவாதிக்க விரும்பவில்லை. ஏற்கனவே நான் கூறும் இவற்றை ஓரளவேனும் தாங்களும் உணர்ந்து அவற்றில்மேலும் தெளிவடைய விரும்புபவர்களுக்காக மட்டுமே இவற்றை கூற விரும்புகிறேன்.
(மேலும்)
பா.தாவூத் ஷா
இஸ்லாமிய இதழான தாருல் இஸ்லாம் தமிழகத்தில் முஸ்லீம் லீக் கட்சியின் அரசியல் குரலாகவும், இஸ்லாமிய சமூக சீர்திருத்ததிற்கான களமாகவும் திகழ்ந்தது. அதன் நிறுவனரும் ஆசிரியருமான ப.தாவூத் ஷா இன்று இஸ்லாமிய சமூகத்திற்கு வெளியே அதிகம் நினைக்கப்படுவதில்லை. ஆனால் அவர் குடும்பத்தினர் அவருடைய வாழ்க்கையையும் பணியையும் முழுமையாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.
பா.தாவூத் ஷாகாந்தியை எதிர்ப்பவர்கள், கடிதம்
ரகுநாதன் அவர்களின ஆகஸ்ட் 15 அலைகள் கடிதம் உங்களது தளத்தில் வாசித்தேன்.நானும் இதுபோல காந்திய பற்றிய அவதூறுகளை யே கண்டேன் watsup மற்றும் Facebook வழியாகவும் வெறுப்பின் அவதோருகள்
ரகுநாதன் கூறிய அனைத்துமே உணமை. நான் பணிபுரியும் நிறுவனத்தின் முதலாளி காந்தி ஒன்னும் சுதந்திரம் வாங்கி தரவில்லை இரண்டாம் உலகப்போர் நடந்தஅதல் பொருளாதார வீழ்ச்சி தான் அவர்கள் இந்தியாவிற்கு விடுதலை தர காரணம் என்று கூறுகிறார்.மேலும் என்னுடைய நபர்கள் பல பேர் வீட்டுக்கு வீடு கொடியேற்றும் தேச பக்தி கொண்டவர்களின் பக்கம் நின்று கொடியேற்றி watsup இல் சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் உழைப்பை காந்தி திருடி மஹதமா ஆனது போலவும் பதிவுகள். இப்போது Facebook uninstall செய்து விட்டேன் கொஞ்சம் ஆறுதலாக தான் இருக்கிறதது. விக்கிப்பீடியா வில் காந்தி என்று தட்டச்சு செய்தால் போலும் இந்தியன் லாயர் என்றுத்தன் வருகிறது .
காந்தி சொன்னது போல” ஒருவன் தன் மேற்கொள்ளும் செயலின் முடிவை அறிந்து கொள்வதில் கவலையாக இருந்தால் அவனுக்கு தடைகளும் எதிர்ப்புகளும் தான் அதிகம் தென்படும்”
அன்புடன்
ஜெகநாதன்
வேம்பார்
*
அன்புள்ள ஜெகநாதன்,
காந்தி இன்றைய மனிதர்களுக்கு ஒரு பெருந்தொந்தரவு. அவரை வசைபாடுபவர்கள் யார்? மதவெறியர்கள், இனவெறியர்கள், சாதிவெறியர்கள். இன்னொரு பக்கம் வன்முறைநாட்டம் கொண்டவர்கள், எதிர்மறை மனநிலை கொண்டவர்கள். இன்றைய உலகின் மைய ஓட்டமே ஊழல்மனநிலைதான். வணிகம் செய்பவர்களிடம் கேட்டுப்பாருங்கள். நம்பகமானவர் என உறுதியாகச் சொல்லத்தக்க எவரையாவது அவர்கள் சந்தித்திருக்கிறார்களா என்று. இச்சூழலில் காந்தி மெச்சப்படுவார் என எப்படி எதிர்பார்க்கலாம்? அவர் மீதான வசைகளும் அவதூறுகளுமே இயல்பானவை. காந்தி ஏற்கப்படுவது ஒருவர் இந்த மேலோட்டமான நிலைகளை கடந்து தன் ஆழத்தை கொஞ்சமேனும் தானே கண்டடையும்போதுதான். காந்தியை பற்றி எதிர்மறையாக பேசுபவர்களின் ஆளுமையை கவனியுங்கள், அவர்கள் ஏன் அப்படிப் பேசுகிறார்கள் என்று புரியும்
ஜெ
தமிழ் விக்கி பங்களிப்பு, கடிதம்
ஹலோ சார்,
வணக்கம்.
உங்கள் வலைத்தளம் இலக்கியத்தைப் புரிந்துகொள்வதற்கு மட்டுமல்லாமல், நமது கலாச்சாரம், வரலாறு, தத்துவம் மற்றும் அறிவார்ந்த பணி தொடர்பான எதையும் கற்றுக்கொள்வதற்கான ஒரு பொக்கிஷம். இவை இலவசமாகக் கிடைக்கின்றன! எனவே, ஏதாவது பங்களிக்க வேண்டும் என்ற உணர்வில் நான் எப்பொழுதும் இருந்து வந்தேன். கடந்த மார்ச் ஈரோடு நிகழ்வின்போது உங்களுடன் பேச எனக்கு வாய்ப்புக் கிடைத்தபோது, உங்கள் தொலைநோக்கு பணிகளுக்கு சிறிது பங்களிக்க வேண்டும் என்ற எனது ஆர்வத்தை வெளிப்படுத்தினேன். என் பின்னணியைப் பார்த்து, விக்கியின் ஆங்கிலப் பதிப்பை நான் ஆதரிக்க முடியும் என்று சொன்னீர்கள். நான் உடனடியாக இந்த குழுவில் இணைந்து கொண்டேன்.
நான் இப்போது ஆங்கில மொழிபெயர்ப்புகளில் 100 கட்டுரைகளைக் கடந்த ஒரு மைல்கல்லை எட்டியுள்ளேன் என்று கூறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த எண்ணிக்கை விக்கிப் பெருங்கடலில் ஒரு துளி என்றாலும், தொடர்ந்து பங்களிப்பதற்கான நம்பிக்கையை இது எனக்கு அளிக்கிறது. இப்பயணம் எனக்கு மிகுந்த திறப்பை அளித்திருக்கிறது.
எல்லோறும் ஏற்று கொண்டதுபோல் தமிழ் இலக்கியம், கலை, கலாச்சாரம் ஆகியவற்றைப் பற்றித் துல்லியமாகப் புரிந்துகொள்வதிலும், கற்றுக்கொள்வதிலும் ஆர்வமுள்ள ஒவ்வொருவருக்கும் விக்கி இப்போது ஒரு தளமாகத் திகழ்கிறது.
இந்த வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி.
அன்புள்ள
ஆனந்த் கிருஷ்ணன்
*
அன்புள்ள ஆனந்த கிருஷ்ணன்
தமிழ்விக்கி மொழியாக்கத்தில் நீங்கள் முதலிடம் என்னும் தகவலை மதுசூதனன் அனுப்பியபோதே அழைத்து பாராட்டவேண்டும் என எண்ணினேன். என் வாழ்த்துக்கள். நாம் செய்துகொண்டிருப்பது வரலாற்று உருவாக்கம். அந்நிறைவை நாம் அகத்தே உணர்ந்தால் இச்செயல்பாடு அளிக்கும் மனநிறைவு மகத்தானது.
ஜெ
கல்பொருசிறுநுரை
கல்பொரு சிறுநுரை வாங்க
அன்புள்ள ஜெ,கல்பொருசிறுநுரை, முதலாவிண் இரண்டு செம்பதிப்புக்களும் உங்கள் கையெழுத்துடன் கிடைக்கப்பெற்றேன். நன்றி!தபால் உறையைப் பிரிக்கும்போது ஒரு நூல் என்றே நினைத்தேன். ஆனால், யசோதையின் அருகில் நிற்கும் சிறுவன் கண்ணனைப் போல, கல்பொருசிறுநுரை அருகில் மயில்பீலி அட்டை வண்ணப்படத்துடன் முதலாவிண் நாவலும் ஒட்டிக்கொண்டு வந்தது.கல்பொருசிறுநுரையின் அட்டையில் திரண்ட தோள்களுடன் இறுகி அமர்ந்திருக்கும் கண்ணனின் வண்ணப்படம். நாம் பொதுவாகக் காணும் மென்மையும் நளினமும் கொண்ட ஆயர்பாடிக் காதலன் அல்ல. பொருகரியின் கொம்பொசித்த, மல்லர்களைப் பொருது வருகின்ற பெருவீரனின் படம்.யாதவர்களின் குடியழிவையும் கிருஷ்ணரின் மறைவையும் சொல்லும் கல்பொருசிறுநுரையை வாசிப்பது மனதில் துயரையும் வெறுமையையும் நிறைக்கிறது. அதைத் தொடர்ந்து வரும் முதலாவிண் ஒரு மீட்பாக அமைந்து, கண்ணன் பிள்ளைத்தமிழோடு நிறைகிறது.முதலாவிண் வெண்முரசுக்கு தமிழ் மண்ணோடு ஒரு இணைப்பைக் கொடுக்கிறது. முதலாவிண்ணை நினைக்கும்போதெல்லாம் தவறாமல் என் நினைவில் எழுவது, கொந்தளிக்கும் கடலில் பாண்டியன் செல்லும் காட்சி://நீரின் ஓலம் செவிகளை நிறைத்திருந்தது. அவர்களின் நோக்கும் நீரால் நிறைந்திருந்தது. உள்ளெழுந்த அச்சமும் நீரின் வடிவிலேயே அமைந்திருந்தது. அரசனை அங்கே கொண்டுவந்திருக்கலாகாதோ என்ற எண்ணத்தை அமைச்சர் அடைந்தார். ஆனால் பாண்டியன் தன் படகின் அமரமுனையில் நின்று கடலை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான். படகு ஊசலாடியபோது அவன் கயிற்றில் கட்டி சுழற்றப்பட்டவனாக வானில் பறந்தலைந்தான். ஆனால் அவன் கால்கள் நிலைதடுமாறவில்லை. அவன் உடலின் நிகர்நிலை பெயரவுமில்லை.அவன் தொன்மையான பரதவக் குடியினன் என்று அமைச்சர் எண்ணிக்கொண்டார். கடலை அவன் கால்கள் அறிந்திருக்கும். அவனுக்குள் நிறைந்துள்ள குருதி கடலின் நீருடன் ஒத்திசையக் கற்றிருக்கும். அவன் முன்னோர்களில் ஒருவன் கடலை அம்பெறிந்து வென்றான். அச்சினம் பொறாது கடல் எழுந்து பஃறுளி ஆற்றோடு பன்மலை அடுக்கத்து குமரிக்கோட்டையும் மாமதுரை நகரையும் உண்டது. அவன் கடலின் மைந்தன், கடலுடன் போரிட்டு எழுந்தவன்.//இந்த நூல்களுடன், வெண்முரசு நூல்களின் செம்பதிப்பு வரிசை நிறைவுறுகிறது. இவற்றை வாசிப்பதனுடாகவே என்றும் உங்களை நன்றியுடனும் மகிழ்வுடனும் நினைத்துக்கொள்வேன். பெரியாழ்வாரின் வரிகளில் “நின்னுளேனாய்ப் பெற்ற நன்மை இவ்வுலகினிலார் பெறுவார்” என்று மகிழ்கிறேன். உங்களுக்கு என் நன்றியும் வணக்கமும்!அன்புடன்,S பாலகிருஷ்ணன், சென்னை*அன்புள்ள பாலகிருஷ்ணன்எனக்கும் அவ்விரு நூல்களையும் பார்க்கையில் ஒரு மெல்லிய திகைப்பு எழுகிறது. கடந்துவந்துவிட்ட ஒரு காலகட்டம் என தோன்றுகிறது.ஜெ
October 14, 2022
தற்கல்வியும் தத்துவமும்-1
குர்ஜீஃப்தமிழகத்தில் இன்று தத்துவக் கல்வி பற்றிப் பேசியதுமே ‘தத்துவப் பயிற்சியில் ஈடுபாடு உண்டு’ என்று சொல்பவர்கள் பலர் முன்வருகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் தத்துவ ஆசிரியர்கள், ஆன்மிகச் சொற்பொழிவாளர்கள் மற்றும் இறைஞானம் கொண்டவர்கள் என அறியப்படும் ஆளுமைகளின் புகழ்பெற்ற நூல்களை வாசித்தவர்கள். பலர் மிகத்தீவிரமாகவே அவற்றை வாசித்திருக்கிறார்கள்.
இவ்வாறு வாசிப்பவர்களின் இயல்புகள் சில உள்ளன. வாழ்க்கையின் ஒரு தருணத்தில் நிலைக்கோளுக்காக தேடித் தவிக்கையில் இத்தகைய நூல்களை கண்டடைபவர்கள் உண்டு. அந்த வாசிப்பினூடாக அறிமுகமாகும் அடிப்படையான தத்துவநோக்கே அவர்களை விடுவித்துவிடும். பிரச்சினைகளை எளிய உணர்ச்சிகள், அன்றாட அரசியல்கள் ஆகியவற்றைக் கடந்து சென்று நோக்கும் ஒரு நிலைப்பேறை அவர்கள் அடைவார்கள்.
இந்நூல்களின் முதற்பெரும் பயன் என்பது இதுவே. ஆகவே இவை மிக உதவியானவை என்பதே என் எண்ணமாகும். எதிர்மனநிலைக்கு தள்ளி செயற்கையான பதற்றத்திற்கும், விளைவான உளச்சோர்வுக்கும், நீண்டகாலக் கசப்புக்கும் ஆளாக்கும் கட்சியரசியல் நூல்களை வாசிப்பவர்களைவிட இந்நூல்கள் மிகமிக மேலானவை. அவற்றை வாசிப்பவர்கள் நம்பிக்கையுடன் வாழ்க்கையை அணுகவும், அடைந்தவற்றில் அகநிறைவு கொள்ளவும் வழியமைக்கின்றன இந்நூல்கள்.
ஆன்மிகதத்துவ நூல்களை வாசிப்பவர்களில் சிலர், அவர்கள் தேடுவதென்ன என்று அறியாமலேயே வாசித்துக் கொண்டிருப்பார்கள். ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு, ஒரு ஞானியிலிருந்து இன்னொருவருக்குச் சென்றுகொண்டிருப்பார்கள். அவர்களில் சிலர் ஒருவரில் இருந்து இன்னொருவருக்குச் செல்லும்போது முந்தையவரை கடந்து சென்றுவிட்டதாக நினைத்துக்கொள்வார்கள். ‘ஓஷோ கொஞ்சநாள் வாசிச்சிட்டிருந்தேன். இப்ப ஜே.கிருஷ்ணமூர்த்தி கிட்ட வந்ததும் அவரை கடந்தாச்சு’ என்று சொல்பவர்களைக் கண்டிருக்கிறேன்
உண்மையில் அவர்கள் கடந்து செல்லவில்லை. ஒரு ஞானியை மெய்யாகவே கடப்பதென்பது அவர் இருந்த நிலையை அடைந்து கடந்தால் மட்டுமே இயல்வது. ஓஷோவை ஓஷோவை விட பெரியவர்களே கடக்க முடியும். ஒஷோவைக் கடந்துவிட்டதாக எண்ணுபவர் ஓஷோவின் வழிமுறையில், உரையாடலில் இவர் தேடும் ஒன்று இல்லை என்று கண்டடைந்திருக்கிறார், அவ்வளவுதான்.
அவர் தேடுவதென்ன என அவருக்கே தெளிவில்லை என்பதனால் அவர் முன்னகர்கிறாரா , சுற்றிச்சுற்றி வருகிறாரா என அவருக்கே தெரியாது. சிலசமயம் அவர் சிக்கிக்கொண்டிருக்கவும் கூடும். ஆனால் அவர் எப்படி எதை வாசித்தாலும், அந்த தொடர் வாசிப்பாலேயே அவர் தன்னுள் வளர்ந்துகொண்டும் இருப்பார். பிற எந்தச் செயலைவிடவும் இந்த வாசிப்பு அவரை ஒருங்கமையச் செய்யும். ஒருவரின் கவனத்தை குவியச்செய்யும் எதுவும் ஏதோ ஒருவகையில் அவரை விடுவித்துக்கொண்டுதான் இருக்கிறது.
இந்தவகையான வாசிப்புகள் எந்நிலையிலும் பயனுள்ளவையே. அவை அறிஞர்களின் சிந்தனைகள், ஞானியரின் சொற்கள் என்பதனாலேயே அவை பெரும் ஆசிகள். ஆகவே அவை அரியவை.
விவாதிக்கப்பட வேண்டிய வினா என்னவென்றில் அவற்றை வாசிப்பது தத்துவக் கல்வி ஆகுமா என்பதே. அல்லது தத்துவத்தை அவற்றினூடாக கற்றுக்கொள்ள முடியுமா? தனக்குத்தானே ஒருவர் தத்துவத்தை கற்றுவிடுவது இயல்வதா? எந்த அளவுக்கு தத்துவத்தில் தற்கல்விக்கு இடமுண்டு?
முதல் பதில், தத்துவத்திற்குள் நுழைய அந்த ஆன்மிகதத்துவ நூல்களின் மீதான வாசிப்பு நல்ல வாசல் என்பதுதான். அத்தகைய நூல்கள்தான் நமக்கு உடனே அறிமுகமாகின்றன. ஆகவே இயல்பாக வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் அவற்றுக்குள் நுழைகிறோம். அவை நமக்கு நம் வாழ்க்கையை முழுமையாக எடுத்து ஆராயவும், அடிப்படைகள் சார்ந்து பார்க்கவும், முதன்மை வினாக்களை எழுப்பிக்கொள்ளவும் உதவுகின்றன. அந்தப் பயிற்சி தத்துவத்தை நோக்கி நம்மை கொண்டுசெல்லக்கூடும்.
இலக்கிய வாசிப்பும், இலக்கிய எழுத்துப்பழக்கமும் கொண்ட ஒருவருக்கு ஆன்மிகதத்துவ நூல்களின் வாசிப்பு மிக உதவியானது. ஏனெனில் மிக அருவமான, மிக மிக அகவயமான, முற்றிலும் நுண்ணுணர்வு சார்ந்த ஒன்றை புறவயமான மொழியில் சொல்வதற்கான தொடர்முயற்சிகள் இத்தகைய நூல்களில் இருக்கும். இலக்கியம் என்பதும், கவிதை என்பதும் அதைத்தான் செய்யமுயல்கின்றன.
ஆகவே தத்துவ நூல்களில் இருக்கும் மொழிவெளிப்பாடு கவிதைக்கு நிகரானதாக இருக்கும். சுருக்கமும் செறிவும் கொண்டதாக இருக்கும். மொழியின் மிக உயரிய சாத்தியங்கள் அவற்றில் வெளிப்படும். அரவிந்தர், ஜே.கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்குச் சமானமான ஆங்கிலமொழியாட்சி இந்தியாவின் எந்த இலக்கிய எழுத்தாளரிடமும் இல்லை. அந்த மொழிநடை எழுத்தாளனின் மொழியை அவனை அறியாமலேயே கூர்மைப்படுத்தும்.
நான் ஒன்றைக் கவனித்திருக்கிறேன். இத்தகைய வாசிப்பு கொண்டவர்கள் எப்போதும் அவர்கள் உள்ளத்தில் பதிய வைத்துக்கொண்டிருக்கும் அரிய வரிகளை குறிப்பிடுவார்கள். மொழி வெளிப்பாடுகளாகவே அவற்றை நினைவில் சேமித்திருப்பார்கள். பெரும்பாலான தத்துவவாதிகளை, மறைஞானிகளை அவருடைய முத்திரை பதிந்தவை என்று சொல்லத்தக்க சில வரிகளாகவே நினைவு வைத்திருக்கிறோம். அவ்வரிகளைக்கொண்டே அவரை வகுத்திருப்ப்போம். அது இலக்கியவாசகன் என்ற வகையில் சரியானதும் இயல்பானதும்தான்.
தத்துவமொழி மிகச் செறிவாக ஒன்றைச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏனெனில் ஒரு தத்துவக்கொள்கை அதன் செறிவை இழக்கும்போது அதன் தத்துவத்தன்மையே இல்லாமலாகிறது. இவ்வியல்பை தத்துவத்தை அறிந்தவர்கள் கூர்ந்து பார்த்திருக்கலாம். மிகச்செறிவாக ,குறைந்த சொற்களில், கூரிய மொழியில் சொல்லப்படும்போது ஒரு தத்துவக்கூற்று ஒரு தரிசனம் என நிலைகொள்கிறது. ஒரு வரையறையும் அறிவிப்பும் ஆகிறது. அதையே எளிய மொழியில் பலபக்கங்களுக்கு விரித்துரைத்தால் ஒரு குறிப்பிட்ட வகையான விவாத முறையாகவே அது தோற்றமளிக்கிறது.
இதை காந்தி தன்னுடைய ஓர் உரையாடலில் சொல்கிறார். பியாரிலாலுடன் மார்க்சியம் பற்றி உரையாடும்போது ‘இவர் சொல்வது ஒரு எளிமையான வாதம்தான். ஆனால் செறிவான மொழியில் சொல்வதனால் அது கொள்கையாகத் தோற்றமளிக்கிறது’ என்று காந்தி குறிப்பிடுகிறார்.
காந்தியைப்பொறுத்தவரை எப்படிச் சொன்னாலும் தன்னளவில் ஒரு தரிசனமாகவே நிலைகொள்ளும் ஒன்றுதான் உண்மையாக இருக்கமுடியும். அறிவார்ந்த விவாதங்கள் வழியாக மட்டுமே நிலைகொள்ளக்கூடிய ஒன்று உண்மையாக இருக்க முடியாது. அது நடைமுறைக்கு வரும்போது பலவகையில் அது நீர்த்துப்போகும். ஏனென்றால் நடைமுறை வாழ்வில் பலவகையில் பலமொழிகளில் மறுபடியும் மறுபடியும் சொல்லப்படும். அப்போது அது தன் மதிப்பை இழக்குமெனில் அது ஒரு அறிவுத்தள வெளிப்பாடன்றி மெய்த்தள வெளிப்பாடல்ல.
ஆன்மிகதத்துவ நூல்களை பயில்பவர்கள் தங்களை அறியாமலேயே விசைகொண்ட ஒரு மொழியுடன் கூடவே ஓடுபவர்களாக மாறுகிறார்கள். விளைவாக அவர்களுடைய உள்ளத்தில் இருக்கும் மொழி நுண்ணுணர்வு மிகச்சிறப்பான பயிற்சியை அடைகிறது. அது அவர்களுக்கு அறிவுநிறைவை அளிக்கிறது. அந்த அறிவு நிறைவே தாங்கள் ஒரு மெய்யான விஷயத்தை கற்கிறோம் என்னும் எண்ணத்தை அளித்துவிடுகிறது.
நாம் ஒன்றை உழைத்து கற்றுக்கொண்டாலே அது உண்மையானது, மதிப்பு மிக்கது என்று எண்ணுகிறோம். மிகச் சிரமப்பட்டு ஒரு மரத்திலேறி பறிக்கும் கனி இனிப்பல்ல என்று எவராலும் சொல்லமுடியாது. எனில் அந்த முயற்சி வீண் என்று ஒத்துக்கொள்ளவேண்டியிருக்கும். அந்த முயற்சியின் மதிப்பு அக்கனி மேல் அறியாமலேயே ஏறிவிடுகிறது.
ஆனால் மொழி வழியாக அறியப்படும் தத்துவம் என்பது ஒரு மொழியனுபவமே ஒழிய தத்துவ அனுபவம் அல்ல. மொழிக்காக இந்நூல்களை வாசிப்பவர்கள் தத்துவத்தை பயிலவில்லை. அவர்கள் நல்ல வரிகளாக நினைவில் கொள்வனவும், மேலதிகமாக எண்ணி வளர்ப்பவனவும் அளிப்பது தத்துவப்புரிதல் அல்ல.
தத்துவம் என்பது உதிரிக் கருத்துக்களின் தொகுப்பு அல்ல. தத்துவம் என்பது ஒரு கட்டுமானமாகவே எப்போதும் திகழமுடியும். முதன்மையாக அது ஒரு தர்க்கக் கட்டுமானம். அந்த தர்க்கத்திற்கு அடிப்படையாக அது எடுத்துக்கொள்ளும் அறிதல்களின் (பிரமாணங்களின்) கட்டுமானம் அதற்கு அடியில் உள்ளது. அதற்கும் அடியில் உள்ளது ஒரு குறிப்பிட்டவகையான பார்வையின், குறிப்பிட்ட வகையான அனுபவமண்டலத்தின் அடித்தளம்.
தத்துவம் ஒற்றையமைப்பாக , முழுமையாகவே கற்கப்படவும் நினைவுகூரப்படவும் விவாதிக்கப்படவும் முடியும். அதன் ஒரு சிலகூறுகளை மட்டும் கொண்டு கற்பதும் நினைவுகூர்வதும் விவாதிப்பதும் பெரும்பாலும் தத்துவத்தை பிழையாக சென்றடைவதில் முடியும். சமயங்களில் நேர்த்தலைகீழாகச் சென்றடைவதில் முடியும்.
ஒரு குறிப்பிட்ட தத்துவம் அதன் முன்வடிவம் பின்வடிவத்துடன் இணைந்தே உள்ளது. அது எதனுடனெல்லாம் விவாதிக்கிறதோ அதெல்லாம் அதனுடன் இணைந்துள்ளன. அது எங்கிருந்தெல்லாம் எடுத்துக்கொள்கிறதோ அதெல்லாம் அத்தத்துவத்துடன் இணைந்துள்ளன. அத்துடன் ஒரு தத்துவம் அது உருவான ஒட்டுமொத்த தத்துவப் புலத்தில் அமைந்துள்ளது. அத்வைதத்தை ஆறுதரிசனங்களின் புலம் இன்றி புரிந்துகொள்ள முடியாது. பௌத்த, சமண மதங்களின் விவாதக்களம் இன்றி கற்கக்கூடாது.
ஆகவே சமகால ஆன்மிகதத்துவ நூல்களை தனிமனிதர் தன் உளக்குவிப்புக்காக, ஊக்கத்துக்காக, அகநிறைவுக்காக வாசிக்கலாம். இலக்கியவாசகனும் எழுத்தாளனும் மொழிக்காக வாசிக்கலாம். தத்துவத்தின் அறிமுகவாயிலாக அவற்றைக் கொள்ளலாம். ஆனால் அவை தத்துவமல்ல என்றும், தத்துவக் கல்வி முற்றிலும் வேறானது என்றும் நமக்கு தெளிவு தேவை
(மேலும்)
அசோகமித்திரன்
அன்புள்ள ஜெ
தமிழ் விக்கியில் அசோகமித்திரன் பதிவு பார்த்தேன். விரிவான செய்திகளுடன் அமைந்திருந்தது. ஆனால் இன்னமும் கூட விரிவாக்கலாமென நினைக்கிறேன். அவர் கலந்துகொண்ட சர்வதேச கருத்தரங்குகள், அவரைப் பற்றிய ஆங்கில மதிப்பீடுகள் ஆகியவையும் தொகுக்கப்படவேண்டும். அப்பக்கத்தின் ஆங்கில வடிவம் உருவானபின் தமிழ் பதிவு மீண்டும் மேம்படுத்தப்பட்டுள்ளது. துணைத்தலைப்புகள் வழியாக அமைந்துள்ள பதிவு மிகத்துல்லியமானதாக உள்ளது
எஸ்.முரளி
அசோகமித்திரன் – தமிழ் விக்கி
விஷ்ணுபுரம் நிதி, கடிதம்
விஷ்ணுபுரம் விருது விழாவிற்கான நன்கொடையில் என்னுடைய சிறு பங்களிப்பென 500 ரூபாய் அனுப்பியுள்ளேன். ஒவ்வொரு வருடமும் நான் பங்கெடுக்க விரும்பும் கனவு விழாக்களில் ஒன்றது.
முதல்முறை 2019 இல் எனக்கும் ஒரு தனிமடலில் அழைப்பு விடுத்திருந்தீர்கள். இன்றும் பரவசத்துடன் நினைவு கூரும் நிகழ்வாக என் நெஞ்சில் இருக்கிறது. அன்றிலிருந்து வரவேண்டும் என்ற விருப்பம் அணையாது உள்ளது. சென்ற ஆண்டு நடந்த விழாவுக்கு அழைத்து போங்கள் என்று அழுது அடம்பிடித்தெல்லாம் பார்த்தேன். எதுவும் நடக்கவில்லை. இவ்வாண்டும் என் கனவு சாத்தியபடுமா என்று தெரியவில்லை. இப்போது உள்ள நிலைக்கு சாத்தியம் இல்லை என்ற நிலையே உள்ளது. இன்னும் இரண்டு மாதங்களில் சூழல் மாறினால் என் கனவு நிறைவேறும். முயற்சித்து பார்க்கிறேன். முடிந்தால் விழாவில் உங்கள் அருகமரும் வாய்ப்பமையும்.
அப்புறம் இந்த தொகை மிக சிறியது. இது ஒன்றும் பெரிது அல்ல. இத்தொகையை கூட அரசாங்கம் எனக்கு தரும் உதவித்தொகையில் இருந்து தான் எடுத்தேன். இன்னும் வீட்டில் வேறு சொல்லவில்லை:) சொன்னால் போகாத இடத்திற்கு பணம் அனுப்புகிறாயா ? என்பார்கள். அதனால் நானே முடிவு எடுத்து அனுப்பி விட்டேன். இப்போது மெதுவாக நேரம் பார்த்து அம்மாவிடம் சொல்ல வேண்டும்:) சுயமாக நானே பொருளீட்ட முடியுமெனில் முடிந்தளவு பெரிய தொகையை அனுப்புவதே என் விருப்பம். ஏனெனில் விஷ்ணுபுரம் விருது விழா நீங்கள் எங்களுக்களித்த மகத்தான விழாக்களில் ஒன்று. அது மேலும் பெருகவும் செழுமையுறவும் செய்வது இலக்கிய வாசகனாக தங்கள் மாணவனாக என் கடமை என்றே எண்ணுகிறேன்.
அன்புடன்
சக்திவேல்
*
அன்புள்ள சக்திவேல்,
உங்கள் கடிதம் நெகிழ்வை அளிக்கிறது. உங்களுடைய நன்கொடை என்பது ஓர் அடையாளம். அது உங்கள் பங்களிப்பு.
முன்பு பல ஆண்டுக்காலம் நாங்கள் சில நண்பர்களே விஷ்ணுபுரம் விருதுச் செலவை பகிர்ந்துகொண்டிருந்தோம். பெருந்தொகை என்னுடையதாக இருந்தது. நன்கொடை வாங்கவேண்டாமென எண்ணினோம். ஆனால் நன்கொடை வாங்க ஆரம்பித்தபோது பெருவாரியாக பலர் அதில் பங்களிப்பதைக் கண்டோம். அது ஒரு சிறந்த விஷயம் என தோன்றியது. தமிழ் எழுத்தாளன் ஒருவனை தமிழகமே கூடி கௌரவிப்பது போன்றது அது. ஆகவேதான் பெருந்தொகைகளாக கார்ப்பரேட் நிதியை பெறவேண்டியதில்லை என முடிவுசெய்தோம். இதிலுள்ள பரவலான பங்கேற்பே இதன் பெருமை.
உங்கள் பங்கேற்பு இதில் பெரியது. நன்றி
ஜெ
அறம்- கடிதங்கள்
வணக்கம் ஜெயமோகன் சார்,
என் பெயர் விக்னேஷ். ஐடி துறையில் பணி செய்கிறேன். நீங்கள் எழுதிய அறம் என்ற தொகுப்பில் நூறு நாற்காலிகள் படித்தேன். என் உணர்வு என்ன என்று வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை.
ஆனால் அப்படி ஒரு தாய் கதாபாத்திரத்தை நான் கேட்ட படித்த பார்த்த மிக மிக சில கதைகளில் பார்த்ததே இல்லை. நீங்கள் அந்த தாயை பற்றி ஒவ்வொரு முறையும் மிக நுணுக்கமாக வர்ணித்து எழுதியிருந்தீர்கள். அவளை பார்க்க முடிந்தது. அவளை நுகர முடிந்தது.
அவளின் மிருகத்தனமான பாசம், நாயாடி மக்களின் நிலை என்ன என்று உணர முடிந்தது. அப்படி ஒரு சமூகம் பற்றி இதற்கு முன்னால் எனக்கு தெரியாது. அந்த கலெக்டரை போல நானும் சிக்கி தவித்தேன். இந்தத்தாயை அவன் வைத்துக்கொள்ள வேண்டுமா?! இல்லையா என்று. ஒவ்வொரு முறையும் அந்த தாயின் முகத்தை கற்பனை செய்து பார்க்க முயற்சி செய்தால் எனோ எனக்கு குறத்தி மகன் திரைபடத்தில் வரும் கே.ஆர்.விஜயா நினைவுக்கு வருகிறார்கள். “தம்றானே, கஞ்சி தா தம்றானே” என்ற அவளது கடைசி வார்த்தை மிகவும் கனத்தது. அவள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் குறத்தி மகன் கே.ஆர்.விஜயா சொல்வது போல் கற்பனை செய்து பார்த்தேன்.
இன்னும் பல உணர்வுகள் இந்த கதையை படிக்கும்போது இருந்தது. மிகவும் ரசித்து படித்தேன். அறம் தொகுப்பில் உள்ள மற்ற கதைகளையும் வீட்டு பாடம் செய்வது போல் தினம் ஒரு கதை விதமாக ஒவ்வொரு மாலையும் படித்து கொண்டிருக்கிறேன். அறம் கதைகளை பற்றி உங்களிடம் என்றாவது ஒரு நாள் நேரில் பேச வேண்டும் என்ற பேராசை!!
இப்படிபட்ட அருமையான கதைகளை தந்தமைக்கு உங்களுக்கு மிக்க நன்றி.
இப்படிக்கு,
விக்னேஷ்.
*
அன்புள்ள ஜெ
இத்தனை பேர் பேசிவிட்ட பிறகும் இப்போதுதான் நான் அறம் கதைகளை வாசித்தேன். இரண்டு தளம் கொண்ட கதைகள். மிக நேரடியாக, தீவிரமாக உணர்ச்சிநிலைகளை முன்வைக்கின்றன. ஆகவேதான் பலபேர் அவற்றை கொண்டாடுகின்றனர். ஆனால் எல்லா கதைகளிலும் மேலே உள்ள உணர்ச்சிகரமான கதைக்கு அடியில் ஆழத்தில் இன்னொரு கதை உள்ளது. நூறுநாற்காலிகள் கதையிலும் நான் வாசித்தது நாற்காலியின் பயனில்லாத தன்மையைத்தான். நூறுநாற்காலி என்று அவன் உணர்வது வேறொரு நாற்காலியை என்று தோன்றியது.
அறம் அழகிய வடிவமைப்புடன் புதிய கெட்டி அட்டைப்பதிப்பு சிறப்பு
அரசு அண்ணாமலை
*
குமரித்துறைவி வாங்கவான் நெசவு சிறூகதைத்தொகுப்பு வாங்கபத்துலட்சம் காலடிகள் சிறுகதைத்தொகுப்பு வாங்கதங்கப்புத்தகம் சிறுகதைத்தொகுப்பு வாங்கஆயிரம் ஊற்றுகள் சிறுகதைத்தொகுப்பு வாங்கவாசிப்பின் வழிகள் வாங்கஆனையில்லா சிறுகதைத்தொகுப்பு வாங்கஐந்து நெருப்பு சிறுகதைத்தொகுப்பு வாங்கதேவி சிறுகதைத்தொகுப்பு வாங்கஅந்த முகில் இந்த முகில் – நாவல் வாங்கஎழுகதிர் சிறுகதைத்தொகுப்பு வாங்கமுதுநாவல் சிறுகதைத்தொகுப்பு வாங்கபொலிவதும் கலைவதும் சிறுகதைத்தொகுப்பு வாங்கபின்தொடரும் நிழலின் குரல் அச்சுநூல் வாங்கஇருகலைஞர்கள் சிறுகதைத்தொகுப்பு வாங்கமலை பூத்தபோது சிறுகதைத்தொகுப்பு வாங்கஇலக்கியத்தின் நுழைவாயிலில் அச்சு நூல் வாங்கநத்தையின் பாதை அச்சு நூல் வாங்கமைத்ரி நாவல் வாங்கஆலயம் எவருடையது ஆன்லைனில் வாங்கஇந்துமெய்மை ஆன்லைனில் வாங்கசாதி – ஓர் உரையாடல் ஆன்லைனில் வாங்கவணிக இலக்கியம் ஆன்லைனில் வாங்கஈராறுகால் கொண்டெழும் புரவி ஆன்லைனில் வாங்ககதாநாயகி ஆன்லைனில் வாங்கஒருபாலுறவு ஆன்லைனில் வாங்கஅனல் காற்று ஆன்லைனில் வாங்கவெண்முரசு – நீர்ச்சுடர் (23) வாங்கஞானி ஆன்லைனில் வாங்கநான்காவது கொலை ஆன்லைனில் வாங்கவிசும்பு ஆன்லைனில் வாங்கவெண்முரசு – களிற்றியானை நிரை (24) வாங்கJeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


